பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 3 of 61

எச்சரிக்கை..!

திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் என்ற விவாதம் உச்சநிலையை அடைந்து திராவிடத்தின் மூலவர் ஐயா ஈவேரா அவர்களின் முரண்பாடான கொள்கை முடிவுகளை, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றது போல உரைக்கப்பட்ட பிழைப்புவாத கோட்பாட்டுக் கருத்துக்களை இளம் தமிழ்த் தேசியர் பலரும் அம்பலப்படுத்தி வருகிற நிலையில், தன்னை பலவீனத் தரப்பாக உணர்ந்த திராவிடம் மிகப்பெரிய சதி வேலைகளை தொடங்கியுள்ளது.

அதில் பிரதானமாக தமிழ்த்தேசிய கருத்தியலின் பெருமித அம்சங்களை தவறாக சித்தரிப்பது/ இழிந்துப் பேசுவது போன்ற வேலைகளை திராவிட தரப்பிலிருந்து பேசும்போது அதன் சதி வலையை நாம் அம்பலப்படுத்தி வருவதால் , தமிழ்த்தேசிய இனத்திலிருந்தே ஒருவரை வைத்து இந்த வேலைகளை திராவிடத் தரப்பு திட்டமிட்டு செய்யத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக தமிழர் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பற்றி அவர் தவறான கருத்துக்களை பேசுகிறார் என அயலகத் தமிழ் உறவுகள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், மூவேந்தர்களைப் பற்றி தற்போது அவர் பேசி வருகிற காணொளிகள் பரப்பப்படுகின்றன.

மதிப்பார்ந்த நம் அண்ணன் திருமாவளவன் திராவிடத் தரப்பிற்கு ஆதரவாக நிற்கின்ற நிலைமை விசித்திரமானது அல்ல. 2009 இனம் அழிந்த காலத்திலேயே இனமழித்த காங்கிரஸ் மேடையிலேயே நின்று அப்போது காங்கிரஸ் தலைவரான “சோனியா வாழ்க” என முழக்கம் போட்டு நாம் தலைக்குனிந்தத் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. எனவே அவர் நிலைமை குறித்து நமக்கு எந்த ஆச்சரியமும் வியப்பும் வெறுப்பும் இல்லை. அவர் அப்படித்தான்.

பல நேரங்களில் தமிழ்த் தேசியம் குறித்தும் தமிழ்த் தேசிய தலைமைகள் குறித்தும் மிக மோசமான வசை மொழிகளோடு விமர்சனங்கள் அவர் வைத்த போதும் கூட நாம் எதிர்வரும் விமர்சனம் ஏதும் வைக்காமல் அமைதியாக கடந்து போனது திராவிடத்தின் சதி வேலைகளை புரிந்து கொண்ட பட்டறிவின் காரணமாகத்தான்.

திராவிடம் இது போன்ற வேலைகளை செய்வதில் கெட்டிக்காரத்தனமானது. நம் உடன் பிறந்தார்களையே நமக்கு எதிராக நிற்க வைத்து, நம்மை மோதிக் கொள்ள வைத்து அதன் மூலமாக ஆதாயம் பெற முயற்சிக்கின்ற மிக இழிவான வேலையை திராவிடத் தரப்பு செய்யும். எப்படி வட மாவட்டங்களில் வன்னியர்/ஆதித்தமிழர் மோதலை தக்கவைத்து திராவிடம் அதிகாரத்தின் உச்சத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறதோ அதேபோன்ற வேலையை எல்லா இடங்களிலும் செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அண்ணன் திருமாவளவன் கூட தற்போது அறிவித்திருக்கிறார் அசலான (?) தமிழ்த் தேசிய மாநாடு ஒன்றை தான் நடத்தப் போவதாக. அதற்கு நம் வாழ்த்துக்கள். அதை எழுந்து வருகிற தமிழ்த் தேசிய உணர்ச்சிக்கு கிடைத்திருக்கிற வெற்றியாக நாம் கருதுவோம். அதே சமயத்தில் கருத்தியல் தளத்தில் பலவீனம் அடைந்து கோமா நிலையில் கிடக்கும் திராவிடத் தரப்பிற்கு வலு சேர்க்கிற வேலையாக அந்த மாநாட்டினை அண்ணன் உருவாக்கி அதில் தமிழ்த் தேசிய தலைமைகளை விமர்சிக்கின்ற ஒரு தளமாக மாற்றுவார் , திராவிடத் தரப்பு மாற்ற வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதில் நாம் செய்ய வேண்டியது “அமைதியுடன் கூடிய அறிவார்ந்த புறக்கணிப்பு”.

எனவே ஒரே இனத்திற்குள்ளாக மோதி ரத்தம் குடிக்க வைக்கிற திராவிடத் தரப்பின் சதிகளை உணர்ந்து, அண்ணன் திருமாவளவன் முன் வைக்கின்ற ஆதாரமற்ற செய்திகளை நாம் புறக்கணித்து , மேலும் வலிமையாக தமிழ்த் தேசிய கருத்துக்களை நேர்மறை எண்ணத்தோடு பரப்பி வருவதே தமிழ்த் தேசியப் பணி என உணர்வது நலம். அவருக்கு பதில் சொல்லி அல்லது அவருக்கு எதிர்வினை ஆற்றி திராவிடத் தரப்பு எதிர்பார்க்கிற உள்குழு மோதலை ஏற்படுத்தாமல் “அறிவார்ந்த புறக்கணிப்போடு” அமைதியாய் கடப்பது ஆகச்சிறந்தது.

அதற்கு ஈடு செய்யும் விதமாக தமிழ்த் தேசிய அரசியலின் எழுச்சியின் வடிவமாக திருச்சியில் நடக்கும் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026” செய்திகளைப் பரப்புவது மற்றும் சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாற்றுப் பங்களிப்புகளை, தமிழ் தேசிய பெருமித நிலைகளை இன்னும் வலிமையாக பேசி அல்லது எழுதி பரப்புரை செய்வதுதான் சூழ்ச்சி சூழ்நிலைகளைப் புரிந்து கொண்ட தமிழ்த் தேசியர்களின் வேலை.

தமிழ்த்தாய் வாழ்க ! தலைவர் மேதகு வாழ்க !

ஜனநாயகத் தீங்குகள்- குடியரசு நாள் சிறப்புக் கட்டுரை

ஜனவரி 26 குடியரசு தினம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதன்மையான நோக்கமாக மக்களின் நலன் சார்ந்த ஜனநாயகம் முன்னிறுத்தப்படுகிறது. உண்மையில் ஜனநாயகம் என்பது மிகச் சரியான ஒன்றா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மக்களின் பெரும்பான்மை கருத்து என்பதன் வாயிலாக கட்டமைக்கப்படும் ஜனநாயகம் ஆகப் புனிதமானது அல்ல. ஏனெனில் மக்களின் பெரும்பான்மை கருத்து என்பது எப்போதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கான நலன்களைச் சார்ந்தது அல்ல. அது அந்தந்தக் காலச் சூழல்களுக்கு உட்பட்டது. மக்கள் விரும்புகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் விருப்பம் ஒன்றையே சமூகத்தின் விளைச்சலாக கருதிக் கொள்ள வேண்டும் என எல்லோரும் முடிவெடுத்தால், இந்த சமூகம் அடைந்திருக்கும் எல்லா சீர்த்திருத்தங்களும் ஜனநாயகத்தின் அளவுகோல்களின் படி எதிர்க்கப்பட வேண்டியவையே..

ஏனெனில் மக்கள் பாதுகாப்பாக அந்த சூழ்நிலைக்கு, சுகமாக, வாழ்வதற்கு ஏற்ற ஒன்றையே விரும்புவார்கள். மக்களின் விருப்பத்திற்கு, எதிர்காலம் சார்ந்த ஒட்டுமொத்த நலன் சார்ந்த சிந்தனைகளோ/ கருத்துக்களோ இருப்பதில்லை.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய தீங்கு என்னவென்று கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தமிழர்களுக்கு நன்கு புரியும். பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள் என்ற மலினக் காரணத்திற்காக, தீங்குகளை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கிற கேடு நமது மீது வழங்கப்பட்டிருக்கிற ஜனநாயகத்தின் வாயிலாக திணிக்கப்பட்டிருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மக்கள் விரும்பிய எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என்கிற மூன்று தீங்குகளால் தமிழகம் அடைந்திருக்கின்ற பின்னடைவுகள் ஒன்றல்ல, இரண்டல்ல. எம்ஜிஆர் ஒரு திரைப்பட நடிகர் , ஜெயலலிதா ஒரு திரைப்பட நடிகை, கருணாநிதி ஒரு வசனகர்த்தா என்பது போன்ற எளிய / ரசிக மனப்பான்மை சார்ந்த மலினமான காரணங்களுக்காக அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைத்த மக்கள் , இன்று திரையரங்க இருட்டினில் தங்கள் எதிர்காலத் தலைவர்களை தேடும் மனநிலையில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

இதுவரை உலகத்தில் பொன்னான ஆட்சி காலத்தை வழங்கியவர்கள் பலரும் தனது ஆட்சியின் ஒரு முறைமையாக சர்வாதிகாரத்தினை கையாண்டார்கள், என்பதுதான் மிக முக்கியமான செய்தி. முதன்முதலாக பொதுவுடமை அரசாங்கத்தை கட்டமைத்த ரஷ்யப் புரட்சி மற்றும் சீனப் புரட்சி என பல புரட்சிகளும் சர்வாதிகார ஆட்சிகளையே பிரசவித்தன.

ரஷ்யப் புரட்சி முடிவில் புரட்சியாளர் லெனின் அமைத்த ஆட்சி மித சர்வாதிகார ஆட்சி என்றால் அவரது தொடர்ச்சியாக வந்த ஸ்டாலினின் ஆட்சி முழு சர்வாதிகார ஆட்சி. ஏனெனில் சர்வாதிகாரம் அல்லது முழுமையான உச்ச அதிகாரம் ஆகியவற்றால் தான் அதுவரை நிகழ்ந்து வந்த அனைத்து தீங்குகளையும் ஒழிக்க முடியும் என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலைப் பெற்ற தமிழர் நிலம் எவ்வாறு அமைய வேண்டும் என நம் உயிர்த் தலைவர் தேசியத் தலைவர் மேதகு அவர்களிடம் கேட்டபோது, மிகுந்த தீர்க்கத் தரிசனத்துடன் புரட்சிகர சோசலிசக் குடியரசு நாடாக ஈழம் அமைய வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை தலைவர் பதிவு செய்தார்கள்.

ஜனநாயகம் பிரசவிக்கின்ற பெரும்பான்மைக் கருத்துக்கள் என்பதன் மகத்தான தீமை என்னவெனில், ஆட்டு மந்தையாக இருக்கின்ற மக்களின் விருப்பங்கள் அப்படியே நிறைவேறுதான்.

எனவேதான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி முறை என்பது அன்பான சர்வாதிகாரமாக இருக்கும் என்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் விவரித்தார். இதை நீட்சி தான் அவர் விவரிக்கின்ற தாய்மைப் பொருளாதாரம்.

அது என்ன அன்பான சர்வாதிகாரம் … அதற்கும் அவரே பதில் சொன்னார். உடல் காச்சலால் பாதிக்கப்படும் போது ஊசி போடுவதை எந்த குழந்தையும் விரும்பாது. ஆனால் ஊசிப் போட்டால் தான் உடல் நலன் பாதுகாக்கப்படும் என்று வரும்போது குழந்தையின் விருப்பத்திற்கு மாறாக ஊசி போடுவது தான் அன்பான சர்வாதிகாரம் என எளிய மொழியில் அண்ணன் சீமான் விளக்கினார்.

உண்மையில் இது சாத்தியமா..?? இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதற்கான வழிவகைகளை கொண்டிருக்கிறதா என்பதை எல்லாம் பற்றி யோசித்தால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பில்

“இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை, இறையாண்மையுள்ள, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக நிலைநிறுத்தவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்:

சமூக, பொருளாதார, அரசியல் நீதி;

எண்ணம், வெளியீடு, கோட்பாடு, சமயநம்பிக்கை, வழிபாடு இவற்றில் சுதந்திரம்;

தகுதிப்பாடு, வாய்ப்புநலம் இவற்றில் சமத்துவம்

ஆகியவற்றை எய்திடவும், அவர்களிடையே தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, மற்றும் உடன்பிறப்புரிமை (சகோதரத்துவம்) ஆகியவற்றை உறுதிப்படுத்தவும்,

எங்களது, அரசியலமைப்பு நிர்ணய சபையில், 1949, நவம்பர் 26 ஆகிய இந்நாளில், இந்த அரசியல் அமைப்பினை ஏற்று, இயற்றி, எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்கிறோம்”.

எனக் காணப்படுகிறது.

ஆனால் முகப்புரையில் உள்ள “சமதர்மம் ,சமய சார்பற்ற தன்மை, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதி, தகுதிப்பாடு, வாய்ப்பு நலம் இவைகளை ஜனநாயக ரீதியில் நிறைவேற்ற முடியுமா என்கிற கேள்வி எழும்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் நம் நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் பதிலாக இருக்கிறது.

ஏனெனில் இங்கே பெரும்பான்மை என்பது சமயச் சார்புள்ளதாக, சமூக அரசியல் மற்றும் பொருளாதார நீதிக்கு எதிராக, சமதர்மத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது என வரும்போது இங்கே ஜனநாயகம் என்பதே மாபெரும் தீங்காக மாறிவிட்டது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் சமமற்ற/ பயிற்றுவிக்கப்படாத பலவீனமான மக்கள் கூட்டத்தை வைத்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நாமே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஜனநாயகத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய சிந்தனைகள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. சூழலியல், மக்கள் நலன், சமூக நீதி போன்றவற்றிற்கான அரசியலை ஒருபோதும் ஜனநாயகத்தின் வாயிலாக வென்றெடுக்க முடியாது.

உலகத்தில் பெரும்பான்மை பிரசவித்த அரசியல் தத்துவங்கள் என்று எதுவும் இல்லை. தனிமனிதர்கள் சிந்தித்த சிந்தனையில் இருந்து தான் ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலன் தருகிற தத்துவங்களும், கொள்கைகளும், கோட்பாடுகளும் பிறந்திருக்கின்றன. எனவே எதிர்காலத் தலைமுறை மற்றும் மக்கள் மண்ணின் நலம் போன்றவற்றை தாய்மை உள்ளத்தோடு சிந்திக்கின்ற தனிநபர் சர்வாதிகாரத்தோடு கூடிய ஆட்சி முறைமைதான் இங்கே தேவையாக இருக்கிறது.

உண்மையில் குடியரசு நாளில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை என்னவெனில்.. நமக்காக நாமே உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நாம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதுதான்.

உமர் முக்தார்- பாலைவனச் சிங்கம்.

ஏக இறைவனான அல்லாஹ் “தனது கருணையை எப்படி மனிதர்களுக்கு காட்டினார்..?” என்ற கேள்வியை “lion of the desert” (1981) என்ற திரைப்படத்தில் உமர் முக்தர் தனது மாணவர்களிடத்தில் கேட்பதாக ஒரு காட்சி வரும்.

ஒரு மாணவன் ‘பேச்சு’ என்று சொல்லுவான். அவர்களுக்கு உமர் முக்தார் அதை விளக்க முயற்சிப்பார். “அல்லாஹ் மனிதர்களுக்கு தன் கருணையை தான் வழங்கிய சமநிலை மூலம் காட்டினார். சமநிலை தவறும் பட்சத்தில் எதுவும் கீழே விழுந்துவிடும்..” என விளக்கும் உமர் முக்தார் லிபிய நாட்டின் ஆகச்சிறந்த புரட்சியாளர்.

ஆம்.. சமநிலை தவறிய சமூகத்தில் தான் புரட்சி வெடிக்கும்.

உமர் முக்தார்.

இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக லிபியா நடத்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளம் அவர்.

அதே லிபியா அவரது மரணத்திற்குப் பிறகு போராடி விடுதலை அடைந்த பிறகு, கடந்த 2009ல் லிபிய நாட்டின் அதிபராக இருந்த மம்மர் கடாபி அரசு முறை பயணமாக இத்தாலியின் தலைநகரம் ரோமிற்கு சென்றபோது, தனது சட்டையின் முகப்பில் உமர் முக்தாரின் படத்தை வைத்துக்கொண்டு, உமர் முக்தாரின் வயதான மகனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

எந்த இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக உமர் முக்தார் தன் வாழ்நாள் முழுக்க போராடினாரோ, அதே இத்தாலியின் தலைநகரத்தில், லிபிய நாட்டின் தலைவர் தன் சட்டை பையின் முகப்பில் தன் நாட்டின் ‘புரட்சிகர பெருமித அடையாளமான’ உமர் முக்தாரை சுமந்து சென்றதும், உமர் முக்தாரின் மகனை கூடவே அழைத்து சென்றதும் உலகத்தின் விழிகளை பிரமிக்கச் செய்தன.

அதே லிபிய நாட்டு அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக உள்நாட்டு கலகப் படைகள் போராட்டம் நடத்திய போது அந்தப் படைகளின் ஒரு படைப் பிரிவிற்கு பெயர் “உமர் முக்தார் படையணி”.

இதுதான் வரலாற்றின் விசித்திரம்.

ஆதிக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து போரிடும் ஆற்றல்களுக்கு திரு உருவாக உமர் முக்தார் மாறி இருந்தார்.

உமர் முக்தாரின் இறுதி கால வாழ்க்கையை பற்றி தயாரிக்கப்பட்ட படம் தான் “பாலைவனச் சிங்கம்” என தமிழில் அழைக்கப்படும் ” lion of desert ” . இந்தப் படத்தை இயக்கியவர் மௌஸ்தபா அல் அக்காட் ( director Moustapha Akkad.) என்கிற புகழ்பெற்ற சிரியா நாட்டின் இயக்குனர். இவர் இறைத்தூதர் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி” தி மெசேஜ் ” என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தையும் இயக்கியவர். கடந்த 2005 ல் ஜோர்டன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மெளஸ்தபா தன் மகளோடு கொல்லப்பட்டார்.

பாலைவனங்களைப் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான திரைப்படம் புகழ்பெற்ற இயக்குனர் டேவிட் லீன் இயக்கத்தில் 1962ல் வெளியான லாரன்ஸ் ஆப் அரேபியா. இந்தத் திரைப்படத்தை அந்த காலத்தில் திரையரங்குகளில் பார்த்தவர்கள் உண்மையிலேயே பாலைவனத்தில் இருப்பது போல உணர்ந்து மிகுந்த தண்ணீர் தாகத்தில் தவித்ததாக செய்திகள் உண்டு.

புனிதப் போராளிகளுக்கு எப்போதுமே இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த இடம் தருகிறது. சொந்தத் தாய் மண் மீது நிகழ்ந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிடும் மாவீரர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என கூறும் புனித குர்ஆன் அது ஒவ்வொருவரின் கடமை என்றும் வரையறுக்கிறது.

ஆழ்ந்த இஸ்லாம் பற்றுள்ள, குர்ஆன் பேரறிஞராக திகழ்ந்த உமர் முக்தார் ஏறக்குறைய 20 ஆண்டுகள் இத்தாலி அரசதிகாரத்திற்கு கடுமையான போராட்டங்களை நடத்தியவர். அவருக்கு லிபிய நாட்டு பாலைவனம் என்பது இத்தாலி நாட்டு ராணுவம் சிக்கிக் கொள்கிற பொறி. இத்தனைக்கும் ஒரு எளிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு மிக ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்த உமர் முக்தார் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை தன் அளப்பரிய வீரத்தால் நிம்மதி இழக்கச் செய்தவர்.

இயக்குனர் மெளஸ்தபா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் தமிழர் தேசிய இனம் தொடர்பு அடைவதற்கான பல செய்திகள் உண்டு. குறிப்பாக போராடிக் கொண்டிருக்கின்ற போராளி இயக்கங்களை சர்வாதிகாரம் எப்படி தந்திரமாக கையாளும் என்பதற்கு இந்த திரைப்படம் பல செய்திகளை விவரிக்கிறது. முதலில் அதிகாரம் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள போராளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். அந்தப் பேச்சுவார்த்தையில் போராளிகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்த அவர்களை மரியாதை குறைவாக கருத வைக்கிற முடிவுகளை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்கும். அவர்கள் இதைப் புரிந்து கொண்டு மறுக்கும் காலத்திற்குள்ளாக சர்வாதிகாரம் தனது பலத்தை அதிகரித்துக் கொண்டு போராளிகளுக்கு எதிரான இறுதிப் போரை தொடங்கும்.

எப்படி 2000 -2002 காலகட்டங்களில் அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழின போராளிகளை திசை திருப்பிவிட்டு, பலவீனமாக கருதப்பட்ட தனது பலத்தை சிங்கள பேரினவாதம் உலகம் எங்கும் சென்று எப்படி அதிகரித்துக் கொண்டதோ அதேபோல தந்திரத்தை தான் காலம் காலமாக சர்வாதிகார அரசுகள் செய்து வருகின்றன.

அசலான போராளித் தலைவர்கள் சில அடிப்படையான தகுதிகளை கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் சரணடைய மாட்டார்கள். தங்களது சுய வாழ்வைப் பற்றி ஒருபோதும் அவர்கள் ஒருபோதும் எண்ண மாட்டார்கள். இறுதிவரை உறுதியாக நின்று கொண்ட லட்சியத்திற்காக போராடுவார்களே ஒழிய ஒரு போதும் எதிரியிடம் சமரசம் அடைய மாட்டார்கள்.

உமர் முக்தாரின் வாழ்க்கையும் அவ்வாறே அமைந்தது. பாலைவனச் சிங்கம் என தமிழில் youtube இல் கிடைக்கின்ற இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற அந்தோணிக் குயின் ஒரு மாபெரும் நடிகர். அந்த கதாபாத்திரமாகவே மாறி நமக்கு உமர் முக்தாரை ரத்தமும் சதையுமாக காட்டியவர். புகழ்பெற்ற நடிகர் ஆலீவர் ரீடு இத்தாலி நாட்டு தளபதியாக நடித்து உமர் முக்தாருக்கு மதிப்பு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமரசம் இல்லாமல் மரணத்திற்கு முன்னால் சிறிதும் அஞ்சாமல் போரிடுகிற உமர் முக்தாரின் வாழ்க்கை நமக்கு நம் தேசியத் தலைவர் மேதகு அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது. உமர் முக்தாரின் வாழ்க்கை எப்படி எதிரிகளால் கூட மதிக்கப்பட்டதோ, அதேபோல நம் தலைவரின் வாழ்க்கையும் எதிரிகளால் மதிக்கப்பட்டது. இன்றளவும் சிங்கள பேரினவாத அரசால் ஒரு குற்றச்சாட்டு கூட நம் தலைவருக்கு எதிராக சொல்ல முடியாத அளவிற்கான உன்னத வாழ்க்கையை அந்த அறம் வழி நின்ற சான்றோன் வாழ்ந்தார்.

இறுதியாக இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் தூக்கில் இடுவதற்கு முன்பாக தன் தாய் நிலத்தின் உயர்ந்த மலை சிகரங்களை அவர் மிகுந்த கனிவோடு பார்க்கின்ற அந்தக் காட்சி நெகிழ வைக்கக் கூடியது. தாய் நிலத்தின் விடுதலைக்காக போராடிய நம் இனத்துப் போராளிகள் பின்னால் இறுக்கிக் கட்டப்பட்ட தங்களது உள்ளங்கைகளில் தாய் மண்ணை இறுக்கிப் பிடித்து வைத்திருந்த அதே உணர்வு.

பலமுறை இந்த திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். எண்பதுகளில் சென்னையில் திரையரங்கில் இந்த திரைப்படத்தை முதன்முதலாக பார்ப்பதற்கு என் தந்தை அழைத்துச் சென்றார். எத்தனை முறை பார்த்தாலும் அதே உணர்ச்சியை அந்த திரைப்படம் மானுடச் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருப்பது தான் அதன் செவ்வியல் தன்மை.

படம் பார்த்து முடித்து விட்ட பின்னரும் பாலைவன மண் புழுதி பறக்க குதிரைகளில் பாய்ந்து வருகிற அந்தப் போராளிகளின் உரத்த குரல் காதுகளில் கேட்டுக் கொண்டே இருப்பது சிலிர்க்க வைக்கக்கூடியது.

எதிரிகளால் மன்னிக்கக் கூடிய வாழ்க்கையை எந்த வீரனும் விரும்ப மாட்டான். ஆனால் எதிரிகளால் கூட மதிக்கப்படும் வாழ்க்கையை தகுதி வாய்ந்த வீரன் தன் வாழ்நாளில் பெற்றே தீருவான்.

அதற்கு திரையில் “உமர் முக்தார்”

அசலில் நம் தேசியத் தலைவர் “மேதகு”.

யூட்யூபில் இலவசமாக தமிழில் காணக்கிடக்கிறது. அவசியம் காணுங்கள்.

“குமரி” நூல் திறனாய்வுக் கூட்டம். – மறக்க முடியாத பொன்மாலைப் பொழுது.

❤️

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இயக்குனர் வ. கீரா அவர்கள் எழுதிய குமரி என்ற புதினத்தைப் பற்றி அண்ணன் இயக்குனர் களஞ்சியம் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, அந்த நூலைப் பற்றி ஆர்வமாக விசாரித்த போது உடனே அண்ணன் களஞ்சியம் அவர்கள் மறுநாளே குமரியை அனுப்பி வைத்துவிட்டார்.

அந்த சமயத்தில் மிக நெருக்கமானவர்களின் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த காரணத்தினால் மனநிலையில் பெரு பாதிப்பு. தொடர்ந்து துயர இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த போதுதான் அண்ணன் களஞ்சியம் அவர்கள் மீண்டும் தொடர்பு கொண்டு குமரி நூலுக்கான திறனாய்வு அரங்கம் நடக்க இருப்பதாகவும் அதில் நான் பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதனால் தொடர்ந்து சில நாட்கள் குமரியில் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய அந்த முதுநிலத்தின் மகனாக மாறிப் போய் உணர்வேறி திரிந்தேன் . உடலில் போர்த்தியிருந்த துயரத்தினை குமரியின் வாசிப்பு மது கொண்டு ஆற்றினேன்.

புத்தகக் கண்காட்சியில் கடந்த 12ஆம் தேதி இரவு தம்பி சாட்டை துரைமுருகனை சந்தித்து இந்த புத்தகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவனும் இதே போன்ற ஒரு மனநிலையில் இருப்பதை அறிந்து வியந்தேன்.

மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில், உணர்வுவயப்பட்ட சூழலில், தமிழ்த் தேசிய நவீன இலக்கியத் தொடக்கத்தை குமரி நிகழ்த்தி விட்டது என்பதை உணர்ந்து மிக்க மகிழ்வோடு ஆற்றிய உரை இது.

தமிழ்த் தேசியர்களின் மீது நவீன தீண்டாமையை கடைபிடித்து வரும் “திராவிட அறிவு ஜீவி குழு கும்பலிடம் ” இருந்து நவீன தமிழ் இலக்கியத்தை மீட்டெடுக்கின்ற அறிவுப் பணி இனி தொடர்ந்து நடக்கும்.

இதில் அண்ணன் இயக்குனர் சோழன் களஞ்சியம் அவர்களுக்கும், படைப்பாளர் எழுத்தாளர் வ.கீரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. கூடுகை இலக்கிய வட்டத்திற்கும் அதன் உறவுகளுக்கும் மனமார்ந்த பாராட்டு. பேரன்பு.

நேற்றைய தினம் இந்தக் கூட்டம் முடிவடைந்து டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு சென்றிருந்தபோது நண்பர் வேடியப்பன் அவர்களை பார்த்தோம். தொடர்ந்து புத்தகங்களை வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதர் மீது அநீதியாக விதிக்கப்பட்ட தடை அம் மனிதனை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து மனம் வருந்தினேன்.

தற்போது அண்ணன் களஞ்சியம் அழைத்து புத்தகம் வெளியிட்ட டிஸ்கவரி புத்தக பேலஸ் கடையில் “குமரி” புத்தகங்கள் நேற்றைய கூட்டத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரவேற்பு அடைந்து புதிய உச்சங்களை அடைந்திருப்பதாக தெரிவித்தார்.

இதைவிட என்ன பேறு இருக்கிறது..?? அதையும் தாண்டி இதைவிட என்ன முக்கியமான வேறு வேலை இருக்கிறது..??

மறக்க முடியாத பொன்மாலைப் பொழுதாக நேற்றைய பொழுதை மாற்றிய மாமனிதர்களுக்கு நன்றி..!

❤️

மணி செந்தில்.

2026 சென்னை புத்தகக் கண்காட்சி – பங்கேற்பு அனுபவக் குறிப்புகள்..

வழக்கம் போல முதல் நாளில் 12-01-2026 என் மைத்துனர் பாக்கியராசன் நண்பர் சரவணன் தங்கப்பா மகன் சிபி கௌதம் உள்ளிட்ட பலரின் உதவியோடு புத்தகங்களை வாங்கினேன்.

முதல் நாள் இரவில் புத்தக கண்காட்சியில் என்னுடைய மைத்துனர் பாக்கியராசன், என்னுடைய தம்பிகள் சாட்டை துரைமுருகன் மற்றும் இரும்பாவனம் கார்த்திக் , சந்தோஷ் மகிழன் உள்ளிட்டவர்களோடு நேரம் செலவிட்டது மிக மகிழ்ச்சியாக இருந்தது.

எதிர்பாராத விதமாக சந்தித்த அண்ணன் அறிவுமதி, நாட்களாக நான் சந்திக்க விரும்பி சந்தித்த பவா செல்லதுரை அவர்களின் மனைவி எழுத்தாளுமை சைலஜா.. மற்றும் பல நண்பர்கள்.

அன்புச் சகோதரர் எழுத்தாளுமை வாசு முருகவேல் நேரடியாக என்னை சந்தித்து அவர் எழுதியிருக்கிற “மணி பல்லவம்” நாவலை அளித்து பேரன்புச் செய்தார்.

மறுநாளில் 13-01-2026 எழுத்தாளுமைகள் என்னுடைய தம்பிகள் அகர முதல்வன், லட்சுமி சரவணகுமார் உதவியோடு பல புத்தகங்களை வாங்கினேன்.

நூல்வனம் அரங்கிற்கு சென்று இலக்கிய நாட்காட்டி தாஸ்தாவெஸ்கி திருவுருவப்படம், குறிப்பேடுகள் ஆகியவைகளோடு பல புத்தகங்களை தம்பி அகரமுதல்வன் வாங்கி அளித்தார்.

நூல்வனம் உரிமையாளர் புத்தக வடிவமைப்பாளர் மணிகண்டனின் மகள் ரமணி நேற்று மாலை இறுதி நேரத்தில் எனக்கு உதவிகள் செய்து என் மகளாகவே மாறி போனார். அதேபோல் நண்பர் மணிகண்டனின் மனைவி அன்பு சகோதரி அவரின் பேரன்பும் தனித்துவமானது. அன்பு மயமான குடும்பம். நீடு வாழ்க.!

தம்பி லட்சுமி சரவணகுமார் விஷ்ணுபுரம் அரங்கில் “கடல்” வாங்கி அளித்தார். “குலுங்கா நடையான்” என்ற அரங்கு அவ்வளவு அழகாக இருந்தது.

புத்தகங்களின் நேர்த்தி அழகு அட்டைப்படம் அனைத்தும் கூடி இருக்கிறது. உள்ளடக்கம் வழக்கம் போல் இருக்கிறது. நிறைய மொழிப்பெயர்ப்புகள் விற்கப்படுகின்றன.

நான் புத்தகக் கண்காட்சியில் இருந்த நேரம் முழுக்க என்னோடு நண்பர் சரவணன் தங்கப்பா மற்றும் எனது மகன் சிபி கௌதம் இருவரும் உடனிருந்து இருந்து பல்வேறு உதவிகளை செய்தார்கள்.

மற்றபடி புத்தகக் கண்காட்சி திராவிட அடையாளங்களோடு வழக்கம் போல இருக்கிறது. புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கழிவறை மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி ஊர்தி போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும். நடக்க முடியாதவர்கள் புத்தகக் கண்காட்சியை சுற்றி பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். உள்ளே விற்கின்ற உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக வந்திருக்கின்ற புத்தகங்களை குறித்து தனிப் பட்டியல் ஒன்றினை அச்சிட்டு ஒட்டுமொத்தமாக வெளியிட்டால் பலரும் பயன்படுவார்கள்.

புத்தகக் கண்காட்சியில் நடக்க முடியவில்லை. முதல் நாள் இரவு மிகவும் கால் வலியோடு துன்பப்பட்டேன். என் மைத்துனர் பாக்கியராசனும் , என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் இல்லையென்றால் என்னால் நகர்ந்து இருக்க கூட முடியாது.

மறுநாள் சக்கர நாற்காலியை பயன்படுத்துவதற்கு தீவிரமாக என் மகன் சிபியும் என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் கும் எதிர்த்தார்கள் . ஆனாலும் இறுதியாக என் நிலையை பார்த்துவிட்டு எனது மகன் சிபியே எடுத்து வந்த அளித்தான். அதன் மூலம் ஆசான் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களை சந்திக்க முடிந்தது ‌. விஷ்ணுபுரம் அரங்கிற்கும் செல்ல முடிந்தது . சக்கர நாற்காலி வசதியாக தான் இருக்கிறது. அதுவே பழக்கம் ஆகிவிடும் என என் மகனும், என் தம்பியும் எதிர்க்கிறார்கள். பெரிய இடங்களுக்கு செல்லும்போது நடக்க முடியவில்லை என்றால் சக்கர நாற்காலி பயன்படுத்துவது பிழையில்லை என்றே நான் உணர்கிறேன்.

நேற்று இரவு குமரி நூல் திறனாய்வுக் கூட்டம் முடிந்து டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர் வேடியப்பனை பார்க்க அண்ணன் களஞ்சியம் தலைமையில் அனைவரும் சென்றிருந்தோம்.

அங்கே அண்ணன் களஞ்சியம் அவர்கள் 1974 மாநில சுயாட்சி உள்ளிட்ட பல புத்தகங்களை வாங்கி பேரன்போடு அளித்தார்.

புத்தகங்களோடு பிறக்க இருக்கிறது தை முதல் நாள் -தமிழரின் புத்தாண்டு.

எப்போதும் என் மீது பேரன்புச் செய்பவர்கள் இம்முறையும் உடன் இருந்தார்கள். என்னைச் சுமந்தார்கள். கொண்டாடினார்கள்.

அந்த வகையில் நான் நிறைவானவன். ❤️

இந்த வருடம் வாங்கியவை. /பெற்றவை.

1. சாதிப் பெருமை -மனோஜ் மிட்டா

2. இரவோடி- என் ஸ்ரீராம்.

3. பிணைப்பு- சர்தார்.

4. கடல் – ஜெயமோகன்

5. பொம்மைகளின் அரசன்-எஸ் ராமகிருஷ்ணன்.

6. நாவல் வாசிகள்-எஸ் ராமகிருஷ்ணன்.

7.எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் முழு தொகுப்பு. காலச்சுவடு வெளியீடு.

8. அம்பறாத் தூணியில் அணியமாகும் அம்புகள்- இலரா மோகன்.

9. இஸ்ஸாவும்,பூசனும் -இரு ஜென் கவிகள்.

10. கடைசி புதிர்ப் பாதை.-அருண் ஜோஷி

11. திரெளபதி.-யார்லகட்ட லட்சுமி பிரசாத்-சாகித்திய அகாதமி வெளியீடு.

12. எப்படி எழுதத் தொடங்கினேன்-கார் லோஸ் பியாண்டஸ்

13. இமயமலை -தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர். தமிழில் பாவண்ணன்

14. பகவான் புத்தர்-கோசம்பி.

15. பொந்திஷேரி- மூன்று நாவல்களின் தொகுப்பு- ரமேஷ் பிரேதன்.

16. அரைமஞ்சள் சூரியன்-சியாமந்தா எங்கோடி அடிச்சி.

17. இடைவெளி எஸ் சம்பத்

18. முமு-யுவான் துர்கனேவ்

19. யானை டாக்டர் கே.

20. ஜெயப்பிரகாஷ் நாராயண்

21 .காதலன் ரஷ்ய நாவல்

22. முதல் ஆசிரியர்-ரஷ்ய நாவல். அண்ணன் அறிவுமதி சிபிக்கு வாங்கி கொடுத்தது ‌

23. வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் -திருச்செந்தாழை

24. உருமாற்றம்- பிரான்ஸ் காப்கா

25. முள்ளம்பன்றியின் தன் வரலாற்று குறிப்பு.-அலேன் மபாங்க்கு.

26. பேரரசன் அசோகன். சார்லஸ் ஆலன்.

27. மணி பல்லவம்- வாசுமுருகவேல்

28. சாய்ந்தாடும் குதிரை- எஸ் ராமகிருஷ்ணன்.

29. மஞ்சள் தருணங்கள்-எஸ் ராமகிருஷ்ணன்.

30. குற்ற முகங்கள் -எஸ் ராமகிருஷ்ணன்.

31. பெரியார்- தலித்துகள் முஸ்லிம்கள் தமிழ்த் தேசியர்கள் -அ. மார்க்ஸ்

32. உதிரம் பொழியும் நிலவே-டெக்ஸ் மில்லர் காமிக்ஸ் ‌

33. எனது ஆண்கள் நளினி ஜமீலா.

34. பச்சையப்பன் இல் இருந்து ஒரு தமிழ் வணக்கம்.-நா முத்துக்குமார்.

35. முகாமுகம்.-நட்சத்திர செவ்வந்தியன்.

36. சோழ அரசும் சமூகமும்-சுப்பராய்லு.

37. கரைந்த காலத்தின் கனத்த சாட்சிகள்-ப திருமாவேலன்.

38. சட்டத்தோடு சடுகுடு-டெக்ஸ் வில்லர் காமிக்ஸ்.

39. புகழ்மிக்க விசாரணைகள். ஜே

பால் பாஸ்கர்

40. தீரமிகு புது உலகம். காலேஜ் ஓடு வெளியீடு.

41. என்னை சந்திக்க கனவில் வராதே நா முத்துக்குமார்.

42. சிலந்தி இலக்கியப் புனை கதைகள்.

43. டேங்கோ-சிவந்த மண்.

44. அம்பேத்கர் கடிதங்கள். நேர்காணல்கள் காலச்சுவடு வெளியீடு.

45. இரத்தம் மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்.

46. வாரண மௌனி- லாரன்ஸ் ஆண்டனி.

47. கொடுங்காற்றில் ஒரு விளக்கு லல்லாவின் கவிதைகள்.

48. காதலின் கொடும்வாள்- மீராவின் கவிதைகள்.

49. நடைவழி நினைவுகள் சி மோகன்.

50. அஸ்தினாபுரம்-ஜோடி குரூஸ்

51. தி அல்கிமெஸ்ட்- பாவ்லோ கோய்லா ஆங்கில நூல் சிபி வாங்கியது.

52. நெருப்பில் வளர்ப்பவை திருச்சந்தாழை.

53. நீல குண்டு பல்பு சங்கர் சுப்பிரமணியன்.

54. இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் தமிழில் ஆர் சிவக்குமார்.

55. பேசும் படம் செழியன்.

56. 1974 மாநில சுயாட்சி-ஆழி பதிப்பகம்

57. இந்திய எதிர்ப்பு போரில் ஈவேரா பித்தலாட்டம்-ஈழத்து சிவானந்த அடிகளார். தமிழம் வெளியீடு.

58. காவியம்-ஜெயமோகன்.

59. இசைப்பட வாழ்தல் -சஞ்சய் சுப்பிரமணியன்.

இயக்குனர் வ. கீரா அவர்களின் “குமரி” நூல் திறனாய்வுக் கூட்டத்தைப் பற்றி விரிவாக தணித்து எழுதுகிறேன்.

சிறகுடைய தந்தைகள்.

♥️

“தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்” என வள்ளுவர் கூறுகிறார். அந்த அவைகளும் கூட பெரும்பாலும் தந்தையார்களின் அளப்பரிய தியாகத்தினால் தான் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் நான் எப்போதும் மகன் அதியனின் தந்தை என்னுடைய சகோதரன் புதுகை ஜெயசீலன் மற்றும் மகன் தி.த.தமிழவன் கோத்தகிரியின் தந்தை அண்ணன் தமிழ் தாசன் ஆகியோர் எனது பெருமதிப்பிற்குரியவர்கள். மகன்களுக்காக மேடைகள் ஆனவர்கள். அந்த மேடைகள் அவர்களின் ஆன்மாவால் ஆனவை. அவர்கள் மகன்களை உருவாக்குகிற அந்த போராட்டத்தை தாய்மையை விட புனிதமானது என்றே கருதுகிறேன்.

சமீபத்தில் எனது பெரியப்பா எழுத்தாளர் ச.கல்யாணராமன் தனது 89 வது வயதில் மரணம் அடைந்தார். அவரது பிள்ளைகளுக்காக மட்டுமல்ல அவரது தம்பி பிள்ளைகளுக்காகவும் கடுமையாக உழைத்த பெருமகன் அவர். வாழ்வில் எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளை, விமர்சிக்க தகுந்த வாழ்க்கை முறையினை அவர் வாழ்ந்தாலும் பிள்ளைகளுக்கு அவர் ஒரு சிறந்த அப்பா. எங்கள் எல்லோரையும் வாழ்வின் உயரத்தில் அமர வைக்க வேண்டும் என அவர் கனவு கண்டார். சிலரும் அமர்ந்தார்கள்.
எங்களில் சிலரின் அளப்பரிய உயரத்திற்கு.. இரவு முழுக்க கை வலிக்க வலிக்க எழுதிய அவரது உழைப்பு மிக முக்கிய காரணம்.

ஆனால் காலம் கொடுமையானது தானே. எல்லா நினைவுகளையும் அழிப்பதுதான் கால வெள்ளத்தின் இயல்பு. மறப்பது மனித இயல்பாக இருக்கிறதோ இல்லையோ என்று இதுவரை எனக்கு சந்தேகம் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் அவ்வளவு எளிதாக மனித மனம் எதையும் மறக்காது. ஆனால் மறந்தது போல நடிக்கும். அதுவே வாழ்க்கை என நம்பி இயல்பாக வாழத் தொடங்கும்.

கடைசி காலத்தில் எனது பெரியப்பா உடல் நலிவோடு இருந்த காலகட்டத்தில் நான் அருகில் இல்லை என்கிற ஒரு குற்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. எனக்கென்று குடும்பம் ஆகிவிட்ட நிலையில் அது சாத்தியமில்லைதான்.ஆனால் அவருடைய இறுதிக் காலத்தில் அவர் தனிமையில், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் என்பதுதான் எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் சுமக்க போகிற பாவம்.

🔸

சுயநலம் என வந்துவிட்டால்.. தாய் தந்தை உடன் பிறந்தவர்கள் என எல்லோரும் அந்நியமாகி விடுகிறோம். எல்லோர் குறைகளும் மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகின்றன. மனிதன் தனித்த தீவாக மாறுவதுதான் அவன் வாழ்வில் அவன் அடைகிற மாபெரும் சீரழிவு. அதுவும் பெரிய குடும்பத்தில் பிறந்துவிட்டு தனியனாக அலைவது ஒரு பாவனை. நினைவுகளை விட்டு யாராலும் அவ்வளவு எளிதாக நிர்வாணமாகி விட முடியாது. ஒவ்வொரு நாளும் ஒன்றாக வாழ்ந்த நாட்களில் பகிர்ந்து கொண்ட அன்பின் ஈரம் மட்டும் உள்ளுக்குள் சுரந்துக் கொண்டே இருக்கும். அது ஒரு வகையான வலி தான்.

உலகத்திலேயே மோசமான கைவிடல் என்பது வயதான காலத்தில் பெற்றோரை விடுவதுதான்.

🔸

எனது தம்பி ஒருவன் இருக்கிறான். கட்சியின் மூலமாகத்தான் அவன் எனக்கு பழக்கம். சிறு வயதில் அவன் கட்சியில் இணைந்த போது அவன் தந்தை அவனிடத்தில் இல்லை. அவர் இன்னொரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார். தம்பி தனது தாயுடனும் தன் தங்கையுடனும் வாழ்ந்து வந்தான். தந்தை இல்லாத தனிமையை கொல்வதற்காகத்தான் அவன் கட்சியில் இணைந்ததாக எனக்குத் தோன்றியிருக்கிறது. அந்த வயதில் அவன் எப்போதும் கட்சி வேலைக்காக அலைந்து கொண்டே இருப்பான். ஆனால் அப்பா மீது அவனுக்கு கடுமையான கோபம் இருந்தது. கோபம் என்பதை தாண்டி எல்லாம் அது ஒரு வகையான வன்மம். தந்தையைப் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் கலங்கிய கண்களுடன் அந்த இடத்தை விட்டு அவன் நகர்ந்து விடுவான்.

அப்படி வாழ்ந்து கொண்டிருந்த அவன் வாழ்வில் ஒரு நாள் அவன் தந்தை எல்லாவற்றையும் இழந்து வந்து அவன் முன்னால் நின்றார். மன்னித்துவிடு என கதறினார். அவனுடைய தாயும் ஏறக்குறைய கண்கலங்கி மன்னிக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். அந்த நேரத்தில்தான் அவன் என்னை வந்து பார்த்தான். அண்ணா அந்த ஆளை எனக்கு பிடிக்கவே இல்லை.. ஆனாலும் அம்மா அழுவது என்னால் தாங்க முடியவில்லை. என்ன செய்வது எனக் கேட்டான்.

“சகித்துக் கொண்டு மன்னித்துவிடு. அது மட்டுமே உனக்கு நிம்மதியை தரும்.” என்று சொன்னேன்.

தம்பி இப்போது தாய் மற்றும் தந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த தந்தையின் வயதான காலத்தில் அவருடைய மடியில் தம்பியின் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

🔸

இப்படி தன்னை சிறுவயதில் புறக்கணித்து காலப்போக்கில் எல்லாவற்றையும் இழந்த தந்தையை எதுவும் தண்டிக்காமல் ஏற்றுக் கொள்கின்ற மனதின் சூட்சமம் மிக நுட்பமானது. அது தந்தைக்கான பால்ய கால ஏக்கத்தை சார்ந்தது.

இன்றளவும் தவமாய் தவமிருந்து படம் பார்க்கும்போது கண்கள் கலங்காதவர்கள் யார் இருப்பார்கள்.. தீபாவளியின் முதல் நாள் இரவு வரை உழைத்து விட்டு பிள்ளைகளுக்கு துணிமணிகள் பட்டாசுகள் என வாங்கி வருகிற எத்தனையோ தந்தைகளை நாம் காலத்தோடு கொண்டாடி இருக்கிறோமா என்பதுதான் பெரிய கேள்வி.

தந்தைக்காக காத்திருப்பதுதான் பால்ய காலத்தின் பசுமையான நினைவுகளில் ஒன்று. பெரும்பாலான குழந்தைகளுக்கு தந்தை என்பவர் தான் வெளியே அழைத்துச் சென்று உலகத்தை அறிமுகப்படுத்துபவராக இருக்கிறார். அவர்களைப் பொறுத்தவரையில் மூடிய சுவர்களில் இருந்து முதன்முதலாக உலகத்தின் வெளிச்சத்திற்கு தந்தையின் கரங்கள்தான் அழைத்து செல்கின்றன.

எப்போதும் தந்தையின் கரங்கள் நம்பிக்கையின் கதகதப்புக்கு உரியவை. அந்த கைகளைப் பிடித்துக் கொண்டால் போதும். பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் எங்கேயும் போய் விடலாம் என குழந்தைகள் நினைக்கின்றன.

எனது மூத்த மகன் பிறந்த காலத்தில் நான் ஒரு ஸ்கூட்டி வைத்திருந்தேன். பிறந்த ஆறேழு மாதங்களில் என் வீட்டின் ஹாலில் தான் அவனை படுக்க வைத்து இருப்பார்கள். வாசலில் என் ஸ்கூட்டி சத்தம் கேட்டால் போதும். அவனது முகம் புன்னகைக்க துவங்கும். கை கால்களை விரைத்துக் கொண்டு தனது மகிழ்ச்சியை அவன் வெளிப்படுத்தும் போது .. அவனை அழைக்கும் விதமாக ” “”குட்டி பாப்பா ..டிங்..டிங்””” என ஒலி எழுப்புவேன். அவனும் சிறிய ஒலி எழுப்பி குதூகலிப்பான்.

கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவனை வெளியே அழைத்துச் செல்ல தொடங்கினேன். எனது இரண்டு மகன்களும் வித்தியாசமானவர்கள். என் உடல் நிலையை கருதி எப்போதும் என்னை அவர்கள் தூக்க சொன்னதே இல்லை. தந்தை தூக்கிக் கொண்டு நடப்பார் என்ற அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டதே இல்லை. என்னை பிடித்துக் கொண்டு நடப்பார்கள். இப்போது நான் அவர்களை பிடித்துக் கொண்டு நடக்கிறேன். அந்தக் காலத்தில் நான் பயன்படுத்திய எனது ஸ்கூட்டி மாற்றுத்திறனாளி ஓட்டக்கூடிய மூன்று சக்கர வண்டி அல்ல. இரண்டு சக்கரங்கள் தான். அதில் மிகுந்த திறனுடன் ஓட்ட பழகி நான் நகரையே வலம் வந்து கொண்டிருந்தேன். என் நண்பர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு ஊர் சுற்றி இருக்கிறேன். ஆனால் என் மகனை முன்னால் நிற்க வைத்து ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் பதட்டமாக இருக்கும்.

ஒரு நாள் திரைப்படத்திற்கு அழைத்து செல்லும்போது எதிர்பாராத விதமாக எனது வண்டி விபத்துக்குள்ளாகிவிட்டது. நான் கீழே விழுந்து விட்டேன். ரோட்டில் விழுந்த அடுத்த நொடி என் மகனுக்கு என்னானது என எனக்குள் துடித்த துடிப்புதான் தாய்மைக்கு நிகரானது தந்தைமை என நம்ப வைத்தது. சட்டென எழுந்து நின்ற எனது மகன் என் அருகில் ஓடி வந்து “எனக்கு ஒன்றும் ஆகவில்லை அப்பா” என தழுதழுத்த குரலில் சொன்னபோது நான் உடைந்து விட்டேன். அவனுக்கு தன் வலியை பற்றி சொன்னால் தன் தந்தை உடைந்து விடுவான் என்கிற நுட்பமான அறிவு அந்த வயதிலேயே இருந்தது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். அதிலிருந்து என் மகனை நான் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதில்லை. அவனுக்காகவே நான் கார் வாங்கினேன்.

என் அப்பாவை கொரோனா காலத்தில் மருத்துவமனையில் சேர்த்த போது நினைவில்லாமல் அவர் இருந்தார். அப்போது ஒரு நொடியில் அவரது உள்ளங்கைகளை நான் பற்றிக் கொண்டேன். மீண்டும் பற்ற முடியுமோ என்கிற பயம் எனக்கு. அந்தக் கைகளில் இருந்து நான் நம்பிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கை முழுக்க என்னை அழைத்துச் செல்லும் என்று எண்ணினேன். நல்லவேளை அம்மா அப்பாவை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்.

🔸

தந்தை மகன் உறவைப் பற்றி மிக நுட்பமாக எழுதி இருப்பவர் மெக்சிகோ எழுத்தாளர் யுவான் ரூல்ஃபோ.

மிகக் குறைவாக எழுதிய எழுத்தாளர். ஆனாலும் அவர் எழுதியவை எல்லாம் உலகத்தின் தரமான எழுத்துக்கள் என கொண்டாடப்படுகின்றன.

1918 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு ஆறு வயதானபோது அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன் பிறகு அடுத்த நான்காண்டுகளில் அவரது தாய் மாரடைப்பினால் காலமானார். அதற்குப் பிறகு சிறிது காலம் உறவினர்கள் மத்தியிலும் பிறகு ஒரு அனாதை இல்லத்திலும் தன் வாழ்க்கையை வாழ்ந்த யுவான் ரூல்ஃபோ எப்போதும் உணர்ச்சி கொந்தளிப்பான மனநிலையை கொண்டவர்.

மெக்சிகோ நவீன இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளராக விளங்கிய ரூல்போ பற்றி இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்கோஸ் “எல்லா காலத்திற்குமான, எல்லா இடங்களுக்குமான நீடித்து நிற்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் யுவான் ரூல்ஃபோ” என கொண்டாடுகிறார். அவரது நாவல் “பெட்ரோ பரமோ” உலகப் புகழ்பெற்றது. திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

அவருடைய சிறுகதைத் தொகுப்பு “எரியும் சமவெளி” என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு எதிர் பதிப்பகத்தின் வழியாக வெளியாகி உள்ளது. தமிழில் இல. சுபத்ரா மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 17 கதைகளும் மிக முக்கியமானவை. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நம்மால், இக்கதைகளால் மிக எளிதாக மெக்சிகோவின் பண்பாடு மற்றும் நிலத்தில் பொருத்திக் கொள்ள முடிகிறது என்பதுதான் யுவான் ரூல்ஃபோவின் தனித்துவம்.

அதில் இரண்டு கதைகள் இருக்கின்றன. ” என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.” மற்றொன்று “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”

ஒரு காலத்தில் கொலை செய்துவிட்டு இன்னொரு ஊருக்கு ஓடி வந்த ஒருவன் வாழ்நாள் முழுக்க தன்னை தேடி காவலாளிகள் வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொந்தளிப்போடு ஒவ்வொரு நொடியும் மரணித்து விடுவோமோ என்ற சாவின் விளிம்பில் துடிப்பது தான் அந்தக் கதை. இறுதியாக அவர்கள் வந்துவிடுவார்கள். அவன் தன் மகனிடம் அவர்களிடம் சொல்ல அந்தத் தந்தை கேட்பதுதான் ‘என்னை கொல்ல வேண்டாம் என அவர்களிடம் சொல்.”

ஆனால் மகன் மறுத்து விடுவான். ஏனெனில் அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். எங்கே அவரது மகன் என்று சொன்னால் தன்னையும் சுட்டு விடுவார்களோ என பயந்து அவன் மறுத்து விடுவான். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் அந்தக் கதை. மரண நொடியில் வாழ்வின் முதுமையில் வாழ்வதற்கான வேட்கை எப்படி கொப்பளிக்கிறது என்பதை பற்றி அவ்வளவு நுட்பமாக எழுதி இருக்கும் யுவானின் இந்த கதை நவீன இலக்கியத்தின் உச்சம்.

அதேபோல , வாழ்நாள் முழுக்க தீமைகளை மட்டும் செய்து வந்த மகனுக்கு உடல்நிலை மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட நிலையில் அவனைத் தூக்கிக் கொண்டு ஒரு மலை மீது ஏறி ஒரு அங்கே இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் மகனை சேர்ப்பதற்காக முதுகில் சுமந்து கொண்டு போகிற முதிய தந்தையைப் பற்றிய கதைதான் ” நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை”. இந்தக் கதை முழுக்க தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். தீமையை மட்டும் செய்த மகன் தந்தையின் சொற்களை கேட்டு கண்ணீர் வடிக்க தொடங்கும் போது அந்த ஊர் வந்து விடும். இரவு நேரத்தில் நாய்கள் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிற அப்பொழுதில் அந்தத் தந்தை சொல்வதுதான் “நாய்கள் குரைப்பது உனக்கு கேட்கவில்லை.”

உண்மையில் பிள்ளைகளுக்காக “எரியும் சமவெளி” தந்தைகளின் ஆன்மாக்கள் தான்.

🔸

விவாகரத்து வழக்குகளுக்கு மகள்களை அழைத்து வரும் பெற்றோர்களில் பெரும்பாலும் மிகுந்த பதற்றத்தோடு இருப்பது தந்தைகள் தான். பெரிய சிறகு இருந்தால் இப்படி துயரத்திற்கு உள்ளாகி இருக்கிற தன் பிள்ளைகளை போர்த்திக் கொள்ளலாமே என்பது போல அவர்கள் துடிக்கின்ற துடிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

தாய் பிள்ளைகளை வயிற்றில் சுமக்கிறாள். தந்தை பிள்ளைகளை தோளில் சுமக்கிறான்.

தோளுக்கு அருகே தானே இதயம் துடிக்கிறது..?

♥️

மணி செந்தில்.
www.manisenthil.com

அவர்களுக்காகவும் பேசுங்கள்.

நேற்று காலை கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய பதிவு ஒன்று என்னை மிகவும் பாதித்தது.

https://www.facebook.com/share/p/1D5A5tTmjP

திமுகவை சேர்ந்த அவரது அரசியல் நிலைப்பாடுகள் எனக்கு முற்றிலும் எதிர்ப்பானவை. அந்த நிலைப்பாடுகளை பொருத்தவரையில் அவர் எனக்கு எதிரி. அவரது கடுமையான ஆவேசமும் படபடப்பும் எனக்கு உவப்பானவை அல்ல. இவரா இது போன்ற கவிதைகளை, படைப்புகளை எழுதுகிறார் என்று நானே வியந்திருக்கிறேன்.

ஆனால் அவரது உடல்நிலை குறித்தும், தன் எண்ணங்களுக்கும் தன் உடல் குறைபாடுகளுக்கும் இடையே நடக்கின்ற போராட்டங்கள் குறித்து அவர் எழுதுகிற பதிவுகளை நான் மிக உன்னிப்பாக வாசிப்பேன். ஏனெனில் அதே அவஸ்தைகளை நானும் அனுபவித்து வருகிற காரணத்தினால் அவை கொஞ்சம் எனக்கு நெருக்கமானவைகளாக இருக்கும். அதேபோல் அபிலாஷ் எழுதிய “கால்கள்” நாவல் தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான பதிவு.

உண்மையில் நடக்க முடியாதவர்களுக்கு மிகப்பெரிய துயரம் அவர்கள் கொண்டிருக்கின்ற முதுகு வலி தான். குனிந்து பிடித்து நடப்பது அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது போன்றவை எல்லாம் அந்த முதுகு வலிக்கு மூலமான காரணங்கள்.முதுகு வலியின் மிகப்பெரிய தந்திரமே உங்களை தூங்க விடாது என்பதுதான். எப்படி புரண்டு படுத்தாலும் முதுகு வலிக்கும். எனவே உங்களால் தூங்க முடியாது. பின்னிரவு ஏறக்குறைய விடியற்காலை மூன்று மணிக்கு முதுகு வலி தாங்க முடியாமல் புத்தகங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஒவ்வொரு நாள் இரவும் ஏற்படும்போதெல்லாம் நான் மனுஷ்ய புத்திரனை பற்றி நினைத்துக்கொள்வேன். என்னை விட மோசமான நிலைமை அவருக்கு. அவர் சக்கர நாற்காலியில் நீண்ட காலமாக பயணித்து வருகிறார். அவருக்கு வருகின்ற பிரச்சனைகளை நானும் எதிர்கொண்டு வருவதால் அவருடைய பதிவுகள் எப்போதுமே எனக்கு ஒரு முன்னறிவிப்புகள் தான். அதற்காக நானும் மனதளவில் தயாராகி விடுவேன்.

இதுபோன்று போலியோவால் பாதிக்கப்படுபவர்கள் இளம் வயதை எளிதாக கடந்து விடுவார்கள். ஆனால் வயதாக வயதாக கீழே விழும் ஆபத்து அதிகரித்துக் கொண்டே போகும். எனவே நடப்பதை பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அதில் மிக முக்கியமான பிரச்சனை என்னவெனில் இதனால் எடை கூட தொடங்கும். எடை கூட கூட முற்றிலுமாக நடை தடைப்படத் தொடங்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சக்கர நாற்காலியை நோக்கி பயணம் தான்.

குவைத் செந்தமிழர் பாசறை பயணத்திற்கு நான் சென்றிருந்தபோது நான் உபயோகிப்பதற்காக உறவுகள் எனக்கு சக்கர நாற்காலி ஒன்று வாங்கி அளித்திருந்தார்கள். உண்மையில் அது எனக்கு பெரும் வசதியாக இருந்தது. கொஞ்சம் முதுகு வலி குறைந்தது போல எனக்கும் தோன்றியது. இதனால் அதை நான் இந்தியாவுக்கும் எடுத்து வந்து விட்டேன். இங்கே வந்தவுடன் என் தம்பி ஆனந்த் ( வழக்கறிஞர் மோ.ஆனந்த் ) அதைக் கோபமாக எடுத்து மேலே கட்டி வைத்து விட்டான். என் அம்மாவும் அதை விரும்பவில்லை.

என்னை மிகவும் விரும்புகிறவர்களின் மிகப்பெரிய பிரச்சனையே, எனக்கு இருக்கும் சிக்கல் மற்றும் வலி போன்றவை எல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியாது என்பதுதான். அவர்களிடம் கேட்டால் நான் அவ்வாறு நினைக்கக் கூடாது, நினைக்க உரிமையற்றவன் என்பதுதான் அவர்களின் பதிலாக இருக்கும்.

என் உயிர் அண்ணன் சீமான் என் மீது எந்தவித அனுதாபத்தையும் காட்டாதவர்.எல்லோருக்கும் இணையாக சொல்லப்போனால் இன்னும் சிறப்பாக நான் பணியாற்ற வேண்டும் என்று என்னை வற்புறுத்துபவர். அது என்னால் முடியும் என நம்புபவர்.தாய்மைக்கு நிகரான அந்த கள்ளம் கபடம் அற்ற அந்த உச்ச உணர்விற்காகத்தான் உயிர் உள்ளவரை அவருக்கு நேர்மையாக இருக்கத் துடிக்கிறேன். என் அம்மாவிற்கும் அவருக்கும் ஒரே மாதிரியான மனநிலை. வலிகள், உடல் குறைபாடுகளை எல்லாம் தாண்டி நான் இந்த உலகத்தில் எல்லா சூழ்நிலைகளிலும் போராடி உயர வேண்டும் என்பதில் இருவருமே பிடிவாதமாக இருப்பவர்கள்.

பிறகு , என் ஆருயிர் மைத்துனர் பாக்கியராசன், என் தம்பிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி, செந்தில்நாதன், துருவன், போன்ற என்னை மிக ஆழமாக நேசிப்பவர்களுக்கும் இதே எண்ணம்தான். பெரிய பிரச்சினையே நான் அவர்களோடு அடிக்கடி எல்லா ஊர்களுக்கும் வர வேண்டும் என அவர்கள் நினைப்பதுதான். மிக ஆழமான அந்த அன்பிற்கு என்னிடத்தில் பதில் இல்லை . அவர்கள் மத்தியில் இருக்கும் போது நான் என்னையும் மறந்து என் வலியையும் மறந்து நிற்கிறேன் தான். அந்தப் பேரன்பில் நான் நிம்மதி அடைகிறேன் தான்.ஆனாலும் அவர்கள் உலகத்தில் நான் இருந்தே ஆக வேண்டும். எனக்கும் வருவதற்கு ஆசைதான். ஆனால் நீண்ட தூரம் வாகனத்தில் அமர்ந்து வரும்போது கடுமையான முதுகு வலியில் சிக்குவேன். எங்கேயாவது வெளியூர் சென்று விட்டு வந்தால் அடுத்த மூன்று நாட்கள் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. படுத்தே இருப்பேன். என்னை எப்போதும் பாதுகாப்பாக அழைத்து வரும் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கு இந்த பிரச்சனை சற்று புரியும்.‌ அதேபோல் பெரும்பாலும் உடன் இருக்கும் அண்ணன் ஹீமாயூன் அவர்களும் இதைப்பற்றி புரிந்து வைத்திருப்பார்.

அந்த வலி போவதற்கு வலி நிவாரணிகளும் எடுக்க முடியாது. அதிகம் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தால் சிறுநீரகம் பாதிக்கும் என்ற பயம். எனவே வலியை பொறுத்துக் கொள்ளல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு கவுனி அரிசி கஞ்சி தான் பெரும்பாலான நாட்களில் எடுத்துக் கொள்கிறேன். மதியம் ஒருவேளை உணவு. இரவு 7 மணிக்குள்ளாக உணவு எனத் திட்டமிட்டாலும் பல நாட்களில் அதைப் பின்பற்ற முடிவதில்லை. சிறிய உடற்பயிற்சிகள் செய்வதன் மூலமாக பெரிய பலன்களை எதிர்பார்க்க முடியாது.

இனி இருக்கும் காலங்களில் நலமாக ஒவ்வொரு நொடியையும் வீணாக்கி விடக்கூடாது என அஞ்சுகிறேன். நேற்று காலை நாம் தமிழர் கட்சியின் குடந்தை வேட்பாளர் வழக்கறிஞர் தம்பி ஆனந்த் அழைத்து கும்பகோணம் திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற சாய்வுகள் மற்றும் ஏற்பாடுகள் சரிவர இல்லை என சொல்லி எல்லா திரையரங்கு உரிமையாளர்களை சந்தித்து அரசு அலுவலர்களை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக சொன்னார்.

உண்மையில் இது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தது. எனக்கு திரைப்படங்கள் பார்க்க பேராவல் உண்டு. ஆனால் திரையரங்கில் இருக்கின்ற படிகளை நினைத்து மிகுந்த அச்சப்படுவேன். ஒருமுறை “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கு சென்னையில் தம்பி சாட்டை துரைமுருகன் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விட்டான். அங்கே போய் பார்த்த பிறகு தான் தெரிந்தது அந்த இருக்கை அந்த திரையரங்கில் உச்சத்தில் படிக்கட்டுகளின் மேலே இருந்தது. ஆனாலும் தம்பியின் பேரன்பு, திரைப்படங்களின் மீது இருக்கின்ற பெரும் காதல் இவையெல்லாம் தூண்டிவிட நானும் அவனை பிடித்துக் கொண்டு படி ஏறி விட்டேன். அன்று இரவு ஊருக்கு திரும்பிய பிறகு கடுமையான முதுகு வலி. அதற்குப் பிறகு கும்பகோணம் இயன்முறை மருத்துவர் தம்பி கார்த்தியிடம் ஒரு வாரம் மருத்துவம் எடுத்துக் கொண்டேன்.

இருப்பதிலேயே மிகப்பெரிய ஆபத்து படிக்கட்டுகள் தான். எல்லா திரையரங்குகளிலும் எல்லா திருமண மண்டபங்களிலும் சாய்வுத்தளம் வைக்க வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது.ஆனால் அரசு விதிகளுக்காக பெயரளவில். வைக்கப்படும் சாய்வுத் தளங்கள் பெரும்பாலும் பயன்படுத்த முடியாத இடத்தில் வைக்கப்படுகின்றன. இவை பெயரளவில்தான் வைக்கப்படுகின்றன என்பதை கண்காணிப்பதற்கு எந்த அரசு அலுவலரும் இல்லை. கூடுதலாக அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் திருமண மண்டபங்கள் திரையரங்குகளில் பயன்படுத்தப்படும் மார்பிள்ஸ் டைல்ஸ் கிரானைட் போன்ற வழுவழுப்பான தரைதளங்கள். அதில் தங்க நேரிடும் சிறு மண் துகள்கள் கூட உடல் குறைபாடு கொண்டவர்களை வழுக்கி கீழே தள்ளிக் காயம் ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை.

இதில் என்னைப் போன்றவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். பேரன்பு குடும்பம். மிகச்சிறந்த நண்பர்கள். என் தம்பிகள் ஆனந்த் லிங்கதுரை அருண் போன்ற எண்ணற்றத் தம்பிகள் நான் மகிழ்வாக வாழ அவர்கள் தன்னையே அர்ப்பணித்து நிற்கிறார்கள்.
உயிருக்குயிராக நேசிக்கும் நாம் தமிழர் உறவுகள் என எனது குடும்பம் என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

என்னை தீவிரமாக அரசியலாகவோ தனிப்பட்ட முறையிலோ எதிர்க்கும் என் எதிரிகள் கூட என்னை ஆழமாக நேசிப்பவர்கள் தான். ஒருபோதும் என் உடல் குறைபாடுகள் அவர்கள் கண்களுக்கு படாமல் இருப்பது தான் எனக்கு ஆச்சரியம். அவ்வளவு தீவிரமாக எதிர்க்கும் அவர்களின் எதிர்ப்பைக் கூட நான் மிகவும் நேசிப்பது தான் நகை முரண்.

இது போன்ற சூழ்நிலையில் வாழாமல் எந்த ஆதரவும் இல்லாமல் தனித்து துன்பப்படும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அடைகிற துன்பங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. குறிப்பாக பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற துயரங்களைப் பற்றி இதுவரை பெரிதாக பதிவில்லை என்பதே மிகப்பெரிய கொடுமை. மாதவிடாய் காலங்களில் பெண் மாற்றுத்திறனாளிகள் அடைகின்ற வேதனைகள் இதுவரை பேசாப் பொருள்.

அதேபோல மாற்றுத்திறனாளிகள் என்றால் உடல் குறைபாடுகள் கொண்டவர்கள் மட்டுமல்ல. செவித்திறன் சவால் கொண்டவர்கள், விழித்திறன் சவால் கொண்டவர்கள், பேச்சுத்திறன் சவால் கொண்டவர்கள், சிந்திக்கும் திறன் சவால் கொண்டவர்கள் என அது பல்வகை சவால் மனிதர்களை உள்ளடக்கிய சொல்.

எனது குடும்பத்திலேயே ஆட்டிசம் பாதிப்பில் ஒரு குழந்தையை நாங்கள் வைத்திருக்கிறோம். அவனைப் பாதுகாக்க, பராமரிக்க அவன் தாய், அவனது தாத்தா படுகிற பாடு, நான் அடைந்திருப்பதில் மிகப்பெரிய துயரம் அதுதான்.

ஒருமுறை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கம்பீரமாக அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சகோதரி சட்டென நாற்காலியில் இருந்து இறங்கி தவழ்ந்தவாறே கழிவறைக்கு போன காட்சி என்னை நிலைகுலைய வைத்தது. சில நொடிகளில் என்னை நானே தேற்றிக் கொண்டேன். பரவாயில்லை தங்கை அந்த அளவு கடும் உழைப்பினால் உயர்ந்திருக்கிறார் என.

ஆனால் சிறு உதவி, அவர்கள் இந்த உலகை சீராக அணுகுவதற்கான வசதி போன்றவை கூட அரசும் பொதுச் சமூகமும் இவர்களுக்கு செய்யவில்லை என்பது தான் இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை.

இந்த பதிவு கூட யாருடைய அனுதாபத்திற்கும் போடப்படுகின்ற பதிவு அல்ல. ஒரு சரிநிகர் சமுதாயத்தில் வாழ வேண்டும் சுதந்திர மனப்பான்மையோடு எல்லோரும் எல்லோரும் போல தாங்களும் பிறர் துணையின்றி உரிய மதிப்போடு வாழ வேண்டும் என நினைக்கின்ற கோடிக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறிய பக்கத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான்.

இந்த புரிதல் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் அருகில் இருக்கக்கூடிய உடல் குறைபாடு கொண்டவர்களை நேர்மையாக அணுகுவதற்கு உதவக்கூடும். உண்மையில் அவர்களுக்காக பேச யாருமே இல்லை. உலக சுகாதார நிறுவனம் கணக்கின்படி 130 கோடி பேர் உலகில் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதாவது மனித இனத்தில் ஆறு பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு குறைபாட்டுடன் வாழ நேரிடுகிற சூழல் நிலவுகிறது.

எனவே இதைப் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வு தேவையாக இருக்கிறது.வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகள் மிக இயல்பாக மற்றவர்கள் போல வாழ்வதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு நாடும் எவ்வளவு தாய்மை உள்ளதோடு செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நாம் வாழும் நாட்டின் மீது எதுபோன்ற மதிப்பு ஏற்படும் என்பதை நினைத்துப் பாருங்கள். அங்கே முடியாதவர்களுக்கென தனி நடை பாதைகள். உதவுவதற்கான நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள். தாழ்ந்த தளம் கொண்ட பேருந்துகள். படிக்கட்டுகள் இல்லாத அலுவலகங்கள். கண்ணியமாக நடத்தும் சமூகம், என மாற்றுத்திறனாளிகளுக்கு மேலைநாடுகள் சொர்க்கம் தான். இங்கே எளிதாக வசவு சொற்களில் கூட மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்துகின்ற உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்ற சொற்களை மிக எளிதாக பயன்படுத்தி விடுகிறார்கள். இதுவும் சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும். எப்படி சாதியை சொல்லி சக மனிதனை இழிவாகப் பேசுவது குற்றமோ அதே போலத்தான் உடல் குறைபாடுகளை முன்வைத்து ஒரு மனிதனை வசை பாடுவது. இதற்கான சட்டத்திருத்தமும் இயற்றப்பட வேண்டும் . பொது வழக்கில் மிக எளிதாக பயன்படுத்தப் படும் உடல் குறைபாடுகளை முன்வைக்கிற சொற்கள் முற்றிலுமாக மனிதப் பழக்கத்தில் இருந்து அகல வேண்டுமெனில் உரிய சட்ட திருத்தம் இயற்றப்பட வேண்டும்.

முடிவாக சொல்வது இதுதான்.

.

கண்ணியமாகவும் மதிப்புடனும் ‌உரிமையுடனும் உங்களோடு எல்லா இடங்களுக்கும் வந்து சரிநிகர் சமமாக வலிகள் இல்லாமல் வாழ வேண்டும் என உங்கள் மத்தியில் வாழ்கின்ற சிலர் நினைக்கிறார்கள். அவர்களையும் உள்ளடக்கியதுதான் சமூகம். அவர்களும் மகிழ்வுடன் வாழ இந்த உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் இது போன்ற பதிவுகளின் நோக்கம்.

இது குறித்து இன்னும் விரிவாக போர்த்தொழிலில் பேசியிருக்கிறேன்.
அதற்கான இணைப்பையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

இதில் நான் பேசியுள்ள விவரங்கள் அனைத்தும் முக்கிய விவாதப் பொருளாக மாற வேண்டும் என விரும்புகிறேன். அதன் மூலமாக பல நல்ல மாற்றங்கள் நடக்கக்கூடும்.

அதன் முடிவில் சொன்னது தான் இதன் முடிவிலும்.

அவர்கள் கேட்பது அனுதாபம் அல்ல.உரிமை !!

( நேற்று முழுக்க இது குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் நேற்று டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினம். )

♥️

மணி செந்தில்.

கணக்கு மாறா காலத் தொடர்ச்சி

எப்போதுமே நவம்பர் 26 , 27 ஆகிய இரண்டு தினங்கள் கடுமையான மன அழுத்தத்திற்குள் சிக்கிக் கொள்ளும் நபர்தான் நானும். நமக்காக உயிரை விட்டவர்களின் நாளில் மனம் கொள்ளும் ஆழ்ந்த குற்ற உணர்வின் இன்னொரு வடிவம் தான் அந்த மன இறுக்கம். அந்தக் கார்த்திகை மாதத்திற்கான குளிர், எப்போதும் மழை பெய்வதற்கான காலநிலை என அந்தக் கார்க் காலச் சூழலும் மனதிற்குள் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தும் காரணிகள் நம்மைச் சுற்றி இருக்கும். அப்படித்தான் இந்த முறையும்.

இந்த முறை கூடுதலாக சுற்றி நிகழ்கிற அரசியல் குழப்பங்கள், ஊடகங்கள் நடத்துகிற திட்டமிட்ட கருத்து உருவாக்கங்கள்‌ போன்றவற்றால் கொஞ்சம் தளர்ந்திருந்தேன்.

லட்சியவாதங்களின் மேன்மையை இந்தச் சமூகம் ஏன் உணர மறுக்கிறது என கோபம் வேறு. எப்போதும் நம் தலைவரின் முகம் இது போன்ற பலவீனங்களில் இருந்து என்னை எப்போதும் காப்பாற்றிவிடும். அவர் நிரம்பி இருக்கிற ஒரு இடத்திற்குள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து தான் காரைக்குடியின் எல்லையில் அமைந்திருந்த அந்த மாவீரர் திடலுக்குள் நுழைந்தேன்.

பிரம்மாண்டமான திடல். உண்மையில் புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை உறவுகள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். கடுமையான திட்டமிடல். மிகப்பெரிய மின்னணு ஒளி கட்டவுட்டில் மின்னிக் கொண்டிருந்தார் நம் தலைவர். சுற்றிலும் நூற்றுக்கணக்கான நம் இனத்தின் விடுதலைக்காக மா வீரத்தை விதைத்த குலசாமிகள் பதாகைகளில் காலத்தின் சாட்சிகளாக உறைந்து இருந்தார்கள்.

திடல் முழுக்க கடுமையான லட்சிய இறுக்கம்.சகஜம் ஆகுவதற்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் சிரித்துப் பேசியும் சரியாக வரவில்லை. என்னருகில் தேடி வந்து அமர்ந்து கொண்டாள் என் தங்கை சுனந்தா. அவளும் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாள். இன்னொரு புறம் எங்கள் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன்.அவர் இலட்சியவாதங்களின் உதாரண மனிதர். இப்படி பலரும் உணர்வுகளின் ஒரே ஒத்திசைவில் அமர்ந்திருக்க, இறுக்கி கட்டப்பட்ட தோலில் அறைய, தொடங்கிய பறை இசை இன்னும் எல்லோரையும் மேலும் உணர்வின் இறுக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

நண்பர்கள் பலரை அரங்கத்தில் சந்தித்தப் போது புன்னகைத்து கைகுலுக்கி கொண்டாலும் எல்லோரும் இதே போன்ற மனநிலையில் தான் இருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.அப்போதுதான் அண்ணன் என்ற அந்தக் கனவு மனிதன் உயர்த்தும் கரங்களோடு உள்ளே நுழைந்தான்.‌ எப்போதுமே நம் மன உணர்வுகளின் அலைவரிசையை அந்த மனிதன் அறிந்து வைத்திருப்பது தான் இதுவரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அதிசயம். நம் கேள்விகளுக்கான பதில்களை அவரது அனல் மொழி கொண்டிருக்கும். அந்த நம்பிக்கையை ஒருபோதும் அண்ணன் தகர்த்ததில்லை. சந்திப்பிற்காக அருகில் சென்று நானும் தம்பி ஆனந்தும் கை கொடுத்தோம். மென்மையாக என்னை பார்த்து சிரித்து “உன்னை நான் அறிவேன்” என்பது போல ஒரு பார்வை.

6:00 மணி கடக்க தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான ஒரே அலைவரிசையில் கூடிய அந்தக் கூட்டம் பெரும் அமைதிக்கு உள்ளானது. அந்த அமைதி ஒரு கம்பீரம். ஒரு தேர்ந்த ராணுவ அணிக்கு வாய்க்கும் நேர்த்தி. அண்ணன் *ஈழ* தேசியக் கொடியை ஏற்றத் தொடங்கினார். கரிகால் சோழனும், ராசராசனும் அரசேந்திரனும் ஏந்திய புலிக்கொடி, ஒரே சமயத்தில் இமயத்திலும் ஈழத்திலும் பறந்த கொடி, எம் தலைவரும் எம் குலசாமிகளும் உயிரென சுமந்த கொடி “ஏறுது பார் கொடி ஏறுது பார்” என வானை நோக்கி ஏறி வானில் நிற்கும் எம் *மா* வீரர்களை நோக்கி ஏறி சிலிர்த்து பறந்தது.

பிறகு நாம் தமிழரின் கொடி. அதற்குப் பிறகு மீண்டும் கனத்த அமைதி. அந்த ஐந்து நிமிடங்களில் எங்கோ தூரத்தில் கேட்ட ஒரு சிறு குழந்தையின் சிணுகங்கலான அழுகைக் குரல் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை.

எல்லோரும் அமைதியாக உறைந்து இருந்தோம். அண்ணன் மட்டும் எழுந்து சில தங்கைகளோடு சுடரேற்ற நடந்துச் சென்றார். தாயக கனவினில் என்ற அந்த பாடல் ஒலிக்க தொடங்கிய அந்த நொடி.. தலையை குனிந்த என்னால் நிமிர முடியவில்லை.

நிமிர்ந்து பார்த்த போது எரிந்த தீ கணங்குகளுக்கு பின்னால் இறுகிப்போயிருந்த அண்ணனின் முகம் தெரிந்தது.அதற்குப் பிறகு வரிசையாக காணொளி காட்சிகள். ஒவ்வொன்றும் கடந்த துயர வரலாற்றின் பேராவணங்கள். மா *வீரர்களைப் பற்றிய பாடல், சிரஞ்சீவி மாஸ்டர் உருவாக்கத்தில் *செம்மணி புதைகுழிகளைப் பற்றிய காணொளி பாடல், தம்பி முரளி மனோகரின் “தேசமே” பாடல் என ஒவ்வொன்றும் நம்மை உணர்வின் உச்ச நிலைக்கு ஆழ்த்தியது.

அந்த உணர்வின் உச்சத்திலேயே அண்ணன் பேசத் தொடங்கினார். நேற்று நிகழ்ந்தது ஒரு கூட்டத்தின் பேச்சல்ல. அது உணர்ச்சியின் பேரலை. “தன் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை போர்க்களத்திலேயே தேச விடுதலைக்காக பலி கொடுத்தவன்‌ என் தலைவன்” என அவர் முழங்கியபோது என் கண்கள் நிறைந்து வழியத் தொடங்கின. பக்கத்தில் அமர்ந்திருந்த தங்கை சுனந்தா அழுதுவிட்டாள்.

அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் போர்க்கள சதிராட்டம். சத்தியத்தின் ஆவேசம். வஞ்சகத்தால் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்தில் மிஞ்சி இருக்கும் வீரன் ஒருவனின் வஞ்சினம். காயம் பட்டப் புலியின் அடங்காத சீற்றம்.அந்தக் குரலை நான் எங்கேயோ வரலாற்று வீதியில் கேட்டது போல எனக்கு நினைவு.

ஆமாம். காளையார் கோவில் காட்டில் இறுதி யுத்தத்திற்காக தயாரான சினம் கொண்ட சின்ன மருதுவின் குரல் தான் அது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுற்றி வளைக்கப்பட்டபோது ஒரு சில மெய்க்காப்பாளர்களுடன் இருந்த திப்பு சுல்தான் இறுதியாக முழங்கிய வீர முழக்கம் தான் அது.

அவ்வளவு செறிவு. அவ்வளவு உறுதி.

இறுக்கி கட்டப்பட்ட தெறிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கணைகள் போல அவரது சொற்கள் ஒவ்வொன்றும் அங்கே கூடியிருந்தோரின் ஆன்மாவின் குத்திக் கிழித்தன. ஒரு சின்ன சலசலப்பு இருக்க வேண்டுமே.. ஒரு பெருமழைக்கு முன்னால் நேரிடும் கனத்த அமைதி போல அந்த மனிதனின் சொற்களுக்கு முன்னால் நாங்கள் கலங்கிய கண்களோடும், சினமேறிய மனதோடும் அமர்ந்திருந்தோம்.

கூட்டம் முடிந்தது. பெரிதாக யாரும் பேசிக் கொள்ளாமல் அந்த இடத்திலிருந்து புறப்பட்டோம். சென்று கொண்டிருக்கும்போது அண்ணன் சீமானிடமிருந்து அழைப்பு. “உங்கள் ஆன்மாவின் குரல் அண்ணா இது.. ” என்று நெகிழ்ந்தவாறே சொன்னேன். அடுத்த அழைப்பில் வந்த தங்கை சுனந்தா ” அண்ணா! அண்ணன் உடம்பில் தலைவர் புகுந்து விட்டார். அது தேசியத் தலைவரின் சத்திய ஆவேசம் அண்ணா !” என்று சொன்னாள்.

இந்த இரண்டில் எது ? என அமைதியாக மகிழுந்தில் சென்று கொண்டிருக்கும் போது யோசித்த போது தான் எனக்கு ஒன்று புரிந்தது.

இந்த இரண்டும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். என்ற உண்மை தான் அது.

அண்ணனின் ஆன்மக் குரலில் தான் தலைவர் நித்தியமாய் ஜீவித்திருக்கிறார் ‌.

அது கணக்கு மாறா காலத் தொடர்ச்சி.

– மணி செந்தில்.

யாருக்கும் அவனைத் தெரியாது..!

அவன் எளியவன். சாதாரணன். மேடைகளின் வெளிச்சத்தில் ஒளிரும் நட்சத்திரமல்ல அவன்.‌ அடுக்கடுக்காய் செந்தமிழ் பேசும் சொற்களுக்கு சொந்தக்காரன் இல்லை அவன். அவன் எளியவன். சாதாரணன்.

அவனை நீங்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் பார்க்கலாம். ஏதோ உயரத்தில் ஏறிக்கொண்டு கட்சியின் கொடியை அல்லது தோரணத்தை கட்டிக் கொண்டிருப்பான். அதற்கு முந்தைய நாள் இரவில் சுவரொட்டி ஒட்டுபவரோடு அலைந்து திரிந்து சுவர்களை தேர்ந்தெடுத்து இருப்பான்.‌ அண்ணன் சீமானின் முகம் உயரத்தில் மின்ன வேண்டும் என்பதற்காக உயரமான சுவற்றில் ஏறத் தயங்கும் சுவரொட்டுபவரோடு வாக்குவாதம் செய்து அவனே அந்த சுவற்றின் உச்சத்தில் ஏறி சுவரொட்டி ஒட்டி இருப்பான். மேடையில் விரிக்கப்படும் விரிப்பினை அவன் தூசி தட்ட உதறும்போது , அந்த தூசி பறத்தலில் புன்சிரிப்போடு மிளிரும் அவன் முகம் காணலாம்.‌

நாற்காலிகளை தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து பார்த்து ஒவ்வொன்றாய் போடும்போது, யார் ஆலோசனை சொன்னாலும் அதை சிரிப்போடு ஏற்றுக் கொண்டு அந்த நாற்காலிகளை போட்டுக் கொண்டிருப்பான். அவர்கள் சிறியவர் பெரியவர் என்ற பேதம் எல்லாம் அவனுக்குத் தெரியாது. அவர்கள் தன் கட்சிக்காரர்கள். அவர்கள் சொன்னால் அவன் கேட்பான்.

கூட்டம் தொடங்கிய பிறகு அவனை நீங்கள் பார்க்க முடியாது. மேடைக்கு பின்னால் நின்று கொண்டு , ஓடும் ஜெனரேட்டர் சரியாக ஓடிக் கொண்டிருக்கிறதா என பதட்டமாய் பார்த்துக் கொண்டிருப்பான்.பேசி முடித்தவர்களுக்கு தாகம் தணிக்க தண்ணீர் பாட்டில்களை வாங்கி மேடைக்கு முன்னால் இறக்கி வைப்பான். கூடுதலாக நாற்காலிகள் வேண்டுமா என கேட்டு அதற்காக நாற்காலிகள் எடுக்க ஓடிக் கொண்டிருப்பான்.கூட்டம் முடிந்த பிறகு எல்லோரும் கலைந்து விடுவார்கள். அவன் தனிமையாய் நின்று கட்சிக்கொடி அவிழ்த்து கொண்டிருப்பான். தயங்கி யாராவது நின்றால், “நீங்கள் போங்கள் நான் கட்சிக் கொடியை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்..!” என்று சொல்வான். அந்த புலிக்கொடி மீது அவனுக்கு அப்படி ஒரு காதல்.

எப்போது கூப்பிட்டாலும் ஓடிவரும் தொலைவில் நிற்பான். ஆனால் தொலைவில்தான் நிற்பான். ஒருபோதும் வெளிச்சத்தின் வீதிகளுக்கு தன்னை விற்றவன் அல்ல அவன். நிருபர்கள் பேட்டி எடுக்கும் போது அண்ணனுக்கு பின்னால் நின்று போட்டி போட்டுக் கொண்டு முகங்களை காட்டி முகவரி தேடுகிறவன் அல்ல அவன். தூரமாய் நின்று அண்ணன் சீமானின் மொழிகளை அப்படி ரசிப்பான். வாடகைக்கு வண்டி ஓட்டும் போது ஓய்வெடுக்கும் நேரங்களில் கூட அண்ணன் பேச்சு தான் அவன் அலைபேசியில் ஓடிக்கொண்டிருக்கும்.

எல்லா கட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் முதல் ஆளாய் பேருந்திலோ, வேனிலோ ஏறுபவன் அவனாகத்தான் இருப்பான். அந்தப் பயணம் சென்று முடியும் வரை அந்த பேருந்தில் அல்லது வேனில் பயணிக்கின்ற எல்லோருக்கும் அவன் தான் தண்ணீர் வாங்கி தருவதிலிருந்து, உதவியாய் நிற்பதிலிருந்து, இரவு நேர பயணத்தின் போது ஓட்டுநருக்கு பேச்சுக் கொடுத்து வருவதிலிருந்து, அவன் தான் சகலமும்.

இத்தனைக்கும் அவனுக்குத் தினந்தோறும் அவன் வைத்திருக்கிற டாடா ஏஸ் வண்டி ஓட்டினால் தான் வருமானம். ஆனால் பெரும்பாலும் கட்சி வேலையின் போது அந்த வருமானம் அவனுக்கு கிடைக்காது. அதை உணர்ந்து யாராவது எரிபொருள் போட பணம் வைத்துக் கொள் என கொடுத்தால், அதை வாங்க மறுத்துவிட்டு இது என் கட்சி என் உழைப்பு இன்று மௌனமாக கடந்து விடுவான்.

உண்மையில் அவனை யாருக்கும் தெரியாது. அது பற்றி அவனுக்கும் எந்த குறையும் இல்லை. அவன் பணி அவன் நேசித்த அண்ணனுக்கும் அமைப்பிற்கும் புலிக்கொடிக்கும் நேர்மையாக இருப்பது.

ஒருமுறை அண்ணன் சீமான் கும்பகோணம் வந்திருந்த நாளில் .. எதிர்பாராத விதமாக அவனது தந்தையார் காலமாகிவிட்டார். அண்ணன் தங்கியிருந்த விடுதிக்கு அருகே தான் அவனது வீடு. அண்ணன் வருகையின்போது இப்படி ஒரு துயரம் நடந்து விட்டதே என அவனுக்கு மிகப்பெரிய வலி. அதனால் யாரிடமும் சொல்லாமல் வீட்டு வாசலில் கூட எந்த அறிவிப்பும் செய்யாமல் அமைதியாக அவன் வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டான். ஏதேச்சையாக அவனது வீட்டுக்குப் போன ஒரு கட்சி தம்பி இதை தெரிந்து கொண்டு தயக்கமாய் எங்களிடத்தில் சொல்ல, அண்ணன் சீமானுக்கு தகவல் தெரிந்தது. உடனே தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து வாருங்கள் தம்பி வீட்டிற்கு போவோம் என வாகனத்தில் கூட ஏறாமல் நடந்தே கிளம்பி விட்டார்.

சென்னை சாலையின் ஓரத்தில் ஒரு இடிந்த சிறிய குடிசை வீடு. எந்த நேரமும் கீழே விழுந்து விடும் என்கிற அளவிற்கு பழுதான சுவர்கள். சாலையில் வேகமாக வரும் ஏதோ ஒரு வாகனம் கண நேரத்தில் தவறினால் வீட்டின் சுவற்றில் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்படுகின்ற ஆபத்தோடு இருக்கின்ற வீட்டில் தான் குடும்பத்தோடு அவன் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான். இரண்டு சிறு ஆண் குழந்தைகள். தன்னைப் போலவே உலகம் அறியா அப்பாவி மனைவி. இதுதான் அவனது உலகம்.‌ அதைத் தாண்டி அவன் சம்பாதித்தது நாம் தமிழர் கட்சியை தான்.

அண்ணன் அந்த வீட்டை பார்த்து ஒரு நொடியில் உறைந்துவிட்டார். இந்த இடத்திலிருந்து அவன் என்னிடத்தில் வந்திருக்கிறானே என அண்ணன் சொன்னபோது அவரது குரல் தழுதழுத்தது. அதனை மாற்ற வேண்டும் என்றார். அந்த வீட்டை பொறுத்து ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்ற விபரம் அவரிடம் தெரிவித்த போது, வழக்கை சீக்கிரம் முடித்து தம்பிக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அண்ணன் சொன்னார். அவனுக்கோ அண்ணனைப் பார்த்து மிகப்பெரிய பதட்டம். அவனுடைய தந்தைக்கு அண்ணன் இறுதி வணக்கம் செலுத்தி அவனை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு உடல் நடுங்கியது. அண்ணன் சென்ற பிறகு.. இதைவிட எனக்கு என்ன கொடுப்பினை இருக்கிறது.. என் அண்ணன் என் வீட்டிற்கு வந்து விட்டார். இனி என் உடலும் வாழ்வும் உயிரும் நாம் தமிழர் கட்சிக்கே ! என உறுதி கூறி பெருமைப்பட்டான்.

அதிலிருந்து இன்னும் மறைவாக ஆனான். அண்ணனுக்கே தன்னை தெரிந்து விட்டது, இனி என்ன யாருக்குத் தெரிய வேண்டும் என நினைத்தானோ என்னவோ.. தனியாக அலைந்துக் கொண்டு எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைத்துக் கொண்டே இருந்தான். பொறுப்புக்காக சண்டை போட்டவர்கள், பொறுப்பில்லாமல் சண்டை போட்டவர்கள் , அங்கீகாரங்களுக்காக அலைந்தவர்கள், முகவரிக்காக முட்டியவர்களுக்கு மத்தியில் ‌ அவன் எதையும் எதிர்பார்க்காமல் ‌ தன்னுடைய அண்ணன் சீமானையும் அவர் தூக்கி சுமந்த புலிக்கொடியையும் நேசித்துக் கொண்டு அலைந்து கொண்டே இருந்தான்.

நேற்றுக் கூட என்னை வந்துப் பார்த்தான். அதற்கு முந்தைய வாரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏன் வரவில்லை.. எனக் கேட்டேன். உடல்நிலை சரியில்லை அண்ணா ! என்றான் . நின்றுக் கொண்டே இருந்தான். அருகிலிருந்த தம்பி Lingadurai K அமருங்கள் அண்ணா ! என கட்டாயப்படுத்தி அமர வைத்தான்.மாநில பொறுப்பு உனக்கு வழங்கப்படவில்லை என ஏதேனும் வருத்தமா என்றும் கூடுதலாக கேட்டேன். “அண்ணா! இது என் கட்சி. இதில் எனக்கு என்ன அண்ணா பொறுப்பு…?பொறுப்புடன் இருப்பது தான் பொறுப்பு..!” என்றான் அவன். பிறகு நீண்ட நேரம் நிற்கவில்லை. சென்றுவிட்டான். ஒரு மீண்டு வராத பயணத்தின் விடைபெறுதலுக்காக அவன் வந்திருக்கிறான் என்று அப்போது எனக்கு தெரியவில்லை.

இன்று காலை கடும் காய்ச்சலில் படுத்திருந்த எனக்கு தம்பி ஆனந்த் அழைத்தான். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவன் காலமானான் என செய்தி கேட்டு நான் திகைத்துப் போனேன். அவன் வீட்டிற்கு சென்று அவன் உடலுக்கு புலிக்கொடி போர்த்திய போது.. அவனது மனைவி சொன்னார். “உங்க புலிக்கொடி உங்ககிட்டயே வந்துருச்சிங்க என்று..” கூடியிருந்த எல்லோரும் கத்திக் கதறினோம்.

இறுதிச் சடங்கிற்கான முழு பொறுப்பினையும் நாம் தமிழர் கட்சியே ஏற்றுக் கொள்வதென முடிவெடுத்தோம்.

பலரிடமும் இந்தத் துயர செய்தியை நான் பகிர்ந்த போது ஒன்றை உணர்ந்தேன். அவனை யாருக்குமே அதிகம் தெரியவில்லை. எந்தவித அங்கீகாரமும் தேடாமல் புலிக்கொடி சுமந்து இலட்சியத்திற்காக அவன் வாழ்ந்திருக்கிறான்.

அண்ணன் சீமானிடம் சொன்னேன்.‌ அவருக்கு மட்டும் அவனை மிகச் சரியாக நினைவிருந்தது. உடல் நிலையைப் பார்த்துக் கொள்ளாமல் இப்படி ஆகிவிட்டானே என்று சொல்லி அவர் கலங்கினார்.

அவனைப் போல எண்ணற்றவர்கள் எந்தவித அங்கீகாரமும் இல்லாமல், அடையாளமும் தெரியாமல் புலிக்கொடி பறக்க தமிழ்க்குடி சிறக்க, உதிரத்தை வேர்வையாக சிந்தி, உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிச்சங்களில் இல்லை அவர்கள். இந்தத் துயர் இருட்டில் நின்று கொண்டு சொல்கிறேன்.

“அவர்கள் தான் கட்சிக்கான உண்மையான வெளிச்சங்கள். “

அவனை யாருக்குமே தெரியவில்லை என்றாலும்.. இந்த இரவில் அவன் நெஞ்சாரப் போர்த்திருக்கும் அவன் நேசித்த புலிக்கொடிக்கு அவனைத் தெரியும்.

அதுதான் அவன் நிறைவு. அவன் வாழ்வு.

இப்படி என் தம்பி ஜஸ்டினை போன்ற யாருக்கும் தெரியாத எண்ணற்றவர்களால் தான் உயர உயர பறக்கிறது புலிக்கொடி.

ஜஸ்டின் தமிழ்மணி ( வயது 46) . டாட்டா ஏஸ் ஓட்டுநர்/கும்பகோணம் நாம் தமிழர் கட்சியின் முழு நேர களப்பணியாளராக பணியாற்றியவர்/ அமைப்பின்ஆணிவேர்/தற்போது புதிய கட்டமைப்பில் மாவட்டத் தலைவர்.

அம்மாவிற்கு..

♥️

அந்தக் காலகட்டங்களில் மிகச்சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். அப்போது வெறும் 16 வயது நிரம்பிய ஏறக்குறைய ஒரு சிறுமியாக இருந்தவளுக்கு ஒரு திருமணம். அடுத்த 10 மாதங்களில் அந்த சிறுமி கையில் நோயுற்ற ஒரு குழந்தை.

பிறந்த போது நன்றாகத்தான் இருந்தது.ஆனால் 10 மாதத்திற்கு பிறகு வந்த ஒரு காய்ச்சலில் அந்தக் குழந்தைக்கு தலைக்கு கீழே எந்த உறுப்பும் இயங்கவில்லை. அன்று அழ ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அடுத்த 25 வருடங்கள் இருவருக்கும் அழுகை மட்டும் தான்.

ஆனால் ஒரு சின்ன சிறிய கிராமத்தில் பிறந்த அந்த சிறுமிக்கு மட்டும் ஒரு அசாத்திய நம்பிக்கை. எதுவுமே இயங்காத அந்த குழந்தையை வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் வாழவைப்பது. ஓட முடியாத அந்த குழந்தைக்கு பதிலாக அவள் ஓட தொடங்கினாள்.‌ குழந்தை அழுகையை நிறுத்தியது. எப்போதும் அதிசயக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்த அம்மாக்களுக்கு மத்தியில் .. அவள் தன் குழந்தைக்காக ஒரு உலகத்தை உருவாக்கத் தொடங்கினாள்.

அந்த உலகத்திற்கும்… வழக்கமாக வாழும் இந்த பூமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த உலகத்தில் அந்தக் குழந்தைதான் கதாநாயகன். அவன் மீது எல்லோரும் அன்பாக இருப்பார்கள். அவனை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள். அவனை எல்லோரும் கொண்டாடுவார்கள். அவனை யாரும் புண்படுத்த மாட்டார்கள். அம்மா உருவாக்கிய அந்த உலகத்தின் ராஜா அவன்.அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் அந்த உலகம்.

இப்போதும் அம்மாவின் மடியை தேடி அலைகிறான். தூங்கி விழித்த உடன் அம்மாவின் முகம் காண தேடுகிறான். முகம் இல்லையேல் பயப்படுகிறான். அம்மாவைப் பார்த்தவுடன் தான் இயல்பாகிறான். அவனைப் பொறுத்தவரையில் அம்மா தான் ஆக்சிஜன். அம்மா இல்லையேல் அவன் இல்லை.

ஒரு தீபாவளிக்கு அவனை சென்னை அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். சொல்லப்போனால் அந்த மருத்துவமனையில் தான் அவன் வாழ்ந்துக் கொண்டிருந்தான். உலகமே வெளியில் வெடி வெடித்து தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில் இவன் மருத்துவமனையில் ஊசி மாத்திரைகளோடும் வலி துயர்களோடும் போராடிக் கொண்டிருந்தான்.

அம்மா கும்பகோணத்தில் இருந்து வந்து விட்டாள்.தன்மகன் இல்லாத தீபாவளி அவளுக்கு எங்கே… அவன் இருக்கும் இடம் தான் அவளுக்கு தீபாவளி. பண்டிகை எல்லாம். அவனது சிரிப்பில் தான் அவளுக்கு மத்தாப்பு பூக்கும்.‌ வான வேடிக்கைகள் நடக்கும்‌. அந்த மருத்துவமனை வளாகத்திலேயே இருந்த சிறு விடுதியில் அப்பா அம்மா அவன் மூவரும் சிறிய மத்தாப்புகளை கொளுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். வலியாலும் நோயாலும் துடித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவமனையில் தீபாவளி கொண்டாடுகிற குடும்பம் அது. அவர்களுக்கு இருக்கிற இடம் பொருட்டல்ல.. எங்கே இருந்தாலும் தங்களுக்கென ஒரு வானத்தையும் அங்கே மின்னும் சில நட்சத்திரங்களையும் பால் வழியும் ஒரு நிலாவினையும், கூடவே சில மத்தாப்புகளையும் அவர்களே உருவாக்கிக் கொண்டு தீபாவளியை கொண்டு வந்து விடுவார்கள்.
உலகம் எங்கோ வெளியில் இருந்தது. அவர்களுக்கு அவர்கள் உலகத்தில் அவர்களுக்குள்ளாக அந்த ஒரு தீபாவளி.

அதற்குப் பிறகு எவ்வளவோ நடந்தன. எப்போதும் இந்த உலகத்தோடு போட்டி போடுவதற்காக அந்த மகன் மிகவும் ஆசைப்படுவான். ஆனால் தோற்றுவிடுவான். ஆனால் அந்த அம்மா தோற்கமாட்டாளே.. ! அம்மா மகனை தயாரித்துக் கொண்டே இருந்தாள். இந்த உலகத்தோடு போட்டி போட.. இந்த உலகத்தில் வாழ.. அம்மா அவனை கடும் உழைப்போடு தயாரித்துக் கொண்டே இருந்தாள். எதுவுமே முடியாத, தலைக்கு கீழே எதுவுமே இயங்காத அவனுக்கு பேச கொடுத்தாள்.‌ வாழ கற்றுக் கொடுத்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவன் இயங்கத் தொடங்கினான். ரசிக்க, எழுத, காதலிக்க, வெற்றியில் கொண்டாட, தோல்வியில் துவள, அவனை தயாரித்து துளித்துளியாய் தன் மகனை உருவாக்கினாள். மகனும் அனைத்தும் செய்தான். ரசித்தான். கவிதைகள் எழுதினான். காதலித்தான். இசையை கேட்டு இமைக்காமல் இருந்தான். அவனே ஒரு கார் வாங்கி ஓட்டினான். அம்மா மீதே காரை ஒரு முறை மோதி விட்டான். இனி காரே ஓட்டுவதில்லை என முடிவெடுத்தான். ஆனால் அம்மா அப்படி இல்லையே.. தன் மீது மோதினாலும் மீண்டும் எழுந்து மகன் கார் ஓட்டியாக வேண்டும் என்பதில் அவள் உறுதியாக நின்றாள். அவனும் அப்படியே செய்தான். பயணப்பட்டு பார்த்தான். அடிகள் வாங்கினான். தோல்வியின் சுகம் புரிந்தான். வெற்றியின் போதாமை அறிந்தான். திருமணம் செய்தான். அவனைப் போலவே இரண்டு நகல்களை தயாரித்தான். அந்த இரண்டும் அம்மாவிடம் தான் அம்மா மடியில் தான் கிடக்கின்றன. இப்படி அனைத்திலும் அம்மா இருந்தாள்.

அவன் நினைத்தான். இந்த உலகத்தில் நாமும் சராசரியாய் மாறிவிட்டோம் என. இல்லை இல்லை. ஒரு கட்டத்தில் அவன் அந்த ரகசிய உண்மையை அறிந்து கொண்டான். இந்த உலகத்தில் தன்னால் மற்றோர் போல இயல்பாக வாழ முடியவில்லையே என ஏங்கித் தவித்த அந்த மகனுக்காக அந்த அம்மா மீண்டும் ஒரு நகல் உலகத்தை தயாரித்து இருக்கிறாள் என்ற உண்மை. அதில் அவனை வாழ வைத்திருக்கிற உண்மைப் புரிந்து அந்த மகன் இப்பொழுது சிரித்துக் கொள்கிறான். அது ஒரு வகை ஞானம் தான். உண்மைதான். இதுவும் அம்மா உருவாக்கிய உலகம்தான்.

இறுதியாக அந்த மகன் புரிந்து கொண்ட ரகசியம் என்னவெனில்… அம்மா உருவாக்கிய உலகத்தில் மட்டும் தான் அவனால் வாழ முடியும். சொல்லப்போனால் அம்மா தான் உலகம்.

கடைசி வரை அம்மா உருவாக்கிய அந்த உலகத்தில்.. அவள் கதகதப்பில் அவன் வாழ்ந்துக் கொண்டே இருக்கிறான்.

வாழ்வான். !

மணி கலையரசி

வாழ வைக்கும் தெய்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

♥️

மணி செந்தில்.

( இதனடியில் ஏஐ தொழில்நுட்பத்தில் மிகவும் நேர்த்தியாக ஒரு காட்சி தயாரித்து கொடுத்த எனதுத் தம்பி Ar Anbu Rajesh Ntk விற்கு எனது பேரன்பு நன்றி. )

Page 3 of 61

Powered by WordPress & Theme by Anders Norén