பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 21 of 61

அன்பே சுஷாந்த்

அன்பே சுஷாந்த்..கண்ணீரை அடக்க முடியாமல் போன என் விழிகளினூடே நீ ஒரு புன்னகையோடு உறைந்து போன இரவு இது. வாழ்வின் சூட்சமங்களை குறித்து தான் நம் எவ்வளவு அறியாமையோடு இருக்கிறோம்..? யாருமே எதிர்பாராத திருப்பத்தில் ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுகிற எளிய நிகழ்வாக மட்டுமே மரணம் இருக்கிறது என்பதுதான் நம் அறிவெல்லைக்கு அப்பாலான பேரதிர்ச்சி.

ஒரு மலை முகட்டில் தன்னிச்சையாய் பூத்து, எங்கிருந்தோ விசி விடுகிற காற்றின் சிறகுகளால் சற்றே காயப்பட்டு உதிர்கிற பூ உதிர்தலைப் போல சட்டென நிகழ்ந்து விட்டது உன் மரணம்.யோசித்து பார்த்தால் , மரணம் தான் வாழ்வின் நிச்சயமென உணர்கிற இப்புள்ளியில் யாரையும் நேசிக்க முடியாமல் போகிற, இந்த வாழ்வின் சூதாட்டத்தில் சிக்கி உணர்ச்சிகளின் கரங்களால் உருட்டப்படும் பகடைக்காய்களாய் மாறிப்போகிற இவ் வாழ்வுதான் எவ்வளவு வெட்கக்கரமானது…?உன்னுடைய இறுதிப்படமான ” Dil bechara” (hot star) திரைப்படத்தையும் கூட நான் பார்க்க நேர்ந்தது கூட இவ்வாழ்வின் சூட்சம விதிகளுக்கே உரிய எதிர்பாரான்மையின் தரிசனமாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது .

உன் கண்களில் ஒளி இருந்தது சுஷாந்த். அப்படி ஒளியுடைய கண்கள் கொண்ட கலைஞர்கள் அரிதானவர்கள். நீ நடித்திருக்கும் “dil bechara” படத்தின் அசலான “The Fault in Our Stars” படத்தை விட உன் படம் இன்னும் உயிர்ப்புடன் இருக்க உன் மரணம் தான் காரணமாக இருக்கிறது என்பதுதான் வலி மிகுந்த உண்மை.எத்தனையோ முறை காதல் கதைகளை படிக்கிறோம் . திரைப்படங்களாக பார்க்கிறோம். ஒரு ஆணும், பெண்ணும் நேசித்துக் கொள்வதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கலையாக, இலக்கியமாக, கூத்தாக, திரைப்படமாக மானுட விழிகள் சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் அதே காதல் தான். அதே நேசம் தான். அதே கண்ணீர்தான்.ஆனாலும் ஒவ்வொரு முறைப் பார்த்தாலும் காதல் புதிதாகவே தெரிவதற்கு எனக்கு காரணங்கள் புரியவில்லை.மிகச் சில இப்படித்தான். திரைப்படத்தில் உன் காதலியாக நடித்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் அவரவருக்கு ஏதேனும் பிடித்த முகங்கள் தோன்றலாம். எனக்கென்னவோ நான் மட்டுமே அறிந்த ஒரு உள்ளங்கைகளின் மென்மை மட்டுமே நினைவுக்கு வந்தது, அந்த உள்ளங்கைகளில் முகம் புதைத்து நான் கண் மூடிய போது அடைந்த ஆறுதலை தான் நான் இந்த வாழ்வெங்கும் தேடி அலைகிறேன்.மிகச் சாதாரண படம் தான். ஆனால் உன் மினுக்கும் கண்களால் அதை பிரகாசப்படுத்தி இருக்கிறாய் .அந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் நீயே அமர்ந்து உன் நினைவேந்தல் கூட்டத்தை பார்ப்பது போன்ற அந்த காட்சியில் உன் காதலியாக நடித்த அந்த பெண் சொல்வது போல.. புன்னகையால் வாழ்வினை மாற்றும் வல்லமையை நீ கொண்டிருந்தாய் சுஷாந்த்.அந்த திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் நிகழும் அதே ரசவாதம் எனக்கும் நிகழ்ந்தது,மிகுந்த நெருங்கிய நண்பனாகி விட்டாய்.அட..போடா.. சுஷாந்த்…நீ இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாம்,

நம்மில் யார் யோக்கியன்..?

பட உதவி : ம.செ.பகலவன்

கொரனா காலம் வழங்கியிருக்கிற முதன்மை பரிசு நமக்கு வாய்த்திருக்கிற தனிமை. இந்த தனிமை தான் நமது கடந்த காலத்தை பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது.எவ்வளவு சரியாக நடந்து இருக்கிறோம் என்பதைத் தாண்டி எவ்வளவு தவறாக நடந்து இருக்கிறோம் என்பதுதான் ஆக்கிரமிக்கிறது. உண்மையில் தவறுகளும் மீறல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொள்ள முடிகிறது.

யாரும் பூரணத்துவம் பெற்ற சரியான நபர்கள் என்று இதுவரை பிறக்கவில்லை. உங்களில் எவன் யோக்கியவானோ அவன் எடுத்து முதல் கல்லை அடியுங்கள் என தேவகுமாரன் கேட்டபோது கூட அப்போது தேடப்பட்ட அந்த முதல் கல் இப்போது வரை கிடைக்கவில்லை.எனவேதான் நாம் சரியானவர், நாம் சொல்கின்ற வார்த்தைகள் சரியானது என்றெல்லாம் நமக்கு நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் சக மனிதனின் மீது வன்மம் கொண்டு அலைய மனது தயாராகிறது. இந்த தனிமைப்பொழுதில் யார்மீதும் பெரிதாக கோபம் ஏற்படாமல் போவதை என்னுள் நிகழ்ந்திருக்கிற மாற்றம் என உணரத் தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு என்கிற உணர்ச்சி மறந்துபோய்.. எதையும் சகித்து கடக்கும் மனநிலை தான் வசதியாக இருக்கிறது.வெறுப்பும், வன்மமும் உறுத்தலாகவே இருப்பதை தாண்டி உண்மையில் தொடர்ந்து பயணிக்க முடியாத பெரும் சுமையாக மாறி விடுகிறது.இங்கே யாரும் 100% சரியானவர்கள் இல்லை என்பதில் நானும் உள்ளடக்கம் என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன்.அப்படி சரியாகவும் இருந்துவிட முடியாது. ஆனால் நான் சொல்வது தான் சரி, நான் தான் சரியானவன் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கும் போதுதான் வெறுப்பின் விதை ஊன்றப் படுகிறது.பலரை நம்மால் பார்க்க முடிகிறது. மனம் முழுக்க வெறுப்பினை சுமந்து, வார்த்தைகள் முழுக்க வன்மம் சுமந்துகொண்டு அலைகிற அவர்களது வெறுப்பின் பயணம் அவர்களையே துளித்துளியாக வீழ்த்திக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.

விட்டுக்கொடுத்து போனால்தான் என்ன.. என்ற கேள்விக்கு இங்கு வெறுப்பின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருப்பவர்களிடத்தில் எவ்வித பதிலும் இல்லை. விட்டுக் கொடுத்தவர்கள், மன்னித்தவர்கள் பலமாகி கொண்டே போவதையும், வெறுப்பையும் வன்மத்தையும் சுமப்பவர்கள் சுய வதைக்கு உள்ளாக்கி பலமிழந்து தவிப்பதையும் காணமுடிகிறது.நிகழ்ந்தது தானே என சிந்தித்து கடக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் கடலையும் கடந்துவிடலாம். வெறுப்பை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால் நம் வீட்டை கூட தாண்ட முடியாது. அப்படியெல்லாம் வெறுப்பினை சுமந்துகொண்டு இந்த வாழ்வினை கடக்க முடியாது.சமீபத்தில் கூட நம்மை விட்டு பிரிந்த ஒருவர் நம்மைக் குறித்து பேசி வருகிற கருத்துக்கள் பற்றி ஒரு வலையொளித் தளத்தில் பதிலளிக்க என்னை அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். அதில் பங்கேற்பது தரக்குறைவு என்பது மட்டுமல்ல, பதிலுக்கு நானும் அந்த வெறுப்பின் போர்வையைப் போர்த்திக் கொள்ள வேண்டும். ஏறக்குறைய அவரின் மனநிலைக்கு நானும் மாற வேண்டும். அது ஒருவிதமான தற்கொலை.உண்மையில் வெறுப்போடு அலைபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் தோற்றவர்களாக உணர்ந்திருக்கிறார்கள். ஏதோ இழந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவேதான் தங்களுக்குள் ஊறுகிற வெறுப்பை அடுத்தவர் மீது அள்ளி இறைத்து தங்களை ஆற்றுப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பதில் சொல்ல ஏதுமில்லை. அலட்சியப்படுத்தி நகரத்தான் நிறைய இருக்கிறது. எதையும் எளிமையாக கடக்க கற்று தேர்ச்சி அடைவது தான் உண்மையான ஞானம் என்கிறார்கள். நிதானித்து பார்க்கும் போதுதான் நாம் எல்லாம் இன்னும் கொஞ்சம் கவனமாக சற்றே பக்குவத்தோடு இந்த வாழ்க்கை அணுகி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனிமேலாவது அவ்வாறு வாழ முயற்சி செய்வோம்.ஆதியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்கிற ஒரே பாடம்தான்..”எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.”இந்தப் பதிவு எழுத காரணமான ஒரு பதிவை எழுதிய என் அன்புத் தம்பி Vadivel Geevan க்கு என் உறக்கத்தை பறித்த என் சாபங்களும், என்னை சிந்திக்க வைத்த நன்றிகளும் ஒருசேர போய் சேரட்டும்.

நம்மை வழிநடத்தும் நம் அண்ணனின் சொற்கள்..

விவாதங்களில் பலவகை உண்டு என நான் அறிந்திருக்கிறேன். எந்த வகை விவாதங்கள் என்றாலும்‌ ஏதோ சிலவற்றைக் கற்றுக் கொள்வதற்கான வழிகளாகவும், பகிர்ந்து கொள்வதற்கான முறைகளாகவும் தான் கடந்த சில ஆண்டுகள் வரை விவாதங்கள் நிகழ்ந்து வந்தன. கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற தமிழ் தேசிய எழுச்சி சமூக வலைதளங்களிலும் பிரதிபலிக்க, ஆட்சியிலும், அதிகாரத்திலும், கருத்து தளத்திலும், அறிவுத் தளத்திலும் அதுவரை “ஒரே அடியாளாக” இருந்த திராவிடக் கருத்தாக்க ஆதரவு கூட்டத்திற்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. கட்டமைத்து வைத்திருக்கிற கனவுக் கோட்டை எங்கிருந்தோ வந்த எளிய இளைஞர்களால் செங்கல் செங்கலாக பெயர்க்கப்படும் என்பதை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனவே அவர்களிடம் வழக்கமாக இருக்கும் அவர்களுக்கே உரித்தான கலையான அவதூற்று வசவுகள் மூலம் இந்த விவாதங்களை எதிர் கொள்ளத் தொடங்கினார்கள்.திராவிட ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் நடக்கும் விவாதங்களை “வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மேடைகளாக” மாற்றத் தொடங்கினார்கள். அதற்கு பதில் அளிக்கிறேன் என்று முறையில் சில இளைஞர்களும் இறங்கத் தொடங்க “அறிவார்ந்த பரிமாறல்”என்கிற முறையில் நிகழ்ந்து வந்த விவாதங்கள் வசவுகள் கணக்கு வழக்கின்றி வாரி இறைக்கப்படும் வெறும் கூச்சல்களாக மாறிப்போயின.இப்போதெல்லாம் திட்டமிட்டு விவாதங்கள் சில பல “கணக்குகளோடு” உருவாக்கப்படுகின்றன. நாம் தமிழர் கட்சி பெரியாரைப் பற்றி எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கிறது என்பதை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் ஏற்கனவே பலமுறை மிகத்தெளிவாக அழுத்தம் திருத்தமாக விவரித்திருக்கிறார்.ஆயினும் இது போன்ற விவாதங்கள் தொடர்ச்சியாக உருவாக்கப் படுவதன் “அரசியலை” முதலில் நாம் கற்றுணர வேண்டியிருக்கிறது. இது நோய் தொற்றுக் காலம். தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அளித்தல், கபசுர குடிநீர் வழங்கல் போன்றவற்றைச் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். இந்த மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக கட்சியில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் இணைந்து வருகிறார்கள் என்பதை தகவல் தொழில்நுட்ப பாசறை புள்ளிவிபரங்களோடு வெளியிட்டிருக்கிறது. சாத்தான்குளம் படுகொலைகள் இயல்பான எளிய மனிதர்களையும் பதட்டத்திற்கு உள்ளாகியிருக்கிறது.அதிகாரம் நிகழ்த்தியிருக்கிற இந்த ஆணவ படுகொலைக்கு எதிராக வீதிகளில் இறங்கி தனிமனித இடைவெளி யோடு, முகக் கவசம் உள்ளிட்ட நோய்த்தொற்று கட்டுப்பாட்டோடு நமது இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.இதையெல்லாம் விட்டுவிட்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு மக்களோடு இணைந்து களங்களில் நிற்கிற இக்காலகட்டத்தில் பெரியார் பற்றிய விவாதங்கள் திட்டமிட்டு, பல்வேறு கணக்குகளோடு, உருவாக்கப்படும் திசை திருப்பல் களாகவே காணமுடிகிறது. திராவிட கட்சிகள் இன்று மக்களோடு அன்னியப்பட்டு நிற்கின்றன. அதனால் அவர்கள் “கடந்த காலங்களின் பெருமிதங்களை(?)” தூக்கிக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.வெளிச்சங்கள் தேவைப்படுவோருக்கு வேண்டுமானால் இந்த விவாதங்கள் பயன்படலாம்.ஆனால் நமக்கு அப்படி அல்ல. நாம் நிகழ்காலத்தின் மைந்தர்கள். மக்களோடு நிற்பவர்கள். கட்சியின் தத்துவ நிலைப்பாடுகளை கட்சியின் தலைமை அறிவிக்கும். ஏற்கனவே அறிவித்தும் இருக்கிறது. இதில் தனிநபர்கள் விவாதித்துக் கொள்ளவோ, சண்டை போட்டுக் கொள்ளவோ ஏதுமில்லை. எனவே நமது உறவுகள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த நோய்த்தொற்று காலத்தில், பாதுகாப்பாக இருந்துக்கொண்டு அலைபேசி வாயிலாக அவரவர்களால் முடிந்த அளவிற்கு கட்சி வளர்ச்சிப் பணிகளை தொடர்ச்சியாக எடுத்துச் செல்வோம். சமூக வலைதளங்களில் ஏற்படும் அர்த்தமற்ற கடந்த காலங்கள் குறித்தான விவாதங்கள் கடந்த கால “பெருமிதங்களில்” (?) வாழ்கிற திராவிட ஆதரவாளர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். நமக்கு வேறு வேலை இருக்கிறது. இன்னும் நேர்மையாக அண்ணன் சீமான் சொற்களில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால்.. “நல்ல பழங்களைக் கூட நாம் முழுமையாக உண்பதில்லை. தோலை சீவி விதைகளை நீக்கி பிறகுதான் உண்கிறோம்.நம் பலவற்றிலும் முரண்படுகின்ற ஹிட்லர், முசோலினி போன்றவர்களிடம் கூட நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்கிறோம். “பாதை இல்லை என வருத்தப்படாதே.. இறங்கி நட.. அதுவே பாதையாகி விடும்.” என்கிறார் ஹிட்லர். நம் உயிர்த் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் “பாதையை தேடாதே.. உருவாக்கு” என்கிறார்.விவேகானந்தர் போன்ற நமக்கு கருத்து முரண்கள் உள்ள பெரியோர்களிடம் கூட எடுத்துக் கொள்ள வேண்டிய நல்ல கருத்துக்கள் இருக்கின்றன.எல்லா மனிதர்களிடமும் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேவையானதை எடுத்துக் கொண்டு தேவையற்றதை தவிர்ப்பதுதான் அறிவுடைமை. அது ஐயா பெரியார் அவர்களுக்கும் பொருந்தும். இதைப் புரிந்துகொள்ளாமல் தேவையற்ற விவாதங்களில் நம்மை சிக்க வைத்துக்கொள்ளக்கூடாது. “நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நல்ல புத்தகங்களை வாசிக்க, நல்ல திரைப்படங்களை தேடி தேடி கண்டு தரிசிக்க, எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள கவிதை, கட்டுரை போன்றவற்றை எழுதப் பழக இந்த ஓய்வு காலத்தை பயன்படுத்துவோம். உடலை உறுதி செய்ய உடற்பயிற்சி என்பதை வாழ்நாள் பழக்கமாக்க முயற்சி செய்வோம். மன உளைச்சல்கள், தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுத்தும் எல்லாவற்றிலும் இருந்து தள்ளி நிற்போம்.இதனடியில் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பாசறை கருத்தரங்கில் அண்ணன் சீமான் அவர்கள் ஐயா பெரியார் குறித்த தனது நிலைப்பாட்டினை தெளிவாக அறிவித்த உரையின் எழுத்து வடிவம் இருக்கிறது. இத்தோடு முடிப்போம்.. இதனையும் கடப்போம்.******தகவல் தொழில்நுட்பப் பாசறை கூட்டத்தில் அண்ணன் பேசியது! ( நன்றி: தமிழினியாள்.)பெரியாரை எதிர்க்கிறோமா?நம்மை பெரியாருக்கு எதிரியாகக் கட்டமைக்கிறார்கள். திராவிடக் கட்சிகளும், ஆட்சிகளும் இம்மண்ணுக்கு விளைவித்த வஞ்சகங்களையும், துரோகங்களையும் பேசுவதால் நம்மைப் பெரியாருக்கு எதிரியாக மடைமாற்றுகிறார்கள். தகப்பன் என்பவன் பெற்றவனாக இருக்க வேண்டும். தலைவன் என்பவன் இரத்தவனாக இருக்க வேண்டும். எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது. எனது வலி உணராதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது. இது நாம் தமிழர் கட்சியின் கொள்கை முடிவு. உலகெங்கும் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு, உரிமைக்கு, மேம்பாட்டுக்குப் போராடிய அத்தனைப் பேரையும் நமது வழிகாட்டியாக ஏற்கிறோம். மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஏங்கல்ஸ், இங்கர்சால், சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, புத்தன், பூலே, மாசேதுங், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா உள்ளிட்ட யாவரையும் நமது பெருமைக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அதனைப் போலவே, அறிவாசான் அம்பேத்கரையும், ஐயா பெரியாரையும் பெருமைக்கும், வணக்கத்துக்குரிய வழிகாட்டியாக ஏற்கிறோம். அண்ணல் அம்பேத்கரை வழிகாட்டியாக ஏற்கிறோம். ஆனால், நமது தாத்தா அயோத்திதாசப்பண்டிதரையும், தாத்தா இரட்டைமலை சீனிவாசனையுமே தலைவராக ஏற்கிறோம். மாமேதை மார்க்சை வழிகாட்டியாக ஏற்போம். ஆனால், நமது இனத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தையும், சிங்காரவேலரையும், நல்லக்கண்ணுவையுமே தலைவராக ஏற்போம். சேகுவேராவை நான் கொண்டாடுகிறேன். பிடல் காஸ்ட்ரோவைப் புகழ்ந்துப்போற்றுகிறேன். ஆனால், தலைவர் பிரபாகரன்தான் எனக்குத் தலைவர். ஆகவே, ஐயா பெரியாரை தமிழ்த்தேசியத்தின் எதிரியாகவும் கருதவில்லை; தமிழ்த்தேசியத்தின் தலைவராக ஏற்கவுமில்லை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.கற்றதைப் பற்ற வையுங்கள்!**********************************எது நல்லதோ அதனை எடுத்துக் கொள்வதும், எது அல்லதோ அதனைத் தவிர்த்துவிடுவதும்தான் அறிவு. இணையத்தில் நாம் எழுதுகிறபோது மிகுந்த கண்ணியத்தோடும், கவனத்தோடும் கருத்துகளைப் பதிவுசெய்ய வேண்டும். நாம் பிரபாகரன் எனும் மனிதப்புனிதரை தலைவராக ஏற்றிருக்கிறோம். நாம் கண்ணியக்குறைவாகப் பதிவு செய்தால் அவரின் பெயரைச் சொல்வதற்கே தகுதியற்றவர்களாகிவிடுவோம். நான் எனது தம்பிகளை சரியாக வழிநடத்தவில்லை என்றாகிவிடும். ஐயா வலம்புரிஜான் அவர்கள் கூறியது போல, “நமது எழுத்துக்கள் எடைக்குப் போடுவது போல இருக்கக்கூடாது. எடை போடக்கூடியதாக இருக்க வேண்டும்”. தேவையில்லாதவற்றை ஒருபோதும் எழுதாதீர்கள்! தவிர்த்துவிடுங்கள். அறிவிற்சிறந்த பிள்ளைகள் உங்களது அறிவும், ஆற்றலும் இனமேம்பாட்டுக்கும், மீட்சிக்குமே பயன்பட வேண்டும். ஆபிரகாம் லிங்கன் தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டு ஆசிரியர்களுக்குக் கடிதம் எழுதுகிறபோது, “குற்றங்குறை சொல்வோரைப் புறந்தள்ளக் கற்றுக்கொடுங்கள்” என்று கூறுகிறார். அதனைத்தான் நானும் எனது தம்பிகளுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். தேவையற்றவற்றைப் புறந்தள்ளுங்கள். நற்செய்திகளையும், உயர்ந்த நெறிகளையுமே பதிவிடுங்கள். நல்லதொரு கவிதையைப் படித்தால் அதனைப் பதிவிடுங்கள். தினமும் ஒரு குறளைப் பதிவிடுங்கள். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் பதிவிடுங்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் பாக்களைப் பதிவிடுங்கள். ஆகப்பெரும் அறிஞர்கள் கூறியவற்றைப் பகிர்ந்துகொள்ளுங்கள். கற்றதைப் பற்ற வையுங்கள். தீயவற்றைத் தீயிடுங்கள். இணையத்தை நாம் தமிழர் வசமாக்குங்கள். இதுதான் சமூக வலைத்தளங்களில் நமது செயல்பாடாக இருக்க வேண்டும்-அண்ணன் சீமான்.எனவே திட்டமிட்டு கட்டமைக்கப்படும் விவாத வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் கட்சிப் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் நம் கவனத்தை செலுத்துவோம்.

இனியாவது பேசுங்கள்.

மீண்டும் ஒரு நிம்மதியற்ற இரவாக இந்த இரவு கழிந்து கொண்டிருக்கிறது. சாத்தான்குளம் தந்தை- மகன் படுகொலை செய்திகளை பார்க்கும்போது சத்தியமாக மனநிம்மதி கொள்ள முடியவில்லை. நானும் என் கவனத்தை திசை திருப்பிக் கொள்ள என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் அதே காட்சிகள் நினைவுக்கு வந்து மனதை அலைக்கழிக்க செய்கின்றன.இதுபோன்ற கொடுமைகள் ஈழ நிலத்தில் நடந்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தந்தைக்கு முன்பாக மகனையும், தாய்க்கு முன்பாக மகள் மகனையும், பெற்ற பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்களையும் கொடுமைப்படுத்தும் காட்சிகளை சிங்களப் பேரினவாத அரசு செய்வதாக நான் செவி வழி செய்திகளாக படித்திருக்கிறேன். அறிந்திருக்கிறேன். அதேபோன்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் நடைபெறாது என நம்பியிருந்தேன். இது ஜனநாயக நாடு. சட்ட மாண்புகளின் அடிப்படையில் அரசுகள் நடைபெறுவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமை, எழுத்துரிமை ,கருத்துக்களை பகிரும் உரிமை என பல்வேறு உரிமைகளின் வாயிலாக நமது சுதந்திர வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்ற உண்மையை இப்போது நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி இருக்கிறோம். எந்த நேரத்திலும் உங்கள் குதத்தில் லத்திகள் திணிக்கப்படும் ஒரு நிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை சாத்தான் குலத்தைச் சேர்ந்த தந்தை- மகன் ஆகிய 2 பேர் தங்களது உயிரை இழந்து உலகத்திற்கு அறிவித்திருக்கிறார்கள்.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எத்தனையோ மாறுதல்கள் இந்த நாடு சந்தித்து இருக்கிறது. ஆனால் காவல்துறை கட்டமைப்பில் மட்டும் இந்த நாடு இன்னும் ஆங்கிலேயர் காலத்திலேயே இருந்து வருவது என்பது சத்தியமான உண்மை. எத்தனையோ மனித உரிமை விழிப்புணர்வு ஏற்பட்ட இக்காலத்திலும் கூட ஒரு காவல் அதிகாரி நட்டநடு வீதியில் ஒரு பெண்ணை அறைந்ததில் அந்தப் பெண்ணின் காது சவ்வு கிழிந்து செவிடாகி போனதை நாம் ஒரு செய்தியாக கண்டு கடந்து போனோம்.. அணு உலைக்கு எதிராக அமைதியாக போராடிக்கொண்டிருந்த கூடங்குளம் மக்களை கடற்கரையில் வைத்து அடித்து, இழுத்து போனபோது.. சில அனுதாப முணுமுணுப்புகளும், அரசியல் சார்ந்து உப்புச்சப்பற்ற கருத்துக்களையும் தவிர நம்மிடத்தில் இருந்து எதுவும் வரவில்லை. பல வருடங்களுக்கு முன்பாக சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண் காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட அதிர்வலைகள் சில வாரங்களில் அடங்கி அது ஒரு காலத்து செய்தி என்பதைத்தவிர வேறு எதுவும் நிகழாமல் அடங்கியது.எல்லா அநீதிகளும் ஒரு செய்தி என்கிற அளவிற்கு நவீன உலகத்தின் சமூக வாழ்க்கை நமது மனநிலையை மாற்றி வைத்திருக்கிறது. ஊடகங்களும் அடுத்தடுத்து வருகிற முக்கிய செய்திகளிலும், தற்போதைய செய்திகளிலும் கவனத்தை வைத்துக்கொண்டு ..அடுத்து ஏதாவது ஒரு செய்தி வருகிறதா என காத்துக்கொண்டிருக்கிற, வக்கிரம் மிகுந்த வணிக எதிர்பார்ப்பிற்கு மாறிவிட்டன. அவர்களுக்கு யார் முதலில் செய்தி தருவது என்பது மட்டுமே முக்கியமானது. டிஆர்பிக்காக போட்டி போட்டுக் கொள்ளும் போட்டியில் ஒருவர் செத்தாலும் அது செய்திதான். ஒரு கோடிப் பேர் செத்தாலும் அது ஒரு செய்தி தான். அதைத் தாண்டி இங்கு எதுவும் இல்லை.மனித உயிருக்கு இங்கே மதிப்பில்லை. அப்படி ஒரு மனநிலையை திட்டமிட்டு அதிகாரம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மனித உயிருக்கு மதிப்பு ஏற்பட்டால் சகமனிதன் கேள்விகேட்க தொடங்குவான். கேள்வி கேட்டால் பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளால் போராட்டங்கள் வெடிக்கும். போராட்டங்களால் அதிகாரத்திற்கு அழுத்தங்கள் மிகும். எனவேதான் மனித உயிருக்கு மதிப்பற்ற நிலையை அதிகார நிறுவனங்கள் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கின்றன.குறிப்பாக காவல்துறை எப்போதும் அதிகாரத்தின் அடியாளாக இருந்து வருவதென்பது ஆங்கிலேயர் காலத்து தொடர்ச்சி. எனவே அரசு /அரசாங்கங்கள் உள்ளிட்ட அதிகார நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறைக்கு உள்ளீடாக கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்கி இருக்கின்றன. அந்த கட்டற்ற சுதந்திரம் தான் சர்வாதிகாரமாக, மனித உயிர்களை பலி கொள்ளும் ஏதோச்சதிகாரமாக மாறி இருக்கின்றது. நேர்மையாக இருக்கின்ற சில காவல் துறையை சேர்ந்த நண்பர்கள் கூட என்னிடம் எத்தனையோ முறை கனிவாக அறிவுறுத்தி இருக்கிறார்கள். “ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை..” என்று கேட்பதில் ஒரு பக்கம் அன்பு இருந்தாலும்.. இன்னொரு பக்கம் நம்மை தடுக்கவேண்டும், கொஞ்சம் அச்சுறுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவர்களது உள்ளார்ந்த விருப்பத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்படியானால் காவல்துறையில் நல்லவர்களே இல்லையா என்று சொன்னால்.. அது மிகச் சொற்பமான எண்ணிக்கையில் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கின்ற மாபெரும் ஆபத்து. அந்த சொற்பமான எண்ணிக்கை பெரும்பான்மையான எண்ணிக்கையாக மாறவேண்டும் என்பதுதான் இரண்டு உயிர்களை பறிகொடுத்து நிற்கின்ற ஒட்டுமொத்த சமூகமும் காவல்துறையிடம் எதிர்பார்க்கின்ற மாற்றம். அதேபோல நமது மனநிலையும் மாற வேண்டியது அவசியம். ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படும் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்படும்போது திருப்தி அடைகிற “கூட்டு மனசாட்சி”என்கின்ற பொது உளவியலை நமக்குள் நாம் அழித்தொழிக்க வேண்டும். எந்த குற்றத்தையும் நீதிமன்றம் மூலம் தண்டிக்க வேண்டும் என்கின்ற ஜனநாயக வழி குணாதிசயம் நமக்கு ஏற்பட வேண்டும். இல்லையேல் காவல்துறையின் துப்பாக்கி முனையிலும், குதங்களில் நுழையும் லத்தி முனையிலும் தான் நாட்டின் நீதி பரிபாலனம் நடைபெறும்.காவல்துறையின் அடக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. சற்று நுட்பமான, அதே சமயத்தில் கனிவும், மதிப்பும் இல்லாத, உயர்ந்த குரலோடு கூடிய அவர்களது அதிகார ஆணவ நடவடிக்கைகள் ஒருபோதும் சட்டத்தின் வாயிலாக, நீதியின் வடிவத்தோடு நடைபெற்றதில்லை. வரம்பு மீறல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் எழுதப்படாத சட்டம்.கடந்த 2019 மாவீரர் தின குருதிக்கொடை அளிக்கும் நிகழ்வின்போது நாங்கள் இதை அனுபவித்தோம். குருதிக் கொடை என்பது மனித உயிர் காக்கும் முக்கிய சேவை. ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக குருதிக்கொடை நிகழ்வினை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும்போது காவல் அதிகாரிகள் வந்து எங்கள் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள். கேட்டால் அனுமதி பெறவில்லை என்றார்கள். அதிலும் அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி ஒருவர் அங்கே இருந்த மருத்துவப் பணியாளர்களை தடித்த வார்த்தையால் ஏசத் தொடங்கினார். நிகழ்வு நடத்த மண்டபம் தந்த மண்டப மேலாளர் ஒருமை வார்த்தைகளால் ஏசப்பட்டார். உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு யாரும் அனுமதி பெறுவதில்லை. மேலும் குருதிக்கொடை நிகழ்ச்சி குடந்தை அரசு தலைமை மருத்துவமனை அனுமதி பெற்று அதன் ஊழியர்களால் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. அரசு மருத்துவமனைக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னிச்சையாக முன்வந்து குருதி வழங்குவது என்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒரு செயல். ஆனால் நாங்கள் தேசியத் தலைவர் படம் பயன்படுத்துகிறோம் என்றும், மண்ணிற்காக போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம் என்றும் அதனால் நாங்கள் குருதி கொடுக்கக்கூடாது என்றும், காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்திய காவல் அதிகாரி “இதை எவ்வாறு உங்களால் தடுத்து நிறுத்த முடியும்..” என கேட்ட என் முகத்தை பார்க்கவே இல்லை.என் அருகில் நின்று கொண்டிருந்த தம்பிகளை விரட்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார். சத்தமாகப் பேசி அங்கே இருந்த பெண்களை, புதிதாக வந்து இருப்பவர்களை அச்சுறுத்த வேண்டும் என்கின்ற அவரது நோக்கம் எனக்கு புரிந்தது.நாட்டில் எவ்வளவோ தவறுகள் நடக்கின்றன அதைத் தடுக்காமல் குருதி கொடுப்பதைப் போய் தடுக்கிறீர்களே என கேட்ட நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தொகுதி இணைச்செயலாளர் தம்பி பிரகாஷ் யை ஒரு உதவி ஆய்வாளர் அடிக்க பாய… எந்த நொடியும் பெரும் தகராறு வெடித்து இரு தரப்பிற்கும் கைகலப்பு உண்டாக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் காவல்துறையின் லத்திகள் மக்கள் உயிர் காக்க, குருதி கொடுக்க வந்த, இந்த மண்ணை நேசிக்கின்ற இளைஞர்களின் புட்டத்தை பதம் பார்த்து முடித்திருக்கும். அந்த நேரத்தில் இதை புரிந்துகொண்ட நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் திட்டமிட்டு தம்பிகளை அப்படியே அமைதிப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குருதிக்கொடை நிகழ்வினை தொடர்ந்து நடத்தினோம். இந்த நிகழ்வு குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் அன்று மாலையே சென்று புகார் அளித்தோம். ஆனாலும் ஒரே துறை அல்லவா.. ஏதேதோ சமாதானம் பேசி இனி இவ்வாறு நடக்காது என்றெல்லாம் கூறி அந்த மேலதிகாரி எங்களை அனுப்பி விட்டார்.நவம்பர் மாதம் வந்தாலே காவல்துறை எங்கள் மீது பாய தொடங்கிவிடும். எளிய பிள்ளைகள் காசு வசூலித்து தலைவர் பிரபாகரன் படம் அச்சிட்டு சுவரொட்டி ஒட்டுவார்கள். அதை காவல்துறை விடியவிடிய கிழித்துக் கொண்டிருக்கும். சென்ற வருடம் கூட எனது சின்னத்தம்பி ஒருவன் கேட்டான். இந்த நாட்டை கொள்ளை அடித்து சுரண்டிக் கொழுத்த எத்தனையோ அரசியல்வாதிகளின் படங்கள் சுவரொட்டிகளாய் இங்கே இருக்கலாம். ஆனால் இனத்திற்காக மொழிக்காக தன்னையே அர்ப்பணித்து போராடிய எங்கள் உயிர் தலைவன் படத்தை அவர் பிறந்தநாளில் கூட நாங்கள் ஒட்டக்கூடாதா என்று..கேட்டால் காவல்துறையிடம் தயாராக ஒரு பதில் இருக்கிறது. “மேலிட உத்தரவு.” அந்த மேலிடத்தைத்தான் பலரும் பல காலமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த சட்டத்தின் வாயிலாக இதுபோன்ற அடாவடிகளை காவல்துறை செய்து வருகிறது என்பது யாருக்குமே தெரியாது. தெருவோர வியாபாரிகளிடம் அத்துமீறுவது, மாதக்கடைசியில் எங்கேயோ நின்று கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சாவியை பிடுங்கிக்கொண்டு லைசென்ஸை எடு.. ஹெல்மெட் போடல.. ஹெட்லைட் சரியா எரியல ..என்ற கேள்விகள் எல்லாம் கேட்டு, கடைசியில்” எதற்கு கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும்.. ஏதாவது கொடுத்து விட்டு போங்கள்” என வசூலை போடுவது, காவல் நிலையத்தில் அமர்ந்துகொண்டு நீதி அரசர் போல வாத பிரதிவாதங்களை கேட்டு நீதிமன்றத்தையே நடத்துவது, என நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் அமைதியாக கடந்து போகிறோம். எதிர்பாராத விதமாக ஒரு நாள் சாலையில் அவசர வேலை காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு ஒதுங்கி நிற்கின்ற நிலை நமக்கு வரும் போதுதான் அது பற்றியே நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம். அப்போது கூட கையில் இருப்பதை கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்வதை தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அப்படி ஓடி ஓடி த்தான் அநியாயமாக இரண்டு உயிர் கொலை செய்யப்படுவதற்கு நாமும் மறைமுக காரணமாக அமைந்திருக்கிறோம். உண்மைதான்.. நடந்து முடிந்திருக்கிற 2 கொலைகளுக்கும் நாமும் ஒரு காரணம்.அநீதியை எதிர்ப்பது என்பது பிரச்சனையில் சிக்கிக் கொள்வதல்ல. அது சாதாரண வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற இயல்பு என்பதனை எப்போது குணாதிசியமாக கொள்கிறோமோ அப்போதுதான் “சாத்தான்குளங்கள்” இல்லாது ஒழியும்.சாலையில் என்று யாராவது போராடிக்கொண்டு இருந்தால்.. நமக்கென்ன என வேடிக்கை பார்த்துவிட்டு கடக்கும் ஒவ்வொருவரின் புட்டத்திலும் நுழைய ஒரு அதிகாரத்தின் லத்தி காத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணரும் தருவாயில் தான்.. அதிகாரங்களை எதிர்த்து நிற்பதற்கான வலிமை ஏற்படும். இல்லையேல் “சாத்தான்குளங்கள்” சரித்திரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டே செல்லும்.வாழ்வதற்கான போராட்டம் என்கிற நிலை மாறிவிட்டது.இனி போராட்டமே வாழ்க்கை என்கிற நிலை தொடங்கியிருக்கிறது.எப்போதுமே அமைதியாக இருப்பதைப் போன்ற அநீதி எதுவும் இல்லை.எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்கின்ற அனைத்து குரல்களும் நடக்கின்ற அனைத்து தவறுகளுக்கும், கொலைகளுக்கும் ஆதரவானதே..அநீதியை எதிர்த்து எங்கிருந்தோ எதிர்த்து எழும்பும் ஒவ்வொரு குரலும் இனி இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வெளிச்சத் துளிகள்.

தந்தையர் தினம்.

தாய் பத்து மாதத்தோடு கருப்பையிலிருந்து குழந்தையை இறக்கி வைத்து விடுகிறாள். ஆனால் தந்தைகளோ, தன் ஆயுட்காலம் முழுவதும் குழந்தைகளை தோளில் சுமக்கிறார்கள்.நானெல்லாம் தந்தையின் சொல் பேச்சு கேட்காத ஊதாரி மகனாக ஊர் சுற்றித் திரிந்தவன். எப்போதும் அவர் சொல் பேச்சு கேட்காமல் எதிர்திசையில் பயணித்தவன். ஆனால் என் தந்தை வித்தியாசமானவர். நான் எந்த திசையில் பயணிக்கிறேனோ அந்த திசையில் தனது திசைக்காட்டியை திருப்பி வைப்பவர். திக்குத் தெரியாத இருள் சூழ்ந்த வனத்தில் நான் பயணித்தாலும் திசைகாட்டும் நட்சத்திரமாக அவர் நகர்ந்து கொண்டிருப்பார்.தோல்விகளால் நான் துவண்டு விழும் தருணங்களில் …. வெறும் சொற்களால் என்னை அவர் தேற்றியதில்லை. புத்தகங்களைக் கொண்டு என் உலகத்தை நிரப்பினார் அவர். அனைத்து துன்பத் துயர பூட்டுகளுக்கும் புத்தகங்களை சாவியாக நம்பினார் அவர். உண்மையில் பூட்டுகள் திறக்கத்தான் செய்தன.இந்த உலகில் தனியனாக பிரிந்த எனக்கு என் தந்தையின் உடன் இருப்பு வார்த்தைகளால் விவரிக்க முடிகிற புறத்துணை அல்ல. தனிமையின் பிசுபிசுக்கும் இருட்டை தகர்த்து, வெளிச்சக் காடாக என் அகத்தை மாற்ற என் விரல்களோடு கோர்த்துக்கொண்ட அவரது விரல்கள் சுடரொளி மிகுந்தவை.என் தந்தை நேர்மையானவர். கோபம் கொள்ளத் தெரியாதவர்.சக மனிதருக்கு துளியளவு கூட துன்பமோ துரோகமோ நினைக்க முடியாதவர். தன்னை எப்போதும் எளியவராக, முன்னிறுத்தி கொள்ளாத மனிதராக வாழ்பவர். அந்த வகையில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள பெற்றுக் கொள்ள ஏராளமான பொக்கிஷங்களை வைத்துக் கொண்டிருக்கிற அற உணர்வுகளின் புதையல் அவர்.வெறும் பெயருக்கு முன்னால் முன்னெழுத்து தருகிறவர் மட்டும் தந்தை அல்ல. அந்தத் பெயரின் அடையாளமாகவும், அந்தப் பெயரின் ஆதர்சமாகவும் மாறி, தன் வியர்வையால்துளித்துளியாக மகனை உருவாக்கி அவையத்து முந்தி இருக்க அனுப்புபவர்கள் தான் தந்தைகள்.இந்த உலகத்திற்காக தந்தைகள் எந்த மகனையும் தயாரிப்பதில்லை. ஆனால் மகன்களுக்காக தந்தைகள் ஒரு புது உலகத்தை தயாரிக்கிறார்கள். அப்படி இந்த உலகம் பல கோடி உலகங்களால் சூழப்பட்டு தந்தைகளால் தழைத்து செழிக்கிறது.”My father is a hero” என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு. எல்லா கதாநாயகர்களும் ஒரு தந்தையாக இருப்பார்களோ இல்லையோ… ஆனால் ஒவ்வொரு தந்தையும், ஒரு கதாநாயகன் தான்.எனக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. என் தந்தை எனக்கு இருந்த நேர்மையில்.. ஒரு பாதி அளவாவது என் மகன்களுக்காக நான் வாழ்ந்து விட வேண்டும் என்பது.என்னை அலைக்கழித்து, சுக்குநூறாக உடைத்து, என்னை வலிக்க வைத்து, கதற வைத்து, அலைய வைத்து, தொலைய வைத்து,இறுதியாக..இந்த வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு மாபெரும் உண்மை என்னவெனில்‌..தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

❤️

அனைத்து தந்தையர்களுக்கும், தந்தையாக போகிறவர்களுக்கும்..தந்தையாக மாற்றி இருப்பவர்களுக்கும்..தந்தையாக்கப் போகிறவர்களுக்கும்..இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

கடலோடு.. உரையாடு.

♥️

ஒரு இளவேனில் காலத்தின் பின் மதிய நேரத்தில் கடலை பார்க்கப் போவோம்‌‌ என அவள் திடீரென கேட்டபோது ஏன் எதற்கு என தோன்றாமல் உடனே கிளம்பிவிட்டேன். சில அழைப்புகள் திரும்ப இயலா ஒற்றையடி பாதை போல. ஏற்பதைத்தவிர வேறு எதுவும் வழியில்லை.

எங்கோ தொலைதூரத்தில் கடலோசை கேட்கின்ற திசையில் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம்.

இங்கேயே எனக்கு அலைகளின் ஒலி கேட்கிறது என்றாள்.

எனக்கும் அலைகளில் கால் நனைக்காமலே கால்கள் நனைந்து விட்டது போல ஒரு உணர்வு.

உப்பினை சுமந்து உலர்ந்து திரியும் காற்றின் கரம்பிடித்து சென்றோம்.

சில மணி நேரங்களில் கடல் எங்கள் காலடிகளுக்கு சில அடி தூரத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
மின்னிய கண்களோடு ததும்பிக் கொண்டிருந்த அந்த கடலை பார்ததுக்கொண்டிருந்தவள் சட்டென என்னை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

ஒரு நீரலைப் போல அவள் மாறி இருந்தாள். அவள் விழிகள் முழுக்க இளநீலம் பரவி எதிரே விரிந்து கிடக்கும் கடலின் நகலாக அவள் மாறி இருக்கிறாள் என எனக்குத் தோன்றியது.

அவளை அணைத்த அப்பொழுதில் தான் காதலலை நிரம்புகிற தேநீர் குவளையாக நானும், என்னுள் நிரம்புகிற, தாகம் மிக்க என் ஆன்மாவின் வடிவத்திற்கு ஏற்றாற் போல் வார்த்துக்கொள்ளும் நேசத்தின் நீராக அவளும் மாறிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டேன்.

நீர்மையும், நடுக்கடல் ஆழமும் , அளக்க முடியா அமைதியும், எப்போதும் பெண்களுக்கு உரியவை. எனவேதான் கடலும் ஒரு பெண் என்று
அறிந்ததெல்லாம் புத்தகங்களில் மட்டும் காணப்படும் பொய்யழகு அல்ல, உண்மையின் தரிசனம் எனத் தெரிந்துகொண்டேன்.

♥️

எப்போதும் பார்த்தாலும் கடல் மட்டும் பார்க்கப் பார்க்க புதிதாகவே இருக்கிறது என்று முணுமுணுத்தாள்.

ஏறக்குறைய உன்னைப்போல என நான் அக்கணம் நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை.

ஏதோ யோசித்தவாறே.. உள்ளங்கையில் மணலை எடுத்து கொட்டிய வாறே..
இந்த மணல் துகள்களை என்றாவது எண்ண வேண்டும் என யோசித்து இருக்கிறாயா என விசித்திரமாக கேட்டாள்.

இந்த உலகத்தில் காதல் கதைகளை நான் கணக்கெடுப்பதில்லை என்றேன்.

சிரித்துக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து எப்போதும் ஏன் கடல் ஆச்சரியமாகவே இருக்கிறது என விழிவிரிய கேட்டாள்.

ஆழம் மிக்க எதுவும் ஆச்சரியமாக தான் இருக்கும். பெண்களைப் போல.
என்றேன்.

பெண்கள் அலையடிக்கும் கடல் என்றாலும் ஆண்கள் என்னவோ கொந்தளிக்கும் எங்கள் மீது எப்படியோ தத்தளித்து படகோட்டி விடுகிறீர்கள் என நக்கலாக சற்றே கடுப்புடன் சொன்னாள்.

நான் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில விஷயங்களுக்கு பதில் அளிக்கக் கூடாது. பெண்கள் ஒன்றிலிருந்து வேறொன்றை உருவாக்குவதில் தேர்ந்தவர்கள். சிறிய அலைக்கு பின்னால் வரும் பேரலை போல.

ஏதோ அவள் விழிகள் கலங்கி இருந்ததாக எனக்குத் தோன்றியது.

என்ன ஆயிற்று எனக் கேட்டதற்கு எப்போதும் உலகத்தில் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பதிலை அவளும் ஒருவித இறுக்கத்தோடு சொன்னாள்..

“ஒன்றுமில்லை”.

அந்த ஒன்றும் இல்லை என்பதில்தான் ஓராயிரம் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்துதான் வைத்திருக்கிறான்.

எங்களிடையே ஒரு உருகா மௌனம் ஒன்று பாதரசம் போல மிதந்துகொண்டிருந்தது

நீ வர வர அதோ அந்த பாறை போல இறுகி விட்டாய் என்றாள்.

நீ கவனித்தாயா.. அப்போதும் உன் கால்களை உரசும் அலைகளை தான் நான் தழுவிக் கொண்டு இருக்கிறேன் என்றேன்.

நிமிர்ந்து பார்த்தாள்.

ஏதேதோ பேசி சொற்களின் மயக்க கூட்டில் என்ன வைத்திருக்கிறாய் என தீவிரமான குரலில் சொன்னாள்.

அமைதியாக இருந்தோம்.

இவையெல்லாம் சொற்களை வைத்துக்கொண்டு நான் நிகழ்த்தும் மாய விளையாட்டு என நீ நம்புகிறாயா.. என நான் அவளிடம் உயிர் துடிக்கும் வேதனையோடு கேட்டபோது சில நொடிகளுக்கு அலைகள் எங்கள் பக்கம் வரவில்லை.

பதில் அளிக்காமல் அவள் அமைதியாக இருந்தாள்.

உன்னிடம் நான் சொல்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னாலும் உண்மையின் உதிரம் வழிகிற அசலான இதயம் ஒன்று வலியோடு அசைந்து கொண்டிருக்கிறது என்றேன்.

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதிர்பார்க்காத தருணம் ஒன்றில் அலை வீசும் காற்றில் மிதந்து வந்த நீர்த்துளி ஒன்று எங்கள் முகத்தில் பட்டு தெறித்து சிலிர்ப்பை உண்டாக்கிய அந்த நொடியில் எதையோ உணர்ந்தவள் என் தலையை மெதுவாக கோதினாள்.

அடுத்தடுத்து வருகிற இரு அலைகள் போல.‌. உன் உடன் இருக்கும் போது அளவற்ற மகிழ்ச்சியையும், பிரிவின் துயரில் அளவற்ற கண்ணீரையும் சுமந்தே அலைகிறேன் என்று ஏக்கத்துடன் சொன்னாள் அவள்.

அவள் கரங்களை மென்மையாய் பற்றினேன்.

அந்த நேரத்தில் வீசுகிற காற்றுக்கு லயம் பிடித்து அலைபாய்ந்து கொண்டிருந்த அவளின் கூந்தலை நான் கண்டேன். எப்போதும் அதை ஒரு கடலாகத்தான் நான் உணர்ந்திருக்கிறேன். அதன் கருநிற அலைகளில் எத்தனையோ முறை தொலைந்து இருக்கிறேன்.

தனித்திருக்கும் போது நாங்கள் பித்துப்பிடித்து ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து மகிழ்ந்து இருந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி அவள் சரியாக உணர்ந்து விட்டாள் என்பதை சிவப்பேறுகிற அவளது கன்ன கதுப்புகள் காட்டின.

ஏதோ நினைத்துக்கொண்டே பேச்சை மாற்றுவதாக கருதி.. இந்தக் கடலுக்கு என்ன பெயர் என ஒரு சிறுமி போல அவள் கேட்டாள்.

இந்த கணத்தில் இந்தக் கடலுக்கு உன் பெயர்தான் என்று அவள் முகம் பார்த்து சொன்ன போது..

அவள் அவளுக்குள் ஒரு கடலை உருவாக்கிக்கொண்டு, ஏற்கனவே ஒரு கடலாகி போயிருந்த என் மீது வெட்கத்துடன் சாய்ந்துக்கொண்டாள்.

கடல் பார்க்க சென்ற எங்களை.. கடல் பார்த்துக்கொண்டிருந்தது.

❤️

மணி செந்தில்‌.

❤️

காட்சித்துளிக்கு கிருஷ் நடேஷ்க்கும்..
கவிதை அலைக்கு அண்ணன் அறிவுமதிக்கும்,
இசைக்கடலுக்கு இசைஞானிக்கும்
ஈர முத்தங்கள்.

❤️

அன்பே சகலமும்..

இறுதியில்
அனைத்திலும்
இழந்து இருப்பதும்,
பெற்றிருப்பதும்,
ஒன்றே ஒன்று தான்..

அதைவிட
சுகமானதும்
கொடுமையானதும்
வெவ்வேறில்லை.

அதுதான்
கோரப்படும்
வரமாகவும்
விதிக்கப்படும்
சாபமாகவும்
திகழ்கிறது.

அதுவே
தண்டனையாகவும்
பிரார்த்தனையாகவும்
இருக்கிறது.

அதுவே
வாழ்வின்
அர்த்தமுமாக
அபத்தமுமாக
வாய்க்கப்
பட்டிருக்கிறது.

அதுதான்
சாத்தானின்
விலக்கப்பட்ட கனி.
அதுதான்
தேவனின்
கருணை மிகுந்த
உதிரம்.

இறுதியாக
அனைத்திலும்
மிஞ்சியதும்
எஞ்சியதுமாக
அதனது பாடலே
கேட்கக் கிடைக்கிறது.

ஆதி அந்தம்
அதுதான்.

அன்பே சகலமும்.

♥️

மல்லிகை நகரத்துப் பொழுதுகள்..

♥️

அந்த அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரவின் புதிரான அடுக்கொன்றின் விசித்திர முடிச்சியின் இடறலில் திடுக்கிட்டு விழித்த போது அருகிலே அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.என்னை தழுவி இருந்த‌‌ அவளது கரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, அறையின் ஜன்னல்களை திறந்தேன். உறங்கா அந்தப் பெரு நகரம் தன் வரலாற்றுப் பெருமித நினைவுகளில் லயித்து இருந்தது. இரவு ஒரு திரவமென முகிழ்ந்து அந்த முது நகரத்தின் மேனியில் வழிந்துகொண்டிருந்தது. பகலெல்லாம் வேறுமாதிரி காட்சியளிக்கும் அந்த நகரம்
இரவில் மட்டும் நாணமும், மென்மையும் உடைய ஒரு பெண்ணாகி விடுகிற மாயத்தினை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

“என்னடா பண்ற” என்ற அவளது குரலில் திரும்பிப் பார்த்த நான் என்னை நோக்கி நீண்ட இரண்டு வெற்றுக்கரங்களை கண்டேன். அந்த அழைப்பினை என்னால் எப்போதும் தவிர்க்க முடிந்ததில்லை. அந்தக் கரங்களுக்குள் நான் நுழைந்தபோது மழை நிரப்பிய குளம் ஒன்றில் கால் நனைத்தது போல எப்போதும் அடைகிற ஒரு சிலிர்ப்பினை அடைந்தேன்.

“இந்த ஊர் ஒரு பெண்” என்றேன்.
“வர வர தென்படும் எல்லாவற்றிலும் பெண்ணை உணர்பவனாக.., தேடி அலைபவனாக நீ மாறிக்கொண்டே போகிறாய்..” என்றாள் அவள்.

இது போன்ற தருணங்களில் திக்கு தெரியாத, ஒரு திசையற்ற வெளியாய் அவளது உடல் மாறிப் போவதை நான் உணர்ந்து இருக்கிறேன். திசைகள் தெரியாமல் நான் கலைந்து, அலைவதைதான் பெரும்பாலும் என் கவிதைகளில் அவள் கண்டதாக சொன்னது ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“எங்கேயாவது வெளியே போவோமா..?” என்று கேட்டாள்.

“இந்த நள்ளிரவிலா..” என சிறகடிப்பின் விரிதலில் ஒரு வானத்தையே அளந்து பார்த்த ஒரு சிறு பறவை போல மாறி இருந்த நான் மென்மையாக கேட்டேன்.

“இது உறங்கா நகரம்.
ஏனெனில்..இந்த நகரத்தின் விழிகளுக்கு இமைகள் கிடையாது.” என்று அவள் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.

அப்படியே எழுந்து, கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு.. நாங்கள் காரில் பயணிக்கத் தொடங்கியபோது.. வளைவும், நெளிவும் உடைய அந்த பாதைகள் பெண்ணாக அந்த நகரத்தை நான் உணர்ந்த என் கணிப்பினை உறுதி செய்தன.

நாங்கள் சென்ற பாதையில் எதிர்ப்பட்ட ஒரு பெரிய கோபுரத்தின் வாசலுக்கு முன்னால் என்னை நிறுத்த சொல்லி.. விட்டு காரைவிட்டு இறங்கி,
அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் ஏதோ சிரித்து இவள் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இந்த பின்னிரவு நேரத்திலும் குளித்து, மஞ்சள் பூசி, நெற்றி நிறைத்து பொட்டிட்டு, பூ விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் புன்னகையை மட்டும் வாங்கிக்கொண்டு பூ வாங்காமல் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மீண்டும் காரில் ஏறிக்கொண்ட அவளிடம் “என்ன அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாய்..?” எனக்கேட்டேன். “அந்த அம்மா பெயர் மீனாட்சி. நேற்று கோவிலில் பார்த்தேன்..” என்றாள் அவள்.
ஏன்.. அந்த அம்மா தோளில் பச்சைக்கிளி ஒன்றைக் காணவில்லை என எனக்குள் கேள்வி எழும்பியதை அவளிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

திடீரென ஏதோ நினைத்தது போல என் தோளில் சாய்ந்து என் இடது கரத்தினை இறுக அணைத்துக் கொண்டாள். ஒரு பெரிய தெப்பக் குளத்திற்கு முன்னால்.. நாங்கள் சென்று சேர்ந்தபோது.. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லை. “மீன்கள் இல்லாத குளம்..” என்றேன் நான். எனது பின்னந்தலையை உன்னிப்பாக கோதியவாறே.. “அந்தக் குளத்தை பார்க்கின்ற எல்லோரது விழி பார்வைகளும் மீன்களாக மாறி உலவிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது..” என்றாள் அவள்.
“ஆனால் இது தண்ணீர் இல்லாத குளம்” என்றேன். “ஒருவகையில் ஆடை இல்லாத பெண்..” என்றாள் அவள்.

“எப்போதும் எதிலும் முழு நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ள மனித மனம் ஏனோ விரும்புவதில்லை‌” என்று சொன்ன என்னை பார்த்து அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.

“உன் வெட்கம் எப்போதுமே ஒரு அல்லி மலரை தான் நினைவு படுத்துகிறது..” என்றேன். அவள் சற்று கடுமையாக
“ஆனால் இது மல்லிகையின் ஊர்.” என்றாள்.. ” ஓ அதனால்தான்
நீ அடிக்கடி பெருமூச்சு விடுகிறாயோ..?” என்று கேட்ட என்னை பார்த்து மெலிதாக சிரித்தாள்.

“சரி வா.. போவோம்” என்றவாறே அவள் திரும்பியபோது அவளது பின்னப்படாத கேசத்தில் சில நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

மீண்டும் அறைக்கு நாங்கள் திரும்பியபோது அறையின் சுவர்களில் பாசியேறி, பசுமை நிறைந்த கொடிகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு, படர்ந்திருந்தன. அறைக்குள் ஒரு கடல் உருவாகியிருந்ததையும், அதில் சில தங்க மீன்கள் உலவிக்கொண்டு இருந்ததையும் நாங்கள் கவனித்தோம்.
எங்கள் கட்டிலின் தலைமாட்டில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று தழைத்து வளர்ந்து, கிளைகள் செழித்து, விழுதுகளோடு பூரித்து நின்றதை நாங்கள் கண்டோம்.

இதுவெல்லாம் எப்படி என்று நாங்கள் இருவருமே யோசிக்கவில்லை. அந்தக் மாய கணத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்த பெருமரத்தில் மடியில் தலை சாய்ந்தோம். எங்களை சுற்றி அடர்வனம் ஒன்றின் சூரிய ஒளி படாத
தரையின் குளிர்ச்சி பரவத்தொடங்கியது.

“நழுவிக் கொண்டே போகும் உன் விரல்களின் நுனியில் மயிற்பீலி முளைத்திருக்கிறது” என்றாள் அவள். அப்போதுதான் சற்றே மூடியிருக்கும் அவளது விழிகளில் இருந்து சிறு பறவை ஒன்றின் இறகு ஒன்று பிரிந்து அந்தர வெளியில் மிதக்கத் தொடங்கியது.

எங்கிருந்தோ வந்த நிலவு எங்களது இருவர் கண்களிலும் நுழைந்ததை நாங்கள் உணர்ந்தோம். எப்போதும் அவள் அருகில் இருக்கும்போது மென்மையாக உணரும் தாழம்பூவின் வாசனை அன்று மட்டும் மல்லிகை பூ மணமாக நான் உணர்ந்தது குறித்து எனக்கு அப்போது எந்த வியப்பும் இல்லை.

…..

எப்போதோ வாழ்வின் எதிர்பாராத தருணங்களில், அவளை நான் நழுவ விட்ட பிரிதான, வெகு காலத்திற்குப் பிறகு..

தனித்து நான் அந்த முது நகரத்திற்கு சென்றபோது ஒரு நள்ளிரவில் பூ விற்ற அந்த அம்மாவைத் தேடி அலைந்தேன்.

எதிர்பார்த்தது போல அதே கோபுரம். அதே வாசல்.

அங்கே யாரோ ஒரு பெண் மூப்பேறாமல் இருந்த அதே அம்மாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

அருகே யாரோ ஒரு இளைஞன் இதையெல்லாம் புன்னகையோடு கவனித்துக்கொண்டே நிற்கிறான்.

எனக்கு எதுவும் தோன்றாமல் நான் அறைக்குத் திரும்பியபோது.. நான் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒரு வனமாக மாறிவிடவில்லை என்பதுதான் அக்கணநேரத்து ஆறுதலாக எனக்கு அமைந்தது.

 

(நன்றி முத்தங்கள்.
இசைக்கு: இசைஞானி, காணொளி வடிவமைப்பிற்கு: கிருஷ் நடேஷ்)

அந்தியொன்றின் நீலநிறப்பூ.

 

[youtube]https://www.youtube.com/watch?v=pQj12Y7XPno[/youtube]

நிகழ்காலம் என்ற ஒன்று இருப்பதாலேயே இறந்தகாலம் இறந்து விடுவதில்லை. நினைவுகள் ஊறித்திளைக்கும் ஆன்மாவில் தான்
வேர்க்கொண்டு மலர்ந்த பூக்கள் என்றும் வாடுவதில்லை. 
அப்படித்தான் ஒரு மழைக்கால அந்தியில் ஒரு மஞ்சள் நிற உடையில் எப்போதோ நான் தவறவிட்ட அவள் கடந்த காலத்தின் நீல நிறப் பூவை எடுத்து வந்திருந்தாள். சொல்லப்போனால் அந்த சந்திப்பிற்கு நான் எந்தத் திட்டமும் இடவில்லை. திடீரென நேர்ந்துவிட்ட ஒரு விபத்து போல அந்த சந்திப்பும் நிகழ்ந்தது என்றும் வாடாத அந்த நீல நிறப் பூவை எனக்கு முன்னால் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.‌ அருகே இருந்த கண்ணாடி குவளையில் நான் குடித்து மீதம் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மென்மையாக பருகினாள். நேரடியாக என் கண்களை பார்த்து இவ்வளவு நாள் நான் எங்கிருந்தேன் ஏன கேட்க மாட்டாயா.. என்பதுபோல அவளது விழிகள் கேட்பதாக எனக்குத் தெரிந்தது. அந்த விழிகளில் விழுந்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வாழ்வதென்பது இனி என்னால் முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்தாலும் முடிவிலியான அந்த பகடை ஆட்டத்தில் எப்படியேனும் நான் ஈடுபட்டு விடுவேன் என அவளுக்கும் தெரிந்தது. ஆனாலும் நான் கவனமாக இருப்பதாக அவளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக..

“காலம் நிறைய மாறிவிட்டது” என்றேன்.

“ஆனால் நீ மாறவில்லை” என்றாள்.

இனி ஆயுதங்களை பயன்படுத்தி விட வேண்டியதுதான் என்பதற்காக அவள் ஆன்மாவிற்கு என நான் தனித்தே தயாரித்து வைத்திருந்த ஒரு குறுங்கத்தி பதிலை அவளிடம் இவ்வாறாக சொன்னேன். “இப்போது இன்னொருவள் என் அகம் புறம் என அனைத்தையும் நிரப்பி இருக்கிறாள்” என்றேன். அவள் சற்றே அலட்சிய சிரிப்போடு.. “ஆனால் நீ என்னவோ தளும்பிக்கொண்டு தான் இருக்கிறாய்” என்றாள்.

“உனக்கும் வயதாகி விட்டது போல” என்று சொல்லிப் பார்த்தேன்.

“இன்னும் நமக்குள் ஜோடிப் பொருத்தம் தான்” என சொல்லி விட்டு சிரித்துக்கொண்டாள்.
“எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று நேரடியாக அவள் மார்பில் என் கத்தியை சொருகினேன். அதை துளி கூட பொருட்படுத்தாமல் “அவர்களிடமும் நீ என் சாயலை தான் தேடிக் கொண்டிருப்பாய்” என எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.

“ஆனால் நீ பார்த்தவன் எப்போதோ இறந்து விட்டான்” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னேன். அவளோ என் மீது பார்வையை விலக்காமல்.. “அவனை என்னைத் தவிர யாராலும் கொல்ல முடியாது..” என்று விசித்திரமாக பதிலளித்தாள். நான் என் தலையைத் தாழ்த்தியவாறே.. “இப்போது நான் முழுவதுமாக வேறு மனிதன்” என்று உறுதியான குரலில் அவளுக்கு சொல்வது போல எனக்கும் சொன்னேன்.

” என்னை முதலில் நேருக்கு நேராக பார். மிக எளிதாக நான் அவனை அடைந்து விடுவேன்” என்று அவள் சொன்னாள் .

“இதுவெல்லாம் கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டும்தான் சாத்தியம்” என்றேன். “அவரவர் கதைகளைத்தான் பல காட்சிகளாக படம் பிடித்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள்” என்றாள்.

“இறுதியாக என்னதான் வேண்டும்..?” என்கிற மன்றாடலில் என் கைகள் நடுங்கியவாறே தழுதழுத்த குரலில் அவளிடம் கேட்டேன்.

எனக்கு வேண்டியது ஒரு உண்மையின் மலர் என்றாள்.

“நான் இல்லாத இக் காலங்களில் எப்போதாவது என்னை மறந்த நேரம் என்ற ஒன்று உண்டா..” என தலை கவிழ்ந்த என் முகம் பார்த்து தலைச்சாய்த்தவாறே கேட்டாள்.

கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு..”உண்மையை சொன்னால் நீ எழுந்து போக மாட்டாய் என நான் அஞ்சுகிறேன்”.. என்றேன்.

“இது போதும்”. என்றாள் சிரித்துக்கொண்டே.

நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு நீல நிறப் பூவைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.

பிரிவின் மழை..

 

[youtube]https://www.youtube.com/watch?v=3nisKz887rU[/youtube]

இரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக “தண்ணீர் பாட்டில் வேண்டுமா” என நான் கேட்க..அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைத்தாள். அதைத்தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை.அது சொற்கள் தீர்ந்த தருணம். எல்லாவற்றையும் இந்த வாழ்க்கையில் நாம் கொட்டி முடித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்வதா.. அல்லது நிகழும் வாழ்க்கையில் இதுவும் நிகழ்ந்தது என உணர்ந்து கொள்வதா என்பதில் எப்போதுமே எனக்கு மனக்குழப்பம் உண்டு. ஆனாலும் அக்கணத்தில் நாம் சாகாமல் உயிர்ப்புடன் இருந்தோம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு கனவு போல நிகழ்ந்து விட்டிருக்கிறது என்றெல்லாம் நீயும், நானும் நிகழ்ந்தவைகள் அனைத்தையுமே ஒரு கனவாக கடந்துவிட முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடக்கவே முடியாத ஒரு பெரும் பாலைவனமாக நம் நினைவுகள் மாறிவிட்டன என்பதை அக்கணத்தில் நாம் உணர்ந்தே இருந்தோம். ஆளரவமற்ற அந்தப் பாலைவனத்தில்.

அலைச்சலும் உளைச்சலும் நிரம்பிய இந்தக் கொடும் வாழ்வினை தணித்துக்கொள்ள ஒரு இசையமைதி வேண்டி நாம் அலையப் போகிறோம் என்பதுதான் நாம் எதிர்கொண்டிருந்த இந்த வாழ்வின் மீதான பெரும் அச்சம். உண்மைதான். உனது விழிகளில் நான் அடைந்த அந்த இசையமைதி இதுவரை நான் எங்கும் அடையவில்லை என்பதும்.. அதைத் தேடி அலைந்து திரிவதை தான் இந்த வாழ்க்கையின் கொடும் விதி என நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன் என்பதும் நான் அறிந்தது தான். என்னவோ தெரியவில்லை. அன்று நாம் எதிர்நோக்கியிருந்த அந்தப் பேருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. அந்தக் கால தாமதத்தை காலம் நமக்கு காட்டிய அன்பின் வரமா.. அல்லது ஈவு இரக்கமற்ற வாழ்வின் கடைசித்துளி கருணையா என்றெல்லாம் அப்போது என்னால் ஆராய முடியவில்லை. ஆனாலும் பேரவலம் நிறைந்த ஒரு நரகத்திற்குள் நாம் திரும்பிச் செல்வதற்காக கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம் என்கிற ஒத்த மன உணர்வில் நாம் உறைந்திருந்தோம். எந்தவிதமான சம்பிரதாய விடைபெறுதல்களும் நமக்குள் அன்று நடைபெறவில்லை என்பது தான் இன்றும் நான் அடைந்திருக்கிற மிகப் பெரிய ஆறுதல். என்னை நீ பார்த்துக் கொண்டே இருந்தாய். நான் வேறு எங்கோ கவனித்துக் கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அருகே யார் தோளிலோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம்/ காலம்/ சூழல் மறந்த ஒரு குழந்தையின் உறக்கம் தான் எவ்வளவு புனிதமானது… இனி நமக்கு வாய்க்கவே போவதற்ற அந்த உறக்கம் தான் நான் அந்த நொடியில் கண்டடைந்த மகத்தான மானுட தரிசனம். இறுதியில் தாமதமாக போன அந்த பேருந்தும் வந்தது. மீண்டும் அதே கேள்வியை நான் கேட்டேன். “தண்ணீர் பாட்டில் வேண்டுமா…” எத்தனை முறை இதே கேள்வியை கேட்பாய் என்பதுபோல என்னை நீ நிமிர்ந்து பார்த்தாய். அந்த நிமிடத்தில் பொங்கி வருகின்ற எல்லாவற்றையும் ஏதோ ஒரு கேள்விக்குள் அடக்க முயலும் அபத்தம் எனக்கும் புரிந்தது. என்னிடமிருந்த உன் பையினை மெலிதாக வாங்கிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டாய். என் கையில் இருந்த பையை வாங்கும் அந்த நொடியில் உன் விரல்கள் எனது விரலோடு உரசி விடக்கூடாது என்கின்ற மிகுந்த எச்சரிக்கை உன்னிடம் இருந்தது குறித்து எனக்கு இதுவரையில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த ஒற்றை உரசல் போதும். அந்த சின்னஞ்சிறு தீப்பொறி உனக்கு அது வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒருமுறை திரைப்படமாக காட்டிவிடும் என்பதையும்… அந்தப் பொழுதில் தன் வாழ்வையே ஒரு திரைப்படமாக பார்க்க நீ அஞ்சினாய் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்கிறேன் என்பது போல மெலிதாக தலையசைத்தாய். எனது கண்கள் கலங்கியிருந்தன. இனி மீளவே முடியாத ஒரு பாதையில் உன்னை அனுப்பி வைத்துவிட்டு இந்த வாழ்வு முழுக்க நான் தனியே வாழ வேண்டும் என்கின்ற பெரும் சாபம் வெயில் அடிக்கும் நிலத்தில் உயரப் பறக்கும் ஒரு கழுகின் நிழல் போல எனக்குள்ளும் துளிர்த்தது.

அக்கணத்தில் ஏதோ சொல்ல நினைத்தாய் என இன்றளவும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை நீ எதுவும் சொல்லவில்லை. போய் வருகிறேன் என்றோ, போய் எப்படியாவது தொடர்பு கொள்கிறேன் என்றோ , போய் அலைபேசியில் அழைக்கிறேன் என்றோ எந்த வாக்குறுதிகளும் இல்லாத ஒரு வெறுமை விடைபெறுதல் அது. ஏதாவது சொல்லி விட்டுப் போயிருந்தால். அந்த சொல்லையே பிடித்துக்கொண்டு நான் அலைந்து தீர்ப்பேன் என உனக்கும் தெரியும் தானே. படிக்கட்டுகளில் ஏறும் போது கலங்கி இருந்த என் கண்களின் ஊடாக எனக்குத் தெரிந்த காட்சி நீ என்னை திரும்பி பார்ப்பதான ஒரு தோற்றம். நீ உள்ளே ஏறி சென்று விட்டாய். பேருந்து நகரத் தொடங்கியது. நான் அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தேன். பேருந்து என்னை விட்டு விலக.. விலக.. பிரிக்க முடியாத என் ஆன்மாவின் ரத்தமும் சதையும் நிரம்பிய துண்டு ஒன்று என்னை விட்டு விலகுவது போன்ற வலி. மெதுவாக நான் காரில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். எனக்குச் சற்று முன்னால் அந்த பேருந்து சென்று கொண்டே இருந்தது. நானும் பின்னால் சிறிது நேரம் போய்க்கொண்டே இருந்தேன். சட்டென ஒரு வளைவில் அந்த பேருந்து எதிர்ப்புறம் பயணிக்க. நான் அப்படியே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த முச்சந்தியில் இறங்கி நின்றேன்.

அந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது எதேச்சையான ஒரு நிகழ்வு என இந்த நொடி வரை நான் நம்பவில்லை.

Page 21 of 61

Powered by WordPress & Theme by Anders Norén