பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 31 of 57

இருட்பாதையின் திசை வழி..

பொய்கள்
பாசியென
படர்ந்திருந்த
குளமொன்றில்
அரூவ மீனாய்
நீந்திக்கொண்டிருந்த
உன்னை நோக்கி
எறியப்பட்ட தூண்டில்
வாயில்தான்
என் கனவொன்று
இரையாய் சிக்கித்
தவித்துக்
கொண்டு இருந்தது.

எதிர்பாராமின்மையை
சூட்சம விதிகளாய்
கொண்டிருக்கும் அந்த
மாய விளையாட்டில்
அவரவர் பசிகளுக்கேற்ப
சொற்களின் பகடையாட்டம்
நடந்தன….

உக்கிரப் பொழுதில்
தாங்காமல் நிகழ்ந்த
பெரு வெடிப்பு .
கணத்தில் சிதறிய
என் சிலுவைப் பாடுகளின்
கதறல் ஒலிகள்
உன்னால் சில்லறைகளின்
சிந்திய ஓசை என
அலட்சியப் படுத்தப்பட்ட
நொடியில்..

திரும்பவே இயலா
திசையில்..
நான் வெகுதூரம்
போய் இருந்தேன்..

எப்போதாவது
உன் நம்பிக்கைகளும்..
கணக்குகளும் பொய்த்துப்
போன இருட் பாதையில்
தேடிப்பார்.

நான் ஏற்கனவே
தவற விட்டிருந்த..
எனது சில
விழிநீர்த்
துளிகளும்..
இந்த கவிதை
வரிகளும்..

உனக்கு விளக்காகலாம்..

கடவுள் வாசித்த பைபிள்..

 

 

 

இயற்கையின் படைப்பில் மகத்தானது பெண்தான்.அவளைப் போல எதுவும் உலகில் வலிமையானது இல்லை. பெண்களின் உழைப்பினால்..தியாகத்தினால் பரிபூரணம் அடைகிறது உலகு. மானுட வாழ்வின் மகத்தான விழுமியம் பெண்தான்.

இரவுப் பகலாக பெண்கள் உழைக்கிறார்கள். வாழ்வதற்காக போராடுகிறார்கள். ஆண்கள் அலட்சியப்படுத்தும் ஒவ்வொன்றையும் பெண்கள் கவனம் கொள்கிறார்கள். படைக்கிறார்கள். மன்னிக்கிறார்கள்.மாசற்ற அன்பிற்காக வாழ்வின் இறுதி நொடி வரை ஏங்கி மாள்கிறார்கள்.

சக மனிதனின் சலனப்பார்வை ஒன்று கூட சங்கடப்படுத்துகிற அவர்களது வாழ்வை ஒரு ஆணாக இருந்து நம்மால் சிந்திக்கக் கூட முடியாது.

அவர்கள் மர்மமானவர்கள் அல்ல. மறைவானவர்கள். அதே சமயம் கம்பீரமானவர்கள். மறுக்கப்படும் மதிப்பிற்காக.. சக உரிமைகளுக்காக வரலாற்றின் வீதிகள் முழுக்க காத்திருப்பவர்கள்..

என் உலகம் சிறுவயதில் இருந்து பெண்கள் சூழ் உலகு. நான் ஒவ்வொரு முறையும் வீழும் போதும் பெண்கள் தான் என்னை தூக்கி நிறுத்தி அவையத்து முந்தி இருக்க அனுப்பி இருக்கிறார்கள்.

ஒரு கனிவான பார்வை ஒன்றின் மூலமாகவே கலைந்த ஒரு ஆணை ஒரு பெண்ணால் காப்பாற்ற முடிகிறது. சிக்கலான கோடுகளை ஒரு வெற்றுத்தாளில் கிறுக்குவது போல வாழ்வினை தன் போக்கிற்கு கிறுக்கித்தள்ளும் ஆணின் ஒழுங்கின்மையை ஓவியமாக்குவது பெண் தான்.

மார்க்ஸ்.. ஜென்னி, லெனின்.. நதேழ்தா, சே குவெரா …அலெய்டா, பிரபாகரன்.. மதிவதனி, பாரதி.. செல்லம்மா, என நீளும் .அப்பட்டியல் ஒரு உண்மையை உலகிற்கு உரத்து அறிவிக்கிறது..

பெண்ணால் தான் ஆண்.

என் சிறு வயது வாழ்வில் சென்னை அடையாறு ஆந்திர மகிள சபாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் பயின்ற போது வயது முதிர்ந்த மேட்டர்ன் அம்மா என்று அழைக்கப்பட்ட ஒரு ஆங்கிலோ இண்டியன் மதர் தான் என் பராமரிப்பாளர்.

எப்போதும் வெள்ளுடை தரித்து ..சிலுவை தரித்து வலம் வரும் அந்த கனிவு கண்ட முகம் தான் நான் கண்ட முதற் கடவுள்.

சுருக்கங்கள் நிரம்பிய அவரது முகம் அங்கே பயின்ற எங்கள் ஒவ்வொருக்கும் பிரத்யோக புன்னகையை அள்ளி இறைக்கும்.பால்யத்தில் நேரக்கூடா எம் தனிமையை அவரது விழிகள் தான் நேர் செய்யும்.

ஒரு பனி இரவில்.. மெழுகுவர்த்தி ஒளியில் பைபிள் படித்துக் கொண்டிருந்த அவரை தூக்கக் கலக்கத்தில் மங்கலாய் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. ஒரு ஓவியம் போல உறைந்து பைபிளின் வாசிப்பில் இருந்த அவர்.. தன்னியல்பாய் கொண்டிருந்த உள்ளுணர்வின் மூலமாய் நான் விழித்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டு விட்டார். மெதுவாய் எழுந்து வந்து என்னருகே வந்த அவர்… ஆதரவாய் என் தலையை கோதினார். தாயை பிரிந்த என் வேதனையை சிற்சில கோதல்களிலும், அன்பான வருடல்களிலும் நேர் செய்தார். இன்றளவும் நான் உணரும் மேரி மாதா அவர்தான். அந்த கடவுளின் கருணையால் அந்த இரவில் நான் பேரன்பு கதகதப்போடு உறங்கினேன்.

மறுநாள் காலை நான் விழித்த போது மேட்டர்ன் அம்மா அதே உடையோடு மலர்கள் சூழ ஒரு கண்ணாடிப் பெட்டியில் படுத்திருந்தார்.. மரணச்சுவை அறியாத வயது. ஏதோ மேட்டர்ன் அம்மா தூங்குகிறார்கள் எனக் கருதினேன். பிறகு மாலையில் தான் யாரோ சொன்னார்கள் மேட்டர்ன் அம்மா இனி வர மாட்டார்கள் என.

நீண்ட காலம் அவரது விரல்கள் புரட்டிய வண்ணம் இருந்த அந்த பைபிள் தனியே அதே மேசையில்.. தனிமை ராகம் இசைத்தவாறு உறைந்திருந்தது. ஆம்… கடவுளே வாசித்த பைபிள் அல்லவா அது.. ??

நினைத்தாலே ஊறும்
இந்த கனிவை.. இன்றளவும் நெகிழ்வுடன் என் விழிகளில் சுரக்கும் கண்ணீரை… அளிக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடிந்திருக்கிறது.

இன்றளவும் பெண்களே கண்ணீரை அளிக்கிறார்கள். அவர்களே ஈரம் கனக்கும் விழிகளை துடைத்து ஆற்றுப்படுத்தும் விரல்களாக இருக்கிறார்கள்.

என்னை நேசித்த, நேசிக்கிற, உருவாக்கிய, உருவாக்குகிற..

என் வாழ்வின் சகல விதமாகவும் நிறைந்திருக்கிற.. அவர்களுக்கு..

உழைப்பால்.. காதலால்..தாய்மையால்..
இன்னும் பிற பலவற்றால்..இந்த உலகை இன்னமும் வாழ தகுதியாக்க போராடும்…அவர்களுக்கு..

இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.

நிழலற்ற கோபுரம்

 

 

அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..

விழி வழியே
அளந்து விட
விண்ணை
உரசும்
அதன் உயரம்
அனுமதித்ததில்லை..

மேனி முழுக்க
சிற்ப எழில்
பூசி நிற்கும்
திமிர்
பல உளிகளின்
வலி தாங்கி
உருவான வசீகரம்.

நிலாவை உடலில்
போர்த்தி
சுடர்விட்ட ஒரு
இரவில் தான்..
அந்த கோபுரத்தை
கண்டவர்கள்..
அது வெறும்
கற்களால் ஆனது
அல்ல..
கண்கள் முழுக்க
சுமந்த கனவின்
கனல் என
கண்டார்கள்..

வானெங்கும்
சிறகு விரித்து
இறகு கவிதை
எழுதும் பறவை
கவிஞர்களுக்கு
அந்த கோபுரம் தான்
இராஜ மாளிகை..

கால வீதியில்
கணக்கில் ஒன்றாய்
சட்டென
கடந்துப் போக
அந்த கோபுரம்
ஒற்றையடிப்பாதை
அல்ல..
பூரித்து நிற்கும் கடல்.

குப்பைகள்
காற்றில் மிதந்து
கலசத்தை உரசிய
போதும்..
ஆழ்ந்திருக்கும்
அதன் மெளனம்
சொற்கள் அற்று அல்ல..
உரசுபவை வெறும்
குப்பைகள் எனக் கற்று..

வார்த்தைகளை வார்த்து..
வாக்கியங்களை கோர்த்து..
இழி சொற்சங்கிலிகளால்..
அந்த கோபுரத்தை
சரித்து விடலாம் என
நினைப்பவர்களுக்கு..

தங்கப் பக்கங்களில்
எழுதப்படும் ஒரு
யுகத்தின் வரலாறு
கம்பீரமாக அறிவித்துக்
கொண்டே இருக்கிறது..

அந்த கோபுரம்
அவ்வளவு
எளிமையானதல்ல..

காதலின் பெருங்குளம்..

 

 

 

27867625_396526987438842_5551065892319946309_n

https://youtu.be/rMAOPsp5EB0

நினைவுகள்
பாசியாய்
படர்ந்திருக்கிற
அந்த விழிகளில்தான்..

தவழும்
கனவலைகளில்
தவிப்போடு
நான் நீந்துகிறேன்..

காற்றின் சிறகுகளோடு
கணப்பொழுதுகளில்
கைக் கோர்த்து
நடம் புரிகிற
அந்த காரிருள்
கூந்தல் இழைகளில்தான்
நான் விழித்திருக்கிறேன்.

அசையா நொடிகளில்
கசிந்துருகி..
இமையோரம் ததும்பி
நதியென பின்
பெருக்கெடும்
கண்ணீர்த் துளிகள்
வழிகிற அந்த
செம்மை கன்னக்
கதுப்புகளில் தான்
நான் உயிர்த்தெழுகிறேன்..

மோகத்திரள்
மழை மேகமாய்
கருக்கிற முடிவிலி
இரவில் ..
நிகழாத
பெளர்ணமிக்காக
காத்திருக்கும்
அடிவானமாய்
சிவந்திருக்கும்
அந்த தேவதையின்
நிலா முகத்தில் தான்
நித்தமும் நான்
குளிர் காய்கிறேன்..

கால மலர்கள்
வாழ்வின் விருட்சத்தில்
இருந்து உதிர்ந்து
இதய வேரில் நிறைந்தாலும்
இன்னமும் வசந்தமாகவே
என் புன்னகையில்
நிறைந்திருக்கிற
அந்த கவிதை
கழுத்தோரம் தான்
நான் இளைப்பாறுகிறேன்..

நாம் வாழ்ந்தது
சம்பவங்களின் சங்கிலித்
தொடர் அதிரும்
வாழ்வின் ஓட்டமல்ல..
இன்னமும் நீளும்
மாபெரும் காப்பியத்தின்
பொன்னெழுத்து பக்கங்கள்
என மயக்க மொழியில்
வெளிவந்த அந்த
வார்த்தை
தடுமாற்றங்களில் தான்..
என் மிச்ச வாழ்விற்கான
உயிர் எச்சத்தை நான்
உருவாக்குகிறேன்..

இன்னுமொரு இரவு..
மற்றுமொரு மதியம்..
பிறிதொரு மாலை..
என அடுக்கடுக்காய்
நினைத்துப் பார்த்து
சிலிர்க்கும் அந்த
நிலாக்கால
நேசங்களில் தான்
நான் பூத்துக் கொண்டே
இருக்கிறேன்..

யாருமற்ற அந்தர வெளியில்
தனித்து பறக்கும்
பெருங் கழுகொன்றின்
தனிமை போல..

நானும்..
என் காதலும்
தனித்திருக்கிறோம்…

பின்னிரவு குளிரில்
உறைந்திருக்கும்
ஆழ் கடலின் சலனமற்ற
அமைதி போல..

காத்திருக்கும்
என் உணர்வுகளின்
ராகத்தை இளையராஜா
பாடலாய் வாசித்துக் காட்ட..

என் நரம்புகளால்
இறுக்கி கட்டப்பட்ட
ஒரு கிடார் இருக்கிறது..

வாசித்துக் கொண்டே
இரு..

உயிரோடு நானும்
இருக்கிறேன்..

……..

இவ்வாறாக நீளும்
இந்த கவிதை ஒரு போதும்
முடிவதில்லை தான்.

அது போலத்தான் எனதன்பும்..

……..

தினங்களில் குறுக்கிக்
கொள்ள..
என் காதல்
இன்பியல் நிகழ்வல்ல..

மாறாய் பிரிவின்
இரத்தம் கசியும்
இசைத்தட்டு..

வாழ்வின் நிகழ்தகவு
முள்ளாய் கீறினாலும்..

மகத்தான
வாழ்வொன்றின்
ஆன்ம ராகத்தை
பாடியே
தீரும்..

மீண்டும்..

கேட்கிறாயா சகி..?

நேசிப்பின் நதிக்கரை..

27657324_394780410946833_983619852173550470_n

வருஷம் 16 திரைப்படத்தில்..முதல் காட்சி. கார்த்திக் சிறைக்கு சென்று 16 வருடங்கள் கழித்து திரும்பி வருவார். அந்த 16 வருடத்தில்..அவர் குடும்பத்தில் இருந்த பலரும் இறந்து படமாக உறைந்து இருப்பார்கள். காலச் சக்கரத்தின் இரக்கமற்ற வேகத்தில் கூழாங்கற்களாய் மானுட வாழ்வு சிக்கி மண்ணோடு மண்ணாய் மக்குகின்ற உண்மையை தான்..அந்த செல்லூயிட் காவியமும் விவரிக்க முயலும். அப்படி தான் என் குடும்பமும் சிறுக சிறுக வருஷம் 16 காட்சியை பிரதிபலிக்கிறதோ என்கிற துயர் மிக்க பிரமையோடு இந்த தனிமை இரவு நகர்கிறது.

எங்களில் ஒருவனாய் பிறந்து வாழ்ந்து வந்த என் அண்ணன்களில் ஒருவனான அறிவும் இந்நொடியில் வெறும் சாம்பலாய் இந்நேரம் மிஞ்சியிருப்பான். எங்கள் தலைமுறையின் முதல் மரணம் இது. எங்கள் மீதும் மரணத்தின் நிழல் படிய தொடங்கி விட்டது என்பதைதான் அறிவு நினைவூட்டுகிறான். மரணத்தின் ருசி என்ன என்பதை புரியத் தொடங்கி இருப்பதை அறிவின் மரணம் மெளனமாக அறிவிக்கிறது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நாங்கள் இறுகிப் பிணைக்கப்பட்ட சங்கிலிகளோடு கொண்ட பால்யத்தைக் கொண்டிருந்தோம். மறைந்த எம் ஆத்தா (தந்தையின் தாய்) அந்த அரூவ சங்கிலியின் அறுபடாத கண்ணியாக திகழ்ந்தார். எம் தந்தையர் பாகுபடற்ற பேரன் பின் பெருமழையில் எங்களை நனைத்த வண்ணம் இருந்தனர். எனக்கெல்லாம் என் தந்தை யாரென்று பிரத்யோக அறிந்துக்கொள்ளவே பல வருடங்கள் ஆனது நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் சுயநலமும்..‌பொறாமையும் உடை என அணிந்திருக்கும் இவ்வுலகு எங்களையும் நோயென பாதிக்க தொடங்கிய காலத்தில் ..என் ஆத்தா இறந்து போனார். தனித்தனியாக அறுத்தெறியப்பட்ட சரமாய் கால ஓட்டத்தில் நாங்கள் தனியரானோம். இருந்தும் எங்களுக்குள் சுரந்த வண்ணம் இருந்த அன்பின் கதகதப்பினை மறக்க முடியாமல் தவித்தோம். அவரவருக்கென தனித்த வாழ்வு,குடும்பம்..அதை சார்ந்த நலன்கள் என ஓட தொடங்கும் போது சுயநலச் சாத்தானின் கைகளுக்குள்ளாக நாங்களாகவே சிக்குண்டோம்.ஒட்டுமொத்த குடும்பத்தின் நலன்.. மகிழ்ச்சி என்பதை மறந்து தனி வாழ்விற்கான விழுமியங்களை தேட தொடங்கிய போது கசப்பின் சாயை எம்முள்ளும் படியத் தொடங்கியது.

அது ஒருவகையான விசித்திர விளையாட்டு. தோற்போம் என்று தெரிந்தே விளையாடும் அந்த பகடை ஆட்டத்தில் பலி கொடுக்க அவரவருக்கென அடுத்தவரின் கனவு தேவைப்பட்டது. நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து நான் வாழ வேண்டும் என நினைக்கத் தொடங்கும் நொடியில் அவரவருக்கென நியாயங்களும்..தர்க்கங்களும் உருவாக்கப்பட்டன. வேட்டைக் காடென எம் வாழ்வை நாங்களே மாற்றிக்கொண்ட பொல்லாங்கை எதனாலும் அடக்க முடியவில்லை.

அறிவு உழைத்தான்‌. எம் குடும்பத்தை நிமிர்த்த கனவு கண்டான். வீடு கட்டினான்.கடையை உருவாக்கினான். பிறகு அவனே தனித்துப் போனான். வேக வேகமாய் பிரிந்துப் போனான். நாங்களும் பிரிந்தோம். வேகவேகமாக ஏதேதோ தொழில் நடத்தி போராடினான். விரைவாக வாழ்வினை வாழ விரும்பிய அறிவின் வாழ்வும் எதிர் பாராமல் விரைவாகவே முடிந்தது. இன்று பிணமாய் படுத்திருந்த அறிவு புன்னகையை சதா சுமக்கும் மனதையும்..முகத்தினையும் கொண்ட வசீகரன். விளையாட்டு வீரன். ஆனாலும் ..அவனுக்கென அவனே உருவாக்கிக்கொண்ட உலகில் அந்த வசீகரத்தை தொலைத்து மெளனப் போர்வையில் புதைந்தான். ஊரெல்லாம் அயலாரை ஏற்றி பாதுகாப்பாக சுற்றி வந்த அறிவு உள்ளூரில் இரு சக்கர வாகனம் மோதி சாதாரணமாக இறந்தது எதிர்பாரன்மையையே தன் இயல்பாக கொண்டிருக்கும் மரணத்தின் குணாதிசயம் என்றாலும்.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த வாழ்வும்..உலகமும் நமக்கு நிரந்தரம் எனக் கருதி நாம் போடுகிற ஆட்டம் நினைக்காத தருணமொன்றில் முடிந்து விடுகிறது. முடியும் போது இன்னமும் அனைவரையும் நேசித்து,விட்டுக் கொடுத்து, மன்னித்து,மன்னிக்கப்பட்டு வாழ்ந்திருக்கலாமோ என நினைக்க தோணுகிறது.இந்த காட்சிப் பிழை வாழ்விற்குள் எந்த தைரியத்தில் போட்டி,பொறாமை கொண்டு அலைகிறோம்..??

சிந்திய பனித்துளி சூரிய சுடர் பட்டு சில நொடிகளில் ஆவியாவது போல சட்டென முடியும் வாழ்விற்காக நாம் எவற்றை எல்லாம் இழக்கிறோம் என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது . இருக்கும் காலங்களில் நேசித்து ..நேசிக்கப்பட்டு வாழும் வாழ்வினை ஏன் நாங்கள் தொலைத்தோம்…??

அப்படிதான் இன்று அறிவையும் இழந்து விட்டு .. நாங்கள் நிற்கிறோம்‌ . இப்போதுதான் வாத்தியார் அப்பா வீட்டு மாடியில்..நாங்கள் எல்லோரும் விளையாடியது போல நினைவு. அதற்குள் முடிந்து விட்டது.

வெறுப்பும்.. விரோதமும் ‌..வன்மமும் இல்லாத மனித வாழ்வொன்று சாத்தியமில்லை தான்..

ஆனால்..

அனைவரையும் மன்னித்து.. அனைவராலும் மன்னிக்கப்பட்ட ஒரு பெரு வாழ்வினை வாழ வேண்டும்.

இந்நொடியில் நான் மீண்டும் எனக்குள்ளாக சொல்லிக் கொள்வது இதை தான்.. நேசிப்பின் பெரும் சுழி என்னுள் உருவாகட்டும். நேசிப்பின் நதிக்கரையில் காலார எனது ஆன்மா உலவட்டும்.
போட்டி..பொறாமை..வன்மம் தொலைத்து இன்னொரு வாழ்வொன்று இங்கேயே எங்களுக்குள் முளைக்கட்டும்.

அறிவு..

நீ கிளம்பி விட்டாய் ஒரு தொலைதூர பயணத்திற்கு..வழக்கமான வேகத்துடன்.

போய் வா அறிவு.

நினைவலைகள் ததும்பும் நதி அருகில் கலங்கி நிற்கும் எங்களுக்கு சுவாசமாய் இருந்து ஆற்றுப்படுத்து.

 

( எனது பெரிய தந்தை மறைந்த ச.பாலகுரு அவர்களின் மகன். பா. அறிவழகன். பெருமாள் வடக்கு வீதி ,பந்தநல்லூர் ,மறைவு 07.02.2015)

அந்தந்த நேரத்து நியாயங்கள்..

 

26733705_386350815123126_611877709230030666_n (1)

 
அந்த அழகான
பலிபீடம்
அந்த ஒற்றை
வெள்ளாட்டின்
முன் கருணை
விழிகளோடு
வீற்றிருந்தது..

குளிர்மையும்
வழுவழுப்பும்
நிரம்பிய
அதன் வளைவுகளில்
வெள்ளாடு லயித்திருந்தது..

அழகானது இது..

தலை பொருந்துவது
போன்ற வளைவு..

சற்றே சாயலாம்.
கொஞ்சம் உறங்கலாம்..

வெள்ளாட்டின் விழிகளில்
வண்ணக்கனவுகள்
மிளிர்ந்தன..

கத்தியின் கனம்
தெரிவு செய்ய
வெள்ளாட்டின் கழுத்து
மிருதுவான வருடல்களால்
ஆராயப்பட்டது..

தனித்தே பிறந்த,திரிந்த
வெள்ளாடு தன் மீது
சொரியும் வருடல்களால்
கசிந்தது..

எவ்வளவு கதகதப்பான
கரங்கள்..
ஆதரவாய்..ஆதுரமாய்..

நீ தனியன் இல்லை
என்பதை உணர்த்துவது
போல..

கலங்கி அழத் தொடங்கியது..
வெள்ளாடு.

அனலேறிய அப்பகற்
பொழுதில் தன் மீது
தெளிக்கப்பட்ட
குளிர் நீரை அருவியென
கருதி சிலிர்த்த வெள்ளாட்டின்
கழுத்தில் மாலையும்
இடப்பட்டது…

எவ்வளவு மரியாதை..
வெறும் ஆடு என
கருதாமல்..
செய்யப்பட்ட
பெருமை அருமை.

ஆகா.. இவ்வுலகம்
அன்பின் மடியாய்..
கருணையின்
கருவறையாய்..

சே..இந்த அன்பிற்காக
சாகவும் செய்யலாம்..

என வெள்ளாடு
கண்கலங்கி
உருகிய அந்நொடியில்..தான்

தலை தனித்து விழுந்தது.

 

ஞாநி..சில நினைவுகள்.

708x500xgnani.jpg.pagespeed.ic.QAlhGbMQGU

வாழ்வின் சூட்சமக் கோடுகள் விசித்திரமானவை. யாராலும் வகைப்படுத்த இயலாத மர்மச் சுழிகளால் வாழ்வெனும் நதி நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறது. எவரோடு எவர் பிணைக்கப்படுவர் …பிரிக்கப்படுவர் என்று தெரியாத வாழ்வின் பொல்லாத பகடை ஆட்டத்தில் தான் நானும்,அவரும் அறிமுகமானோம். 2006-07 காலக்கட்டம். அப்போது அவர் புகழ்ப்பெற்ற எழுத்தாளர். அவரது நவீன நாடகங்கள் மூலமாகவும்,எழுத்துக்கள் மூலமாகவும் தமிழுலகம் தெரிந்த ஆளுமையாக உருவான அக்காலக் கட்டத்தில் தான் அவர் ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் என்கிற தொடரை எழுதத் தொடங்கினார். பரவலான வாசகர் வரவேற்பை பெற்ற அத்தொடரில் ஒருமுறை பெரியார்-அண்ணா குறித்து ஒப்பீடு செய்து பெரியார் அரசியலில் தோற்றார்,அண்ணா வென்றார் என ஒப்பீடு செய்து எழுதினார்.

இணைய உலகம் தமிழகத்தில் அறிமுகமற்ற காலக்கட்டம். அண்ணன் அறிவுமதி என்கிற பல்கலைகழகத்தின் பயிற்சி மாணவனாக பயின்றுக் கொண்டிருந்த நான் தம்பி இயக்குனர் முரளி மனோகர் உதவியோடு ஞாநியின் எழுத்துக்களில் தெரியும் ஆரிய மனம் என்ற தலைப்பில் பெரியாரை இழிவுப்படுத்தியதாக குற்றம் சாட்டி ஞாநியை நேரடியாக தாக்கி ஒரு விவாதக்கட்டுரையை எழுதினேன். அதை ஞாநியின் ஆதரவாளர்கள் உருவாக்கி வைத்திருந்த ஞாநி தி ரைட்டர் என்கிற ஆர்குட் பக்கத்தில் வெளியிட்டேன். நாலாப்புறமும் ஞாநியின் ஆதரவாளர்கள் எனக்கு எதிராக பெரும் விவாதத்தை தொடங்கினர். சமூக வலைதளங்களில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் என்கிற முறையில் முதன்முறையாக விரிவாக நடந்த விவாதம் அது. என்னோடு கோவை Yuvan PrabhaKaran , விடாது கருப்பு,சசி, Packiarajan Sethuramalingam ,Don Ashok R ,சீறிதர், Murali Manohar Vishnupuram Saravanan ஒட்டக்கூத்தன் என பலர் கொண்ட பெரும் படை இணைந்தது. பெரியாரியம் குறித்த நீண்ட அந்த விவாதத்தில் திராவிடம்,ஆரியம் ,ஈழம் ,அம்பேத்கரியம் என பல்வேறு அரசியல் கருத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் எழுத்தாளர் ஞாநியே நேரடியாக இவ்விவாதங்களில் பங்கேற்றார்.

மிகப்பெரிய ஆரிய பார்ப்பனீய இந்துத்துவ எதிர்ப்புணர்ச்சியோடு நாங்கள் அந்த விவாதங்களில் பங்கேற்றோம். இந்த விவாதம் நடந்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஞாநி அதே தொடரில்.. கலைஞர்.மு.கருணாநிதிக்கு வயதாகி விட்டது. அவர் அரசியலிருந்து ஓய்வு பெற வேண்டும் என எழுதப் போக… மேலும் நாங்கள் உக்கிரமானோம். ஈழப்போர் உக்கிரமாக நடந்துக்கொண்டு இருக்கிறது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு செயலாளர் அண்ணன் தமிழ்ச்செல்வன் சிங்களனின் குண்டு வீச்சினால் கொல்லப்படுகிறார். அப்போதைய முதல்வர் கருணாநிதி தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி இரங்கல் கவிதை ஒன்றை வெளியிட்டார். நாங்கள் கலைஞரை உச்சியில் வைத்து ஞாநியை தாக்கி எழுதி விவாதித்து கொண்டிருந்தோம். முதன்முறையாக எங்களது விவாதம் அண்ணன் அறிவுமதி அவர்களால் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அது அப்போதைய முதல்வர் கருணாநிதி யின் பார்வைக்கும் சென்று விட..அவரே என்னை அழைத்து நமது பிள்ளைகள் ஆரிய ஆதிக்கத்தை உடைத்து இணைய தளத்திலும் நுழைந்து விட்டதாக வாழ்த்தினார். பிறகு தம்பி என்னாரெஸ் பெரியார் மூலமாக திக தலைவர் வீரமணி அவர்கள் பெரியார் திடலுக்கு எம்மை அழைத்து வாழ்த்த..பெரும் உற்சாகமானோம். அய்யா சுப.வீ ,அண்ணன் திருமா,அண்ணன் சீமான் ,கொளத்தூர் மணி, எழுத்தாளர் பாமரன் போன்றோர் இந்த விவாதத்தையும், எங்களையும் பொது வெளிக்கு அறிமுகப்படுத்தினர். அதே உற்சாகத்தில் நாங்கள் ஆர்குட்டில் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்கிற குழுமத்தை உருவாக்கினோம்.இணைய வெளி சார்ந்து முதன் முறையாக ஒரு கலந்தாய்வுக்கூட்டத்தை சென்னை கோல்டன் பீச்சில் நடத்தினோம். அக்கலந்துரையாடலில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,அண்ணன் அறிவுமதி,பாமரன்,அண்ணன் சீமான்,பேரா.சுப.வீ போன்ற ஆளுமைகள் கலந்துக் கொண்டனர்.

இவ்வளவிற்கும் காரணமான ஞாநி எங்களோடு விவாதித்துக் கொண்டே தான் சொல்ல வந்தவற்றை அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தார். இறுதியில் நாங்களும் சமரசமாகாமல் தொடரவே..ஒரு கட்டத்தில் இனி எங்களோடு விவாதிக்கப் போவதில்லை எனவும்,சமூக வலைதளங்களில் இனி வரப்போவதில்லை என அறிவித்து விட்டு அமைதியானார். அய்யா சுப.வீ அவர்களை தாக்கி குங்குமம் இதழில் அவர் எழுதிய பத்திக்கும் நான் கடும் எதிர்வினை ஆற்றி இருந்த போதிலும்..ஒரு திருமணத்தில் எதிர்பாராத விதமாக சந்தித்த போது வாங்க..செந்தில் என அழைத்து என்னை இறுக அணைத்துக் கொண்டார்.
மாற்றுக் கருத்து கொண்டு இருந்ததாலேயே எதிரியாக நினைக்க தேவை இல்லை என அவர் கொண்டிருந்த புரிதல் ….அவர் மீதான எம் மதிப்பை அதிகரிக்கச் செய்தது.
திமுக தலைமை குறித்து அவர் வைத்திருந்த விமர்சனங்கள் காலப்போக்கில் உண்மையானப் பொழுதும்,அவற்றை நானே விமர்சித்து எழுதிய போதும்.. அவர் நான் அன்றே சொன்னேன் இல்லையா என்பது போல் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார்.
ஒரு முறை அவரை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து இது குறித்து பேசிக் கொண்டு இருந்த போது..நாங்கள் அந்த விவாதத்தில் தோற்று விட்டோம் என இன்று உணர்கிறேன் என்று தணிந்தக்குரலில் வருத்தமாக சொன்னேன்.
இல்லை..இல்லை.. நீங்கள் தோற்கவில்லை.தீவிரமாக இயங்கிய உங்களைப் போன்றோரை தனது செயல்பாடுகளால்..இழந்த கருணாநிதி தான் தோற்றார் என்றார் அவர். மேலும்…அது போன்ற கற்றுக்கொள்கிற…நாகரீக புரிதலுடன் கூடிய விவாதம் அதற்கு பிறகு சமூக வலைதளங்களில் எங்கும் நடக்க வில்லை எனவும் அதற்கான இடமே இல்லை எனவும் வருந்தினார்.
அவரை எதிர்த்து எழுதிய நாங்கள்..அதன் மூலமாக பொது வெளிக்கு அறிமுகமாகி வெவ்வேறு அமைப்புகளில் மதிப்பார்ந்த இடங்களில் இன்று இருக்கிறோம்.

எதிர்க்கவும்..எதிர்க்கப்படவும் கூட ஞாநி போன்ற தகுதி வாய்ந்த எதிரி தேவையாய் இருக்கிறது. வசவுகளும்,தனி மனித தாக்குதல்களும் நிரம்பிய இன்றைய சமூக வலைதளங்களில் ஞாநி போன்றோருக்கு இடமில்லை தான்.

நமக்கும் இடமில்லை என்பதுதான் ஞாநி சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்ற செய்தி.

போய் வாருங்கள் ஞாநி. நான் எழுதுகிற எழுத்துக்களில் எல்லாம்..நான் விரும்பியோ..விரும்பாமலோ நீங்கள் நினைவுக்கூரப்படுவீர்கள்.

அவ்வகையில்..நீங்கள் தான் அன்று வென்றீர்கள்.

மணி செந்தில்
15.01.2018.

என் வானின் பகலவன்..

26167072_382199455538262_6309952498669083654_n

 

 

அன்புள்ள பகல்..

அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட..

பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து ..அடங்கும் அவ்விழிகள் தான் எவ்வளவு கனிவு மிக்கவை.. ஒவ்வொரு இரவிலும்.. நடுநிசித் தாண்டி நான் படுக்க நுழைகையில்..இயல்பாய் என் கழுத்தை சுற்றி அணைக்கும் உன் பிஞ்சுக் கைகள் தான் எவ்வளவு உயிர்ப்பானவை..

உன்னளவிற்கு எனக்கு நேர்மை செய்வதில் நீ சிறப்பானவன் பகல். இவ்வாழ்வினுடாக நானே அறைந்துக் கொண்ட சிலுவைப் பொழுதுகளில் என்னை தூரத்தில் இருந்து அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாய்.ஒரு கம்பீரமான..உன்னை.. எனக்கு தெரியும் என்பதான அமைதி அது. நீ என்னை கவனிக்கிறாய் என நான் உணர்கிற நொடியில் ஏதோ ஒரு போலி புன்னகையை என் முகத்தில் அணிந்துக்கொண்டு உன்னருகே வரும் போது …எந்த சலனமும் காட்டாமல் என் தோளில் என் ஆறுதலுக்காக சாயும் உனது அன்பினை நினைத்து நான் இந்நொடியில் கலங்குகிறேன். நான் பல சமயங்களில் உன்னை மறந்து..திரிந்து இருக்கிறேன். ஆனால் உறக்கத்தில் கூட அப்பா என்றுதான் நீ முனகுகிறாய் என அம்மா சொல்கிறாள். அதுதான் எனக்கு வலிக்கிறது.

வானத்தைப் போல நீள அகலம் விவரிக்க முடியாத பேரன்புத் தோட்டத்தினை உன் இயல்பிலேயே நீ கொண்டிருக்கிறாய். அதிலிருந்து எப்போதும் பனி படர்ந்த செந்நிற ரோஜாக்களை மட்டுமே நீ பரிசளிப்பாய்..ஆனால் நானோ பாலைவனப் பயணி. வறட்சித் தாகத்தை தவிர என்னிடத்தில் உன்னோடு பகிர என்னதான் உண்டு..??

நீ என்னைப் போல இருக்கிறாய் என அனைவரும் சொல்வது கண்டு நான் அஞ்சுகிறேன் பகல். வேண்டாம். நீ நீயாக இரு. மகிழ்ச்சியின் அலையோடு பொங்கிப்பூரிக்கின்ற பெரு நதியென திகழட்டும் உனது வாழ்வு. விடியலில் தொலைவதற்காக இரவில் மலரும் கனவினை நினைவெனக் கொள்ளும் கானல் காட்சியாளனாய் நீ இல்லாது..அந்தந்த தருணங்களில்.. வாழ் மகனே..

நேர்மையாக இரு. ஏமாளியாக இராதே.. அன்பினை மதி. ஆனால் அன்பினில் தொலையாதே. இரக்கம் கொள். உன்னை விற்று சித்திரம் வாங்காதே. நிறைய படி. பயன்படுத்து. நேசி. ஆனால் உன்னை இழக்காதே. இறுதி வரைக்கும் சரணடையாமல் இரு. தவறான நிலத்தில் விதைக்காதே.தரிசாகி விடும். அனைத்திற்கும் மேலாக உனக்காக வாழ்.

உனக்கு பகலவன் என பெயர் வைத்தவனுக்கு என்றென்றும் மகனாய் இரு.

மொத்தத்தில் நீ என்னைப் போல் இல்லாமல்.. உனக்கென விண்மீன்கள் சுடர் விடும் பாதையை உருவாக்கு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் முடிவிலி முத்தங்களுடன்…

அப்பா
சனவரி 6 – 2018.

என் இளமையின் பொன்னிறத் துகள்..

 

 

26195657_381630508928490_7593472573008726768_n

 

அவன்
என் இளமையின்
பொன்னிறத் துகள்.
என் விழிகளில் பிணைந்திருக்கிற..
வாஞ்சைமிகு வசீகரம்.
என் கவிதை ஏடுகளில்
நிறைந்திருக்கிற எனது அகம்..
பல சமயங்களில்
அவனே நானாக..நானே அவனாக
வாழ்ந்துக் கொண்டிருக்கிற
விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள்
நாங்கள் இருவரும்..

இதில் யார் குரு..யார் சீடன்..??
என்ற குழப்பமில்லை எமக்கு.
தானாகி போனதொரு வாழ்வில்
அன்பள்ள சிவக்கிறது கிழக்கு.

தோள் சேர்த்து.. கை பிணைத்து..
காலம் ஒன்றை கண் அசைவுகளால்..
வார்த்தை வளைவுகளால்.. கட்டி எழுப்ப
வாடா..வாடா..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Dhuruvan Selvamani Somu

நித்திய நிலவொன்றின் சத்திய வார்த்தைகள்..

26063421_379710325787175_827668468199724837_o

 

சொற்களின் ஊடே
ஒளிந்திருக்கும்
முட்கள் நட்சத்திரங்களைப்
போல மின்னி..
பேரன்பின் கதிர்களை
மறைக்கின்றனவா
என்றெல்லாம் நான்
சிந்திப்பதில்லை.

இன்னும் கூட
வார்த்தைப் பின்னல்களால்
உருவேறிய அந்த சாட்டை
ஆன்ம உதிரத்தின்
சுவை பருகுகிறது என்று
நான் கலங்குவதில்லை..

ஏனெனில்..
கொடுங்காயத்தின் வலி
மறைத்துக் கூட
என் உணர்வுகளின் நிலா
வெளிச்சம்..
உன் இருட்பாதையில்
உன் துணையாய்
நகரும் என்பதை நான்
அறிவேன்..

உரையாடல்களற்ற
பொழுதொன்று
கால நதியில் சருகென
மிதக்கும் அந்த நொடியில்..
உன் விழிகள் என்னைத்
தேடும்.

நான் தூரத்து புல்லாங்குழல்
இசையாய் கரைந்திருப்பேன்..

அக்காலைப் பொழுதில்
உன் தேநீர் கோப்பையில்..
உதிரும் உன் ஒரு துளி
கண்ணீரைப் பற்றிதான்
கவலை எனக்கு.

உன் குளிர் கால
போர்வையினுள் பரவும்
வெப்பமாய்.. என் கனவுகளை
அன்று நீ உணர்வாய்..

அதற்கு முன் புல்லின்
நுனியில் பூத்திருக்கும்
எனதன்பின்
பனித்துளி யாரும்
அறியாமல்..

அனலேறிய இவ்வாழ்வின்
சூடு பொறுக்காமல் ஆவியான
கதை..

உனது மிச்ச வாழ்வின்
தேடலாய் இருக்கக்கூடும்
என்கிற அச்சத்தில் தான்

உனது விடியலின்
வெளிச்சக் கீற்றாய்..
நான் எரிந்துக் கொண்டே
இருக்கிறேன்..

…..

அதை நீ
தீப்பந்தம் என்கிறாய்..
நான் மெழுகுவர்த்தி என்கிறேன்..

இந்த புரிதலின்
வேறுபாட்டினில் தான்..

இந்த முடிவிலிக் கவிதை‌‌..
சில பூக்களோடும்..
சில புன்னகைகளோடும்..
ரகசிய கண்ணீர் துளிகள்
பலவற்றோடும்..

தொடர்ந்துக் கொண்டே
இருக்கிறது.

……….

Page 31 of 57

Powered by WordPress & Theme by Anders Norén