Author: மணி செந்தில் Page 34 of 57
ரணத்துக்
கனத்து
நிகழ்கிற
என்
நொடிகளை
எல்லாம்.
ஒரு.
இளையராஜா
பாடல் போல
நிலா மிதக்கும்
கனாக் காலமாக
மாற்ற அவனால்
முடிந்திருக்கிறது..
ஏதோ ஒரு திசையில்..
ஒரு அலைபேசி
உரையாடலோடு
சிரித்தவாறே
அவன்
நகர்கையில்…
எதிர்பாராமல்
சந்தித்து விட்ட
விழிகளோடு
விழிகளாலேயே
ஒரு புன்னகை
கைக்குலுக்கல்
மூலமாகவே
அன்பை நகர்த்தி
விடுவதில்
அவன் அசரா
அசுரன்…
எனக்கென
அவன்
தனித்து சேமித்து
இருக்கும்
ப்ரியங்களை
அவன் சொற்களால்
காட்டியதே இல்லை..
சில சமயங்களில்
சிக்கனமான கரம்
பற்றுதலில்..
தல என்று அழைக்கும்
குழைவில் என்றெல்லாம்
அடுக்கிக் கொண்டே
போனாலும்..
அதுவல்ல எனக்கான
அவன்
என அவனுக்கும் ,எனக்கும்
தெரியும்.
விவரிக்க முடியா
பேரன்பின் அக்கறையோடு
என்னை இழுத்துக்
கொண்டே திரிகிறான்..
கடும் சுமையாய்
நான் கனத்தப் பொழுதுகளில்
கூட..
அமைதியான காட்டில்
யாரும் அறியா பெய்யும்
மழை போல..
என்னை கரைத்து இருக்கிறான்..
கரை சேர்த்து இருக்கிறான்..
அவனுக்கென
என்னிடம் சொல்ல
இதற்கும் மேலும்..
வாஞ்சை சொற்கள்
நிரம்பிய
உணர்ச்சிக்குடங்கள்
உண்டு தான்..
உடைத்துக் கொண்டே
போகலாம் தான்..
ஆனால் வாழ்க்கை இருக்கிறதே…
அவனோடு வாழ..
என் தங்கை மீராவிற்கு..
என் மருமகள் அகநகைக்கு..
எனக்கும் …
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..
அமைதியாய் நகர்ந்துக் கொண்டிருந்த எங்கள் மகிழுந்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியவில்லை. அந்த நிலவியல் வெப்பமும், முந்திரிக்காடுகளும் எங்களுக்குள் ஏதோ பல செய்திகளை சொல்லி வந்தன.
சுடு வெயிலில் வெளுப்பேறி இருந்த அந்த நிலவியல் தமிழ் நாட்டுக்கு சற்றே வித்தியாசமானது. முந்திரிக்காடுகள் இரு புறமும் அடர்ந்திருக்க தமிழக வரைபடத்தில் இருந்தே தனித்திருக்கிறது அந்த சிற்றூர். அந்த நிலத்தில் நிலவும் அந்த வெப்பத்தை வெயில் என்றெல்லாம் அர்த்தப்படுத்தி விட முடியாது. ஒரு அடர் மழை போல அந்நிலத்தில் வெயில் அரூவ திரவமாய் ஊற்றிக் கொண்டிருந்தது.
அரியலூர் மாவட்டம். அதிகம் கல்வியறிவு அற்ற எளிய ஒடுக்கப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கிற பகுதி. மழை காணா கரிசல் பூமி போல இது வறண்டுப் போன முந்திரிக் காடு. அரியலூர் மாவட்டம் செந்துறை என்கிற சற்றே பெரிய கிராமத்திற்கு அருகில் தான் குமிழுர் என்கிற அந்த சிற்றூர் ஒரு தனித்தீவிற்கு செல்வது போல தனிச்சாலையாக பிரிந்து தனித்துக் கிடக்கிறது.
அந்த வறண்ட பூமியில் தான் அனிதா பிறந்திருக்கிறாள். ஒடுக்கப்பட்ட குடும்ப பின்புலம். சிறுவயதிலேயே புற்று நோயால் தாயை இழந்த துயரம். வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்தே தீர வேண்டிய பெண்களுக்கே உரித்தான அனைத்து அழுத்தங்கள்.
ஓடு சரிந்த வீடு. கழிவறை கூட இல்லாத ,எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத வறுமை. அங்குதான் பூத்திருக்கிறது அனிதா என்கிற அந்த தேவ மலர்.
என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வறுமையும்,துயரமும் கொடும் கூரையென போர்த்தி இருக்கிற குடும்பச்சூழல்.
பிறந்த பிள்ளைக்கு ஊரில் பெரிய பள்ளியில் அட்மிசன் வாங்க பிறந்தநாள் அன்று முதல் அலைந்து, ப்ளே ஸ்கூலில் சிபாரிசு வாங்கி சேர்த்து, கேட்ட லட்சத்தை லட்சியம் செய்யாமல் செலுத்தி, டை கட்டி, முதுகில் பை மாட்டி ஏசி காரில் சென்று இறக்கி, டாடி மம்மியை மழலையாய் கேட்டு, ரெயின் ரெயின் கோ அவே பாட வைத்து, சிக் பஞ்ச் –ல் சிக்கன் சாப்பிட்டு, பாடத்திற்கு ஒரு டியூசன் என பயிற்றுவித்து நீட்டுக்கென நீட்ட ரூபாய் கட்டுக்களை இப்போதிலிருந்தே அடுக்கி வைக்கிற அடுக்குமாடி குடும்பம் அல்ல அது.
அனிதாவின் வீட்டைப் பார்த்தால் தான் தெரியும் அவளது அருமை.
அதுதான் சமையலறை. அதுதான் படிப்பறை, அது தான் படுக்கை அறை. அந்த எட்டுக்கு எட்டு இடம் தான் எல்லாமும். அனிதாவின் வீடு எங்கே கேட்ட எங்களுக்கு அடையாளம் காட்டிய ஒரு அம்மா சொன்னார். நாங்க அவள டாக்டரம்மா –ன்னு தான் கூப்பிடுவோம்.
அப்படி ஒரு வைராக்கியத்தை வைரமாய் தன் ஆன்மாவில் அழுத்தி பதிந்து வைத்திருந்து இருக்கிறாள் அவள். எந்த புற்றுநோயால் தன் தாயை இழந்தோமோ அந்த புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் ,தன் தாயைப் போல யாரும் சாகக்கூடாது, தன்னைப்போல யாரும் தவிக்கக்கூடாது என்கிற லட்சியம் எளிய வீட்டில் பிறந்த அவளுள் வலிமையாய் எரிந்துக் கொண்டு இருந்தது.
வலி தாங்கினாள். குடும்பத்தை சுமந்தாள். இரவுப் பகல் பாராது படிப்பு. அது ஒரு வகையான தவம் போல… தியானித்து கனவில் சுமந்த லட்சியத்தை மெய்யாக்க மெய் வருத்தி உழைத்தாள். இயற்கை அந்த எளிய பெண்ணிடம் இயல்பாகவே இனியவற்றை சேர்த்திருந்தது. களங்கமற்ற விழிகள், உழைப்பின் உறுதியால் கண்ட நினைவாற்றல், பொறுமையின் மொழி என அறியப்படாத ஊரில் தெரியாமல் பூத்திட்ட தேவதை அவள்.
தேசம் மாறி பிறந்ததால் தேகம் செத்து கிடக்கிறாள்.
சத்தற்ற உடல் என்றாலும் லட்சியத்தில் கொண்ட பற்றுதான் அவளை இன்று அவளை செத்து கிடக்க வைத்தது.
நம்பினாள். உழைப்பை நம்பினாள். உயிர் உருக்கி உழைத்துப் படித்தால் மண் மூடிய அன்னையை போல.. இன்னொருவரை இழக்காமல் காப்பாற்றலாம் என களங்கமற்று நம்பினாள். அவள் உழைத்தது போல கிடைத்தன மதிப்பெண்கள்.
1176/1200 என்பது சாதாரண எண்கள் அல்ல. சரிந்துப் போன கூரையில் இருந்து உறுதிக் கொண்ட உழைப்பால், கண் விழித்து, கனவு கண்டு நினைவாக்க தன்னையே உருக்கிக் அடைந்த ஒரு தனி மனித சரித்திரம்.
இயற்பியலில் 200, கணிதத்தில் 200, உயிரியியலில் 194,வேதியியலில் 199 என சிகரங்களைத் தொட்டு தனது கனவினை நிறைவேறி விட்டதாக பூரித்து நின்றாள்.
இந்திய வரைபடத்தில் வராத, தமிழக நிலவியலில் லென்சு வைத்து தேடினாலும் அகப்படாத சிற்றூரில் பிறந்து ,முந்திரிக்காடுகளில் பாம்பு கடிக்குமோ, பூரான் கடிக்குமோ, இல்லை.. ஏற்கனவே செத்துப் போனாளே நந்தினி போல நாசமாக்கப்பட்டு விடுவோமோ என்றெல்லாம் நடுங்கி, கழிவறைக்கு ஒதுங்க வழியற்று , எதுவுமே அற்று… உழைப்பை மட்டுமே கொண்டு அந்த எளிய பெண் பெற்றதை என்னால் மதிப்பெண்கள் என்றளவில் மட்டும் குறுக்க முடியவில்லை.
பெரும்பாலும் மின்சார வெட்டு, தண்ணீர் பற்றாக்குறை, மழையற்ற,வளமற்ற பூமி என எந்த தடைகளும் லட்சிய உறுதிக் கொண்ட அனிதாவின் விழிகளுக்கு முன்னால் நிற்க முடியவில்லை.
அப்போதுதான் இடி விழுந்தது போல வந்து விழுந்தது நீட் தேர்வு பற்றிய அறிவிப்பு. அதிர்ந்துப் போனது அந்த சின்ன இதயம். அதென்ன நீட், வேற சிபிஎஸ்ஸி பாடமாமே…அதெலிருந்து தான் கேள்வி கேப்பாங்களாம் என்றெல்லாம் தகவல் வர வர.. இடி விழுந்த மல்லிகைச்செடியாய் மனம் துவண்டு போனாள்.
கேள்வித்தாளுக்கும், படித்த படிப்பிற்கும் தொடர்பே இல்லையே ..மதிப்பெண் வரலையே .. என மனம் நொந்து கவலைப்பட்டவளுக்கு வந்தது சாத்தான் ஓதிய வேதமாய் வந்தது நிர்மலா சேதுராமனின் பொய் நாடக அறிவிப்பு. ஓராண்டாவது விலக்கு உண்டு என்று போகிறப் போக்கில் அள்ளி விட்டதில் ஆறுதலாகிப் போனாள் அனிதா. தமிழக அரசும் நாடக காட்சிகளை தொடர நம்பித்தான் இருந்தாள் தங்கை.
ஆனால் பணம் இருப்போரும், மருத்துவ தொழிலை பரம்பரையாக பணத்தை வைத்து விலைக்கு வாங்கியவர்களும் புகழ்பெற்ற காங்கிரசு தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் மூலம் வழக்குப் போட வாடிப் போனாள் . காட்சியில் தான் பாஜகவும்-காங்கிரசும் தான் எதிரி. ஆனால் பாஜக எடுக்கக்கூடிய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக சிதம்பரம் மனைவி நளினி. இங்கே எவனும் எதிரி அல்ல. பணமும் ,அதிகாரமும் இல்லாத நாம் தான் உதிரி என உணர்வதற்குள் உலர்ந்துப் போனாள் அனிதா.
இருந்தும் ஆன்மாவில் ஏதோ புள்ளியில் நம்பிக்கை ஊறிக் கொண்டே இருந்தது.
அத்தோடும் அவள் விட வில்லை. ஓடினாள்..டெல்லி உச்சநீதிமன்றம் வரை. அதிகாரமும், பணமும் பவனி வரும் உச்சநீதிமன்றத்தில் உள்ளங்களை தேடி அலைந்து சோர்ந்தாள் அனிதா .
உச்சநீதிமன்றமும் கை விட.. நாற்புறமும் கதவுகள் அடைக்கப்பட்ட சூழலில் நட்டாற்றில் விடப்பட்ட நலிந்த ரோஜா போல உடைந்தாள் தங்கை.
சோர்ந்து ஊர்த் திரும்பிய அவளை பிவிஎஸ்ஸி சேர சொல்லி அனைவரும் சொல்ல கனவு ரணமாய் சுமக்க பிணமாக மாறத் தொடங்கினாள்.
அதிகாரமும், சட்டமும் கைக் கோர்த்து தன் கழுத்தை நெறித்து கொலை செய்துக் கொண்டிருப்பதை தனது சலனமற்ற விழிகளால் அனுமதிக் கொண்டிருந்தாள் தங்கை.
நொடிக்கு நொடி ஒரு உடை மாற்றும் மோடிக்கு.. இங்கே ஒரு தேசிய இனத்தின் அறிவுப்பெட்டகமாய் உருவாக வேண்டியவள் உயிரை விட தயாராகி வருகிறாள் என தெரிந்திருக்காதுதான்.
கனவு கானலாகிப் போன பின்னர், உயிராய் சுமந்த லட்சியம் அலட்சியம் செய்யப்பட்ட பின்னர் இனி இருந்தும் பிணம் தானே என ரணம் தாங்கி தூக்கில் தொங்கினாள் தங்கை அனிதா..
என்னிடம் ஒரே ஒரு கேள்வி இருக்கிறது…
இதற்கு மேல் அவள் எவ்வளவு தாண்டா மதிப்பெண் வாங்க வேண்டும்…?
நாங்கள் சென்றிருந்த போது அவள் சவப்பெட்டியின் மீது அவள் கனவான ஸ்டெதஸ்கோப் வைக்கப்பட்டிருந்தது. குற்ற உணர்வும், அதிகாரத்தின் மீதான கோபமும் வெடித்து உடைய சென்ற நாங்கள் கதறி அழுதோம்.
யாருக்கும் அங்கே ஆறுதல் சொல்ல ஆளில்லை. ஏனெனில் ஒரு தேசிய இனத்தின் ஆறுதலும், தேறுதலும் தான் அனிதாவாய் அங்கு செத்துக் கிடந்தன.
அங்கே பல முகங்கள் தெரிந்தன. சொந்த தங்கையை இழந்த அண்ணனாய் வெடித்த சிதறிய அண்ணன் சீமானையும், அண்ணன் அமீரையும் எங்களால் யாராலும் தடுக்க முடியவில்லை. இயக்குனர் அண்ணன் கவுதமன் அதை போராட்டக்களமாக்கி அனிதாவின் கனவை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார். வரும் தலைவர்களை ஏற்று அதை ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தார் விசிக தலைவர் அண்ணன் திருமா. தினகரனும் குழப்பங்களுக்கு நடுவே வந்துப்போனார்.
இதற்கு நடுவே சில இளைஞர்கள் தண்ணீர் தொட்டியிலிருந்து கீழே குதிக்கப் போகிறோம் என்றெல்லாம் பீதி கிளப்பிக் கொண்டிருந்தார்கள்.
எதனால் எதை நியாயப்படுத்தப் போகிறோம்..அதுவும் அனிதாவின் மரணத்தை… மத்திய அரசும், அதன் எடுப்பிடி எடப்பாடி அரசும், உள்ளமற்ற நீதிமன்றமும் சேர்ந்து செய்த மாபாதக படுகொலை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்தையும் ரணமாக்கி வைத்திருக்கிறது. இனி எரியும் நெருப்பிற்கு யார் பொறுப்பு… இல்லையேல் இதுவும் கடந்துப் போகும்..இன்னமும் கடந்துப் போகும், கடைசியில் கடந்துப் போய் நாமும் பிணமாய் கிடந்து போவோமா என்றெல்லாம் ஏராளமான கேள்விகள் எங்களுக்குள்.
அந்நேரத்தில் இதில் மாபெரும் கொடுமை என்னவென்றால்.. கல்வி உரிமைக்காக களப்பலியான அனிதாவை ஒரு சாதியாக காட்ட முயல்வதும், அவளை சாதிப்பார்த்து சாவுக்கு கூட வராமல் ஒதுக்கி வைத்து அரசியல் செய்வதும் மனதை அறுக்கின்றன.
அனிதா எந்த சாதியும் அல்ல. அவள் அனைவராலும் வழக்கம் போல நம்ப வைக்கப்பட்டு வாக்குறுதிகளால் வஞ்சகம் செய்யப்பட்டு, கழுத்தறுக்கப்பட்ட முத்துக்குமார், செங்கொடி,விக்னேசு என்கிற ஏமாளித்தமிழர் வரிசையில் இன்னொரு தமிழச்சி. அவ்வளவே.
உலகையே பதற வைக்கும் ஒரு மரணம். பக்கத்து தெருவில் உரக்கப் பாட்டு போட்டு ஏதோ ஒரு விழா. வெறுத்துப் போனது மனம். சாதியாய் கிடந்து சாதியாய் அழிவானே தவிர ஒரு போதும் இனமாக திரள மாட்ட மாட்டானா தமிழன் என்கிற கேள்வி அனிதா போலவே தூக்கில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
இறுதியாக.. பல களங்கள் கண்ட தளபதிகள்(?), தளகர்த்தர்கள்(?), வாழும் அண்ணாக்கள், என்றெல்லாம் கரை வேட்டி எல்லாம் மொடமொட வேட்டிச்சட்டையில் ..சட்டைப்பையில் கட்சிப்படம் வைத்து காட்சி காட்டும் நாடகக்காரர்கள் வர மறுக்கிற சோக முகத்தோடு வலம் வர தொடங்க ..களை கட்டியது அந்த எளிய அப்பாவி தங்கையின் மரணம்.
நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசு அரசுதானே..அப்போது கூட்டணியில் குதுகலாமாய் கைகோர்த்து நின்றது நீங்கள் தானே.. நீங்களே முன்னால் போகிறீர்களே என எல்லாருடைய மனசாட்சியும் ஊமையாய் கேட்க… அமைதியாய் படுத்துப் ஊர்வலமாய் போகத் தொடங்கினாள் தங்கை.
நீட் தேர்வு ரத்தாகும் வரை தங்கையின் உடல் எடுக்கக்கூடாது என இளையோரும்,மாணவர்களும் கொதிக்க.. வழக்கம் போல் சாமர்த்தியமாய் வந்து குதித்தன சமரசங்கள்.
இறுதியில் கனவை சுமந்த உடல் இடுகாட்டை நோக்கி நகர…
வானம் மெல்லத் தூறிக் கொண்டிருந்தது.
போய் வா..தங்கையே..
உன் கனவுகளை தின்ற
சாத்தான்களை சரியான
நேரம் பார்த்து பழி தீர்ப்போம்.
அன்றைய தினம் தான்
உன் திரு உரு படத்தின்
முன்னால் மானத்தோடு
விழி திறப்போம்..
என் அம்மாவிற்கு…
எது நடந்தாலும்…எந்த தவறை செய்தாலும்..சீரணிக்கவே முடியாத என் முட்டாள் தனங்களால் உன் வாழ்வே செல்லரித்துப் போனாலும்…
என்னை வெறுக்க முடியாமல் நேசித்தே ஆக வேண்டிய பெருஞ்சாபம் உன் வாழ்நாள் விதியாக நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.
நீதான் அம்மா இதற்கும் காரணம். உன் பேரன்பின் வானம் தாண்டி என் விழிகள் பயணித்ததில்லை.உன் கையை விட்டு நானாக நடக்க முயன்ற போதெல்லாம் தடுக்கி கீழே விழுந்திருக்கிறேன். உன் மடியில் தலை வைக்காமல் தூங்கிய போதெல்லாம் சாத்தான் கனவுகளால் சபிக்கப்பட்டு இருக்கிறேன்.
இருண்டக் குழிகளுக்குள் நானாக விழும் கணங்களில் எல்லாம் எனக்குத் தெரியும். உன் கரம் நீண்டு வந்து எனைக் காக்குமென.
அதற்காகவே…அந்த நம்பிக்கையிலேயே நான் குழிகளுக்குள் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.
இம்முறை கொஞ்சம் அதிகம் என நான் உணர்கிறேன். உன் மீது என் மன அழுத்தத்தை எல்லாம் கொட்டினேன். வார்த்தை வாணலியில் உன்னை வதக்கி சிதைத்தேன். எல்லாவற்றையும் விட நீ பார்த்து கனவு கண்டு உருவாக்கிய நான் நானாகவே அழிந்துக் கொண்டேன்
என் அழிவை உன்னால் தாங்க முடியாமல் தவித்தாய்.. ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தினாய்..பிறகு ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்த கர்ணணாய் சரிந்து அமர்ந்தாய்.. அலுத்துப் போனாய்.
யாருமற்ற வெளியில்… தனித்து விடப்படும் நேரமும் வந்தது. சூன்ய வெளியில் தனித்து கண் மூடி அமர்ந்திருந்த போது தாங்க முடியா வலி. ஏமாற்றம்.
நடந்த சூதாட்டத்தில்…நம்பிக்கைகளை வைத்து விளையாடிய தருமனானேன். உன்மத்ததில் எல்லாவற்றையும் இழந்து மீண்டும் உன்னையே தேடி வந்தேன்.
நீயோ என் அழிவினால்.. ஏறக்குறைய அழிந்திருந்தாய். என் கண்களை கண்டாய். குற்ற உணர்வும், தாங்க இயலா இழப்பும் கண்ணீராய் அதில் தேங்கி நிற்க…ஒரு நொடியில் எழுந்து நின்றாய்..
என் தலை கோதி சரி செய்தாய்.
ஒரே ஒரு கேள்வி கேட்டாய்.
இந்த நிலைக்கு யார் காரணம்..எது காரணம்..
நான் தாம்மா காரணம். நான் மட்டுமே காரணம்.
என்னுடைய பேரன்பின் சூடு பல ரோஜாக்களை பொசுக்கின. எல்லாம் என்னை விட்டு போகக்கூடாது என்கிற அழுத்தம் எல்லாவற்றையும் அழித்தன..
மனதார மன்னித்து விடு…என
பேசிக்கொண்டே போன என் வாயை பொத்தினாய்…
நானிருக்கிறேன் …வா…போகலாம் என்றாய் மீண்டும்..
கலங்கிய கண்களுடன் நின்ற என் தலை கோதினாய்..
பெரு மழை பெய்யத் தொடங்கியது.
-மணி செந்தில்
இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களோடு சிலப்பதிகாரம் விவரித்துள்ள நிலவியல் குறிப்புகளின் படி கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரை வரை நடந்துச் சென்ற பாதையை தேடி அப்பாதையை கண்டறிந்து பயணப்பட்டு கொண்டிருந்தோம் .எங்களோடு ஆனந்த விகடன் புகைப்படக்காரர், அன்பு நண்பர் திரு.பொன் காசிராஜனும் ஒளி ஓவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.
பெரும் பயணம் அது. குறிப்பாக எஸ்.ரா என்ற கதை சொல்லியோடு பெரும் பயணம் மேற்கொள்வது என்பது முழு நிலா நாளில் அடர் வனத்தில் திரிவது போல..
இந்த பயண நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் எப்போது இந்த நாவலை எழுதினார் என்று எனக்கு இப்போதும் நினைவில்லை.
இந் நாவல் தமிழ் பயின்ற சம்பத் என்ற மனிதனின் வாழ்வையும், சரிவையும் பேசுகிறது. மனித உளவியல் சந்திக்கும் அறம் என்ற உணர்ச்சி தரும் சிக்கல்களை நுட்பமாக ஆராய்கிறது.
ஏன் சம்பத் அப்படி ஆனான்…என்ற கேள்விக்கு பின்னால் இருக்கும் பதில்கள் மொழியற்றவை. இருட்டு மூலையில் மறைந்திருக்கும் வெளவால்கள் போன்றவை. எப்போதும் மெளனம் என்பது இயலாமையால் விளைவது அல்ல. பேரன்பின் பாற் தனக்கு தானே தூக்கி கொண்டு சுமந்து திரிகிற சிலுவையாய் உண்மைகளை மறைத்து திரிகிற மெளனம் திகழ்கிறது.
என் தம்பி இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் வருங்கால திரை நம்பிக்கை Murali Manohar உறுபசி நாவலை எனக்கு எஸ்.ரா அர்ப்பணிப்பு செய்திருப்பதாக சொன்னார்.
ஒரு எளிய வாசகன் மேல் ஒரு மாபெரும் படைப்பாளன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பின் சாட்சி யாக உறுபசி விளங்குகிறது..
இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றளவும் என்னை உறுத்துகிற, எஸ்.ராவிற்கு மட்டும் பதில் தெரிந்த,இது வரை பதில் சொல்லாத,இனியும் பதில் சொல்ல மறுக்கிற கேள்வி..
என்னில் எது உறுபசி..?? உறுபசியில் நான் யார்..?!!
அவன் இறந்து
ஒரு ஆண்டு
ஓடி விட்டது
என்றார்கள்..
மற்ற நதி எல்லாம்
மணல் அள்ளி
வறண்டு கிடக்க..
காலநதி மட்டும்
பெருக்கெடுத்த
வேகத்தோடு
வறளாமல் ஓடுகிறது..
அழுத கண்ணீர்த் துளி
காய்வதற்குள் அடுத்த
ஆண்டு வந்து விட்டது..
கால,தூர, தேசங்களை
கடந்து…
அலை நழுவும்
கடலாய்..
பரவிக் கொண்டே
இருக்கிறான்..
பேரன்பின்
ஆதி ஊற்றாய்
செவிகளில்
ஊறிக் கொண்டே
இருக்கிறான்..
அவனது
ஆனந்த யாழ்
இசைந்த வண்ணம்
இருக்கும்..
தமிழ் உள்ள வரை..
அவன் மொழி
பறவையாய்
அலைந்துக் கொண்டே
திரியும்…
இசை வானம்
இருக்கும் வரை..
அவன் மொழிப் பருகி
விழிகள் கசிந்துக்
கொண்டே இருக்கும்
நம்
உயிர் உள்ள வரை..
…….,..
அண்ணா..
உனது சிட்டன்
எழுதுகிறேன்.
தாங்காமல் சிட்டாய்
பறந்து ஓடி விடுவதால்
நீ எனை சிட்டன்
என்றாய்..
நானோ என்னை
உன் பித்தன்
என்றேன்.
அதற்கும் அந்த அளவெடுத்த
சிறு புன்னகை..
வாத்தியார் மகனெல்லாம்
இப்படியே பேசி பேசியே
ஊசிப்போக
வேண்டியதுதான் என்றாய்..
நீ மட்டும்
ஊசிப் போகவில்லை
அண்ணா..
மாறாக மொழியின்
விழியானாய்…
உன் உச்சிக்கிளையின்
மேலே
நானும்
ஒரு மழைத்துளியாய்
உன் மொழியை
தீண்டிக் கிடப்பேன்
அண்ணா…
இறந்தவனுக்கு
தான் அண்ணா
புகழ் வணக்கமெல்லாம்…
தமிழாய் வாழும்
உனக்கு என் முத்தங்கள்
அண்ணா..
நீ எப்போதும் என்னிடத்தில்
என் தோளைத்தட்டி
சற்றே கண்டிப்புடன்
சொன்னதை இந்த வருடம்
உறுதியாய்
செய்வேன்.. அண்ணா..
எனது முதல் கவிதை
தொகுப்பு.
உனக்கே அது…
உன்னால் அது..
கண்கள் முழுக்க
கண்ணீரோடும்..
நீ எனக்கு தந்த
கனவுகளோடும்…
அந்த மங்கிய
ஒளி அறையில்..
தலைக்குனிந்து
அழுதுக்கொண்டிருந்த
அவனது விழிகள்
கனன்று..
தகித்த ஆன்மாவின்
சொற்களை சொல்ல
முடியாமல் சிவந்திருந்த
வேளையில் தான்..
அவனை சந்தித்தேன்.
எதிலும் நிலைக்
கொள்ளாமல்
அலைக்கழிந்து
சிவப்பேறிய அவன்
விழிகளுக்குப் பின்னால்
இருந்த காயம்
புரையோடி இருந்ததை
அவன் விழிகளை
நேரிட்டு பார்க்கும்
எவரும் அறியலாம்.
காயத்தின் தர்க்க,
நியாயங்களை..
பற்றி சிந்திக்க
ஏற்கனவே பல
இரவுகளை தின்று
பசியாறி இருந்தான்..
அவன் விரல் இடுக்கில்
சாம்பல் தட்டாமல்
நடுங்கிக்கொண்டிருந்த
சிகரெட்டின் புகை
வளைய வடிவங்களில்..
இறந்தக்கால லயிப்புகளை
தேடிக் கொண்டிருந்தான்..
இசைத்தட்டின் மீது உரசும்
முள்ளாய் ..
நினைவுச்சுழலில்
சில நிலாப்பொழுதுகளை
கத்தியாக்கி ..
தன் ஆன்மாவில்
உதிரம் வழிய கீறி
ஒரு முடிவிலிக் கவிதை
ஓன்றை எழுத முயன்றுக்
கொண்டிருந்தான்.
நீ வாழ்வை விட
நரகத்தை
மேலானதாக்கி
வருகிறாய்
என்று முனகிய
என்னை
பார்த்து வெறுமையாய்
சிரித்தான்..
எதிரே இருந்த கோப்பையில்
நிராசையின்
அடையாளமாய்
இருந்த மதுவை
பொறுமையாய்
குடித்தான்.
பிறகு அவனே சொன்னான்.
நரகம் என்ற ஓன்றே
வாழ்வின் ரணத்திற்கு
மேலான சொல் இருக்கிறது
என்ற உம் ஆறுதலுக்காகவே..
மற்றபடி.
நரகமே வாழ்வின்
பிறிதொரு
சொல்..
நரகம் எப்போதும்
காலியாகத்தான்
இருக்கிறது..
ஏனெனில் எல்லா
தண்டனைகளும்
வாழ்விற்குள்ளாகவே
வந்தமர்ந்து இருக்கின்றன..
சாத்தான்களின்
நிழலில் தான்
பூமி இளைபாறுகிறது..
தெய்வங்கள்
பூமியை விட்டு
விலகி விட்டன.
பரிசுத்த
நம்பிக்கைகளை
கொல்வது எப்படி
என அறிதலில்
தேர்ந்த
பின்னரே சக தோளில்
கரம் பதிக்கின்ற
உலகில்…
கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறது..
தூய அன்பின் உடல்..
பேசிக் கொண்டே போனான்..
இறுதியில் அவனே..
என்
நம்பிக்கைகளை
கொன்ற சொற்களை..
பொழுதுகளை…
நான் உடைக்கத்
துடிக்கும்
அந்த துரோகக்
கோப்பையில்
சேகரித்துக் கொடு..
அதை அருந்தி
நான் இறக்கிறேன் என..
இல்லையேல்..
மனதார அன்பின்
வழி பிறந்த
பொழுதுகளை..
என் நினைவில் வைத்துக்
நிராயுதபாணியாய்
நிற்க வைத்துக்
கொல்லக்
கூரிய ஆயுதம் ஒன்றினை
உன் பொய்களால்..
தயாரித்துக்
கொடு.
கொன்று தீர்க்கிறேன்.
என்று வலியோடு கத்தினான்..
சரி வா ..
காலாற நடந்து விட்டு வருவோம்..
புதிய கடலலைகள்
கால் தழுவ காத்திருக்கின்றன
என்றேன்.
மறுத்தான்.
என்னால்
உன்னை..
உன் வலியை..
சகிக்க முடியவில்லை.
நான் கிளம்புகிறேன்..
என்றவாறே
வெறுப்புடன்
நடக்கத்தொடங்கினேன்.
என்னை இப்படியே விட்டு
போகிறாயா..
ஏதாவது பொய்யான
மழுப்பல்களோடு
என் நெற்றியை
வருடிக் கொடுத்து
விட்டுதான் போயேன்..
என்ற அவனது
கத்தலும்..
கதறலும்..
கலந்த
இறைஞ்சலை ..
இடறியவாறே
சென்றேன்.
நள்ளிரவு வரை
அவனது இறைஞ்சல்
வெறி நாய்க்கடியாய்..
ரத்தக்கசிவாய்..
என்
தொண்டைக்கடியில்..
*********************†
காலை…
கழுத்தறுக்கப்பட்ட
நிலையில் அவன் பிணமாக
கடற்கரை ஓரத்தில்
கிடக்கிறான் என யாரோ
சொன்னார்கள்.
உதிர உலர்வோடு
என்
தலையணைக்கு
அடியில்
மறைந்திருந்த
கத்திக்கு மட்டுமே
தெரியும்.
அந்த கழுத்தை
அறுத்த நொடியில்
வழக்கத்திற்கு மாறாக
அவனது விழிகள்
தேவ சாந்தம் கொண்டன
என்பதும்…
நன்றியோடு அவன்
என்னை நேசித்தான்
எனவும்.
இறுதியாக அவன்
உகுத்த நீர்
விடுதலைக்கான
ஆதி உணர்வு எனவும்..
ஆம்..
அவனை நான்தான்
கொன்றேன்.
…,
இன்றாவது..
இனிமேலாவது..
நான்
உறங்குவதற்காக..
பகலவன்..
என்றொரு
மாயக்காரன்..
மயக்கும்
மந்திரக்காரன்..
சின்னஞ்சிறு
சொற்களால்
என்னை
மயிலிறகாய்
வருடும்
வசீகரன்..
அப்பா..
உன்னை தாம்பா
எனக்கு அவ்வளவு
பிடிக்கும்
என நேசத்தை
விவரிக்க தெரிந்த
வித்தைக்காரன்…
என்னால் தூக்கிக்
கொண்டு நடக்க
முடியாது என்பதால்…
கைப்பிடித்து
நடந்து வருவதை
இயல்பாக்கிக்
கொண்டவன்..
யாரோ ஒருவர் தன்
மகனை தூக்கிச்
செல்வதை..
நான் தான் ஏக்கமாக
பார்த்தேன்.
அதை சட்டென
உணர்ந்து
வாப்பா செல்பி
எடுப்போம்
தேற்றி விடுகிறான்..
பல நேரங்களில்
மகன்கள் தாயாகவும்.தந்தையாகும்
மாறி விடுவதும்..
நான் குழந்தையாய் அவர்கள்
முன்னால் நிற்பதும்..
எங்கள் வீட்டில் அடிக்கடி
நடக்கிறது..
பகல்..
உன் பிஞ்சுக்கரங்களில்
முகம் புதைத்து
நான் சொல்வது இதைத்தான்..
என்னை உன் மகனாக
வளர்..
அமில
மழைத்துளிகள்
கொட்டி சிதறும்
என்
எண்ண முற்றத்தில்..
எப்படியாவது
துளிர்த்திட
துடிக்கிறது
என் ரோஜா..
அமைதியான
ஒரு உதிர
சொரிதலுக்கு
பின்..
அமிலத்தை
மிஞ்சியும்..
முளைத்தே
விடுகிறது மலர்..
அமிலம்
முள்ளாய்..
ரோஜாவினடியில்
தேங்கி இருப்பதை
உணர்ந்தாலும்..
முள்ளை
பொருட்படுத்தாது
தீண்ட நீளுகின்ற
என் கனவின்
விரல்கள் தயாராகவே
இருக்கின்றன..
இன்னொரு உதிர
சொரிதலுக்கு..
அண்ணன் இராபர்ட் பயஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான…
நான் எழுதிய விடுதலைக்கு விலங்கு நூலுக்கான அட்டைப்படம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்ட போது..
சீமான் அண்ணன் தான் அய்யாவிடம் தர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.
எனக்கு டிராஸ்கி மருதுவின் மேலதான் மயக்கம்.
இருந்தாலும் அண்ணன் சொல்லி விட்டாரே என சற்று ஒவ்வாமையோடுதான் அவரை சந்திக்க போனேன்.
ஒரே ஒரு ஈர்ப்பு..மனுசன் எங்க ஊர்க்காரர்.
வைகறை என அழைக்கப்படும் அவரது வீட்டில் நிகழ்ந்தது எங்கள் முதல் சந்திப்பு.
ஒரு டிராயரோடு உட்கார்ந்து எனது புத்தகத்தை படிக்க தொடங்கினார்..
சில பக்கங்களை படித்த பிறகு..அவரது கண்கள் கலங்க தொடங்கின..
புத்தகத்தை மூடி வைத்து விட்டு நீ போய் வா.. என்று அனுப்பி வைத்து விட்டார்.
என்ன இவர் ஒன்றுமே சொல்லாமல் அனுப்பிட்டாரே என்று ஏமாற்றம்.
பிறகு மறுநாள் நான் சந்தித்த போது மனசே சரியில்லப்பா.. இரவெல்லாம் தூங்கல.. படிச்சி முடிச்ச உடனே வரைஞ்சிட்டேன் என அவர் அளித்த ஓவியம் தான் அந்நூலுக்கு உயிரானது.
அதன் பின்னர் தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றப் பணிகளில் சந்தித்த போது விடுதலைக்கு விலங்கு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்.
தலைவர் பிரபாகரன் பற்றி இது வரை வெளிவராத ஒரு புதிய கோணத்தில் நான் எழுத விருந்த திட்டத்தை அவரிடம் ஒரு முறை விவரித்தேன்.
கண்கள் மினுக்க சொன்னார்..
இதுக்கும் நான் தாண்டா அட்டைப்படம்.
கடைசியாக என் அண்ணன் அறிவுமதி மகள் எழிலின் திருமணத்தில் பார்த்தும் இதே பேச்சு.
நானும் எழுத வில்லை.
அவரும் போய்விட்டார்.
என்றாவது அந்த நூலை நான் எழுதும் போது..
காற்றோடு கரைந்து மிதந்து வரும் அவரது மாயக்கரம் சுமந்த மந்திரத் தூரிகை அந்த அட்டைப்படத்தை வரையும்.
போய் வா போராட்டக் கிழவா..
நாங்கள் இடும் முழக்கங்களில்லாம்..நீ ஊறிக்கொண்டே இருப்பாய்..
தூரிகைப்போராளி வீர.சந்தானம்
அவர்களுக்கு எம்
புகழ் வணக்கம்.