பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 4 of 56

இசைஞானி 81

🟥

ஒரு மனிதன் தனித்துவிடப் படுகின்ற தருணங்களில் தான் தன்னை நோக்கி வரும் தேவ கரங்களை யாசிக்கிறான். தனிமையும் மௌனமும் கனத்திருக்கும் பொழுதுகளில் சங்கடங்களில் சரிந்திருப்பவன் சாய்ந்திருக்க தோள் ஒன்றை தேடுகிறான். அப்போதுதான் இளையராஜாவின் கிட்டார் மீட்டல்களோ, பியானோ தீட்டல்களோ அவனை மீட்க காற்றின் ரதம் ஏறி இதம் சுரக்க வருகின்றன.

உடலெங்கும் செடிகள் மேவிய பழங்கோவில் ஒன்றில் சிற்ப இடுக்கில் ஊடுருவிப் பாயும் ஒற்றை வெளிச்சம். சட்டென தட்டும் ஒரு கைத்தட்டலால் தாழ்வாரத்தில் தானியம் பொறுக்க வரும் பறவை ஒன்றின் சிறகடிப்பு. வயல் நிறைந்த பயிர்களில் தேங்கி இருக்கும் அதிகாலைப் பனி.பின்னிரவில் சாலை விளக்கு ஒன்றின் தனிமை.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் துள்ளல். என இளையராஜாவின் இசையால் உணர்த்தப்படாதவை எது.. எது..??

எல்லாராலும் கைவிடப்படுபவர் இளையராஜாவால் தத்தெடுக்கப்படுபவராகி தத்தளிப்பில் இருந்து மீள்கிறார். தோல்வியடைந்த பின்னிரவுகளில் தனித்திருக்கும் போது ” கண்ணே கலைமானே..” கேட்டு “உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே..” என்று குழைந்து நெகிழாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

முதன்முதலாக காதலை உணர்ந்த ஒரு மழை மாலைப் பொழுதில் “காதலில் தீபம் ஒன்று..” கேட்டு கன்னக்கதுப்பில் மிளிரும் புன்னகையோடு வானத்தைப் பார்க்காதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

இன்றும் “வருஷம் 16” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/bAnsu5udPDs?feature=shared

நாம் வாழ்ந்த வாழ்க்கையை, அப்படியே மீண்டும் சம்பவங்களோடு ரீவைண்ட் செய்து
நமது அகக் கண்களால் நாமே காண முடிகிற அந்த மேஜிக் தான் இளையராஜா.

உங்களில் யார் யார் “கோபுர வாசலிலே” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டிருப்பீர்கள்..??

கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூடிய உங்கள் கண்களுக்குள் ஒரு நொடியில் இருண்மையையும், அடுத்த நொடியில் வெளிச்சத்தையும் ஒருங்கிணைக்கிற அந்த குகை வழி ஞானப் பயணத்தை இளையராஜாவை விட யாரால் வழிநடத்த முடியும்..??

என்னைப் பொறுத்த வரையில் அவரை சார்ந்து இசை /மொழி என்றெல்லாம் விவாதங்கள் எழுப்பப்படுவது அர்த்தமற்றவை.
அவரது படங்களில் பின்னணி இசையில் கலாபூர்வமாக காட்சி இடைவெளியில் அவர் விடுகின்ற சிறு மௌனம் கூட அறிகிறவர்களுக்கு பேரிசை தான்..

“அழகி” படத்தில் சாலை ஓரத்தில் பார்க்க நேர்ந்து விட்ட காதலி அளிக்கும் உணவை சாப்பிடும் போது மழை பெய்யும் பொழுதில் அவன் நனையாமல் இருக்க காதலி ஒரு தடுப்பினை பிடிக்க.. அங்கே கொடுப்பார் பாருங்கள் கலை மேன்மை கொண்ட ஒரு மௌனம்..

அதற்குப் பிறகு அவரது கனத்த குரலில் “உன் குத்தமா என் குத்தமா” என இசை எழும்போது உள்ளுக்குள் உணர்ச்சியின் உருண்டை வயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குள் அடைத்து விழி நனையாதவர் யார் யார்..??

மௌனத்தை கூட தனது இசையின் பக்க வாத்தியமாகக் கொண்டவருக்கு ஏது மொழி.. ??

காதலுக்கு மரியாதை என்கின்ற படத்தின் உச்சக் காட்சியில் எந்த வசனமும் இல்லாமல் எந்த சண்டைக் காட்சியும் இல்லாமல் வயலின்களை வைத்தே கிளைமாக்ஸை நிறுவி இருப்பாரே.. அதற்கு ஏது மொழி..??

பசிக்கும், கனவிற்கும், காதலுக்கும், காமத்திற்கும், தோல்விக்கும், தவிப்புக்கும், வறுமைக்கும், வாழ்வின் இருண்மைக்கும், நெகிழ வைக்கிற தாய்மைக்கும் , நோக வைக்கிற நோய்மைக்கும், இன்னும்.. இன்னும்.. உள்ளுக்குள் ஊறுகிற ஓராயிரம் உணர்ச்சிக்கும் ஏதேனும் மொழி இருக்கிறதா என்றால்.‌.

இருக்கிறது..

அதன் பெயர் இளையராஜா.

அதுதான் எங்கள் மொழி.
அதுதான் எங்கள் வலி
மறக்க இருக்கும் வழி.

எம் வாழ்வின்
எல்லா
நொடிகளிலும்..

இமைக்க மறந்து,
இதயம் நனைந்து,
இசையில் எமை
நிறைக்கும்,
இசை இறைவன்
இளையராஜாவிற்கு,
இனிய பிறந்தநாள்.
வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.

இசைஞானி81

HBDIlayaraja

An Unread message…

❤️

இன்னும்
அலைபேசி திரையில்
நான் பார்க்காத
உனது
குறுஞ்செய்தி ஒன்று
பனிக்கால இரவில்
சாக்கு பையின்
கதகதப்பில்
படுத்திருக்கும்
பூனைக்குட்டி போல
உறைந்திருக்கிறது.

உடனே
திறந்துப் பார்க்க
முடியாமல்
படிக்காத குறுஞ்செய்தியை
உறைந்த பார்வையோடு
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்.

அது விரல் படாத
பியானோ பொத்தான்கள்
போல ஏதேனும் இசைத்துளி ஒன்றை உள்ளுக்குள்
தேக்கி இருக்கக்கூடும்
என எண்ணுகிறேன்.

அல்லது

ஒரு பெரு மழையோ
ஒரு சுடும் பாலையோ
இன்னும் ஏதாவது
இருக்கக்கூடும்.

இந்தக் குறுஞ்செய்தியைப்
படிக்க நான்
தனிமையும்
பனியும் நிறைந்த
ஒரு மலைமுகட்டை
தேட வேண்டி இருக்கிறது.

சில சமயங்களில்
உன்
குறுஞ்செய்திகளை
படிக்கும்போது
என் கழுத்தை கவ்வும்
ஒரு ஓநாய்
காத்திருப்பது என்பது
எதேச்சையானது அல்ல‌.

பிரிபடாத
அந்தக் குறுஞ்செய்தியில்
ஏதேனும் காரணங்கள்
இருந்து விடக் கூடாது என அஞ்சுகிறேன்.

காரணங்கள் இல்லாமல் குறுஞ்செய்தி
அனுப்பி
கொண்ட காலங்கள்தான்
பொன்னிழைப் பொழுதுகள்.

காரணங்கள்
அலுப்புட்டுகின்றன.
காரணங்கள்
சுயநல ஒப்பனையோடு
துருத்திக் கொண்டு தெரிபவை.

காரணங்களே
இல்லாமல்
அனுப்பப்படும்
குறுஞ்செய்திகள் தான்
காதலின் மது அருந்தி
பேரன்பின் நிர்வாணத்தோடு
இமைகள் கிறங்க
வந்திறங்கி
நம் இதயம் இடறுபவை.

காரணங்கள்
இல்லாமல்
குறுஞ்செய்தி அனுப்புவது
என்ன
காரணத்திற்காக
என்று கேட்கிறார்கள்.

நீயும் நானும்
இருக்கிறோம்
என்கிற காரணம்
ஒன்றே ஒரு
குறுஞ்செய்தி
அனுப்புவதற்கு போதாதா..

அவர்களுக்குத்
தெரியாது.
எழுத்துக்கள் இல்லாத
வெறுமை
குறுஞ்செய்திகளில் கூட
வாசிக்கக்கூடிய செய்திகள் இருக்கின்றது என்று.

அதையும் தாண்டி..
யாருக்கேனும்
காரணங்கள் தேவைப்பட்டால்
நம்மிடம் உதிர்த்துக்கொள்ள
ஒரு கன்னக் கதுப்புப்
புன்னகையும்,
பின்னணியில்
இசைந்துக்கொள்ள
ஒரு இளையராஜாவின் இசைத்துண்டும்
தயாராகவே இருக்கின்றன
என்பதே காரணங்களாக இருக்கின்றன என்று
அவர்களுக்கு எப்படி
உணர்த்துவது..??

பிரிவின் கதகதப்பு.

❤️

கனவுகளை
துரத்திய காலம்
முடிந்து
கனவுகள்
இப்போது துரத்திக் கொண்டிருக்கின்றன.

நான்
அஞ்சி ஓடிக்
கொண்டிருக்கிறேன்.

❤️

அப்போதே சொல்லி
இருக்கலாம் தான்‌.

அப்போது
சொல்லி இருந்தால்
நீ சற்றே
ஏக்கத்தோடு
அப்போதே
சொல்லி இருக்கலாமே
என இப்போது
சொல்லி
இருக்க மாட்டாய்.

அதனால்தான்
அப்போது
சொல்லவில்லை.

❤️

பிரிந்து
செல்வதற்கு முன்
செயற்கையான
சிரிப்போ
ஒப்பனையான
கை குலுக்கல்களோ
தயாரிக்கப்பட்ட
கண்ணீர் துளியோ
என்னை
அவமானப்படுத்துகின்றன.

நிர்கதியான
ஒரு மௌனம்.
நிராதரவான
ஒரு பார்வை.

இது போதாதா..

நீயும் நானும்
நாமாக இருந்ததற்கு.

❤️

பிரிவின்
மழைநாளில்
நீ இறுதியாய் அமர்ந்த
அந்த உணவக
இருக்கையின்
எதிரே
நான் தனியே
அமர்ந்திருந்தேன்.

திடீரென எங்கிருந்தோ
வந்த ஒரு இளைஞன்
அலைபேசியில்
யாரிடமோ
கோபமாக பேசிவிட்டு
ஒரு முழு பிரியாணியை
ஆர்டர் செய்து
பொறுமையாக
சுவைத்து சாப்பிட
தொடங்கினான்

எனக்கு ஏனோ
நிம்மதியாக இருந்தது.

❤️

ஏதோ ஒரு வாழ்க்கை
நீ இல்லாத
அர்த்தமற்ற பொழுதுகள்
என்றெல்லாம்
விம்மி வெடித்து
நீ அலைபேசியில்
கண்ணீர் உகுத்த
அந்தக் குளிர்கால இரவில்..

அதுவரை
நான்
நினைக்க முடியாமல்
வெறுத்த நம் பிரிவு
கதகதப்பாய்
ஒரு போர்வை போல
என் மீது போர்த்தத்
தொடங்கியது.

❤️

நாசுக்கு பார்க்காமல்
இடம் பொருள் எண்ணாமல்
தகுதி வயது
காலம் மறந்து
அடக்கி
வைத்து முழுங்கத்
தோன்றாமல்
நேர்மையாய்
அழுது விட முடிவது
எவ்வளவு சுகமானது…

❤️

“சாட்டை”க்கு பாராட்டுக்கள்..

LGBTQ+ வினரை பற்றி தம்பி சாட்டை துரைமுருகன் மிக முக்கியமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. முதலில் இதை விவாத பொருளாக மாற்றியதற்கே தம்பி துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், வரலாற்றால் வஞ்சனை செய்யப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுவது தான் நீதி. பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பது தான் அறம். அதைஉணர்ந்து தம்பி துரைமுருகன் செயல்பட்டிருப்பதை மனதார பாராட்டுகிறேன்.

1960களில் ஓரின பால் ஈர்ப்பு என்பது மனநலம் சார்ந்த பிரச்சனையாக கருதப்பட்டு வந்த நிலையில் நவீன மருத்துவம் அது “ஹார்மோன் மாறுபாட்டினால் ஏற்படுகிற நிலைமை” என்பதை கண்டறிந்த பிறகு உலகளாவிய அளவில் LGBTQ+ வினரைப் பற்றி பார்வைகள் மாறி இருக்கின்றன.

1870களில் இயற்றப்பட்ட ஆங்கிலேய சட்டத்தின் பிரதியான இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 ஓரின பால் ஈர்ப்பை இயற்கைக்கு மாறான உறவு என வரையறுத்து தண்டனைக்குரிய குற்றமாக வைத்திருந்ததை 2018 ல் உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து ஓரின பால் ஈர்ப்பு குற்றச் செயல் அல்ல என அறிவித்தது. ஆனால் சமத்துவத்திற்கு எதிரான பிரிவு 377 ஐ ரத்து செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதையும் அது பாராளுமன்றத்திற்கு தான் உண்டு என்பதையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதேபோல் உலகளாவிய முறையில் இருபதுக்கு மேற்பட்ட நாடுகள் ஓரின சேர்க்கை திருமணங்களை அங்கீகரித்து இருக்கின்றன. இந்த முற்போக்கு வரலாற்றின் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் இயற்றி அவர்களுக்கான கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு போன்றவற்றில் காட்டப்படும் பாகுபாட்டை தடுக்கிறது.

நவீன அறிவியல் /மருத்துவ சிந்தனைகளால், கண்டுபிடிப்புகளால் பழைமை நிறைந்த பிற்போக்கு கருத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. காலம் காலமாய் புறக்கணிக்கப்பட்ட சமூகமாய் இருந்த LGBTQ+ வை சேர்ந்தவர்கள் பொதுச் சமூகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதற்கு நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தை அவர்கள் ‘பெருமை மாதமாக” ( Pride Month) அறிவித்து பேரணிகள் நடத்துகிறார்கள்.

பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து தங்களுக்கான உரிமைகளை, தங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் கோருகிறார்கள். இது மனநலம் சார்ந்த பிரச்சனை அல்ல, ஹார்மோன் மற்றும் உடல் மாறுதல்களால் ஏற்படுகின்ற விளைவு என்பதை பொதுச் சமூகத்திற்கு புரிய வைக்க அவர்கள் மிகுந்த அவமானங்களுக்கும், புறக்கணிப்புகளுக்கும் நடுவில் நீண்ட காலம் பயணித்திருக்கிறார்கள்.

எண்பதுகளில் வெளியான ஒரு தலை ராகம் திரைப்படத்தில்
” கொக்கரக்கோ கோழி கூவுற வேளை” என கிண்டலும், அவமானமும் நிறைந்த சின்னங்களாக பொதுச் சமூகத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டவர்கள் அடைந்த இழிவுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று அவர்களையும் மனிதர்களாக பார்க்கின்ற சக உயிரிகளாக பார்க்கின்ற குரல்கள் ஆங்காங்கே எழ தொடங்கியிருக்கின்றன.

திருநங்கைகள் பெரும்பாலும் கண்ணியமானவர்களாக காட்டக்கூடிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கி இருக்கின்றன. சரத்குமார், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் கூட திருநங்கைகளாக நடிக்க முன்வருவது அனைத்தும் மாறி வருகிற முற்போக்கு சிந்தனைகளின் வெளிப்பாடுகளே. ஒரு தலை ராகம் தொடங்கி காஞ்சனா/ சூப்பர் டீலக்ஸ் வரையிலான காட்சி அமைப்பு மாறுதல்களின் வரலாற்றுக்குப் பின்னால் எண்ணற்றவர்களின் துயர நிறைந்த போராட்டக் கதைகள், அவமான வலிகள், ஒதுக்கப்பட்டவர்களின் காயங்கள் ஒளிந்து இருக்கின்றன.

சமீபத்தில் ப்ரைமில் வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்கின்ற தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று லெஸ்பியனாக வடிவமைக்கப்பட்டு அவர்களின் துயரம் பற்றி காட்சி அமைப்புகள் இருந்ததும் , பல வெப் தொடர்களில் ஓரின பால் ஈர்ப்பு பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி இருப்பதும் ஆரோக்கியமான காட்சிகளே.

நம்மோடு பிறந்தவர்கள் அவர்களை ஏன் நாம் அருவெறுப்பாக பார்த்து ஒதுக்க வேண்டும் என்கிற கேள்வி இன்று பரவலான பொதுக் கேள்வியாக மாறி இருக்கிறது. அவர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் இணைத்து பேசுவது போன்ற பிற்போக்குத்தனங்கள் குறைந்து இருக்கின்றன. காலங்காலமாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிய திரைப்படங்கள் எவ்வாறு இன்று குறைந்து போயிருக்கிறதோ, பிற்போக்கு சிந்தனைகளின் வடிவமாக பார்க்கப்படுகிறதோ அதேபோல LGBTQ+ வினரை தவறாக காட்டுகின்ற திரைப்படங்களும் குறைந்திருக்கின்றன என்பது ஆறுதலான மாறுதல்.

பாலியல் தேர்வு என்பது அவரவர் தனிநபர் சார்ந்தது.LGBTQ+ வினரில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள், இரு பாலின ஈர்ப்பாளர்கள் இருப்பது போல எந்த பாலினத்தின் மீதும் ஈர்ப்பு இல்லாதவர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இயல்பான மனிதர் வாழும் சாதாரண வாழ்விற்காக, எல்லோருக்கும் கிடைக்கும் சாதாரண உரிமைகளுக்காக சமத்துவ சமூகம் வேண்டி அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு இப்போதைய தேவையெல்லாம் நம் புரிதல் மட்டுமே.

மற்றபடி பிற்போக்குத்தனங்களின் பிதற்றல்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவே கத்தி தானாக ஓய்ந்துவிடும். இது வரலாற்றில் எப்போதும் நடப்பது தானே.

மற்றபடி புரிந்துணர்வு மிக்க, ஆகச் சிறந்த, மனம் நிறைந்த பாராட்டப்பட வேண்டிய காணொளி வெளியிட்ட Saattai- சாட்டை க்கும், என் ஆருயிர் இளவல் சாட்டை துரைமுருகனுக்கும், எனது மனமார்ந்த பாராட்டு‌. பேரன்பு.

அவன் என் தம்பி என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மணி செந்தில்.

உவர்ப்பு இல்லா கண்ணீர்.

“மனிதன் தாங்கக்கூடிய அளவிற்கே கடவுள் துன்பத்தை தருகிறான்” என்கிறது புனித நூல் திருக்குர்ஆன்.அது என்ன தாங்கக் கூடிய அளவு.. அப்படி துன்பத்திற்கு அளவுகோல்கள் இருக்கிறதா என்ன.. துன்பத்தில் எது பெரிய துன்பம் எது சிறிய துன்பம்.. துன்பம் என்பதே வலி தானே என்றெல்லாம் சிந்தனைகள் விரிந்து கொண்டே போகின்றன.

10 ஆண்டுகள் கடும் போராட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தை 1 1/2 வயதில் இறந்துவிட்ட கொடுமையை சமீபத்தில் என் குடும்பம் சந்தித்தது. என் வீட்டுப் பெரியவர்கள் விழிகளில் வலியை சேமித்து உறைந்து விட்டார்கள். கண்ணீர்/கதறல் போன்ற உணர்ச்சி கொந்தளிப்புகளை எல்லாம் தாண்டி உறைந்து விடுவது என்கிற நிலையை என் வீட்டிலேயே நான் கண்டேன். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எவருக்கும் தெரியவில்லை.இன்று காலை எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் சட்ட உதவிக்காக என்னை அழைத்தார். அவருக்கு மூன்று மகன்கள். இரண்டாவது மகன் மட்டும் கொஞ்சம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பலம் குறைந்தவர்.அவரை தனது மூத்த மகன் மிகவும் மோசமாக நடத்துவதாகவும், அடிக்கடி தாக்கி விடுவதாகவும், அதை அவர் மிகுந்த வலியோடு என்னிடம் தெரிவித்தார். மூத்தமகனை அழைத்து வாருங்கள் நான் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.வாழ்வின் மிகக் போராட்டம் எதுவென்று சிந்திக்கும்போது உடல் நலமில்லாத குழந்தைகளை வளர்க்க பெற்றோர் நடத்துகிற போராட்டம் தான் என்பதை உணர முடிகிறது. எந்த நேரம் எது நடக்கும் என்று குழந்தைகளின் உடல்நலத்தைப் பொறுத்து எதுவும் தெரியாது. தன் கண் எதிரே தன் குழந்தைகள் படும் பாடு கண்டு பெற்றோர் அடையும் துயரத்தின் உயரம் எவரெஸ்ட்டை விட பன்மடங்கு பெரியது.

என் குடும்பத்திலேயே “ஆட்டிசம்” பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவன் இருக்கிறான். அவனை உருவாக்க அவனது தாய் படும் பாட்டை நான் அருகில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அந்தப் பெண்ணுக்கு அச்சுஅசலாக என்னுடைய தாய் முகம். சிறுவயதில் என் அம்மா எப்படி என்னை தூக்கிக்கொண்டு அலைந்தாரோ அதேபோல அவளும் ஒரு சுமைத் தாங்கியாக மாறி இருப்பது வாழ்வின் அசலான மனிதர்கள் நகலெடுத்துக் கொண்டது போல இருக்கிறது. அவள் எப்போதும் நோயற்ற குழந்தையைப் பெற்று வென்ற என் அம்மாவின் கண்களில் இருந்து நம்பிக்கையை பெற்றுக் கொண்டே இருக்கிறாள். அவளது வெற்றிக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்.

முழுமையான உடல் நலம் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் வரம் வாங்கியவர்கள். அமைதியாக உறங்கும் இரவுகளை அடைந்தவர்கள்.அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் சாலையை கடந்து செல்லும் முடி இழந்த சில குழந்தைகளை பார்க்க நேரிட்டது. தனக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே உலவும் அந்த குழந்தைகளின் விழிகளை பார்த்துவிட்டு நிதானமாக இருக்க முடியவில்லை.ஒரே சமயத்தில் பால்யத்தின் குறுகுறுப்பும், நோயின் தீவிரம் தரும் வலியின் நிழலும் கொண்ட அந்த விழிகள் எப்போதும் தன் தாய் தந்தையரையே உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

நோய்மை நிறைந்த குழந்தைப் பருவம் மிகத் துயரமானது. நோய் தருகிற வலி, உறக்கமற்ற இரவுகள் இதுவெல்லாம் ஒருபுறம், இன்னொரு புறம் நண்பர்கள் தோழிகள் விளையாட்டுகள் இல்லாத தனிமை. மருத்துவமனையின் வெளிறிய சுவர்களை பார்த்து களைப்படையும் கண்களோடு இருந்த எனக்கு என் தந்தை புத்தகங்கள் மூலம் விடுதலைப் பெற்றுத் தந்தார். இந்த ஆன்ம விடுதலை அனைவருக்கும் கிடைப்பதில்லை.

“The Miracle”( 2015) என்கின்ற துருக்கி நாட்டு திரைப்படம் ஒன்று இருக்கிறது. இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த திரைப்படம் “Mahsun Kırmızıgül” என்பவர் இயக்கி இருந்தார். பள்ளிக்கூடம் இல்லாத ஒரு கிராமப்புறத்திற்கு பணிக்காக செல்லும் ஒரு ஆசிரியர் அங்கே நோய்மையால் பாதிக்கப்பட்ட பேச்சுத்திறன் இழந்த சரிவர நடக்க முடியாத ஒரு வாலிபனை சந்திக்கிறார். அந்த ஆசிரியர் மற்றும் எதிர்பாராத விதமாக அவனுக்கு அமைந்த மனைவி மூலம் அந்த வாலிபன் உலகின் அனைத்து உயரங்களையும் அடைவது தான் அந்த கதை. எனது ஆருயிர் தம்பி கும்பகோணம் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களில் ஒருவரான தம்பி விக்கி தனிமை உணர்ச்சி வெகுவாக ஆட்கொண்ட ஒரு நாளில் எனக்கு இந்தத் திரைப்படத்தை பரிந்துரைத்தார். இரண்டு பாகங்களையும் முழு வீச்சில் பார்த்து முடித்த எனக்கு அதற்கடுத்த இரண்டு நாட்கள் படம் தந்த தாக்கத்திலேயே கழிந்தன. எல்லோரும் மிக முக்கியமாக காண வேண்டிய அந்த திரைப்படத்தின் முதல் பாகம் நெட்ப்ளிக்ஸ் -சில் கிடைக்கிறது. இரண்டாம் பாகம் youtubeலயே இருக்கிறது. நோயற்ற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களை பற்றி இந்த படம் பேசியது போல வேறு எந்த படமும் இவ்வளவு நுட்பமாக பேசியதாக தெரியவில்லை.

இளம் வயது நோய்மையின் மிக உக்கிரமான உச்சம் அது தருகிற தனிமை. இளம் வயதில் உளவியலாக அந்தத் தனிமை உணர்ச்சியை அடைந்தவர்கள் வாழ்நாள் முழுக்க எல்லா பொழுதுகளிலும் அந்த தனிமை உணர்ச்சி ஆன்மாவில் தேங்கி நிற்கும். “வேலையில்லாதவனின் பகல் பொழுது தான் உலகத்திலேயே மிக நீளமானது” என்ற வரியை எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியிருப்பார். நோயுற்றவனின் இரவும் அப்படித்தான். வலியும் தனிமை உணர்ச்சியும் நிரம்பிய அந்த இரவுகள் முடிவே இல்லாத ரயில் பெட்டிகளின் வரிசையை நினைவூட்டுபவை.

“ஆரோக்கிய நிகேதனம்” என்ற 1953இல் வெளியான புகழ்பெற்ற ஒரு வங்காள நாவல் இருக்கிறது. அதை எழுதியவர் தாரா சங்கர் பந்த்யோபாத்தியாயா. தமிழில் குமாரசாமி மொழி பெயர்த்திருக்கிறார். ‘சாகித்ய அகாதெமி’ சார்பில் வெளியாகி இருக்கும் இந்த நூல் நோய்மையின் வெவ்வேறு குணாதிசயங்களையும், குணப்படுத்தும் வெவ்வேறு வழிகளையும் பற்றி விவாதிக்கின்ற அந்த நூல் மரபு சார்ந்த மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் இடையே இருக்கின்ற முரண்களைளையும் அரசியலையும் நுட்பமாக காட்டுகிறது. அதில் ஜீவன் மசாய் என்கின்ற முதன்மை கதாபாத்திரம் உண்டு. தலைமுறை தலைமுறைகளாக ஆயுர்வேத சிகிச்சை செய்து வரும் குடும்பத்தில் பிறந்த அவர் ஆங்கில மருத்துவப் படிப்பில் சேர்ந்து மஞ்சரி என்ற பெண்ணை காதலித்து பிரிந்து, நிறைவேறாத காதலின் காரணமாக படிப்பை கைவிட்டு, தந்தை வழி ஆயுர்வேதத்தை தொழிலாக மட்டுமல்ல வாழ்வியலாக மாற்றி பின்பற்றி புகழ் பெற்ற ஆரோக்கிய நிகேதனம் என்கின்ற மருத்துவமனையை நிறுவுகிறார். ஆத்தர் பவ் என்ற பெண்ணை மணமுடிக்கும் அவர் வாழ்நாள் முழுக்க மனைவியின் வெறுப்பை சுமந்து ஆங்கில மருத்துவம் படித்த காதலியின் பேரனுக்கு நோய்மையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் புரிதலை உருவாக்கி மறையும் அவரது பாத்திரப்படைப்பு இந்திய நாவல் உலகில் தலைசிறந்தது . இளம் வயதிலேயே தன் மகனை பறிகொடுத்த ஜீவன் மசாய் “எல்லோருக்கும் எதிர்பாராத ஒரு நொடியில் மரணம் தான் முடிவு, அதை வெல்ல யாரும் இல்லை” என்பதை தன் வாழ்நாள் முழுக்க வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் அந்தக் கதை. நோயைப் பற்றி தமிழில் சமீபத்தில் வந்திருக்கும் மருத்துவ புதினம் அக்குபஞ்சர் மருத்துவர் உமர் பாருக் எழுதிய “ஆதுர சாலை” நவீன மருத்துவ முறைமைகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்புகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு புகழ் பெற்ற ஒரு வழக்கறிஞர் இருக்கிறார். அவரின் மகள் சிறு வயதிலேயே இன்சுலின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஊசி போடக்கூடிய நிலைக்கு ஆளானவர். பணியில் இருக்கும் நேரத்தில் கூட ஓடிப் போய் தன் மகளுக்கு ஊசி போட்டுவிட்டு வியர்த்து விறுவிறுத்து வேக வேகமாக திரும்பும் அவரின் துயரத்தை நான் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன் . அவரும் அவரது மனைவியும், தன் மகளை வளர்த்து, படிக்க வைத்து திருமணம் செய்து வைத்த பொழுதில், ‌ அவர்களிடம் சென்று ‘நீங்கள் வென்று விட்டீர்கள்’ என சொல்லிவிட்டு நகர்ந்த போது அவர்களது விழிகள் கண்ணீரால் நிறைந்தன. அந்த நிறைவு தரும் முழுமை போல உலகில் வேறு எதுவும் முழுமையில்லை.

அந்த நேரத்தில் உதிர்க்கும் கண்ணீர் கூட உவர்ப்பு இல்லாத உவப்பு தானே..??

தேவைப்படும் சில புரிதல்கள்

சமூக வலைதளங்களிலும், அரசியல் பரப்புகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்பற்ற இரண்டை ஒப்பிட்டு விவாதப் பரப்பு ஏற்படுத்துவது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வகையில் இப்போது
இதுவும் ஒன்று.

விஜய்யின் வருகையால் நாம் தமிழருக்கு பாதிப்பா..???

முதலில் நாம் தமிழர் அரசியலையும், நடிகர் விஜய் அரசியல் வருகையையும் ஒப்பீடு செய்யப்படுவது அர்த்தமற்றது.

2009 ல் நடந்த இனத்தின் அழிவு தாங்காமல், தொடர்ச்சியான நம் இனம் அடைந்து வருகிற இழிவு பொறுக்காமல், கொதிப்படைந்த இளைஞர் கூட்டம் நாம் தமிழரை உருவாக்கியது.

வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, மெய்யியல், சூழலியல், என பல்துறை சார்ந்த இனத்தின் எழுச்சி நாம் தமிழர் வருகைக்குப் பின்னால் இந்த மண்ணில் நிகழ்ந்தது. அதுவரை பேசப்படாத பொருட்கள் பல பேசு பொருளாக மாறியது. இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் நம் மண்ணில் ஏற்படுத்திய அதிர்வுகள் கொஞ்சநஞ்சம் அல்ல. இதற்குப் பின்னால் உறக்கத்தை தொலைத்து உழைப்பை மட்டுமே கொண்டு தனது குரலால் வீதிக்கு வீதி கொள்கை முழக்கம் செய்து கொண்டிருக்கின்ற அதிமனிதன் அண்ணன் சீமானும், அவர் பின்னால் சாதி மத வேற்றுமைகளுக்கு எதிராக தமிழர் ஓர்மை அடைந்து , திரண்ட தன்னிகரற்ற தம்பி, தங்கைகளின் தமிழ்த்தேசிய பற்றுறுதி போன்ற கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன.

தோன்றும்போதே வெடித்து கிளம்பியது போன்ற வரலாற்று பெருவெடிப்பு நாம் தமிழர் கட்சிக்கு நிகழ்ந்தது. ஒரு பக்கம் ஊடகப் புறக்கணிப்புகள் மறுபக்கம் அரசு அதிகாரத்தின் தடைகள் மற்றும் வழக்குகள் இதற்கெல்லாம் முகம் கொடுத்து அண்ணன் சீமான் தலைமையில் எளிய இளைஞர்கள் திராவிட/தேசிய அரசியலுக்கு மாற்றாக புதிதான தமிழ் தேசிய அரசியல் உருவாக்கியது இந்த மண்ணில் நிகழ்ந்துவிட்ட புரட்சி. குறிப்பாக படித்த இளைஞர்கள் /இளம் பெண்கள் அறிவாயுதம் ஏந்தி வீதிகளில் திரண்டது தமிழக அரசியல் பரப்பில் இதுவரை பாராதது.

நடிகர் ரஜினிக்கு வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று அன்று கேட்டார்கள். இன்று நடிகர் விஜய் வந்தால் உங்களுக்கு பாதிப்பா என்று கேட்கிறார்கள். யார் வந்தாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் எங்களது இலக்கும், பயணத்தின் பாதையும் தியாகமும், தீரமும் மிக்க எங்களது இன முன்னோர்களால், மாவீர தெய்வங்களால் வடிவமைக்கப்பட்டது. தமிழர் நிலத்தில் தமிழர் ஆட்சி. தூய தமிழ் மொழி வழியில் தமிழ் வீதிகள். தமிழர் நிலத்தில் தமிழுருக்கே முதல் உரிமை. எங்கிருந்தோ வந்தவர்கள் இங்கே நலத்துடன் வாழ, இங்கிருந்தவர்கள் வரலாற்றின் வீதியில் எங்கோ தொலைய என்கின்ற திராவிடப் போக்கு தொலைந்து தீந்தமிழர் ஆட்சியில் எல்லா உயிருக்குமான நலம். கல்வி அறிவியல், சூழலியல், கனிம வள பாதுகாப்பு, நீர்நிலைகள் மீட்டெடுப்பு, ஊழலற்ற ஆட்சி முறை , தற்சார்பு தாய்மைப் பொருளாதாரம் என ஒரு லட்சம் கனவுகளை உள்ளுக்குள் தேக்கி அதிகாரத்தை நோக்கி நாங்கள் அடி எடுத்து வைக்கும் பயணம் மற்றவர்கள் போல் அல்ல.

ஒரு தேசத்தை புதிதாக கட்டுமானம் செய்ய முயல்கிற புரட்சியின் பொறியாளர்கள் நாங்கள். திரைத் துறையை சேர்ந்த அண்ணன் சீமான் அவர்களை நாங்கள் திரை வசீகரத்தில் தேடிக் கண்டடைந்தவர்கள் அல்ல. இன அழிவின்போது சகிக்காமல் பெருங்குரலெடுத்து அழுது துடித்த எங்கள் குருதி தேய்ந்த ஆன்மாவின் மனித வடிவம் அவர். அடக்க முடியாத எங்களது கோபத்தை அவர் மேடையிலே வெளிப்படுத்திய போது ஒத்த உள்ள அலைவரிசைகள் ஒன்றாய் இணைந்து ஒரு புரட்சிகர பயணத்திற்கு எங்களை அணியமாக்கியது.

தமிழினத்தில் பிறந்த புகழ்பெற்ற திரைக்கலைஞன் என்கின்ற முறையில் நடிகர் விஜய் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களும், பேரன்பும் என்றும் உண்டு.

மற்றபடி வருங்காலத்தில் அவர் முன் வைக்க இருக்கிற அரசியல் அவர் யார் என்று காலத்தின் வீதியில் கணக்கிட்டு காட்டும். அதன் பொருட்டு எம் ஆதரவும்/ எதிர்ப்பும் அமையும்.

அவர் மட்டுமல்ல, இன்னும் திரைத்துறையில் இருந்து யார் வந்தாலும் எங்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. எங்கள் முன் திரள்பவர்கள் நிச்சயமாக இன்னொருவர் பின்னால் நிற்க கூட முடியாது. விசித்திரமான இந்த நிலை நாங்கள் முன்வைக்கின்ற லட்சியங்கள் கொண்டிருக்கிற தனித்த வசீகரம். மாய ஈர்ப்பு.

இந்த நிலமும் இந்த அதிகாரமும் எங்களுக்கு தேவைப்படுகின்றன.

இந்த நிலத்திற்கும், இந்த மக்களுக்கும் நாங்கள் என்றும் தேவைப்படுகிறோம்.

இந்த நிலை மற்ற எவருக்கும் இல்லை எனும் போது மற்றவர் வருகை குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

தனித்துவமான எங்களது லட்சியப் பயணம், எங்களது அண்ணன் சீமான் தலைமையில் அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். பயணம் நகர, நகர.. பாதை விரிய, விரிய உலகின் மூத்த தமிழ்க் குடி அடிமை விலங்கொடித்து உரிமைகளோடு சிறக்கும்.

நாம் தமிழர்.

🟥

நூல் வீதி 8 – கே ஆர் மீரா பெண்களின் அறியப்படாத அக உலகம்

நூல் வீதி 8
++++++++++

இந்த முறை புத்தக கண்காட்சியில் மலையாள மொழியின் மிக முக்கிய எழுத்தாளர் கே ஆர் மீரா அவர்களின் மொழிபெயர்ப்பு நூல்களை என் தம்பி எழுத்தாளுமை அகர முதலவனின் பரிந்துரையில் வாங்கினேன். “தேவதையின் மச்சங்கள் கருநீலம்” என்கிற அவரது சிறுகதை தொகுப்பு மோ செந்தில் குமாரின் மொழிபெயர்ப்பில் தமிழில் எதிர் வெளியீடு மூலமாக வெளியாகி இருக்கிறது.

சமகால மலையாள எழுத்துக்களில் புகழும் தனித்துவமும் கொண்ட படைப்புகளை கே ஆர் மீரா தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது கதைகளில் வரும் பெண்கள் தீர்க்கமானவர்கள். நரகமோ சொர்க்கமோ அவலமோ மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் தங்கள் வாழ்விற்கான தேர்வுகளை முடிவு செய்யும் இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்பவர்கள். தன் ஆன்மா முழுக்க காதலால் நிரம்பியவர்கள். உணர்ச்சிகளின் விளையாட்டாக காதலை கருதாமல் அதனால் தீவிர மன எழுச்சி அடைந்து எந்த எல்லைக்கும் செல்பவர்கள்.

அவரது படைப்புலகை பற்றி அவரின் மேற்கோள்களோடு வெளிவந்திருக்கிற ஒரு மிக முக்கியமான கட்டுரை இது.

https://www.vogue.in/culture-and-living/content/writer-k-r-meera-i-dont-write-for-feminists-i-write-so-that-my-book-will-convert-readers-into-feminists-jezebel

குறிப்பாக “தேவதையின் மச்சங்கள்” கதையைப் படித்து முடித்த நேற்றைய இரவினை கடப்பதற்கு மிகுந்த சிரமப்பட்டேன். வேதனை கொடுமை இப்படியெல்லாம் நடக்குமா என்கிற சொற்களையெல்லாம் தாண்டி நிஜமான வாழ்க்கை எப்படி கோரமாக இருக்கிறது என்பதை கவித்துவமான தன்மொழியில் மீரா கதையாடி இருப்பது இந்த தொகுப்பை‌ அனைவரும் வாசிக்கும்படியாக மாற்றுகிறது.

இரண்டே இரண்டு கதைகள் கொண்ட மிகச்சிறிய தொகுப்பான இந்த நூலின் இரண்டாவது கதை கருநீலம். “சதி சாவித்திரி களும் கண்ணியமான உத்தம புருஷர்களும் இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் ஏற்படக்கூடிய ஒழுக்க மீறல்களுக்கு நான் பொறுப்பல்ல” என்கிற முன் அறிவிப்போடு தொடங்குகிற இக்கதை காதலாகி கசிந்து உருகிய ஒரு பேரிளம் பெண்ணைப் பற்றியது. உணர்ச்சியற்ற வாழ்வொன்றினை நோக்கி பயணப்படுகிற ஒரு துறவிக்கும், கணவன் குடும்பம் என வாழ்ந்து வருகிற ஒரு பெண்ணுக்கும் இடையிலான உணர்ச்சிகளின் ஊசலாட்டத்தை பற்றி மிகுந்த நுட்பமான மொழியில் மீரா கதையாக்கியுள்ளார்.

தமிழில் பெண்களுக்கான புனை உலகத்தை அம்பை சல்மா லீனா மணிமேகலை குட்டி ரேவதி சுகிர்தராணி கிருத்திகா போன்ற பலரின் படைப்புகள் மூலமாக அறிந்திருந்தாலும் மீராவின் எழுத்துக்கள் பெண்களின் அக உலகின் பல்வேறு கோணங்களை மிக ஆழமாக வெளிப்படுத்தியது.

கே ஆர் மீராவின் எழுத்துக்களில் இன்னும் ஒரு சில புத்தகங்கள் வாசிப்பிற்காக இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக அவைகளையும் ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்கின்ற எண்ணத்தை இந்த சிறு நூல் ஏற்படுத்தி விட்டது.

கே ஆர் மீரா. சாகித்திய அகாதமி பெற்ற மலையாள மொழியின் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர். தற்போது கோட்டயத்தில் வசித்து வருகிறார். இவரது நூல்களில் பல தமிழில் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கின்றன.

ஜெயகாந்தனின் புகழ் பெற்ற பெண் கதாபாத்திரங்களில் இருந்து கே ஆர் மீராவின் கதை உலகில் வருகின்ற பெண்கள் வரைக்குமான தனித்துவமான பெண்களின் அக உலகு பற்றியே உண்மையில் ஒரு நூலை எழுதலாம்.

உண்மையில் நாம் அறிந்த பெண்கள் என்று எவருமே இல்லை. பெண்களைப் பற்றி நாம் அறிந்ததாக புரிந்து கொண்டிருப்பவை அனைத்துமே கற்பிதம்தான். படைப்பின் விசித்திரமும் அதுதான். நமக்கான ஏதோ ஒன்றை அவர்களிடத்தில் நாம் தேடிக் கொண்டிருப்பதை தான், நாம் அறிந்த பெண் உலகாக‌ நாம் புரிந்து வைத்திருக்கிறோம். அதுவெல்லாம் அவ்வாறு இல்லை என நம் நெற்றி பொட்டில் அடித்தாற் போல் விரிகிறது கே ஆர் மீராவின் புனைவுலகம்.

2024 – சென்னை புத்தகக் கண்காட்சி-பெற்றதும்,கற்றதும்

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஒரு நாள் மட்டுமே புத்தக கண்காட்சியில் செலவிட முடிந்தது உண்மையில் வேதனையை தந்தது. வழக்கமான சென்னை புத்தகக் கண்காட்சி கொண்ட சிறப்புகளை ஒருபுறம் இந்த புத்தக கண்காட்சியும் பெற்றிருந்தாலும், மறுபுறம் புத்தகக் கண்காட்சியில் இன்னும் சீர்படுத்தப்படாமல் தொடரும் தவறுகள் இந்த வருடமும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. தூய்மையற்ற கழிவறை, என்னை போன்றவர்கள் நடக்கவே முடியாத ஏற்றத்தாழ்வு உடைய மரப்பாதை, மிகச் சிறிய நூல் அரங்குகள் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டியவை நிறைய உள்ளன. சென்னை வெள்ளமும், ஊருக்கு ஊர் கண்காட்சி போடுகின்ற நிலையும் புத்தக விற்பனையை பெரிதும் இந்த வருடம் பாதித்ததாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிறைய நல்ல புத்தகங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. எந்த புது புத்தகத்தை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது புத்தகக் கண்காட்சியில் நாம் பெறுகின்ற மகிழ்வும் துயரும் ஒரே நேரத்தில் வந்தடைகிற மகத்தான அனுபவம். கையில் இருக்கின்ற பணம் புத்தகத்தின் விலை என்கிற இருபக்க தராசு தட்டுகளை வைத்து மனம் மேற்கொள்ளும் விசித்திர விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தின் கண்காட்சியில் நிகழ்கிறது.

நீண்ட நாட்களாக ‘தமிழ்த் தேசியப் போராளி தமிழரசன்’ பற்றிய முழுமையான தொகுப்பு ஒன்றினை தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கனவு இந்த வருடம் தமிழ்நேயன் தொகுத்தளித்த “தோழர் தமிழரசன் விடுதலை வீரன்” என்கிற தொகுப்பு நூல் மூலம் நிறைவேறியது.

அதேபோல் கான்சாகிப் யூசப் கான் மருதநாயகம் பற்றிய விடியல் பதிப்பகம் வெளியிட்ட “கிளர்ச்சியாளர் யூசுப் கான்” என்கின்ற விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலும் பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்கிற ஆவலைத் தோன்றியது.

எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள அலெக்ஸ் ஹேலியின் ” வேர்கள்” முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட கேசவமணி மொழிபெயர்ப்பில் லியோ டால்ஸ்டாயின் “அன்னாகரீனினா” போன்றவை இந்த வருடம் நான் வாங்கிய நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமீபத்திய சாகித்திய அகாதமி விருது வாங்கிய தேவி பாரதி அவர்கள் எழுதிய “நீர்வழி படூஉம்” திருச்செந்தாழை எழுதிய ” ஸ்கெட்சஸ்” முனைவர் ப கிருஷ்ணன் அவர்கள் மொழி பெயர்த்து சிந்தனை விருந்தகம் வெளியிட்டிருக்கிற “கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் ராணுவ நினைவலைகள்” அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதியிருக்கிற “டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை” ,நா. வீரபாண்டியன் எழுதியுள்ள “நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்த கோபம்” நண்பர் காளி பிரசாத் பரிந்துரைத்து நான் வாங்கிய சாம்ராஜ் எழுதிய “கொடைமடம்” போன்றவை இந்த வருடம் புத்தக கண்காட்சியில் நான் கண்டடைந்த முக்கியமான படைப்புகள்.

எனது தம்பி எழுத்தாளுமை அகர முதல்வன் பரிந்துரையின் பேரில் இந்த வருடம் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கே ஆர் மீரா எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வாங்கியுள்ளேன். வசீகரமான படைப்புலகம்.

இதன் நடுவே வைரமுத்துவின் “மகாகவிதை”, பரகால பிரபாகர் அவர்களின் கட்டுரை தொகுப்பான “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” போன்றவையும் படிக்க ஆர்வத்தை துண்டுபவைகளாக உள்ளன.

எப்போதும் சென்னை புத்தக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது என்பது எனது ஆசான் ‘எஸ்.ராமகிருஷ்ணன்’ அவர்களை சந்தித்த நாள் முதல் ஒரு தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. அவரை ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் தேசாந்திரி அரங்கில் சந்திப்பதும், இலக்கியம் பேசிக் கொண்டிருப்பதுமான நிகழ்வு இந்த வருடமும் இனிதே நடந்தது.

நான் வாங்க முடியாத சில புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் இறுதி நாளன்று என் அன்புத் தம்பி பிரபா மூலம் வாங்கிக் கொண்டு குளிர் இரவில் அதை சுமந்து தஞ்சையில் என்னிடம் பாதுகாப்பாக சேர்த்த என் உயிர் இளவல் தமிழம் செந்தில்நாதன் நன்றி. நான் கொடுத்த நூல் பட்டியலை வைத்து ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகம் வாங்கி அன்பு சேர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையத்தை சேர்ந்த என் தம்பி பிரபாவிற்கும் அன்பு முத்தங்கள்.

எனது அன்பு அண்ணன் பாலமுரளி வர்மன் எழுதிய “வீரப்பன் பெயரால் மனித வேட்டை” என்கின்ற நூலும் எனது அன்புத் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எழுதிய “யார் பிஜேபியின் பி டீம் ” என்கின்ற நூலும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது பெரு மகிழ்ச்சியை தந்தது.

மானுடம் கொண்டிருக்கின்ற எல்லா விதமான கீழமை உணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெறவும், பயமும், குழப்பமும் நிறைந்த இருண்மையான எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடவும், நமக்கு முன்னால் இருக்கின்ற ஒரே ஒரு வெளிச்ச வீதி புத்தகங்கள் படிப்பது தான். வெளிச்சத்தை தேடி கண்டறிவது தானே மனித வாழ்க்கையின் ஒரே ஒரு பொருள்..?!

தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய 2 தன்னிகரற்ற நூல்கள்.நூல் வீதி 7

“பண்டைப் பெரும்புகழ் உடையோமா ? இல்லையா..!

பாருக்கு வீரத்தை

சொன்னோமா ? இல்லையா..!”

என பாவேந்தரின் வரிகள் அண்ணன் சீமான் குரலில் வெடித்து எழும்பும்போது அவர் முன் திரண்டிருக்கும் நமது உடலில் உள்ள மரபணுக்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றன. ‘உலகின் மூத்த குடி தமிழினம். உலகை ஆண்டது எம்மினம்’ என்றெல்லாம் பேசுவது வெறும் பெருமிதப் பிதற்றல்கள் அல்ல. வரலாறு அவ்வாறாகத்தான் சொல்கிறது. வரலாற்றை ஒட்டி நிகழ்கிற அறிவியல் ஆய்வுகளும் அவ்வாறாகத்தான் சொல்கின்றன. உலகத்தின் மாபெரும் அறிஞர்கள் எல்லாம் தமிழர் என்கின்ற இனம் தான் இந்த பூமி பந்தின் மூத்த இனம் என்று சொல்கிறார்கள்.

“யாதும் ஊரே.. யாவரும் கேளீர்..” என உலகம் முழுக்க சொந்தமாக நினைத்து பாடிய நமது முன்னோன் சொல் காற்றில் கரையக்கூடிய கற்பூரம் அல்ல. உலகம் முழுக்க பயணப்பட்டு, பக்குவப்பட்டு விரிந்தெழுந்த தமிழ் இன மூத்தோனின் முதற்குரல். உலகம் முழுக்க பரந்து, விரிந்து, ஆண்டு, வரலாற்றின் பக்கங்கள் முழுக்க பெருமை பதக்கங்களை சூடிக்கொண்ட ஒரு இனம் காலப்போக்கில் குறுகி கடற்கரை ஓரங்களில் குற்றுயிரும், கொலையுருமாக குன்றி எஞ்சிப் போனது எதனால் என்பதை வரலாற்றியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆய்வு செய்த பெருமக்கள் இந்த மண்ணில் மிக மிக குறைவு. தமிழர் என்ற மூத்த இனத்தின் வெற்றிகளையும், பெருமைகளையும் பேச தமிழ் மொழியில் ஆயிரமாயிரம் இலக்கியப் பிரதிகள் காலங் காலமாய் தோன்றி கொண்டே இருக்கின்றன. ஆனால் இன்றோ ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு அடிமை தேசிய இனமாக மாறி இருக்கிற தமிழர் என்கிற இனத்தின் வீழ்ச்சியை ஆய்வு செய்கிற படைப்புகள் தான் இந்த இனம் மீள் எழுச்சிக் கொள்வதற்கான ஊக்கக் கருவிகளாக இருக்க முடியும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் எல்லா பயணங்களிலும் சுமக்கும் புத்தக வரிசைகளை அருகில் இருந்து பார்க்கின்ற அனுபவம் எனக்கு உண்டு.அந்த வரிசையில் தவறாமல் இடம்பெறும் புத்தகங்கள்

1. தமிழன் அடிமையானது ஏன் ? எவ்வாறு..?

2. தமிழர் மேல் நிகழ்ந்தப் பண்பாட்டு படையெடுப்புகள்.

இந்த இரண்டு நூல்களின் முக்கியத்துவம் போகிற போக்கில் ஒரு கட்டுரையில் விவரிக்க முடிகிறவை அல்ல. அண்ணன் சீமான் அவர்கள் புத்தகங்களைப் பற்றி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது “தமிழர் என்கின்ற இனத்தின் விடுதலைக்காக களமாட வருபவர்கள் இந்த இரண்டு நூல்களையும் முழுமையாக மனனம் செய்து மனதில் ஏற்றி விட வேண்டும்” என்றார்.

அப்படிப்பட்ட அறிவுத் தகவல்களை, வீழ்ந்த இனம் எழுச்சிக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக இந்த இரண்டு நூல்களும் பேசுகின்றன. இந்த இரண்டு நூல்களையும் எழுதியவர் மாபெரும் தமிழ் அறிஞர், மேனாள் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெருந்தமிழர் ஐயா க‌.ப. அறவாணன் அவர்கள்.

1987 ல் வெளியான தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள் என்ற நூலைப் பற்றி அக்காலத்தில் மேற்கோள் காட்டி பேசாத தலைவர்களே இல்லை எனலாம். பல்லாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்த இந்த நூல் யார் வேண்டுமானாலும் படிப்பதற்கு ஏதுவான எளிமையான மொழி கொண்டது.

இந்த நூலைப் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் சொல்லும்போது

” தமிழர் பல நூற்றாண்டுகள் பழமை உடையவர் .இலக்கிய இலக்கணச் செழுமை உடையவர். உயர்ந்த சமூக விழுமியங்களை உடையவர். சீரார்ந்த நுண் கலைகளை உடையவர். அஞ்சா நெஞ்சுடையவர். எனினும் கிபி மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழர் அயற் புல ஆட்சிக்கு இலக்காயினர்.

ஆரியம் /களப்பிரம் /பல்லவம் எனும் மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் தமிழை அடிமைப்படுத்தின. இது எவ்வாறு நிகழ்ந்தது..?? என வினா எழுப்புகிறார்.

இந்த வீழ்ச்சியை பற்றி ஆய்வு செய்யும் ஐயா அவர்கள் “தமிழர் மொழி அடிப்படையில் ‘நாம் தமிழர்’ என்று ஒன்றாய் குவியாது, சேரர், சோழர், பாண்டியர், வேளீர் என பல வேறுபாடுகள் மற்றும் குடி அடிப்படையில் பிரிந்திருந்தனர்.” என்கிறார். மேலும் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் அடித்தளம் வலியுறுத்தும் மிக முக்கியமான செய்தி.. “தமிழர் மொழி அடிப்படையில் ஒன்று பட வேண்டும் என்பதுதான்” என்று கூறும் இந்த நூல் தமிழில் இயற்றப்பட்ட நூல்களில் ஆகச்சிறந்த நூல்களில் ஒன்று.

முதல் அத்தியாயத்திலேயே நிறைய தகவல்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் மிகுதியான திரையரங்குகள், சாராயக்கடைகள் கசாப்புக் கடைகள், தொழு நோயாளிகள் அதிகம் என கூறும் ஐயா அறவாணன் அந்தக் காலத்தில் மலிந்து கிடந்த லாட்டரி சீட்டு மோகத்தையும் இடித்துக் காட்ட தவறவில்லை. தமிழர் எப்போதும் பிறரை சார்ந்து இருக்கும் போக்கினை வேதனையோடு பகிரும் ஐயா, இந்திரா காந்தி இறந்த போது இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொண்டது பிற மாநிலத்தை காட்டிலும் (3) தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் (6) தான் எனக் கூறி அதிர வைக்கிறார். போர்க்குணம் இல்லாமல் தாழ்வு மனப்பான்மை கொண்டமை, அயலாரை, அயல் பண்பாட்டை கண்மூடித்தனமாக போற்றும் குணம், தொலைநோக்கு இல்லாமல் போனது என்கின்ற நான்கு காரணங்கள் தான் தமிழினம் வீழ்ச்சிக்கு முக்கியமானவை என ஐயா வரையறுக்கிறார். அதற்கு ஆதாரமாக மாமேதை காரல் மார்க்ஸ்‌ “தமிழர்களைப் பற்றி ஆங்கிலேயர்கள் தென்னிந்திய மக்களை அச்சுறுத்தி எளிதில் அடிமைப்படுத்தியது போல பஞ்சாபியரை அச்சுறுத்தி வெற்றி கொண்டு விடலாம் என தவறாக கணித்து விட்டார்கள்..” என்று எழுதிய வரலாற்றுக் குறிப்புகளையும் சான்றாக காட்டும் ஐயா 1311 ஆம் ஆண்டு மாலிகாப்பூர் படையெடுப்பின்போது வெறும் செய்திகளை கேட்டு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களைப் பற்றியும் தகவல்களை தருகிறார். தமிழ்நாட்டின் மீது நிகழ்ந்த ஆயிரக்கணக்கான அரசியல் படையெடுப்புகள் காரணமாக தமிழர் பண்பாட்டில் ஊடுருவி நிற்கின்ற நடைமுறைகள் குறித்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்த நூல், பண்பாடு என்றால் என்ன என்பதை மிக ஆழமாக ஆய்வு செய்கிறது. இந்தியப் பெருநிலம் முழுக்க கிமு 1500 ஆண்டு வாக்கில் பரவி இருந்த ஒரு இனம் படிப்படியாக தமிழ்நாடு என்கின்ற சிறிய நிலப்பகுதிக்குள் எவ்வாறு குறுகி சிக்குண்டது என்பதை பற்றி இந்த நூல் முழுக்க வரலாற்று செய்திகள் மற்றும் பன்னாட்டு அறிஞர்கள் தந்த கருத்துக் குவியல்கள் நிரம்பித் ததும்புகின்றன.

அதேபோல் ‘மொழிக் காப்பியம்’ என்கின்ற இரண்டாவது அத்தியாயத்தில் மொழி உணர்வை இழந்த தமிழர்களின் நிலையை ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் , கிரேக்கர்/ இஸ்லாமியர்/ தெலுங்கர்/ ஐரோப்பியர் என்கிற ஒவ்வொரு அயலார் படையெடுப்பின் போதும் இந்த நிலம் அடைந்திருக்கின்ற பண்பாட்டு மாற்றங்களை, தமிழர்கள் அடைந்த உளவியல் கேடுகளைப் பற்றி பற்றி நுட்பமாக ஆய்வு செய்கிறார்.‌ தமிழ் பண்பாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்ற அயலார் பண்பாட்டுப் புள்ளிகளை குறிப்பிட்டுக் காட்டும் இந்த நூல், நம் பண்பாட்டில் விரவி இருக்கின்ற மூடத்தனங்களையும், பிற்போக்குத்தனங்களையும் மிக அழுத்தமாக சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாக “நாயக்கர் படையெடுப்பில் நீங்கா படிமங்கள்” என்கின்ற அத்தியாயம் மிக மிக முக்கியமானது. தெலுங்கரின் ஆதிக்கத்தினால் தமிழர் இழந்த நிலம்/ உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயம் ஆழ்ந்து ஆய்வு செய்கிறது. அயல்நாட்டில் இருந்து நம் நாட்டில் மதம் பரப்ப வந்த துறவிகள் தமிழர்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்ற குறிப்புகளை சேகரித்து அவற்றின் வாயிலாக தமிழரின் பண்பாடு அடைந்திருக்கின்ற வீழ்ச்சியை ஆய்வு செய்யும் இந்த நூல்

தமிழர் வரலாற்றைக் கொண்டு, சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழின மீட்சிக்கு களம் புகும் வீரர்கள் படிக்க வேண்டிய அடிப்படை ஆவணமாக அமைகிறது.

இந்த நூலின் தொடர்ச்சியாக ஐயா க.ப. அறவாணன் அவர்களின் தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? என்கின்ற 2002 ல் வெளியான மற்றொரு முக்கியமான நூலும் அமைகிறது.

அடிமை என்ற சொல்லை ஆய்வு செய்வதிலிருந்து தொடங்கும் இந்த நூல்‌ தமிழரைப் போல் இல்லாமல் ஜப்பானியர், தாய்லாந்தினர், சீனர் போன்ற மற்ற இனத்தார் எப்படி வேற்று இனத்தாருக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொண்டார்கள் என்பதை பற்றி வரலாற்றுத் தகவல்களோடு விரிவாக ஆய்வு செய்கிறது. பிறகு தமிழர் அடிமை வரலாறு என்ற தலைப்பில் பழந்தமிழகத்தில் அடிமை முறை எவ்வாறு இருந்தது என்பதற்கான‌ சங்க இலக்கிய , வள்ளுவச் சான்றுகளை பேசுகிறது. தமிழர் அரேபியருக்கும், தெலுங்கருக்கும், ஐரோப்பாவினருக்கும் எப்படி அடிமை ஆனார்கள் என்பதை விரிவாக ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் அதற்கு ஆதாரமாக பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை பன்மொழி அறிஞர்கள் நூல்களில் மற்றும் சுய வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து பயன்படுத்துகிறார். தமிழர் அடிமை வரலாறைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த இந்த நூல் அதற்கான காரணங்களான தமிழர் தொலைநோக்கு இல்லாமல் போனது, கல்வி அறிவின்மை, தமிழர் பின்பற்றிய மதங்கள், பெண்ணடிமை, மன்னனுக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லாமை, அறிஞர் பெருமக்கள் அநீதி இழைக்கபடும் போது போராடாமல் இருந்தது, தமிழ் மன்னர் இடையே ஒற்றுமை இல்லாமை, வெள்ளை நிற மோகம் போன்ற பல காரணங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமில்லாமல், இதற்கான தீர்வழிகளையும் மூன்றாம் பகுதியில் அலசுகிறது. தன்னம்பிக்கை இன்மை தாழ்வு மனப்பான்மை, அடிமை மனப்போக்கு ஆகிய மூன்றும் தமிழர் வரலாற்றில் திட்டமிட்டே நுழைக்கப்பட்டன என அரசியல் பொருளாதார சமுதாய காரணங்களை முன்வைத்து நிறுவுகின்ற இந்த நூல் தமிழர் வளம் பெற வழிகளாக அறிவின் ஆட்சி நடைபெற வேண்டும் என வரையறுக்கிறது.’ கட்சி வழி அரசியல் ஒரு சாய்ஸ்( வைரஸ்) நோய்’ என அடித்துச் சொல்லும் இந்த நூல் உலகமயமாதலின் கேடுகளைப் பற்றியும் நுகர்வு கலாச்சார படையெடுப்பை பற்றியும் தொலைக்காட்சி மோகத்தைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்கிறது.

இந்த நூலின் நோக்கம் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் கூறும்போது..

“நம்மைப் பற்றி சிறுமைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. அவற்றை அறிந்து கொள்ள வேண்டும், ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்பதற்காகவும் தவறுகளுக்காக வருந்துவதற்காகவும், வருங்காலத்தில் அவை மீண்டும் மீண்டும் நிகழாமல் இருக்க திருந்துவதற்காகவும், மேற்கொள்ள வேண்டிய தற்காப்புக்காகவும் இவை எழுதப்படுகின்றன.” என்கிறார்.

இந்த இரண்டு நூல்களிலும் பல நூறு செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. முக்கியமான இந்த இரண்டு புத்தகங்களை படிப்பவர் தமிழர் வரலாற்றைப் பற்றி மாபெரும் தெளிவை அடைவார்கள்.

புரட்சியாளர் லெனின் கூறுவது போல “வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சிக் கொள்ள முடியாது” என்பதை உணரும் காலகட்டத்தில் வாழ்கின்ற நாம், நமக்கென இருக்கின்ற வரலாற்றின் அடிப்படைச் செய்திகளை ஐயா அறவாணன் எழுதிய இந்த இரண்டு மாபெரும் நூல்களின் வாயிலாக கற்க வேண்டியது காலத்தின் கடமையாகும்.

பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் 1941 இல் பிறந்தவர். ஐயா தமிழியம் சார்ந்தும் கல்வியியல் சார்ந்தும் தமிழர் வரலாறு அரசியல் தமிழரின் உளவியல் இன்னும் பல்வேறு துறைகள் சார்ந்தும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தமிழரின் அற உணர்வை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து “அற இலக்கிய களஞ்சியம்” என்ற தொகுப்பு நூலை உருவாக்கியதில் ஐயா அறவாணனின் பங்கு முதன்மையானது.

ஐயா எழுதிய ‘ஈழம் தமிழரின் தாயகம்” என்கின்ற நூல், பிழைக்க போன நாட்டில் தமிழர்கள் ஏன் தனி நாடு கேட்கிறார்கள் என கேட்கும் அறிவற்றவர்களுக்காக எழுதப்பட்ட அறிவாயுதம். அவரது “சமணம் வளர்த்த தமிழ் இலக்கணம்” மிகச்சிறந்த ஆய்வுப் படைப்பு. தன் 27 ஆம் வயதில் கல்லூரி முதல்வரான ஐயா நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர். அவரது காலத்தில் எனது பெரிய தந்தை எழுத்தாளுமை ச. கல்யாணராமன் அவர்களின் பெரும் முயற்சியால், கும்பகோணத்திற்கு வந்து என் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தது எனது வாழ்நாள் பெருமை. ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ஒவ்வொரு மணித்துளியும் வீணாக்காமல், தன் வாழ்நாள் முழுக்க தமிழரின் உயர்வுக்காக உழைத்த ஐயா அறவாணன் தன் வெற்றியின் ரகசியமாக “பொறுத்துப்போ, புறக்கணி, கடந்து போ..” என்கிற மூன்று கருத்துக்களை முன் வைக்கிறார். “பேசுவதைக் குறை. முடிந்தால் நிறுத்து.” என போதிக்கும்

ஐயா அவர்கள்

“முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!”என முழங்கினார்.

உண்மையில் தமிழர் இனத்தில் தோன்றிய தனிமனித வரலாறு ஐயா க.ப. அறவாணன் அவர்கள்.2018 ல் நிகழ்ந்த ஐயாவின் மறைவிற்குப் பிறகு அவரது துணைவியார் அம்மா தாயம்மாள் அறவாணன் அவர்கள் “தமிழ்க்கோட்டம்” பதிப்பகம் மூலம் ஐயாவின் எழுத்துக்களை தொடர்ந்து பதிப்பித்து மாபெரும் தமிழ்ச்சேவை ஆற்றி வருகிறார்.

“பிறந்த ஊரில் கூட பாசை மாறி பேசும் காக்கைகள் உள்ளன. அவை காக்கைகள்தான். அப்படித்தான் மாறிப் பேசும். குயிலாக இருந்தால் மாறுமா ? மாற நேர்ந்தால் மடிந்து போகும் குயில் சாதி!

தமிழர் குயிலாக இருக்கட்டும் வேழமாக பிளிரட்டும்! வேங்கைப் புலியாக உறுமட்டும்! “

என தன் ஆன்மாவிலிருந்து எழுதிய பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் அவர்களது படைப்புக்கள் இருண்டுக் கிடக்கும் தமிழர் மீள் எழுச்சிக்கான வரலாற்று வெளிச்சங்கள்.

தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள்.- க.ப.அறவாணன்/ பக்கங்கள் 273./ விலை ரூ 300

தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு ? – க.ப.அறவாணன் /பக்கங்கள் 336. விலை ரூ200.

ஐயா அறவாணன் அவர்களின் அனைத்து நூல்களையும் வெளியிடுவது

தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, சென்னை.

எஸ் ராமகிருஷ்ணன்-உள்ளொளி நிறைந்த எழுத்தாளுமை.நூல் வீதி – 6

“அந்தக் காகிதங்கள் நனைந்த போது நானும் நனைந்தேன். அந்த காகிதங்கள் போல நானும் மிருதுவாக இருக்கிறேன். ஆனாலும் இந்த பெரு மழையிலும் என் புத்தகங்கள் நனைந்தனவே ஒழிய, என் ஒரு சொல் கூட நனையவில்லை. காகிதத்தை தான் மழையால் நனைக்க முடியுமே ஒழிய, எனது சொற்களை அல்ல”

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி பதிப்பகம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்தது. பல நூறு புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி விட்டன. இது பற்றிய ஒரு உருக்கமான பதிவினை எஸ்.ரா சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவத்தை குறித்து அவரது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதுதான் தன் சொற்களைப் பற்றிய மேற்கண்ட கருத்தை எஸ் ராமகிருஷ்ணன் பேசியிருந்தார்.

எழுத்தாளன் என்பவன் சொற்களால் ஆனவன்.எழுத்துக்களின் கூட்டிசைவினால் உருவாகும் சொற்களின் வெளிச்சம் எழுத்தாளனின் அகத்திலும் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது.

நெல்மணிகளை சேகரித்து வைத்திருக்கும் பழங்காலத்து பத்தாயம் போல எழுத்தாளன் சொற்களை தானியங்களைப் போல சேகரித்தும் அவற்றை உரிய இடத்தில் விதைத்தும் காலத்தின் வீதிகளில் நடந்து கொண்டே இருக்கிறான்.

எஸ்.ரா சொற்களால் ஆனவர். தன் படைப்புகளில் உள்ளார்ந்த ஆழமும், எளிமையின் வசீகரமும் கொண்ட சொற்களால் நிறைந்தவர். 90களில் தமிழ் உரைநடையில் நிகழ்ந்த பின் நவீனத்துவம் மற்றும் மாய எதார்த்தவாதம் போன்றவைகளின் தாக்கத்தினால் தமிழ் நவீன இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் சில சிறுகதை தொகுதிகளை வெளியிட்டிருந்த எஸ் ராமகிருஷ்ணன் தனது முதல் நாவலான ‘உப பாண்டவம்’த்தை வெளியிடுகிறார். கதை நம் அனைவருக்கும் தெரிந்த மகாபாரதக் கதை தான். அந்த கதை சம்பவங்களை வைத்துக்கொண்டு மகாபாரத இதிகாசத்தின் மீது தன் வசீகரமான மொழியில் புனைவு உலகு ஒன்றினை எஸ்.ரா உருவாக்கி இருக்கிறார். மகாபாரத இதிகாசத்தின் கதாபாத்திரங்கள் அவரவருக்கான நீதியையும், துயரங்களையும், ஆசைகளையும், மன ஓட்டங்களையும் ஏக்கம் வலியும் நிறைந்த மொழிகளில் வெளிப்படுத்தும் இந்த நாவல் தமிழ் நாவல் உலகில் தனித்துவமானது. அடர்த்தி நிறைந்த சொற்கள் மூலம் வடிவமைக்கப்படும் கதைக்களம் ஒரே சமயத்தில் நாட்டார் வழக்காற்றியல் தளத்திலும், புராண இதிகாச தளத்திலும் பயணிப்பது இந்தப் படைப்பை தமிழில் முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது.

இந்தப் படைப்பில் காணப்படும் ஒரு சித்திரம்..

“நாய்க்கு அடையாளம் குரல். குரலற்ற நாய் ஓடிக்கொண்டே இருந்தது”

இப்படி பக்கத்திற்கு பக்கம் ஆழமான சொற்கள் மூலம் ஒரு படைப்பை பிரம்மாண்டமானதாக மாற்றி இருக்கிற எஸ்.ரா இன்று தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை.

எனக்கு அவரது படைப்புகளில் மிகவும் பிடித்தது அவரது இரண்டாவது நாவலான “நெடுங்குருதி”. தன் வெப்பம் மிகுந்த கரிசல் மண்ணை பற்றி எஸ்.ரா எழுதிய முதல் நாவல் இது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு கிராமமாக வேம்பலை என்கின்ற ஒரு புனைவு சிற்றூரினை உருவாக்கி வெக்கை நிறைந்த அந்த ஊரின் மக்களாக திருட்டு கொள்ளைகளுக்கு பேர் போன வேம்பர்கள் என்கிற கூட்டத்தை உருவாக்கி , சுவாரசியமும், வினோதமும் நிறைந்த கதை மாந்தர்களை எஸ்.ரா தன் படைப்பு முழுக்க உலவ விட்டிருப்பார்.

எறும்புகள் கூட ஊரை விட்டு விலகும் வெக்கை நிறைந்த ஒரு கோடைகால பகல் பொழுதை விவரிக்கின்ற காட்சி தமிழில் வேறு எந்த படைப்பிலும் காண முடியாதது.

“தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அழிந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. காலை நேரத்தில் அவை மண் சுவர்களை விட்டு மெதுவாக கீழ இறங்கி தலையை செலுத்தியபடி தெருவில் நீண்ட தனிமையில் பயத்தோடு கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதை பார்த்துக் கொண்டே இருந்தான்.”

ஆகச் சிறந்த ஊர் சுற்றியான எஸ.ரா இந்திய பெருநிலம் மட்டும் இல்லாமல் உலகத்தின் முக்கியமான பகுதிகளுக்கு பயணப்பட்டு இருக்கிறார்.

எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் காட்சி மொழியிலானவை. திரைமேதை பாலு மகேந்திராவின் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் போல பேரழகும் , தெளிவும் நிரம்பிய முகங்களை கொண்டவை.

தமிழில் முதன்முதலாக எஸ் ராமகிருஷ்ணன்தான் அதிதீவிர வாசகர்கள் மட்டுமே படிக்க முடிகிற நவீன இலக்கியத்திற்கும், எளிய வாசகர்கள் படிக்கும் வெகுஜன படைப்புகளுக்கும் உள்ள இடைவெளியை அழித்தவர். அவரது நவீன இலக்கிய செழுமை நிறைந்த “துணையெழுத்து” கட்டுரைத் தொடர் வெகுஜன பத்திரிக்கையான ஆனந்த விகடனில் வெளியாகி பெரும் புகழ் அடைந்தது ‌. அதன் பிறகு அதே பத்திரிக்கையில் தமிழின் நவீன இலக்கிய முகங்களை பற்றி அவர் எழுதிய “கதாவிலாசம்” அதுவரை வெகுஜன வாசகர்கள் அறியாத தமிழின் முக்கிய எழுத்தாளர்களை, அவர்களது படைப்புகளை தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தது.

‘துணையெழுத்து’ தொடர் விகடனில் வெளியான காலத்தில் ஒவ்வொரு வாரமும் படித்துவிட்டு பல மணி நேரம் உறைந்து, அமர்ந்து விடுவேன். பல சமயங்களில் நெகிழ்ச்சியுடன், கண்கலங்கி இந்த உலகத்தில் இத்தனை வகை எளிய மனிதர்கள் அறத்தோடு இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே சிலிர்த்த பொழுதுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அப்படி வாசகர்களை சிலிர்க்க வைத்து தன் வயப்படுத்திய எஸ்.ரா தமிழில் உலக சினிமா குறித்து மிகப் பெரிய தரவுகள் கொண்ட 700 பக்கங்களுக்கும் மேற்பட்ட “உலக சினிமா” என்கின்ற மிக முக்கியமான நூலை இயற்றியவர். அது திரைத்துறையை ஆழ்ந்து நேசிக்கும் அனைவருக்குமான என்சைக்ளோபீடியா.

அவரது புகழ்பெற்ற நாவலான “சஞ்சாரம்” அழிந்து போன கரிசல் மண்ணின் நாதஸ்வர கலைஞர்களை பற்றியது. 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வாங்கிய இந்த நூல் சாதியச் சமூகம் கலைஞர்களிடம் நுட்பமாக கடைபிடிக்கும் ஏற்றத்தாழ்வுகளை இலக்கியத் தன்மையோடு பேசிய தமிழின் மிக முக்கியமான நாவல்.

அவரது ‘இடக்கை’ மறைந்த மன்னர் அவுரங்கசீப்பை பற்றியது. நீதி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவரின் குரலாக ஒலிக்கும் இந்த நூல்‌ செவ்வியல் தன்மை கொண்டது. திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட இடக்கைப் பழக்கம் உடைய சாமர் இனத்தைச் சேர்ந்த தூமகேது‌ என்ற ஆட்டு தோல் பதப்படுத்துபவன், மன்னர் ஔரங்கசீப்பின் அந்தப்புரத்தின் பணியாள், திருநங்கை அஜ்ரா பேகம் என்பவரை பற்றியும் பேசும் இந்த நூல் “the king can do no wrong” (அரசு அதிகாரம் தவறு இழைக்காது/அரசு அதிகாரம் தவறிழைத்தாலும் அது சரியே) என்ற முதுமொழியை பற்றி விவாதிக்கிறது. இந்த நூல் முழுக்க பண்டைய இந்தியாவின் நீதி முறைகளை பற்றி விவாதிக்கும் எஸ்.ராவின் மொழி அசாத்தியமானது.

2021 இல் வெளிவந்த “மண்டியிடுங்கள் தந்தையே” தமிழில் வெளியான ரஷ்ய நாவல். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பண்ணையில் நிகழ்பெற்ற சம்பவங்களை முன்வைத்து ரஷ்யாவில் அன்று நிலவிய குளிர்கால பருவநிலை, பண்ணை சூழல், அடிமைமுறை, காதலின் துயர் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த படைப்பு போல இந்திய மொழிகளில் வேறு ஏதும் இதுவரை எழுதப்படவில்லை.

இவை மட்டும் இல்லாமல் துயில் நிமித்தம், பதின், உறுபசி என பத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், 20க்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளையும் , உலகத் திரைப்படம், சிறார் இலக்கியங்கள், உலக இலக்கியங்கள், பல நாட்டு எழுத்தாளர்களின் வாழ்வியல் போன்ற பல துறைகளை சார்ந்து பல கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் படைப்பாளர்.

எனது இந்தியா,மறைக்கப்பட்ட இந்தியா என்கிற இரண்டு முக்கிய புத்தகங்கள் இந்திய பெருநிலத்தின் வரலாறு மற்றும் முக்கிய செய்திகளை உள்ளடக்கியவை. இந்தியாவை தமிழில் புரிந்து கொள்ள இதுவரை இது போன்ற இரண்டு தொகை நூல்கள் தமிழில் இல்லை. சண்டைக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய அவர் தமிழின் நூறு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து இரண்டு பாகங்களாக தொகை நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறந்த படைப்புகளை தொகுத்து “என்றும் சுஜாதா” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். அட்சரம் என்கின்ற அவர் நடத்திய இலக்கிய இதழ் தயாரிப்பு வடிவத்திலும், உள்ளடக்க அழகிலும் இன்றும் ஒரு எடுத்துக்காட்டு. அவரது நூல்களை “தேசாந்திரி பதிப்பகம்” வெளியிட்டு வருகிறது.

தன் கதைகளைப் பற்றி எஸ்.ரா “வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லாமல் மீண்டும் மீண்டும் எதிர்பாரான்மையை சந்திக்கும் இந்த உலகோடு ஆடிய ஒரு தீரா விளையாட்டான பகடை ஆட்டம்” என்கிறார்.

தமிழின் ஆகச்சிறந்த எழுத்துக்களை படிக்க விரும்பும் ஒரு எளிய வாசகனுக்கு ஒரு மிகச்சிறந்த வாயிலாக எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் மிளிர்கின்றன. அவரது வாசகன் என்கிற முறையில் எனக்கு அவரைத் தவிர வேறு யாரும் அவரைப் போல என் வாசிப்பு பசியை ஆற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவரது எழுத்துக்களுக்காக நான் காத்திருக்கிறேன். அவரும் என்னை மட்டுமல்ல என்னை போன்ற பலரை பசியாற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் அவர் ஏந்தும் அவரது இலக்கியம் ஒரு வகையான காப்பிய மணிமேகலை ஏந்திய அமுதசுரபி தான்.

அவர் எழுதிய உப பாண்டவத்தில் ஒரு பத்தி “

அஸ்தினாபுரம் ஒரு கனவு. எங்கள் நாக்கு அசைய அசைய இந்த நகரம் விரிவு கொள்கிறது. நாவின் நடமாட்டம் நின்றால் நகரம் விழுந்து விடும். அஸ்தினாபுரம் என் நாக்கில் இருக்கிறது.”

அப்படித்தான் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற உள்ளொளி மிகுந்த எழுத்தாளர்களும். எழுத்தாளர்களின் விரல்கள் எழுதப்படாத வெற்றுத் தாளில் அசைய அசைய வாசிப்பவரின் இதயம் விரிவு கொள்கிறது .விரிவு கொண்ட இதயம் கொண்ட மனிதர்கள் தான் இந்த உலகை இயக்குகிறார்கள். எனவே எழுத்தாளர்களின் விரல்களின் அசைவில் தான் உலகத்தின் இயக்கம் உறைந்திருக்கிறது.

எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்: தேசாந்திரி பதிப்பகம், கங்கை அபார்ட்மெண்ட்ஸ், 80 அடி சாலை, சாலிகிராமம், சென்னை.

Page 4 of 56

Powered by WordPress & Theme by Anders Norén