பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 2 of 8

நினைவின் விரல்கள்.

கால அடுக்கு

நழுவிய அந்த

நொடியில் தான்

என் நினைவின்

விரல்கள் அந்த கதவின்

மீது பட்டன.

வெண்மையும்

வெம்மையும்

கசிந்துக்கொண்டிருந்த

அந்த கதவிடுக்கின்

வழியே கண்ட போது

நீல நிறத்தில் மலர்ந்த

செம்பருத்தி சாயலில்

அந்த பாடல் எனக்காக

காத்துக் கொண்டிருந்தது.

துளித்துளியாய்

திறந்த கதவிற்கு

பின்

பனித்துளி தூவிய

பசுங் கொடி மேவிய

அந்த வெள்ளைச்சுவர்

இருந்தது.

அங்கே இருந்த

அலங்கார பீடத்தில்

வைக்கப்பட்டிருந்த

சுழலும் இசைத்தட்டில்

இருந்து எழும்பிய

மெல்லிய புகைச்சுருளின்

ஊடே சுழன்றவாறே

அவள் மிதந்திருந்தாள்.

அப்போதுதான்

எனக்கே

எனக்காக

உருவாக்கப்பட்ட

அந்த பாடல்

அனிச்சையாக

ஒலிக்க தொடங்கியது.

கண்கள் கலங்க

மீண்டும்

அந்தப் பாடலை

கேட்க

தொடங்கியபோது

தான் உணர்ந்தேன்.

நான்

திறந்தது கதவும் அல்ல.

நான் கேட்பது வெறும்

பாடலும் அல்ல.

இந்த இரவும்

முடியப் போவதில்லை.

விடியப் போவதில்லை.

கழுத்தில் சொருகப்பட்ட கத்தியின் கருணை.

????

…அடை மழை இரவில்

காற்றின் பேரோசைப்பொழுதில்

படபடவென அடித்துக்கொண்ட

ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு

திரும்பிப் பார்த்தபோது,

அந்த நீல விளக்கு ஒளிர்ந்த

மாடி அறையின் மையத்தில் நீ

நின்று கொண்டிருந்தாய்.

தலை குனிந்த வாறே

நீ நின்றிருந்த கோலம்

எனக்கு மிஷ்கின் படத்து நாயகனை

நினைவூட்டியது.

உறுதியான கால்களுடன்

அங்கிருந்து நகரப் போவதில்லை

என்ற தீர்மானத்துடன்

நீ நின்று இருப்பதாக

எனக்குத் தோன்றியது.

நான் பேச எதுவும் இல்லை.

ஆனால் என் நடு மார்பில்

பாய்ச்சுவதற்கான அம்புகளாய்

விஷம் தோய்ந்த சொற்களை

உன் நாவில் எடுத்து வந்திருக்கிறாய்

என நினைக்கிறேன்.

தீரா கொடும் வலியும்,மீளா நடு இருளும்,

வண்ணங்களாய் ஒளிரும்

உன் சொற்கள் செவிகளில் புகுந்து விட்ட

முள் பந்தாய் உருளக்கூடியவை.

அடிமேல் அடி வைத்து

கடந்த காலத்தை

நினைவூட்டும் டேப்ரிக்கார்டரின் ரிவைண்டர் போல

பின்னால் போய்க் கொண்டிருந்தேன்

நீ குளிர் காலத்து பழங்கால சிலையாய்

அப்படியே உறைந்திருந்தாய்‌.

துளியும் கருணையற்று நீ

அவ்வப்போது துப்பியதூளாக்கப்பட்ட

பிளேடு துண்டுகளின் சாயல் கொண்ட

உன் சொற்கள் என் ஆன்மா முழுதிலும்

அப்பிக் கிடக்கின்றன.

வெளிறிய விழிகளோடு பின்னால் நகர்ந்த

நான் சுவரின் விளிம்பில்

நின்று கொண்டிருக்கிறேன்.

கால விசை நழுவிய

ஒரு நொடியில் வேகமாய்

ஓடி வந்த நீ ஆழமாய்

என் கழுத்தில் உன் கத்தியை சொருகினாய்.

நல்ல வேளை..

நீ உன் சொற்களோடு வரவில்லை

என்கிற ஆசுவாசம் மட்டும்,

அந்த ஒரு நொடியில்‌‌..

உதிரமேறி கிறங்கும்

என் விழிகளில் நிம்மதியின் நிழலை பரப்பியது

அல்லாஹு அக்பர்

நீ என்னை
ஆக்கிரமிப்பதற்காகவும்,
கட்டுப்படுத்துவதற்காகவும்
வீசும் ஆயுதங்களை
கம்பீரமான
எனது கலகக் குரல் மூலமாக
அடித்து நொறுக்குவேன்.

நான்
விடுதலையின் காற்று.
எதிர்ப்பின் ஏகாந்தம்.
உன் கட்டுபாட்டுக்
கம்பி வேலிக்குள்
அடங்கி விடமாட்டேன்.

ஓங்கி ஒலிக்கும்
எனது முழக்கம்
என்னைப்போலவே,
உன்னை எதிர்த்துப்
போராடி உன்னால்
உயிரோடு
கொளுத்தப்பட்ட
எனது முன்னோரின்
சாம்பலிலிருந்து
கிளர்ந்து எழுந்தது.

நான் யாராக இருக்க வேண்டும் என்பதை
நான் தீர்மானிப்பதை விட
நீ தீர்மானிக்கக் கூடாது
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் யார் என்பதை
நீ தீர்மானித்து
வைத்திருக்கும்
எல்லா வரையறை
சட்டகங்களையும்
கிழித்து எறிவேன்.

எனது உடை
உன் அதிகார
பாசிச உச்சங்களின்
உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்
அதை நான் ரசித்து
அணிவேன்.

எனது பண்பாட்டின்,
எனது வழிபாட்டின்,
கற்றைப் புள்ளிகளை
உன்
கைப்பிடி அதிகாரத்தால்
ஒற்றைப் புள்ளியாக
வரைய துடிக்கும்
உனது வரலாற்று
வன்மத்தை
எகிறி மிதிப்பேன்.

என்னை அச்சுறுத்துவதாக
எண்ணி
கூட்டம் கூடி முழங்கித்
தீர்க்கும் உனது அச்சம்
கம்பீரமான எனது
ஒற்றை அதட்டலால்
அடங்கி ஒடுங்கும்.

நீ கடவுளைச் சொல்லி
என்னை கலங்கச்
செய்வாய் என்றால்,
நானும் கடவுளை முழங்கி
உன்னை நடுக்கமுறச்
செய்வேன்.

இன்னும் மீறி
அழுத்தினால்,
எல்லோரும்
ஓர் குரலில்,
ஓர் உடையில் ,
உரக்கச் சொல்வோம்.

“அல்லாஹு அக்பர்”.

அன்பே சகலமும்..

இறுதியில்
அனைத்திலும்
இழந்து இருப்பதும்,
பெற்றிருப்பதும்,
ஒன்றே ஒன்று தான்..

அதைவிட
சுகமானதும்
கொடுமையானதும்
வெவ்வேறில்லை.

அதுதான்
கோரப்படும்
வரமாகவும்
விதிக்கப்படும்
சாபமாகவும்
திகழ்கிறது.

அதுவே
தண்டனையாகவும்
பிரார்த்தனையாகவும்
இருக்கிறது.

அதுவே
வாழ்வின்
அர்த்தமுமாக
அபத்தமுமாக
வாய்க்கப்
பட்டிருக்கிறது.

அதுதான்
சாத்தானின்
விலக்கப்பட்ட கனி.
அதுதான்
தேவனின்
கருணை மிகுந்த
உதிரம்.

இறுதியாக
அனைத்திலும்
மிஞ்சியதும்
எஞ்சியதுமாக
அதனது பாடலே
கேட்கக் கிடைக்கிறது.

ஆதி அந்தம்
அதுதான்.

அன்பே சகலமும்.

♥️

இரவின் சிறகுகள்

நிரந்தர
பிரிவொன்றின்
அடையாளமாக
நாங்கள்
புனைவேறிய
திட்டமிட்ட
புன்னகையோடு
கைக்குலுக்கி
கொண்டோம்..

இருவருமே
இயல்பாக இருப்பதாக
அவரவருக்கு
உணர்த்திக் கொள்வதில்
பெரிதாக ஒன்றும் சிரமமில்லை.

எல்லா கணக்குகளும்
தீர்த்தாகிவிட்டது.
இறுதியாய் இருந்த
புன்சிரிப்பைக் கூட
உதிர்த்தாகிவிட்டது.

திரும்பி
பார்க்கவே இயலாத
ஒரு பாதையில்
திசைகள் அமைக்க
எங்கள் திசைக்காட்டிகளை
கூட திருப்பி வைத்தாகி
விட்டது.

அவள் வெகு தூரம்
போன பிறகு தான்
நான் மெதுவாக உணர்ந்தேன்.

ஒரு குழந்தையின் அழுகைப்
போல எங்களின் சில இரவுகள்
என் விரல் பிடித்து
தலைதூக்கிப் பார்த்தன.

அந்த இரவுகளை
அப்படியே
அதே இடத்தில்
அதே நொடியில்
கைவிட்டு விட்டு
திரும்பிப் போகத்தான்
எத்தனித்தேன்.

ஆனாலும் நிலா
சொட்டிய அந்த இரவுகள்
கால தேச வர்த்தமானங்களை
தாண்டிய ஒரு அழகிய
பாடலாய் காற்றில் தனித்து
அலைகிற அபாயம்
கருதி அதுவரை
நான் சந்தித்திராத
இனியும் சந்திக்க முடியாத
அந்த இரவுகளை எங்கோ
சென்று இருட்குகையின்
ஆழ்க்குழியில்
புதைப்பதென
நிலவோடு கனத்திருந்த
அந்த இரவுகளை
வாரி சுருட்டி எடுத்துக் கொண்டேன்.

அந்த இரவுகளை
புதைப்பதற்கு முன்
பெருமூச்செறிந்து
இறுதியாக
ஒருமுறை பார்த்தேன்.

செந்நிற வானத்தின்
அந்திக்கால
செம்மைப்போல
நீங்காத வசீகரத்தை
அந்த இரவுகள்
தன் உடலெங்கும்
பூசிக்கொண்டு
இருந்தன.

அந்த இரவுகளை
சமன் செய்ய
நான் ஒருபோதும்
முயன்றதில்லை.

ஆனாலும்
அந்த நட்சத்திர
இரவுகள்
சதா ஒவ்வொரு
கணத்திலும்
உணர்ச்சிகளின்
கற்கள் வீசப்படுகிற
நினைவுகளின்
குளத்தில்
அல்லிகளாகத்தான்
பூத்துக் கொண்டிருந்தன.

எப்போதும்
என்னை நோக்கி
வீசப்படுகிற
முடிச்சுகள்
நிரம்பிய
மாயக்கயிற்றொன்றின்
கரங்களாக அந்த
இரவுகள் இருந்தன.

யாரும் பார்த்தறியாத
நொடி ஒன்றில்
கால நதியின்
கரையோரத்தில்
தீர்ந்தோர் கடனென
அந்த இரவுகளை
அப்படியே அள்ளி
கரைத்து விட்டு
திரும்பி பார்க்காமல்
நடந்தேன்.

மறுநாள்
நான் எதிர்பார்க்காத
ஒரு நொடியில்
என் ஜன்னலுக்கு
வெளியே பூத்திருந்த
மல்லிகைச் செடியின்
மீது அந்த இரவுகள்
வண்ணத்துப்பூச்சிகளாய்
பறந்து கொண்டிருந்தன.

விடைபெறுதலின் நம்பிக்கை.

 

 

திரும்ப வரப்
போவதே இல்லாத
ஒரு நாளில்
சந்திக்க வருவதாக
சொல்லி விட்டு
சென்று இருக்கிறாய்..

அன்றைய நாளில்
மழை பெய்யும் என்றாய்.

நீலக் கலர் சட்டையும்
கருப்பு ஜீன்ஸீம்
அணிந்து வா என்றாய்.

இளையராஜா பாடலை
கேட்டுக்கொண்டே
காத்திரு என்று
சிரித்துக் கொண்டே
சொன்னாய்.

நா உலரும் தருணங்களில்
தேநீர் குடித்துக் கொள்
என்றாய்…

காத்திருக்கும் தருணங்களில்
யாரையும் வேடிக்கை பார்க்காதே..
தப்பாக நினைப்பார்கள்
என்றாய்.

மிகவும் காலதாமதம்
ஆனால் பசியோடு இருக்காதே.
வரும் போதே எனக்கும் சேர்த்து
ஏதாவது வாங்கிக்கொண்டு
வா என்றாய்.

அடிக்கடி ஆழ மூச்சு
விட்டுக் கொள்.
அது நெஞ்சுப் படபடப்பை
குறைக்கும் என்றாய்.

முதல் நாள் இரவு
தூங்க Alprax போடாதே.
காத்திருக்கும் நேரத்தில்
தூங்கலாம் என்றாய்.

ஏதேனும் புத்தகம்
எடுத்துக் கொண்டு வா.
அது சில நாட்களாக
நீ படிக்க விரும்பும்
புத்தகமாக இருக்கட்டும்
என்றாய்.

எல்லாவற்றையும்
சொல்லி விட்டு
நான் தாங்குகிறேனா
என்பதையும் பார்த்து
விட்டு நீ போனாய்..

அன்றைய நாளும்
மழை பெய்தது.

மகிழம்பூ உதிரும்
மரத்தின் கீழே
அதே இரயில்வே
ஸ்டேஷனின் பழைய
பெஞ்சில் அமர்ந்து
இருக்கிறேன்.

வழக்கமாய் காலை
சுற்றி வரும்
நாயைக் காணோம்.

மரத்தில் அடையும்
பறவைகள் கூச்சல்
இன்று கொஞ்சம்
அதிகம்.

அடிக்கடி பார்க்கிற
பூ விற்கும் அம்மா
அன்று ஏனோ
வர வில்லை.

அந்த அம்மா
அமரும் இடத்தில்
காய்ந்த பூக்கள் சில
உதிர்ந்து கிடந்தன.

*

 

வானவில் போராளிகள்..


—————————————-

அதோ
அவர்கள்
நடந்துப்
போகிறார்கள்..

உயிர் ஆழத்தில்
உதிரக்கனவாய்
உறைந்திருக்கும்
ஒரு தேசத்தின்
பாடலை
உரத்தக் குரலில்
பாடியவாறு
அவர்கள்
நடந்துப் போகிறார்கள்..

முன்னோர்
மூச்சடக்கி
புதைந்த மண்ணில்
இருந்து
மட்காமல்
துளிர்த்திருக்கும்
சேர்ந்திசைப்
பாடல் அது..

காரிருள் படர்ந்து
காலங்காலமாய்
நிலைத்த பனை
நின்ற படி எரிந்த
கந்தக நெடி
கருப்பையில்
கருவுற்ற பாடல்
அது..

பசும் ஈரம்
போர்த்திய
ஆதி வனத்தின்
முதிர் கொடி ஒன்று
முறிக்கப்பட்டப்போது
முதிர்ந்தெழுந்த
பாடல் அது..

மூதாதை
கால் சுமந்த
தாய்நிலம்
அப்பாடலை‌ கேட்கும்
போதெல்லாம்
தானாகவே
விம்முகிறது
என்றார்கள்..

அப்பாடல்
கேட்கும்
போதெல்லாம்..
வானெறி
குண்டுகளால்
இருட்புகை
மண்டிய
பொழுதுகளில்..
ஆதவன்
அதுவாகவே
உதித்து விடுகிறது
என்றார்கள்..

யுகயுகமாய்
அந்த இனத்தின்
மண் காக்க நின்று
விதையாய்
ஊன்றப்பட்ட
முதுமனிதர்களின்
பொருமிடும்
மூச்சுக்காற்று
அந்தப் பாடலைத்தான்
சுமந்து
உச்சி மலைகளில்
அலைகிறது
என்றார்கள்..

உற்சாகக் குரலோடு
சேர்த்து பிணைந்த
கரங்களோடு…
அதோ
அவர்கள்
பாடிக் கொண்டே
செல்கிறார்கள்..

குருதியாற்றின்
உதிரத்துளிகள்
தொல்குடி ஒன்றின்
விழிச்சிவப்பு
வெப்பத்தால்..
ஆவியாகி மேகமாய்
மிதக்க..

எந்த நொடியிலும்
உறுமி வெடிக்க
காத்திருக்கும்
அந்த
வானத்தின்
விளிம்பின்
உதித்திருக்கும்..

அந்த வானவில்
பாலத்தின் மீது
அதோ போகிறார்கள்..

அவர்கள் போகிறார்கள்.

மாவீரர்கள் போகிறார்கள்..

……..

வீரவணக்கம்.

 

https://youtu.be/qiiBJ3mpGtY

எதுவுமே இல்லை.

 

திரும்பிப் பார்த்தால்
எதுவும் இல்லை.

நினைவில் கொள்ளவும்..
நினைவில் வைத்துக் கொல்லவும்..
ஏதேனும் ஞாபகங்களின்
நிழல் துரத்தி வரவில்லை.

மகுடங்களின் போதைகளும்
சாபங்களின் சாயைகளும்
நீக்கிப் பார்த்தால்
வாழ்வென்ற சாலை
வெறிச்சோடித்தான்
கிடக்கிறது.

ஒரு துளி
விஷத்தால்
உயிர்பித்ததும்..
ஒரு துளி
கண்ணீரால்
மரணித்ததும்..
தாண்டி
யோசித்துப்
பார்க்க
எதுவுமில்லை.

காதலிகளால்
கவிதைகள்
என்றானதும்.‌..
கவிதைகளால்
காதலிகள்
உண்டானதும்..
தவிர
இங்கே
கிறுக்கிக் கொள்ளவும்
கிறுக்குக் கொள்ளவும்
எதுவுமில்லை.

சத்தியமாக
சொல்வதெனில்
இந்த காலி
கோப்பைக்கு
முன்னால்
நானும் காலியாகத்தான்
இருக்கிறேன்.

உண்மைதான்..
இக்கணத்தில்
என்னில்
நிரப்பிக் கொள்ளவும்
நிறைந்து நிற்கவும்
எதுவுமே
இல்லை.

அது காதலில்லை..


எனவே
அது காதலில்லை
என்பதை அறிக..

வலி மிகுந்து
தோளில்
முகம் புதைத்து
விசும்பியதை.‌.

இறுக விரல் பிணைத்து
நெடுநீள பயணத்தில்
கதைகள் பேசியதை..

நள்ளிரவு உரையாடல்களில்
தென்படும் மெளனத்தை
நேசத்தின் மொழி கொண்டு
மொழிபெயர்த்ததை…

நடுநிசி கடலோர
காற்றில் அலைபேசி
இசையோடு கால்கள்
நனைத்து கிடந்ததை..

மொத்தமாக
சில நாட்கள் தொலைந்து
நம்மை நாமே
அறிந்துக் கொள்ள
முகவரியற்ற ஊரில்
அலைந்து திரிந்ததை…

குறுஞ்செய்திகளில்
இதயம் மிதக்க வைத்து
பிடித்த பாடலின்
இணைய முகவரியை
தேடி தேடி கண்டடைந்து
பரவசம் கொண்டு
பறந்து அலைந்ததை…

இறுதியாக சிக்கனமான
சொற்களால்..
வடிகட்டி சொன்னாய்..

இதையெல்லாம்
காதல்
என வரைந்து விடாதே..
என..

நானும் எனக்குள்ளே
மெலிதாய்
சொல்லிக்கொள்கிறேன்..

எனவே அது
காதலில்லை
என்பதை அறிக.

மணி செந்தில்.

(கவிஞர் Riska Mukthar எழுதிய கவிதையொன்றின் இன்னொரு வடிவம்.)

இசைக்கப்படாத சொற்கள்

இந்த யாசிப்பில்
எனக்கு எவ்வித
கூச்சமுமில்லை.

மண்டியிட்டு
தாழவும்
மருகி உருகவும்
காலடி தொழவும்
தயாராகவே
உன் முன்னால்
நிற்கிறேன்.

தயவு செய்து
போய்விடு.

இரக்கமற்ற
உன் சமாதானங்களை
நனைந்த காலணிக்குள்
நெளியும் தவளை
என உணர்கிறேன்.

காரணமற்று
கலங்கும் உன்
கண்கள்
வியர்வைப்
பொழுதுகளின்
சுடுதேநீர் போன்றவை.

பேச்சற்று நீ
இசைக்கும் மெளனம்
பாலையில்
தனித்து பதியும்
தடங்களை ஒத்தவை.

பிரிவின் மொழி
பூசி உதிரும்
வெற்றுச்
சருகுகளால்
நிரம்பி இருக்கின்றன
உன் சொற்களின்
தாழ்வாரம்.

புழுதி படர்ந்த
வீணை ஒன்றின்
அறுந்த தந்திகளை
போன்றது நம்
நினைவுகள்
என்றேன்.

கலங்கிய கண்களுடன்
நிமிர்ந்துப் பார்த்தாய்.

அந்த அறுந்த
இசை
நரம்புகளில் தான்
இன்னும்
வாசிக்கப்படாத
ராகங்கள்
உறைந்திருக்கின்றன
என்று தளர்வுடன்
சொன்னாய்.

அயர்ந்தேன்.

உன்னை
பிரிவதை விட
நேசிப்பது
இன்னும்
வலியை
தருமென்பதை
உணர்ந்த தருணம்
அது.

நீ மெலிதாய்
தோளில் சாய்ந்தாய்.

வியர்த்த
உள்ளங்கைகளை
மீண்டும்
இறுக மூடிக்கொண்டேன்.

பின்னால் இருந்த
பாதாளம் ஒருமுறை
நடுங்கி அடங்கியது.

மணி செந்தில்.

Page 2 of 8

Powered by WordPress & Theme by Anders Norén