Category: இலக்கியம் Page 2 of 4
வெக்கையும், வறட்சியும் நிலவும் நிலப்பகுதியில் அமர்ந்துக் கொண்டு, பனி பொழியும் ஊசியிலைக் காடுகளைப் பற்றியும், ஸ்டெபி புல்வெளி பற்றியும், பனி படர்ந்த ஜன்னல் கதவுகளைப் பற்றியும், குளிர் இரவின் ஊதற் காற்றினை பற்றியும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிவதற்கு டால்ஸ்டாய், தாஸ்தோவ்ஸ்கி, புஷ்கின், துர்கனேவ், போன்ற கால தேச எல்லைகள் கடந்த தீவிர எழுத்தாளர்களின் உயிர்ப்பு மிகுந்த எழுத்துக்கள் காரணமாய் அமைந்து இருக்கின்றன.
குறிப்பாக ரஷ்ய இலக்கியங்கள் தமிழ் நிலத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மகத்தானவை. சோவியத் ரஷ்யா உயர்ந்து மிளிர்ந்து விளங்கிய காலகட்டங்களில், ஏராளமான ரஷிய செவ்விலக்கியங்கள் தமிழில் மொழிப்பெயர்ப்பாகி வெளிவந்தன. மாஸ்கோ பதிப்பகம், ராதுகா பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் உயர்ந்த தாளில், அழகிய ஓவியங்களில், தரமான மொழிபெயர்ப்பில், ரஷ்ய இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழ் வாசகனுக்கு அளித்தன.
தமிழ் நிலப்பரப்பின் பருவநிலை, பண்பாட்டு கூறுகளுக்கு நேர் எதிரான பண்புகள் கொண்டது ரஷ்ய நிலப்பரப்பு. ஆனாலும் தாஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” படித்துவிட்டு தமிழ் வாசகனால் காதல் மயக்கத்தோடு’கனவுலகவாசியாக’ எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் திரிய முடிந்தது.
ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களில் எண்பதுகளின் தலைமுறையினர் பார்த்து வியந்தது அதன் தாள்களின் தரம், செய்நேர்த்தி கெட்டி அட்டை போன்றவை. குறிப்பாக சிறுவர் இலக்கியங்களில் ரஷ்ய கதைகள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஆயிரக்கணக்கான ரஷ்ய சிறுவர் கதைகள் அப்போது வெளியானது. அதையெல்லாம் யாராவது சேகரித்து வைத்திருந்து இப்போது அதே தரத்தில் வெளியிட்டால் மிகுந்த வரவேற்ப்பை பெறுவார்கள் என்பது மட்டும் உறுதி.
சில வருடங்களுக்கு முன்பாக உலக இலக்கியப் பேருரைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் “டால்ஸ்டாயின் அன்னாகரீனினா” நூலைப்பற்றி பேசிய பேச்சின் ஒலி வடிவத்தை ரஷ்ய இரவு போன்ற ஒரு குளிர் இரவில் கேட்டபோது, நான் ஒரு காலத்தில் படித்த டால்ஸ்டாயின் அன்னாகரீனினா வேறொரு பெண்ணோ என்கின்ற திகைப்பினை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. காரணம் எஸ்.ரா டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவை சதையும் ரத்தமும் கொண்ட ஒரு அசல் பெண்ணாக தனது பேச்சின் மூலமாக உருவாக்கியிருந்தார்.
ஏற்கனவே நான் படித்த அன்னா கரீனினா என்பவளை விட, எஸ்.ரா நிறுவிய அன்னா கரீனா இன்னும் வலி மிகுந்தவளாக, நிராகரிப்பின் வேதனை சுமப்பவளாக மாறி நின்றாள். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் தொடக்கத்திலும் ரஷ்ய இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாசிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் வாசகர்கள் தாங்கள் எந்த காலத்திலிலேயோ சந்தித்த தங்கள் மனம் கவர்ந்த அன்னாகரீனினாவை மீண்டும் நிகழ்காலத்தில் ரத்தமும் சதையுமாக சந்திக்க நேர்ந்தது போல ஒரு வாய்ப்பினை எஸ்.ரா தமிழ் வாசகர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
குறிப்பாக டால்ஸ்டாய் பற்றி எஸ் ராமகிருஷ்ணன் நிறைய எழுதியிருக்கிறார். ஒரு எழுத்தாளனின் தனி மனித வாழ்க்கைக்கும், அவனது புனைவு எழுத்துக்கும் உள்ள இடைவெளியை எஸ்.ரா டால்ஸ்டாய் மூலம் இந்த நூலில் ஆய்வு செய்கிறார்.
உலகின் மகத்தான எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் வாழ்வில் போகிற போக்கில், இரண்டே சொற்களில் அடங்கி விடுகிற அக்ஸின்யா, திமோஃபி என்கிற இருவரைப் பற்றி எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய பெருங்கதைதான் “மண்டியிடுங்கள் தந்தையே”
…
அவர் சொன்னது போல தமிழில் எழுதப்பட்ட முதல் ரஷ்ய நாவல் இது என்பதாக உணர்வதற்கான அனைத்து வசீகரங்களையும், படைப்பாக்கத் திறன்களையும் உள்ளடக்கிய புனைவெழுத்து அதிசயமாக இந்த நூல் திகழ்கிறது.
நாவல் தொடங்கும் முதல் புள்ளியிலேயே நாம் ரஷ்யாவின் போல்யானா பண்ணைக்கும் , பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கும் சென்று விடுகிறோம். கிறிஸ்மஸ் மாத பனி மாத இரவில் டால்ஸ்டாய் தனது அறையில், தனிமையில், மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் எழுதிக் கொண்டிருக்கின்ற காட்சி நம் கண்முன்னால் விரிகிறது.
முதல் சில பத்திகளிலேயே, டால்ஸ்டாய்க்கு மிக அருகில் தமிழ் வாசகன் ஒருவன் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு, அவரை உற்றுநோக்கி கவனிக்கிற அனுபவம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
எந்த பண்டிகை கொண்டாட்டங்களிலும் பெரிதாக ஆர்வம் இல்லாத டால்ஸ்டாய் எழுதுவது ஒன்றையே நிரந்தர கொண்டாட்டமாக, நிகரற்ற சந்தோஷமாக கருதுகிறார். பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் விரியும் தனது கதாபாத்திரங்களின் குண நலன்கள் குறித்த புதிரான எதிர்பாராமை தான் அவரது ஒரே சுவாரசியம்.
சூதாடி இழந்த பெரும் சொத்துக்களில் இருந்து மிஞ்சிய அவரது பண்ணையையும், அங்கே வேலை செய்கின்ற பண்ணை ஆட்களையும் நிர்வகிக்கின்ற அவரது மனைவியான சோபியாவிற்கு டால்ஸ்டாய் குறித்தான சந்தேகங்கள் எப்போதும் உண்டு.
குறிப்பாக டால்ஸ்டாயின் திருமணத்திற்கு முந்தைய தனது உறவுகள் குறித்தும் டால்ஸ்டாயே தன் மனைவியிடம் தெரிவித்திருந்தார். அந்த உறவுகளில் ஒன்றுதான் அக்ஸின்யா. அந்த உறவில் பிறந்தவன்தான் திமோஃபி. இந்த விபரங்கள் அனைத்தும் சோபியாவுக்கும் தெரியும்.
அக்ஸின்யாவின் மரணச் செய்தியோடு தொடங்கும் நாவல் முன்- பின் காலங்களில் பயணித்து, மனித உளவியல், ரஷ்ய நிலத்தின் பருவ நிலை சூழல்கள், அக்காலத்து அரசியல் போக்குகள், டால்ஸ்டாய் காலத்து சக எழுத்தாளர்கள், அவர்களது எழுத்து முறைமைகள் , என பல செய்திகளை உரையாடல்கள் மூலமாக வழங்கி அக்ஸின்யாவின் மரணத்தை எவ்வாறு டால்ஸ்டாய் எதிர்கொள்கிறார் என்பதோடு முடிவடைகிறது.
எந்த சூழ்நிலையிலும் பழுதடையாத இலக்கிய ஆன்மாவை கொண்ட மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவர் சொந்த வாழ்வில் எப்பேர்ப்பட்ட மனிதனாக இருந்தார், அவரது அகச் சிந்தனைகள் எவ்வாறு இருந்திருக்கும் , அக்காலத்து ரஷ்ய நாட்டின் பண்ணை முறைமைகள் எவ்வாறானது என்பது போன்ற நுட்ப செய்திகள் பல இதில் உண்டு.
இதையெல்லாம் தாண்டி கொடும்பாலையில் தாகத்தை சுமக்கின்ற ஒட்டகம் போல நிகழ்காலத்தில் தனது கடந்தகாலத்தை சுமக்கின்ற எளிய மனிதனாய் டால்ஸ்டாய் அடைகிற குற்ற உணர்வும், வாழ்வு பற்றிய போதாமையும் நம்மில் ஒருவராக அவரை பார்க்கச் செய்கிறது.
“காலம் தான் மனிதர்களின் பிரச்சனை. ஒருபோதும் நிகழ்காலத்தில் மனிதர்களால் வாழ முடியாது.” என ஒலிக்கும் எஸ்.ரா வின் எழுத்து வீச்சுகள் நாவல் முழுக்க சிதறிக் கிடக்கின்றன.
“ஒருவன் மற்றவர்களுக்கு இல்லை என்றாலும் தனக்குத் தானே உண்மைகளைச் சொல்லி கொள்ளத்தானே வேண்டும்..” என இந்த படைப்பு முழுக்க நிரம்பி தளும்பும் இது போன்ற கேள்விகளால் மனம் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
“ரகசியங்கள் இல்லாத மனிதன் யார்.. மனிதர்களுக்கு புதைக்கப்படும் போது அவர்களது ரகசியங்களும் புதைக்கப்படுகின்றன” என்றெல்லாம் வரிகள் தென்படும்போது படிப்பவரின் உள்மனம் அதனதன் ரகசியங்களை எடை போட தொடங்கிவிடுகிறது.
உண்மையில் ஒரு படைப்பின் வேலைதான் என்ன என்ற கேள்விக்கு எஸ்.ரா இந்த நாவலில் சொல்வது போல “ஒரு கலையின் வேலை, மனிதர்களை மகிழ்ச்சி படுத்துவது மட்டுமல்ல.., நெறிப்படுத்துவதும், வழிகாட்டுவதும், மேம்படுத்துவதும்,.தான்.”
“மண்டியிடுங்கள் தந்தையே” என்கின்ற இந்த உயரிய படைப்பு சாதித்திருப்பது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ரகசியங்களை புதைத்துக்கொண்டு, நிகழ்கால சமரசங்களோடு வாழக்கூடிய ஒரு டால்ஸ்டாய் இருக்கிறார் என்பதை உணரச் செய்வதுதான்.
இலக்கியம் என்கின்ற உயரிய கருவியால் மட்டுமே ரஷ்யாவில் என்றோ வாழ்ந்த டால்ஸ்டாய் என்ற இலக்கிய ஆளுமையோடு, நம்மை பொருத்திப் பார்க்க தூண்ட முடிகிறது.
காயங்களும், ஏக்கங்களும், நிரம்பிய மனித வாழ்வில் குற்ற உணர்வும், வாதைகளும் நிரம்பி இருக்கின்றன என்பதை யோசிக்கும் அதே நேரத்தில் அவல காலதேச மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட பொதுமைவயப்பட்டவை என்பதோடு மட்டுமில்லாமல், அவைகள்தான் உலக இலக்கியத்தின் ஊற்றுக் கண்களாக திகழ்கின்றன என சிந்திக்க வைப்பதுதான் இந்த நாவலின் உச்சப்புள்ளியாக கருதுகிறேன்.Hell is empty.all devils are here.(நரகம் காலியாகி விட்டது. எல்லா சாத்தான்களும் இங்கேதான் இருக்கின்றன) என்பார் ஷேக்ஸ்பியர். ஆனால் இந்த நாவலில் வரும் டால்ஸ்டாய் மனிதர்களின் மனம் சொர்க்கத்தில் நுழைவாயிலாக இருக்கிறது என்கிறார்.
மனிதர்களின் மனம் ஒரே சமயத்தில் சொர்க்கத்தின் நுழைவாயிலாகவும், நரகத்தின் இருப்பிடமாக திகழ்வதை தான் நாம் மானுட வாழ்வு என அர்த்தப்படுத்திக் கொள்கிறோம் என நாம் நமக்கு நாமே உணரும் புள்ளியில்தான் கலையின் மேன்மை ஒளிர்கிறது.
(மண்டியிடுங்கள் தந்தையே- நாவல், எழுதியது:திரு எஸ் ராமகிருஷ்ணன். பக்கங்கள் 248, வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம், டி-1, கங்கை அப்பார்ட்மெண்ட், 110, 80 அடி ரோடு, சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை 93044-23644947)
குடந்தை என்கிற இந்த முது நகரம் தன் நினைவுச்சுழிகளில் தன்வரலாற்று பெருமிதங்களைச் சுமந்து ஏறக்குறைய இரவு நேரத்தில் உறக்கம் வராத ஒரு வயதான கிழட்டுயானை போல தலை அசைத்துக் கொண்டே இருக்கிறது.வெறும் கண்களால் பார்த்து புரிந்து கொள்ள முடிகிற நகரம் அல்ல இது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளி இன்னும் படாமல் இருள் படர்ந்து முதுமையின் பழுப்பேறிய வாசனையோடு முடங்கிக் கிடக்கும் இந்த நகரத்தின் மனித விழியறியா மூலைமுடுக்குகள் கடந்தகாலத்தை ஒரு திரவமாக மாற்றி இந்த நகரத்தில் நீண்ட காலமாக நிலைத்திருக்கும் முது மக்கள் மனதில் நிறைந்திருக்கும் நினைவுத்தாழியில் நிரப்பி, இவர்கள் புழங்கும் சொற்களோடு கலந்து விட்டிருக்கின்றன.இதன் ஒடுங்கிய தெருக்களில் முன்னோர் காலத்தில் எவர் எவரோ நடந்த காலடித் தடங்கள் பின்னிரவுகளில் ஆங்காங்கே ஒளிர்வதாக இரவுகளில் உலவுபவர்கள் சொல்கிறார்கள். காசியிலிருந்து புறப்பட்டு வந்த சாமியார்கள் புழுதியேறி சுருண்டு கிடக்கும் நீண்ட முடியோடு இந்த புராதன நகர வீதியில் சிவ பாணம் புகைத்து புகைச்சுருள் சூழ ஆங்காங்கே ஒடுங்கி படுத்திருக்கிறார்கள். மது அருந்தியும் உறக்கம் வராத அவர்களில் ஒருவன் கண் சிவந்து உன்மத்தம் ஏற சொல்கிறான்.
இந்த நகரம் ஒரு கனவு என.ஆம். இந்த நகரம் ஒரு கனவுதான். கனவிற்கும் நினைவிற்கும் ஆன விசித்திர இடைவெளியை தன் புராதன அம்சங்களால்
இந்த நகரம் காலம்தோறும் அழித்துக் கொண்டே வந்திருக்கிறது. தெருக்கள் முழுக்க நிரம்பிக் கிடக்கும் கற்றுளி கோவில்களில் எப்போதோ கல்வெட்டுகளில் எழுதப்பட்டிருக்கிற முது தமிழ் உலராமல் இன்னும் உயிரின் ஈரத்தோடு பார்ப்போர் விழிகளுக்கு அசைந்து வளைந்து திரியும் மழைக்கால மரவட்டைகள் போல அசைந்து கொண்டிருக்கின்றன.குடந்தை என்கிற பழம்பெருமையை தன் மேனியெங்கும் எழிலாக பூசி இருக்கிற இந்த வயதான பெண்ணின் சாயல் இந்த நகரத்தின் வீதியில் நெற்றி நிறைய பொட்டோடு மங்கும் மாலை நேரத்தில் சாலை ஓரத்தில் அமர்ந்து பூ விற்பதற்காக பூக்கட்டி கொண்டிருக்கிற நிறைந்த மஞ்சள் பூசிய வயதின் சுருக்கமேறிய முகங்களில் ஒளிர்கிறது.எங்கெங்கோ தொலைவிலிருந்து வித்தைகள் காட்டுவதற்காக வந்து கூடியிருக்கிற கழைக்கூத்தாடிகள், குரங்காட்டிகள், ராமன் /சிவன் /அனுமார் என வெவ்வேறு வேடமணிந்து உரத்த குரலில் பாட்டுப் பாடி காசு கேட்கின்ற பகல்வேடதாரிகள், திருநங்கைகள், பலூன் விற்பவர்கள், ராட்டினம் சுற்றுபவர்கள், மிட்டாய் வியாபாரிகள் என திருவிழா காலங்களில் மட்டும் ஊர்களுக்குள் திரிபவர்கள் எப்போதும் இந்த ஊரில் நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும். வருடம் முழுக்க இந்த பழம் நகரில் வரலாற்றின் சாட்சியமாக கற்களாக உறைந்திருக்கும் ஏதோ ஒரு கோவிலில் வருடத்தின் ஏதோ ஒரு நாளில் திருவிழாக்கள் நடந்துகொண்டே இருக்கும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.அருகில் எந்த மலையும் இல்லாத வண்டல் மண் நிறைந்த இந்த மருத நில மண்ணில்ஏது இவ்வளவு மாபெரும் கற்கள் என அலை அலையாய் எழுந்து வருகிற கேள்விகள் இந்த நகரத்தில் இரவுகளில் ஆழ்ந்து உறங்குகிற இளம் சிறார்களின் கனவுகளில் விழுந்து அவர்களது அர்த்தமற்ற உளறல்களாக வெளி வருகின்றன. குடந்தை என்கிற அந்த மதர்த்த பெண்ணின் மார்பகங்களை தாண்டி ஒதுங்கி கிடக்கும் ஒற்றை முந்தானைப் போல காவிரியாறு ஊரின் ஒரு ஓரத்தில் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே ஆற்றின் ஓரமாக இருக்கின்ற படிக்கட்டுகளில் யாரோ ஒருவர் குளித்துக்கொண்டும், யாரோ சிலர் வெற்றிலை மணம் ததும்புகிற இலக்கியம் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். மடத்துத் தெருவில் நடக்கின்ற போது எப்போதும் அருந்தியவுடன் உள்ளுக்குள் ஏதோ ஒன்றை பிடித்து இழுத்து உயிரை பிரகாசிக்க செய்கிற காபியின் வாசனை நடந்து போகும் அனைவரின் நாசித் துவாரங்களில்
படர்ந்து பரவுகிறது.
“ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
கோதை ஆயமொடு வண்டல் தைஇ,
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி’ எனக்
கொன்னும் சிவப்போள் காணின், வென்வேற் கொற்றச் சோழர்
குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அருங்கடிப் படுக்குவள்,
அறன் இல் யாயே..”
(குடவாயிற் கீரத்தனார்-அகம் 60)
(பொருள்: தோழியின் கூற்று: காதலனின் ‘வேலையை’ கண்டால் குடந்தையில் கருவூலம் வைத்து நாட்டின் நிதியை மிகப் பாதுகாப்பாக பாதுகாக்கிற சோழனின் பாதுகாப்பை விட, மணல் கரைகளில் விளையாடிக் கொண்டிருக்கிற தன் மகளை பாதுகாக்க அவள் தாய் செய்யும் முயற்சிகள் இன்னும் அதிக மாகுமே..) வரலாற்றின் பக்கத்தில் சோழனின் கருவூலம் சுமந்த ஒரு பெரும் கருப்பையாக, ததும்பும் புராதன பெருமிதங்களால் கருவுற்று பொலிந்திருக்கிற பெண்ணாக
குடந்தை எப்போதும் மிளிர்ந்துக் கொண்டே இருக்கிறது.
*****
மறைந்த கலை விமர்சகர் தேனுகா குடந்தையின் காதலர். இந்தப் பழம் பெரும் நகரத்தின் வீதிகளில் முகத்தில் எப்போதும் சுமக்கிற புன்னகையோடு எங்கே சுவையான காப்பி கிடைக்கும், எங்கே நல்ல வெற்றிலை கிடைக்கும், இந்த ஊர் பக்கம் வாசித்த மாபெரும் தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் யார் யார்,கோவிலின் உறைந்து கிடக்கும் சிற்பங்களின் கலையம்சம் உணர்த்துகிற பொருள் யாது என்கிற பல அறியாத கேள்விகளின் பதில்களோடு அவர் சதா அலைந்து கொண்டே இருப்பார்.குறிப்பாக சிற்பங்கள் என்ன மொழியில் வடிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அந்த இறுகிய கற்களின் நுண்துளைகளில் புகுந்து வாசித்து உரைப்பதில் அவர் ஒரு மேதை.ஒருமுறை சாரங்கபாணி கோவிலில் தேர் வடிவான மூலவர் சன்னதியை அசையாமல் உறைந்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான சந்தனப் பொட்டிட்டவரை நானும், அவரும் கண்டோம். நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர் அப்படியே அந்தக் கோயிலின் பிராகாரத்தில் சுவற்றில் பதிந்திருந்த ஆதித் தமிழ் மொழியின் மீது கை விரல் பதித்து வருடிக்கொண்டிருந்தார். அவருடைய செய்கையும், அவரின் தன்னை மறந்த நிலையும் எங்களை ஏதோ செய்ய.. அவரிடத்து நாங்கள் பேசத் தொடங்கினோம்.அவர் பெயர் மாதவன். மலையாளி.
ஒரு மலையாளிக்கு என்ன என் மொழி மீது ஆர்வம் என்கின்ற எனது கத்துக்குட்டி தனம் ஒரு கேள்வியாக தோன்றி அதை நான் தேனுகா விடம் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே மிக எளிமையாக சொன்னார்.இந்த கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் எங்கே இருந்தார்கள் மலையாளிகள்.. அவர்களுக்கும் தமிழ் தானே தாய்மொழி..??என்ற அவரது புன்னகைப் பதிலில் என் மனதிற்குள் ஏதோ ஒன்று நழுவியது போல நான் உணர்ந்தேன். அந்தப் பெரியவர் மாதவன் திருவனந்தபுரத்திலிருந்து வருகை தந்திருக்கிறார். தமிழகக் கோவில்களில் கல்வெட்டுகளில் உள்ள தமிழில் தென் படுகிற மலையாள எழுத்துருவின் ஒத்திசைவு புள்ளிகளை பற்றி ஆய்வு செய்வதற்காக அவர் வந்து இருக்கிறார். ஒவ்வொரு ஊராக சென்றவர் சாரங்கபாணி கோவிலுக்கும் வந்திருக்கிறார். அங்கே கண்ட கல்வெட்டுகளை பார்த்தவுடன் கண் கலங்கி நின்று கொண்டிருக்கிறார். கிமு ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் எழுத்துரு வடிவமாய் வடிக்கப்பட்ட தனது ஆதிமொழி மீது தீவிர காதல் கொண்டு கண் கலங்கி நின்று கொண்டிருக்கிறார். மலையாளிகள் எப்போதும் தங்கள் பண்பாட்டின் மீதும் அதன் விழுமியங்கள் மீதும் மாறாத பற்று உடையவர்கள். அவர்களது இலக்கியங்களில், திரைப்படங்களில் என எதிலும் அவர்களின் பண்பாட்டு பெருமிதப் புள்ளிகளை அடையாளப் படுத்தாமல் விடமாட்டார்கள். குறிப்பாக மலையாள இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டு விழுமியங்களில் பெரும்பாலானவை தமிழர் வாழ்வியலுக்கு நெருக்கமானவை. மலையாள இலக்கியங்களில் பிதாமகர்களாக திகழ்கிற தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முஹம்மது பஷீர், எம்டி வாசுதேவன் நாயர் என பலரும் தங்கள் கதைகளில் விவரிக்கும் பண்பாட்டுப் புள்ளிகள் வாசிக்கின்ற தமிழ் வாசகனது முகத்தில் ஒத்திசைவுப்பரவசத்தை ஏற்படுத்துபவை. 1887 இல் அப்பு நெடுங்காடி என்பவர் எழுதிய குந்தலதா என்கிற நாவலே மலையாளத்தின் முதல் நாவலாகும். 1889 இல் சந்துமேனன் எழுதிய இந்துலேகா (தமிழில் கிடைக்கிறது சாகித்திய அகாதமி வெளியீடு) மலையாள இலக்கிய உலகின் கலைப் பண்புகளுடன் அமைந்த மாபெரும் இலக்கியப் படைப்பு. அதேபோல் சிவி ராமன் பிள்ளை எழுதிய மார்த்தாண்டவர்மா (தமிழில் கிடைக்கிறது) வும் அக்காலத்திய முக்கிய இலக்கிய படைப்பு. பிற்காலத்தில் பஷீர், தகழி, கேசவதேவ், பொற்றே காட்டு பிசி குட்டி கிருஷ்ணன் என பலர் தீவிரமான இலக்கியச் செழுமை படைப்புகளை படைத்து மலையாள இலக்கிய உலகிற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். பல மலையாள படைப்புகள் தமிழில் அண்மைக்காலமாக மொழிபெயர்க்கப்பட்டு வருவது தமிழிலக்கிய செழுமைக்கு மேலும் வளம் சேர்க்கிற பணிகளாகும். தமிழினை தனது ஆதி மொழியாகக் கொண்ட மலையாளம் சங்க இலக்கியங்களை தனது மொழியின் மூலமாக கருதிப் போற்றுவது என்பது மிக இயல்பானது. அந்த வகையில் சங்க இலக்கியங்களின் சாரத்தை வைத்து மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்ந நாள் என்கின்ற நாவல் தமிழில் கே வி ஜெயஸ்ரீ யால் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வருடத்தின் சாகத்திய அகாடமி விருது இந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் சு. வெங்கடேசன் எழுதிய புகழ்பெற்ற நாவலான வேள்பாரி -க்கு மிக நெருக்கமான கதைக்களம் தான் இந்த நாவலுக்கும் என்பது மிகவும் ஆர்வம் ஊட்டக் கூடியது. முன்னுரையில் ஜெயமோகன் சொன்னதுபோல அன்னியரால் தீண்டப்படாத பரிசுத்தமான தமிழ்நிலம் கேரளம் தான் என்பதை தனது சங்கப்பாடல்களின் ஊடான அறிவு மூலம் படைப்பாளர் மனோஜ் நிரூபித்திருக்கிறார்.
ஒட்டு மொத்த கதையும் கொலும்பன், இவரது மகளான சித்திரை, கொலும்பனின் மகனான மயிலன் ஆகியோரின் பார்வைகளில் முறையே முதல் எழுத்து இரண்டாம் எழுத்து, மூன்றாம் எழுத்து என மூன்று பார்வைகளில் கதை விரிகிறது. வறட்சி வறுமை தாங்க முடியாமல் ஆதி கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க கிளம்பிய பாடல் பாடும் பாணரும், ஆடல் ஆடும் கூத்தரும் நிரம்பிய ஒரு சிறு ஆதி குடியின் கதைதான் நிலம் பூத்து மலர்ந்த நாள். சங்ககால மக்களின் வாழ்வியல் குறித்தான நுட்பமான விவரணைகளோடு பெருங்கதை என விரியும் இந்த நாவலில் கபிலர் பரணர் வேள் பாரி ஆகியோர் சிறுசிறு கதாபாத்திரங்களாக வருகிறார்கள். ஆதி வனத்தின் பசுமை போர்த்திய அழகியலை, அதன் அமைதியை, அதன் ஆபத்தினை, சங்ககால அரசியலின் காட்சிகளை மிக ஆழமான மொழியில் மனோஜ் விவரிக்க, அதை அப்படியே சிதைக்காமல் கே வி ஜெயஸ்ரீ மொழி பெயர்த்து இருப்பது ஆகச்சிறந்த வாசிப்பனுபவமாக இருக்கிறது. நாவலின் குறுக்கே நிறைய சங்கப்பாடல்கள் வருகின்றன. இடம்பெயர்தல், உடன்போக்கு, அருள்வாக்கு போன்ற பல ஆதித் தமிழரின் பண்பாட்டு விழுமியங்களை அப்படியே ஒரு திரைப்படம் போல நம் கண் முன்னால் நிறுத்தி விடுவதில் நிலம் பூத்து மலர்ந்த நாள் வெற்றி அடைந்து விடுகிறது. சங்கப்பாடல்கள் என்பதே ஆதி தமிழர்களின் நினைவுகளின் மொழிபெயர்க்கப்பட்ட சொற் கூட்டங்கள் தானே.இதை தமிழில் அருமையான சொற் வளத்தோடு மலையாள இலக்கிய செழுமையின் ஈரம் காயாமல் அப்படியே உயிர்ப்புடன் வழங்கிய கே.வி ஜெயஸ்ரீ அவர்களுக்கு, மனம் நிறைந்த பாராட்டுக்கள். இடம்பெயர்தல் என்பது தமிழினத்திற்கு புதிதல்ல. காலம் காலமாய், தேசம் தேசமாய், இந்த இனம் நகர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தத் துயரம் மட்டுமே இந்த இனத்திற்கு என விதிக்கப்பட்ட சாபம் போல வரலாற்றின் வீதிகளில் துரத்திக் கொண்டே வருகிறது.
****
இந்த நாவலைப் படித்து முடித்தவுடன் என் மனதில் என்னவோ தேனுகாவும், கோவில் கல்வெட்டு எழுத்துகளைப் பார்த்து கலங்கி நின்ற மாதவனும் தான் என் மனதுக்குள் வந்தார்கள். மாதவன் அந்த ஆதி தமிழின் கல்வெட்டு வளைவுகளில் மனம் கரைந்து கண் கலங்கி நின்றதற்கான காரணத்தினை மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாளில் உணர்ந்துகொண்டேன். எங்கெங்கோ மண்ணுக்கடியில் முடிச்சுகளாய், ஊடுருவி சென்றிருக்கும் ஆழமான வேர் விழுதுகளாய் மறைந்து கிடக்கும் வரலாற்றின் பக்கங்களை சற்றே வேறுவகையில் அறிவின் வெளிச்சம் கூட்டி வாசிக்கும்போது நம் ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்து கிடக்கின்ற ஆதி மரபணுக்கள் உயிர்ப்பெற்று துடிக்கத்தான் செய்கின்றன. அப்படித் துடிக்க வைக்க தானே உண்மையான படைப்புகள் தன் ஆன்மாவிலிருந்து உதிரத்தைத் தொட்டு எழுதும் படைப்பாளர்களால் எழுதப்படுகின்றன..???
(நிலம் பூத்து மலர்ந்த நாள்-மலையாள மூலம்:மனோஜ் குரூர், தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ, வம்சி வெளியீடு)
அழுது அழுது அவனது கண்கள் வீங்கி இருந்தன. பக்கத்தில் அமர்ந்திருந்த எனக்கு என்னவோ போலிருந்தது. குமாருக்கு இது புதிது இல்லை. நிறைய முறை பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்து விடுவான். அப்போது செய்து கொண்டிருந்த பைத்தியக்காரத்தனம் தீவிரமாக ஒரு பெண்ணை காதலித்தது.
குமார் எல்லாவற்றிலும் தீவிரமானவன்தான். எதையும் நிதானமாக அவன் செய்ததாக எனக்கு நினைவில்லை. அது டேப்ரிக்கார்டர்களின் காலம். பாட்டு கேசட்டுகள் சேகரித்து வைத்திருப்பது என்பது அந்தக்காலத்தின் இளைஞர்களின்
பழக்கங்களில் ஒன்று. குமார் அதிலும் தீவிரமானவன்தான். கேசட்டுகளாக வாங்கி தள்ளினான். பக்கத்து வீட்டுப் பெண்ணான சித்ராவை உயிருக்குயிராக விரும்பினான். அவளும் பாட்டு பைத்தியம். இவன் ஒரு பாட்டு போட,.. பதிலுக்கு அவள் ஒரு பாட்டு போட.. அந்தக் காலகட்டத்தில் எங்கள் தெருவே எப்போதும் பாட்டுக் கச்சேரி நடக்கின்ற திருவிழா கோலமாக தான் காட்சியளிக்கும். பாடல்கள்தான் அவனை அவளை காதலிக்க வைத்தது. “பிரியசகி வருவேன் வாசல் தேடி” என ஒரு பாடலை அவன் ஒலிக்க வைத்தால்.. பதிலுக்கு “ராசாவே உன்னை விடமாட்டேன்” என்கின்ற பாடலை அவள் ஒலிக்க வைப்பாள். அங்கே “ஓ.. உன்னாலே பெண்ணானேன்” என்ற பாடல் ஒலித்தால்.. இங்கே “ஒரு காதல் என்பது என் நெஞ்சில் உள்ளது” என்ற பாடல் ஒலிக்கும். இப்படியான தீவிரமான அவர்களது காதல் ஒரு பேருந்து நிலையத்தில் முடிவுக்கு வந்தது. எட்டு வருட காதல். ஏதேதோ காரணங்கள் இருவரும் தயாரித்துக் கொண்டு பிரிவதற்கு தயாராகிவிட்டார்கள். கடைசியான சந்திப்பு பேருந்து நிலையத்தில். நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு பிரிந்தபோது இருவரும் அழவில்லை. கடைசியாக பேருந்து ஏறும் போது ஏனோ அவள் அழுதுகொண்டே ஏற, அதை அமைதியாக பார்த்துக்கொண்டு நின்ற இவன் பேருந்து சென்ற பிறகு, அங்கே இருந்த மர பெஞ்சில் அமர்ந்து அழத்தொடங்கினான். அது ஒரு உக்கிரமான அழுகை. நான் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தேன். அவன் தேறவில்லை. அதன் பிறகு அவன் நிறைய குடிப்பதாகவும், பல ஊர் அலைவதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். பல நாட்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் அவனை நான் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் வேறு மாதிரி மாறி இருந்தான். ஒரு பழுப்பு நிற ஜிப்பா ஜீன்ஸ், கண்ணில் ஒரு கண்ணாடி, ஷேவ் செய்யாத முகம் என ஒரு இலக்கியவாதிக்கு என்னென்ன முக தகுதிகள் உண்டோ அனைத்தையும் அவன் ஏற்படுத்திக் கொண்டு தயாராக இருந்தான். என்னைப் பார்த்தவுடன் இறுக்கி என்னை அணைத்துக்கொண்டான்.
நிறைய ஊர்களுக்கு செல்வதாகவும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் இலக்கியம் தன்னை ஆற்றுப் படுத்துவதாகவும் கூறினான். நாளை மறுநாள் தான் கோவை செல்வதாகவும் பாமரனை பார்க்கப் போவதாகவும் நீ வருகிறாயா எனவும் கேட்டான். நீண்ட கால நண்பன்.நிறைய இழப்புகளுக்கு பிறகு சரியாகி வந்திருக்கிறான் என நினைத்து அவனது அழைப்பை நான் ஏற்றுக் கொண்டேன். ரயில் வண்டியில் ஏறிய உடனேயே குடிக்க தொடங்கி விட்டான். கையில் கோணங்கியின் அண்ணிமார் கதை சிறுகதை தொகுப்பு வைத்திருந்தான். சுந்தர ராமசாமியை திட்டினான். தி ஜானகிராமனின் மோகமுள் அவரது சொந்தக் கதை என்றான். சாருநிவேதிதாவின் சீரோ டிகிரி படித்து இருக்கிறாயா எனக்கேட்டான். கரிச்சான் குஞ்சு போல இனி யாராலும் எழுத முடியாதென்றான்.அப்போதெல்லாம் எனக்கு பெரிய இலக்கியப் பரிச்சயம் எல்லாம் எதுவும் இல்லை. பொன்னியின் செல்வன், வைரமுத்து, பாலகுமாரன் என எனக்கென ஒரு சிறிய வட்டத்தை நான் வைத்துக்கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தேன்.
அப்போதுதான் அவன் சொன்ன பெயர் பிரமிள். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு தான் தானும் அவரைப்போல தீவிர மொழியில் எழுத தொடங்கி இருப்பதாகக் கூறினான்.அதற்கு முன்னால் எனக்கு பிரமிளைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்குத் தெரிந்த வைரமுத்துவை பற்றி நான் பேசத் தொடங்க, என்னை அவன் மிகவும் அலட்சியமாக பார்த்துவிட்டு.. பிரமிள் ஒரு கடல்.. அதற்கு முன்னால் வைரமுத்து எல்லாம் ஒரு ஆளே அல்ல என்பதுபோல பேசத் தொடங்க, தீவிர வைரமுத்து பக்தனான எனக்கு கோபம் ஏற்பட்டு விட்டது.
இரவு நேரம். எங்கள் இருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென குமார் உக்கிரமாகி தன் உரத்த குரலில்
“பார்த்த இடமெங்கும்
கண் குளிரும்
பொன்மணல்.
என் பாதம் பதித்து
நடக்கும் இடத்தில் மட்டும்
நிழல் தேடி என்னோடு
அலைந்து எரிகிறது
ஒரு பிடி நிலம்.”
என்ற பிரமிளின் கவிதையை அப்படியே ஒப்பித்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஏதோ சண்டை என விழித்து பார்க்க… அவனோ அந்த கவிதையில் இருந்து வெளிவர முடியாமல் அந்தக் கவிதையை சொல்லிவிட்டு என்னை உற்று நோக்கிக் கொண்டே இருந்தான்.
சட்டெனக் கேட்டபோது எனக்கு அந்த கவிதை எதுவுமே புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. அவன் கவிதைக்கு என்னிடம் பதில் இல்லை. அவனே என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு பிரமிள் படிடா.. பிறகு பேசுவோம் என்றவாறு அவன் அமைதியாகி தூங்கத் தொடங்கினான். எனக்கு தூக்கம் வரவில்லை. பிரமிள் என்ற பெயர் என்னை ஏதோ செய்தது. என் அறியாமை குறித்த வெட்கமும், பிரமிள் என்ற பெயரின் மீதான ஈர்ப்பும் என்னுள் அடர்த்தியாக உள்ளுக்குள் ஒரு திரவம் போல பரவத் தொடங்கியது.
கோவைக்கு சென்று பாமரனை பார்த்துவிட்டு நானும் அவனும் திரும்பும்போது விஜயா பதிப்பகத்தின் புத்தகக்கடையில் எனக்கு முதன் முதலாக பிரமிள் கவிதைகள் என்கின்ற புத்தகத்தினை வாங்கி குமார் எனக்கு பரிசளித்தான். திரும்பி ஊருக்கு வரும்போது பிரமிள் பற்றியே பேசிக்கொண்டு வந்தான். அவரது கோபம், ஆவேசம், சிறுபிள்ளைத்தனமான சேட்டைகள், சுந்தரராமசாமியின் உடனான அவரது சண்டை என நிறைய கதைகள் அவரைப் பற்றி என்னிடம் அவன் பேசிக்கொண்டே இருந்தான். நான் அவனிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது.
சித்ராவை எப்படி மறந்தாய் என நான் கேட்டேன்.
தலைகவிழ்ந்து கண்கலங்கிய அமைதியாக உட்கார்ந்திருந்தான். பிறகு மென்மையாக அவனே சொன்னான்..
“மறந்துதான் ஆகவேண்டும். அதற்கு ஒரே வழி. படிக்க வேண்டும். தீவிரமாகப் படிக்க வேண்டும். பிரமிள் போன்ற தீவிர 100 சதவீத உக்கிர எழுத்தாளரின் மொழியை படிக்க வேண்டும்”. இவ்வளவும் செய்தால் மறந்து விடலாமா …?என நான் கேட்டேன். அதற்கு அவன் அமைதியாக “மறக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் உயிர் வாழ்ந்து விடலாம்” என்றான். எனக்கு ஒரே ஆச்சரியம். ஒரு புத்தகம் அல்லது சில வரிகள் உயிர் வாழ்வதற்கான காரணமாக இருக்கக் கூடுமா என்றெல்லாம் நான் சிந்திக்கத் தொடங்கியபோது பிரமிள் இன்னும் எனக்கு அருகில் வர தொடங்கியிருந்தார்.
அந்தப் பயணத்திற்கு பின்னால் குமார் வெளிநாட்டில் வேலை கிடைத்து சென்று விட்டதாக சொன்னார்கள்.
கும்பகோணத்தில் மறைந்த கலைவிமர்சகர் தேனுகா அவர்களை முதன் முதலாக நான் சந்தித்தபோது கேட்ட கேள்வி பிரமிளை உங்களுக்கு தெரியுமா..? என்பதுதான். அதற்கு அவர் என்னை மிகவும் விசித்திரமாக பார்த்தார். எங்களது ஆசான் பொதியவெற்பனிடமும் பிரமிள் கவிதைகளைப் பற்றி நான் ஒருமுறை கேட்க.. எனக்கு மிக நீண்ட வகுப்பெடுத்தார்.மதிப்பிற்குரிய எஸ் ராமகிருஷ்ணனின் நட்பு கிடைத்த பிறகு பிரமிள் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள முடிந்தது.பாரதிக்கு பிந்தைய காலகட்டத்தில் தமிழ் மொழியில் தோன்றிய மாபெரும் கவிஞர் பிரமிள். இயற்பெயர் தருமு சிவராம்.
ஈழத்தமிழர் . திருகோணமலையில் பிறந்தவர். 1960களில் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு கலை இலக்கிய உலகத்தின் தலைநகரமான பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் வாழவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அந்த நோக்கத்தோடு தமிழ்நாட்டுக்கு வந்தவர் தமிழகத்திலேயே வாழ்ந்து மறைந்தார். சி.சு. செல்லப்பாவின் “எழுத்து” என்கிற சிற்றிதழ் மூலமாக இலக்கிய உலகிற்கு அவர் அறிமுகமானார். நவீன ஓவியக்கலை, சிற்பக்கலை, சோதிடம் ஆகியவற்றில் அவருக்கு நல்ல தேர்ச்சி இருந்தது.வாழும் காலத்தில் பெரும் கலகக்காரராக, சமரசம் அற்றவராக பிரமிள் வாழ்ந்து இருக்கிறார். தனக்கும், பிரமிளுக்குமான
உறவையும் விரிசலையும் முரண்களையும் பற்றி சுந்தர ராமசாமி நினைவோடை என்கின்ற நூலில் மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது.பிரமிள் வாழும் காலத்தில் எந்த மனிதரோடும் சுமுக உறவோடு இருந்ததில்லை. பெரும்பாலும் நேருக்கு நேராக மோதி விடுவதை தனது சுபாவமாக பிரமிள் கொண்டிருந்தார். கோபம் வன்மம் என்பதையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு வேறு வடிவத்தில் வெளிப்படுத்தத் தெரியாத உக்கிரமான மனநிலையில் தன் வாழ்நாள் முழுக்க பிரமிள் இருந்தார். தன் கோபத்தை எல்லாம் உடனே எழுத்தில் வடித்து எதிரியின் முகத்தில் அடித்து எறிகிற அச்சமூட்டும் நபராக அந்தக்கால இலக்கிய உலகில் பிரமிள் திகழ்ந்தார்.
“எல்லை” என்ற அவரது கவிதை அவரது மனநிலையை மிகச்சரியாக காட்டும் எடுத்துக்காட்டாக நான் கருதுகிறேன்.
“கருகித்தான் விறகு
நீராகும்.
அதிராத தந்தி
இசைக்குமா..?
ஆனாலும் அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.
கொசு
நெருப்பில் மொய்க்காது”.
அவரைப் பொறுத்தவரையில் அவர் தான் நெருப்பு. மற்றவர்கள் எல்லாம் வெறும் கொசுக்கள் தான்.
ஒளிக்கு நடுவிலே இருக்கக்கூடிய இருள் நான் என தன்னை அழைத்துக் கொண்ட அவர் தனித்துவமாக நிற்கவே வாழ்நாளெல்லாம் போராடிக் கொண்டிருந்தார்.
நவீன கவிதை உலகில் பிரமிளுக்கான இடம் ஒரு பேரரசனுக்கு உரியது. அவரது மொழி தமிழ் அதுவரை அறியாதது.
“நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து
கவியானான்.”
என எழுதிய அவரது எழுத்து படைப்பாற்றல் உச்சங்களை தொட்ட வகைமையை கொண்டது.பிரமிள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு மற்றும் படைப்புகளின் தொகுப்பு ஆகியவற்றினை அவரது நெருங்கிய நண்பர் கால சுப்பிரமணியம் தொகுத்து அடையாளம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது கவிதைகள் விடுதலைப்புலிகளின் இதழ்களில் வெளிவந்து இருக்கிறது.பிரமிள் தேர்ந்தெடுத்த கவிதைகள் என்கின்ற அவரது முக்கிய கவிதைகளின் தொகுப்பினை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலின் இறுதியில் “பிரமிள் ஒரு உரையாடல்” என்கின்ற தலைப்பில் படைப்பாளிகள் சுகுமாரனும், யுவனும் பிரமிள் கவிதைகள் படைப்புகளைப் பற்றி ஒரு முக்கியமான உரையாடலை நிகழ்த்தி பதிவு செய்திருக்கிறார்கள்.பிரமிள் உலக இலக்கிய படைப்புகளை மிக ஆர்வமாக வாசித்து வந்தவர். கலில் ஜிப்ரான், எஸ்ரா பவுண்ட், ஜோசப் ப்ராட்ஸ்கி, பாப்லோ நெருடா, என பல உலக கவிஞர்களின் கவிதைகளில் தனக்குப் பிடித்த கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதன் தொகுப்பு சூரியன் தகித்த நிறம் என்ற பெயரில் நற்றிணை வெளியீடாக வெளிவந்துள்ளது.
ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவார்த்த தேடல்களின் மீது ஆர்வம் கொண்ட பிரமிள் அவர் எழுதிய பாதை என்கின்ற சிறு கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறார்.
அவர் மொழி பெயர்த்த அனைத்துப் படைப்புகளும் அவரது தீவிர மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.
எஸ்ரா பவுண்ட் எழுதிய ஒரு கவிதையை
“அதிரடி” என்ற பெயரில் இவ்வாறாக பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார்.
“உன் மீது உள்ள தங்கள் வெறுப்பை
வெளியிட பயந்தவர்கள் பலர்.
என்னைப் பொறுத்தவரை
உனது வெறுப்புப் புழுக்கள்
பாதங்களை சுற்றிச்சுற்றி
கிச்சுக் கிச்சு மூட்டட்டும்.
எனது பூட்ஸின் ருசியாக வேண்டும்?
இதோ என் பூட்ஸின் ருசி!
தடவு,! நக்கு”
பிரமிளின் தமிழ் நெருப்பை உட்செரித்து சூரியனை பிரசவிக்கும் ஆற்றல் கொண்டதாக நவீன கவிதை உலகில் மதிக்கப்படுகிறது.
எழுத்து என்பது வெறுமனே எழுதுவது என்று நினைப்பவர்கள் முகத்தில் தனது படைப்புகள் மூலம் பிரமிள் காறி உமிழ்கிறார். தோன்றியதை எல்லாம் எழுத எழுத்து ஒன்றும் எடுக்கும் வாந்தி அல்ல என சாடுகிறார்.
எனக்கெல்லாம் எழுதும்போது என் முதுகுக்குப் பின்னால் கையில் ஒரு பிரம்பு வைத்துக்கொண்டு பிரமிள் நிற்பது போன்ற ஒரு தோற்றப் பிறழ்வு எப்போதும் நேர்வதுண்டு.எந்தப் பட்டங்களையும் தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளாத பெரும் கவிஞர் பிரமிள் தமிழ் சமூகத்திற்கு உரிய பெரும் சாபக்கேடான படைப்பாளிகளை வாழும் காலத்தில் மதிக்காமல் கடந்து அவமதித்த குணத்தினால் தனிமையில் உழன்று 1997-ஆம் ஆண்டு உதரவிதான புற்றுநோயால் மரணமடைந்தார்.
மொழி எதையும் செரிக்கும் வல்லமை கொண்டது. என் கண் முன்னால் காதலின் பெருங்காயத்தால் உதிரம் வழிய வழிய அலைந்த என் நண்பன் குமார் தனது ஆற்றாமையை செரிக்க பிரமிளின் மொழியை உக்கிரமாக பருகி தனக்கான சிறகை தானே தயாரித்துக் கொண்டு எங்கோ பறந்து போனான். அவன் கொடுத்த பிரமிள் கவிதைகள் தொகுப்பினை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அதிலிருந்து என்னை நோக்கி வீசுகிற வெவ்வேறு விதமான அர்த்த அலைகளில்
என்னை நானே முழ்கடித்துக்கொண்டு காணாமல் போய்க் கொண்டிருக்கிறேன்.
இலக்கியம் என்பது தொலைப்பதை மீட்டெடுப்பது மட்டுமல்ல. தொலைந்து போவதும் தானே…
மொழி என்பது ஒரு விசித்திரமான ஆயுதம். அது ஒரு விதை நெல் போல. பயன்படுத்த வேண்டிய காலத்தை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்தப்படுமானால் அது விரயமாகத் தான் போகும். கொட்டப்படும் தானியங்களைப் போல சொற்களை கொட்டிக்கொண்டே இருப்பவர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் களைப்புற்றவர்களாக, எதையோ இழந்த மனநிலையில் இருப்பவர்களாக உங்களால் உணர முடியும்.மகாபாரதம் இதிகாசத்தில் வருகிற விதுரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கிற பெரும் போருக்குப் பிறகு முது வனத்திற்குள் சென்று மறைகிற அவன் சொற்களை இழந்தவன் ஆகிறான். இனிமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போன்ற ஒரு அமைதியை அவனே பூசிக் கொள்கிறான். விதுரன் குறித்த மிக அற்புதமான வர்ணனையை எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உபபாண்டவத்தில் நாம் அனுபவிக்கலாம்.
புத்தரிடம் புத்தம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு அவர் அமைதி என்று பதிலளித்தார்.
உலகின் தலைசிறந்த சிம்பொனி இசையமைப்பாளரான மொசார்ட்டிடம் உலகின் தலைசிறந்த இசைவடிவம் எது என கேட்ட கேள்விக்கு அவர் மௌனம் (silence) என பதிலளித்தார்.இசைஞானி இளையராஜாவிடம் இருக்கிற மகத்தான மேதைமை எது என்கிற கேள்விக்கு புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவருக்கு எந்த இடத்தில் வாத்தியத்தை இசைக்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பது இயல்பாக தெரிந்திருப்பது தான் அவரது மேதைமை என்கிறார்.
உலகில் பரந்து பட்டு பரவியிருக்கிற வெவ்வேறு மெய்யியல் கோட்பாடுகள் அனைத்தும் அமைதியை நோக்கிய பயணத்தையே முக்தியாக காட்டுகின்றன.
ஆனால் நவீன உலகம் அமைதியை ஏறக்குறைய இழந்துவிட்டு அனைத்திற்கும் கருத்து உமிழ்ந்து கொண்டிருக்கிறது.
ஏறக்குறைய சொற்கள் அனைத்துமே உமிழப்படும் எச்சிலாக மாறி விட்டன. அந்த எச்சிலும் கூட கால நேர பேதமின்றி எப்போதும் ஊறுகின்ற ஊற்றாக மாறி விட்டதுதான் நவீனம் நமக்கு அளித்திருக்கிற மகத்தான தண்டனை.
“பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல்”
என்கிறது வள்ளுவம்.
அற்பமானவற்றை பேசியும், சிந்தித்துமே நம் வாழ்நாளை நரகமாக்கிக் கொள்கிறோம். நாம் யாரைப் பற்றி சிந்திக்கிறோமோ அவர்கள் நம்மைப் பற்றி இவ்வளவு சிந்திக்கிறார்களா என நாம் சிந்திப்பதில்லை.எதைக் கண்டாலும் அதை பற்றிய ஒரு கருத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. அனைத்தும் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமில்லை.சில விஷயங்களைப் பற்றி கருத்து இல்லாமல் இருப்பதே ஒரு கருத்துதான்.சமீபமாக எனது தனிச் செய்திகளில்ஏன் அந்த திரைப்படத்தை பற்றி உங்களுக்கு கருத்து இல்லையா,இப்படி நடக்கிறது இது பற்றி உங்கள் கருத்து என்ன.. என்பதான பல கேள்விகளுக்கும் எனது பதில் மௌனம் தான்.நாம் வெகுவாக நேசித்த சிலர் நம்மைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்கள் என்றெல்லாம் செய்தி வரும்போது நாம் படபடப்பாகிறோம். உடனே உளவியலாக நம்மைப் பற்றியான நியாயங்களை நமக்கு நாமே தயாரிக்க தொடங்குகிறோம். வெறுப்பின் வெண்பனி நமது மனதின் புல்வெளிகளில் படியத் தொடங்குகிறது.இது ஒரு வகையான சுயவதை தான். அந்த நேரத்தில்தான் ஒரு அசாத்திய அமைதி தேவைப்படுகிறது.அதை புறக்கணிப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். எதிர்ப்பு என்று வைத்துக்கொள்ளுங்கள். கண்டுகொள்ளாமல் கடந்து போவது என வைத்துக்கொள்ளுங்கள். அவரவருக்கு எது தேவையோ அப்படியே வைத்துக் கொள்ளலாம்.
உலகத்தின் மகத்தான அரசியல் நடவடிக்கை எதுவெனில் என்னைப் பொருத்தவரையில் மௌனம் தான்.
மௌனம் என்பது இயலாமையின் வெளிப்பாடு அல்ல. மௌனம் என்பது பதில்கள் இல்லாத முடியாமை அல்ல.
மௌனமாக இருத்தல் என்பது ஒரு தீவிரமான அரசியல் நடவடிக்கை.
70 காலத்திய ப்ரூஸ்லீ படங்களில் தன்னைச் சுற்றி வரும் எதிரியை கண்களால் கவனித்தபடி நின்ற இடத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு புரூஸ் லீ அமைதியாக கவனித்துக் கொண்டிருப்பார். அவரிடம் தனக்குத் தெரிந்த வித்தைகளைக் காட்டும் அவசரம் இருக்காது. ஆனால் எதிரியோ அவரைச் சுற்றி சுற்றி வந்து சீண்டிக் கொண்டே இருப்பான். புரூஸ் லீயின் கண்கள் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும். மற்ற உறுப்புகள் ஒரு சிலை போல உறைந்து இருக்கும்
இறுதியாக ஒரே அடி. எதிரி கீழே விழுந்து போவான்.
ஏனெனில் ஒரு அமைதிக்குப் பிறகு எழும் அசைவு மிக வலிமையானதாக இருக்கும்.
இந்த நிதானத்தை பற்றிதான் உலகத்தின் பல்வேறு தத்துவங்கள் விவாதித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக ஜப்பானீய ஆன்மீக மரபு இந்த சலனமற்ற நிலை குறித்து ஆழமாக கவனம் செலுத்துகிறது.பாஷோ என்கின்ற ஜப்பானிய ஜென் மரபின் முதன்மைக்கவி எழுதிய கவிதை இது.
“வெட்டுக்கிளியின் சத்தம்..
மலையின் மௌனம்
ஒரு கணம் அசைகிறது. “
மௌனமாக இருத்தல் என்பது ஒரு ஆயத்தம். பதுங்கி பாய்தல் போல அல்ல அது. அது ஒருவகை நிதானித்தல். தனக்கு இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பது குறித்தான ஆழ்ந்த சிந்தனை.மிக நீண்டகாலமாக ஒரு சில மன வேறுபாடுகளால் பிரிந்திருந்த எனது சிறுவயது தோழி ஒருவளை எதிர்பாராதவிதமாக ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சந்திக்க நேர்ந்தது. அவளுக்கு திருமணமாகி இடுப்பில் குழந்தையோடு ஏதோ பொருள் வாங்கிக் கொண்டிருந்தாள். நான் பார்த்த உடனேயே அவளை யாரென நினைவில் கொண்டு வந்துவிட்டேன்.ஆறாவது படிக்கும்போது எனது வகுப்பின் லீடராக அவள் இருந்தாள். நான் அதிகம் பேசுவதாக ஆசிரியரிடம் போட்டு கொடுத்துவிட.. ஒரு முக்கியமான தருணத்தில் ஹோம் ஒர்க் செய்து வைத்திருந்த அவள் நோட்டினை நானும் எனது நண்பர்களும் திட்டமிட்டு ஒளித்து வைத்துவிட.. அன்று ஆசிரியரிடம் அவள் கடுமையாக திட்டு வாங்கினாள். நாங்கள் நோட்டினை ஒளித்து வைத்த விபரத்தை எங்களுக்குள் இருந்த எட்டப்பன் ஒருவன் அவளிடம் போட்டு கொடுத்துவிட.. அவள் அழுதுகொண்டே ஆசிரியரிடம் நடந்தவைகளை சொல்லி எங்களை மீண்டும் அடி வாங்க வைத்தாள். இது மிகப்பெரிய பகைமையாக நான் நினைத்துக்கொண்டு பத்தாம் வகுப்பு வரை அவளோடு பேசுவதை நான் நிறுத்திக் கொண்டேன். எட்டாம் வகுப்பில் நான் பேசிய பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்றபோது புன்னகையுடன் பாராட்ட நெருங்கி வந்த அவளை முறைத்துவிட்டு நகர்ந்து போனேன்.என்னை மன்னித்துக் கொள் என்று அவள் ஒருமுறை நோட்டில் எழுதி வைத்திருந்ததை அப்படியே கிழித்து எடுத்துச் சென்று நான் எங்களது வகுப்பாசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட, அவர் பலருக்கு முன்னால் அவளை மிக மோசமாக ஏசி காயப்படுத்தி விட்டார். அதிலிருந்து அவளும் என்னிடம் பேசுவதில்லை.பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்க்கையிலும் அவளை காண சூழ்நிலைகள் இல்லை. ஆண்டுகள் பல கடந்து இப்போதுதான் அவளை மீண்டும் காண்கின்றேன். பேசலாமா சென்று விடலாமா என்ற தயக்கம் எனக்கு.இந்த தயக்கத்திற்கு நடுவில் என்னை யார் என சட்டென அடையாளம் கண்டு கொண்ட அவள் என்னை பார்த்து சிரித்தவாறு ஏய் எப்படி இருக்க.. எனக் கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள்.பிறகு இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அவரவர் குடும்பங்களைப் பற்றி, பார்க்கும் வேலைகளைப் பற்றி என்றெல்லாம் உரையாடல் நகர்ந்தது. பிறகு அவளே மெதுவாக அந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தி கேட்டபோது.. என்னை மன்னித்துக் கொள் என்று நான் சொன்னேன்.அதற்கு அவள் சிரித்துக் கொண்டே.. எதற்கு மன்னிப்பு.. அந்த நேரத்தில் நீ பேசாமல் போனதும் நல்லதுதான்.. ஒருவேளை உடனுக்குடன் பேசி இருந்து அதனால் கூட மன வருத்தம் இன்னும் அதிகமாகக் கூட ஆகியிருக்கலாம். அப்போது அமைதியாக இருந்ததால் தான் இப்போது மனம் விட்டு பேச முடிகிறது என அவள் சொன்ன போதுதான்.. ஒரு அமைதியில் இவ்வளவு இருக்கிறதா என என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
சமீபமாக எனது மிக நெருக்கமான நண்பர் கவிஞர் கண்ணகன் இறந்துவிட்டார். என் கவிதைத் தொகுப்பை ஏறக்குறைய அவர் தொகுத்து வைத்திருந்தார். சில கவிதைகளை திருத்தம் கோரி எனக்கு திருப்பி அனுப்பி வைத்திருந்தார். என் மீது மிகுந்த தனிப்பட்ட அக்கறை கொண்ட நெருக்கமான நண்பன் அவர். திடீரென அவர் இறந்த செய்தி கேட்டபோது.. ஏறக்குறைய நான் அப்படியே உறைந்துப் போனேன். இரங்கல் பதிவு கூட எழுத என்னால் முடியவில்லை. எனக்கும் கண்ணகனுக்கும் வேண்டிய என் நண்பன் விஷ்ணுபுரம் சரவணனிடம் கூட எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இறுதி சடங்கிற்கு கூட அவரைப் பார்க்க நான் செல்லவில்லை.இறுதியாக அவரை சந்திப்பது என்கின்ற மனநிலையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.செய்தி கேள்விப்பட்டு பதறிக் கேட்ட பாக்யராசனிடமோ, ஒட்டக்கூத்தனிடமோ சொல்லக்கூட எதுவுமில்லை. அந்த அழுத்தத்தை சொற்களால் கூட என்னால் விவரிக்க முடியவில்லை. அப்படியே அமைதியாக இருந்துவிட்டேன்.என் தந்தையாரின் மாணவர் அவர். என் தந்தையார் தனது சிறந்த மாணவனை இழந்து கலங்கிப் போய் அமர்ந்து இருந்தார்.
கண்ணகன் வீட்டிற்கு போவோமா என்கின்ற எனது கேள்விக்கு அவரிடமும் எந்த விதமான பதிலும் இல்லை. அவரும் அந்த நொடியில் சொற்களை இழந்தவர் தான்.கலங்கிய கண்களோடு என்னை பார்த்துவிட்டு அப்படியே அவர் நகர்ந்து சென்றுவிட்டார்.நான் எனக்குள்ளாக கேட்டுக்கொண்டேன்.
அங்கே சென்று யாரைப் பார்ப்பது..??
அப்படித்தான் சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த கவிஞரும், தோழியுமான சவீதாவின் மரணத்தின் போதும் எனக்கு ஏற்பட்டது.ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்கிற கேள்வியை விட நடந்திருக்கிறது என்கின்ற உண்மைதான் நம்மை மெளனிக்க வைக்கிறது.அப்படித்தான் பல சமயங்களில் மௌனித்திருப்பது நிகழ்கிறது. சலனமற்ற அந்த நிலைதான் பல சமயங்களில் இயல்பாகி விடுகிறது.அப்போதுதான் சொற்களைத் தொலைத்த விதுரன் போல நாமும் எப்போதும் இருந்து விடலாமோ எனத் தோன்றுகிறது.
“நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய்.. நான் உன் காலடியில் கிடந்து, உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப் பட்டேன். சுதந்திரமாய் சக்திவாய்ந்து இயல்பாய் இருந்தேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். ஏனெனில் நான் காட்டுக்கு சொந்தமானவன்.”
பிரான்ஸ் காப்கா அவரது பெண் தோழி மெலினாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்..
துருவனின் எழுத்துக்களும் அப்படித்தான். ஏனெனில் அவைகளும் தொன்ம மனிதனின் அசுர மொழிகள் தான்.இதுவரை வெளிவந்திருக்கிற வழமையான எழுத்து சித்திரங்களை உதறி விட்டு வன்முறையின் பேரழகோடு அவனது அடர்பச்சை வெளியாகியிருக்கிறது. பிரதி முழுக்க கலைத்துப் போடப்பட்டிருக்கும் சொற்க்கோர்வை மிகவும் புதிரானவை. ஆழ்நிலை சிந்தனையை கோருபவை. இதுவரை உங்கள் வாழ்வின் எல்லா வித அனுபவச் சாரங்களின் ஊடாக நீங்கள் அடைந்திருக்கிற அனைத்து வித இறுக்க முடிச்சுகளையும் அறுத்துப் போட்டு விட்டு ஒரு கட்டவிழ்க்கப்பட்ட மனநிலையோடு அடர் பச்சையின் பக்கங்களை நீங்கள் தொடுவீர்களேயானால்.. இதுவரை நீங்கள் காணாத பெரும் களியாட்டத்துக்கு உங்களை நீங்களே ஒப்புக்கொடுக்கிறீர்கள் என அர்த்தம்.
புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஒரு நூற்றாண்டின் தனிமை (one hundred years of solitude) மேஜிக்கல் ரியலிசம் (Magical realism) என்கின்ற பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு வகையை சார்ந்து எழுதப்பட்ட புனைவாகும். மார்க்வெஸ்சின் நாவல்கள் மாக்கான்டோ என்கின்ற புனைவு வழி சித்தரிப்பு நகரத்தில் நிகழ்கின்றன. அவரது எழுத்துக்கள் நிஜத்திற்கும் புனைவின் விசித்திரங்களும் இடையிலான மெல்லிய கோட்டினை அழிக்க முயன்று கொண்டே இருக்கின்றன.
அடர்பச்சை யும் அப்படித்தான். கடவுள்-அசுரர்-தேவர்-சாத்தான் போன்ற புராண எதார்த்த புள்ளிகளை
கை கொண்டு , மறுக்கவே முடியாத மீள்புனைவு சாத்தியங்களை அடர்பச்சை தனக்குள் அடக்கி இருக்கிறது.
ஆழமாக உள்நோக்கி பார்த்தோமானால் அடர்பச்சை வார்த்தைகள் அற்ற ஒரு பிரதி. செந்நிற வானில் தனித்துப் பறக்கும் ஒரு பறவையின் பறத்தல் போல பொருத்தி வைக்கப்பட்ட காலச் சட்டகத்தினை மீறி அதன் இயக்கம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.
செவ்வக வெளிச்சப் பாய்ச்சல் மட்டுமே
உட்புகுந்திருக்கும் வெற்று வாசலைப் போல அடர் பச்சையில் ஊடுருவி பாய்ந்திருக்கிற தனிமை உணர்ச்சி வாசிக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவையும் பின்தொடர்ந்து தொற்றிக்கொள்கிறது.
“கவிதையானது வேற்றுக் குரல். அது வரலாற்றின் குரலோ அல்லது எதிர் வரலாற்றின் குரலோ அல்ல. எனினும் கவிதையில் வரலாறு எப்போதும் வேறுபட்ட ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும்” என்கிற மெக்சிகோ கவிஞன் ஆக்டேவியா பாஸின் குரலைப் போல அடர்பச்சையின் அடி இழை புராண இதிகாசங்களின் புனித பிம்பங்களுக்கு எதிரான குரலாக மட்டும் அடையாளப்படுத்தப்படுமேயானால் அது முழுமை அல்ல. மாறாக ஆக்டேவியா பாஸ் வரையறை செய்வது போல இது வேற்று குரல்.
கவிதை என்றெல்லாம் வகைமைப் படுத்தி விட முடியாத ஒழுங்கின்மை தான் அடர் பச்சையின் ஆகப் பெரும் வலிமை.கழுத்து நரம்பின் மையப்புள்ளியை அறுத்துவிட்டு செல்கிற ஒரு புராதான வாளின் கூர்மை போல கவித்துவப் புள்ளிகளின் கூர்மை அடர்பச்சை முழுக்க ஒளி விடுகிறது. ஆனாலும் கவிதை என்ற ஒழுங்கினில் எங்கும் அடைபடாமல் காற்றின் நழுவல் போல நழுவிக் கொண்டே போவதை இப்பிரதி முழுக்க தரிசிக்கலாம்.
ஆல்பெர் காம்யூ எழுதிய The plague (1948) என்ற நாவலில் Tarrou-டேரூ என்ற இளைஞன் வருவான். அவனுக்கு இருக்கின்ற மகத்தான சிக்கல் இதுதான்..
“கடவுளே இல்லாத ஒரு இடத்தில் ஒருவன் எவ்வாறு புனிதனாவது ..?”
என்கிற கேள்வியை அவன் எழுப்பிக் கொண்டே இருப்பான். அதேபோன்ற
கேள்வியைத்தான் அடர்பச்சையும் எழுப்புகிறது.
சாத்தானும் அசுரனும் இல்லையேல் கடவுள் ஏது.. கடவுளின் கட்டமைக்கப்பட்ட புனித நிழல்களைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பும் போது தான் கடவுள் உயிர்க் தொடங்குகிறான். அசுரன் கடவுளின் தலைக் கொய்ய வாளை உயர்த்தும் அந்த நுட்ப புள்ளியில்தான் கடவுள்
உயிர்க் கொள்ள தொடங்குகிறார். இதுபோல தத்துவ விசாரணை உள்ளீடு கேள்விகள் அடர்பச்சை முழுக்க விரவிக் கிடக்கிறது.
ஒரு கவிதை அல்லது ஒரு இலக்கிய வடிவம் மேம்பட மேம்பட மொழி கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறது. மொழியின் வசீகரங்கள் மறைந்து போய் ஒரு காட்சி ஊடகமாக அந்த இலக்கிய வடிவம் விரிய தொடங்குகிறது. ஆச்சரியகரமான வகையில் அடர்பச்சையில் அந்த மேஜிக் நிகழ்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.
தீரா வன்முறையின் படிமங்கள் ஒரு மையச் சரடு போல அடர்பச்சை முழுக்க பயணித்துக் கொண்டே இருக்கிறது. மீள்எழுதலுக்கான பெருவழி, இறுதியில் கூர்வாளின் நுனி கொண்டே எழுதப்படுகிறது.
பழைய Western classic cowboy படங்களில் காணப்படும் மரச் சட்டங்களால் வேயப்பட்ட கட்டிடங்கள் கொண்ட புராதன அமெரிக்க சிறு நகரத்தில் வெக்கை பூசும் வெயிலில் நட்ட நடு மணல் வீதியில் துப்பாக்கி எடுப்பதற்காக கரங்களை அசையாமல் காத்திருக்கும்
ஒரு அக்மார்க் கௌபாயின் கண்களில்
தோய்ந்திருக்கும் அதே வன்முறையின் அழகியல் அடர்பச்சை யிலும் காணப்படுவதுதான் இது இயல்பிலேயே கொண்டிருக்கும் உலகத்தரம்.
இந்தப் பதிவில் நான் எங்கும் அடர்பச்சையின் வரிகளை மேற்கோள் காட்டவில்லை என்பது திட்டமிட்ட ஒன்றே. நீங்களாக கண்டடைய வேண்டுகிற அந்த அனுபவம் எனது மேற்கோள்களால் நழுவக்கூடாது என நான் விரும்புகிறேன்.
விலக்கப்பட்ட கனி போல அடர்பச்சை தன்னியல்பில் ஈர்க்கும் சுவாரசிய ஆச்சரியங்கள் கொண்டது. நிலைநிறுத்தப்பட்டு இருக்கிற எல்லாவித புனித பிம்பங்களையும் ஒற்றை கோட்டில் நிறுத்தி வினா எழுப்புகிற அடர்பச்சையின் அரசியல்
காலம்காலமாய் புறக்கணிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட குரல்களின் விம்மல்.
அடர்பச்சையை நான் முன்மொழிகிறேன்.
நீங்கள் வழிமொழியுங்கள்.
வாழ்வின் மீதான சுவை மிக விசித்திரமானது. வாழ்வின் எந்த ஒரு கணத்திலும் அதன் சுவை தீர்ந்து போகலாம். சலிப்புற்ற அந்த கணத்தில் எதற்காக பிறந்தோம் எதற்காக வாழ்ந்தோம் என்றெல்லாம் உள்ளுக்குள் கேள்விகள் எழலாம்.
பல தருணங்களில் நான் அவ்வாறு தான் உழன்று இருக்கிறேன். உறக்கமற்ற இரவுகளில் ஏதேனும் ஆழ்மனதில் நாம் எப்போதோ பெற்றுக்கொண்ட ஒரு முள் மெல்ல அசைந்து கீறத் தொடங்க.. கொடும் நரகம் என இரவுகள் நீளும். ஏன் இந்த கொடும் வாழ்க்கை.. என்ற கேள்வி எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா.. என்ற சங்கடம் உள்ளுக்குள் சலித்து எடுக்கும்.
அப்படித்தான் கடந்த காலத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியோடு நகர்ந்த பொழுதொன்றில் சென்னை மத்திய சிறையில் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களை சந்தித்தேன். அவரை அதற்கு முன் பல முறை நான் சந்தித்து இருந்தாலும் அந்த சந்திப்பு சற்றே விசித்திரமானது. அந்த சந்திப்பிற்கு முன்னால் வாழ்வு குறித்த சில கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும், என் பிரச்சினைகளுக்கான தீர்வினை அவர் மூலமாக அடைய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.
பல விஷயங்களை அவரிடம் பேசிவிட்டு உங்களிடம் எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது அண்ணா என்று சொன்னேன். ஆள் மிகவும் மெலிந்து விட்டு இருக்கிறீர்கள்.. என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் அந்த நொடியில் அனைத்தையும் கொட்டி விட வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாழ்கிற அந்த கொடும் நெருக்கடி மிகுந்த துயர வாழ்விற்கும் முன்னால் அபத்தமும் பலவீனமும் நிறைந்த எனது துயரங்களை எப்படி கொட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
உண்மையில் வாழ்வு என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தம் புரியவில்லை. எதற்காக வாழ்கிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை ..உண்மையில் இந்த வாழ்வில் நான் அடைந்தது என்ன அண்ணா என்று கேட்டேன்.
அவர் என்னை சற்று உற்றுப் பார்த்தார். பிறகு அவருக்கே உரிய அந்த ஈழத்துத் தமிழில் .. நாம் நினைப்பது போல் எல்லாம் அமைவதற்கு வாழ்வென்பது நாம் வரையும் ஓவியம் அல்ல. பல சமயங்களில் ஓவியம் கூட நாம் நினைப்பது போல வருவதில்லை. அமைந்ததை அமைதியாக எதிர்கொண்டு விடு. எல்லாம் சரியாகி விடும் என்றார்.
அண்ணன் ராபர்ட் பயஸ் மிகச்சிறந்த ஓவியர். விடுதலைக்கு விலங்கு நூலை எழுதியதற்காக அவர் கையால் வரைந்த புகழ்பெற்ற ஓவியம் ஒன்றை எனக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த பதிலைக் கூட ஓவியக் கோடுகளை முன்வைத்தே விவரித்து விட முயன்றார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த அருகிலிருந்த அண்ணன் பேரறிவாளன் “ஏமாற்றங்களை எதிர்கொண்டு பழகிக் கொள்ளுதல் என்பது ஒரு கலை. எனது தந்தையார் சிறுவயதிலிருந்து ஏமாற்றங்களை பழகிக்கொள்ள சொல்லுவார். அனைவரும் வெற்றி பெற்றால் வெற்றி என்ற ஒன்றே கிடையாது. எனவே ஏமாற்றங்களை பழகிக்கொள். ஏற்றுக்கொள். சரியாகிவிடும்” என்றார்.
அந்த அண்ணன்களின் முகத்தை நான் பார்த்தேன். எப்படிப்பட்டவர்கள் இவர்கள்… வாழ்வதற்கான எல்லா தகுதியும் இவர்களுக்கு இருந்தும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்கள். நான்கு காம்பவுண்ட் சுவருக்குள் 28 வருடங்களாக ஒரு உலகை அமைத்துக்கொண்டு இரவும் பகலும் பேதம் அறியாத விசித்திரமான கால ஓட்டத்தில் தன்னை கரைத்து கொண்டிருப்பவர்கள். இப்போது கதவு திறக்கும்.., அப்போது கதவு திறக்கும் ..என்றெல்லாம் எதிர்பார்ப்பில் கசிந்து ஒழுகும் ஒவ்வொரு நொடிகளையும் கணக்கெடுத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் .
ஒவ்வொரு முறையும் அவர்களை சந்திக்கும் போதும் சந்திப்பு நேரம் முடியும் அந்த கணத்தில் ஏதோ ஒரு சிறைத் துறை அலுவலர் வந்து சந்திப்பு நேரம் முடிந்துவிட்டதாக சாடை காட்டிவிட்டு செல்வார். அந்த கணத்தில் அண்ணன்களுக்கு முகம் இறுகும் துயரத்தை நானெல்லாம் கண்ணீர் மல்க அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். இறுகி அணைத்து விட்டு விடை பெற்று வரும்போது திரும்பி பார்க்கையில் அந்த கம்பிகளுக்கு பின்னால் அண்ணன்கள் நின்று கொண்டே இருப்பார்கள். அதை பார்க்கும்போது சட்டென நமது ஆன்மா உடைந்துவிடும்.
குறிப்பாக பயஸ் அண்ணன். விடைபெறும்போது இறுகி அணைக்கையில் நம் நெஞ்சம் விம்முவதை அவரே அறிந்து கொள்வார் . கைகளை இறுக்க கோர்த்துக் கொள்வார். சரி போய் வா தம்பி. துணிவாய் இரு என்பார். ஈழத்தவர்கள் அப்படித்தான். எப்படிப்பட்ட துயர சூழ்நிலையிலும் கலங்காத மனம் தளராது இறுகிப் போய் இருப்பார்கள். நீண்டகால யுத்தம் சார்ந்த வாழ்க்கை அவர்களுக்கு அது போன்ற உளவியலை பரிசாக அளித்து இருக்கும்போல.
அன்றும் அப்படித்தான். எனக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்களை பயஸ் அண்ணன் மூலம் தீர்த்துக்கொள்ள நான் சென்றிருந்தபோது.. அவர்கள் வாழ்க்கையை உணர்ந்து நான் எதுவும் கொட்ட முடியாமல் அமைதியாக திரும்ப தயாரானேன்.
அண்ணன் பயஸை நான் வழக்கம்போல விடைபெறுதலுக்காக இறுக்கி அணைக்க.. அண்ணன் ஒரு நிமிடம் என்னை விலக்கி.. என்னை நினைத்துக்கொள். எல்லா துயரமும் உன்னை விட்டு ஓடிவிடும் என்றார்.
நான் உடைந்து விட்டேன். சே.. எப்படிப்பட்ட வலிமிகுந்த வார்த்தைகள் அவை. அவர் அடைந்த துயரங்களுக்கு நாம் அடைந்த தெல்லாம் துயரம் என்ற சொல்லுக்குள் கூட வராதே என்று நினைத்துக்கொண்டேன்.
இப்போதும்கூட எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடிகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களைத்தான் நினைத்துக்கொள்கிறேன். அவரது வாழ்க்கை கதையான விடுதலைக்கு விலங்கு எழுதும்போது பல பக்கங்கள் அவரே எழுதிய குறிப்புகளை கொடுத்தார். அதில் அவர் அடிக்கடி குறிப்பிட்டிருப்பது.. தன் ஊருக்குத்தான் திரும்பவேண்டும் என்கின்ற விருப்பம். பலவிதமான சொற்களில் அதே விருப்பத்தை வெவ்வேறு விதமாக அவர் குறிப்பிட்டிருப்பார்.
ஊருக்கு திரும்பணும் தம்பி. என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டபோது.. திரும்பிப் போய் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று நான் கேட்டேன். அப்போது அவர் பேச்சு மொழியில் என்னிடம் விவரித்த உணர்ச்சிகள் தான்..
அனைவரும் குறிப்பிடும் விடுதலைக்கு விலங்கு நூலில் என்னால் எழுதப்பட்ட அந்தப் பத்தி.
“உங்களிடம் பகிர்ந்து கொள்ள
எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஒரு நாள் என் தாய் நிலத்திற்கு
நான் திரும்புவேன்..”
சமீபத்தில் அவரை சந்தித்தபோது இந்தக் குறிப்பிட்ட பத்திப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
எப்போதெல்லாம் ராபர்ட் பயஸ் என்ற பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் மணிசெந்தில் என்கின்ற என்னுடைய பெயரும் உச்சரிக்கப்படும் என்று அப்போது சொன்னேன்.
அவர் தலையசைத்து சிரித்துக்கொண்டார்.
முன்னொரு பொழுதில் அவரிடம் வாழ்வின் அர்த்தம் பற்றி எல்லாம் கேட்டது நினைவுக்கு வந்தது.
ஒருவேளை என் வாழ்வின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்குமோ..??
வருடம் 1995 என்று நினைக்கிறேன். நான் அப்போது திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் கல்லூரி ஆண்டுவிழாவிற்கு வருகிற சிறப்பு விருந்தினரை வரவேற்கும் குழுவின் பொறுப்பாளராக என்னை நியமித்திருந்தார்கள். தொடர்வண்டி நிலையத்திலிருந்து அவரை கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்று அழைத்து வந்தார்கள். வந்திருப்பவர் ஒரு பேச்சாளர் என்றார்கள். பார்க்க ஆள் கருப்பாக அவ்வளவு வசீகரமாக இல்லாத தோற்றம். அடிக்கடி இருமிக் கொண்டதும்.. மாத்திரை மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததுமான அவரது நிலைமை கதாகாலட்சேபம் செய்ய வந்த வயதான பிரசங்கி போல இருந்தது.ஒரு கல்லூரி ஆண்டு விழாவிற்கு கதாகாலட்சேபம் செய்பவரை போல ஒருவரை அழைத்து வர வேண்டுமா என்று நிர்வாகிகள் மேல் எனக்கு சற்று கோபம் ஏற்பட்டது.
வந்திருந்தவரை அறைக்குள் விட்டுவிட்டு எனது தினந்தோறும் பணியான மன்னார்குடியில் இருக்கின்ற எனது இல்லத்திற்கு தொலைபேசினேன். அப்போதெல்லாம் அலைபேசி இல்லாத காலங்கள். ஏதேனும் கூட்டம் குறைவாக இருக்கிற எஸ்டிடி பூத்துகளில் காத்திருந்து இடம் பிடித்து பேச வேண்டும். தொலைபேசியை எடுத்தது அப்பா. யார் வந்திருக்கிறது என்று அவர் கேட்டதற்கு யாரோ வலம்புரிஜானாம். கச்சேரி செய்பவர் போல் இருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார்கள் என்று மிகவும் சலிப்பான குரலில் அலட்சியமாக சொன்னேன்.
என் தந்தை அவர் சாதாரண மனிதரல்ல. பேரறிஞர். உன் வாழ்வில் அவருடைய பேச்சை நீ கேட்க இருப்பது ஒரு மகத்தான நிகழ்வு என்றெல்லாம் புகழ்ந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் பார்த்தால் அப்படியெல்லாம் தெரியவில்லையே என்று யோசித்தவாறு நான் அறை திரும்பினேன்.
நாங்கள் தங்கியிருந்த youth hostel ல் பக்கத்து அறையில்தான் அவர் தங்கியிருந்தார். இரவு தாமதமாக வந்தவர் அதன் பின்னரும் வெகுநேரம் படித்துக் கொண்டிருந்தார். நாங்கள் உறங்க தொடங்கிய பிறகும் அவர் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதிகாலையில் எழுந்து நான் பார்த்தபோது.. அவர் படித்துக் கொண்டிருந்ததை அங்கே இருந்த ஜன்னல் வழியாக காண நேர்ந்தது.
ஒரு மனிதன் எதற்காக இப்படி வாசிக்கிறான்.. வாசிப்பின் மீதான அவனது மயக்கம் எப்போது தீரும் என்றெல்லாம் அலை அலையாய் எனக்குள் ஆயிரத்தெட்டு கேள்விகள். காலை 7 மணிக்கு எங்களை அழைத்து எல்லா நாளிதழ்களையும் வார இதழ்களையும் வாங்கி வரச் சொன்னார். பிறகு அவற்றை உன்னிப்பாக கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் படித்துக் கொண்டிருந்தார். எதைக் கொடுத்தாலும் தின்கிற உலகத்தில் எதைக் கொடுத்தாலும் படித்து விடுகிற பழக்கம் அவருக்கு இருந்தது.
காலையில் பகோடா கட்டிவந்த சின்னஞ்சிறு பேப்பர் துண்டையும் அவர் விடவில்லை. அதையும் படித்துப் பார்த்தார். இது ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியாமல் அவரிடம் நேரடியாகவே கேட்டு விட்டேன்.
எதை எடுத்தாலும் படிக்கிறீர்களே.. அப்படி என்ன இருக்கிறது என்று கேட்ட என்னை சற்றே விசித்திரமாக பாத்தார். நாம் வாழ்க்கையில் வெகுநாட்களாக தேடிக்கொண்டிருக்கிற ஏதாவது ஏதோ ஒரு அபூர்வ தருணத்தில் சிக்குகிற ஒரு துண்டு காகிதத்தில் கூட கிடைத்து விடலாம் இல்லையா.. அதைத்தான் தேடித்தேடி படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.
பிறகு இரண்டு இட்லிகள் சாப்பிட்டுவிட்டு கல்லூரி விழாவிற்கு கிளம்பினார். ஒரு தேர்ந்த நாதஸ்வர வித்துவான் போல ஒரு பட்டு ஜிப்பா. தலையில் நடு வகிடெடுத்து எண்ணையால் அழுந்தி வாரப்பட்ட தலை.
அவரைப் பொறுத்தவரையில் அவர் பேசிய பல்லாயிரக்கணக்கான மேடைகளில் அதுவும் ஒரு மேடை அவ்வளவுதான். ஆனாலும் ஒரு போர் வீரனை போல.. ஒரு மகத்தான எதிரியை சந்திக்கின்ற ஆயத்தங்களோடு அவர் தயாரானார். ஒரு மணி நேரம் பேச்சுக்கு அவர் ஒரு இரவு முழுக்க தயாரானாரா என்கின்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது.
மீண்டும் அவரிடத்தில் கேட்டேன். ஒரு மணி நேரம் பேசுவதற்கு இரவெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறீர்களே நான் கேட்டதற்கு சிரித்துக்கொண்டே.. உன் கல்லூரியில் பேசுவதற்காக நான் இரவெல்லாம் படித்து தயாராகவில்லை. என்னை தயார் படுத்திக் கொள்வதற்காக நான் படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சி என் கடைசி நொடி வரைக்கும் நீடிக்கும் என்றே கருதுகிறேன் என்று எளிமையாக சொன்னார்.
அவர் அப்போது வைத்திருந்த புத்தகப்பை அவரது துணிப்பையை விட பெரிதாக இருந்தது. எந்த பயணத்திற்கு போனாலும் புத்தகங்களை உடன் அழைத்துச் செல்வதில் அவர் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக அவர் சொன்னார். சொல்லப்போனால் புத்தகங்கள் படிப்பதற்காகவே அவர் பயணிப்பதாகவும் அவர் சொன்னது எனக்கு விசித்திரமாக இருந்தது.
என் வாழ்க்கையில் அந்த நான் கண்ட மனிதரைப் பற்றி அந்த அற்புத நாளுக்குப் பிறகு தேடத் தொடங்கினேன்.
பேரறிஞர் வலம்புரி ஜான்.
தமிழ் அறிவுலகின் மகத்தான மாமனிதர். அவரது ஆற்றொழுக்கான தமிழ் அனைவரையும் வசீகரிக்கக் கூடியது. ஒரு மணிநேர அவரது பேச்சை கேட்கும் போது பல்லாயிரக்கணக்கான நூல்கள் நிறைந்திருக்கும் ஒரு நூலகத்தை ஒரு முறை சுற்றி வந்தது போல ஒரு நிறைவு ஏற்படும். கவிஞர்/ எழுத்தாளர்/ பத்திரிக்கையாளர்/ அரசியல்வாதி/ மாநிலங்களவை உறுப்பினர்/ வழக்கறிஞர் என பல்வேறு புகழ்பெற்ற அடையாளங்கள் அவருக்கு இருந்தாலும் .. தமிழ்மொழி கண்ட மாபெரும் பேச்சாளர் என்பதே அவரது பிரதான முகம்.
வாசிப்பின் ருசி அறிந்த மனிதர் அவர். கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பொழுதுகளில் கூட அவர் படித்துக் கொண்டே இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பேரறிஞர் களுக்கு வழமையாக இருக்கக்கூடிய அனைத்து தீய பழக்கங்களும் அவருக்கும் இருந்தது. ஆனாலும் வாசிப்பை விடாத ஒரு வாழ்வினை கொண்டிருந்ததால்..உடல்நல கேட்டினையும் தாண்டி அவர் ஒரு மாபெரும் மேதை ஆக அவர் வாழ்ந்த காலத்தில் சுடர் விட்டுக் கொண்டிருந்தார்.
எங்கள் கல்லூரியின் விழாவிற்கு அவர் வந்தபோது அவரைப் பற்றி பெரிதளவு அறிந்திரந்தாத மாணவர் கூட்டத்தின் கூச்சல் குழப்பங்களுக்கிடையே அவர் மேடை ஏறினார். மைக்கைப் பிடித்து தான் தாமதம்.. அடுத்த ஒரு மணி நேரம் அவருடைய பேச்சு அந்த அவையைக் கட்டிப் போட்டது. சரளமான பேச்சு. பிறமொழி சொற்கள் கலவாத நுட்பத் திறமை. பல நூல்கள் பற்றி அறிஞர்கள் பற்றி மேற்கோள் காட்டுகிற உரையாக இருந்தாலும், அது கொண்டிருக்கின்ற எளிமை எங்கள் அனைவரையும் அசத்தி போட்டது.
இப்படி ஒரு மனிதனால் பேச முடியுமா.. கடல் போன்ற குறையாத வற்றாத தமிழை.. ஒரு பேச்சினூடே நுழைத்து பெரும் அருவி என கொட்டித் தீர்க்க முடியுமா .. என்றெல்லாம் நாங்கள் வியந்து போனோம்.
மேடை ஏறுவதற்கு முன்பாக கருத்த நிறத்தில் பார்ப்பதற்கே பொருட்படுத்தாத நிலையில் இருந்த அந்த மாமனிதன் அடுத்த ஒரு மணி நேரத்தில்..அங்கே கூடியிருந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு ஒரு கதாநாயகனாய்.. அறிவுச் சுடர் விடும் பேரழகனாய்.. மாறிப் போன கதை அது.
மதிப்பிற்குரிய வலம்புரிஜான் அவர்களுடைய மொழி ஆற்றலை நாம் சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கின்ற குறை என் வாழ்வில் நான் சந்தித்த அனைத்து அறிஞர்களிடத்திலும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாழ்நாளில் பல்வேறு மேடைகளில் பேசி வந்த பேச்சுத்தமிழை தொகுத்து நூல்களாக மாற்றியிருந்தால் இந்த மொழி அடைந்த மாபெரும் செல்வமாக அது காலம் காலமாய் நிலைத்திருக்கும்.
ஆனால் காலம் அவ்வளவு கருணை குணங்கள் கொண்டது அல்ல. மேடைகளில் உலகை வென்ற அரசனுக்கு அரசனாய் வலம் வந்த வலம்புரிஜான் வழக்கம்போல அரசியலில் தோற்றுத்தான் போனார். அவருக்கு இருந்த தீய பழக்க வழக்கங்கள், கடுமையான அலைச்சல்கள், அரசியல் தந்த மன உளைச்சல்கள் என பல அழுத்தங்கள் அவரை சற்றே சிறுவயதிலேயே கொன்று தீர்த்தன.
உலகில் பிறந்த அனைத்து மொழிகளைவிட தமிழ் மொழி என்னும் நீடித்து வாழ்வதற்கு வலம்புரிஜான் போன்ற காலத்தினால் தோன்றிய மொழி கடவுளர்கள் இந்த மொழிக்கு கருணை செய்து கொண்டே இருப்பது தான் காரணம் என்பதை இப்போது நான் அறிகிறேன்.
பேரறிஞர் வலம்புரிஜான் அவர்களுடைய பல பேச்சுக்கள் யூடியூபில் காணக்கிடைப்பது ஆறுதலைத் தருகிறது. இந்த மொழியை நீங்கள் உயிராக நேசிக்க வேறு எதுவும் செய்ய வேண்டாம். மறைந்த மாமேதை வலம்புரி ஜான் அவர்களுடைய தமிழைக் கேளுங்கள்
https://youtu.be/kClKyBFkc9c
பிரச்சனை என்னவென்றால்..
அந்தக் கதையை முழுதாகப் படித்து பாருங்கள். தினந்தோறும் இயல்பான வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு பிரபல எழுத்தாளர் ஒருவர் தாக்கப்படுகிறார்.
இதில் மகிழவோ சிரிக்கவோ ஒன்றுமில்லை என்றாலும் கூட..
இதுதான் தமிழ் சமூக மனநிலையின் நிலை, தமிழ் சமூகமே சாடிஸ்ட்.. என்றெல்லாம் கொதிப்பதற்கும், குதிப்பதற்கும் இதில் ஒன்றுமில்லை.
ஆனால் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கின்றன.
ஆசானுக்கும் சிலவற்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனால் கூடி வாழும் சமூகத்தை கவனிக்க தவிர்த்துவிட்டு நீங்கள் மயிலாசனத்தில் சிம்மாசனம் சூடி அமர்ந்து இருந்தீர்களேயானால் நீங்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும் அது பொது சமூகத்திற்கு தெரியாமல் விலக்கப்படுவீர்கள்.
நீங்களும் சாலைக்கு வர வேண்டும் ஆசானே… எவன் கூரை பற்றி எரிந்தால் என்ன.. இந்த நிலத்தில் மீத்தேனோ ஹைட்ரோ கார்பனோ எடுக்கப்பட்டால் என்ன.. நமக்குத் தொழில் எழுத்து. அந்த இருக்கையை விட்டு நான் எழ மாட்டேன் என்று இருந்தால்..நீங்கள் தாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போது.. உங்களுக்கு வேண்டியவர்களை தவிர உச்சுக் கொட்ட யாரும் இருக்க மாட்டார்கள்.
எழுத்தாளன் தனியானவன் அல்ல. இந்தப் பெரு உலகத்தின் அங்கம். மற்ற எல்லாரையும் விட இந்த சமூகத்தை சரியாக அவதானிப்பதற்கும் , தவறானவற்றை எதிர்த்து நிற்பதற்கு மான கூடுதல் பொறுப்பு நிலை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை எழுத்தாளர்கள் முதலில் நம்ப வேண்டும். நான் மகாபாரதம் எழுதுவேன். ஆனால் பக்கத்து தெருவில் நடக்கும் அநியாயத்தை எட்டி பார்க்கமாட்டேன் என்றால் சூழ்நிலை பிசகும் தருணமொன்றில் நம்மை எட்டிப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள் .
தோசை காரனுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வருகிறார்கள் என்றெல்லாம் ஆவேச படுகிறீர்கள். தன்னிடம் வருகின்ற எந்த மனிதனுக்கும் அவன் பாதிப்பிற்காக வழக்கறிஞர்கள் வரத்தான் செய்வார்கள். அது அவர்களது தொழில். அதே தோசை காரன் காயம்பட்டால் மருத்துவர்கள் மருத்துவம் செய்யத்தான் செய்வார்கள்.
அது அவர்களது பணி.
அவனுக்காக அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்று நீங்கள் பதறுவதில் எவ்வித நியாயமும் இல்லை ஆசானே…
அவரவர்களுக்கு வேண்டியவர்கள் அந்தந்த சமயங்களில் வரத்தான் செய்வார்கள்.
பாதிக்கப்பட்ட நேரத்தில் சொல்லிக் காட்டக் கூடாது தான்.. ஆனாலும் நீங்கள் பதறுவதால் சொல்ல வேண்டி இருக்கிறது.
நீங்கள் முன்வைக்கிற எதற்கும் மாற்றாக இருக்கிற எவரையும் உங்கள் வாழ் காலத்தில் நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள். அவர்களை இழிவுபடுத்தி அவதூறு பேசி இருக்கிறீர்கள். தமிழர் மீது, தமிழ் நிலத்தின் மீது வேட்டையாடும் அனைத்து வல்லாதிக்க தேசியங்களின் மீதும் உங்களது கருணை உங்கள் எழுத்துக்கள் மூலம் சொட்டிக்கொண்டே இருக்கிறது. எதைப் பற்றியும் உங்களுக்கு கவலை இல்லை. ஒரு கௌரி லங்கேஷ் போலவோ, ஒரு கிரிஷ் கர்னாட் போலவோ உங்களை இருக்க சொல்லவில்லை. ஒரு சாதாரண மனிதனாக உங்களை சுற்றியுள்ளவற்றை உங்களது பெருமித முகமூடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்க்கச் சொல்கிறேன். அவ்வளவே.
எதையும் கவனிக்காமல் பார்க்காமல் தாங்கள் வந்தது தான் ஓவியம், சித்தரித்தது தான் எழுத்து என்று கிரீடம் சூட்டிக் கொண்டு இருந்தால்… நம் கருத்துகளுக்கு மாற்றாக எழுதும் எவனும் அயோக்கியனே என்று தனக்குத்தானே தராசு பூட்டி எடை பார்த்துக் கொண்டிருந்தால்… நாம் தனித்து தான் நிற்போம்.
எனவேதான் தோசை காரனுக்கு வருகின்ற நாலு பேர் கூட உங்களுக்கு வரவில்லை. உங்களை ஆதரித்து எழுதுகிற நண்பர்கள் கூட சென்ற காலங்களில் நீங்கள் எழுதியது குறித்து தாங்கள் பொருட்படுத்தவில்லை என்ற பெருந்தன்மை மனோபாவத்தை வெளிப்படுத்தவே ஆதரிக்கிறார்கள்.
அது போன்ற எழுத்துக்கள் ‘ஆயிரம் முரண்கள்’ இருந்தாலும் என்பது போன்ற பெருந்தன்மை பாவனைகள். அந்த அரிதார எழுத்துக்கள் சமூகத்தின் பொது வெளிப்பாடு அல்ல.
என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எழுத்தாளர் என்பதாலோ தோசை மாவு விற்பவர் என்பதாலோ நடைபெற்று முடிந்த இருக்கின்ற சம்பவத்தின் மீதான கரிசனத்தை கோரி நிற்கக் கூடாது.
உண்மை விசாரணை நடைபெற்று தவறு செய்தவர் தண்டிக்கப்படட்டும்.
மற்றபடி ஆசான் ஜெயமோகன் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது . அவர் யார் என்றே தெரியாமல் தோசை மாவு விற்பவர் அவரை அணுகியது என்பது பரவலாக்கப்படாத தமிழ் அறிவுலகம் (!) பற்றி சிந்திக்க வைப்பதால் அது கவலை அளிக்கிறது.
மணி செந்தில்.
ஒரு காலத்தில் காதுகளே இல்லாத மனிதர்கள் இருந்தார்கள்.
காதுகளே இல்லாத மனித வாழ்க்கையில் சொற்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ இடமில்லை.
அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் இல்லை. அப்படிப் பேசிக் கொண்டால் கூட அவைகளுக்கு பொருளும் இல்லை.
சரி.. காதுகள் இல்லாதது தான் பிரச்சனை. காதுகளைப் பொருத்துவோம். இனியாவது மனித வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்போம் என கடவுள் சிந்தித்து மனிதர்களுக்கு காதுகளை பொருத்தினான்.
அப்போதும் அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அர்த்தம் இல்லாததைப் பேசிக்கொண்டு எவ்வித உயிர்ப்பும் இல்லாத ஓசைகளை கேட்டுக்கொண்டும் வேரற்ற பெருமரம் போல அவர்கள் எவ்வித பிடிப்புமற்று இருந்தார்கள்.
இதைக் கண்ட கடவுள் மீண்டும் சிந்தித்தான்.
எவ்வித உணர்ச்சியும் இல்லாத சாரமற்ற மானுட வாழ்க்கையை கண்ட கடவுள் அர்த்தமுள்ளத்தாக்க சிந்தித்தான்.
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.
பிறகு தானே ஒரு மனிதனாக இந்த மண்ணில் பிறந்தான்.
தனக்கு இளையராஜா எனப் பெயர் சூட்டிக் கொண்டு..
அவனே அர்த்தமற்று திரிந்த சொற்களுக்கு சிறகுகள் முளைக்க வைத்தான். காதுகளில் பூ உரசும் உணர்வினை மனிதர்கள் அடையத் தொடங்கினார்கள்.
அந்த அதிமனிதன்..
விசித்திரமான ஒலிக்கலவை மூலம்
மனிதனை அமைதிப் படுத்த தொடங்கினான்.
பல்வேறு ஓசைகளுக்கு
உயிரூட்டி உணர்ச்சிகளை உட்புகுத்தினான்.
காதுகளில் அருவிகள் பொழிந்தன.
வெவ்வேறு இசைக்கருவிகளின் விசித்திர கலவையில் பொங்கி எழுந்த இசைப் பிரவாகம் அதுவரை இல்லாத மானுட உணர்ச்சிகளை உண்டாக்கியது.
எங்கிருந்தோ கசியும் அந்த இசை துளியில் மனிதனின் கண்கள் கலங்க தொடங்கின. மனிதர்கள் அழுதார்கள்.
மென்மையாக சிரிக்க பழகினார்கள்.
தனிமையில் சிந்தித்தார்கள். காதலித்தார்கள். கலவி கொண்டார்கள்.
குழந்தைகள் தூங்கினார்கள். காதலில் தோல்வியுற்று அமைதியற்று அலைந்த மனங்கள் சிறு அழுகையுடன் சாந்தமாயின. பிரிவு மகிழ்ச்சி துக்கம் காதல் காமம் துரோகம் என பல்வேறு உணர்ச்சிகள் அந்த அதி மனிதனின் வெவ்வேறு இசையாழங்களால் உணரப்பட்டது. தாய் மண்ணை விட்டு பிரிந்து விதியின் சூட்சம கோடுகளால் உலகப் பரப்பில் ஆங்காங்கே துப்பப்பட்ட ஒரு இனத்தின் மனிதர்கள் அந்த குரலை கேட்கும் போதெல்லாம் தன் தாயின் கருவறைக்கு திரும்புவது போல ஆறுதல் கொண்டார்கள்.
தொலைதூரப் பாலையில் கொளுத்தும் வெயிலில்.. பிழைப்பின் நிமித்தமாய் அசைவற்று அமர்ந்திருக்கும் போது.. காதுகளில் நுழையும் அந்த அந்த தேவமனிதனின் இசை ஒரே நொடிக்குள் தன் சொந்த ஊரின் ஏரிக்கரை காற்றையும் அத்தை மகளின் வாசனையையும் தாய் மண்ணின் ஈரத்தையும் கொண்டு வந்து தன் ஆன்மாவிற்குள் சேர்த்ததை கண்டு அவர்கள் அதிசயித்தார்கள்.
அது கட்டிடக் காடாக இருந்தால் என்ன.. கட்டாந்தரையாக இருந்தால் என்ன.. உயர்ந்து நிற்கும் அரண்மனையாக இருந்தால் என்ன.. சுட்டெரிக்கும் சுடுகாடாக இருந்தால் என்ன.. பேதமற்று அந்த இசைத்துணுக்குகள் காற்றில் கலந்து பரவின.
அந்த மானுடர்கள் முதன்முதலாக வெறும் ஒலிகளால் பசியாற அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.
தனித்தே பிறந்த மனிதர்கள் உயிர் உருகும் அந்த இசையை பெரும் துணையாக அடைந்தார்கள். தனியே வாழவும் தனியே நடக்கவும் இரவுகளில் தனியே படுக்கவும் காற்றில் மிதந்து வந்த அந்த இசைத் துளிகளால் அவர்களுக்கு சாத்தியமானது.
எல்லா இரவுகளிலும் இருட்டு இருந்தது. கூடவே இளையராஜாவும் இருந்தார்.
எனவே வெளிச்சமும் இருந்தது.
இறுதியாக மனிதன்..
அந்த கடவுளின் உன்னத இசையை தனது சுவாச காற்றாக மாற்றும் வித்தையை அவனாகவே கண்டறிந்தான் .
இவ்வாறாகவே இவ்வுலகில் மானுட ஜீவிதம் இந்த நொடி வரை மகத்தானதாக
இருந்து வருகிறது.
கடவுளின் கருணைக்கு இன்று பிறந்தநாள்.