பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: என் கவிதைகள்.. Page 2 of 4

நியாயத்தின் கதை.

????

நியாயம்

என்ற

வினாவின் ஓசை

நடுநிசியில்

மூடப்படாத

குடிநீர் பைப்பு

போல

சரித்திரத்தின்

வீதிகளிலே

சொட்டி கொண்டே

இருக்கிறது.

எது நியாயம்

என்பதற்கு

அவரவருக்கு

ஒரு தர்க்கம்.

ஆளாளுக்கு

ஒரு கதை.

வரையறையற்ற

சுதந்திரத்துடன்

அவரவர்‌ விழிகளில்

படுகிற காட்சியாய்,

இலக்கற்ற ஓவியமாய்,

அலைந்துக் கொண்டே

இருக்கும் சீரற்ற

சிதறலாய் நியாயம்.

எந்த திசையில்

நியாயம் உறைகிறது

என்று எவருக்குமே

தெரியாது.

ஏனெனில்

நியாயம்

திசைகளை அழித்து

அவரவருக்கு

ஒரு திசையை

பிரசவிக்கிறது.

நியாயத்தை

பற்றி எழுதி எழுதி

எழுதுகோல்கள்

முனை உடைந்து

இருக்கின்றன.

அவரவருக்கான

நியாயத்தின்

பழுப்பேறிய

ஏடுகளின்

வாக்கியங்கள்

தங்களுக்கு தாங்களே

அவ்வப்போது

மாறிக் கொள்கின்றன.

அப்படி என்றால்

நியாயம் என்றால் என்ன

என்று புத்தனின் கடைசி

சீடன் சுமன் கேட்டான்.

தனக்குள் ஆழ்ந்திருந்த

புத்தன் தன் மௌனத்தை

கலைத்து சொன்னான்.

“அடுத்தவரின்

பார்வையை

உன் விழிகளில்

பார்த்தால்

அது தான் நியாயம்.”

காலம் ஒரு முறை

சிலிர்த்து அடங்கியது.

❤️

இதுதான் என் வாழ்வு.

அப்போது நான்

அப்படி

செய்திருக்க

கூடாது என்கிற

ஒன்றே ஒன்றை

வாழ்வின்

பல

சமயங்களில்

நீக்கி விட்டு

பார்த்தால்..

எதுவுமே இல்லை

வாழ்வில்.

????

தேன் மொழி

நிறைவேறி விட்ட உறவில்

தேன்மொழி

மரணம் அடைகிறாள்.

நிறைவேறாத

ஏக்கத்தில் தான்

தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

உண்மையில்

தேன்மொழியை தேடி

அலைபவர்கள்

காணும் போது

தொலைத்து விடுகிறார்கள்.

சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே

கண்டெடுக்கப்படுகிறவள் தான்

தேன்மொழி.

மீண்டும்

மீண்டும்

அலைகள்

கரைகளை நோக்கி

வந்து கொண்டு தான்

இருக்கின்றன.

ஆனால்

செந்நிற அந்தி

ஒன்றில்

கைநழுவிப்போன

அந்த ஒரு அலை

திரும்பி வருவதே இல்லை.

நினைவின்

உயிர் கால்

நனைத்து

ஒருபோதும்

திரும்பி

வராமல் போன

அந்த அலை தான்

தேன் மொழி.

❤️

அல்லாஹு அக்பர்

நீ என்னை
ஆக்கிரமிப்பதற்காகவும்,
கட்டுப்படுத்துவதற்காகவும்
வீசும் ஆயுதங்களை
கம்பீரமான
எனது கலகக் குரல் மூலமாக
அடித்து நொறுக்குவேன்.

நான்
விடுதலையின் காற்று.
எதிர்ப்பின் ஏகாந்தம்.
உன் கட்டுபாட்டுக்
கம்பி வேலிக்குள்
அடங்கி விடமாட்டேன்.

ஓங்கி ஒலிக்கும்
எனது முழக்கம்
என்னைப்போலவே,
உன்னை எதிர்த்துப்
போராடி உன்னால்
உயிரோடு
கொளுத்தப்பட்ட
எனது முன்னோரின்
சாம்பலிலிருந்து
கிளர்ந்து எழுந்தது.

நான் யாராக இருக்க வேண்டும் என்பதை
நான் தீர்மானிப்பதை விட
நீ தீர்மானிக்கக் கூடாது
என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் யார் என்பதை
நீ தீர்மானித்து
வைத்திருக்கும்
எல்லா வரையறை
சட்டகங்களையும்
கிழித்து எறிவேன்.

எனது உடை
உன் அதிகார
பாசிச உச்சங்களின்
உள்ளத்தை நடுங்கச் செய்கிறது என்றால்
அதை நான் ரசித்து
அணிவேன்.

எனது பண்பாட்டின்,
எனது வழிபாட்டின்,
கற்றைப் புள்ளிகளை
உன்
கைப்பிடி அதிகாரத்தால்
ஒற்றைப் புள்ளியாக
வரைய துடிக்கும்
உனது வரலாற்று
வன்மத்தை
எகிறி மிதிப்பேன்.

என்னை அச்சுறுத்துவதாக
எண்ணி
கூட்டம் கூடி முழங்கித்
தீர்க்கும் உனது அச்சம்
கம்பீரமான எனது
ஒற்றை அதட்டலால்
அடங்கி ஒடுங்கும்.

நீ கடவுளைச் சொல்லி
என்னை கலங்கச்
செய்வாய் என்றால்,
நானும் கடவுளை முழங்கி
உன்னை நடுக்கமுறச்
செய்வேன்.

இன்னும் மீறி
அழுத்தினால்,
எல்லோரும்
ஓர் குரலில்,
ஓர் உடையில் ,
உரக்கச் சொல்வோம்.

“அல்லாஹு அக்பர்”.

உறையாத நினைவோடை.

ஏதோ நகர்த்தலில் என்றோ , யார் பெயரிலோ

சேமித்து வைத்திருக்கும்

உன் அலை பேசி எண்ணை

கால நழுவலின் பிசகிய நொடி ஒன்றில்

என்னை அறியாது பார்த்துவிட்டேன்.

அது ஒரு குழந்தையைப் போல

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.

எப்போது வேண்டுமானாலும் விழித்து விடுகிற அபாயத்துடனும்,

அலறி காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்துடனும்.

ஆனாலும் ஆழ்ந்து தூங்கும்

அந்த குழந்தையின் முகத்தில் தான் எத்தனை அழகு..??

❤️

ஆன்மாவின் வண்ணத்துப்பூச்சி

விடுபடவே முடியாத கால சுழற்சியின்

திடுக்கிடும் கணமொன்றில்

உலராது உறைந்திருக்கும்

உந்தன் முகம்..

ஒரு இசைக்குறிப்பு போல

என் இதயத்தில் ஆழ்ந்து கால நேர பேதம் அறியாமல்

ஒலித்து கொண்டே இருக்கிறது.

நிறைவேறாத கனவின்

தணியா தாகத்தை

பொன் மகரந்தங்களாக சுமந்து திரிகிறது

என் ஆன்மாவினுள் ஒரு வண்ணத்துப்பூச்சி.

❤️

மணி செந்தில்

35Raju Janu, மு.முகம்மது சர்வத்கான் and 33 others1 comment1 shareLikeCommentShare

1

குமிழி

வன் காற்றின் சிறகு மோதினாலும்

சிதையாமல்சற்றே விலகி

சிணுங்கிக் கொண்டே

உயர உயர பறக்கிறது

நம்பிக்கை முகத்தின்

புன்னகைக்குமிழி.

❤️

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

❤️

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதை என்னை பற்றி பேசும்

.உங்களையும் பற்றி பேசக் கூடும்.

உங்களுடையது என நீங்கள் உணரும்போது

கதை என்னுடையதாக இருப்பதை

நீங்கள் மறப்பீர்கள்..

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் ஒரு காடு இருக்கிறது.

அந்தக் காட்டில் தான் நான் இருக்கிறேன்

.நீங்களும் இருப்பீர்கள்.

அந்தக் காட்டில் நீங்கள் இருப்பதை உணரும்போது

நான் இருப்பதை மறப்பீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் வெளிறிய மதிய நேரம் ஒன்று இருக்கிறது.

அப்போது நான் எதுவும் செய்யாமல்

எனக்கு முன்னால் இருக்கின்ற

ஜன்னல் கண்ணாடிக்கு அப்பால் இருக்கிற

வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒருவேளை நான் பார்த்துக்கொண்டிருப்பது

உங்களுடைய வானம் என்று

உங்களுக்கு கோபம் வரக்கூடும்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் சில நட்சத்திரங்களை கொண்ட

ஒரு இரவு இருக்கிறது.

இரவில் நிலவு இருக்கிறது.

நிலவில் ஒரு கனவும் இருக்கிறது.

அதே கனவு உங்கள் விழிகளில் மிதக்கும்போது

அந்த இரவு உங்களுடையது என்று நினைத்து

நான் எட்டிப் பார்த்ததாக நீங்கள் ஆவேசம் அடைவீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

அதில் நான் விலங்காக உலவி

சக ஆன்மாவை உலரா மாமிசமாக

குதறி இருக்கிறேன்.

அதே கதையில் கடவுளாக கண்ணீர் ததும்பி

கருணை கொண்டு காயம்பட்ட மனதிற்கு

மயிலிறகு தடவி இருக்கிறேன்.

அதே கதையில் நீங்களும் விலங்காக உலவி,

கடவுளாக கசிந்து இருக்கிறீர்கள்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது.

பல தோல்விகள். மிகச்சில புன்னகைகள்.

பல முறிவுகள்.சில தோள்கள்.

பெரும்பாலும் தனிமை.

காலியான மேசை.

எதுவும் இல்லாத கண்ணாடி கோப்பை.

அந்த மேசையில் என் எதிரே

நீங்கள் அமர்ந்திருப்பதாக நான் உணர்கிறேன்.

உங்களுக்கும் அப்படித்தான்.

நான்தான் அமர்ந்திருப்பதாக

நீங்கள் நம்புகிறீர்கள்.

ஆக..

நம்மிடம் ஒரு கதை இருக்கிறது.

அந்தக் கதையில் நாமும் இருக்கிறோம்.

❤️

நினைவின் பக்கங்களில் மலரும் பூ..

தூசி படர்ந்த புத்தக அடுக்கில்

தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின்

சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில்

ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ

அதுவாகவே எழுதத் தொடங்கியது.

நினைவின் பக்கங்களில்.

அதுவரை எழுதப்படாத

அழகிய கதை ஒன்றை.

❤️

மணி செந்தில்.

83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare

29

கணக்கு-வழக்கு

 

நின்று நிதானித்து
திரும்பிப் பார்த்தால்
நிறைவொன்றுமில்லை.
குறையொன்றுமில்லை.

கண் கூசும் வெளிச்சங்களுக்கு,
உச்சுக் கூசும் உயரங்களுக்கு,
புகழ் வார்த்தை தளும்புகிற
போதைகளுக்கு,
அடிமையாகிப்
போன கணக்கினைத் தவிர
மிஞ்சியது ஏதுமில்லை.

கடந்தவை நடந்தவை எல்லாம்
கணக்கிட்டால் நிகழ்ந்தவை தானே
என பெருமூச்சுயன்றி வேறில்லை.

முதுகில் உரசும் கத்திகளுக்கு இடையே..
நெஞ்சில் உறுத்தும் புத்திகளுக்கு இடையே..
விளையாடித்தீர்த்தும் பலனில்லை‌.
ஆயிரம் சூழ போகித்திருந்தாலும்
சத்தியமாய் சொல்கிறேன் நலனில்லை.

இது தானா வாழ்வு என்பதிலும்..
இது நானா – தாழ்வு என்பதிலும்..
இடைவெளி இல்லா பேதமில்லை.

Page 2 of 4

Powered by WordPress & Theme by Anders Norén