பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 1 of 9

ஒரு பழைய வழக்கு.

கேள்வி கேள்

அதுதான் பகுத்தறிவு.

என்றார்கள்.

கேட்டேன்.

அவதூறு பேசாதே

என்று அதட்டினார்கள்.

நான் சொன்னாலும்

நம்பாதே.

உன் அறிவுக்கு எட்டிய

வரையில்

சிந்தித்துப் பார் என்றார்கள்.

சிந்தித்தேன்.

இவன் நன்றி மறந்தவன்

என நிந்தித்தார்கள்.

எல்லாம் புத்தகத்தில்

இருக்கிறது.

படித்துப் பார் என்றார்கள்.

படித்துப் பார்த்தேன்.

இவன் பழசைக் கிளறுகிறான்

என்று பதறினார்கள்.

அவர் சொன்ன புத்தி போதும்

சொந்தப் புத்தி வேண்டாம்

என்றார்கள்.

சரி என்று அவர்

சொன்னதைச் சொன்னேன்.

நீ துரோகி என பட்டம் சூட்டி

எதிர்த்தார்கள்.

கோவிலுக்கு போகாதே

என்றார்கள்.

சொல்லை நம்பி

போகாமல் வெளியே நின்றேன்.

பார்த்தீர்களா

கோவிலுக்குள் விடவில்லை..

நீ சூத்திரன் என்றார்கள்.

இல்லை..

நீங்கள் சொல்லி தான்

போகவில்லை

என்று சொல்வதற்குள்

அவர்தான் அழைத்துப் போனார்

என்றார்கள்.

உள்ளே வராதே என்றவனும்

உள்ளே செல்லாதே என்றவனும்

நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள்.

கடவுள் இல்லை

என்றார்கள்.

நான் வணங்குவதை விட்டேன்.

பின்னர் இப்படி

சொன்னவர் தான்

கடவுள்.. வணங்கு

என்றார்கள்.

நாங்கள் தான்

படிக்க வைத்தோம்

என்றார்கள்.

பிறகு குறளும்

சிலம்பும் மேகலையும்

அகம் புறம்

பேசிய சங்கமும்

பதினெண் கீழ்க்கணக்கும்

எட்டுத்தொகையும்

எப்படி என்றேன்.

குறளை மலம் என்றார்கள்.

சிலம்பை காமக்குளம் என்றார்கள்.

பெரிய புராணத்தை

பெரியப் புளுகு என்றார்கள்.

தேவாரம் திருவாசகத்தை தேறாது

என விரட்டினார்கள்.

நீ பேசும் தமிழ் சனியன்

என்றார்கள்.

ஆங்கிலத்தில் பேசு என

அதட்டினார்கள்.

தாய்ப்பால் பைத்தியங்கள்

என பேசினார்கள்.

நீ திராவிடன் என

பொய்யைக் குழைத்துப்

பூசினார்கள்.

இதை ஏன்

தெலுங்கனுக்கோ

கன்னடனுக்கோ

மலையாளிக்கோ

சொல்லவில்லை

என்று கேட்டால்

நீ மொழி வெறியன் என

ஏசினார்கள்.

அடையாளங்களை

அழித்தார்கள்.

பிறகு அடையாளமே

இல்லை எனச் சொல்லி

அடித்தார்கள்.

குனியக்குனிய

கொட்டினார்கள்.

குனிந்த பின்

தலையிலேயே

தமிழைச் சொல்லி

தட்டினார்கள்.

இறுதியாக

நீ காட்டுமிராண்டி

என்றார்கள்.

குனிந்தவன்

கண் சிவந்து

நிமிர்ந்தேன்.

“ஆம்.

நான் காட்டுமிராண்டிதான்.

ஆனால் காடு

என்னுடையது.

நீ வெளியேறு.”

என

உரத்தக் குரலில்

உறுமினேன்.

புலி உறுமலில்

புவி சிலிர்த்து

ஆடி அடங்கிற்று

ஆதி வனக்காடு.

⚫

நீங்கள் கேட்காதவை.

என்னிடம்
எவ்வித
எதிர்ப்பையும்
எதிர்பார்க்காதீர்.

நான் நள்ளிரவின்
சலனமற்ற நதியாய்
பேரன்பின்
பனி சூழ்ந்து
உறைந்திருக்கிறேன்.

என்னிடம்
தகாத வார்த்தைகளை
பரிமாறி விடலாம்
என எண்ணி விடாதீர்.

நான்
சொற்களின் ஆழியில்
தங்க மீன்கள்
பிடிக்கும் மீனவன்.

என்
அலைபேசி
உரையாடல்களை
தேடி அலைந்து
களைப்படையாதீர்.

மிக எளிதாக
ஒன்று சொல்கிறேன்
கேளீர்.

நீவிர் என்னைப் பற்றி
என்ன நினைக்கிறீரோ
அதேதான் நான்.

சொல்லப் போனால்
உம் முகம் பார்க்க
அதில் நீவிர்
என் முகம் பார்க்கலாம்.

அந்த வகையில்
உம் அகத்தின்
கண்ணாடியாக
உம் உருவின்
தோற்றமாக
நிறம் மாறி விடுகிறேன்.

என்னை எளிதாக
எடை போட்டு விடலாம்
என எண்ணி விடாதீர்.

உம் நிழலாய்
மாறிவிட்ட என்னை
உம்மால் எடை போட முடியாது.

என்னிடம்
போட்டி போட
ஒரே ஒரு தகுதி தான்
இருக்கிறது.

அதற்கு நீவிர்
நானாக வேண்டும்.
விதியின் விசித்திரக்
கொடுமை யாதெனில்..
நான் நான் மட்டுமே.

உங்கள் சதிகளோ
சாபங்களோ
உங்களுடைய
புறம் பேசுதலோ
ஒரு வகையான
எரி கற்கள்.

வரும்
வழியிலேயே
என் நேசத்தின்
ஓசோன்
மண்டலத்திலேயே
அவை உரசி
எரிந்து விடுகின்றன.

பூமியாய்
கைவிரித்து கிடக்கும்
என்னை வந்து
ஒருபோதும்
அடையப் போவதில்லை.

உங்களுடைய
எந்த எதிர்வினையையும்
பொருட்படுத்தும்
தொலைவில்
நான் இல்லை
என்பதுதான்
உமக்குத் தெரியாத
ஒரு ரகசியம்.

நான் சேமித்து
வைத்த மதிப்பை
உம் துரோகத்தின்
குறுவாளால் வெட்ட முடியாது.

ஏனெனில்
என்னுடைய மதிப்பு
எவரிடத்திலும் இல்லை.
அது என்னிடத்தில் மட்டுமே.

எனது இலக்கை
அழித்து விடலாம்
என எளிமையாக
திட்டமிடாதீர்.

ஏனெனில்
இலக்கை
நோக்கி
திட்டமிடுபவன்
அல்ல நான்.

அந்த நொடியில்
திட்டமிடுவதை
இலக்காக
மாற்றிக் கொள்வேன்.

சுழன்று
கொண்டே இருக்கும்
என் திசைமானி
உம்மை திகைக்க வைக்கும்.

மொத்தத்தில்
நான் யார் என்று கேள்வி
உமக்குள் எழுமாயின்
ஒரு
அபாயகரமான பதில்
என்னிடம் இருக்கிறது.

எப்போதும்
நீவிர் வரையறுத்து
வைத்திருக்கிற
நானாகவே நான்
இருந்து விட மாட்டேன்.
சில சமயங்களில்
நான் உம்மைப்
போலவும் மாறி
விடுவேன்
என்பதுதான் அது.

தனிமையின் குறுங்கத்தி

பசுமையேறிய
வனத்தினைப் பார்த்து
எதையோ தேட ,
அல்லது
தங்களை
ஏதோ ஒன்றில்
தொலைக்க,
என்னுடன் வந்தவர்கள்
வனமேறிப்
போனார்கள்.

நானோ
துவண்ட கால்களோடு
நான் தனிமையின்
குறுங்கத்தியால்
ஆழக் குத்தப்பட்டு
கைவிடப்பட்டத் தனியன்.

எவரோ செதுக்கி விட்டு
கைவிட்டுப் போன
குறைச் சிற்பம் போல
என் முன்னால்
ஒரு ஆதிமலை ஒன்று
அமர்ந்திருந்தது.

இருவரும்
பார்த்துக்கொண்ட போது
எங்களைப்
பார்த்துக் கொள்ள
யாரும் இல்லை.

தனிமையின்
மெல்லிய
நூலிழை
ஒரு சிலந்தி வலை போல
எங்களிடை படர,
விசித்திர காலத்தின்
விந்தைப் புள்ளியில்
நாங்கள் நெருங்கத்
தொடங்கினோம்.

எங்கிருந்தோ வந்த
இளங்குருவி ஒன்று
ஆதிமலை மடிப்பில்
ஒய்யாரமாய் அமர,
கர்வமாய்
என்னை பார்த்தது
மலை.

சில நொடிகளில்
சீண்டிய காற்றின் சிறகால்
அமர்ந்திருந்த குருவியும்
பறந்து போக,
கைவிடப்பட்ட
ஒரு புராதன கோவில்
போல மலை
இருள் அடைந்தது.

பல கோடி
ஆண்டுகளாய்
ஒரே இடத்தில்
தனிமையின்
நிழல் போர்த்தி
மௌனத்தின்
வலி சுமந்து
உறைந்திருக்கும்
ஆதிமலை அடிவாரத்தின்
பாறையை
ஏதோ ஒன்று நினைத்து
ஆறுதலாய்
வருடத் தொடங்கினேன்.

ஆதிமலை
விசும்பத்
தொடங்கியது.

❤️

துயரின் கடைசி கருணை..

🟥

வாழ்வில்
உன் நினைவின்
இசையற்ற
பெரு அமைதி,
உள்ளுக்குள்
கேட்க சகிக்காத
காட்டுக் கூச்சல்‌.

❤️

சொல்லி விட்டு
போ என்றேன்.

சொல்ல
என்ன இருக்கிறது
என சொல்லாமல்
போய்விட்டாய்.

சொல்லாமல்
சொன்னவை தான்
சொல்லியவைகளைவிட
சொல்லிக்
கொண்டிருக்கின்றன.

❤️

விடிந்ததும்
ஒரு கதவு திறந்திருந்தது.
காற்றடித்துதான்
திறந்திருக்கும் என
நினைத்துக் கொள்வதுதான்
எனக்கு நானே
காட்டிக்கொள்ளும்
கடைசிக் கருணை.

❤️

கடைசியாக
போகும் போது
‘தேடாதே’ என
எழுதி வைத்துப் போய்
இருக்கலாம்.

என்னைப் பற்றி
அவ்வளவு
புரிந்து இருக்கிறது
உனக்கு
என்பதுதான்
நான் அடைந்த
உச்சத்துயரம்.

❤️

இறுதியாய்
அனுப்பிய
செய்தியை
அழித்துவிட்டாய்.

அலைபேசியின்
கதவுகளை
மூடிவிட்டாய்.

மின்னஞ்சல்
பெட்டியை
அடைத்துவிட்டாய்.

எல்லாம் சரி.

உள்ளுக்குள்
ஆழ குத்தப்பட்ட
குறுங்கத்தியாய்
குமையும்
இந்த
இரவுகளை
எங்கே புதைப்பாய்..?

பொன் அந்தி
தனிமையில்
மென் காற்றாய்
உன் தோள்
உரசும் இந்த
நினைவுகளை
எந்த வெறுப்பின்
வெந்நீரால்
அளிப்பாய்…??

❤️

எல்லாவித
தர்க்கங்களுக்கும்
அப்பால்..

உனது பிரிவை
என்னால்
தாங்கிக் கொள்ள
முடிகிறது என்றால்..

நான் இறந்து
விட்டேன் என்றே
பொருள்.

🟥

*

இத்துடன் இணைக்கப்பட்ட ரூமியின் கவிதை வரிகளோடு நிறைவுப் பெற்று நம் கண்களை நனைக்கும் Rockstar 2011 -ல் வெளிவந்த புகழ் பெற்ற இந்தித் திரைப்படம். புகழ்பெற்ற இயக்குனர் இமிதியாஸ் அலி இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ஒரு மகத்தான இசை கலைஞனின் வாழ்வில் ஆறாத ரணமாகவும், சுய அழிவாகவும் மாறிப்போன நிறைவேறா காதலின் துயரத்தைப் பற்றி பேசுகிறது.

சூஃபி ஞானியாக அறியப்படும் ஜலாலுதீன் ரூமி ஒரு பாரசீக கவிஞர். படிக்க மிக எளிதானதாக தோன்றும் இவரது வரிகள் மிக மிக ஆழமான பொருள் கொண்டவை. தமிழில் “தாகம் கொண்ட மீனொன்று” என்.சத்தியமூர்த்தியின் அசாத்திய மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கிறது. படித்து பரவசம் அடைந்து அனுபவிக்க வேண்டிய மிக முக்கியமான நூல் அது.

சிலப்பதிகாரத்தில் “வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப” என்ற வரிகள் உள்ளன. இதில் ‘ஊழ்வினை’ என்பது என்றோ செய்த பாவம் அல்லது முன் ஜென்மத்தில் செய்த பாவம் என்பதான பொருளில் பொருத்தலாம்.

உண்மையில் எதனாலும் நிறைவடையாத கொந்தளிப்புடன் , இயல்பான மானுட அலைவரிசைகளில் பொருந்தாத துயர் வலியோடும் உலாவரும் ராக்ஸ்டார் கதை நாயகன் ‘ஊழ் வினை’ துரத்த வாழ்தல் வேண்டி அலைகிறான். ஏறக்குறைய மரணத்திற்கு நிகரான அலைகழிப்பு அது. இசை மேதை ஏ ஆர் ரகுமானின் அதி உன்னதமான மேற்கத்திய/ இந்திய கஸல் இசை கோர்ப்போடு வெளியாகி உள்ள இந்தப் படத்தின் பாடல் வரிகள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய துயர் கவிதை மலர்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் நிறைவேறா காதலின் உன்மத்த வெறியில் “இந்தப் போரும் இந்த ரத்தமும் எல்லாம் அவளுக்காக தான் அவளை மறக்கத்தான்..” என்ற பொருளில் கதறி தீர்ப்பதைத்தான் ராக்ஸ்டார் திரைப்படமும் வழிமொழிகிறது.

ரன்பீர் கபீரின் விழிகள் விசேடமானவை. எப்போதும் துயர் நிரம்பிய ஒரு ஏக்கத்தோடு அலைபாய்ந்து கொண்டே இருக்கும் அந்த விழிகள் கலைச் செழுமை கொண்டவை.

ஜியோ சினிமாவில் இருக்கிறது. வாய்ப்புள்ளோர் காண்க.

🛑

எசப்பாட்டுஅல்ல.நிசப்பாட்டு.

🔴

தமிழன் என்றேன்.
திராவிடன் என்றாய்.

எப்படி என்றேன்.

மொழிக்குடும்பம்
என கால்டுவெல்
சொன்னார் என
கர்வமாக சொன்னாய்.

அப்புறம்
கன்னடன் ஏன்
தமிழ் எழுத்துகளை
அழிக்கிறான்
என்று எளிமையாக
கேட்டேன்.

ஆவேசமாக..
தமிழன் என்றால்
பார்ப்பனர்கள்
வந்துவிடுவார்கள்
என அலறினாய்.

திராவிடம்
என்பதே
தென்னிந்திய
பார்ப்பனர்களை
குறிக்கும் தானே..!
என நிமிர்ந்தேன்.

திராவிட
இயக்கத்திற்கே
பார்ப்பனர்கள்
தலைமை
தாங்கினார்களே..?
என நடுங்கும்
உன் விழிகளை
பார்த்து
அடுக்கடுக்காய்
வினாக்களை
தொடுத்தேன்.

தமிழன் என்றால்
சாதி பிரிப்பான்
என சாதித்தாய்.
திராவிடன்
எதை பார்த்து
தமிழனை பிரிக்கிறான்
என கண் சிவந்தேன்.

சாதி பார்த்து
சீட்டு கொடுத்ததும்,
சாதி கட்சிக்கு
நோட்டு கொடுத்ததும்
திராவிடன் தானே
என மோதினேன்.

திராவிடம் என்பது
இனம் என்று இறுமினாய்.
அதை ஏன்
தமிழ்நாட்டை
தவிர வேறு
எங்கும்
சொல்ல முடியவில்லை
என உறுமினேன்.

நாம்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
நாட்டால் இந்தியன்
மழுப்பினாய்.

அதெப்படி
ஒருவனுக்கு
நாடும் இனமும்
மொழியும்
வெவ்வேறாக
இருக்கும் ?
என உன்
சட்டையை
பிடித்தேன்.

கருப்பும்
சிவப்புமாக
ஏதோ
மயக்கப் பொடியை
ஊதினாய்.

ஜெய் ஜக்கம்மா
ஜெய் ஶ்ரீராம்
என கத்திவிட்டு
அதோ ஒடுகிறாய்.

ஊராருக்கு
ஒரு சொல்
சொல்வேன்.

ஓடும் அவனை
யாரும் பிடிக்காதீர்கள்.

🔴

கருணையின் கதகதப்பு..

கொடும் வலியும்
மிகு துயரும்
காயமடைந்த
விழிகளும்
கொண்ட
எளிய ஆன்மா
ஒன்றின்
வேண்டுதல்
என்னவாக இருக்க
முடியும் என்னவாக
இருக்க முடியும்..??

கருணையின்
கதகதப்பினை விட..

🔴

An Unread message…

❤️

இன்னும்
அலைபேசி திரையில்
நான் பார்க்காத
உனது
குறுஞ்செய்தி ஒன்று
பனிக்கால இரவில்
சாக்கு பையின்
கதகதப்பில்
படுத்திருக்கும்
பூனைக்குட்டி போல
உறைந்திருக்கிறது.

உடனே
திறந்துப் பார்க்க
முடியாமல்
படிக்காத குறுஞ்செய்தியை
உறைந்த பார்வையோடு
பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்.

அது விரல் படாத
பியானோ பொத்தான்கள்
போல ஏதேனும் இசைத்துளி ஒன்றை உள்ளுக்குள்
தேக்கி இருக்கக்கூடும்
என எண்ணுகிறேன்.

அல்லது

ஒரு பெரு மழையோ
ஒரு சுடும் பாலையோ
இன்னும் ஏதாவது
இருக்கக்கூடும்.

இந்தக் குறுஞ்செய்தியைப்
படிக்க நான்
தனிமையும்
பனியும் நிறைந்த
ஒரு மலைமுகட்டை
தேட வேண்டி இருக்கிறது.

சில சமயங்களில்
உன்
குறுஞ்செய்திகளை
படிக்கும்போது
என் கழுத்தை கவ்வும்
ஒரு ஓநாய்
காத்திருப்பது என்பது
எதேச்சையானது அல்ல‌.

பிரிபடாத
அந்தக் குறுஞ்செய்தியில்
ஏதேனும் காரணங்கள்
இருந்து விடக் கூடாது என அஞ்சுகிறேன்.

காரணங்கள் இல்லாமல் குறுஞ்செய்தி
அனுப்பி
கொண்ட காலங்கள்தான்
பொன்னிழைப் பொழுதுகள்.

காரணங்கள்
அலுப்புட்டுகின்றன.
காரணங்கள்
சுயநல ஒப்பனையோடு
துருத்திக் கொண்டு தெரிபவை.

காரணங்களே
இல்லாமல்
அனுப்பப்படும்
குறுஞ்செய்திகள் தான்
காதலின் மது அருந்தி
பேரன்பின் நிர்வாணத்தோடு
இமைகள் கிறங்க
வந்திறங்கி
நம் இதயம் இடறுபவை.

காரணங்கள்
இல்லாமல்
குறுஞ்செய்தி அனுப்புவது
என்ன
காரணத்திற்காக
என்று கேட்கிறார்கள்.

நீயும் நானும்
இருக்கிறோம்
என்கிற காரணம்
ஒன்றே ஒரு
குறுஞ்செய்தி
அனுப்புவதற்கு போதாதா..

அவர்களுக்குத்
தெரியாது.
எழுத்துக்கள் இல்லாத
வெறுமை
குறுஞ்செய்திகளில் கூட
வாசிக்கக்கூடிய செய்திகள் இருக்கின்றது என்று.

அதையும் தாண்டி..
யாருக்கேனும்
காரணங்கள் தேவைப்பட்டால்
நம்மிடம் உதிர்த்துக்கொள்ள
ஒரு கன்னக் கதுப்புப்
புன்னகையும்,
பின்னணியில்
இசைந்துக்கொள்ள
ஒரு இளையராஜாவின் இசைத்துண்டும்
தயாராகவே இருக்கின்றன
என்பதே காரணங்களாக இருக்கின்றன என்று
அவர்களுக்கு எப்படி
உணர்த்துவது..??

பிரிவின் கதகதப்பு.

❤️

கனவுகளை
துரத்திய காலம்
முடிந்து
கனவுகள்
இப்போது துரத்திக் கொண்டிருக்கின்றன.

நான்
அஞ்சி ஓடிக்
கொண்டிருக்கிறேன்.

❤️

அப்போதே சொல்லி
இருக்கலாம் தான்‌.

அப்போது
சொல்லி இருந்தால்
நீ சற்றே
ஏக்கத்தோடு
அப்போதே
சொல்லி இருக்கலாமே
என இப்போது
சொல்லி
இருக்க மாட்டாய்.

அதனால்தான்
அப்போது
சொல்லவில்லை.

❤️

பிரிந்து
செல்வதற்கு முன்
செயற்கையான
சிரிப்போ
ஒப்பனையான
கை குலுக்கல்களோ
தயாரிக்கப்பட்ட
கண்ணீர் துளியோ
என்னை
அவமானப்படுத்துகின்றன.

நிர்கதியான
ஒரு மௌனம்.
நிராதரவான
ஒரு பார்வை.

இது போதாதா..

நீயும் நானும்
நாமாக இருந்ததற்கு.

❤️

பிரிவின்
மழைநாளில்
நீ இறுதியாய் அமர்ந்த
அந்த உணவக
இருக்கையின்
எதிரே
நான் தனியே
அமர்ந்திருந்தேன்.

திடீரென எங்கிருந்தோ
வந்த ஒரு இளைஞன்
அலைபேசியில்
யாரிடமோ
கோபமாக பேசிவிட்டு
ஒரு முழு பிரியாணியை
ஆர்டர் செய்து
பொறுமையாக
சுவைத்து சாப்பிட
தொடங்கினான்

எனக்கு ஏனோ
நிம்மதியாக இருந்தது.

❤️

ஏதோ ஒரு வாழ்க்கை
நீ இல்லாத
அர்த்தமற்ற பொழுதுகள்
என்றெல்லாம்
விம்மி வெடித்து
நீ அலைபேசியில்
கண்ணீர் உகுத்த
அந்தக் குளிர்கால இரவில்..

அதுவரை
நான்
நினைக்க முடியாமல்
வெறுத்த நம் பிரிவு
கதகதப்பாய்
ஒரு போர்வை போல
என் மீது போர்த்தத்
தொடங்கியது.

❤️

நாசுக்கு பார்க்காமல்
இடம் பொருள் எண்ணாமல்
தகுதி வயது
காலம் மறந்து
அடக்கி
வைத்து முழுங்கத்
தோன்றாமல்
நேர்மையாய்
அழுது விட முடிவது
எவ்வளவு சுகமானது…

❤️

உன்னிடம் சில நொடிகள்.

சில நொடிகள்

கண்களை மூடி

தியானிக்கிறேன்..

உன்னை

பார்த்து விடுகிறேன்.

❤️

யாரிடமும் பேசாமல்

தலைகவிழ்ந்து

இமை சொருகி

மெளனிக்கிறேன்.

உன்னிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்.

❤️

யாரோ என்னிடம்

ஏதோ கேட்கிறார்கள்.

காதில் விழவில்லையா

என சாடை காட்டுகிறார்கள்.

அப்போதுதான் உனக்கு

பிடித்த நாயகன் பட

பின்னிசை எனக்குள்

அனிச்சையாக ஒலித்துக்

கொண்டு இருக்கிறது.

❤️

ஆள் தெரியாத

மழைச்சாலையில்

தனித்து பயணித்த

காரை ஒதுக்கி

கண்ணாடி ஏற்றி

சாய்ந்திருக்கிறேன்.

என் விழிகளுக்கு

முன்னால்

ஒரு பாதி

திறந்த கதவும்.

ஒரு மஞ்சள் சுடிதாரும்.

❤️

ஆளில்லா

பிற்பகல் கோவில்

பிரகாரத்தில் கண்மூடி

படுத்திருக்கிறேன்.

பழக்கத்தில்

அனிச்சையாய்

துழவும் என் விரல்களில்

ஒரு உதிரிப்பூ.

❤️

விடுமுறை கல்லூரி

ஒன்றில் யாருமில்லா

வகுப்பறைகளின்

திறந்திருக்கும்

ஜன்னல்கள் ஒவ்வொன்றாய்

மூடிக் கொண்டே வருகிறேன்.

ஏனோ உன்னை இறுதியாய்

பார்த்த போது

நீ தேவையில்லாமல்

கண் சிமிட்டிக்கொண்டு

இருந்தாய்…

கேள்வியற்ற ஒரு பதில்

கடைசியாய்

உனக்கு

அனுப்பிய

இறுதிச் செய்தி

ஒன்று

எவ்வித பதிலும்

இல்லாமல்

கை விடப்பட்ட

நாய் குட்டி போல

பனி இரவுகளில்

முனகிக்

கொண்டே திரிகிறது.

ஒளி வெளிரும்

அலைபேசி திரையில்

அனாதைப் போல

உனக்கு அனுப்பிய

என் இறுதிச் செய்தி

பதில் இல்லாமல்

பரிதவித்து கிடக்கிறது.

பதிலற்று திரிகிற

என் இறுதி செய்தி

மூங்கில் காட்டில்

அலைகிற

ஊதற் காற்று போல

உள்ளுக்குள் இரைகிறது.

ஒரு மகத்தான

பிரிவின்

இறுதி அத்தியாயத்தை

மௌனத்தின் தூரிகை

கொண்டு

நீ வரைய தொடங்கி

இருக்கலாம்.

இருப்பினும்..

பிரிவின் மொழி

ஏதாவது சொற்களாலோ

சைகையாலோ

குறைந்தபட்சம்

சில

கண்ணீர் துளிகளாலோ

அல்லது

ஒரே ஒரு கவிதையாலோ

நிகழ்த்தப்பட்டிருந்தால்

கூட

நான் ஆறுதல்

அடைந்திருப்பேன்.

அல்லது

சில வசவுகள்

நிராகரிப்பின் நியாயங்கள்

துரோக குற்றச்சாட்டுகள்

கழிவிரக்க விளக்கங்கள்

இப்படி ஏதேனும் ஒன்றில்

எனது இறுதி செய்தி

உன்னால்

சிலுவையில் அடிக்கப்பட்டு

இருக்க வேண்டும்.

அந்த சிலுவைப்பாடு

ஒருவேளை

என் உயிர்த்தெழுதலுக்கான

வழியாக

இருந்திருக்கக்கூடும்.

ஆனால்

எப்போதும்

வெறுமையை

தருகிற

மழைக்கால

மதியப்பொழுது போல

உன்னால்

பதில் அளிக்கப்படாத

எனது இறுதி செய்தி

உறைந்து விட்டது.

தவறி

எங்கேனும்

காண நேர்ந்தால்

ஏன் பதிலில்லை

என ஒருபோதும்

நான் உன்னிடம்

கேட்க மாட்டேன்.

அதற்கும்

பதிலில்லை

என்றால்..??

என்னை நானே

தேற்ற

இன்னொரு

கவிதையை

இப்படி நான்

எழுத முடியாது.

Page 1 of 9

Powered by WordPress & Theme by Anders Norén