பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 1 of 6

தங்கை சுனந்தாவிற்கு..

❤️

நான் தனியன். வீட்டின் ஒரே மகன். பெரும்பாலும் அப்படியே வளர்ந்தேன். உடன்பிறந்த சகோதரிகள் என யாரும் இல்லாத, சொல்லப்போனால் என் அம்மா, மனைவி தவிர பெண்களே இல்லாத உலகம்.எனக்கும் இரண்டு மகன்கள் பிறக்க என் அப்பா /எனது மகன்கள் / எனது, அவர்களது நண்பர்கள் என என் வீடு ஒரு “பாய்ஸ் ஹாஸ்டல்” தான்.

எல்லா உறவுகளையும் பார்த்த எனக்கு உயிருக்குயிராய் உண்மையாய் நேசிக்கும் நேர்மையான சகோதரி என்று யாரும் இல்லை. பெரிய கூட்டு குடும்பத்தில் பிறந்த எனக்கு , எல்லோருக்கும் அக்கா தங்கை என இருக்க, அவரவர்களுக்கு நியாயம் கேட்க சண்டை போட உடன்பிறந்த பெண்கள் இருக்க, எனக்கு மட்டும் அம்மாவைத் தவிர யாரும் இல்லை. தங்கை என்பது என்னை பொருத்தவரை ஒரு கனவு. தவிப்பு/ தாகம் என தங்கைகளுக்காக தவம் இருந்த அண்ணன் நான்.

நாம் தமிழர் கட்சிக்கு வந்த பிறகு அண்ணன் சீமானால் ஊருக்கு ஊர் நிறைய சொந்தங்கள்.குறிப்பாக சகோதரிகள்.அதில் மிக முக்கியமானவள் என் தங்கை சுனந்தா. உடன் பிறந்தவள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள்தான் சுத்த இலக்கணம். எதுவாகினும் என்னிடம் அவள் சொல்லிவிட வேண்டும். எனக்கும்தான்.

அழைக்கும்போதெல்லாம் அதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல, உடனே எடுத்து விடுவாள்.

” அண்ணா.. பாப்பாவோடு பாக்ஸிங் கோச்சிங் கிளாஸில் இருக்கிறேன்.. ஒரு ஐந்து நிமிடம் கழித்து எடுக்கவா..” என கேட்பாள்.

சரியாக ஐந்து நிமிடம் என்றால் ஐந்து நிமிடம் தான் ‌. அலைபேசி ஒளிரும்.
அதன் பிறகு அலைபேசியை நான் மீண்டும் வைக்கும்போது என் முகத்தில் சிறிய புன்னகை, மனநிறைவு, குழப்பங்கள் தீர்ந்த தெளிவு போன்ற உணர்வலைகள்.

என் தங்கை சுனந்தா போன்ற ஆளுமைகள் நாம் தமிழர் கட்சியின் மகத்தான பலம். 24 மணி நேரமும் இணையத் திரைக்கு முன்னால் அமர்ந்து கொண்டு சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் ஆதிக்கத்தை நிலைநாட்டிட அவர்கள் அளிக்கின்ற உன்னதமான உயரிய உழைப்பு, இதுவெல்லாம் அந்த நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற நமக்கு தெரியாது.

அதுவும் சுனந்தா ஆழமான புத்தக வாசிப்பாளர் வேறு. அவள் புத்தகங்களைப் பற்றி எழுதுகிற உணர்ச்சியும் அறிவும் ஒருங்கே இணைகிற பதிவுகளுக்கு நாங்கள் பலரும் உயர்விருப்பாளர்கள்.

எவ்வளவோ விமர்சனங்கள். அதை சுனந்தா போகிற போக்கில் Deal செய்வது அசாத்தியமானது. இணையமே கொதித்து அவளை வறுத்தெடுக்க தயாராகி நிற்கும்போது, இவள் ஏதோ ஒரு புத்தகத்தை படித்துவிட்டு உருகி ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பாள். எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என அவள் தீர்மானிப்பதை உற்றுநோக்கி கவனிப்பது அலாதியானது. அதுவும் தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை அவள் எடுத்துக் கொள்ளும் தூரம் நம்மில் பலரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். சிறிய விமர்சனம் வந்தாலும் வானமே விழுந்து விட்டது போல கதறும் நம்மில் பலருக்கு மத்தியில், எதிரியை கம்பீரமாக பார்த்து “இவ்வளவுதான் நீயா..?” என அலட்சியப்படுத்தும் போது அவன் உள்ளுக்குள்ளே இறந்து இருப்பான்.

அதுதான் சுனந்தா. அவளுக்குள்ளாக எத்தனையோ வலிகள். பிரச்சனைகள். ஏமாற்றங்கள். அதுவெல்லாம் ஒரு நொடிதான். அடுத்த நொடியில் அவள் அவள் அண்ணன் சீமான் போல உடற்பயிற்சி கூடத்தில் இருப்பாள். வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்துவிட்டு ஒரு நான்கு பதிவுகள் போட்டு எதிரிகளை போகிற போக்கில் சம்பவம் செய்யும் தருணத்தில் விக்ரம் படத்தில் வருவது போல அவள் “அண்ணன் சீமான் படையின் முதன்மை ஏஜெண்ட் சுனந்தா எண் #1” என நம் மனத்திரையில் தோன்றும்.

சுனந்தா போன்ற அறிவார்ந்த வசீகரத்துடன் இயங்கும் பெண்ணாலும், தன்னலமற்ற உறவுகளாலும் தான் எந்தவித பொருளாதார பின்புலமும் இல்லாத நாம் தமிழர் கட்சி சமூக வலைதளங்களில் சாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவள் எங்களுடைய பெருமை.

அவள் வாழ, நான் வாழ்வேன்.

உள்ளம் நிறைந்து நெகிழ்வுடன் என் தங்கையை வாழ்த்துவேன்.

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை தலைவர் என் உயிர்த் தங்கை Sunandha Thamaraiselvan அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்கடா…

❤️

A/5 – இடிந்த அரண்மனையும் , தொலைந்த இளவரசனும்..

🟥

காலம் ஒரு வெறி கொண்ட மிருகம். உன்மத்த வெறியோடு காலம் ஓடும் ஓட்டத்திற்கு பலியாகாதவர்கள் யாரும் இல்லை‌. குறிப்பாக மனித நினைவுகள் மீது காலம் நிகழ்த்தும் வன்முறை போல வேறு எதுவும் கொடுமை இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்த மருத்துவர் அண்ணன் சித்தார்த்தனோடு மூணாறு சென்றிருந்தபோது நினைவுத் தவறிய ஒரு பெரியவரை சந்தித்தோம். ஒரு மலைப்பாறையில் அமர்ந்து கொண்டு சதா முணுமுணுத்துக் கொண்டு இருந்த அவர் 1970 களை விட்டு தாண்டவே இல்லை எனவும், சொல்லப்போனால் அவரது நினைவுகள் காலத்தின் விசித்திர புள்ளி ஒன்றில் தேங்கி விட்டன என்றும் அவரது மகள் மூலம் தெரிந்துக் கொண்டோம். அவரது மகள் முகச்சாடையில் இருந்த தன்னுடைய பேத்தியை அவர் மகளாக நினைத்து பேசுவதையும் நேரில் பார்த்தோம். அவரைப் பொறுத்தவரையில் காலம் உறைந்துப் போன ஒரு பனிக்கட்டியாக இறுகி விட்டது. கூட இருந்த அண்ணன் சித்தார்த்தன் “அவரவருக்கு பிடித்த காலத்தில் அப்படியே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” என என்னிடம் கேட்டபோது என்னிடத்தில் அப்போது பதில் இல்லை.

உண்மைதானே. எல்லோருக்கும் பிடித்தமான காலம் என்ற ஒன்று மனதோரம் ஒரு சுழலும் இசைத் தட்டு போல இசைந்துக் கொண்டே இருக்கிறது. சமகாலத்தில் எப்போதெல்லாம் காயங்களால் கீறப்பட்டு உலர்ந்து விடுகிறோமோ, அப்போதெல்லாம் நாம் வாழ்வதற்கான ஈரத்தை அங்கிருந்து தானே எடுத்துக் கொள்கிறோம்..!

யாரையும் காலம் விட்டு வைப்பதில்லை.காலம் என்ற கருணையற்ற மிருகம் பிடித்தமான காலத்திலிருந்து நம்மைப் பிய்த்து எறிகிறது. எங்கோ இடம் பொருள் ஏவல் தெரியாமல் தூக்கிப் போடுகிறது. வன்முறையாய் நமது மீது காலம் நிகழ்த்தும் நகர்வுகளால் “பிடித்த காலம்” என்பது ஒரு நினைவு போல மாறிப் போய் அந்த நினைவுகளும் கூட மறதியின் தூரிகையால் மங்கலாக்கப்பட்டு விடுகின்றன.

“மூன்றாம் பிறை” திரைப்படத்தில் நினைவுப் பிசகும் கதாநாயகி அவளது சிறு வயதிற்கு சென்று விடுவாள். சிறுவயதில் தலையில் நிறைய முடி இருந்த தந்தை முகம் தான் அவளது நினைவேட்டில் பதிந்திருக்கும். தன்னை கண்டுபிடித்து வந்து நிற்கும் நிகழ்காலத் தந்தை அவளுக்கு யார் என்றே தெரியாது. அவளைப் பொறுத்த வரையில் காலம் நகரவே இல்லை.

அப்படியே அதற்கு எதிர்மறையாக “ஒரு கல்லூரியின் கதை” என்ற திரைப்படத்தில் நினைவுப் பிசகும் கதாநாயகனுக்காக உடன் படித்த அனைவரும் மீண்டும் ஒரு கல்லூரி காலத்தை உருவாக்கி அவனுக்கு முன்னால் ஒரு காலத்தை பின்னால் நகர்த்தி மீண்டும் நிகழ்த்தி காட்டுவார்கள்.

காலத்தின் கொடிய விதி எது தெரியுமா…நம்மைக் கடக்கும் காலத்தின் சிறு துளியைக் கூட நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. கால எந்திரங்கள் என்கிற திரைப்படங்களின் வசீகர கற்பனைகள் ஒருவேளை சாத்தியப்பட்டால் யாருமே நிகழ்காலத்தில் இருக்க விரும்ப மாட்டார்கள்.

என் வாழ்வின் ஏறக்குறைய 25 வருடங்கள் வாழ்ந்த மன்னார்குடிக்கு சென்றிருந்தபோது நான் பள்ளி முடித்து என் வீட்டிற்கு திரும்பும் வீதியை பார்க்க வேண்டும் என விரும்பினேன். வீதி பெரும் மாற்றத்தைச் சந்தித்திருந்தது. நான் பார்த்த எந்த முகங்களும் இப்போது இல்லை. என்னுடைய டியூஷன் வாத்தியார் காசிநாதன் சார் வாழ்ந்திருந்த வீடு சீரமைக்கப்பட்டு வடிவம் மாற்றப்பட்டிருந்தது. புதிய கேட் மாற்றப்பட்டிருந்தது.
நிறைய புதிய கட்டிடங்கள். தெருமுனைகளில் தென்படும் கோவில்கள் மட்டும் மனித நம்பிக்கைகளின் காரணமாக இடிக்கப்படாமல் இருந்தது மனதிற்கு ஏனோ ஆறுதலாகப் பட்டது.

அதைத் தாண்டி வந்த போது , என் குடும்பத்தோடு நான் பல ஆண்டுகள் வசித்து வந்த என் வீடு அமைந்திருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் கட்டிடங்கள் முற்றிலுமாக இடிக்கப்பட்டு கற்குவியலாக இருந்ததை கண்டபோது ஒரு நொடியில் உறைந்து போனேன்.

“ஏ பிளாக் ஐந்தாம் நம்பர் வீட்டின்” (A-5) கற்கள் ஏதாவது அங்கே இருக்குமா என தேடிப் பார்க்க கூட எனக்குத் தோன்றியது.

உண்மையில் வீடு என்பது வெறும் கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல. நினைவுகளின் சேகரம். கனவுகளின் தாழ்வாரம். உணர்ச்சிகளின் பத்தாயம்.

அந்த வீட்டிற்குள் எனக்கு எவ்வளவோ நடந்து இருக்கிறது. எல்லாவற்றுக்கும் அந்த வீட்டின் சுவர்கள் சாட்சியாக இருந்திருக்கின்றன. என் வீட்டின் பின்பக்கம் ஒரு பால்கனி இருக்கும். அதில் நான் கை வைத்து நின்று கொண்டிருக்கும் இடம் கூட இன்றும் என் நினைவில் அப்படியே இருக்கிறது. அந்தப் பால்கனியில் தொட்டியில் புதைத்து வளர்த்த ஒரு சிறிய மாஞ்செடியை வீட்டை காலி செய்து புறப்படும் போது தொட்டியோடு எடுத்து வந்து இப்போது நான் வசிக்கும் வீட்டில் தோட்டத்தில் புதைத்து வைத்தேன். அது பெருமரமாக நிற்கிறது. இந்த இரவில் அதுவும் சோகத்தால் விம்மி கொண்டிருக்கும் என நான் உணர்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் கட்டிடத்தின் மொட்டைமாடி. சிவப்பு கற்கள் பாவித்த அந்த மொட்டை மாடி முழுக்க என் கனவுகள் இறைந்து கிடந்தன. புகை போக்கி கூண்டின் மீது படுத்து கொண்டு வானத்தைப் பார்த்து கிடந்த பொழுதுகளை வானம் கூட மறந்திருக்காது.

எங்கள் வீடு இருந்த அந்த வீட்டு வசதி வாரிய கட்டிடம் இடிந்து கிடந்தது கைவிடப்பட்ட ஒரு அரண்மனை சாய்ந்து கிடந்தது போல ஒரு காட்சி. உண்மையில் அந்தக் கட்டிடம் ஒரு அரண்மனை தான். அந்தக் கட்டிடத்தில் பதவிகளில் அதிகாரத்தில் வலம் வந்த அரசர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு இணையாக நிறைய கதைகள் பேசிக் கொண்டு மகாராணிகள் உலவினார்கள். வேகமாக காற்றைக் கிழித்து பயணப்படும் இளவரசர்கள் இருந்தார்கள். சுற்றிலும் நறுமணம் மிதக்க நீல விழி இளவரசிகள் வெள்ளை உடை அணிந்து உலா வந்த பொழுதுகள் இருந்தன. எல்லோரும் கூடி நின்று கொண்டாடிய நிலா காலங்கள் இருந்தன. பகிர்ந்து கொள்ள உணவும் உறவும் நேசமும் இருந்தன. அந்தக் கட்டிடத்துக்குள் ஒரு அரண்மனை மட்டும் அல்ல, ஒரு சாம்ராஜ்யமும் அதற்கே உரிய கம்பீரத்தோடும் வீரத்தோடும் காதலோடும் சோகத்தோடும் இருந்தது.

ஆனால் சாம்ராஜ்யங்களை சரிப்பது தானே காலத்தின் தீரா விளையாட்டு.. காலத்திற்கும், நம் நினைவுகளுக்கும் நடக்கின்ற பகடை ஆட்டத்தில் காலம் எப்போதும் சகுனியைப் போல் வென்று விடுகிறது. எப்போதும் தோல்வியை தருகிற அந்த முடிவிலா பகடையாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தவனாய், ஒரு கட்டிட இடிபாடுகளுக்குள் ஒரு அரண்மனையைத் தேடி நிற்பது பெரும் துயரமாக இருக்கிறது.

ஏன் எல்லாவற்றையும் இழந்தேன் என்று இப்போதும் எனக்கு புரியவில்லை. இப்போது அடைந்திருப்பது அனைத்தும் அந்த இழப்பினால் தான் என்கிற சமாதானமும் எனக்கு போதவில்லை. உள்ளுக்குள் கழிவிரக்கம் ஒரு வற்றாச் சுனை போல ஊறிக் கொண்டே இருக்கிறது. துயரம் மேலேழும்பி என்னை நானே வெறுக்கும் அவலமும் நடக்கிறது.

மொத்தம் ஆறு வீடுகள் இருந்த அந்த கட்டிடத்தில் மையப் பகுதியில் ஏறி வர எட்டு படிக்கட்டுகள் ஆறு முறை அமைந்திருக்க மூன்று அடுக்குகளில் அந்தக் கட்டிடம் உயர்ந்திருக்கும். குறிப்பாக என்னுடைய தனிப்பட்ட நூலகத்துடன் கூடிய அறை இசை கேசட்டுகளால் நிரம்பி வழியும். மர செல்ஃபில் நிரம்பி வழியும் புத்தகங்கள். 90களில் புகழ்பெற்ற இஷா கோபிகர் என்கிற ஒரு நடிகை உண்டு. அவரின் புகைப்படம் மற்றும் கோபுர வாசலிலே கார்த்திக்கின் புகைப்படம், இளையராஜா ஆர்மனியத்தோடு அமர்ந்திருக்கும் புகைப்படம், மேசையில் வைக்கப்பட்டிருக்கும் பெரியாரின் புகைப்படம் , ரஷ்ய புரட்சியாளர் லெனினின் ஓவியம் என ஒரு மியூசியம் போல அந்த அறையை நான் அலங்கரித்து இருப்பேன். வடக்கு திசையில் இருக்கும் ஜன்னல் கதவு எனக்கு விசேடமானது. அதை திறக்கும் போதெல்லாம் அதன் வழியாக ஒரு ஏணியை கொண்டு வானத்தில் ஏறி விடுவேன். மனமெல்லாம் சிறகு முளைக்க வைக்கும் அந்த ஜன்னல் இன்று இல்லை என நினைக்கும் போது சிறகு தொலைத்த பறவையாய் துவள்கிறேன்.

The Shawshank Redemption (1994) என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தில் வரும் சிறை நூலகர் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தமானது. வாழும் காலம் முழுக்க சிறையில் ஒரு நூலகராக இருந்து விட்டு விடுதலையாகி வெளியே வரும்போது காலத்தின் கோர ஓட்டம் தாங்க முடியாமல் மீண்டும் சிறைக்குத் திரும்ப முயற்சிக்க, அதுவும் தோல்வி அடைந்து அவர் தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்கின்ற காட்சி இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலேயே மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. யாராலும் தனக்கு பிடித்த காலத்திற்கு திரும்ப முடியாது என்பது தானே காலத்தின் கொடும் விதி..

The Last Emperor (1987) என்கிற புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வாங்கிய திரைப்படத்தில் நாட்டில் நடந்த அரசியல் புரட்சியால் தன் அரண்மனையை இழந்த அடையாளம் இழந்த ஒரு இளவரசன், பார்வை பொருளாக மாற்றப்பட்டு விட்ட தன் அரண்மனையை தானே சுற்றி பார்க்க வரும் காட்சி மறக்க முடியாதது.

அதுபோல இடிந்துக் கிடக்கும் என் வீட்டினை கடந்த போது கண்கலங்கி விழிகளை மூடினேன். இளையராஜாவின் பின்னணி இசை இசைக்கத் தொடங்க, காலம் ஏதோ ஒரு கருணையால் ஒவ்வொரு துளியாக பின்னகர்ந்து
இடிந்த கட்டிடம் துளித்துளியாய் மேலெழும்ப, அப்படியே இடிந்தவை அனைத்தும் அந்தந்த இடத்தில் பொருந்த ஏற்கனவே குடியிருந்தவர்கள் அனைவரும் மீண்டும் அங்கே குடியிருக்க திரும்ப, அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருக்க நான் ஒரு மூன்றாம் பார்வையாளன் போல அந்தக் காட்சிகளை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

The Last Emperor படத்தில் வரும் தன் அரண்மனையை தானே பார்க்க வரும் இளவரசன் போல.

தனக்குப் பிடித்த அரண்மனையில் வாழ்வாங்கு வசித்தவர்கள் யாவரும் இளவரசர்கள் தானே…!

❤️

தொலைக்க முடியா புத்தகங்கள்.

❤️

புத்தகங்கள் தரும் போதை போல் வேறு எதுவும் போதை தருவதில்லை. வாழ்வின் கிளர்ச்சியான மது புத்தகப் பக்கங்களில் தான் ஒளிந்து இருக்கிறது. வாங்குகின்ற எல்லா புத்தகங்களையும் படிக்கிறோமோ இல்லையோ புத்தகங்களுக்கு நடுவில் வாழ்வது என்பது பேரின்பத் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்களை வாங்குகிறோம். சில சமயம் நம் சேமிப்பில் உள்ள நாம் படிக்காமல் விட்ட புத்தகத்தை கூட மறதியாய் மீண்டும் வாங்கி வந்து விடுகிறோம். ஆனாலும் அதையும் வைத்து இது வேறு பதிப்பு, இது வேறு புத்தகம் என்று சமாதானம் ஆகிக்கொள்கிறோம்.

புத்தகங்களை யாராவது இரவல் கேட்டால் நான் பதட்டம் ஆகி விடுவேன். அந்த சூழ்நிலையை எப்படிக் கடப்பது என தவிப்பேன். ஏனெனில் இரவல் கொடுத்து நிறைய நல்ல புத்தகங்களை நான் இழந்திருக்கிறேன். அதே சமயத்தில் இரவல் வாங்கி வந்து சில நல்ல புத்தகங்களை அடைந்திருக்கிறேன்.

இன்னொன்று.. இரவல் கொடுத்து நல்லப் புத்தகங்களை இழப்பது என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஒருமுறை தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அவர்களிடம் நக்சல் பாரிகளை பற்றிய “ரெட்சன்” என்கின்ற புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். நீண்ட காலம் அவரிடம் திருப்பிக் கேட்க நானும் மறந்து விட்டேன். பிறகு அவரும் கட்சியில் இருந்து விலகி தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார். இப்போது அவரிடம் போய் கேட்டால் அவர் என்ன நினைத்துக் கொள்வாரோ என்கின்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. மேலும் அவரும் எனக்கு “பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு” நூலை இரவலாக கொடுத்திருந்தார். இதற்கும்,அதற்கும் சரியாகிவிட்டது எனது சமாதானப்படுத்திக் கொண்டாலும், “ரெட் சன்” என்ற அந்தப் புத்தகம் இல்லாத எனது நூலக அறை ஏதோ குறைபாட்டுடன் இருப்பதாக எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

சென்ற வருடம் புத்தக கண்காட்சியில் மீண்டும் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்கி என் அலமாரியில் வைத்த பிறகு தான் என் தவிப்பு தணிந்தது. புகழ் பெற்றவர்களின் புத்தக சேமிப்புகளை பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். அண்ணல் அம்பேத்கரின் புத்தக சேமிப்பு மிக புகழ் பெற்றது. ஜவர்கலால் நேரு முக்கியமான புத்தகங்களை பெரிய மரப்பெட்டிகளில் அடுக்கி வைத்து பாதுகாத்ததாக சொல்வார்கள். உலகத்தின் மிக முக்கியமான புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை இப்போது படிப்பில் கூட இல்லாத அபூர்வ புத்தகங்களை எழுத்தாளர் கோணங்கி மிக கவனமாக சேகரித்து பாதுகாத்து வருகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.அண்ணன் சீமான் வீட்டு நூலகத்திலும் இது போன்ற பல முக்கியமான அபூர்வமான பதிப்பில் கூட இல்லாத புத்தகப் பொக்கிஷங்களை நான் கண்டேன்.

அறை முழுக்க நிரம்பி வழியும் புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கும் நேரங்களில் ராஜ தர்பாரில் ஒரு பேரரசனாய் அமர்ந்திருப்பது போல உணர்வு. சங்க காலப் புலவர்கள் தொடங்கி தற்கால எழுத்தாளர்கள் வரைக்குமான பலரும் நம் வீட்டு ராஜ அவையில் நம் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள் என்பதும், உலக வரைபடத்தில் நம் காணாத நிலங்களை எல்லாம் ஒளிப்படரும் புத்தகப் பக்கங்களின் மூலமாக நீளும் கற்பனை விரல்களால் நம்மால் தொட முடிகிறது என்பதும், எல்லாவற்றையும் தாண்டி புத்தகங்கள் கால எந்திரங்களை விட கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் வேகமாக பயணிப்பவை என்பதும் எவ்வளவு சுவாரசியமானது..???

ஒவ்வொரு புத்தகத்திற்கும் நமக்குமான உறவு வெகு அந்தரங்கமானது. ரகசிய காதலி தரும் கிளர்ச்சியை விட மேலானது. ஒவ்வொரு புத்தகத்திற்கு பின்னாலும் அது தந்த அனுபவங்களை சார்ந்து விவரிக்கப்பட வேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. வாசகர் ஒருவரிடம் இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் வாங்கப் போன எஸ். ராமகிருஷ்ணனின் அனுபவத்தை அவர் மிக அற்புதமாக “துணையெழுத்து” என்ற அவரது புத்தகத்தில் எழுதி இருப்பார்.

ஒரு காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த, சொல்லப்போனால் மெல்லிய காதலும் பூத்திருந்த, ஒரு பெண்ணிடம் அந்தக் காலத்தில் நான் உருகி உருகிப் படித்த ப்யோதர் தாஸ்தாவெஸ்கியின் “வெண்ணிற இரவுகள்” புத்தகத்தை இரவல் கொடுத்திருந்தேன். பிறகு வீடு மாறுதல் அடைந்த கால ஓட்டத்தில் அந்த நேசிப்பு தொலைந்து போய், அந்தப் பெண்ணோடு சுத்தமாக எவ்வித தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. புதையல் போன்ற அற்புதமான புத்தகத்தை இரவல் கொடுத்து தொலைத்து விட்டோமே என்று பலமுறை சிந்தித்து எனக்குள்ளேயே குமைந்திருக்கிறேன்.

இப்போது எல்லா இடங்களிலும் அந்த புத்தகம் கிடைத்தாலும் நான் இரவல் கொடுத்த புத்தகம் இப்போது கிடைப்பதில்லை. அது சோவியத் ரஷ்யாவின் “ராதுகா பதிப்பகம்” வெளியிட்ட செவ்விலக்கிய பதிப்பு. தாள்கள் அப்படி பிரமாதமாக இருக்கும். கனமான அட்டையில் பைண்ட் செய்யப்பட்டு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கட்டிடங்கள் பொன்னிற ஓவியமாய் அட்டை முகப்பில் வரையப்பட்டிருக்கும். அந்த கதையோடு தாஸ்தாவெஸ்கியின் மேலும் இரண்டு கதைகளும் அந்த நூலில் உண்டு. அப்படிப்பட்ட அபூர்வமான புத்தகத்தை நாம் மீண்டும் ஒருபோதும் சந்திக்க வாய்ப்பில்லாத ஒருவரிடம் இழந்து விட்டோமே என்கிற வலி எனக்கு எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு தேடலில் முகநூல் கணக்கில் அந்தப் பெண்ணை சரியாக கண்டுபிடித்து விட்டேன் . அவளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருந்தன. குடும்பத்தோடு பண்டிகை கொண்டாடுவது போல சில புகைப்படங்களை முகநூலில் அவள் பதிவிட்டிருந்ததை கண்டேன். எனக்குள் எவ்விதமான உணர்ச்சி அலையும் அந்த நொடியில் பொங்கவில்லை என்பது எனக்கே வேதனையாக இருந்தது. அவளிடம் ஒரு காலத்தில் கொடுத்த புத்தகத்தை மீண்டும் கேட்கலாமா என வெகு நேரம் யோசித்தேன். அவளும் தொலைத்திருந்தால் என்ன செய்வது என்றெல்லாம் யோசித்து விட்டு இறுதியாக அவளுக்கு மெசேஞ்சரில் ஒரு சிறிய செய்தி ஒன்றை அனுப்பினேன்.

“வணக்கம். என்னுடைய வெண்ணிற இரவுகள் புத்தகம் உங்களிடத்தில் இருக்கிறது. அதைத் தர முடியுமா..”

என்று கேட்டிருந்தேன் ‌.

அவள் அடிக்கடி முகநூல் பக்கம் வராதவள் போல. என் செய்தியை அவள் பார்க்கவே இல்லை. நான் தினந்தோறும் மெசேஞ்ஜரை திறந்து பார்த்துவிட்டு ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கும் போது தான் ஒரு நாள் திடீரென்று ” யூவர் அட்ரஸ் ப்ளீஸ்..” என அவளிடம் இருந்து ஒரு செய்தி.

நானும் என் முகவரி அனுப்ப, அடுத்த மூன்று நாட்களில் எனக்கு கொரியர்.
ஆவலுடன் பிரித்துப் பார்த்த போது அதே புத்தகம். எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. எங்கோ தொலைந்து போன என் காதலி எனக்கு மீண்டும் கிடைத்து விட்டது போன்ற பெரு மகிழ்ச்சி. அட்டைப் போட்டு பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்திருக்கிறாள்.

புத்தகத்தை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அட்டையின் உட்புறத்தில் சிவப்பு வண்ண பென்சிலால் வரையப்பட்ட ஒரு சிவப்பு இதயம். அதன் கீழே நான் இரவல் கொடுத்த தேதியை குறித்து வைத்திருந்தாள்.

முதன்முறையாக இரவல் தந்த புத்தகத்தை மீண்டும் அடைந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து லேசாக வலித்தது.

அதற்குப் பிறகு அவளும் முகநூல் கணக்கில் இல்லை.

❤️

வெயிலைப் போர்த்தியவன்.

🟥

வாழ்வின் அலைகழிப்பெல்லாம் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

எங்கெங்கோ ஓடி ஓடி ஒளிவதும் களைப்படைந்து மூச்சிரைக்க சாய்வதும் எதற்காக என்று நீங்கள் நினைக்கிறீர்கள்…

அது ஒரு பாவனை.

எதையோ மறக்க.. மறக்க முடியாமல் இறக்க.. செல்லும் நடைபாதையில் தானே தன்னையே தொலைக்கும் தோற்றம்.

வாழ்வின் கொடூர விதி என்ன தெரியுமா..

நாம் யாரை எவ்வளவு நேசிக்கிறோமோ… அதன் அளவு நாம் நேசிக்கிறவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாத அளவில் இருப்பது தான்.

இறுதி வரை அது ஒரு மாய விளையாட்டு.

சுவற்றில் வீசப்பட்டும் திரும்பி வராத ரப்பர் பந்து.

மழை நீரில் நனைந்து முழுகி போகும் காகிதக் கப்பல்.

எழுதப்படாத கவிதையை சுமக்கும் வெற்றுத்தாள்.

🟥

இடதுசாரி இயக்கங்களில் பயணித்த போது கட்சி அலுவலகத்திலேயே சதா நேரம் உண்டு உறங்கி வாழ்ந்து வந்த வயது முதிர்ந்த தோழர் ஒருவரை ஒரு காலத்தில் சந்திக்க நேர்ந்தது. கட்சி அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதில் தொடங்கி, வருகின்றவர்களுக்கு பதில் சொல்வதில் இருந்து, தண்ணீர் பிடிப்பது, விருந்தினர்களுக்கு டீ வாங்கி வருவது என அனைத்தும் அந்த முதிய தோழர் தான்.

இத்தனைக்கும் அவருக்கு ஒரு குடும்பம் இருந்ததை நான் அறிவேன். வார இறுதி நாட்களில் அவரை மாலை நேரங்களில் சந்தித்து விட்டு செல்லும் அவரது மகள் மற்றும் பேரக்குழந்தை ஆகியோரின் நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அவர் வீட்டுக்கு செல்வதில்லை. சொந்தமாக வீடு இருந்தது என்று கூட சொன்னார்கள். மகன் அரசு வேலையில் இருந்ததாகவும் இவரை அன்பாக பார்த்துக் கொள்ள முயற்சித்ததாகவும் சொன்னார்கள். ஆனாலும் அவர் கட்சி அலுவலகத்திலேயே இருந்தார். அது ஒரு வகையான மூர்க்கம். கட்சி அலுவலகத்தின் இரவு நேர தனிமை அவருக்கு வேண்டியதாக இருந்தது. அன்பும் நெருக்கமும் இல்லாத மேலோட்டமான உறவு நிலை அவருக்கு ஆறுதலாக இருந்தது. இதையெல்லாம் கவனித்த நான் ஒரு நாள் அவரிடம் பேச தொடங்கினேன்.

தோழர்..

சொல்லுங்க தோழர்.. தாமரை வந்திருக்கு படிச்சிட்டீங்களா..

தோழர்..உங்ககிட்ட தான் பேசணும்..

என்கிட்ட பேச ஒன்னும் இல்லையே.. என இறுகத் தொடங்கினார்.

ஏன் தோழர் வீட்டுக்கு போகாம இங்கேயே இருக்கீங்க.. என கேட்ட என்னிடம், டீ சாப்பிடுறீங்களா.. என பேச்சை மாற்று நோக்கில் மேலோட்டமாக கேட்டார்‌.

நான் நின்று நிதானித்து “சேர்ந்து டீ சாப்பிட போவோமா.. ” என்ற எனது கேள்வியில் லேசாக தோழர் பதட்டமானார்.

இல்லை.. நீங்கள் இருங்கள்.. நான் போய் டீ வாங்கி வருகிறேன் என்றார்.

சேர்ந்தே போவோமே.. என சொன்னதற்கு அவர் சட்டென என்னை பார்த்து.. ” தொல்லை செய்யாதீர்கள் தோழர்..!  போய் வாருங்கள்..” என சொன்னார் ‌.

அதிலிருந்து அவர் என்னிடம்  பேசுவதில்லை. என் முகத்தை பார்ப்பதையே தவிர்த்தார்.

எனது நெருக்கம் அவருக்கு தொந்தரவாக இருந்தது என்பதை நான் உணர்ந்தேன். ஆனாலும் அதற்கு என்ன காரணம் என என் மனம் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

பிறகு இதைப் பற்றி அவர் வயது கொண்ட இன்னொரு தோழரிடம் கேட்டபோது..

“அவன் அப்படித்தான். மனைவிகிட்டயும் இப்படித்தான் இருந்திருக்கிறான். அந்த அம்மாவும் புலம்பிக்கொண்டே போய் சேர்ந்துடுச்சு. யாரிடமும் அவன் அன்பா இருக்க முடியாது. கனிவா பேசிட முடியாது. யாராவது கனிவா பேசினா அவனுக்கு பயம் வந்துரும். தன் மீது யாரும் அன்பு பாராட்ட கூடாது என்பதில் அவன் ரொம்ப தீவிரமா இருப்பான். சின்ன வயசுல அவன் ஒரு பொண்ண விரும்பி இருக்கிறான். அந்தப் பொண்ணும் இவன தீவிரமா விரும்பி இருக்கு. இது வீட்டுக்கு தெரிஞ்சுப் போய் தகராறு ஆன உடனே கூப்பிட்டு வச்சு கேட்டதற்கு அந்த பொண்ணு சும்மா தான் பேசினேன் இவர் தப்பா நினைச்சுக்கிட்டாரு.. என சொல்ல அன்னிக்கு வெறுப்ப குடிக்க ஆரம்பித்தவன் தான். ஆயுசு முழுமைக்கும் யாரிடமும் ஒட்ட முடியாமல் வெயில் போல தகிச்சிகிட்டே இருக்கான். எண்ணெயில மிதக்கிற தண்ணி போல ஒட்டாம உலகத்தோட விலகி நிக்கிறான்”

கடைசியா கட்சியை விட்டு விலகும் போது அவரிடம் சொல்லிக் கொள்ள சென்ற போது அவர் என்னை நிமிர்ந்து பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.

வெளியே வெயில் தகித்துக் கொண்டிருந்தது.

அவருக்கு உள்ளேயும்.

🟥

எனது அணுக்க நண்பர் Suresh Kamatchi தயாரிப்பில், இயக்குனர் ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்திருக்கிற “ஏழு கடல் ஏழுமலை” திரைப்படத்தின் சந்தோஷ் நாராயணன் குரலில், மதன் கார்க்கி வரிகளில், இப்பாடலை கேட்டபோது ஏனோ மனித வாழ்வின் அலைகழிப்பைப் பற்றியும், அந்தத் தோழரை பற்றியும் உள்ளுக்குள் நினைவுகள் சுரந்துக் கொண்டே இருந்தன.

நல்ல படைப்பின் நோக்கம் அதுதானே…

உள்ளுக்குள் ஏதோ ஒன்றே செய்ய வேண்டும்.

இந்தப் பாடல் செய்கிறது. கேளுங்கள்.

❤️

2024 – சென்னை புத்தகக் கண்காட்சி-பெற்றதும்,கற்றதும்

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஒரு நாள் மட்டுமே புத்தக கண்காட்சியில் செலவிட முடிந்தது உண்மையில் வேதனையை தந்தது. வழக்கமான சென்னை புத்தகக் கண்காட்சி கொண்ட சிறப்புகளை ஒருபுறம் இந்த புத்தக கண்காட்சியும் பெற்றிருந்தாலும், மறுபுறம் புத்தகக் கண்காட்சியில் இன்னும் சீர்படுத்தப்படாமல் தொடரும் தவறுகள் இந்த வருடமும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. தூய்மையற்ற கழிவறை, என்னை போன்றவர்கள் நடக்கவே முடியாத ஏற்றத்தாழ்வு உடைய மரப்பாதை, மிகச் சிறிய நூல் அரங்குகள் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டியவை நிறைய உள்ளன. சென்னை வெள்ளமும், ஊருக்கு ஊர் கண்காட்சி போடுகின்ற நிலையும் புத்தக விற்பனையை பெரிதும் இந்த வருடம் பாதித்ததாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிறைய நல்ல புத்தகங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. எந்த புது புத்தகத்தை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது புத்தகக் கண்காட்சியில் நாம் பெறுகின்ற மகிழ்வும் துயரும் ஒரே நேரத்தில் வந்தடைகிற மகத்தான அனுபவம். கையில் இருக்கின்ற பணம் புத்தகத்தின் விலை என்கிற இருபக்க தராசு தட்டுகளை வைத்து மனம் மேற்கொள்ளும் விசித்திர விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தின் கண்காட்சியில் நிகழ்கிறது.

நீண்ட நாட்களாக ‘தமிழ்த் தேசியப் போராளி தமிழரசன்’ பற்றிய முழுமையான தொகுப்பு ஒன்றினை தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கனவு இந்த வருடம் தமிழ்நேயன் தொகுத்தளித்த “தோழர் தமிழரசன் விடுதலை வீரன்” என்கிற தொகுப்பு நூல் மூலம் நிறைவேறியது.

அதேபோல் கான்சாகிப் யூசப் கான் மருதநாயகம் பற்றிய விடியல் பதிப்பகம் வெளியிட்ட “கிளர்ச்சியாளர் யூசுப் கான்” என்கின்ற விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலும் பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்கிற ஆவலைத் தோன்றியது.

எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள அலெக்ஸ் ஹேலியின் ” வேர்கள்” முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட கேசவமணி மொழிபெயர்ப்பில் லியோ டால்ஸ்டாயின் “அன்னாகரீனினா” போன்றவை இந்த வருடம் நான் வாங்கிய நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமீபத்திய சாகித்திய அகாதமி விருது வாங்கிய தேவி பாரதி அவர்கள் எழுதிய “நீர்வழி படூஉம்” திருச்செந்தாழை எழுதிய ” ஸ்கெட்சஸ்” முனைவர் ப கிருஷ்ணன் அவர்கள் மொழி பெயர்த்து சிந்தனை விருந்தகம் வெளியிட்டிருக்கிற “கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் ராணுவ நினைவலைகள்” அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதியிருக்கிற “டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை” ,நா. வீரபாண்டியன் எழுதியுள்ள “நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்த கோபம்” நண்பர் காளி பிரசாத் பரிந்துரைத்து நான் வாங்கிய சாம்ராஜ் எழுதிய “கொடைமடம்” போன்றவை இந்த வருடம் புத்தக கண்காட்சியில் நான் கண்டடைந்த முக்கியமான படைப்புகள்.

எனது தம்பி எழுத்தாளுமை அகர முதல்வன் பரிந்துரையின் பேரில் இந்த வருடம் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கே ஆர் மீரா எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வாங்கியுள்ளேன். வசீகரமான படைப்புலகம்.

இதன் நடுவே வைரமுத்துவின் “மகாகவிதை”, பரகால பிரபாகர் அவர்களின் கட்டுரை தொகுப்பான “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” போன்றவையும் படிக்க ஆர்வத்தை துண்டுபவைகளாக உள்ளன.

எப்போதும் சென்னை புத்தக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது என்பது எனது ஆசான் ‘எஸ்.ராமகிருஷ்ணன்’ அவர்களை சந்தித்த நாள் முதல் ஒரு தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. அவரை ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் தேசாந்திரி அரங்கில் சந்திப்பதும், இலக்கியம் பேசிக் கொண்டிருப்பதுமான நிகழ்வு இந்த வருடமும் இனிதே நடந்தது.

நான் வாங்க முடியாத சில புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் இறுதி நாளன்று என் அன்புத் தம்பி பிரபா மூலம் வாங்கிக் கொண்டு குளிர் இரவில் அதை சுமந்து தஞ்சையில் என்னிடம் பாதுகாப்பாக சேர்த்த என் உயிர் இளவல் தமிழம் செந்தில்நாதன் நன்றி. நான் கொடுத்த நூல் பட்டியலை வைத்து ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகம் வாங்கி அன்பு சேர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையத்தை சேர்ந்த என் தம்பி பிரபாவிற்கும் அன்பு முத்தங்கள்.

எனது அன்பு அண்ணன் பாலமுரளி வர்மன் எழுதிய “வீரப்பன் பெயரால் மனித வேட்டை” என்கின்ற நூலும் எனது அன்புத் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எழுதிய “யார் பிஜேபியின் பி டீம் ” என்கின்ற நூலும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது பெரு மகிழ்ச்சியை தந்தது.

மானுடம் கொண்டிருக்கின்ற எல்லா விதமான கீழமை உணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெறவும், பயமும், குழப்பமும் நிறைந்த இருண்மையான எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடவும், நமக்கு முன்னால் இருக்கின்ற ஒரே ஒரு வெளிச்ச வீதி புத்தகங்கள் படிப்பது தான். வெளிச்சத்தை தேடி கண்டறிவது தானே மனித வாழ்க்கையின் ஒரே ஒரு பொருள்..?!

காதலின் மொழி.

எப்படி
புரிந்துக்கொள்வது
மொழி தெரியாத
பாடல் ஒன்றை…
❤️
சரி. விடுங்கள்.
எல்லாவற்றுக்கும்
மொழி வேண்டுமா
என்ன…?

சீமான் அண்ணனின் பிறந்தநாள்.

பேரன்பினால் நெய்யப்பட்ட பேராற்றல்.

——————————————————————

ஒரு மீன் குஞ்சு தன் அம்மாவிடம் கேட்டது.

” நான் கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்படுகிறேன் கடல் என்றால் என்ன..? அது எங்கே இருக்கிறது..?”

“நீ வாழ்வதும், அசைவதும், உன் உயிர் இருப்பதும் கடலில் தான். கடல் உனக்குள்ளும் இருக்கிறது. நீ இல்லாமலும் இருக்கிறது. நீ கடலால் ஆனவள். நீ கடலில் தான் முடிவாய். கடல் உன் சொந்த உயிரைப் போல உன்னை சூழ்ந்துள்ளது. என்று அம்மா சொன்னாள்.

( நான் யார் ?.. 173 ஜென் கதைகள். அடையாளம் வெளியீடு.)

🛑

மிக எளிதாக இந்த ஜென் கதையை வெறும் கண்களால் படித்து, அகக் கண்களால் பார்க்கும் எவராலும் கடந்து விட முடியாது. ஏனெனில் அந்தக் கதை நம்மைப் பற்றியது. எப்படி அந்த மீன் குஞ்சு தான் மிதந்து கொண்டிருக்கின்ற கடலைப் பற்றி தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறதோ, அப்படித்தான் தமிழர் என்ற தேசிய இனம் அந்த ஒரு தனி மனிதனின் வருகைக்கு முன்னால் தான் யார் என்று தெரியாமல் திரைப்படங்களை பார்த்துவிட்டு நாம் இந்தியர் என்றும், திராவிட மேடைகளை பார்த்துவிட்டு நாம் திராவிடர் என்றும் குழம்பிக் கொண்டிருந்தது.

வன்னிக் காட்டில் கொழுந்து விட்டு எரிந்த ஒரு தீப்பந்தத்தில் உரசப்பட்டு, ஒரு அசலான எரியும் தீக்குச்சி போல அவன் வந்தான். இன அழிவு கோபத்தால் தகித்துக் கொண்டிருந்த ஆன்மாக்களில் சென்று சேர்ந்தான். பற்றி எரிந்தது வனம்.

வெந்து தணிந்தது காடு.

அண்ணன் சீமான் என்கின்ற அந்த அதி மனிதரின் இரு காட்சிகள்.

🛑

ஒரு காட்சி.

வெயிலேறி எரிந்து கொண்டிருந்த அந்தக் கனல் பொழுதில் நாங்கள் சென்று சேர்ந்த போது ஒரு வயதான முதியவரை தவிர அங்கே யாரும் இல்லை.

அவருக்குப் பின்னால் ஒரு சரிந்த லிங்கம் சாய்ந்து கிடந்தது.

சிறிது சலசலப்புடன் கூடி வந்த கூட்டத்தின் நடுவில் நின்ற அண்ணன் சரிந்து கிடந்த லிங்கத்தை பார்த்துவிட்டு அப்படியே உறைந்து நின்றார். ஒரு தீவிர மௌனத்தின் சுழல் அங்கே மெதுவாக சுழலத் தொடங்கியது.

அண்ணன் முகத்தில் உறைந்திருந்த உணர்ச்சி அலைகளை கண்ட அந்த இளைஞர் கூட்டமும் மௌனமாகிவிட்டது. அண்ணனின் கண்கள் கலங்கத் தொடங்கி இருந்தன. ‘ஏண்டா இப்படி..’ என்பது போல எங்கள் முகத்தை அண்ணன் பெரும் வலியோடு உற்று நோக்கினார்.

அங்கே இருந்த ஒரு பழைய கீற்று கொட்டகைக்கு கீழே வரலாற்றின் புகழ் வெளிச்சம் அனைத்தையும் ஒருங்கே அடைந்த தமிழ் இனத்தின் பேரொளி ஒன்று புதைந்து கிடக்கிறது. பெருவுடையார் கோவில் கண்ட பெருமை ஒன்று சிதைந்து கிடக்கிறது.

மாமன்னர் ராஜராஜ சோழன் அந்த உடையாளூர் மண்ணில் தான்

சிதிலம் அடைந்த லிங்கமாய் உடைந்து கிடந்தார்

வந்தவர் போனவருக்கெல்லாம் கடற்கரையில் கல்லறை கட்டி சில்லறை வீசும் ஒரு இனத்தின் மக்கள் தன் சொந்தவனை, உலகை ஆண்ட மன்னவனை உதறித் தள்ளிய வரலாற்றின் அவலக் காட்சி அது.

அந்த வயதான முதியவர் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தழுதழுக்க “உன் பாட்டனை காப்பாற்று, அவன் புகழ் போற்ற ஏதேனும் செய்..”

என்றார்.

அருகில் இருந்த நாங்கள் அரசின் கவனத்தை ஈர்க்க ஏதேனும் பெரிய போராட்டம் செய்வோம் என்று சொன்னோம்.

கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டிருந்த அண்ணன் தீர்க்கமாய் நிமிர்ந்து பார்த்தார்.

“இந்த திராவிடத் திருடர்கள் யாரும் என் பாட்டனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.எந்த நினைவு மண்டபம் கட்ட வேண்டாம். கட்டவும் கூடாது. மீறி கட்டினார்கள் என்றால்.. ஒரு நாள் நான் ஆட்சிக்கு வருவேன். இவர்கள் கட்டியதை இடித்துவிட்டு நான் மாபெரும் நினைவாலயத்தை என் புலிக்கொடி பாட்டனுக்காக எழுப்புவேன்.

பல நூறு ஆண்டுகள் படுத்து கிடந்தவன் சில ஆண்டுகள் பொறுத்திருக்க மாட்டானா..??”

என்று சினம் கொண்டு கேட்ட அவரது உரம் மிக்க சொற்கள் கேட்டு புவியாழத்தில் புதைந்து கிடந்த அரசனுக்கு அரசன் அருண்மொழிச் சோழன் பெருமூச்செறிந்தான். சாய்ந்து கிடந்த லிங்கம் கூட சற்று நிமிர்ந்ததாய் ஒரு தோற்றம்.

.🟥

மற்றொரு காட்சி.

காவிரி செல்வன் விக்னேஷ் தீக்குளித்து விட்டான். அண்ணன் பதைபதைத்து ஓடி வந்து கொண்டிருக்கிறார். தம்பி விக்னேஷ் தாங்கி பிடித்திருந்த காவலர் தம்பி கண் மூடி விடாதே உன் தலைவர் வந்து கொண்டிருக்கிறார் என சொல்ல.. நெருப்பின் தழல் மேவிக் கிடந்த தம்பி விக்னேஷ் சிரமப்பட்டு விழிகளை திறந்தான். அவர் என் தலைவர் அல்ல. என் அண்ணன். என்று சொல்லிவிட்டு இறுதியாக விழி மூடினான்.

கண்கள் முழுக்க கண்ணீரோடு அந்த மருத்துவமனையின் வாசலில் நின்று கொண்டே இருந்த அண்ணனை பின்னிரவில் வாகனத்தில் சென்று அமர சொன்னோம். மறுத்துவிட்டு அவனது பெற்றோர்கள் வரும் வரை கலங்கிய கண்களோடு வலி தாங்கி நின்று கொண்டே இருந்தார். அவனது பெற்றோர்கள் முன் தம்பியை பறி கொடுத்துவிட்டு

கலங்கி நின்ற அவரின் தவிப்பு

எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாதது.

அன்று அவர் சிந்திய கண்ணீர் துளிகள் தாய்மையின் சாயல் கொண்டவை.

❤️

சிந்தித்துப் பாருங்கள்.

மரணப் படுக்கையிலும் கூட தன் அண்ணன் என்று ஒருவரை நினைவு படுத்தி அழைக்க முடிகிற தீவிரத்தை அண்ணனிடம் உள்ள

எது ஒருவனுக்கு தருகிறது..???

அண்ணன் என்பது வெறும் சொல்லா.. அல்லது உறவு முறையா.. அல்லது கூப்பிடும் வழக்கமா.. அல்லது மாண்போடு அழைக்கும் பண்பாடா… என்றால் இவை எதுவுமே இல்லை.

அது ஒரு வகையான தனித்துவம்.

வெவ்வேறு கருப்பைகளில் தோன்றினாலும் தொன்மத்தில் தோன்றிய, ஆதி இனத்தின் மரபணுவில் அழிவின் அழுத்தம் விளைவித்த

ஒழுங்கினால் நேர்ந்து விட்டிருக்கிற பெரும் அன்பின் அலைவரிசை. எதையும் அந்த மனிதனுக்காக இழக்கலாம் என துணிகிற மனநிலையை உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கிற அந்த மரபணு தான் தீர்மானிக்கிறது.

அவரது மொழி கேட்டால் நம் உயிர் விழி அசைகிறதே.. அவர் வழி காட்டினால் நம் முன்னால் லட்சியப் பாதை ஒன்று விரிகிறதே..

என்றெல்லாம் நாம் வியந்து கொண்டிருக்கும் போதே, உயிர் வாழும் இறுதித் துளி வரை இணைந்திருக்கும் பேரன்பின் மொழியை அவர் நம் இதயத்தில் எழுதிக் கொண்டிருப்பார்.

அவரது மனநிலை அது.

கொஞ்சமும் ஒப்பனை இல்லாத, முன் தயாரிப்பு இல்லாத , அசலான அவரது இயல்பு அது. அந்த இயல்புதான் நாம் தமிழர் என்கின்ற மகத்தான குடும்பத்தை இயக்கிக் கொண்டிருக்கிற பேராற்றல்.

அந்தப் பேராற்றல் தான் ஒரு தேசிய இனத்தை விடுதலைப் பெற வைக்க கூடிய வலிமையாய், அவரது இயல்பாய் இணைந்திருப்பது காலக் கணிதத்தின் அதிசயமான கணக்கு தான்.

காலம் தனக்கான தேர்வுகளை அதுவாகவே செய்யும் என்பார்கள். முதல்முறையாக காலத்தை தானே தேர்ந்தெடுத்து தன் வரலாற்றை தன் இனத்திற்கான விடுதலை வரலாறாக மாற்ற உழைத்து வருகிற அண்ணன் நமக்காக மட்டுமல்ல, இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்காகவும் பிறந்தவர்.

❤️

விடியலை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற இந்த இரவில் உன்மத்த அன்போடு என் உன்னத அண்ணனை கட்டி அணைக்கிறேன்.

அண்ணா.. நீங்கள் பிறந்ததால் நாங்கள் சிறந்தோம்.

உணர்ச்சி நிறைந்த

நன்றியும்,

முத்த வாழ்த்துகளும்.

#அடுத்து_நாமதான்ணே

❤️
❤️
❤️

தமிழ் முழக்க நினைவுகள்

தமிழ் முழக்கம் என் வாழ்வில் செலுத்திய ஆதிக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. எழுத்து உலகில் மிக இளையவனான என்னை கண்டெடுத்து தன் பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராக நியமித்து ஒவ்வொரு இதழிலும் என் எழுத்துக்களை பதிவேற்றம் செய்து என்னை உருவாக்கிய பெருமகன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது என்ற திருமகன்.

நாகப்பட்டினத்தில் நடந்த‌ நாம் தமிழர் கட்சியின் மாபெரும் இளைஞர் பாசறை தொடக்க மாநாட்டில் எங்களை மேடையேற்ற அவர் உழைத்த உழைப்பு இன்னும் என் கண்களிலே நிற்கிறது.

எதற்கும் அயராத மனிதன். அவரது உருவம் போல அவரது நம்பிக்கையும் மகத்தானது. எதுவுமே இல்லாத அடையாளமற்ற எளியவர்களை அவராகவே தேர்ந்தெடுத்து அவர்களை உயரச் செய்கிற குணம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்..??

அவருக்கு வாய்த்தது. அண்ணன் சீமான் தொடங்கி இன்னும் எத்தனையோ என்னை போன்ற எளியவர்களுக்கு உதவி செய்து மேல் ஏற்றிய அவரது கரங்கள் பொற்கரங்கள்.

எதிலும் அவர் பிரம்மாண்டம் தான். விருந்து வைத்தாலும் சரி.. கூட்டம் நடத்தினாலும் சரி, அவருக்கென்று ஒரு மகத்தான பிரம்மாண்டமான திட்டம் இருக்கும். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் ஆக உழைப்பதில் தான் அவர் நிறைவடைவார்.

ஒரு முறை தமிழ் முழக்கம் இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக கடுமையான எதிர்ப்பு தமிழகம் எங்கும் ஏற்பட்டு அவரது பத்திரிக்கை அலுவலகமே தாக்கப்பட்ட போது, அதைப்பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அடுத்த மாதமே எனது அடுத்த கட்டுரையை பதிவேற்றி அதுவே அட்டைப்படமாக மாற்றிக் காட்டிய அந்த நம்பிக்கையை நான் எங்கே கண்டடைவேன்..??

அண்ணன் சீமான் சொற்கள் தான் அவருக்கு வேத மொழிகள். தன் மருமகனின் சொல்லைத் தாண்டி அவருக்கு எல்லை ஏதுமில்லை. சீமான் என்ற மனிதனுக்கு தாய் மாமனாக மாறியதால் உலகம் எங்கும் வாழக்கூடிய இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயிர் மாமனாக மாறியவர் அவர்.

குறிப்பாக என்னை செதுக்கி, நம்பிக்கை ஊட்டி இயங்க வைத்ததில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது. அவரது நினைவுகளை இன்னும் மனதிற்குள் சுமந்து கொண்டு தான் அதிலிருந்து தான் இயங்குவதற்கான ஆற்றலை எனக்குள்ளாக நான் தயாரித்து வருகிறேன்.

இறுதியாக தன் வாழ்நாளில்‌ அவர் கலந்து கொண்ட கடைசி கலந்தாய்வு கூட்டம் என் வீட்டு மாடியில் தான் நடந்தது. அப்போதே அவருக்கு கடுமையான காய்ச்சல் தொடங்கி இருந்தது. வாயெல்லாம் கசக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நிலவேம்பு கசாயம் எடுத்து வந்த என் தாயிடம் வேண்டாம் என மறுத்து சர்க்கரை நிறைய போட்டு காப்பி வேண்டும் எனக் கேட்டார். கூட்டத்தில் நானும் அண்ணன் ஹுமாயூன் உள்ளிடவர்களும் கலந்து கொண்ட போது துணிச்சலான பல முடிவுகளை அவர் தயங்காமல் எடுத்தார்.

அவரை என் வாழ்வில் சந்தித்ததும் அவரால் நான் சந்தித்ததும் நிறைய இருக்கின்றன. முடிவாக ஒன்றே ஒன்று. அவரால் நான் உருவாக்கப்பட்டு இருக்கிறேன். தன் மருமகன் சீமானை அவர் நேசித்தார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அது எந்த அளவு என்றால் தன் வாழ்வின் இறுதி நொடியில் கூட கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு உயிரளவு என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் புரிந்தது.

அந்தப் பற்றுறுதி தான் அந்த இலட்சிய விருப்பு தான் எங்களுக்கு அவர் விட்டு சென்று இருக்கின்ற இறுதி செய்தி.

அதை வாழ்நாள் எல்லாம் நாங்கள் கடைபிடிக்க அவர் தெய்வமாக நின்று கருணையின் குடை பிடிக்கட்டும்..

கண்கள் கலங்க என் ஆசானுக்கு கண்ணீர் வணக்கம்.

மணி செந்தில்.

அண்ணனின் அன்பு.

மச்சானின் பிறந்தநாள் 2023

ஆதி காலமொன்றில்

அதுவாகவே தழைத்திட்ட

பெரும் அடர்வனக் காட்டின்

பசுமையேறி இருள் வெளியில்

கிறங்கிப் பறக்கும்

ஒற்றை மின்மினி போல..

எல்லையற்ற நேசத்தின்

மது அருந்தி காலமெல்லாம்

உனதன்பின் மேகத்தில்

மிதந்து கொண்டிருக்கிறேன்.

உனக்குப் பிடித்ததெல்லாம்

எனக்கும் பிடிக்கும் என்பது போக

எனக்குப் பிடித்ததெல்லாம்

உனக்கும் பிடித்தது என்பதாகி

உனக்கும் எனக்கும் பிடித்தது யாதெனில் உனக்கு என்னையும். எனக்கு உன்னையும் தான்.

இதற்கு மேல் இந்த கவிதையை விவரித்து சொல்ல முயன்றால்

அலைவரிசை பிசகக் கூடும். ஏனெனில் சொற்களுக்கு அப்பால்

நாம் மட்டுமே உணர்ந்து கொள்கிற

இந்த வாழ்க்கை வார்த்தைகளை எல்லாம் தாண்டிய நம் பேரன்பின்

சாரல் நனைந்தது.

நனைந்துக் கொண்டே

இருப்போம்.

எதனாலும் விலகாத

தனித்து தெரியாத

ஒற்றை ஆறு

வரையும் நீர் ஒழுங்கின்

இரு துளிகள் நாம்.

அடுத்தடுத்து மீட்டப்பட்டாலும்

அலைவரிசை தப்பா

அதிரும் வீணையின்

பிரிக்க இயலா

உதிரும் இசை வரிசை நாம்.

….

திரியும் ஞாலமெல்லாம்

திசை சேர்ந்திருப்போம்.

வாழும் காலமெல்லாம்

கை கோர்த்திருப்போம்.

….

அன்பு முத்தங்கள் தல.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Page 1 of 6

Powered by WordPress & Theme by Anders Norén