பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 3 of 6

முடிவிலி அழைப்புகள்.

❤️

வெகு நாட்களுக்குப் பிறகு என் அலைபேசியில் நான் மறைத்து வைத்திருந்த ஒரு பெயரில் அவள் வந்தாள். ஒளிர்ந்துக் கொண்டே இருந்த அலைபேசியை, அதில் புலப்பட்ட அவள் பெயரை சற்றே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அது வெறும் அழைப்பல்ல. அது ஒரு சுழல்.

அந்த சுழலில் மீண்டும் சிக்கி சிதைந்து விடக்கூடாது என சுதாரித்தேன். சிதைந்தழிந்து மீண்டும் மீண்டும் மீள் எழுவதென்பது‌ பழங்கால விக்ரமாதித்தன்-வேதாளம் கதை போல முடிவிலி என அறிந்து இருக்கிறேன். சில நொடிகள் அமைதியாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த அலைபேசி திரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு அனிச்சை போல, என்னையும் மீறிய ஒரு நொடியில் நான் அந்த அழைப்பை எடுத்து விட்டேன்.

எடுத்த ஒரு நொடியில் சட்டென சுதாரித்து விட்டு ஏதோ ஒரு வேலையில் இருப்பது போன்று காட்ட வேண்டுமென என்னை நானே தயாரித்துக் கொண்டு… குரலில் வலிந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டேன். கொஞ்சம் அவசரக் குரலில் நான் வேலை ஒன்றில் இருப்பதாக சொன்னேன். அவளோ.. அதை சற்றும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக.. “ஏன் நீண்ட நேரமாக ஒலித்துக்கொண்டே இருக்கும் அலைபேசியை பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாய்..” என கேட்டாள்.

என்னைச் சுற்றி ஏதாவது கேமிரா இருக்கிறதா என நான் சுற்றிமுற்றிப் பார்த்தேன். அந்த மௌனத்தையும் அவளே உடைத்து..” உன்னை பின் தொடர எனக்கு எப்போதுமே நினைவுகள் போதும். கேமிரா தேவையில்லை..” என்றாள் அலட்சியமாக.நான் பதட்டமானேன்.அவளே மேலும்.. “உன்னை உன்னையும் விட நான் அறிந்திருப்பதை நீ தெரிந்திருப்பது தான் உன்னை பதட்டம் ஆக்கிக் கொண்டே இருக்கிறது..” என்றாள்.

உண்மைகளின் எடை அதிகரித்துக் கொண்டே போவதும், நான் சுற்றியிருந்த பொய்த் திரைகள் ஒவ்வொன்றாய் அவிழ்ந்துக் கொண்டே போவதுமான சூழலில்..கொஞ்சம் கெஞ்சலான குரலில்..”இப்போது உனக்கு என்னதான் வேண்டும்..?” எனக் கேட்டேன்.”என் மின்னஞ்சலின் கடவுச்சொல் எனக்கு மறந்துவிட்டது. என்னவென்று சொல்.” எனக் கேட்டாள். “அதெப்படி எனக்குத் தெரியும்..?” என கேட்டேன். “என்னையும் விட அதிக நேரம் என் மின்னஞ்சலை நோண்டிக் கொண்டு இருப்பது நீதானே..” என்றாள் சற்றே கிண்டலோடு.திடுக்கிட்டேன்.

என் விஷயத்தில் மட்டும் எப்படி இவ்வளவு சுதாரிப்பாக இருக்கிறாள் என வியந்துக் கொண்டே மெளனித்தேன்.”சொல்லு”.. என அதட்டினாள்.கொஞ்சம் தயக்கத்தோடு நான் உன்னை முதலில் பார்த்த தேதிதான் என்றேன்.அதுதான் எந்த தேதி..? எனக் கேட்ட அவளிடம்.அது அவளுக்கே மறந்துவிட்டது என்ற ஒரு நொடியில் எனக்கும் மறந்து விட்டது என அவளுக்கு உணர்த்த‌ சற்றே மூர்க்கமான குரலில் “தெரியவில்லை” என கோபத்தோடு சொல்லி அழைப்பினை துண்டித்தேன்.

சில நிமிடங்கள் எனக்கு நரகமாக நகர்ந்தன. மாறி மாறி சுழன்ற கால அலைவரிசையில் ஏதோ ஒரு சின்ன புள்ளி மட்டும் பொருந்தாமல் எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது.ஏதோ சிந்தித்தவாறே.. நான் அவசரம் அவசரமாக என் மடிக்கணினியை திறந்து அவளது மின்னஞ்சலை வழக்கமாக நான் பயன்படுத்தும் அவளை சந்தித்த அந்த நாளை கடவுச் சொல்லாக பதித்து திறக்க முயன்றேன்.ஏதோ தவறென கணினித் திரைகத்தியது.அந்த நொடியில் தான் அலைபேசியில் அவள் மீண்டும் ஒளிர்ந்தாள்.சின்ன சிரிப்போடு அவள் சொன்னாள்.”அந்த கடவுச்சொல்லை நான் மாற்றி விட்டேன்.”அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

❤️

பகலில் ஒரு இரவு.

❤️

முகத்தில் மெல்லிய வெப்பம் பரவ நான் கண் விழித்தேன். விடிந்திருந்தது. அருகில் நீ இல்லை.

எழுந்து பார்த்தபோது அறைக்கு வெளியே பால்கனியில் நின்று கொண்டு கையில் ஒரு தேனீர் குவளையோடு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாய்.

இமைக்காத விழிகளோடு உறைந்திருந்த உன் பார்வை ஏதோ ஒரு இசை குறிப்பை எனக்கு நினைவூட்டியது. பெரும்பாலும் நீ கவனிக்காத பொழுதெல்லாம் உன்னை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான். சாப்பிடும்போதும், தூரத்தில் எங்கோ நின்று கொண்டு திரும்பிப் பார்க்கும் போதும், சில சமயங்களில் நள்ளிரவு விழிப்பின் போதும் நீ பார்த்த பார்வைகளை எல்லாம் நான் இசைக்குறிப்புகளாக மட்டுமே சேமித்து வைத்திருக்கிறேன். அவை பின்னிரவு கனவுகளில் என் காதோரங்களில் கேட்பதாக உணருகிறேன்.

❤️

இப்போதெல்லாம் என் சட்டையை என்னை விட நீதான் அதிகம் அணிந்து கொள்கிறாய். என் இளநீல சட்டையை அணிந்துகொண்டு நீ கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது உன்னை என்னவோ கடலின் ஒரு பிரதியாக எனக்கு உணர்த்தியது.”என்ன.. காலையின் விடியலை பார்த்துக் கொண்டு இருக்கிறாயா..” என்று கேட்ட என்னை பார்த்து “இது காதலின் விடியல்” என்றாய்.

உன்னை பின்புறமாக அணைத்து கழுத்தில் முகம் புதைத்து கண் மூடினேன். “அதற்குள் உனக்கு இரவு வந்து விட்டது..” என்று சொல்லி சிரித்தாய். “ஆமாம்.. நிலா நட்சத்திரங்கள் கூட எனக்குத் தெரிகின்றன..” என்றேன் நான்.”ஒரு காலைப்பொழுதில் இரவை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய்..” என்று சொல்லிக்கொண்டே என்னை விட்டு விலகி நின்றாய்.நீ கூடத்தான் நள்ளிரவில் கூட ஒரு விடியலை மிக எளிதாக கொண்டு வந்து விடுகிறாய் என நான் சிரித்துக்கொண்டே சொன்னதற்கு செல்லமாய் என் முடி கலைத்தாய்.

“ஏன்.. நமக்குள் பிரச்சனை.. நம்மைப் பொறுத்தவரை இரவும் இல்லை.. பகலும் இல்லை.. அவற்றை நாம் தான் உண்டாக்கிக் கொள்கிறோம்.” என்று நீ சொன்ன போதுஅந்த காலைப்பொழுதில் நிலாவும் ஒரே ஒரு நட்சத்திரமும் இருந்தது தற்செயலானதல்ல.

❤️

மஞ்சள் நிற வாழ்வொன்றின் மர்மக்கதை.

❤️

அந்த நாள் மட்டும் ஒரு மஞ்சள் நிற சுடிதாரால் இன்னும் நிறம் மங்காமல் அப்படியே சலவையோடு கசங்காமல் இருக்கிறது.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ அலைவுகளில் எதை எதையோ தவறவிட்ட நான் முதல்முதலாகப் பார்த்தபோது அந்தக் கதவு இடுக்கின் வழியாக தென்பட்ட அந்த மஞ்சள் நிற சுடிதாரின் அசைவினை மட்டும் மறக்க முடியவில்லை.

ஆனாலும் காலம் வலிமையானது தான். என்னையே மறக்கின்ற களைப்பினிலும், உச்சபட்ச களிப்பினிலும் சில நேரங்களில் அந்த மஞ்சள் நிற சுடிதார் கூட மரத்துப்போனதுண்டு.

ஆனாலும்..அவ்வப்போது ஏதேனும் நினைவுகள், அல்லது சில பாடல்கள், சில காட்சிகள், நீண்ட தூர பயணங்கள் என வாழ்வின் ரசனைமிக்க மயிலிறகுகள் ஆன்மாவை வருடும் போதெல்லாம் அந்த மஞ்சள் நிற சுடிதார் உயிர் பெற்று விடுகிறது.

பண்டிகைக்கால துணிகள் எடுப்பதற்காக ஜவுளிக் கடைக்குப் போனபோது கலைத்துப்போட்ட பட்ட துணிகளில் ஒரு மஞ்சள் சுடிதாரை மட்டும் உறைந்த பார்வையால் நான் பார்த்துக்கொண்டிருந்தை பார்த்த கடைக்காரப் பெண் புரியாமல் விசித்திரமாக பார்த்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

யாருக்கு துணி எடுத்தாலும் நான் மஞ்சள் வண்ணத்தில் துணிகள் எடுப்பது குறித்து வீட்டில் இருப்போர் அனைவருக்கும் ஒரு சலிப்பு ஏற்படுவதுண்டு. “மஞ்சள் என்றால் உனக்கு அப்படி பிடிக்குமா அப்பா..? ” என புரியாமல் கேட்கும் என் மகனிடம் நான் எப்படி விளக்குவேன்…?

ஒரு மஞ்சள் நிற சுடிதாருக்கு பின்னால்..சில சூரிய சந்திரர்களும்,தாள கதியில் ஓடும் ஒரு நீரோடையும்,ஆர்ப்பரித்து கொட்டுகிற அருவியும்,நீலம் பாவித்து கிடக்கிற ஒரு கடலும்..பசுமை பூரித்து கிடக்கிற பச்சை வயலும்..பனி இரவுகளும்.. பவுர்ணமி பொழுதுகளும்..இதையெல்லாம் தாண்டி..இந்த வாழ்க்கை முழுக்க நான் நேசித்து பொத்தி வைத்திருக்கிற நினைவின் பசும் அடுக்குகளும் இருக்கின்றன..என்பதையும்,அதற்கான சாத்தியங்கள் என்னைப்போல பலருக்கும் இருக்கும் என்பதையும்..எப்படி விளக்குவேன்..?

இது.. ஒரு மஞ்சள் நிற சுடிதார்ஒரு புடவை ஆகி, சில காலங்கள் என் வாழ்வாகவும் ஆகி, என்னைக் கடந்து நடக்கின்ற ஒரு தென்றலாகவும் ஆகி,அப்படியே முழுமையாக ஆக்கிரமித்து,என்னை புரட்டி போட்டு விட்டு.. எவ்வித காரணமும் இன்றி ஒரு நிழலை போல கரைந்துப் போன கதை.

????

நினைவோ ஒரு பறவை..

நினைவோ ஒரு பறவை.

♥️

இரவினை போர்த்தியிருந்த அந்த இருட்டு விரல்களால் தொட்டுப் பார்த்து உணரும் அளவிற்கு பிசுபிசுப்பின் அடர்த்தியோடு இருந்தது. அனேகமாக அப்பொழுது நள்ளிரவு கடந்து பின்னிரவின் தொடக்கமாக இருக்கலாம். அப்போதுதான் கண்கள் சோர்வடைய தொடங்கி,கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில்..விழிப்புக்கும் உறக்கத்திற்கும் நடுவேயான ஒரு கனவு மயக்கத்தில் நான் புரண்டு கொண்டிருக்க, சற்றே அதிர்ந்து அடங்கிய என் அலைபேசியின் ஒலியற்ற அதிர்வொலி இரவின் மௌன இசைக்கு சுருதி பேதம் போல ராகம் தப்பி ஒலித்தது.

களைத்த கண்களுடன் எடுத்துப் பார்க்கையில் அவள் எண்ணிலிருந்து வந்த எந்த எழுத்தும் இல்லாத ஒரு வெற்றுச் செய்தி. இந்த நள்ளிரவில், எதற்காக.. எவ்விதமான எழுத்துக்களோ, வார்த்தைகளோ இல்லாத வெற்றுச் செய்தி என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒரு வேளை தவறி வந்திருக்கலாமோ என யோசித்துப் பார்த்தேன். அது எப்படி திசைமாறி காற்றில் அலைகிற‌ பூ ஒன்று சரியாக என் மடியில் மட்டும் விழுகிறது..?

வேறு வகையில்தான் சிந்திக்க வேண்டும்.இன்னும் அலைபேசியில் என்னை அழிக்காமல் வைத்திருக்கிறானா என ஒரு வேளை.. நம்மை பரிசோதித்து பார்க்கிறாளோ, அல்லது இந்த நள்ளிரவில் உன் நினைவின் பாடலோடு உறங்காமல் விழித்துக் கிடக்கிறேன் என உணர்த்த எண்ணுகிறாளோ என்றெல்லாம் என் மனம் தனக்குத் தானே விசித்திர கோடுகளை வரைந்து பார்த்து வசீகர ஓவியங்களாய் மாற்றத் தொடங்க..ஒரு மாய விளையாட்டு அதுவாகவே நிகழத் தொடங்கியது.

அது வெறும் வெற்றுச் செய்தி. அந்த வெற்றுச் செய்தி‌ அலைபேசியின் ஒளியூட்டப்பட்ட வெண்திரையில் காணும்போது, ஒரு எழுதப்படாத தாளைப் போல இருந்தது. அது ஒருவகையில் வரையப்படாத ஓவியம். நீண்டநாள் விரல்கள் படாது, புழுதியேறி கிடக்கும் பழுப்பேறிய பியானோ ஒன்றின், கருப்பு- வெள்ளை கட்டைகளில் வாசிக்கப்படாமல் உறைந்து கிடக்கும் ஒரு இசைத்துளி.

அது வெறும் ஒரு வெற்றுச் செய்தி என ஏற்றுக் கொள்ளாதே என உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.அந்த நொடியில் தான்..நலம் விசாரித்தல்கள் ,அக்கறையும் அன்பும் நிறைந்து வழிகிற சொற்கள்… என கற்பனையில் என் மனம் அதன் போக்கில் எழுதி பார்த்து ஏகாந்தம் கொள்ள.. தொடங்கியது.ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம் போல..அது ஒரு எழுதப்படாத வசவுவாகக் கூட இருக்கலாம். இனி உன்னை சபிக்க சொற்களே இல்லை என்பதற்கான குறியீட்டு சாட்சியமாக கூட உணர்த்த விரும்பி இருக்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வும் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அது ஒரு வெற்றுச் செய்தி.அதை எப்படி எடுத்துக் கொள்வது.. கால நதியின் கோர ஓட்டத்தில் மண்மூடி புதைந்துவிட்ட நினைவின் விதை ஒன்று வாழ்வின் ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்துவிட்டு இருக்கிற வெளிச்சத்துண்டால் உயிர்பெற்று துளிர்க்க முயல்கிறது என எடுத்துக் கொள்ளலாமா..அல்லது..உறுதியான முறிவொன்றினை வார்த்தைகளின்றி அறிவிக்க வருகிற மௌன மொழி பூசிய இறுதி அறிவிப்பு என எடுத்துக்கொள்ளலாமா…என்றெல்லாம் யோசித்து குழம்பிய வாறே.. அடைத்துக் கிடந்த என் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான்.. “நினைவோ ஒரு பறவை” என ஒரு பாடல் தூரத்தில் எங்கோ கேட்டது.யாரோ வயதான தள்ளுவண்டிக்காரர் அவரது பண்பலை வானொலியில் அந்தப் பாடலை ஒலிக்க வைத்தவாறே அமைதியாக ஆளற்ற சாலையில் நியான் விளக்கொளியில் நடந்து செல்ல, எங்கிருந்தோ கசிந்த அந்தப் பாடலின் மர்ம முடிச்சுகளில் இதயம் இடறத் தொடங்கியது.”அதற்காகத்தான் அலைபாய்கிறேன் வந்தேன் தர வந்தேன் நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை பறக்கும் அது கலக்கும் தன் உறவை நினைவோ ஒரு பறவை…”தள்ளுவண்டியோடு அந்தப் பாடலும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டே சென்று காற்றில் கரைந்து மௌனமாக.. மீண்டும் தனிமையின் போர்வை போர்த்தி தன்னை முடக்கிக் கொண்டது அந்த சாலை.

நான் ஏதோ வெறுமையுடன் என் மேசையின் மீதிருந்த அலைபேசியை உயிர்ப்பித்து அந்த வெற்றுச் செய்தியை எடுத்துப் பார்க்க தொடங்கினேன். அந்த ஒரு நொடியில் தான்..ஒரு நீல நிற சிறு பறவை ஒன்றுஅலைபேசி திரையில் இருந்து கிளம்பி, சிறகடித்தவாறே என் அறைக்குள் சில நொடிகள் சுற்றிசுற்றி பறந்து திறந்திருந்த என் ஜன்னலின் வழியே பறந்து போனது.அதன்பிறகு அலைபேசியை எடுத்துப் பார்க்க ஏனோ அச்சமாக இருந்தது.

♥️

அன்பே சுஷாந்த்

அன்பே சுஷாந்த்..கண்ணீரை அடக்க முடியாமல் போன என் விழிகளினூடே நீ ஒரு புன்னகையோடு உறைந்து போன இரவு இது. வாழ்வின் சூட்சமங்களை குறித்து தான் நம் எவ்வளவு அறியாமையோடு இருக்கிறோம்..? யாருமே எதிர்பாராத திருப்பத்தில் ஒரு கணத்தில் நிகழ்ந்து விடுகிற எளிய நிகழ்வாக மட்டுமே மரணம் இருக்கிறது என்பதுதான் நம் அறிவெல்லைக்கு அப்பாலான பேரதிர்ச்சி.

ஒரு மலை முகட்டில் தன்னிச்சையாய் பூத்து, எங்கிருந்தோ விசி விடுகிற காற்றின் சிறகுகளால் சற்றே காயப்பட்டு உதிர்கிற பூ உதிர்தலைப் போல சட்டென நிகழ்ந்து விட்டது உன் மரணம்.யோசித்து பார்த்தால் , மரணம் தான் வாழ்வின் நிச்சயமென உணர்கிற இப்புள்ளியில் யாரையும் நேசிக்க முடியாமல் போகிற, இந்த வாழ்வின் சூதாட்டத்தில் சிக்கி உணர்ச்சிகளின் கரங்களால் உருட்டப்படும் பகடைக்காய்களாய் மாறிப்போகிற இவ் வாழ்வுதான் எவ்வளவு வெட்கக்கரமானது…?உன்னுடைய இறுதிப்படமான ” Dil bechara” (hot star) திரைப்படத்தையும் கூட நான் பார்க்க நேர்ந்தது கூட இவ்வாழ்வின் சூட்சம விதிகளுக்கே உரிய எதிர்பாரான்மையின் தரிசனமாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது .

உன் கண்களில் ஒளி இருந்தது சுஷாந்த். அப்படி ஒளியுடைய கண்கள் கொண்ட கலைஞர்கள் அரிதானவர்கள். நீ நடித்திருக்கும் “dil bechara” படத்தின் அசலான “The Fault in Our Stars” படத்தை விட உன் படம் இன்னும் உயிர்ப்புடன் இருக்க உன் மரணம் தான் காரணமாக இருக்கிறது என்பதுதான் வலி மிகுந்த உண்மை.எத்தனையோ முறை காதல் கதைகளை படிக்கிறோம் . திரைப்படங்களாக பார்க்கிறோம். ஒரு ஆணும், பெண்ணும் நேசித்துக் கொள்வதை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கலையாக, இலக்கியமாக, கூத்தாக, திரைப்படமாக மானுட விழிகள் சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை பார்த்தாலும் அதே காதல் தான். அதே நேசம் தான். அதே கண்ணீர்தான்.ஆனாலும் ஒவ்வொரு முறைப் பார்த்தாலும் காதல் புதிதாகவே தெரிவதற்கு எனக்கு காரணங்கள் புரியவில்லை.மிகச் சில இப்படித்தான். திரைப்படத்தில் உன் காதலியாக நடித்த பெண்ணை பார்க்கும் போதெல்லாம் அவரவருக்கு ஏதேனும் பிடித்த முகங்கள் தோன்றலாம். எனக்கென்னவோ நான் மட்டுமே அறிந்த ஒரு உள்ளங்கைகளின் மென்மை மட்டுமே நினைவுக்கு வந்தது, அந்த உள்ளங்கைகளில் முகம் புதைத்து நான் கண் மூடிய போது அடைந்த ஆறுதலை தான் நான் இந்த வாழ்வெங்கும் தேடி அலைகிறேன்.மிகச் சாதாரண படம் தான். ஆனால் உன் மினுக்கும் கண்களால் அதை பிரகாசப்படுத்தி இருக்கிறாய் .அந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டத்தில் நீயே அமர்ந்து உன் நினைவேந்தல் கூட்டத்தை பார்ப்பது போன்ற அந்த காட்சியில் உன் காதலியாக நடித்த அந்த பெண் சொல்வது போல.. புன்னகையால் வாழ்வினை மாற்றும் வல்லமையை நீ கொண்டிருந்தாய் சுஷாந்த்.அந்த திரைப்படத்தை பார்க்கும் அனைவருக்கும் நிகழும் அதே ரசவாதம் எனக்கும் நிகழ்ந்தது,மிகுந்த நெருங்கிய நண்பனாகி விட்டாய்.அட..போடா.. சுஷாந்த்…நீ இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாம்,

நம்மில் யார் யோக்கியன்..?

பட உதவி : ம.செ.பகலவன்

கொரனா காலம் வழங்கியிருக்கிற முதன்மை பரிசு நமக்கு வாய்த்திருக்கிற தனிமை. இந்த தனிமை தான் நமது கடந்த காலத்தை பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது.எவ்வளவு சரியாக நடந்து இருக்கிறோம் என்பதைத் தாண்டி எவ்வளவு தவறாக நடந்து இருக்கிறோம் என்பதுதான் ஆக்கிரமிக்கிறது. உண்மையில் தவறுகளும் மீறல்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொள்ள முடிகிறது.

யாரும் பூரணத்துவம் பெற்ற சரியான நபர்கள் என்று இதுவரை பிறக்கவில்லை. உங்களில் எவன் யோக்கியவானோ அவன் எடுத்து முதல் கல்லை அடியுங்கள் என தேவகுமாரன் கேட்டபோது கூட அப்போது தேடப்பட்ட அந்த முதல் கல் இப்போது வரை கிடைக்கவில்லை.எனவேதான் நாம் சரியானவர், நாம் சொல்கின்ற வார்த்தைகள் சரியானது என்றெல்லாம் நமக்கு நாமே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் சக மனிதனின் மீது வன்மம் கொண்டு அலைய மனது தயாராகிறது. இந்த தனிமைப்பொழுதில் யார்மீதும் பெரிதாக கோபம் ஏற்படாமல் போவதை என்னுள் நிகழ்ந்திருக்கிற மாற்றம் என உணரத் தொடங்கி இருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு என்கிற உணர்ச்சி மறந்துபோய்.. எதையும் சகித்து கடக்கும் மனநிலை தான் வசதியாக இருக்கிறது.வெறுப்பும், வன்மமும் உறுத்தலாகவே இருப்பதை தாண்டி உண்மையில் தொடர்ந்து பயணிக்க முடியாத பெரும் சுமையாக மாறி விடுகிறது.இங்கே யாரும் 100% சரியானவர்கள் இல்லை என்பதில் நானும் உள்ளடக்கம் என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன்.அப்படி சரியாகவும் இருந்துவிட முடியாது. ஆனால் நான் சொல்வது தான் சரி, நான் தான் சரியானவன் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கும் போதுதான் வெறுப்பின் விதை ஊன்றப் படுகிறது.பலரை நம்மால் பார்க்க முடிகிறது. மனம் முழுக்க வெறுப்பினை சுமந்து, வார்த்தைகள் முழுக்க வன்மம் சுமந்துகொண்டு அலைகிற அவர்களது வெறுப்பின் பயணம் அவர்களையே துளித்துளியாக வீழ்த்திக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.

விட்டுக்கொடுத்து போனால்தான் என்ன.. என்ற கேள்விக்கு இங்கு வெறுப்பின் பாடலை முணுமுணுத்துக் கொண்டு இருப்பவர்களிடத்தில் எவ்வித பதிலும் இல்லை. விட்டுக் கொடுத்தவர்கள், மன்னித்தவர்கள் பலமாகி கொண்டே போவதையும், வெறுப்பையும் வன்மத்தையும் சுமப்பவர்கள் சுய வதைக்கு உள்ளாக்கி பலமிழந்து தவிப்பதையும் காணமுடிகிறது.நிகழ்ந்தது தானே என சிந்தித்து கடக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் கடலையும் கடந்துவிடலாம். வெறுப்பை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தால் நம் வீட்டை கூட தாண்ட முடியாது. அப்படியெல்லாம் வெறுப்பினை சுமந்துகொண்டு இந்த வாழ்வினை கடக்க முடியாது.சமீபத்தில் கூட நம்மை விட்டு பிரிந்த ஒருவர் நம்மைக் குறித்து பேசி வருகிற கருத்துக்கள் பற்றி ஒரு வலையொளித் தளத்தில் பதிலளிக்க என்னை அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். அதில் பங்கேற்பது தரக்குறைவு என்பது மட்டுமல்ல, பதிலுக்கு நானும் அந்த வெறுப்பின் போர்வையைப் போர்த்திக் கொள்ள வேண்டும். ஏறக்குறைய அவரின் மனநிலைக்கு நானும் மாற வேண்டும். அது ஒருவிதமான தற்கொலை.உண்மையில் வெறுப்போடு அலைபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் தோற்றவர்களாக உணர்ந்திருக்கிறார்கள். ஏதோ இழந்ததாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவேதான் தங்களுக்குள் ஊறுகிற வெறுப்பை அடுத்தவர் மீது அள்ளி இறைத்து தங்களை ஆற்றுப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பதில் சொல்ல ஏதுமில்லை. அலட்சியப்படுத்தி நகரத்தான் நிறைய இருக்கிறது. எதையும் எளிமையாக கடக்க கற்று தேர்ச்சி அடைவது தான் உண்மையான ஞானம் என்கிறார்கள். நிதானித்து பார்க்கும் போதுதான் நாம் எல்லாம் இன்னும் கொஞ்சம் கவனமாக சற்றே பக்குவத்தோடு இந்த வாழ்க்கை அணுகி இருக்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனிமேலாவது அவ்வாறு வாழ முயற்சி செய்வோம்.ஆதியிலிருந்து நாம் மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்கிற ஒரே பாடம்தான்..”எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.”இந்தப் பதிவு எழுத காரணமான ஒரு பதிவை எழுதிய என் அன்புத் தம்பி Vadivel Geevan க்கு என் உறக்கத்தை பறித்த என் சாபங்களும், என்னை சிந்திக்க வைத்த நன்றிகளும் ஒருசேர போய் சேரட்டும்.

தந்தையர் தினம்.

தாய் பத்து மாதத்தோடு கருப்பையிலிருந்து குழந்தையை இறக்கி வைத்து விடுகிறாள். ஆனால் தந்தைகளோ, தன் ஆயுட்காலம் முழுவதும் குழந்தைகளை தோளில் சுமக்கிறார்கள்.நானெல்லாம் தந்தையின் சொல் பேச்சு கேட்காத ஊதாரி மகனாக ஊர் சுற்றித் திரிந்தவன். எப்போதும் அவர் சொல் பேச்சு கேட்காமல் எதிர்திசையில் பயணித்தவன். ஆனால் என் தந்தை வித்தியாசமானவர். நான் எந்த திசையில் பயணிக்கிறேனோ அந்த திசையில் தனது திசைக்காட்டியை திருப்பி வைப்பவர். திக்குத் தெரியாத இருள் சூழ்ந்த வனத்தில் நான் பயணித்தாலும் திசைகாட்டும் நட்சத்திரமாக அவர் நகர்ந்து கொண்டிருப்பார்.தோல்விகளால் நான் துவண்டு விழும் தருணங்களில் …. வெறும் சொற்களால் என்னை அவர் தேற்றியதில்லை. புத்தகங்களைக் கொண்டு என் உலகத்தை நிரப்பினார் அவர். அனைத்து துன்பத் துயர பூட்டுகளுக்கும் புத்தகங்களை சாவியாக நம்பினார் அவர். உண்மையில் பூட்டுகள் திறக்கத்தான் செய்தன.இந்த உலகில் தனியனாக பிரிந்த எனக்கு என் தந்தையின் உடன் இருப்பு வார்த்தைகளால் விவரிக்க முடிகிற புறத்துணை அல்ல. தனிமையின் பிசுபிசுக்கும் இருட்டை தகர்த்து, வெளிச்சக் காடாக என் அகத்தை மாற்ற என் விரல்களோடு கோர்த்துக்கொண்ட அவரது விரல்கள் சுடரொளி மிகுந்தவை.என் தந்தை நேர்மையானவர். கோபம் கொள்ளத் தெரியாதவர்.சக மனிதருக்கு துளியளவு கூட துன்பமோ துரோகமோ நினைக்க முடியாதவர். தன்னை எப்போதும் எளியவராக, முன்னிறுத்தி கொள்ளாத மனிதராக வாழ்பவர். அந்த வகையில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள பெற்றுக் கொள்ள ஏராளமான பொக்கிஷங்களை வைத்துக் கொண்டிருக்கிற அற உணர்வுகளின் புதையல் அவர்.வெறும் பெயருக்கு முன்னால் முன்னெழுத்து தருகிறவர் மட்டும் தந்தை அல்ல. அந்தத் பெயரின் அடையாளமாகவும், அந்தப் பெயரின் ஆதர்சமாகவும் மாறி, தன் வியர்வையால்துளித்துளியாக மகனை உருவாக்கி அவையத்து முந்தி இருக்க அனுப்புபவர்கள் தான் தந்தைகள்.இந்த உலகத்திற்காக தந்தைகள் எந்த மகனையும் தயாரிப்பதில்லை. ஆனால் மகன்களுக்காக தந்தைகள் ஒரு புது உலகத்தை தயாரிக்கிறார்கள். அப்படி இந்த உலகம் பல கோடி உலகங்களால் சூழப்பட்டு தந்தைகளால் தழைத்து செழிக்கிறது.”My father is a hero” என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு. எல்லா கதாநாயகர்களும் ஒரு தந்தையாக இருப்பார்களோ இல்லையோ… ஆனால் ஒவ்வொரு தந்தையும், ஒரு கதாநாயகன் தான்.எனக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. என் தந்தை எனக்கு இருந்த நேர்மையில்.. ஒரு பாதி அளவாவது என் மகன்களுக்காக நான் வாழ்ந்து விட வேண்டும் என்பது.என்னை அலைக்கழித்து, சுக்குநூறாக உடைத்து, என்னை வலிக்க வைத்து, கதற வைத்து, அலைய வைத்து, தொலைய வைத்து,இறுதியாக..இந்த வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு மாபெரும் உண்மை என்னவெனில்‌..தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

❤️

அனைத்து தந்தையர்களுக்கும், தந்தையாக போகிறவர்களுக்கும்..தந்தையாக மாற்றி இருப்பவர்களுக்கும்..தந்தையாக்கப் போகிறவர்களுக்கும்..இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

மல்லிகை நகரத்துப் பொழுதுகள்..

♥️

அந்த அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரவின் புதிரான அடுக்கொன்றின் விசித்திர முடிச்சியின் இடறலில் திடுக்கிட்டு விழித்த போது அருகிலே அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.என்னை தழுவி இருந்த‌‌ அவளது கரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, அறையின் ஜன்னல்களை திறந்தேன். உறங்கா அந்தப் பெரு நகரம் தன் வரலாற்றுப் பெருமித நினைவுகளில் லயித்து இருந்தது. இரவு ஒரு திரவமென முகிழ்ந்து அந்த முது நகரத்தின் மேனியில் வழிந்துகொண்டிருந்தது. பகலெல்லாம் வேறுமாதிரி காட்சியளிக்கும் அந்த நகரம்
இரவில் மட்டும் நாணமும், மென்மையும் உடைய ஒரு பெண்ணாகி விடுகிற மாயத்தினை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.

“என்னடா பண்ற” என்ற அவளது குரலில் திரும்பிப் பார்த்த நான் என்னை நோக்கி நீண்ட இரண்டு வெற்றுக்கரங்களை கண்டேன். அந்த அழைப்பினை என்னால் எப்போதும் தவிர்க்க முடிந்ததில்லை. அந்தக் கரங்களுக்குள் நான் நுழைந்தபோது மழை நிரப்பிய குளம் ஒன்றில் கால் நனைத்தது போல எப்போதும் அடைகிற ஒரு சிலிர்ப்பினை அடைந்தேன்.

“இந்த ஊர் ஒரு பெண்” என்றேன்.
“வர வர தென்படும் எல்லாவற்றிலும் பெண்ணை உணர்பவனாக.., தேடி அலைபவனாக நீ மாறிக்கொண்டே போகிறாய்..” என்றாள் அவள்.

இது போன்ற தருணங்களில் திக்கு தெரியாத, ஒரு திசையற்ற வெளியாய் அவளது உடல் மாறிப் போவதை நான் உணர்ந்து இருக்கிறேன். திசைகள் தெரியாமல் நான் கலைந்து, அலைவதைதான் பெரும்பாலும் என் கவிதைகளில் அவள் கண்டதாக சொன்னது ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.

“எங்கேயாவது வெளியே போவோமா..?” என்று கேட்டாள்.

“இந்த நள்ளிரவிலா..” என சிறகடிப்பின் விரிதலில் ஒரு வானத்தையே அளந்து பார்த்த ஒரு சிறு பறவை போல மாறி இருந்த நான் மென்மையாக கேட்டேன்.

“இது உறங்கா நகரம்.
ஏனெனில்..இந்த நகரத்தின் விழிகளுக்கு இமைகள் கிடையாது.” என்று அவள் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.

அப்படியே எழுந்து, கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு.. நாங்கள் காரில் பயணிக்கத் தொடங்கியபோது.. வளைவும், நெளிவும் உடைய அந்த பாதைகள் பெண்ணாக அந்த நகரத்தை நான் உணர்ந்த என் கணிப்பினை உறுதி செய்தன.

நாங்கள் சென்ற பாதையில் எதிர்ப்பட்ட ஒரு பெரிய கோபுரத்தின் வாசலுக்கு முன்னால் என்னை நிறுத்த சொல்லி.. விட்டு காரைவிட்டு இறங்கி,
அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் ஏதோ சிரித்து இவள் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இந்த பின்னிரவு நேரத்திலும் குளித்து, மஞ்சள் பூசி, நெற்றி நிறைத்து பொட்டிட்டு, பூ விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் புன்னகையை மட்டும் வாங்கிக்கொண்டு பூ வாங்காமல் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

மீண்டும் காரில் ஏறிக்கொண்ட அவளிடம் “என்ன அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாய்..?” எனக்கேட்டேன். “அந்த அம்மா பெயர் மீனாட்சி. நேற்று கோவிலில் பார்த்தேன்..” என்றாள் அவள்.
ஏன்.. அந்த அம்மா தோளில் பச்சைக்கிளி ஒன்றைக் காணவில்லை என எனக்குள் கேள்வி எழும்பியதை அவளிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

திடீரென ஏதோ நினைத்தது போல என் தோளில் சாய்ந்து என் இடது கரத்தினை இறுக அணைத்துக் கொண்டாள். ஒரு பெரிய தெப்பக் குளத்திற்கு முன்னால்.. நாங்கள் சென்று சேர்ந்தபோது.. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லை. “மீன்கள் இல்லாத குளம்..” என்றேன் நான். எனது பின்னந்தலையை உன்னிப்பாக கோதியவாறே.. “அந்தக் குளத்தை பார்க்கின்ற எல்லோரது விழி பார்வைகளும் மீன்களாக மாறி உலவிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது..” என்றாள் அவள்.
“ஆனால் இது தண்ணீர் இல்லாத குளம்” என்றேன். “ஒருவகையில் ஆடை இல்லாத பெண்..” என்றாள் அவள்.

“எப்போதும் எதிலும் முழு நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ள மனித மனம் ஏனோ விரும்புவதில்லை‌” என்று சொன்ன என்னை பார்த்து அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.

“உன் வெட்கம் எப்போதுமே ஒரு அல்லி மலரை தான் நினைவு படுத்துகிறது..” என்றேன். அவள் சற்று கடுமையாக
“ஆனால் இது மல்லிகையின் ஊர்.” என்றாள்.. ” ஓ அதனால்தான்
நீ அடிக்கடி பெருமூச்சு விடுகிறாயோ..?” என்று கேட்ட என்னை பார்த்து மெலிதாக சிரித்தாள்.

“சரி வா.. போவோம்” என்றவாறே அவள் திரும்பியபோது அவளது பின்னப்படாத கேசத்தில் சில நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.

மீண்டும் அறைக்கு நாங்கள் திரும்பியபோது அறையின் சுவர்களில் பாசியேறி, பசுமை நிறைந்த கொடிகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு, படர்ந்திருந்தன. அறைக்குள் ஒரு கடல் உருவாகியிருந்ததையும், அதில் சில தங்க மீன்கள் உலவிக்கொண்டு இருந்ததையும் நாங்கள் கவனித்தோம்.
எங்கள் கட்டிலின் தலைமாட்டில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று தழைத்து வளர்ந்து, கிளைகள் செழித்து, விழுதுகளோடு பூரித்து நின்றதை நாங்கள் கண்டோம்.

இதுவெல்லாம் எப்படி என்று நாங்கள் இருவருமே யோசிக்கவில்லை. அந்தக் மாய கணத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்த பெருமரத்தில் மடியில் தலை சாய்ந்தோம். எங்களை சுற்றி அடர்வனம் ஒன்றின் சூரிய ஒளி படாத
தரையின் குளிர்ச்சி பரவத்தொடங்கியது.

“நழுவிக் கொண்டே போகும் உன் விரல்களின் நுனியில் மயிற்பீலி முளைத்திருக்கிறது” என்றாள் அவள். அப்போதுதான் சற்றே மூடியிருக்கும் அவளது விழிகளில் இருந்து சிறு பறவை ஒன்றின் இறகு ஒன்று பிரிந்து அந்தர வெளியில் மிதக்கத் தொடங்கியது.

எங்கிருந்தோ வந்த நிலவு எங்களது இருவர் கண்களிலும் நுழைந்ததை நாங்கள் உணர்ந்தோம். எப்போதும் அவள் அருகில் இருக்கும்போது மென்மையாக உணரும் தாழம்பூவின் வாசனை அன்று மட்டும் மல்லிகை பூ மணமாக நான் உணர்ந்தது குறித்து எனக்கு அப்போது எந்த வியப்பும் இல்லை.

…..

எப்போதோ வாழ்வின் எதிர்பாராத தருணங்களில், அவளை நான் நழுவ விட்ட பிரிதான, வெகு காலத்திற்குப் பிறகு..

தனித்து நான் அந்த முது நகரத்திற்கு சென்றபோது ஒரு நள்ளிரவில் பூ விற்ற அந்த அம்மாவைத் தேடி அலைந்தேன்.

எதிர்பார்த்தது போல அதே கோபுரம். அதே வாசல்.

அங்கே யாரோ ஒரு பெண் மூப்பேறாமல் இருந்த அதே அம்மாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள்.

அருகே யாரோ ஒரு இளைஞன் இதையெல்லாம் புன்னகையோடு கவனித்துக்கொண்டே நிற்கிறான்.

எனக்கு எதுவும் தோன்றாமல் நான் அறைக்குத் திரும்பியபோது.. நான் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒரு வனமாக மாறிவிடவில்லை என்பதுதான் அக்கணநேரத்து ஆறுதலாக எனக்கு அமைந்தது.

 

(நன்றி முத்தங்கள்.
இசைக்கு: இசைஞானி, காணொளி வடிவமைப்பிற்கு: கிருஷ் நடேஷ்)

பிரிவின் மழை..

 

[youtube]https://www.youtube.com/watch?v=3nisKz887rU[/youtube]

இரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக “தண்ணீர் பாட்டில் வேண்டுமா” என நான் கேட்க..அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைத்தாள். அதைத்தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை.அது சொற்கள் தீர்ந்த தருணம். எல்லாவற்றையும் இந்த வாழ்க்கையில் நாம் கொட்டி முடித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்வதா.. அல்லது நிகழும் வாழ்க்கையில் இதுவும் நிகழ்ந்தது என உணர்ந்து கொள்வதா என்பதில் எப்போதுமே எனக்கு மனக்குழப்பம் உண்டு. ஆனாலும் அக்கணத்தில் நாம் சாகாமல் உயிர்ப்புடன் இருந்தோம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு கனவு போல நிகழ்ந்து விட்டிருக்கிறது என்றெல்லாம் நீயும், நானும் நிகழ்ந்தவைகள் அனைத்தையுமே ஒரு கனவாக கடந்துவிட முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடக்கவே முடியாத ஒரு பெரும் பாலைவனமாக நம் நினைவுகள் மாறிவிட்டன என்பதை அக்கணத்தில் நாம் உணர்ந்தே இருந்தோம். ஆளரவமற்ற அந்தப் பாலைவனத்தில்.

அலைச்சலும் உளைச்சலும் நிரம்பிய இந்தக் கொடும் வாழ்வினை தணித்துக்கொள்ள ஒரு இசையமைதி வேண்டி நாம் அலையப் போகிறோம் என்பதுதான் நாம் எதிர்கொண்டிருந்த இந்த வாழ்வின் மீதான பெரும் அச்சம். உண்மைதான். உனது விழிகளில் நான் அடைந்த அந்த இசையமைதி இதுவரை நான் எங்கும் அடையவில்லை என்பதும்.. அதைத் தேடி அலைந்து திரிவதை தான் இந்த வாழ்க்கையின் கொடும் விதி என நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன் என்பதும் நான் அறிந்தது தான். என்னவோ தெரியவில்லை. அன்று நாம் எதிர்நோக்கியிருந்த அந்தப் பேருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. அந்தக் கால தாமதத்தை காலம் நமக்கு காட்டிய அன்பின் வரமா.. அல்லது ஈவு இரக்கமற்ற வாழ்வின் கடைசித்துளி கருணையா என்றெல்லாம் அப்போது என்னால் ஆராய முடியவில்லை. ஆனாலும் பேரவலம் நிறைந்த ஒரு நரகத்திற்குள் நாம் திரும்பிச் செல்வதற்காக கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம் என்கிற ஒத்த மன உணர்வில் நாம் உறைந்திருந்தோம். எந்தவிதமான சம்பிரதாய விடைபெறுதல்களும் நமக்குள் அன்று நடைபெறவில்லை என்பது தான் இன்றும் நான் அடைந்திருக்கிற மிகப் பெரிய ஆறுதல். என்னை நீ பார்த்துக் கொண்டே இருந்தாய். நான் வேறு எங்கோ கவனித்துக் கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அருகே யார் தோளிலோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம்/ காலம்/ சூழல் மறந்த ஒரு குழந்தையின் உறக்கம் தான் எவ்வளவு புனிதமானது… இனி நமக்கு வாய்க்கவே போவதற்ற அந்த உறக்கம் தான் நான் அந்த நொடியில் கண்டடைந்த மகத்தான மானுட தரிசனம். இறுதியில் தாமதமாக போன அந்த பேருந்தும் வந்தது. மீண்டும் அதே கேள்வியை நான் கேட்டேன். “தண்ணீர் பாட்டில் வேண்டுமா…” எத்தனை முறை இதே கேள்வியை கேட்பாய் என்பதுபோல என்னை நீ நிமிர்ந்து பார்த்தாய். அந்த நிமிடத்தில் பொங்கி வருகின்ற எல்லாவற்றையும் ஏதோ ஒரு கேள்விக்குள் அடக்க முயலும் அபத்தம் எனக்கும் புரிந்தது. என்னிடமிருந்த உன் பையினை மெலிதாக வாங்கிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டாய். என் கையில் இருந்த பையை வாங்கும் அந்த நொடியில் உன் விரல்கள் எனது விரலோடு உரசி விடக்கூடாது என்கின்ற மிகுந்த எச்சரிக்கை உன்னிடம் இருந்தது குறித்து எனக்கு இதுவரையில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த ஒற்றை உரசல் போதும். அந்த சின்னஞ்சிறு தீப்பொறி உனக்கு அது வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒருமுறை திரைப்படமாக காட்டிவிடும் என்பதையும்… அந்தப் பொழுதில் தன் வாழ்வையே ஒரு திரைப்படமாக பார்க்க நீ அஞ்சினாய் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்கிறேன் என்பது போல மெலிதாக தலையசைத்தாய். எனது கண்கள் கலங்கியிருந்தன. இனி மீளவே முடியாத ஒரு பாதையில் உன்னை அனுப்பி வைத்துவிட்டு இந்த வாழ்வு முழுக்க நான் தனியே வாழ வேண்டும் என்கின்ற பெரும் சாபம் வெயில் அடிக்கும் நிலத்தில் உயரப் பறக்கும் ஒரு கழுகின் நிழல் போல எனக்குள்ளும் துளிர்த்தது.

அக்கணத்தில் ஏதோ சொல்ல நினைத்தாய் என இன்றளவும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை நீ எதுவும் சொல்லவில்லை. போய் வருகிறேன் என்றோ, போய் எப்படியாவது தொடர்பு கொள்கிறேன் என்றோ , போய் அலைபேசியில் அழைக்கிறேன் என்றோ எந்த வாக்குறுதிகளும் இல்லாத ஒரு வெறுமை விடைபெறுதல் அது. ஏதாவது சொல்லி விட்டுப் போயிருந்தால். அந்த சொல்லையே பிடித்துக்கொண்டு நான் அலைந்து தீர்ப்பேன் என உனக்கும் தெரியும் தானே. படிக்கட்டுகளில் ஏறும் போது கலங்கி இருந்த என் கண்களின் ஊடாக எனக்குத் தெரிந்த காட்சி நீ என்னை திரும்பி பார்ப்பதான ஒரு தோற்றம். நீ உள்ளே ஏறி சென்று விட்டாய். பேருந்து நகரத் தொடங்கியது. நான் அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தேன். பேருந்து என்னை விட்டு விலக.. விலக.. பிரிக்க முடியாத என் ஆன்மாவின் ரத்தமும் சதையும் நிரம்பிய துண்டு ஒன்று என்னை விட்டு விலகுவது போன்ற வலி. மெதுவாக நான் காரில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். எனக்குச் சற்று முன்னால் அந்த பேருந்து சென்று கொண்டே இருந்தது. நானும் பின்னால் சிறிது நேரம் போய்க்கொண்டே இருந்தேன். சட்டென ஒரு வளைவில் அந்த பேருந்து எதிர்ப்புறம் பயணிக்க. நான் அப்படியே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த முச்சந்தியில் இறங்கி நின்றேன்.

அந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது எதேச்சையான ஒரு நிகழ்வு என இந்த நொடி வரை நான் நம்பவில்லை.

காதலின் விடியல்.

 

[youtube]https://www.youtube.com/watch?v=KZyn3KCMFI4[/youtube]

 

❤️

கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், சில இளையராஜா பாடல்களும் தனித்து இருந்தோம். என்னைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆகிவிடுகிறாய் எனக் கேட்டதற்கு அவளிடம் ஒரு மர்மமான புன்னகை தான் மிஞ்சியது. நான் புரியாமல் அவள் முகத்தையே உற்றுநோக்கி கொண்டிருந்தபோது.. மென்மையான குரலில் சொல்கிறாள்.. “அது அப்படித்தான். நான் விளையாடுவதை ரசிக்க நீ மட்டும்தான் இருக்கிறாய். உன் கண்களில் நான் விழும் போதெல்லாம் சிவந்துக் கொண்டே போகிறேன்” என்கிறாள். இப்போதெல்லாம் பேசுவதைவிட உன்னுடன் எங்கோ போய்க் கொண்டிருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறாள். அந்த நெடுஞ்சாலை முடிந்து ஒரு மலைச்சாலையில் மீது கார் ஏற தொடங்குகிறது. எதிரே எந்த வாகனமும் வரவில்லை. எனக்கு முன்னால் பெரும்பெரும் பூதங்கள் போல மலைகள் அதனூடாக மலைக்காடுகள் என அந்தப் பின்னிரவு சற்று அச்சமாகத்தான் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே மறுபுறம் சாய்த்து வைத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மலைச் சாலையில் தனியே நின்று கொண்டிருக்கிறேன். அடர் குளிர் இரவு. இதேபோன்ற எத்தனை இரவுகள் இந்த மலைகள் மீது நிழலாக படிந்திருக்கும் என விசித்திரமாக யோசித்தவாறு நின்று கொண்டிருக்கிறேன்.‌ ஒரு காதல் தரும் இரவு மிக விசித்திரமானது. பூக்களோடு வருகிற உதிரிகள் போல அந்த இரவு முழுக்க ஏகாந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஒரு முறை அவளது கூந்தலை நான் இரவு என வர்ணித்த போது.. அதை கலைப்பதற்கு தான் விடியலின் முன் வெளிச்சச் சுடர்கள் போல உன் விரல்கள் இருக்கின்றனவே என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள். அடிக்கடி சிரிக்காதே. நீ அழகாகிக் கொண்டே போகிறாய் என்கிறேன். என் முன்னந்தலையை மெலிதாக கலைத்து ஓடி விடுகிறாள்.

❤️

பயணம் மீண்டும் தொடர்ந்தது. திருப்பங்களாலும் ஏற்றங்களாலும் நிரம்பிய அந்த மலைச்சாலை வளைந்து நெளிந்த பாம்பின் உடலைப் போல வசீகரமான ஒன்றாக எனக்கு தோன்றியது. அந்த மலைச்சாலை இறுதியில் ஒரு ஏரிக் கரையில் முடிவடைகிறது. தூங்கிக் கொண்டிருந்த அவளை மெதுவாக எழுப்பினேன். கண்களை கசக்கி நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்கிறாள்.என்னால் எளிதாக சொர்க்கத்தில் என்ன சொல்லிவிட முடியும். ஆனால் நான் மௌனமாக கீழே இறங்கு என்று சொல்லிவிட்டு நானும் இறங்கினேன். இருவருக்கும் முன்னால் ஒரு படுத்திருக்கும் யானையை போல ஒரு ஏரி சாய்ந்து கிடந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் யாருமில்லா தருணத்தில் பனி போர்த்திய ஏரியை கண்ணிமைக்காமல் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறாள். “இப்படி ஒரு இடத்திற்கு என்னை அழைத்து வரவேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது” எனக் கேட்கிறாள்.” சில எண்ணங்களுக்கு காரணங்கள் கேட்காதே. நீ என்னுடன் இங்கே வரவேண்டும் என எனக்குத் தோன்றியது. அழைத்து வந்திருக்கிறேன்.” *என் கையில் ஒரு விடியல் இருக்கிறது. அதை இன்னும் சற்று நேரத்தில் என் தேவதைக்கு பரிசளிக்க நான் காத்திருக்கிறேன்” என்கிறேன். இந்த விடியல் போல பரிசுத்தமானது உலகில் ஏதுமில்லை என நான் சொல்லிவிட்டு அவளை பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கியிருந்தன. தன்னை யாருமே இதுவரை இப்படி நேசித்தது இல்லை என நினைக்க வைப்பது தான் காதலின் அதிதீவிர ரசவாதம். பனியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. ஏரிக் கரையில் இருந்த மரங்களிலிருந்து பறவைகளின் சிறகடிப்புகள், கூவல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விடியல் மழைத்துளி மண்ணில் கரைவது போல எங்களுக்குள் கரையத் தொடங்க .. நாங்கள் உருகத் தொடங்கி இருந்தோம். திடீரென என் கழுத்தில் மெல்லிய ஈரம் பதிய … நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டேன். இதைவிட மேலான பரிசை அவளுக்கு நானும், எனக்கு அவளும் அளித்திருக்க முடியாது என்கிற நினைவில் அந்த நிமிடங்கள் உறைந்திருக்க..

விடியத் தொடங்கியிருந்தது.

 

Page 3 of 6

Powered by WordPress & Theme by Anders Norén