பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 4 of 6

காற்றில் கரைந்த கார்த்தி…

 

நினைத்துப் பார்ப்பதற்குள் கார்த்தி காற்றோடு காற்றாய் கலந்து விட்டான்.

அவனை முதன்முதலாக பார்த்த அதே மகாமகக் குளக்கரையில் அவனை இடுகாட்டில் வைத்துவிட்டு வந்து தனியே இந்த அந்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக என்னைச் சுற்றி சூழ்ந்துக் கொண்டிருக்கிற மரணங்கள் என்னை முற்றிலுமாக உருக்குலைத்து போட்டிருக்கின்றன. இரவு நேரங்கள் மிகக் கொடியதாக நீண்டதாக சகிக்க முடியாத துயரம் நிரம்பியதாக மாறிவிட்டன.

என் வாழ்வில் என்னோடு அனைத்திலும் இணைந்து இயங்கியும், ரசித்தும், சிரித்தும், மகிழ்ந்தும், சிந்தித்தும், கலங்கியும் கலந்து இருந்தவன் கார்த்தி. நான் நம்பிக்கையோடு திரும்பிப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் கார்த்தியின் புன்னகை என்னை தொடர்ந்து வந்த நாட்களில் நான் வென்ற வண்ணம் இருந்திருக்கிறேன். எது குறித்தும் இதுவரை நான் அச்சப்பட்டதில்லை. எல்லா இடமும் நான் தொடக்கூடிய உயரத்தில் தான் இருக்கிறது என்று எனக்கு ஒரு உன்மத்தம் உண்டு. ஆனால் ஒரு மரணத்தின் மூலம் அனைத்து சமன்பாடுகளையும் சரித்துப் போட்டுவிட்டு சாய்ந்து விட்டான் கார்த்தி.

எப்போதும் அவன் மேடையில் நின்றதில்லை. திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்தவன் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அந்தப் பொறுப்பை அன்று ஏற்று நடத்திய ஆசைத்தம்பியோடு இணைந்து அனைவருக்கும் இறுதிவரை பரிமாறிக் கொண்டு இருந்தான்.

இறுதிவரை என்றால்.. கார்த்தியைப் பொறுத்தவரை இறுதிவரை தான். நடுவில் ஏதோ காரணம் காட்டி நகர மாட்டான். ஒரு வழியாக அனைவருக்கும் சாப்பாடு போட்டு விட்டு பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு.‌. அவன் வேர்வையும் அழுக்குமாக திரும்பி வந்தபோது என்னிடம் சொன்னது.. சீமான் அண்ணனுக்கு என் கையால் சாப்பாடு போட்டேன் அண்ணா என்று பெருமைப்பட்டுக் கொண்டான்.

அவன் ஒரு முழுமையான சீமான் தம்பி. தத்துவமோ, கொள்கை முடிவுகளோ, அரசியலோ எதுவாக இருந்தாலும் அவனுக்கு அண்ணன் சீமான் சொன்னால் அதுதான் வேதவாக்கு. அண்ணன் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை. அதைக் கூட பழகும் தம்பிகளிடமும் அவன் விதைத்துக் கொண்டே இருப்பான்.

எங்களது கும்பகோணம் நாம் தமிழர் கட்சி எத்தனையோ சரிவு களையும் உயர்வுகளையும் கண்டிருக்கிறது. உடன் இருந்த பலரை இந்த பயணத்தில் நாங்கள் இழந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை நாங்கள் இழப்பிலிருந்து, கட்சியில் அரசியல் வாழ்க்கையில் ஏற்படும் சரிவுகளிலிருந்து மீள் வர துடித்து எழுந்திருக்கிறோம். சரிந்து விழுந்த தருணங்களில் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்துக்கொண்டு மீண்டும் எழுந்து நிற்க துணிவோம். அவ்வாறு நாங்கள் எழுந்து நிற்க துணியும்போதெல்லாம் முதலில் எங்களில் எழுவதற்காக உயரே நீளுகின்ற கை கார்த்தியினுடையது.
எல்லா சரிவிலிருந்து கட்சியை காப்பாற்றி அதை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய ஒரு காலத்தை நோக்கி அழைத்துச் சென்றவன் கார்த்தி.
ஆனால் கொடுங் காலம் எங்களுக்கு இழைத்துவிட்ட இத்தருணத்து சரிவிலிருந்து நாங்கள் எப்படி மீளப் போகிறோம் என்று எங்களுக்கே தெரியவில்லை.

கட்சி தொடங்கிய நாளிலிருந்து.. தனி நபர்கள் மீது.. தனிநபர்கள் சார்ந்து அமைக்கப்படும் அணிகள் மீது.. நம்பிக்கையற்று அண்ணன் சீமானின் சொல் எங்கே இருக்கிறதோ அங்கே இருந்தவன் கார்த்தி. நான் இங்கே இருக்கும் யாரையும் பார்த்து கட்சிக்கு வந்தவன் அல்ல அண்ணா.. நான் சீமான் அண்ணனைப் பார்த்து வந்தவன். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கே நான் இருப்பேன் என்று தனது நிலைப்பாட்டை நிர்ணயித்து உறுதிப்படுத்திக் கொண்டவன் கார்த்தி.

நிறைய என்னோடு பயணித்து இருக்கிறான். என்னிடம் கேட்டு கேட்டு ரசனைகளை உருவாக்கிக் கொள்வான். மகேந்திரன் படங்களாக பார்த்து கொண்டு இருக்கிறேன் அண்ணா.. ஒருநாள் அவன் என்னிடம் சொன்ன போது ஆச்சரியமாக பார்த்தேன். கண் சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் வந்தாளே அல்லிப்பூ என்ற பாட்டைப் பற்றி சிலாகித்து ஒருநாள் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் எங்கோ அந்தப்பாடலை தேடி எடுத்து தேர்ந்த ஒலித் தரத்தில் மறுபதிப்பு செய்து எனக்கு வந்து பரிசளித்துவிட்டு போனான்.

புது வீடு கட்டினான். கனவு போல ஒரு வாழ்க்கையை அமைக்க உழைத்துக் கொண்டிருந்தான். எல்லோருடனும் கூடி வாழ ஒரு வாழ்க்கை.. மகிழ்வாக, அர்த்தமுள்ளதாக.. உருவாக்க ஓடிக்கொண்டிருந்தான். வெண்மை நிறமுள்ள அந்த வீடு இவ்வளவு சீக்கிரம் இருள் அடைந்து போகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவனுடன் பழகிய பல பேரை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறான். அவரில் பல பேருக்கு பிழைக்க ஏதோ ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கிறான்.
பார்ப்போரை எல்லாம் நாம் தமிழர் ஆக மாற்ற இடைவிடாது முயற்சிகள் செய்து கொண்டே இருப்பான்.

இன்று இடுகாட்டில் அவனது உடல் தகனம் செய்ய வைக்கப்பட்ட பொழுதில்… கட்சி முறைப்படி நாங்கள் அகவணக்கம் வீரவணக்கம் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். எங்கள் அனைவரின் மனதிற்குள்ளும் தாங்க முடியாத வலியும்.. எதிர்காலம் குறித்த இனம் புரியாத பயமும் நிறைந்திருந்தன. எங்கள் கண்கள் நீரால் நிறைந்திருந்த அப்பொழுதில்.. நாங்கள் ஒருவருக்கொருவர் கைகளை இறுக்க பற்றிக் கொண்டோம்‌ . அந்த உறுதியில் கார்த்தி இன்னும் உயிரோடு இருக்கிறான் என நாங்கள் நம்பத் தொடங்கிவிட்டோம்.

அவன் இல்லாத அரசியல் வாழ்வு ஒன்றை நாங்கள் அனைவரும் வாழ்ந்துதான் ஆகவேண்டும். இனி ஏதாவது ஒன்றென்றால் அலைபேசியில் அனிச்சையாக அவன் பெயரை தொடும் எனது விரல்கள் தட்டுத்தடுமாறி பழகிக்கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும்.

இப்போதைக்கு அவன் நினைவுகள் மட்டும் தான் எங்கள் அனைவரின் மனதிலும் ததும்பிக் கொண்டே இருக்கிறது.

அதைத் தாண்டி ஏதாவது யோசித்தால்..

வெறும் இருட்டு.. இருட்டைத் தவிர வேறு எதுவும் இல்லை.

மறக்க முடியா மாமாலை.

 

என் வாழ்வில் நேற்று மாலை தான் ( ஆகஸ்ல் 25/ 2019)அவரை முதன்முதலில் நேரில் பார்த்தேன்.

பிறந்தது முதல் இருந்த வாழ்நாள் கனவு அது.

அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன். சிலிர்த்திருக்கிறேன். தனியே அழுதிருக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் மௌனமாய் இருந்திருக்கிறேன்.

ஒரு இசை இப்படியெல்லாம் வேதியியல் மாற்றம் செய்யுமா .. என்றெல்லாம் வியந்திருக்கிறேன்.

என் வாழ்வினை பற்றி யாராவது கேட்டால்.. நான் இளையராஜா பாடல்களை வைத்துதான் என் வாழ்வினை ஒரு பிளாஷ்பேக் போல சொல்ல முடியும்.

இந்த பாடலை கேட்டு கொண்டு செல்லும்போதுதான் நான் பள்ளியில் சேர்ந்தேன். அந்தப் பாடல் திருவிழாவில் ஒலித்துக் கொண்டிருக்கும் போது..நான் விளையாடப் போக முடியாமல் என் அம்மா மடியில் படுத்து இருந்தேன். இந்தப் பாடல் ஒலிக்கும்போதுதான் என் கல்லூரிக்கு செல்ல முதன்முதலாக கிளம்பிக் கொண்டிருந்தேன். என் மகன் பிறந்த பின்னர் நான் உடனே செய்த வேலை இந்த பாடலை கேட்டது தான்.

 

 

எங்கோ தேனீர் கடையில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது தான் அவளை சந்தித்தேன். அவளை ஒரு பேருந்து நிலையத்தில் நிரந்தரமாக பிரிந்து வரும் வேளையில் ஒரு பேருந்தில் இந்த பாடல்தான் ஒலித்துக் கொண்டிருந்தது. என் திருமணத்திற்கு முந்தைய தின இரவில் இந்த பாடலை கேட்டு தான் அழுது கொண்டிருந்தேன்.
என் மனைவியின் முதல் பிறந்த நாளில் இந்தப் பாடலோடுதான் அவளுக்கு வாழ்த்து சொன்னேன்.

சரிந்து விழுந்த தருணத்தில் என்னை நேசித்தவர்களோடு இணைந்து அப்பாவும் அம்மாவும் என்னை நிமிர்த்த முயன்ற கணங்களில்.. இந்தப் பாடலை தான் கேட்டுக்கொண்டு இருந்தேன்.

நள்ளிரவு களில், பயணங்களில், காலை பொழுதுகளில், மாலை மயக்கங்களில், மதிய தனிமைகளில் எப்போதும் அவரது பாடல்கள்தான் என்னோடு இருக்கின்றன.

இப்படி என்னைச் சுற்றி எங்கும் அவரது பாடல்கள்தான்.

அப்படிப்பட்ட என் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிற அவரைத்தான் நேற்று முதன்முதலாகக் கண்டேன்.

கண்டவுடன் ஒரு கடவுளை நேரில் பார்த்த பரவசம். அது ஒரு மெய் மறந்து உலகம் மறந்து கண்கலங்கி சிலிர்த்த சூழல்.

அவரைச் சுற்றி அவராகவே போர்த்திக் கொண்ட ஆன்மீக போர்வைகளை எல்லாம் தாண்டி..

அவரைச்சுற்றி அவரின் அனுமதியோடு நிகழ்ந்த ஆச்சார்ய அரசியலை எல்லாம் தாண்டி..

நேர்மையாக சொல்வதென்றால்.. எனக்கு பிடிக்கவே பிடிக்காத எதிர் நிலைகளில் அவர் நின்றிருந்த நிலைகளை எல்லாம் தாண்டி…

உண்மையில்.. அவர் என்னை மட்டுமல்ல.. அங்கு கூடியிருந்த அனைவரையும் ஆட்கொண்டார்.

அந்த இசை தான் அவரை நோக்கி என்னை ஈர்த்தது. அதை அவர் பாகுபாடில்லாமல் ஒரு அருவி போல கொட்டித் தீர்த்தார்.

மற்றபடி அவரிடம் நான் அரசியலை எதிர்பார்த்து செல்லவில்லை. அவர் வைத்திருக்கிற அரசியலும் எனக்கு உவப்பானது இல்லை.

எது வேண்டினேனோ அது கிடைத்தது.

 

இந்த அருமையான வாய்ப்பினை எங்களுக்கு ஏற்படுத்தி தந்த நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை மாநிலச் செயலாளர் அருமை நண்பர் அரிமா நாதன் Arima nathan அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. உண்மையில் அவர் செய்த உதவி அவரை எங்கள் வாழ்வின் மறக்கமுடியாத ஒரு மனிதராக மாற்றிவிட்டது. இனி நான் இளையராஜாவை பற்றி யோசிக்கும் போதெல்லாம்.. உண்மையாக
அரிமாநாதனும் நினைவுக்கு வருவார். நன்றி தலைவா.

பிறகு.

காடு மலை மேடு பள்ளம் மாடி உயரம் உச்சம் என நான் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம்.. சுமையென கருதாது வாழ்வின் சுவை என கருதி நிறைவான மகிழ்வோடும், கொண்டாட்டங்களோடும் என்னை சுமந்து செல்லும் என்னுயிர் தம்பிகளான ஆசை துரை துருவன் சாரதி உள்ளிட்ட அனைவருக்கும்.. நான் என்ன தனியே நன்றி சொல்வது..

அவர்களாலேயே நான்.

நேற்றைய தினம் மாலை போல.. ஒரு மழை பெய்த இசை மாலை இனி ஒரு முறை என் வாழ்வில் வாய்க்குமா என ஏங்க வைத்ததுதான் இளையராஜா என்ற அமிர்தத்தின் நிறை தளும்பலில் கூட நின்றாடும் போதாமை.

மீரா-பாக்கியராசனின் மணநாள் வாழ்த்து 27-01-2019

எப்போதும் தன்னை சூழ வரும் வன்ம வெறுப்பின் கழுகுகளை
சட்டென பறந்து பின்மாயும் சிறு ஈசல்களாக மாற்றி ரசிக்கும்
ஒரு விசித்திரக்காரனின் காதற் கதை இது.
————————–—–

எவராலும் வெல்ல முடியாத
அவனது புன்னகைக்குப் பின்னால் ஒரு தேவதையின் காதல் நம்பிக்கையாக மின்னுகிறது.

சுற்றி வீசும் சொற்களின் அவதூற்று சூறைகாற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கும் அவனது அசாத்திய மனத்துணிவு, கனிவு மிக்க அவன் துணையின் தாய்மைக் கரங்களால் தயார் செய்யப்பட்டது.

அவள் அவனை தன் பேரன்பு கவசங்களால் போர்த்திக் களத்திற்கு
அனுப்புகிறாள்.

அவனோ தன்னை நோக்கி வரும் பொய்மையின் அம்புகளை தன் சிறு
புன்னகையால் தகர்த்து விடுகிறான்‌.

அவனது மகத்தான செயல்களுக்கும்,வசீகரப் புன்னகைகளுக்கும் பின்னால் அந்த மாதேவியின் தீரா உடனிருப்பு துணையெழுத்தாக தொடர்கிறது..

அந்த உயிர் எழுத்தின் வலிமையில் தான் அனைத்திற்கும் முகம் கொடுக்கிற ஆயுத எழுத்தாக அவன் மாறி நிற்கிறான்.

…….
…….
…….
எகிறி வரும் எல்லா வித சொற்களுக்கும் பதிலாய் பத்துக்கு நூறு மடங்காய் எதிர் வினை ஆற்றி விடலாம் தான்.. ஆனாலும் ஒரு நிதானம். ஒரு கண நேர அமைதி. பிறகு ஒரு புன்னகையோடு கிளம்பி விடுகிற எங்களது அசாத்தியங்களுக்கு பின்னால் தகர்க்கவே முடியாத ஆதி நேசப் பசுங் கொடிகள் நினைவுகளாய் போர்த்தி இருக்கிற ஒரு வனக் கோட்டை இருக்கிறது.

அந்த அரண்மனையின் மாதரசி, எம் சோழர்க்குல இளவரசி, என் தங்கை Meera Packiarajan க்கும், என் மைத்துனர் தலPackiarajan Sethuramalingam க்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

 — with Meera Packiarajan.

துருவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

 

 

ஒவ்வொரு மனிதனுக்கும் பெரிய ஆசையாக எது இருக்கக்கூடும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?

அவனுக்கென்று சில வசந்த காலங்கள் இருந்திருக்கக்கூடும். வாலிபத்தின் மஞ்சள் பூவாக அவன் மலர்ந்து நிற்கையில்.. அவனது இளமையின் மகரந்தத்தாளை ஒட்டி உரச ஒரு வண்ணத்துப்பூச்சி வந்து போயிருக்கக்கூடும். கண்கள் முழுக்க கனவோடு, நெஞ்சம் முழுக்க இசையோடு , இதயம் முழுக்க கவிதையோடு, திரிந்த அந்த நிலா காலத்திற்குத்தான் ஒவ்வொரு மனிதனும் திரும்ப ஆசைப்படுவான்.

ஏனெனில் அதுதான் அவனாகவே அவனை உணர்ந்து மகிழ்ந்து திரிந்த காலம். அசலாக நின்ற காலம். எவ்விதமான பூடகமும் இன்றி நிஜத்தின் அருகே நின்ற காலம் ‌.

ஏனெனில் ..அந்தக் காலம் தான் அவன்.

அப்படி நான் எனது கடந்த காலத்திற்குள் என்னை கடத்தி போகச் செல்ல விரும்பும் போதெல்லாம் எதிரே துருவன் நிற்பான்.

நான் எவ்வாறெல்லாம் இருந்தேனோ ,திரிந்தேனோ உணர்ந்தேனோ,. அதேபோல அதே லயத்தோடு..அதே தாளகதியில் அவனும் திரிகிறான்.

இந்த அலைவரிசை ஓர்மைதான் அவனுக்குள் என்னையும்.. எனக்குள் அவனையும் …ஒருங்கே பொருத்தி வைத்தது.

என் இளமைக்கால பெரும் கிளர்ச்சியின் நிகழ் வடிவம் அவன். எனவேதான் அவன் எப்போதும் என் இதயத்திற்கு அருகில் இருக்கின்ற இனிப்பாகிறான்.

எதிலும் கிளர்ச்சியின் உச்சம் தேடுகிற ஆகப்பெரும் கலகக்காரனாக தன்னை வடிவமைத்துக் கொள்வதில் அவன் ஒரு தேர்ந்த இசைஞன்.

யாராலும் நினைத்தே பார்க்க முடியாத வடிவங்களில் தன்னை தகவமைத்து ஒழுங்கமைத்துக் கொண்டே வருகிறான்.

எந்த உச்சத்தையும் ஒரு நொடியில் இழக்க துணிவான்.. அடுத்த நொடியில் அதைத் தாண்டி பறக்க முயல்வான்..

பறந்தும் விடுவான்.

பல சிகரங்களின் நுனி தொட.. பெரும் பசி கொண்ட ஒரு வேட்டை கழுகு போல அவன் அமைதியாக காத்திருக்கிறான்.

அந்த சிகரங்களும் இவன் சிறகுகளின் நிழல் தீண்ட சிலிர்த்து காத்திருக்கின்றன.

அந்த சில கணங்களுக்காக.. அவன் தோள் பிடித்து நிற்கின்ற நானும் காத்திருக்கிறேன்.

அவனுக்கென பிரத்தியேகமான வாழ்த்துக்கள் எதுவும் தேவையில்லை என்னிடத்திலிருந்து..

அவன் நன்றாகத்தான் இருப்பான்.

இந்த வாழ்வை வேட்கையும் ருசியும் நிரம்பிய ஒரு கள்ளாக கருதி அவன் அருந்தியே தீருவான்.

அவன் அடிக்கடி சொல்லும் ஒரு சொல்..

தட்டித் தூக்கிடணும் குருநாதா..

தட்டி தூக்குடா ‌..

இளையராஜா என்கிற கால இயந்திரம்.

 

 

சன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா.

எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்ட பொழுதுகள் என் நினைவுகளில் நின்றாடுகின்றன..

ஆதி தாய் கிராமத்திற்கு திரும்பிய ஒரு ஊர் சுற்றி போல .. இளையராஜா பாடல்கள் என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. அந்தப் பாடல்களின் கரம்பிடித்து ஒரு கை குழந்தை போல நான் நினைவின் வீதிகளில் அலைந்து கொண்டே இருக்கிறேன்.

என் வாழ்க்கையின் விசித்திரப்புள்ளிகளை நான் இளையராஜாவின் இசை கொண்டே கோர்த்து முடிக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கத்தா விமான நிலையத்தில் சென்னை வரும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நொடியில் என் கண் முன்னால் தெரிந்த அனைத்து காட்சிகளும் மறைந்துவிட்டன. அந்நொடியில் நான் இளமையில் வசித்த மன்னார்குடியில் இருந்தேன். மன்னார்குடியில் நான் வசித்து வந்த ஹவுசிங் யூனிட் வீட்டில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு மழை பொழுதொன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டின் சமையலறையில் என் அம்மா சமைத்துக் கொண்டிருந்த உணவின் வாசனையைக் கூட அந்த நொடியில் நான் உணர்ந்தேன். ஒரு நுட்பமான பேரனுபவம் அது. சிறு சிறு அசைவுகளையும் கூட உணர்கிற கடந்த காலத்தை நோக்கிய விசித்திர பயணம் அது.

அந்தப் பாடல் முடிவடைந்த பிறகே நான் கல்கத்தா திரும்பினேன்.

இளையராஜாவின் பாடல்கள் பயணிப்பது என்பது திக்குத் தெரியாத காட்டில் கண் தெரியாத ஒருவன் மாட்டிக்கொண்ட திகைப்பினையும், பொங்கி பிராவகித்து பொத்துக்கொண்டு ஊற்றுகிற அருவி ஒன்றில் தலை நுழைத்து மெய் நனைத்து அடைகிற சிலிர்ப்பினையும் ஒருங்கே அடைகிற அனுபவமாக.. கால நகர்வுகளை கடந்த ஒரு பயணமாகவே நான் கருதுகிறேன்.

அவருடைய இசைக்கு எந்த பாடகரின் உதவியும் அவருக்கு தேவைப்பட்டது இல்லை. சொல்லப்போனால் வரிகள் கூட இரண்டாம் பட்சம் தான். அவர் நம் ஆன்மாவின் மொழி அறிந்து அதன் அலைவரிசைக்கு ஏற்ப ஒருங்கிணையும் வித்தைக்காரர்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்..

காதுள்ளவன் கேட்கக் கடவன். உணர்வுள்ளவன் உருகக் கடவன். மனது உள்ளவன் மயங்கக் கடவன்..

இளையராஜாவை உணர்பவன் இந்த மூன்றையும் எளிதாக அடையக் கடவன்.

*****தனி ஒருவன்******

நீ அந்தியின்
கரைகளில்
நின்று கொண்டு 
வெளிச்சங்களை
தன்னுள்
புதைத்தவனைப்
பற்றி புறம் பேசுகிறாய்..

முதுகில் குத்தும்
கத்தி ஒன்றை
கொண்டு
உலகை
உள்ளத்தால்
வென்றவன் ஒருவனை
எளிதாக வெல்ல
முயல்கிறாய்..

உன்னால்
புனையப்படும்
பொய்மையின்
தோற்றங்களின்
எல்லைகளுக்கு
அப்பால் நிற்கிற
பேரன் பின்
ஆதிச்சுழியை
அவதூறு பேசுகிறாய்..

அவன்
ரதகஜபடைகளோடு
களத்திலே நிற்கிறான்..
நீ வெறும்
வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்துக் கொண்டு
அவனை வென்று விட்டதாக
வாயை மெல்கிறாய்…

அவன் காற்றின்
அலைவரிசை கோர்த்து
புத்தம் இசையை
புவி மலர இசைப்பவன்.

நீயோ முனக கூட
அடுத்தவனை எட்டிப்
பார்த்து நகல் செய்யும்
போலிகளின் போதாமை
புலிகேசி.

நீ ஏதேனும்
ஒரு சந்தில்
4 திருடர்களோடு
அவனைக்
கொள்ளையடிக்க
குழுமிய போது…
அவன் யுகத்தின்
சரித்திரத்தை
தன் புன்னகைத்
தூரிகையால் எழுதிக்
கொண்டிருக்கிறான்..

அவன் தனித்தவன்
என்றெண்ணி
அவன் நிழலை
உன் குரைப்பினால்
சீண்ட முனைந்தப்
போது…
அவன் புலிகளின்
கூட்டத்தின் நடுவே
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கிறான்..

அவனை வெல்ல
வேண்டுமெனில்..

ஒரே ஒரு வாய்ப்பு

நீ நிகரற்ற
அவனாகத்தான்
பிறக்க வேண்டும்.

ஏனெனில்..
அவனை மிஞ்ச
அவனாகத்தான்
ஆக வேண்டும்..

சொல்ல முடியாதவைகளின் சொற்கள்..

 

 

 

யாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா…

சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய் மடி வாசம் போல சில உணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனது ஆகச்சிறந்தவனுக்காக…

ஏனெனில் அவன் ஒரு விசித்திரன். சொற்களின் சூட்சமங்களுக்குள் அவ்வளவு எளிதாக அகப்படாதவன். அவன் செவியோடு பிறந்த அலைபேசியும் .. எப்போதும் முகத்தோடு தங்கிய புன்னகையும்.. மட்டும் தான் அவன் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். கரும் பசுமை போர்த்திய நேச வனமொன்று அவனுள் உண்டு. உற்சாக மலையில் இருந்து கொட்டும் களங்கமற்ற களிப்பின் மலையருவியும் அவனுள் உண்டு.

அவன் எனது மீட்பர். நான் புதைகுழிகளில் விழுந்து இருக்கிறேன். காலத்தின் கோர இருளில் கரைந்து இருக்கிறேன். பலவீனங்களின் உச்சத்தில் நின்று பயந்து இருக்கிறேன். அதே நேரம் பரவசமும் பட்டிருக்கிறேன். எதனாலும் நிறைவுறாத கொந்தளிப்பு மனநிலை உடைய என்னைப்போன்ற ஒருவனை அருகிலேயே கொண்டிருப்பது மாபெரும் சாபம்தான்.

அந்த சாபம் கொண்ட ஒருவனைத்தான்.. இந்த இரவில் நான் நன்றியோடு கண்கள் கசிய நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த உலகமே என்னைக் கைவிட்ட போது… உற்றார் உறவினர்.. நண்பர்கள் ,நம்பி நின்றோர் ..என அனைவரும் என் கரங்களை காற்றிலே நிராதரவாய் அலையவிட்டு.. துரோகச் சூடுகளால் உயிர் ஆவியாக தவிக்கவிட்டு இவன் தனித்தவன், அதனாலேயே இறந்தவன் என ஊர் உலகத்துக்கு அறிவித்து விட்டு அகன்ற பிறகு..

அவன் பேரன்பின் மெழுகுவர்த்தி யோடு… நம்பிக்கை தென்றலை கையில் பிடித்துக் கொண்டு நான் புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்குள் நுழைந்தான். நிராசைகளால் நானே கட்டிக்கொண்ட அந்தப் புதைமேட்டிலிருந்து என்னைத் தோண்டி எடுத்தான்.விழிகளுக்கு ஒளியூட்டினான்.

நான் இறந்து விட்டேன் என்றேன். நீ பிறந்திருக்கிறாய் என்றான் .

இதுதான் அவன்.

என் விழிகளில் படிந்திருந்த கடந்த கால மயக்கங்களை ..அர்த்தமற்ற குருட்டுத்தனங்களை .. அகற்றி முன் செல்ல என் பாதைகளில் முளைக்கத் துடித்த முட்களை அகற்றியவன்.

சொல்லப்போனால் இன்று என் முகத்தில் உயிர்த்திருக்கும் புன்னகைக்கு அவனே காரணமானவன்.

பைபிளில் ஒரு வசனம் வரும்

நீங்கள் பிரார்த்தனையை கைவிடாது இருங்கள். இறைவன் உங்களை கைவிடாது இருப்பார்.

இறைவன் கைவிடுகிற பொழுதுகளும் மனித வாழ்க்கையில் உண்டு. பிராத்தனைகளும் தவறுகிற பொழுதுகள் உண்டு அப்போதும் கூட நம்மை கைவிடாது நடுங்கும் நம் விரல்களை பற்றிக் கொள்கிற அளவற்ற அன்பின் விரல்கள் அவனுடையது.

இதையெல்லாம் படிக்கும் உங்களுக்கு அவனோடு பழக ஆசை பிறப்பது இயல்புதான்.

நீங்களும் பழகலாம். எப்போதுமே மூடப்படாத கதவுகள் கொண்ட இதயம் கொண்ட அவனோடு ..நட்பின் கதகதப்பு மினுக்குகிற விழிகள் கொண்ட அவனோடு…

நீங்களும் பழகலாம்.

ஆனால் அவனை உயிருக்குள் வைத்து உணர ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் மணி செந்திலாகத்தான் பிறக்க வேண்டும்.

அப்படி சக உயிரை மாசற்ற அன்பின் வெப்பத்தினால் உருக்கி விழி கசிய உணர வைக்கவும் ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் சே.பாக்கியராசனாகத்தான் பிறக்க வேண்டும்.
………..

நான் என் தங்கை மீராவோடு , என் மருமகள் அகநகையோடு.. இன்னும் என் இளைய மைத்துனர் பிரபுவோடு மற்றும் … மதுரையில் இருக்கும் எங்கள் அம்மா அப்பாவோடு.. எங்கள் குடும்பத்தோடு..

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் உயிராக நேசிக்கும் அண்ணன் சீமானோடு…

நாங்கள் கொண்டாடிக் கொள்ள.. எங்களை நினைத்து நாங்களே பெருமைப்பட்டுக் கொள்ள.. எங்களுக்கு பொதுமையாக இருக்கும் மகத்தான காரணம்…

நாங்கள் அவனோடு இருக்கிறோம். அவனோடு வாழ்கிறோம்.

………..

இன்னமும் எழுத நிறைய இருக்கிறது. நன்றியோடு அழுது தீர்க்க கண்ணீர் இருக்கிறது. உணர்ச்சி ததும்ப கலங்கியவாறே கட்டித்தழுவ தோள்கள் இருக்கின்றன. கைகோர்த்து பயணிக்க பயணங்கள் இருக்கின்றன. சேர்ந்திசைக் குரலில் முழங்க முழக்கங்கள் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் விவரிக்க சொற்கள்தான் இல்லை.

வாழ வாழ்க்கை இருக்கிறது.

வாழ்வோம் தல..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நிலாக்காலம்..

 

நாங்கள் ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்.

உண்மையாகவே
எங்கள் ஆத்தா
அந்த
நிலாவில் தான்
வடை சுட்டார்..

எப்போதும் வெளிச்சம்
இருக்கிற நிலாவில்
நாங்கள் பகலிரவு
தெரியாமல்
வளர்ந்தோம்.

பிணைக்கப்பட்ட
விரல்களோடும்..
எங்களை சுமந்த
7 தோள்களில் தான்
நாங்கள் முதற்
கனவு கண்டோம்.

நம்ப மாட்டீர்கள்.

அந்த கனவிலும்
நிலா வந்தது.
..

நம்ப மாட்டீர்கள்.
நாங்கள் கூட
நம்ப முடியாமல்
தவிக்கிறோம்..

ஆம்.
நாங்கள்
ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்

————–

அன்பின் சூட்டினால்..
நினைவுகளை கிளறிய
Jayaprakash Raj க்கு.

ராஜீவ்- உள்ளொளி கொண்ட மானுடன்.

 

 

 

அன்றொரு நாள் சன் தொலைக்காட்சியில் படித்த செய்தி ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது

ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜீவ்காந்தி போட்டி.

ஈழ அழிவு உச்சத்தில் இருந்தபோது நம் இனத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசிற்கு ஆயுதம் கொடுத்து ஆலோசனை கொடுத்து எல்லாமுமாய் இருந்த இந்திய ஏகாதிபத்திய அரசிற்கு பாடம் புகட்ட கல்லூரி மாணவர்கள் தமிழ் இன உணர்வாளர்கள் உள்ளிட்டோர் முடிவெடுத்தார்கள். ஒரு தமிழனாய் பிறந்து தமிழின அழிப்புக்கு துணை போகிற இந்தியாவின் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தோற்கடிக்க ஒரு ஆயுதத்தை அவர்கள் கண்டெடுத்தார்கள்.

அதன் பெயர் ராஜீவ் காந்தி. அந்த ராஜீவ் காந்தி ….ராஜீவ் காந்தியைக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க போராடும் என பெயர் வைத்த போது எங்கள் தந்தையார் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

தம்பி அருண் ஷோரி மூலமாய் அவனை என் அலைபேசியில் பிடித்தேன். சிக்கன மொழி. மெல்லிய குரல். தோழர் என்ற அறிவுஜீவி உரையாடல்.

.

பிறிதொரு நாள் மதுரையில் அண்ணன் சீமான் நடத்திய அறுத்தெறிவோம் வாரீர் என்ற நிகழ்வின் மேடையில் மெல்லிய உருவமாய் ஏறக்குறைய சிறுவனாய் ஓடியாடி கொண்டிருந்த அவனை மீண்டும் சந்தித்தேன். தோழனாய் அறிமுகமானவன் தம்பியாகி இருந்தான்.

எனது மனைவி ஊர் திருமயம் . சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. இதைச் சொல்லி அவனிடம் …தம்பி உன் அண்ணிகிட்ட சொல்லி இருந்தேன் அவ கூட உனக்கு தான் ஓட்டு போட்டாளாம்.

அட போங்கண்ணே ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்களே.. கண்ணப்பனுக்கு ல ஓட்டு போட்டு இருக்கணும். என்று சிரித்தவாறு சொன்ன அவனை குழப்பமாக பார்த்தேன்.

அது ஒரு மாய சிரிப்பு. கண்கள் மினுக்கும் பூக்கும் புன்னகை.வேறெங்கும் காண முடியாத அந்த முகத்திற்கே உரிய வசீகர தனித்துவம்.

அண்ணா.. நான் வெல்ல தேர்தலில் நிற்கவில்லை. ப.சிதம்பரத்தை தோற்கடிக்கவே நான் தேர்தலில் நின்றேன். போங்கண்ணே…ஒரு ஓட்டை வீணாக்கிட்டீங்க. என்று சொன்ன அவனை யாராலும் விரும்பாமல் இருக்க முடியாது.

ஏறக்குறைய ஒரு கரும்புலிக்கான மனநிலை அது. இன அழிவு அவனை
உன்மத்தனாக ஆகியிருந்தது. விழிகளில் கனலேறி இருந்தது. மொழிகளில் அனல் ஏற்றி மேடையிலே கொட்டத் தொடங்கினான். புதுக்கோட்டை பாவாணன் போல உணர்ச்சி மொழி. மறைந்த அறிஞர் வலம்புரிஜான் போல வார்த்தைகளின் ஊடே வரிசையில் வரும் புள்ளிவிபரங்கள்.
அறிவும் , உணர்ச்சியும் ஒரே புள்ளியில் இணைகிற அதிசயக்காரன் அவன் தான்.

இப்படியாக ராஜீவ். என்னுள் நுழைந்தான்.

…….

கட்சி மேடையிலேயே அடுக்குமொழி வசனத்தோடு தொடர்ச்சியான முடிவுறாத வாக்கியங்களோடு ஆவேச மொழி மழை பொழியும்.. வழக்கறிஞர் அறிவுச்செல்வன் எல்லோருக்கும் அறிமுகமானவன்.

எனக்குத் தெரிய இன்னொருவன் இருந்தான். ஒரு மழைக்காலத்தில் தேநீரோடு புலர் காலைப் பொழுதை தொடங்கி பிடித்த புத்தகத்தின் வாசிப்பு மயக்கத்தில் கிறங்கி… அலையலையாய் வருகின்ற அலைபேசியை அணைத்து போட்டுவிட்டு… தலையணையை அணைத்து கிடக்கிற ராஜீவ் என்கிற வாசிப்புக் காரனை எனக்குத் தெரியும்.

எளிய சுமையோடு.. கண்கள் மின்ன ..கால்கள் கடுக்க.. தன்னந்தனியாய் வனாந்தரங்களில் சுற்றியலைந்து ..சிகரங்களில் ஏறி , நிலவை ரசித்து.. சட்டென எதிர்படும் அருவியில் தலையை நுழைத்து..
கூழாங்கற்களை தழுவி ஓடும் நதிக்கரைகளில் கால்களை நனைத்து..
இயற்கையை பனிக்கால கதகதப்பு தேநீராய் பருகும் ராஜீவை நான் அறிவேன்.

இந்த அலைகழிக்கும் வாழ்க்கை பொழுதுகளிலிருந்து சட்டென ஒரு நொடியில் தன்னை துண்டித்துக் கொண்டு..
அலைபேசி அலைவரிசையில் சிக்காமல்.. யாருக்கும் அகப்படாமல் துறவியின் மனநிலையோடு ஏரிக்கரைகளில் சுற்றித் திரியும் ராஜீவை நான் அறிவேன்.

ஏதோ ஒரு வறண்ட நாளில்.. நீர் பார்த்து வருடங்கள் ஆன அந்த ராமநாதபுரத்தின் காய்ந்த குட்டை ஒன்றில் பச்சை தேடி அலையும் ஆட்டு மந்தை ஊடே தானும் ஒரு ஆடாய் ..நம்பிக்கைகளோடு நகரும் அந்த கீதாரி ராஜீவை நான் அறிவேன்.

…..

திடிரென ஒரு நாள் அவனிடம் இருந்து அலைபேசி வரும். மகிழ்ச்சியோ துக்கமோ வலியோ, கோபமோ ,எதுவாக இருந்தாலும் முதலில் பகிரப்படும் மனிதனாக.. அவன் என்னை வைத்திருந்தான். இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டு இருப்பான். படித்த புத்தகங்களை, பார்த்த திரைப்படத்தை என நீளூம் அந்த உரையாடல் எப்போதும் முடிவுறாத திருப்தியின்மையை முடிவாக கொண்டது. பேசி அலுக்காத காதலர்களைப் போல நாங்கள் மாறி இருந்தோம். உச்ச மகிழ்ச்சியில் உண்மையாக அவன் சொல்வான் என் மனைவியை விட ..ஏன் இந்த உலகத்தில் இருக்கின்ற எல்லாரையும் விட ..உன்னை தான் அதிகம் நேசிக்கிறேன் அண்ணா ..

இந்த நேசிப்புக்கு நான் நேர்மை செய்திருக்கிறேனா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் அவனது அன்பு மாசு மருவில்லாத புனிதம்.

அதுதான் ராஜீவ். என்னிடம் உள்ள பிரச்சனையை மிக நேர்மையாக கண்டறிந்தவன் அவன். முடிவில் தெளிவாக சொன்னான் ‌. கடந்துப்போக கற்றுக் கொள்.
…just go ahead.

இன்னொருமுறை சொன்னான் எல்லாவற்றிற்கும்.. எப்போதும் அழுது கொண்டே இருக்க முடியாது என. அப்போது எனக்கு ஒரு புத்தகத்தை பரிசளித்தான் . வையத் தலைமைகொள்.

வசந்தத்தை மட்டுமே பரிசளித்துக் கொண்டு.. வரங்களை மட்டுமே வாரி இறைத்துக்கொண்டு.. எப்போதும் பசுமையாய் ஒளிர வாழ்க்கை ஒன்றும் தேவதைகளின் முகத்தில் மின்னும் விழிகள் அல்ல. அது சாத்தானின் பாம்பு.
வசீகரமானது தான் .ஆனால் வலிக்கக்கூடியது. அழகானதுதான். ஆனால் அழிக்கக்கூடியது. எனவேதான் பூமியில் எது நடந்தாலும் அதை உயரத்திலிருந்து கவனித்து விட்டு .அனைத்தையும் அலட்சியமாக கடக்கின்ற மேகம் போல ஒரு மனநிலை தேவைப்படுகிறது. இந்த மனநிலை சாதாரணமாக வாய்க்கக்கூடியது அல்ல. அது அருகிலிருந்து நமது தோளைப் பற்றிக்கொள்ளும் விரல்களின் அன்பிலும் நம்பிக்கையிலும் பூப்பது.

அப்படி ஒரு பூத்தலை தான் ராஜீவ் என்னுள் நிகழ்த்தினான். ஒரு பெரு மழைக் காலம் முடிந்து வரும் அமைதி போல வாழ்வில் அலைக்கழிக்கப்பட்டு தடுமாறி கீழே விழுந்து.. பிறகு எழுந்து.. அலைந்து திரிந்து ஒரு நிதானத்திற்கு வரும் போது உள்ளுக்குள்ளாகவே ஊறும் ஒரு அமைதி ..
போல.. நிதானமானவன் ராஜீவ்..
எனக்கு நிரந்தரமானவன்.
.
இந்த வானவில் யுகத்தின் வல்லாண்மை பேரரசர்கள் நாம். நம் முன்னால் நுரையோடு கொப்பளித்து கொண்டு இருக்கிற வாழ்வெனும் அமுதத்தை நம் அன்பெனும் வைர கோப்பைக் கொண்டு பருகி தீர்ப்போம்.பருகிய அலுப்புத் தீர ஆதி வனம் தேடி பெரும் பயணம் போவோம். காற்றாய் திரிவோம். கடலாய் மிதப்போம்.

சியர்ஸ் ராஜீவ்.

எனது ஆகச் சிறந்த ஆனந்த் …

 

 

நான் தனித்தவன் என்கிற என் குறை உணர்ச்சியை,தாழ்வு மனப்பான்மையை தணித்தவன். என் தாய் தந்தையருக்கு அடுத்து என்னை அதிகம் சுமப்பவன். என் நிழலையும் தாண்டி என்னோடு நெருங்கி இருப்பவன். அவனின்றி எனக்கு எதுவுமில்லை. அவனை மிஞ்சியும் எனக்கு எதுவுமில்லை.

நான் இவ்வாழ்வில் அடைந்த மிகப் பெரிய சொத்து… அவன் தான். நான் சம்பாதித்த உச்சபட்ச தொகையும் அவன் தான்..

நான் தடுமாறிய பொழுதுகளில்.. என்னை பாதுகாத்து என்னை ஆற்றுப்படுத்தினான். என் காயங்களை பிறர் அறியாமல்..பிறர் தீண்டாமல் மூடி வைத்தான். நான் ஒரு நிதானத்திற்கு வரும் வரை உடனிருந்து அமைதியாய் என்னை காத்து நின்றான்.மீண்டும் நிமிர அவனே கரம் நீட்டினான்.

நடக்க முடியா என் பாதைகளில் அவன் தான் ஒடுகிறான். என் கரங்கள் நீளும் தொலைவில் தன் தோள்களை பொருத்துகிறான். நான் தேடும் திசைகளில் எல்லாம் சட்டென தோன்றுகிறான். நான் நினைத்ததை செயலாக்கி முடிக்கிறான்.

மணி செந்தில் … நான் சொற்கள் மட்டுமே.

என் தம்பி ஆனந்த் தான் நான் செய்வதாக இந்த உலகம் அறிகிற செயல்கள் அனைத்தும்….

நிறைய இருக்கின்றன. சொல்ல முடிந்தவைகளும்…சொல்ல முடியாதவைகளும்.. நினைத்தாலே கலங்குகின்றன விழிகள்.

நன்றி என்ற சொல் உனக்கெல்லாம் பொருந்தாதுடா. வாழ்வில் பார்த்துக் கொள்வோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
Made in Mani Senthil..kku .

Page 4 of 6

Powered by WordPress & Theme by Anders Norén