பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: திரை மொழி Page 1 of 4

விடுதலை 2 – சில எண்ணங்கள்

சமீபத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இளவரசு கதாபாத்திரம் மிக நுட்பமானது. கைலிக் கட்டிக்கொண்டு அரசு அதிகாரியிடம் தன்னை மதிக்கவில்லை என ஈகோ பார்த்து, தண்டவாளத்தில் ஒருவர் தலைவைத்து படுத்ததால் தான் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள் என்றெல்லாம் தத்துவம் பேசி, கடைசியில் வாத்தியார் கைதான செய்தி அறிந்த உடன் சட்டென “மைன்ஸ்” வேலைகளை ஆரம்பிக்கலாமா..?” எனக் கேட்கும் அந்த அமைச்சர் இளவரசு கதாபாத்திரம் தான் அக்மார்க் 100% திராவிட தலைவர்களின் தோற்றம். திரையரங்கில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தார் என்றவுடன் கைத்தட்டி ஆர்ப்பரிக்கும் உடன்பிறப்புகள் மைன்ஸ் ஆரம்பிக்கலாமா என அதே கதாபாத்திரம் கேட்கும் போது அதை கண்டும் காணாமல் (!) இயல்பாக கடப்பது
திராவிட அரசியல் ஆழமாக ஏற்படுத்தி இருக்கும் ஊழல் பிழைப்புவாத அரசியலின் உளவியல். ஊழலை இயல்பாக்கி மனிதனின் குணமாக்கி விட்டதுதான் திராவிடத்தின் சாதனை.

இந்த நுண்காட்சி வெளிப்படுத்தும் அரசியல் புரியாமல் தனக்கான அங்கீகாரமாக உபி க்கள் புளாங்கிதம் வேறு அடைவது சரியான காமெடி.

அதேபோல் விடுதலை திரைப்படத்தில் பயன்படுத்தப்படுகிற பெரியார் படம் ஒரு திருமண காட்சியில் மட்டும் காட்டப்படுகிறது. அது வாத்தியார் கதாபாத்திரத்தின் வசனங்களிலோ அல்லது அவர் படம் நெடுக பேசுகின்ற தத்துவ அரசியலிலோ எங்கும் வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் “பெண்கள் கிராப் வெட்டிக் கொள்ள வேண்டும்” என்ற பெரியாரின் பெண்ணுரிமை மொழிக்கு எதிராக கிராப் வெட்டிக் கொண்ட பெண் தனக்கு மதிப்புறு சுதந்திரம் தருகிற ஒரு ஆண்மகன் கிடைக்கும்போது முடியும் வளர்ப்பாள் என்கிற காட்சியின் அரசியல் தன்மைகள் தனியே விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று.

அதேபோல் படத்தில் வருகிற திராவிட தொழிலாளர்கள் சங்கப்பதாகை. உண்மையில் தமிழ்த் தேசிய நக்சல் பாரிகளுக்கு என்றுமே திராவிட அரசியல் தலைவர்கள் ஆதரவாக இருந்தது இல்லை.திராவிட தத்துவத்தின் அரசியல் வடிவமான திமுக ஆட்சியில், அதன் நீட்சியாக வந்த அண்ணா திமுக ஆட்சிகளில் தான் தான் தனித்தமிழ்நாடு கேட்டுப் போராடிய தமிழ்த் தேசிய நக்சல் பாரிகள் கடுமையாக காவல்துறையால் வேட்டையாடி கொல்லப்பட்டார்கள்.

எனவே விடுதலை 2 என்ற திரைப்பட முன் வைக்கிற அரசியல் இப்போது இருக்கிற அறிவாலய அடிமைகளான கம்யூனிஸ்டுகளுக்கு கூட எதிரானது தான். புலவர் கலியபெருமாளும் தோழர் தமிழரசனும் ஒரு உன்னதமான காலத்தை உருவாக்க போராடி தங்களை இழந்தவர்கள்.
தமிழர் என்கின்ற இனம் ஒரு தேசிய இனம் என நிறுவுவதில் உறுதியாக நின்றவர்கள்.

இத்தனை ஆண்டு கால வரலாற்றில் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை எந்த திராவிட அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒத்துக்கொள்ளவில்லை என்பது மிக மிக முக்கியமான ஒரு கருத்தியல்.

ஏனெனில் திராவிடக் கருத்தியல் எப்போதும் தமிழ்/ தமிழருக்கு எதிரானது. வரலாற்றின் போக்கில் ஒரு தேசிய இனமாக உருவான தமிழரை ஒரு இனமாக வரையறுப்பதில் போலியாக ஒற்றைச் சொல்லின் மூலம் உருவாக்கப்பட்ட திராவிடத்திற்கு உள்ளார்ந்த ஆழமான எதிர்ப்பு உண்டு. எனவேதான் தமிழர் ஒரு தேசிய இனம் என ஒத்துக் கொள்வதில் திராவிட தலைமைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றன.

இத்தனை ஆண்டு காலத்தில் தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை சட்டமன்றத்தில் யாரும் பேசியதாக குறிப்புகள் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பல தேசிய இனங்கள்/ பல தேசங்கள் இணைந்து தான் யூனியன் ஆப் இந்தியா என்கின்ற நாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆரியத்திற்கு இணையாக திராவிடமும் மறுத்து தமிழர் ஒரு தேசிய இனம் என்பதை தொடர்ச்சியாக மறைத்து வருகிறது.

தங்கள் வாழ்க்கையே தமிழர் இனத்திற்காக இழந்த புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் உள்ளிட்ட எண்ணற்ற போராளிகள் நிறுவ விரும்பியது தமிழர் ஒரு தேசிய இனம் என்பதைத்தான். அதை மறுக்கிற எவரும் தமிழருக்கு எதிரானவர்களே.

அரங்கங்களைத் தாண்டி ” தமிழர் ஒரு தேசிய இனம்” என வரையறை செய்து வெகுஜன வாக்கு அரசியலில் பேசுகிற ஒரே ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். தமிழர் வரலாற்றில் வெகுஜன அரசியலில் தமிழர் ஒரு தேசிய இனம் என நிறுவுவது நாம் தமிழர் கட்சி செய்திருக்கிற மாபெரும் வரலாற்று புரட்சி.

மற்றபடி விடுதலை 2 பேசுகிற தேசிய சுய நிர்ணய உரிமை அரசியலைப் பற்றியும், அதன் நீட்சியாக வாத்தியார் கதாபாத்திரம் முன்வைக்கிற தேர்தல் அரசியல் பற்றியும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

மணி செந்தில்.

கடவுளின் இறுதியாத்திரையும், மரணத்தை எதிர்கொள்ளலும்.

.

இந்தப் புத்தக கண்காட்சியில் நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை வாங்க தமிழின் வசீகரமான இளம் எழுத்தாளுமைகள் அன்புத்தம்பிகள் லட்சுமி சரவணகுமார் , அகர முதலவன் உதவி செய்தார்கள். நூல்வனம் அரங்கில் மொழிபெயர்ப்பு நூல்களின் தொகுப்பு ஒன்றினை வாங்கித் தந்தார்கள்.

அதில் முதல் புத்தகமான “கடவுளின் இறுதியாத்திரை” – தமிழில் அசதா என்ற தொகுப்பு. பிரபல அயல் நாட்டு எழுத்தாளர்களின் நேர்காணல்கள்.‌ அதில் முதல் கட்டுரையான “கடவுளின் இறுதியாத்திரை” என்ற நாவலை எழுதிய எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான ஏ என் வில்சன் அவர்களை இஸ்ரத் சையத் நேர்காணல் செய்தது. கடவுள் பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் மதம் என்கின்ற நிறுவனத்தைப் பற்றியும் நுட்பமான கேள்விகளும், அதற்கு வில்சன் தருகிற பதில்களும் ‌ வியக்க வைக்கின்றன.ஏறக்குறைய 18 ஆம் நூற்றாண்டிலேயே அறிவியல் துணையோடு கடவுள் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில் , இனியும் கடவுள் தேவையா என்கிற கேள்வியும், ஏன் கடவுள் இன்னமும் தேவைப்படுகிறார் என்கிற பதிலும் மிக சுவாரஸ்யமானவை.

டார்வினின் பரிணாமக் கொள்கைதான் ‌ கடவுள் இருத்தலை ஏறக்குறைய கேள்விக்குறியாக்கியது எனக் கூறும் வில்சன், 13 ஆம் நூற்றாண்டிலேயே உலகம் உருவாக கணக்கற்ற கோடி ஆண்டுகள் ஆகியிருக்கும் என்றும், பைபிளின் படி கண்டிப்பாக ஆறு நாட்களில் உலகத்தை படைத்திருக்க முடியாது என்றும் கண்டுபிடித்து விட்டார்கள் என்றும் விவரிக்கின்ற அவர் , இயற்கையிடம் எந்தத் திட்டமான நோக்கமும் இல்லை, இயற்கைக்கு எந்த உயிரின் மீது தனிப்பட்டக் கரிசனம் கிடையாது, கடவுள் மனிதன் மீது அளவற்ற வாஞ்சைக் கொண்டிருக்கும் பட்சத்தில் ஏன் மிகப்பெரியக் குளவிகளை அவர் படைக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு எதிர்வினையாக “சரியான அர்த்தத்தில் ஒரு கவிஞன்” என்ற தலைப்பில் கவிஞர் ஸ்பீக் நியூ ஹெர்பர்ட் அவர்களின் நேர்காணலில் “கடவுளே இல்லை என்று சொல்வதைக் காட்டிலும், கடவுளின் இருப்பை ஏற்றுக் கொள்வதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் அதிகம் என பாஸ்கல் சொன்னது சரிதான் எனத் தோன்றுகிறது.” என்று தெரிவிப்பது மனதிற்கு ஏனோ நெருக்கமாக இருந்தது.

எல்லாவற்றையும் தொலைத்து விட்டு எதில்தான் நிற்கப் போகிறோம் என்கிற கேள்வி எப்போதுமே எனக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும். கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, அதையெல்லாம் தாண்டி நாம் பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று தேவைப்படுகிறது என்பது தான் கவிஞர் ஹெர்பட்டின் கருத்து. ஏனெனில் மனித வாழ்க்கை சாவதை காட்டிலும் கொடுமையானது. நெருக்கடி மிகுந்தது.துயரும் விரக்தியும் சூழும் வாழ்க்கை பெரும்பாலும் மரணத்தை தப்பித்தலுக்கான பெருவழியாக நிர்ணயித்து விடுகின்றன.

கடந்த இரண்டு தினங்களாக Netflix தளத்தில் சமீபத்தில் Peter Berg இயக்கத்தில் வெளியாகி உள்ள” American Primeval” என்ற சீரிஸ் பார்த்தேன். வெஸ்டர்ன் கிளாசிக் வகை என்றாலும் வழக்கமான Cowboy கிளிஷே எதுவும் இல்லாமல் மிகுந்த தரமான முறையில் படமாக்கப்பட்டு நம்மை பிரமிக்க வைத்தது.

தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள்.செவ்விந்தியர்களின் பூர்வீக நிலமான அமெரிக்காவை வெள்ளையர்கள் ஆக்கிரமிக்க தொடங்கிய தொடக்க காலத்தில் அவர்களுக்குள் இருந்த மத, அரசியல், குழு பிரச்சனை மற்றும் செவ்விந்தியர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை இதற்கு ஊடாக ஒரு கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தன் மகனோடு கணவனை தேடி தப்பித்து ஓடும் ஒரு பெண்ணின் கதை என பல்வேறு அடுக்குகளில் எதிர்பாராமல் நிகழும் மரணங்களை பற்றி தீவிரமாக அந்தத் தொடர் ஆய்வு செய்திருந்தது.

தொடர் முழுக்க மரணம் ஒரு ஊதுபத்தியின் புகைச்சுருள் போல மேலெழும்பி தவழ்ந்துக் கொண்டே இருந்தது.எதற்கோ பிறந்து எங்கேயோ வாழ்ந்து எங்கேயோ மரணம் அடையும் மனித வாழ்க்கையில் முடிவில் எதற்கும் அர்த்தம் இல்லை என்பதும், இந்தக் குறுகிய கால மனித வாழ்க்கை நிரந்தரம் என எண்ணிக் கொண்டு வெறுப்பும் வன்மமும் பேராசையும் நிரம்பிய மனிதன் இயற்கையின் அழைப்பான மரணத்திற்கு முன்னால் ஒன்றுமே இல்லாதவனாக கையறு நிலையில் முடிவதுதான் இயற்கையின் செய்தி.

எல்லாக் கடவுளும் கைவிடுகின்ற பொழுதில் கைவிடாத ஒரே ஒரு விஷயம், எதையும் எதிர்பார்க்காத எப்போதாவது வாய்க்கிற சக மனிதனின் எளிய அன்பு தான் என்பதை இந்தத் தொடர் உதிரத்தின் சுவையோடு, பனிக்காலத்து ஊதற்காற்று ஓசையோடு , நகரமயமாகாத அமெரிக்காவின் தொல்குடி நிலவியல் காட்சிகளோடு படமாக்கப்பட்டு நம்மைக் கவர்கிறது.

“மனிதன் ஆகப்பெரும் சல்லிப் பயல்” என்கிறார் மறைந்த எழுத்தாளுமை ஜி.நாகராஜன். ‌எல்லாவித குறைகளோடும் உருவாகியுள்ள மனிதன் தன்னைப் போலவே தனது பிம்பமாக கடவுளையும் உருவாக்கி ‌ அதில் நிறை தேடி அலைகிறான். அந்த அலைகழிப்பை காட்சிமொழி வடிவத்திலும், எழுத்து வடிவத்திலும் காணும் போது நாம் இன்னும் நமக்குள்ளாக ஆழ்ந்து சிந்திக்க தொடங்குகிறோம்.

அப்படி உள்ளுக்குள் ஆழ்ந்து சிந்திப்பதை தான் மிக எளிமையாக ஓஷோ “பிரார்த்தனை” என்கிறார். அதற்கு கடவுள் கூட தேவை இல்லை என்கிறார்.

அந்த வகையில், நல்ல புத்தகங்களையும் நல்ல திரைப்பட ஆக்கங்களையும் தேடித் தேடி வாசிப்பதும்/ பார்ப்பதும் ஒரு வகை பிரார்த்தனைதான்.

❤️

“லப்பர் பந்து” – நினைவோடையில் மிதக்கும் செம்பருத்தி.

🛑

சில ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி வேலை சம்பந்தமாக கும்பகோணத்தில் புறவழிச் சாலைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது..காரை நிறுத்திவிட்டு அலைபேசியில் யாரிடமோ நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் எதிரே வந்த ஒரு நடுத்தர வயதுக்காரர் என்னை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருப்பது போல எனக்குத் தோன்றியது.
நானும் அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். எங்கே என்றுதான் எனக்கு நினைவில்லை. அவர் தயங்கிவாறே அருகே வந்து “செந்தில் தானே நீங்க.. ? “எனக் கேட்டார். “மன்னார்குடி தானே..?” மறுபடியும் கேட்க என்றும் கேட்க, ஆமாம் என நான் தலையசைத்தேன்.
“என்னை தெரியலையா.. நான் தான்பா ராஜா” என்றார். ராஜா என்றால், நான் குழம்பிக் கொண்டிருந்த போது.. “அதான்பா மன்னார்குடி ஹவுசிங் யூனிட் ராஜா, ராக்கெட் ராஜா.. ” என சொன்னபோது நான் அப்படியே அதிர்ச்சியோடு வண்டியை விட்டு வெளியே வந்து விட்டேன்.

ஏனென்றால் ‘ராக்கெட் ராஜா’ எனது பதின் பருவத்து ஹீரோ. எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் GCC ( Gavaskar cricket club) என்ற ஒரு அணி இருந்தது. அண்ணன் ஸ்டீபன் தான் கேப்டன். அதில் அண்ணன் ராக்கெட் ராஜா வேகப்பந்துவீச்சாளர். கூடுதலாக கபில்தேவ் போல பேட்ஸ்மேன்.

இன்னும் எனக்கு நினைவிருக்கிறது அவர் வேகமாக ஓடிவந்து பந்தை வீசும் போது, பந்து சீறிப் பாய்கையில் .. உண்மையிலேயே அது ராக்கெட் தான்.

அண்ணன் ராக்கெட் ராஜாவும், அண்ணன் காவுக்கனியும் எங்கள் GCC அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள். முதல் இரண்டு ஓவர்கள் வீசும் போதே எதிரணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை வந்த வேகத்தில் திருப்பி அனுப்பி விடுவார்கள். அவ்வளவு திறமையான வேகப் பந்துவீச்சாளர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் குடியிருந்த B-6 பிளாக்கிற்கு பின்னால் இருக்கின்ற மிகப்பெரிய வயல்வெளி கிரிக்கெட் மைதானமாக மாற்றப்பட்டு கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.

மன்னார்குடியில் “பூவா” என்ற ஒரு அண்ணன் இருந்தார். அவர்தான் நடக்கின்ற கிரிக்கெட் போட்டியின் வர்ணையாளர். சுவாரசியமாக வர்ணனை செய்வார். ” ஹவுசிங் யூனிட் முனையை நோக்கி இதோ ராக்கெட் வருகிறது..” என்று பூவா அறிவிக்கும் போது ராஜா அண்ணன் பௌலிங் போட தயாராகி நிற்பார். நாங்கள் எல்லாம் பெரிய சத்தம் போட்டு ஆர்ப்பரிப்போம். இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

எங்களைப் பொறுத்த வரையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல. அது வாழ்வியலின் ஒரு அங்கம். நான் ஒரு நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்றாலும் கூட,GCC அணி என்னை ஒருபோதும் ஒதுக்கியது இல்லை. குறிப்பாக அண்ணன்கள் ஸ்டீபன், ராஜா போன்றோரெல்லாம் அவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும்போது, ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க வந்த என்னை அழைத்து எனக்கு சுழற் பந்துவீச்சு கற்றுக் கொடுத்ததெல்லாம் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. என் எதிர் பிளாக்கில் இருந்த விஜயகுமார் என்ற விஜி அண்ணன் தான் எங்கள் அணியின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு, என் நண்பர்கள் ராம்நாத், பாலு, சதனுக்கு கேட்ச் பிராக்டிக்ஸ் அளிப்பார். உடல் குறையை காட்டி என்னை எப்போதும் அவர்கள் ஒதுக்கியதே இல்லை.

என்னால் ஓட முடியாது எனத் தெரிந்து நடக்கும் பயிற்சி ஆட்டங்களில் என்னையும் சேர்த்துக்கொண்டு என்னை ஸ்லீப்பில் விஜி அண்ணன் நிற்க வைப்பார். அப்போது நான் நடப்பதற்கு இடது காலில் பித்தளையிலான காலிஃபர் அணிந்திருப்பேன். நான் நடக்க முடியாதவன் என்பதை அந்த வயதில் நான் உணர்ந்ததே இல்லை. ஏனெனில் அந்த அண்ணன்மார்கள் என்னை பறக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த உலகம் எவ்வளவு கருணையானது , வாழ்வின் பல தருணங்களில் என்னை காயப்படாமல் காப்பாற்றி இருக்கிறது என நெகிழ்வுடன் கருதி இன்றளவும் நான் நன்றியோடு இருப்பது எங்கள் GCC அணி அண்ணன்களை நினைத்துதான்.

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த சர்பட்டா பரம்பரை போல எங்கள் GCC அணிக்கு ஒரு பாரம்பரியம் உண்டு ‌. பெரும்பாலும் எங்கள் வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தை சேர்ந்தவர்கள் தான் அதில் இடம்பெற முடியும். சில அபூர்வமான பிளையர்கள் வெளியே வந்தும் எங்கள் அணியில் விளையாடினார்கள்.

ஒருமுறை மன்னார்குடி நகரத்தின் உயரிய அணிக்கும், எங்களது GCC அணிக்கும் நடந்த இறுதிப் போட்டியின் போது, முன்னணி வீரர்கள் எல்லோரும் அவுட் ஆகி வெளியேறிய பிறகு, விக்கெட் கீப்பரான அண்ணன் விஜியும், பேட்ஸ்மேன் ஆன அண்ணன் ராக்கெட் ராஜாவும் களத்தில் இருந்தார்கள். கடைசி மூன்று பந்துகள். ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி. அண்ணன் விஜி விக்கெட் கீப்பர் என்பதால் தொடர்ந்து சிரமப்பட்டு கொண்டிருந்தார். எதிரணியின் வேகப்பந்துவீச்சாளர் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து மிரட்டிக் கொண்டிருக்கும்போது, இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான் எல்லாம் அழ ஆரம்பித்து விட்டேன். அருகில் நின்ற அணியின் கேப்டன் ஸ்டீபன் அண்ணன்
” விளையாட்டுல யாரு ஜெயிச்சா என்னடா.. நல்லா விளையாடுறவங்க ஜெயிப்பாங்க.. விடு. எப்போதும் நாமே ஜெயிக்கணும்னு நினைக்காதே..” எனச் சொல்லி என்னை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கிறார். அருகில் என் நண்பர்கள் ராம்நாத், சதன், பாலு, செந்தில் , மாரிமுத்து என பலரும் கண்கலங்கி அமர்ந்திருக்கிறார்கள். கடைசி ஓவரில் முதல் மூன்று பந்துகளையும் அடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் அண்ணன் விஜி திணற நாங்கள் எல்லாம் “விஜிண்ணே.. ஒரே ஒரு ரன் அடி” என்று கத்தியது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அதேபோல் மூன்றாவது பந்தில் அண்ணன் விஜி ஒரு ரன் எடுத்துக் கொண்டு ஓட, மறுபுறம் வந்த ராக்கெட் ராஜா அண்ணன் தன் அக்மார்க் ஸ்டைலில் ஸ்கொயர் கட்டில் ஒரு நான்கு அடித்து போட்டியில் வென்றது மறக்க முடியாத நினைவு.

……

1983 கிரிக்கெட்டில் இந்தியா உலகக் கோப்பை வென்ற பிறகு கிரிக்கெட் என்ற விளையாட்டு இந்திய பெருநிலத்தை முற்றிலுமாக ஆக்கிரமித்தது. எண்பதுகளில் ட்ரான்சிஸ்டர் ரேடியோக்கள் மூலமாக கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்கிற ஒரு புதிய தலைமுறை உருவானது. கொஞ்சம் சிரமமான ஆங்கிலம் தான். ஆனாலும் கண்டிப்பாக உற்றுக் கேட்டால் 4, 6, அவுட் போன்றவற்றை புரிந்து கொள்ளலாம். பொங்கல் விழாவின்போது பெரும்பாலும் சென்னை சேப்பாக்கத்தில் ஏதோ ஒரு நாட்டோடு இந்திய அணி கிரிக்கெட்டில் மோதும். அப்போதெல்லாம் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகள் தான். சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது மட்டும் தமிழில் வர்ணனை கேட்கலாம். “வாலாஜா சாலை முனையில் இருந்து கபில்தேவ் பந்து வீச வருகிறார்..” என தொடங்கும் போது இன்பத் தேன் வந்து நம் காதுகளில் சத்தியமாக பாயும். பிறகு தொலைக்காட்சிகள் வந்து எல்லாம் மாறிப்போனது.

எண்பதுகளின் இறுதியில் 90 களின் தொடக்கத்தில் தமிழகத்தின் எல்லா தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடக்கூடிய அணிகள் இருந்தன. அப்படித்தான் எங்களது GCC அணியும் மன்னார்குடி வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் தோன்றியது. அதன் வெற்றிக்கு அங்கே குடியிருந்த ஒவ்வொரு குடும்பமும் வேண்டுவார்கள். என் அம்மா மற்றும் எதிர் வீட்டில் இருந்த திலகவதி‌ அத்தை, அதேபோல் எதிர்பிளாக்கில் இருந்த லதா அக்கா எல்லோரும் மாடியில் நின்று மேட்ச் பார்ப்பார்கள். இங்கே அணி வெற்றி பெறும் போதெல்லாம் அவர்கள் மாடியில் இருந்து கைத்தட்டி ஆர்ப்பரிப்பது எல்லாம் ஒரு கனவு காட்சி போல இருக்கின்றன.

….

சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளிவந்த “லப்பர் பந்து” பார்த்தேன். அதில் வருகின்ற “கெத்து” தினேஷ் எனக்கு பல ஹவுசிங் யூனிட் அண்ணன்களை நினைவூட்டினார். இசைஞானி இசையில்” நீ பொட்டு வைத்த தங்க குடம்‌..” எனப் பாட்டு ஒலிக்கும் போது தினேஷ் நடந்து வருகிற அந்தக் காட்சி எங்கள் தலைமுறையில் நாங்கள் அடிக்கடி எங்கள் கண்களால் பார்த்து சிலிர்த்த காட்சி. உண்மையில் எங்கள் அண்ணன்கள் கெத்து தினேஷ் போலத்தான் கதாநாயகர்களாக இருந்தார்கள். நாங்கள் எல்லாம் அவர்களது ரசிகர்கள்.

எங்கள் நிலங்களான மன்னார்குடி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட “களவாணி” திரைப்படம் மிக முக்கியமான பண்பாட்டு வாழ்வியல் ஆவணம். அதற்குப் பிறகு “லப்பர் பந்து” போல தமிழ் நிலத்தின் மிக முக்கியமான “விளையாட்டு” என்கிற ஒரு பண்பாட்டுக் கூறினை எடுத்துக்கொண்டு இவ்வளவு சுவாரசியமாக அடையாளப்படுத்திய திரைப்படம் வேறு எதுவும் இல்லை.

எளிய மனிதர்களில் மின்னக்கூடிய விளையாட்டு வீரர்கள் அந்தப் பகுதியில் கதாநாயகர்களாக இருந்தார்கள் என்பதை “லப்பர் பந்து” ஆவணப்படுத்தி இருக்கிறது. அவர்களால் Pad கட்ட முடியாது. ஒழுங்கான ஆடைகள் இருக்காது. ஆனால் அடிக்கிற அடி ஒவ்வொன்றும் இடிதான்.

குறிப்பாக கதாநாயகியாக வருகிற கெத்து தினேஷ் மனைவி கதாபாத்திரம் மிக நுட்பமாக வரையப்பட்டிருப்பது வியக்க வைக்கிறது.
பிள்ளைகள் வளர்ந்த பிறகு மனைவியை தாயாக நேசிக்கின்ற குணம் பெருகுவதை பலரும் உணர்கிறார்கள். ஊரில் கதாநாயகனாக இருந்தாலும், வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளாக அவன் அன்பின் அடிமை.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் “மாமியார் -மருமகள்” இடையிலான உறவு இவ்வளவு அழகாக கலாபூர்வமாக வேறு எந்த திரைப்படத்திலும் இதுவரை காட்டப்பட்டதில்லை.
அதேபோல் எப்போதும் முட்டித்திரியும் “மாமனார்-மருமகன்” உறவும் அவ்வாறுதான்.ரசனையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

படம் சாதி அரசியலுக்கான அனைத்தையும் கொண்டிருந்தாலும், எதையும் போதிக்காமல் வாழ்வின் ஓட்டத்தோடு சாதி மறுப்பியலை உளவியலாக மாற்றுகிற வித்தையை ஒரு கவிதை போல நிகழ்த்தி இருக்கிறது. உண்மையில் திரைமொழியின் அழகு இதுதான்.

திரைப்படம் என்பது ஒரு காட்சி மொழி ஊடகம். அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லை. மாறாக கலையம்ச காட்சிகளின் மூலமாக கதாபாத்திரங்கள் ஊடாக கதையை நிகழ்வாக மாற்றி சொல்வது என்பது பல பிரம்மாண்ட திரைப்படங்களில் தவறும் சவால்.

ஆனால் “லப்பர் பந்து” இதை அனாசியமாக தூக்கி போடுகிறது. ஒரு எளிய கதையின் மூலம் , எத்தனை திரை மொழி அடுக்குகளையும் (Screen Play layers) சுவாரசியமாக உருவாக்க முடியும் என்பதற்கு சமீபத்திய வெற்றிகரமான உதாரணம் “லப்பர் பந்து”. படத்தில் ஒரு காட்சி கூட தேவையற்ற காட்சி இல்லை. Editor வித்தைக்காரர். ஒளிப்பதிவும் அப்படித்தான். ஒரு திரில்லர் படம் போல ஒவ்வொரு காட்சியிலும் இருக்கை நுனியில் நம்மை அமர வைத்து அட்டகாசம் செய்து விடுகிறார்கள். இதற்கு நடுவில் சாதி மறுப்பு /பெண்ணியம்/அரசியல் என அனைத்தையும் போகிற போக்கில் சொல்லி அதற்கான தீர்வுகளையும் சொல்லி, ஆனால் எதையும் போதிக்காமல், நதியோட்டம் போல இயல்பாக கடத்துகிறார்கள்.இசை ஷான் ரோல்டன். அளவான அழகான எளிய இசை. அதுதான் சமீப காலங்களில் இல்லாதது.

இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் கெத்து தினேஷ் மனைவியாக நடித்த சுவாசிகா என்பவரின் நடிப்பு. மிரட்டி இருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் காட்டப்படும் கதாநாயகனை துரத்திக் கொண்டு ஓடும் வழமை கதாநாயகி அல்ல அவர். அவர் மலையாளத்தில் நடித்த “சதுரம்” என்கின்ற ஒரு சுமாரான திரைப்படத்தை ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன். அதையும், இதையும் ஒப்பிட்டால் இது அசுரப் பாய்ச்சல். ஏறக்குறைய பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் வருவது போல இதில் சுவாசிகா வரும் காட்சியில் எல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. அன்பு பாசம் நெகிழ்ச்சி காதல் கோபம் தாய்மை கண்டிப்பு என அனைத்தையும் கலந்து கட்டி பிரித்து மேய்ந்து இருக்கிறார் சுவாசிகா‌.

அட்டக்கத்தி தினேஷ் என்கின்ற ஒரு அற்புதனை “கெத்து தினேசாக” “லப்பர் பந்து” மாற்றிவிட்டது. இதுவரை அவரது வாழ்க்கையில் திறக்காத பல கதவுகள் இனி திசையெல்லாம் திறக்க கூடும். ‌அதேபோல் ஹரிஷ் கல்யாண், சஞ்சனா என யாரும் ஒரு சிறிய தவறை கூட செய்யாமல் முழுமையான ஒரு படைப்பை வழங்கியிருக்கிறார்கள்.

எனக்கெல்லாம் லப்பர் பந்து பார்த்துவிட்டு இரவு தூங்க முடியவில்லை . காதெல்லாம் பூவா அண்ணன் கமெண்ட்ரி பண்ணுவது போல எனக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. ஸ்டீபன் அண்ணன் பேட்டிங் செய்வது போலவும், ராஜா அண்ணன் ரன்னர் அப் நிற்பது போலவும் பலவிதமான காட்சிகள் நினைவில் தோன்றி கொண்டே இருந்தன.

எங்கள் தலைமுறையில் “என்றும் அன்புடன்” என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் “துள்ளித் திரிந்ததொரு காலம்” என்ற கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடல் உண்டு. அதன் பல்லவி இப்படி வரும்.

“அன்னை மடி தனில் சில நாள்,
அதை விடுத்தொரு சில நாள்
திண்ணை வெளியினில் சில நாள்,
உண்ண வழியின்றி சில நாள்,
நட்பின் அரட்டைகள் சில நாள்,”

…. என நீளும் அந்தப் பல்லவி,

“ஓடி முடிந்தது காலங்கள்
காலங்கள்..
பூங்கொடியே …!”

என இவ்வாறு முடியும்.

கால ஓட்டத்தைப் பற்றி ஒருவித வலியோடு “வேறு என்ன செய்ய முடியும்..” என்பதான பெருமூச்சுதான் அந்தப் பாடல்.

அது போல நம் வாழ்வும் ஏதேதோ புரியாத நம்பிக்கைகளோடு கொண்டே இருக்கிறது. நாமும் பெருமூச்சோடு அதன் ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அசாத்திய அந்த ஓட்டத்தில் எங்கோ காயம் பட்டு நாம் கலங்கி நிற்கும் போதெல்லாம், இளைப்பாறுதல் தருவது கடந்த கால நினைவுகளே..!

நம் நினைவோடையில் கடந்த காலம் ஒரு செம்பருத்தி மலராக மிதந்து கொண்டிருக்கிறது. அதைவிட அழகான மலர் உலகில் வேறு உண்டா என்ன..?!

படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் நினைவோடையின் செம்பருத்தி பூ ஒன்றினை தருகிறது
“லப்பர் பந்து.”

அதற்காகவே படத்தை இயக்கிய தமிழரசனுக்கு பரவசத்தோடு தரலாம் பேரன்பின் பூங்கொத்து.

❤️

மணி செந்தில்.

நந்தன் – வலி பேசும் திரை அரசியல்

🌑

அடங்கா நதிப் போல ஓடிக் கொண்டிருக்கின்ற காலத்தை ஒரு மாய விசைப் புள்ளியில் தடுத்து நிறுத்துகிற வல்லமை இரண்டே இரண்டு விஷயங்களுக்கு மட்டும் தான் உண்டு. ஒன்று புத்தகங்கள். மற்றொன்று திரைப்படங்கள்.

நல்ல புத்தகங்களை, நல்ல திரைப்படங்களை தேடி கண்டுபிடிப்போரை நான் கவனித்து இருக்கிறேன். எழுத்தாளுமை எஸ் ராமகிருஷ்ணனை சந்திக்கும்பொழுதெல்லாம் ஏதோ ஒரு புத்தகத்தை அல்லது ஒரு திரைப்படத்தை அவர் பரிந்துரை செய்து கொண்டே இருப்பது அவரது தன்னியல்புகளில் ஒன்றாக இருப்பதை நினைத்து வியந்து இருக்கிறேன்.

அதேபோல் அண்ணன் சீமான்.

இறுகியத் தன்மை உள்ள அரசியல் தோற்றம் கொண்ட அவருக்கு இருக்கின்ற இலக்கியத் தாகமும், கலை முகமும் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளாக்குபவை.
அரசியலுக்கு அப்பாற்பட்டு எழும் உரையாடல்களில் அவர் என்னிடத்தில் புத்தகங்களைப் பற்றியும், திரைப்படங்களைப் பற்றியும் பேசுவது தான் அதிகம். அதேபோல் நல்லத் திரைப்படங்களை பரிந்துரைத்து அதை நாம் தவற விடாமல் பார்த்திருக்கிறோமா என்பதையும் உறுதி செய்துக் கொள்கிற அவரது பேரன்பு அக்கறை தனித்துவமானது.

கடந்த இரண்டு நாட்களாக அண்ணன் சீமான் அலைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். ஒரு திரைப்படம். அதை நான் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆழமான விருப்பம். இதை அவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற மனிதர் அல்ல. முன்பொரு முறை ஞானவேலின் ” ஜெய் பீம்” திரைப்படத்திற்கும், அதேபோல பா ரஞ்சித்தின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்திற்கும் இதே போல் அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. இந்த முறையும் அதுதான் எனக்கு நடந்தது.
எப்போது எடுத்தாலும் “படத்தைப் பார்த்து விட்டாயா..” என்பதுதான் முதல் கேள்வி.

அப்படி அவர் நான் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் என பரிந்துரைத்தது இரா. சரவணன் இயக்கத்தில், வெளிவந்துள்ள “நந்தன்”.

படம் தொடக்கத்திலேயே ” இந்தக் காலத்திலும் இப்படி நடக்குமா என யாராவது நினைத்தீர்களானால், வாருங்கள் உங்களை அழைத்துச் சென்று காட்டுகிறேன்.” என்கிற அறிவிப்பிலேயே ஏதோ மிக முக்கியமான ஒன்றை படம் பேசப்போகிறது என்பதை அறிவித்து விடுகிறார் சரவணன். குறிப்பாக படத்தின் முதல் காட்சியிலேயே காட்டப்படும் செருப்புகளின் நெருக்கக் காட்சி ( Closeup Shot) காட்ட முனையும் குறியீட்டு தளங்கள் ஆழமான சிந்தனைகளை ஏற்படுத்துபவை.

சாதியைப் போல் இந்த பெருநிலத்தில் மிக ஆழமாக வேரூன்றிய ஒன்று வேறு எதுவும் இல்லை. ஒவ்வொருவர் மனதுக்குள்ளாகவும் , மரபணுவிலும் ஊடுருவி வாழ்விலும், பண்பாட்டிலும், மொழியிலும், உணவிலும் , உடையிலும் இரண்டற கலந்துவிட்ட கொடும் மனநோயாக சாதி இன்றளவும் இருக்கிறது என்பதைத்தான் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக வலியோடும், அதே சமயத்தில் பார்ப்பவரை உணர வைத்து திருத்தும் உணர்வோடும் பேசி முடிக்கின்றான் ‘நந்தன்’.

” தனக்கு கீழாக ஒருவன் இருக்க வேண்டும் என்கிற மனித உளவியலை அடிப்படையாகக் கொண்டு வர்ணாசிரம தர்மம் கட்டமைக்கப்பட்டிருப்பதால் தான் அது இத்தனை நூற்றாண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது” என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.

கூழ்பானை என்ற அம்பேத்குமார் என்கின்ற கதாபாத்திரத்தில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்திருக்கிற சசிக்குமார் தன் கலை வாழ்வின் மிக முக்கியமான பத்திரமாக இதை உணர்ந்திருப்பார். கதையின் நாயகியாக வரும் சுருதி பெரியசாமி கணவனின் சுயமரியாதையை காப்பாற்றும் துணையாக கண்களால் பேசி நெகிழ வைக்கிறார். இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ஒவ்வொரு அசைவிலும் சாதித் திமிர் தாண்டவமாடுவது படத்தை வலிமைப்படுத்துகிறது.

ஒரு சிறிய கதை தான். ஆனால் அது தரும் வலி மிக ஆழமானது. இந்த மண்ணின் தொன்மக்குடி மக்கள் சாதியின் பெயரால் இந்தக் காலத்திலும் அடிமையாக நடத்தப்படுவதையும், நசுக்கப்படுவதையும் நினைத்து காண்போரை காட்சிகள் மூலம் கலங்க வைக்கிறார் சரவணன். ஊராட்சித் தலைவராக சுதந்திர தினத்தில் கொடியேற்ற வரும் அம்பேத்குமார் தனது உறவினர்களுக்கு முன்னால் படுகின்ற அவமானத்தை திரைமொழியில் மிக நேர்த்தியாக நிகழ்த்தி அந்த அவமானம் ஒவ்வொருவரும் தனக்கு ஏற்பட்டதாக உணர வைப்பதில் சரவணன் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல் ஊராட்சி மன்ற தலைவர் பெயர் அறிவிப்பு பலகையில் எழுதப்படும் காட்சி. தன் கணவனின் பெயர் மீது அடிக்கப்பட்ட சாணியை தன் புடவையால் ஆங்காரத்தோடு துடைக்கின்ற சுருதியின் உடற்மொழியும், வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் மிக முக்கியமானவை.

நிறைய நுட்பமான காட்சிகள். நாற்காலியை நோக்கி நகரத் துடிக்கும் அம்பேத்குமாரை, வேலைக்கு ஏவும் கோப்புலிங்கம் சாதி வழியாக எப்படி அதிகாரம் கட்டமைக்கப்படுகிறது, கடத்தப்படுகிறது என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம். இதுதான் திரை மொழிக்கான வலிமை. நாம் எழுத்தில் பக்கம் பக்கமாக எழுதி வடிப்பதை ஒரே ஒரு எளிய காட்சி மூலம், உறுதியாக நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்ற அதிகாரத்தின் வடிவமான நாற்காலியை ஏக்கமாக பார்க்கின்ற அம்பேத்குமாரின் விழிகள் மூலமாக உணர்த்துவது என்பது வலியின் அழகியல்.

நம்மைப் போன்ற சக மனிதனை இழிவாகப் பார்க்கின்ற சாதி உணர்ச்சியை சாகடிக்காமல் இங்கே எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சுயசாதி பெருமிதம் என்கின்ற கொடிய மனநோயை உள்ளுக்குள்ளாக வைத்து கழுத்து அறுத்து சாகடிக்க வேண்டிய சிந்தனையை “நந்தன்” தருகிறான்.

அதேபோல் படத்தின் இறுதிக் காட்சி. இது போன்ற படங்களை முடிக்கும்போது இயக்குனர் கையில் இருக்கின்ற எல்லாவிதமான சாத்தியங்களையும் அவர் பயன்படுத்தி பார்த்திருப்பார். ஆனால் முடிவு என்பது ஏதோ ஒன்றின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதில் சரவணன் காட்டியிருக்கக் கூடிய கவனம் உண்மையில் அற்புதமானது.

இதுபோன்று படத்தில் நிறைய அற்புதத் தருணங்கள் இருக்கின்றன. படத்தின் காட்சி அமைப்புகளை, கதை ஓட்டங்களை நான் விரிவாக இதில் எழுதவில்லை. அதை ஒவ்வொரு பார்வையாளரும் பார்த்து உணர்ந்து நெகிழ்ந்து அனுபவிக்க வேண்டிய பேரனுபவம்.

படத்தில் குறைகளே இல்லையா என்கிற கேள்வி இந்த பதிவை படிக்கின்ற உங்களுக்கு எழலாம். எத்தனையோ ஆடம்பர ஆட்டங்களை, கொஞ்சமும் சமூக உணர்ச்சி இல்லாத பிரம்மாண்ட குப்பைகளை, கலை அழுக்குகளை, எல்லாம் திரைப்படங்களாக பார்த்துக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ” நந்தன்” கொண்டிருக்கின்ற மிகச்சிறிய குறைகள் , இந்தக் கலை வடிவத்தின் உயர்ந்த மேன்மையான நோக்கங்களால் இல்லாமல் போய்விடுகின்றன.

நந்தன் மிக முக்கியமான ஒரு திரைப்படம். அவசியம் அனைவரும் காணுங்கள்.

அன்பு நண்பர் இயக்குனர் சரவணன் அவர்களுக்கு எனது பேரன்புத் தழுவல்கள். ஏற்கனவே இரண்டு படங்கள் அவர் எடுத்திருந்தாலும் இதுதான் அவருக்கான கதவாக நான் பார்க்கின்றேன்.

அவருக்கான ராஜபாட்டை தொடங்கி விட்டதாகவே நான் உணர்கிறேன்.

எப்போதும் சிறப்பானதை எனக்கு பரிந்துரைக்கும் என் அண்ணன் சீமானுக்கு அன்பு முத்தங்கள்.

❣️

நெகிழ்வுடன்,
மணி செந்தில்.

இசைஞானி 81

🟥

ஒரு மனிதன் தனித்துவிடப் படுகின்ற தருணங்களில் தான் தன்னை நோக்கி வரும் தேவ கரங்களை யாசிக்கிறான். தனிமையும் மௌனமும் கனத்திருக்கும் பொழுதுகளில் சங்கடங்களில் சரிந்திருப்பவன் சாய்ந்திருக்க தோள் ஒன்றை தேடுகிறான். அப்போதுதான் இளையராஜாவின் கிட்டார் மீட்டல்களோ, பியானோ தீட்டல்களோ அவனை மீட்க காற்றின் ரதம் ஏறி இதம் சுரக்க வருகின்றன.

உடலெங்கும் செடிகள் மேவிய பழங்கோவில் ஒன்றில் சிற்ப இடுக்கில் ஊடுருவிப் பாயும் ஒற்றை வெளிச்சம். சட்டென தட்டும் ஒரு கைத்தட்டலால் தாழ்வாரத்தில் தானியம் பொறுக்க வரும் பறவை ஒன்றின் சிறகடிப்பு. வயல் நிறைந்த பயிர்களில் தேங்கி இருக்கும் அதிகாலைப் பனி.பின்னிரவில் சாலை விளக்கு ஒன்றின் தனிமை.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் துள்ளல். என இளையராஜாவின் இசையால் உணர்த்தப்படாதவை எது.. எது..??

எல்லாராலும் கைவிடப்படுபவர் இளையராஜாவால் தத்தெடுக்கப்படுபவராகி தத்தளிப்பில் இருந்து மீள்கிறார். தோல்வியடைந்த பின்னிரவுகளில் தனித்திருக்கும் போது ” கண்ணே கலைமானே..” கேட்டு “உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே..” என்று குழைந்து நெகிழாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

முதன்முதலாக காதலை உணர்ந்த ஒரு மழை மாலைப் பொழுதில் “காதலில் தீபம் ஒன்று..” கேட்டு கன்னக்கதுப்பில் மிளிரும் புன்னகையோடு வானத்தைப் பார்க்காதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்..??

இன்றும் “வருஷம் 16” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டுப் பாருங்கள்.


https://youtu.be/bAnsu5udPDs?feature=shared

நாம் வாழ்ந்த வாழ்க்கையை, அப்படியே மீண்டும் சம்பவங்களோடு ரீவைண்ட் செய்து
நமது அகக் கண்களால் நாமே காண முடிகிற அந்த மேஜிக் தான் இளையராஜா.

உங்களில் யார் யார் “கோபுர வாசலிலே” படத்தின் டைட்டில் பிஜிஎம் இசையை கேட்டிருப்பீர்கள்..??

கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூடிய உங்கள் கண்களுக்குள் ஒரு நொடியில் இருண்மையையும், அடுத்த நொடியில் வெளிச்சத்தையும் ஒருங்கிணைக்கிற அந்த குகை வழி ஞானப் பயணத்தை இளையராஜாவை விட யாரால் வழிநடத்த முடியும்..??

என்னைப் பொறுத்த வரையில் அவரை சார்ந்து இசை /மொழி என்றெல்லாம் விவாதங்கள் எழுப்பப்படுவது அர்த்தமற்றவை.
அவரது படங்களில் பின்னணி இசையில் கலாபூர்வமாக காட்சி இடைவெளியில் அவர் விடுகின்ற சிறு மௌனம் கூட அறிகிறவர்களுக்கு பேரிசை தான்..

“அழகி” படத்தில் சாலை ஓரத்தில் பார்க்க நேர்ந்து விட்ட காதலி அளிக்கும் உணவை சாப்பிடும் போது மழை பெய்யும் பொழுதில் அவன் நனையாமல் இருக்க காதலி ஒரு தடுப்பினை பிடிக்க.. அங்கே கொடுப்பார் பாருங்கள் கலை மேன்மை கொண்ட ஒரு மௌனம்..

அதற்குப் பிறகு அவரது கனத்த குரலில் “உன் குத்தமா என் குத்தமா” என இசை எழும்போது உள்ளுக்குள் உணர்ச்சியின் உருண்டை வயிற்றிலிருந்து உருண்டு வந்து தொண்டைக்குள் அடைத்து விழி நனையாதவர் யார் யார்..??

மௌனத்தை கூட தனது இசையின் பக்க வாத்தியமாகக் கொண்டவருக்கு ஏது மொழி.. ??

காதலுக்கு மரியாதை என்கின்ற படத்தின் உச்சக் காட்சியில் எந்த வசனமும் இல்லாமல் எந்த சண்டைக் காட்சியும் இல்லாமல் வயலின்களை வைத்தே கிளைமாக்ஸை நிறுவி இருப்பாரே.. அதற்கு ஏது மொழி..??

பசிக்கும், கனவிற்கும், காதலுக்கும், காமத்திற்கும், தோல்விக்கும், தவிப்புக்கும், வறுமைக்கும், வாழ்வின் இருண்மைக்கும், நெகிழ வைக்கிற தாய்மைக்கும் , நோக வைக்கிற நோய்மைக்கும், இன்னும்.. இன்னும்.. உள்ளுக்குள் ஊறுகிற ஓராயிரம் உணர்ச்சிக்கும் ஏதேனும் மொழி இருக்கிறதா என்றால்.‌.

இருக்கிறது..

அதன் பெயர் இளையராஜா.

அதுதான் எங்கள் மொழி.
அதுதான் எங்கள் வலி
மறக்க இருக்கும் வழி.

எம் வாழ்வின்
எல்லா
நொடிகளிலும்..

இமைக்க மறந்து,
இதயம் நனைந்து,
இசையில் எமை
நிறைக்கும்,
இசை இறைவன்
இளையராஜாவிற்கு,
இனிய பிறந்தநாள்.
வாழ்த்துகள்.

❤️

மணி செந்தில்.

இசைஞானி81

HBDIlayaraja

மாமன்னன்- கட்டமைக்க முயலும் போலி பிம்பங்களும், சில அற்புத தருணங்களும்…

????

என்னை சக மனிதனாக பார்க்கும் விழிகளைக் காணும் போது தான் நான் நிம்மதி அடைகிறேன் என்றார் அண்ணல் அம்பேத்கர். சாதி என்கின்ற கொடும் பேய் சாத்தான் போல அவரை துரத்தி துரத்தி வேட்டையாடிய ரத்தப்பக்கங்களை அவரது சுயசரிதையில் படிக்கும் போது எவராலும் கண்ணீர் சிந்தாமல் கடக்க முடியாது.

ஏனெனில் சாதி பன்னெடுங்காலமாக இந்த நிலத்தில் உணர்வாக/பண்பாடாக/செயலாக /வழிபாடாக/ உணவாக/ உடையாக .. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் ஊடுருவி உள்ள அநீதியாகும்.

அதைத்தான் தனது தீவிர திரை மொழி மூலம் மாமன்னன் ஆக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ்.

மிக மிக சாதாரண “மண்”ணாக இருந்தவர் எப்படி மாமன்னனாக மாறினார் என்பதுதான் இத்திரைப்படத்தின் ஒரு வரி சுருக்கம்.

தனது முந்தைய திரைப்படங்களைப் போல சாதியை மறைமுகப் பொருளாக வைத்து உரையாடல்களை நிகழ்த்தாமல் நேரடியாக சாதியின் நுட்பமான உணர்ச்சி படிமங்களை காட்சி மொழியாக்கி இருக்கின்ற இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணனில் தனக்கு சாத்தியப்பட்ட தனக்கே உரிய திரை மொழி வசீகரத்தை மாமன்னன் திரைப்படத்தில் இழந்துவிட்டது போல ஒரு உணர்ச்சி.

சாதி முரண்பாடுகளைப் பற்றிய ஒரு உரையாடலை இரண்டு தேனீர் கோப்பைகள் ஊடாக தொடங்குவோம் என்றது பரியேறும் பெருமாள். சாதியை பற்றி மிக நுட்பமாக பேசும் அந்தத் திரைப்படத்தில் அதி உச்ச அழகியல் எது என்றால் சாதி என்ற சொல் அந்த திரைப்படத்தில் எங்கும் பயன்படுத்தப்படாமல் இருந்தது தான்.

கர்ணனும் அப்படித்தான். அடுக்கடுக்கான படிமங்களால் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்கள் சிந்திக்க நிறைய ஊடு பொருள்களை புதைத்து வைத்து சாதி உணர்ச்சியின் கோரத்தை ரத்தமும் சதையுமாக நம்மை அனுபவிக்க வைத்திருப்பார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

அதே வித்தை மாமன்னனிலும் சாத்தியமாகி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது. அதில் என்ன வருத்தம் என்றால் மாமன்னன் போன்ற சாதி மறுப்பு உளவியலை திரை மொழியாக கொண்ட திரைப்படங்கள் கலை நேர்த்தியில் மிளிர வேண்டும் என்கின்ற விருப்பம் தானே ஒழிய வேறொன்றுமில்லை.

ஆனாலும் வடிவேல் என்கின்ற ஒரு உச்ச கலைஞன் தன் கலை வாழ்வின் சிகரத்தை தொட்டு நம்மை நோக்கி திரும்பிப் பார்த்த அனுபவத்தை மாமன்னன் நமக்கு ஏற்படுத்துகிறான்.

உதயநிதி ஸ்டாலினுக்கு இதுதான் கடைசி படம் என்றார்கள். ஆனால் இதுதான் அவருக்கு முதல் படம். உணர்வுகளை முகத்தில் உறைய வைப்பதற்கான வாய்ப்புகளை இந்த திரைப்படம் தான் அவருக்கு வழங்கியிருக்கிறது.

படத்தை இந்த இருவருக்கும் இணையாக தாங்குவது பகத் பாசில் என்கின்ற நடிப்பு அரக்கன் தான். மூவரும் இருக்கும் காட்சியில் பகத் பாசில் மிக எளிதாக வடிவேலு மற்றும் உதயநிதியை ஓவர் டேக் செய்து திரையை ஆதிக்கம் செய்வது என்பது அவரது கலை மேதமை.

மற்றபடி இந்தத் திரைப்படம் பேசியிருக்கும் அரசியல் வழக்கமான மாரி செல்வராஜ் திரைப்படங்களில் தென்படாத பிரச்சார நெடி சொல்ல வருகிற மிக முக்கியமான கருத்தினை பலவீனப்படுத்துகிறது.

காட்சி அமைப்புகளில் வலிந்து திணிக்கப்பட்டுள்ள திமுக சார்பு நிலை ,புத்தர் சிலைகள் ,அம்பேத்கர் ஓவியம் ,பன்றி குட்டி டாட்டூ இவை எல்லாம் மாமன்னனுக்கு எந்த வலிமையும் சேர்க்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதி சற்றே நீண்டு ஏதாவது நடத்தி திரைப்படத்தை முடியுங்கள் என பார்வையாளர்கள் நினைக்கும் அளவிற்கு திரை மொழி சீரமைப்பு இல்லை.

திமுகவின் கருப்பு சிவப்பு சாயலில் வடிவமைக்கப்பட்ட கொடியை கொண்ட அரசியல் கட்சி கட்சியின் தலைவராக வருகின்ற மலையாள நடிகர் லால் பேசுகிற சமூக நீதி வசனங்கள் ஒருபோதும் திமுகவிற்கு பொருந்தாது என்பதுதான் கடந்த கால வரலாறு.

திராவிட இயக்கங்கள் சமூக நீதி அரசியலில் வெற்றி பெற்றிருந்தால் இன்று வரை ஒரு மாமன்னன் திரைப்படம் எடுப்பதற்கான தேவை இந்த மண்ணில் எழுந்திருக்காது. திராவிட இயக்கங்கள் தனது வரலாற்று வழிப் பாதையில் செய்து கொண்ட அப்பட்டமான சமரசங்கள், பிழைப்புவாதங்கள் போன்றவைகளால் தான் இன்னும் இங்கே சாதிய இருப்பு வலிமையாக கட்டமைக்கப்பட்டு எழுந்து நிற்கிறது.

எனவே சமூக நீதி அரசியல் என்றால் அது திமுக தான் என மாமன்னன் திரைப்படம் கட்டமைக்கின்ற போலிபிம்பம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதிக்காக மிகச் செயற்கையாக கட்டமைக்கப்பட்டது என்பதை எவ்வித உணர்ச்சியும் கடத்தாத அரசியல் பேசும் காட்சிகள் காட்டி விடுகின்றன.

வேட்பாளர் தொடங்கி மாவட்ட செயலாளர் ,ஒன்றியச்செயலாளர்,வட்டச் செயலாளர் வரை சாதி பார்த்து மிகச்சரியாக ஆதிக்க சாதிக்கு பொறுப்பளிக்கின்ற திராவிட இயக்க அரசியல்தான் மாமன்னன் மற்றும் அதிவீரன் போன்றவர்கள் அனுபவிக்கின்ற அத்தனை கொடுமைகளுக்கும் மூல காரணம் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜின் கலை ஆன்மா உணர்ந்திருக்கும் தான். ஆனாலும் அதை அவரால் ‘செஞ்சோற்றுக் கடனுக்காக’ வெளிப்படையாக பேச முடியவில்லை.

இதையெல்லாம் தாண்டி மாமன்னனில் சில அற்புத தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த மலைமுகட்டில் வடிவேலு தனது இயலாமையை எண்ணி கைப் பிசைந்து கண்கலங்கி நிற்கின்ற அந்தக் காட்சி இதுவரை தமிழ் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில் அதி உச்சமானது. அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆபத்துகளை உள்ளுணர்வால் உதயநிதி உணர்கிற தருணங்கள். தந்தை மகனுக்கு இடையே இருக்கின்ற நேசமிக்க கணங்கள் போன்ற காட்சிகளில் இயக்குனர் மாரி செல்வராஜின் திறமை பளிச்சிடுகிறது.

சாதியின் நுட்பமான புள்ளிகளை வலிமையாக பேச வந்த திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு அரசியல் அதிகாரப் போட்டி தேர்தல் என்றெல்லாம் திசை மாறி அலைகழிவது இயக்குனர் மாரி செல்வராஜ் கதை அமைப்பில் கொண்டிருந்த தடுமாற்றங்களை அப்பட்டமாக காட்டுகிறது.

மிக மிக முக்கியமான ஒரு திரைப்படமாக மாமன்னன் இருக்கும் என எதிர்பார்த்து செல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு மாமன்னன் ஒரு புதுவிதமான திரைப்பட அனுபவத்தை தரும் தான். ஆனால் ஒரு இயக்குனராக தன் படைப்பாக்க உச்சத்தின் அனுபவத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் அனுபவித்தாரா என்பது சந்தேகமே.

மாமன்னன் இன்னும் வலிமையாக இருந்திருக்கலாம்.

????

“விடுதலை”நிகழ்த்தும் அரசியல் உரையாடல்களும் அதன் ஊடாக இருக்கின்ற அரசியலும்..

????

சமீபத்தில் வெளியாகி இருக்கின்ற விடுதலை திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக அறிகிறோம். குறிப்பாக இது தமிழ்த்தேசிய அரசியலை பேசுகிறது என்று ஒரு கருத்தை தமிழ் தேசியர்கள் முன் வைக்கும் போது திராவிடக்கூடாரத்தில் இருந்தும் ,முற்போக்கு வகையறாவிடம் இருந்தும் கடுமையான வசவுகளும், பதட்டம் நிறைந்த சொல்லாடல்களும் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

விடுதலை திரைப்படம் அந்த வகையில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது என்பதை அது அடைகிற எதிர்வினைகள் மூலம் தெளிவாக புரிகிறது.

…..

திரைப்படக்கலை பற்றி அறிந்தோர், பல் மொழி பேசுகிற திரைப்படங்களை தொடர்ச்சியாக கவனித்து பார்த்து ரசித்து வருவோர் என பலரும் அறிந்த விஷயம் யாதெனில் ,
திரைப்படங்கள் கற்பனையாக கதை ஒன்றை உருவாக்கி அதை திரை மொழியாக உருவாக்கி திரைப்படமாக மாற்றுவது இது ஒரு வகை. அசலான மனிதர்களைப் பற்றி அப்படியே நகலெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சமும் மாற்றாமல் திரை மொழியாக்கி திரைப்படமாக மாற்றுவது. தான் நாம் ஆவண படங்களாக பார்த்து வருகிறோம் .

இந்த இரண்டு வகைகளையும் தாண்டி மூன்றாவது வகையாக அசலான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தாக்கம் பெற்று அதன் மூலமாக புனைவு வெளி ஒன்றை உருவாக்கி வரலாற்றையும் /கற்பனையும் கலந்த கதைகளை திரை மொழியாக்கி திரைப்படங்களாக மாற்றுவது.

எடுத்துக்காட்டாக கீழ்வெண்மணி பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை”. இது அச்சு அசலான ஆவணப்படம்.

இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கம் பெற்று பல திரைப்படங்களின் காட்சிகள் உருவாகி இருக்கின்றன. 90களில் வெளியான சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அரவிந்தன்”திரைப்படம், இதே வெற்றிமாறன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்”திரைப்படம் போன்றவை கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கத்தினால் உருவான காட்சி அமைப்புகளை கொண்டவை .இது போன்ற பல நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான திரைப்படங்களை படங்களை நாம் உதாரணமாக காட்டிக் கொண்டே போகலாம்.

அதுபோன்ற அசலான வரலாற்று மாந்தர்களையும் கற்பனைக்கே உரிய சுதந்திரத்துடன் தாண்டி மறக்கப்பட்ட புரட்சியாளர்களைப் பற்றி இத்தலைமுறையினர் தேடி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆழமான சமூக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “விடுதலை”.

வரலாற்றில் நடந்த எந்த நிகழ்வின் ஊடாக எவரும் தாக்கம் அடைந்து விடக்கூடாது என சொல்வதற்கு இங்கே யாருக்கும் உரிமை இல்லை. தாக்கம் அடைந்தவர் தனது புனைவு மற்றும் கற்பனை மூலமாக ஒரு திரை மொழி அமைக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதை இங்கே யாரும் கேள்வி கேட்க முடியாது.

விடுதலை திரைப்படத்தின் தொடக்கத்திலேயே இக்கதை மூலம் காலம் /கதை /மாந்தர் அனைத்தும் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட்டு விட்டே மிக கவனத்துடன் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஊடாக வரும் செய்திகளை தனக்கு சார்ந்ததாக காட்டிக் கொள்ளும் எவரும் இந்த அறிவிப்பினை கண்டும் காணாதது போல் நடித்து எந்த நபரும் சுயமாக சிந்திக்கவே கூடாது என மூர்க்கத்துடன் இந்த திரைப்படத்தின் மீதாக எதிர்வினை ஆற்றி வரும் சில உரையாடல்கள் உண்மையிலேயே அலுப்பு ஊட்டுகின்றன.

குறிப்பாக திராவிடம் சார்ந்து கொந்தளிப்போர் திடீரென இடதுசாரி பக்கம் எகிறி குதித்து அவர்கள் சார்பாக இவர்கள் பேசுவது போல பாவனை செய்து திரைப்படம் தகவல் பிழை/கருத்துப் பிழை கொண்டது என செய்திகள் பரப்பி வருவதை தமிழ்த்தேசியம் சார்ந்து எவ்வித உரையாடலும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதான அவர்களது நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

இதே போல இடதுசாரிகள் பக்கத்தில் இருந்தும் சோளகர் தொட்டி எழுதிய வழக்கறிஞர் பாலமுருகன் தரப்பிலிருந்தும் வருகின்ற விமர்சனப் பார்வைகளை திராவிடத் தரப்பு கூச்சல்கள் போல அணுக கூடாது என்றாலும் படைப்பாளியின் நியாயப் பாடுகளை எடுத்து வைப்பது நமது கடமை.

விடுதலை திரைப்படம் இரண்டு கூர்மையான கருத்தாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்று காவல்துறை அடக்குமுறைகள் மீதான காத்திரமான காட்சி மொழியாக்கம், மற்றொன்று தமிழ் தேசிய பார்வையுடன் கூடிய மனிதநேய புரட்சியாளர்கள் பற்றிய பிம்ப உருவாக்கம். இந்த இரண்டிலும் விடுதலை திரைப்படம் முழு வெற்றி அடைந்திருக்கிறது.

குறிப்பாக தமிழ் தேசிய புரட்சிக் களத்தில் ஆயுதம் தாங்கி தமிழர் நிலத்தில் தாக்கம் செலுத்திய புரட்சியாளர்களான மாமனிதர் புலவர் கலியபெருமாள் மற்றும் மாபெரும் தமிழ்த் தேசிய புரட்சியாளர் தமிழரசன் ஆகியோர் பற்றிய உரையாடல்களை தமிழ் தேசிய கருத்தாக்கம் கூர்மை அடைந்திருக்கிற இந்த காலகட்டத்தில் மீண்டும் இந்த திரைப்படம் உருவாக்கி இருக்கிறது. எளிய திரைப்பட பார்வையாளன் கூட யார் கலியபெருமாள் , யார் தமிழரசன் என வாசிக்க புத்தகங்கள் தேடுவதும் பார்க்க காணொளிகள் தேடுவதும் இத்திரைப்படத்தின் மூலமாக கைகூடி இருக்கிறது. திரைப்படம் என்கிற வலிமையான சாதனத்தின் வெற்றி அதுதான்.

இதைத்தான் இயக்குனர் வெற்றிமாறன் தனது நோக்கமாக கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் முன்வைத்த திரைமொழியே நமக்கு தெரிவிக்கிறது. எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர் நடிகர்களை தேர்ந்தெடுத்தது முதல், உரையாடல்களில் காட்சிகளில் ஆங்காங்கே தென்படும் குறியீடுகள் மூலமாக இந்த திரைப்படத்தை தமிழ்த் தேசியம் சார்ந்த உரையாடல்களை எழுப்புகிற ஒரு கருவியாக வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார்.
வள்ளலாரை வணங்குகிற கதையின் நாயகன் திரையில் இதுதான் முதன் முதல் என நான் கருதுகிறேன்.

திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக வருகின்ற பெருமாள் வாத்தியார் தனது இரண்டாம் பாகத்தில் மொழிக்கும் மரபிற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவம் சார்ந்த வசனங்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் என்பது புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக இருவர் திரைப்படத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் ஒருவராக காட்டிய நாசர் கதாபாத்திரம் போல விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள இன்று நமக்கு கையில் இருக்கின்ற ஒரே ஒரு மகத்தான ஆதாரம் அவரது சுய வரலாற்று நூலான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்கின்ற நூல் மட்டுமே. அந்த நூல் பற்றி திராவிட தரப்பிலிருந்து யாருமே எந்தக் கருத்தையும் குறிப்பிடாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நூல் திராவிட ஆட்சியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி ஆட்சிமுறை குறித்தான கடுமையான விமர்சனங்களை, அந்தக்கால திமுக ஆட்சியின் ஒடுக்கு முறைகளை அந்த நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பல பக்கங்களில் அதற்கான செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன அது பற்றி நாம் தனியே ஒரு கட்டுரையில் காண்போம்.

60களின் இறுதியில் எழுந்த வசந்தத்தின் இடி முழக்கம் என வழங்கப்பட்ட நக்சல் பாரி இயக்கத்தின் தலைவர் சாரு மஜும்தார் அவர்களின் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளை விட்டு புரட்சி செய்ய கிராமங்களை நோக்கி விரைந்த போது தான் கோவை பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துடிப்பான கல்லூரி மாணவரான தமிழரசனும் அழித்தொழிப்பு வேலைகளுக்காக கிராமங்களை நோக்கி நகர்கிறார். இவரோடு புலவர் கலியபெருமாள் சேர்ந்தது தமிழ்இன வரலாற்றில் முக்கியமான ஒரு இணைவு ஆகும். மேற்கண்ட இருவரும் மக்கள் யுத்த குழுவோடு முரண்பட்டு தேசிய இன விடுதலை சார்ந்து இயங்கிய போது தான் தமிழ்நாடு விடுதலைப் படை உருவானது.

எனவே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை குறித்தும் சுய நிர்ணய உரிமை குறித்தும் மேடைகளை தாண்டி களத்தில் செயல்பட முனைந்தவர்கள் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்றோர். இவர்களை எந்த வகையில் திராவிட ஆட்சியாளர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஒடுக்கினார்கள் என்பது தான் திராவிடத்தரப்பிலிருந்து மறைக்க முயல்கிற வரலாறு.

புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோர் தமிழ் தேசிய உணர்வின் மூலங்கள் என்பதை இத்தனை ஆண்டு காலம் திராவிடத்தரப்பு வரலாற்று திரிபுகளை வைத்துக்கொண்டு மண்மூடி மறைத்து வைத்திருந்ததைத்தான் விடுதலை திரைப்படம் மீண்டும் நினைவூட்டி இளைஞர்களை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் திராவிடத்தரப்பிலிருந்து கடுமையான பதட்டக் கருத்துக்களை விடுதலை திரைப்படம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்றொன்று வீரப்பன் தேடுதலின் போது மலைவாழ் ஆதிகுடிகளை காவல்துறை எவ்வாறு கொடுமைப்படுத்தியது என்பதையும் இந்த திரைப்படம் பயன்படுத்தி இருக்கிறது என பலரும் உரிமை கொண்டாடுவது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. நடந்தவை அனைத்தும் வரலாறாய் உறைந்து கிடக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறன் உறைந்துப் போன காலத்தின் நெருப்பு பொறியில் இருந்து தனக்கான கங்கை பற்ற வைத்துக் கொண்டு விட்டார். அது அவரது படைப்பாக்க சுதந்திரம்தான். வரலாறும், பதிக்கப்பட வேண்டிய அடக்குமுறைகளும் யாருக்கும் சொந்தமானது இல்லை. இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது என்பது படைப்பாளியின் படைப்பாக்க வரம்பினை நாம் நிர்ணயிக்கிற ஆபத்தை உண்டாக்கிவிடும்.

இவையெல்லாம் தாண்டி இந்த விடுதலை திரைப்படம் ஒரு மகத்தான உரையாடல் வெளியை தோற்றுவித்திருக்கிறது
என்பதுதான் நடந்திருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நடவடிக்கை. இந்தத் திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது வேறு வடிவம் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது சற்று ஏறக்குறைய சில காட்சிகள் மூலமாகவே இந்த படம் பேசுகிற அரசியல் குறித்து யார் யார் பதட்டம் அடைகிறார்கள் என்பதை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கவனத்தையும் இந்த படத்தின் திரை மொழி நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.

இது போன்ற உரையாடல்களை ஏற்படுத்துகிற திரைப்படத்தை படைக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளனின் கடமை. அந்த கடமையை வெற்றிமாறன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார்.

“ஒரு படைப்பிற்குப் பிறகு அந்த படைப்பாளன் இறந்து விடுகிறான் ” என்கின்ற புகழ்பெற்ற மேற்கோளுக்கு விடுதலை திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு அல்ல. இனி வெளிச்சம் படவேண்டியது வெற்றிமாறன் மீது அல்ல விடுதலை திரைப்படத்தின் மீது

அதன்படி நமக்கு முன்னால் விடுதலை திரைப்படம் இருக்கிறது .

அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது.

வெற்றிமாறன் மட்டுமல்ல தமிழ் தேசியர்களான நாமும் மகிழ்ச்சியோடு அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் .

அவ்வளவுதான்.

????

எங்களுக்கு இளையராஜா போதும்.

Disclaimer.

முதலில் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.”

இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே.

????

எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டுவதாக தான் நாங்கள் அப்போது தீவிரமாக எதிர்த்தோம்.

90 களின் தொடக்கத்தில் ஹெச் எம் வி நிறுவனம் ராஜாவின் தொடக்க கால 70களின் பாடல் தொகுப்பு ஒன்றினை நான்கு கேசட்டுகளாக வெளியிட்டு இருந்தது. ஒரு அபூர்வமான தொகுப்பு அது. “அன்னக்கிளியே உன்னைத் தேடுதே ,சின்னக் கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, வசந்தகால கோலங்கள், வா பொன்மயிலே, மயிலே உன் தோகை எங்கே, என அபூர்வ பாடல்கள் நிறைந்த அந்த தொகுப்பு என்னைப் போன்ற ராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு பெரும் பொக்கிஷம்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவருக்கு கிடைத்த தேசிய விருது அவருக்கு அப்போது கிடைத்த ஊடக வெளிச்சங்கள் எதுவுமே எங்களுக்கு அப்போது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பாலச்சந்தர் மணிரத்தினம் என ஏ ஆர் ரகுமான் பின்னால் அணிவகுத்து நின்றவர்களும் அதன் நடுவில் இழை ஓடிய அரசியலும் இளையராஜாவை எங்களுக்கு இன்னும் நெருக்கமானவராக காட்டியது. அது ஒரு வகையான புரிதல் கோளாறு என்பதை கொள்ள சில வருடங்கள் தேவைப்பட்டாலும் இன்றளவும் இளையராஜாவிற்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதில் எங்கள் தலைமுறையே உறுதியாக இருக்கிறது.

அதற்கு மிக முக்கியமான காரணம் இத்தனை வருட எங்களது வாழ்க்கையில் காலை மாலை சூரிய உதயம் நிலவு இரவு பசி உறக்கம் காதல் காமம் தனிமை தந்தைமை தாய்மை கொண்டாட்டங்கள் போன்ற தவிர்க்க முடியாத இந்த வாழ்வின் ஒரு அங்கம் தான் இளையராஜாவின் இசை. எங்கள் தலைமுறையில் யாரேனும் ஒருவரை சந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி அதில் நிகழ்ந்தவை குறித்து நீங்கள் கோர்வையாக சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்கள் என்றால் அவருக்கு பல இளையராஜா பாடல்கள் நினைவுக்கு வருவது இயல்பு.

என் பதின் பருவ நண்பன் ஒருவன் “தெற்கத்திக் கள்ளன்”என்ற திரைப்படத்தில் வரும் “ராதா அழைக்கிறாள் ..”என்கிற பாடலை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான முறை கேட்டுக் கொண்டிருந்ததும் அவன் ராதா என்ற பெண்ணை விரும்பி கொண்டிருந்ததும் தற்செயலானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெயருள்ள அந்தப் பெண்ணை விரும்பினானா அல்லது அந்தப் பாடலுக்காக அந்த பெண்ணை விரும்பினானா என்றெல்லாம் இதுவரையில் அந்த காதலில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதே போல நெல்லை மாவட்டத்தில் எனது கல்லூரி வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பன் ஒருவன் ஆனந்த ராகம் திரைப்படத்தில் வரும் “ஒரு ராகம் பாடலோடு ..”என்ற பாடலை ஒரு கேசட் முழுக்க பதிவு செய்து வைத்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க அதைக் கேட்டுக் கொண்டு கிறங்கி கிடந்ததெல்லாம் எங்கள் தலைமுறையில் தெருவுக்குத் தெரு நடக்கின்ற
மிக மிக சாதாரண சம்பவங்கள்.

எனது பள்ளிக்காலத்தில் எனது நண்பன் ஜோஸ்வா உடன் நான் எங்கள் ஊரில் இருக்கின்ற புராதான சர்ச்சிக்கு போவது வழக்கம். அந்த சர்ச்சில் தேவ கருணை என்கின்ற ஒரு சிஸ்டர் வேலை பார்த்து வந்தார். தேவா என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அந்த சிஸ்டர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்த போது என் வீட்டு நூலகத்தை அவருக்கு அழைத்து போய் காட்டினேன். என் மிகப்பெரிய கேசட்சேகரிப்பை பார்த்து வியந்த அவர் நல்ல பாடல் ஏதோ ஒன்றை ஒளிபரப்பம்படி கேட்டுக் கொள்ள நான் “அறுவடை நாள் “திரைப்படத்தில் வருகிற “தேவனின் கோவில் மூடிய நேரம் ..”என்கிற பாடலை அவருக்கு ஒளிபரப்பி காட்டினேன். நான் ஒரு சோக சுமைதாங்கி என்கின்ற பாடல் வரிகள் வரும் அந்த நொடியில் அவரது கண்கள் கலங்கிவிட்டன. முடிந்தவுடன் என்னிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து போன அவரை அதன் பின் நான் எங்குமே சந்திக்கவில்லை.

இப்படியாக நிறைய மனிதர்கள் நிறைய வாழ்க்கை.

இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதன் வாழ்நாட்கள் முழுக்க ததும்பி நிரம்பி எங்களை முழுகடித்துக் கொண்டிருந்தான்.

2000 களின் தொடக்க காலத்தில் இருந்து நான் திரைப்படப் பாடல்களில் இருந்து நானெல்லாம் வாழ்வின் சூழல்களால் அந்நியப்பட்டு விலகிப் போன போது ஏறக்குறைய ராஜாவும் அமைதியாகி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு “காட்டு மல்லி”பூத்திருக்கிறது.

நடுவில் நகர்ந்த நாட்கள் பற்றி அந்தக் காட்டுமல்லிக்கு எந்தக் கவலையும் இல்லை. போன்ற இளையராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு அந்தக் “காட்டுமல்லி ” குறித்து எந்த பெருமிதமும் இல்லை. ஏனென்றால் இதே போன்று பல நூற்றுக்கணக்கான பாடல்களை நாங்கள் எங்கள் தலைமுறையில் அனுபவித்து சுவைத்து ஆழ்ந்து மூழ்கி அழுது சிரித்து கலங்கி நெகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறோம்.

அது கூட சமூக வலைதளங்களில் சில உரையாடல்களை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. கீரவாணி ,ஏ ஆர் ரகுமான் போன்று ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் போல இளையராஜா ஏன் ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்பதான கேள்விகள் “உன் கண்களுக்கு உலகிலேயே அழகான உன் தாய் ஏன் உலக அழகியாக மாறவில்லை …?” என்பது போல அபத்தமாக இருந்தது.

ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய “ஜெய் ஹோ ” பாடலும் கீரவாணி இன்று ஆஸ்கர் விருது வாங்கிய “நாட்டுக்குத்து “பாடலும் மிகச்சாதாரணமாக நாம் கடந்து போனவை. நமக்குள் சிறிதளவு அதிர்வை கூட அந்தப் பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பது நிஜம். விருதுகள் அதற்கு பின்னால் இருக்கின்ற வணிகங்கள் இவைகளைப் பற்றி பேசுவது என் வேலை அல்ல. ஆனால் வணிகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு , இளையராஜாவின் அரசியல் அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ராஜாவின் இசை என் ஆன்மாவை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது.

என்றாவது பின் இரவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும்போது கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தில் வரும் தாலாட்டும் பூங்காற்று என்கின்ற ஜானகி பாடலை ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு கால எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கைதி போல நீங்கள் சுழன்று அடித்து இறந்த காலத்திற்கு தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பது உண்மை. இது போன்ற அனுபவங்களை மற்றவர்களின் எந்த பாடல்களும் தருவதில்லை என்கிற கேள்விகளுக்கெல்லாம் இளையராஜாவிடம் கூட பதில் இல்லை தான்.

சமீபத்தில் விமான பயணத்தில் 18 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் “அலைகள் ஓய்வதில்லை “படத்தின் “புத்தம் புது ராகம் ..”என்னை அப்படியே தூக்கிச் சென்று மன்னார்குடி வீதிகளின் அதிகாலை பனிக்குளிரோடு நிற்க வைத்தது.

தமிழனாகிய நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் மூலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது.
என்னை போன்ற பல கோடி தமிழர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

எங்களுக்கு இது போதும்.
இது மட்டும் போதும்.
விருதுகளை அவரவர் வைத்துக் கொள்ளட்டும்.
அதற்கு எம் வாழ்த்துக்கள்.

❤️

பொன்னியின் செல்வன் பார்ப்போர் கவனத்திற்கு…

????

அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து “புல்லரிப்போடு” இருக்கின்ற அனைவருக்கும்…

1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது.

2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உள்நோக்கத்தோடு எழுதியுள்ளார் என்பதான விமர்சனங்கள் அந்தக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் படுகொலை என்பது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் அதை மட்டுப்படுத்தவே நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை முன்வைத்து “நந்தினி- ஆதித்த கரிகாலன் காதல்” என்பதான கற்பனைக் கதை ஓட்டத்தை அமரர் கல்கி எழுதினார் என்றும் அது பெரு மாவீரனான ஆதித்த கரிகாலன் புகழுக்கு எதிரான செயல் என்பதான விமர்சனங்கள் அப்போதே உண்டு.எனவே புல்லரிப்பாளர்கள் ‘விக்ரம் – ஐஸ்வர்யா ராய்’ ஜோடியை பார்த்துவிட்டு இதுவே தமிழரின் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள்.

3. இது ஒரு திரைப்படம் என்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுமே வரலாற்றை தழுவி மணிரத்னம் செய்கிற ஆக்கங்களில் அவருக்கென்றே உரித்தான மேல்தட்டு வலதுசாரி ‘அரசியல்’ இருக்கும் என்கிற கவனத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஈழத்தின் வீர வரலாற்றை ஆயுத வியாபாரிகளின் மோதல் என இழிவுபடுத்திய மணிரத்னம் , எடுத்துள்ள ‘பொன்னியின் செல்வனில்’ அல்ல..அல்ல PS-1 ல் ( ப்ளே ஸ்டேஷனா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்.) நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விமர்சிக்கிற மனப்பாங்கு பார்வையாளர்களுக்கு வேண்டும்.

4. எல்லாவற்றிற்கும் மேலாக அதீதமாக ஒலிக்கும் இந்த திரைப்பட விளம்பரத்தின் மூலமாக திடீரென கவனம் பெற்று இருக்கிற ‘ராஜராஜ சோழன்’ இதோ கும்பகோணத்தில் அருகே இருக்கிற உடையாளூரில் எவ்வாறு பராமரிப்பின்றி படுத்து கிடக்கிறார் என்கின்ற காட்சியை பொன்னியின் செல்வன் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை அவசியம் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றால், இக்கதை, திரைப்படம், விளம்பரம், வணிகம் இவைகளுக்கு ஊடாக இருக்கிற ‘அரசியல்’ புரியும்.

5. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை அவரே இக்கதையின் முன்னரையில் சொன்னது போல சோழ வரலாற்றை ஆய்வு செய்த சதாசிவ பண்டாரத்தார், கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் அறிஞர்களின் உழைப்பிலிருந்து எழுத்தாளப்பட்ட சில வரலாற்று செய்திகளை கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் ஆழ்வார்கடியான் நம்பி பூங்குழலி நந்தினி குடந்தை ஜோதிடர் என பல கற்பனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.

சாண்டல்யன் எழுதிய கடல்புறா போன்றது தான் பொன்னியின் செல்வனும். இது வரலாறு அல்ல.

இந்த புரிதலோடு திரைப்படத்தை அணுக வேண்டும்.

6. வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்கும் போது இருக்க வேண்டிய கவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறதா என்பதை எல்லாம் திரைப்படம் சொல்லட்டும். ஆனால் வரலாற்றில் பொன்னியின் செல்வனில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்த போது அருள்மொழி வருமனுக்கு 16 17 வயது இருக்கலாம். ( ஜெயம் ரவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கற்பனை என்பதோடு நிறுத்தினால் இந்த பிரச்சனை இல்லை.) ஆதித்த கரிகாலனுக்கு 20 21 இருக்கலாம் .( 20 21 வயது இளைஞனுக்கு விக்ரம் போல தாடி மீசை முளைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் ‌. இது கற்பனை. அவ்வளவுதான்.)

எனவே இதை சோழர் வரலாறாக திரைப்படம் பார்க்க வரும் குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடாதீர்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் சோழர் வரலாறு பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றை உண்மையான ஆவணங்கள் மூலம் நாம் படித்தறிந்து நம் பிள்ளைகளுக்கு கடத்துவோம். பிழையான வரலாறுகளால் தான் இன்னும் இந்த தமிழினம் அடிமையாக கிடக்கிறது என்கிற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். திரைப்படங்களை வரலாறாக புரிந்து கொண்ட பேதமையால் தான் இங்கே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஓடியது. மருது பாண்டியர்கள் வரலாற்றை அசலாக பேசிய ” “சிவகங்கைச் சீமை” தோற்றது.

5. மற்றபடி திரைப்படம் என்கிற அறிவியல், அது தருகிற வசீகரம், தொழில்நுட்பத்தால் விளைகிற அதிசயங்கள், திரையில் விரியும் நடிகர்களின் திறமை ஆகியவற்றை ‘ஒரு திரைப்படப் பார்வையாளன்’ என்கிற முறையில் கொண்டாடி மகிழ்வோம்.‌

ஆனால் இதுவே வரலாறு என நம்பி தொலைக்கும் பேதைமை தொலைப்போம்.

கவனம் கொள் தமிழினமே..

காலப் பயணத்தின் ஊசலாட்டம்.

“சுழலும்

வாழ்வென்ற

இசைத்தட்டில்

அடுத்த வரி

தாண்ட

மறுக்கிறது

என் ஆன்ம முள்.

கீறல் விழுந்த

இசைத்தட்டை

கேட்க முடியாது

என்பதை யார்

அதற்குச் சொல்லுவது..?”

என்கிற எனது பழைய கவிதை ஒன்று

நினைவுக்கு வருகிறது. கடந்த காலம் என்கிற பொக்கிஷ மினுமினுப்பில் உறைந்து நிகழ்கால அந்திச் சிவப்பை தரிசிக்காமலேயே தவறவிடுகிறோம்.

எத்தனையோ உரையாடல்களில் பலரும் சொல்வது இறந்தகால பசுமை நினைவு ஒன்றைதான். எப்போது தவிப்பு ஏற்பட்டாலும் இறந்தகால கிடங்கிற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அதன் நினைவுச் சூட்டினில் கதகதப்பாய் கிறங்கிக் கிடக்கிறோம்.

பால்யமோ, பதின்வயதோ , கல்லூரியோ, முதல் வேலை பார்த்த இடமோ, நாம் நினைத்தால் ஓடி புகுந்து கொள்ளும் மாய கதவு ஒன்றினை நினைவுகளின் வாயிலாக நாம் பெற்றிருக்கிறோம். காதலோ காமமோ காயமோ எல்லா உணர்ச்சிகளுக்கும் நம்மிடத்தில் நினைவுகள் இருக்கின்றன.

அப்படி நினைவுகளுக்கும், நிகழ்காலத்திற்கும் நடக்கிற ஊசலாட்டத்தில் தன்னையே இழந்து தானே மீட்டு எடுத்துக் கொள்கிற ஒரு வயதான பெண் மற்றும் ஒரு இளைஞனின் கதைதான்

My beautiful wringles.

சரிகா (Dilber) இந்தக்கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அவருக்கு மிக மிக எளிமையாக இருந்திருக்கும். போகிற போக்கில் அசாத்தியமாக உணர்ச்சிகளை முகத்தில் கொண்டு வந்துவிடுகிறார். இளைஞன் கதாபாத்திரத்தில் தனேஷ் ராஸ்வி (Kunal )என்ற நடிகர் நடித்திருக்கிறார்.

Wringles என்றால் வயதான காலத்தில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை சொல்கிறார்கள். அந்தந்தக் காலகட்டத்தை வாழாமல் தவற விடுவதும், வாழ முயற்சிக்கும் புள்ளிகளில் குற்ற உணர்வு கொள்வதும் , பிறகு நேர்மையாக அனைத்தையும் உணர்ந்து கொண்டு

கடப்பதும் பற்றிய மனித உணர்வுகள் பற்றிய கதை இது.

பல்வேறு வலிகளுக்கும் ,ஏக்கங்களுக்கும் பின்னால் ஒரு சிறு புன்னகை முடிவாக இருக்கிறது என்பதை மிகமிக கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு சூழலில் இருந்து தப்பித்துக்கொள்ள அதன் போக்கிலேயே கடந்து போவது மிக மிக முக்கிய குணாதிசயம். தேங்கி நிற்க நிற்க வலி மட்டுமே மிச்சம். இந்த படத்தில் காட்டப்படும் ஒரு பழைய கார் போல நம் அனைவருக்கும் நம் மனதில் ஒரு பழைய கார் ஒன்று இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் அதன் கதவைத் திறந்து அதன் இருக்கையில் அமர்ந்து நாம் கலங்கவோ, மகிழவோ தொடங்கி விடுகிறோம்.

நிகழ்காலத்தில் வாழ்வது குறித்து ஆன்மீகம் பேசுகிறது. அந்தந்த நொடிகளை ஆழமாக கவனித்து வாழ்வது என்பதுதான் வாழ்வியல் என்று வாழ்க்கை பாடங்கள் போதிக்கின்றன. ஆனாலும் நாம் யாருமே அவ்வாறு இருப்பதில்லை.

‘நினைவோ ஒரு பறவை..’ என்ற புகழ்பெற்ற பாடல் வரி இருக்கிறது. நினைவு பறவையின் சிறகடிப்பில் நிகழ்கால நீல வானத்தின் வசீகரத்தை நாம் இழந்து விடுகிறோம் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

பிரைம் வீடியோவில் Modern love தொகுப்பில் கிடைக்கிறது.

Page 1 of 4

Powered by WordPress & Theme by Anders Norén