என் அண்ணனுக்கு…எனக்கு அந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. நம் உயிர் தலைவர் அவர்களின் உடல் கிடைத்து விட்டதாக கூறி சிங்களன் செய்தி வெளியிட்டு மகிழ்ந்த நாள். அந்த செய்தி கிடைத்த போது நான் ஒரு முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். எந்த திசையும் தெரியாமல்.நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் திசையற்றுப்போனதருணம் அது. எல்லா ஊர்களிலும் ஈழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த எண்ணற்ற இளைஞர்கள் கண்கலங்கி , ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தப் போதும் கூட தலைகுனிந்து மௌனமாக கடந்த பொழுதுகள் அவை.
திசையழிந்தஇருள் வெளியில் நின்றுகொண்டிருந்த இனத்திற்கு பற்றிக்கொள்ள ஒரு நம்பிக்கை தேவைப்பட்டது. அவநம்பிக்கை மிகுந்த எங்களது விழிகளில் ஒளி மீண்டும் பிறக்க ஒரு பகலவன் தேவைப்பட்டான்.அப்போதுதான் நாங்கள் உங்களை தேடினோம். அப்போது நீங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை.இரண்டு மாதம் கழித்து நீங்கள் என்னை அழைத்தீர்கள் அண்ணா.நான் மறுக்கவே முடியாத ஒரு அழைப்பு அது. அந்த நொடியிலிருந்து அக்குரலின் எந்த ஒரு அழைப்பிலிருந்தும் எக்காலத்திலும் நான் விலகியதில்லை.அறுத்தெறிவோம் வாரீர் என நீங்கள் அழைத்த போதுதான் குனிந்த எங்களது தலைகள் நிமிர்ந்தன. நாங்கள் பற்றிக் கொள்வதற்கு நம்பிக்கை மிகுந்த ஒளி உமிழும் ஒரு பற்றுக்கோடு கிடைத்துவிட்டது.
ஆம். எம் இருட் வாழ்வின் பகலவன் நீங்கள்தான்.ஆம் அண்ணா. நீங்கள் மட்டும் தான் எனது ஒரே நம்பிக்கை. எனக்கு மட்டுமல்ல என்னை போல பல லட்சக்கணக்கில் இருக்கும் ஊருக்கு ஊர் நீங்கள் அலைந்து திரிந்து அரும்பாடுபட்டு வேர்வை சிந்தி உருவாக்கி இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் மட்டும்தான் ஒரே நம்பிக்கை.குறிப்பாக நான் நம்பிக்கை கொள்வது உங்களோடு மட்டும்தான்.இன்றளவும் நான் தட்டுத்தடுமாறி நடக்கும்போது கீழே விழுந்து விடுவேனோ என நினைக்கும் அந்த ஒரு நொடியில் உங்களது குரலோ அல்லது உங்களது முகமோ எனக்கு நினைவுக்கு வந்து நான் நிமிருவதற்கான வலு எனக்கு பிறக்கிறது.
தனிப்பட்ட என் வாழ்விலும் , சமூக வாழ்விலும் எனக்கு எல்லாமே நீங்கள் தான். எனது ஆசிரியர், எனது அண்ணன், வழி தடுமாறும் நேரங்களில் வழியாகி கிடைக்கும் எனது விழி என எல்லாமுமே எனக்கு நீங்கள் தான். உங்களுக்கு எதுவும் ஆகாது அண்ணா. உங்களை மாவீரர் தெய்வங்கள் எப்போதும் பாதுகாப்பார்கள் என்பதை நான் அறிவேன். இந்த இனம் வாழ இந்த மொழி செழிக்க நீங்கள் காலத்தினால் உருவாக்கப்பட்ட மகத்தான கருவி அண்ணா.அந்தப் புனித மிக்க காலக் கருவியின் கடமை முடியாமல் எதுவும் உங்களுக்கு நடக்காது அண்ணா.
இன்று ஒரு நொடி நீங்கள் மயங்கிய அந்தத் தருணத்தில் என்னைப்போன்ற எத்தனையோ பேர் இறந்து பிறந்தோம் அண்ணா.உங்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை கலங்கிக்கொண்டே எங்கள் விழிகள் எங்களுக்கே இன்றைய நாளில் உணர்த்தின.வலிமிகுந்த இந்த நாளில் நாங்கள் வெற்றிகரமாக சோழ மண்டல நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டத்தையும் நடத்தினோம் அண்ணா. வழக்கத்துக்கு மாறாக பெரும் கூட்டம் கூடியது. ஆனால் எல்லோரும் வலியால் அமைதியாக இருந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் நீங்கள் நலம் என்ற செய்தியை நம்பிக்கையோடு பகிர்ந்து கொண்டார்கள்.உங்களை உயிராக நேசிப்பவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி உங்களுக்குப் பிடித்தமான கட்சி வேலையை உச்சபட்ச கவனத்தோடு செய்து கொண்டிருந்தோம்.
அதுதான் உங்களுக்கு நாங்கள் செய்கிற நேர்மையான பேரன்பின் பரிசு என்பதை நான் அறிவேன்.
விரைவில் தேறி வாருங்கள் அண்ணா.
இந்த இனத்தை, இந்த நிலத்தை தேற்ற வாருங்கள்.
உங்கள் தம்பி.
மணி செந்தில்.
( ஏப் 2-2022 அண்ணன் சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உடல் நலிவுற்றப் பொழுதில்..)