மீண்டும் ஒரு நிம்மதியற்ற இரவாக இந்த இரவு கழிந்து கொண்டிருக்கிறது. சாத்தான்குளம் தந்தை- மகன் படுகொலை செய்திகளை பார்க்கும்போது சத்தியமாக மனநிம்மதி கொள்ள முடியவில்லை. நானும் என் கவனத்தை திசை திருப்பிக் கொள்ள என்னென்னவோ செய்து பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் அதே காட்சிகள் நினைவுக்கு வந்து மனதை அலைக்கழிக்க செய்கின்றன.இதுபோன்ற கொடுமைகள் ஈழ நிலத்தில் நடந்ததாக சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தந்தைக்கு முன்பாக மகனையும், தாய்க்கு முன்பாக மகள் மகனையும், பெற்ற பிள்ளைகளுக்கு முன்பாக பெற்றோர்களையும் கொடுமைப்படுத்தும் காட்சிகளை சிங்களப் பேரினவாத அரசு செய்வதாக நான் செவி வழி செய்திகளாக படித்திருக்கிறேன். அறிந்திருக்கிறேன். அதேபோன்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் நடைபெறாது என நம்பியிருந்தேன். இது ஜனநாயக நாடு. சட்ட மாண்புகளின் அடிப்படையில் அரசுகள் நடைபெறுவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமை, எழுத்துரிமை ,கருத்துக்களை பகிரும் உரிமை என பல்வேறு உரிமைகளின் வாயிலாக நமது சுதந்திர வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்கின்ற உண்மையை இப்போது நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி இருக்கிறோம். எந்த நேரத்திலும் உங்கள் குதத்தில் லத்திகள் திணிக்கப்படும் ஒரு நிலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை சாத்தான் குலத்தைச் சேர்ந்த தந்தை- மகன் ஆகிய 2 பேர் தங்களது உயிரை இழந்து உலகத்திற்கு அறிவித்திருக்கிறார்கள்.இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு எத்தனையோ மாறுதல்கள் இந்த நாடு சந்தித்து இருக்கிறது. ஆனால் காவல்துறை கட்டமைப்பில் மட்டும் இந்த நாடு இன்னும் ஆங்கிலேயர் காலத்திலேயே இருந்து வருவது என்பது சத்தியமான உண்மை. எத்தனையோ மனித உரிமை விழிப்புணர்வு ஏற்பட்ட இக்காலத்திலும் கூட ஒரு காவல் அதிகாரி நட்டநடு வீதியில் ஒரு பெண்ணை அறைந்ததில் அந்தப் பெண்ணின் காது சவ்வு கிழிந்து செவிடாகி போனதை நாம் ஒரு செய்தியாக கண்டு கடந்து போனோம்.. அணு உலைக்கு எதிராக அமைதியாக போராடிக்கொண்டிருந்த கூடங்குளம் மக்களை கடற்கரையில் வைத்து அடித்து, இழுத்து போனபோது.. சில அனுதாப முணுமுணுப்புகளும், அரசியல் சார்ந்து உப்புச்சப்பற்ற கருத்துக்களையும் தவிர நம்மிடத்தில் இருந்து எதுவும் வரவில்லை. பல வருடங்களுக்கு முன்பாக சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண் காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது ஏற்பட்ட அதிர்வலைகள் சில வாரங்களில் அடங்கி அது ஒரு காலத்து செய்தி என்பதைத்தவிர வேறு எதுவும் நிகழாமல் அடங்கியது.எல்லா அநீதிகளும் ஒரு செய்தி என்கிற அளவிற்கு நவீன உலகத்தின் சமூக வாழ்க்கை நமது மனநிலையை மாற்றி வைத்திருக்கிறது. ஊடகங்களும் அடுத்தடுத்து வருகிற முக்கிய செய்திகளிலும், தற்போதைய செய்திகளிலும் கவனத்தை வைத்துக்கொண்டு ..அடுத்து ஏதாவது ஒரு செய்தி வருகிறதா என காத்துக்கொண்டிருக்கிற, வக்கிரம் மிகுந்த வணிக எதிர்பார்ப்பிற்கு மாறிவிட்டன. அவர்களுக்கு யார் முதலில் செய்தி தருவது என்பது மட்டுமே முக்கியமானது. டிஆர்பிக்காக போட்டி போட்டுக் கொள்ளும் போட்டியில் ஒருவர் செத்தாலும் அது செய்திதான். ஒரு கோடிப் பேர் செத்தாலும் அது ஒரு செய்தி தான். அதைத் தாண்டி இங்கு எதுவும் இல்லை.மனித உயிருக்கு இங்கே மதிப்பில்லை. அப்படி ஒரு மனநிலையை திட்டமிட்டு அதிகாரம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. மனித உயிருக்கு மதிப்பு ஏற்பட்டால் சகமனிதன் கேள்விகேட்க தொடங்குவான். கேள்வி கேட்டால் பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளால் போராட்டங்கள் வெடிக்கும். போராட்டங்களால் அதிகாரத்திற்கு அழுத்தங்கள் மிகும். எனவேதான் மனித உயிருக்கு மதிப்பற்ற நிலையை அதிகார நிறுவனங்கள் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கின்றன.குறிப்பாக காவல்துறை எப்போதும் அதிகாரத்தின் அடியாளாக இருந்து வருவதென்பது ஆங்கிலேயர் காலத்து தொடர்ச்சி. எனவே அரசு /அரசாங்கங்கள் உள்ளிட்ட அதிகார நிறுவனங்கள் தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறைக்கு உள்ளீடாக கட்டற்ற சுதந்திரத்தை வாரி வழங்கி இருக்கின்றன. அந்த கட்டற்ற சுதந்திரம் தான் சர்வாதிகாரமாக, மனித உயிர்களை பலி கொள்ளும் ஏதோச்சதிகாரமாக மாறி இருக்கின்றது. நேர்மையாக இருக்கின்ற சில காவல் துறையை சேர்ந்த நண்பர்கள் கூட என்னிடம் எத்தனையோ முறை கனிவாக அறிவுறுத்தி இருக்கிறார்கள். “ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை..” என்று கேட்பதில் ஒரு பக்கம் அன்பு இருந்தாலும்.. இன்னொரு பக்கம் நம்மை தடுக்கவேண்டும், கொஞ்சம் அச்சுறுத்தி வைக்க வேண்டும் என்கின்ற அவர்களது உள்ளார்ந்த விருப்பத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்படியானால் காவல்துறையில் நல்லவர்களே இல்லையா என்று சொன்னால்.. அது மிகச் சொற்பமான எண்ணிக்கையில் என்பதுதான் நமக்கு முன்னால் இருக்கின்ற மாபெரும் ஆபத்து. அந்த சொற்பமான எண்ணிக்கை பெரும்பான்மையான எண்ணிக்கையாக மாறவேண்டும் என்பதுதான் இரண்டு உயிர்களை பறிகொடுத்து நிற்கின்ற ஒட்டுமொத்த சமூகமும் காவல்துறையிடம் எதிர்பார்க்கின்ற மாற்றம். அதேபோல நமது மனநிலையும் மாற வேண்டியது அவசியம். ஏதோ ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்படும் ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்படும்போது திருப்தி அடைகிற “கூட்டு மனசாட்சி”என்கின்ற பொது உளவியலை நமக்குள் நாம் அழித்தொழிக்க வேண்டும். எந்த குற்றத்தையும் நீதிமன்றம் மூலம் தண்டிக்க வேண்டும் என்கின்ற ஜனநாயக வழி குணாதிசயம் நமக்கு ஏற்பட வேண்டும். இல்லையேல் காவல்துறையின் துப்பாக்கி முனையிலும், குதங்களில் நுழையும் லத்தி முனையிலும் தான் நாட்டின் நீதி பரிபாலனம் நடைபெறும்.காவல்துறையின் அடக்குமுறை என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. சற்று நுட்பமான, அதே சமயத்தில் கனிவும், மதிப்பும் இல்லாத, உயர்ந்த குரலோடு கூடிய அவர்களது அதிகார ஆணவ நடவடிக்கைகள் ஒருபோதும் சட்டத்தின் வாயிலாக, நீதியின் வடிவத்தோடு நடைபெற்றதில்லை. வரம்பு மீறல் என்பது அவர்களைப் பொறுத்தவரையில் எழுதப்படாத சட்டம்.கடந்த 2019 மாவீரர் தின குருதிக்கொடை அளிக்கும் நிகழ்வின்போது நாங்கள் இதை அனுபவித்தோம். குருதிக் கொடை என்பது மனித உயிர் காக்கும் முக்கிய சேவை. ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு நிகழ்ச்சியாக குருதிக்கொடை நிகழ்வினை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கும்போது காவல் அதிகாரிகள் வந்து எங்கள் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார்கள். கேட்டால் அனுமதி பெறவில்லை என்றார்கள். அதிலும் அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி ஒருவர் அங்கே இருந்த மருத்துவப் பணியாளர்களை தடித்த வார்த்தையால் ஏசத் தொடங்கினார். நிகழ்வு நடத்த மண்டபம் தந்த மண்டப மேலாளர் ஒருமை வார்த்தைகளால் ஏசப்பட்டார். உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு யாரும் அனுமதி பெறுவதில்லை. மேலும் குருதிக்கொடை நிகழ்ச்சி குடந்தை அரசு தலைமை மருத்துவமனை அனுமதி பெற்று அதன் ஊழியர்களால் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. அரசு மருத்துவமனைக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னிச்சையாக முன்வந்து குருதி வழங்குவது என்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒரு செயல். ஆனால் நாங்கள் தேசியத் தலைவர் படம் பயன்படுத்துகிறோம் என்றும், மண்ணிற்காக போராடிய மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம் என்றும் அதனால் நாங்கள் குருதி கொடுக்கக்கூடாது என்றும், காவல்துறையினர் எங்களைத் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்திய காவல் அதிகாரி “இதை எவ்வாறு உங்களால் தடுத்து நிறுத்த முடியும்..” என கேட்ட என் முகத்தை பார்க்கவே இல்லை.என் அருகில் நின்று கொண்டிருந்த தம்பிகளை விரட்டுவதிலேயே அவர் குறியாக இருந்தார். சத்தமாகப் பேசி அங்கே இருந்த பெண்களை, புதிதாக வந்து இருப்பவர்களை அச்சுறுத்த வேண்டும் என்கின்ற அவரது நோக்கம் எனக்கு புரிந்தது.நாட்டில் எவ்வளவோ தவறுகள் நடக்கின்றன அதைத் தடுக்காமல் குருதி கொடுப்பதைப் போய் தடுக்கிறீர்களே என கேட்ட நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர் தொகுதி இணைச்செயலாளர் தம்பி பிரகாஷ் யை ஒரு உதவி ஆய்வாளர் அடிக்க பாய… எந்த நொடியும் பெரும் தகராறு வெடித்து இரு தரப்பிற்கும் கைகலப்பு உண்டாக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் காவல்துறையின் லத்திகள் மக்கள் உயிர் காக்க, குருதி கொடுக்க வந்த, இந்த மண்ணை நேசிக்கின்ற இளைஞர்களின் புட்டத்தை பதம் பார்த்து முடித்திருக்கும். அந்த நேரத்தில் இதை புரிந்துகொண்ட நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் திட்டமிட்டு தம்பிகளை அப்படியே அமைதிப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குருதிக்கொடை நிகழ்வினை தொடர்ந்து நடத்தினோம். இந்த நிகழ்வு குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியிடம் அன்று மாலையே சென்று புகார் அளித்தோம். ஆனாலும் ஒரே துறை அல்லவா.. ஏதேதோ சமாதானம் பேசி இனி இவ்வாறு நடக்காது என்றெல்லாம் கூறி அந்த மேலதிகாரி எங்களை அனுப்பி விட்டார்.நவம்பர் மாதம் வந்தாலே காவல்துறை எங்கள் மீது பாய தொடங்கிவிடும். எளிய பிள்ளைகள் காசு வசூலித்து தலைவர் பிரபாகரன் படம் அச்சிட்டு சுவரொட்டி ஒட்டுவார்கள். அதை காவல்துறை விடியவிடிய கிழித்துக் கொண்டிருக்கும். சென்ற வருடம் கூட எனது சின்னத்தம்பி ஒருவன் கேட்டான். இந்த நாட்டை கொள்ளை அடித்து சுரண்டிக் கொழுத்த எத்தனையோ அரசியல்வாதிகளின் படங்கள் சுவரொட்டிகளாய் இங்கே இருக்கலாம். ஆனால் இனத்திற்காக மொழிக்காக தன்னையே அர்ப்பணித்து போராடிய எங்கள் உயிர் தலைவன் படத்தை அவர் பிறந்தநாளில் கூட நாங்கள் ஒட்டக்கூடாதா என்று..கேட்டால் காவல்துறையிடம் தயாராக ஒரு பதில் இருக்கிறது. “மேலிட உத்தரவு.” அந்த மேலிடத்தைத்தான் பலரும் பல காலமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த சட்டத்தின் வாயிலாக இதுபோன்ற அடாவடிகளை காவல்துறை செய்து வருகிறது என்பது யாருக்குமே தெரியாது. தெருவோர வியாபாரிகளிடம் அத்துமீறுவது, மாதக்கடைசியில் எங்கேயோ நின்று கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சாவியை பிடுங்கிக்கொண்டு லைசென்ஸை எடு.. ஹெல்மெட் போடல.. ஹெட்லைட் சரியா எரியல ..என்ற கேள்விகள் எல்லாம் கேட்டு, கடைசியில்” எதற்கு கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டும்.. ஏதாவது கொடுத்து விட்டு போங்கள்” என வசூலை போடுவது, காவல் நிலையத்தில் அமர்ந்துகொண்டு நீதி அரசர் போல வாத பிரதிவாதங்களை கேட்டு நீதிமன்றத்தையே நடத்துவது, என நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் அமைதியாக கடந்து போகிறோம். எதிர்பாராத விதமாக ஒரு நாள் சாலையில் அவசர வேலை காரணமாக வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு ஒதுங்கி நிற்கின்ற நிலை நமக்கு வரும் போதுதான் அது பற்றியே நாம் சிந்திக்கத் தொடங்குகிறோம். அப்போது கூட கையில் இருப்பதை கொடுத்து விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்து செல்வதை தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அப்படி ஓடி ஓடி த்தான் அநியாயமாக இரண்டு உயிர் கொலை செய்யப்படுவதற்கு நாமும் மறைமுக காரணமாக அமைந்திருக்கிறோம். உண்மைதான்.. நடந்து முடிந்திருக்கிற 2 கொலைகளுக்கும் நாமும் ஒரு காரணம்.அநீதியை எதிர்ப்பது என்பது பிரச்சனையில் சிக்கிக் கொள்வதல்ல. அது சாதாரண வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கிற இயல்பு என்பதனை எப்போது குணாதிசியமாக கொள்கிறோமோ அப்போதுதான் “சாத்தான்குளங்கள்” இல்லாது ஒழியும்.சாலையில் என்று யாராவது போராடிக்கொண்டு இருந்தால்.. நமக்கென்ன என வேடிக்கை பார்த்துவிட்டு கடக்கும் ஒவ்வொருவரின் புட்டத்திலும் நுழைய ஒரு அதிகாரத்தின் லத்தி காத்துக்கொண்டிருக்கிறது என்பதை உணரும் தருவாயில் தான்.. அதிகாரங்களை எதிர்த்து நிற்பதற்கான வலிமை ஏற்படும். இல்லையேல் “சாத்தான்குளங்கள்” சரித்திரத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டே செல்லும்.வாழ்வதற்கான போராட்டம் என்கிற நிலை மாறிவிட்டது.இனி போராட்டமே வாழ்க்கை என்கிற நிலை தொடங்கியிருக்கிறது.எப்போதுமே அமைதியாக இருப்பதைப் போன்ற அநீதி எதுவும் இல்லை.எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்கின்ற அனைத்து குரல்களும் நடக்கின்ற அனைத்து தவறுகளுக்கும், கொலைகளுக்கும் ஆதரவானதே..அநீதியை எதிர்த்து எங்கிருந்தோ எதிர்த்து எழும்பும் ஒவ்வொரு குரலும் இனி இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் இருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் வெளிச்சத் துளிகள்.
தாய் பத்து மாதத்தோடு கருப்பையிலிருந்து குழந்தையை இறக்கி வைத்து விடுகிறாள். ஆனால் தந்தைகளோ, தன் ஆயுட்காலம் முழுவதும் குழந்தைகளை தோளில் சுமக்கிறார்கள்.நானெல்லாம் தந்தையின் சொல் பேச்சு கேட்காத ஊதாரி மகனாக ஊர் சுற்றித் திரிந்தவன். எப்போதும் அவர் சொல் பேச்சு கேட்காமல் எதிர்திசையில் பயணித்தவன். ஆனால் என் தந்தை வித்தியாசமானவர். நான் எந்த திசையில் பயணிக்கிறேனோ அந்த திசையில் தனது திசைக்காட்டியை திருப்பி வைப்பவர். திக்குத் தெரியாத இருள் சூழ்ந்த வனத்தில் நான் பயணித்தாலும் திசைகாட்டும் நட்சத்திரமாக அவர் நகர்ந்து கொண்டிருப்பார்.தோல்விகளால் நான் துவண்டு விழும் தருணங்களில் …. வெறும் சொற்களால் என்னை அவர் தேற்றியதில்லை. புத்தகங்களைக் கொண்டு என் உலகத்தை நிரப்பினார் அவர். அனைத்து துன்பத் துயர பூட்டுகளுக்கும் புத்தகங்களை சாவியாக நம்பினார் அவர். உண்மையில் பூட்டுகள் திறக்கத்தான் செய்தன.இந்த உலகில் தனியனாக பிரிந்த எனக்கு என் தந்தையின் உடன் இருப்பு வார்த்தைகளால் விவரிக்க முடிகிற புறத்துணை அல்ல. தனிமையின் பிசுபிசுக்கும் இருட்டை தகர்த்து, வெளிச்சக் காடாக என் அகத்தை மாற்ற என் விரல்களோடு கோர்த்துக்கொண்ட அவரது விரல்கள் சுடரொளி மிகுந்தவை.என் தந்தை நேர்மையானவர். கோபம் கொள்ளத் தெரியாதவர்.சக மனிதருக்கு துளியளவு கூட துன்பமோ துரோகமோ நினைக்க முடியாதவர். தன்னை எப்போதும் எளியவராக, முன்னிறுத்தி கொள்ளாத மனிதராக வாழ்பவர். அந்த வகையில் அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள பெற்றுக் கொள்ள ஏராளமான பொக்கிஷங்களை வைத்துக் கொண்டிருக்கிற அற உணர்வுகளின் புதையல் அவர்.வெறும் பெயருக்கு முன்னால் முன்னெழுத்து தருகிறவர் மட்டும் தந்தை அல்ல. அந்தத் பெயரின் அடையாளமாகவும், அந்தப் பெயரின் ஆதர்சமாகவும் மாறி, தன் வியர்வையால்துளித்துளியாக மகனை உருவாக்கி அவையத்து முந்தி இருக்க அனுப்புபவர்கள் தான் தந்தைகள்.இந்த உலகத்திற்காக தந்தைகள் எந்த மகனையும் தயாரிப்பதில்லை. ஆனால் மகன்களுக்காக தந்தைகள் ஒரு புது உலகத்தை தயாரிக்கிறார்கள். அப்படி இந்த உலகம் பல கோடி உலகங்களால் சூழப்பட்டு தந்தைகளால் தழைத்து செழிக்கிறது.”My father is a hero” என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு. எல்லா கதாநாயகர்களும் ஒரு தந்தையாக இருப்பார்களோ இல்லையோ… ஆனால் ஒவ்வொரு தந்தையும், ஒரு கதாநாயகன் தான்.எனக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. என் தந்தை எனக்கு இருந்த நேர்மையில்.. ஒரு பாதி அளவாவது என் மகன்களுக்காக நான் வாழ்ந்து விட வேண்டும் என்பது.என்னை அலைக்கழித்து, சுக்குநூறாக உடைத்து, என்னை வலிக்க வைத்து, கதற வைத்து, அலைய வைத்து, தொலைய வைத்து,இறுதியாக..இந்த வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு மாபெரும் உண்மை என்னவெனில்..தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
அனைத்து தந்தையர்களுக்கும், தந்தையாக போகிறவர்களுக்கும்..தந்தையாக மாற்றி இருப்பவர்களுக்கும்..தந்தையாக்கப் போகிறவர்களுக்கும்..இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
♥️
ஒரு இளவேனில் காலத்தின் பின் மதிய நேரத்தில் கடலை பார்க்கப் போவோம் என அவள் திடீரென கேட்டபோது ஏன் எதற்கு என தோன்றாமல் உடனே கிளம்பிவிட்டேன். சில அழைப்புகள் திரும்ப இயலா ஒற்றையடி பாதை போல. ஏற்பதைத்தவிர வேறு எதுவும் வழியில்லை.
எங்கோ தொலைதூரத்தில் கடலோசை கேட்கின்ற திசையில் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம்.
இங்கேயே எனக்கு அலைகளின் ஒலி கேட்கிறது என்றாள்.
எனக்கும் அலைகளில் கால் நனைக்காமலே கால்கள் நனைந்து விட்டது போல ஒரு உணர்வு.
உப்பினை சுமந்து உலர்ந்து திரியும் காற்றின் கரம்பிடித்து சென்றோம்.
சில மணி நேரங்களில் கடல் எங்கள் காலடிகளுக்கு சில அடி தூரத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
மின்னிய கண்களோடு ததும்பிக் கொண்டிருந்த அந்த கடலை பார்ததுக்கொண்டிருந்தவள் சட்டென என்னை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
ஒரு நீரலைப் போல அவள் மாறி இருந்தாள். அவள் விழிகள் முழுக்க இளநீலம் பரவி எதிரே விரிந்து கிடக்கும் கடலின் நகலாக அவள் மாறி இருக்கிறாள் என எனக்குத் தோன்றியது.
அவளை அணைத்த அப்பொழுதில் தான் காதலலை நிரம்புகிற தேநீர் குவளையாக நானும், என்னுள் நிரம்புகிற, தாகம் மிக்க என் ஆன்மாவின் வடிவத்திற்கு ஏற்றாற் போல் வார்த்துக்கொள்ளும் நேசத்தின் நீராக அவளும் மாறிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டேன்.
நீர்மையும், நடுக்கடல் ஆழமும் , அளக்க முடியா அமைதியும், எப்போதும் பெண்களுக்கு உரியவை. எனவேதான் கடலும் ஒரு பெண் என்று
அறிந்ததெல்லாம் புத்தகங்களில் மட்டும் காணப்படும் பொய்யழகு அல்ல, உண்மையின் தரிசனம் எனத் தெரிந்துகொண்டேன்.
♥️
எப்போதும் பார்த்தாலும் கடல் மட்டும் பார்க்கப் பார்க்க புதிதாகவே இருக்கிறது என்று முணுமுணுத்தாள்.
ஏறக்குறைய உன்னைப்போல என நான் அக்கணம் நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை.
ஏதோ யோசித்தவாறே.. உள்ளங்கையில் மணலை எடுத்து கொட்டிய வாறே..
இந்த மணல் துகள்களை என்றாவது எண்ண வேண்டும் என யோசித்து இருக்கிறாயா என விசித்திரமாக கேட்டாள்.
இந்த உலகத்தில் காதல் கதைகளை நான் கணக்கெடுப்பதில்லை என்றேன்.
சிரித்துக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து எப்போதும் ஏன் கடல் ஆச்சரியமாகவே இருக்கிறது என விழிவிரிய கேட்டாள்.
ஆழம் மிக்க எதுவும் ஆச்சரியமாக தான் இருக்கும். பெண்களைப் போல.
என்றேன்.
பெண்கள் அலையடிக்கும் கடல் என்றாலும் ஆண்கள் என்னவோ கொந்தளிக்கும் எங்கள் மீது எப்படியோ தத்தளித்து படகோட்டி விடுகிறீர்கள் என நக்கலாக சற்றே கடுப்புடன் சொன்னாள்.
நான் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில விஷயங்களுக்கு பதில் அளிக்கக் கூடாது. பெண்கள் ஒன்றிலிருந்து வேறொன்றை உருவாக்குவதில் தேர்ந்தவர்கள். சிறிய அலைக்கு பின்னால் வரும் பேரலை போல.
ஏதோ அவள் விழிகள் கலங்கி இருந்ததாக எனக்குத் தோன்றியது.
என்ன ஆயிற்று எனக் கேட்டதற்கு எப்போதும் உலகத்தில் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பதிலை அவளும் ஒருவித இறுக்கத்தோடு சொன்னாள்..
“ஒன்றுமில்லை”.
அந்த ஒன்றும் இல்லை என்பதில்தான் ஓராயிரம் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்துதான் வைத்திருக்கிறான்.
எங்களிடையே ஒரு உருகா மௌனம் ஒன்று பாதரசம் போல மிதந்துகொண்டிருந்தது
நீ வர வர அதோ அந்த பாறை போல இறுகி விட்டாய் என்றாள்.
நீ கவனித்தாயா.. அப்போதும் உன் கால்களை உரசும் அலைகளை தான் நான் தழுவிக் கொண்டு இருக்கிறேன் என்றேன்.
நிமிர்ந்து பார்த்தாள்.
ஏதேதோ பேசி சொற்களின் மயக்க கூட்டில் என்ன வைத்திருக்கிறாய் என தீவிரமான குரலில் சொன்னாள்.
அமைதியாக இருந்தோம்.
இவையெல்லாம் சொற்களை வைத்துக்கொண்டு நான் நிகழ்த்தும் மாய விளையாட்டு என நீ நம்புகிறாயா.. என நான் அவளிடம் உயிர் துடிக்கும் வேதனையோடு கேட்டபோது சில நொடிகளுக்கு அலைகள் எங்கள் பக்கம் வரவில்லை.
பதில் அளிக்காமல் அவள் அமைதியாக இருந்தாள்.
உன்னிடம் நான் சொல்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னாலும் உண்மையின் உதிரம் வழிகிற அசலான இதயம் ஒன்று வலியோடு அசைந்து கொண்டிருக்கிறது என்றேன்.
என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதிர்பார்க்காத தருணம் ஒன்றில் அலை வீசும் காற்றில் மிதந்து வந்த நீர்த்துளி ஒன்று எங்கள் முகத்தில் பட்டு தெறித்து சிலிர்ப்பை உண்டாக்கிய அந்த நொடியில் எதையோ உணர்ந்தவள் என் தலையை மெதுவாக கோதினாள்.
அடுத்தடுத்து வருகிற இரு அலைகள் போல.. உன் உடன் இருக்கும் போது அளவற்ற மகிழ்ச்சியையும், பிரிவின் துயரில் அளவற்ற கண்ணீரையும் சுமந்தே அலைகிறேன் என்று ஏக்கத்துடன் சொன்னாள் அவள்.
அவள் கரங்களை மென்மையாய் பற்றினேன்.
அந்த நேரத்தில் வீசுகிற காற்றுக்கு லயம் பிடித்து அலைபாய்ந்து கொண்டிருந்த அவளின் கூந்தலை நான் கண்டேன். எப்போதும் அதை ஒரு கடலாகத்தான் நான் உணர்ந்திருக்கிறேன். அதன் கருநிற அலைகளில் எத்தனையோ முறை தொலைந்து இருக்கிறேன்.
தனித்திருக்கும் போது நாங்கள் பித்துப்பிடித்து ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து மகிழ்ந்து இருந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.
நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி அவள் சரியாக உணர்ந்து விட்டாள் என்பதை சிவப்பேறுகிற அவளது கன்ன கதுப்புகள் காட்டின.
ஏதோ நினைத்துக்கொண்டே பேச்சை மாற்றுவதாக கருதி.. இந்தக் கடலுக்கு என்ன பெயர் என ஒரு சிறுமி போல அவள் கேட்டாள்.
இந்த கணத்தில் இந்தக் கடலுக்கு உன் பெயர்தான் என்று அவள் முகம் பார்த்து சொன்ன போது..
அவள் அவளுக்குள் ஒரு கடலை உருவாக்கிக்கொண்டு, ஏற்கனவே ஒரு கடலாகி போயிருந்த என் மீது வெட்கத்துடன் சாய்ந்துக்கொண்டாள்.
கடல் பார்க்க சென்ற எங்களை.. கடல் பார்த்துக்கொண்டிருந்தது.
❤️
மணி செந்தில்.
❤️
காட்சித்துளிக்கு கிருஷ் நடேஷ்க்கும்..
கவிதை அலைக்கு அண்ணன் அறிவுமதிக்கும்,
இசைக்கடலுக்கு இசைஞானிக்கும்
ஈர முத்தங்கள்.
❤️
இறுதியில்
அனைத்திலும்
இழந்து இருப்பதும்,
பெற்றிருப்பதும்,
ஒன்றே ஒன்று தான்..
அதைவிட
சுகமானதும்
கொடுமையானதும்
வெவ்வேறில்லை.
அதுதான்
கோரப்படும்
வரமாகவும்
விதிக்கப்படும்
சாபமாகவும்
திகழ்கிறது.
அதுவே
தண்டனையாகவும்
பிரார்த்தனையாகவும்
இருக்கிறது.
அதுவே
வாழ்வின்
அர்த்தமுமாக
அபத்தமுமாக
வாய்க்கப்
பட்டிருக்கிறது.
அதுதான்
சாத்தானின்
விலக்கப்பட்ட கனி.
அதுதான்
தேவனின்
கருணை மிகுந்த
உதிரம்.
இறுதியாக
அனைத்திலும்
மிஞ்சியதும்
எஞ்சியதுமாக
அதனது பாடலே
கேட்கக் கிடைக்கிறது.
ஆதி அந்தம்
அதுதான்.
அன்பே சகலமும்.
♥️
♥️
அந்த அறைக்கு வெளியே யாரோ நடப்பது போன்ற ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. இரவின் புதிரான அடுக்கொன்றின் விசித்திர முடிச்சியின் இடறலில் திடுக்கிட்டு விழித்த போது அருகிலே அவள் தூங்கிக் கொண்டிருந்தாள்.என்னை தழுவி இருந்த அவளது கரங்களை மெதுவாக எடுத்துவிட்டு, அறையின் ஜன்னல்களை திறந்தேன். உறங்கா அந்தப் பெரு நகரம் தன் வரலாற்றுப் பெருமித நினைவுகளில் லயித்து இருந்தது. இரவு ஒரு திரவமென முகிழ்ந்து அந்த முது நகரத்தின் மேனியில் வழிந்துகொண்டிருந்தது. பகலெல்லாம் வேறுமாதிரி காட்சியளிக்கும் அந்த நகரம்
இரவில் மட்டும் நாணமும், மென்மையும் உடைய ஒரு பெண்ணாகி விடுகிற மாயத்தினை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
“என்னடா பண்ற” என்ற அவளது குரலில் திரும்பிப் பார்த்த நான் என்னை நோக்கி நீண்ட இரண்டு வெற்றுக்கரங்களை கண்டேன். அந்த அழைப்பினை என்னால் எப்போதும் தவிர்க்க முடிந்ததில்லை. அந்தக் கரங்களுக்குள் நான் நுழைந்தபோது மழை நிரப்பிய குளம் ஒன்றில் கால் நனைத்தது போல எப்போதும் அடைகிற ஒரு சிலிர்ப்பினை அடைந்தேன்.
“இந்த ஊர் ஒரு பெண்” என்றேன்.
“வர வர தென்படும் எல்லாவற்றிலும் பெண்ணை உணர்பவனாக.., தேடி அலைபவனாக நீ மாறிக்கொண்டே போகிறாய்..” என்றாள் அவள்.
இது போன்ற தருணங்களில் திக்கு தெரியாத, ஒரு திசையற்ற வெளியாய் அவளது உடல் மாறிப் போவதை நான் உணர்ந்து இருக்கிறேன். திசைகள் தெரியாமல் நான் கலைந்து, அலைவதைதான் பெரும்பாலும் என் கவிதைகளில் அவள் கண்டதாக சொன்னது ஏனோ எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.
“எங்கேயாவது வெளியே போவோமா..?” என்று கேட்டாள்.
“இந்த நள்ளிரவிலா..” என சிறகடிப்பின் விரிதலில் ஒரு வானத்தையே அளந்து பார்த்த ஒரு சிறு பறவை போல மாறி இருந்த நான் மென்மையாக கேட்டேன்.
“இது உறங்கா நகரம்.
ஏனெனில்..இந்த நகரத்தின் விழிகளுக்கு இமைகள் கிடையாது.” என்று அவள் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை.
அப்படியே எழுந்து, கிடைத்த ஆடைகளை அணிந்துகொண்டு.. நாங்கள் காரில் பயணிக்கத் தொடங்கியபோது.. வளைவும், நெளிவும் உடைய அந்த பாதைகள் பெண்ணாக அந்த நகரத்தை நான் உணர்ந்த என் கணிப்பினை உறுதி செய்தன.
நாங்கள் சென்ற பாதையில் எதிர்ப்பட்ட ஒரு பெரிய கோபுரத்தின் வாசலுக்கு முன்னால் என்னை நிறுத்த சொல்லி.. விட்டு காரைவிட்டு இறங்கி,
அங்கே பூ விற்றுக் கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் ஏதோ சிரித்து இவள் பேசிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இந்த பின்னிரவு நேரத்திலும் குளித்து, மஞ்சள் பூசி, நெற்றி நிறைத்து பொட்டிட்டு, பூ விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் புன்னகையை மட்டும் வாங்கிக்கொண்டு பூ வாங்காமல் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
மீண்டும் காரில் ஏறிக்கொண்ட அவளிடம் “என்ன அந்த அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாய்..?” எனக்கேட்டேன். “அந்த அம்மா பெயர் மீனாட்சி. நேற்று கோவிலில் பார்த்தேன்..” என்றாள் அவள்.
ஏன்.. அந்த அம்மா தோளில் பச்சைக்கிளி ஒன்றைக் காணவில்லை என எனக்குள் கேள்வி எழும்பியதை அவளிடம் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
திடீரென ஏதோ நினைத்தது போல என் தோளில் சாய்ந்து என் இடது கரத்தினை இறுக அணைத்துக் கொண்டாள். ஒரு பெரிய தெப்பக் குளத்திற்கு முன்னால்.. நாங்கள் சென்று சேர்ந்தபோது.. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லை. “மீன்கள் இல்லாத குளம்..” என்றேன் நான். எனது பின்னந்தலையை உன்னிப்பாக கோதியவாறே.. “அந்தக் குளத்தை பார்க்கின்ற எல்லோரது விழி பார்வைகளும் மீன்களாக மாறி உலவிக் கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது..” என்றாள் அவள்.
“ஆனால் இது தண்ணீர் இல்லாத குளம்” என்றேன். “ஒருவகையில் ஆடை இல்லாத பெண்..” என்றாள் அவள்.
“எப்போதும் எதிலும் முழு நிர்வாணத்தை ஏற்றுக்கொள்ள மனித மனம் ஏனோ விரும்புவதில்லை” என்று சொன்ன என்னை பார்த்து அவள் வெட்கத்தோடு சிரித்துக் கொண்டாள்.
“உன் வெட்கம் எப்போதுமே ஒரு அல்லி மலரை தான் நினைவு படுத்துகிறது..” என்றேன். அவள் சற்று கடுமையாக
“ஆனால் இது மல்லிகையின் ஊர்.” என்றாள்.. ” ஓ அதனால்தான்
நீ அடிக்கடி பெருமூச்சு விடுகிறாயோ..?” என்று கேட்ட என்னை பார்த்து மெலிதாக சிரித்தாள்.
“சரி வா.. போவோம்” என்றவாறே அவள் திரும்பியபோது அவளது பின்னப்படாத கேசத்தில் சில நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன.
மீண்டும் அறைக்கு நாங்கள் திரும்பியபோது அறையின் சுவர்களில் பாசியேறி, பசுமை நிறைந்த கொடிகள் ஒன்றையொன்று பின்னிக்கொண்டு, படர்ந்திருந்தன. அறைக்குள் ஒரு கடல் உருவாகியிருந்ததையும், அதில் சில தங்க மீன்கள் உலவிக்கொண்டு இருந்ததையும் நாங்கள் கவனித்தோம்.
எங்கள் கட்டிலின் தலைமாட்டில் ஒரு பெரிய ஆலமரம் ஒன்று தழைத்து வளர்ந்து, கிளைகள் செழித்து, விழுதுகளோடு பூரித்து நின்றதை நாங்கள் கண்டோம்.
இதுவெல்லாம் எப்படி என்று நாங்கள் இருவருமே யோசிக்கவில்லை. அந்தக் மாய கணத்தின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அந்த பெருமரத்தில் மடியில் தலை சாய்ந்தோம். எங்களை சுற்றி அடர்வனம் ஒன்றின் சூரிய ஒளி படாத
தரையின் குளிர்ச்சி பரவத்தொடங்கியது.
“நழுவிக் கொண்டே போகும் உன் விரல்களின் நுனியில் மயிற்பீலி முளைத்திருக்கிறது” என்றாள் அவள். அப்போதுதான் சற்றே மூடியிருக்கும் அவளது விழிகளில் இருந்து சிறு பறவை ஒன்றின் இறகு ஒன்று பிரிந்து அந்தர வெளியில் மிதக்கத் தொடங்கியது.
எங்கிருந்தோ வந்த நிலவு எங்களது இருவர் கண்களிலும் நுழைந்ததை நாங்கள் உணர்ந்தோம். எப்போதும் அவள் அருகில் இருக்கும்போது மென்மையாக உணரும் தாழம்பூவின் வாசனை அன்று மட்டும் மல்லிகை பூ மணமாக நான் உணர்ந்தது குறித்து எனக்கு அப்போது எந்த வியப்பும் இல்லை.
…..
எப்போதோ வாழ்வின் எதிர்பாராத தருணங்களில், அவளை நான் நழுவ விட்ட பிரிதான, வெகு காலத்திற்குப் பிறகு..
தனித்து நான் அந்த முது நகரத்திற்கு சென்றபோது ஒரு நள்ளிரவில் பூ விற்ற அந்த அம்மாவைத் தேடி அலைந்தேன்.
எதிர்பார்த்தது போல அதே கோபுரம். அதே வாசல்.
அங்கே யாரோ ஒரு பெண் மூப்பேறாமல் இருந்த அதே அம்மாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கிறாள்.
அருகே யாரோ ஒரு இளைஞன் இதையெல்லாம் புன்னகையோடு கவனித்துக்கொண்டே நிற்கிறான்.
எனக்கு எதுவும் தோன்றாமல் நான் அறைக்குத் திரும்பியபோது.. நான் எதிர்பார்த்தது போல அந்த அறை ஒரு வனமாக மாறிவிடவில்லை என்பதுதான் அக்கணநேரத்து ஆறுதலாக எனக்கு அமைந்தது.
(நன்றி முத்தங்கள்.
இசைக்கு: இசைஞானி, காணொளி வடிவமைப்பிற்கு: கிருஷ் நடேஷ்)
[youtube]https://www.youtube.com/watch?v=pQj12Y7XPno[/youtube]
நிகழ்காலம் என்ற ஒன்று இருப்பதாலேயே இறந்தகாலம் இறந்து விடுவதில்லை. நினைவுகள் ஊறித்திளைக்கும் ஆன்மாவில் தான்
வேர்க்கொண்டு மலர்ந்த பூக்கள் என்றும் வாடுவதில்லை. அப்படித்தான் ஒரு மழைக்கால அந்தியில் ஒரு மஞ்சள் நிற உடையில் எப்போதோ நான் தவறவிட்ட அவள் கடந்த காலத்தின் நீல நிறப் பூவை எடுத்து வந்திருந்தாள். சொல்லப்போனால் அந்த சந்திப்பிற்கு நான் எந்தத் திட்டமும் இடவில்லை. திடீரென நேர்ந்துவிட்ட ஒரு விபத்து போல அந்த சந்திப்பும் நிகழ்ந்தது என்றும் வாடாத அந்த நீல நிறப் பூவை எனக்கு முன்னால் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அருகே இருந்த கண்ணாடி குவளையில் நான் குடித்து மீதம் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மென்மையாக பருகினாள். நேரடியாக என் கண்களை பார்த்து இவ்வளவு நாள் நான் எங்கிருந்தேன் ஏன கேட்க மாட்டாயா.. என்பதுபோல அவளது விழிகள் கேட்பதாக எனக்குத் தெரிந்தது. அந்த விழிகளில் விழுந்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வாழ்வதென்பது இனி என்னால் முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்தாலும் முடிவிலியான அந்த பகடை ஆட்டத்தில் எப்படியேனும் நான் ஈடுபட்டு விடுவேன் என அவளுக்கும் தெரிந்தது. ஆனாலும் நான் கவனமாக இருப்பதாக அவளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக..
“காலம் நிறைய மாறிவிட்டது” என்றேன்.
“ஆனால் நீ மாறவில்லை” என்றாள்.
இனி ஆயுதங்களை பயன்படுத்தி விட வேண்டியதுதான் என்பதற்காக அவள் ஆன்மாவிற்கு என நான் தனித்தே தயாரித்து வைத்திருந்த ஒரு குறுங்கத்தி பதிலை அவளிடம் இவ்வாறாக சொன்னேன். “இப்போது இன்னொருவள் என் அகம் புறம் என அனைத்தையும் நிரப்பி இருக்கிறாள்” என்றேன். அவள் சற்றே அலட்சிய சிரிப்போடு.. “ஆனால் நீ என்னவோ தளும்பிக்கொண்டு தான் இருக்கிறாய்” என்றாள்.
“உனக்கும் வயதாகி விட்டது போல” என்று சொல்லிப் பார்த்தேன்.
“இன்னும் நமக்குள் ஜோடிப் பொருத்தம் தான்” என சொல்லி விட்டு சிரித்துக்கொண்டாள்.
“எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று நேரடியாக அவள் மார்பில் என் கத்தியை சொருகினேன். அதை துளி கூட பொருட்படுத்தாமல் “அவர்களிடமும் நீ என் சாயலை தான் தேடிக் கொண்டிருப்பாய்” என எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.
“ஆனால் நீ பார்த்தவன் எப்போதோ இறந்து விட்டான்” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னேன். அவளோ என் மீது பார்வையை விலக்காமல்.. “அவனை என்னைத் தவிர யாராலும் கொல்ல முடியாது..” என்று விசித்திரமாக பதிலளித்தாள். நான் என் தலையைத் தாழ்த்தியவாறே.. “இப்போது நான் முழுவதுமாக வேறு மனிதன்” என்று உறுதியான குரலில் அவளுக்கு சொல்வது போல எனக்கும் சொன்னேன்.
” என்னை முதலில் நேருக்கு நேராக பார். மிக எளிதாக நான் அவனை அடைந்து விடுவேன்” என்று அவள் சொன்னாள் .
“இதுவெல்லாம் கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டும்தான் சாத்தியம்” என்றேன். “அவரவர் கதைகளைத்தான் பல காட்சிகளாக படம் பிடித்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள்” என்றாள்.
“இறுதியாக என்னதான் வேண்டும்..?” என்கிற மன்றாடலில் என் கைகள் நடுங்கியவாறே தழுதழுத்த குரலில் அவளிடம் கேட்டேன்.
எனக்கு வேண்டியது ஒரு உண்மையின் மலர் என்றாள்.
“நான் இல்லாத இக் காலங்களில் எப்போதாவது என்னை மறந்த நேரம் என்ற ஒன்று உண்டா..” என தலை கவிழ்ந்த என் முகம் பார்த்து தலைச்சாய்த்தவாறே கேட்டாள்.
கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு..”உண்மையை சொன்னால் நீ எழுந்து போக மாட்டாய் என நான் அஞ்சுகிறேன்”.. என்றேன்.
“இது போதும்”. என்றாள் சிரித்துக்கொண்டே.
நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு நீல நிறப் பூவைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.
[youtube]https://www.youtube.com/watch?v=3nisKz887rU[/youtube]
இரவின் சிறகுகளால் மூடப்பட்டிருந்த அந்த பேருந்து நிலையத்தில் நீயும் நானும் நின்று கொண்டிருந்தோம். அது ஒரு வழக்கம் போல ஒரு இயல்பான வழியனுப்பல் தான் என படபடத்து, துடிதுடித்து அலைமோதிக் கொண்டிருந்த நம் மனதிற்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டோம். அது ஒரு நிரந்தர பிரிவாக அமைந்து விடுமோ என்கின்ற பயத்தில் இருவருக்குமே பேச முடியவில்லை. பேச முடியா அந்த மௌனம் ஒரு இறுகிப்போன கனத்த ஒரு உலோகச் சுவராக நம்மிடையே அருவமாக எழுந்து நின்றது. ஏதோ பேச வேண்டும் என்பதற்காக “தண்ணீர் பாட்டில் வேண்டுமா” என நான் கேட்க..அவள் வேண்டாம் என்பதுபோல தலையசைத்தாள். அதைத்தாண்டி பேசுவதற்கு எதுவுமில்லை.அது சொற்கள் தீர்ந்த தருணம். எல்லாவற்றையும் இந்த வாழ்க்கையில் நாம் கொட்டி முடித்திருக்கிறோம். நாம் வாழ்ந்தது ஒரு வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்வதா.. அல்லது நிகழும் வாழ்க்கையில் இதுவும் நிகழ்ந்தது என உணர்ந்து கொள்வதா என்பதில் எப்போதுமே எனக்கு மனக்குழப்பம் உண்டு. ஆனாலும் அக்கணத்தில் நாம் சாகாமல் உயிர்ப்புடன் இருந்தோம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஒரு கனவு போல நிகழ்ந்து விட்டிருக்கிறது என்றெல்லாம் நீயும், நானும் நிகழ்ந்தவைகள் அனைத்தையுமே ஒரு கனவாக கடந்துவிட முடியாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடக்கவே முடியாத ஒரு பெரும் பாலைவனமாக நம் நினைவுகள் மாறிவிட்டன என்பதை அக்கணத்தில் நாம் உணர்ந்தே இருந்தோம். ஆளரவமற்ற அந்தப் பாலைவனத்தில்.
அலைச்சலும் உளைச்சலும் நிரம்பிய இந்தக் கொடும் வாழ்வினை தணித்துக்கொள்ள ஒரு இசையமைதி வேண்டி நாம் அலையப் போகிறோம் என்பதுதான் நாம் எதிர்கொண்டிருந்த இந்த வாழ்வின் மீதான பெரும் அச்சம். உண்மைதான். உனது விழிகளில் நான் அடைந்த அந்த இசையமைதி இதுவரை நான் எங்கும் அடையவில்லை என்பதும்.. அதைத் தேடி அலைந்து திரிவதை தான் இந்த வாழ்க்கையின் கொடும் விதி என நான் அர்த்தப் படுத்திக் கொள்கிறேன் என்பதும் நான் அறிந்தது தான். என்னவோ தெரியவில்லை. அன்று நாம் எதிர்நோக்கியிருந்த அந்தப் பேருந்து வெகு நேரமாகியும் வரவில்லை. அந்தக் கால தாமதத்தை காலம் நமக்கு காட்டிய அன்பின் வரமா.. அல்லது ஈவு இரக்கமற்ற வாழ்வின் கடைசித்துளி கருணையா என்றெல்லாம் அப்போது என்னால் ஆராய முடியவில்லை. ஆனாலும் பேரவலம் நிறைந்த ஒரு நரகத்திற்குள் நாம் திரும்பிச் செல்வதற்காக கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம் என்கிற ஒத்த மன உணர்வில் நாம் உறைந்திருந்தோம். எந்தவிதமான சம்பிரதாய விடைபெறுதல்களும் நமக்குள் அன்று நடைபெறவில்லை என்பது தான் இன்றும் நான் அடைந்திருக்கிற மிகப் பெரிய ஆறுதல். என்னை நீ பார்த்துக் கொண்டே இருந்தாய். நான் வேறு எங்கோ கவனித்துக் கொண்டிருப்பதாக உனக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக அருகே யார் தோளிலோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம்/ காலம்/ சூழல் மறந்த ஒரு குழந்தையின் உறக்கம் தான் எவ்வளவு புனிதமானது… இனி நமக்கு வாய்க்கவே போவதற்ற அந்த உறக்கம் தான் நான் அந்த நொடியில் கண்டடைந்த மகத்தான மானுட தரிசனம். இறுதியில் தாமதமாக போன அந்த பேருந்தும் வந்தது. மீண்டும் அதே கேள்வியை நான் கேட்டேன். “தண்ணீர் பாட்டில் வேண்டுமா…” எத்தனை முறை இதே கேள்வியை கேட்பாய் என்பதுபோல என்னை நீ நிமிர்ந்து பார்த்தாய். அந்த நிமிடத்தில் பொங்கி வருகின்ற எல்லாவற்றையும் ஏதோ ஒரு கேள்விக்குள் அடக்க முயலும் அபத்தம் எனக்கும் புரிந்தது. என்னிடமிருந்த உன் பையினை மெலிதாக வாங்கிக்கொண்டு தோளில் மாட்டிக் கொண்டாய். என் கையில் இருந்த பையை வாங்கும் அந்த நொடியில் உன் விரல்கள் எனது விரலோடு உரசி விடக்கூடாது என்கின்ற மிகுந்த எச்சரிக்கை உன்னிடம் இருந்தது குறித்து எனக்கு இதுவரையில் எந்த ஆச்சரியமும் இல்லை. அந்த ஒற்றை உரசல் போதும். அந்த சின்னஞ்சிறு தீப்பொறி உனக்கு அது வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒருமுறை திரைப்படமாக காட்டிவிடும் என்பதையும்… அந்தப் பொழுதில் தன் வாழ்வையே ஒரு திரைப்படமாக பார்க்க நீ அஞ்சினாய் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. செல்கிறேன் என்பது போல மெலிதாக தலையசைத்தாய். எனது கண்கள் கலங்கியிருந்தன. இனி மீளவே முடியாத ஒரு பாதையில் உன்னை அனுப்பி வைத்துவிட்டு இந்த வாழ்வு முழுக்க நான் தனியே வாழ வேண்டும் என்கின்ற பெரும் சாபம் வெயில் அடிக்கும் நிலத்தில் உயரப் பறக்கும் ஒரு கழுகின் நிழல் போல எனக்குள்ளும் துளிர்த்தது.
அக்கணத்தில் ஏதோ சொல்ல நினைத்தாய் என இன்றளவும் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நல்லவேளை நீ எதுவும் சொல்லவில்லை. போய் வருகிறேன் என்றோ, போய் எப்படியாவது தொடர்பு கொள்கிறேன் என்றோ , போய் அலைபேசியில் அழைக்கிறேன் என்றோ எந்த வாக்குறுதிகளும் இல்லாத ஒரு வெறுமை விடைபெறுதல் அது. ஏதாவது சொல்லி விட்டுப் போயிருந்தால். அந்த சொல்லையே பிடித்துக்கொண்டு நான் அலைந்து தீர்ப்பேன் என உனக்கும் தெரியும் தானே. படிக்கட்டுகளில் ஏறும் போது கலங்கி இருந்த என் கண்களின் ஊடாக எனக்குத் தெரிந்த காட்சி நீ என்னை திரும்பி பார்ப்பதான ஒரு தோற்றம். நீ உள்ளே ஏறி சென்று விட்டாய். பேருந்து நகரத் தொடங்கியது. நான் அதே இடத்தில் நின்று கொண்டே இருந்தேன். பேருந்து என்னை விட்டு விலக.. விலக.. பிரிக்க முடியாத என் ஆன்மாவின் ரத்தமும் சதையும் நிரம்பிய துண்டு ஒன்று என்னை விட்டு விலகுவது போன்ற வலி. மெதுவாக நான் காரில் ஏறி அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன். எனக்குச் சற்று முன்னால் அந்த பேருந்து சென்று கொண்டே இருந்தது. நானும் பின்னால் சிறிது நேரம் போய்க்கொண்டே இருந்தேன். சட்டென ஒரு வளைவில் அந்த பேருந்து எதிர்ப்புறம் பயணிக்க. நான் அப்படியே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த முச்சந்தியில் இறங்கி நின்றேன்.
அந்த நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது எதேச்சையான ஒரு நிகழ்வு என இந்த நொடி வரை நான் நம்பவில்லை.
[youtube]https://www.youtube.com/watch?v=KZyn3KCMFI4[/youtube]
❤️
கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், சில இளையராஜா பாடல்களும் தனித்து இருந்தோம். என்னைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆகிவிடுகிறாய் எனக் கேட்டதற்கு அவளிடம் ஒரு மர்மமான புன்னகை தான் மிஞ்சியது. நான் புரியாமல் அவள் முகத்தையே உற்றுநோக்கி கொண்டிருந்தபோது.. மென்மையான குரலில் சொல்கிறாள்.. “அது அப்படித்தான். நான் விளையாடுவதை ரசிக்க நீ மட்டும்தான் இருக்கிறாய். உன் கண்களில் நான் விழும் போதெல்லாம் சிவந்துக் கொண்டே போகிறேன்” என்கிறாள். இப்போதெல்லாம் பேசுவதைவிட உன்னுடன் எங்கோ போய்க் கொண்டிருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறாள். அந்த நெடுஞ்சாலை முடிந்து ஒரு மலைச்சாலையில் மீது கார் ஏற தொடங்குகிறது. எதிரே எந்த வாகனமும் வரவில்லை. எனக்கு முன்னால் பெரும்பெரும் பூதங்கள் போல மலைகள் அதனூடாக மலைக்காடுகள் என அந்தப் பின்னிரவு சற்று அச்சமாகத்தான் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே மறுபுறம் சாய்த்து வைத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மலைச் சாலையில் தனியே நின்று கொண்டிருக்கிறேன். அடர் குளிர் இரவு. இதேபோன்ற எத்தனை இரவுகள் இந்த மலைகள் மீது நிழலாக படிந்திருக்கும் என விசித்திரமாக யோசித்தவாறு நின்று கொண்டிருக்கிறேன். ஒரு காதல் தரும் இரவு மிக விசித்திரமானது. பூக்களோடு வருகிற உதிரிகள் போல அந்த இரவு முழுக்க ஏகாந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஒரு முறை அவளது கூந்தலை நான் இரவு என வர்ணித்த போது.. அதை கலைப்பதற்கு தான் விடியலின் முன் வெளிச்சச் சுடர்கள் போல உன் விரல்கள் இருக்கின்றனவே என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள். அடிக்கடி சிரிக்காதே. நீ அழகாகிக் கொண்டே போகிறாய் என்கிறேன். என் முன்னந்தலையை மெலிதாக கலைத்து ஓடி விடுகிறாள்.
❤️
பயணம் மீண்டும் தொடர்ந்தது. திருப்பங்களாலும் ஏற்றங்களாலும் நிரம்பிய அந்த மலைச்சாலை வளைந்து நெளிந்த பாம்பின் உடலைப் போல வசீகரமான ஒன்றாக எனக்கு தோன்றியது. அந்த மலைச்சாலை இறுதியில் ஒரு ஏரிக் கரையில் முடிவடைகிறது. தூங்கிக் கொண்டிருந்த அவளை மெதுவாக எழுப்பினேன். கண்களை கசக்கி நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்கிறாள்.என்னால் எளிதாக சொர்க்கத்தில் என்ன சொல்லிவிட முடியும். ஆனால் நான் மௌனமாக கீழே இறங்கு என்று சொல்லிவிட்டு நானும் இறங்கினேன். இருவருக்கும் முன்னால் ஒரு படுத்திருக்கும் யானையை போல ஒரு ஏரி சாய்ந்து கிடந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் யாருமில்லா தருணத்தில் பனி போர்த்திய ஏரியை கண்ணிமைக்காமல் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறாள். “இப்படி ஒரு இடத்திற்கு என்னை அழைத்து வரவேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது” எனக் கேட்கிறாள்.” சில எண்ணங்களுக்கு காரணங்கள் கேட்காதே. நீ என்னுடன் இங்கே வரவேண்டும் என எனக்குத் தோன்றியது. அழைத்து வந்திருக்கிறேன்.” *என் கையில் ஒரு விடியல் இருக்கிறது. அதை இன்னும் சற்று நேரத்தில் என் தேவதைக்கு பரிசளிக்க நான் காத்திருக்கிறேன்” என்கிறேன். இந்த விடியல் போல பரிசுத்தமானது உலகில் ஏதுமில்லை என நான் சொல்லிவிட்டு அவளை பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கியிருந்தன. தன்னை யாருமே இதுவரை இப்படி நேசித்தது இல்லை என நினைக்க வைப்பது தான் காதலின் அதிதீவிர ரசவாதம். பனியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. ஏரிக் கரையில் இருந்த மரங்களிலிருந்து பறவைகளின் சிறகடிப்புகள், கூவல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விடியல் மழைத்துளி மண்ணில் கரைவது போல எங்களுக்குள் கரையத் தொடங்க .. நாங்கள் உருகத் தொடங்கி இருந்தோம். திடீரென என் கழுத்தில் மெல்லிய ஈரம் பதிய … நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டேன். இதைவிட மேலான பரிசை அவளுக்கு நானும், எனக்கு அவளும் அளித்திருக்க முடியாது என்கிற நினைவில் அந்த நிமிடங்கள் உறைந்திருக்க..
விடியத் தொடங்கியிருந்தது.
[youtube]https://www.youtube.com/watch?v=CB-J_4k8QKQ[/youtube]
“எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட..
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்..
பரவுகிறது
மனதில் பிரகாசமாக..”
– கல்யாண்ஜி
80 கள்.. தமிழ் நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களில், இலக்கியத்தில், அரசியலில், திரைப்படங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம். இலக்கியத்தில் தீவிர இலக்கியம் என்கின்ற வகைமை தோன்றி முழுநேர எழுத்தாளர்கள் பலர் தோன்றிய காலக் கட்டம். அரசியலில் இடதுசாரித்தனம் கலந்த தமிழ் உணர்வு சார்ந்த அரசியலுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. திரைப்படங்கள் ஏறக்குறைய அரங்கங்களை விட்டு வெளியே வந்து, நாடக தன்மையை ஏறக்குறைய சற்றே உதிர்த்து இயல்புணர்ச்சி ஊக்கமுடைய பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என்றெல்லாம் அசலான கலைஞர்கள் தோன்றிய காலக் கட்டம். எல்லாவற்றையும் சேர்த்து சுருக்கமாக சொன்னால் இளையராஜா என்கின்ற அதிதீவிர கலைஞன் உணர்ச்சிகளின் அசைவோட்டத்தை மொழிபெயர்த்து தன் இசையால் காற்றை நிரப்பி தமிழர்களை சுவாசிக்க வைத்த காலம். தமிழ்த்திரைப்பட ரசனை என்றால் அப்போதெல்லாம் ரஜினி-கமல் விஜயகாந்த் சத்தியராஜ் மோகன் போன்றோர் முன்னணி கலைஞர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கே. பாக்யராஜ்,டி.ராஜேந்தர், மணிவண்ணன்,ராஜசேகர், ஆர் சுந்தர்ராஜன், பாரதி – வாசு (பன்னீர் புஷ்பங்கள் பிறகு இவர்கள் இருவரும் தனித்தனியே நிறைய திரைப்படங்களில்..) தேவராஜ் மோகன், துரை (பசி), ராபர்ட் ராஜசேகர் போன்ற நிறைய இளம் தலைமுறை இயக்குனர்கள் நிறைய திரைப்படங்களை எடுத்துத் தள்ளினார்கள். வீட்டுக்கு வீடு டேப் ரிக்கார்டர்கள் (Tape recorder) முளைத்திருந்தன. சிறிய மரத்திலான ஒரு செல்ஃப் தயாரித்து அதில் ஆடியோ கேசட்டுகளை (Audio Cassette) வரிசையாக அடுக்கி வைத்திருப்பது வீட்டின் அந்தஸ்தை காட்டுகிற ஒரு தகுதியாக மாறத் தொடங்கியிருந்தது. இந்த ஆடியோ கேசட்டுகளில் பாடல்களை பதிவு செய்து கொடுப்பதற்காகவே வீதிக்கு வீதி பெரும்பாலும் பெயர் பலகைகளில் இளையராஜா படத்தோடு கேசட் பதிவு செய்யும் மையங்கள் ( Recording Center) முளைத்தன. அங்கே பெரும்பாலும் இளைஞர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ந்த இளைஞர்கள் எக்ஃகோ, லஹரி,ஏவிஎம்,ஏவிஎல் போன்ற பல்வேறு இசைக் கம்பெனிகள் வெளியிட்ட ஒரிஜினல் ஆடியோ கேசட்டுகளை வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டார்கள். மக்கள் ரேடியோ கேட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் ரேடியோவில் நாடகங்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சி பெட்டியில் தூர்தர்ஷன் என்கின்ற ஒரே ஒரு சேனல் கொடைக்கானல் மலை உச்சியிலிருந்து ஒளிபரப்பப்பட , அதற்கு ஆண்டனா வைத்து பூஸ்டர் ஸ்டபிலைசர் என அனைத்தும் வைத்து புள்ளி புள்ளியாக திரைப்படங்கள், கிரிக்கெட் மேட்ச்கள் ஒளிபரப்பாகின. கிரிக்கெட்டில் அன்று பெரும் பேட்ஸ்மேனாக விளங்கிய கவாஸ்கர் ஏறக்குறைய இறுதி காலத்தில் இருந்தார். கபில்தேவ் ஒரு வெற்றிகரமான பவுலராக அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். பெரும்பாலான மேட்சுகளில் இந்தியா தோற்று கொண்டிருந்தது. நானெல்லாம் தீவிரமான முகம்மது அசாருதீன் ரசிகன். கை மணிக்கட்டு களால் விளையாடுகிற அற்புதன். அவர் Square Cut Shot விளையாடும்போது அங்கே நின்று கொண்டிருக்கின்ற ஃபீல்டருக்கு பந்தைப் பிடிக்க தோணாமல் கைத் தட்டத்தான் தோன்றும் என்கிற அளவுக்கு நளினமாக விளையாடுகிற பெரும் கலைஞன். அற்புதமான fielder. எப்போதாவது Spin bowling ங்கும் செய்வார். நாங்கள் வாழ்ந்துவந்த மன்னார்குடி ஹவுசிங் யூனிட்டில் GCC என்கின்ற கவாஸ்கர் கிரிக்கெட் கிளப் என்ற ஒரு அணி இருந்தது. அதில் விளையாடிய ஸ்டீபன் அண்ணா தான் டீம் கேப்டன். காவுக்கனி , ராக்கெட் ராஜா என்கின்ற இருபெரும் வேகப்பந்து வீச்சாளர்கள். எதிரணியை மிரட்டி எடுத்துவிடுவார்கள்.குறிப்பாக ராக்கெட் ராஜா அண்ணன் பந்தினை யாராலும் தொடவே முடியாது.என் எதிர் ஃப்ளாட்டில் வாழ்ந்து வந்த ரவி அண்ணன் தான் அந்த டீமின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு அனைத்திலும் ஆதர்சம். அதிகமாக பேசமாட்டார். பிரமாதமாக கீப்பிங் செய்வார். அந்தக் காலகட்டத்தில் நான் நடப்பதற்காக Calipar போட்டிருந்தேன். ஆனாலும் ரவி அண்ணன் என்னையும் விளையாட வைப்பார். எல்லா விளையாட்டுக்களிலும் என்னை ஒதுக்கி வைக்காமல் சேர்த்துக் கொள்வார். என்னை நின்ற இடத்திலிருந்து பவுலிங் போட சொல்வார்.எங்கே சென்றாலும் நான்தான் அவருக்கு துணை. ஒரு நாள் மாலை ரவி அண்ணன் எங்கோ அவசரமாகக் கிளம்பி கொண்டிருக்க.. நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். வேறு வழி இல்லாமல் வீட்டில் சொல்லிவிட்டு என்னையும் சைக்கிளில் அழைத்து கொண்டு அவர் சென்று நின்றது எங்கள் ஊரின் சாந்தி திரையரங்கத்தின் முன்னால். அந்தப்படத்தின் போஸ்டரை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. ஏதோ குடும்பப் படம் போல இருந்தது. ஆனால் ரவி அண்ணன் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அந்த 80 களின் காலத்தில் அதுபோன்ற திரைப்படத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு மெலோ டிராமா. அதுபோன்ற ஒரு திரைப்படத்தை மன்னார்குடி போன்ற ஒரு நடுத்தர நகரத்தில் பார்ப்பதற்கு ஒரு தனிப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. ரவி அண்ணன் ஏறக்குறைய அந்த மனநிலையில்தான் இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால்.. மன்னார்குடி போன்ற ஒரு ஊரில் அந்தத் திரைப்படத்திற்கு ஒரு கூட்டமாக கல்லூரி மாணவிகள் வந்து இருந்தார்கள். அந்த மாணவிகளை சார்ந்து சில மாணவர்களும் வந்திருக்க.. தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டது. படம் தொடங்கியது. திரைப்படம் ஒரு பெண்ணைப் பற்றியது. அவளுடைய விருப்பத்தை மீறி அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவன் மென்மையான மனதை உடையவன். ஏன் தன்னை தனது மனைவி விரும்ப மறுக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. இதுகுறித்து அவளிடம் அவன் ஆழமாக கேட்கின்ற ஒரு தருணத்தில்.. ஒரு வெள்ளை சுவற்றில் தலையைச் சாய்த்தவாறு அவள் அழுதுகொண்டே சரிய.. அவளது முற்காலம்(Flashback) காட்சிகளாக விரிகிறது. அதிரும் இசை துணுக்குகளுக்கு நடுவே சில இளைஞர்களோடு சட்டென ஒரு இளைஞன் வேகமாக நடந்து வருகிறான். திரையரங்கமே அதிர்கிறது.அக்காட்சியின் கேமிராவை கையாள்பவன் ஒரு கவிஞன் (P.C. ஸ்ரீராம்) என புரிகிறது. அந்தக் காட்சியில் அந்த கேமிரா தரையிலிருந்து நடந்துவரும் அந்த இளைஞனின் கோபம் மிக்க முகத்தை காட்டுகிறது. அதுபோன்ற ஒரு துள்ளல் மிகுந்த ஒரு ஆக்ரோஷமான வேக நடையை தமிழ்த் திரை அதுவரை பார்த்ததில்லை. வந்த வேகத்தில் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு அடி விழத் தொடங்குகிறது.
சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறபோது சரியாக சுவர் ஏறி குதித்து அந்த இளைஞன் தப்பித்துப் போய் விடுகிறான். அந்தக் காட்சியில் தன் இருக்கையிலிருந்து எழுந்து கூச்சலிடத் தொடங்கிய அந்த கல்லூரி மாணவிகள் அந்த இளைஞன் தோன்றும் போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அந்த இளைஞன் பைக்கில் சென்றான்/அந்தப் பெண் படிக்கும் கல்லூரிக்கே சென்று ஸ்பீக்கரில் சத்தம் போட்டு காதலை சொன்னான்/பேருந்திற்கு முன்னால் தன் பைக்கை நிறுத்தி தன் காதலியோடு பேசிக் கொண்டிருந்தான்/தன் காதலியின் முகத்தை பார்த்தவாறே கையில் கடலையோடு பின்னால் நடந்து சென்றான்./ அந்தப் பெண்ணோடு ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு காபி சாப்பிடும் போது எதிர்பாராதவிதமாக வருகிற அந்தப் பெண்ணின் தந்தையை பேர்ச்சொல்லி அழைத்து அந்தப் பெண்ணின் முகத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறான்/ பிறகு அந்த அதிர்ச்சியையே ஒரு ரசனை மிக்க காதலாக மாற்றுகிறான்/ தன் காதலிக்காக தான் போக வேண்டியிருந்த ஒரு போராட்டத்திற்கு போகாமல் கொட்டும் மழையில் காதலியின் வீட்டின் ஜன்னலுக்கு முன்னால் காத்திருக்கிறான்/மறுநாளே திருமணம் செய்து கொள்ள கோருகிறான்/கடைசியில் அந்த இளைஞன் திருமணத்திற்காக காத்திருக்கும் காதலியின் கண் முன்னரே எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒரு ரசவாத வித்தை போல அந்த 15 நிமிடங்களும் கண் முன்னால் வித விதமான உணர்வலைகளோடு நிகழ்ந்து முடிந்து விடுகிறது. அந்தப் பதினைந்து நிமிட காட்சிகளுக்கு பின்னால் ஆரவாரம் செய்து கொண்டிருந்த அந்த கல்லூரி மாணவிகள் அமைதியாக எழுந்து திரையரங்கை விட்டு வெளியே சென்று விட்டார்கள்.அவர்களைப் பொறுத்தவரையில் அத்திரைப்படம் அத்தோடு முடிந்து விட்டது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்கள் தியாகராஜ பாகவதர்/எம்ஜிஆர்/ கமல் என சிலவகை தனித்த நளினங்களோடு கூடிய ஆண்களை விரும்பியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள் போல தாங்கள் விரும்பும் நடிகனின் காட்சிகள் முடிந்த பிறகு திரையரங்கை விட்டு யாரும் வெளியே சென்றதில்லை.வெளியே விசாரித்தபோதுதான் சொன்னார்கள். மனோகர் என்கின்ற அந்த கதாபாத்திரம் சுடப்பட்டு இறந்து போன காட்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நாளும் பலர் எழுந்து சென்று விடுவதாக சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக எங்கள் மன்னார்குடிக்கு இது மிகப்பெரிய மாபெரும் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய பரபரப்பு செய்தியாக மாறிப்போனது. அது அக்காலத்தில் திரைப்பட ரசனைகளின் ஊடாக ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி. மனோகர் ஆக நடித்த அந்த இளைஞனின் பெயர் கார்த்திக். படம் மவுனராகம். அப்போதுதான் தெரிந்தது ரவி அண்ணன் கார்த்திக்கின் ரசிகன் என.அண்ணனும் படம் பார்த்துக்கொண்டிருந்த என்னை பார்த்து போகலாமா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அங்கே வந்திருந்த கல்லூரிப்பெண்களில் யாரோ ஒருவருக்காகவும், கார்த்திக்கிற்காகவும் தான் அண்ணனும் அத்திரைப்படத்திற்கு வந்திருந்தார். இரண்டுமே முடிந்து சென்று விட்டபடியால் அண்ணன் அழைக்க, நானும் எழுந்து வந்துவிட்டேன். இவ்வாறாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் பலவற்றை அறிமுகம் செய்து வைத்த ரவி அண்ணன் தான் எனக்கு கார்த்திக்கையும் அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு முன்னாலும் எனக்கு கார்த்திக்கை தெரியும். ஒரு வெகு சாதாரணமான சிறு நடிகன் போல துணை கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அக்காலத்தில் எனக்கு கமல் மட்டும் தான் பிடிக்கும்.அப்போது வித்தியாசமாக நடித்து கொண்டிருந்த சத்யராஜ் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. ஆனால் மவுனராகம் என்ற திரைப்படத்தினை என்னை அழைத்து சென்று காட்டியதன் மூலம் தன்னைப்போலவே ரவி அண்ணன் என்னையும் தீவிர கார்த்திக் ரசிகனாக மாற்றிவிட்டார். கார்த்திக்கை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் திரைப்படம் குறித்தான எனது ரசனைகள் மாறத் தொடங்கின. What is acting என்ற கேள்விக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஒரே ஒரு வார்த்தையில் சொல்கிறார் “living”.
நடிப்பு ஒரு நிகழ்கலை. புனைவு வெளிப்படுத்துகிற மிகை புள்ளிக்கும் , கலைஞனுக்கு இயல்பாக தோன்றுகிற கலையம்ச நேர்த்திக்கும் இடையே இருக்கின்ற நுட்ப இடைவெளியை உள் வாங்கி ஒரு கனவின் நகல் போல காட்சியளிக்கும் ஒரு மாய தோற்றத்தை உண்மையாக்குகிற வித்தை அது. அந்த மேஜிக் களியாட்டத்தில் ஒரு நுனி அளவு பிசகிவிட்டாலும் கலை தன் உயிரை இழந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாய விளையாட்டை தான் மிக இயல்பாக விளையாடுவதற்கான சாதுர்யத்தை கொண்ட மகத்தான கலைஞனாக கார்த்திக் திகழ்ந்தார்.
மவுனராகம் படத்தில் கார்த்திக்கு வருகின்ற காட்சிகள் 15 நிமிடங்களுக்கு மிகாதவை. ஆனால் அந்தப் பதினைந்து நிமிடங்கள் தான் கார்த்திக் என்ற இளம் கதாநாயகனை தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு இருக்கையில் அமர வைத்தது. வழமையான காதல் காட்சிகளுக்கு இளமையான துள்ளல் வண்ணம் தீட்டிக் கொண்டே இருந்தார் கார்த்திக். நொடிக்கு நொடி மாறிவிடும் அமர்க்களப்படுத்தும் அவரது முகபாவங்கள் அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாதது. அதன்பிறகு அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், இதயதாமரை, கோபுர வாசலிலே என அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கார்த்திக் நடித்து கலக்க அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் பிரம்மாண்டமாக உண்டானது. அவருக்கென தனித்துவமான இசையை இளையராஜா உருவாக்க… அவரது கிராமத்து படங்களான கிழக்கு வாசல், பாண்டி நாட்டு தங்கம், உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் , பெரிய வீட்டு பண்ணக்காரன், பூவரசன், பொன்னுமணி, போன்ற பல படங்கள் பாடல்களுக்காகவும்,கார்த்திக்கின் வசீகரத்திற்காகவும் ஓடின.தென்மாவட்டங்களில் கார்த்திக்கின் சாதியை வைத்து வீட்டுக்கு வீடு அவரது புகைப்படங்களை வைத்து ஒரு பெரிய கூட்டமே அவரது ரசிகர்களாக மாறி வழிபட்டதெல்லாம் பெருங்கதை. கார்த்திக் மிக நுட்பமான உணர்வுகளை மிக அழகியலாக வெளிப்படுத்துகிற தேர்ந்த கலைஞன்.குறிப்பாக அக்னி நட்சத்திரம். அந்தப் படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் மிகுந்த நேர்மறையான கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரி பாத்திரம். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரத்தை போகிற போக்கில் அனாசியமாக செய்து அசத்தி இருப்பார் கார்த்திக். பேருந்து நிறுத்தத்திலும், பேஸ்கட் பால் மைதானத்திலும், பெட்டிக் கடைகளிலும் மிக எளிதாக தென்படுகிற வேலையற்ற இளைஞனின் பாத்திரத்தை கார்த்திக் ரசிக்கத்தக்க வகையில் செய்து இணை நடிகரான பிரபுவை தாண்டிலும் ஸ்கோர் செய்திருப்பார். ஷேவ் செய்யப்படாத இளம் தாடி முகத்தில் ஜீன்ஸ் பேண்டோடு, உடல் முழுக்க வியர்வையோடு, சட்டை இல்லாமல் மைதானத்தில் பந்தை தலைக்கு வைத்து கார்த்திக் படுத்திருக்கிற அந்த லாவகம் இயக்குனர் மணிரத்னம் எதிர்பார்த்த அளவை விட காட்சி அழகின் உச்சம். கார்த்திக் போன்று முக அழகு கொண்ட தமிழ் நடிகர்கள் இதுவரை தோன்றியதில்லை. அது அப்பட்டமான ஒரு தமிழனின் முகம். ஊருக்குள் களையான முகம் என்பார்களே அந்த முகம் கார்த்திக்கின் முகம் தான். இதயத்தாமரை திரைப்படத்தில் ஒரு காதல் தேவதை … பாடலில் கார்த்திக்கும் ரேவதியும் ஒரு பாடல் முழுக்க ஒரு மிதிவண்டியில் வருகிற அந்த கவித்துவ காட்சி போல பொங்கி எழுகிற காதலின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிற காட்சி அழகியல் தமிழ் திரைப்படங்களில் மிகக் குறைவு..
[youtube]https://youtu.be/0ziNk53ikVI[/youtube]
மிகையற்ற நடிப்பு தான் கார்த்திக்கின் மூலதனம். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்ற மாபெரும் நடிகர்களிடம் காணப்படும்
உடல் மொழியில் ஆத்மார்த்த நெகிழ்வுத் தன்மை (flexibility) தமிழில் உடைய ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே. அதற்கு பல காட்சிகளை உதாரணம் சொல்லலாம்.
குறிப்பாக இந்தப் பாடல்
[youtube]https://youtu.be/8Hjf-UyTSKg[/youtube]
கார்த்திக்கின் முகபாவங்கள் தனித்துவமானவை. நடிகர் திலகம் சிவாஜி, கமல் போன்றோரிடம் இருக்கின்ற சற்றே Over tone கார்த்திக்கிடம் இருக்காது. தன் காதலிக்கு விடிந்தால் திருமணம். ஏற்கனவே காதலியை பெண் கேட்டு தன் தாய் வேறு அவமானப்பட்டு இறந்தும் போய்விட்டாள். திருமணத்தின் முதல் நாளன்று தான் விரும்பிய பெண்ணின் வீட்டின் முன்னால் கூத்துக் கட்ட வேண்டிய பிழைப்பு கொண்ட அந்த எளிய கலைஞனாக கார்த்திக் கண்ணீரோடு “பாடி பறந்த கிளி.. பாதை மறந்ததடி” என ததும்பும் விழிகளோடு பாடிய போது திரையரங்கமே சேர்ந்து அழுதது. அதுவரை அழுகை என்பது மிகை நடிப்பு அம்சங்களில் ஒன்றாக இருந்ததை கார்த்திக் தான் அதன் இறுக்கங்களை தகர்த்து இயல்பின் மொழிக்குள் கொண்டு வந்து அட்டகாசப்படுத்தினார் . அதேபோல வருஷம் 16 திரைப்படத்தின் இறுதிக்காட்சி. எல்லாவற்றையும் இழந்து விட்டு தன் தாய்க்கு முன்பாக கையறு நிலையில் கதறித் தீர்க்கிற மனிதனாக கார்த்திக் பிரமாதப் படுத்திய போது அதை மிகை நடிப்பாக யாருமே உணரவில்லை என்பதுதான் கார்த்திக்கின் கலையழகு. கார்த்திக்கின் பிற்காலம் எல்லா நடிகர்களை போலவும் அமைந்தது என்றாலும்.. கோகுலத்தில் சீதை போன்ற சில அற்புதமான திரைப்படங்களிலும் தான் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டே இருந்தார். இதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்தாலும்.. கார்த்திக் கோகுலத்தில் சீதையில் நடித்த விதம் உலகத் தரமானது. கார்த்திக் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தனது கலை வாழ்வின் இறுதிக்காலத்தில் உள்ளத்தை அள்ளித்தா போன்ற வணிக ரீதியிலான காமெடி படங்களில் நடிக்க வேண்டியிருந்தது வரலாற்றின் கோர விசித்திரம். இப்போதும் கார்த்திக் ராவணன்,அனேகன், சந்திரமௌலி போன்ற படங்களில் நடிப்பதை பார்க்க முடிகிறது. அது நான் பார்த்த கார்த்திக் அல்ல. இது வேறு நபர். மன்னனாக வாழ்ந்தவனை பிச்சைக்காரனாக மாற்றி வைத்து அழகு பார்ப்பது தான் காலம் என்ற கொடுங்கோலனின் தீராப் பகடையாட்டமாக இருக்கிறது.
..
ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் ஒரு உணவகத்தில் யாரோ பின்புறத்திலிருந்து என்னை கட்டிப்பிடிக்க.. சட்டெனத் திரும்பி பார்த்த நான் ஒரு நடுத்தர வயதுக்காரரை பார்த்து விட்டு இவர் யாராக இருக்கும் என யோசித்தேன். “அடையாளம் தெரியலையா” என கேட்டவாறே “நான்தாண்டா ரவி” என்று
அணைத்துக்கொண்ட ரவி அண்ணன் அவரது மனைவி, பிள்ளைகளை அறிமுகம் செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணனை பார்க்கிறேன். நாங்கள் மன்னார்குடியிலிருந்து குடிமாறி வந்துவிட்ட பிறகு அண்ணனைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை. அண்ணனுக்கு வயதாகி இருந்தது. தலைமுடி நரைத்து விட்டது. பிள்ளைகள் பெரியவர்களாக நின்றார்கள். ஒரு காலத்தில் நாம் கதாநாயகர்களாக பார்த்த அண்ணன்கள் வயதாகி ஒரு சாதாரண மனிதனாக, ஒரு குடும்பஸ்த்தனாக, சகல பாடுகளும் நிரம்பிய எளிய மனிதராக நாம் பார்க்கும் பொழுது உண்மையாகவே வருத்தமாகி விடுகிறது. ரவி அண்ணன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். நிறைய விசாரித்தார். எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கேள்விப்பட்டு கண்கள் மின்ன சந்தோஷப்பட்டார். மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டார்.அலைபேசி எண்ணை மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து விடைபெற்றுக் கொண்டோம்.
அப்போதுதான் அவரது அலைபேசி ஒலித்தது. அதே கார்த்திக்கின் மௌனராகம் பிஜிஎம். அண்ணன் என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தார். நான் அப்படியே அதே இடத்திலேயே உறைந்து அமர்ந்து இருந்தேன். என்னைப் பொருத்தவரையில் பெரும்பாலான மனிதர்கள் நினைவுகளிலும், கடந்த காலங்களிலும் தான் வாழ்கிறார்கள். ஏதோ ஒரு திரைப்படத்தில் நான் நான் கேட்ட வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “டேப் ரிகார்டரில் உள்ளது போல உண்மையான வாழ்க்கையிலும் ரிவைண்டர் என்கின்ற பொத்தான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” கவிஞர் விக்ரமாதித்தியனின் கூண்டுப் புலிகள் என்ற ஒரு கவிதையில்…
“கூண்டுப் புலிகள் நன்றாக பழகி விட்டன;
நாறக் கூண்டினை பற்றி எந்த புகாரும் இல்லை:
நேரத்திற்கு இரை..
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்கத் சுகத்திற்கு தடையில்லை
என வரிசையாகச் சொல்லி வரும் அவர்… இறுதியாக
“ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்.”
என அதிர்ந்து முடித்திருப்பார். மனித வாழ்க்கையும் அவ்வாறு தானே இருக்கிறது..
மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் “நினைவில் காடுள்ள மிருகம்” என்கின்ற ஒரு புகழ்பெற்ற கவிதை உண்டு.
“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.
அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.
அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன.
அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.
அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.
நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.”
அப்படித்தான் ரவி அண்ணன் போல மனிதர்களும். நினைவுகளில் கடந்த காலத்தையும், கூடவே கார்த்திக்கையும் சுமந்துக் கொண்டு அலைந்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தலைமை என்பது பன்மைச் சொல் அல்ல. கூடி செயல் செய்யலாம். கூடி தலைமையேற்க முடியாது. தலைமையேற்க உறுதி வாய்ந்த தனி ஒருவனே தகுதி உடையவனாகிறான்.இந்த உலகத்தின் எல்லா புரட்சிகர மாறுதல்களும் தனி ஒரு மனிதனின் சிந்தனைத் துளியிலிருந்து தான் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் எல்லா தத்துவங்களும், எல்லா மதங்களும், எல்லாப் புரட்சிகளும், தனி ஒரு சில மனிதச் சிந்தனைகளின் விளைச்சல்தான். தன்னம்பிக்கை கொண்ட தனிமனிதர்கள் ஒரு சிலரின் வாழ்க்கை கதைகளே உலக வரலாறு என்கிறார் விவேகானந்தர். உலகின் இருள் நீங்க சிந்தித்த எடிசன் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் உலகத்தின் வெளிச்சமாக மாறிப் போகிறான். ஒரு தொடர்வண்டிப் பயணத்தில் காந்தி என்கின்ற ஒரு தனி ஒருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமதிப்பு தான்
1947 ஆகஸ்ட் 15 அன்று மூவர்ண கொடி டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட ஒரு காரணமாக அமைந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்திலிருந்து உதிர மண்ணை அள்ளிக் கொண்டு உருவேற்றிக் கொண்ட ஒரு தனிச் சிறுவன்தான் பகத்சிங் என்ற பெயரில் புரட்சிகர அரசியலின் அடையாளமாக மாறிப் போனான். பிரபாகரன் என்கின்ற ஒரு தனிமனிதனின் துருப்பிடித்த அந்த ஒற்றை துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ஒரு தோட்டா தான் அடுத்து வந்த 30 ஆண்டுகால போராட்டத்தின் திசையை தீர்மானித்தது. சேகுவேரா நல்ல தளபதிதான். ஆனால் அவருக்கும் கூட பிடல் காஸ்ட்ரோ என்கின்ற ஒரு தனிமனிதன் தலைவராக தேவைப்பட்டார். அலைபாயும் கடலுக்கு நடுவே திசையற்று நிற்கின்ற கப்பலுக்கும் கூட ஒரே ஒரு திசைமானி தேவைப்படுகிறது. கரை நெருங்குவதை கண்டுணர்ந்து நம்பிக்கை கொள்ள ஒரே ஒரு கலங்கரை விளக்கம் தேவைப்படுகிறது. ஏங்கல்சுகளால் எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. அதற்கு ஒரு கார்ல் மார்க்ஸ் தான் சிந்திக்க வேண்டும்.
அவரை முதன்முதலாக நான் நேரில் கண்ட இடம் ஒரு சிறைச்சாலை. கடந்த 2008ம் ஆண்டு பாண்டிச்சேரி சிறையில் ஒரு தனி அறையில் தனிமையாக அவர் அமர்ந்திருந்த போதுதான் அவரை கண்டேன். இனம் அழிந்து கொண்டிருந்த காலம் அது. உறங்கா இரவுகள் தந்த விழி சிவப்பில் கலங்கிய கண்களோடு அவர் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தனி ஒருவன் தான். ஈழத்தில் அவர் உயிருக்கு உயிராக பழகியவர் தளபதிகள், பெரும் வீரர்கள் ஒவ்வொருவராக வீர மரணம் அடைகிற செய்திகளை ரணம் பட்ட இதயத்தோடு அவர் உள்வாங்கி உருக்குலைந்த நாட்களில் தனி ஒருவனாகத்தான் இருந்தார். எல்லாம் அழிந்து முடிந்த காலகட்டத்தில், இனி ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமே என்ற பதைபதைப்பில், அடுத்து என்ன செய்யலாம் என்று அனைவரும் கைப்பிசைந்து நிற்கும்போது, சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் தனித்தக் குரலில் சொன்னான். முள்வேலி கம்பிகளுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்க மதுரையில் கூடுவோம். “அறுத்தெறிவோம் வாரீர்.” 2011 – ஒரு நூற்றாண்டு கடந்த ஒரு பேரியக்கம். பலம்வாய்ந்த ஆளும் கட்சியோடு கூட்டணி சேர்ந்து நிற்கிறது. எம் இனத்தை துடிக்கத் துடிக்க அழித்த காங்கிரஸ் 63 இடங்களில் தமிழ்நிலத்தில் துணிச்சலாக போட்டியிடுகிறது. இப்போது இருக்கின்ற கூட்டம் போல கூட இல்லை நாங்கள். ஒருவித மனச்சோர்வு அந்த நேரத்தில் எங்களை சூழ்ந்திருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என அனைத்து தரப்பிலும் இருந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன. காங்கிரஸின் உதிரம் படிந்த கை மீண்டும் தமிழ்நாட்டில் எழுந்தால்.. நாம் தமிழர் என நாங்கள் கூடி முழங்கி எழுந்ததற்கு பொருளில்லை என்கின்ற அச்சம் எங்களால் மனதில் குடிகொண்டிருந்தது. ஏனெனில் நாங்கள் அன்று ஒரு கட்சி அல்ல. ஊருக்கு ஊர் சிறு குழுக்களாக திரண்டு கொண்டிருந்தோம் அவ்வளவுதான். 63 இடங்கள். வலு வாய்ந்த திமுக காங்கிரஸ் கூட்டணி. எப்படி எதிர்ப்பது என எங்கள் யாரிடத்திலும் எந்த திட்டமும் இல்லை. முன்னணி நிர்வாகிகள் சிலர் சொன்னார்கள். தேர்தலில் போட்டியிடாத வைகோவிடம் சென்று அவரையும் அழைத்துக்கொள்வோம் என்றார்கள். இவர்கள் பேசியது அறிந்த வைகோ அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு படுத்து விட்டது வேறு கதை. எதுவும் எங்களுக்கு சாதகமாக இல்லாத சூழல் அன்று.எங்களுக்கு முன் அமர்ந்திருந்த சீமான் என்கின்ற அந்தத் தனி ஒருவன் தான் சொன்னான். “இது வெறும் தேர்தல் அல்ல. சோனியா காந்தி மகன் ராகுல் காந்திக்கும் பிரபாகரனின் தம்பி சீமானுக்கும் நடக்கின்ற யுத்தம்.” “தமிழினத்தின் உதிரம் படிந்து சிவந்து இருக்கிற காங்கிரசின் கையை வெட்டி வீழ்த்துவோம், காங்கிரஸைக் கருவறுப்போம்” என்று முதலாவதாக அந்தத் தனி ஒருவன் தான் எழுந்து நின்று சொன்னான். தலைவரை தத்துவமாகக் கொண்டு அவர் மீது சத்தியமிட்டு சொல்கிறேன். காங்கிரசை வீழ்த்த அன்று எடுத்த முடிவு சீமான் என்ற தனி ஒருவன் எடுத்த முடிவு. முடிவில் காங்கிரஸ் முடிந்தது.
புலிக்கொடி தமிழக மண்ணில் எழுந்து பறந்தது. 2016. பல கட்சிகளிடமிருந்து அழைப்பு. ஆனால் சீமான் என்ற தனி ஒருவன் எங்கள் யாரிடமும் கேட்கவில்லை. தனித்துப் போட்டி என தன்னம்பிக்கையோடு அறிவித்தான். அவன் கரம் பிடித்து நடக்கிற எங்களுக்கு கூட அந்த முடிவு ஒரு அதிர்ச்சி தான். சென்னையில் நடந்த பொதுக்குழுவில் அந்த முடிவை அறிவித்தபோது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதன்மையான எட்டு பேர்களில் நானும் ஒருவன். ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறேன். இந்த முடிவு சரியா தவறா என்று எனக்கு தெரியாது. என் மனதிற்குள் கடுமையான போராட்டம். அந்த இரவில் அண்ணன் அலைபேசியில் வந்தான். “எதற்கும் கவலைப்படாதே. நான் இருக்கிறேன். என் தம்பி தங்கைகளுக்காக நான் ஓடுவேன். வாக்கு கேட்பேன். துணிந்து நில்.” என்றான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். வேட்பாளர்களாக நின்ற நாங்கள் யாரும் அடையாளம் அற்றவர்கள். புதியவர்கள். எதுவுமில்லாத இளையவர்கள்.வரலாற்றின் வீதிகளில் முகமற்ற எங்களுக்கு சீமான் என்கின்ற தனி ஒருவன்தான் முகவரியாகிப் போனான். பொதுத் தொகுதிகளில் ஆதித் தமிழர்கள் நின்றார்கள். பெருமங்கை ஜெயலலிதாவை எதிர்த்து ஒரு திருநங்கை சகோதரி களத்தில் நின்றார். வேட்பாளர்கள் யாருக்கும் அவரவர் சாதி பெரும்பான்மை இருக்கின்ற இடத்தில்
இடமில்லை. பொதுத் தொகுதியில் எப்படி ஆதித்தமிழரை நிறுத்தலாம் என்பதான கேள்விகள். அவன் சாதி பார்த்து நீ வாக்களிக்க யோசித்தால் என்றால்.. உன் ஓட்டு எனக்கு வேண்டாம். உன் ஓட்டு எனக்கு தீட்டு என கம்பீரமாக அந்த தனி ஒருவன் தான் அறிவித்தான். அந்த தனி ஒருவன் தான் வீதிக்கு வீதி ஓடினான். எதுவுமற்ற தம்பி தங்கைகளுக்கு எல்லாமாகவும் இருந்து வாக்குகள் சேகரித்தான். இப்படித்தான் 2016ல் படைத்தோம் புதிய அரசியல் வரலாறு.
2019 பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்ற தேர்தலை விட இன்னும் கடுமையான களம். கட்சியின் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம்.பலமான வேட்பாளர்களை நிறுத்துவோம் என அனைவரும் முடிவெடுக்கிறோம். அந்தத் தனியன் அப்போது அமைதியாக இருக்கிறான். நாங்கள் எல்லோரும் பேசி முடிக்கிறோம். இறுதியாக பேச எழுந்த அவன் மொத்தம் 40 இடங்களில் 20 இடம் ஆண்களுக்கு 20 இடம் பெண்களுக்கு. என அறிவிக்கிறான்.
வழக்கம் போல் நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம். ஆனாலும் அந்த சீமான் என்ற தனி ஒருவன் வற்றாத தன்னம்பிக்கையோடு 20 பெண்களையும் 20 ஆண்களையும் வேட்பாளராக நிறுத்துகிறான். அப்போதும் அவன் தனி ஒருவன் தான். இப்படித்தான் 2016ல் பெற்ற நாலரை லட்சம் வாக்குகள் அடுத்த மூன்றே வருடங்களில் நான்கு மடங்காக உயர்ந்து 17 லட்சம் ஆனது. உண்மையின் கனல் வீசி தமிழின் அனல் பூசி முழங்கிய அந்த தனி ஒருவனது முழக்கங்களால் தான்
அடையாளமற்ற ஒரு இளைஞர் கூட்டம் அரசியல் அதிகாரம் நோக்கி அணியமாகி வருகிறது. எப்போதும் அவன் தனி ஒருவனாகத்தான் இருக்கிறான். அரசியலுக்காக கூட யாரிடமும் கூட்டு வைப்பதில்லை. அவன் அவனது அண்ணன் போலவே யாரிடமும் சேராமல் தனித்தே தனி ஒருவனாய் நிற்கிறான். இனம் காக்கின்ற இப்பணியை அவன் செய்யத் தொடங்கும்போது இன்று உடன் நிற்கின்ற நாங்கள் யாரும் அன்று அவனுடன் இல்லை. நாளையே நாங்களும் நகர்ந்தாலும் அவன் காலம் கையளித்த இப்பணியை கட்டாயம் செய்து பயணித்துக் கொண்டுதான் இருப்பான். எவரையும் நம்பி இல்லை அவன். ஆனால் அவனை நம்பி எண்ணற்ற இளம் புரட்சியாளர்கள் இலட்சியப் புன்னகையோடு அவன் பின்னால் நிற்கிறார்கள். கூடி நிற்கிறோம். ஆனால் முன்னால் அவன்தான் நிற்கிறான் கூடி வாழ்கிறோம். ஆனால் அவன்தான் தலைமையேற்கிறான். தீர்மானங்களையோ முடிவுகளையோ யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் தலைவனாக அவன் தான் வழி காட்டுகிறான். ஆளாளுக்கு முடிவெடுத்தால் போகிற பயணம் முடியாது. சரியான தனி ஒருவன் தலைமை ஏற்க மறுத்தால்.. எந்த இனமும் விடியாது. கூடிப் பேசிக் கொண்டிருந்தால் விவாதம் மட்டுமே மிஞ்சும். கடமையாற்ற களம் செல்பவர்கள் மனதில் தலைவன் சொல் மட்டுமே எஞ்சும். கூட்டுத்தலைமைகளால் இனத்திற்கான விடுதலைக் கூடு கட்ட முடியாது. வானத்தின் எல்லையைத் தொட்டு பறக்கும் வல்லூறு ஒன்றின் வலிமை கொண்ட தனி ஒருவன்தான் இனத்திற்காக நாடு கட்ட தகுதியானவன். இது தனி மனித துதிபாடல் அல்ல. இலட்சிய உறுதியில் மாறாமல் நீண்டகாலம் பயணித்து எப்படியும் இனத்தின் விடுதலை இலக்கை வென்று முடிக்கின்ற , எப்போதாவது வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய இனத்தில் தோன்றுகிற தனி ஒருவன் பற்றிய தேடல்.அது குறித்த புரிதல். இதையெல்லாம் அறிந்து தான் இறுமாப்போடு சொல்கிறோம். சீமான் என்கின்ற ஒருவன் தான் எழுதப்பட இருக்கிற நாளைய நம் இனத்தின் வரலாறு.