மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சந்தேகங்கள் நிரம்பிய தேர்தல் முறைமை -எழும்பும் வினாக்களும்.. நீடிக்கும் பொது மெளனமும்..

இந்தத் தேர்தலைப் பொறுத்து சில சந்தேகங்கள் நமக்கு எழுந்திருக்கின்றன. இதையே சந்தேகங்கள் இன்னும் நம்மில் பலருக்கும் இருக்கலாம். இந்த சந்தேகங்கள் குறித்து இதுவரை எந்த ஊடகமும் எவ்விதமான விவாதங்களும் மேற்கொள்ளாமல் கடந்து போக முயற்சிப்பதில் இருந்தே இந்த சந்தேகங்கள் மீதான வலிமை அதிகரிக்கிறது.

உரையாடல்கள்/ கேள்விகள்/ விவாதங்கள் எதுவுமற்ற சந்தேகங்கள் உண்மைகளுக்கு நெருக்கமானவை என்பதுதான் அச்சமாக இருக்கிறது.

1. பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்த மாநிலத்தை ஆளுகின்ற அண்ணா திமுக அரசிற்கு தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள 8 சட்டமன்ற தொகுதி இடங்கள் தேவைப்பட்டன. நடந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மிகச் சரியாக ஒன்பது இடங்களை பிடித்து இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த அண்ணா திமுக சட்டமன்ற இடைத்தேர்தலில் மட்டும் வலுவான திமுகவை எதிர்த்து ஒன்பது இடங்களை பிடித்து இருப்பது மிகுந்த சந்தேகத்திற்குரியது. ஒரு சட்டமன்ற தொகுதி வாக்காளர் சட்டமன்ற தொகுதிக்கு இரட்டை இலைக்கும் பாராளுமன்ற தொகுதிக்கு உதய சூரியனுக்கும் வாக்களித்திருப்பார்கள் என எண்ணும் போது உண்மையில் சந்தேகமாக இருக்கிறது. அப்படி முற்றிலும் எதிரான முரண்பட்ட இரண்டு கட்சிகளுக்கு ஒரே தேர்தலில் ஒரே வாக்குச்சாவடியில் இரண்டு ஓட்டுக்களை அளித்த ‘விசித்திர’ வாக்காளர்கள் குறித்த எந்தக் கேள்வியையும் ஊடகங்கள் எழுப்பாதது மிகுந்த சந்தேகத்திற்குரியது.

2. மக்கள் நீதி மய்யம் நாம் தமிழர் கட்சி போலவோ அம முக போலவோ பரவலான கிளைப் பொறுப்பாளர்களை கொண்ட கட்சி அல்ல. நாம் தமிழர் கட்சிக்கு இருந்த பரவலான ஆதரவைப் குறைத்து காட்டவே மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிட வைக்கப்பட்டது. சொல்லப்போனால் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் எங்கும் சரியாக வாக்கு கேட்டதாக கூட தகவல்கள் இல்லை. அதன் தலைவர் கமலஹாசனும் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்ததாக தெரியவில்லை.ஆனாலும் மக்கள் நீதி மையம் 3 சதவீத வாக்குகள் பெற்று இருப்பது என்பது கமலஹாசனின் மோடி பதவியேற்பு விழாவிற்கு அழைப்பதன் அரசியலிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எவ்விதமான பிரச்சாரமும் செய்யாத மக்கள் நீதி மய்யம் பெற்றிருக்கின்ற வாக்கு சதவீதம் கமலஹாசன் மோடி அந்த இரண்டு தனி நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

3. முற்றிலுமாக மின்னணு வாக்கு எந்திரத்தின் மீதான சந்தேகங்கள் எழுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தென்மாநிலங்களில் பாஜக தோல்வியுற்றது போல ஒரு காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகம் எழுகிறது. வட இந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்திற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுக் கொண்ட பாஜக தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு கேரளா ஆந்திரா போன்ற மாநிலங்களில் தன்னை வீழ்த்திக் கொண்டு தான் பெற்றிருக்கிற மாபெரும் வெற்றியின் மீதான சந்தேக நிழலை தடுக்க முயற்சித்திருக்கிறது.

4. திமுக அடைந்திருக்கின்ற வெற்றி அரசியல் ரீதியாக கொண்டாடப்பட முடியாமலும் அதிமுக அடைந்திருக்கின்ற தோல்வி கொண்டாடப்பட கூடியதுமாக இருப்பதும், நாம் தமிழர் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வளர்ச்சிக்கு இணையாக எவ்வித கட்டமைப்பும் கிளையும் இல்லாத மக்கள் நீதி மய்யம் பொருட்படுத்த வேண்டிய வாக்குகளை பெற்று இருப்பதும் திட்டமிட்டு கணக்குப் போட்ட ஒரு சாணக்கியனின் சதியாகத்தான் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

5. நீண்டகாலமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தான சந்தேகங்களை நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது. இந்தத் தேர்தலிலும் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தப்பட்டதும், பல வீடுகள் கடைகள் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் காணப்படுவதுமான வருகிற செய்திகள் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை குலைக்கின்றன.ஆரம்பத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்திய நாடுகள் கூட தற்போது அதை கைவிட்டு வாக்குச்சீட்டு முறைக்கு மாறி விட்ட பிறகு இன்னும் பிடிவாதமாக இந்த சந்தேகத்திற்கு இடமான முறையை கடைபிடித்து வருவது என்பது பெரும் முதலாளிகளுக்கு பன்னாட்டு வர்த்தகத்திற்கு ஆதரவான ஒரு ஆட்சி அமைப்பினை உருவாக்க நடத்தப்படும் பெரும் நாடகமே இந்த தேர்தல் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

6. தேர்தல் ஆணையம் என்ற ஒன்று செயல்பட்ட மாதிரியே தெரியவில்லை. வழக்கம்போல வேட்பாளர்கள் பணம் கொடுத்தார்கள். வாக்காளர்கள் பெற்றுக் கொண்டார்கள்.வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குகின்ற முறைதான் தேர்தல் என்றால்.. நாங்களெல்லாம் சொல்வது போல ஒரு பெரிய ஏலத்தினை ஏற்பாடு செய்து அந்த ஏலம் மூலம் வாக்காளர்களை விலைக்கு வாங்கும் ஏதோ ஒரு பணக்கார கட்சிக்கு வெற்றியை கொடுத்து விடலாம். பணம் அளித்ததாக சொல்லி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற வேலூர் தொகுதியில் கூட பணம் அளித்ததாக ஒரு வேட்பாளர் மீது கூட வழக்கு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

ஒரு சந்தேகம் நிரம்பிய ஒரு தேர்தல் முறையை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் உலகிலேயே பெரிய ஜனநாயக நாட்டின் ஜனநாயகத் தன்மையை உறுதிப்படுத்துவதாக நாடகம் நடத்தப் படுவதும்..அதை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட எதையும் கண்டுகொள்ளாமல் கடந்து போவதுமான காட்சிகள் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்த நாடு பாசிஸ ஆட்சி முறையை நோக்கி நகர்வதற்கான அறிகுறிகளாகும்.

மணி செந்தில்.
www.manisenthil.com

துளி -26 Photograph -hindi- தயக்கங்களின் பேரழகு.

 

நீ நடக்கும் பாதையில்
எனது சொற்கள்
மஞ்சள் நிறப்
பூக்களாய் உதிர்ந்து
கிடக்கின்றன.

உன்
மௌனம் ஒரு
வண்ணத்துப்
பூச்சியாய் மாறி
என் தோளின் மீது
அமர்ந்து விட்டு
செல்கிறது.

உன்னைக் காணும்
கணப்பொழுது
என்னுடைய
நிகழ்காலத்தை
வெள்ளை
பனிக்கட்டியாய்
உறைய வைக்கிறது.

உறைந்துவிட்ட
காலத்தை
உலர வைக்க
மீண்டும்
உன்னைத்தான்
தேடி வர
வேண்டியிருக்கிறது.

ஒருமுறை பார்த்துவிட்டு போ.

சலசலத்து ஓடும் வாழ்வின் நதி எதையும் கடத்தி விட்டு போகும் கரைத்துவிட்டு போக்கும் வல்லமை கொண்டது. அதன் குரூர வேக ஓட்டத்தில் அன்பினால் பூத்த எளிய கணங்கள் கரை ஒதுங்கி.. நனைந்த செம்பருத்திப்பூ வாய் சிவந்து கிடக்கின்றன.‌

என்னுள் மலர்ந்திருக்கும் உன் மீதான நேசத்தை எப்படி சொல்வேன்.. ஒரு வயலின் கொடு. வாசித்துக் காட்டுகிறேன். ஒரு தூரிகை கொடு.
வரைந்து காட்டுகிறேன். சில சொற்களைக் கொடு. முன்னும் பின்னுமாக கோர்த்து முற்றுப்பெறாத கவிதை ஒன்றை எழுதி காட்டுகிறேன்.

இல்லையேல் தகிக்கிற உனது நிராகரிப்பினை என் மீது சில வெற்றுப் பார்வைகள் மூலம் காட்டி விட்டுப் போ.
அதே நாளின் அந்தியில் என் கண்ணீரால் ஒரு பெரும் மழை என உன் ஜன்னலுக்கு வெளியே பெய்து விட்டுப் போகிறேன்.

ஏதோ சில பொழுதுகளை மறக்க தீராத் துயரத்தோடு சகிக்க முடியாத பாவனை வாழ்வொன்றை வாழ்ந்துதான் ஆக வேண்டி இருக்கிறது. அந்த முகமூடி வாழ்க்கையில்.. நாம் கண்டடைகிற மகிழ்ச்சி சோகம் பசி தூக்கம் என அனைத்துமே.. இறந்து போன காலம் ஒன்றின் இறக்கமுடியா வலி ஒன்றின்
தகிப்பே.

இந்த பாவனை வாழ்வில்.. ஏதோ ஒரு நொடியின் சலனத்தில் கேட்டு விடுகிற ஒரு இசை பாடல்.. ஆழமான ஒரு நினைவை.. காய்ந்திருக்கும் பாலையில் ஒற்றை மழைத்துளியால் நிகழும் ஒரு துளிர்ப்பைப் போல .. சட்டென்று ஒரு நினைவின் துளிர்ப்பை நிகழ்த்தி விட முடிகிறது.

இந்தப் பெரும் அபாயத்திற்கு மத்தியில் தான் நிகழ்தகவாய் இந்த அபத்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உதிர்ந்து திரியும் சொற்களை விட.. உதிராமல் உயிர் ஆழத்தில் சேகரித்து வைத்திருக்கும் நேச மௌனத்தை சுமந்து திரியும் இருவரைப் பற்றிதான் இத்திரைப்படம் பேசுகிறது.

அவர்களை நீங்கள் எங்கும் பார்க்கலாம் என்பதுதான் இந்த திரைப்படத்தின் பலம். சொல்லப்போனால் அவர்களை உங்களுக்குள்ளேயே பார்க்கலாம். சிறு சிறு தயக்கங்களால் தங்கள் இதயங்களை கீறிக் கொள்ளும் அவர்கள் நமக்குள்ளும் ஒளிந்திருக்கிறார்கள்.

ஒரு பறவையின் சிறகடிப்பு போல..பெரு வலையில் சிக்கிக் கொண்ட ஒற்றை மீனைப் போல ‌… பார்த்துவிட்டு பின்பு நெடுநேரம் உறுத்திக்கொண்டே இருக்கிறது இத்திரைப்படம்.இத்திரைப்படம் கண்ட பிறகு காணும் யாவரும் மௌனித்து எதையோ சிந்தித்தவாறே அமைதியாக அமர வைப்பதுதான் இந்தத் திரைக்கதையின் வலிமை.

முற்றுப்பெறாத கவிதை போல.. சின்ன அதிர்வினை மனதிற்குள் சுமத்தி விட்டு போகும் அந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சி.. எதனாலும் விவரிக்க முடியா மௌனத்தின் பேரழகு.

இயல்பை மீறியதொரு அழகு எங்கும் இல்லை. செயற்கையான எந்த பூச்சுகளும் இல்லாத இயல்பின் மொழியில்.. பார்க்கப் பார்க்க .. ஆச்சரியப்பட வைக்கின்ற இத்திரைப்படத்தின் பெயர்.

போட்டோகிராப். (Photograph)

அமேசான் பிரைம் வீடியோ வில் காணக் கிடைக்கிறது. நவாசுதீன் சித்திக் என்கின்ற மாபெரும் கலைஞனின் அசலான நடிப்பில் உறைந்திருக்கும் மௌனங்களின் வலி மொழியை பேசுகிற இத்திரைப்படம்.. நுட்பமான உணர்வுகளை உணரும் பேறுபெற்றோர் காணவேண்டிய அற்புத அனுபவம்.

மற்றதை திரையில் காணுங்கள். அதுவே அந்த அற்புதத் திரைமொழிக்கு செய்யும் மரியாதை.

பரவசத்துடன் பரிந்துரைத்து சிலிர்க்க வைத்த என் சீடன் Dhuruvan Selvamani Somu க்கு நன்றி.

திமுக Vs நாம் தமிழர்.

 

கடந்த சில நாட்களாக திமுகவினர் நம்மை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் பதிவுகளில் குறிப்பிட்ட சில அம்சங்கள் காணப்படுகின்றன.

இது வரை இல்லாத மூர்க்க எதிர்ப்பினை பதிவு செய்து வரும் அவர்களது பதிவுகள் நாம் தமிழர் கட்சி கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியலில் பெற்றிருக்கின்ற மறுக்க முடியாத வளர்ச்சியை ஒரு குறியீடாக குறியிட்டு காட்டுகின்றன.

இப்படி விமர்சிக்கும் எந்த திமுகவினரும் நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற சுற்றுப்புற சூழல் சார்ந்த பசுமைப் பொருளாதாரத்தை பற்றியோ, தற்சார்பு பொருளாதாரம் குறித்தோ, பல்லுயிர் பெருக்கம் குறித்தோ பேச மாட்டார்கள். பல்வேறு தேசிய இனங்கள் உள்ளடக்கிய ஒரு நாட்டில் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஏதுவாக சுழற்சி முறை பிரதமர், மக்களை சந்திக்காது தேர்தலில் போட்டியிடாதவர்களுக்கு மக்களை நிர்வகிக்க பதவிகள் மறுக்கப்படும் சூழல் உள்ளிட்ட மாற்று அரசியல் சிந்தனைகளை பற்றியோ அவர்கள் பேசுவதில்லை. நாம் தமிழர் சாதித்திருக்கிற பெண்களுக்கு சரி சமமான 50 சதவீத இட ஒதுக்கீடு, தமிழகத்தில் நிலவி வந்த ஈழ விடுதலைக்கான ஆதரவு மீதான அரசு அதிகாரம் சார்ந்த அச்சத்தை அகற்றல், ஈழவிடுதலையை தாயக தமிழக இளைஞர்களின் பொதுவான லட்சியமாக மாற்றல், தேசிய இனங்களுக்கான அதிகாரங்களை கோரும் வண்ணம் மாநில தன்னாட்சி போன்ற எது குறித்தும் இவர்கள் பேச மாட்டார்கள்.பணம் வாங்கிக்கொண்டு பதிவுகள் எழுதும் இவர்களுக்கு இது குறித்த எந்த சிந்தனையும் கிடையாது.

நாம் தமிழரைப் பற்றி இழிவான வார்த்தைகள் மூலம் திமுக ஆதரவு பதிவுகள் எழுதும் பெரும்பாலானவர்கள் பதிவு எழுதுவதையே முழு நேர வேலையாக கொண்டிருப்பவர்கள். அதன் மூலமாக ஊதியம் பெற்று சம்பாதிப்பவர்கள். ஒரு கேவலமான பதிவு எழுதி அதன் மூலமாக இன்சென்டிவ் உள்ளிட்ட ஊதிய உயர்வு பெறுகிறவர்கள். அவர்களுக்கு வாசிப்பு அறிவோ, குறிப்பிட்டவை குறித்தான ஆய்வு அறிவோ எதுவும் கிடையாது.

பிழைப்பின் காரணமாக பதிவுகள் எழுதி ஏசி கொண்டிருப்பவர்களை நம்மைப் போன்ற இலட்சியத்தால், இன அழிவின் உறுதியால் அரசியலுக்கு வந்தவர்கள் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுபவீ போன்றவர்களுக்கு நம்மை எதிர்த்தால் தான் பிழைப்பு. திமுகவில் அவருக்கு என எந்தப் பணியும் கிடையாது. திமுக சார்ந்த ஒரு கிளை அமைப்பினை உறுப்பினர்கள் இல்லாத ஒரு சிறு அமைப்பினை கொண்டு இருக்கிற அவருக்கு சீமான் போன்ற திமுகவின் பிரதான எதிரியை எதிர்த்து பேசுவதன் மூலமாக திமுகவில் தனக்கான இடம் இருக்கிறது என்கின்ற பிம்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம். எனவே நம்மை அழிப்பதாக சவால் விட்டுக் கொண்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

சுபவீ யோடு மிக நெருங்கி பழகி அவரது இனத்துரோக செயல்களால் விலகி வந்து நாம் தமிழரில் பயணித்துக் கொண்டிருக்கிற அண்ணன் அன்பு தென்னரசன், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது உள்ளிட்ட பலர் சுபவீ பற்றி அனைத்து உண்மைகளையும் அறிந்தவர்கள் இருக்கிறார்கள். இது சுப வீக்கும் தெரியும். நாம் பேசினால் எதிர்விளைவு மிகக் கடுமையாக பாயும் என்பது சுபவீக்கு தெரியாததல்ல. ஆனாலும் அவர் பேசியாகவேண்டும். அவருடைய இருப்பு, பிழைப்பு ஆகியவை அவருக்கு முக்கியமானவை. எனவே பேசிக் கொண்டு திரிகிறார்.

ஆனால் நாம் அவ்வாறல்ல. அரசியல் என்பது நமக்குத் தொழில் அல்ல. நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அனைவருக்கும் ஒவ்வொரு தொழில் இருக்கிறது. நமது வயிற்றுப் பிழைப்பிற்கான வேலையை செய்து விட்டு அதில் நேரம் ஒதுக்கிக் கொண்டு மக்கள் பணி செய்ய நாம் வருகிறோம். நமது தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் கூட இதுவரை அவருடைய வாழ்க்கைப் பாடுகளுக்காக திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் திரைத்துறை சார்ந்த பணிகளில் இயங்கிக் கொண்டு அவரது சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டும் தான் இருக்கிறார்.

திமுகவில் இயங்குகிற 80 சதவீதம் பேர் அரசியலை முழு நேர தொழிலாக கொண்டவர்கள்.அதன் தலைவர்கள் ஏற்கனவே பலமுறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடித்து கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள் தொழில் நிறுவனங்கள் அசையும் அசையா சொத்துக்கள் என இன்னும் பல தலைமுறைகளுக்கு வசதியாக வாழுகின்ற பொருளாதார பலத்தை கொண்டவர்கள்.

எனவேதான் முழு நேரமாக ஊதியத்திற்காக பதிவு எழுதும் ஆட்களை நியமித்துக் கொண்டு அவர்கள் சார்பாக இவர்கள் எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்.

திமுக இன்று தத்துவ பின்புலமற்ற பிழைப்புவாத அரசியல் கட்சியாக மாறிவிட்டது. அவர்களது தலைவர் தொடங்கி அடிமட்ட தொண்டன் வரை எவ்விதமான தத்துவ புரிதலும் மற்றவர்கள். திராவிட கட்சி என்று சொல்லிக்கொண்டு கோவில் கோவிலாக அலைந்து யாகம் வளர்ப்பவர்கள். திமுக தலைவரே என் கட்சியில் இருக்கிற பெரும்பாலானோர் இந்துக்கள் என்று பேசுபவர். இதுதான் இவர்களது தத்துவ புரிதல் மட்டம்.

கருணாநிதி என்கின்ற தனிமனிதனுக்கு பிறகு திமுகவில் இருக்கிற பெரும்பாலான தலைவர்கள் வாசிப்பு அறிவு இல்லாதவர்கள். திராவிடம் பெரியார் என்றெல்லாம் பேசுவதில் அதிகம் விருப்பம் இல்லாதவர்கள். அது மக்களின் ஆதரவைப் பெறாத தத்துவம் என்று புரிந்தவர்கள்.

திமுகவில் இருவகையான தலைவர்கள் இருக்கிறார்கள் ‌. ஒன்று ஏற்கனவே திமுகவின் தலைவர்களாக இருந்தவர்களின் வாரிசுகள். மற்றொன்று பிழைப்பதற்காக வயிறு வளர்ப்பதற்காக உள்ளூரில் ரவுடித்தனம் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை செய்து பெரிய ஆளாக காட்டிக் கொண்டவர்கள்.

இவர்களுக்கு ஈழ விடுதலை குறித்தோ, மாநில உரிமைகள் குறித்தோ சுற்றுப்புறச் சூழல் குறித்தோ , உலக அரசியல் நிலைகள் குறித்தோ, எதுவும் தெரியாது. திமுகவில் இருக்கின்ற வாசிப்பறிவு உள்ள மிகச்சிலரான திருச்சி சிவா, ஆ ராசா போன்றவர்களுக்கும் இந்தக் கொடும் நிலை நன்கு தெரியும்.வேறு வழியில்லாமல் பிழைப்பிற்காக அவர்களும் பாராட்டிக் கொண்டு இந்த கொடும் நிலையை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனவே நாம் இப்படிப்பட்டவர்களை எதிர்த்துதான் இந்த களத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

ஒரு எளிய நாம் தமிழரின் இளைஞன் தன்னை வாசிப்பு அறிவு மூலம் மெருகேற்றிக்கொண்டு தனக்கும் சமூகத்திற்கும் பயன்படுபவராக மாறி கொள்வதையே தனது முக்கியமான செயல்பாடு என கருதுவதுதான் நாம் தமிழர் கட்சியின் முக்கியமான வெற்றி.

தொடர்ந்து நாம் முன்னேறுவோம்.

ஆயிரம் தடைகள், ஆயிரம் விமர்சனங்கள் சுற்றி சூழ நாம்தமிழர் தனது இலக்கை வென்றே தீரும்.

அதன் லட்சிய பயணத்தில் சுபவீ கரு பழனியப்பன் திண்டுக்கல் லியோனி பிரசன்னா போன்ற ஈசல்கள் ஒரு போதும் தடையாக இருக்கப்போவதில்லை.

ஜஸ்ட் லைக் தட் ..

காறித்துப்பிவிட்டு போய்க்கொண்டே இருப்போம் ‌.

கடவுள் மரித்த நிலம்..


—-+-+-+++++++++

கரை ஒதுங்கிய
மீனின் வயிற்றில்
குழந்தையின்
கண் ஒன்று
இமைக்காமல்..

கண்ணை
உற்றுப்பார்த்தோர்
கலங்கித்தான்
போனார்கள்.

அசையாத
விழியில் உறைந்த
காட்சிகள் அசைந்துக்
கொண்டிருந்தன..

பிஸ்கட் தின்றவாறே
எங்கோ வெறித்திருந்த
சிறுவனின் பார்வை.

இடுப்பிற்கு கீழே
வெடிக்குண்டால்
சிதைக்கப்பட்ட
பெண்ணொருத்தியின்
நிர்வாண உடல்

நெஞ்சோடு தாய் மண்ணை
இறுக்கிப் பிடித்த வாறே
இறந்திருந்த போராளியின்
இறுக மூடிய விரல்கள்..

பின்னந்தலையில்
சுடப்பட்ட தோட்டாவால்
முன்னால் சிந்திய
உதிரத்தை பார்த்த
விழிகள்..

கைவிலங்கிடப்பட்ட
சீருடைப் பெண்ணின்
குனிந்த தலை..

நிராதரவாய்
காற்றில்
அலையும்
சரணடைய
உயர்ந்த கரங்கள்.

கந்தக
மேனியோடு
கருகிய
ஒற்றை பனை.

போதும்..போதும்.

காண சகிக்காது
பார்வையை
விலக்கிய போது..

தூரத்தில்
காயங்களோடு
கரை ஒதுங்கி
பிணமாகக்
கிடந்தார்
கடவுள்.

பத்தாண்டுகள் ஆனாலும் கடக்க முடியாத இன அழிவின் கொடும் பாலை..

பத்தாண்டுகள் கடந்து விட்டன.

ஆனாலும் கடக்க முடியாத பெரும் வலியாக இனத்தின் அழிவு ஆழ்மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தப் போரின் இறுதிக் கால கட்டங்களில்.. யாராவது போராடி இந்தப் போரை நிறுத்தி விட மாட்டார்களா என்று ஒவ்வொரு அமைப்பும் நடத்திய போராட்டங்களில் உரத்த குரலில் முழக்கமிட்டது நினைவுக்கு வருகிறது.

என்னைப் போலத்தான் பலரும் அக்காலகட்டத்தில் இருந்தார்கள். மனதின் சமநிலை தவறுகிற ஏதோ ஒரு நொடியில் தன்னைத் தானே எரித்துக் கொள்ளலாம், அதுவே மிகப்பெரிய போராட்டத்தை உண்டாக்கலாம் என்கின்ற எண்ணத்தில் பலர் திரிந்து கொண்டிருந்தார்கள்.

போர்க் காட்சிகள் நிரம்பி வழிகிற குறுந்தகடுகளை காண சகிக்காமல் அழுத கண்களோடு பிரதி எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராய் பார்த்து கொடுத்துவிட்டு வருகிற இரவுகளில்… அயலகத்தில் இருந்து வருகிற அலைபேசி அழைப்புகளில் ஒவ்வொரு தளபதியின் பெயர் சொல்லி இவர் இன்று வீர மரணம், இந்தப் பகுதி இராணுவ வசம் ஆனது என்று சொல்லிவிட்டு புலிகள் தந்திரோபாயமாக பின்வாங்குகிறார்கள் என்ற நம்பிக்கையும் நமக்கு அளித்து விட்டு ஒய்கின்ற அந்தக் குரல்களில் தொனிக்கும் நடுக்கத்தினை பற்றி நாமும் அச்சப்பட்டு கொண்டிருந்த அந்த உறக்கமற்ற இரவுகள் மீண்டும் வரக்கூடாதவை.

நமக்கு இரண்டு நம்பிக்கைகள் இருந்தன.

1.புலிகள் ஒரு போதும் தோற்க மாட்டார்கள்.

2.அப்படி ஒரு பின்னடைவை அவர்கள் சந்தித்தாலும், அன்று இந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த திமுக மக்களைத் திரட்டி, மத்திய அரசை உலுக்கி, சிங்களனை மிரட்டி போரை நிறுத்தும்.

இந்த இரண்டு நம்பிக்கைகளில் முதல் நம்பிக்கை மட்டுமே காப்பாற்றப்பட்டது.

உண்மையில் புலிகள் தோற்கவில்லை. உலக வல்லாதிக்கத்தின் யுத்த விதிகளை மீறிய கொடும் போரியல் பலமும், தாயகத் தமிழர்களான நமது கையாலாகத்தனமும் புலிகளை தோற்கடித்தன.

ஆழ்ந்து சொல்லப்போனால்.. சொந்த சகோதரர்கள் சாதல் கண்டும் சிந்தை இரங்காமல் மதுக் கடைகளிலும் திரையரங்குகளிலும் குவிந்து கிடந்த நம்மால் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.

விடுதலைக்காக நின்றார்கள் அவர்கள். உயிரையும் விலையாக கொடுத்து விண்ணேறிச் சென்றார்கள்.

லட்சக்கணக்கில் நம் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்ட காலகட்டத்தில் தான் நாமும் வாழ்ந்திருக்கிறோம். இசைப்பிரியா போன்ற எண்ணற்ற நம்முடன் பிறந்த தங்கைகள் நிர்வாணமாக இரு கையையும் விரித்து நடு சாலைகளிலே இறந்து கிடந்த போது, அதை நேரடியாக விழிகளால் பார்த்து, அந்த சாவை சகிக்க பழகிக் கொண்ட நாம் தான் உலகிலேயே கொடும் போர் குற்றவாளிகள்.

நம் தங்கைகளின் நிர்வாண உடலை சிங்களன் படம் பிடித்து சிரித்துக் காட்டி நம்மை ஏளனம் செய்த போது கடந்து போகக் கற்றுக் கொண்ட நாம் தான் உண்மையான குற்றவாளிகள்.

நமது மௌனம் சொந்த சகோதரர்களை கொன்றது.

சகோதரிகளை அழித்தது.

தமிழர்கள் எதையும் சகித்துக் கொள்வார்கள், எதையும் கடந்து விடுவார்கள் என்பதற்கு ஈழத்தில் நடந்த இனப்படுகொலை உதிர சாட்சியாக நம் முன்னால் இருக்கிறது.

இதைத்தான் திமுக தலைவர் கருணாநிதி நன்கு உணர்ந்திருந்தார். எப்படியும் தமிழர்கள் காசு வாங்கிக் கொண்டு நமக்கு ஓட்டு போட தான் போகிறார்கள்… எனவே நாம் பதவிக்காக காங்கிரசை ஆதரிப்போம் என்று தமிழர்களின் கையாலாகாத்தனத்தின் மீது நம்பிக்கை கொண்டு அன்று அவர் அரசியல் செய்தார்.

ஆனால் திமுக மீது நம்பிக்கை கொண்டிருந்த என்னைப் போன்ற எண்ணற்றோர்.. இனத்தின் கொடும் அழிவை காண சகிக்காது மனம் பிழன்று போனோம். நாங்கள் மீண்டுவர சீமான் என்ற தனி மனிதனின் உழைப்பு களமாக எங்கள் முன்னால் விரிந்தது. எங்களது ஆழ்மன குற்ற உணர்ச்சியின் வடிகாலாக நாம் தமிழர் எழுந்தது.

திமுக காங்கிரசோடு சேர்ந்து கொண்டு அன்று நடத்தியவை அனைத்தும் சிங்களனின் இனப் படுகொலையை விட கொடுமையானவை. இதை மறக்க மாட்டேன் என்கிறீர்கள் கடக்க மாட்டேன் என்கிறீர்கள் என்பது போன்ற பசப்பு வார்த்தைகள் வேறு.

எத்தனை மாதிரியான பித்தலாட்டங்கள்..
மனித சங்கிலி, ஐயகோ தீர்மானம், இரண்டு மணிநேர (?) சாகும் வரை உண்ணாவிரதம் மல்லாக்கப் படுத்துக்கொண்டு முதுகிலே ஆப்பரேஷன்,…. அயோக்கியர்களே.. எதை மறக்க சொல்கிறீர்கள்.‌.??

எதை கடக்கச் சொல்கிறீர்கள்..??

சாலையில் எதிரெதிரே சந்திக்கும் நண்பர்கள் கூட பேசிக் கொள்ளாது குற்ற உணர்ச்சியோடு கடந்து போனோமே… நள்ளிரவுகளில் எழுந்து உட்கார்ந்து கொண்டு.. இணையத்தில் ஈழத்தின் அழிவை காண சகிக்காமல் கை பிசைந்து கண்கலங்கி இருந்தோமே..

எதை மறக்க சொல்கிறீர்கள்..?

ஈழம் ..அங்கு வாழ்ந்திருந்த தமிழருக்கான தேசம் மட்டுமா.. இல்லை. இந்த உலகத்தில் வாழும் 12 கோடி தேசிய இனமான தமிழர் என்கின்ற இனத்திற்கான தாய்நாடு. தமிழர்களின் இறையாண்மையை உலகத்திற்கு அறிவிக்கின்ற பேரறிவிப்பு.

அப்படி ஒரு நாட்டை தலைவர் அந்த மண்ணிலேயே கட்டி எழுப்பினார். காட்டிலே இருந்தாலும் விமானப்படை கட்டிக்கொண்டு புலிகள் விண்ணில் பறந்த போது… ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்தான். இதுவரை தன்னை அசுரன் அடிமை அகதி என்றெல்லாம் உணர்ந்திருந்த அவனது ரத்த நாளங்களில் உறைந்திருந்த உதிரத்தில் உயிர்ப் பாய்ச்சினார் தலைவர்.

அந்த ஈழம் தான் அழிந்தது. அழித்தது காங்கிரஸ். சோனியா காந்தி என்கின்ற தனி பெண்ணின் கொடும் வன்மம். அந்த காங்கிரசு கட்சிக்கு தான் இந்த தமிழ்நாட்டை தாரைவார்த்து பதவிக்காக அடகு வைத்தது திமுக.

இதை மறக்க முடியுமா.. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ‌. ஆனால் இவர்கள் உண்ட வீட்டையே உருண்டையாக உருட்டி தின்றவர்கள்.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சரி. தலைமுறை தலைமுறையாக இந்த இந்த உண்மையை, இனம் அழிந்த வலியை நாங்கள் கொண்டு செல்வோம்.

உடன்பிறந்த சகோதரியின் நிர்வாணத்தைப் பார்த்த பாவ விழிகள் எங்களுடையது.

குற்ற உணர்ச்சியும் கையாலாகாத்தனமும் இந்தப் பத்தாண்டுகளில் இம்மியளவும் குறையவில்லை.

வன்மம் ஏறியிருக்கிறது ‌. மீண்டும் உயிர்ப்போடு ஒரு தாய் நாட்டை உருவாக்க வேண்டிய கடமை முன்னே இருக்கிறது. அதற்கான அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தேவை இந்த நிலத்தில் நமது கரங்களில் இருக்கிறது.

எம் ஈழ உறவுகளே..

உங்கள் முன்னால் நாங்கள் குற்ற உணர்வோடு தலைகுனிந்து நிற்கிறோம்.

எங்களது உள்ளங்கைகளிலும் ஈழத்தின் உதிரம் இன்னும் உலராமல் தான் இருக்கிறது.

ஒரு நாள் ஈழ நிலத்தில் வீசும் விடுதலைக் காற்று.. ஒவ்வொரு தமிழனின் சுவாசக் காற்றாய் மாறும்.

அந்த பெருமித கணம் வரை.. இந்த சினம் அடங்காமல் களத்தில் நிற்க உறுதி ஏற்கிறோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.

மணி செந்தில்.

மே 17/18-2019

கமலின் ‘ராஜதந்திர’ இந்துத்துவ அரசியல்

முதலில் ஹே ராம் என்ற திரைப்படமே இந்துத்துவா திரைப்படம் தான். இந்து-முஸ்லிம் கலவரத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக காட்சியை வைத்து விட்டு கதாநாயகியை முஸ்லிம்கள் கற்பழிப்பது போல காட்சியை வைத்துவிட்டு, கதாநாயக கதை பின்னலில் முஸ்லிம்களின் கலவரத்தால் தான் இந்துக்கள் தூண்டப்பட்டார்கள் என்கின்ற அரசியலை மிக நுட்பமாக பேசுகிற படம் அது.

கமல் எப்போதுமே எதையுமே நேரடியாக பேசியது இல்லை. கடவுள் இல்லை என்று நான் கூறவில்லை. இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறுகிறேன் என்று குழப்படி வேலை செய்கின்ற கமலின் தற்போதைய இந்துத்துவ எதிர்ப்பு நாடகம் என்பது வெறும் கேலிக்கூத்து.

மொழியால் நான் தமிழன் இனத்தால் நான் திராவிடன் நாட்டால் நான் இந்தியன் என்கிற குழப்படிகளில் கமல் தனிரகம். இந்த மண்ணை மலடாக்கும் கூடிய மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களாக இருக்கட்டும்.. ஸ்டெர்லைட் திட்டமாக இருக்கட்டும்.. எட்டு வழி சாலை நீட் என்ற எதற்குமே கமல் இதுவரை போராட வந்ததில்லை.‌ ஜெயலலிதா கருணாநிதி உயிரோடு இருந்த காலகட்டத்தில்.. இருவரையுமே சரிசமமாக வானளாவி புகழ்ந்துவிட்டு ஒரு திரைப்படம் வெளியே வரவில்லை என்பதற்காக நாட்டை விட்டு போகப் போகிறேன் என்று மிரட்டியவர்தான் இந்த கமலஹாசன்.

கமல் திரைப்படங்களில் வலிமையான வைணவ இந்துத்துவ கிளிஷேக்கள் நிறைய உண்டு. கருப்பு சட்டை போட்டுக்கொண்டு ஹிந்துத்துவா வேடமும் அணிந்துகொண்டு அனைவரையும் கமல் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

இப்போது கோட்சேவை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றால்.. இந்தத் தேர்தலில் கமல் யாராலும் கவனிக்கப்படவில்லை.எதிர்பார்த்த அளவிற்கு அவர் இந்த தேர்தலில் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. பிரச்சாரமும் பெரிய அளவில் எடுபடவில்லை. இது அவரை இந்த தேர்தல் அரசியலில் கொண்டு வந்த பாஜகவிற்கு பெருத்த ஏமாற்றமாகவும் சங்கடமாகவும் மாறிவிட்டது . எனவேதான் நீ என்னை திட்டுகிற மாதிரி திட்டு… நான் உன்னை குட்டுகிற மாதிரி நடிக்கிறேன் என்பது போல இந்த கோட்சே நாடகம்.

முதலில் தீவிரவாதம் பயங்கரவாதம் போன்ற சொற்களைக் கையாளும் போது மிக கவனமாக கையாள வேண்டும். தீவிரவாதம் என்பது வேறு. பயங்கரவாதம் என்பது வேறு. தீவிரவாதம் என்பது ஒரு கொள்கையின் மீது கொண்டிருக்கிற தீவிர பற்றுறுதியை காட்டுகிறது. பயங்கரவாதம் என்பது லட்சியத்தை தாண்டி மக்களை கொலை செய்கிற மனநோயை காட்டுகிறது. கொண்ட இலட்சியத்தின் மீது மக்கள் சார்ந்த நலனின் மீது தீவிர பற்றுறுதி கொண்ட அனைவருமே தீவிரவாதிகள்தான். உதாரணமாக நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பூலித்தேவன் தீரன் சின்னமலை மருது பாண்டியர் வேலு நாச்சியார் வஉசி, பகத்சிங் சுபாஷ் சந்திர போஸ், உத்தம் சிங் உள்ளிட்ட பல கொள்கையாளர்கள் நாட்டுப்பற்றாளர்கள் அன்று அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேயர்களால் தீவிரவாதிகள் என்றே அழைக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே கோட்சேவை ஒரு இந்து தீவிரவாதி என கமல் பேசி இருப்பது..அனைவராலும் மறக்கப்பட்டு இருக்கிற கோட்சேவை மீண்டும் ஒரு பேசுபொருள் ஆக்கி கதாநாயகனாக மாற்றுகிற வேலை தான். இப்போது நமது சங்கிகள் கோட்சேவின் வீர தீர பராக்கிரமங்களை பற்றி பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதுவார்கள். காந்தி கொலையை நியாயப்படுத்துவதற்கான தர்க்கங்களை முன்வைப்பார்கள்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இவர் ஏதோ இந்துத்துவாவிற்கு எதிராக பேசி விட்டது போல தோற்றம் ஊடகங்களால் வலிந்து உருவாக்கப்படும். இந்தத் தேர்தலில் தமிழக மண்ணில் பேசுபொருளாக இருக்கவேண்டிய 50 ஆண்டு கால திராவிடக் ஊழல் அரசியல், மத்தியிலே அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கின்ற இந்துத்துவ மதவாத அரசியல், நம் தமிழர் நிலத்திற்கு எதிரான நிலவள கொள்ளை அரசியல் ஆகியவை மறக்கடிக்கப்பட்டு கோட்சேவை பற்றி விவாதிக்க வைக்கிற கமலின் ராஜ தந்திரம் தான் இது.

ஆடிட்டர் குருமூர்த்தியின் நேரடியான கையாள் தான் இந்த கமலஹாசன். பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுகளை பெறுவதற்கான பாஜகவின் ஏஜெண்டு தான் இந்த கமலஹாசன்.

எனவே இதையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு.. உண்மையான திராவிட /இந்துத்துவ எதிர்ப்பில் நம் முழு கவனத்தையும் செலுத்தி.. மக்களிடையே இதுபோன்ற குழப்படி வேலைகளை அம்பலப்படுத்துவதே தமிழ்த் தேசியர்களின் முதன்மை கடமையாகிறது.

இதழியல் அறத்திற்கு தடம் விளைவித்த அவதூற்று தடங்கள்.

மதிப்பிற்குரிய தடம் ஆசிரியர் குழுவினருக்கு..

விகடனின் தடம் வெளியிட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பிதழை காண நேர்ந்தது. டெசோ மாநாடு ஒன்றின் சிறப்பு மலர் போல தயாரிக்கப்பட்ட அந்த சிறப்பிதழில் வேண்டும் என்றோ வேண்டாமென்றோ எக்கச்சக்க ஒருபக்கச்சார்பு அரசியல் நிராகரிப்புகள்.

இதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்க முடியும் என்றாலும் கூட..விகடன் போன்ற வெகுஜன இதழ்கள் எக்கருத்தை முன்மொழிகின்றன என்பது கவனிக்க வேண்டிய அரசியல் செயல்பாடு என்பதனாலேயே இதை எழுத வேண்டியது அவசியமாகிறது.

ஒவ்வொரு கருத்தை தீவிரமாக ஆதரித்து அது சார்பாக சமூக மட்டத்தில் ஒரு பொதுக்கருத்தை உருவாக்க ஒரு இதழை பயன்படுத்திக் கொள்வது என்பது முரசொலி, நமது எம்ஜிஆர், சங்கொலி, ஜனசக்தி,தீக்கதிர் போன்ற கட்சிகள் சார்ந்த இதழ்களுக்கு நடக்கக்கூடியது. ஆனால் எல்லாத் தரப்பையும் கருத்து கேட்டு அவரவர் கருத்தினை வெளியிட்டு.. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு பொதுக் கருத்தினை ஏற்படுத்த விகடன் போன்ற நீண்டகாலமாக இதழியல் துறையில் இருந்து வருகிற மாபெரும் நிறுவனம் முயல்வது என்பதே இத்தனை ஆண்டு கால இருப்பிற்கு செய்யக்கூடிய நியாயம் என கருதுகிறேன். ஆனால் இந்த மாத தடம் முள்ளிவாய்க்கால் சிறப்பிதழ் முழுக்க முழுக்க ஒரு தலைப் பக்கச்சார்பு உடையதோடு மட்டுமில்லாமல்.. மற்றொரு பக்கத்தின் மீதான தீவிர நிராகரிப்பினை கொண்டிருக்கும் அதிகார செயல்பாடு ஆகும். Hear both side என்கின்ற அடிப்படை இதழியல் அறமில்லாத ஒரு இதழாக இம்மாத தடம் அமைந்துவிட்டது.

தீவிரமான புலி எதிர்ப்பாளர் ஷோபாசக்தி போன்றவர்களிடம் கட்டுரை பெற்று வெளியிட தெரிந்த தங்களுக்கு, சீமான் மீது குறிப்பிட்ட விமர்சனங்கள் வைக்கத் தெரிந்த தங்களுக்கு, அவை குறித்த நியாயங்களை ஏன் நாம் தமிழர் தரப்பில் கேட்கவில்லை என்பதே இம்மாத தடம் இதழில் நிகழ்ந்திருக்கும் நிராகரிப்பின் அரசியல்.

கடந்த 2009 ஆண்டுக்குப் பிறகான தமிழ்நாட்டு அரசியலில் வேறு எந்த அமைப்பினைக் காட்டிலும் ஈழ அரசியலைப் பற்றி ஒவ்வொரு வெகுஜன மேடைகளிலும் நாம் தமிழர் உரத்துப் பேசி கொண்டு வருகிறது. இன்னமும் அந்த மாபெரும் இன அழிப்பினை ஆற்றவே முடியாத பெரும் காயமாக தமிழ்நாட்டில் உணர வைத்துக் கொண்டிருப்பதில் நாம் தமிழரின் பங்கு மிக அதிகமானது.

ஈழ ஆதரவாளராக இருந்த பலர் திமுகவின் உறவிற்காக மௌனமாகிவிட்ட பொழுதும், ஈழ விடுதலைக்கான தேவையை, ஈழ மக்களின் இறையாண்மை மிக்க வாழ்வொன்றின் அவசியத்தை இன்னமும் தமிழ்நாட்டில் பேசிக் கொண்டிருக்கிற வெகு சிலரில் சீமான் மிக முக்கியமானவர். வருடாவருடம் நாம் தமிழர் சார்பாக நடத்தப்படும் தேசிய தலைவரின் பிறந்தநாள், மாவீரர் நாள், மே 18 இன விடுதலை மாநாடு என மாபெரும் நிகழ்ச்சிகள் இன அழிவினை நினைவூட்டி தனித்தமிழ் ஈழ நாட்டின் அவசியத்தை நிகழ்கால இளைஞர்களுக்கு, வெகுமக்கள் பரப்பிற்கு எடுத்துச் செல்வது என்பது விடுதலைக்கான அரசியல் நடவடிக்கை என்பதை தடம் வேண்டுமென்றே நிராகரித்திருக்கிறது.

மேலும் 2009 க்குப் பிறகான ஐநா மன்றத்தின் மனித உரிமை அமர்வுகளில் நாம் தமிழர் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்கிற செயற்பாட்டாளர்கள் தமிழின அழிவிற்கான நீதியை சர்வதேச மன்றங்களில் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உலக அளவில் செயல்படும் நாம் தமிழர் அமைப்புகள் ஈழத்தமிழ் உறவுகளோடு இணைந்து இன அழிவிற்கான நீதியை கோரும் போராட்டங்களில் கலந்துகொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எந்த அமைப்பும் செய்திராத மகத்தான அரசியல் நடவடிக்கைகள் இவை என நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்னமும் இந்தியத்தின் மீது திராவிடத்தின் மீது நாம் தமிழர் முன்வைக்கிற அனைத்து விமர்சனங்களும் இன அழிவை சார்ந்தவை என்பதும் அதன் காரணமாக தொடர்ச்சியாக புது தளத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி பல வழக்குகளைத் பெற்று அதன் மூலமாக பல இழப்புகளை நேரடியாக சந்தித்து வருகிற முன் கள அமைப்பாக நாம் தமிழர் விளங்குகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

தடம் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருக்கிற பெரும்பாலான திராவிட இயக்க ஆதரவாளர்கள் நாம் தமிழர் கொண்டிருக்கின்ற திராவிட எதிர்ப்பின் காரணமாக நாம் தமிழர் மீதான ஒவ்வாமையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் விகடன் போன்ற இருதரப்பினரையும் கேட்டு அவரவர் கருத்தினை வெகுமக்கள் தளத்திற்கு கொண்டு சேர்க்கும் இதழியல் பணியை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்திடம் இருந்து இதுபோன்ற நிராகரிப்புகள் எழுவது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகமும் ஈழப்போராட்டமும் என்கின்ற கட்டுரையில் நாம் தமிழரின் அரசியல் பற்றி சாதியம் சார்ந்த குறுந்தேசியவாதம் என குறிப்பிட்டிருப்பது அப்பட்டமான அவதூறு மட்டுமில்லாமல் திராவிட இயக்க ஆதரவு செயல்பாடு. சாதியை புறக்கணித்து இனம் சார்ந்த தமிழ் தேசியக் கருத்தியலை இம்மண்ணில் உருவாக்கிவிட வேண்டும் என முனைப்போடு நிற்கிற நாம் தமிழர் மீது சாதியவாதிகள் சமீப நாட்களாக நிகழ்த்தி வரும் அவதூறு தாக்குதல்கள் நீங்கள் அறியாதது அல்ல. இப்படி ஒரு அவதூற்றினை நீங்கள் சொல்ல முயலும் போது.. எங்கள் தரப்பையும் நீங்கள் கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு மறுப்பது என்பது நேரடியாக நாங்கள் அரசியல் களத்தில் எதிர்த்து நிற்கிற திராவிட இயக்கங்களுக்கு நீங்கள் செய்கிற தயவு.. உதவி.

இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாடு விகடன் போன்ற வெகுஜன இதழில் நடவடிக்கைகள் கொண்ட ஒரு நிறுவனத்தின் வரலாற்றில் நிகழ்ந்திருக்கிற தடுமாற்றம். அதேபோல அக்கட்டுரையில் தமிழகத்தில் இன அழிவு சார்ந்து நிகழ்ந்திருக்கிற அரசியல் நடவடிக்கைகளை போகிற போக்கில் கடந்து விடுவது என்பது இன்று தலைவர் பிரபாகரன் பற்றியும் விடுதலைப் புலிகள் பற்றியும் தீவிரமாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுதிக்கொண்டிருக்கிற திமுக ஆதரவாளர்களின் செயலை ஒத்தது.

புலி எதிர்ப்பு அரசியலை இலக்கியங்களாக உரையாடல்களாக அறிவுஜீவித்தனமாக பதிவு செய்த ஷோபாசக்தி வஐசெ ஜெயபாலன் ஆகியோர்களுக்கு வாய்ப்பளிக்க தெரிந்த தடம் ஆசிரியர் குழுவினருக்கு ஈழ அரசியலுக்காக இயங்கிய ஆண்டன் பாலசிங்கம் பற்றியோ, புதுவை இரத்தினதுரை பற்றியோ பெரிதாக குறிப்பிட முடியாமல் போனது என்பது இன்று புலி எதிர்ப்பு அரசியலை சமூகவலைதளங்களில் நிகழ்த்திக் கொண்டிருக்கிற திராவிட இயக்க அரசியலுக்கு ஆதரவானது. அதேபோல 2009-க்கு பிறகு முள்ளிவாய்க்கால் அழிவைப்பற்றி தமிழக நிலத்தில் வந்திருக்கிற ஏகலைவன் தொகுத்த முள்ளிவாய்க்கால் முடிவல்ல, தமிழரசி பதிப்பகம் வெளியிட்டுள்ள முள்ளிவாய்க்கால், ஐயா பெ மணியரசன் எழுதிய நூல்கள், போன்ற பல பெரு மக்களது முக்கியமான பதிவுகள் ஏதோ ஒரு அரசியல் உணர்வில் வேண்டுமென்றே விடப்பட்டிருக்கின்றன. 2009 இல் நிகழ்ந்த இன அழிவு தமிழ்நாட்டில் இளைஞர்களின் மனதில் எவ்வாறு திராவிட இயக்க எதிர்ப்பாக உருமாறியது என்பதற்கான மிக முக்கியமான அரசியல் ஆய்வும் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது.

மிக நெருக்கமான தொலைவில் அமைந்துள்ள தமிழரின் இன்னொரு தாய் நிலமான ஈழ நிலத்தில் நிகழ்ந்திருக்கிற மாபெரும் இன அழிவு தமிழின இளையோரை உளவியலாக மிகக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. இத்தனை ஆண்டு காலம் பிழைப்புவாத அரசியலை வைத்து தமிழ் உணர்வு, ஈழ ஆதரவு என்றெல்லாம் பாசாங்கு செய்து வந்த திராவிட இயக்கத் தலைமைகள் மீது தமிழ் இளையோருக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வெறுப்பின் விளைவே வெகுஜன தமிழ் தேசிய அரசியலின் ஆணி வேராக இருக்கிறது.முக்கியமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கிற இந்த அரசியல் செயல்பாடுகளை போகிறபோக்கில் சாதிய குறுந்தேசிய வாதமாக பதிவு செய்வது அப்பட்டமான அவதூறு. பொய் கருத்து.

இதழியல் அறத்தினை இம்மாத தடம் இதழ் மீறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவமானப்படுத்தி இருக்கிறது. அது பத்தாண்டு கால முள்ளிவாய்க்கால் இன இன அழிவை பதிவு செய்யும் ஒரு சிறப்பிதழில் நிகழ்ந்து இருப்பது என்பது ஆசிரியர்குழு கொண்டிருக்கின்ற தனிப்பட்ட அரசியல் விருப்பங்கள் சார்ந்த நிராகரிப்பு மற்றும் வெறுப்பின் அரசியல் என்பதை நான் இதன் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுபவீயின் பிழைப்பு வாதம்.

[youtube]https://www.youtube.com/watch?v=lm6BXnx9SF0&feature=youtu.be&fbclid=IwAR22MOh6F__b5CzvAnausl3xm7VFoAFJyv35tvuJmaBf2-c5iu_HSSoZNlU[/youtube]

உங்களுக்கும் பசிக்கும் அல்லவா.. சுபவீ..??

—————-

பொய்யர் சுபவீ அவர்களே..

திராவிடத்தை நீங்கள் விமர்சித்த பேச்சுக்கு மழுப்பல் விளக்கம் கொடுப்பதற்காக நீங்கள் வெளியிட்ட காணொளி யில் என்னையும், பாக்கியராசனையும் பற்றி மிக இழிவான நோக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கை முழுக்க பொய்யும் பித்தலாட்டங்களும் பிழைப்புத் தனமும் செய்வதையே முழு நேரப்பணியாக செய்துகொண்டு கொண்டு வாழ்ந்து வருகிறீர்கள்.

அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் உங்களோடு ஒரு காலத்தில் இணைந்து பயணித்தவன் என்ற முறையில் சில உண்மைகளை இந்த நேரத்தில் வெளியிட வேண்டி இருக்கிறது.

1. அதில் சுபவீ குறிப்பிட்டுள்ள உரையாடலை பேசிய வினோபா என்பவரே தான் பேசியது பொய்யென்று ஒத்துக்கொண்டு அவரது வழக்கறிஞர் மூலம் எங்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது போன்ற ஒரு பொய் செய்தியை அவதூறு பரப்பும் விதமாக சுபவீ கையாளுவது என்பது இது முதல் முறையல்ல.

2. அவருடன் நான் நெருங்கிப் பழகியவன். 2009-க்கு பிறகு இனத்துரோக திமுகவோடு நீங்கள் நின்றதால் நான் உங்களுக்கு” மணி செந்தில்” என்பவர் ஆனேன். ஒன்றாக இருந்த காலகட்டத்தில்.. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பற்றியும் அவரது குடும்பத்தினர் களைப் பற்றியும் இதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் திராவிடத்தின் கேடுகளைப் பற்றியும் பலமுறை எங்களிடம் வெளிப்படையாக நீங்கள் பேசிய கருத்துக்கள் எங்கள் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் அன்று உங்களிடம் கற்றதை தான் இன்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்.

3. ஜெயா ஆட்சியில் பொடா சட்டத்தில் அடைக்கப்பட்ட பிறகே நீங்கள் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தீர்கள். சிறைவாசம் உங்களை அச்சுறுத்தியது.இனி தியாகம் செய்து பயனில்லை என்பதால் தான் ஆட்சி அதிகாரத்தின் பலன்களை அனுபவிக்க கருணாநிதியோடு கை கொடுத்தீர்கள். இந்த மண்ணில் தியாகத்திற்கு எந்த பலனும் இல்லை என்று நீங்கள் எங்களிடம் சொல்லிவிட்டு தான் வெறும் பிழைப்பிற்காக கருணாநிதியோடு சென்றீர்கள்.

4. உலகத்தமிழ் மக்கள் அரங்கம் ஆர்குட் இணையதள கூட்டத்திற்கு உங்களை அழைத்து வந்த காலங்களில் இதே திமுகவைப் பற்றி என்னிடம் நீங்கள் சொன்ன கருத்துக்களை இப்போது வெளியிட முடியுமா ‌.. போர் உச்சகட்டத்தில் இருந்தபோது ஈழ அழிவுகளை பற்றி அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் உங்கள் மூலம் தமிழ் உணர்வாளர்கள் விளக்க நேரம் கேட்டபோது கருணாநிதி நேரம் ஒதுக்க மறுத்து சந்திக்க மறுத்ததற்கு நீங்கள் கோபத்தோடு எங்களிடம் பகிர்ந்து கொண்ட அந்த சொல்லை இப்போது பொதுவெளியில் வெளியிட முடியுமா..??

4. உங்களோடு அன்று பயணித்த நான் உள்ளீட்ட பலர்இன்று நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் செஞ்சோற்றுக் கடனுக்காக நீங்கள் பேசுகிறீர்கள். 2009 மே மாத இறுதியில் போர் முடிவடையும் நாட்களில் தலைவர் உடலை போன்ற ஒன்றை ஊடகங்கள் வெளியிட்ட போது என்னைப் போன்ற உங்கள் ஆதரவாளர்களிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை இப்போது பேசி விட முடியுமா..??

6. நீங்கள் அந்தக் காணொளியில் குறிப்பிட்டிருக்கின்ற உரையாடலை பேசிய வினோபா என்பவர் தான் பேசியது ஆதாரங்கள் அற்ற பொய் என்பதை ஒத்துக் கொண்டு எங்களிடம் அவரது வழக்கறிஞர் மூலம் வருத்தம் தெரிவித்திருப்பதை நாங்கள் சமூக ஊடகங்களில் ஏற்கனவே வெளியிட்டு இருந்தும்,எங்கள் மீது மீண்டும் அந்த உரையாடலை மேற்கோள்காட்டி அவதூறு பரப்புவது மிக இழிவான செயல்.

இதுபோன்ற இழிவான செயல்கள் உங்களுக்கு பழக்கம் தான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறீர்கள்.கருணாநிதிக்கு முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து உங்களுக்கு மூட்டு இருப்பதையே மறந்தவர் நீங்கள். ஆனால் இதே கருணாநிதியைப் பற்றி நீங்கள் என்னவெல்லாம் பேசினீர்கள் என்பதற்கு நான் மட்டுமல்ல கவிஞர் தாமரை மட்டுமல்ல இன்னும் எண்ணற்றோர் சாட்சியாக உயிருடன் தான் இருக்கிறோம்.

அந்த உரையாடலில் எங்களுக்கு ஏதோ கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் வருவது போல நீங்கள் ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்கிறீர்கள்.

கடந்த 2009 இற்கு பிறகு வழக்கறிஞராக வேலை பார்த்து வந்த எனது வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்து இருக்கிறது என்பதனை என் வீடு வரைக்கும் வந்து என் வீட்டில் உணவருந்தி சென்றிருக்கிற நீங்கள் என் வீட்டிற்கு வந்து நேரடியாக பார்க்கலாம்.

அதே சமயத்தில் உங்களது வாழ்க்கைத் தரம் கருணாநிதி நட்பிற்கு பிறகு எவ்வாறு உயர்ந்திருக்கிறது என்பதை உங்கள் மனசாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளலாம். மனசாட்சி என்ற ஒன்று இருந்தால்..

அதேபோல் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வரும் பாக்யராசனும் உங்களுக்கு தெரியாதவர் அல்ல. 2009 க்கு முந்தைய காலகட்டங்களில் அமெரிக்காவுக்கு வரும்போது உங்களை சீராட்டி பாராட்டி கொண்டாடிய அதே பாக்கியராசன் இன்றும் அதே வாழ்க்கை தரத்தில் தான் வாழ்ந்துவருகிறார்.

ஆனால் எந்த வேலைக்கும் செல்லாமல் நீங்கள் வாழும் வாழ்க்கைத் தரம் என்பது எப்படி கிடைக்கிறது என்று உங்களைப் போல நாங்களும் கேள்வி கேட்க விரும்பவில்லை.

இனத்திற்காக அனைத்தையும் இழந்து உழைக்கின்ற இளைஞர்களை பொய்யான அவதூறுகளை கொண்டு வீழ்த்த முடியும் என நினைக்கின்ற உங்களை நினைக்கவே அருவருப்பாக இருக்கிறது.

பெரியாரிய இயக்க மேடைகளில்களில் சீமான் பேசியதை எல்லாம் துண்டு துண்டாக வெட்டி பரப்பியபோது மகிழ்ந்திருந்த நீங்கள்.. உங்களைப் பற்றி ஒரு சிறிய காணொளி வந்தவுடனேயே எங்களை ஏசி அவதூறு பரப்புகிறீர்கள். பரிதாபம்.

அண்ணன் சீமான் அவர்கள் வீரத்தமிழர் முன்னணி தொடங்கிய போது நீங்கள் கருஞ்சட்டைத் தமிழரில் அதை காலப்போக்கில் அவர் அடைந்த அரசியல் மாற்றம் என்று கொள்ளாமல் முன்பின் மாற்றிப் பேசுகிறார் சீமான் என்று அவதூறு பேசியவர் நீங்கள்.

பிழைப்பு வாதம் என்றால் அகராதியில் சுபவீ என்று மாற்றப்பட்டு விட்டது என்று உங்களோடு பயணித்தவர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறோம்.

இன அழிவின் போது கூட கருணாநிதி காலை பிடித்துக்கொண்டு கம்முனு இருந்த நீங்கள்.. இப்போது ஸ்டாலினுக்காக உதயநிதிக்காக இன்பாவிற்காக தொன்று தொட்டு வரும் கருணாநிதியின் குடும்பத்திற்காக எங்களையெல்லாம் பற்றி அவதூறு பரப்ப தொடங்கி இருப்பது என்பது கேவலத்திலும் கேவலம் கொடும் கேவலம்.

செய்து விட்டுப் போங்கள்.

உணர்ந்து கொள்ள முடிகிறது.

உங்களுக்கும் பசிக்கும் இல்லையா ..சுப.வீ..??

நாம் சரியாக இருக்கிறோம் என்பதற்கான எதிர்வினைகள்..

நேற்று நள்ளிரவு நீண்டகாலமாக பழக்கப்பட்ட ஒரு தம்பி அலைபேசியில் எடுத்து நம்மைப் பற்றி அவதூறு பரப்புவதையே ஒரு முழு நேர வேலையாக கொண்டு திமுக இணைய தள அணியை சேர்ந்த சிலர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அண்ணா.. என்று கேட்டார்.

அவருக்கு நான் அளித்த பதிலை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கவேண்டியது இப்போது சரியாக இருக்குமென நான் உணர்கிறேன்.

பல இணையதள திமுக காரர்கள் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியை பற்றியும் அண்ணன் சீமான் பற்றியும் எழுதி வருவது குறித்து எவ்விதமான கவலையும் கொள்ள வேண்டியதில்லை.

ஏனெனில் திமுகவின் சமீபத்திய இணையதள ஆட்கள் தொழில்ரீதியாக இதற்கென தயாரிக்கப்பட்டவர்கள். ஊதியம் பெறுபவர்கள். ஒரு காலத்தில் ஒரே ஒரு டீ குடித்துக்கொண்டு, கொடி கட்டிக்கொண்டு,முரசொலி படித்துக்கொண்டு .. டீக்கடையில், சலூனில், வீட்டுத் திண்ணைகளில், மரத்தடிகளில் கட்சி பேசி வளர்த்த திமுக காரர்கள் இவர்கள் அல்ல.

அந்த கால திமுக காரர்கள் கோ சி மணி போல வீரபாண்டி ஆறுமுகம் போல துணிச்சலானவர்கள்.கருணாநிதியே தவறு செய்தால் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்பவர்கள். ஆனால் இவர்கள் அப்படி அல்ல. இவர்கள் ஊதியம் பெறுகிற வேலைக்காரர்கள். இவர்களிடம் நாம் தத்துவரீதியான உரையாடலோ அரசியல் ரீதியான விளக்கமோ எதிர்பார்க்க முடியாது.திட்டுவார்கள். பேசுவார்கள். இழிவான செய்தி பரப்புவார்கள். அதைத்தவிர இவர்களால் எதுவும் செய்ய முடியாது. அந்த காலத்து திமுக காரர்கள் பெரியார், அண்ணா, நெடுஞ்செழியன் மதியழகன் சிபி சிற்றரசு என்றெல்லாம் பார்த்து அரசியலுக்கு வந்தவர்கள். இப்போது இணையதளத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஸ்டாலின் மருமகன் சபரீசனால் உருவாக்கப்பட்டு எழுதிவருபவர்கள். இவர்களிடம் வாசிப்பு அறிவோ, அரசியல் நாகரிகமோ எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.

என் தந்தையார் பாரம்பரிய திமுககாரர். தினந்தோறும் முரசொலி படித்தவர். கருணாநிதி என்று சொன்னால் வீட்டில் சோறு போட மாட்டார். கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டும்.
2009 கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து தமிழினத்தை ஏமாற்றிய பிறகு திமுக கரை வேட்டியை கட்டாமல் தூக்கி எறிந்தவர். அவருக்கு இன அழிவு வலித்தது. ஊழல் அரசியல் உறுத்தியது.
அதனால் மானம் கருதி அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார். இப்போது இணையதளங்களில் ஊதியத்திற்காக செயல்படுபவர்களிடம் இதுபோன்ற மான உணர்ச்சியை நாம் எதிர்பார்க்க முடியாது.

நடந்து கொண்டிருக்கின்ற திமுகவின் இழிவான அரசியல் அப்பாவி திமுக தொண்டர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக காமெடியாக தரமாக வளைந்து நெளிந்து எழுதக் கூடிய அளவில் திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட இந்த திமுக இணையதள எழுத்தாளர்களிடம் பிரபாகரனைப் பற்றி விவாதிப்பது என்பது வீண். அவர்களுக்கு இனத்தின் விடுதலைப் போராட்டமோ, அதன் தியாகமோ என எதுவும் தெரியாது. சபரிசனும் உதயநிதி ஸ்டாலினும் தான் அவர்களுக்கு ஆகப்பெரும் புரட்சியாளர்கள். அவர்களிடம் போய் தியாக தீபம் திலீபனை பற்றி பிரிகேடியர் பால்ராஜை பற்றி எல்லாம் பேசுவது என்பது நம்மையும் தரம் தாழ்த்தும். ஊதியம் வாங்கிக்கொண்டு ஒரு திட்டமிட்ட பணியாக அமைத்துக் கொண்டு எழுதுபவர்களிடம் ஒரு இனத்திற்கான விடுதலைப் போராட்டத்தின் நியாய தர்மங்களை பற்றி விவாதிப்பது என்பது முற்றிலும் வீணானது ‌. காரித் துப்பி விட்டு கடந்து விடுவதே மேலானது.

இன்று அரசியல் ரீதியாக திமுக தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. திமுகவை இன அழிப்பிற்கான கட்சி என்று சென்ற தேர்தலில் எள்ளி நகையாடிய மதிமுக இடதுசாரிகள் விசிக போன்ற கட்சிகளின் தயவை நாடி திமுக நின்றுகொண்டிருக்கிறது. எதிரிகளின் தயவில் வாழக்கூடிய நிலையில் திமுக இன்று மாறிப் போனதற்கு காரணம் நாம் தான் என்பது மிக முக்கியமானது. இத்தனை ஆண்டுகால கட்சி பிரதான எதிரி அதிமுக இரண்டாக மூன்றாக உடைந்த பிறகு கூட தனித்து நிற்க தைரியம் இல்லாமல் பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் நிற்க வேண்டிய துயர நிலை என்பதெல்லாம் யாரால் ஏற்பட்டது என்று நினைக்கிறீர்கள்.. 2009 க்குப் பிறகான படித்த இளைஞர்கள் இணைய தளம் சார்ந்து இயங்கக் கூடிய இளைஞர்கள்.. இனம் அழிந்தபோது கண் சிவந்து மனம் துடித்தவர்கள் இவர்கள் தான் திமுகவின் இன்றைய நிலைக்கு காரணம். அதன் காரணமாகவே நம்மீது அவர்களுக்கு அவ்வளவு கோபம். யாராவது ஒரு நமக்கு எதிரான ஒரு செய்தியை வெளியிட்டால் பாய்ந்து கொண்டு பரபரப்பாக பரப்புவது, பார்த்தீர்களா சீமானை.. நாம் தமிழர் கட்சியை.. ஆமைக்கறி, நாஜிக்கள், மனநோயாளிகள் என்றெல்லாம் திட்டி எழுதி தன்னை தானே திருப்திப் படுத்திக் கொள்வது.. என்கிற பரிதாப நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் பற்றியோ திராவிட தத்துவத்தைப் பற்றியோ பேச முடியாத நிலைக்கு ஆளாக்கியவர்கள் நாம்தான்.திட்டவும் ஏசி பேசவும் மட்டுமே அவர்களால் முடியும்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான். இப்போது பிறக்கின்ற பிள்ளைகளுக்கு பரவலாக பிரபாகரன் என்ற பெயர் சூட்டப்படுகிறது. நமது அண்ணன் மகன் கூட மாவீரன் பிரபாகரன். ஆனால் சமீப காலத்தில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு கருணாநிதி என்றோ ஸ்டாலின் என்றோ தயாநிதி உதயநிதி என்றோ பெயர் சூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை யோசித்து பாருங்கள். திமுக காரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு கருணாநிதி என்று பெயர் சூட்ட மாட்டார்கள்.

ஏனெனில் தமிழ் சமூகத்திற்கு கருணாநிதி என்ற பெயர் ஒவ்வாமை உடைய பெயராக வரலாறு மாற்றிவிட்டது. எதிரியை போல கூட வாழலாம்.ஆனால் கருணாநிதி போல வாழக் கூடாது என்கின்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் 1 1/2 லட்சம் தமிழர்களின் மரணம். வெளிப்படையாக பேசி கொள்ளாவிட்டாலும் அந்த மரணம் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவிற்குள்ளும் ஒரு மாறாத வடுவாக இருக்கிறது.

அந்தக் காயத்தை தான் நாம் தமிழர் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. மக்கள் மறந்து விடுவார்கள் அதன் பிறகு நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்கிற திமுகவின் நினைப்பில் நாம் தமிழர் மண்ணை வாரி போட்டுக் கொண்டே இருக்கிறது. நாம் தமிழரின் இளைய பேச்சாளர்கள் வீதிக்கு வீதி ஈழ அழிவினை உருக்கமாகப் பேசி திமுக மீதான வெறுப்பை ஆறாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

அதனாலேயே மற்ற எல்லோரையும் விட நாம் தமிழர் கட்சியை மிகப்பெரிய ஆபத்தாக திமுக கருதுகிறது.

அவ்வாறு கருதித் தான் ஆக வேண்டும். பழையன ஒன்று கழிந்து புதியன ஒன்று பிறக்கும் போது.. இதுபோன்ற ஏசல்களும் கூச்சல்களும் திட்டல்களும் அவதூறு பரப்புரைகளும் நிகழ்ந்தே தீரும்.

இப்படி எல்லாம் நிகழவில்லை என்றால் நாம் வளரவில்லை என்றும் புறப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டு இருக்கிறோம் என்றும் பொருள்.

எதிரிக்கு உறுத்தினால் தான்.. அது வளர்ச்சி.

அவ்வகையில் 50 ஆண்டுகால திராவிட சித்தாந்தத்தை அசைத்துப் பார்க்க சீமானும் சீமான் தம்பிகளும் வரலாற்றின் வீதிகளில் எழுந்து விட்டார்கள் என்பதை தான் சமீபத்திய paid labours ஆன இணையதள திமுகவினரின் கதறல் ஒலி காட்டுகிறது.

மனம் பொங்கும் புன்னகையோடு.. மகிழ்ந்திருப்போம்.

Page 22 of 56

Powered by WordPress & Theme by Anders Norén