மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சொல்லில் மறைந்த செய்திகள் ..

 

15873112_240184553073087_4173025362634729673_n

 

வெளிச்சப்புள்ளிகள்
முளைக்காத
காட்டில்
கண்களிரண்டையும்
பிடுங்கி யாருக்கும்
தெரியாமல்
புதைத்து விடு..

கால்கள் இரண்டையும்
கட்டி.
கைகள் இரண்டையும்
வெட்டி..
ஒலி படா வண்ணம்
செவிகளை அறுத்து
புதை..

மறக்காமல்
என்
ஆணுறுப்பினை
வெட்டி
ஓநாய்களுக்கு
மத்தியில் வீசியெறி..

ஆழமாக புதை..
இன்னும் தோண்டு..

தப்பித்தவறி
முளைத்து விட
கூடாது என்ற கவனம்
உன் அறிவினை
பதட்டத்திலேயே
வைக்கட்டும்..

ஆழ புதைத்து..
உன் கால்களால்
மண்ணை மிதித்து
உறுதிச்செய்து
கொள்..

ஆழ புதைத்து
விட்டு மேலே
ரோஜா பதியம்
இட்டு விடாதே..

நாளை முட்கள்
கூட முனகக்கூடும்..

செய்து விட்டாயா..

சற்றே
கம்பீரமாக
உன் வெற்றியை
முழங்கிக்
கொள்..

அடிமையே செத்து ஒழி
என்று வாய் விட்டு
சிரி..

சிரித்துக் கொள்..

அதுவே உன்
இறுதிப் புன்னகையாக கூட
இருக்கலாம்.

வெட்டிய வாளின்
நுனியில் மிச்சமிருந்த
உதிரத்துளி கூட
இன்னும் உயிரோடு
இருக்கலாம்..

யார் கண்டது..???

அது மழையோடு கலந்து
ஆற்றில் ஓடி..
என்னைப் போலவே
இருக்கும் இன்னொரு
அடிமையின் உடலில்
கூட சேரலாம்..

அவனின்
அடித்தொண்டையில்
இருந்து மீண்டும்
நான் பிறப்பேன்..

அதற்காகவே …
என்னை அடிமையாகவே
வைத்து அழித்தொழி.

 

* எம் பண்பாட்டு உயிர் நிகழ்வான பொங்கல் திருநாளை இந்தியத்தேசியம் மறுத்து எம்மை அடிமைகள் என உணர்த்திய ஒருநாளில்….*

இப்போதைய நிலை குறித்த சில தகவல்கள்…

 

 

15972645_242421829516026_2504605351533441783_o

 

தழும்பாக
மிஞ்சுவதும்
வலியாக
எஞ்சுவதுமாக

கனன்று எரியும்
காயம் நீ…

பயப்படாதே..

ஒரு போதும்
என் காயங்கள்
ஆறுவதில்லை..

நானும்
ஆற்ற
நினைப்பதில்லை..

உன்னால்
நகராத
ஆற்றின்
சுழி
மையத்தில்
விசையற்றும்
திசையற்றும்
ஆழ்ந்திருக்கின்றேன்..

அந்த
மோனநிலையில்
நானாகவே
உணர்ந்தது

எதுவும்
உன்னால் இல்லை
எனவும்…

அது
என்னால்
தான் எனவும்..

சொல்லப்போனால்
நீ கூட
நானாக
வரைந்துக் கொண்ட
கனவு ஓவியம்
எனவும்…
………………….

இதை பார்த்து
உன்னால்
மெலிதாக
புன்னகைக்கூட
முடியும்..

ஆனால்
புன்னகைக்கு
பின்னால்
கசியும்
உதிர
வாடையையும்
என்னால்
இப்போதே
இங்கிருந்தே
உணரமுடிகிறது
என்பதே
இப்போதைய
என் துயர் நிலை..

– மணி செந்தில்

பனித்துளிகளின் வியாபாரி

 

 

16298627_248346298923579_4402940604851716045_n

 

நீல ஆகாயத்தின் கீழ் பச்சைப் போர்வை என விரிந்திருந்த பசும் புற்களின் நுனியில் சேகரித்த பனித்துளிகளை விற்பவன் நேற்று வந்திருந்தான்.

கண்ணாடிக்குடுவையினுள் மின்னிக் கொண்டிருந்த அந்த பனித்துளிகள் இதுவரை பார்த்தறியாத தூய்மையால் ஏரிப்பரப்பில் படர்ந்திருந்த நிலவொளியை ஒத்திருந்தன.
மெல்ல நெருங்கி பார்க்கும் போது அந்த பனிக்குமிழியை பார்ப்பவரின் பால்ய முகம் தெரிந்து பரவசப்படுத்தியது.

பனித்துளிகளை சுமக்கும் அந்த கண்ணாடிக்குடுவைவினை அப்படியே ஏந்தி முகத்தில் வைத்து மகிழ்ந்தவர் கன்னத்தில் முதல் முத்தம் தந்த இதழ்களின் தடம் பதிந்தது.

என்ன விலை..என்ன விலை

என கேட்பவர்களிடத்து பச்சை விழிகளைக் கொண்ட அந்த செவ்வண்ண சட்டைக்காரன் சொன்னான்.

உங்கள் ஆன்மாவின் அழியாத நினைவுகளில் முதல் மூன்றினை தாருங்கள். கூடவே உங்களின் ஈரம் அடர்ந்த முத்தம் ஒன்றினையும்.

விசித்திர விலையை கேட்டவர்கள் விக்கித்துப் போனார்கள். அழியாத நினைவுகள் காலத்தின் கலையாத ஓவியம் அல்லவா..அதை விற்று வெறும் பனித்துளிகள் வாங்குவதா…முத்தம் என்பது நம் அந்தரங்கத்தின் நுழைவாயில் அல்லவா..அதை கொடுத்து பசும் புற்களின் ஈரம் அடைவதா.. என்றெல்லாம் குழுமி இருந்தோர் மத்தியிலே குழப்பம் ஏற்பட்டது.

என்னிடத்தில் முத்தம் இருக்கிறது. ஆனால் என் நினைவுகளை வாழ்வின் எதிர்பாராத தருணங்களின் வண்ணம் கொண்டு வெறுப்பின் தூரிகையால் ஏற்கனவே அழித்து விட்டேன் ..எனக்கு பனித்துளிகளை தருவாயா என்று இறைஞ்சியவளை பனித்துளி விற்பவன் விரக்தியாக பார்த்தான்..

அவனே மீண்டும் சொன்னான்.

வெறும் முத்தம் எச்சில் ஈரம் மட்டுமே..உள்ளே சுரக்கும் நினைவுகளின் அடர்த்திதான் முத்தத்தை உணர்ச்சியின் வடிவமாக்குகிறது. உணர்ச்சியற்ற முத்தம் என்பது கழுத்தில் சொருகப்பட்ட கத்திப் போல கொடும் துயர் கொண்டது. உணர்ச்சியற்ற வெறும் இதழ்களின் ஈரத்தை வைத்துக் கொண்டு என்னை விஷத்தை முழுங்க சொல்கிறாயா என எரிந்து விழுந்தான்.

என்னிடத்தில் நினைவுகள் இருக்கின்றன. அதில் படர்ந்திருக்கும் கசப்பின் நெருப்பு என் முத்தங்களை எரித்து விட்டன ..முத்தங்கள் இல்லாத நினைவுகள் மதிப்பற்றவையா.. எனக்கு பனித்துளிகள் இல்லையா என்று புலம்பியவனை பார்த்து பனித்துளி வியாபாரி அமைதியாக சொன்னான்.

முத்தங்கள் இல்லாத நினைவுகள் இதழ்கள் எரிந்த முகம்.
இதழ்களற்ற முகம் சுமக்கும் நினைவுகள் எப்போதும் பனித்துளிகளை சுமக்காது என்றான்.

நேரம் ஆக ஆக சிரித்துக் கொண்டிருந்த பனித்துளிகள் வாடத்தொடங்கின. பனித்துளி விற்பவன் பதட்டமடைய தொடங்கினான்.

கூடியிருந்த கூட்டம் மெதுவாக கலையத்தொடங்கியது.

இந்த உலகில் நினைவுகளை சுமந்து..கனவுகளின் ஈரத்தோடு முத்தமிடுபவர் யாருமில்லையா… முத்தமிடும் போது நினைவுகளை விலக்கியும், நினைவின் நதியில் தொலையும் போது முத்தத்தை அழித்தும் தான் இவர்கள் வாழ்கிறார்கள்.

என்று மனம் வெறுத்து பனித்துளிக்குடுவைகளை அருகே சலசலத்து ஓடிக் கொண்டிருந்த நிலவாற்றில் வீசியெறிந்து விட்டு அந்த கிராமத்தை விட்டு அகன்றான் பனித்துளி விற்பவன்.

அன்றைய பெளர்ணமி இரவில் ஆற்று நீரை அள்ளிப் பருகிய எவரும்..நினைவுகள் கொப்பளிக்க..எதையோ முணுமுணுத்தவாறே நதிக்கரையில் இறந்துக் கிடந்தனர்.

தப்பிப் பிழைத்து எழுந்த சிலர் கண்கள் வெறிக்க நடைப்பிணங்களாக திரிந்தனர்.

நம்மைப் போன்று.

….யார்..யார்..

16640712_255200901571452_3504575587698011278_n

 

 

வெம்மை பூக்கும்
இப்பாலையில்..
தனிமை யார்..
அனலேறிய
நினைவு யார்…

துளித்துளியாய்
வடியும் இந்த
இரவில்..
இருள் யார்..
குளிர் யார்..

அலை அலையாய்
தழுவி எழும்
இக் கடலில்
படகு யார்..
தத்தளிப்பு யார்..

நிலவொளி
சிலையாய்
உறைந்திருக்கும்
இந்தக் குளத்தில்
நீர் யார்..
மெளனம் யார்..

வானமே வழிந்து
ஓடுவதாய்
உணர வைக்கும்
இந்த அருவியில்
ஓசை யார்..
பாய்ச்சல் யார்..

மேகமாய் திரண்டு
வந்து பொழியும்
மழை மாலையில்..
தேநீர் யார்..
கவிதை யார்..

வியர்த்து அடங்கும்
நடுங்கும் நடுநிசிக்
கனவில்..
பிம்பம் யார்….
சொற்கள் யார்…

சலனங்கள்
தொலைத்த
என் விழிகளில்
காதல் யார்..
பிரிவு யார்..

தடுமாறுகிற
உன் சொற்களில்..
வலி யார்..
மொழி யார்…

முடிவாய்..
முடிந்தால்..
சொல்.

யார் ..
யார்..

நம்மில்

யார்..
யார்..

நீயும்
நானும்..

.சொல்ல முடியாத கதை.

 

 

Tamil_M.A-0013

என்னிடம் சொல்ல
இதை தவிர
வேறு ஏதேனும்
இருக்கிறதா

என்ற கேள்வி
ஏதோ ஒரு புள்ளியில்
தொக்கி நிற்பதாக
உனக்கு என்றேனும்
தோன்றி இருக்கிறதா?

வலிந்து முகத்தில்
ஒரு புன்னகையையும்…
உணர்ச்சியற்ற
உரையாடல்களையும்
நிகழ்த்தி நிகழ்த்தி
கையறு நிலைப்பட்ட
பொம்மலாட்டமாய்
உறைந்துப் போன
நாளில் தான்..
விடையற்ற
வினாக்களுக்குள்
தொலைந்து விட
துடிக்கிறாய் .

நிகழ்காலம்
இறக்கத்துடிக்கிற
மெழகுத்திரியாய்
மின்னி நடுங்க..
இறந்த காலமோ
உருகி வழிகிறது..
நினைவுகளாய்.

நிலா உரசும்
மலை முகட்டு
இரவுகள்
இதற்கு பின்னரும்
வரலாம்.

முகத்தில் மெல்லிய
துணியாய் வெளிச்சம்
படரும் பேருந்துப்
பயணம் இதன்
பின்னரும் நிகழலாம்..

எதனாலும்
அமைதியுறாத
அலைகழிப்பின்
இப்போதைய
சமாதானங்கள் இவை
என்பது
உனக்கும் தெரியும்.
எனக்கும் தெரியும்.

………..

விடு விடு..

என்னால்
என் வேதனையை
என் மொழியால்
விவரிக்க முடியவில்லை.

மூங்கில் வன
தனிமையினை…
சுவாசமாய்
சுமந்து வரும்
ஒரு புல்லாங்குழல்
கொடு..

வாசித்துக்காட்டுகிறேன்..

இரக்கமற்ற
சொற்களின்
விரல்களால்
என் ஆன்ம நிலத்தில்
நீ விதைத்திருக்கிற
நிராசை விதைகளால்
வேர் முழுக்க முள்
பூத்துக் கிடக்கிற
நாளொன்றில்
மீண்டும் சொல்வேன்..

பெருங்காவியமென
விரிந்திருக்க
வேண்டிய
ஒரு இதிகாசம்
சில கண்ணீர்க்
கவிதைகளாய்
முனகி துடிக்கும்
நம் துயர்க்கதையை..

***** முத்தப் புராணம்***

16649261_259252751166267_9069690720357377376_n

 

 

 

ஆழ் கடலின்
வேரில்
ரகசியமாய்
புதைத்து வைத்திருந்த
முத்தம் ஒன்று
ஈரம் அடர்ந்து
ஒரு நள்ளிரவிற்காக
காத்திருந்தது..

வெம்மைப் படர்ந்த
கனவின் மயக்கத்தினில்
விழிகள் சொக்கி
ஆழ்ந்திருந்த
நேற்றிரவில் தான்
பசும் உதடுச் சாயம்
பூசி கழுத்தை
கவ்வியது
அந்த முத்தம்.

மயிர்க்கால்களில்
அனலை மூட்டும்
தீக்கங்கினை
சுமந்த அந்த
தனித்துவ
முத்தத்தினை
உறக்கம் தொலைத்த
நினைவுகளின் கண்கள்
சரியாகவே அடையாளம்
கண்டன…

மாலை நேர
மழைச்சாரலின் வாசம்
துளிர்த்திருந்த
அந்த உதடுகளை..
ஏற்கனவே அறிந்திருந்த
என் இரவு
சற்றே நட்சத்திரத்தை சிந்தி
சிரித்துக் கொண்டது.

ஈரம் மிகுந்த
பாசி படர்ந்த குளம்
போல
ஆழ்ந்திருந்த அந்த
முத்தத்தின் இதம்
குறித்து..

என் உள்ளங்கால்களை
தழுவி கிடந்த
மலைத்தோட்ட
பனிக்காற்று..

பொறாமையின்
சூல் கொண்டது.

கனவிலும் நினைவிலும்
நிறுத்த முடியாத
உலரத் துடிக்கும்
விடியல் பனி போல..

உறக்கம் தொலையும் முன்பே
மங்கும்

அந்த குளிர் முத்தத்தை
அனுபவித்த
அந்த குளிர் காலையில் தான்
கவனித்தேன்..

என் கழுத்தோரம் இரண்டு
நீலப் பற்களின் தடம்..

=======

அறிந்தோர்
சொன்னார்கள்
அது அமிர்தம் என..

புரிந்தோர்
மிரண்டார்கள்
அது நஞ்சு என…

================

என் வாழ்க்கைக் கதை..

1

 

பிரிவின்
குருதியினால்
வண்ணம் மாறுகிற

முடிவற்ற துயரத்தின்
மூர்க்க ஓவியத்தை..
……

எல்லையற்ற
ஆற்றாமைத் துளிகளால்..

வேறொரு கவிதையாய்..
வேதனை கசியும்
வயலின் இசை துணுக்காய்..

எழுதுவதை தான்..
…….

என் வாழ்க்கைக்
கதையாக
விரிகிற..

இத்திரைப்படத்தை
கைத்தட்டல்களோடு
பார்த்துக் கொண்டு
இருக்கிறீர்கள்.

தோளில் சாய்ந்த கதைகள்..

 

 

17103385_264530427305166_146324288229252827_n

அந்த வேனிற்கால
தேநீர் பொழுதில்..

கடற்கரை காற்றோடு
உன் தோளில்
சாய பொன்மாலை
பொழுதொன்று
வேண்டும் என்கிறாய்…

என் தோளில் உன்
முகம் புதையும்
நொடிகள் எல்லாமே
என் பொன்மாலைப்
பொழுதுகள் தான்
என்றேன் நான்.

சட்டென நிமிர்ந்து
விழிகள் மிளிர..
சிவந்த
உன் கன்னக்
கதுப்புகளில்
இருந்து
சூரியன் மஞ்சள்
அள்ளி பூசிக்
கொண்ட அப் பொழுதே
பொன் மாலை
பொழுதென்றும்..

சின்ன சிரிப்போடு
நீ தலை குனிந்த போது..

உன் பாதங்களை
தொட்டு தழுவியது..
கட்டற்ற என்
காதலன்பின்
கடலலை ஈரமென்றும். .

நீ உணர்ந்த போது. .

நீ இன்னொரு கடலாகவும் …

அதே பொன்மாலையில்..

உன் ஆழத்தில்
நொடிக்கு நொடி
மெல்ல முழ்குகிற
சூரியனாக நானும்.. .

இடம் மாறிப்
போனோம்…

 

இறுதிச்சொல்லின் வரலாறு..

17218654_267430067015202_4559953127606163627_o

 

இதுதான்
இறுதிச் சொல்..

அந்த சொல்
யூதாசின் காட்டிக்
கொடுப்புப் போல
ஒரு சாபச்சொல்லாகவோ..

சீசர் புரூட்டசை
நோக்கி வீசிய
வலிச்சொல்லாகவோ..

இருக்கட்டும்..

ஆனாலும்
உன்னோடு
இதுதான்
இறுதிச் சொல்.

முடிந்தது
எல்லாம் என
சொல்லின்
முடிவில்
இடப்படும்
முற்றுப்புள்ளியில்
எனது அனைத்து
விதமான
தர்க்கங்களையும்
குவித்து அழுத்தி
பொருத்தினேன்..

அடுத்த சொல்
நீளாத
அந்த உரையாடல்
இரவு நேர கடற்கரையில்
தனித்திருந்த..
காலடித்தடம் போல
மெளனித்திருந்தது.

இனி எதுவும்
இல்லை
என்பதில் தான்
எல்லாமும் இருக்கிறது
என சுய பிரகடனம்
கம்பீரமாய் ஆன்ம
வெளியில் உலவும் போது
சற்றே ஒரமாய்
வலித்ததை
கண்டுக் கொள்ள
கூடாது என்பதில் தான்
இருக்கிறது அனைத்தும்.

முற்றுப் பெறாத
ஒரு சொல்லில்
இருந்து தொடங்கட்டும்
ஒரு முற்று.

ஒரு ஆழமான சுவாசம்.
ஒரு நீளமான பயணம்.
காலக் கணக்கு அறியாத
மயக்கத் தூக்கம்..

தீர தீர குடிக்கிற
மது இரவுகள் சில..

கலங்க கலங்க
அழுது புலம்ப
தோழமை தோள்
ஒன்று..

கழுத்துக்குழியில்
துடிக்கிற வலியொன்றை
இளையராஜா இதமாக்கட்டும்..

நெஞ்சோரம் துடிக்கிற
துடிப்பொன்றை
அருகில் இருக்கிற
மழலையின் சிரிப்பு
பதமாக்கட்டும்..

இப்படியெல்லாம்
நீளமாக
தயாரான
பட்டியலை
பார்த்த அவளது
விழிகள்
சற்றே அலட்சியமாக
மொழிந்தன..

செய்ய இருக்கிற
உனது செயல்
வரிசைகளில்…

நீ மறக்காமல்
மீண்டும் மீண்டும்
செய்யப்போகிற
சிலவற்றை
எழுதாமல்
ஒளித்து
வைத்திருப்பதுதான்..
உனது பிரகடனம்
என்பதை நானறிவேன்..

என்றவளின் விழியில்
ஆதிகால விசத்தை
சுமக்கும் நாகமொன்றின்
கண்கள் ஒளிர்ந்தன..

அந்த விசம்
உண்மை என்பதாகவும்
இருக்கக் கூடும்
என்ற கணத்தில் தான்

அயர்ந்தேன் நான்..

மீண்டும்.

தேவனோடு ஒரு உரையாடல்..

talking-to-god-1
தேவா..
 
உன்
பாதச்சுவடுகளில்
என் கண்ணீரை
சிந்த சிறிது
இடம் கொடு.
 
யாரும்
அறியாமல்
மேகத் திரளுக்குள்
ஒளிந்திருக்கும்
நட்சத்திரம் போல..
நான் சுமக்கும்
அன்பை
ஆதி பாவம் என
என் ஆன்மா
அலறும் ஒசையை
நீயும்
அறிந்திருக்கிறாய் தானே..
 
சாத்தானின்
விடமேறிய
சொல் பதிந்த
கனிந்த பழத்தை
நானும் உண்டு
விட்டேன்..
 
அவன்
சொற்களால்
என்னை வீழ்த்தி
அவனுக்குள்
புதைத்துக் கொண்டான்..
 
அவனது வரி
வளைவுகளில்
எனதாசைகள்
கிறங்கி கிடக்கின்றன..
 
அவனது வார்த்தை
குளம்பொலிகளோடு
எனக்கான
இராஜ வீதியை
உண்டாக்கினான்…
 
தன் எழுத்துக்களில்
பட்டாம்பூச்சியின்
சிறகுகளை
ஒளித்து வைத்து
கவிதை வீதிகளில்
என் கரம் பற்றி
ஏதேன் தோட்டத்திற்கு
அழைத்து செல்கிறான்
அவன்..
 
அய்யோ..
நான் என்ன செய்வேன்..?
 
கனலேறிய
உடலெங்கும்
நினைவாடை
போர்த்தி
என்னை கனவு
சுமக்க வைக்கும்
அவன் சொற்களை
எங்கே ஒளித்து வைப்பேன்…?
 
நுட்ப இசைத்துளி
போல
சதா சொட்டிக்
கொண்டிருக்கும்
அவனது மொழியை
உள்ளங்கையில்
ஏந்தி பருகையில்
என் ஆன்மா
மலர்ந்து
கிளர்ச்சிக் கொள்வதை
நான் எப்படி மறைப்பேன்..?
 
பாவம் என
அறிந்தே
அதற்கான
அனுமதியை
உன்னிடமே
கேட்கத் தூண்டும்
நினைவின் சூட்டை
எதை கொண்டு தணிப்பேன்..?
 
இறையே..
என் மீது
இரக்கம் கொள்.
 
வலி சுரக்கும்
நிலா இரவுகளின்
தனிமையில்
இருந்து
ஒளி மிகுந்த உன்
கருணையினால்
என்னை மீட்டெடு.
 
அழுக்காறு சுமந்த
ஆன்மாவை
உன் தேவ கரங்களால்
தீண்டு..
 
இரு கரம்
கொண்டு பொத்தியும்
செவி முழுக்க
நிரம்பி வழியும்
அவனது
மெளனத்தின்
சப்தத்தை
எப்படியாவது
சாந்தப்படுத்து..
 
……………………………………
 
தாரை தாரையாக
பெருகிய கண்ணீர்
தேவனின் சொரூப
நிழலை தொட்டது..
 
சாந்தம் கொண்டான்
தேவ குமாரன்..
 
உதிரம் சிந்த
சிரம் உயர்த்திருந்த
அவனது உடலம்
மெதுவாக அசைந்தது..
 
அசைவற்ற விழிகள்
ஒளிக் கொண்டன..
 
உலர்ந்திருந்த அவனது
உதடுகளிலிருந்து
தேவ மொழி
சொல்லத் தொடங்கினான்..
 
…………………………………………………
 
அது ஆதி பாவம்
அல்ல மகளே..
 
மாசற்ற அன்பு
பெருகும்
இறை குணம்.
 
அது மட்டுமல்ல..
 
சாத்தான்கள் தான்
கடவுளை நினைக்க
வைக்கிறார்கள்.
 
ஏனெனில்
சாத்தானும்
கடவுளின்
இன்னொரு
நிழலே..
 
உன்னால்
ஆதி பாவம்
என உணரப்படுகிற
அது
இல்லாது..
 
நான் ஏது….?
 
ஏனெனில்
நான் அன்பின்
மொழியிலானவன்.
 
அன்பு கொள்
மகளே..
 
தீண்டப்படாமல்
இருக்க
கடவுள் ஏன்
கனியை
படைக்க வேண்டும்..?
 
ஆதி பாவம் என
எதுவுமில்லை.
 
புசிக்கப்படவே கனி.
நேசிக்கப்படவே இதயம்.
 
முதன்முறையாக
தேவ குமாரன்
புன்னகைத்தது
போல இருந்தது..
 
ஏஞ்சலாவிற்கு.
 
 
 
(விரைவில் வர இருக்கும் ஏஞ்சலாவின் கடிதம் என்கிற என் நூலில் இருந்து..).

Page 35 of 56

Powered by WordPress & Theme by Anders Norén