19424553_312465879178287_6778200899699480212_n

என்னுயிர் அண்ணனுக்கு..

கலங்கும் என் விழிகளுக்கு முன்னால் மங்கலாய் நீங்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடித வரிகள் இந்த கணிணித் திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கடிதத்தை பயஸ் அண்ணா எழுதி இருக்க மாட்டார்.

ஏனெனில் நான் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில்..உங்களில் ஒருவனாய்…சில சமயங்களாய் நீங்களாக கூட நான் வாழ்ந்திருக்கிறேன். விடுதலைக்கு விலங்கு எழுதப்பட்ட காலங்களில் இரவு-பகல் பேதமறியாது உள்ளூரிலேயே ஒரு விடுதி அறை எடுத்துக் கொண்டு உங்கள் வலிகளை எழுத்தாக மாற்ற முயன்ற காலத்தில்.. உங்களை அடிக்கடி என் மனக்கண்ணில் தரிசிக்க வேண்டிய சூழல்கள் உண்டு . உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ..வேறு எந்த சக மனிதனுக்கும் நடந்திருக்கக் கூடாத மானுட வாழ்விற்கு மிஞ்சிய கொடுமையான நிகழ்வுகளை உங்களது பார்வையிலேயே எழுத நேர்ந்த அக்காலக்கட்டத்தில் கூட நீங்கள் நம்பிக்கை மினுக்கும் விழிகளோடுதான் அண்ணா… எனக்கு தோன்றியிருக்கிறீர்கள்.காலையில் நான் கண் விழிக்கும் எனது பொழுது தூரிகையினால் நீங்கள் தொட்டு எழுதிய தலைவரின் ஓவியத்தில் இருந்துதானே தொடங்குகிறது..?

குறைந்த நேர சந்திப்புகளில், இறுக்கமான அணைப்புகளில், புன்னகைக்கும் விழிகளில் எங்குமே உங்களுக்குள் அவநம்பிக்கை நிழலை நான் சந்தித்ததில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மூவர் தூக்கு உறுதி செய்யப்பட்ட நேரம் அது. பேரறிவாளன்,முருகன், சாந்தன் அண்ணன்களை சந்திக்க நான் வேலூர் சிறைக்கு வந்திருந்தேன். தங்கை செங்கொடி தீக்கு தன்னை தின்னக் கொடுத்து மூன்று அண்ணன்களை காத்திட உயிரை ஈந்து விட்டு அங்கே காஞ்சிபுரத்தில் வெந்த உடலோடு காத்திருந்த நேரம். எந்த நேரமும் அண்ணன்களை தூக்கில் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் நம் ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் பேயாய் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான்.. மறுநாள் தூக்கிற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற நேரம். அந்த நேரத்தில் தான் நான் வேலூர் சிறைச்சாலைக்குள் வருகிறேன். நான் அண்ணன்மார்களை சந்தித்து விட்டு அந்த பிரத்யோக பகுதியிலிருந்து வெளியேறுகையில் உணர்ச்சி வசப்பட்டு கதறித் தீர்த்த என்னை நம்பிக்கையூட்டும் சொற்களால் நலமுட்டினீர்கள்.
எதை எதையோ இழக்க கூடாதவற்றை எல்லாம் இழந்த இனம் டா தம்பி.இதற்கெல்லாம் கலங்கிடாதே.. என்று நீங்கள் சொல்லிய சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படி நம்பிக்கை விதைகளின் நாற்றாங்காலாய் இருந்த உங்களிடத்தில் தான் இப்படிப்பட்ட சொற்களோடு இந்த கடிதமா..?

மரண அவஸ்தையை விட கொடுமையான கால தாமதம் தான். நான் ஒத்துக் கொள்கிறேன். இரவு நேர சிறையில்..மங்கிய மேல் கூரையை பார்த்தவாறே உறங்காமல் கிடக்கிற உங்கள் பொழுதுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது அண்ணா..

பால்நிலா இரவில் உங்கள் தாய்மண்ணில் உங்களது உறவுகளோடு நிம்மதியாக படுத்து உறங்க துடிக்கும் உங்களின் 26 வருடக் கனவின் கனலை எங்களால் உணர முடிகிறது..

ஒரு நாள் வீடு திரும்புவேன் என்கிற பெரு நம்பிக்கை சாதாரண அரசியல் சாக்கடைகளால் கானல் நீராய் மாறி விடுமோ என்கிற உங்களது கவலை புரிகிறது..

வலி மிகுந்த கடந்த காலமும், கடக்க முடியா அனல் வெளி பாலையாய் எதிர்காலமும், புயல் வெளி தோணியாய் அல்லாடும் நிகழ்காலமும் உங்களுக்குள் ஒரு வெறுமையை உண்டாக்கி இருக்கக் கூடும் அண்ணா.. புரிகிறது.

வாழ்வோ, சாவோ ..ஒரு நிச்சயக்கப்பட்ட வாழ்வினை கோருகிற உங்களது நியாயம் அர்த்தமானது தான்.

ஆனால்.. நீங்கள் சராசரி இல்லை அண்ணா . எங்களைப் போல்.
.
எதனாலும் நியாயப்படுத்த முடியாத உங்களின் தனிமை உங்களுக்குள் விதைக்கிற வலி மிகுந்த ஆற்றாமையை எங்களாக ஆற வைக்க முடியவில்லை என்கிற எங்களின் இயலாமையும் உங்களுக்குள் ஒரு வலியாக மிஞ்சி விட்டது குறித்து நாங்கள் உண்மையில் வெட்கப்படுகிறோம்.

உங்களது எந்த கேள்விக்கும் எங்களிடத்தில் மெளனத்தை தவிர வேறு பதிலில்லை.

ஆனால்..

உங்கள் தோளினை தொட்டு, கரங்களைப் பற்றி இனப்பற்றினை, தாய்மண் நேசத்தினை, மானுட வாழ்வின் நம்பிக்கைகளை இடம் மாற்றிக் கொண்ட எங்களால்.. உங்களை எதனாலும் இழக்க முடியாது அண்ணா.

இது ஒரு வகையான சுயநலம் தான். ஆனாலும் நீங்கள் வேண்டும் எங்களுக்கு அண்ணா.

ஒரு நாள் விடியும் அண்ணா. இருள் கிழிந்த அந்த வானில் விடுதலையின் சுடர் ஒளிரும். அந்த நாளில் நாங்கள் உங்களோடும், நீங்கள் எங்களோடும், நாமெல்லாம் நம்மோடும் இருக்கிற நன்னாள் பிறக்கும்.

உங்களை பெரியப்பா என அழைக்கிற ஒரு இளம் தலைமுறையினர் எங்கள் வீட்டில் வளருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இப்போது நீங்களும் கூட.

இந்த உலகிற்கு நீங்கள் எப்படியோ ..ஆனால் அவர்களுக்கு நீங்கள் தான் அண்ணா.. மானுட வாழ்வின் நம்பிக்கைகளுக்கும், தளரா மன உறுதிக்கும் எடுத்துக்காட்டு.

அவர்களது பிஞ்சுக்கரங்களை உங்களது
கரங்களோடு இணைக்கிற நாள் வரை நீங்கள் எங்களுக்கு வேண்டும் அண்ணா..

வேண்டும்.

வேண்டாம் அண்ணா இது.

வேண்டும் அண்ணா..நீங்கள்..

உங்களது தம்பி..

மணி செந்தில்
22-06-2017