பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: செப்டம்பர் 2018 Page 1 of 3

துளி-2

 

 

இன்று தம்பி துருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் பற்றி பேச்சு வந்தது. அந்தப்படத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமான பல தகவல்களை துருவன் சொல்லிக்கொண்டே போனான். உண்மையில் ஆரண்யகாண்டம் எனக்கும் பிடித்த படம் தான். தமிழில் வெளிவந்து இருக்கிற சில அபூர்வமான திரைப்படங்களில் ஆரணிய காண்டம் ஒன்றாக திகழ்கிறது. தமிழின் முதல் Neo noir வகை திரைப்படம். Neo noir வகை என்பது குற்றங்கள் அதன் பின்னணிகள் குறித்த தனித்துவ பார்வையோடு புனையப்படும் வகைமை. சென்சாரில் 52 கட் வாங்கி வெளியான இத்திரைப்படத்தின் காட்சி ஓட்டத்தில் வெட்டப்பட்ட காட்சிகளால் உறுத்தும் jumb கிடையாது. தியாகராஜன் குமாரராஜா என்ற புதுமுக இயக்குனர். தான் எடுத்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலமாக இதுவரை வழமையாக எழுதப்பட்ட தமிழ் சினிமாவின் விதிகளை மாற்றி எழுதினார். சீரான/புதுமையான திரைக்கதை வடிவத்திற்கு ஆரண்ய காண்டம் ஒரு மாபெரும் உதாரணம். ஆரண்யம் என்றால் காடு. அப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்திற்கும் விலங்குகளின் பெயர்களை ஒட்டிய பெயர்கள். ஏறக்குறைய no country for old man என்கின்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கும்.. ஆரண்ய காண்டத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை நாம் காணும் போது உணரலாம். துருவன் குறிப்பிட்டுச் சொன்னது அந்த படத்தின் தொடக்கம் மற்றும் அந்தப் படத்தின் முடிவிலும் வருகின்ற ஒரு வாசகம்.

அது ஒரு உரையாடல்.

ஏறத்தாழ கிமு 400 நடந்ததாக சொல்லப்படும் ஒரு உரையாடல். நாக நந்தனுக்கும் விஷ்ணுகுப்த சாணக்கியனுக்கும் இடையே நடந்த உரையாடல்.

கேள்வி எளிது தான். பதிலும் எளிமையானது தான்.

தர்மம் என்றால் என்ன..??

எது தேவையோ அதுவே தர்மம்.

அது பற்றிய சிந்தனையிலேயே இந்த நாள் முழுக்க கழிந்தது. ஒரு ஒற்றை வரி எவ்வளவு அலைகழிக்கிறது பாருங்கள். அது ஒரு உறுத்தல். கழுத்தோரம் ஏதோ ஊர்ந்துக் கொண்டிருப்பது போல..

உண்மைதானே.. பசித்தவனுக்கு உணவே தர்மம். விழித்தே கிடப்பவனுக்கு உறக்கமே தர்மம். வேலையில்லாமல் அலைபவனுக்கு வேலையே தர்மம். காதலுற்று திரிபவனுக்கு காதலே தர்மம்.

அவனவன் தேவையே அவன் தர்ம எல்லைகளை நிர்ணயிக்கிறது என்பது தான் இதன் பொருள். நாமாக வரைந்து கொண்ட எவ்வித கோடுகளிலும் மனிதனின் தர்மம் அடங்காது. எழுதி வைத்துக் கொண்ட எந்த சட்டகங்களிலும் அது பொருந்தாது. தன் தர்மத்தை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு உயிரினமும் ஏதேனும் மீறலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் தர்மத்தின் குணம் மீறல்.

தமிழில் அறம் என்ற ஒரு சொல் உண்டு. அறம் என்பதற்குப் பொருள் நல்லவை என தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிற இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகம் சொல்கிறது. தர்மமும் அறமும் ஒன்றுதானா என்றால் ஏறக்குறைய ஒரே பொருளைத் தான் இரண்டு சொற்களும் பிரதிபலிக்கின்றன.

அப்படியென்றால் நல்லவை என்பதற்கான பொருள் தான் என்ன…பொதுவாக நல்லவை என் தீர்மானிக்கப்பட்டதை எல்லாம் எங்கே பொருத்துவது..??

உண்மையில் .. என் பார்வையில் எதுவெல்லாம் சரியெனப்/நல்லவையாக படுகிறதோ அது அடுத்தவன் பார்வையில் தவறாக/பிழையானதாக தோன்றக்கூடும்.

அப்படியெனில் வகுத்து வைத்த கட்டமைக்கப்பட்ட எல்லா தர்மங்களும் /நியாயங்களும் ஒவ்வொரு வித மாயைதான்.. மாயத் தோற்றங்கள் தான் ‌‌..

அதைத்தான் பாரதி அழகாக சொன்னார்.

கானல் நீரோ ..காட்சிப் பிழை தானோ ..என்று..

சுருங்கச் சொல்லின்..

அவரவர் தேவையே தர்மம்.

துளி-1

யாருடைய பிறப்பிற்காகவும் ,இறப்பிற்காகவும் காத்திருப்பதில்லை உலகம். யாருடைய வருகைக்காகவும், யாருடைய விலகலுக்காகவும் அது நிற்பதில்லை. பூமி சுழன்று கொண்டுதான் இருக்கிறது. எந்த இடமும் வெற்றிடமாக இல்லை‌. காற்று இல்லாத இடங்களில் கூட இன்மை நிறைந்திருக்கிறது.

நீரை ஒத்திருக்கிறது மனிதனின் மனம். எந்த இடங்களிலும் எந்த சூழ்நிலைகளிலும் அது பொருந்திக்
கொள்கிறது அல்லது பொருந்திக்கொள்ள போராடுகிறது. அவனை அவனாக தோற்கடிக்க வில்லையெனில்… எவனும் எவனையும் தோற்கடிக்க முடியாது.

சுருங்கச் சொன்னால் உலகம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மகத்தானது . பெரியது. பல வாசல்கள் கொண்ட இந்த உலகத்தில்.. தனக்கு முன்னால் எதிர்படும் ஏதோ ஒரு வாசலில் நுழைந்து இன்னொரு வாசல் வழியாக தொலைந்து போய்க் கொண்டே இருக்கிறான் மனிதன்.

காலநதி ஓட்டத்தில் நடந்தவை அனைத்தும் நினைவுகளே…

அதைத் தவிர சிந்திக்கவோ.. கண்கலங்கவோ..கொண்டாடுவோ..குழம்பவோ..எதுவும் இல்லை ‌. நதியின் ஓட்டம் போல பயணம் நகர்ந்து கொண்டே இருக்கட்டும். எங்கும் தேங்காமல் குப்பையாக .. குட்டையாக.. நிற்காமல்..

போய்க் கொண்டே இரு. just move on.

பெரியார்- என் புரிதலில்..

 

 

தமிழ்ச் சமூகம் தனது நீண்ட நெடிய பாதையில் எத்தனையோ தலைவர்களை கண்டிருக்கிறது. ஆனால் பெரியார் போன்ற ஆளுமையை இந்த நிலம் அதுவரை பார்த்ததில்லை. பெரியார் எழுதியிருக்கிற /பேசியிருக்கிற அனைத்தும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. நம் நிலத்தில் வேறு எந்த தலைவருக்கும் இப்படிப்பட்ட முறை வகை ஒழுங்கு நிகழ்ந்ததில்லை.

பெரியார் இருந்த காலகட்டத்தில் அவர் உரைத்த கருத்துக்களில் பலவற்றில் குறிப்பாக அவரது மொழிக் கொள்கையில் ,மொழி பற்றிய அவரது நிலைப்பாட்டில் எனக்கு கடுமையான முரண்கள் உண்டு. எல்லை மீட்பு போராட்டம், கீழ்வெண்மணி படுகொலை , 60 களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல அரசியல் நடவடிக்கைகளில் அவரது செயல்பாடுகளில் எனக்கு தீவிரமான எதிர்ப்பு நிலை உண்டு.

பெரியாரால் தான் படித்தோம் பெரியாரால் தான் வளர்ந்தோம் பெரியாரால் தான் இங்கு அனைத்தும் நிகழ்ந்தது என்றெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் நானே பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஆனால் ஒரு காலகட்டம் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பெரியார் வழி வந்தவர்களாக சொன்னவர்களே மதிக்காமல் கடந்தபோது ..
பெரியார் என்னைப் போன்ற பலரால் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டார். வரலாறு முழுக்க பல்வேறு முரண்கள், ஏற்றத்தாழ்வுகள் என அவர் கருத்துக்களில் ஏராளமான குழப்பமும், முன்னுக்குப் பின்னான மாறிய காட்சிகளும் புலப்பட்டன. இன அழிவிற்குப் பிறகு பெரியாரைப் பின்பற்றுகிறவர்கள் மீதான கடும் எதிர்ப்பு நிலை, விமர்சனங்கள் எழும்போதெல்லாம் பெரியாரை கேடயமாகப் பயன்படுத்தும் தந்திரம் போன்றவை பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தன.

என்னைப் பொறுத்தவரையில் பெரியார் கடவுள்- மதம்- சாதி போன்ற நிலைகளுக்கு எவ்வாறு எதிராக நின்றாரோ அதே அளவு நிலம் – இனம் -மொழி ஆகியவைகளுக்கும் எதிராக நின்றார். தேசிய இன பெருமிதங்களை கற்பிதம் என அவர் தவறாக புரிந்து கொண்டார் ‌. வரலாறு பல்வேறு தேசிய இனங்களின் பயணங்களால் நிகழ்ந்தது என்பதை அவர் மறுத்தார். எல்லாவித பிற பெருமிதங்களுக்கு அப்பால் மனிதனே மேலானவன் என அவர் நம்பினார். ஆனால் அந்த மனிதனே ஒரு தேசிய இனத்தின் அடிப்படை அலகு என்பதை அவர் மறுத்தார்.

இது போன்ற பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் நான் பெரியாரை தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறேன். அவர் பற்றி நான் முழுவதுமாக புரிந்து கொள்ள விரும்புகிறேன். முரண்களும் கருத்துக்களில் முன்னும் பின்னான குழப்பங்களும் உடைய அம்மனிதரை பெரியாரை கடவுளாக்கியவர்கள் மத்தியில் ஒரு கால கட்டத்தில் தோன்றிய சிந்தனையாளராக , சமூகத்தில் நிலவிய பல்வேறு மூடத்தனங்களுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாக உரைத்த ஒரு துணிச்சல்காரராக உணர்ந்து அவரை வாசித்து வருகிறேன்.

பெரியாரை படிக்காமல் அவர்தான் சர்வரோக நிவாரணி என்று பேசுவதும் அவர்தான் அனைத்திற்கும் காரணம் என இகழ்வதும் ஏறக்குறைய சரி சமமானதுதான். பெரியாரைப் பற்றி இருதரப்பினருமே அவரவர் பங்குக்கு பெருமிதங்களை, கற்பிதங்களை , விமர்சனங்களை கட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் அப்பால் பெரியார் என்ற சிந்தனையாளரின் கருத்துக்கள் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் செலுத்திய ஆதிக்கங்கள் ஆகியவை மிக நுட்பமானவை. ஆனால் இவற்றையெல்லாம் தர்க்கரீதியில் உரையாடாமல் பெரியாரை கடவுள் ஆக்குவதிலும் , பெரியார் பெயரைச் சொல்லி வசூல் செய்வதிலும் அவரது வாரிசுகள் மும்முரமாக இருப்பதால் அவர் பற்றிய தீவிர அறிவுப்பூர்வமான உரையாடல்கள் தமிழ் மண்ணில் ஆரோக்கியமாக நிகழாமல் போனது தமிழ் அறிவுலகில் ஏற்பட்டிருக்கிற மாபெரும் குறையாகவே நான் கருதுகிறேன். அளவுக்கு மிஞ்சிய போற்றலும் இகழ்தலும் நிகழ்ந்த மனிதனாக பெரியார் திகழ்கிறார்.

இன்று தமிழ் தேசிய சிந்தனைகள் பரவலாக பரவிக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் பெரியார் பற்றிய பெருமித கதையாடல்களை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு அவரை மறு வாசிப்புக்கு உட்படுத்துவதே தற்கால இளையோருக்கு சரியான ஒன்றாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். பெரியாரை வாசிக்காமல் இகழ்வது எப்படி அபாயமோ பெரியாரை வாசிக்காமல் புகழ்வதும் அவ்வாறு அபாயகரமானது. இந்த இரு நிலைகளுக்கும் அப்பால் பெரியாரை ஒரு காலகட்டத்தின் மனிதர் என்ற வகையில் கருதி மெளனமாக கடந்து செல்பவர்கள் எத்தனையோ மடங்கு மேலானவர்கள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் நிலத்தில் தீவிரமான தாக்கத்தை செலுத்திய/ பல முற்போக்கு ,பெண்ணீய, மூடத்தன எதிர்ப்பு, சாதி மத எதிர்ப்பு என்கிற பல்வேறு சிந்தனை முறைமைகளுக்கு வலு சேர்த்த ஐயா பெரியார் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

இளையராஜா என்கிற கால இயந்திரம்.

 

 

சன் தொலைக்காட்சியில் சற்று நேரத்திற்கு முன்பாக இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

அந்தப் பாடல்களை நாம் எத்தனையோ முறை கேட்டு இருக்கிறோம். அதே பாடல்கள்தான்.. அதே இசைதான். ஆனாலும் முதல் முறை கேட்ட போது எந்த உணர்ச்சியை நாம் பெற்றோமோ.. அதே உணர்ச்சியை நாம் ஒவ்வொரு முறை அந்த பாடலை கேட்கும் போதும் வருமே ..அதுதான் இளையராஜா.

எனக்கெல்லாம் இளையராஜா பாடல்களை கேட்கும்போது அந்த பாடலை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்ட பொழுதுகள் என் நினைவுகளில் நின்றாடுகின்றன..

ஆதி தாய் கிராமத்திற்கு திரும்பிய ஒரு ஊர் சுற்றி போல .. இளையராஜா பாடல்கள் என் நினைவுகளை எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றன. அந்தப் பாடல்களின் கரம்பிடித்து ஒரு கை குழந்தை போல நான் நினைவின் வீதிகளில் அலைந்து கொண்டே இருக்கிறேன்.

என் வாழ்க்கையின் விசித்திரப்புள்ளிகளை நான் இளையராஜாவின் இசை கொண்டே கோர்த்து முடிக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கத்தா விமான நிலையத்தில் சென்னை வரும் விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது அலைபேசியில் ஒரு இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நொடியில் என் கண் முன்னால் தெரிந்த அனைத்து காட்சிகளும் மறைந்துவிட்டன. அந்நொடியில் நான் இளமையில் வசித்த மன்னார்குடியில் இருந்தேன். மன்னார்குடியில் நான் வசித்து வந்த ஹவுசிங் யூனிட் வீட்டில் ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு மழை பொழுதொன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டின் சமையலறையில் என் அம்மா சமைத்துக் கொண்டிருந்த உணவின் வாசனையைக் கூட அந்த நொடியில் நான் உணர்ந்தேன். ஒரு நுட்பமான பேரனுபவம் அது. சிறு சிறு அசைவுகளையும் கூட உணர்கிற கடந்த காலத்தை நோக்கிய விசித்திர பயணம் அது.

அந்தப் பாடல் முடிவடைந்த பிறகே நான் கல்கத்தா திரும்பினேன்.

இளையராஜாவின் பாடல்கள் பயணிப்பது என்பது திக்குத் தெரியாத காட்டில் கண் தெரியாத ஒருவன் மாட்டிக்கொண்ட திகைப்பினையும், பொங்கி பிராவகித்து பொத்துக்கொண்டு ஊற்றுகிற அருவி ஒன்றில் தலை நுழைத்து மெய் நனைத்து அடைகிற சிலிர்ப்பினையும் ஒருங்கே அடைகிற அனுபவமாக.. கால நகர்வுகளை கடந்த ஒரு பயணமாகவே நான் கருதுகிறேன்.

அவருடைய இசைக்கு எந்த பாடகரின் உதவியும் அவருக்கு தேவைப்பட்டது இல்லை. சொல்லப்போனால் வரிகள் கூட இரண்டாம் பட்சம் தான். அவர் நம் ஆன்மாவின் மொழி அறிந்து அதன் அலைவரிசைக்கு ஏற்ப ஒருங்கிணையும் வித்தைக்காரர்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில்..

காதுள்ளவன் கேட்கக் கடவன். உணர்வுள்ளவன் உருகக் கடவன். மனது உள்ளவன் மயங்கக் கடவன்..

இளையராஜாவை உணர்பவன் இந்த மூன்றையும் எளிதாக அடையக் கடவன்.

*****தனி ஒருவன்******

நீ அந்தியின்
கரைகளில்
நின்று கொண்டு 
வெளிச்சங்களை
தன்னுள்
புதைத்தவனைப்
பற்றி புறம் பேசுகிறாய்..

முதுகில் குத்தும்
கத்தி ஒன்றை
கொண்டு
உலகை
உள்ளத்தால்
வென்றவன் ஒருவனை
எளிதாக வெல்ல
முயல்கிறாய்..

உன்னால்
புனையப்படும்
பொய்மையின்
தோற்றங்களின்
எல்லைகளுக்கு
அப்பால் நிற்கிற
பேரன் பின்
ஆதிச்சுழியை
அவதூறு பேசுகிறாய்..

அவன்
ரதகஜபடைகளோடு
களத்திலே நிற்கிறான்..
நீ வெறும்
வீட்டுத் திண்ணையில்
உட்கார்ந்துக் கொண்டு
அவனை வென்று விட்டதாக
வாயை மெல்கிறாய்…

அவன் காற்றின்
அலைவரிசை கோர்த்து
புத்தம் இசையை
புவி மலர இசைப்பவன்.

நீயோ முனக கூட
அடுத்தவனை எட்டிப்
பார்த்து நகல் செய்யும்
போலிகளின் போதாமை
புலிகேசி.

நீ ஏதேனும்
ஒரு சந்தில்
4 திருடர்களோடு
அவனைக்
கொள்ளையடிக்க
குழுமிய போது…
அவன் யுகத்தின்
சரித்திரத்தை
தன் புன்னகைத்
தூரிகையால் எழுதிக்
கொண்டிருக்கிறான்..

அவன் தனித்தவன்
என்றெண்ணி
அவன் நிழலை
உன் குரைப்பினால்
சீண்ட முனைந்தப்
போது…
அவன் புலிகளின்
கூட்டத்தின் நடுவே
சிம்மாசனமிட்டு
அமர்ந்திருக்கிறான்..

அவனை வெல்ல
வேண்டுமெனில்..

ஒரே ஒரு வாய்ப்பு

நீ நிகரற்ற
அவனாகத்தான்
பிறக்க வேண்டும்.

ஏனெனில்..
அவனை மிஞ்ச
அவனாகத்தான்
ஆக வேண்டும்..

தற்கால மருத்துவ நல விவாதங்களும்….தமிழர் மரபு மருத்துவமும்

 

 

 

சமீப காலமாக மரபு வழி மருத்துவத்திற்கும், ஆங்கில மருத்துவத்திற்குமான முரண் உரையாடல்கள் நடந்து வருகின்றன. மரபு வழி மருத்துவம் பிற்போக்குத்தனமானது, அறிவியல் தன்மையற்ற கையாளல்   என்றும் , ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றும் ,நவீனமானது என்றும் அவரவர் பார்வைகளுக்கேற்ப ,அரசியல்- சமூக சிந்தனைகளுக்கேற்ப ஒருவருக்கொருவர் ஊடகங்களிலும், சமூக வெளி தளங்களிலும் விவாதித்து வருகின்றனர்.  ஆங்கில மருத்துவம் தான் அகில உலகையும் காக்கவும் மீட்கவும் வந்த இறுதி மீட்பர் போல சில முற்போக்கு முட்டுச்சந்துகள் கதறுவதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. சிறிய சிறிய நோய்களுக்குக் கூட ஆயிரக் கணக்கில் செலவு செய்தே தீர வேண்டும் என்கிற ஆங்கில மருத்துவம் தன் முறையைத் தவிர இதர மருத்துவ முறைகளை கடுமையாக நிராகரிப்பதன் நோக்கம், அதன் வணிகமயமும், லாப நோக்கமும் தானே தவிர வேறில்லை.

மனித உடல் குறித்தும், மருத்துவம் குறித்தும் சங்க காலம் தொட்டே தீவிர விழிப்புணர்வில் தமிழ்ச்சமூகம் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் பரவலாக காணக்கிடைக்கின்றன.

அற்றால் அளவறிந் துண்அ அகுதுடம்பூ

பெற்றான் நெடிதுய்க்கு மாறு

என்கிறது மருந்து என தனி அதிகாரம் கண்ட தமிழர் மறையான திருக்குறள். அளவறிந்து உண்பது குறித்து அன்றே சிந்தித்திருக்கிற தமிழர் மரபு முழுக்க முழுக்க அறிவியல் தன்மைகளை தனது பண்பாட்டு விழுமியங்கள் மூலம் கண்டடைந்து சிறந்திருக்கிறது.

மேலும்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து

என்கிறது குறள். அதாவது நோயுற்றவன், அந்த நோயை தன் ஆலோசனை மூலம் தீர்க்கும் மருத்துவர், மருந்து, அருகிலிருப்பவரின் அன்பும், பராமரிப்பும் இந்த நான்கும் ஒரு நோய்க்கு மருந்து என சொல்கிறது குறள். இதில் கவனமாக பார்க்க வேண்டியது நோயுற்றவனே மருந்துகளில் ஒரு வகை. என்கிறது திருக்குறள். ஒவ்வொரு மனிதனுள்ளும் இயற்கையாக இருக்கக் கூடிய நோய் எதிர்ப்பு உணர்வு, மருந்துகளை மிகச்சரியாக காலம் தவறாமல் எடுக்கக்க்கூடிய ஒழுங்கு என நோயுற்றவன் கூட மருந்தாக விளங்குகிறான் என்கிறது தமிழர் மறை.

இவ்வளவு நுட்பமாக மனித உடலை, நோயை, நோய் எதிர்ப்பு உணர்ச்சியை ஆராய்ந்திருக்கிற தமிழரின் மருத்துவ மரபை ஒரே அளவு கோலில் வைத்து பிற்போக்குத்தனமானது என பொங்கும் உளறல்களை எதிர்த்து நாம் தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.

ஒரு நோயாளியை கையாளுவதில் மருத்துவரின் கடமை என்ன என்பதை எளிமையாக இரண்டே வரிகளில் விளக்குகிறது தமிழர் மரபு.

நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச்செயல்

நோயை இன்னதென்று ஆராய்ந்தறிந்து, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து , அந்த நோயை தணிக்கின்ற வழியையும் கண்டறிந்து, அதை உடலுக்கு பொருந்தும் படியாக மருத்துவர் மருத்துவம் அளிக்க வேண்டும் என்கிறது குறள்/

மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட

      புண்தேர் விளக்கின் தோன்றும்” (அகநானூறு-111)

என்ற சங்கப்பாடல் போர்களத்தில் காயம் பட்ட வீரனின் காயத்தின் அளவறிந்து மருத்துவம் பார்க்கிற மருத்துவ காட்சியினை விளக்குகிறது.

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்

      உள்நீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்

      தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்

      கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுஎன்றாள்

(கலித் தொகை)

போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உதிரப்போக்கு அதிகம் நிகழும் போது நா வறட்சி ஏற்படும் என்றும் நீர் தாகத்தால் தடுமாற்றம் ஏற்பட்டு துயரம் நேரிடும் என்றும் இக் கலித்தொகைப் பாடலில் மருத்துவ குறிப்புகள் காணப்படுகின்றன.

சித்தர் மரபு வழித் தொடங்கி, இயற்கை மருத்துவ செறிவுடன் இணைந்து தமிழர் மருத்துவம் பல சிறப்புகளைக் கொண்டது.

ஆனால் காலப் போக்கில் காணக்கிடைக்காத  அறிவுச்சுவடிகளை எல்லாம் யாகத்தில் போட வேண்டும் என ஆரியச் சதிக்கு ஆட்பட்டு தீக்கு தின்ன கொடுத்ததும் தமிழர்களே..

இன்றைய ஆங்கில மருத்துவமுறை உலக மயமாக்கலின், வணிகமயமாக்கலின் ஒரு அங்கமாக மாறிப் போய்விட்டது . இந்தியாவில் செயல்படுகிற மருத்துவர்களில் 50 % தகுதியற்ற, அடிப்படை தகுதியற்ற ,பயிற்சியற்ற மருத்துவர்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஒரு எம்.பி.பி.எஸ் படிப்பு என்பது மருத்துவத்திற்கான பட்டமே ஒழிய அதுவே மருத்துவரின் தகுதியல்ல.ஒரு மருத்துவ படிப்பிற்கு தனியார் கல்லூரிகள் கோடிக்கணக்கில் வாங்கி பொருளீட்டும் இந்த வணிகச் சூழலில் தரமான மருத்துவர்கள் எவ்வாறு உருவாக முடியும் என்பதற்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இந்திய பெருநாட்டில் இன்றைய மாபெரும் வணிகமே மருத்துவம் தான் என்பதும், நாட்டின் மக்களை பெருங்கடனுக்கு ஆழ்த்துவதில் மருத்துவச் செலவுகளே முதலிடம் பிடிக்கின்றன என்பதும் புள்ளி விபரங்கள் காட்டுகிற அபாய சமிக்கைகள்.

குறிப்பாக உலக மயமாக்குதல் என்கிற பேராபத்து 1990-ல் தான் வேகமெடுக்க ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா போன்ற பன்னாட்டு வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு எளிய மக்களின் உயிரில் விளையாடத் தொடங்கினார்கள்.ஊருக்கு ஊர் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் தோன்றத் தொடங்கின. அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது கேவலம் என்றும், மீறி எடுத்தால் நோய் முற்றி இறந்து விடுவோம் என்பதுமான உளவியல் பரப்புரைகள் வலிந்து பரப்பப்பட்டன. அரசியல்வாதிகள் கூட உடல் நலம் சரியில்லை என்றால் மிகப்பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் எடுத்துக் கொள்ளும் செய்திகள் திட்டமிட்டு பெரிதாக்கப்பட்டன.  மருத்துவ நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை விற்க பல்வேறு சலுகைகளை, உல்லாச சுற்றுலாக்களை, பரிசுப்பொருட்களை மருத்துவர்களுக்கு வாரி இறைக்கின்றன. பெரும்பாலான மருத்துவர்களும் இவற்றை எல்லாம் துய்ப்பதற்கு இல்லாத நோய்களுக்கு இரண்டு பக்கம் சீட்டெழுதி எதற்கெடுத்தாலும் ஸ்கேன் என்றும் பரிசோதனை என்றும் நோயாளிகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக கருதத்தொடங்கி விட்டார்கள்.  கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிகிற மருத்துவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு பண இலக்கு வைத்து ,மீட்டிங் வைத்து கேள்வி கேட்கிற நிகழ்வுகளும் இயல்புகளாகி விட்டன. சந்தைப் பொருளாதாரத்தில் மனித உயிரும், அது குறித்தான அச்சமும் தான் தற்காலத்தில் நடைபெறும் வணிகத்திற்கு கச்சாப் பொருட்களாக விளங்குகின்றன.

இந்த ஆங்கில மருத்துவ கொள்ளைகளுக்கு மாற்றாக பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் , ஆங்கில மருத்துவத்தின் பரப்பும், விளம்பரமும் ,பகட்டும் மற்ற மருத்துவ முறைகளை நாடாமல் மக்களை கண்கள் கட்டிய குதிரையாய் ஓட வைத்திருக்கின்றன.

நமது பாரம்பரிய மருந்துப் பொருளான மஞ்சளுக்கு கூட காப்புரிமை நம்மிடத்தில் கிடையாது. காலங்காலமாக நாம் பயன்படுத்திய நம் பூர்வீக மருத்துவ அறிவினை இன்று ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு பலிக் கொடுத்து விட்டு சிறிய தலைவலி என்றாலும் ஸ்கேன் இயந்திரத்தில் தலைகளை நுழைத்துக் கொண்டிருக்கிறோம். காசில்லாதவர்கள் தாங்களே கல்லறையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும் என்கிற  நிலையை ஆங்கில மருத்துவமும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இன்று ஏற்படுத்தி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

மாற்று மருத்துவமுறைகளான ஹோமியோபதி, அக்குபஞ்சர்,சித்தா, ஆயுர்வேதிக் போன்ற முறைகளில் பல நோய்கள் குணமாவதை பல மருத்துவர்கள் வெற்றிக்கரமாக நிருபித்து இருந்தாலும் அச்செய்திகள் வெளிவராமல் மிகக் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. இச்சூழலில் மாற்று மருத்துவத்தை பயின்ற மருத்துவர்கள் கூட நோய்கள் உடனே குணமாக வேண்டும், நோயாளிகள் தங்களை விட்டு போய் விடக்கூடாது என்கிற இலாபநோக்கத்திற்கு பலியாகி ஆங்கில மருத்துவத்தை உபயோகிப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்துத்துவ மத நம்பிக்கையாளர்களும், அடிப்படைவாதிகளும் முன் வைக்கிற மூட நம்பிக்கை மருத்துவ முறைகளை போன்றதல்ல தமிழரின் மரபு மருத்துவம். காலங்காலமாய் தமிழர் தனது வாழ்வியலில் கடைப்பிடித்து அறிந்த அறிவின் செழுமை. வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள், சிசரியன் செய்தார்கள் என்றெல்லாம் கதை கட்டி இன்று பதஞ்சலி,ஹிமாலாயா போன்ற இந்துத்துவ வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப் போடும் இச்சூழலில் எப்போதும் இல்லாத நெருக்கடிகளை தமிழரின் மருத்துவ மரபு எதிர்க்கொண்டுள்ளது.

ஒரு தனிநபர் யூ டியூபில் பார்த்து தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் அதிக உதிரப் போக்கினால் அப்பெண் இறந்தார் என்கிற தனிநபர் முட்டாள் தனத்தைக் கொண்டே பாரம்பரிய மரபு மருத்துவமுறைகளை தடுக்க கோருவது மிகவும் கொடுமையானது. சுகப்பிரசவத்தைக் கூட சிசரியன் பிரவசங்களாக மாற்றி மனித உயிரை மூலதனமாகக் கொண்டு பணம் பறிக்கும் கொள்ளைக் கூடங்களாக தனியார் மருத்துவமனைகள் மாறி விட்ட பின்னர்… இக்கொள்ளைகளுக்கு எதிராக எந்த சிந்தனை முளைத்தாலும் கொள்ளைக்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்…?

எத்தனையோ தலைமுறைகளாக கிராம மருத்துவச்சிகளால் சுகப்பிரசவம் கண்ட நம் மரபு சார்ந்த பிரசவ முறைகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தி, நவீன முறைகளுக்கேற்ப மரபு சார் மருத்துவகல்விமுறைகள் மாற்றப்பட்டு ஆங்கில அலோபதி மருத்துவ முறைகளுக்கு மாற்றாக நவீன தமிழர் மருத்துவம் எழ வேண்டும் என்பதுதான் இம்மண்ணைச்சேர்ந்த நமக்கான விருப்பாக இருக்கிறது.

ஒரு பெண் செத்து விட்டாள். இனி சுகப்பிரசவத்தையே நினைத்துப் பார்க்க கூடாது . தனியார் மருத்துவமனையில் சிசரியன் தான் செய்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிற இந்த முற்போக்கு வெங்காயங்களுக்கு தனியாருக்கு அள்ளிக் கொடுக்க கொள்ளையடித்த கோடிகள் இருக்கலாம். ஆனால் நமக்கு..?

ஆங்கில மருத்துவம் தான் அதி உன்னதமும் இல்லை. மற்ற மாற்று மருத்துவமுறைகளில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. உண்மையில் பல நோய்களுக்கு அலோபதியில் மருந்தே கிடையாது. அனைத்திற்கும் ஒரு வகையான ஆண்டிபயாடிக் என அழைக்கப்படும் எதிர் உயிரி மருந்துகளை வைத்துக் கொண்டு எளிய மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஆங்கில மருத்துவ முறைகளுக்கு மாற்றாக மாற்று மருத்துவ முறைகளும் உருவாக வேண்டும்.

பேரா. அ.மார்க்ஸ் எழுதிய மருத்துவ நல சிந்தனைகள் என்ற ஒரு நூல் இருக்கிறது. ஆங்கில மருத்துவ நிறுவனங்களின் கொள்ளை மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகள் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை ) எத்தகைய கொடும் விளைவுகளை ஏற்படுத்தும், இம் மருந்துகள் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன என்பது குறித்து எழுதப்பட்ட விரிவான நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். அதே போல மருத்துவர் கு.சிவராமன் மற்றும் ம. செந்தமிழன் மரபு மருத்துவ சிந்தனைகள் குறித்த பல்வேறு முக்கியமான கட்டுரைகளை,நூல்களை எழுதி வருகிறார்கள். மருத்துவத்திற்கும், உணவிற்கும் உள்ள நெருங்குய தொடர்பை உணவு யுத்தம் என்கிற நூலில் விரிவாக எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

எந்த ஆங்கில மருத்துவ நிறுவனமாவது தன் மாத்திரை,மருந்துகள் தயாரிக்கிற உற்பத்தி விலையை வெளிப்படையாக அறிவிக்குமா என்கிற கேள்வியில் இருக்கிறது ஆங்கில மருத்துவமுறையின் வணிகக் கொடூரம்.

நவீன காலத்தில் மருத்துவ நல சிந்தனைகள் மேலோங்கி இருக்கின்றன.அலோபதி மருத்துவமுறையின் பணம் பிடுங்கும் கொள்ளை, அம்மருத்துவ முறையின் பின் விளைவுகள் ஆகியவற்றை கண்டு,அனுபவித்த மக்கள் பாரம்பர்ய,இயற்கை மருத்துவ முறைகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளார்கள். மீண்டும் தங்களை மரபு சார் வாழ்வியல் முறைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். இவ்வித மாற்றங்களே ஆங்கில மருத்துவத்தை மூலதனமாகக் கொண்டு கொள்ளையடித்து வரும் கொள்ளைக் கூட்டத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆங்கில மருத்துவ முறை மேற்கொள்ளும் மருத்துவர்களிலும் நேர்மையான மருத்துவ சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சளி பிடிக்கிறது என்று போனால் வீட்டில் மிளகு ரசம் வைத்து குடி என சொல்லும் சில அலோபதி மருத்துவர்களும் இருக்கிறார்கள். எனது குடும்ப மருத்துவர் ஆண்டிபயாடிக் மருந்துகளை எனக்கு எப்போதும் எழுதி தர மறுப்பார். காய்ச்சலா ..அது நான்கு நாளைக்கு இருக்கும். குணமாகி விடும், இது மாத்திரையா என கேட்பார். ஆனால் இப்படி உள்ளோர் மிகச்சிலர் தான் என்பதுதான் வேதனைக்கரமான உண்மை.

தற்காலத்தில் அலோபதி, ஹோமியோபதி,சித்தா, ஆயுர்வேதிக், உணவு முறைகள், உடற்பயிற்சி என பல்வேறு மருத்துவ முறைமைகள் இணைந்த கூட்டு மருத்துவ முறைகளே பயனளிக்கிறது என சமீபத்திய மருத்துவ நல சிந்தனைகள் வெளிப்படுத்தி வருகின்றன.

எனவே அலோபதி ஆங்கில மருத்துவம் தான் அனைத்திற்குமான தீர்வு என கதறும் முற்போக்கு அறிவுசீவிகளை இடது கையால் ஒதுக்கித்தள்ளி விட்டு, பல்வேறு மாற்று மருத்துவமுறைமைகளின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் பாரம்பரிய தமிழர் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் குறித்து ஆராய அரசே ஆய்வகங்களை உருவாக்கி, நம் மரபு சார்ந்த மருத்துவத்தை மீண்டும் செழுமைப்படுத்திட வேண்டும்.

ஆம் ..இதையெல்லாம் யார் செய்வது.. எது செய்யும்..

இம்மண்ணை, இம்மக்களை நேசிக்கக்கூடிய ஒரு மண்ணின் மகனிடத்து அதிகாரங்கள் ஒரு நாள் கிடைக்கும் பொழுது..மக்களின் துயர்களுக்கு மாபெரும் விடுதலைப் பொழுது துளிர்க்கும்.

இ.த.ச பிரிவு 377 நீக்கம்- தேவைப்படும் சில புரிதல்கள்..

இன்றைய தினம் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்புகளில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களை விடுவிக்க அதிகாரம் தமிழக அரசுக்கு பிரிவு 161 ன் வாயிலாக உண்டு என்கின்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

மற்றொன்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 யை ரத்து செய்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. 1860 ஆம் ஆண்டு மெக்காலே பிரபு அந்த கால சூழலுக்கு ஏற்ப இங்கிலாந்து ராணி குடும்ப விசுவாசத்திற்கு உட்பட்டு இங்கிலாந்து நாட்டின் அதிகாரம் ஆட்சி செய்யும் நிலங்களில் நீக்கமற பரவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இயற்றப்பட்ட மிகப் பிற்போக்குத்தனமான சட்டம் தான் இந்திய தண்டனை சட்டம். இந்த சட்டம் காலப்போக்கில் ஏற்பட்ட பல மாறுதல்களை உள்வாங்கி பல திருத்தங்களை கண்டு வருகிறது. ஆனாலும் நீண்ட நெடிய நாட்களாக பிரிவு 377 யை தடை செய்யக் கோரும் போராட்டங்கள் இந்திய அறிவுலக சமூகத்தினராலும் ,முற்போக்குச் சிந்தனையாளர்களாலும்,மாற்று பாலினத்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதலில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 என்ன சொல்கிறது என்பதை நாம் ஆழமாக கவனிக்க வேண்டும்.

அது இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யும் சட்டமாக மேலோட்டமாக கருதப்பட்டாலும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மிகக் கொடுமையானவை. இதன்படி மாற்றுப் பாலினத்தவர்கள் இணைந்து வாழ முடியாத நிலைமையும், மாற்று பாலினத்தவரோடு பிறர் இணைந்து வாழ முடியாத நிலைமையும் நீடிக்கிறது. மேலும் சாதாரண மனிதர்களின் சில பாலுறவு முறைமைகளையும் இது தடை செய்கிறது. பாலுறவு தேர்வு என்பது தகுதி வாய்ந்த வயதையும் , விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர இந்திய தண்டனைச் சட்டத்தின் பக்கங்களில் தீர்மானிக்கக் கூடிய ஒன்றாக அமைந்து விடக்கூடாது என்பதுதான் காலம் காலமாக பிரிவு 377 யை எதிர்த்து போராடி வருகிற முற்போக்காளர்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களின் கருத்து.

மேலும் ஒரே பாலின திருமண முறையான தன்பாலின உறவு திருமணத்துக்கு இதுவரை 25-க்கும் மேலான நாடுகள் அனுமதி அளித்துள்ளன. குறிப்பாக அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், பின்லாந்த், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா, உருகுவே போன்ற நாடுகள் அனுமதி அளித்துள்ளன.இந்நிலையில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

இப்பிரிவின் கீழ் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்ற மாற்று
பாலினச் சொந்தங்கள். காலம் காலமாக அவர்கள் மீது சுமத்தப்படுகிற இழிவிற்கும், நிகழ்த்தப்படுகிற அடக்குமுறைகளுக்கும் இன்றைய தினம் ஒரு விடிவு பிறந்திருக்கிறது என்றே கொள்ளலாம்.

இந்த பிற்போக்குத் சட்டப்பிரிவை கொண்டுவந்த இங்கிலாந்து அரசு கூட பிரிவு 377 யை 60 களிலேயே திரும்பப் பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா உள்ளிட்ட மத ஆதிக்கங்கள் உடைய சில நாடுகளில் மட்டுமே இச் சட்டம் போன்ற சில பிரிவுகள் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதிய மெக்காலே மத நம்பிக்கைகள் அதிகம் உடைய இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக விசுவாசமானவர். அவர் கடவுளின் விருப்பத்திற்கு மாறானது என மத நம்பிக்கைகளை சார்ந்து இப்பிரிவை ஏற்படுத்தினார்.அதனாலேயே மத நிறுவனங்கள்,மத ஆதரவு அமைப்புகள் போன்றவை பிரிவு 377 யை தடை செய்ய எதிராக இருக்கின்றன. இதில் இந்து,கிருத்துவம், இஸ்லாம் என்றெல்லாம் பேதமில்லை.

ஆனால் நவீன உலகில் ஒடுக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ஆதரவாக பல உரிமைக் குரல்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி கூட சென்ற முறை சட்டமன்றத் தேர்தலில் திருநங்கை ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்து வரலாற்றின் பொன்னேடுகளில் தன் பெயரை பதித்துக் கொண்டது.மேலும் தன் உறுப்பினர் சேர்க்கையில் ஆண்/பெண் என்பதோடு மட்டும் நில்லாமல் மூன்றாம் பாலினத்திற்கும் உரிய இடத்தை நாம் தமிழர் கட்சி வழங்கி இருக்கிறது.

பிரிவு 377 என்பது ஓரினச்சேர்க்கையை தடை செய்த சட்டம். அது நீக்கப்பட்டு விட்டதால் இனி நாடு முழுக்க ஓரினச்சேர்க்கை பரவும் என்பதான விடலைத் தன சிந்தனைப் பதிவுகளை நம்மால் காண முடிகிறது. சமூக தளங்களில், கல்வியறிவு கொண்ட மட்டங்களில் கூட மாற்றுப் பாலினம் அல்லது மூன்றாம் பாலினம் குறித்து இன்னும் பிற்போக்குத் தனமான சிந்தனைகள் நிலவுவது வேதனையானது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நாஸ் பவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடுத்த மனுவின் அடிப்படையில் நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய இந்திய அரசியலமைப்பு சட்ட அமர்வு பிரிவு 377 யை தடைசெய்து இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அவமானத்திலும், இழிவிலும் ,கூனிக் குறுகி நின்று ..கூனிக்குறுகி ..இத்தனை ஆண்டு காலம் பிச்சை எடுத்து ,பாலியல் தொழில் செய்து ..காவல்துறைக்கு கப்பம் கட்டி.. இழிபிறவிகளாக கேலி செய்ய படுபவர்களாக நடத்தப்படும் மாற்றுப் பாலின உறவுகளின் வாழ்வில் இத்தீர்ப்பு புதிய நம்பிக்கைகளை உண்டாக்கி இருக்கிறது. வலியும்,மானக்கேடும் இல்லாத ஒரு சகதர்ம வாழ்வு அவர்களுக்கு அமையட்டும்.

வாழ்த்துகள்.

சொல்ல முடியாதவைகளின் சொற்கள்..

 

 

 

யாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா…

சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய் மடி வாசம் போல சில உணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனது ஆகச்சிறந்தவனுக்காக…

ஏனெனில் அவன் ஒரு விசித்திரன். சொற்களின் சூட்சமங்களுக்குள் அவ்வளவு எளிதாக அகப்படாதவன். அவன் செவியோடு பிறந்த அலைபேசியும் .. எப்போதும் முகத்தோடு தங்கிய புன்னகையும்.. மட்டும் தான் அவன் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். கரும் பசுமை போர்த்திய நேச வனமொன்று அவனுள் உண்டு. உற்சாக மலையில் இருந்து கொட்டும் களங்கமற்ற களிப்பின் மலையருவியும் அவனுள் உண்டு.

அவன் எனது மீட்பர். நான் புதைகுழிகளில் விழுந்து இருக்கிறேன். காலத்தின் கோர இருளில் கரைந்து இருக்கிறேன். பலவீனங்களின் உச்சத்தில் நின்று பயந்து இருக்கிறேன். அதே நேரம் பரவசமும் பட்டிருக்கிறேன். எதனாலும் நிறைவுறாத கொந்தளிப்பு மனநிலை உடைய என்னைப்போன்ற ஒருவனை அருகிலேயே கொண்டிருப்பது மாபெரும் சாபம்தான்.

அந்த சாபம் கொண்ட ஒருவனைத்தான்.. இந்த இரவில் நான் நன்றியோடு கண்கள் கசிய நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த உலகமே என்னைக் கைவிட்ட போது… உற்றார் உறவினர்.. நண்பர்கள் ,நம்பி நின்றோர் ..என அனைவரும் என் கரங்களை காற்றிலே நிராதரவாய் அலையவிட்டு.. துரோகச் சூடுகளால் உயிர் ஆவியாக தவிக்கவிட்டு இவன் தனித்தவன், அதனாலேயே இறந்தவன் என ஊர் உலகத்துக்கு அறிவித்து விட்டு அகன்ற பிறகு..

அவன் பேரன்பின் மெழுகுவர்த்தி யோடு… நம்பிக்கை தென்றலை கையில் பிடித்துக் கொண்டு நான் புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்குள் நுழைந்தான். நிராசைகளால் நானே கட்டிக்கொண்ட அந்தப் புதைமேட்டிலிருந்து என்னைத் தோண்டி எடுத்தான்.விழிகளுக்கு ஒளியூட்டினான்.

நான் இறந்து விட்டேன் என்றேன். நீ பிறந்திருக்கிறாய் என்றான் .

இதுதான் அவன்.

என் விழிகளில் படிந்திருந்த கடந்த கால மயக்கங்களை ..அர்த்தமற்ற குருட்டுத்தனங்களை .. அகற்றி முன் செல்ல என் பாதைகளில் முளைக்கத் துடித்த முட்களை அகற்றியவன்.

சொல்லப்போனால் இன்று என் முகத்தில் உயிர்த்திருக்கும் புன்னகைக்கு அவனே காரணமானவன்.

பைபிளில் ஒரு வசனம் வரும்

நீங்கள் பிரார்த்தனையை கைவிடாது இருங்கள். இறைவன் உங்களை கைவிடாது இருப்பார்.

இறைவன் கைவிடுகிற பொழுதுகளும் மனித வாழ்க்கையில் உண்டு. பிராத்தனைகளும் தவறுகிற பொழுதுகள் உண்டு அப்போதும் கூட நம்மை கைவிடாது நடுங்கும் நம் விரல்களை பற்றிக் கொள்கிற அளவற்ற அன்பின் விரல்கள் அவனுடையது.

இதையெல்லாம் படிக்கும் உங்களுக்கு அவனோடு பழக ஆசை பிறப்பது இயல்புதான்.

நீங்களும் பழகலாம். எப்போதுமே மூடப்படாத கதவுகள் கொண்ட இதயம் கொண்ட அவனோடு ..நட்பின் கதகதப்பு மினுக்குகிற விழிகள் கொண்ட அவனோடு…

நீங்களும் பழகலாம்.

ஆனால் அவனை உயிருக்குள் வைத்து உணர ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் மணி செந்திலாகத்தான் பிறக்க வேண்டும்.

அப்படி சக உயிரை மாசற்ற அன்பின் வெப்பத்தினால் உருக்கி விழி கசிய உணர வைக்கவும் ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் சே.பாக்கியராசனாகத்தான் பிறக்க வேண்டும்.
………..

நான் என் தங்கை மீராவோடு , என் மருமகள் அகநகையோடு.. இன்னும் என் இளைய மைத்துனர் பிரபுவோடு மற்றும் … மதுரையில் இருக்கும் எங்கள் அம்மா அப்பாவோடு.. எங்கள் குடும்பத்தோடு..

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் உயிராக நேசிக்கும் அண்ணன் சீமானோடு…

நாங்கள் கொண்டாடிக் கொள்ள.. எங்களை நினைத்து நாங்களே பெருமைப்பட்டுக் கொள்ள.. எங்களுக்கு பொதுமையாக இருக்கும் மகத்தான காரணம்…

நாங்கள் அவனோடு இருக்கிறோம். அவனோடு வாழ்கிறோம்.

………..

இன்னமும் எழுத நிறைய இருக்கிறது. நன்றியோடு அழுது தீர்க்க கண்ணீர் இருக்கிறது. உணர்ச்சி ததும்ப கலங்கியவாறே கட்டித்தழுவ தோள்கள் இருக்கின்றன. கைகோர்த்து பயணிக்க பயணங்கள் இருக்கின்றன. சேர்ந்திசைக் குரலில் முழங்க முழக்கங்கள் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் விவரிக்க சொற்கள்தான் இல்லை.

வாழ வாழ்க்கை இருக்கிறது.

வாழ்வோம் தல..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

நிலாக்காலம்..

 

நாங்கள் ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்.

உண்மையாகவே
எங்கள் ஆத்தா
அந்த
நிலாவில் தான்
வடை சுட்டார்..

எப்போதும் வெளிச்சம்
இருக்கிற நிலாவில்
நாங்கள் பகலிரவு
தெரியாமல்
வளர்ந்தோம்.

பிணைக்கப்பட்ட
விரல்களோடும்..
எங்களை சுமந்த
7 தோள்களில் தான்
நாங்கள் முதற்
கனவு கண்டோம்.

நம்ப மாட்டீர்கள்.

அந்த கனவிலும்
நிலா வந்தது.
..

நம்ப மாட்டீர்கள்.
நாங்கள் கூட
நம்ப முடியாமல்
தவிக்கிறோம்..

ஆம்.
நாங்கள்
ஒரு
காலத்தில்
நிலாவில்
இருந்தோம்

————–

அன்பின் சூட்டினால்..
நினைவுகளை கிளறிய
Jayaprakash Raj க்கு.

இமைக்கா நொடிகள்- ஒரு பார்வை.

ஆல்பர்ட் ஹிட்சாக் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் ஒரு சம்பவத்தை ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கி திரைப்படம் முடியும் போது அதை தொடங்கிய புள்ளியிலிருந்து முற்றிலுமாக வேறுபடுத்தி வேறொரு புள்ளியில் முடிக்கின்ற யுக்தி குறித்து அறிந்திருப்பார்கள். ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும். மனித உளவியலுக்கேயுரிய இயல்பாக இருக்கின்ற இந்த முரணை மூலதனமாகக் கொண்டுதான் சஸ்பென்ஸ் திரில்லர் என்ற வகையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

தமிழில் இதுபோன்ற பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. எனக்குத் தெரிந்து தமிழில் வெளிவந்த சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் அதே கண்கள் (1967).

ஆனால் நவீனகால சினிமா அறிவியலுடன் நேரடியாக தொடர்புடைய காரணியாக மாறி இருப்பதால் திரைக்கதைகள் கடுமையான உழைப்பை கோரி வருகின்றன.

செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்பது, ஹேக் செய்வது, மனிதனை கட்டுப்படுத்தும் அறிவியலை மனிதன் தன் அறிவால் கட்டுப்படுத்துவது ..போன்ற பல யுத்திகளை தனது திரைக்கதையில் பயன்படுத்தி பார்வையாளர்களை கவர இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

அப்படி ஒரு முயற்சிதான் இமைக்கா நொடிகள். உண்மையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இம் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகின்ற திரைப்படம். திரைக்கதையின் சுவாரசியத்தால் அந்த மூன்று மணி நேரத்தை மிக எளிதாக இயக்குனர் கடக்க வைத்திருக்கிறார். இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஒரு விறுவிறுப்பு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். வெகு நாட்களுக்குப் பிறகு திரை அரங்கம் நிரம்பி வழிகிற காட்சி இமைக்கா நொடிகளில் தான் நான் காண நேர்ந்தது.

சமூகத்தில் உயர்வான பொருளாதார வசதியோடு இருக்கின்ற ஹை க்ளாஸ் குடும்பத்தின் வாரிசுகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் எல்லா பெற்றோர்களிடமும் 2 கோடி கேட்டு மிரட்டி வாங்கிக்கொண்டு கொலையும் செய்து விடுகிறான். அடுக்கடுக்காக நிகழும் இந்த கொலையை விசாரிக்கும் சிபிஐ அதிகாரியாக அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் உச்சநட்சத்திரம் நயன்தாரா. இந்தப் படம் அவருக்கானது. ஏறக்குறைய அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் அவரது தம்பியான அதர்வா. இந்த இருவரையும் தாண்டி படம் முழுக்க ஆக்கிரமிப்பது வில்லனாக வருகின்ற புகழ்பெற்ற இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப். படத்தில் இருக்கின்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. புகழ்பெற்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா இப்படத்தில் தன்னை மிகவும் மெருகேற்றி இருப்பது ஆச்சரியமான ஒன்று. வில்லன் விடுக்கிற சவால்களை கதையின் நாயகி எதிர்கொண்டு சமாளிக்க முயல்கிறார். பலமுறை அதில் தோற்கிறார். வில்லனுக்கும் நயன்தாராவுக்கும் நடக்கிற அந்த கழுதைப்புலி -சிங்கம் உரையாடல் மிக சுவாரசியமாக இருந்தது. சின்ன சின்ன அசைவுகளிலும் வில்லன் அனுராக் காஷ்யப் மிரட்டியிருக்கிறார் ‌. நயன்தாரா தமிழ்நாட்டின் ஏஞ்சலினா ஜூலி. அதை நிரூபித்தும் இருக்கிறார். குறிப்பாக அவருக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான உறவில் நெகிழ்ந்து உருகுவது அழகாக இருக்கிறது. ஏறக்குறைய அனைவருமே சரிசமமான பங்கு இருப்பது போன்ற திரைக்கதை வடிவமைப்பு இயக்குனரின் திறமை.

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள். ஆனாலும் அனுராக் காஷ்யப், நயன்தாரா ,அதர்வா ஆகியோர் தங்களது மேம்பட்ட திறமையால் இமைக்கா நொடிகளை இமைக்காமல் பார்க்க வைக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் இரவு நேர காட்சிகளில் தான் யார் என காட்டியிருக்கிறார். ஹிப்ஹாப் தமிழா இரண்டு பாடல்களில் தெரிகிறார். வேகமெடுத்து ஓடும் திரைக்கதையால் படத்தின் குறைகள் எதுவும் அதிகம் உறுத்தாமல் கவனித்துக் கொண்டது இயக்குனரின் திறமையே.. பாராட்டுக்கள் அஜய்.

இப்படத்தின் தயாரிப்பில் என் தம்பிகள் அருண்குமாரும் அரவிந்தும் பங்கு பெற்றிருக்கிறார்கள். அருமைக்குரிய சகோதரர் விஜய் சார் இப்படத்தினை உருவாக்குவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். படம் வெற்றியடைந்து விட்டது. புன்னகை தவழ இருக்கிற அந்த முகங்களை காண விரைவில் சென்னைக்கு செல்ல வேண்டும்.

இமைக்கா நொடிகள் குடும்பத்துடன் ஒரு மாலையை பொழுதுபோக்காக , விறுவிறுப்பாக கழிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்ற திரைப்படம் .

அவசியம் காணுங்கள்.

Page 1 of 3

Powered by WordPress & Theme by Anders Norén