யாருக்காவது எதையாவது சொல்ல விரும்பி சொல்லமுடியாமல் தவித்திருக்கிற அனுபவம் உங்களில் யாருக்கேனும் இருக்கிறதா…

சொல்ல முடியாத அன்பு.. காட்ட முடியாத காதல்.. நிறைவேறாத கனவு.. முடிவுறாத பற்று… பூர்த்தியடையாத ஆசை ..என நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் உங்களின் உணர்ச்சியும் இருக்கக்கூடும்.

தாய் மடி வாசம் போல சில உணர்ச்சிகள் வார்த்தை வடிவங்களுக்கு உட்படாதவை. சொற்களின் விவரிப்பு எல்லைக்கு அப்பால் நின்று நம் தவிப்பை வேடிக்கை பார்ப்பவை. அப்படித்தான் நானும் இப்பொழுதில் தவித்துக் கொண்டிருக்கிறேன் எனது ஆகச்சிறந்தவனுக்காக…

ஏனெனில் அவன் ஒரு விசித்திரன். சொற்களின் சூட்சமங்களுக்குள் அவ்வளவு எளிதாக அகப்படாதவன். அவன் செவியோடு பிறந்த அலைபேசியும் .. எப்போதும் முகத்தோடு தங்கிய புன்னகையும்.. மட்டும் தான் அவன் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். கரும் பசுமை போர்த்திய நேச வனமொன்று அவனுள் உண்டு. உற்சாக மலையில் இருந்து கொட்டும் களங்கமற்ற களிப்பின் மலையருவியும் அவனுள் உண்டு.

அவன் எனது மீட்பர். நான் புதைகுழிகளில் விழுந்து இருக்கிறேன். காலத்தின் கோர இருளில் கரைந்து இருக்கிறேன். பலவீனங்களின் உச்சத்தில் நின்று பயந்து இருக்கிறேன். அதே நேரம் பரவசமும் பட்டிருக்கிறேன். எதனாலும் நிறைவுறாத கொந்தளிப்பு மனநிலை உடைய என்னைப்போன்ற ஒருவனை அருகிலேயே கொண்டிருப்பது மாபெரும் சாபம்தான்.

அந்த சாபம் கொண்ட ஒருவனைத்தான்.. இந்த இரவில் நான் நன்றியோடு கண்கள் கசிய நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த உலகமே என்னைக் கைவிட்ட போது… உற்றார் உறவினர்.. நண்பர்கள் ,நம்பி நின்றோர் ..என அனைவரும் என் கரங்களை காற்றிலே நிராதரவாய் அலையவிட்டு.. துரோகச் சூடுகளால் உயிர் ஆவியாக தவிக்கவிட்டு இவன் தனித்தவன், அதனாலேயே இறந்தவன் என ஊர் உலகத்துக்கு அறிவித்து விட்டு அகன்ற பிறகு..

அவன் பேரன்பின் மெழுகுவர்த்தி யோடு… நம்பிக்கை தென்றலை கையில் பிடித்துக் கொண்டு நான் புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்குள் நுழைந்தான். நிராசைகளால் நானே கட்டிக்கொண்ட அந்தப் புதைமேட்டிலிருந்து என்னைத் தோண்டி எடுத்தான்.விழிகளுக்கு ஒளியூட்டினான்.

நான் இறந்து விட்டேன் என்றேன். நீ பிறந்திருக்கிறாய் என்றான் .

இதுதான் அவன்.

என் விழிகளில் படிந்திருந்த கடந்த கால மயக்கங்களை ..அர்த்தமற்ற குருட்டுத்தனங்களை .. அகற்றி முன் செல்ல என் பாதைகளில் முளைக்கத் துடித்த முட்களை அகற்றியவன்.

சொல்லப்போனால் இன்று என் முகத்தில் உயிர்த்திருக்கும் புன்னகைக்கு அவனே காரணமானவன்.

பைபிளில் ஒரு வசனம் வரும்

நீங்கள் பிரார்த்தனையை கைவிடாது இருங்கள். இறைவன் உங்களை கைவிடாது இருப்பார்.

இறைவன் கைவிடுகிற பொழுதுகளும் மனித வாழ்க்கையில் உண்டு. பிராத்தனைகளும் தவறுகிற பொழுதுகள் உண்டு அப்போதும் கூட நம்மை கைவிடாது நடுங்கும் நம் விரல்களை பற்றிக் கொள்கிற அளவற்ற அன்பின் விரல்கள் அவனுடையது.

இதையெல்லாம் படிக்கும் உங்களுக்கு அவனோடு பழக ஆசை பிறப்பது இயல்புதான்.

நீங்களும் பழகலாம். எப்போதுமே மூடப்படாத கதவுகள் கொண்ட இதயம் கொண்ட அவனோடு ..நட்பின் கதகதப்பு மினுக்குகிற விழிகள் கொண்ட அவனோடு…

நீங்களும் பழகலாம்.

ஆனால் அவனை உயிருக்குள் வைத்து உணர ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் மணி செந்திலாகத்தான் பிறக்க வேண்டும்.

அப்படி சக உயிரை மாசற்ற அன்பின் வெப்பத்தினால் உருக்கி விழி கசிய உணர வைக்கவும் ஒரு நிபந்தனை இருக்கிறது.

அதற்கு நீங்கள் சே.பாக்கியராசனாகத்தான் பிறக்க வேண்டும்.
………..

நான் என் தங்கை மீராவோடு , என் மருமகள் அகநகையோடு.. இன்னும் என் இளைய மைத்துனர் பிரபுவோடு மற்றும் … மதுரையில் இருக்கும் எங்கள் அம்மா அப்பாவோடு.. எங்கள் குடும்பத்தோடு..

எல்லாவற்றிற்கும் மேலாக அவன் உயிராக நேசிக்கும் அண்ணன் சீமானோடு…

நாங்கள் கொண்டாடிக் கொள்ள.. எங்களை நினைத்து நாங்களே பெருமைப்பட்டுக் கொள்ள.. எங்களுக்கு பொதுமையாக இருக்கும் மகத்தான காரணம்…

நாங்கள் அவனோடு இருக்கிறோம். அவனோடு வாழ்கிறோம்.

………..

இன்னமும் எழுத நிறைய இருக்கிறது. நன்றியோடு அழுது தீர்க்க கண்ணீர் இருக்கிறது. உணர்ச்சி ததும்ப கலங்கியவாறே கட்டித்தழுவ தோள்கள் இருக்கின்றன. கைகோர்த்து பயணிக்க பயணங்கள் இருக்கின்றன. சேர்ந்திசைக் குரலில் முழங்க முழக்கங்கள் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் விவரிக்க சொற்கள்தான் இல்லை.

வாழ வாழ்க்கை இருக்கிறது.

வாழ்வோம் தல..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.