மனிதனின் மனம் பல நுட்பமான உணர்ச்சிகளின் நூலிழைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும் இந்த உணர்ச்சியலைகளின் பேத சுருதிகளில் சிக்கிக்கொண்டு தான் மானுட வாழ்வு அலைகழிகிறது. ஒருவனுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒன்று மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கலாம். மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கும் ஒன்று இன்னொருவனுக்கு உயிரை விட மேலானதாக தோன்றலாம். இந்த தோற்ற மயக்கங்களில் தான் மனிதன் காலம் காலமாக சிக்குண்டு கிடக்கிறான்.

மனித மனத்தை ஆராய்ந்து வெளிவந்து இருக்கிற நூல்களில் நான் முக்கியமாகக் கருதுவது சிக்மண்ட் பிராய்ட் எழுதிய கனவுகளின் விளக்கம் என்கிற நூலை தான். ஏனெனில் அதுவரை உளவியல் நூல்கள் கற்பித்த பல கற்பிதங்களை சிக்மன்ட் பிராய்டு தனது ஒரே புத்தகத்தின் மூலமாக மாற்றி எழுதினார். நான் அடிக்கடி வாசிக்கும் அந்தப் புத்தகத்தில் என்னை கவர்ந்த ஒரு வரி இருக்கிறது. மனித மனம் ஏதேனும் ஒன்றுக்கு காலம் காலமாக அடிமைப்பட்டே இருக்கிறது.
.
உண்மைதானே.. நாம் எல்லோரும் ஏதோ ஒன்றுக்கு அடிமைகள் தானே. ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு உணர்ச்சிக்கோ கொள்கைக்கோ, வாழ்வியல் முறைக்கோ, அடையாளத்திற்கோ, பண்பாட்டு விழுமியங்களுக்கோ , இந்த பட்டியலில் இடம்பெறாத வேறு ஏதேனும் ஒன்றுக்கு அடிமையாக தானே இருந்து வருகிறான். அன்றாடம் போதையில் தள்ளாடும் ஒருவனை அவன் குடிக்கு அடிமை, கஞ்சாவுக்கு அடிமை என்றெல்லாம் நம்மால் சொல்லிவிட முடிகிறது. ஆனால் உள்ளீடாக காணும்போது நாமும் ஏதேனும் ஒன்றுக்கு அடிமையாக தான் இருக்கிறோம். இதைத்தான் பௌத்தம் ஆசை என்று உருவகிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

அந்த அடிமை உணர்ச்சியே மனித வாழ்வின் ஆதாரசுருதியாக இருக்கிறது. அந்த தீவிர உணர்ச்சி தான் மனிதனை இயக்குகிறது. ஏதேனும் ஒன்றுக்கு அடிமைப்பட மனித மனம் விழைவதைதான் நம் வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்.
.
நான் சட்டக் கல்லூரியில் படித்தபோது இறுதியாண்டில் நீதிமன்ற வளாகங்களுக்கு நேரடியாக சென்று பயிற்சி பெறுகிற முறைமை இருந்தது. அப்படி பயிற்சிக்காக திருச்சி நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த காலத்தில் புகழ்பெற்ற வழக்கு ஒன்று அங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு ஊடகங்களால் புகழ்பெற்ற பிரேமானந்தா சாமியார்.

அந்த வழக்கை நடத்துவதற்காக டெல்லியிலிருந்து புகழப்பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் வந்திருந்தார். சட்டக்கல்லூரி மாணவர்களை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்துச் சென்ற எங்களது ஆசிரியர்கள் அந்த வழக்கு நடைபெறுகிற நீதிமன்றத்தில் எங்களை அமர வைத்து இருந்தார்கள். எங்களுடன் படித்த பல பெண்கள் பிரேமானந்தாவை காண மறுத்து வெளியே சென்று விட்டார்கள். ஏனெனில் ஊடகங்கள் அவரை அவ்வாறு மிகக்கொடுமையான வில்லனைப் போல சித்தரித்திருந்தார்கள்.ஆனால் எனக்கெல்லாம் பிரேமானந்தாவை காண மிகுந்த ஆர்வம்.

ஒரு மஞ்சள் நிற வேட்டி மற்றும் அதே நிற துண்டோடு பிரேமானந்தா சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு காவல்துறையால் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். பல நாட்கள் அந்த வழக்கின் விசாரணை நடந்தது. ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின் போது பிரேமானந்தா அருகே சென்று அவருக்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலரிடம் என்னை சட்டக்கல்லூரி மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அனுமதி பெற்று பிரேமானந்தாவிடம் பழகத் தொடங்கினேன்.

உண்மையில் அவர் மிக எளிய மனிதர். பழகும் அனைவரிடமும் ராஜா என்று அன்புடன் அழைத்து உரையாடுபவர். ஊடகங்கள் விவரித்தது போல இல்லாமல் அவர் வேறு ஒரு வடிவத்தில் இருந்தது எனக்கு மாபெரும் வியப்பாக இருந்தது. உண்மையில் ஊடகங்கள் ஒரு மனிதனை தாங்களாகவே தயாரிக்கின்றன. அவைகள் சித்தரிக்கும் போக்கில்தான் நாம் அவர்களை உணர்ந்து கொள்கிறோம் என்கின்ற மகத்தான உண்மை புலப்பட்ட காலம் அது.


பிரேமானந்தாவிடம் அரசியல் ,ஆன்மீகம், மொழி, இனம் என பல கருத்துக்களில் நான் உரையாடத் தொடங்கினேன். உரையாடிய போது தான் தெரிந்தது அவர் நிறைய படித்திருக்கிறார் என. அவர் பேசுவதற்கு மிகவும் சுவாரஸ்யமான நபர். அவர் எதிர்கொண்டு இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்டு சங்கராச்சாரி போன்ற இந்து மத வைதீக சாமியார்களால் கட்டமைக்கப்பட்ட புனையப்பட்ட ஒன்றாக அவர் கருதினார். அவர் அடைந்திருந்த புகழும்,சொத்தும், பணமுமே இதற்கெல்லாம் காரணம் என்று அவர் கூறினார். அவர் ஒரு இலங்கைத் தமிழர். ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தினை அப்போது அவர் மானசீகமாக ஆதரித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மாபெரும் வீரன் என்று புகழ்ந்துரைத்தார். இந்துமத தீவிரவாதத்திற்கு எதிராக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களெல்லாம் ஒன்று கொலை செய்யப்படுவார்கள், இல்லையேல் தன்னைப்போல குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அந்த நேரத்தில் அவர் தெரிவித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்களும் விபூதிப்பட்டை, ருத்ராட்சம் ஆகியவை அணிந்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு இந்து மத சாமியார் தானே என்று கேட்டதற்கு.. அவர் சட்டென சிரித்து நான் அணிந்திருக்கும் விபூதிப் பட்டைக்கும் இவர்கள் சொல்லும் இந்து மதத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்றார். அப்படி என்றால் உங்கள் மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு.. இது ஒரு குற்றச்சாட்டு என்றால் இங்குள்ள எல்லா சாமியார்களும் என்னைப்போல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வேண்டியவர்கள்தான் என்று கோபமாகக் கூறினார். உங்கள் மீதான கொலை குற்றச்சாட்டு என்று கேட்டதற்கு அது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என்று மறுத்தார்.

இப்படியெல்லாம் நீண்ட எங்களது உரையாடல்‌ ஒருநாள் மனித மனம் பற்றி நிகழ்ந்தது. ஆசை தான் அனைத்திற்கும் காரணம் என்கிறாரே புத்தர் அதுபற்றி என்ன சாமி உங்கள் கருத்து என்று அவரிடம் கேட்டபோது… ஆசை இல்லாவிட்டால் மனிதன் ஏது .. மனிதனே இல்லாவிட்டால் உலகம் ஏது… மனிதனே உலகத்தை உருவாக்குகிறான். ஆசைதான் மனிதனின் உடலில் உதிரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆசையற்ற மனிதன் உதிரமற்ற உடல் என்றார். மனிதனின் பிறப்பு முதல் அவனது இறப்பு வரை அனைத்தும் ஆசையால் நிகழ்கிறது என்றார். தொடக்கத்தில் இயற்கைக்கு முன்னால் அடிமையாக இருந்த மனிதன் தான் பிறகு தனது மன உந்துதல் காரணமாக இயற்கையை வெல்லும் வழியை அறிந்தான். அந்த அடிமை உணர்ச்சியும் ,மன உந்துதலுமே நவீன காலத்தில் ஆசையாய் வடிவெடுத்து நிற்கின்றது என்றார்.

அப்படி என்றால் நீங்கள் அடைந்திருக்கும் எல்லா துயரத்திற்கும் நீங்கள் கொண்டிருக்கின்ற ஆசைகள் தான் காரணமா.. என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே ..”ராஜா என்னை மடக்கப் பார்க்கிற.. என் ஆசைகள் என் பிரச்சனைகளுக்கு காரணம் இல்லை ராஜா.. என்னை எதிர்த்தவர்களின் ஆசைகள்தான் என் பிரச்சனைகளுக்கு காரணம்” என்றார். பயிற்சி முடிந்த பிறகு அவரிடம் விடை பெற்றுக் கொள்ள ஒரு நாள் அவரை சந்தித்தபோது எனக்கு ருத்ராட்சம் ஒன்றினை நினைவு பரிசாக அளித்தார். அப்போது நான் “ஏன் சாமி வாயிலிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து கொடுக்க கூடாதா..?” என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.

“போங்க ராஜா ..கிண்டல் பண்ணாதீங்க. நல்லா இருங்க.. என்று வாழ்த்தி அனுப்பினார். அதற்கு பிறகு அவரை நான் எங்கும் சந்திக்கவில்லை‌‌.
தீவிர சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும் அவருக்கு அப்போதே இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையிலே அவர் காலமானார்.

அவர் சொன்ன அந்த ஒரே ஒரு வரி தான் எனக்கு வெகு நாட்கள் உறுத்திக் கொண்டிருந்தது. பிறரின் ஆசை தான் எனது துயரங்களுக்கு காரணம்..என்று அவர் அன்று சொன்னது.

அப்படி என்றால் அடுத்தவரின் உணர்ச்சி கூட நம்மை பாதிக்கிற ஒரு சிக்கலான கண்ணியில் நாம் மாய முடிச்சால் விலங்கிட்டு இருப்பதைத்தான் வாழ்க்கை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ..?

எதுவானால் என்ன..

நீங்களும் நானும் நினைப்பது போல வாழ்க்கை இல்லை என்பது மட்டும் உண்மை.

அதன் அர்த்தம் புரியும் போது நாம் வாழ முடியாதவர்களாக இறக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமமே. இன்னமும் சஸ்பென்ஸ் நீங்காத ஒரு முடிவிலி திரைப்படக்கதை போல நாமும் நமக்கு புரிந்த வரையில் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். அதுவும் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது.