பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: மே 2019 Page 3 of 4

ஏனெனில் அவர் ..


——————————–

அது ஒரு வெறும் உரையாடல்.

தன் கட்சியை சேர்ந்தவரிடம் அவர் பேசுகிறார்.

யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று பேசிக்கொள்கிறார்கள்.

தலைமைக்கு கட்டுப்பட கோருவதும், கண்டிப்பதும் அரசியல் அமைப்புகளில் மிக இயல்பாக நடைபெறுகிற ஒன்று.

அதை ஒரு செய்தியாக எடுத்துக் கொண்டு ஏதோ எதிர்மறைச் செய்தி போல பரப்பவதிலிருந்து..

அவர் குறித்து தவறான பிம்பத்தினை பரப்ப வேண்டும் என்கிற தவிப்பு பலருக்கும் இருப்பது புரிகிறது.

பல தவறானவைகளுக்கு அவர் பெரும் ஆபத்தாக திகழ்கிறார் என்பதும் புரிகிறது.

ஏன் இந்த கடுமையான வெறுப்புணர்ச்சி..

அவர் குறித்த பயம்தான்..

அலைஅலையாய் பரவ காத்திருக்கும் அவரது ஆவேச பரப்புரையை நினைத்து
எழும் அச்சம் தான்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

எதிரிகள் பயப்பட அவர் வாழ்கிறார்.

அவர்கள் அச்சத்தில் இவர் பற்றிய ஏதாவது கிடைக்காதா என தேடித் திரிகிறார்கள். அவர்கள் கனவில் கூட ஆழ்ந்த அச்சமாய்,நடுக்கமாய் அவர் உறைந்திருக்கிறார்.

அவருடைய அண்ணன் குறித்தும் இவ்வாறுதான் பல செய்திகளைப் பரப்பி பார்த்தார்கள்.

பயங்கரவாதி தீவிரவாதி முரட்டுத்தனமானவர் பிறரோடு உடன்படாது தனித்து நிற்கிற சர்வாதிகாரி என்றெல்லாம் பட்டம்கட்டி பார்த்தார்கள்.

அவருடைய அண்ணன் சமரசமில்லாது இதேபோல்தான் தனித்து கம்பீரமாக நின்றார்.

அவருக்குப் பிறகு பயம் ஏற்பட்டது இவரை பார்த்துதான்.

அவர்களின் அந்த அச்சம் நியாயமானது. தகுதியானது.

வரலாற்றில் சரியான ஒருவனை அவர்கள் மீண்டும் சந்தித்து விட்டார்கள்.

அதனால்தான் பதட்டம். இது போன்ற பரப்புரை.

ஆனால் இதற்க்கெல்லாம் அசருகிற ஆளா அவர்..

27 வல்லாதிக்க நாடுகள் ஒன்றாக எதிர்த்த போதும் தனி ஒருவனாக எதிர்கொண்ட ஒரு மாபெரும் வீரனின் தம்பி அல்லவா..

இது போன்ற சில்லறை சப்தங்களால் சினம் கொண்ட அவரது சொற்களை அணை கட்ட முடியாது.

இதுபோன்ற அவதூற்று சருகுகளின் ஓசைகள் அவரது இலட்சிய காலடிகளை தடுத்துவிட முடியாது.

ஏறி மிதித்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்.

ஏனெனில் அவர்..எதிரிகளை இன்னமும் உறங்க விடாமல் உறுத்திக் கொண்டிருக்கிற பிரபாகரனின் தம்பி.

எதிரிகள் அச்சமுற வாழ்கின்ற அவரது வாழ்வென்பது..

நம் எல்லாராலும் ரசிக்கப்பட வேண்டியது கொண்டாடப்பட வேண்டியது.

அதில் உள்ள ஒரு செய்தியை ஆழமாக நாம் கற்க வேண்டியது.

எதிரி பயப்பட வாழ்.

சீமான்- எதிரிகளின் கனவில் உறையும் அச்சம்.

மணி செந்தில்.

துளி-23

 

பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் சமூகத்தில் பல சிந்தனைகளை, விவாதங்களை உருவாக்குகின்ற குறியீடாக மாறி இருக்கிறது.

பொள்ளாச்சி நடைபெற்ற அந்த சம்பவங்கள் வெறும் ஒரு ஊரும்,சில இளைஞர்களும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த சமூகமே தங்களைத் தாங்கள் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நிலையை இச்சம்பவம் உருவாக்கி இருக்கிறது. சாதி முதல் குழந்தை வளர்ப்பு வரை அனைத்தையுமே நாம் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

காதலித்து விடக்கூடாது. சாதி மாறி காதலிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்,நாடகக் காதல் , ஜீன்ஸ் காதல் என்றெல்லாம் குமறியவர்கள் எல்லாம் இச்சமயத்தில் மெளனமாக இருக்கிறார்கள். கவனிக்க.

விளம்பரங்களில் வரும் குழந்தைகள் கூட மதங்கள் கிழித்திருக்கும் கோடுகளை தாண்டி விடக்கூடாது என்று பதறியவர்கள் எல்லாம் மெளனமாக இருக்கிறார்கள்.கவனிக்க.
…..

சாதி ஆணவக் கொலைகளால் உயிரிழந்த இளைஞர்கள் தாங்கள் நேசித்த பெண்களுக்காக தண்டவாளங்களில் பிணமாக கிடந்தார்கள். அவர்கள் இவர்கள் போல் அல்ல. அழைத்து வந்த பெண்ணை முறைப்படி மணந்தார்கள். வாழ முயற்சித்தார்கள்.

நம்பி வந்த பெண்ணுக்காக உயிரையும் கொடுத்து நேர்மையாக நின்றார்கள்.

அவர்கள் காதலை காட்டி யாரையும் ஏமாற்றவில்லை.நண்பர்களை வைத்துக் கொண்டு யாரையும் கற்பழிக்கவில்லை.
…..

இத்தனை பெண்கள் பாதிக்கப் பட்ட பிறகும் கூட ஏன் அந்தப் பெண் அங்கே போனாள்.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி முடியும்‌. என்றெல்லாம் பேசுகிற ஆட்களின் பின்புலத்தினை கவனித்து வையுங்கள்.. சாதி மதம் போன்றவற்றின் பாதுகாவலர்களாக அவர்கள் இருப்பார்கள்.பெண் கல்வியை மறுப்பவர்களாக.. பெண்களின் மீதான வன்முறை நிகழும் போதெல்லாம் அந்த பெண் ஏன் அப்படி உடை அணிந்தாள் .. அவள் ஏன் செல்போன் பயன்படுத்தினாள் என்று பேசுபவர்களாக.. இருப்பார்கள்.

பெண்கள் மீதான வன்முறைக்கு சாதி மதம் எல்லாம் வரையறைக்கோடுகள் அல்ல. சொல்லப்போனால் சாதி – மதம் போன்ற அடிப்படை வாதங்கள் தான் இதுபோன்ற கேடுகளை பராமரிக்கும். பாதுகாக்கும்.

இதில் ஊடகங்கள் நிகழ்த்துகின்ற அரசியலையும் நாம் கவனிக்க வேண்டும். செய்தியை யார் முந்தித் தருவது, பரபரப்பை யார் தூண்டுவது, என்கிற போட்டியால் பொறுப்பற்ற முறைமையில் ஊடகங்கள் செயல்பட தொடங்கி விட்டன. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் உண்மைக்கு தாண்டிய உள் நோக்கங்கள் இருக்கின்றன என்பதை கடந்த காலங்களில் ஊடகங்கள் வெளிப்படுத்தியே வருகின்றன.

குற்றம் செய்த இளைஞர்களை தாண்டி அவர்களது குடும்பத்தினரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளிவருவது என்பது இன்னொரு கொடுமை. அந்த குடும்பத்தினரின் பொறுப்பற்ற தன்மை தான் இந்த குற்றவாளி இளைஞனை உருவாக்கியிருக்கிறது என்றாலும் கூட.. தற்போது தலைகுனிந்து இருக்கின்ற அந்த குடும்பத்தினரை நாம் மேலும் காயப்படுத்துவது என்பது சரியல்ல என்றே நான் கருதுகிறேன்.

…..

இதையெல்லாம் தாண்டி ஆண் குழந்தைகளை பெற்று வளர்க்கின்ற பெற்றோராகிய நமக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.

மகன்களோடு உரையாடுதல். ஆண் உடல் போன்றே பெண் உடலும் என்ற புரிதலை ஏற்படுத்துதல். பெண் சமூகத்தின் சக உயிரி என்ற மதிப்பீட்டை உருவாக்குதல். வீட்டில் இருக்கின்ற பெண்களை மதிப்புடன் நடத்துதல். சமூகப் பார்வையோடு சமூக கேடுகளுக்கு எதிரான உணர்ச்சிகளோடு பிள்ளைகளை வளர்த்தல்.
.
இதுவரை மகன்களோடு வெளிப்படையாக உரையாடாத பெற்றவர்கள் யாரேனும் இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது. தோழமை மிகுந்த அறிவுறுத்தல்களே நம் மகன்களை மிருக நிலையிலிருந்து காப்பாற்றும்.

நான் என் மகன்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள்..??

மணி செந்தில்.

பேரன்பின் அற்புதன் -பயஸ் அண்ணா


_—–+-++++++++++++++++++++++++++++

“இரவு ஒரு பசித்த ஓநாய்.
நாடோடி போகுமிடமெல்லாம் அது அவனை தொடர்கிறது.
பிசாசுகளுக்காக எல்லைகளைத் திறந்து விடுகிறது.
வில்லோ மரக்காடு இன்னும் காற்றைத் தழுவுகிறது

இருமுறை சாவதற்கு நாம் என்ன குற்றம் செய்தோம்?
வாழ்க்கையில் ஒருமுறை செய்தோம்.
சாவில் மறுமுறை செத்தோம்.”

மஹ்மூத் தர்வீஷ்
தமிழில் எம்.ஏ.நுஃமான்.
+———-

நீண்ட நேரமாக அந்த கதவுகளுக்கு முன்னால் நான் காத்திருக்கிறேன். வெளியே பரபரப்பான ஒரு உலகம். யாருக்கும் எதைப்பற்றியும் பேசிக் கொள்ளவோ பகிர்ந்து கொள்ளவோ எதுவும் இல்லை. சொல்லப்போனால் அந்த இடம் ஒரு தனித்த தீவாக வெளி உலக வெளிச்சங்களில் இருந்து அன்னியப்பட்ட ஒரு இடமாக காட்சியளித்தது.

சொல்லப்போனால் அது இருள் சூழ்ந்த ஒரு வனம். விடியல் எப்போதும் நிகழாத ஒரு நிலம். நிலவு ஒருபோதும் வராத பாலை. கொடும் அதிகாரத்திற்கு இரையாகிப் போன நடைபிணங்கள் வாழ்கிற மாபெரும் சுடுகாடு.

அந்த இருண்மை வெளியில் தான் ஒரு விடுதலைச் சூரியன் விலங்கு பூட்டப்பட்டு 28 வருடங்களாக அடைபட்டுக் கிடக்கிறது.

.

கதவு திறக்கிறது. சிகப்பு குறுக்கு பட்டை அணிந்த ஒரு காக்கிச்சட்டை அலுவலர் என்னை உள்ளே செல்லலாம் என அனுமதிக்கிறார். அதற்கு முன் எனக்கு பலமுறை சோதனைகள். நான் ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே இருக்கிற சிறை அலுவலர் முன்னால் காத்திருக்க வைக்கப் படுகிறேன். நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போது இப்படி இரண்டு மணி நேரங்கள் காத்திருப்பது என்பது ஒரு வழமையான ஒன்று தான்.ஆனாலும் அந்த இரண்டு மணி நேரம் என்பது எனக்கென்னவோ இரண்டு யுகங்களாக காட்சியளிக்கும். உண்மையில் காத்திருப்பு என்பது உலகின் ஆதி மனித துயர்களில் ஒன்று. பசிக்காக, மழைக்காக ,வெயிலுக்காக ,
எல்லாம் வல்ல இயற்கையின் கருணைக்காக, நீருக்காக, நிலத்திற்காக, கசிந்துருகும் காதலுக்காக என மனிதன் ஏதோ ஒன்றுக்காக எப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறான். அப்படித்தான் அந்த சிறைக்குள்ளும் சிலர் காத்துக் கொண்டே இருக்கிறார்கள் 28 வருடங்களாக.

வருடங்கள் என்பன நாட்கணக்கில் கணக்கிடப்படுவது அல்ல. 28 வருடங்களை தாண்டியும் மிக நீண்ட துயர் பொழுதுகளை அவர்கள் அனுபவித்து விட்டார்கள். அவர்கள் ஏறாத மன்றங்கள் இல்லை. எந்த மன்றத்திலும் அவர்களின் நீதி எடுபடவில்லை. அவர்களது எல்லாவித பிரார்த்தனைகளையும் கேட்ட எவருக்கும் செவிகள் இல்லை.
.

இவ்வாறாக என் சிந்தனை பல்வேறு புள்ளிகளில் பறந்து திரிய ‌.. திடீரென ஒரு சிறு சத்தம் கேட்டது. ஒரு வெடிச்சிரிப்பு .
தம்பி என்ற ஒரு குரல். அண்ணன் பயஸ் வந்து விட்டார். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்ட ஏழு தமிழர்களில் அண்ணன்கள் பயஸ் மற்றும் பேரறிவாளனோடு மட்டும் எனக்கு கொஞ்சம் நெருக்கம் அதிகம்.
குறிப்பாக அண்ணன் பயசின் வாழ்க்கை வரலாற்று நூலான விடுதலைக்கு விலங்கு எழுதும் பொழுதுகளில் நான் அவரை அடிக்கடி சந்திக்க வேண்டிய தேவை அவரோடு என்னை மிக நெருங்க வைத்தது. அவர் ஒரு மிகச்சிறந்த ஓவியர். மிகுந்த நம்பிக்கையாளர். ஆனாலும் இந்த நீண்ட சிறைவாசம் அவரது நம்பிக்கைகளை தகர்க்கத் தொடங்கியதை நான் சமீபகாலமாக உணர்ந்து வருகிறேன்.
.
சிறை திரைப்படங்களில் நீங்கள் பார்ப்பது போல அல்ல. சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியாக கொல்லத் தொடங்கும். அதுவும் 28 வருடங்களாக விடுதலை எப்போது என்பதை அறியாத புதிர் வாழ்க்கையில் வாழ்கின்ற அவர்களுக்கு சிறை ஒரு மாபெரும் கொடுமை. வேளைக்கு வேளை அட்டவணை உணவு. சீருடை வாழ்க்கை. எந்த அறிவியல் முன்னேற்றத்தையும் இயல்பான வாழ்க்கையையும் உணரமுடியாத தனிமை தீவின் துயர்ப் பொழுதுகள், நீண்டகாலமாக சிறையிலிருந்து வருவதால் ஏற்படும் மனச்சோர்வினால் உண்டான உடலியல் சிக்கல் .. அவர்களது வாழ்க்கை யாராலும் வாழ முடியாத வாழக்கூடாத மாபெரும் சித்திரவதை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆரம்ப காலகட்டங்களில் சிபிஐ அலுவலகமான மல்லிகையில் வைத்து அதிகம் சித்திரவதை செய்யப்பட்ட நபர் ராபர்ட் பயஸ். தலைகீழாக தொங்க வைத்து அடிப்பது, இரண்டு கால்களையும் எவ்வளவு விரிக்க முடியுமோ விரித்து நேர்கோட்டில் வைத்து முதுகிலேயே லத்தியால் அடிப்பது, என அவர் பட்ட சித்திரவதைகளை கேட்கக்கூட நம்மால் முடியாது. அந்த சித்திரவதைகள் நாம் வாழ்கின்ற நாகரீகமான வாழ்க்கை என்கின்ற இலக்கணங்களை கேள்விக்குறியாக்கி விடுகிறவை.

ஆனால் இத்தனை துயரங்களையும் தாண்டி அண்ணன் ராபர்ட் பயஸ் நம்பிக்கையோடு பார்ப்பவர்களிடமெல்லாம் உற்சாகத்தோடு பேசியும் பழகி வருகிற ஒரு அற்புதன். நான் துவண்டு போன காலங்களிலெல்லாம் என் தோள்களில் கையைப் போட்டு இறுக்கிப் பிடித்து நம்பிக்கையை என்னுள் நங்கூரமாய் விதைத்த நாயகன்.

தம்பி இடும்பாவனம் கார்த்திக் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் இருந்தபோது அவரோடு பழகியதை நொடிக்கு நொடி கண்கலங்க விவரித்துக் கொண்டே இருக்கிறான். வேலூர் சிறையில் அண்ணன் சீமான் இந்த ஐந்து பேரோடு சிறையிலிருந்த பொழுதுகளை இன்னும் மறக்க முடியாமல் நெடுஞ்சாலை பயணங்களில் எங்களோடு பகிர்ந்து கொண்டே இருக்கிறார். விடுதலைக்கு விலங்கு எழுதிய காலங்களில் நான் பயஸ் அண்ணனின் வாழ்க்கையை உள்வாங்கிய பொழுதுகளை இன்னும் என்னால் கடக்க முடியாமல் கண்ணீரோடு காத்திருக்கிறேன்.

இப்படி பழகிய எவராலும் மறக்கமுடியாத கடக்க முடியாத பேரன்பின் அற்புதன் தான் பயஸ் அண்ணா.

பயஸ் அண்ணா நல்ல வாசிப்பாளர். சமீபத்தில்கூட சிறைக்குப் போன ஒரு தம்பியிடம் வேள்பாரி வாங்கச்சொல்லி என்னிடம் தகவல் சொல்ல அனுப்பியிருக்கிறார். கடந்த முறை நான் பார்த்தபோது அவருக்கு வரலாற்று புதினங்களாக தேர்வு செய்து எடுத்துக்கொண்டு அளித்தேன். அவர் எனக்கு ஈழத்து விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதை தொகுப்பு ஒன்றினை பரிசாக அளித்தார்.
.

அவரைப் போன்ற மனிதர்கள் சிறைக்குள் சித்திரவதை படுவதென்பது எதனாலும் சகித்துக்கொள்ள முடியாத வலி. எத்தனையோ நீதிமன்றங்களை கடந்து, இறுதியில் ஒரு ஆளுநரின் கையெழுத்திற்காக காத்து கிடப்பது என்பது இந்த 28 வருடங்களின் துயரங்களைத் ஆண்டிலும் மாபெரும் பெருந்துயர். 28 வருடங்களாக ஒரு முழு இரவில் மூடாத அவரது இமைகள் ஒரு விடுதலை நாளில் நிம்மதியான ஒரு உறக்கத்திற்காக மூட வேண்டும். அவருக்காக என்னைப் போன்ற தம்பிகளின் இல்லங்கள்.. அவரை பெரியப்பா என்று சொந்தம் கொண்டாட என் மகன்களை போன்ற பல உள்ளங்கள் காத்துக்கிடக்கின்றன.
.
இன்று அவருக்கு பிறந்தநாள்.
அவருக்கு வாழ்த்துச் சொல்லவோ மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளவோ நமக்கெல்லாம் எந்த தகுதியும் கிடையாது. சொல்லப்போனால் நாம் எல்லாம் பட்ட கடனை அந்த சில மனிதர்கள் கொடும் சிறைவாசத்தால் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
.
ஒவ்வொரு சந்திப்பிலும் விடைபெற்றுக் கொள்ளும் போது விடுதலைப் பற்றிய சில செய்திகளை அவருடன் பகிர்ந்து கொள்வேன். அவரும் நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்வார். ஆனால் சமீப சில நாட்களாக அந்த நம்பிக்கை அவரிடமிருந்து நகர்ந்துகொண்டே போவதென்பது எனக்கெல்லாம் மாபெரும் வலியாக இருக்கிறது.

கடைசியாகப் பார்த்த சந்திப்பிலும்.. அடுத்த முறை வெளியே சந்திப்போம் என நான் சொல்லிய போது சட்டென அந்தக் கண்கள் கலங்கியதை கண்டேன்.

என்னை இறுக்கி அணைத்து போய் வா தம்பி என்றார்.

நானும் கலங்கியவாறே வெளியேறிவிட்டேன்.
.
இந்த நொடி வரை அவரது நம்பிக்கையை துளித்துளியாய்
தகர்த்து கொண்டிருப்பதற்காக
கண் கலங்கி தலைகுனிந்து அவர் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். அந்தக் குற்ற உணர்வு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் வேண்டும். அந்த குற்ற உணர்வுதான் அவனை போராடத் தூண்டும்.
.
எழுவர் விடுதலை இனத்தின் விடுதலை.
.
அண்ணன் பயஸ் அவர்களுக்கு.. நீங்கள் விடுதலையானப் பொழுதொன்றில் இந்தப் பதிவை உங்களிடம் நான் நேரடியாக படித்துக் காட்டுவேன்.
அடுத்த வருடம் உங்கள் பிறந்த நாளை உங்களோடு நாங்கள் சூழ நிகழ்த்திக் காட்டுவோம். விடுதலை கனவோடு நகரும் இறுதி பிறந்த நாளாக இந்நாள் அமையட்டும் அண்ணா. வாழ்த்துகள்.

கனவு மெய்ப்படும் விடுதலை நாளுக்காக காத்திருக்கும் உங்கள் தம்பி..

மணி செந்தில்.

மறைமலை அடிகள் வரலாறு -மணி செந்தில்-தமிழன் டிவி

[youtube]https://www.youtube.com/watch?v=WuoUdf3zPQs[/youtube]

தமிழன் தொலைக்காட்சி பேட்டி

[youtube]https://www.youtube.com/watch?v=i3p_5TTsZKM[/youtube]

 

[youtube]https://www.youtube.com/watch?v=ZgU3whHEbrE[/youtube]

எழுவர் விடுதலை/கண்டன ஆர்ப்பாட்டம்/குடந்தை 3-02-2019

[youtube]https://www.youtube.com/watch?v=SGkOiBMtatU&feature=youtu.be&fbclid=IwAR2JByq6aClRjFXnToLZVc9doUNsyFZmzV2mPiveKSblVqUOBC-xZX039R4&app=desktop[/youtube]

செவ்விந்தியனின் நடனம்- நூல் வாசிப்பு அனுபவ குறிப்புகள் சில.

அண்ணன் மணி செந்தில் அவர்களின் இந்த படைப்பை,
ஆற அமர, உட்கார்ந்து படித்து ரசிக்க வேண்டி இருப்பதால் இப்பதிவெழுத அதிக கால அவகாசம் எடுத்துக் கொண்டேன்.

இப்படைப்பின் மீதான என் எண்ணங்களை மூன்று தலைப்பின் கீழ் பதிகிறேன்.

ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள்:

மிகச்சிறந்த எழுத்தாளுமைகளுக்கே உரிய குணங்கள் “ஆழம் உணர்தல்” மற்றும் “உணர்தலில் ஆழம்”. எந்தொவொரு உணர்வினையும் மதிப்பீடுகளுக்கு இடம் கொடுக்கும் முன் அதை முழுமையாக உள்வாங்கி எழுத்தில் வெளிக்கொணர்தல்.
அண்ணனுக்கு இவ்வரம் இயல்பாகவே வாய்க்கப்பெற்றுள்ளது என்று உறுதியாக நம்புகிறேன்.

அவரது நினைவுகளைக் கொண்டு அடுக்கிருக்கும் ஒவ்வொரு அத்தியாயமும், மென்மையான இசைப் போல நம்மீது படர்ந்து சூள்கிறது. இலக்கிய உலகில் உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் பேராளுமைகளை அவர்களின் எளிமையான குணாதியங்களை பதிவு செய்து நம் பக்கத்து வீட்டு நண்பர் போல, நம் மனதில் பதிய வைத்து விடுகிறார். இதனால் அந்த மகத்தான மனிதர்களின் எழுத்தின் மீதுள்ள பற்று இன்னும் கூடுகிறது. அவர்களின் படைப்புகளைத் திரும்ப வாசிக்க தூண்டுகிறது.

ஓர் அழகிய சொல்லோவிய உதாரணம்

” பிரபஞ்சனும் அப்படிப்பட்டவர் தான். காற்றாக மாறினாலும், ஊஞ்சல் ஆடவும்.. காபி குடிக்கவும்.. கும்பகோணம் வந்தாலும் வந்துவிடுவார் என நினைத்துக் கொண்டிருக்கும்போதே காற்று மென்மையாக வீசியது..

ஊஞ்சல் மெல்ல அசையத் தொடங்கி இருந்தது.”

அரசியல் கட்டுரைகள்:

“Ethnic nationalism ” என்ற பூர்வக்குடி மக்களின் தேசிய அரசியல் போராட்டங்கள் பன்னெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் உதிரம் வடியும் தொடர் வரலாறு. (முரண்).

முடிவுப்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வின்போது, ஒரு பார்வையாளராக / பங்கு கொண்டவராக இருந்துக் கொண்டு அவருக்கே உண்டான தனித்துவமான எழுத்து நடையில் நம் கண்முன் நிறுத்தி விடுகிறார். இதற்கு அண்ணனின் செவ்விந்திய பூர்வக்குடிகளின் பாடல் மொழிப்பெயர்ப்பு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு
“ஆம்..
நாங்கள் காட்டுமிராண்டிகள்தான்
ஆனால் காடு
எங்களுடையது”

ஆம். நம் தமிழ்தேசிய அரசியலை ஒற்றைக் கட்டுரையில் உருவகித்து விட்டார்.

பொதுக்கட்டுரைகள்:

அண்ணன் , அவரின் பல ரசனைகளை கருப்பொருளாக்கி அதன் கீழ் நினைவலைகளை பதிவு செய்துள்ளார். ஆனால் ஒரு (perfect contextual foundation) , இதற்கான அடி நாதமாய் விளங்குவது அவருக்கு
வாழ்தலில் மீதுள்ள பற்றுதான் என்று நான் புரிந்துக் கொள்கிறேன். அதுவே அவருக்கே உரித்தான அவரின் அரசியல் கருத்தாக்கம். இதை ஒவ்வொரு வாசகருக்கும் தன் எழுத்தின் மூலமாக கடத்திவிட எத்தனிக்கிறார். அதில் வெற்றியும் பெருகிறார்.

எனக்கு வாழ்தலுக்கான பற்றுக் குறையும் நேரத்தில் அண்ணனின் எழுத்துக்கள் அரணாய் அரவணைத்து செல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கட்சி தளத்திற்கு அப்பாற்பட்டு, உங்கள் இலக்கியத்திற்கு ஒரு தொடர் வாசகியாக என்னை மாற்றிய இந்த படைப்பைப் போல், நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். அதை நானும் கொண்டாடவேண்டும்.

உங்கள் படைப்பைப் பற்றிய என் எண்ணங்களையும் பகிர வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்ட அண்ணனுக்கு நன்றிகள் பல.

– சுனந்தா தாமரைச்செல்வன்.

இந்த ஆண்டு நான் படித்த மிகச்சிறந்த புத்தகம் என் அன்பு அண்ணன் Mani Senthil எழுதிய செவ்விந்தியனின் நடனம்.

ஒரு எழுத்தாளனின் வெற்றி என்பது கையில் எடுத்த புத்தகத்தை ஒரே மூச்சில் படிக்க வைப்பது. அது என் அண்ணனுக்கு இயல்பாகவே வாய்க்கப்பெற்றது.

தொகுப்பின் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு உணர்வை தூண்டுகிறது.

குறிப்பாக ஒரு இரவில் எல்லையற்ற விடியல்களில் இளையராஜாவின் சோலை பசுங்கிளியே பாடல் எங்கள் மூவரையும் ஏதோ ஒரு திசையில் இழுத்துக்கொண்டு சென்றதாக அண்ணன் எழுதியிருப்பார் ஆனால் அவருடைய எழுத்தாளுமையால் அங்கே நாளாவதாக நாமும் ஒரு பார்வையாளனாக இடம்பிடித்திருந்தோம்.

செவ்விந்தியனின் நடனத்தில் ஒரு ஆசானாக நமது தோள்களில் கைபோட்டு பல புத்தகங்களையும் பல எழுத்தாளர்களையும், திரைப்படங்களையும் அறிமுகம் செய்துகொண்டே போகிறார். மோக முள் குறித்து ஏற்க்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் அதை படித்தே தீரவேண்டும் என்ற வெறியை. அண்ணன் மணி செந்தில் ஏற்படுத்திவிட்டார்.

அன்பும் நேசிப்பும் அண்ணா.

-கார்த்திக் கணேசன்.
யமுனாவை நானும் தேடி இருக்கேன்,
தங்கை அனிதாவின் கட்டுரையில் கண்ணீர்கள் நிறைய , 
நிறைய அழகை , நிறைய கேள்விகள் , பெரும் மகிழ்ச்சிகள், நிறைய இருக்கிறது முழுமையாக பின்பு எழுதுகிறேன் .. இபோதைக்கு உன் எழுத்திற்கு அன்பு முத்தங்கள் அண்ணா
நம் கும்பகோண நகரத்தை வைத்து ஒரு நாவல் எழுதுங்கள் தி.ஜாவை போல…..
#LOVE _YOU_ ANNA மனைதை உருக்கும் எழுத்து
நிறைய பணிகள் இருக்கிறது உங்களுக்கு தெரியும் நேரில் பார்த்தீர்கள் , ஒரு முழுமையான கட்டுரை விரைவில் எழுதுகிறேன்

அன்பின் ஆழத்திலிருந்து
– தமிழ் சிலம்பரசன்

மீரா-பாக்கியராசனின் மணநாள் வாழ்த்து 27-01-2019

எப்போதும் தன்னை சூழ வரும் வன்ம வெறுப்பின் கழுகுகளை
சட்டென பறந்து பின்மாயும் சிறு ஈசல்களாக மாற்றி ரசிக்கும்
ஒரு விசித்திரக்காரனின் காதற் கதை இது.
————————–—–

எவராலும் வெல்ல முடியாத
அவனது புன்னகைக்குப் பின்னால் ஒரு தேவதையின் காதல் நம்பிக்கையாக மின்னுகிறது.

சுற்றி வீசும் சொற்களின் அவதூற்று சூறைகாற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கும் அவனது அசாத்திய மனத்துணிவு, கனிவு மிக்க அவன் துணையின் தாய்மைக் கரங்களால் தயார் செய்யப்பட்டது.

அவள் அவனை தன் பேரன்பு கவசங்களால் போர்த்திக் களத்திற்கு
அனுப்புகிறாள்.

அவனோ தன்னை நோக்கி வரும் பொய்மையின் அம்புகளை தன் சிறு
புன்னகையால் தகர்த்து விடுகிறான்‌.

அவனது மகத்தான செயல்களுக்கும்,வசீகரப் புன்னகைகளுக்கும் பின்னால் அந்த மாதேவியின் தீரா உடனிருப்பு துணையெழுத்தாக தொடர்கிறது..

அந்த உயிர் எழுத்தின் வலிமையில் தான் அனைத்திற்கும் முகம் கொடுக்கிற ஆயுத எழுத்தாக அவன் மாறி நிற்கிறான்.

…….
…….
…….
எகிறி வரும் எல்லா வித சொற்களுக்கும் பதிலாய் பத்துக்கு நூறு மடங்காய் எதிர் வினை ஆற்றி விடலாம் தான்.. ஆனாலும் ஒரு நிதானம். ஒரு கண நேர அமைதி. பிறகு ஒரு புன்னகையோடு கிளம்பி விடுகிற எங்களது அசாத்தியங்களுக்கு பின்னால் தகர்க்கவே முடியாத ஆதி நேசப் பசுங் கொடிகள் நினைவுகளாய் போர்த்தி இருக்கிற ஒரு வனக் கோட்டை இருக்கிறது.

அந்த அரண்மனையின் மாதரசி, எம் சோழர்க்குல இளவரசி, என் தங்கை Meera Packiarajan க்கும், என் மைத்துனர் தலPackiarajan Sethuramalingam க்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

 — with Meera Packiarajan.

அக்காளின் எலும்புகள்.. -யாவருக்குமான கள் பிரதி.

 

எனக்கு முன்னால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கின்ற அந்தப் புத்தகம் மெதுவாக அசைகிறது. நான் தலை சாய்த்து படுத்திருந்த மகிழம்பூ மரத்தடியில் பூக்கள் அதிகம் உதிர தொடங்குகின்றன. உச்சி வேளை வெயில் பொழுதில் வயற்க் காட்டில் யாரும் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு அசைந்து கொண்டிருந்த அந்தப் புத்தகத்தையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கவிழ்த்து வைக்கப்பட்ட அந்தப் புத்தகத்திலிருந்து அக்காக்கள் சொற்களாக கசிந்துக் கொண்டிருந்தார்கள். கசிந்த சொற்கள் உதிரா முதிர்எலுமிச்சை பழத்தின் வாசனையை காற்றில் பரப்பிக் கொண்டு இருந்தன. என் விழிகளில் நீலம் பாவியதை என்னால் உணர முடிந்தது.
அந்த புத்தகத்தை வாங்கி வந்த நாளில் இருந்து இதே பாடுதான். நள்ளிரவில் வாசித்துவிட்டு உறங்கத் தொடங்கும்போது தலையணைக்கு அருகில் யாரோ ஒரு அக்கா குத்துக்காலிட்டு அழுவது போன்ற உணர்வு. பொழுது சாயும் வேளையில் மாடியில் தன்னந்தனியாக சூரிய மறைவை கண்டு கொண்டிருக்கும் போது பின்னால் இருக்கும் தென்னை மர சலசலப்பில் யாரோ ஒரு அக்கா அணத்துவது போன்ற ஒரு சலசலப்பு.

அந்த நூலில் வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் அக்காக்கள் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். பல அக்காக்கள். வெவ்வேறு கதைகள் வெவ்வேறு சித்திரங்கள். அந்த அக்காக்களை நமது வீடுகளில் வீதிகளில் என எளிதில் சந்தித்து விடலாம். கழுத்தறுக்கப்பட்ட ஏதோவொரு அக்காதான் குலசாமியாக, மரப்பாச்சி பொம்மையாக, நினைவு பெயர்களாக, சுமைதாங்கி கற்களாக,நாள்களில் வணங்கும் வெவ்வேறு காரணங்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள்.

அக்காக்கள் மறைக்கப்பட்டதற்கும்,
மறக்கடிக்கப்பட்டதற்கும் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. அவர்கள் கழுத்தறுக்கப்பட்டதற்கான காரணங்களாக சாதியோ,வர்க்கமோ இன்னும் பிறவோ இருக்கக்கூடும். ஆனாலும் யாரோ ஒருவரின் நினைவில் சட்டென உதிர்ந்துவிடும் ஒற்றை கண்ணீர் துளியாகத்தான் வெய்யிலின் அக்காக்கள் உறைந்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம்/ சிலவரிகள்/ ஒரு வாழ்க்கையை ஒரு சித்திரமாக நம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி வித்தை காட்டியிருக்கிறார் வெய்யில். எளிய சொற்களில் சட்டென கடக்க முடியாத திடுக்கிடல்களை நிகழ்த்தி விட்டு அக்காவின் இன்னொரு உலகிற்குள் சென்று புதைந்திருக்கிற அக்காக்களின் எலும்புகளில் ரத்தவாடை தேடி அலையும் சிற்றெறும்பாய் அலைந்துக் கொண்டி இருக்கிறார்.

ஒரு கவிதை..

“அக்கா ஆகாத வயதில் வயசுக்கு வந்தவள்.
ஏவல் கைகூடியவள்
சிறு செருமலில் பனம்பழங்களை விழச் செய்கிறவள்
குளவிக் கூட்டு மண்ணை விரும்பி உண்பவள்
செய்வினை செய்து கழித்த கண்ணாடியில்
முகம் பார்த்தவளை
பின்பு யாரும் பார்க்கவே இல்லை.
தவச நாளில் வைக்கும் தளுவை
பொங்கி வழியும்போது
குலவைச் சத்தத்துக்கு நடுவே அப்பா ரகசியமாய் அழுவார்.”

இப்பிரதியில் வருகின்ற அக்கா யாரையும் எவராலும் எதனாலும் கட்டுப்படுத்த முடியாது. திசைவழி பேதயறியா அவள் சன்னதம் வர வைக்கிற அம்மனாக கம்பீரமாக நம் முன்னால் அமர்ந்து இருக்கிறாள். நம் குற்ற உணர்வின் மீது நமது வியப்பின் மீது கட்டப்பட்டு இருக்கிற பெரும்அச்சக்கோட்டையின் மகாராணியாக வீற்றிருக்கிறாள்.

வரலாற்றின் வீதியெங்கும் வெறித்த பார்வையோடு பாம்பின் நாக்கு போல பிளவு உற்ற கழுத்து வெட்டு காயத் தழும்போடு உதிர கவிச்சை வாசனை உலராமல் அக்காக்கள் பல கதைகளாக,பல நினைவுகளாக கிடக்கிறார்கள் ‌.

சட்டென வரும் ஒரு நேசத்தில் அவர்கள் உயிர் கொள்கிறார்கள். எதிரே வரும் சிறுமியின் முகத்தில் அவர்கள் வெட்க நிழலாய் மஞ்சள் பூசுகிறார்கள்.

இன்னொரு கவிதை

“மண முறிவுற்ற அக்கா குறிஞ்சிப் பூக்களை காண விரும்பினாள்; சூடவும்.
மிகத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டோம்.
நள்ளென் யாமமே தான்
துயில் கலைந்திடாது மெல்ல அரிந்து அவள் தலையை எடுத்துச் சென்றோம் அங்கே நிலைத்த விழிகளில் நீலம் திரும்புவதை புகைபிடித்தபடி அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார்.”

அக்காக்களுக்கு கால வேறுபாடு இல்லை. சங்ககாலம் தொட்டு சாதி ஆணவக் காலம் வரை கழுத்தறுப்பட்ட அக்காக்களின் பெருமூச்சுதான் இந்த நிலப்பரப்பு முழுக்க ஊழி காற்றாய் அடித்துக் கொண்டிருக்கிறது.

அக்கா வெறும் நினைவாய் மட்டும்தான் நம்முள் தேங்கி இருக்கிறாளா.. சொல் வழி கதையாக மிஞ்சி இருக்கிறாளா என்றால்.. நிகழ்காலத்து அக்காவிற்கும் கவிதை இருக்கிறது. அதில் ஒன்று.

“ஆறு வருஷமாகிறது
புழங்காமல் பரணில் கிடந்த பித்தளைக்குடத்தை விளக்க
எடுத்துச் செல்கிறாள் அக்கா.
வம்படியாக உச்சிக்கிளையேறி
புளியம்பழங்களை பறித்துக் கொடுக்கிறார் அவர்.
ஆற்று நீரில் புளி கொண்டு அவள் விளக்குகிற குடத்தின் பொன்மினுக்கத்தில் சூரியன் மங்குகிறது.
குடவாய் நீர் வாங்கும் ஒலியில் ஊர் திகைக்கிறது”

அக்கா வெறும் பாடல் மட்டுமல்ல வெய்யில் சொல்வதுபோல அவளே வளரி சீவிய பாளையிலிருந்து தீராமல் சொட்டுகிற யாவருக்குமான கள்.

.

கண்மூடி படுத்து இருக்கின்ற என் இமைகளில் ஏதேதோ நினைவு வந்து அழுத்த.. அப்படியே தூங்கிப் போகிறேன். விழித்துப் பார்க்கையில் காற்றின் விரல்கள் அக்காளின் எலும்புகளைப் படித்துக் கொண்டிருக்கின்றன.
உள்ளங்காலில் பார்த்தால்.. கட்டெறும்பு கடித்தத் தடங்கள்.

அக்காக்களின் நினைவினால் / வெய்யில் மொழி தந்த வலியினால் மனம் பிசகி காலம் நழுவிப் போன அக்கணத்தில் தான்.

எனக்கு கத்தி அழ வேண்டும்போல இருந்தது.

அந்தப் புத்தகத்தை அப்படியே மூடி வைத்துவிட்டு திரும்பி பார்க்காமல் வரப்பு வழியே நான் வீட்டிற்கு நடக்கத் தொடங்கினேன்.

.

அக்காளின் எலும்புகள்/ கவிதைகள்/ ஆசிரியர் வெயில்/ கொம்பு வெளியீடு/ விலை 75.

செவ்விந்தியனின் நடனம் -புத்தக வெளியீட்டு விழா- 12-01-2019

 

 

 

 

நான் எழுதி களம் வெளியிட்டிருக்கிற “செவ்விந்தியனின் நடனம்” என்கின்ற நினைவோடை கட்டுரைத் தொகுதியினை எனது பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட.. களம் பதிப்பகத்தின் சார்பாக எனது மைத்துனர் பாக்கியராசன் சே அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

எழுத்துலகில் எனக்கு ஆசானாக இருக்கிற திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எனது நூல் ஒன்று வெளியிடப்பட்டிருப்பது எனது வாழ்நாள் பெருமை.

விடுதலைக்கு விலங்கு, சீமான் உயர்த்தும் கரங்களில் ஒளிரும் வெளிச்சம் என்கின்ற எனது நூல் வரிசையில்” செவ்விந்தியனின் நடனம்” மூன்றாவது நூல்.

நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற மறைந்திருக்கிற பல ஆளுமைகளின் அபூர்வ தருணங்களை, எளிய மனிதர்களின் கனிவினை, முரண்பாடுகளை, பற்றிப் பேசுகிற உண்மை மனிதர்களைப் பற்றிய நினைவோடை கட்டுரைத் தொகுப்பு இது.

இந்த நூல் எழுதப்பட்ட காலங்களில்..என்னைவிட இந்த நூல் வந்தே ஆகவேண்டும் என்று உழைத்த எனது எனது தம்பிகள் சிவராசன்,துருவன் செல்வமணி சோமு, துரைமுருகன், சேகர், லிங்க துரை, அஸ்வின் பத்மநாபன், இமயவரம்பன் ஆகியோருக்கு நன்றி.

இந்த நூல் வெளியிடப்படுவது குறித்து என்னை விட மிகவும் பதட்டமாகவும் ஆர்வமாகவும் இருந்த என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்தும் அர்ப்பணம்.

இதை படப்பிடிப்பு செய்த சாட்டை வலையொளி குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இதில் மிகுந்த ஆர்வம் காட்டிய எனது மைத்துனர் வழக்கறிஞர் பிரபு சேதுராமலிங்கம் அவர்களுக்கும், களம் வெளியீட்டகத்தின் தம்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

வேறென்ன..

உங்கள் அனைவரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.

படித்து விட்டு சொல்லுங்கள்.

அரங்கு எண் 333
சென்னை 42 ஆவது புத்தகக் கண்காட்சி
நந்தனம்.

Page 3 of 4

Powered by WordPress & Theme by Anders Norén