????
“சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்தன.
உண்மையில் அது ஆபத்தான முயற்சி தான். அதுவும் ஒரு வெகுஜன அரசியல் கட்சி தன் கலை பண்பாட்டு பாசறை மூலமாக தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக சங்கப் பாடல்கள் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் பாடல்களை வெகுமக்கள் திரள் முன் மேடையேற்றம் செய்கிற நிகழ்ச்சி அது. ஓட்டு அரசியலுக்கு இது எந்த விதத்தில் கை கொடுக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே அரசியல் பார்வையாளர்களுக்கு எழ வைக்கிற முயற்சி அது. தன் கட்சி கொடிகள் சின்னங்கள் லட்சணைகள் எதுவும் இல்லாமல் கவனமாக அவைகள் தவிர்க்கப்பட்டு, “மீண்டெழும் தமிழ் மொழி ” என்கின்ற புனித லட்சியத்திற்காக தன்னலம் பார்க்காமல் நாம் தமிழர் கட்சி செய்திருக்கின்ற இந்த வரலாற்றுப் பெரு நிகழ்வு தமிழர் வரலாற்றில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கிற தொடக்கப் புள்ளியாக கொள்ளலாம்.
இருந்தாலும் இந்த நிகழ்ச்சி எவ்வாறு வெற்றி பெறப் போகிறது என்கிற கவலையும், கூட்ட ஒழுங்கு பற்றிய அச்சமும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலருக்கும் அச்சமயத்தில் இருந்தது.
ஆனால் இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சி குறித்து மகத்தான நம்பிக்கை கொண்டிருந்து உலகத் தமிழர்களை அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் பணியில் அண்ணன் சீமான் தீவிரமாக இருந்தார். கட்சி பொறுப்பாளர்களை அழைக்கும் போது கூட “இது மிக மிக முக்கியமான ஒரு நிகழ்வு. வரலாற்றில் முதல்முறையாக, தவற விட்டு விடாதே..” என உரிமையோடும், அதே நேரத்தில் கொஞ்சம் கண்டிப்போடும் அழைத்த அந்த அழைப்பு, ஆயிரக்கணக்கான தமிழர்களை 17-09-2022 சனிக்கிழமை மாலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் திரட்டியது.
அந்த அரங்கில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக கூடியிருந்த எல்லோர் மனதிலும் இருந்த கேள்வி ” அடுத்து வருகிற சில மணி நேரங்களை எப்படி கடப்பது …”
ஏனென்றால் இது போன்ற பல நிகழ்ச்சிகளை அவர்கள் ஏற்கனவே தங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார்கள். இது போன்ற இசை நிகழ்ச்சியில் திரைப்பட பாடல்களுக்கே உரிய வசீகரமோ, துள்ளல் இசையோ போன்ற கொண்டாட்ட அம்சங்கள் இடம்பெறாது என்பது இதுவரை
நிகழ்ந்த நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் பெற்றிருந்த வாழ்வியல் பாடம். ஒரு வகுப்பறையில் நடக்கும் தமிழ் வகுப்பில் செய்யுள் பாடப்பகுதி நடத்தப்படும் போது எது போன்ற அனுபவம் (?) நமக்கு இதுவரை கிடைத்ததோ அதே அனுபவத்தை இந்த நிகழ்ச்சியும் வழங்கி விடுமோ என்கிற அச்சம் அங்கே கூடியவர்களுக்கு இருந்தது.
ஆனாலும் அண்ணன் சீமான் அழைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் அவர் பேசுவதாகவும் சொல்லி இருக்கிறார். எனவே அந்த நெருப்புத் தமிழை கேட்பதற்காக வேணும் நாம் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம் என அவரவருக்கு ஒவ்வொரு சமாதானத்தை உள்ளுக்குள் உண்டாக்கி இருந்தார்கள்.
அந்த அரங்கில் அமைக்கப்பட்டு இந்த மேடை இந்த கணக்குகளை எல்லாம் தாண்டி பார்த்த நொடியில் ஆர்வத்தை தூண்டக்கூடிய பிரம்மாண்ட ஒழுங்குகளை கொண்டிருந்தது.
மேடையில் ஆபிரகாம் பண்டிதர் உள்ளிட்ட தமிழிசை மூத்தோர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்த முறையும், ஒலி ஒளி அமைக்கப்பட்டிருந்த ஒழுங்கும் ஒரு பிரம்மாண்டமான இசை விருந்தை எதிர்கொள்ள பார்வையாளர்களை தயார் படுத்தின.
சற்றே இருளும், குளிரூட்டி குளிரும் நிலவிய அந்த அரங்கில் சில முணுமுணுப்புகளை தாண்டி பெரிய ஓசைகள் இல்லை. மேடையிலும் யாரும் இல்லை.
எல்லோருக்கும் இனம் புரியாத அமைதி உள்ளுக்குள் ஊற, தயாரானது அரங்கம்.
சரியாக ஆறு மணிக்கு அண்ணன் சீமான் முகம் முழுக்க பெருமித புன்னகையோடு, அரங்கத்திற்குள் வரவே, உற்சாக குரல்கள் விண்ணை தொட்டன. அவரைத் தொடர்ந்து பட்டாடையோடு உள்ளே வந்தார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.
30க்கும் மேற்பட்ட இளைஞர்களும் இளம்பெண்களும் மேடையில் அடுக்கடுக்கான வரிசையில் மிக ஒழுங்காய் நிற்க மேடை முன்புறம் அமைக்கப்பட்ட சிறு மேடையில் வந்து நின்று நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார் ஜேம்ஸ் வசந்தன்.
முதலில் இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பார்வையாளர்கள் என்கிற இருவர்களுக்குமான இடைவெளி இருக்கக் கூடாது, இந்த நிகழ்ச்சியில் அனைவருமே பங்கேற்பாளர்கள் என்பதை முத்தாய்ப்பாக அறிவித்தார் அவர்.
தன் உரையின் தொடக்கத்திலேயே
பார்வையாளர்கள் கொண்டிருந்த நிகழ்வு குறித்தான அச்சங்களை
தன் புன்னகை மொழியால் அடித்து நொறுக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும் , தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் அவர் ஆற்றிய சிறு உரை அந்த நிகழ்ச்சி எப்படி அமையப் போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
முதலில் “திருக்குறளின் கடவுள் வாழ்த்து” அதிகாரம்.
அரங்கமே அமைதியானது. மேடையில் நின்றிருந்தவர்களின் சேர்ந்திசை குரல் மெதுவாக தொடங்கியவுடன், ஒரு பன்னாட்டு இசை நிகழ்ச்சிக்கான நேர்த்தியை நம்மால் உணர முடிந்தது.
“அகர முதல” என தொடங்கிய போது அருகே வைக்கப்பட்டிருந்த திரைகளில் வரிகளும் வரிகளுக்கான விளக்கமும் தோன்றத் தொடங்க, நவீன இசையும் இணைந்து கொள்ள கண்ணுக்கும் காதுகளுக்கும் பெரும் விருந்தை அந்த நிகழ்ச்சி படைக்க தொடங்கியது. அடுத்தது புறநானூறு , குறுந்தொகை, பாரதிதாசன் பாரதியார் பாடல்கள், பாடல்கள் காளமேகப்புலவரின் கவிதைகள்,மீனவர் பாடல் என அடுத்தடுத்த பாடல்கள், அதற்கான முன்னுரைகள் என நிகழ்ச்சிக் களைக் கட்டியது.
பாரி மகளிர் பற்றி சங்க கால கவிஞர் கபிலர் பாடிய பாடலைக் கேட்கும் போது வேள்பாரி உருவம் திரையில் தோன்ற, நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களே தோன்றுவதாக உணர்ந்து அரங்கில் உள்ளோர் விழி நிறைந்து உறைந்தனர்.
அதேபோல் தமிழுக்கு அமுதென்று பேர் என்கிற பாவேந்தர் பாரதிதாசன் பாடலின் வரிகளும் இசையும் அந்த அரங்கில் உள்ளவரை சொக்கி இழுத்து மயக்கி போட்டன என்றால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற துள்ளல் பாடல் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைவரையும் எழுந்து ஆட வைத்தது. அண்ணன் சீமான் உள்ளிட்ட அந்த அரங்கில் உள்ளோர் அனைவரும் எழுந்து ஆட
உச்சகட்ட கொண்டாட்ட தருணத்தை பார்வையாளர்கள் அனுபவித்தார்கள்.
“விடிவெள்ளி தானே நம் விளக்கு.
..” என்கின்ற மீனவர் பாடல் அரங்கில் உள்ளோர் அனைவரையும் ஐலேசா போட வைத்தது.
ஈடு இணையற்ற தொழில்நுட்ப மேன்மையோடு அமைக்கப்பட்ட அரங்கு, துல்லியமான ஒலி ஒளி வசதிகள் என பிரமிக்க வைத்த 90 நிமிட அந்த நிகழ்ச்சி , தமிழரின் காதல், வீரம், அறம், தொன்மை என அனைத்து பக்கங்களையும் தொட்டு காட்டி பார்க்கும் அனைவரையும் பரவசப்படுத்தியது. “யாயும் யாயும்
யாரோ யாராகியோரோ..” என்கிற சங்க கால காதற் பாடல் இசைக்கப்படும்போது முழுக்க தோன்றிய திரை முழுக்க காதற் சின்ன இதயங்கள் பேரழகு வடிவமைப்பால் நம்மை வெகுவாக கவர்ந்தன.
எல்லா காலத்திலும் எல்லா இசை வடிவங்களிலும் ஒரு மொழி பொருந்துகிறது என்றால் அந்த மொழி எப்படிப்பட்ட வடிவம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை தன் இசை மூலம் ஜேம்ஸ் வசந்தன் நுட்பமாக விளக்க விளக்க அரங்கில் உள்ளோரெல்லாம் தன்னை மறந்து தன் இனத்தையும், தன் மொழியையும் நினைத்து பூரித்து நின்றார்கள்.
90 நிமிட வெகு அற்புதமான நிகழ்ச்சிக்குப் பிறகு, வாழ்த்துரை வழங்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் பலத்த வாழ்த்தொலிகளுக்கு மத்தியில் மேடை ஏறினார்.
மிகுந்த உற்சாகமும் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்த மனிதராக காணப்பட்ட அண்ணன் சீமான் கஎப்படி இசை நம் மொழியின் உயிராக இருக்கிறது என்பதை இலக்கிய சான்றுகளோடு உணர்வுபூர்வமாக உரையாற்றினார். ஓசைக்கும் இசைக்குமான வேறுபாடை அவர் விவரித்த முறை அவரது ஆழ்ந்த பேரறிவை, வாசிப்பை வெளிப்படுத்தியது. கோவில்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதன் கோபத்தையும் தன் உரையில் வெளிப்படுத்திய அவர், இப்படிப்பட்ட புலவர்களை உருவாக்கிய ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள் என வியப்பாக தெரிவித்த போது அவர் அடைந்த அதே வியப்பு நிகழ்ச்சியை கேட்ட பார்த்த அனைவரும் அடைந்தார்கள்.
ஆழமான அதே சமயத்தில் அழகான மொழியோடு இசை நிறைந்த வடிவத்தோடு தன் உரையை ஆற்றி அமர்ந்த அண்ணன் சீமான் வாழ்த்துரையில் ஒரு துளி அளவு கூட சமகால அரசியல் குறித்து பேசவில்லை என்பது மிக மிக குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் அது தமிழுக்கான மேடை. தமிழ் இசைக்காண மேடை. அதில் அரசியலை கலக்க வேண்டாம் என்கிற அவரது உறுதி தமிழ் நிலத்தில் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் வாய்த்திராத அற்புத உளவியல்.
அண்ணன் சீமான் வாழ்த்துரைக்குப் பிறகு ஏற்கனவே இசை நிகழ்ச்சியில் பாடப்பட்ட பாடல்களில் சிறந்தவை மட்டும் பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் இசைக்கப்பட்ட போது அரங்கம் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றது.
வாழ்க்கையில் இது போன்ற அனுபவத்தை இதுவரை அனுபவித்ததில்லை என்பதை நிகழ்ச்சி முடிந்த பிறகு பார்வையாளர்களின் பரவச முகங்களே அடையாளங்களாய் திகழ்ந்தன.
..
ஒரு மொழி அதுவும் உலகத்தின் மூத்த தொன்மையான இன்றளவும் பேச்சு வழக்கில் எழுத்து வழக்கில் இருக்கின்ற செவ்வியல் மொழி இத்தனை காலங்கள் கடந்த பிறகும், இத்தனை வரலாற்றுப் பக்கங்கள் நகர்ந்த பிறகும் உயிர்போடு இருந்து நவீன கால இசை திறப்புகளிலும் பொருந்துகிறது என்று சொன்னால், தமிழ் மொழி போல் வேறு எந்த மொழியும் இல்லை என்பதை தமிழர் பெருமிதம் கொள்ளலாம் என்பதற்கு சான்று இந்த இசை நிகழ்ச்சி.
குறிப்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை குழுவினரின் அளவற்ற உழைப்பின் மூலம் பயிற்சி மூலம் அடைந்த ஒழுங்கு தான் இந்த நிகழ்ச்சி அடைந்திருக்கும் வெற்றியின் மூலதனம். ஒரே நேரத்தில் காணொலி மூலமாகவும் இசையொலி மூலமாகவும் நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்களும் இளம் பெண்களும் அளவற்ற திறமை கொண்டவர்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல், 90 நிமிட நிகழ்ச்சியில் ஒரு நொடியை கூட வீணாக்காமல் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தையும் , தமிழ்மொழி உணர்ச்சியையும் வழங்கி சிறப்பித்தார்கள்.
ஓட்டு அரசியலில் வெகுஜன கட்சியாக செயல்படும் நாம் தமிழர் கட்சி என்கிற அமைப்பு சங்க தமிழோசை என்கிற மொழி மீட்பு இசை நிகழ்ச்சியை நடத்துவதன் மூலமாக வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, தமிழர்கள் தங்களது பண்பாட்டு தளத்தில் மொழி மீட்பு களத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற உணர்ச்சியை உலகமெங்கும் பரந்து வாழக்கூடிய தமிழர்களுக்கு ஏற்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டது.
நிகழ்ச்சி மேடையிலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் சொன்னது போல இந்த தமிழோசை ஒவ்வொரு ஊரிலும் உலகில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கங்கெல்லாம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தினார்.
மெய் சிலிர்க்க நடந்த இந்த வரலாற்று பெரு நிகழ்வு பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக ஆழமானது.
இதே நிகழ்ச்சி உலகமெங்கும் நடக்கட்டும்.
உலகத் தமிழர் உள்ளத்தில் தமிழ் உணர்ச்சி மலரட்டும்.
“உலகம் எங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை.”
நன்றி : வேல் வீச்சு இதழுக்கான அட்டைப்பட கட்டுரை.