கடந்த 2009 மே மாதத்தில் தமிழ் ஈழத்தில் நிகழ்ந்த தமிழின படுகொலை தாயக தமிழகத்தில் அரசியல் சிந்தனைப் போக்குகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை திராவிடம், இந்திய தேசியம், சாதி மத பற்று போன்ற பல்வேறு மயக்கங்களில் சிக்குண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாயக தமிழர்கள் தங்கள் முகத்தில் மீது பட்டுத் தெரித்த தங்கள் தொப்புள் கொடி உறவுகளின் உதிரத் துளிகளால் விழிப்புற்றனர்.

அதுவரை தமிழக அரசியல் பரப்பில் அதிகம் பேசப்படாத,அரங்குகளில் மட்டுமே பேசப்பட்டு வந்த தேசியம்/தேசிய இனம் போன்ற அரசியல் சொல்லாடல்கள் வெகுஜன பரப்பில் விவாதமாகி எழுந்தன. தமிழர் என்ற இனம் தோன்றி பன்னெடுங்காலமாக ஆகிவிட்ட கூட இது ஒரு தேசிய இனம் என்கின்ற அடிப்படை சிந்தனை தாயக தமிழ் மண்ணில் எழுவதற்கு ஒரு இனப்படுகொலை நிகழ்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்து காரணமாகி இருக்கிறார்கள். பொதுப் புத்தியில் நாமெல்லாம் இந்தியர்கள்/ நாமெல்லாம் திராவிடர்கள்/ நாமெல்லாம் இந்த மதத்தினர்/ நாமெல்லாம் இந்த சாதியினர் என்று பல்வேறு காரணிகள் அவரவர் அறிவுக்கு ஏற்றது போல உறைந்து கிடக்கின்றன. இதிலிருந்து தெளிவு பெறுவதற்கு, ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த பிறகும் கூட பல்வேறு மயக்கங்களில் இருந்து ஒரு இனம் மீண்டு வருவதற்கு அரசியல் விடுதலை என்பது மிக மிக முக்கியமானது. குறிப்பாக இன விடுதலை அரசியல் என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் உச்சபட்ச லட்சியமாக இருக்கிறது.

எனவே ஒரு இனம் தன்னை தகமைத்துக்கொள்ள சமூக அரசியல் சிந்தனைகள் காரணமாக அமைகின்றன. ஏன் எந்த திராவிட கட்சியும், எந்த தேசிய கட்சியும் தமிழர் என்கின்ற இனம் ஒரு தேசியம் அல்லது ஒரு தேசிய இனம் என வெளிப்படுத்த தயங்குகின்றன என்பதை குறித்து தன் கண் முன்னால் நிகழ்ந்துவிட்ட இனப்படுகொலைக்கு பிறகாவது சிந்திக்க வேண்டிய நெருக்கடியில் தமிழர் என்கின்ற தேசிய இனம் இருக்கிறது.

முதலில் தேசிய இனம் என்றால் என்ன, தேசியம் என்றால் என்ன போன்ற அடிப்படைகளை புரிந்து கொண்டால் தான் கடந்த 2009க்கு பிறகு வெகுஜன அரசியலாக மாறி வருகிற ” தமிழ்த்தேசியம்” என்கிற மண்ணின் பூர்வ குடி மக்களுக்கான உரிமை அரசியல் இன்னும் கூர்மை பெறும். உலகத்தில் விடுதலை அடைந்த எத்தனையோ தேசிய இனங்களை உற்றுப் பார்க்கும்போது அவற்றின் மீள் எழுச்சியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. தன்னை ஒரு தேசிய இனமாக கூட உணராத அல்லது அறியாத ஒரு இனம் எப்படி விடுதலை பெறும் என்கிற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்ற காலகட்டம் இது.

குறிப்பாக தமிழ்த் தேசிய சிந்தனைகள் கூர்மை அடைந்து வருகிற சமகாலத்தில் அரசியல் பண்பாட்டு சூழலியல் புள்ளிகளில் நின்று மண்ணின் பூர்வ குடி மக்களுக்கான அரசியலை பேசும் இளம் தமிழ்த்தேசியர்கள் மிகச் சிறந்த அறிவுத்தெளிவோடு அரசியல் களத்தில் நிற்பதற்கான தகுதியை உருவாக்குகின்ற ஒரு மிகச்சிறந்த நூல்தான் “இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்” .

இந்த நூலை எழுதியவர் சிந்தனை செம்மல் வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் அவர்கள். 1997 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூல்களுக்கான முதல் பரிசை இந்த நூல் வென்று உள்ளது. மறைந்த வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய “மலர்க மாநில சுயாட்சி” என்கின்ற நூலும் புகழ்பெற்றது.

இந்த நூல் இந்தியாவில் தேசிய இனங்கள், தமிழ்த் தேசியம் தீர்வுகள் என்கின்ற மூன்று பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

நூலின் தொடக்கத்தில் இந்தியாவில் தேசிய இனங்கள் என்ற பகுதியில் தேசியம் மற்றும் தேசிய இனம் என்றால் என்ன, இந்த சொற்களுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் எப்படிப்பட்டது என்கின்ற விரிவான ஆய்வை ஆனந்தன் முன் வைக்கிறார். குறிப்பாக மொழி வழி தேசியத்தின் எதிர் நிலைகளாக தோன்றியுள்ள மத வழி தேசியங்கள், சாதிய முரண்பாடுகள் குறித்தும் இந்த நூல் விரிவாக ஆய்வு செய்துள்ளது. தேசிய இனங்களின் உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு பறிக்கிறது என்பதை சட்ட பிரிவுகளின் வாயிலாக இந்த நூல் நிறுவியுள்ளது. இந்தியாவில் இருக்கின்ற பிற தேசிய இனங்களின் தேசிய இனச் சிக்கல்கள் குறித்தும் இந்த நூல் விரிவாக ஆய்வு செய்கிறது.

இரண்டாம் பகுதியான தமிழ்த் தேசியம் என்ற பகுதியில் தமிழர் வரலாற்றில் எழுந்த சாதி சமய பிளவுகள், தமிழ் இலக்கியத்தில் தமிழ் இசையில் தென்பட்ட தமிழ்த் தேசிய உணர்ச்சிகள், தமிழ் தேசியம் உருவாகாத வரலாற்றுப் பின்னணி போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய சிந்தனைக்கு காரணமாக அமைந்த பெருமக்களையும் இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதியான தீர்வுகள் பகுதியில் பெரியாரியமே உரிய தீர்வு என நூலாசிரியர் முன்வைப்பது நவீன தமிழ் தேசிய மறுமலர்ச்சி சிந்தனையில் முறியடிக்கப்பட்ட ஒன்று. ஏனெனில் தேசியம் தேசம் போன்ற சிந்தனைகளை அடிப்படையிலிருந்தே மறுத்தவர் பெரியார் என்பதனால் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு பெரியார் சிந்தனைகள் ஒருபோதும் வழி வகுக்காது என்பதுதான் வரலாறு தந்த பாடத்திலும், பட்டறிவிலும், நாம் கண்டடைந்த தீர்வு.

தேசிய இனங்களின் உரிமையில் மார்க்சியம் கொண்டிருக்கின்ற முரண்பாடு குறித்து சில அடிப்படை செய்திகளை இந்த நூல் மூலம் நாம் அறியலாம். தேசிய இன உரிமைகளை அடைய தாயக தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு தேவை சுயநிர்ணய உரிமையா, முழு தன்னாட்சியா, தனி நாடா, என்பதற்கான பல விவாத பரப்புகளையும் இந்த நூல் உள்ளடக்கி தனது அடர்த்தியை பெருக்கியுள்ளது.

இந்த நூல் எழுதப்பட்ட சூழலில் நிலவிய மற்ற சிந்தனை போக்குகளை மறுதலித்த பெரியாரிய ஆதிக்கம், திராவிட கட்சிகளின் அதிகாரம் மற்றும் மக்களின் பொது மனநிலை சார்ந்து இந்த நூல் தயாரிக்கப்பட்டிருப்பது இந்த நூலில் காணப்படும் முரண்பாட்டு புள்ளிகள்.

அதையெல்லாம் தாண்டி இந்திய பெருநிலத்தில் ஒரு இனம் ஒரு தேசிய இனமாக மாறுவதற்கான அவசியத்தையும், அதற்கான சிந்தனைப் போக்கையும் இந்த நூல் தருகின்ற காரணத்தினால் அவசியம் இளம் தமிழ்த் தேசியர் கற்றுத் தேற வேண்டிய மிக முக்கியமான நூலாக இந்த நூல் அமைகிறது.

“இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்”

சிந்தனைச் செம்மல் கு.ச‌. ஆனந்தன்/600 பக்கங்கள்/ தங்கம் பதிப்பகம் ,கோயம்புத்தூர். அலைபேசி எண் 95 780 04698.

விலை ரூ. 650/-