காதல் நாள்

என்னை கவருவதில்லை.

ஏனெனில்

நாள் பார்த்து

காதல் வர

காதல் ஒன்றும்

அமாவாசை

கிருத்திகை அல்ல.

தவிர..

நாள் பார்த்து

காதலிப்பவர்

என்று இங்கே

யாரும் இல்லை.

தினந்தோறும்

பருகும் நீர் போல..

கணந்தோறும்

இதயங்களால்

காதல் பருகப்பட்டுக்

கொண்டே இருக்கிறது.

❤️

காதல் நாட்களில்

வாழ்த்து அட்டைகள்

தேடுவோர் முகத்தில்

உலகத்திலேயே

சிறந்த ஒன்றை

தேர்வு செய்ய வேண்டும்

என்கின்ற தவிப்பு

அந்த வாழ்த்து அட்டைகளை

விட அழகு.

நீங்கள் வாங்கும்

பரிசுகளை விட

அந்த பரிசுகளுக்காக

நீங்கள் செலவு செய்யும்

நேரம், அலைச்சல்,

அதில் காட்டும் முனைப்பு

இவைகள்தான் அவர்களால் காதலிக்கப்படுகிறது.

❤️

என்றோ

உங்கள் காதலியோடு

அமர்ந்து

பேசிக் கொண்டிருந்த

உணவகத்தை

பூங்காக்களை

கடற்கரையை தற்போது

உங்கள் மனைவியோடு

கடப்பது தான் இருப்பதிலேயே

கொடுமையான பயணம்.

❤️

நினைவுகளில்

என்றும் நீ இருக்கிறாய்

என்று அவரவரும்

அவரவர் காதல்களை

இது போன்ற கவிதைகளை

படிக்கும் போது

புன்னகைப்பதன் மூலமாக

அங்கீகரிக்கிறோம்.

❤️

தப்பித்தவறி

மகளிடமோ மகனிடமோ

தன் காதலியின் அல்லது

காதலனின் சாயல்களை

ஏதோ ஒரு தருணங்களில்

தரிசிக்க நேருவது

நிகழ்ந்துவிட்ட துயரில்

எஞ்சுகின்ற கடைசிக் கருணை.

❤️

நீண்ட நாளுக்குப் பிறகு

சொந்த ஊருக்கு

வருகிறவர்..

அப்போது

இங்கு ஒரு கடை இருந்ததே

இப்போது அது எங்கே

எனக் கேள்வி எழுப்பும்போது

சற்றே ஞாபகங்களை

கொஞ்சம் கீறி விடுங்கள்.

நினைவின் குருதியோடு

ஒரு காதல் கதை

வழியத் தொடங்கும்.

❤️

மதுக்கூடங்களில்

காதலியை திட்டுவோரை

கண்டுகொள்ளாமல்

விட்டுவிடுங்கள்.

சற்று நேரத்தில்

அவரே அழத் தொடங்குவார்.

தனியே இரவில் நடப்பவர்

உரத்தக் குரலில் பாடுவது போல

அவர் அழப் பயந்துக்

கொண்டு தான்

திட்டிக் கொண்டிருக்கிறார்.

❤️

எதிர்பாராமல்

காதலியின் மகள்களை

சந்திக்கின்ற தருணத்தில்

அந்த முகத்தில்

எப்போதோ தொலைத்த

தேவதையை தேடாதவர்

யார் இருக்க முடியும்..??

சிறிய வெட்கத்தோடு

அந்த சிறுமியின்

தலையை வருடி விட்டு

செல்வது

ஆசி வழங்குவதல்ல.

மாறாக

கடந்தக் காலத்திற்குள்

நாமே புகுந்துப் பார்க்கும்

ஒரு கால எந்திரத்தின்

பயணம்.

❤️

தளபதி படத்தில்

ஒவ்வொரு முறை

ஷோபனாவை

ரஜினி

சந்திக்கும் போதெல்லாம்

இளையராஜா

இசை அமைத்துக்

கொண்டே இருக்கிறார்.

அதனால்தான்

மணிரத்னம்

ஷோபனாவை

வேறு ஊருக்கு

அனுப்பி வைத்துவிட்டார்.

காதலின் பிரிவுத்

துயரத்தை விட

அந்த இசைத்துளி

கொடுக்கும் துயரம்

இன்னும் கொடுமையானது.

❤️

பழங்கள் வாங்கிக் கொண்டு

கனக்கும்

மஞ்சள் பையோடு

தன் கர்ப்பிணி மனைவியை

அழைத்துச் செல்லும்

தாடி வைத்த

அந்த கைலிக்காரனை

பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

ஏதோ திட்டிக்

கொண்டே வருகிறான்.

மனைவி அதை

கேட்டும் கேட்காதது போல

எங்கோ

வேடிக்கை

பார்த்துக்கொண்டு வருகிறாள்.

சட்டென கர்ப்பிணி மனைவி

கல் தடுக்கி தடுமாற..

அந்தப் பையை கீழே போட்டுவிட்டு

மனைவியைப் பிடித்துக் கொள்கிறான்.

“பார்த்து வரதில்லையா..??”

எனத் திட்டிக்கொண்டே

பையில் இருந்து சிதறிவிட்ட

பழங்களை பொறுக்கும்

கணவனிடத்தில்

அதைத் தாண்டி

காதலை உணர

அந்தப் பெண்ணிற்கு

ஏதாவது புனிதத் தருணங்கள்

இருக்கிறதா என்ன..??