
நேசித்தவரின்
நினைவுகளில்
உறைந்திருக்கும் ஓவியமாய்
நிலைத்திருக்கவே
எல்லோரும் விரும்புகிறோம்.
ஆனால்
ஏதோ ஒரு காலப் பிசகு..
சுழலும் இசைத் தட்டில்
நிகழ்ந்துவிட்ட இடறல்..
தெளிந்த வானில்
தெளிக்கப்பட்ட
மேகத்துண்டின் கீறல்..
நாம் சிறிது சிறிதாக
இன்னொருவர் இதயத்தில்
இறக்கத் தொடங்குகிறோம்.
அலைகழித்த
அலைபேசிகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
சாகத் தொடங்குகின்றன.
கடைசியாக வந்த
பகிரிச் செய்தி
பட்டுப்போன மலராய்
காய்ந்துக் கிடக்கிறது.
பிறந்தநாள் வாழ்த்து
சொல்லாவிடில்
இப்போதெல்லாம்
பிரச்சனை இல்லை.
காலை எழுந்தவுடன்
முதல் செய்தி அனுப்பும்
மூர்க்கமில்லை.
இரவு உறங்குவதற்கு
முன்னால்
இறுதியாய் பார்க்கும் முகம்
அதுவாகத்தான்
இருக்க வேண்டும்
என்பதற்காக
எப்போதோ எடுத்த
புகைப்படத்தை
இப்போது எடுத்து
பார்த்துவிட்டு
கண்களில் சாராயம்
ஊற்றிக் கொள்ளும்
சங்கடம் சத்தியமாய்
இனி இல்லை.
எதிரே எதிர்பாராமல்
தென்படும்
உணவகத்தின் பெயர்
உந்தன் பெயராக இருக்கும்போது
அரைமணி நேரத்துக்குள்ளாகவே
இரு முறை சாப்பிடும்
அவசியம் இனி இல்லை.
கேட்கின்ற
பாடல்களில் எல்லாம்
உன்னைப் பொருத்திப் பார்த்து
காதுகளில் காதலின் திராவகம்
ஊற்றிக் கொள்கிறத் தீவிரம்
இனி இல்லை.
காரணம் இன்றி
புன்னகைக்க..
கணக்கின்றி
வானம் பார்க்க..
பேருந்தின் ஜன்னலோரம்
சிகை தீண்டும் காற்றின்
நுனித் தொட்டு ரசிக்க..
எந்தக் காரணமும்
இனி இல்லை.
நிராகரிப்பின்
பாலையில்
படர்ந்திருந்த
இதயத்தின் ஈரமும்
இறுதியாக
இல்லாமல் போய்விட்டது.
யாரோ ஒருவர்
எவருடைய நினைவிலோ
எங்கேயோ இறந்துவிட்டார்
என்று எப்போதோ
தள்ளிச் சென்று
தனியே நின்று
நானே என் மரணத்தை
யாரிடத்திலோ
சொல்லிக்
கொண்டிருக்கிறேன்.
கேட்பவரும்
அது யாரோ
என்று நினைக்கும் வரை
நான் நிம்மதியாக இருப்பேன்.
அது
எனக்குத் தொடர்பு இல்லாத
இன்னொருவரின்
தோல்வி என்று கூட
சொல்லி
சங்கடமில்லாமல்
சமாதானம்
அடைந்துக் கொள்வேன்.
ஆனாலும்..
என்னையும் மீறி
கலங்குகிற
இந்த விழிகளைத் தான்
எங்கே புதைப்பது
என்று தெரியவில்லை
மறுமொழி இடவும்