வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை பொது வாழ்க்கை என்று நாமெல்லாம் பிரித்துப் பேசிக் கொள்வது என்பது மிகவும் சமீப காலத்திற்கு உரியது என்று நினைக்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் இன்னமும் உதாரணமாக பார்க்கப்படும் காமராஜர் கக்கன் ஜீவா நல்லகண்ணு சீனிவாச‌ராவ் என எண்ணற்ற தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை வேறு சமூக வாழ்க்கை வேறு என்று வாழ்ந்தவர்கள் அல்லர்.போர்ச் சூழலில் வாழ்ந்திருந்தாலும் எம் தேசியத் தலைவர் மேதகு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் அவரது பொது வாழ்க்கையோடு கலந்து தான் இருந்தது

இன்னும் ஆழமாக சந்தித்தால் அவர்களுக்கு பொது வாழ்க்கை தவிர்த்து விட்டு தனிப்பட்ட வாழ்க்கை என்பதே இல்லை. திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பின் தான் அவர்களது ஒழுக்கமற்ற நடவடிக்கைகள் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படும் போது தனிப்பட்ட வாழ்க்கையை கேள்வி கேட்கக் கூடாது என்பதான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்திய அரசியல் வரலாற்றிலும் சரி உலக அரசியல் வரலாற்றிலும் சரி தனிப்பட்ட வாழ்க்கை என்பது எப்போதுமே கேள்விக்கு உரியதாகவே இருந்து வந்திருக்கிறது. மகாத்மா காந்தியிலிருந்து அண்ணல் அம்பேத்கரில் இருந்து, நேரு ஜின்னா போன்ற பல தலைவர்களின் வாழ்க்கை முறையில் இருந்த எல்லா அம்சங்களும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாட்டில் அதிகமாக விற்கப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவரின் புத்தகம் எதுவெனில்.. அது காந்தியடிகளின் சத்திய சோதனை தான். சத்திய சோதனை காந்தியின் வாழ்க்கை வரலாறு சம்பவங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சூழல்கள் ஆகியவற்றைப் பற்றியதுதான்.

இதற்கு முன்னால் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தொல் திருமாவளவன், வேல்முருகன், தியாகு, கனிமொழி,அண்ணன் சீமான், வைகோ,கமலஹாசன் போன்ற பலரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரும் விமர்சித்தபோது, இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை தானே என்று எவரும் தற்போது விஜய்யை காப்பாற்றுவது போல அப்போது காப்பாற்றவில்லை. அவரவர் பிரச்சினையை அவரவர் எதிர்கொண்டார்கள். ஆனால் கேள்விகள் என்பது எழுந்து கொண்டுதான் இருந்தன.

இப்போதுதான் விஜய் பற்றி பேசும்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச கூடாது என எல்லோரும் சொல்லிக் கொள்கிறோம்.

தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பின்னால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அந்தரங்கப் பிழைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பொது வாழ்க்கையில் வந்துவிட்ட ஒரு மனிதனின் எல்லா செயல்களும் கேள்வி கேட்கப்படும் என்ற உச்சபட்ச உணர்வில் தான் மகத்தான பல தலைவர்கள் தங்கள் வாழ்க்கையின் எண்ணி பார்க்க முடியாத நேர்மையில் வாழ்ந்து இறந்து இருக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சி முறை வந்த பிறகு.. அவள் படிதாண்டா பத்தினியும் அல்ல நான் முற்றும் துறந்த மனிதனும் அல்ல, ராஜாத்தி கனிமொழியின் தாய். கனிமொழி எனது மகள். என்பதான பல வார்த்தை விளையாட்டுக்கள் நடந்தன. ஆனால் இப்படி தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கேள்வி வரும்போது அண்ணா கருணாநிதி போன்ற பலரும் எதிர்கொண்டார்கள்.

.இப்போது உலக அரங்கை உலுக்கி கொண்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகள் கூட தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுபவைதான். மீ டு இயக்கங்கள் போன்றவை எழுப்புகிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்தவைதான்.

ஆனால் சமீப காலத்தில் தான் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்விக் கேட்கக் கூடாது என்பதான விதிமுறைகள் விதிக்கப்படுவதாக உணர்கிறேன்.

பொதுவாக அரசியலுக்கு பொது மனிதனாக வந்துவிட்ட பிறகு அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்பதும், அரசியல் வாழ்க்கை என்பதும் பிரித்துப் பார்க்க முடியாத நுட்பமான இணைப்பில் இருக்கின்றன.

வாழ்க்கை என்பது தனிப்பட்டது இல்லை. நம்மை மட்டுமே சார்ந்ததும் இல்லை. நம் வாழ்க்கையில் பலர் இணைந்து இருக்கிறார்கள். பலர் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.

எனவே தனிப்பட்ட வாழ்க்கை என்பது கேள்வி கேட்கக் கூடாத அவரவருக்குரியது என கட்டமைப்பது பொதுவாழ்வில் இன்னும் மோசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும்.

தவறு செய்கின்ற அல்லது பிரச்சனைகளுக்கு உள்ளாகின்ற அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு வாழும் ஒரு எளிய தனி மனிதன் இதுபோன்ற சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் போது எப்படி பேதமின்றி எல்லோர் வாயிலும் புகுந்து புரண்டு வருகிறானோ.. அதுதான் அரசியல் களத்திற்கு வந்த பொது மனிதனுக்கும்.

There is no such thing as a private life here. It is an illusion — a disguise used to hide mistakes.

Once a person enters politics, there is no private life for them.

The very beginning of politics lies in the sacrifice of that privacy.”

இந்த தீர்மானகரமான என் முடிவு அல்ல. இதைத் தாண்டி ஒன்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.