
என் செல்ல சிபி..
மிகச் சரியாக 21 வருடங்களுக்கு முன்பாக உனது பிஞ்சுக் கால்கள் என் நெஞ்சில் மோதிய தருணங்களை நினைத்து இந்த இரவில் மெய்சிலிர்க்கிறேன். அந்தத் தருணத்தை என்னால் என் வாழ்வின் எந்த நொடியிலும் மறக்க முடியாது. ஏனெனில் அதுதான் என் வாழ்வின் உச்சம். நான் பிறந்து, நோயில் நொந்து, துயரத்தில் உழன்று, கனவுகளால் நான் கரைந்துக் கொண்டிருந்த போது, இறுதியாய் நான் கண்டடைந்த கடவுளின் கருணை நீ.
நீ நடக்கும் போதும் ஓடும் போதும் குதிக்கும் போதும் நான் தான் ஓடி கொண்டிருக்கிறேன் நான் தான் பறந்து கொண்டிருக்கிறேன். சுருக்கமாக சொன்னால் உன் மூலம் நான் கனவு காணும் அனைத்தையும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீ என் நிழல் அல்ல. நீதான் என் அசல்.
நீண்ட நெடிய என் வாழ்நாளின் துயர இருட்டிற்கு பிறகு நான் அடைந்த மினுமினுக்கும் வெளிச்சம் நீ. நீ மற்ற குழந்தைகளைப் போல அல்ல சிபி. உன்னால் சிறுவயதிலேயே அனைத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது குறித்து இப்போதும் ஆச்சரியப்படுகிறேன். ஒருபோதும் என்னை தூக்கிக் கொண்டு நட என்று நீ எப்போதுமே சொல்லவில்லை. என் மீது சாய்ந்துக் கொள்ளத் தோன்றும்போது கூட நான் அமர்ந்த பிறகு தான் என் தோளில் சாய்வாய். அந்த அளவுக்கு உள்ளுணர்வு கொண்டவனாக நீ வளர்ந்தாய். இருக்கும் இடத்தை எப்போதும் மகிழ்ச்சியின் தோட்டமாக பூக்க வைப்பதில் நீ சிறந்தவன்.
உனக்கு தெரியுமா சிபி..??
உன்னோடு பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு வரும்போது என் தோளில் சிறகுகள் முளைத்திருக்கும். நான் பறந்து கொண்டிருக்கின்ற அந்த நொடிகளில் தான் நீ என்னிடம் மிகுந்த ரசனையோடு பேசிக் கொண்டிருப்பாய்.
ஆளற்ற கோவில் தாழ்வாரங்களில், பின்னிரவில் நம் நூலக அறையிலும், நேரக் கணக்கின்றி என் வாழ்வின் பொன்னொளி வீசிய தருணங்களை உன் முன்னால் நான் விவரிக்கின்ற தருணங்களில்.. முகம் முழுக்க புன்னகையோடு கண்கள் விரித்து நீ கேட்கின்ற அந்தப் பொழுதுகளில் நீ நானாகவும் .. நான் நீயாகவும் மாறி நிற்கின்ற காட்சிகள் நம் வாழ்க்கை முழுக்க நிரம்பிக் கிடைக்கின்றன.
உடனிருந்த உறவுகள் பலவும் உதறிய பொழுதுகளில் இனி யார் இருக்கிறார், நமக்கு என நான் துவண்டபோது, தோள் எழும்பி நீ நின்ற கம்பீரத்தில் அவையெல்லாம் உதிர்ந்து போயின.
உன்னைத் தாண்டி வேறு என்ன உலகம் எனக்கென்று இருக்கப் போகிறது..?
ஆனால் நீ அப்படி இல்லை. என்னைப் போன்று உதிர்பவைகளை நினைத்து துவள்பவன் நீயல்ல.நாடு முழுக்க உனக்கான உறவுகளை நீயே ஏற்படுத்திக் கொண்டாய்.

சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் அத்தைகளும் கொண்ட அதிசய உலகம் அது. எங்கெங்கெல்லாம் புலிக்கொடி பறக்கிறதோ அங்கங்கெல்லாம் உனது உறவுகள் உன்னை கொண்டாடுகிறார்கள். குறிப்பாக உன்னுடைய பெரியப்பா சீமான். உன்னுடைய வளர்ச்சியை ஒவ்வொரு துளியாக அருகில் இருந்து கவனித்து கண்கள் முழுக்க பெருமிதம் சுமக்கிறார். அதே போல உன் தாய்மாமன் பாக்கியராசன்உன்னை உருவாக்குவதில் அவரைப் போல நானே இருந்ததில்லை. அந்தவகையில் அந்த இருவருக்கும் நீ தீர்க்க முடியாத கடன்பட்டிருக்கிறாய். அதேபோல் நாடு முழுக்க உனக்கு உறவுப்பாலம் அமைத்திருக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கு. மிகப்பெரிய குடும்பம் நம்முடையது. அவர்களுக்கு எப்போதும் நேர்மையாக இருந்து விடு.
அதேபோல் உன் கடினமான சூழ்நிலைகளில் உடன் இருந்தவர்களை, நண்பர்களை எப்போதும் உள்ளார்ந்து நேசித்து கொண்டாடி மகிழ்வாக இரு.
அதேபோல் உன் ஆத்தாவும் தாத்தாவும். அவர்கள் உயிர் முழுக்க நீதான் நிரம்பி இருக்கிறாய். உன்னுடைய அம்மாவிற்கும் தம்பிக்கும் நீதான் அனைத்தும்.நீ அந்த உலகத்தின் கதாநாயகன்.
இதையெல்லாம் சற்று விலகி நின்று பார்க்கும்போது.. உன் மீது எனக்கே சிறிது பொறாமை ஏற்பட்டு விடுகிறது.
நீதானே அடிக்கடி சொல்வாய்.. “அப்படி
ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என. “
இப்போது அதற்கென உனக்கு எல்லா கதவுகளும் திறந்து விட்டன.
இனி வாழ்க. !
பிறந்தநாள் வாழ்த்துகள்.

முடிவில்லா முத்தங்களுடன்..
அப்பா.
மறுமொழி இடவும்