
நாம் தமிழர் கட்சி 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்தலில் போட்டியிடுகிறது.
மூன்று சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு பாராளுமன்றத் தேர்தல்கள், சில இடைத்தேர்தல்கள் என எந்த தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதில்லை.
கொள்கையை முன்னிறுத்துகிறோம். இரவு பகல் பாராது வீடு வீடாக அலைந்து வியர்வை சிந்தி வாக்குகள் கேட்கிறோம்.
தெருமுனை கூட்டமோ பொதுக்கூட்டமோ ஏதோ ஒன்று நடத்தி சாலையில் கடந்து கொண்டிருக்கின்ற மக்களை நிறுத்தி வைத்து தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் மனங்களில் விதைக்கிறோம்.
ஏறக்குறைய எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேச்சு மொழி. பெரும்பாலும் உரையாடல்களில் ஆங்கிலம் தவிர்த்த தமிழ் மட்டுமே மூச்சு மொழி.
அண்ணன் சீமான் வரும்போது கூட தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் மேதகு வாழ்க என்ற முழக்கம் மட்டுமே. மாலைகள் இல்லை. சால்வைகள் கிடையாது.
எந்தக் கூட்டமும் ஆபாச நடனங்கள் சினிமா பாடல்கள் போட்டு மக்களை திரட்டும் கூட்டம் அல்ல.
117 ஆண்கள் 117 பெண்கள் என 234 வேட்பாளர்களும் குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளர்கள்.
மக்களுக்காக போராடுகின்ற போராளிகள்.
எங்களைப் போல மற்ற யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் “மற்றவைகள் தான்”.

எங்கள் அண்ணன் சீமான் தமிழ்நாட்டை முழுமையாகக் கடந்த ஒரே தலைவர். எல்லா தலைவர்களை தாண்டிலும் அதிக கூட்டங்களில் பேசியவர். மக்களின் போராட்டக் களங்களில் பங்கேற்பவர். ஊடகங்களை தினந்தோறும் சந்திப்பவர். எப்போதும் களத்திலே நின்று போராடுபவர்.
இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆடு மாடு மாநாடு மலைகள் மாநாடு தண்ணீர் மாநாடு என தொடர்ச்சியாக மக்கள் விழிப்புணர்வு மாநாடுகள் நடத்தி சூழலியல் சார்ந்து இயங்கும் ஒரே தலைவர்.
கருணாநிதியின் பேனா சிலையை தனி ஒருவனாக நின்று போராடி தடுத்தவர்.
தஞ்சை பெருவுடையார் கோவில் உச்சியில் தமிழ் முழங்க காரணமாய் நின்றவர்.
அவரைப்போல உழைப்பவர் யார் உண்டு இங்கு..?
ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்.”

60 ஆண்டுகால திராவிட அரசியலின் சீர்கேடுகளை, தமிழ்நாடு அடைந்த பின்னடைவுகளை அம்பலப்படுத்தியதில் சீமானை போல வேறு யாருமில்லை.
இன்று அண்ணன் பேரறிவாளன் வழக்கறிஞராக மாறியதற்கு பின்னால்
சீமான் என்ற தனி மனிதனின் கைதும், வேலூர் சிறைவாசமும் இருக்கிறது. அந்த மனிதன் ஏழு தமிழர் விடுதலையே இனத்தின் விடுதலை என முழங்கிய போது அருகில் இருந்தவர் கூட ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தோம்.
ஆனாலும் சாதித்தார்.
கதிராமங்கலம் போராட்ட களத்தில், நெடுவாசல் போராட்டக் களத்தில், ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் என அவர் கால் படாத பூமி ஏதாவது உண்டா.. வேர்வைத் துளி சிந்தாத நிலம் எங்காவது உண்டா. ?
ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்”.

மக்களை நம்பி நம்பி மீண்டும் மீண்டும் தேர்தல் களத்தில் நிற்கிறோம்.
வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாமல் உழைப்பை முன்னிறுத்தி உறுதியாக நிற்கிறோம்.
எங்களது களங்கமற்ற உழைப்பை கண்டு கலங்காதவர்கள் யாரும் இல்லை.
ஆனாலும் நாங்கள் சேர்ந்ததில்லை. இந்த இனத்தில் பிறந்தோம். தலைவரை நேசித்தோம். எனவே நம் வாழ்க்கை இப்படியே என்று எங்களை நாங்களே தேற்றி, தலைவரின் முகத்தை மனதில் ஏற்றி இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்”.

நாளை காலை ஜனநாயகத் தீர்ப்பு எழுதப்பட இருக்கிற இந்த நொடியிலும் கூட என் உயிர் அண்ணன் சீமானை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.
அவனோடு நான் நிற்பது என் பிறப்பிற்கே பெருமை.
உழைப்பினால் உறுதி ஏறிய அவனது விழிகளில் எந்த நொடியும் சஞ்சலம் குடிபுகுந்ததில்லை.
ஆயிரமாயிரம் அவதூறுகள், பொய்மைகள் என அவனை நோக்கி எய்யப்பட்ட எல்லா அம்புகளும் அசைக்க முடியா அவனது மன உறுதிக்கு முன்னால் மடிந்து போயிருக்கின்றன.
அவனது படை போரைத் தொழிலாக செய்பவர்கள் அல்ல. வாழ்க்கையாக கொண்டவர்கள்.
ஆனாலும் நாங்கள் “மற்றவைகள்.”

இந்த மற்றவைகள் தான்..
இந்த மண்ணைக் காக்க மக்களை காக்க மொழியை மீட்க இருக்கின்ற கடைசி வாய்ப்பு.
வெற்றியை பரிசளித்தால் மேலெழும்பி பூரிப்போம்.
தோல்வியை பரிசளித்தால் இன்னும் தொலைவு இருக்கிறது என பன்மடங்கு வேகம் எடுப்போம்.
ஏனெனில்
இந்த “மற்றவைகள்” தான்
ஓயாத அலைகளாய் பாய்ந்தவர்களின்
பிள்ளைகள்.

நம்பிக்கையோடு நாளை
விடியலில் நாங்கள் விழித்திருப்போம்.
விவசாயி சின்னம் மிளிரும் போதெல்லாம்.. தமிழர் வாழ்வு ஒளிரும்.

ஊடக வியாபாரிகளின் வணிகத்தில் நாங்கள் “மற்றவைகளாக” இருந்து விட்டுப் போகிறோம்.
ஒருபோதும் அலட்சிய பார்வையால் ஊடகங்களை நாங்கள் கடந்ததில்லை.
மௌன கத்தியால் அவர்களை நாங்கள் அவமானப்படுத்தியதில்லை.
பதில் சொல்லாமல் நாங்கள் அவர்களை பதற வைத்ததில்லை.
ஆனாலும் நாங்கள் “மற்றவைகள் தான்”
எங்களது வெற்றிச் செய்தி கூட மற்றவைகளில் வரட்டும்.
ஆனால்.
இறுதியாக ஒன்று.
இந்த “மற்றவைகள்” தான்
உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுதில்
அவர்களுக்காகவும் போராட இருக்கும்
இறுதியான மனிதர்கள்.

மறுமொழி இடவும்