நிலையற்ற காரணங்களுக்காக மனிதர்களுக்குள் ஏற்படும் வெறுப்பினைப் போல உலகத்தில் பரவிய நோய் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் எல்லோரும் நல்ல மனிதர்கள் தான். ஆனாலும் புறச்சூழல் காரணமாக, அல்லது நிலைப்பாடுகள், நோக்கங்கள் என பல்வேறு காரணங்களுக்காக யாரோ ஒருவர் மீது வெறுப்பினை அள்ளி பூசிக்கொள்ளும் போது நாம் நம்மை நாமே வெறுக்கத் தொடங்குகிறோம்.

இதில் நானும் யோக்கியன் அல்ல. எதற்காக இன்னொருவரை வெறுக்க வேண்டும் என்று பலமுறை நானே சிந்தித்து நானும் பலரை வெறுத்தவன் என்ற காரணத்தினால் என்னை நானே மிகப்பெரிய குற்ற உணர்விற்கு உள்ளாக்கி இருக்கிறேன்.

உண்மையில் வெறுப்பு என்பது நீர் போன்றது. மனம் வடிவமைக்கும் எந்த ஒரு பாத்திரத்திலும் அது பொருந்திக் கொள்ளும். முதல் மரியாதை படத்தில் வடிவுக்கரசியின் கதாபாத்திரம் மிக நுட்பமானது. இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் இது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது “அவள் எதுவும் கிடைக்காதவள். அவள் அடைந்தது வெறுப்பை மட்டுமே. அதனால்தான் பார்வையில் மொழியில் அசைவில் எங்கும் வெறுப்பினை உமிழ்ந்துக் கொண்டே இருக்கிறாள் ” என விளக்கம் அளித்தார்.

யாரையும் அழிக்க யாரும் இங்கு பிறக்கவில்லை. வாழும் காலத்தில் சில காலம் இணைந்து வாழ்கிறோம். அலைவரிசை ஒத்துப் போகவில்லை என்றால் விலகிப் போகிறோம். ஆனால் விலகிப் போகும்போது நேசித்த காலங்களை மறந்து விட்டு வெறுப்பை அள்ளி பூசிக்கொண்டு வன்மத்தோடு நம் பிரிவை நாம் நியாயப்படுத்திக் கொள்வதற்காக அடுத்தவர் மீது குற்றம் சாட்டுகிறோம்.

சில மாதங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி ஆகியோரின் விவாகரத்து வழக்கு முடிந்து இருவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகிற காணொளி ஒன்றினைப் பார்த்தேன். இணைந்து வாழ பிடிக்காமல் பிரிந்த ஜிவி பிரகாஷ் தன் இணையர் சைந்தவி அவர்களை மிக மதிப்புடன் தன் காரில் அழைத்துப் போகின்ற அந்த காட்சி உண்மையில் வெறுப்பையெல்லாம் தாண்டி பெற்றுக்கொள்ள வேண்டிய உணர்ச்சிகள் ஏராளம் இருக்கின்றன என்பதை சிந்திக்க வைத்தது.

முற்றிலும் முரணானவர்களை எதிர்கொள்ளும் போது அவர்கள் மீது எப்படி வெறுப்பினை பிரயோகிப்பது என்று நாம் எல்லாம் சிந்திக்கிறோம். சமீபத்தில் என் மாமா Seenu Jaya Raman புற்றுநோயால் காலமானார். அவர் காலமாவதற்கு முன்பாக அவரிடம் முரண்பட்ட அனைவரையும் அவர் சந்திக்க விரும்பினார். அதற்காகவே ஒரு விழா தயார் செய்தார். ஒரு வகையான பிரிவு உபச்சார விழா போல. ஆனால் அவருக்கு இதுபோன்ற ஒரு நோய் இருக்கிறது என்று தெரியாமல், ஏற்கனவே இருந்த வெறுப்புணர்ச்சியின் காரணமாக எங்களில் பலர் அந்த விழாவை புறக்கணித்தார்கள். அவர் எல்லோரும் வருவார்கள் என பொறுமையாக காத்திருந்தார். ஆனால் நாங்கள் சிலர் மட்டுமே அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கும் அவருக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறது என்று தெரியாது.

அவர் என்னிடம் சொன்னார் . ” என்னிடம் அவர்கள் எல்லோரும் நேசித்ததற்கான நினைவுகள் மட்டுமே இருக்கின்றன. அதனால்தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன் ‌ ஆனால் அவர்களிடமோ என்னை வெறுப்பதற்கான காரணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால்தான் அவர்கள் வரவில்லை.”என்று கம்மிய குரலில் அவர் சொன்ன போது எனக்கு அப்போது அதற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் மறைவிற்குப் பிறகுதான் அவர் எல்லோருடைய நேசத்திற்காகவும் ஏங்கித் தவித்து இருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. பிறகு அழுது என்ன பயன்..??

அண்ணன் சீமான் தனக்கு முற்றிலும் எதிரானவர்களை கையாளுவதில் எப்போதும் மேன்மையானவர். சமீபத்தில் கூட தன்னை எதிர்த்து நிற்கின்ற காரைக்குடி தவெக வேட்பாளர் மருத்துவர் பிரபு அவர்களை அவர் அணைத்துக் கொண்ட முறையை நாம் பார்த்தோம்.

அதேபோலத்தான் இன்று தஞ்சை மண்டலச் செயலாளராக இருந்து திடீரென மாரடைப்பால் காலமான தம்பி கந்தசாமியின் மறைவு செய்தியை கேட்டபோது‌ உண்மையில் அண்ணன் சீமான் மிகுந்த மனவலி அடைந்தார்.‌ இத்தனைக்கும் தம்பி கந்தசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிஜேபியில் இணைந்து நாம் தமிழர் கட்சியை தீவிரமாக விமர்சித்து வந்தார். கட்சியிலிருந்து பிரிந்த நேரத்தில் கடுமையாக கட்சியை அண்ணன் சீமானை தாக்கி காணொளிகள் பேட்டிகள் என வெளியிட்டார். கடந்த மார்ச் மாதத்தில் கூட காணொளி ஒன்றினை வெளியிட்டு கடுமையாக நாம் தமிழர் கட்சியை அண்ணன் சீமானை விமர்சித்தார். ஆனால் அண்ணன் கந்தசாமி மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற ஒரு செய்தி கேட்ட உடனேயே அவர் கந்தசாமி தன்னை நேசித்த காலங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார். எப்பேர்ப்பட்ட தம்பி ! கட்சிக்காக எப்படி நின்றிருக்கிறான் ! எத்தனை முறை எனக்காக திருச்சி விமான நிலையம் வந்திருக்கிறான் என்றெல்லாம் பழைய நினைவுகளில் அவர் மூழ்கிப் போனார். உடனே இரங்கல் அறிக்கை வெளியிட்டு நாம் தமிழர் கட்சி உறவுகள் தம்பி கந்தசாமியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இப்படித்தான் எதிரியாக இருந்தாலும் அவரிடத்தில் பேரன்பு காட்டுகின்ற அவரது குணம் பல சமயங்களில் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே விமர்சிக்கப்பட்டாலும், அதை அவர் கைவிட்டதில்லை. அதை அவர் மாண்பு என்றெல்லாம் புனிதப் படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. மாறாக அதை தன் இயல்பாக கொண்டிருக்கிறார். அவர் மொழியில் அவரே சொல்கிறார். “நாம் எதிர்க்கும் ஒருவர் மீது அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக நமக்கு விமர்சனங்கள்/ எதிர்ப்புகள் தோன்றுகின்றனவே ஒழிய, தனிப்பட்ட வெறுப்பு என்பது எவர் மீதும் எப்போதும் இல்லை” என.

வைகோ விற்கும் அண்ணன் சீமானுக்கும் முரண்கள் உச்சக்கட்டத்தில் இருந்த போது வைகோ விற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அண்ணன் சீமான் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மருத்துவமனைக்கு விரைந்தார். அவரை மிகுந்த நெகிழ்வோடு வரவேற்ற வைகோ, அதற்குப் பிறகு அண்ணன் சீமானை எங்கும் விமர்சிப்பதில்லை.

அப்படித்தான் மறைந்த கந்தசாமியும். உண்மையில் கந்தசாமியின் ஆழ்மனது அண்ணன் சீமானை எவ்வாறு நேசித்தது என்பதை நான் எல்லாம் அருகில் இருந்து கவனித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் பிஜேபிக்கு அவன் செல்லும்போது கடைசியாக என்னிடம் பேசினான். பிறகு நாம் தமிழர் கட்சியின் 2026 திருச்சி மாநாட்டிற்கு முதல் நாள் திருச்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது சாலையில் சந்தித்தபோது, என்னை கடந்த அவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து அணைத்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

கட்சியிலிருந்து பிரியும் பலரும் அண்ணன் சீமானை தரக்குறைவாக பேசுவது கண்டு நான் வியந்திருக்கிறேன். சென்ற நொடியில் அண்ணனாக இருந்தவர் எப்படி அடுத்த நொடியில் மாபெரும் எதிரியாக மாறிப்போனார் என்பதில் எனக்கு உண்மையிலேயே கேள்விகள் இருக்கின்றன. அரசியல் நிலைப்பாடுகள் மாறிப் போகலாம். அண்ணன் என்கிற உறவு எப்படி மாறும்.? இப்படி அண்ணனின் அரசியல் நிலைப்பாடுகளை தான் விமர்சிக்க வேண்டுமே ஒழிய உயிராய் நேசித்த அண்ணனை வெறுக்கும் மனது எப்படி உருவாகிறது என யோசித்தால் சத்தியமாக சங்கடம்தான்.

ஏனெனில் சமூக வலைதளங்களில் வெறுப்பினை கக்கி வன்மத்தை துப்பும் அதே நபர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நேரடியாக அவர் முகத்தைப் பார்த்தவுடன் கனிவாகி விடுவதையும் கவனித்து இருக்கிறேன்.

கட்சியில் இருந்து நீங்கிய ஒரு தம்பி ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எனக்கு அழைத்தபோது நம்மை பார்த்து பார்த்து வளர்த்த அண்ணனை ஏன் அப்படி விமர்சிக்கிறாய் எனக் கேட்ட கேள்விக்கு, கனத்த மௌனத்தோடு பதில் சொல்லாமல் கடந்துப் போனதை குற்ற உணர்வு / அல்லது சென்ற இடத்தில் பிழைப்புக்கான வழி என்று எடுத்துக் கொள்வதா என புரியவில்லை.

நான் மிகவும் நேசித்த ஒரு பெண் என்னை விட்டு பிரியும் போது இறுதியாக சொன்ன ஒரு சொல் இன்னும் என்னை கொன்று கொண்டிருக்கிறது. ” உண்மையான நேசிப்பை நீ கொன்று விட்டாய். வாழ்க்கை முழுக்க நீ அதற்காக எல்லோரிடமும் தேடி அலைவாய்.” உண்மையில் அதை அவள் வெறுப்போடு சொல்லவில்லை. மாறாக இப்படி என் வாழ்க்கை அமையப்போகிறதே என்கிற தவிப்போடு தான் சொன்னாள் என்று இப்போது நான் நினைத்துக் கொள்கிறேன்.

வயது ஏற ஏற , பக்குவத்தை வளர்த்துக் கொண்டு சக மனிதர்களை நேசிப்பதற்கான சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில் இந்தக் குறுகிய பட்டாம்பூச்சி வாழ்க்கையில்.. பறப்பதற்கான சிறகுகளை வெறுப்பின் நெருப்பு எரித்து விடுகிறது. நேசிப்பின் தென்றல் மட்டும்தான் சிறகுகளை தழுவி பறக்க வைக்கிறது.

“மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டம் மாறும் போது வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டம் மாறுகிறது” என்கிறார் எழுத்தாளர் ஜி நாகராஜன்.

நேசமித்திரனின் கவிதை ஒன்று உண்டு.

“ஓர் அன்பை அடைந்த பாதையை எப்போதும் மறவாமல் இருங்கள்.

பிறிதொருவராய் அதே பாதையில்

நாம் திரும்ப நேரிடலாம்.

மழை சாட்சி.”

உண்மைதானே. கடலில் இருந்து பிரிந்த நீராவி மீண்டும் மழையாய் கடலுக்கேத்தானே திரும்புகிறது..?

நாமும் அப்படித்தான். மீண்டும் ஒரே இடத்திற்கு தான் திரும்ப இருக்கிறோம் ??

என்பதை புரிந்து கொள்ளும் போது

நமக்குள் வெறுப்பு ஒரு சடலம் ஆகி கனிவின் கல்லறைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பேரன்பின் ஆணிகள் அறையப்படும்.