
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னால் கரும்புகை சூழ்ந்த நிலத்தில் ஒரு இனப்படுகொலை நடந்த போது வீரச்சமர் புரிந்து எங்களது உடன் பிறந்தார்கள் தங்கள் மீது புலிக்கொடியை போர்த்திக்கொண்டு வான் ஏறிச் சென்றார்கள்.
உலகம் முழுக்க தோல்வியின் நிழல் நம் விழிகளில் அப்பிக் கொண்டது. ஆம் . உறவுகளே .. நாம் தோற்றவர்கள். தோல்வி தந்த வன்மத்தையும் வலியையும் நெஞ்சில் சுமந்தவர்கள்.
அப்போதுதான் அண்ணன் வந்தான். அவன் கண்களில் எப்போதும் ஆவேச நெருப்புத் துண்டு ஒன்று கனன்று கொண்டே இருந்தது. சொற்களில் கந்தகம் ஏற்றி இனத்தின் துரோகிகளை எதிரிகளை சுட்டெரித்தான். அவனுடைய அண்ணன் மேதகு விட்டுச்சென்ற அதே ஒற்றைப் புள்ளியில் இருந்து சீமான் தொடர்ந்தான். தொடர்ச்சியாக தொடர்ந்தான்.
இது பழிவாங்கும் சினிமா கதை அல்ல. மாறாக நிலத்தையும் மொழியையும் இனத்தையும் இழந்த ஒரு அடிமை தேசிய இனத்தின் மீள் எழுச்சி என்பதை சொந்த மக்களுக்கு புரிய வைக்க குரலில் அனலை ஏற்றி தமிழக வீதி எங்கும் கடந்த 15 ஆண்டுகளாக அலைந்திருக்கிறான்.
காட்டையும் நதியையும் நிலத்தையும் நிலத்திற்குள் புதைந்து கிடக்கும் வளத்தையும் காப்பதற்கு அண்ணன் சீமானை விட்டால் யாரும் இல்லை என்ற புரிதலுக்கு எம் இனம் வருவதற்குள் இவை எல்லாமே அழிந்துவிடும் என்கிற ஆபத்துதான் இப்போது முதன்மையானது.
அண்ணன் சீமான் அப்படித்தான் பேசுகிறான். அமெரிக்காவை கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே பூர்வ குடிகளாக இருந்த செவ்விந்தியர்களை அடிமைப்படுத்திய போது செவ்விந்திய தலைவர் சியாட்டில் வெள்ளையர்களை நோக்கி சொல்கிறார். ” எங்கள் சொற்களில் நாகரிகத்தை எதிர்பார்க்காதீர்கள். எங்களது நடத்தைகளில் நாசூக்கை எதிர்பார்க்காதீர்கள். எங்களது அரசியலில் சமரசத்தை எதிர்பார்க்காதீர்கள். நாங்கள் மண்ணின் மக்கள். மண்ணின் நிறத்தில் ஆனவர்கள். மண்மொழி பேசுபவர்கள். நீங்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் சமரசம் அவ்வளவு எளிதாக உங்களுக்கு கிடைக்காது. இறுதிவரை எங்கள் மண்ணை இறுக்கப் பற்றி கொண்டு நாங்கள் சாவோமே ஒழிய, ஒருபோதும் சரணடைய மாட்டோம்.”
அப்படித்தான் நாங்களும். எங்களது இளைஞர்கள் அப்பழுக்கற்றவர்கள். துண்டை சுழற்றிக்கொண்டு வாயில் விசிலை ஊதிக்கொண்டு கத்திக் கொண்டு வீதிகளில் அலையும் இளைஞர்களுக்கு மத்தியில், வெயில் கொளுத்தும் வீதி முனையில் நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்று அணிவகுப்பாய் நகர்ந்தவர்கள். ஒருவேளை எங்கள் அண்ணன் சமரசம் செய்து யாருடனோ கூட்டணி வைத்திருந்தால் இந்த எழுத்திற்கு அல்லது எங்களது ஆன்மாவிற்கு உயிர் இருந்திருக்காது.
நல்லவேளை.. எங்கள் அண்ணன் சீமான் எங்களை கைவிடவில்லை. எங்கும் அடமானம் வைக்கவில்லை.
எங்களைப் போல இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற வேறு யாரும் இல்லை என்பது தான் இந்த நேரத்தில் எங்கள் மனதில் உச்சபட்சமாக சுமக்கும் வலி. இந்த சுமையை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு நகரக்கூட முடியாத சூழலில், கடந்த 15 ஆண்டுகளாக எல்லாவற்றையும் இழந்து சத்தியத்தை சாட்சியாக வைத்து இறைவனாக மாறிப்போன தலைவனின் நினைவை சுமந்து நிற்கிறோம்.
அது ஒன்றுதான் எங்களது பலம். அந்த ஒற்றை உணர்ச்சி தான் இந்த மண்ணையும் மொழியையும் உயிருக்கு மேலாக நேசிக்க வைக்கிறது. நாங்கள் பிடித்தது புலியின் வாலை அல்ல. யுத்த களத்தில் இறுதிவரை சளைக்காமல் போரிட்டு அடிபட்டு காயங்களோடு பெருமூச்செறிந்து மரண வலியோடு நின்ற தாய்ப்புலி ஒன்றின் கனவை.
அது எங்களை மரணம் வரைக்கும் துரத்தும். ஒவ்வொரு தோல்வியின் போதும் நாங்கள் எங்களை நாங்களே சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டும் போராடுவதற்கு எரிபொருளாக அந்தக் கனவே எங்களை இயக்கும்.
எங்களது தமிழக மக்களே..!
ஆறுகளும் குளங்களும் நீர் நிலைகளும் நெகிழி குப்பைகளால் நிறைந்து காணாமல் போய்விட்ட காலக் கட்டத்தில் தான் இறுதி நம்பிக்கையாய் அண்ணன் சீமான் வருகிறான்.
அவனது ஒவ்வொரு சொல்லிலும் மண்ணை நேசிக்கின்ற ஆதிமனிதனின் ஆன்மா ஒளிந்திருக்கிறது. “பொறுக்கு விதை மரபினர்” என தன்னை அழைத்துக் கொள்கின்ற அவனுக்கு சத்தியமாக எந்தவித சுயநல நோக்கமும் இல்லை. எங்கோ ஒரு இடத்தில் சரண் அடைந்தால் அவன் நினைக்காத உயரத்தில் அவனால் நிம்மதி அடைந்திருக்க முடியும்.
ஆனால் அவன் இந்த மண்ணின் ஆதி மனிதன். எப்படி செவ்வந்தியர்கள் வெள்ளையர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சரணடைய மாட்டோம் என சண்டையிட்டு அமெரிக்க பனி மலைகளில் சடலங்களாய் உறைந்து போனார்களோ, மண்ணை நேசித்து நின்ற எம் இனத்து போராளிகள் எப்படி முள்ளிவாய்க்காலில் தன் கரங்களுக்குள் தாய் மண்ணை இறுக்கிப் பிடித்தவாறே இறுதி மூச்சை விட்டார்களோ.. அதே வரிசையில் தான் எங்கள் அண்ணனும், நாங்களும் நிற்கிறோம்.
வாக்கு அரசியலில் தோற்பது அல்லது வெற்றி பெறுவது என்பது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் ஊழல் பணத்தாலும், ரசிக மனப்பான்மையினாலும் ஒரு அறிவார்ந்த இளைஞர் கூட்டம் மீண்டும் மீண்டும் அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் சூழ்ச்சியாக வீழ்த்தப்படும் பட்சத்தில்.. அந்த நிலம் இருள் சூழ்ந்து வீழும்.
இனி உங்கள் கரங்களில் இந்த நிலத்தின், இந்த மொழியின், நம் நிலத்துக்கு குழந்தைகளின் எதிர்காலம் காத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் வரலாற்றுத் தவறுகளை செய்து , பிறகு வருந்தி எந்தப் பயனும் இல்லை.
இலட்சியக் கனவோடு வருகின்ற இளைஞர்களை திரையரங்க இருளை காட்டி வீழ்த்துவதும், திராவிட மோசடித்தனங்களை காட்டி, ஊழல் பணத்தைக் கொட்டி, உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பை திருடுவதும் இந்தத் தேர்தலோடு முடியட்டும்.
ஒவ்வொரு முறை மண்ணின் மக்களின் அரசியல் எழும்போதெல்லாம் திரையரங்கில் இருந்து யாரோ ஒரு நடிகர் வீதிக்கு வந்து, எழுகின்ற தமிழ்த் தேசிய எழுச்சியினை திசை மாற்றுகின்ற வேலை தொடர்ந்து நடைபெறுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்தியத் தேசியமும், திராவிடமும் கைகோர்த்து செய்கின்ற சதி வேலைகள் அவை.
ஆனாலும் இந்த தடைகளை எல்லாம் தன் அளவற்ற உழைப்பால், பொங்கி வழியும் வேர்வையால் வென்றுவிட துடிக்கிறான் என் அண்ணன் சீமான்.
அவன் கண்களில் சிவந்திருக்கின்ற காயங்கள், வெயிலில் வெந்து இருக்கின்ற அவனது கரங்கள், பேசிப் பேசி தொண்டை சதைகள் பிளந்து ஏற்பட்ட உதிரம் சுமக்கும் உதடுகள் என எல்லாவற்றையும் இந்த மண்ணை மொழியை இனத்தை காக்கும் போரில் அவன் பதக்கங்களாக ஏந்தி உங்கள் முன்னால் நிற்கிறான்.
இதற்குமேல் யாராலும் உழைக்க முடியாது. பேச முடியாது. போராட முடியாது. பாதிக்கப்பட்ட எல்லோருக்காகவும் அவன் பேசியிருக்கிறான். போராடி இருக்கிறான். அவன் இன்றி கடந்த ஐந்து வருடங்களும் இயங்கவில்லை. மண் மலை காடு ஆடு மாடு அரசு ஊழியர் எளிய மக்கள் புலம் பெயர்ந்தவர்கள் நிலத்திலிருந்து அகற்றப்பட்டவர்கள் மதத்தால்,சாதியால் ஒதுக்கப்பட்டவர்கள் விளிம்பு நிலை மக்கள் என பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்காகவும் பல மணி நேரம் போராடி இருக்கிறான் . சத்தியத்தின் குரலாய் அவனே பேசியிருக்கிறான். அவனே அசலான எதிர்க்கட்சியாக மாறி ஊர் ஊராக அலைந்து மக்களின் குரலை கோரிக்கைகளை தேவைகளை உலகறியச் செய்து கொண்டிருந்தான்.
ஒவ்வொன்றும் உழைப்பின்,
உதிர வேர்வையின் ,
உயிர் உருக்கும்
அடிவயிற்றின் குரலின்
அசாத்தியங்கள்.
போதும் போதும்.. தோல்விகளால் நிறைந்திருக்கும் காயம் பட்ட அவனது நெஞ்சம்.. இனி அடையப்போகும் வெற்றிகளால் மருந்திடப்படட்டும்.
அதிகாரத்தை நோக்கிய பாய்ச்சலில் நம்பிக்கை கொண்டு மக்களை நம்பி நிற்கின்ற அண்ணன் சீமான் மற்றும் அவனது தம்பி தங்கைகள் இந்த முறை வென்றே தீர வேண்டும்.
அவனும் அவனது தம்பி, தங்கைகளும் எளியவர்கள்தான். எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் . ஆனால் இந்த மண் செழிக்க, மொழி தழைக்க அவர்கள் அவசியம் இந்த நிலத்திற்கு தேவை.
திராவிடமோ,இந்திய தேசியமோ, திரையரங்க ரசிக மனப்பான்மையோ, இந்த நிலத்தில் மீண்டும் அழிவுகளை தான் உண்டாக்கும்.
தனித்து நிற்கும் புலி வனத்தைக் காக்கும். நம் இனத்தைக் காக்கும். இந்த நிலத்தை காக்கும்.
அனைவரும் சிந்திப்பீர்.
வாக்குப் பொத்தானை அழுத்துவதற்கு முன்பாக.. உங்களது அடுத்த தலைமுறை பிள்ளைகளின் முகம் உங்கள் விழிகளில் நிறையட்டும்.
நிலம் இருந்தால்தான் இனமிருக்கும். இனம் இருந்தால் தான் மொழி இருக்கும். மொழி இருந்தால்தான் நாம் இருப்போம்.
நாம் வாழ, நம் நிலம் வாழ, நம் மொழி வாழ, நாம் வாக்களிப்போம்.
மறுமொழி இடவும்