தமிழின் மிக உயரிய எழுத்தாளர்களில் வண்ணநிலவனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. நீதிமன்ற உலகைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதிய படைப்புகளில் காணப்படும் ஆழமும், அங்கதமும் என்னை எப்போதும் ஈர்த்திருக்கின்றன.
வண்ணநிலவனின் தீவிரமான வாசகனாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, நீண்ட காலம் வண்ணதாசனைப் படிக்காமல் தவறவிட்டுவிட்டேன்.

தொடக்க காலத்தில் ‘வண்ணநிலவன்’, ‘வண்ணதாசன்’ என்ற பெயர்களுக்கிடையே எனக்குள் ஒரு குழப்பமும் இருந்தது. வண்ணதாசன் என்பவர் வேறு; வண்ணநிலவன் என்பவர் வேறு; கல்யாண்ஜி என்பவர் வேறு என்று எண்ணிக்கொண்டிருந்தேன். பிறகுதான் வண்ணநிலவன் வேறு; வண்ணதாசனும் கல்யாண்ஜியும் ஒருவரே என்ற உண்மையைப் புரிந்துகொண்டேன்.
நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நாள் வண்ணதாசனைப் படிக்கத் தொடங்கியபோதுதான், ‘நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம்!’ என்ற வருத்தம் ஏற்பட்டது.
தமிழில் மிக ஆழமாக எழுதக்கூடிய எழுத்தாளர்களில் வண்ணதாசனுக்கு தனித்துவமான இடம் உண்டு. திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்ட இவரின் தந்தை தி.க. சிவசங்கரனும் சாகத்திய அகாதமி விருது பெற்றவர். 2016 இல் ஒரு சிறு இசை என்ற நூலுக்காக வண்ணதாசனும் சாகித்திய அகாதமி பெற்றிருக்கிறார். ஒரே சமயத்தில் கவிதையில் கல்யாண்ஜியாக, புனைஉலகில் வண்ணதாசனாக முத்திரை பதித்த அவருடைய படைப்புக்கள் தனித்துவம் மிக்கவை.

அவருடைய சிறுகதைகளில் இடம்பெறும் விவரணைகள் மிக மிக ஆழமானவை. இயற்கையைப் பற்றியும், மனித உணர்ச்சிகளைப் பற்றியும் மிக நுட்பமாகவும் ஆழமாகவும் எழுதக்கூடியவர். சற்றே நகர்த்தினாலும், ஒரு ஆழமான கவிதையாக உருவாகக்கூடிய சாத்தியம் கொண்ட அபூர்வமான சிறுகதை உலகு வண்ணதாசனுடையது.

சமீபத்தில் வண்ணதாசனின் எழுத்துக்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன என்ற செய்தியை அறிந்தபோது உண்மையிலேயே மனம் குதூகலித்தது.
வண்ணதாசனின் எழுத்துக்களில் பாசாங்கு இல்லை. மிக நுட்பமான சில விஷயங்களை உணர்த்தினாலும், அவற்றின் அடித்தளம் எப்போதும் மனித உணர்ச்சிகள்தான். அவரது சிறுகதை உலகம் மிகப் பெரியது. ஒவ்வொரு கதையும் வாசகனுக்குள் ஒரு மிகப்பெரிய மனத் திறப்பை நிகழ்த்தக்கூடிய இலக்கியச் செழுமையை கொண்டிருக்கும்,
அவரது கதைகளில் இயற்கைக் காட்சிகளை இணைக்கும் விதம் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் வசீகரம் கொண்டது.
இயல்பிலேயே அவர் ஓவியர்
என்பதால், தனது கதைகளில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியையும் கலாபூர்வமாகவும் அதே நேரத்தில் இலக்கிய ஆழத்தோடும் உருவாக்கக்கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது.

அவரைப் பொறுத்தவரையில் எழுத்தும் ஓர் ஓவியம்தான்.
அவருடைய கதைகளில் நான் வாசித்த சில கதைகள் என் மனதை விட்டு என்றென்றும் நீங்காதவை.

அவற்றில் ஒன்று ‘நிலை’.

ஒரு தேர் திருவிழா நாளில், வீட்டில் வேலை பார்க்கும் ஒரு எளிய வேலைக்கார சிறுமியின் தனிமையையும், அவளது உள்ளார்ந்த ஏக்கங்களையும் மையமாகக் கொண்ட கதை அது. வீட்டில் உள்ள அனைவரும் ஊர்வலம் வரும் தேரைப் பார்ப்பதற்காக வெளியே சென்றுவிடுகிறார்கள். போகும்போது அந்த வீட்டையும், உடல்நலமின்றிப் படுத்திருக்கும் பெரிய ஆச்சியையும் பார்த்துக்கொள்ளுமாறு அவளிடம் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்.
அந்த வீட்டில் அவள் எதிர்கொள்ளும் தனிமை; வீட்டைச் சுற்றி நிகழும் சம்பவங்கள்; தேரைப் பார்க்க வேண்டும் என்ற அவளது உள்ளார்ந்த விருப்பம்; உடல்நலம் இல்லாமல் படுத்திருக்கும் பெரிய ஆச்சிக்கும், அவளுக்கும் இடையே உருவாகியிருக்கும் ஆத்மார்த்தமான உறவு — இவற்றையெல்லாம் வண்ணதாசன் மிக இயல்பாகவும் நுட்பமாகவும் ஒரு தேர்ந்த பட்டுப் புடவை நெய்யும் நெசவாளிப் போல பின்னிப்பிணைத்திருப்பார்.
எனக்குத் தெரிந்து தமிழ் சிறுகதை உலகில் கதையின் முடிவு எப்படி கனக்கச்சிதமாக முடிய வேண்டும் என்பதற்கு ஒரு மாபெரும் உதாரணம் – வண்ணதாசனின் “நிலை”
எளிய முடிவு தான். அந்த எளிமை தான் அந்தக் கதையின் பேரழகு. அந்தப் பேரழகில் சிக்கி நெகிழாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அதேபோல ‘தனுமை’ என்ற கதை. அதில் வருகின்ற
ஞானப்பனுக்கும், டெய்ஸி டீச்சருக்கும், தனு என்கின்ற தனலட்சுமிக்கும் தமிழ் புனைவுலகில் மரணமே கிடையாது. அந்தக் கதையைப் படித்த ஒவ்வொருவரின் மனதிலும் அவர்கள் என்றென்றும் நித்தியமாக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

ஞானப்பன் ஓர் அனாதை இல்லத்தின் தோப்பில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கிறான். எப்போதும் மரங்கள் நிறைந்த சூழலில் அமர்ந்து படிக்கும் வழக்கமுடைய அவன், அங்கேயே அமர்ந்து படிப்பதற்கு மிக முக்கியமான காரணம் — சற்றுக் கால் தாங்கி நடக்கக்கூடிய தனு என்ற இளம்பெண்.
அவளுக்காக ஒருமுறை வேலி படலை எடுத்துக்கொடுத்து உதவுவதன் மூலம் தனது காதலை வெளிப்படுத்த முனைகிறான் ஞானப்பன். ஆனால், அந்தக் காதலை அவனால் முழுமையாகச் சொல்லிவிட முடியவில்லை.
இன்னொரு பக்கம், டெய்ஸி டீச்சர் ஞானப்பனை விரும்புகிறாள். எப்போதும் ஞானப்பனைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் டெய்ஸி டீச்சரின் காதலும், ஞானப்பனின் காதலைப் போலவே சொல்லப்படாததும், ஒருதலையாகவும் இருக்கிறது.
இந்த இரண்டு காதல்களுக்கும் நடுவே வண்ணதாசன் வரைந்துகாட்டும் செடிகளும் முட்களும் , மழையும் இணைந்த இயற்கையும், மனித உணர்ச்சிகளும் இணைந்து அந்தக் கதையை ஒரு காவியமாக்கி விடுகின்றன.

மற்றொரு கதை ‘சமவெளி’.
இந்தக் கதையின் கதாநாயகன் ஓர் ஓவியம் தீட்டிக்கொண்டிருக்கிறான். ஏறக்குறைய தனது படைப்பாற்றலின் உச்சத்தில் அவன் உருவாக்கிய படைப்பு அது.
வண்ணதாசனின் புகழ்பெற்ற வரிகள் இடம்பெறும் கதையும் இதுதான்:

‘எதுவும் தாமதமாகிவிடவில்லை. இப்போது இங்கிருந்து தொடங்கினால் கூட எங்கோ போய்ச் சேர்ந்துவிடலாம்.’

அந்த ஓவியத்தை வரைந்து முடித்துவிட்டு, தன்னைப் பற்றியும் தனது படைப்பைப் பற்றியும் பெருமிதமாக நினைத்துக்கொண்டிருக்கிறான் கதாநாயகன். அப்போது மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டு களைப்புடன் வீடு திரும்பும் தனது மனைவியை எதிர்கொள்கிறான்.
இதற்கு நடுவே அந்த வீட்டின் சூழல், அவனது மனைவியின் குணாதிசயங்கள், அன்றாட வாழ்க்கையின் மிகச் சாதாரணமான நிகழ்வுகள் என்று அனைத்தையும் மிக இயல்பாகப் விவரித்து வரும் வண்ணதாசன், ஒரு கட்டத்தில் அனைத்து சங்கடங்களும் நிரம்பிய எளிய மனித வாழ்க்கையில் எப்படிப் பெருமிதங்கள் கரைந்துபோகின்றன என்பதை மிக அற்புதமாக எழுதியிருப்பார்.

வண்ணதாசன் தான் எழுதிய ஒவ்வொரு படைப்பிலும் தனித்துவத்தை நிலைநாட்டுகிற அதே நேரத்தில், இயற்கையின் அழகியலையும், சூழ்நிலைகளின் ஆழத்தையும், மனிதர்களின் அசைவுகளையும் காட்சிப்பூர்வமாக விவரிப்பதில் அவருக்கு இணையானவர்கள் மிகச் சிலர்தான்.

அவரது கதைகள் அனைத்துமே பாலு மகேந்திராவின் திரைப்படங்களைப் போன்றவை. எதையும் காட்சிப்பூர்வமாக அணுகுவது; அதே நேரத்தில் அந்தக் காட்சிக்குள் ஓர் ஆழமான மனித உணர்வை மறைத்து வைப்பது —
காட்சியில் பூர்வமாகவும் கலாபூர்வமாகவும் தமிழ் புனைஉலகில் தனித்த இடம் கொண்ட வண்ணதாசனுக்கு இந்த ஆண்டு 81 வயதாகிறது.

வண்ணதாசனின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கும்போது வாசகனுக்குள் ஒரு விசித்திரமான வேதியியல் மாற்றம் நிகழ்கிறது.
அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஆழமாகிக்கொண்டே போகிறார்கள்.
எதையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குகிறார்கள்.
தென்படும் எல்லாவற்றிலும் கலையின் மிச்சங்களைத் தேடத் தொடங்குகிறார்கள்.
ஒரு மரத்தின் நிழல். ஒரு மழையின் வாசனை. வீட்டின் வாசலில் காத்திருக்கும் ஒரு சிறுமி. தனிமையில் நகரும் ஒரு பெண். சொல்லப்படாமல் நின்றுபோகும் ஒரு காதல். அன்றாட வாழ்க்கையின் மிகச் சாதாரணமான ஒரு தருணம். என இவை எதுவுமே அவரிடம் வெறும் நிகழ்வுகளாக இருப்பதில்லை. அவற்றுக்குள் இருக்கும் ஊடுபாவாய் இருக்கும் கலைத்தன்மையை தேடி எடுத்துக்கொண்டு, அதை மிக மென்மையாக வாசகனின் மனத்தில் கடத்தி விடுகிறார்.

வண்ணதாசனின் எழுத்துக்கள் ஆரவாரம் மிக்கவை அல்ல.
அவை நதியின் மெதுவான ஓட்டத்தைப் போன்றவை.
சலனமற்றுப் பின்னிரவில் உறைந்து  இருக்கும் நிலாக் காலத்து ஏரியின் நடுப்பகுதியைப் போன்றவை.
அவற்றில் பெரும் சத்தங்கள் இல்லை. பெரும் ஆரவாரங்கள் இல்லை. பெரும் பாவனைகள் இல்லை. ஆனாலும் அது தரும் அனுபவம் போல வேறு எதுவும் இல்லை.

வண்ணதாசனை வாசிப்பது என்பது வெறுமனே ஒரு எழுத்தாளனை வாசிப்பது அல்ல.
நம்மையே இன்னும் கொஞ்சம் ஆழமாக வாசித்துக்கொள்வது.
நாம் இதுவரை கவனிக்காமல் கடந்து வந்த மனிதர்களையும், நிகழ்வுகளையும், இயற்கையையும், நம்மைச் சுற்றியிருக்கும் மிகச் சாதாரணமான வாழ்க்கையையும் புதிதாகப் பார்க்கக் கற்றுக்கொள்வது.

வண்ணதாசனின் எழுத்து நம்மை உரக்கக் கூப்பிடுவதில்லை.
மாறாக, நம்மை அமைதியாக அருகில் உட்கார வைத்துக்கொண்டு, தோளில் கை போட்டு
‘எளிமையானதுதான். ஆனால் இதை என்றாவது கவனித்திருக்கிறாயா ? ’ என்று கேட்கிறது.

அந்தக் கேள்விக்குப் பிறகு, இந்த உலகை நாம் வேறு கண்களால் பார்க்கத் தொடங்குகிறோம்.

மணி செந்தில்.​