ஒரு நாள் இலக்கிய நணபர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு வந்தது. அப்போது என் பக்கத்தில் இருந்த ஒரு மூத்த எழுத்தாளர் வெகு சாதாரணமாக விடுதலைப் புலிகளிடம் இருந்த பணத்திற்கு ஏதேனும் ஒரு தீவை விலைக்கு வாங்கி கொண்டு தங்களுடன் வரும் மக்களோடு அங்கே சென்று ஒரு நாட்டை கட்டியிருக்கலாமே என்று கேட்டார். கேள்வி மிக எளிதுதான். அவர் என்னிடம் கேட்க விரும்பியது ஏன் அதே நிலத்தை தக்கவைக்க பிடிவாதமாக உயிரை விடுகிறார்கள் என்பதுதான்.
அவர் ஒரு முற்போக்கு பிராமணர். பூணூலெல்லாம் அணிந்துக் கொள்ள மாட்டார் . மார்க்சிய சித்தாந்தத்தில் நாட்டமுடையவர். அவர் கேட்ட கேள்வி அங்கு இருப்பவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் நியாயம்தானே என்று யோசிக்கும் அளவிற்கு குழப்பியது.
நிலத்திற்காக உயிரையா இழப்பார்கள்.. என்ற கேள்விக்கு ஒரு பூர்வக்குடி மனிதனால் என்ன பதில் சொல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?
ஆம். நிச்சயம் உயிரை விட தாய்நிலம் மகத்தானது. அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால் அந்த அறிவு ஜீவி பார்ப்பனரால் என் பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவரது தவறும் இல்லை. பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கு தாய் நிலப் பற்று இருப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு என தாய்நிலம் என்று எதுவும் இல்லை. தாய்நில நேசிப்பதென்பது பூர்வ குடிகளின் தனித்துவக் குணம். எந்த தாய்நிலத்தில் ஒரு பூர்வக்குடி பிறந்தானோ அதே தாய் நிலத்தில் தான் இறக்கவும் அவன் விரும்புகிறான். அந்த மண்ணோடு அவன் மண்ணாக மட்கி மாறுகையில் தான் அவன் நிறைவுறுகிறான்.
ஒரு பூர்வக்குடியின் இந்த மகத்தான தாய் நில நேசிப்பு உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் , அரசியல் ஆகியவைகளால் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதை ஒரு புனைவிற்கு அப்பாற்பட்ட எதார்த்த அழகியலோடு சொல்லப்பட்டிருக்கிற திரைப்படம்தான் மேற்குத் தொடர்ச்சி மலை.
திரைப்படம் என்பது ஒரு புனைவிற்கு முடிந்தளவு நேர்மை செய்கிற காட்சி அழகியல் ஊடகம். தன் முன்னால் விரிகிற அந்தக் காட்சியில் பார்வையையும் ஒரு பாத்திரமாக உணரவைத்து அவனையும் உயிரோடு அதில் உலவவைத்து… திரையோடு ஒன்றிட வைக்கும் மகத்தான ஒரு வித்தை தான் திரைப்படம். அந்த வித்தையை மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக நிகழ்த்தி இருக்கிறது.
அந்த மலை வனம். பூச்சிகளின் ரீங்காரம். பறவைகளின் ஓசை. பசும் ஈரம் நிறைந்த ஏற்ற இறக்கமான வழித்தடங்கள். எப்போதும் வீசிக் கொண்டிருக்கிற ஊதற்காற்று, என திரையரங்கு குள்ளேயே நம்மை மலை வனம் ஒன்றின் பசுமை மணத்தை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. அவருக்குப் பக்கபலமாக ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வரும், இசைஞானி இளையராஜாவும் செயல்பட்டிருக்கிறார்கள்.
கால்வலியும் , களைப்பும் நேர வைக்கிற ஓங்கி உயர்ந்த நெடிய மலை. அதில் தன்னந்தனியனாக தகவல் சொல்பவனாக திரியும் ரங்கசாமி. அவனுடனேயே அலையும் அந்த மலை படுகையில் ஒரு சிறு நிலம் வாங்கும் அவனது கனவு. படம் முழுக்க மலைகளில் வாழுகிற எதார்த்த மனிதர்கள் . மூட்டை தூக்கி தூக்கியே ரத்தம் வருமளவிற்கு இருமிச் சாகும் அந்த முதியவர், மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, தன் கணவனுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிற அந்த எளிய மலை கிராமத்து பெண், கோபமும் எரிச்சலும் இறுதியில் கண்ணீரும் நிரம்பிய அந்த கங்காணி, ஆவேசமும் கொள்கைப்பிடிப்பும் நிறைந்த அந்த செங்கொடி சகா, என படம் முழுக்க உலவுகிற நிஜ மனிதர்களின் உணர்ச்சிக் குவியலே இப்படத்தின் திரைமொழி.
கதையை சில வரிகளில் நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த வாழ்க்கை தருகிற வலியை யாரால் விவரிக்க முடியும்… கதை இதுதான். சிறிய நிலம் வாங்க ஆசைப்படுகிற மலை வாழ் இளைஞன் ரங்கசாமி. வீட்டில் உள்ள அனைத்தையும் விற்று ..மனைவியின் தாலியையும் அடமானம் வைத்து ,நிலம் வாங்க ஏலக்காய் முட்டையை சுமந்து செல்லும் போது அதைச் சற்றே வைத்துவிட்டு நிலத்தை குடும்பத்தோடு வேடிக்கை பார்க்கும் ஒரு பொழுதில் மூட்டை சரிந்து பாதாளத்தில் விழ அவனது கனவு நொறுங்குகிறது. பிறகு தந்தைக்கு வேண்டிய ஒருவரால் அந்த நிலம் வாங்கும் கனவு கடனாக சாத்தியப்பட.. அந்நேரத்தில் எஸ்டேட்டை மூடி தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறான் முதலாளி. தொழிலாளி வர்க்கத்திற்காக நேர்மையாக குரல் கொடுக்கும் உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் இளைஞனுடன் அந்த முதலாளியையும் அவனுக்குத் துணை போன போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரையும் கொன்றுவிட்டு சிறை படுகிறான் ரெங்கசாமி. சில வருடங்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது தன்னிடத்தில் இருந்த ஒரே சொத்தான நிலத்தை விவசாயம் செய்வதற்காக மனைவி வாங்கிய கடனுக்காக அந்த நிலமும் பறிபோக.. என்ன ஆனது ரெங்கசாமியின் கனவு என்பது தான் மேற்குத் தொடர்ச்சி மலை.
பூர்வ குடிகள் நிலங்களை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் நிலத்திற்கும், இயற்கைக்கும் ,காடுகள் ,மலைகள் ,சோலைகள் ,தாவரங்கள் என தன்னைச் சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என நம்பி அந்த வனத்தையும் அந்த மலையையும் மட்டுமே உயிராக நினைத்து வாழ்கின்ற எளிய மக்கள் அவர்கள்.
அந்த மலையைத் தவிர.. வனத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அவர்களை பலி கொடுத்தே இங்கே நவீன இந்தியா கட்டப்படுகிறது. வலிமையான பாரதத்தை உருவாக்க பல எளிய மனிதர்களின் வாழ்வும் , கனவும் பலி கொடுக்கப்படுவதை தான் நாம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணீர் மல்க பார்க்கிறோம்.
இப்படத்திற்கு உயிரே இப்படம் கொண்டிருக்கும் கனத்த மௌனம் தான். அதை இளையராஜா முற்றிலும் உணர்ந்திருக்கிறார். மகத்தான அந்தக் கலைஞனுக்கு எங்கெங்கே இசைப்பது என்பதைத் தாண்டி எங்கெங்கே மெளனிப்பது என்பது மிக நுட்பமாக கைவந்த கலையாக இருக்கிறது. சமீபத்திய நம்பிக்கை வரவு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். முழு மலையையும் அப்படியே திரைக்குள் கொண்டு வந்து இயற்கை வெளிச்சங்களோடு படத்தின் அழகியலை மெருகேற்றிருக்கிறார்.
மலையாள திரைப்படங்களில் மட்டுமே நாம் கண்டுணர்ந்த எதார்த்த அழகியல் தமிழ் திரையிலும் ஒளிரத் தொடங்கி விட்டது என்பதற்கான நம்பிக்கைக் கீற்று தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த உலகமயமும் , சுயநல அரசியல் முறைமைகளும் ஒரு மலை வனத்தின் மென் காற்றாய்.. நிலத்தின் உரிமையாளனாய் .. திரிந்துகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு யூனிபார்ம் மாட்டி வாட்ச்மேன் ஆக்கிய கொடும் கதை தான் வீதிக்கு வீதி , ஊருக்கு ஊர் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆவணப்படுத்தியதில் மேற்குத் தொடர்ச்சி மலை முழு வெற்றி அடைந்திருக்கிறது.
இயக்குனர் லெனின் பாரதிக்கு கை நிறைய மலை வனப் பூக்களும்..வாழ்த்துகளும்..
இப்படிப்பட்ட படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.