ஏக இறைவனான அல்லாஹ் “தனது கருணையை எப்படி மனிதர்களுக்கு காட்டினார்..?” என்ற கேள்வியை “lion of the desert” (1981) என்ற திரைப்படத்தில் உமர் முக்தர் தனது மாணவர்களிடத்தில் கேட்பதாக ஒரு காட்சி வரும்.

ஒரு மாணவன் ‘பேச்சு’ என்று சொல்லுவான். அவர்களுக்கு உமர் முக்தார் அதை விளக்க முயற்சிப்பார். “அல்லாஹ் மனிதர்களுக்கு தன் கருணையை தான் வழங்கிய சமநிலை மூலம் காட்டினார். சமநிலை தவறும் பட்சத்தில் எதுவும் கீழே விழுந்துவிடும்..” என விளக்கும் உமர் முக்தார் லிபிய நாட்டின் ஆகச்சிறந்த புரட்சியாளர்.

ஆம்.. சமநிலை தவறிய சமூகத்தில் தான் புரட்சி வெடிக்கும்.

உமர் முக்தார்.

இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக லிபியா நடத்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளம் அவர்.

அதே லிபியா அவரது மரணத்திற்குப் பிறகு போராடி விடுதலை அடைந்த பிறகு, கடந்த 2009ல் லிபிய நாட்டின் அதிபராக இருந்த மம்மர் கடாபி அரசு முறை பயணமாக இத்தாலியின் தலைநகரம் ரோமிற்கு சென்றபோது, தனது சட்டையின் முகப்பில் உமர் முக்தாரின் படத்தை வைத்துக்கொண்டு, உமர் முக்தாரின் வயதான மகனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.

எந்த இத்தாலியின் ஆதிக்கத்திற்கு எதிராக உமர் முக்தார் தன் வாழ்நாள் முழுக்க போராடினாரோ, அதே இத்தாலியின் தலைநகரத்தில், லிபிய நாட்டின் தலைவர் தன் சட்டை பையின் முகப்பில் தன் நாட்டின் ‘புரட்சிகர பெருமித அடையாளமான’ உமர் முக்தாரை சுமந்து சென்றதும், உமர் முக்தாரின் மகனை கூடவே அழைத்து சென்றதும் உலகத்தின் விழிகளை பிரமிக்கச் செய்தன.

அதே லிபிய நாட்டு அதிபர் மம்மர் கடாபிக்கு எதிராக உள்நாட்டு கலகப் படைகள் போராட்டம் நடத்திய போது அந்தப் படைகளின் ஒரு படைப் பிரிவிற்கு பெயர் “உமர் முக்தார் படையணி”.

இதுதான் வரலாற்றின் விசித்திரம்.

ஆதிக்கம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்த்து போரிடும் ஆற்றல்களுக்கு திரு உருவாக உமர் முக்தார் மாறி இருந்தார்.

உமர் முக்தாரின் இறுதி கால வாழ்க்கையை பற்றி தயாரிக்கப்பட்ட படம் தான் “பாலைவனச் சிங்கம்” என தமிழில் அழைக்கப்படும் ” lion of desert ” . இந்தப் படத்தை இயக்கியவர் மௌஸ்தபா அல் அக்காட் ( director Moustapha Akkad.) என்கிற புகழ்பெற்ற சிரியா நாட்டின் இயக்குனர். இவர் இறைத்தூதர் முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை பற்றி” தி மெசேஜ் ” என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தையும் இயக்கியவர். கடந்த 2005 ல் ஜோர்டன் நாட்டில் நடந்த குண்டுவெடிப்பில் மெளஸ்தபா தன் மகளோடு கொல்லப்பட்டார்.

பாலைவனங்களைப் பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் மிக முக்கியமான திரைப்படம் புகழ்பெற்ற இயக்குனர் டேவிட் லீன் இயக்கத்தில் 1962ல் வெளியான லாரன்ஸ் ஆப் அரேபியா. இந்தத் திரைப்படத்தை அந்த காலத்தில் திரையரங்குகளில் பார்த்தவர்கள் உண்மையிலேயே பாலைவனத்தில் இருப்பது போல உணர்ந்து மிகுந்த தண்ணீர் தாகத்தில் தவித்ததாக செய்திகள் உண்டு.

புனிதப் போராளிகளுக்கு எப்போதுமே இஸ்லாமிய மார்க்கம் உயர்ந்த இடம் தருகிறது. சொந்தத் தாய் மண் மீது நிகழ்ந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக போரிடும் மாவீரர்களுக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு என கூறும் புனித குர்ஆன் அது ஒவ்வொருவரின் கடமை என்றும் வரையறுக்கிறது.

ஆழ்ந்த இஸ்லாம் பற்றுள்ள, குர்ஆன் பேரறிஞராக திகழ்ந்த உமர் முக்தார் ஏறக்குறைய 20 ஆண்டுகள் இத்தாலி அரசதிகாரத்திற்கு கடுமையான போராட்டங்களை நடத்தியவர். அவருக்கு லிபிய நாட்டு பாலைவனம் என்பது இத்தாலி நாட்டு ராணுவம் சிக்கிக் கொள்கிற பொறி. இத்தனைக்கும் ஒரு எளிய ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு மிக ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்த உமர் முக்தார் இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியை தன் அளப்பரிய வீரத்தால் நிம்மதி இழக்கச் செய்தவர்.

இயக்குனர் மெளஸ்தபா இயக்கிய இந்தத் திரைப்படத்தில் தமிழர் தேசிய இனம் தொடர்பு அடைவதற்கான பல செய்திகள் உண்டு. குறிப்பாக போராடிக் கொண்டிருக்கின்ற போராளி இயக்கங்களை சர்வாதிகாரம் எப்படி தந்திரமாக கையாளும் என்பதற்கு இந்த திரைப்படம் பல செய்திகளை விவரிக்கிறது. முதலில் அதிகாரம் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள போராளிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும். அந்தப் பேச்சுவார்த்தையில் போராளிகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தரம் தாழ்ந்த அவர்களை மரியாதை குறைவாக கருத வைக்கிற முடிவுகளை அவர்கள் மீது திணிக்க முயற்சிக்கும். அவர்கள் இதைப் புரிந்து கொண்டு மறுக்கும் காலத்திற்குள்ளாக சர்வாதிகாரம் தனது பலத்தை அதிகரித்துக் கொண்டு போராளிகளுக்கு எதிரான இறுதிப் போரை தொடங்கும்.

எப்படி 2000 -2002 காலகட்டங்களில் அமைதி பேச்சு வார்த்தை என்ற பெயரில் தமிழின போராளிகளை திசை திருப்பிவிட்டு, பலவீனமாக கருதப்பட்ட தனது பலத்தை சிங்கள பேரினவாதம் உலகம் எங்கும் சென்று எப்படி அதிகரித்துக் கொண்டதோ அதேபோல தந்திரத்தை தான் காலம் காலமாக சர்வாதிகார அரசுகள் செய்து வருகின்றன.

அசலான போராளித் தலைவர்கள் சில அடிப்படையான தகுதிகளை கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் சரணடைய மாட்டார்கள். தங்களது சுய வாழ்வைப் பற்றி ஒருபோதும் அவர்கள் ஒருபோதும் எண்ண மாட்டார்கள். இறுதிவரை உறுதியாக நின்று கொண்ட லட்சியத்திற்காக போராடுவார்களே ஒழிய ஒரு போதும் எதிரியிடம் சமரசம் அடைய மாட்டார்கள்.

உமர் முக்தாரின் வாழ்க்கையும் அவ்வாறே அமைந்தது. பாலைவனச் சிங்கம் என தமிழில் youtube இல் கிடைக்கின்ற இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்ற அந்தோணிக் குயின் ஒரு மாபெரும் நடிகர். அந்த கதாபாத்திரமாகவே மாறி நமக்கு உமர் முக்தாரை ரத்தமும் சதையுமாக காட்டியவர். புகழ்பெற்ற நடிகர் ஆலீவர் ரீடு இத்தாலி நாட்டு தளபதியாக நடித்து உமர் முக்தாருக்கு மதிப்பு செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமரசம் இல்லாமல் மரணத்திற்கு முன்னால் சிறிதும் அஞ்சாமல் போரிடுகிற உமர் முக்தாரின் வாழ்க்கை நமக்கு நம் தேசியத் தலைவர் மேதகு அவர்களின் வாழ்க்கையை நினைவூட்டுகிறது. உமர் முக்தாரின் வாழ்க்கை எப்படி எதிரிகளால் கூட மதிக்கப்பட்டதோ, அதேபோல நம் தலைவரின் வாழ்க்கையும் எதிரிகளால் மதிக்கப்பட்டது. இன்றளவும் சிங்கள பேரினவாத அரசால் ஒரு குற்றச்சாட்டு கூட நம் தலைவருக்கு எதிராக சொல்ல முடியாத அளவிற்கான உன்னத வாழ்க்கையை அந்த அறம் வழி நின்ற சான்றோன் வாழ்ந்தார்.

இறுதியாக இந்த திரைப்படத்தில் உமர் முக்தார் தூக்கில் இடுவதற்கு முன்பாக தன் தாய் நிலத்தின் உயர்ந்த மலை சிகரங்களை அவர் மிகுந்த கனிவோடு பார்க்கின்ற அந்தக் காட்சி நெகிழ வைக்கக் கூடியது. தாய் நிலத்தின் விடுதலைக்காக போராடிய நம் இனத்துப் போராளிகள் பின்னால் இறுக்கிக் கட்டப்பட்ட தங்களது உள்ளங்கைகளில் தாய் மண்ணை இறுக்கிப் பிடித்து வைத்திருந்த அதே உணர்வு.

பலமுறை இந்த திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். எண்பதுகளில் சென்னையில் திரையரங்கில் இந்த திரைப்படத்தை முதன்முதலாக பார்ப்பதற்கு என் தந்தை அழைத்துச் சென்றார். எத்தனை முறை பார்த்தாலும் அதே உணர்ச்சியை அந்த திரைப்படம் மானுடச் சமூகத்திற்கு வழங்கிக் கொண்டே இருப்பது தான் அதன் செவ்வியல் தன்மை.

படம் பார்த்து முடித்து விட்ட பின்னரும் பாலைவன மண் புழுதி பறக்க குதிரைகளில் பாய்ந்து வருகிற அந்தப் போராளிகளின் உரத்த குரல் காதுகளில் கேட்டுக் கொண்டே இருப்பது சிலிர்க்க வைக்கக்கூடியது.

எதிரிகளால் மன்னிக்கக் கூடிய வாழ்க்கையை எந்த வீரனும் விரும்ப மாட்டான். ஆனால் எதிரிகளால் கூட மதிக்கப்படும் வாழ்க்கையை தகுதி வாய்ந்த வீரன் தன் வாழ்நாளில் பெற்றே தீருவான்.

அதற்கு திரையில் “உமர் முக்தார்”

அசலில் நம் தேசியத் தலைவர் “மேதகு”.

யூட்யூபில் இலவசமாக தமிழில் காணக்கிடக்கிறது. அவசியம் காணுங்கள்.