பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா இறந்துவிட்டார் என்ற செய்தி அறிந்த போது சொல்ல முடியாத துயரத்தை மனம் அடைந்தது.

அவருடைய குரல் வெண்கல குரல். ஒலிவாங்கிக்கு முன்னால் அமர்ந்து அவர் கச்சேரிக்கு தயாராகும் முறைமையை பார்ப்பதற்கே அவ்வளவு சிறப்பாக இருக்கும். “தமிழ் தமிழ் தமிழ்” என்று ஒலிவாங்கியை அவர் பரிசோதித்து ‌ தோளில் கிடக்கும் துண்டைச் சரி செய்தவாறே , சின்ன உறுமலுடன் ” செந்தமிழை செந்தமிழ் நாட்டை சிறை மீட்க” எனத் தொடர்ந்து “கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே ! ” என‌ அவர் பாடத் தொடங்கும் போது கம்பீரம் என்கிற சொல்லுக்கு பொருள் நமக்கு தெரிய வரும். அவருடைய பாரதிதாசன் பாடல் வரிசை மிகவும் புகழ்பெற்றது.

“மாங்கிளியும் மரங்கொத்தியும் வீடு திரும்ப தடை இல்ல.. நாங்க மட்டும் உலகத்திலே கூடு திரும்ப வழியில்ல”என அவர் பாடும் போது கலங்காத கண்களில்லை. அதேபோல் “அழகான அந்த பனைமரம், அடிக்கடி என் நினைவில் வரும்” என்ற பாடல் என அடுத்தடுத்து பாடல்கள் பொழியும்போது நமது மரபணுவில் எங்கோ மறைந்திருக்கும் இன உணர்வும் மொழி உணர்வும் கொப்பளிக்க தொடங்கும்.

தேசியத் தலைவர் மேதகு அவர்கள் மறைந்து விட்டார் என்கிற செய்தி காட்டுத்தீ போலப் பரவ தொடங்கிய போது, பெரும்பாலான தமிழ் உணர்வாளர்களுக்கு உண்மையிலேயே மனப்பிறழ்வு ஏற்பட்டுவிட்டது. சிலர் இரவு முழுக்க தூங்காமல் அலைந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுது ‌ தீர்த்தார்கள். சிலர் குடியில் வீழ்ந்தார்கள். அப்போதுதான் மாமன் மறத்தமிழ் வேந்தன் எழுதிய “என் தலைவர் சாகவில்லை, என்றும் புலி ஓய்வதில்லை” என்ற பாடல் ‌ ஐயாவின் குரலில் வெளிவந்த போது அது பலரின் உயிரையும் மனநிலையையும் காத்தது.

உண்மையில் ஐயாவின் குரல் அண்ணன் சீமான் என்று சொன்னது போல தேனிசை என்ற சொல்லுக்கு ஏற்றது போல மெல்லிய குரல் அல்ல. ஏழு கட்டை குரல் என்பார்கள். அதுபோல

அது ஏறக்குறைய முழக்கம் தான். ஆனால் அந்த முழுக்கத்தில் நுட்பமான இசைமை கலந்திருப்பது என்பது அவருக்கு மட்டுமே வாய்த்த பெருமை.

எடுத்துக்காட்டாக “பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன்..” என்ற ஒரு பாடல். அண்ணன் சீமான் உள்ளிட்ட பலருக்கும் மிகவும் பிடித்த பாடல் அது. “சலுகைக்கு அவன் என்றும் தலையாட்ட மாட்டான்..”என்ற வரிகளை அவரின் குரல் கடக்கும் போது அப்படியே ஒரு நெகிழ்வுத் தன்மையை பூசிக்கொள்ளும் பாருங்கள்.. இன்றும் கேட்டுப் பார்த்தால் நம் கண்கள் கலங்குவதை யாராலும் தடுக்க முடியாது.

ஒரு நள்ளிரவில் தஞ்சை வழக்கறிஞர் அண்ணன் நல்லதுரை அலுவலகத்தில் அமர்ந்து அந்தப் பாடலைக் கேட்டபோது .. அண்ணன் நல்லதுரை கண்கள் கலங்கி அழுது.. அது ஒரு தொற்று போல அருகே அமர்ந்திருந்த எல்லோருக்கும் பரவி எல்லோரும் கலங்கினோம்.

ஏனெனில் தேனிசை ஐயாவின் குரல் என்பது தேசியத் தலைவர் மேதகு அவர்களின் முகத்தை அப்படியே நம் காதுகளில் பாய்ந்து நாம் நினைவுகளில் வரைந்து காட்டும் வித்தை கொண்டது.

மாவீரர் தினங்களில் அவருடைய குரல் தான் அங்கே கூடியிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வினை ஒழுங்கமைத்து அந்த தினத்திற்கான மனநிலையை உருவாக்கும். நமது தாயக நிலத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள் பயிற்சி எடுக்கும் போது அவருடைய பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கின்றன. அதனால்தான் அவர் பாசறைப் பாணர்.

போர்க்களத்திற்கு செல்லும் போது ஒரு போராளி கையில் துவக்கோடு , எங்கள் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் பாடல்களையும் சுமந்து கொண்டு தான் போரிடச் சென்றிருக்கிறான். ஐயாவின் குரலும் அந்தப் பாடலும் அந்த வரிகளும் போர் கருவிகளாக போராளிகளுக்கு திகழ்ந்து இருக்கின்றன என நினைக்கும் போது உலகத்தில் வேறு எந்த பாடகருக்கும் கிடைக்காத பெருமையை எங்கள் ஐயா பெற்றுவிட்டார் என்கிற பெருமை நிச்சயம் எமக்கு உண்டு.

அண்ணன் இளங்கோ மற்றும் அன்புத்தம்பி கரிகாலன் போன்றோர் அவரின் தொடர்ச்சியாக இருப்பார்கள். ஆனாலும் அவருக்கு நிகர் யாருண்டு..??

இன்று அவருடைய உடலுக்கு புலிக்கொடி போர்த்தப் பட்ட காட்சியை பார்த்த போது.. எதை அவர் விரும்பினாரோ அதுவாகவே மாறி வாழ்ந்தார் என்று தான் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்நாள் முழுக்க போராட்ட களங்களில் முழங்கிய அந்தக் குரல் எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் சறுக்கலுக்கும் உள்ளாகாமல் என்றும் வாழ்கிற பூரண நித்தியத்தை அடைந்து விட்டது. அந்த வகையில் அவர் முழுமை பெற்ற மனிதர்.

விடுதலையை சமத்துவத்தை இன உணர்வை மொழிப்பற்றை பற்றி தனிப்பாடல்கள் பாடி அதன் மூலமாக தனிநபர் இயக்கமாகத் திகழ்ந்தவர் ஐயா அவர்கள்.

தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த நெருக்கம் அவரிடத்தில் உண்டு. ஒரு முறை அவரிடத்தில் கேட்டேன்.. தலைவரிடத்தில் உங்களுக்கு பிடித்த குணம் என்ன என்று…??

அவரிடம் பிடிக்காதது என்று எதுவுமே இல்லை என்று எல்லோரையும் உணர வைத்தது தான் அவரிடம் பிடித்த குணம் என மிக நுட்பமாக பதில் அளித்தார். அவரைப் பொறுத்த வரையில் தேசியத் தலைவர் மேதகுதான் அனைத்தும். தாயக விடுதலையில் தான் அவரது இறுதித்தாகம் சத்தியமாக இருந்திருக்கும்.

எல்லோரும் ஒருநாள் மறைந்து கடந்த காலத்தின் நினைவுகளாக தேங்கத் தான் போகிறோம். ஆனால் தேனிசை செல்லப்பா போன்றோர் எல்லா காலங்களிலும் குரல்களாக வரிகளாக நின்று யாரோ போராளிக்கு போராட்டக் களத்தில் கருவியாக இருப்பார்கள் என்பதுதான் அவர்களது தனித்துவம். அதன் மூலமாகவே அவர்கள் மரணம் அற்ற பெரு‌ வாழ்வை அடைந்து விட்டார்கள்.

பாசறைப்பாணர் , புலிகளின் குரல், விடுதலை முழக்கம் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு.. எனது புகழ் வணக்கம்.