பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 18 of 56

பரவச வானை உரசிப் பார்த்த எளிய கரங்கள்..

 

 

 

ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை பொறுப்பேற்று நடத்துவது என்பது ஏறக்குறைய‌ முதன்முதலாக தன் ஒரே மகளின் திருமணத்தை பொறுப்பேற்று நடத்துகிற‌ தந்தையின் வலிக்கு நிகரானது. ஆனால் கும்பகோணம் நாம் தமிழருக்கு பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்துகிற அனுபவம் புதிதல்ல என்றாலும்.. இந்த முறை வேறு வகையான மாறிப்போன சூழல்கள்.

வீரத்தமிழர் முன்னணியில் சாமிமலை கூட்டம் ஒரு வருட காலத்திற்கு முன்பே அண்ணன் சீமானால் அறிவிக்கப்பட்டது என்றாலும் நடுவில் ஏற்பட்ட பல சூழல்கள், குடந்தை நகரச் செயலாளர் கார்த்தியின் மரணம் மற்றும் ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் போன்ற பலவற்றால் அதன் வேலைகளை தொடங்கவே முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி இருந்தோம். குறிப்பாக தம்பி கார்த்தியின் மரணம் மிகப் பெரிய உளவியல் சோர்விற்கு என்னையெல்லாம் உள்ளாக்கியிருந்தது. இந்த பின்னடைவுகளுக்கு மத்தியில் தான்
ஜனவரி மாத தொடக்கத்தில் தைப்பூச திருவிழா திருமுருகன் பெருவிழா பணிகள் எங்களுக்கு கட்சித் தலைமையால் மீண்டும் நினைவூட்டப்பட்டது. தொடக்கத்தில் இதை எடுத்து செய்ய முடியுமா என்கின்ற மிகப்பெரிய தயக்கம் சமீபகால சூழ்நிலைகளால் எங்களுக்கு ஏற்பட்டு இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக வீரத்தமிழர் முன்னணியின் பொறுப்பாளர் தம்பி செந்தில்நாதன் இதை நாங்கள் நடத்தியே ஆக வேண்டும் என வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவனோ தஞ்சைக் கோபுரத்தின் உச்சியில் தமிழை ஏற்றி வைக்க உற்சாகமாய் உழைத்தவன். இந்த நிகழ்வையும் வெல்ல வைக்க வேண்டுமென எங்களை தூண்டிக்கொண்டே இருந்தான்.

சாமிமலை மிகச்சிறிய சிற்றூர். அந்த ஊரில் மிகப் பெரிய கூட்டங்கள் நடந்ததில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் அந்த ஊர் மக்கள் நடமாட்டம் இல்லாமல் போய்விடும். அந்த ஊரில் ஒரு மாபெரும் மாநாடு போன்ற ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய சவால். கூட்டத்திற்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளையும் பக்கத்து பெரிய ஊர்களான கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இருந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும்.

இப்படிப் பல சவால்கள். குறுகிய காலம். மிகுந்த பொருளாதார நெருக்கடி.இதையெல்லாம் தாண்டி ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டுமென அண்ணன் சீமானின் அன்பான அறிவுறுத்தல். அந்த மனிதனின் குரல் கேட்ட பிறகு எதையும் செய்துவிட துடிக்கின்ற உளவியல் இயல்பாகவே நமக்கு வாய்த்து விடும். இவ்வாறாக நாங்களும் தயாரானோம்.

காலம் வெவ்வேறு காரணங்களுக்காக தகுதி வாய்ந்த சிலரை தேர்ந்தெடுத்து அதுவாகவே உருவாக்கி அனுப்பி வைக்கிறது.

அப்படி எங்களில் ஒருவனாக இருந்தவன் வீரத்தமிழர் முன்னணி குடந்தை தொகுதி பொறுப்பாளர் தம்பி வெங்கட் ரவி. அதுவரை அவனை சாதாரணமாகத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டவுடன் 100% அதற்கு நேர்மையாக நின்று உறுதியாக உழைத்த தம்பி வெங்கட்டு தான் இந்த நிகழ்வில் நான் கண்டடைந்த மகத்தான ஆச்சரியம். அவனது காலடி படாத இடம் அந்தக் கூட்டம் நடந்த திடலில் எங்கும் இல்லை.
பிளக்ஸ் அச்சிட்டு மேடையை தயார்செய்ததிலிருந்து நிகழ்விற்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடுகள் வரை பல வேலைகளை எடுத்துக் கொண்டு செய்தான்.
அவனே நாற்காலிகளை தூக்கிக் கொண்டு ஓடினான். குடிநீர் குடுவைகளை எடுத்துக்கொண்டு ஓடினான். நிகழ்ச்சி தொடங்கி அண்ணன் வர வேண்டிய நேரம். அப்போதுதான் கவனித்தோம். மைக் பொருத்தப்பட வேண்டிய போடியம் இல்லை.ஒரு நொடியில் எங்களுக்கு உலகமே மாறி போய்விட்டது. இதுவரை அறியாத பதட்டம். இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் இப்படிப்பட்ட தவறு ஏற்பட்டது என்பது எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.உடனே பரபரப்பானோம். தம்பி வெங்கட்டு என்னையும் அழைத்துக் கொண்டு இன்னொரு தம்பியையும் அழைத்துக்கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேராக பறந்தான். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டு இருந்த போடியம் வந்த மினி லாரியை மீட்டெடுத்து தம்பி லிங்க துரையோடு போடியம் மேடையை தூக்கிக்கொண்டு நாங்கள் உள்ளே நுழைந்தபோது அண்ணன் திடலில் நுழைந்தார். உயிர் வந்தது எங்களுக்கு.

இப்படியாக ஒவ்வொரு வேலையிலும் தம்பி வெங்கட்டு உழைத்துக் கொண்டே இருந்தான். கூட்டம் முடிந்த பிறகு அவனை நெஞ்சார தழுவினேன். கண்கலங்கி என்னை இறுக்க கட்டிப்பிடித்தான். நெருக்கடிகள் தான் ஒரு களத்தின் நாயகனை உருவாக்கும் என்பதற்கு அவன்தான் உதாரணம்.

அவனோடு துணையாக நின்ற பல தம்பிகள், பாபநாசம் கும்பகோணம் திருவிடைமருதூர் தொகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் என பலருக்கும் இந்தக் கூட்ட வெற்றியில் பங்கு இருக்கிறது. அதேபோல இறுதிநேரத்தில் நிதி நெருக்கடி மிகுந்த போது அதை ஓரளவுக்கு சரி செய்ய உதவிய ஒருங்கிணைந்த சோழ மண்டலத்தின் நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள், வளைகுடா நாடுகளின் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், வீரத்தமிழர் முன்னணி ஐக்கிய ராச்சிய பொறுப்பாளர்கள் முருகன் சிலைக்கு தொகை கொடுத்து உதவிய கோவை மண்டலச் செயலாளர் அப்துல் வகாப் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

தம்பி முனைவர் செந்தில்நாதன் கடுமையான தனது உடல் நலிவிற்கு மத்தியிலும் எங்களுடன் நின்றான். தேர்ந்த அறிவோடு நிகழ்ந்த அவனது திட்டமிடல்கள் எங்களை வழி நடத்தின.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் செயலாளர் தம்பி தூயவன், சாமிமலை பொறுப்பாளர் பிரபு, வீரத்தமிழர் முன்னணி அப்துல்கலாம், எப்போதும் காவல் துறையோடு மல்லுக்கட்டி ஓடியாடி உழைத்த என் உயிர் இளவல் வழக்கறிஞர் மோ ஆனந்த் , தம்பிகள் , மாவட்ட செயலாளர் அரவிந்தன் ,ஜஸ்டின், திருவிடைமருதூர் தொகுதி செயலாளர் புஷ்பராஜன் , ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா,லிங்கதுரை ,கார்த்திக் நிமலன், அசோக், சக்தி, சிவபாலன், அஸ்வின், பார்த்தா, ஹரி, ராம், ராஜா, சாமிநாதன், மாவட்டத் தலைவர் முருகன், பரணி, விஜி,பிச்சுவா மணி, காளிமுத்து ,பூசாரி வேடமிட்டு கலக்கிய விஜி,முத்து,பழனிவேல் உணவு ஏற்பாடுகள் செய்த மதிபாலா, அருண், விஜய் சங்கர், நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு சென்னையில் இருந்தாலும் தனது உறவினர் மூலமாக மதிய உணவு ஏற்பாடுகளை செய்த ராஜா ராம்தாஸ் என பலருக்கும் இந்த நிகழ்வின் வெற்றியில் பெரும் பங்கு இருக்கிறது.

பெரும் தமிழறிஞர்கள் பெருந்தமிழர் கிருஷ்ணகுமார், இறைநெறி இமயவன், ஆய்வறிஞர் ம.சோ.விக்டர், சத்தியவேல் முருகனார் ஆகியோர் வரலாற்று சிறப்புரைகளை வழங்கி பெருமை சேர்த்தனர்.

இந்த நிகழ்வின் கதாநாயகன் அண்ணன் சீமான். வழக்கம்போல எங்களை கண்காணித்து நிறை குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்தி தன் தமிழால் தகுதி சேர்த்த அண்ணனுக்கு எப்போதும் தம்பிகளாய் உடன் நிற்பதில் பெருமை கொள்கிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்க வேண்டுமென என் உயிர்த் தம்பி மறைந்த குடந்தை நகர செயலாளர் மோ. கார்த்திக் விருப்பப்பட்டான். நிகழ்வு நடக்கும் போது அவனது மூச்சுக்காற்று அங்குதான் உலவியிருக்கும் என எனக்கு நன்கு தெரியும். இந்த நிகழ்வுக்கு ஏற்பட்ட ஒவ்வொரு தடைகளையும் ஒரு இறை போல அரூபமாக நின்று தகர்த்துக் கொண்டே இருந்தான். அவனது கனவிற்கு நிறைந்த எங்களது உழைப்பின் மூலமாக எங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினோம்.

தமிழகமெங்கும் பல ஊர்களிலிருந்து பேருந்துகள் வாகனங்கள் எடுத்துக்கொண்டு எம் நாம் தமிழர் உறவுகள் அந்த சிறிய ஊரில் குவிந்து நிகழ்வினை மாற்றிக் காட்டினார்கள். கும்பகோணத்தையே அதிரச் செய்த காலையில் நடைபெற்ற வேல் ஊர்வலத்தில் இருந்து மாலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் வரை நாம் தமிழர் கட்சி உறவுகள் நாடெங்கிலும் திரண்டு வந்துகொண்டே இருந்தார்கள்.
நிகழப் போகின்ற பெரும் அரசியல் மாற்றத்திற்கு இந்தக் கூட்டமே ஒரு வரலாற்று சாட்சியாக மாறிப் போயிருக்கிறது.

கூட்டம் முடிந்தது. கடுமையான உடல் சோர்வு, எதிர்நோக்கி இருக்கிற பொருளாதார நெருக்கடிகள் என கூட்டம் நடத்துகிற அனைவருக்கும் வருகிற வழக்கமான சிக்கல்கள் எங்களுக்கும் இருந்தன. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு வரலாற்று நிகழ்வில் நாங்களும் உழைத்தோம் என்கின்ற நிறைவு எங்களிடம் என்றும் நிற்கும்.

கூட்டம் முடிந்து அனைவரும் சென்று விட்ட பிறகு எதையோ சாதித்தது போல தம்பி வெங்கட் முகம் நிறைந்த புன்னகையோடு என் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.உண்மையில் அவனைப் போன்ற எளிய தம்பிகள் தான் நாம் தமிழர் கட்சியின் பலம்.

கலையும் நேரம் வந்தது. மிகச்சிலரே அந்த நள்ளிரவில் அந்த திடலில் மீதம் இருந்தோம். எந்த அடையாளமும் இல்லாத இந்த எளிய பிள்ளைகள் ஒரு மாபெரும் கூட்டத்தை நடத்திய பரவசத்தில் முகம் நிறைந்த புன்னகையோடு ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம்.

மீண்டும் இன்னொரு இதேபோன்ற பரவசத்திற்காக, அந்த மகத்தான உணர்ச்சி வெள்ளத்தை மீண்டும் அனுபவிக்கும் லட்சிய வேட்கையோடு எங்களது பயணத்தை அந்த நொடியிலிருந்து அதே இடத்திலிருந்து தொடங்கினோம்.

காலியாக இருந்த அந்த மேடை பதாகையில் கம்பீரமாக நின்ற முருகன் எங்களை சிறு புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அண்ணன் சீமானின் “அன்பு”

அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது.‌ மிகச் சிறிய வீடு.

அந்த வீட்டில்தான் தம்பி அன்பு கிடத்தப்பட்டு இருந்தான். அந்த வீடு கூட தம்பி அன்பிற்கு சொந்தமானது இல்லை. அது அவனது அண்ணன் வீடு . அண்ணன் சீமானையும் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிற நாம் தமிழர் உறவுகளை மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நிறைவுற்று இருந்த அந்த ‌ புன்னகை மாறாத முகத்துடையவன் அமைதியாய் சலனமின்றி படுத்திருந்தான். அவனது இயற்பெயர் சுரேஷோ.. ரமேஷோ.. அண்ணன் சீமான்தான் அவனுக்கு அன்புச்செழியன் என பெயர் சூட்டியிருந்தார்.

உள்ளடங்கிய அந்த நிலத்திலிருந்து ஏதோ ஒரு அழுத்தத்தில் எகிறித் தாவி அன்பு அண்ணன் சீமானை வந்து சேர்ந்திருந்தான். அந்த ஊருக்கு சென்றபோது எனக்குத் தோன்றிய ஒரே ஒரு சிந்தனை.. இங்கிருந்து எப்படி இவன் அண்ணன் சீமானிடம் வந்து சேர்ந்தான் என்பது தான்.

பூர்வக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் அவனுக்கும் அண்ணன் சீமானுக்கும் இருந்த பிணைப்பு பூர்வக் கதைகளுக்கே உரிய காவிய பூர்வமானது.

அண்ணன் சீமானுக்கும் அவனுக்குமான உறவு மிகவும் தனித்துவமானது. அண்ணன் சீமான் என்ன சிந்திக்கிறார் என்பதை அவர் சிந்திக்கும் நொடியின் தொடர்ச்சியிலேயே அன்பு உணர்ந்து கொள்வான். அண்ணன் சீமானுடன் நெருங்கி இருக்கிற எங்களுக்கெல்லாம் அகப்படாத பிரத்யோக அலைவரிசை அவனுக்கு மட்டும்‌ அண்ணனோடு அமைந்திருந்தது.

அதை கண்சாடையாக எல்லாம் அர்த்தப்படுத்த முடியாது. அது ஒரு சிமிட்டல் அவ்வளவே. அந்த மெல்லிய விழி அசைவு அண்ணன் சீமானிடமிருந்து பிறந்த நொடியிலேயே அன்பு புரிந்து கொள்வான். அவர் எத்தனை மணிக்கு எங்கே செல்லவேண்டும் என்பதில் தொடங்கி அவரது உடை உணவு மருத்துவம் என அனைத்திலும் அன்பு முழுமையாய் நிறைந்திருந்து நிறைவேற்றுவான். அதுமட்டுமே அவனது வாழ்க்கை என அவன் அர்த்தப்படுத்தி இருந்தான்.

அவனுக்கு யாரைப்பற்றியும் எவ்வித குறையும் இல்லை. அடுத்தவரைப் பற்றி எந்த குறையும் இல்லாத அவனது ஆன்மா தெய்வத்தின் சாயல் உடையது. எவரைப் பற்றியும் அண்ணனிடம் அவன் தவறாக சொன்னதாக எங்களுக்கு தகவல் இல்லை. அதேபோல் அண்ணனிடம் அவனுக்குள்ள நெருக்கத்தை எங்கேயும் அவன் பயன் படுத்திக் கொண்டதில்லை. அவனது ஒரே தேவை.. அண்ணனின் நலம்.

ஒரு அரசியல் தலைவரின் ஓட்டுநர் என்கிற பொறுப்பு சாதாரணமானதல்ல. தொடர்ச்சியான நள்ளிரவு பயணங்கள், கடுமையான அலைச்சல்கள், ஓய்வின்றி கடும் உழைப்பை கோருகிற சூழல்கள் என மாபெரும் சவால்களை கொண்ட அந்த பொறுப்பினை அன்பு புன்னகையோடு நிர்வகித்து வந்தான்.

2016 சட்டமன்ற தேர்தல். ஒரு நாளைக்கு அண்ணன் சீமான் குறைந்தது 5 கூட்டங்கள் பேச வேண்டும். ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் பயணத்தொலைவு உள்ள பகுதிகள். குறித்த நேரத்திற்கு அண்ணன் சென்றாக வேண்டும். வேட்பாளர்களும், மக்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். அண்ணன் உணர்ச்சி வேகத்தில் ஒரு ஊரில் அதிக நேரம் பேசி விட்டால் அடுத்த ஊரின் கூட்டம் பாதிக்கப்படும். மேடு பள்ளமான சாலைகள், சாலை விதியை சற்றும் மதிக்காமல் எதிரே வரும் வாகனங்கள் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சீறிப்பாயும் அந்த வாகனம் பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டும். ஏனெனில் உள்ளே இருப்பவர் எதிர்கால தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை. இதையெல்லாம் உணர்ந்து கொண்டு அன்பு அண்ணன் சீமானின் கருப்பு நிற அந்த வாகனத்தை ஒரு பறவையாக கருதி அவனுக்கே உரிய கவித்துவ ஓட்டுதல் மொழியோடு ஓட்டும்போது பார்க்கிற எங்களுக்கு அவ்வளவு பரவசமாக இருக்கும். அந்தத் தொலை தூரப் பயணங்களில் அண்ணன் ஓய்வு எடுத்துக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருக்கும்போது அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரேக்கை அழுத்தும் போது கூட நாசூக்காக அழுத்தி வேகம் எடுக்கிற அந்த அழகு அண்ணன் மீதான அவன் கொண்டிருந்த தாய்மைக்கு நிகரான மகத்தான பேரன்பின் வெளிப்பாடு.

அண்ணன் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அன்புவின் அலைபேசி எண் என் அலைபேசி திரையில் ஒளிரும். அண்ணன் விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார்கள். நீங்கள் எங்கே அண்ணா இருக்கிறீர்கள்.. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அண்ணன் திருச்சி வந்துவிடுவார். அதற்கு முன்பாக நீங்கள் விமான நிலையம் சென்று விடுவீர்களா என்றெல்லாம் தொடர்ச்சியாக கேள்விகளை அன்பு வைத்துக் கொண்டே போவான். அவன் திருப்திப்படும் வரை நாங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அதேபோல அண்ணனோடு அவன் பயணிக்கும் காலங்களில்.. அண்ணன் குளித்துவிட்டு வரும்போது அவரது உடைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், என அனைத்தும் ஒருவித ஒழுங்கில் அன்பு வைத்திருப்பான். அந்த ஒழுங்கு அவனுக்கு மட்டுமே உரியது.

தேவையற்ற ஒரு சொல்லை அன்பு பேசியதாக நான் கவனித்ததில்லை. என்னுடைய பதிவுகளை அவனுக்கு பகிரியில் அனுப்பும் போதெல்லாம் படித்துவிட்டு உடனே பாராட்டி பேசுவான். அதுவும் அண்ணன் சீமானை பற்றி எழுதும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

ஏனெனில் அண்ணன் சீமான் தான் அவனது உலகம். அதைத்தாண்டி அவனுக்கு எதுவும் இல்லை. அவன் குடும்பத்தைப் பார்க்க அதிகம் ஊருக்கு போனதாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. அண்ணன் சீமான் ,அண்ணியார் கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் என்ற அவனது உலகம் மிகச் சிறியது. இன்று அந்த உலகத்தை விட்டு தான் அவன் பிரிந்து போய் இருக்கிறான்.

அவனது உடலை கண்டு அண்ணன் சீமான் கதறி அழுதது சுற்றியிருந்த எங்களையெல்லாம் உலுக்கி எடுத்து விட்டது. தன் உடலிலிருந்து ஒரு பாகம் பிரித்து எடுக்கப்பட்டது போல அண்ணன் கதறித் துடித்தார். இந்த பிரிவினை எதனாலும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர் திரும்பி பார்க்கும் பொழுதெல்லாம் அன்பு நின்றுகொண்டிருந்தான். இன்று அவன் இல்லாத வெறுமை அவருக்கு தாங்க முடியாத உயிர் வலியை தந்து விட்டது. இடுகாட்டிற்கு அவனை அவரை தூக்கிச் சென்றார். இத்தனை ஆண்டுகாலம் அவரை சுமந்து அன்பு அலைந்து திரிந்தான். அவனது இறுதிப் பயணத்தில் அவன் உயிராக நேசித்த அவனது அண்ணன் சீமான் அவனை சுமந்து எடுத்துச் சென்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவனுக்கு நுரையீரலில் புற்று நோய் என்று நான் கேள்விப் பட்டபோது உண்மையில் பதறிப்போனேன். அவனை நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுபற்றி விசாரிக்க எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ஆனாலும் அதை புரிந்து கொண்ட அவன் நான் நல்லா இருக்கேன்னே.. என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே கடந்து விடுவான். அண்ணன் சீமான் எங்கெங்கோ அவனுக்காக மருத்துவம் தேடி பேசிக்கொண்டிருந்தார். எப்படியாயினும் எவ்வளவு செலவு செய்தாலும் அவனை காப்பாற்றி விடவேண்டும் என துடித்தார். அவன் இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை. ஆனால் அவர் எதை நினைத்து அச்சப்பட்டு துடித்தாரோ அது நடந்தே போனது.

கடைசியாக அவனை நான் பார்த்தது மகன் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளில்.. என் கையை இறுகப் பிடித்தவாறே என்னோடு போட்டோ எடு அண்ணா என்றான். நான் என் அலைபேசியை அதற்காக தயார் செய்தபோது.. அவனே சொன்னான்.. இந்த போட்டோ ஒரு நாள் நீ எழுதுகிற பதிவுக்கு உனக்கு பயன்படும் அண்ணே.. என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
சட்டென யாரோ என்னை சாட்டையால் அடிப்பது போல உணர்வு.. லூசு மாதிரி பேசாதடா.. என்று போட்டோ எடுக்காமல் நான் கோபத்தோடு திரும்பிவிட்டேன்.
என்னை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

நானும் அந்த புகைப்படம் எடுக்காமலேயே திரும்பிவிட்டேன்.

ஆனால்..அந்த நொடியில் சின்னப் புன்னகையோடு சிரித்திருந்த அவனது முகம் என்றும் மாறாமல் ஒரு புகைப்படம் போல என் ஆன்மாவில் உறைந்து விட்டது.

அன்பு காற்றோடு காற்றாய் கலந்துவிட்டான்.

தனது உதிர உறவை பறிகொடுத்துவிட்டு அண்ணன் சீமான் கண்கலங்கி தனியே அமர்ந்து இருக்கிறார்.

நினைவுகளின் அழுத்தத்தால்.. அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொள்கிறார் அவர்.

அந்த மூச்சுக்காற்றில்தான் அன்பு கலந்து இருக்கிறான் என்ற சிறு ஆறுதல் அவருக்கு ‌ வாழ்நாள் முழுக்க நீடிக்கப் போகிற அவன் இல்லாத வெறுமையின் துயரத்தை சற்றே ஆற்றட்டும்.

அடர்பச்சை- வன்முறையின் அழகியல்


—————————————————————–

“நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய்.. நான் உன் காலடியில் கிடந்து, உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப் பட்டேன். சுதந்திரமாய் சக்திவாய்ந்து இயல்பாய் இருந்தேன். ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். ஏனெனில் நான் காட்டுக்கு சொந்தமானவன்.”

பிரான்ஸ் காப்கா அவரது பெண் தோழி மெலினாவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில்..

துருவனின் எழுத்துக்களும் அப்படித்தான். ஏனெனில் அவைகளும் தொன்ம மனிதனின் அசுர மொழிகள் தான்.இதுவரை வெளிவந்திருக்கிற வழமையான எழுத்து சித்திரங்களை உதறி விட்டு வன்முறையின் பேரழகோடு அவனது அடர்பச்சை வெளியாகியிருக்கிறது. பிரதி முழுக்க கலைத்துப் போடப்பட்டிருக்கும் சொற்க்கோர்வை மிகவும் புதிரானவை. ஆழ்நிலை சிந்தனையை கோருபவை. இதுவரை உங்கள் வாழ்வின் எல்லா வித அனுபவச் சாரங்களின் ஊடாக நீங்கள் அடைந்திருக்கிற அனைத்து வித இறுக்க முடிச்சுகளையும் அறுத்துப் போட்டு விட்டு ஒரு கட்டவிழ்க்கப்பட்ட மனநிலையோடு அடர் பச்சையின் பக்கங்களை நீங்கள் தொடுவீர்களேயானால்.. இதுவரை நீங்கள் காணாத பெரும் களியாட்டத்துக்கு உங்களை நீங்களே ஒப்புக்கொடுக்கிறீர்கள் என அர்த்தம்.

புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய ஒரு நூற்றாண்டின் தனிமை (one hundred years of solitude) மேஜிக்கல் ரியலிசம் (Magical realism) என்கின்ற பின்நவீனத்துவ இலக்கியக் கோட்பாடு வகையை சார்ந்து எழுதப்பட்ட புனைவாகும். மார்க்வெஸ்சின் நாவல்கள் மாக்கான்டோ என்கின்ற புனைவு வழி சித்தரிப்பு நகரத்தில் நிகழ்கின்றன. அவரது எழுத்துக்கள் நிஜத்திற்கும் புனைவின் விசித்திரங்களும் இடையிலான மெல்லிய கோட்டினை அழிக்க முயன்று கொண்டே இருக்கின்றன.

அடர்பச்சை யும் அப்படித்தான். கடவுள்-அசுரர்-தேவர்-சாத்தான் போன்ற புராண எதார்த்த புள்ளிகளை
கை கொண்டு , மறுக்கவே முடியாத மீள்புனைவு சாத்தியங்களை அடர்பச்சை தனக்குள் அடக்கி இருக்கிறது.

ஆழமாக உள்நோக்கி பார்த்தோமானால் அடர்பச்சை வார்த்தைகள் அற்ற ஒரு பிரதி. செந்நிற வானில் தனித்துப் பறக்கும் ஒரு பறவையின் பறத்தல் போல பொருத்தி வைக்கப்பட்ட காலச் சட்டகத்தினை மீறி அதன் இயக்கம் நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.

செவ்வக வெளிச்சப் பாய்ச்சல் மட்டுமே
உட்புகுந்திருக்கும் வெற்று வாசலைப் போல அடர் பச்சையில் ஊடுருவி பாய்ந்திருக்கிற தனிமை உணர்ச்சி வாசிக்கின்ற ஒவ்வொரு ஆன்மாவையும் பின்தொடர்ந்து தொற்றிக்கொள்கிறது.

“கவிதையானது வேற்றுக் குரல். அது வரலாற்றின் குரலோ அல்லது எதிர் வரலாற்றின் குரலோ அல்ல. எனினும் கவிதையில் வரலாறு எப்போதும் வேறுபட்ட ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கும்” என்கிற மெக்சிகோ கவிஞன் ஆக்டேவியா பாஸின் குரலைப் போல அடர்பச்சையின் அடி இழை புராண இதிகாசங்களின் புனித பிம்பங்களுக்கு எதிரான குரலாக மட்டும் அடையாளப்படுத்தப்படுமேயானால் அது முழுமை அல்ல. மாறாக ஆக்டேவியா பாஸ் வரையறை செய்வது போல இது வேற்று குரல்.

கவிதை என்றெல்லாம் வகைமைப் படுத்தி விட முடியாத ஒழுங்கின்மை தான் அடர் பச்சையின் ஆகப் பெரும் வலிமை.கழுத்து நரம்பின் மையப்புள்ளியை அறுத்துவிட்டு செல்கிற ஒரு புராதான வாளின் கூர்மை போல கவித்துவப் புள்ளிகளின் கூர்மை அடர்பச்சை முழுக்க ஒளி விடுகிறது. ஆனாலும் கவிதை என்ற ஒழுங்கினில் எங்கும் அடைபடாமல் காற்றின் நழுவல் போல நழுவிக் கொண்டே போவதை இப்பிரதி முழுக்க தரிசிக்கலாம்.

ஆல்பெர் காம்யூ எழுதிய The plague (1948) என்ற நாவலில் Tarrou-டேரூ என்ற இளைஞன் வருவான். அவனுக்கு இருக்கின்ற மகத்தான சிக்கல் இதுதான்..

“கடவுளே இல்லாத ஒரு இடத்தில் ஒருவன் எவ்வாறு புனிதனாவது ..?”

என்கிற கேள்வியை அவன் எழுப்பிக் கொண்டே இருப்பான். அதேபோன்ற
கேள்வியைத்தான் அடர்பச்சையும் எழுப்புகிறது.

சாத்தானும் அசுரனும் இல்லையேல் கடவுள் ஏது.. கடவுளின் கட்டமைக்கப்பட்ட புனித நிழல்களைக் குறித்து சாத்தான் கேள்வி எழுப்பும் போது தான் கடவுள் உயிர்க் தொடங்குகிறான். அசுரன் கடவுளின் தலைக் கொய்ய வாளை உயர்த்தும் அந்த நுட்ப புள்ளியில்தான் கடவுள்
உயிர்க் கொள்ள தொடங்குகிறார். இதுபோல தத்துவ விசாரணை உள்ளீடு கேள்விகள் அடர்பச்சை முழுக்க விரவிக் கிடக்கிறது.

ஒரு கவிதை அல்லது ஒரு இலக்கிய வடிவம் மேம்பட மேம்பட மொழி கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்குகிறது. மொழியின் வசீகரங்கள் மறைந்து போய் ஒரு காட்சி ஊடகமாக அந்த இலக்கிய வடிவம் விரிய தொடங்குகிறது. ஆச்சரியகரமான வகையில் அடர்பச்சையில் அந்த மேஜிக் நிகழ்ந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தீரா வன்முறையின் படிமங்கள் ஒரு மையச் சரடு போல அடர்பச்சை முழுக்க பயணித்துக் கொண்டே இருக்கிறது. மீள்எழுதலுக்கான பெருவழி, இறுதியில் கூர்வாளின் நுனி கொண்டே எழுதப்படுகிறது.

பழைய Western classic cowboy படங்களில் காணப்படும் மரச் சட்டங்களால் வேயப்பட்ட கட்டிடங்கள் கொண்ட புராதன அமெரிக்க சிறு நகரத்தில் வெக்கை பூசும் வெயிலில் நட்ட நடு மணல் வீதியில் துப்பாக்கி எடுப்பதற்காக கரங்களை அசையாமல் காத்திருக்கும்
ஒரு அக்மார்க் கௌபாயின் கண்களில்
தோய்ந்திருக்கும் அதே வன்முறையின் அழகியல் அடர்பச்சை யிலும் காணப்படுவதுதான் இது இயல்பிலேயே கொண்டிருக்கும் உலகத்தரம்.

இந்தப் பதிவில் நான் எங்கும் அடர்பச்சையின் வரிகளை மேற்கோள் காட்டவில்லை என்பது திட்டமிட்ட ஒன்றே. நீங்களாக கண்டடைய வேண்டுகிற அந்த அனுபவம் எனது மேற்கோள்களால் நழுவக்கூடாது என நான் விரும்புகிறேன்.

விலக்கப்பட்ட கனி போல அடர்பச்சை தன்னியல்பில் ஈர்க்கும் சுவாரசிய ஆச்சரியங்கள் கொண்டது. நிலைநிறுத்தப்பட்டு இருக்கிற எல்லாவித புனித பிம்பங்களையும் ஒற்றை கோட்டில் நிறுத்தி வினா எழுப்புகிற அடர்பச்சையின் அரசியல்
காலம்காலமாய் புறக்கணிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட குரல்களின் விம்மல்.

அடர்பச்சையை நான் முன்மொழிகிறேன்.

நீங்கள் வழிமொழியுங்கள்.

அழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..

 

 

 

சுய சாதியை குறித்து எந்தவித பெருமிதமும் கொள்ளாமல் அதை மிக இழிவான அடையாளமாக கருதுவதுதான் உண்மையான சாதிமறுப்பு.

மேலும் சாதியக் கட்டமைப்பினால் தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிற உனது சக மனிதனை கை தூக்கி விடுவது போல பிறக்கிற எந்த ஒரு இலக்கியமும், திரைப்படமும் கொண்டாடத்தக்கவையே..

பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு நான் எல்லாம் தலைகுனிந்து இருக்கிறேன்.
எங்களது தாய்வழி பூர்வீக கிராமத்தில் எனது குடும்பத்து முன்னோர்கள் இந்த சாதி கட்டமைப்பினால் சக மனிதர்களை அடிமையாக நடத்திய விதம் குறித்து குற்ற உணர்வு கொண்டிருக்கிறேன். அருவருப்பு அடைந்திருக்கிறேன்.

என்னடா உங்கள் பெரிய மயிறு சாதி என்று செத்துப்போன எனது குடும்பத்து பெருசுகளை தோண்டி எடுத்து காறித் துப்பலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

பரியேறும் பெருமாள், அசுரன் போன்ற கலைப்படைப்புகள் எண்ணற்ற எளிய மனிதர்களின் மனசாட்சியை தொட்டு எழுப்பி சாதிமறுப்பு மனநிலையை உண்டாக்கி இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஊடுருவி சாதி குறித்த கேள்விகளை அவை எழுப்புகின்றன. அசுரன் படம் பார்த்துவிட்டு எனது மகன் இரண்டு மணி நேரம் சாதிய கட்டமைப்பு களைப்பற்றி அதன் கொடுமைகளை பற்றி என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். இவை போன்ற படைப்புகள் தான் இப்போது தேவைப்படுவது.

பெற்றோர் பக்கத்திலிருந்து பார்ப்பதாக கூறி சாதி மறுப்பு திருமணங்களை மறுக்கிற அல்லது அவமானப்படுத்துகிற எந்த படைப்பும் தந்திரமாக சாதி நிலைகளுக்கு ஆதரவானதே.

அது என்ன ஒரு பக்கம் என்று கேள்வி கேட்பதே அவமானகரமானது. ஏனெனில் சாதிமறுப்பு நிலை என்பது நடுநிலையானது அல்ல. அது சாதி நிலைக்கு எதிரானது.பல்லாயிரம் ஆண்டுகளாக நுட்பமான சாதி கட்டமைப்பினால் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இப்படித் தாழ்ந்து வீழ்ந்து கிடைக்கிற சகமனிதன் அதன் பிடியிலிருந்து வெளிவரத் துடிக்கும் போது உடனிருந்து கைப்பிடித்து தூக்கிவிட வேண்டியதும் ஆதரவாக நிற்க வேண்டியதும் மனிதனாக உணர்கிற ஒவ்வொருவரின் கடமை.

அதைவிட்டுவிட்டு மறுபக்கம் பேசுகிறேன், இன்னொரு பக்கம் பற்றி யோசியுங்கள் என்றெல்லாம் பேசுவது நேரடியாக சாதியை ஆதரியுங்கள் , அப்படித்தான் சகமனிதனை கீழ்மையாக நாங்கள் நினைப்போம் என்பதற்கு நிகரானது.

முதலில் வெளிவராத ஒரு திரைப்படத்திற்கு தந்திரோபாயமாக செய்யப்படும் இதுபோன்ற விளம்பர முயற்சிகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாது. இதை ஒரு விவாதமாக கூட மாற்றக் கூடாது. புறக்கணிப்பு மட்டுமே சரியான எதிர்வினை.

என்னைப் பொறுத்தவரையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதி நிலைகளை ஆதரிக்கிற எந்த ஒரு திரைப்படமும் அல்லது இலக்கியமும் சமூகத்தால் தீண்டத்தகாத அருவருக்கத்தக்க படைப்புகளே..

வாழ்வின் பொருள் யாதெனில்..

 

வாழ்வின் மீதான சுவை மிக விசித்திரமானது. வாழ்வின் எந்த ஒரு கணத்திலும் அதன் சுவை தீர்ந்து போகலாம். சலிப்புற்ற அந்த கணத்தில் எதற்காக பிறந்தோம்‌ எதற்காக வாழ்ந்தோம் என்றெல்லாம் உள்ளுக்குள் கேள்விகள் எழலாம்.

பல தருணங்களில் நான் அவ்வாறு தான் உழன்று இருக்கிறேன். உறக்கமற்ற இரவுகளில் ஏதேனும் ஆழ்மனதில் நாம் எப்போதோ பெற்றுக்கொண்ட ஒரு முள் மெல்ல அசைந்து கீறத் தொடங்க.. கொடும் நரகம் என இரவுகள் நீளும். ஏன் இந்த கொடும் வாழ்க்கை.. என்ற கேள்வி எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா.. என்ற சங்கடம் உள்ளுக்குள் சலித்து எடுக்கும்.

அப்படித்தான் கடந்த காலத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியோடு நகர்ந்த பொழுதொன்றில் சென்னை மத்திய சிறையில் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களை சந்தித்தேன்‌. அவரை அதற்கு முன் பல முறை நான் சந்தித்து இருந்தாலும் அந்த சந்திப்பு சற்றே விசித்திரமானது. அந்த சந்திப்பிற்கு முன்னால் வாழ்வு குறித்த சில கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும், என் பிரச்சினைகளுக்கான தீர்வினை அவர் மூலமாக அடைய வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

பல விஷயங்களை அவரிடம் பேசிவிட்டு உங்களிடம் எனக்கு ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது அண்ணா என்று சொன்னேன். ஆள் மிகவும் மெலிந்து விட்டு இருக்கிறீர்கள்‌.. என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் அந்த நொடியில் அனைத்தையும் கொட்டி விட வேண்டும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அவர் வாழ்கிற அந்த கொடும் நெருக்கடி மிகுந்த துயர வாழ்விற்கும் முன்னால் அபத்தமும் பலவீனமும் நிறைந்த எனது துயரங்களை எப்படி கொட்டுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

உண்மையில் வாழ்வு என்றால் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதன் அர்த்தம் புரியவில்லை. எதற்காக வாழ்கிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை ..உண்மையில் இந்த வாழ்வில் நான் அடைந்தது என்ன அண்ணா என்று கேட்டேன்.
அவர் என்னை சற்று உற்றுப் பார்த்தார். பிறகு அவருக்கே உரிய அந்த ஈழத்துத் தமிழில் ‌.. நாம் நினைப்பது போல் எல்லாம் அமைவதற்கு வாழ்வென்பது நாம் வரையும் ஓவியம் அல்ல. பல சமயங்களில் ஓவியம் கூட நாம் நினைப்பது போல வருவதில்லை. அமைந்ததை அமைதியாக எதிர்கொண்டு விடு. எல்லாம் சரியாகி விடும் என்றார்.

அண்ணன் ராபர்ட் பயஸ் மிகச்சிறந்த ஓவியர். விடுதலைக்கு விலங்கு நூலை எழுதியதற்காக அவர் கையால் வரைந்த புகழ்பெற்ற ஓவியம் ஒன்றை எனக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த பதிலைக் கூட ஓவியக் கோடுகளை முன்வைத்தே விவரித்து விட முயன்றார்.

இதை கவனித்துக் கொண்டிருந்த அருகிலிருந்த அண்ணன் பேரறிவாளன் “ஏமாற்றங்களை எதிர்கொண்டு பழகிக் கொள்ளுதல் என்பது ஒரு கலை. எனது தந்தையார் சிறுவயதிலிருந்து ஏமாற்றங்களை பழகிக்கொள்ள சொல்லுவார். அனைவரும் வெற்றி பெற்றால் வெற்றி என்ற ஒன்றே கிடையாது. எனவே ஏமாற்றங்களை பழகிக்கொள். ஏற்றுக்கொள். சரியாகிவிடும்” என்றார்.

அந்த அண்ணன்களின் முகத்தை நான் பார்த்தேன். எப்படிப்பட்டவர்கள் இவர்கள்… வாழ்வதற்கான எல்லா தகுதியும் இவர்களுக்கு இருந்தும் வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டவர்கள். நான்கு காம்பவுண்ட் சுவருக்குள் 28 வருடங்களாக ஒரு உலகை அமைத்துக்கொண்டு இரவும் பகலும் பேதம் அறியாத விசித்திரமான கால ஓட்டத்தில் தன்னை கரைத்து கொண்டிருப்பவர்கள். இப்போது கதவு திறக்கும்.., அப்போது கதவு திறக்கும் ..என்றெல்லாம் எதிர்பார்ப்பில் கசிந்து ஒழுகும் ஒவ்வொரு நொடிகளையும் கணக்கெடுத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் ‌.

ஒவ்வொரு முறையும் அவர்களை சந்திக்கும் போதும் சந்திப்பு நேரம் முடியும் அந்த கணத்தில் ஏதோ ஒரு சிறைத் துறை அலுவலர் வந்து சந்திப்பு நேரம் முடிந்துவிட்டதாக சாடை காட்டிவிட்டு செல்வார். அந்த கணத்தில் அண்ணன்களுக்கு முகம் இறுகும் துயரத்தை நானெல்லாம் கண்ணீர் மல்க அருகிலிருந்து கவனித்திருக்கிறேன். இறுகி அணைத்து விட்டு விடை பெற்று வரும்போது திரும்பி பார்க்கையில் அந்த கம்பிகளுக்கு பின்னால் அண்ணன்கள் நின்று கொண்டே இருப்பார்கள். அதை பார்க்கும்போது சட்டென நமது ஆன்மா உடைந்துவிடும்.

குறிப்பாக பயஸ் அண்ணன். விடைபெறும்போது இறுகி அணைக்கையில் நம் நெஞ்சம் விம்முவதை அவரே அறிந்து கொள்வார் ‌. கைகளை இறுக்க கோர்த்துக் கொள்வார். சரி போய் வா தம்பி. துணிவாய் இரு என்பார். ஈழத்தவர்கள் அப்படித்தான். எப்படிப்பட்ட துயர சூழ்நிலையிலும் கலங்காத மனம் தளராது இறுகிப் போய் இருப்பார்கள். நீண்டகால யுத்தம் சார்ந்த வாழ்க்கை அவர்களுக்கு அது போன்ற உளவியலை பரிசாக அளித்து இருக்கும்போல.

அன்றும் அப்படித்தான். எனக்குள் ஏற்பட்டிருந்த குழப்பங்களை பயஸ் அண்ணன் மூலம் தீர்த்துக்கொள்ள நான் சென்றிருந்தபோது.. அவர்கள் வாழ்க்கையை உணர்ந்து நான் எதுவும் கொட்ட முடியாமல் அமைதியாக திரும்ப தயாரானேன்.

அண்ணன் பயஸை நான் வழக்கம்போல விடைபெறுதலுக்காக இறுக்கி அணைக்க.. அண்ணன் ஒரு நிமிடம் என்னை விலக்கி.. என்னை நினைத்துக்கொள். எல்லா துயரமும் உன்னை விட்டு ஓடிவிடும் என்றார்.

நான் உடைந்து விட்டேன். சே.. எப்படிப்பட்ட வலிமிகுந்த வார்த்தைகள் அவை. அவர் அடைந்த துயரங்களுக்கு நாம் அடைந்த தெல்லாம் துயரம் என்ற சொல்லுக்குள் கூட வராதே என்று நினைத்துக்கொண்டேன்.

இப்போதும்கூட எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடிகள் வருகின்றனவோ அப்போதெல்லாம் அண்ணன் ராபர்ட் பயஸ் அவர்களைத்தான் நினைத்துக்கொள்கிறேன். அவரது வாழ்க்கை கதையான விடுதலைக்கு விலங்கு எழுதும்போது பல பக்கங்கள் அவரே எழுதிய குறிப்புகளை கொடுத்தார். அதில் அவர் அடிக்கடி குறிப்பிட்டிருப்பது.. தன் ஊருக்குத்தான் திரும்பவேண்டும் என்கின்ற விருப்பம். பலவிதமான சொற்களில் அதே விருப்பத்தை வெவ்வேறு விதமாக அவர் குறிப்பிட்டிருப்பார்.

ஊருக்கு திரும்பணும் தம்பி. என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டபோது.. திரும்பிப் போய் என்னவெல்லாம் செய்வீர்கள் என்று நான் கேட்டேன். அப்போது அவர் பேச்சு மொழியில் என்னிடம் விவரித்த உணர்ச்சிகள் தான்..
அனைவரும் குறிப்பிடும் விடுதலைக்கு விலங்கு நூலில் என்னால் எழுதப்பட்ட அந்தப் பத்தி.

“உங்களிடம் பகிர்ந்து கொள்ள
எனக்கு ஒரு கனவு இருக்கிறது.
ஒரு நாள் என் தாய் நிலத்திற்கு
நான் திரும்புவேன்..”

சமீபத்தில் அவரை சந்தித்தபோது இந்தக் குறிப்பிட்ட பத்திப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
எப்போதெல்லாம் ராபர்ட் பயஸ் என்ற பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் மணிசெந்தில் என்கின்ற என்னுடைய பெயரும் உச்சரிக்கப்படும் என்று அப்போது சொன்னேன்.

அவர் தலையசைத்து சிரித்துக்கொண்டார்.

முன்னொரு பொழுதில் அவரிடம் வாழ்வின் அர்த்தம் பற்றி எல்லாம் கேட்டது நினைவுக்கு வந்தது.

ஒருவேளை என் வாழ்வின் அர்த்தம் இதுவாகத்தான் இருக்குமோ..??

வானவில் போராளிகள்..


—————————————-

அதோ
அவர்கள்
நடந்துப்
போகிறார்கள்..

உயிர் ஆழத்தில்
உதிரக்கனவாய்
உறைந்திருக்கும்
ஒரு தேசத்தின்
பாடலை
உரத்தக் குரலில்
பாடியவாறு
அவர்கள்
நடந்துப் போகிறார்கள்..

முன்னோர்
மூச்சடக்கி
புதைந்த மண்ணில்
இருந்து
மட்காமல்
துளிர்த்திருக்கும்
சேர்ந்திசைப்
பாடல் அது..

காரிருள் படர்ந்து
காலங்காலமாய்
நிலைத்த பனை
நின்ற படி எரிந்த
கந்தக நெடி
கருப்பையில்
கருவுற்ற பாடல்
அது..

பசும் ஈரம்
போர்த்திய
ஆதி வனத்தின்
முதிர் கொடி ஒன்று
முறிக்கப்பட்டப்போது
முதிர்ந்தெழுந்த
பாடல் அது..

மூதாதை
கால் சுமந்த
தாய்நிலம்
அப்பாடலை‌ கேட்கும்
போதெல்லாம்
தானாகவே
விம்முகிறது
என்றார்கள்..

அப்பாடல்
கேட்கும்
போதெல்லாம்..
வானெறி
குண்டுகளால்
இருட்புகை
மண்டிய
பொழுதுகளில்..
ஆதவன்
அதுவாகவே
உதித்து விடுகிறது
என்றார்கள்..

யுகயுகமாய்
அந்த இனத்தின்
மண் காக்க நின்று
விதையாய்
ஊன்றப்பட்ட
முதுமனிதர்களின்
பொருமிடும்
மூச்சுக்காற்று
அந்தப் பாடலைத்தான்
சுமந்து
உச்சி மலைகளில்
அலைகிறது
என்றார்கள்..

உற்சாகக் குரலோடு
சேர்த்து பிணைந்த
கரங்களோடு…
அதோ
அவர்கள்
பாடிக் கொண்டே
செல்கிறார்கள்..

குருதியாற்றின்
உதிரத்துளிகள்
தொல்குடி ஒன்றின்
விழிச்சிவப்பு
வெப்பத்தால்..
ஆவியாகி மேகமாய்
மிதக்க..

எந்த நொடியிலும்
உறுமி வெடிக்க
காத்திருக்கும்
அந்த
வானத்தின்
விளிம்பின்
உதித்திருக்கும்..

அந்த வானவில்
பாலத்தின் மீது
அதோ போகிறார்கள்..

அவர்கள் போகிறார்கள்.

மாவீரர்கள் போகிறார்கள்..

……..

வீரவணக்கம்.

 

https://youtu.be/qiiBJ3mpGtY

பயணங்கள் முடிவதில்லை..


————————————————–

ஒரு பொன் அந்திமாலையில் கரை ஓரத்தில் நின்றுகொண்டு அடர்ந்து படர்ந்து ஓடும் நதியைப் பார்ப்பதுபோல.. நான் இந்த வாழ்வை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

எதன் பொருட்டும் அந்த நதி நிற்பதில்லை. யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எதனாலும் திசை மாறுவதில்லை. தன் கடன் பயணிப்பதே என்பதுபோல அது ஓடிக் கொண்டே இருக்கிறது.

இந்த முடிவிலியான பயணத்தில் சட்டென நிகழ்ந்துவிடுகின்றன நம்மோடு உயிரென நின்றவர்களின் இழப்புக்கள். அப்படித்தான் சமீபகாலமாக என் இதயத்திற்கு மிக நெருக்கமானவர்களை நான் இழந்து விட்டு எதனாலும் கட்டுப்படாத வாழ்வின் குரூர ஓட்டத்தைப் பற்றி கண்கள் முழுக்க நீரோடு சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

உண்மையில் தம்பி கார்த்தி இறந்தபோது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று வரையில் என்னோடு பேசிக் கொண்டிருந்தான். நான் அவன் தோள் பிடித்து நடந்துக் கொண்டிருந்தேன். பல நம்பிக்கைகளை என்னுள் விதைத்துக் கொண்டிருந்தான். இருவரும் சேர்ந்து பல கனவுகள் கண்டோம். சட்டென பற்றிருந்த என் கையை உதறிவிட்டு அவன் தனியே சென்றுவிட்டான். என் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் போல தம்பி டக்கீலோ மணி இருந்தான். அடிக்கடி காணாமல் போய் கடையில் நின்று கொண்டிருக்கும் அவனை நான் திட்டி கொண்டே இருப்பேன். சிரித்துக்கொண்டே என் முன்னால் அவன் நின்று கொண்டிருப்பான். திடீரென நிரந்தரமாக காணாமல் போய்விட்டான்.

தூங்கி விழித்த பிறகு கலைந்து போகின்ற கனவு போல என்னுள் கலந்துவிட்ட என் தம்பிகள் காணாமல் போவது என்னால் எதனாலும் சகிக்கமுடியாத துயரமாக மாறிப்போனது. அதுவும் என்னோடு வயது குறைந்தவர்கள். நன்கு வாழ வேண்டியவர்கள். சட்டென போய்விட்டார்கள்.

அவர்களை இழந்து நிற்கின்ற அவர்களது குடும்பங்களுக்கு எந்த வார்த்தையும் சொல்லி என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. ஏனெனில் நானே ஆறுதல்படுத்த வேண்டிய நிலையில்தான் இருந்தேன்.
உடன் பயணித்தவர்கள் மரணித்துப் போனால் ஒரு மாலையை வாங்கி போட்டுவிட்டு மறு நொடியே தன் வேலையை பார்க்கப் போகிற இயல்பான அரசியல் கட்டமைப்பாக கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியை நாங்கள் உருவாக்கவில்லை.

தனியனாக அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்க தொடங்கியபோது.. முதன்முதலாக தமிழ்நாட்டில் பிரம்மாண்டமான கலந்தாய்வுக் கூட்டத்தை கும்பகோணம் தான் நடத்தியது. இனம் அழிந்த வலியில் கண் சிவந்து மண்ணை மீட்கிற புனிதப் பணியில் இறங்கிய அண்ணனை பின் தொடர்ந்து பயணிக்க இளைஞர் கூட்டம் ஒன்று இங்கு உருவாகி நின்றது.

நாங்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்துக்கொண்டோம். குடும்பமாக கூடி நின்று மகிழ நாம் தமிழர் என்ற பெயரில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வாழ்வது என முடிவு செய்துவிட்டோம். இன்பத்திலும் துன்பத்திலும் பிரியக்கூடாது என மனதிற்குள் உறுதி ஏற்றுக்கொண்டோம். ஒருவருக்கொருவர் எதனாலும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனம் கொண்டோம். அப்படியேதான் பயணித்தோம். ஆனாலும் பயணத்தின் முடிவு பிரிவு தானே என்பதை உணர்த்துவது போல எதிர்பாராத சில நிறுத்தங்களில் எதிர்பாராமல் சிலர் இறங்கிச் சென்றுவிட்டார்கள். ஒவ்வொருவரும் பிரிந்து செல்லும்போது நாங்கள் பலவீனப்பட்டதாக உணர்ந்தோம். ஆனாலும் கைகோர்த்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். புதிதாக கைகோர்த்துக் கொண்ட பலரை இணைத்துக்கொண்டு எங்களது பயணம் தொடர்ந்தது.

அண்ணன் சீமான் ஓடிக்கொண்டே இருந்தார். அவரது வேகத்துக்கு நாங்களும் ஓட முயன்றோம். என்னோடு பயணித்து கொண்டிருந்த என் தம்பிகள் தங்களது கடும் உழைப்பினால் அண்ணன் சீமானிற்கு ஈடு கொடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி ஓடியவன் தான் தம்பி மோ. கார்த்திக்.இரவு பகல் பாராமல் என்னோடு பயணித்தான். இருள் விலகா பொழுதுகளில் பனி அசையும் இரவுகளில் இளையராஜா பாடல்களோடு என்னோடு கண்கள் முழுக்க கனவுகளோடு பேசிக்கொண்டே வந்தான்.

திடீரென இறந்துவிட்டான். ஒருமாதிரியாக மனது வெறுத்துப் போய்விட்டது. வீட்டிலும் சூழ்நிலைகள் சரியில்லை. மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போனது உண்மையில் மனதை பலவீனப்படுத்தி விட்டது. இனி என்ன செய்வது என்பது போல தேக்கம்.

அப்போதுதான் தம்பிகள் ஆனந்தும், கார்த்தியும், லிங்கதுரையும் சாமிநாதனும், பூபேஷ் குப்தாவும் ,விஜியும், பிச்சுவா மணியும் அவர்களோடு கூடிநின்ற தம்பிகளும் நாங்கள் இருக்கிறோம் அண்ணா என்பதுபோல உழைக்கத் தொடங்கினார்கள். இறந்துபோன தங்கள் உடன் பிறந்தார்களின் குடும்பத்தினரை கைவிடாமல் காப்பாற்ற வேண்டுமென என்னிடத்தில் வற்புறுத்தினார்கள். என்னை தூக்கி நிறுத்தினார்கள். மீண்டும் ஒரு லட்சிய பயணத்திற்கு தயாராவோம் என்றார்கள். குறுகிய காலத்தில் ஒரு மீள் எழுச்சி.

எப்போதும் உயிராக என்னை நேசித்து என்னை அழைத்துச் செல்கிற அண்ணன் சீமானிடம் எனது உணர்வுகளை எப்படியும் கொட்டி விடுவேன். அவரைப்போல ஒரு அண்ணன் கிடைப்பது மிக அரிது. சின்ன சின்ன உணர்வுகளை கூட மிகச் சரியாக புரிந்து கொண்டு தம்பிகளின் வலி தீர்க்க உயிர் கசிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற அண்ணன் அவர். கடுமையான பணிகளுக்கு மத்தியிலும் துணிவாக இரு அண்ணன் வருகிறேன் என்றார் அவர்.

அனைவரும் உழைத்தோம் .ஓடினோம். இது வெறும் அரசியல் கட்சியல்ல. எதனாலும் பிரிக்கமுடியாத ஒரு குடும்பம் என்பதனை ஊருக்கும் உலகத்திற்கும் காட்டுவதற்கு முன்பாக.. எங்களுக்குள்ளாகவே உறுதிப்படுத்திக்கொள்ள நினைவேந்தல் நிகழ்வினை தயார் செய்தோம். நிறைய பொருளாதார சிக்கல்கள். எதிர்பார்த்த இடங்களில் எல்லாம் உதவிகள் கிடைக்காத சூழல்கள். ஆனாலும் தம்பிகள் தளராமல் உழைத்தார்கள்.

தம்பி கார்த்தி வீட்டில் தனித்திருக்கும் அவனது தாய் தந்தையர் அருகில் சென்று அமர்ந்து கொண்டோம். அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டோம்.

நேற்றைய தினம் அண்ணன் வந்தார். எதனாலும் கலங்காத அவரது விழிகள் கலைந்து போன கூடாக மாறிவிட்ட அவரது தம்பிகளின் வாழ்வினை நினைத்து கலங்கி விட்டன. பிள்ளைகளை இழந்து வாடும் தாய் தந்தையரை தனது இரு கரம் கொண்டு அண்ணன் இறுக்கி அணைத்துக் கொண்டார். மூத்த மகனாக நான் இருக்கிறேன் என்றார்.

தம்பி கார்த்தியின் நினைவேந்தல் நிகழ்வில் அண்ணன் பேசியபோது அவரது குரல் உடைந்து போனது. பின்னாலும் முன்னாலும் நின்றுகொண்டிருந்த நாங்கள் அனைவரும் அழுது விட்டோம். இறுதியாக தன்னை உறுதிப்படுத்திக்கொண்டு.. தம்பி கார்த்தியின் இலட்சியக் கனவை நிறைவேற்ற உழைப்போம் என உறுதி கூறி புகழ் வணக்கம் செலுத்தினார்.

நிகழ்ச்சி முடிந்து.. கார்த்தி வீட்டின் முன்னால் ஒரு நாற்காலியில் நான் அமர்ந்து இருந்தேன். பக்கத்தில் கார்த்தியின் அம்மா மெலிதாக விசும்பி கொண்டிருந்தார். இப்படி ஒரு வாழ்வை என்மகன் வாழ்ந்திருக்கிறானே என்று தழுதழுத்த குரலில் என்னிடம் சொன்னார். உண்மையில் அந்த நொடியில் நான் பெருமிதப்பட்டு போனேன். எத்தனையோ உன்னதங்கள் யாருக்கும் தெரியாமல் கரைந்து போகின்ற கால நதியின் கோர ஓட்டத்தில்.. தம்பிகள் கார்த்தி , மணி வாழ்ந்த குறுகியகால லட்சிய வாழ்க்கையை குறைந்தபட்சம் அவர்களது குடும்பத்தினருக்காவது புரிய வைத்து விட்டோம் என்பதுபோல நிறைவு எனக்குள் ஏற்பட்டது.

கண்கலங்க அமர்ந்திருந்த நான் அருகே புகைப்படமாக உறைந்திருந்த தம்பி கார்த்தியின் முகத்தைப் பார்த்தேன்.என்னை பார்த்து அவன் புன்னகைத்தது போல எனக்குத் தோன்றியது.

…. லிங்க துரை என்னை அழைத்து செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்து நின்றான். வண்டி புறப்பட்டது. தம்பிகள் ஆனந்த் கார்த்தி உள்ளிட்ட தம்பிகள் எதையோ நிறைவேற்றிய முகத்தோடு ஏதோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கை உயர்த்தி அவர்களுக்கு வணக்கம் சொல்லியபோது அவர்களும் கண்கலங்க புரட்சி வணக்கம் கூற கையை உயர்த்தினார்கள்.

உயர்ந்த கரங்களில் ஒளிரட்டும் வெளிச்சம்.

மணி செந்தில்.

 அசுரன்- இலக்கியமான திரைமொழி


இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் லூமியர் சகோதரர்களால் கண்டறியப்பட்ட திரைப்படம் என்கின்ற அறிவியல் கண்டுபிடிப்பு வெகுவிரைவிலேயே தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. 1931ல் தமிழில் முதல் பேசும் திரைப் படமான காளிதாஸ் வெளியானது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் திரை உலகத்திற்கும் , தமிழ் இலக்கிய உலகிற்கும் மிக நெருங்கிய தொடர்பு தொடக்க காலத்திலிருந்தே உண்டு. ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற நாவல் 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அனேகமாக முதன்முதலாக ஒரு நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட வரலாறு சதி லீலாவதியில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம்.

அதன் பிறகு தமிழிலக்கிய எழுத்தாளர்களின் பல்வேறு கதைகள் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய திகம்பர சாமியார், கும்பகோணம் வக்கீல், உள்ளிட்ட கதைகளும், வை மு கோதைநாயகி அம்மாள் எழுதிய தியாகக் கொடி ,அனாதைப் பெண் உள்ளிட்ட கதைகளும் தொடக்க காலத்தில் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன ‌.

1952இல் ஆனந்த விகடனில் லட்சுமி என்ற புனை பெயரில் டாக்டர் திரிபுரசுந்தரி எழுதிய காஞ்சனையின் கனவு என்கின்ற தொடர்கதை காஞ்சனா என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதை லட்சுமி எழுதிய இருவர் உள்ளம், பெண்மனம் ஆகிய கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

1960 இல் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதிய பாவை விளக்கு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அகிலன் எழுதிய மற்றொரு நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரில் உச்ச நடிகர் எம் ஜி ஆர் நடித்து திரைப்படம் வெளிவந்தது.

திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட தொடங்கியவுடன் திரைப்படத் துறைக்கான முக்கிய கச்சாப் பொருளான கதைக்கான அவசியம் அதிகரித்தது. தமிழில் சிறுகதை வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய புதுமைப்பித்தன் திரைப்படத் துறையில் பணியாற்றி இருக்கிறார். 1946 வெளிவந்த அவ்வையார் திரைப்படத்திற்கு புதுமைப்பித்தன் வசனம் எழுதியுள்ளார். ராஜமுக்தி என்ற திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதும் காலத்தில்தான் புதுமைப்பித்தன் காச நோய் முற்றி இறந்து விடுகிறார். ராஜாஜி எழுதிய திக்கற்ற பார்வதி என்கின்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைந்தது. கல்கி எழுதிய பார்த்திபன் கனவு தியாகபூமி கள்வனின் காதலி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப்பிள்ளை, என தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

திராவிட இயக்க வளர்ச்சி தமிழ் திரைப்பட உலகத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகும். திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களான அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோர் தனது எழுத்துக்கள் மூலமாக திரைப்படத்துறையில் ஆதிக்கம் செலுத்தி அதன் மூலமாக அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக் கொண்டார்கள். அறிஞர் அண்ணா எழுதிய ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி ,வண்டிக்காரன் மகன், நல்லவன் வாழ்வான் உள்ளிட்ட பல கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்பட்டன. அதேபோல கலைஞர் கருணாநிதி எழுதிய வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு, பொன்னர் சங்கர் உள்ளிட்ட கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

எழுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட இடதுசாரிகளின் எழுச்சி திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டு எழுதி வந்த ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படங்கள் ஆயின.
புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். அதே மகேந்திரன் தான் பொன்னீலன் எழுதிய கதையை பூட்டாத பூட்டுக்கள் என்ற திரைப்படமாக உருவாக்கினார். எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நண்டு என்ற கதையும் இயக்குனர் மகேந்திரனால் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. மேலும் சிவசங்கரி எழுதிய 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை, தியாகு உள்ளிட்ட பல கதைகள் திரைப்படங்களாகின. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), பிரியா, பிரிவோம் சந்திப்போம், இது எப்படி இருக்கு போன்ற பல கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ச தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்.. என்ற கதையை மூலமாக வைத்து வசந்தபாலன் வெயில் என்ற திரைப்படத்தையும்.. ச.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்ற நாவலில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து
அரவான் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாகும் உருவாகும் போதாமைகள் மிக அதிகம்.எழுத்து மொழி வடிவத்திலான இலக்கிய வகைமையை காட்சி மொழியில் பொருத்தும் போது நிகழும் அபாயங்கள் மிக அதிகம். அசுரனின் திரைக்கதை அந்த சவாலை மிக எளிதாக எதிர்கொள்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.

அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.

நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. ஊர் பெரிய மனிதனான வடக்கூரானுக்கு அந்த எளிய குடும்பம் வைத்திருக்கிற துண்டு நிலம் சிமெண்ட் பேக்டரி கட்டுவதற்காக தேவைப்படுகிறது. வடக்கூரானின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற ஏழை சிவசாமி யின் குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது வடக்கூரானின் பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்த வடக்கூரானை கொலைசெய்து பழி தீர்க்கிறான்.

வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருக்கும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.

வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.

எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.

நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ்வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பின்கதை வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.

இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.

எப்போதும் சாதி நிலை முரண்களை குறித்த திரைப்படங்களில் இறுதியாக சொல்லப்பட்டிருக்கும் அதே செய்திதான் இத்திரைப்படத்திலும்அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தந்தை சிவசாமி மகன் சிதம்பரத்திடம் எதையும் பறித்துக் கொள்வார்கள். ஆனால் படித்த படிப்பை மட்டும் பறித்துக் கொள்ள முடியாது. எனவே நன்கு படி என்று கூறுவது இத்திரைப்படம் வலியுறுத்த விரும்பும் செய்தியாக இருந்தாலும்.. கல்வி‌ பயிலும் இடங்களிலும், கல்வி கற்ற பின் வேலை பார்க்கும் இடங்களிலும் காட்டப்படும் சாதிய ஏற்றத்தாழ்வு பார்வை இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை.

ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது ‌.

வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார்.‌ சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.

தனுஷ் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞான.ராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.அதே போல எழுத்தாளர் காந்தர்வன் எழுதிய சாசனம் கதை இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் அரவிந்த்சாமி ,கவுதமி ரஞ்சிதா நடித்து திரைப்படமாக வெளியான போது எழுத்து வடிவம் கொடுத்த நிறைவை தரவில்லை.

அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.

இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள்.

ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக மாறுவதோடு மட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் ஒரு இலக்கிய வடிவமாக மாற முயன்று இருப்பதுதான் அசுரன் நிகழ்த்தி இருக்கிற பாய்ச்சல்..

அசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்

.

வரலாற்றின் பக்கங்கள் பெரும்பாலும் பேரரசர்களின் பெருமித கதைகளால் நிரம்பி வழிகின்றன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ பேரிகைகளும், அந்தப்புர அழகிகளும், புகழ்ச்சி வர்ணனைகளும் நிரம்பி இருக்கிற வரலாற்றின் ஏடுகளில் எளிய மனிதர்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. இந்திய நிலத்தில் மக்களின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆனாலும் தலைமுறை தலைமுறைகளாக மக்களிடையே பிறந்து அவர்களுக்காக போராடி, மாமனிதனாக திகழ்ந்து, பெருமைமிக்க திரு உருவாக மாறி இருக்கின்ற பழைய எளிய மனிதர்களின் கதை.. வாய்மொழிப் பாடல்களாக,தெருக் கூத்து நாடகங்களாக, கதை சொல்லிகளின் கதைகளாக காலந்தோறும் கடத்தப்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதுபோன்ற கதைகளும், கால நதியின் பயணத்தில் எதிர்ப்படும் அனுபவங்களுமே புனைவிலக்கியதிற்கான கதவுகளாக திகழ்கின்றன.

இலக்கியம் என்பது என்ன.. அது மனிதர்கள் அடைந்த வாதைகளின் வசீகர விவரிப்பு தானே.. என்கிறார் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கி. மனித வாழ்வில் இழப்புகளைப் பற்றி பேசுவதற்கும், வரிகளைப் பற்றி பேசுவதற்கும் இலக்கியத்தை விட சிறந்த வழி இருக்கிறதா என்ன.. இலக்கியம் ஒரு கண்ணாடியாக மனிதவாழ்வின் பாடுகளை பிரதிபலிக்கிறது. கலையின் நோக்கமும் அதுதான். தெருக்கூத்து விலிருந்து தொடங்கி திரைக்கலை வரைக்குமான பல்வேறு நிகழ் கலைகள் சகலவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆட் படுகின்ற மனிதவாழ்வின் சாரத்தை தான் மூலமாகக் கொண்டிருக்கின்றன.
எனவேதான் திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கும் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. பல இலக்கிய வடிவங்கள் உலக திரைப்படங்களாக எடுக்கப்பட்டு புகழ் அடைந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் பல மொழிகளில் திரைப்படங்களாக எடுக்கப்பட்டு இருக்கின்றன. உலகளாவிய அளவில் ஏதேனும் ஒரு இலக்கியப் பிரதியை அல்லது ஏதேனும் நாவலை அல்லது யாரேனும் எழுத்தாளர் எழுதிய கதையை மூலமாக வைத்து திரைப்படம் எடுப்பதென்பது மிக மிக இயல்பான ஒன்று.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படம் ஆவது தமிழ் திரை உலகிற்கும் கூட புதிதல்ல. புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), போன்ற கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

அண்மைக்காலங்களில் மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் எழுத்தாளர்களுக்கும் திரை உலகிற்கும் உள்ள உறவு மிக நெருக்கமானது.

எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.

அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.

நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. தனது அண்ணனை பகையின் காரணமாக கொலை செய்த உள்ளூர் பெரிய மனிதரை பதின்ம வயது கொண்ட சிறு இளைஞன் கொலைசெய்து பழித்தீர்க்கிறான். அந்தக் கொலையை அந்த இளைஞனின் தந்தையும் அவனது குடும்பமும் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதுதான் கதை. அந்த ஊர்ப் பெரிய மனிதனின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற அந்த எளிய குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. பகை முடித்து பழி தீர்க்க அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்தவனை கொலைசெய்து பழி தீர்க்கிறான். இதைத்தான் அப்படியே வைக்காமல் திரைமொழியில் சமூக சீர்திருத்த காட்சிகளோடு கூடிய பதிவுகளை வைத்து கூடுதலான கதை சேர்க்கை அம்சத்துடன் இத்திரைப்படத்தை வெற்றிமாறன் உருவாக்கியிருக்கிறார்.

வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருந்தாலும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.

வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.

எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.

நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ் வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பிளாஷ்பேக் வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.

இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.

ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது ‌.

வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார்.‌ சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.

தனுஷ் மஞ்சு வாரியர் பசுபதி பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞானராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.

அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.

இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள். இதுபோன்ற மிகச்சிறந்த திரைப்படங்களை தயாரிக்கவே ஒரு துணிச்சல் தேவையாக இருக்கிறது‌. அதை மிகச்சரியாக கலைப்புலி தாணுு சாத்திய ப்படுத்திருக்கிறார்.இத்திரைப்படத்தின் இணை இயக்குனராக நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் ஜெகதீச பாண்டியன் பணியாற்றி இருப்பது நமக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி.

ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.

அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்த்து கொண்டாட வேண்டிய சமூக செய்திகளை உள்ளடக்கிய சிறந்த திரைப்படமாக அசுரனை இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட அவரது குழுவினர் உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களது கடும் உழைப்பிற்கு காட்சிக்கு காட்சி திரையரங்குகளில் கைதட்டல்களே சாட்சி.

அசுரன் தவறவே விடக்கூடாத மாபெரும் அனுபவம்.

 

உறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..

——————————————–

ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது நீண்ட காலமாய் உறைந்திருக்கும் அந்த தொன்மை இன மக்களின் கலையாத கனவு மட்டுமல்ல.. அது காலங்காலமாய் தொடரும் உயிர்த் தாகம்.

உலகத்தில் நம்மை விட நிலப் பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைவான எண்ணிக்கை கொண்ட எத்தனையோ தேசிய இனங்கள் தங்களுக்கென ஒரு நாடு அடைந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் இக்காலத்தில்.. தமிழர் என்கின்ற தொன்ம தேசிய இனத்திற்கு மட்டும் உள்ளங்கை அளவு கூட ஒரு நாடில்லை என்கிற நிலை வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் பெரும் சோகமாய் தொடர்ந்து வருவதென்பது எதனாலும் சகிக்க முடியாத ஒன்று.

அடிமைப்பட்டு தாழ்ந்து விழுந்து கிடக்கிற ஒவ்வொரு இனமும் தனது விடுதலைக்கான ஆயுதத்தை அதுவே தயாரிக்கும் என்பதுதான் இத்தனை ஆண்டு காலமும் இயற்கை நமக்கு போதித்த பெரும் பாடம். அப்படி தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஆயுதமாக நம் இனத்தில் பிறந்த மாபெரும் தலைவர் எம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

எதிரிகளாலும் குறைகூற முடியாத கறைபடாத வாழ்விற்கு சொந்தக்காரர்.
எங்கள் தலைவர் பிரபாகரன் அவன் முருகனுக்கே நிகரானவன் என்ற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளில் நமக்கு காணக் கிடைப்பது.. தலைவர் பிரபாகரனின் பெருமைகள் மட்டுமல்ல.. மூத்தகுடி ஒன்றின் மரபின் வழி பிறந்த ஒப்பற்ற தலைவனாகவும் அவர் விளங்கி இருக்கிறார் என்பதுதான்.

அப்படிப்பட்ட தலைவர் பிரபாகரனை தன் ஆன்மாவில் சுமந்து.. அவரது சொற்களை.. அவரது கனவுகளை.. தன் நினைவோடு நிறுத்தி அவரின் தம்பியாக
தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடுதலையை நிகழ்காலத் தலைமுறைக்கு கடத்துகிற உன்னதப் பணியை அண்ணன் சீமான் அவர்கள் செய்து வருகிறார்.

ஆனால் நாங்கள் தான் தலைவருக்கு நெருக்கமானவர்கள்.. எங்கள் பேச்சை கேட்டு தான் தலைவர் நடப்பார்.. தலைவருக்கு மிகுந்த மதிப்பிற்குரியவர் நாங்கள்தான் என்றெல்லாம் பெருமைகள் பேசிக் கொண்டவர்கள்.. இனத்தைக் கொன்றவர்களோடு இன்முகம் காட்டி நிற்க.. அண்ணன் சீமான் மட்டும்தான் இந்த இனத்தையும், உயிரையும் தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கின்ற எளிய இளைஞர்களோடு களத்தில் நிற்கிறார்.

எத்தனையோ தலைவர்கள் ஈழ விடுதலையை ஆதரித்தார்கள். ஆனால் சீமானோ ஆதரிக்க பிறந்தவர் அல்ல. ஈழ விடுதலை என் விடுதலை என்று முழங்கினார். ஈழம் என்பது எங்கோ தூர இருக்கின்ற தேசம் என அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது.. ஈழம் தமிழர்களின் மற்றொரு தாய் நாடு என்று சீமான் முழங்கினார். மற்றவரெல்லாம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தார்கள். ஆனால் சீமான் பிரபாகரன் தலைவர் உடன் பிறந்த என் அண்ணன் என்று முழங்கினார்.

இதுதான் அண்ணன் சீமானுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.இந்த வித்தியாசத்தை விடுதலைப்புலிகளும் உணர்ந்திருந்தார்கள். அண்ணன் சீமான் அவர்கள் தலைவரை சந்திப்பதற்கு முன்பாகவே.. உலகத்தின் பல நாடுகளில் இன விடுதலைக்கு அவர் முழங்கிய முழக்கம் தலைவருக்கு சென்று சேர்ந்திருந்தது.

இவர்களெல்லாம் சொல்வதுபோல திரைப்படம் எடுக்கதான் சீமான் ஈழத்திற்கு சென்றாரெனில்.. கடற்புலிகளின் தலைவர் சூசை எதற்காக சீமானை கடைசி நொடியில் கை காட்ட வேண்டும்..??

ஆம்.. சீமான் எளியவன் தான்.. வயதில் மற்றவர்களைவிட இளையவன் தான்.. தலைவராக அறியப்படுகிற பலருக்கு கீழே தரையில் அமர்ந்து இருந்தவர்தான்..

ஆனாலும்… தனக்கு யார் உண்மையாக இருப்பார் என தலைவருக்கு தெரியாதா என்ன.. அதனால் தான் இனத்தின் பெரும் கடமை சீமான் கரங்களுக்கு வந்து சேர்ந்தது.

உண்மையில் சீமான் பிரபாகரனைச் சந்தித்தாரா.. அங்கு என்னதான் நடந்தது… எது பற்றி பேசப்பட்டது.. என்பது பற்றி தெரிவிக்க உலகத்தில் இருவருக்கு மட்டுமே உரிமை உண்டு.

அந்த சந்திப்பில் இடம்பெற்ற தலைவருக்கும், அண்ணன் சீமானுக்கும் மட்டுமே அந்த தகுதி உண்டு. அவரவர் கற்பனைக்கு ஏற்றார்போல்.. சீமானை பொறாமையால் சீண்டுகிற சில்லறை வேலைகளை சிலர் தொடர்ச்சியாக இங்கே பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எனவேதான் வெளிப்படையாக இது குறித்து பேச அண்ணன் சீமான் முதன்முதலாக குமுதம் ரிப்போர்ட்டர் மூலமாக ஒரு தளத்தை அமைத்திருக்கிறார்.

குமுதம் ரிப்போர்ட்டரில்.. அடங்கா பெரு நெருப்பு என்ற தலைப்பில் அண்ணன் சீமான் தன் நெருப்பு தமிழில் எழுதி வருகிற அந்த வரலாற்றுப் பெரும் தொடரில்… தலைவர் பிரபாகரனுக்கும் தனக்கும் உள்ள உறவை பற்றி.. அவர்களுக்குள் நடந்த சந்திப்பை பற்றி..
விரிவாக பேச இருக்கிறார்.

யார் பிரபாகரன் என தலைப்பிட்ட இந்த வாரத் தொடர்.. மறைந்திருந்த பல உண்மைகள் மீது பாய்ச்சப்பட்ட வெளிச்சமாய் ஒளிர்கிறது. பிரபாகரன் என்ற தனிமனிதன் ஒரு தேசிய இனத்தின் தலைவனாக எவ்வாறு அறியப்படுகிறார் என்பதைப்பற்றி பெருமித மொழியோடு அண்ணன் சீமான் அவர்கள் விவரிக்கும்போது.. நமது கண்கள் கலங்குகிறது.

தன் உயிராக நேசிக்கின்ற தன் அண்ணனைப் பற்றி.. தமிழ் தேசிய இனத்தின் மன்னனைப் பற்றி.. அண்ணன் சீமான் மிக ஆழமாக உணர்வுபூர்வமாக விவரித்து இருக்கின்ற அந்தக் கட்டுரை.. இவ்வார குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும்.. வாசிக்கவேண்டிய
வரலாற்றுப் பெரும் தொடர்

அடங்கா பெரு நெருப்பு.

உண்மை என்பது ஊழித் தீ. அதை வெறும் குப்பைகளைப் போட்டு அணைத்து விட முடியாது.

அடங்கா பெரு நெருப்பு .. பற்றி எரிகிறது.
சுற்றி பரவுகிறது.

அவசியம் படியுங்கள்.

மணி செந்தில்.

Page 18 of 56

Powered by WordPress & Theme by Anders Norén