பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 48 of 57

வணக்கங்கள்.

அன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு ..

வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் நான் எழுதுகிறேன். நாம் துயருற்ற கணங்களை நமக்குள்ளே நிறுத்துவோம் . அவை அளிக்கும் நமக்கான ஆற்றல் மிகுந்த வன்மத்தினை.

என் இனம் வீழ்ந்த துயரமே என்னை எழுத வைக்கிறது. தோல்வியின் வன்மமே என்னை இயங்க வைக்கிறது. எம் இனத்திற்கான விடுதலைக் கனவே என் எழுத்திற்கான அடிப்படை.

எழுதுவோம்..இயங்குவோம்..இறங்குவோம்.

நேசங்களுடன்

மணி.செந்தில்

சொற்களின் தூரிகை..


முதிர்வின் நட்பு நடமாடும் குளத்தருகே

பாசிகளோடு சிந்திக் கிடந்த

பசுமையான சில சொற்களை பார்த்ததாக

அப்பா சொன்னார்.


தத்தி தவழ்ந்து வந்து கட்டி அணைத்து கன்னம்

பதித்த மழலை ஒன்று மஞ்சள் சொல்லொன்றை

மகிழ்வுடன் பரிசளித்துப் போனது.


கடந்துப் போன காலமொன்றை இழுத்து வந்த

நினைவு ஒன்று , பெருமூச்சோடு செம்பருத்தி பூவில் இருந்து

உதிரும் சிவந்த சொல் ஒன்றை கையளித்துப் போனது.


இடையறா முயக்கத்தின் வெளிச்சத்தில்

காம கடும் புனல் தருணமொன்று ..கிறங்கிய சொல் ஒன்றில்

நிலவின் துளி ஒன்றை நிறுத்தி வைத்துப் போனது.

பொழிந்த மழையின் கசிவாய் நகரும் காற்றின் சிறகொன்று

யாருக்கும் தெரியாமல் சிலிர்ப்பின் சொல்லுக்கடியில்

ஊதா நிறமொன்றை ஒளித்து வைத்துப் போனது.


இழுத்து உருவேற்றி கட்டிய வில்லொன்றின் குறியாய்

இலக்கின் இதயம் நோக்கி பாயும் சொல்லொன்றை எய்து

விட்டுப் போன மனைவியின் நிழலில் தணல் ஒன்றின் நிறம் கண்டேன்..


பின்னிரவு சாலையில் வெளிச்சப் பெருக்காய் கசியும் விளக்கொன்றின்

தனிமைத் துயரின் மிச்சத்தில் வெளிறிய பழுப்பின் வாசம் அறிந்தேன்..

முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் உறவொன்றின் துயரப் பெருக்கில்

விடியாத இரவொன்றின் நிறம் எடுத்தேன்..


நிறம் சேர்த்த தூரிகையில் வரைய தொடங்கினேன்..

இந்த யுகத்திற்கான இறுதி ஒவியமொன்றை..

முடித்து பார்த்து அதிர்ந்தேன்.

வெள்ளைத் தாளின் வெறுமை கண்டு.

சீமான் – உயர்த்தும் கரத்தில் ஒளிரும் சூரியன்..

அண்ணன் சீமான் மீது மீண்டும் வழக்கொன்றினை பதிவு செய்து விட்டு தனிப்படைகள் பல வைத்துக் கொண்டு தேடுகின்றனர் காவல் துறையினர். தமிழ் இனத்தின் உரிமைக் குரலாய் ஒலிக்கின்ற சீமானின் ஆவேசம் ஆட்சியாளர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது என்பதற்கான சான்றுகளாய் அமைகின்றன இத்தகைய அச்சுறுத்தல்கள். தாக்கப்பட்டு ..நிர்வாணப்படுத்தப்பட்டு..மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட தன் எளிய மீனவ சகோதரனின் மரணத்திற்காக ஆற்றாமை வலியோடு கத்தித் தீர்த்த சீமானின் சினம் கொண்ட அறம் ஊழலும்..துரோகமும் புரையோடிப் போன மூன்றாம் தர ஆட்சியாளர்களுக்கு சவாலாய் இருக்கிறது. என் சகோதரனை கொல்லாதே.. அவனை நீ அடித்தால் நான் உன்னை அடிப்பன் என்ற அறச் சீற்றம் சிங்கள பேரினவாதத்தின் மீது இந்தியாவின் மலர்ந்து விட்ட கள்ளக் காதலுக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. ஒரு மனிதனின் உணர்வு கொப்பளிக்கும் பேச்சு அதிகார உச்சங்களுக்கு அச்சுறுத்தலாய் விளைந்து அசைக்க முடியாக அதிகாரத்தின் மாட மாளிகை..கூட கோபுரங்களை கவிழ்க்கும் பெரும் புயலாய் மாறுவது வரலாற்றில் புதிதல்ல. வரலாறு எத்தனையோ ஆகச் சிறந்த பேச்சாளர்களை கண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் மாபெரும் பேச்சாளர்களையே தன் மூலதனமாக கொண்டு வளர்ந்தன. கரகரத்த குரலால் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு தமிழ்நாட்டில் பாடை கட்டினார் அறிஞர் அண்ணா . முதலாம் உலகப் போரின் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெர்மனியை தன் உணர்வு மிக்க பேச்சால் உருவேற்றி உருவாக்கியவர் ஹிட்லர். இரண்டாம் உலகப் போரின் போது சரிந்து கிடந்த இங்கிலாந்தினை சுருட்டு ஊதும் உதடுகளால் உரையாற்றி உசுப்பேற்றி உயிரூட்டியவர் சர்ச்சில். இந்திய விடுதலையில் அனலாய் தகித்த சுபாஷ் சந்திர போஸின் சொற்கள் இன்னமும் உலவுகின்றன இலட்சியங்களாய் உலகில்.

சொற்களின் வலிமை மிகப் பெரியது. சொற்களே தேசங்களை உருவாக்குகின்றன. தோல்வியாலும்.. அடிமைத்தனத்தினாலும் சினம் கொண்ட மனநிலை சீறி பாய்ந்து உதிர்க்கும் சொற்கள் காற்றில் மிதந்து..கால்கள் முளைத்து..சோம்பிக் கிடக்கும் விழிகளில் வெளிச்சத்தினை பாய்ச்சும் வல்லமை உடையன. சீமானின் சினமும் இத்தகையதுதான்.

ஒரு தேசிய இனத்தின் தன்னுரிமைப் போரில் தவிர்க்க இயலா இருள் ஒன்று சூழுகையில் வெளிச்ச தெறிப்பாய் வெளியே வந்தார் சீமான். முற்போக்கு மேடைகளில் பெரியாரியலையும், பொதுவுடைமையும் ,தமிழினச் சிறப்பினையும் ..பாடல்களோடும், நகைச்சுவையோடும் விவரித்த சீமான் தேசியத்தலைவர் பிரபாகரனின் சந்திப்பிற்கு பிறகு ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க சொல்லாயுதமாய் மாறிப் போனார்.

எளிய மனிதனின் ஆழ் மனதில் கவிழ்கின்ற துயரொன்றின் விளைவாய் பிறக்கின்ற சினமாய் மேடையில் முழங்கினார் சீமான். அனல் தெறிக்கும் அவரது சொற்களில் பிரபாகரன் என்ற பெயர் உச்சக் கட்ட பெருமிதமாய் நிலைநிறுத்தப்பட்டது. ஈழம் என்பது இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கான நாடு மட்டுமல்ல.. உலகில் வாழும் 12 கோடி தமிழர்களுக்கான தேசம் என உரக்க அவர் முழுங்குகையில் தமிழர்களுக்கான நோக்கம் ஒர்மையாக ஒன்றுப்பட்டு ஒளி வீசியது.

மேடையில் முழங்குகையில் சீமானின் உடற்மொழி மிக தனித்துவமானது. கைகளை வீசி, காற்றினை அலசி…உடலினை முறுக்கி ..நெருப்புத் துண்டுகளாய்..அடிவயிற்றில் இருந்து ஆறாத சினமாய் சீறிப்பாயும் சீமானின் வார்த்தைகளில் சிக்கும் எதிரி அம் மேடையில் சின்னாப்பின்னாபடுவதை நாங்கள் மெய்சிலிர்க்க பார்த்திருக்கிறோம். ஈழம் மட்டும் மலர்ந்தால் இங்குள்ள தமிழன் ‘என் அண்ணன் நாட்டில் லஞ்சம் இருக்கா..? இங்கு மட்டும் ஏன் லஞ்சம் வாங்குகிறாய் ..?’ என சீறிக் கொண்டு செருப்பால் அடிப்பான் என சீமான் சிலிர்ப்பாய் விவரிக்கையில் சீமானின் கால்கள் பின் மடங்கி செருப்பினை கழற்ற எத்தனிக்கும் அந்த லாவகம் யாருக்கும் எளிதில் அமையாதது. தான் கண்ட ஈழத்தினை கனவின் தேசமாய் அவர் விவரிக்கையில் குரலில் ஓடும் குழைவும், இன்பமும் உண்மையானவை. என் அண்ணன் பிரபாகரன் என உச்சஸ்தாயில் அவர் குரல் மேல் எழும்பும் தருணங்களில் அவர் விழிகளின் ஓரத்தின் உண்மையான சகோதரனின் பாசம் வழியும். இல்லாத ஒன்றாய் இருக்கின்ற இறையாண்மையின் போலித் தனங்களை அவர் வெளிக் கொணரும் தருணங்களில் எள்ளலும்..துள்ளலும் மிகுந்த கேலிகளில் கூட துயர் ஒட்டிக் கொண்டிருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்.

ஈழத்தில் நம் சகோதரிகளின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறுவுகளை ஆறாத காயத்தோடு்ம்.. தாங்காத வலியோடும் அவர் விவரிக்கையில் குரலில் காயம் பட்ட சிறுத்தையின் சினம் கொண்ட வன்மத்தின் வெப்பத்தினை நான் உணர்ந்திருக்கிறேன்.எத்தனையோ இரவுகளில் ..ஏதேதோ ஊர்களில்.. விடுதியின் மங்கலான வெளிச்சத்தில் தனிமையாய் படுத்து படித்துக் கொண்டிருக்கும் அண்ணன் சீமானை உண்மையில் நான் வேதனையோடு பார்த்திருக்கிறேன். ஏன் இந்த மனிதனுக்கு மட்டும் துயரும்..வலியும் சிறையும் மிகுந்த வாழ்க்கை..? .ஏன் இந்த மனிதன் மட்டும் இப்படிப்பட்ட வலி மிகுந்த கொடும் இருட்பாதையில் முள் செருப்போடு நடந்து செல்கிறான்..? இவனுக்குதான் அருகிலேயே செல்வ செழிப்பான பகட்டு அரண்மனையின் பளபளப்பான ராஜ வீதிகள் இருக்கின்றனவே..? அதை தேர்ந்தெடுக்காமல் வலிய முன் வந்து இந்த மனிதன் ஏன் வலியை தேர்ந்தெடுத்தான் என்ற வினாவில் தான் ஒரு இனத்தின் விடுதலைக்கான தணியாத தாகம் ஒளிந்திருக்கிறது.

அண்ணன் சீமானின் உயர்ந்த பட்ச விருப்பம் ஈழம்..அதுதான் அவருக்கான உளவியல் தீர்வு.அதுதான் அவர் காயங்களுக்கான மருந்து. அதுதான் அவருக்கு அனைத்தும். ஒரு நாள் நான் அண்ணன் சீமானிடம் கேட்டேன். ஏன் அண்ணா நீங்கள் மட்டும் இப்படி..? ..என்னை சற்று நிமிர்ந்து பார்த்து சற்றே சிரிப்பாய் சொன்னார்.. ‘என்னையே இப்படி பார்க்குற நீ என் அண்ணனை பார்த்தால் அசந்திருப்பாய்’. உண்மையில் அவர் தேசியத்தலைவர் பிரபாகரனை நினைக்காத நொடியில்லை. ஒவ்வொரு பொழுதிலும் அண்ணன் எங்களைப் போன்ற தம்பிகளிடம் பகிர துடிக்கும் செய்தி..தத்துவம்.. அனைத்துமே பிரபாகரன் தான். கொஞ்சம் தாமதமாகத்தான் எனக்கு புரிந்தது. அவர் தன்னையே தன் அண்ணன் போல மாற்றிக் கொள்ள போராடி வருகிறார் என்று. பிரபாகரன் என்பது மிக நீண்ட நெடிய பாதை. அப்பாதையில் சற்றும் தளரால் மூச்சிறைக்க ஒடிக் கொண்டிருக்கிறார் அண்ணன் சீமான்.

ஒரு இனத்தின் தோல்விக்கு பிறகான நம்பிக்கை துவக்கமாய் சீமான் அடையாப்படுத்தப்பட்டிருக்கிறார். எந்த அடையாளங்களை அழிப்பதற்கு ஆட்சியாளர்கள் முயன்று வருகிறார்களோ … அதே அடையாளமாய் அச்சு அசலாய் கம்பீரமாய் நிற்கிறார் சீமான். இதுதான் ஆட்சியாளர்களுக்கு பிரச்சனை. சீமானின் கனவு மிகப் பெரியது. அதற்கான பாதையும் மிக தொலைவு. ஆனால் எங்களைப் போன்றோரை இழுத்துக் கொண்டு ஓடும் ஒப்பற்ற தலைமை இயந்திரமாய் அவர் போய் கொண்டிருக்கிறார். கடும் கோபத்துடன் கனன்று தெறிக்கும் அவரது வார்த்தைகள் ஆட்சியாளர்களை அச்சப்பட வைத்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் சீமான் தனி மனிதனல்ல. அவர் தோல்வியின் துயரும்..வலியும் தந்த வன்மம் மிக்க ஒரு தேசிய இனத்தின் வலிமை மிக்க ஆயுதம்..

சீமான் ஒரு எய்யப்பட்ட அம்பு.

பிரபாகரன் என்ற வில் சீரிய இலக்கோடு சீற வைத்த அம்பு..

இதன் தாக்குதலில்

இலக்கு இல்லாமல் போகும்.

துளைக்கும் வலிமையில் துயர் தீய்ந்து போகும்.

அது வரை எய்யப்பட்ட அம்பினை

தடுத்துப் பார்க்கும் தகரங்களும்,, தடைகளும்,தகர்க்கப்பட்டு

சிறைகள் சிதைக்கப்பட்டு.. துளைக்கப்பட்டு..

தெறிக்கும் தெறிப்பில் ஒளிரும் விடுதலையின் சுடர்.

நீதிமன்றத்தில் தமிழ் – தமிழ் தேசிய இன தன்னெழுச்சி கோரிக்கை .


நம் கண் முன்னால் ஈழ மக்கள் வல்லாதிக்க நாடுகளால் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கப்படுகையில் உணர்வு உந்த ஆவேசமாய் போராடிய வழக்கறிஞர்கள், தன் தாய்மொழியை, தன் சொந்த நிலத்தின் நீதிமன்ற மொழியாக அறிவிக்க கோரி சாகவும் துணிந்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தின் வரலாறு விசித்திரமானது. வல்லான் வகுத்ததே சட்டம் என்ற முது மொழிக்கேற்ப மன்னராட்சி காலத்தில் அரண்மனைகள்தான் அறம் கூறும் மனைகளாக திகழ்ந்தன. The king can do no wrong – என்றெல்லாம் அதிகாரத்தின் உச்சம் தெறிக்கின்ற துளிகளே நீதியாகவும், சட்டமாகவும் விளங்கிய காலத்தில் எளிய மனிதர்களுக்கு நீதி என்பது அவ்வப்போது எட்டிப் பார்க்கின்ற நிலவாய் நின்றது. நீதி பரிபாலனம், சட்ட விதிகள் ,நீதி பரிபாலன அலுவல் முறைகள் என அனைத்தையும் மேலை நாடுகளிடம் இருந்து உள் வாங்கிய இந்திய நீதி வழங்கல் தன்மை மிகவும் பழமைத் தன்மை உடையது. எடுத்துக்காட்டாக வெப்ப நாடான நம் நிலத்தில் வழக்கறிஞர்களின் உடை முற்றிலும் முரண் தன்மை உடையதாக விளங்குகிறது. ஆங்கிலேய வந்தேறிகளின் பல சட்டங்கள் இன்றளவும் நம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

வழக்கறிஞர்கள் தொழிலும், நீதிபதிகளுக்கான தகுதிகளும் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் வசமே சார்ந்து இருந்தன. உச்சமும், அதிகாரமும், எங்கு குவிகிறதோ அங்கு பார்ப்பன ஊடுருவல் உடனடியாக நடக்கும் என்ற வரலாற்று சமூக விதிக்கு ஒப்பாக வழக்கறிஞர் தொழிலையும் பார்ப்பனர்கள் கைப்பற்றி இந்த நாட்டில் 90 விழுக்காட்டிற்கும் மேலாக இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து நீதித்துறையை மிகவும் அன்னியப் படுத்தி, கடவுளுக்கு நிகரான புனிதத் தன்மையை ஏற்படுத்தி உச்சாணிக் கொம்பில் உயரத்தில் வைத்தார்கள். 1862 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே வழக்கறிஞராக முடியும். 1870 க்கு பிறகே ஆங்கிலேயர்கள் தவிர்த்த இந்தியரும் வழக்கறிஞராக ஆக முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்தில் சரசுவதி குடியிருந்த நாக்காக விளங்கிய பார்ப்பனர்களே இந்த தொழிலை ஆக்கிரமிக்க துவங்கினர் . வழக்கறிஞர் சங்கம் என அழைக்கப்படும் வக்கீல் பார் 1888 ஆண்டு மயிலாப்பூரில் எஸ்.சுப்பிரமணிய அய்யர் என்ற பிராமணரால் துவக்கப்பட்டது. இவ்வாறெல்லாம் தமிழுக்கு முற்றிலும் தொடர்பில்லாத வந்தேறிகளிடம் சிக்கிய நீதித்துறை இன்றளவும் தமிழை ஏற்றுக்கொள்ள தடுமாறிக் கொண்டு நிற்கிறது. தந்தை பெரியார் என்ற மகத்தான மனிதனின் வருகைக்குப் பிறகுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கரங்களுக்கு கல்வி போய் சேர்ந்த்து. அதற்குப்பிறகுதான் வானுயர நின்ற வழக்கறிஞர் தொழிலும் எளிய மக்களின் கரங்களிடம் வசப்பட்டது.

மானுட இனத்தின் தனித்த அடையாளமாய் மொழி திகழ்கிறது. மொழியே ஒரு இனத்தின் பண்பாட்டு வரலாற்றின் அடிப்படையாகவும், தொடர்ச்சிக்கான ஆதாரமாகவும் விளங்குகிறது. சமூகத்தின் தகவல் பரிமாற்ற தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல மொழியின் பணி. ஒரு இனத்தின் அனைத்து சமூக கூறுகளிலும் மொழியின் ஆதிக்கமும், அவசியமும் தொடர்கிறது. மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கினை மொழிதான் உறுதி செய்தது. எனவே தான் தேசிய இன வரையறைவியலின் அடிப்படை அலகாக மொழி திகழ்கிறது. தேசிய இனத்தின் உயரிய சின்னமாக விளங்கும் மொழிதான் அந்தந்த இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை தீர்மானிக்கிற காரணியாக விளங்குகிறது.உலக மொழிகளில் மிக தொன்மையான தமிழ் மொழியை பேசுகின்ற நாம் …நம் தாய்மொழியை வெறும் தகவல் பரிமாற்ற கருவியாக மட்டும் காணாமல் நம் தனித்த அடையாளமாய் போற்றி பாதுகாக்க முயன்று வருகிறோம். “வானம் அளந்ததனைத்தும் அளந்திடும் வண்மொழி” என பாரதி சிலிர்த்து , “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி” என புறப்பொருள் வெண்பாமாலை புகழ்ந்து, 3000 ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வளமையையும், இலக்கிய செழுமையும் பெற்று உயர்த் தனி செம்மொழியாக திகழ்கிறது நம் தமிழ் மொழி.

இந்தியா போன்ற பல மொழிகளும், முரண்பட்ட பருவ காலங்கள் நிலவும் வெவ்வேறு விதமான நிலத் தன்மைகளும் நிரம்பிய ஒரு நாட்டில் அந்தந்த தேசிய இனங்களுக்கான அடிப்படை அடையாளமாக மொழியே திகழ்கிறது. இந்திய அரசியலைப்பு இந்த பரந்துப்பட்ட நிலவியலில் உலவும் மொழிகளில் அதனதன் வரலாற்று தன்மைகளுக்கு ஏற்பவும், மக்களின் உபயோகத் தன்மைகளுக்கு ஏற்பவும் 2003 ஆம் ஆண்டின் அரசமைப்பு 92 ஆம் திருத்தச் சட்டத்தின் படி தமிழ் உள்ளீட்ட 22 அலுவல் மொழிகளை அரசியலைப்பு எட்டாம் அட்டவணையில் அடையாளம் காட்டுகிறது. இந்த மொழிகள் அதனதன் அளவில் செழித்தோங்க உரிமையும், பயன்பாட்டு தன்மையில் விரிந்து பரவ உரிமையும் கொண்டு தன்னகத்தே தனித்த இறையாண்மை கொண்டும் விளங்குகின்றன. ஒரு நிலை நிறுத்தப்பட்ட முழு சனநாயகம் தேசிய இனங்களின் தாய்மொழியின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை ஆதரித்து உறுதி செய்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து மத்தியில் ஆள்பவர்கள் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களாக இருந்ததால் அவர்களின் தாய்மொழியை பெரும்பான்மை என்ற தட்டையான தகுதியை வைத்துக் கொண்டு பன் முக மொழிகள் நிலவும் ஒரு பரந்துப்பட்ட நிலத்தில் எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் தேசிய மொழியாக தேவநாகரி வடிவத்துள்ள இந்தியை அறிவிக்க முடிந்தது.அதற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பினை உறுதி செய்ய அரசமைப்பு சட்டம் உறுப்பு 343 வழிவகை செய்கிறது. மேலும் எவ்வித மனத்தயக்கமும் இல்லாமல் மற்ற தேசிய இனத்தவர் வாழும் நிலங்களில் இந்தியை புகுத்தவும் முடிந்தது. உறுப்பு 351 இந்தியை பரப்புவது யூனியனின் கடமை என அறிவித்துள்ளது. பல்வேறு பட்ட மொழி வாரி தேசிய இனங்கள் உள்ள நாட்டில் இந்தி மட்டும் பரப்ப வேண்டியது ஒரு கடமையாக அரசமைப்பு சட்டத்தினால் கூறப்பட்டிருப்பது முற்றிலும் ஒரு தலைச்சார்பானது. மேற்கண்ட உறுப்பு 351-ன் காரணமாகவே ஆர். ஆர். தளவாய் எதிர் தமிழ்நாடு மாநிலம் (AIR 1976 SC 1559) என்ற வழக்கில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்க்கு ஒய்வூதியம் அளிக்கும் தமிழக அரசின் திட்டம் உச்சநீதிமன்றத்தினால் ஏற்க முடியவில்லை. தமிழினத்தின் தேசிய தன்னெழுச்சி உணர்வாக பற்றி பரவிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் இந்தியின் ஆதிக்கம் ஒரளவு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்றளவும் இந்திய நிலத்தின் ஆகச் சிறந்த ஒற்றை மொழியாக இந்தியை நிலைநிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தேசிய இனத்திற்கான தன்னுரிமைகளில் முதன்மையானதாக திகழும் மொழிக்கான உரிமை நீதித்துறையில் முழுவதுமாக மறுக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு அடையாளம் காட்டிய 22 அலுவல் மொழிகளில் இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக , அலுவல் மொழியாக இருக்கின்றன. பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தி மட்டுமே நீதிமன்ற மொழியாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்திய அரசினால் அடையாளம் காட்டப்பட்ட 22 அலுவல் மொழிகளில் இந்தியை தவிர மற்ற மொழிகளை நீதிமன்ற அலுவல் மொழியாக அதனதன் மாநிலங்களில் மத்திய அரசு அறிவிக்காத பாரப்பட்சத் தன்மை இந்தியா அணிந்துக் கொண்டிருக்கும் சனநாயக முகமூடிக்கு ஏற்புடையதாக இல்லை. இத்தகைய பாரபட்ச மொழிக்கொள்கை இந்தியை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு சாதகமாகவும், மற்ற மொழி சார் தேசிய இனங்களுக்கு விரோதமாகவும் இருக்கின்றது. மற்றொரு அலுவல் மொழியான ஆங்கிலம் தமிழின மக்களின் சமூக வாழ்வியலை மிக கடுமையாக நசிப்பதாக இருப்பதோடு மட்டுமில்லாமல் விளிம்பு நிலை மக்களின் பயன்பாட்டிற்கு எதிராக உள்ளது. இந்த பரந்து பட்ட நிலத்தில் இங்கு வசிப்பவர் யாருக்குமே தாய்மொழியாக ஆங்கிலம் இல்லை. ஆனால் ஆங்கிலம் நமக்கான நீதிமன்ற மொழியாக இருப்பது வெட்ககேடான ஒன்று.

எளிய மனிதனின் இறுதி நம்பிக்கை நீதிமன்றம். நீதிமன்றங்களின் அனைத்து கதவுளும் மூடப்பட்டு ..இருட்டு அறைக்குள் …புரியாத மொழியாய் வழிந்தோடும் நீதி எப்படி மக்களுக்கு எட்டும் ஒன்றாக இருக்கப் போகிறது என்பது புரியவில்லை. பரந்த எண்ணிக்கையில் வாழும் மக்களின் மொழியில் இல்லாத சட்டமும், நீதியும் எதன் பொருட்டு அன்னிய மொழியில் அமையவேண்டும் என்பதில் தான் அனைத்து வித சதிகளும் அடங்கி இருக்கின்றன. இந்திய அரசியலைப்பு உறுப்பு 348 நீதிமன்ற அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழிகள் இருக்க தடை இல்லை என தெளிவாக உரைக்கின்ற போதும் கூட இன்றளவும் மத்திய ,மாநில அரசுகளின் கனத்த மெளனம் கள்ளத்தனமான ஒன்று என்பது வெளிப்படை.

மக்களுக்கான பயன்பாட்டு வெளியாக வெளிப்படையாக திகழ வேண்டிய நீதிமன்றம் யாருக்காக …எதன் பொருட்டு… மக்கள் மொழியில் இல்லாமல் போக வேண்டும் ? . சமூக தளத்திற்கு மிக நெருக்கமான வழக்கறிஞர்களின் வாதங்கள் மிக வெளிப்படையாக , மக்களின் தாய்மொழியில் அமைவதுதான் நேர்மையானதாக இருக்க இயலும். கடவுளின் இருக்கைக்கு நிகரானதாக புரியாத மொழி பீடங்களினால் நிர்மாணிக்கப்பட்ட நீதிபதிகளின் இருக்கையும்… மக்களுக்கு புரியாத ஆங்கிலத்தில் புரளும் சட்டத்தின் நாக்குகளும் ,மக்களின் மொழிக்கு எதிராக இருக்கும் போது…தகர்த்தெறியாமல் என்ன செய்வது..?

உயர் தனிச்செம்மொழியாக மத்திய அரசு தமிழ் மொழியை அறிவித்து விட்டதாக ஆடம்பரம் பொங்க…கொண்டாட்ட காட்சிகள் அரங்கேறுகின்ற இவ்வேளையில் …ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியால் ஒரு ஒற்றை சுற்றறிக்கை மூலம் கூட தமிழுக்கு அங்கீகாரம் தர இயலவில்லை. கேட்டால் வந்து பேசுங்கள்..நாங்கள் தடுக்க மாட்டோம் என்று தர்க்கம் வேறு. தமிழில் பேசினால் தடுக்காமல் இருப்பது எப்படி தமிழ்மொழிக்கான அங்கீகாரமாக நினைக்க முடியும்…? . தமிழில் பேசுவது மட்டுமே பயன்பாட்டின் மொத்த வடிவத்தினை உள்ளடக்காது. மாறாக நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் மொழியில் நிகழ்வதற்கு யாருமே வாய்மொழியாக கூட உத்திரவிட மறுக்கிறார்களே ஏன்..? எம் தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தினை ஒரு ஒற்றை சுற்றறிக்கையில் சுருக்கி வைத்து .. இந்தி பேசாதவர்களின் எண்ணிக்கை 50% விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும் இந்த நாட்டில் இந்திக்கும், வந்தேறி மொழியான ஆங்கிலத்திற்கும் கொடுக்கும் குறைந்தப் பட்ச மதிப்பினை ..3000 ஆண்டுகட்கு முந்தைய எம் உயிருக்கு நிகரான எம் தாய்மொழிக்கு வழங்காத நீதிமன்றமும், அதன் சட்டங்களும் எதன் பொருட்டும் எமக்கு எதிரானவைகளே…நீதிமன்றத்தில் தமிழ் என்பது தமிழ் தேசிய இனத்தின் நியாயமான கோரல் மட்டுமல்ல . ஏற்கனவே ஒடுக்கப்பட்டு ,தோற்கடிக்கப்பட்டு நிர்கதியாய் நிற்கும் ஒரு இனத்தின் தன்னெழுச்சி முழக்கம்.

எனதருமை தமிழர்களே…

நம் பண்பாட்டின் ஆணி வேராக திகழும் ..நம் உயிருக்கு நிகரான நம் தாய்மொழியாம் தமிழினை இத்தனை ஆண்டு காலம் இருட்டில் வைத்து ஒதுக்கி வைத்தது போதும். தமிழர்களின் அடிப்படையான இக்கோரிக்கைக்காக உணர்வுள்ள வழக்கறிஞர்கள் உயிரை விடவும் துணிந்து இருக்கிறார்கள்.

இனி இழப்பதற்கு நம்மிடத்தில் ஏதும் இல்லை. நம் உயிரான மொழியை தவிர..

மொழியையும் இழந்து …சொற்கள் அற்ற ஊமைகளாய்.. உணர்வற்று திரிவதைதான் ஆள்பவர்கள் விரும்புகிறார்கள்..

நம் உயிருக்கு நிகரான தமிழினை உயர்நீதிமன்றத்தில் உயர்த்துவோம்.

விரல் கோர்த்து உயர்த்தும் கரங்களால் ..விண்ணையும் முட்டுவோம்.

வாருங்கள்.. மொழிப் போற்ற போரிடுவோம்.

“செந்தமிழைச் செந்தமிழ்நாட்டைச் சிறைமீட்க

நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும்

வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று

குந்தி குரலெடுத்து கூவாய்” – பாவேந்தர் பாரதிதாசன்

முத்துக்குமாரும்…முடிவற்ற ஒரு கவிதையும்


நித்யானந்தாவை நித்தமும் பழிக்கும்

என் மனைவிக்கு இன்று வரை தெரியாது

முத்துக்குமார் என்றொருவன்

மரித்துப்போனது.

என்றாவது ஒருநாள்

எனது நாட்குறிப்பிலுள்ள

அவன் புகைப்படத்தைக் காட்டிக் கேட்பாள்

அப்போது சொல்லிக்கொள்ளலாம்…

நம்மையெல்லாம் ஏமாற்றினானே

ஒரு நித்யானந்தா

அவனைப்போல

நம் எல்லோராலும் ஏமாற்றப்பட்டவன்தான்

இந்த முத்துக்குமாரென்று!

– என் மனைவியும் ,நித்யானந்தாவும் – சொல்வனம் பகுதி- ஆனந்த விகடன் – முத்துரூபா



கடந்த வார ஒரு நள்ளிரவில் இக்கவிதையை நான் படித்தேன். பொதுவாக கவிதைகள் என்பவற்றை படைப்பாளனின் உச்சக்கட்ட உணர்வாக மட்டும் உணரும் என்னால் இக் கவிதையை மிக எளிதில் கடக்க இயலவில்லை. வலி மிகுந்த குற்ற உணர்வால் அந்த இரவில் நான் அழுத்தப்பட்டு கண்கலங்கி விழித்துக் கிடந்தேன்.

முத்துக்குமார் – நம் வாழ்நாள் முழுக்க ஏதோ தருணங்களின் மிச்ச சொச்சத்தில் ஒட்டிக் கொண்டே வரப் போகின்ற உணர்வாய் நம்முள் சுரந்துக் கொண்டே இருக்கின்றான். முத்துக்குமாருக்கு பின்னால் பல உணர்வுள்ள தமிழர்கள் அவனது பாதையை பின்பற்றினாலும் முத்துக்குமாரின் ஈகை தனித்துவ உணர்வாய் ஒவ்வொரு தமிழனின் மனசாட்சியையும் உலுக்கியது.

தான் சாகப்போகிறோம் என்பதை உணரும் தருணங்களில் அந்த இளைஞன் மிகவும் யோசித்து இருக்கிறான். தற்கொலை என்பது கோழைகளின் முடிவென்றாலும்…இது உணர்ச்சி வயப்பட்ட ஒரு இளைஞனின் தற்கொலையாக நம்மால் கணிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கின்றான் அவன். காலநதியின் சீரற்ற ஓட்டத்தில் ஏதோ ஒரு நொடியில் சட்டென்று எடுக்கப்பட்ட ஒரு முடிவல்ல அது. மாறாக காலம் காலமாய் இறையாண்மை என்ற பெயரினால் அடக்கி வைக்கப்பட்ட தொன்மமிக்க ஒரு தேசிய இனத்தின் பொங்கி பாய்ந்த பிரவாகமாய் பிறீட்டு கிளம்பிய முத்துக்குமாரின் ஈகை நம்மை மிச்சம் இருக்கின்ற இந்த வாழ்நாட்களில் நிம்மதியாக இருக்கவிடாது.

என்னைப் பொறுத்தவரை நான் என் வாழ்நாளில் சுமக்கும் மிகப்பெரிய குற்ற உணர்வு முத்துக்குமார். அவனது தியாகம் நம்மைப் போன்றோர் சமூக இயல்பாக கொண்டிருக்கும் சுயநல, சுக நுகர்வு உள்ளத்தினை சுட்டுப் பொசுக்கிறது. நாம் தமிழர் கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் முத்துக்குமாரின் தந்தை , அப்பா குமரேசன் அருகில் அமரும் போது என்னால் இயல்பாக அமர இயலவில்லை. அவரின் கைகளினை நான் ஒரு சமயம் பற்றிய போது அக்கரங்கள் முத்துக்குமாரினை சுமந்திருக்கும் என்ற உணர்வே என்னை மிகவும் உணர்வு வயப்படுத்தியது.

நமக்கெல்லாம் வாய்க்காத ஒரு மனத்தினை பெற்றிருந்தான் முத்துக்குமார்.நமக்கெல்லாம் வாய்த்திருக்கின்ற சுக வாழ்விற்கான அனைத்து வாய்ப்புகளும் முத்துக்குமாருக்கும் கிடைத்து இருந்தன. ஆனால் நாமெல்லாம் பிழைப்பதற்காவும்,சோற்றுக்காகவும் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பொருளீட்டி , மனைவி மக்களுக்கு வீடு கட்டி , பிறக்க இருக்கின்ற பேரன் பேத்திகளுக்காக சொத்து சேர்த்து வாழ்கின்ற காலத்தில் தான் முத்துக்குமார் இவ்வாறு சிந்தித்தான்….முத்துக்குமாரால் இவ்வாறு சிந்திக்க முடிந்த கணத்தில் துவங்கி அவன் தமிழனின் மங்காப் புகழாய் மாறிப் போனான். வாழ்வதற்கான போராட்டம் தான் வாழ்க்கை என்பதை மறுதலித்து வாழ்வதற்கான புதிய இலக்கணத்தினை உரத்தக் குரலில் ஒவ்வொரு உணர்வு மிக்க தமிழனின் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு இருக்கின்றான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களால் மூன்றாம் தர அரசியலாக மாற்றப்பட்ட அவலத்தினை கற்றது தமிழ் இயக்குனர் ராம் சாட்சியாக நின்று ஏற்கனவே எழுதி இருக்கிறார். தமிழீழ விடுதலைக்கான துருப்புச் சீட்டாக மாறி இருக்க வேண்டிய முத்துக்குமாரின் தியாக உடல் , அவனது இறுதி உள வேட்கைக்கு மாறாக மிக சாதாரண நிகழ்வொன்றில் எரியூட்டப்பட்டது.

இருந்தாலும்..முத்துக்குமார் இது நாள் வரை சாகவில்லை .

தமிழக வீதிகளில் திரிந்துக் கொண்டே இருக்கின்றான். ஈழ கனவிற்கான வெப்ப பெருமூச்சாய் புழுதியடிக்கும் தமிழக வீதிகளில் திரிகின்றான் அவன். எவ்விதமான அரசியல் லாபமின்றி.. உணர்வின் பெருக்கால் ..தேசியத் தலைவர் பிரபாகரன் நீடுழி வாழ்க என அடி வயிற்றில் இருந்து முழங்கும் எளிய தமிழின இளைஞனின் குரலில் தொனித்துக் கொண்டே இருக்கின்றான். தலைவர் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியை ஆர்வமாகவும், ஆசையாகவும் பகிர்ந்துக் கொள்ளும் மனங்களாய் மாறிக் கிடக்கின்றான் முத்துக்குமார். இன துரோக அரசியலின் உச்சக்கட்ட கொடுமையாக நடக்க இருக்கும் ஆடம்பர மாநாட்டின் விளம்பரத்தினை கண்டு கூட காறி உமிழும் இளைஞனின் கோபத்தில் இருக்கின்றான் முத்துக்குமார். இனம் முள்வேலி கம்பிக்குள் அடிமைப்பட்டு கிடக்கையில் அம்பத்தூரில் கக்கூஸ் கழுவவில்லை போராட்டம் அறிவிக்கும் பித்தலாட்ட அரசியலினை இடது காலால் எட்டி உதைக்கும் இறுமாப்பு இதயங்களில் இருக்கின்றான் முத்துக்குமார்.ஒரு சீட்டுக்காக ஒற்றைக் கால் ஒடிய தவமிருந்து தள்ளாடிக் கொண்டிருக்கும் பதவி அரசியலின் பம்மாத்துத் தனத்தினை கண்டு பரிகசிக்கும் வார்த்தைகளில் வழிகிறான் முத்துக்குமார்.

முத்துக்குமாரின் ஈகை யாரும் கடக்க இயலா வெப்ப பாலைவனமாய் நம்முன் விரிந்து கிடக்கின்றது. அது பசித்த வேட்டை நாயைப் போல பின்னிரவு கனவுகளில் வேகமாய் துரத்துகின்றது. புரையோடிய புண்ணாய் …குத்திக் கிழிக்கும் வலியாய்.. சதா ஈழத்தினை நினைவூட்டி நிற்கும் அது.

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்

நன்றி- பட உதவி- வினவு தளம்

தமிழன் என்று பதியுங்கள்: தமிழன் என்றே உணருங்கள்

நாடெங்கும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிற மக்கள் தொகை கணக்கெடுப்பில் திராவிடன் என்ற இனமாக தமிழர்கள் தங்களை குறிக்க வேண்டும் என நாய் ஆளுங்கட்சியாக இருந்தால் கூட நா கூசமால் ஜால்ரா அடிக்கும் தி.க. தலைவர் வீரமணி கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களை வீரமணியும், அவரது தி.கவும் சமீப காலங்களில் பேசுவது இல்லை. ஆனால் தூக்கத்தில் இருந்து திடீரென எழுப்பப்பட்டவன் எச்சில் வடிய எகத்தாளம் பேசுவது போல இந்த இத்துப் போன பழைய ரேடியோ பெட்டி திராவிட ராகம் பாடியுள்ளது . வீரமணியின் இல்லாத திராவிடத்தினை மீண்டும் தூக்கி நிற்க முயற்சிக்கும் இந்த துரோக அரசியல் புறங்கையால் புறக்கணிக்கத் தக்கது.

ஒரு தொன்ம தேசிய இனத்தின் மக்கள் எதற்காக தங்களை வேறு ஒரு இனமாக பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு வீணாய்ப் போன வீரமணியிடம் எந்த பதிலும் இருக்கப் போவதில்லை. ஆனால் இந்த வார்த்தையை திராவிடர்களின் தலைவராக இருக்க கூடிய வீரமணி தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் சொல்வதற்கு துணிவு பெற்றிருக்கிறரா என்பதற்கு வீரமணியின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும். வேறு எந்த மலையாளியோ, கன்னடனோ, தெலுங்கனோ தன்னை திராவிடன் என்று பதிந்துக் கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்ற அரசியல் வாதிகள் அந்த மாநிலங்களில் இருக்கிறார்களா என நாமும் சற்று சிந்தித்துப் பார்ப்போம். நம் காலக் கொடுமை..வீரமணி போன்றவர்களை நாம் தலைவர்களாக அடைந்திருக்கிறோம். நடந்து முடிந்த ஈழ இன அழிப்பில் துணைப் போனவர்களில் இந்தியர்களை விட வீரமணி அடையாளம் காட்டும் திராவிடர்கள் தானே அதிகம் இருந்தார்கள்..? மலையாளிகள் ஈழ அழிப்பில் துணை நின்ற செயல் அவ்வளவு எளிதாக மறக்க கூடியதா என்ன..? .நம் நதி நீர் உரிமைகளில் கேரளாவும், கர்நாடகாவும் செய்கிற கொடுமைகளை எந்த திராவிடப் பட்டியலில் வைத்து இந்த வீரமணி தீர்க்கப் போகிறார்..?

தந்தை பெரியார் தமிழனுக்கு என ஒரு நாடு கேட்டவர். தமிழின இறையாண்மையை நிலைநிறுத்த பாடுப்பட்டவர். தனது சொற்களை கூட சிந்தித்து பார்த்து முடிவு செய்ய சொன்னவர். திராவிடம் என்ற சொல் பார்ப்பன மேலாண்மையை தகர்க்கும் ஆயுதமாக தந்தை பெரியார் பயன்படுத்தினார். அவருக்கு பின்னால் வந்த திராவிட இயக்கங்கள் இன்று பார்ப்பன மேலாண்மையை முழுவதுமாக இன்று ஏற்றுக் கொண்டு விட்டன. திராவிட இயக்கத்தின் தலைமையை ஒரு பார்ப்பன பெண்மணியால் மிக எளிதாக கையாளமுடிகிறது .

எதற்காக தொன்ம தமிழின மக்கள் தங்களை திராவிடனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு வீரமணியிடம் எவ்வித பதிலுமில்லை. தமிழன் எதன் பொருட்டு திராவிடனாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்

இதே சொல்லை தெலுங்கர்களிடம், மலையாளிகளிடம், கன்னடர்களிடம் சொல்லி விட்டு நம்மிடமும் சொல்லட்டும் இந்த வீணாய் போன வீரமணி.

வீரமணியிடம் இருந்து இன்றைய தினம் தந்தை பெரியாரை விடுதலை செய்துள்ள பெரியார் தி.க உறவுகளுக்கு பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்.


தமிழன் என்றே பதியுவோம்- தமிழன் என்றே உணருவோம்.

மலையாளப் பார்ப்பான் ஜெயராம் எதிர்ப்பும்.. சில முற்போக்கு முகமுடிகளும்…



















இந்த கட்டுரை கீற்று.காம் இணையத் தளத்தில் அங்குலிமாலா என்பவர் எழுதிய “ஜெயராம் எதிர்ப்பும்,தமிழ் தாக்கரேகளும்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாக எழுதப்பட்டது.

நம் தமிழின தாய்மார்களை கருத்த எருமை போன்ற தடிச்ச தமிழச்சி என காறி துப்பிய மலையாளத்து பார்ப்பான் ஜெயராமனுக்கு ஆதரவாக சில முற்போக்கு அங்குலி மாலாக்கள் கிளம்பி இருக்கின்றன. ஊரில் எதுவும் நடந்து விடக் கூடாது. நடந்து விட்டால் இந்த அங்குலி மாலாக்களுக்கு எப்படித்தான் அலாரம் அடிக்குமோ தெரியாது. உடனே மார்க்சையும் அழைத்துக் கொண்டு பாசிசத்தினை கழுவ வந்து விடுவார்கள் இந்த கன்றாவிகள் . நல்ல வேளை கார்ல் மார்க்ஸ் உயிருடன் இல்லை. இருந்தால் இந்த வெங்காய தோல்களை கூட்டி..அள்ளிக் கொட்டியிருப்பார்.. குப்பையில்…

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த ஈழத்தின் பேரழிவு உலகத் தமிழ் சமூகத்தின் மீது மிகப் பெரிய சோக அவலமாக கவிழ்ந்திருக்கிறது.. உலக வல்லாதிக்க நாடுகளும், இந்தியாவும்..குறிப்பாக மலையாளிகளும் காத்திருந்து..நம் இனத்தினை காவுக் கொடுத்து அழித்தார்கள். நம் கண்ணெதிரே நாடு கட்டி வாழ்ந்த நம்மினம் நாதியற்று கம்பி வேலி சிறைகளுக்குள் வெம்பிக் கிடக்கிறது. உயிரை காத்துக் கொள்ள உறவை தேடி வந்த மீதி சனம் அகதி முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டு போன்ற இடங்களில் சின்னாபின்னப் படுத்தப்பட்டு சிதைந்து கிடக்கிறது. தமிழர்கள் மிகப் பெரிய உளவியல் போருக்கு மத்தியில் கண்கலங்கி நின்று கொண்டிருக்கிறார்கள். இத்தனை அவலங்களுக்கு பிறகும் மீள் எழுவதற்கான சாத்தியங்கள் குறித்து பல கேள்விகளோடு தமிழினம் இன்று நின்றுக் கொண்டிருக்கிறது. தாயக தமிழர்களை விட இனமான உணர்விலும், வீரத்திலும், தொன்ம இனம் வழி வந்த அறத்திலும் நின்ற ஈழத் தமிழர்களே இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்..இங்கோ ஏற்கனவே மார்வாடிகளும்..சேட்டுகளும்..மலையாள சேட்டன்களும் தமிழகத்தினை தொழில் ரீதியாகவும் , வாழ்வியல் ரீதியாகவும் ஆக்டோபஸ் விழுங்குவது போல விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் வீதிகளில் தமிழுக்கு இடம் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. கல்விக் கூடங்களில் தமிழ் இல்லை. சமூக வாழ்வியலில் தமிழ் இல்லை. பேச்சிலோ,எழுத்திலோ தமிழ் இல்லை. இளைஞர்கள் மீது கவிழும் புதுப்புது பண்பாட்டு வேர்களில் தமிழ் பண்பாட்டிற்கும், மொழிக்கும் இடமில்லை. சென்னை நகரம் மார்வாடிக்களின் கைகளிலும், ஆந்திர ,மலையாளிகளின் கைகளிலும் சென்றுக் கொண்டே இருக்கிறது. நடைபாதைகளில் நாதியற்று கிடக்கிறான் விவசாயத்தினை கொன்று..கிராமத்தினை விட்டுப் பட்டணம் பிழைக்கப் போன தமிழன்.

அதனால் தான் தன்னைக் காத்துக்கொள்ள..தன் பண்பாட்டை காத்துக் கொள்ள தமிழ் தேசிய அமைப்புக்கள் செயல்பட துவங்கி உள்ளன. ஜெயராம் வீடு தாக்கப்பட்டது வன்முறை என்றால்..அதை தாண்டிய வன்முறை மலையாள ஜெயராம் உதிர்த்த சொற்கள்..பொருட்கள் மீதான வன்முறையின் தாக்கத்தினை விட..கருத்துக்கள் மீதும்..ஓட்டு மொத்த இனத்தின் அடிப்படை உருவகங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை ..அவை சொற்களாக இருந்தாலும் கூட ..அவை மூர்க்கமானவையே..வெகு நாட்களாக ஒடுக்கப்பட்டவன் திமிறி எழுவது அவ்வளவு சுமூகமாக …இயல்பாக..இருக்காதுதான். அதனால் எதையும் எதிர்த்து கேட்காதே..மலையாளத்தான் உன் தாயின் முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட ..கண்டன ஆர்பார்ட்டம், மனித சங்கலி..உண்ணாவிரதம் ஆகியவை செய்.. காறி உமிழப்பட்ட எச்சிலை துடைக்காதே..நீ துடைத்தால் அது மலையாளத்தானுக்கு எதிரான வன்முறை.. என்று அங்குலி மாலா உள்ளீடான வார்த்தைகளில் அறிவுஜீவித்தனம் பேசுகிறார்.

ஜெயராமின் கருப்பின கருத்தியல் அவரின் ஆரிய மனவியலின் சின்னம். ஆரிய புளுகு புராணங்களில் தமிழர்களை அரக்கர்களாகவும் , குரங்குகளாகவும் படைத்த ஆரிய படைப்பு மனம் தான் இன்றளவும் உயிருடன் இருந்து தமிழச்சியை கருத்த எருமை என எகத்தாளம் பேச வைக்கிறது.

தமிழ் தேசியவாதிகளுக்கு கருத்தியல் பலம் இல்லையாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட …இலக்கிய இலக்கண வளமையைக் கொண்டு…மொழியியல்..பண்பாட்டியியல் ..அரசியல் என அனைத்து சமூகவியல் கூறுகளையும் உலகிற்கு கற்பித்த ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு கருத்தியல் பலம் இல்லையென்பது..ஜெயராம் இழிவுப் படுத்திய சொற்களுக்கு நிகரான அரசியல் தன்மைக் கொண்டவை. என்ன செய்வது.. எமக்கு எதிராக உதிர்க்கப்பட்ட சொற்களின் ஊடாக இருந்துதான் எங்களுக்கான கருத்தியல் பலத்தினை நாங்களே உண்டாக்கி கொள்ள வேண்டி இருக்கிறது.

இனம் அழியும் போது கூட ..எதிர்த்து கேள்வி கூட கேட்க முடியாத..இயலாத அச்ச மன நிலையை அரசு இயந்திரங்கள் மிகச் சரியாக ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் மத்திய அரசின் உயர் பதவிகளில்..உளவுத் துறைகளின் உச்சப் பதவிகளில் இன்று மலையாளிகளே இருக்கின்றார்கள். முல்லை பெரியாறு போன்ற தமிழகத்தின் வாழ்வாதார சிக்கல்களில் நமக்கு மிகப்பெரிய எதிரிகளாக மலையாளிகள் இருக்கின்றார்கள். வேறு எந்த இனத்தினைக் காட்டிலும் நம் ஈழ இனத்தின் ரத்தம் மலையாளிகளின் கரங்களில் தான் படிந்திருக்கிறது.ஜெயராமின் சொல்லாடல்களுக்குள் எங்களை ஈழப் போரில் வீழ்த்திக் காட்டிய மலையாள இனத் திமிர் ஒளிந்திருக்கிறது. மலையாளப்பார்ப்பானை நேரடியாக ஆதரிக்க கூச்சப்பட்டுக் கொண்டு “ சும்மா இருந்தவன அவன் காறி துப்புனது தப்புதான்..ஆனா இவன் திருப்பி அடிச்சது ரொம்ப ரொம்ப தப்பு” என்று கருணாநிதி பாணியில் அங்குலி மாலா முரசொலித்திருக்கிறார்.

பிரச்சனை இவர்களுக்கு என்னவென்றால் ..,மலையாளத்தான் திட்டியது அல்ல.. தமிழன் தட்டிக் கேட்டதுதான். இந்த லட்சணத்தில் மலையாளத்தானுக்கு ஒரு கையில் குடை பிடித்துக் கொண்டு மறு கரத்தால் உழைத்து சோர்ந்த கரங்களோடு கைக் கோர்ப்பார்களாம் இவர்கள்.

நம் இனம் அழியும் போது நாம் அசாதாரணமாக கடைப்பிடித்த மவுனம் தான் இந்த மலையாளப் பார்ப்பான் ஜெயராமின் வாய்க் கொழுப்பிற்கு காரணம். ஜெயராமின் கொழுப்பு மிகுந்த வார்த்தைகளை தமிழன் வழமைப் போல மவுனமாக கடந்திருந்தால் இந்த அங்குலி மாலாவிற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. தட்டிக் கேட்கிறானே என்ற அச்சமும் தவிப்பும் அங்குலிமாலாக்களை வார்த்தைகளை மாற்றிப் போட்டு வித்தை காட்ட வைக்கின்றன. கேட்டால் வன்முறையாம். இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் இந்த அகிம்சை (?) மார்க்சியவாதி சொல்கிறார். இந்த கொழுப்பினை தட்டிக் கேட்டால் அங்குலி மாலா நாம் தமிழர் இயக்கத்தினையும் ..சிவ சேனாவையும் ஒப்பிடுகிறார். நாம் வெகு தீவிரமாக எதிர்க்கக் கூடிய மதவாத அரசியலின் மராட்டிய முகமான சிவசேனாவிற்கு கூட மராட்டிய மக்களினத்தின் வரலாறு குறித்தும்..பண்பாடு குறித்தும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அங்குலி மாலா போன்ற முற்போக்கு முகமுடிகளுக்கு எவ்வித புரிதலும்..அறிதலும் இல்லை. தமிழ்ப் படங்கள் மலையாளப் பெண்களை இழிவுப்படுத்துகின்றன என அங்குலிமாலா வெகுவாக வருந்துகிறார். அதனால்தான் ஜெயராமும் நம்மினப் பெண்களை இழிவுப் படுத்த உரிமைப்படைத்தவராகிறார் என சொல்ல வருகிறார் அங்குலிமாலா.. இந்தியா முழுவதும் தேசிய இனங்களின் தன்னுரிமை குறித்தான சிந்தனை செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது.அதனால் தான் பல்வேறு மாநிலங்களில் அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுடைய மொழியையும், பண்பாட்டினையும் காக்க போராடத் துவங்கியுள்ளார்கள். அதனுடைய ஒரு வடிவம் தான் ஜெயராம் வீட்டு மீதான தாக்குதல்.

தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வந்து எங்களோடு சகோதரர்களாக அமைதியாக வாழலாம். ஆனால் எங்களை இழிவுப் படுத்தவும் ,சிறுமைப்படுத்தவும் எவருக்கும் உரிமை இல்லை. சர்வதேசியம் பேசியவர்களும்..பொதுவுடைமை உலகை உருவாக்க கிளம்பியவர்களும் தான் சேர்ந்துக் கொண்டுதான் ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்தார்கள். இனி எங்களுக்கான அரசியலை..எங்களுக்கான தத்துவங்களை நாங்கள் எங்களின் தொன்ம இலக்கிய மரபின் ஊடாகவே அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

நாங்கள் வீழ்ந்தவர்கள். தோற்றவர்கள். எங்கள் காயத்தின் ரத்தம் கூட இன்னும் உலரவில்லை. எங்களிடம் அறம் பேசும் அங்குலிமாலாக்கள் முதலில் மலையாளிகளிடம் போய் பேசி கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரட்டும். எதற்கெடுத்தாலும் எம் தந்தை பெரியாரை இழுப்பதை இந்த மார்க்சியவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு தமிழர்களுக்கே ! என்று தனித்தமிழ் நாடு கேட்ட தந்தை பெரியார் இன்று உயிருடன் இருந்தால்..திராவிடத்தின் பேரால் மலையாள பார்ப்பனுக்கு மன்னிப்பு வழங்கி விட்டு..தமிழனை தூக்கி சிறைக்குள் போடும் பிழைப்புவாத அரசியல்வாதிகளை தடி கொண்டு அடிப்பார்.

மலையாளிகள் பல்வேறு நிலைகளில் இன்று தமிழர்களின் உழைப்பையும், ஆற்றலையும் சுரண்டும் மிகப் பெரிய சக்தியாக விரிந்திருக்கின்றனர். ஊருக்கு ஊர் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை பரப்புகிறது. அரசு அதிகாரங்களில், மத்திய அரசின் முடிவெடுக்கும் பதவிகளில் இன்று மலையாளிகளின் கரமே ஒங்கி இருக்கிறது. அதனால் தான் ஜெயராமை வீட்டினை தாக்கியதாக சொல்லப்படும் நாம் தமிழர் இயக்க தோழர்களின் கைதுகளுக்குப் பிறகும்..எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாமல் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை எப்படியாவது கைது செய்து விட அரசு துடிக்கிறது. ஒரு இயக்கத்தினரின் செயல்களுக்காக அதன் தலைமையும் கைது செய்யப்பட வேண்டுமென்றால்..மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பினில் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் யார்..?

திரைப்படங்களில் பெண்களின் நிலை குறித்த பார்வையை மலையாளத்தானுக்கு ஆதரவாக சீமான் ,தங்கருக்கு எதிரான முரணாக முன் நிறுத்துவது அபத்தம். ஒட்டு மொத்த இனத்திற்கான இன மானக் குரலுக்கு எதிராய்..உள் சமூக முரண்களை பெரிதாக்கிக் காட்டும் போக்கு இனத்தின் மேன்மையை இன்னும் வீழ்ச்சிக்கே தள்ளும்.

என் இனம் வீழ்ந்ததும், அழிந்ததும் எனக்கு வலிக்கிறது. எம் தாய்மார்களைப் பற்றி பேசினால் எனக்கு சுடுகிறது. என் நிலமும்,வாழ்வும், என் மீதான அதிகாரம் செலுத்தும் உரிமையும் மலையாளத்தான் கரங்களில் சிக்கும் போது நான் பாதிக்கப் படுகிறேன். எம் இனத்தினை எள்ளலுக்கும்..கேலிக்கும் மாற்றான் உட்படுத்தும் போது நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். என் துயரையும், வலியையும் பொறுத்து என் எதிர்வினை அமைகிறது. இதுவும் அறச் சீற்றம் தான்.

வன்முறையை தனது திமிரால்..விதைத்தவன் அந்த மலையாளத்து பார்ப்பான் ஜெயராம்தான். மலையாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. முடிந்தால் அதை எதிர்த்துக் கேளுங்கள்.நாங்கள் வெறும் வன்முறையாளர்கள் அல்ல என்பதை முத்துக்குமாரர்களாக, திலீபன்களாக நிருபித்து இருக்கிறோம்..ஏற்கனவே.. வரலாற்றில்.கையில் விமானம் இருந்தும் பொது மக்களை தாக்காமல் ராணுவ நிலைகளை மட்டுமே தாக்கிய தமிழர்களின் அறம் உலகம் அறிந்தது. அங்குலி மாலாக்கள் அறியாதது ஏனோ.?



நடிகர் ஜெயராமைக்கைது செய்ய வேண்டும்.வன்முறையைத்தூண்டியது நானல்ல.ஜெயராம் தான்.நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை


மிழ்ப்பெண்களை இழிவாகப் பேசியதற்காக மலையாள நடிகர் ஜெயராம் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது இதுதொடர்பான வழக்கில் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று சீமான் மீது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மலையாள நடிகர் ஜெயராம் வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன்மாதிரியாகத்திகழும் தமிழ்ப்பெண்களை இழிவு படுத்திப்பேசியிருக்கின்றார். இதுஒட்டு மொத்ததமிழினத்தையும் இழிவு படுத்தும் செயலாகும்.இது தொடர்பாக நாம் தமிழர் இயக்கத்தமிழர்கள் 12 பேரைக் காவல்துறைக்கைது செய்துள்ளது.அவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வெற்றியுடன் வெளிவருவார்கள்.இந்த நிலையில் வன்முறையைத்தூண்டியதாக தமிழக அரசு இன்று என் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.இது என்னை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும்.இந்த விஷயத்தில் வன்முறையைத்தூண்டியது நானா? மலையாள நடிகர் ஜெயராமா? என்பது உலகிற்குத்தெரியும்.உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தில் மிகவும் இழிவாக ஒரு கருத்தைச்சொல்லி விட்டு அதன் பின்பு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியவுடனும் அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடனும் நடிகர் ஜெயராம் மன்னிப்புக் கோரியுள்ளார்.உணர்வுள்ள தமிழர்கள் அவருக்கு எதிர்ப்புத்தெரிவிக்காவிட்டால் இந்நேரம் அவர் கருத்து வரலாற்றில் அப்படியே பதிவாகியிருக்கும்.தமிழர்களைப்பற்றிய கருத்து வரலாற்றில் கேட்பாரற்று போயிருக்கும்.நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டமே அவர் மன்னிப்பு கேட்டதற்கு காரணம்.அவரது பேச்சே அவருக்கு எதிரான இப்படிப்பட்ட செயல்பாட்டிற்குக் காரணம்.ஆகவே வன்முறையைதூண்டியது நானல்ல.ஜெயராம் தான்.அவர் மீது தான் தமிழக அரசு வழக்குத்தொடுக்க வேண்டும்.அவரது காலம் கடந்த மன்னிப்பு பிரச்சனைக்குத் தீர்வாகாது.அவருக்கு மன்னிப்பும் நாம் தமிழர் இயக்கத்தவர் மீது சிறை என்பதும் மோசடியான ஒன்று.மன்னிப்பு தான் பிரச்சனைக்குத் தீர்வென்றால் கொடும் குற்றம் இழைக்கும் ஏனைய குற்றவாளிகள் விஷயத்திலும் தமிழக அரசு இதனைப்பரீசீலிக்குமா?மற்றபடி என்மீது போடப்பட்ட வழக்கு கண்டு நான் பயப்படவில்லை.இயக்கத்த்ன் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ளது.அதன்னைக்கண்டு அச்சப்பட மாட்டேன்.எதிர்த்து வழக்காடி வெளிவருவேன்

இவ்வாறு நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மலையாள நடிகர் ஜெயராமின் விருதுகளை விட உன்னதமானவர்கள் எங்கள் தாய்மார்கள்..

.
சில நாட்களுக்கு முன் தமிழின தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என தரக்குறைவாக பேசி.. எம் இனப் பெண்கள் மீது காறித் துப்பி கொக்கரித்த நடிகர் ஜெயராம் இன்று தொலைக்காட்சிகளில் அழுதுக் கொண்டே (?) நடிக்க துவங்கியுள்ளார்.
ஆம் . மலையாளத்தான் ஜெயராம் அவர்களே..
நாங்கள் கருப்பர்கள் தான்.
வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து விட்டு…
சுடும் வெயிலில்..உழைப்பேறிய உடலோடு..வியர்வைக் குளியலாடி…அன்றாட வாழ்க்கைக்கே
அல்லலுற்று…நிற்கிற நாங்கள் வெளுப்பாகவும்..சிறப்பாகவும் இருக்க இயலாது தான்.
வந்தவனை எல்லாம் வாழ விட்டு…ஆள விட்டு..வீதியில் நிர்கதியாய் நிற்கிற நாங்கள் உங்களைப் போல ..உங்கள் குடும்பத்தினர் போல.. வெளுப்பாகவும்..தளுப்பாகவும்,, இருக்க இயலாதுதான்.
உழைக்கும் மக்களினமான தமிழின மக்கள் கருத்த உடலை உடையவர்கள் என்பதுதான் மலையாள நடிகர் ஜெயராமின் எள்ளலுக்கும்..நக்கலுக்கும் காரணமாக இருக்கிறது.
ஆரியப் புளுகு புராணங்களில் தமிழர்களை குரங்குகளாக..அரக்கர்களாக படைத்த ஆரியர்களின் இன்றைய மனநிலையின் சின்னம் தான் இந்த மலையாளத்து பார்ப்பான் ஜெயராம்.
எம் ஈழத்து உறவுகளை கொன்று குவிக்க காரணமாக இருந்த மலையாள திமிரில்.. அங்கே.. நம் தாய்மார்களை கருத்த எருமை தமிழச்சி என மிகச் சாதாரணமாக சிரித்துக் கொண்டும்..குதுகலித்தும்.. கூறி விட்டு இப்போது நானும் தமிழன் தான் என அழுதுக் கொண்டே நடிக்கிறார் நடிகர் ஜெயராம்.
பல ஆண்டுகளாகவே தமிழர்களை குறித்து மிக கேவலமான..மூன்றாம் தர சொல்லாடல்களை மலையாள திரை உலகு கடைப் பிடித்து வந்தது. அதன் உச்சம் தான் அந்த மலையாள ஜெயராமின் திமிர்த்தனப் பேட்டி…கேட்டால் சென்னையில் தான் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், அவரது பிள்ளைகள் தமிழ் தான் (?) படிப்பதாகவும் என கண்கலங்க பேசுகிறார்.
உண்மையில் தமிழர்களாகிய நாங்கள் தான் எம் இனமும், எம் மக்களும் அடையும் அவமானத்திற்கு கண்கலங்க வேண்டும். வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக ஒரு மலையாளத்தான் வீட்டில் கருத்த எருமை தடிச்சி பட்டமும் வாங்கிக் கொண்டு வேலைக்காரிகளாக எங்கள் தாய்மார்கள் வேலைப் பார்க்கிறார்களே… அதை நினைத்து நாங்கள் தான் கண்கலங்க வேண்டும்.. கேட்டால் நகைச்சுவையாக மிமிக்ரி பேசினாராம். நீங்கள் நகைச்சுவையாக பேசி விளையாட ….வறுமைக்கு ஆட்பட்டு, உம் வீட்டில் பணிபுரியும் எங்கள் அப்பாவி தாய்மார்களா கிடைத்தார்கள்..? .
உங்கள் விருதுகளை விட .. உங்கள் கேடயங்களை விட..எம் தாய்மார்கள் எங்களுக்கு உயர்ந்தவர்கள்.
.
ஆண்டாண்டு காலமாய் ..வந்தவரை எல்லாம் வாழ விட்டு…தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் வக்கில்லாத இனமாக…கேட்பாரும் ..மீட்பாரும் இல்லாத நாதிஅற்ற இனமாக நம் தமிழினம் இருந்து வருகிறது.அந்த துணிச்சல் தான் இந்த மலையாளத்தானை அங்கே பேச வைத்தது.
ஒரு மலையாள நடிகன் எம் தாயையும், எம் சகோதரியையும் கருத்த எருமை தமிழச்சி என எள்ளி நகையாடினால்…
நாங்கள் மறந்து விடவும் வேண்டுமாம். மன்னித்து விடவும் வேண்டுமாம்..
மீறி கேட்டால்..
போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காதாம்.
உணர்வுள்ள தமிழர்களே.. உணர்ந்துக் கொள்வீர்.
.

முத்துக்குமார் – இது பெயர்ச்சொல் அல்ல….








மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே ;
(புறநானூறு 165 : பெருந்தலைச் சாத்தனார்)
பொருள்: எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தில் நிலைபெறக் கருதினோர், தம் புகழைப் பூமியிடத்து நிறுத்தி தாம் இறந்தனர்.
.
முத்துக்குமார் .
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல.
இது ஒரு போர் முழக்கம்.
ஆண்டாண்டு காலமாய் வீழ்ந்து கிடக்கும் ஒரு தொன்ம இனத்தின்
விழிப்பின் உச்சம்.
.
முத்துக்குமார்.
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல.
இனப் பாசிச அரக்கனால் கொன்று வீழ்த்தப்பட்ட நம் ஈழ சகோதர சகோதரிகளை கண்டு கதறி கூட அழ முடியாத அளவிற்கு நம்மை நகர்த்தி வைத்திருந்த இந்தியத்தின் உச்சாணிக் கொம்பிற்கு விடுக்கப்பட்ட சவால்.
நாங்கள் கண்ணீர் விட்டு கதறியும் கண்டு கொள்ளாத
உலகத்தின் செவிகளுக்கு அடித்துக் கூறிய
பறை முழக்கம்.
.
முத்துக்குமார் .
இது வெறும் பெயர் அல்ல.
இது வெறும் பெயர் அல்ல
இன்னும் தமிழன் இருக்கிறானடா இந்த நாட்டில்- என
இனத்தினை காட்டிக் கொடுத்தவர்களின்
செறுமாந்த இறுமாப்பினை தகர்த்த
இடி முழக்கம்.
தன்னை தானே திரியாக்கி
ஊருக்கே வெளிச்சமாய் போன
ஒற்றைச் சுடர்..
.

சென்ற வருடத்தில் ஜனவரி 29 ஆம் தேதி நடுப்பகல் 12 மணி அளவில்
அவசரமும், பதட்டமும் நிறைந்த ஒரு குரலின் மூலம் முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த செய்தியை நான் அறிந்தேன். தன் இனம் அழிவதை கண்டு சகிக்காத ஒரு இளைஞன் தன்னையே எரித்துக் கொள்வதான மனநிலை என்னை முற்றிலும் சிதைத்துப் போட்டது. அன்றைய காலக் கட்டத்தில் நமது கையறு நிலையின் உச்சம் முத்துக்குமாரின் தியாகம்.அந்த சமயத்தில் மட்டுமல்ல..இப்போதும் கூட முத்துக்குமாரின் மரணம் எனக்கு மிகுந்த குற்ற உணர்வாக வலியினை கொடுக்கிறது. என் கண் முன்னால் நடந்த…நடக்கின்ற… வேதனைகளை..கொடுமைகளை சகிக்கும் என் மனநிலையின் மீது ஆறாத வெறுப்பாய் கவிழ்ந்திருக்கிறது. சாதாரண மனித வாழ்வின் அன்றாட சுகங்கள் மீதான நுகர்வு கூட என்னை மிகுந்த பதற்றம் உடைய மனிதனாக..குற்ற உணர்வு கொள்பவனாக மாற்றி வைக்கிறது.
நான் மட்டுமல்ல. என்னைப் போன்ற தமிழின இளைஞர்கள் இவ்வாறு தான்
ஈழம் சிதைந்துப் போன வலியோடு..துயரோடு… வாழ்கிறார்கள்.

ஆனால் முத்துக்குமாருக்கு மட்டும் சுயநலத்தினை மீறிய இனநலன் சார்ந்த மனநிலை வாய்த்திருக்கிறது.
பாருங்கள்…உலகத்தீரே…
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஒரு தேசிய இனத்தின் வழி தோன்றியவன் …உலகத்திற்கு கலை, பண்பாடு, இலக்கியம், நாகரீகம், அரசு,வீரம் என அனைத்தையும் போதித்த இனத்தின் புதல்வன் … தன் சொந்த சகோதர, சகோதரிகள் தன் கண் முன்னால் அழிவதை கண்டு சகிக்க முடியாமல் தன்னை தானே எரித்து மரித்துப் போனான்.
உலகத்தின் மெளனம், இந்தியத்தின் வேடம், தமிழக அரசியல்வாதிகளின் துரோகம் ..இவைதான் எங்கள் ஈழத்தினையும் அழித்தன. எங்கள் முத்துக்குமாரையும் பறித்தன.
அறம் செய்ய விரும்பிய இனத்தின் பிள்ளையான முத்துக்குமார் தன் உளச் சான்றுக்கு நேர்மையாக இருந்து விட்டு போனார். …
ஒரு மரணத்திற்கு முன்னதான பொழுதுகளில் முத்துக்குமார் கடைப்பிடித்த நிதானம் வரலாற்றில் இடம் பிடிக்கக் கூடியது. ஒரு மரணம் என்பது ஒரு வாழ்வின் முடிவல்ல என்பதனை முத்துக்குமார் நிறுவியுள்ளார்.
இத்தனைக்கும் அந்த மனிதன் சமூகத்தின் மிகச் சாதாரணப் பகுதியில் இருந்து தான் என்ன செய்கிறோம் என்பதனை முழுக்க ஆராய்ந்து..இனிமேலும் பொறுப்பதற்கோ, இழப்பதற்கோ ஏதுமற்ற நிலையில் தன்னையே ஒரு தீபமாக்கி கொண்டு ஊருக்கு வெளிச்சமாகிப் போனார் முத்துக்குமார்.
ஈழ அழிவின் கடைசிக் காலங்களில் தன் சொந்த சகோதர சகோதரிகள் தங்கள் கண்ணெதிரே அழிவதை கண்ட தமிழ்ச் சமூகம் என்ன செய்வது எனப்புரியாமல் கண் கலங்க நின்றது. நாமெல்லாம் ஏதாவது அதிசயம் நடக்காதா… ஏதோ ஒரு அற்புத நொடியில் நம் ஈழம் அழிவிலிருந்து மீளாதா என்ற பரிதவிப்பில் நின்றுக் கொண்டிருந்தோம். மனித சங்கிலியாக கொட்டும் மழையில் நின்றுப் பார்த்தோம். சாலை மறியல், தொடர்வண்டி மறியல், போராட்டம், உண்ணாவிரதம் என அனைத்தும் செய்தோம். இன்று அப்பட்டமான போலிகளாக நம் முன்னால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னமும் வேஷமிட்டு திரியும் வேடதாரிகளை நம்பிக் கிடந்து நாசமாய் போனோம்.உணர்வு மிக்க இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கடக்கும் போது கண்கலங்க கடந்துப் போனார்கள். சீமான் அண்ணன், கொளத்தூர் மணி அண்ணன்,அய்யா மணியரசன் போன்றோர் தேசியத்தினை(?) பாதுகாக்க கைது செய்யப்பட்டனர். இறுதியாக திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலை என்ற முடிவோடு அமர்ந்தார். நாம் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். என்ன நடந்ததோ, ஏது விளைந்ததோ தெரியவில்லை. சில பேருந்துகள் எரிந்ததை தவிர எவ்வித பலனும் இல்லை. மீண்டும் கலங்கி நின்றோம் . என்ன செய்வது என்ற தயக்கத்தின் ஊடான தேக்கம் நம் தொப்புள் கொடி உறவுகளை காப்பற்ற கடைசி முயற்சிகளையும் தளர வைத்தது.
அந்த நேரத்தில் தான் தமிழின இளைஞர்களின் உணர்வின் வெளிப்பாடாக முத்துக்குமார் உயிராயுதம் எடுத்தார். ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகங்கள் வெகு சாதாரணமானவைதான் என்றாலும் முத்துக்குமாரின் தியாகம் தனிவகையானது. நின்று.. நிதானித்து .. அறிவின் ஊற்றாய் நிலை நிறுத்தப்பட்டு வழங்கிய ஒரு அறிக்கையின் மூலம் முத்துக்குமாரின் தியாகம் ஆவணப்படுத்தப் பட்டு விட்டது.

அது வெறும் அறிக்கையோ அல்லது மரண வாக்குமூலமோ அல்ல. தமிழனின் கடந்த ,நிகழ்கால வரலாற்றினை மீள் பார்வைக்கு உட்படுத்தும் நீதிமன்றக் கூண்டு. இவ்உலகில் பிறந்த ஒவ்வொரு தமிழனின் உள் மன சான்றினை உலுக்கிய பேரிடியாக விளங்கிய அந்த அறிக்கை, பதவிக்காக எதையும் இழக்க துணியும் போலி அரசியல் ஒப்பனை முகங்களை கிழித்தெறிந்தது. அரசியல் வியாபாரம் செய்து ,தன்னை விற்று, தன் இனத்தினை விற்று..மிஞ்சி இருப்பதை விட்டு விட மனமில்லாமல் புறங்கையை நக்குபவர்களையும், ஓட்டு பிச்சைக்காக ராணுவம் அனுப்பி நாடு வாங்கித் தருவேன் என்று நாடகமாடிய நயவஞ்சக எதிரியையும், தமிழன்னையை மறந்து பதவிக்காக இத்தாலி அன்னையிடம் அனைத்தையும் இழந்த துரோகிகளையும் அந்த அறிக்கை மிகச் சரியாக அடையாளமிட்டுக் காட்டியது. இனி மக்களிடமிருந்து தமிழுணர்வு மிக்க தலைமை உருவாக வேண்டும் என புது திசை வழி காட்டியது.
இன உணர்வு மிக்க இளைஞர்களின் ஆழ் மன வெளிப்பாடாய் முத்துக்குமாரின் ஈகை விளங்கியது. தமிழினத்திற்காக தன்னையே அளித்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் நடக்கையில்…மனசாட்சியை , இன மாட்சியை தலைநகரில் அடகுவைத்து விட்டு ஈழ ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பிறந்தநாள் கேக் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் தலைவர்கள்.
சாப்பிட்டீர்களா தலைவர்களே… அதில் எங்கள் தொப்புள் கொடி உறவுகளின் மாமிசமும் இருந்திருக்குமே… !
.
எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார் ?
ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும், ஒரு குவார்ட்டர் பாட்டிலும், 500 ரூபாய் நோட்டிற்கும் இனத்தினை அழித்தவர்களுக்கே மீண்டும் வாக்களித்து தங்களுக்கு தாங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளும் இவர்களுக்காகவா..?
.
இனம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் .. மானடவும்,மயிலாடவும் கண்டு விட்டு.. தோற்பதன் துயரம் கூட உணராமல்.. சாதியால் பிளவுண்டு.. மதத்திற்கு முன்னால் மண்டியிட்டு
சாதாரண வாழ்க்கையில் சாக்கடையாய் போன இவர்களுக்காகவா..?
.
பின் யாருக்காக ..எதற்காக இறந்துப் போனார் முத்துக்குமார்..?
.
லட்சியவாதிகளின் மரணம் ஒரு துவக்கமாக அமையும் என்பதை உணர்ந்திருந்தார் முத்துக்குமார். தன் இரத்த உறவுகளுக்காக உயிரையும் கொடுப்போம்- என கொடுத்து ஈழ மக்களின் கண்களில் துயரத்தின் ஊடான கண்ணீரில் நன்றியாய் கசிந்தவர் முத்துக்குமார்.
தன் உடலைக் கூட துருப்புச் சீட்டாய் பயன் படுத்த கோரிய முத்துக்குமார் – தாயக தமிழகத்தின் தலைச் சிறந்த கரும்புலியாக நம் நினைவில் வலம் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்.
ஆயுதங்கள் பிணங்களை உருவாக்கின – ஈழத்தில்.
ஆனால் இங்கோ ஒரு பிணம் ஆயுதமாகிப் போனது.
முத்துக்குமார் சாதித்தார்.
முத்துக்குமார் முடிவல்ல. அது ஒரு தொடர்ச்சி.
எதுவுமே முடிந்து விடாது.முடிந்து விட்டது என நினைத்தப் போதுதான் முத்துக்குமார் என்ற துவக்கம் நிகழ்ந்தது.
முத்துக்குமார் – தான் வாழ்விற்கான முழுமையான பணியை தன் அறிக்கையின் வழியாக ஒவ்வொருவரின் ஆழ்மனதில் ஊடுருவி அறிவின் தெளிவாய்..இன மான உணர்வாய் வெளிப்பட்டு செய்து கொண்டே இருக்கிறார் . இனி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது முத்துக்குமாருக்கான உண்மையான அஞ்சலி.
.
ஆம்.
முத்துக்குமார்..என்பது
வெறும் பெயர்ச்சொல் அல்ல..
வினைச்சொல்.
……..
எம் அன்பார்ந்த ஈழ உறவுகளே…
முத்துக்குமார் பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறோம்.
உங்களின் வலியையும், உங்களின் இழப்பினையும் நாங்கள்
எங்கள் துயரமாக உணருகிறோம்.
எங்கள் மனதின் அடி ஆழத்திலும் தோல்வியின் வன்மமும், மீளுவதற்கான
கனவும் கசிந்துக் கொண்டுதான் இருக்கிறது.
நீங்களும் ,நாங்களும்..வேறல்ல..
ஒரு தியாகம் செறிந்த இனத்தின் மிச்சங்கள் நாம்.
நமக்கு பிறக்கும் பிள்ளைகளை முத்துக்குமாராக வளர்ப்போம்.
நாம் வாழ்ந்த கதையையும்…துரோகத்தின் ஊடாக வீழ்ந்த கதையையும்
சொல்லி வளர்ப்போம்.
உலகில் வாழும் ஒரு தொன்ம இனத்திற்கான நாடு
தமிழீழ நாடு.
ஒரு கனவினை 24 கோடி விழிகள் சுமக்கின்றன.
காத்திருப்போம்.
வலியோடு.வன்மத்தோடு.
.
இன்றல்ல..ஒரு நாள்..ஈழம் மலரும்..
அன்றுதான் நம் காலை புலரும்.
.
அது வரை இருண்டு கிடக்கும் நம் வாழ்வில்
முத்துக்குமார் என்ற ஆன்ம ஒளி பிரகாசித்துக்
கொண்டே இருக்கும்.
.
தேசியத் தலைவர் நீடுழி வாழ்க.
.


Page 48 of 57

Powered by WordPress & Theme by Anders Norén