பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கடித இலக்கியம் Page 1 of 2

சென்று வா-எம் பாசப்பறவையே-ராபர்ட் பயஸ்.

எனது அன்பு அண்ணன்
ராபர்ட் பயஸ் அவர்களுக்கு..

ஒரு பொன்னான விடியலின் தொடக்கத்தில் நீங்கள் உங்கள் தாய் மண்ணில் கால் வைத்திருப்பீர்கள். 33 வருடங்களுக்கு முன்பாக பிரிந்த தாயின் கருவறைக்கு மீண்டும் ஒரு சேய் போய் சேர்ந்திருக்கிறது. நீங்கள் உங்கள் தாய் மண்ணை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘விடுதலைக்கு விலங்கு’ எழுதிய காலங்களில் இன்று விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை அன்று இல்லை. சிறைக்குள் இருந்து கொண்டே உங்கள் தாய் மண்ணைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டே இருந்தீர்கள். உங்கள் நிலத்திலிருந்து நீங்கள் பிரிந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் உங்கள் உதட்டோரம் ஈழத்துத் தமிழை சற்றே தேக்கி வைத்திருந்தீர்கள்.

ஒரு நாள் என் தாய் மண்ணிற்கு திரும்புவேன் என்கிற உங்களது நம்பிக்கையை எழுத்தில் வடித்த உரிமையோடு இந்த இரவில் இன்பமுருகிறேன்.ஆம். உங்கள் நம்பிக்கையுடன் கலந்த என் எழுத்து நிஜமாகிவிட்டது. இவற்றையெல்லாம் நாம் சிந்தித்த நாட்களில் இதுவெல்லாம் நடக்குமா என்று கூட நமக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு மன உறுதி கொண்ட தீர்க்கதரிசி போல நீங்கள் விடுதலை நாளொன்றின் பொன் கிரகணங்களுக்காக காத்திருந்தீர்கள். உங்கள் மீது அது இன்று படும் பொழுதில் நான் கண்கலங்க உங்களை என் நினைவுகளால் முத்தமிடுகிறேன்.

நமக்குள்ளாக எவ்வளவோ உரையாடல்கள் இருந்திருக்கின்றன. பகிர்ந்து கொள்ள முடிந்த அனைத்தையும் நாம் பகிர்ந்திருக்கிறோம். சில சமயங்களில் எவரிடமும் பகிர முடியாத சிலவற்றை உங்களோடு மட்டும் நான் பகிர்ந்திருக்கிறேன். நின்று நிதானித்து எனக்கு நீங்கள் திசை காட்டியிருக்கிறீர்கள். என்னைக் காணும் போதெல்லாம் புன்னகை பூக்கும் உங்கள் முகம் என் ஆன்மாவில் ஒரு சித்திரமாக உறைந்து இருக்கிறது. குறிப்பாக நீங்கள் பரோலில் வந்த போது என் மைத்துனர் பாக்கியராசன் இல்லத்தில் நாம் இருந்த பொன்னான பொழுதுகள் தேன் வடியும் நினைவுகள்.

இனி உங்களது சிறகு விரும்பிய திசையெல்லாம் விரியட்டும். நிறைய வானம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் நத்தைப் போல ஒரு நாள் ஒன்று நகர்வது இனி குதிரை போல மாறும். கால மாறுதல்களின் வேகம் குறித்து நிறைய சிந்திப்பீர்கள். ஆனாலும் நள்ளிரவில் திடுக்கிட்டு விழிக்கும் போது எங்கே இருக்கிறோம் என்கிற மனப்பதட்டம் உங்களுக்குள் விரியும். உங்கள் அருகில் இருக்கும் அண்ணியும், அம்மாவும் உங்களுக்கு ஆறுதலை தருவார்கள். இதையெல்லாம் குறித்து என் வாழ்நாள் முழுக்க நான் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். என் நினைவுகளால் உங்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன்.

நாம் வெவ்வேறல்ல.. ஒரே நினைவின் இரண்டு பிரதி என்றே உணர்கிறேன். அதனால்தான் உங்களின் உணர்வுகளை நான் உள்வாங்கி எழுத முடிந்தது என நிறைவுக் கொள்கிறேன்.

இந்த மகிழ்வான சமயத்தில் நம் மூத்தவர் தெய்வப் பெருமகன் தடா சந்திரசேகர் இல்லை என்கிற குறை மட்டும் எனக்கு ஏக்கமாய் தேங்கி நிற்கிறது. உங்களுக்கும் அது இருக்கும் தான். என்ன செய்ய.. மூத்தவரின் நிறைவேறாத ஆசையான உங்களது விடுதலை நிறைவேறி விட்ட மகிழ்வில் அவரது ஆன்மாவும் அமைதி அடைந்திருக்கும் என்று நினைவில் நாம் நிலைத்திருப்போம்.

இந்த சமயத்தில் விடுதலை கனவோடு நம்மிடமிருந்து விடைபெற்ற அண்ணன் சாந்தனை நினைவு கூர்கிறேன். அவர் இன்னும் சில காலம் நலமோடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அண்ணன்கள் முருகன் ஜெயக்குமார் ஆகியோர் குடும்பங்களோடு இணைகிற இப்பொழுதுகளில் அவர்களது நலமும் வளமும் நீடிக்கட்டும்.

சொந்த ஊருக்கு சென்றவுடன் குலதெய்வம் கோவிலுக்கு போய் வாருங்கள். நம் மூதாதை உங்களுக்காக அங்கே காத்துக் கொண்டிருப்பார். படையல் போடுங்கள். பரவசமாய் இருங்கள்.
பழையன கழித்து புது வாழ்வு ஒன்றை புத்துணர்ச்சியோடு வாழுங்கள். உங்கள் வலி துயர் தியாகம் ஆகியவற்றை உணர்ந்த எல்லாம் வல்ல தெய்வங்கள் உங்களை காப்பார்கள்.

போய் வாருங்கள் அண்ணா. உங்கள் பால்யத்தில் நீங்கள் திரிந்த நதிக்கரையில் பால் நிலா பொழுதுகளில் காலார நடந்து செல்லுங்கள். நீங்கள் நேசித்த தாய் மண்ணை உங்கள் நினைவுகளின் கண்ணீரில் குழைத்து நெஞ்சில் பூசிக்கொள்ளுங்கள்.

சுருங்கிவிட்ட இந்த உலகில் என்றாவது ஒரு நாள் மீண்டும் நாம் சந்தித்தே தீருவோம். அந்த நாளுக்காக இங்கே நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். இந்த பூமியின் ஏதோ ஒரு இடத்தில் கடற்கரை ஓரத்தில் மகிழ்வான பொழுதில் நாம் நினைத்து சிரித்துப் பேச நிறைய செய்திகள் அன்று பூத்துக் குலுங்கும்.

அன்றைய நாளுக்காக … இனி நாங்கள் காத்திருப்போம்.

நெகிழ்வான நினைவுகளோடும்.. நெஞ்சம் முழுக்க பேரன்போடும்..

என்றும் உங்கள் தம்பி..
மணி செந்தில்.

இந்து தமிழ் திசைக்கு எதிர்வினை

இந்து தமிழ் திசை‌ இதழில் “ஆண் மனதின் கேவலம்” என்ற தலைப்பில் பிருந்தா சீனிவாசன் என்பவர் எழுதிய பதிவு ஒன்றினை காண நேர்ந்தது.

மிகவும் ஒரு தலைப்பட்சமான பார்வை கோளாறு நிரம்பிய அந்தப் பதிவு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை ஆணாதிக்கம் உடையவராக சித்தரிக்க முயன்றது. குறிப்பாக அண்ணன் சீமான் எதிர்கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறிய சில வார்த்தைகளை கருப்பொருளாக வைத்துக் கொண்டு பிருந்தா அவர்கள் இதழியலாளருகளுக்குரிய ஊடக அறத்தை தன் சுய கண்ணோட்டத்திற்காக மீறி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு பெண்ணைப் பற்றி அவரது மனைவியார் சொன்னதாக கூறிய கருத்து என்பது ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரானது என காட்டுவது மிக மோசமானது. அந்தக் கருத்து குறிப்பிட்ட பெண்ணின் குணாதிசயத்தை விமர்சித்து எழுந்த கருத்து. பொய்யான அவதூறுகள் மூலம் தொடர்ந்து ஒருவரை பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிற ஒரு பெண்ணை அவரின் இயல்பை பற்றி எழுந்த விமர்சனம் அது. அந்த விமர்சனத்தை ஒட்டுமொத்த பெண் இனத்திற்கானதாக மாற்றுகின்ற திசை திருப்புகிற “பணி”(?)யை யார் பிருந்தாவிடம் வழங்கியது என்பதை பிருந்தா மட்டுமே அறிவார்.

இப்போதுதான் நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேறி உள்ள நிலையில்‌ சென்ற பாராளுமன்ற தேர்தலின் போதே நாம் தமிழர் கட்சி இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதன் முதலாக பெண்களுக்கு தேர்தலில் 50 விழுக்காடு வாய்ப்பளித்து வரலாற்றில் இடம் பிடித்த அமைப்பு. அடுத்து வந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும்‌ 234 தொகுதிகளில் சரி பாதி பெண்களுக்கு இடம் அளித்து பெண்ணுரிமையை தன் உயிர் கொள்கையாக அண்ணன் சீமான் செயலில் செய்து காட்டினார்.

இந்த துணிச்சலான நடவடிக்கை இந்திய சமூக வரலாற்றில் ஒரு மைல் கல். தேர்தல் வெற்றி தோல்வியை பற்றி கணக்கில் கொள்ளாமல் சமூக மாற்றத்தை பற்றி ஆழமாக சிந்திக்கும், பிருந்தா போன்றவர்களால் கேவலமானதாக பார்க்கப்படுகின்ற ஒரு உன்னத ஆண் மனது தான் இதை நடைமுறைப்படுத்தியது.

ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை தன் அமைப்பின் தத்துவமாக அண்ணன் சீமான் தான் பேசும் இடங்களில் எல்லாம் பதிவு செய்து வருகிறார்.

அண்ணன் சீமான் அவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் கழித்து இரண்டு பிள்ளைகளுக்கு அவர் தந்தையான பிறகு “ஒரு காலத்தில் அவர் என்னை காதலித்தார் என்னை ஏமாற்றி விட்டார்..” என்றெல்லாம் ஒரு நடிகை பேசுவது இவர்களுக்கு பெண்ணுரிமையாகப்பட்டால் பிருந்தா போன்றவர்கள் தான் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்.

இதே போல ஒரு காலத்தில் காதலிக்கப்பட்டவர்கள் மீது காதலித்தவர்கள் எல்லாம் குற்றம் சாட்டி வீதிக்கு வந்து நின்று சண்டை போடும் பட்சத்தில் இங்கே யாரால் நிம்மதியாக இருக்க முடியும்..??

காதல் என்பது ஒரு காலத்தின் உணர்ச்சி. அது சிலருக்கு திருமணத்தில் முடிகிறது. பலருக்கு நினைவாக தேங்கி விடுகிறது. மேலும் கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகும் மனநிலை காதல் என்ற பெயரில் தான் தேர்வு செய்யும் இணையை பெரும்பாலும் மறு பரிசீலனை செய்து மாற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்துகிறது.

அந்த விமர்சனம் கூட குறிப்பிட்டு இத்தனை பெண்களுக்கு மத்தியில் அந்தப் பெண்ணை ஏன் நீ விரும்பினாய் என்கிற கேள்விக்கு இது போன்ற குணாதிசயம் உள்ள பெண்ணை ஏன் விரும்பினாய் என்பதுதான் பொருளே ஒழிய ஒட்டுமொத்த பெண்ணினம் இங்கே எங்கே வந்தது..??

தனிப்பட்ட விருப்பு வெறுப்பன்றி ஒரு செய்தியை அணுக முடியாதவர்கள் பத்திரிக்கை துறையில் பணியாற்றும்போது நேருகின்ற விபத்து இது. சொல்லப்போனால் குறிப்பிட்ட அந்த நடிகை மீதும் அவருடன் இணைந்து தற்போது பிரிந்து இருக்கின்ற இன்னொரு பெண்ணின் மீதும் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகிறார்கள் என நாடெங்கிலும் அதிகம் புகார் அளித்தது பெண்கள் தான், பெண்ணினத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பெண்ணுரிமை என்பது ஒரு ஆணை முன்னிறுத்தி பொய்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பி அதன் மூலம் நிலைநாட்டப்படுவதல்ல. மாறாக வரலாற்றில் காலம் காலமாக தாழ்த்தி ஒடுக்கப்பட்டு சமையலறையிலும் படுக்கை அறையிலும் வீழ்த்தப்பட்டு கிடக்கிற பெண்களை வீதிக்கு அழைத்து வந்து அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் அவர்களை ஈடுபடுத்துவது.

ஒருபோதும் பெண்களால் மட்டும் பெண்ணுரிமையை ஈட்டி விட முடியாது. பெண்களை சரிக்கு சமமாக மதிக்கின்ற அண்ணன் சீமான் போன்ற மிகவும் பக்குவமான சுதந்திர உணர்ச்சி நிரம்பிய ஆண் மனது அதற்குத் தேவையாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ஆண் மனது கேவலம் என அவதூறு பேசும் பிருந்தா போன்றவர்கள் தான் விடுதலைக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரானவர்கள்.

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு கடிதம்.

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு.

வணக்கம் தல. மாநாடு படத்தை உடனே பார்க்க முடியாததற்கு மன்னிக்கவும்.படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தான் பார்க்க நேர்ந்த போதிலும், கூட்டம் நிறைந்து அரங்கம் முழுமையாக இருந்ததை பார்த்த போது உண்மையிலேயே உங்கள் முகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது.

மற்றபடி இந்த கடிதம் மாநாடு பற்றி அல்ல. திரையரங்கில் இருந்து நான் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய குரல் பதிவில் சொன்னதுபோலவே உங்கள் பெயர் திரையில் மின்னிய உடன் நான் எழுந்து நின்று கை தட்டினேன். வழக்கமாக கதாநாயகனுக்கு, இயக்குனருக்கு, இசையமைப்பாளருக்கு என கைத்தட்டல்கள் குவியும் ஒரு அரங்கில் தயாரிப்பாளருக்கு‌ எழுந்து நின்று கை தட்ட வேண்டிய நிலையில் இன்றைய தமிழ் சினிமா வந்து விட்டது உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன்.

கடந்த சில ஆண்டுகளாக உங்களை கவனித்து வந்ததில் நீங்கள் இந்த இடத்தை அடைவதற்காக எதிர்கொண்ட போராட்டங்கள் பற்றி அறிந்திருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் வலிமையாகி கொண்டே சென்றதை பரவசத்தோடு கவனித்திருக்கிறேன். அந்த வலிமையிலும் நண்பர்கள் மத்தியில்‌ நீங்கள் எளிமையாகிக் கொண்டே போவதை கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.

அந்த எளிமை தான் உங்கள் வலிமை தல.திரை உலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்பார்கள். கனவுகளை தயாரிக்கும் தொழிற்சாலை என்பதால் அங்கே நிஜ மனிதர்களுக்கு இடமில்லை என்பதாகப் புரிந்துகொள்ள நம் அருகில் இருக்கின்ற திரைத் துறையைச் சார்ந்த அசலான மனிதர்களே உதாரணமாக இருக்கின்றார்கள். ஆயினும் நீங்கள் தடம் மாறாமல், தடுமாறாமல் தொடர்ச்சியாக போராடி கொண்டிருந்தீர்கள்.ஒரு கட்டத்தில் எனக்கே அச்சமாக இருந்தது. இவர் திரைத்துறை மீது கொண்டிருக்கும் அதீத விருப்பத்தினால் எங்கே, எல்லாவற்றையும் இழந்து விடுவாரோ என்றெல்லாம் நான் யோசித்திருக்கிறேன்.

அதை நம் நண்பர் வெற்றியிடம் கூட பேசியிருக்கிறேன். ஆனாலும் நீங்கள் விடாப்பிடியாக காத்திருந்தீர்கள்.ஒரு முறை கோடம்பாக்கத்தில் தீவிரமாக திரைத்துறையில் முன்னேற வேண்டுமென கனவு கொண்டு அலைந்து கொண்டிருந்த, தற்போதும் அதே நம்பிக்கையில் லயித்திருக்கிற நமக்கு மிகவும் வேண்டிய ஒரு அண்ணனிடம் ஒரு கேள்வி கேட்டேன். எந்த நம்பிக்கையில் இங்கு இருக்கிறீர்கள்..??அவர் சிரித்துக்கொண்டே சொன்ன பதில் இதுதான்.. “சுற்றி நான்கு திசையிலும் தண்ணீர் சூழ்ந்த நீல கடல்தான். திசைகள் அற்ற பெருவெளி தான். ஆனாலும் கரையேறி விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் கடலில் இறங்கினோம்” என்றார்.

அந்த நம்பிக்கையை இறுதியாக என்னால் ஒரு வழியாக புரிந்து கொள்ள முடிந்தது.அதே நம்பிக்கை தான் உங்களை சந்திக்கும்போதெல்லாம் விழிகளில் மின்னிக் கொண்டு இருந்ததை நான் கவனித்தேன். அடுத்தடுத்து சில முயற்சிகள் செய்வதாக நீங்கள் சொல்லும் போதெல்லாம், வாழ்த்துகள் என மேலோட்டமாக சொன்னாலும் சத்தியமாக உள்ளுக்குள் எனக்கு கொஞ்சம் அச்சமாகத்தான் இருக்கும்.ஆனால் நீங்கள் நம்பிக்கையை இழக்காத விக்ரமாதித்தன் போல, சினிமா வேதாளத்தை ஆசையோடு தோளில் சுமந்து அலைந்து கொண்டு இருந்தீர்கள்.முன்பு ஒரு பொழுதில் உங்களது மிக மிக அவசரம் என்கிற உங்களது திரைப்படத்தின் திரைக்கதை வடிவத்தை நீங்கள் எனக்கு அனுப்பி இருந்தீர்கள்.

வழமையான வணிக சமரசங்கள் எதுவும் இல்லாத அந்த வடிவம் எனக்கு மகிழ்வைத் தந்தாலும், இந்தப் படம் எப்படி மக்களை சென்று சேரும் என்றெல்லாம் அச்சப்பட்டேன். அதுபற்றி எல்லாம் நீங்கள் கவலை படுவதே இல்லை எனக் கேள்விப்பட்ட பிறகு இன்னும் அதிகம் கவலைப்பட்டேன். பல மாதங்களுக்கு முன் மாநாடு திரைக்கதையை சுருக்கமாக நீங்கள் சொன்ன போது அதை புரிந்து கொள்ளவே திரைக்கதை பற்றிய புரிதல் தேவையாக இருந்தது என உணர்ந்த போது ஏன் இந்த மனிதர் இவ்வாறெல்லாம் துணிகிறார் என எனக்குள்ளாக யோசித்தேன்.இந்த நெருக்கடிகளுக்கு நடுவிலும், உங்களுக்கென இருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் பார்வையை நீங்கள் எங்கும் வெளிப்படுத்த தயங்கியதே இல்லை.

அண்ணன் சீமான் அவர்கள் மீது பெரு நம்பிக்கை கொண்டு பயணிக்கின்ற எங்களைப்போன்ற எத்தனையோ தம்பிகளுக்கு மத்தியில் நீங்களும் ஒருவராக பயணித்துக் கொண்டு அதே சமயத்தில் கலைத்துறையில் உங்களுக்கென மதிப்பு வாய்ந்த ஓர் இடம் பிடிக்க போராடிக் கொண்டிருந்தீர்கள்.இப்போது மாநாடு படம் வெளிவந்து விட்டது. இந்த படம் குறித்து வெளிவந்த அனைத்து எதிர்மறை செய்திகளுக்கெல்லாம் அப்பால் நாங்கள் உங்களைக் குறித்து தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக உங்களை அறிந்தவர்கள் அனைவருக்கும் இருந்த அச்சம் உங்களுக்கு இருந்ததா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை.

அச்சம் படத்தைப் பற்றி அல்ல. உங்களைப் பற்றி. நீங்கள் செல்லும் பயணத்தின் எல்லையைப் பற்றி. அந்த எல்லையையும் மீறி செல்வதற்கு எதையும் இழக்கத் தயாராகும் உங்களது மனநிலை பற்றி.படம் நன்றாக வந்திருக்கிறது என என் தம்பி இடும்பாவனம் கார்த்தியும், என் மைத்துனர் பாக்கியராசனும் சொன்னபோது தான் நிம்மதியாக இருந்தது.உண்மையில் வாழ்வதற்கு இதுபோன்ற வலிகள் தேவைதானா என்கின்ற கேள்வி இப்போதும்கூட எழுகிறது. அதற்கு கனவுகள் நிறைந்த உங்கள் விழிகளின் புன்னகை ஒன்றே பதிலாக இப்போது அமைந்துவிட்டது.

இந்த படத்தின் வெற்றியால் இந்த படத்திற்காக நீங்கள் அடைந்த உங்களது பொருளாதார இழப்புகள் சரிசெய்யப்பட்டு விட்டனவா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. அது பற்றிய கவலைகள் நீடிக்கும் இப்பொழுதிலும் கூட வெற்றி தரும் மினுமினுப்பு மகிழ்வாக இருக்கிறது.அதையும் தாண்டி , நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்த்துவிட்ட ஒரு ஆழ்ந்த உறக்கத்திற்குப் பிறகு அதிகாலை எழும்போது சற்று நிறைவாக உணர்ந்திருப்பீர்கள் என்று மட்டுமே நான் உணர்கிறேன்.அது நிறைவுக்காக, அந்த நிறைவு தரும் கிளர்ச்சிக்காக மீண்டும் இன்னொரு பயணத்தை நீங்கள் தொடங்கி இருப்பீர்கள்.‌ அந்தப் பயணத்தையும் ஒரு எல்லை மீறும் போராட்டமாக உங்களுக்குள்ளாக நீங்கள் உருவாக்கிக் கொண்டு போராட தயாராக இருப்பீர்கள்.கரையேறும் நம்பிக்கை இருக்கும் வரை தான் கடலின் வசீகரம் குறையாமல் இருக்கும்.திரைத்துறையும் அப்படித்தான் ‌. துணிபவர்களால்தான் திரையின் வசீகரம் குறையாமல் இருக்கிறது.நீங்கள் துணிந்து இருக்கிறீர்கள் தல.அதுதான் இங்கு வசீகரமாக இருக்கிறது.

❤️

பேரன்பு வாழ்துகளுடன்

மணி செந்தில்

213You, தில்லை நாதன் சந்திரன், Arunkumar and 210 others9 comments7 shares

Love

LoveCommentShare

9

என் வானின் பகலவன்..

26167072_382199455538262_6309952498669083654_n

 

 

அன்புள்ள பகல்..

அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட..

பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து ..அடங்கும் அவ்விழிகள் தான் எவ்வளவு கனிவு மிக்கவை.. ஒவ்வொரு இரவிலும்.. நடுநிசித் தாண்டி நான் படுக்க நுழைகையில்..இயல்பாய் என் கழுத்தை சுற்றி அணைக்கும் உன் பிஞ்சுக் கைகள் தான் எவ்வளவு உயிர்ப்பானவை..

உன்னளவிற்கு எனக்கு நேர்மை செய்வதில் நீ சிறப்பானவன் பகல். இவ்வாழ்வினுடாக நானே அறைந்துக் கொண்ட சிலுவைப் பொழுதுகளில் என்னை தூரத்தில் இருந்து அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாய்.ஒரு கம்பீரமான..உன்னை.. எனக்கு தெரியும் என்பதான அமைதி அது. நீ என்னை கவனிக்கிறாய் என நான் உணர்கிற நொடியில் ஏதோ ஒரு போலி புன்னகையை என் முகத்தில் அணிந்துக்கொண்டு உன்னருகே வரும் போது …எந்த சலனமும் காட்டாமல் என் தோளில் என் ஆறுதலுக்காக சாயும் உனது அன்பினை நினைத்து நான் இந்நொடியில் கலங்குகிறேன். நான் பல சமயங்களில் உன்னை மறந்து..திரிந்து இருக்கிறேன். ஆனால் உறக்கத்தில் கூட அப்பா என்றுதான் நீ முனகுகிறாய் என அம்மா சொல்கிறாள். அதுதான் எனக்கு வலிக்கிறது.

வானத்தைப் போல நீள அகலம் விவரிக்க முடியாத பேரன்புத் தோட்டத்தினை உன் இயல்பிலேயே நீ கொண்டிருக்கிறாய். அதிலிருந்து எப்போதும் பனி படர்ந்த செந்நிற ரோஜாக்களை மட்டுமே நீ பரிசளிப்பாய்..ஆனால் நானோ பாலைவனப் பயணி. வறட்சித் தாகத்தை தவிர என்னிடத்தில் உன்னோடு பகிர என்னதான் உண்டு..??

நீ என்னைப் போல இருக்கிறாய் என அனைவரும் சொல்வது கண்டு நான் அஞ்சுகிறேன் பகல். வேண்டாம். நீ நீயாக இரு. மகிழ்ச்சியின் அலையோடு பொங்கிப்பூரிக்கின்ற பெரு நதியென திகழட்டும் உனது வாழ்வு. விடியலில் தொலைவதற்காக இரவில் மலரும் கனவினை நினைவெனக் கொள்ளும் கானல் காட்சியாளனாய் நீ இல்லாது..அந்தந்த தருணங்களில்.. வாழ் மகனே..

நேர்மையாக இரு. ஏமாளியாக இராதே.. அன்பினை மதி. ஆனால் அன்பினில் தொலையாதே. இரக்கம் கொள். உன்னை விற்று சித்திரம் வாங்காதே. நிறைய படி. பயன்படுத்து. நேசி. ஆனால் உன்னை இழக்காதே. இறுதி வரைக்கும் சரணடையாமல் இரு. தவறான நிலத்தில் விதைக்காதே.தரிசாகி விடும். அனைத்திற்கும் மேலாக உனக்காக வாழ்.

உனக்கு பகலவன் என பெயர் வைத்தவனுக்கு என்றென்றும் மகனாய் இரு.

மொத்தத்தில் நீ என்னைப் போல் இல்லாமல்.. உனக்கென விண்மீன்கள் சுடர் விடும் பாதையை உருவாக்கு.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் முடிவிலி முத்தங்களுடன்…

அப்பா
சனவரி 6 – 2018.

வேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..

19424553_312465879178287_6778200899699480212_n

என்னுயிர் அண்ணனுக்கு..

கலங்கும் என் விழிகளுக்கு முன்னால் மங்கலாய் நீங்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடித வரிகள் இந்த கணிணித் திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கடிதத்தை பயஸ் அண்ணா எழுதி இருக்க மாட்டார்.

ஏனெனில் நான் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில்..உங்களில் ஒருவனாய்…சில சமயங்களாய் நீங்களாக கூட நான் வாழ்ந்திருக்கிறேன். விடுதலைக்கு விலங்கு எழுதப்பட்ட காலங்களில் இரவு-பகல் பேதமறியாது உள்ளூரிலேயே ஒரு விடுதி அறை எடுத்துக் கொண்டு உங்கள் வலிகளை எழுத்தாக மாற்ற முயன்ற காலத்தில்.. உங்களை அடிக்கடி என் மனக்கண்ணில் தரிசிக்க வேண்டிய சூழல்கள் உண்டு . உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ..வேறு எந்த சக மனிதனுக்கும் நடந்திருக்கக் கூடாத மானுட வாழ்விற்கு மிஞ்சிய கொடுமையான நிகழ்வுகளை உங்களது பார்வையிலேயே எழுத நேர்ந்த அக்காலக்கட்டத்தில் கூட நீங்கள் நம்பிக்கை மினுக்கும் விழிகளோடுதான் அண்ணா… எனக்கு தோன்றியிருக்கிறீர்கள்.காலையில் நான் கண் விழிக்கும் எனது பொழுது தூரிகையினால் நீங்கள் தொட்டு எழுதிய தலைவரின் ஓவியத்தில் இருந்துதானே தொடங்குகிறது..?

குறைந்த நேர சந்திப்புகளில், இறுக்கமான அணைப்புகளில், புன்னகைக்கும் விழிகளில் எங்குமே உங்களுக்குள் அவநம்பிக்கை நிழலை நான் சந்தித்ததில்லை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. மூவர் தூக்கு உறுதி செய்யப்பட்ட நேரம் அது. பேரறிவாளன்,முருகன், சாந்தன் அண்ணன்களை சந்திக்க நான் வேலூர் சிறைக்கு வந்திருந்தேன். தங்கை செங்கொடி தீக்கு தன்னை தின்னக் கொடுத்து மூன்று அண்ணன்களை காத்திட உயிரை ஈந்து விட்டு அங்கே காஞ்சிபுரத்தில் வெந்த உடலோடு காத்திருந்த நேரம். எந்த நேரமும் அண்ணன்களை தூக்கில் போட்டு விடுவார்களோ என்ற அச்சம் நம் ஒவ்வொரு ஆன்மாவிற்குள்ளும் பேயாய் ஆட்டி வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான்.. மறுநாள் தூக்கிற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற நேரம். அந்த நேரத்தில் தான் நான் வேலூர் சிறைச்சாலைக்குள் வருகிறேன். நான் அண்ணன்மார்களை சந்தித்து விட்டு அந்த பிரத்யோக பகுதியிலிருந்து வெளியேறுகையில் உணர்ச்சி வசப்பட்டு கதறித் தீர்த்த என்னை நம்பிக்கையூட்டும் சொற்களால் நலமுட்டினீர்கள்.
எதை எதையோ இழக்க கூடாதவற்றை எல்லாம் இழந்த இனம் டா தம்பி.இதற்கெல்லாம் கலங்கிடாதே.. என்று நீங்கள் சொல்லிய சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படி நம்பிக்கை விதைகளின் நாற்றாங்காலாய் இருந்த உங்களிடத்தில் தான் இப்படிப்பட்ட சொற்களோடு இந்த கடிதமா..?

மரண அவஸ்தையை விட கொடுமையான கால தாமதம் தான். நான் ஒத்துக் கொள்கிறேன். இரவு நேர சிறையில்..மங்கிய மேல் கூரையை பார்த்தவாறே உறங்காமல் கிடக்கிற உங்கள் பொழுதுகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது அண்ணா..

பால்நிலா இரவில் உங்கள் தாய்மண்ணில் உங்களது உறவுகளோடு நிம்மதியாக படுத்து உறங்க துடிக்கும் உங்களின் 26 வருடக் கனவின் கனலை எங்களால் உணர முடிகிறது..

ஒரு நாள் வீடு திரும்புவேன் என்கிற பெரு நம்பிக்கை சாதாரண அரசியல் சாக்கடைகளால் கானல் நீராய் மாறி விடுமோ என்கிற உங்களது கவலை புரிகிறது..

வலி மிகுந்த கடந்த காலமும், கடக்க முடியா அனல் வெளி பாலையாய் எதிர்காலமும், புயல் வெளி தோணியாய் அல்லாடும் நிகழ்காலமும் உங்களுக்குள் ஒரு வெறுமையை உண்டாக்கி இருக்கக் கூடும் அண்ணா.. புரிகிறது.

வாழ்வோ, சாவோ ..ஒரு நிச்சயக்கப்பட்ட வாழ்வினை கோருகிற உங்களது நியாயம் அர்த்தமானது தான்.

ஆனால்.. நீங்கள் சராசரி இல்லை அண்ணா . எங்களைப் போல்.
.
எதனாலும் நியாயப்படுத்த முடியாத உங்களின் தனிமை உங்களுக்குள் விதைக்கிற வலி மிகுந்த ஆற்றாமையை எங்களாக ஆற வைக்க முடியவில்லை என்கிற எங்களின் இயலாமையும் உங்களுக்குள் ஒரு வலியாக மிஞ்சி விட்டது குறித்து நாங்கள் உண்மையில் வெட்கப்படுகிறோம்.

உங்களது எந்த கேள்விக்கும் எங்களிடத்தில் மெளனத்தை தவிர வேறு பதிலில்லை.

ஆனால்..

உங்கள் தோளினை தொட்டு, கரங்களைப் பற்றி இனப்பற்றினை, தாய்மண் நேசத்தினை, மானுட வாழ்வின் நம்பிக்கைகளை இடம் மாற்றிக் கொண்ட எங்களால்.. உங்களை எதனாலும் இழக்க முடியாது அண்ணா.

இது ஒரு வகையான சுயநலம் தான். ஆனாலும் நீங்கள் வேண்டும் எங்களுக்கு அண்ணா.

ஒரு நாள் விடியும் அண்ணா. இருள் கிழிந்த அந்த வானில் விடுதலையின் சுடர் ஒளிரும். அந்த நாளில் நாங்கள் உங்களோடும், நீங்கள் எங்களோடும், நாமெல்லாம் நம்மோடும் இருக்கிற நன்னாள் பிறக்கும்.

உங்களை பெரியப்பா என அழைக்கிற ஒரு இளம் தலைமுறையினர் எங்கள் வீட்டில் வளருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். இப்போது நீங்களும் கூட.

இந்த உலகிற்கு நீங்கள் எப்படியோ ..ஆனால் அவர்களுக்கு நீங்கள் தான் அண்ணா.. மானுட வாழ்வின் நம்பிக்கைகளுக்கும், தளரா மன உறுதிக்கும் எடுத்துக்காட்டு.

அவர்களது பிஞ்சுக்கரங்களை உங்களது
கரங்களோடு இணைக்கிற நாள் வரை நீங்கள் எங்களுக்கு வேண்டும் அண்ணா..

வேண்டும்.

வேண்டாம் அண்ணா இது.

வேண்டும் அண்ணா..நீங்கள்..

உங்களது தம்பி..

மணி செந்தில்
22-06-2017

மனுஷ்ய புத்திரனின் பிழைப்புத்தனங்களுக்கு

_03THPUTHITAN_1823414g

 

=========================================

மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு…

 

கடந்த சில நாட்களாக  திமுக அமைத்திருக்கும்  அண்ணன் சீமான் அவர்கள் மீதான வசைபாடல் பிரிவிற்கு  நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வரிசையான வசையாடல்களை வாரி வழங்கி வருவதற்கு… அப்பட்டமான 3 ஆம் தர பிழைப்பு வாதம் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்..

அய்ய்யயோ.. நானா…பிழைப்பு வாதியா என்றெல்லாம் கூப்பாடு போட முடியாத அளவிற்கு உங்களது பிழைப்பு வாத தந்திரங்கள் பதிப்புலகிலும், அரசியல் உலகிலும் , தொலைக்காட்சி ஊடக உலகிலும் வரிசையாக வெளிப்பட்டு மூத்திரச்சந்தில் எண்ணி அடிவாங்கி  மூச்செறிந்து போய் கொண்டிருக்கிற வடிவேல் போல உங்கள் நிலைமை ஆகிக் கொண்டிருக்கிற இக்காலக் கட்டத்தில் தான் ..அரசியல் அதிகாரம் மீதான உங்கள் இனக்கவர்ச்சிக்கு சீமான் மீதான வசைபாடல் என்பது  ஒரு கருவியாக,அதிகார போட்டியினூடே நீங்கள் காட்டுகிற கபடமாக.. நீங்கள் உங்கள் சக அரசியல் போட்டியாளர்களுக்கு இடையே அமைத்துக்கொள்கிற  தகுதியாக… காட்ட விரும்பும் உங்களது எக்கசக்க ஆர்வம் புரிகிறது.

அரசியல் இருப்பினை தக்க வைப்பதற்காக, அரசியல் பங்களிப்பில் தனது பாகம் பழுது படாமல் இருப்பதற்காக, தாங்கள் எடுக்கிற பிழைப்புவாத பிச்சையில்..சீமானை சீண்டுவதென்பது ..உங்கள் புரட்சியாளர் தளபதி ஸ்டாலினிடம்  நானும்  உள்ளேன் அய்யா என்பது போன்ற அட்டெண்டன்ஸ் போடுகிற அரைகுறைச் செயலே..

சுத்த ,கலப்பிடமில்லாத, தூய இலக்கியவாதியாக உங்களை அமைத்துக் கொள்ள முயன்று, சற்றே பிழைப்பிற்காக சுஜாதாவின் பாக்கெட் சைஸ் மாத நாவல்களில் கொட்டும் சில்லரைகளுக்கு ஆசைப்பட்டு..பிறகு சுஜாதாவையே தூய இலக்கிய ஆத்துமாவாக காட்ட விரும்பி.. பிறகு அது மானாவாரியாக இலக்கிய ஏரியாக்களில் தர்ம அடி வாங்கும் வடிவேலாக தன்னை மாற்றுவதை அறிந்து…

நாமும்  தமிழ்நாட்டின் அருந்ததி ராய் போல,மேதா பட்கர் போல  ஆகலாம் என கருத்து கந்தசாமி அவதாரம் எடுத்து ..  ”மாலை மங்கும் நேரத்தில் ஜமுக் லேகியம் விற்கும் அமுக் வைத்தியர்” போல கிடைக்கும் தொலைகாட்சியில் புடைக்கும் ”கருத்து அரிப்பிற்கு”  சத்தம் போட்டு கத்தி விட்டு போவதையே தன் அறிமுகமாக அமைத்து..

வேறு எந்த வித விசேட காரணமும் இல்லாமல், கருணாநிதியிடம் தான் சன்,கலைஞர்,சன் நியூஸ் என்றெல்லாம் சேனல்கள் இருக்கின்றன என உணர்ந்துக்கொண்டு.. அதில் முகம் காட்ட, அதை கொண்டு முகவரி தேற்ற.. நீங்களே அண்ணா அறிவாலயத்திற்கு கருத்து கேட் கீப்பராக மாறிப் போன கதைகள் உலகம் அறிந்தவை மனுஷ்..

கடந்த 2009 க்கு பிறகு ஈழத்தை ஆதரிப்பவர்கள்,இனப்படுகொலையை எதிர்ப்பவர்கள் என  பெரும்பாலும் கருணாநிதிக்கும், திமுகவிற்கும் எதிர்ப்பானவர்களாக தான் ,மாறிப் போய் இருப்பதை உங்களின் கண்கள் மறைக்கும் தலைமுடி மறைத்து விட்டது போல.. எப்போதும் பிரபாகரனின் துதி கருணாநிதிக்கு எதிராகதான் போகும் மனுஷ்.. அதிலென்ன ஆச்சர்யம் உங்களுக்கு.. பிரபாகரன் என்ற பிம்பத்தின் எதிர்மறை கருணாநிதி தான்.. தன் பதவிக்காக, ஆதாயத்திற்காக , ஊழலால் விளையும் பணத்திற்காக ஈழத்தின் இனபடுகொலைகளுக்கு எதிராக கபட மவுனம் காட்டிய கருணாநிதியை பிரபாகரனின் ஆதரவாளர்கள் எதிர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..?

சொல்லப்போனால் எங்களைப் போன்ற பல்லாயிரம் இளைஞர்களை இரட்டை இலைக்கு வாக்குக் கேட்க வைத்ததும், இரட்டை இலைக்கு ஒட்டுப் போட வைத்ததும், கருணாநிதியின் சுயநல,துரோகத்தன ,கபட அரசியல் நடவடிக்கைகளே தவிர வேறு என்ன..?

திமுகவின் ஊது குழலொன்று எங்களை அடிமை ஏஜெண்ட் என குற்றஞ்சாட்டுவதில் வியப்பில்லை தான். ஆனால் எங்களை ஜெயலலிதாவின் துதி பாடி என சொல்வதற்கு நாக்கு  மட்டும் இருந்தால் போதாதது ம.புத்திரன்.

உப்பிசம் பிடித்தவனுக்கு தட்டில் இருப்பவை எல்லாம் தரக்குறைவானதுதான் என்பது போல எங்கள் மாநாட்டில் ஹிட்லர் படம் பற்றி மட்டும் உங்கள் அரசியல் அதிகார கனவு மிதக்கிற காமாலை கண்களில் சிக்குகிற நோய் எங்களுக்கு புரிகிறது.

இவர்கள் தொலைக்காட்சியில் ஹிட்லரை பற்றி ஒளிபரப்புவார்களாம், ஏனென்றால் உலகம் முழுக்க ஆவணங்கள் (?)  இருக்கிறதாம்..மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைப்பார்களாம். ஆனால் திமுக ஸ்டாலினை கடைப்பிடிக்காதாம்…  ஆனால் எங்களது அமைப்பினர் ஹிட்லர் படத்தை மாநாட்டின் ஒரு ஓரத்தில் வைத்தாலே ( இதற்கு சீமான் பல முறை விளக்கம் கொடுத்தும் இருக்கிறார் ) நாங்கள் ஹிட்லரின் ஆதரவாளர்களாம்.  நாக்கிற்கு நரம்பில்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் …வாங்கியதற்கு அதிகமாகவே கூவி…கோபாலபுரத்து விசுவாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிற உங்கள் வியாபாரத்தனத்திற்கு அகராதியில் ’வேறு பெயர்’ உண்டு…

ஈழ துயரத்தை பிசினஸாக பார்க்க நாங்கள் என்ன டெசோ கம்பெனி ஆட்களா… நினைத்தால் ,கூட்ட,பெருக்க உங்கள் கருணாநிதி வீட்டு கழிவறையாகத்தானே தானே டெசோவை வைத்திருக்கிறீர்கள்..சம்சா சாப்பிட வேண்டுமென்றால் கூப்பிடு டெசோவை என உங்கள் தலைவர் நடத்திய நாடகங்கள் நாடறிந்த நாறிபோனவைகள் என உங்களுக்கு தெரியும் தானே.. ஆனால் நாங்கள் அப்படியல்ல..இந்த நொடி வரை ..ஈழத்தின் துயரம் பேசியதால்..விடுதலைக் கனவை போற்றியதால்..நீங்கள் சொல்கிற அதே ஜெ. அரசுதான் எங்கள் மீது வழக்கு பதிந்து இருக்கிறது..

முத்துக்குமார் தெரியுமா..மனுஷ்..முத்துக்குமார்…

தன் மனதில் சுமந்த நெருப்பினை உடலில் கொட்டி செத்தானே… அதே முத்துக்குமார்… உங்கள் தலைவரைப் பற்றி தனது மரண சாசனத்தில் எழுதி வைத்திருக்கிற சொற்களைப் படித்து விட்டு ஈழ அரசியலைப் பற்றி பேச ..எங்களின் நேர்மைக் குறித்து தாக்க…உங்கள் சொற்களை தயார் செய்யுங்கள்.

சரி விடுங்கள்..காலையில் ஸ்டாலினுக்கும், மாலையில் கருணாநிதிக்கும் சால்வை கொடுத்தோமா…அறிவு சீவி முகமூடி போட்டு கலைஞர் டிவி கருத்து உதிர்த்தோமா..சந்தடிச் சாக்கில் ஏதாவது ராஜ்யசபா சீட்டுக்கு துண்டை போட்டோமா என்று இருந்து விட்டு போகாமல்…

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கிற இளைஞர்கள் மீது ஏன் கல்லெறிந்து பார்க்கிறீர்கள்…?

நீங்க வாங்குற… 5 ,10 —————————   க்கு இதெல்லாம் தேவைதானா…?

 

-மணி செந்தில்

என் அம்மாவிற்கு…

IMG_4949

என் அம்மாவிற்கு..

யாரிடமும் விளக்க முடியா..விவரிக்க முடியா அளவிற்கு உன் மீதான என் ஞாபகங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன..சொல்லப்போனால் நான் உன் பேச்சை அப்படியே கேட்கிறவன் இல்லை. உன் கனவுகளில் நீ என்னை பற்றி வரைந்திருந்த சித்திரங்களுக்கு நேர்மை செய்தவன் இல்லை. உறவுக்காரர்கள் மத்தியில் என் மகனும் அமெரிக்காவில் இருக்கிறான், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான் என்றெல்லாம் பெருமைப் பொங்க விவரிக்க உனக்கு வாய்ப்பே தந்ததில்லை. என்னைப் போன்ற உடல் நலம் குன்றிய மகனால் ஒரு தாய்க்கு மருத்துவமனையின் மங்கிய வண்ணம் பூசிய சுவர்களை நிலைக்குத்திய பார்வைகளோடு பார்த்துக் கொண்டிருக்கிற கலங்கிய கண்களை தவிர வேறு என்ன தர இயலும்…? சுமை நீக்க இயலா சுமை சுமக்கும் தொழிலாளியாய் உன்னை மாற்றி வைத்ததில் எனக்கு பெரும் பங்கு உண்டு அம்மா… இன்னமும் சுமக்கிறாய்..

நான் 10 மாத குழந்தையாய் இருந்த போது போலியோவால் பாதிக்கப்பட்டேன். 10 ஆவது படிக்கும் வரை நான் மருத்துவமனையை தவிர வேறு எங்கும் சென்றதில்லை. என் முன்னால் உறைந்திருக்கும் என் வீட்டு சுவற்றினை தவிர எனக்கு வேறு நண்பனில்லை. எனது ஒரே தோழி நீதான். காலில் கட்டுப் போட்டு அசையாமல் அமர்ந்திருக்கும் என்னோடு விளையாட, கொண்டாட யார் தான் வருவார்.. உன் மாயக்குதிரை கதையும்,பரம பதம் விளையாட்டும் தான் என்னை சூழ்ந்திருந்த இருட்டில் தெரிந்த மினுக்குகள்…

பதின் வயதுகளில், சற்றே தடுமாறி நடக்க முடிந்தவுடன் வாலிப வேகத்தில் வானத்தை வசப்படுத்தும் அர்த்தமற்ற இலக்குகளோடு தாறுமாறாக நான் அலைந்து திரிந்தப் போது நீதான் ஆற்றுப்படுத்தினாய்..

எப்போதும் எழுந்திரு என்கிற வார்த்தையை தவிர எந்த பெரிய அறிவுரையையும் நீ வழங்கியதில்லை. காலமும், நம்பி நின்றவர்களும் என்னைச்சுற்றி நின்று வேட்டையாட துடித்தப் போது குட்டியை காத்திட சிறகடித்து.. பாய்ந்து துடித்த கோழியாய்… எனை துயர இருட்டினில் இருந்து மீட்டெடுத்து, என்னை உருவாக்கி, கலங்கிய கண்களை துடைத்து, கலைந்த தலையை சீராக்கி, என்னை திசை திருப்பி,திருமணம்செய்து வைத்து ,என்னை இயல்பானவனாக வீதிக்கு அனுப்பி வைத்தவள் நீ..

ஒவ்வொரு முறையும் உன் விழிகளின் வெளிச்சத்தை நான் தான் தீர்மானிக்கிறேன் அம்மா. நான் ஒவ்வொரு முறை கீழே விழும் போதும் நீதான் உடைந்து விடுகிறாய். உன் விழிகள் இருள்கின்றன. ஆனாலும் அதை என்னிடம் காட்டாமல்…எழுந்திரு என்று சொல்லி விட்டு நகருகிறாய்..மின்னொளி படரும் மேடைகளில் நான் சிரமப்பட்டு ஏறி நிற்கையில் இயல்பாய் உன் கண்கள் கலங்குகின்றன…அதே சமயத்தில் நான் பேசுகையில்,எழுதுகையில், இயல்பாய் உன் கண்கள் ஒளிர்கின்றன..

இப்போது கூட தவறி விழுந்து காலில் கட்டோடுதான் நான் அமர்ந்திருக்கிறேன்..இப்படியே இருக்காதே…மாநாட்டு வேலைகளுக்கு கிளம்பு என்கிறாய்..உனக்கு தெரியும் புலிக்கொடியும், சீமானின் சொற்களும் தான் எனது ஆகப்பெரும் மருந்து என…

என் உடல் நலனுக்கு பொருந்தாத..என் பொருளாதார வலுவிற்கு எதிரான ஒரு போராட்டப் பாதையை வலிந்து என் வாழ்க்கையாய் நான் தீர்மானித்தப் போது நீ அமைதியாய் இருந்தாய். பிழைப்பை விட்டு விட்டு, பொன்னான நேரத்தை கொலை செய்து விட்டு, வியர்வை வடியும் முகத்தோடு,கருஞ்சட்டை அணிந்து முச்சந்தியில் முழங்கி விட்டு அசதியோடும், வெறும் கையோடும், சொல்லப்போனால் சற்றே கடனோடும்…வீட்டிற்கு திரும்பும் நான் யாருக்கும் உவப்பானவன் இல்லைதான். ஆனாலும் எனக்கான நியாயங்களை தனக்கான சமாதானமாக ஆக்கிக் கொண்டு என்னை அன்புடன் வருடிச்செல்லும் உன் சொற்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்..

கைமாறு செய்தல் தான் தாய்மைக்கான போற்றுதலா என்பதில் எனக்கு குழப்பங்கள் உண்டு.ஆனால் என்னோடு நீ நிற்பதில் உனக்கு எவ்வித குழப்பங்களும் இல்லை அம்மா… ஏனென்றால்
நீ என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்தே பார்ப்பதில்லை..

இந்த பதிவைப்படித்து பார்த்து விட்டு..இது மட்டும் தானா என்று நீ பார்க்கிற பார்வைக்கு என்னிடத்தில் பதில் ஏதும் இல்லை.

அன்னையர் தின வாழ்த்துக்கள்.

புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..

என் அன்பிற்கினிய கல்யாண்..,
இந்த பொழுதில் இமைகளில்
துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு..
உன் உயிர் அண்ணனாகிய
நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் .
என் பாசமுத்தங்கள் உனக்கு..
ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ்
போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் .
நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற
ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட,
நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில்
கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட,
நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக்
கொடுத்திருக்கிறோம் …
புரட்சி என்பது சொல் அல்ல. அது வாழ்க்கை
என புரிந்து வைத்திருக்கிறோம்..
நம் உயிரையும் விட மகத்தானது-இம் மொழி
காக்க, இந்த இனம் காக்க  தன்னுயிர் தந்த
மாவீரர்களின் கனவு என்பதனை தெரிந்து
வைத்திருக்கிறோம்..
எத்தனையோ இரவுகளில் தனியே பயணப்படும் போது
நாம் நமது தாய்நாட்டிற்காக,தாய்மொழிக்காக
நமது அடுத்த தலைமுறையின்
ஒளிமயமான எதிர்காலத்திற்காக
உழைக்கிறோம் என்கிற பெருமிதம் நம்முள் பொங்கும்..
சராசரி வாழ்வில் கொண்டாடி
மகிழ்ந்திருக்க வேண்டிய சுகங்களை நாம்  இழந்தோம்..
நாம் இரவுகளை இழந்தோம்..
பகல்களில் பறந்தோம்..
சராசரி இளைஞர்களின் ஆவலான
 பணம் தேடும் வேட்கையை இழந்தோம்..
ஏன்   ,,சில சமயங்களில் நம் குடும்பத்தினையும்,தாய் தந்தையையும்
மறந்து நின்றோம்… நாம் சராசரிகள் அல்ல ..அல்ல என்பதனை
உலகிற்கு உரக்கச் சொன்னோம்..
இவையெல்லாம் எதற்காக..
புன்னகையுடன் நீ நெஞ்சு நிமிர்த்தி சொல்வாய்..
எம் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரனுக்காக..
ஆம்..உண்மைதான்..
தேசியத்தலைவர் வேறு..தேசம் வேறு இல்லை.
அவர் வேறு..இந்த இனம் வேறு இல்லை..
அவர் தான் வீழ்ந்தும் கிடக்கும்
இந்த இனத்தின் மீள் எழுதலுக்கான அடையாளம்..
அந்த அடையாளத்தினை நம் ஆன்மாவில் சுமந்து…
உயிருக்குயிராய் நம்மைப் போன்று தலைவரை
நேசிக்கின்ற ,நம் அண்ணன்
சீமான் அவர்களின் சீரிய தலைமையில்
நாம் களத்தில் நிற்கிறோம்.
அண்ணன் பிரபாகரனின்
கனவினை சுமக்கும் தம்பியாக
அண்ணன் சீமான் நிற்கிறார்.
மாவீரர்களின் மூச்சுக்காற்று
அண்ணன் சீமானை உறங்க விடுவதில்லை..
சுழலும் சொற்களாக…கம்பீர முழக்கங்களாக
சதா ஒலிக்கும் அண்ணன் சீமானின் குரல் தான்
இனி தமிழினத்தின் முகவரி..
அனுதினமும் இந்த இனத்திற்கான பெருங்
கனவினை சுமக்கும்
அவர் வரைந்திருக்கின்ற வானத்தில்
தான் ஒளிரும் சிறகுகளோடு
நாம் பறக்கிறோம்..
நமக்குள்ள இலட்சிய தாகம் பெரிது .
கொண்டிருக்கும் கனவு பெரிது..
விலை தலையே ஆனாலும் தரத் துடிக்கும்
தாகம் பெரிது..
ஆம். இலக்கு ஒன்று தான்.எம்மினத்தின் விடுதலை.
சராசரிகளை போல நாம் வாழ விரும்பவில்லை
என்பதை நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும்
உறுதிப்படுத்தினோம்.
உரக்க பேசுகிறோம்..நம் மொழியில் கோபமும்
வேகமும் நீடிக்கிறதா என்பதை ஒவ்வொரு
நொடியிலும் கவனம் கொள்கிறோம்..
இலட்சிய தாகம் கொண்ட போர் வீரனாக
நமது வாழ்வை நாம் அமைத்துக் கொண்டு
விட்டோம்.
தலைமையின் மீது ஆழ்ந்த பற்றுறுதி
கொண்டிருக்கும் கொள்கை மீது தீவிர
விசுவாசம் என நமக்கான கோடுகளை நாமே
வரைந்து கொண்டு விட்டோம்..
நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும்
இந்த இனத்திற்காக என எழுதி வைத்து விட்டோம்.
இந்த நிலையில் தான்
செளமியா வருகிறார்.
உன் இணையாக..துணையாக..
இனி உன் பயணத்தின் நிழலாக..
ஒரு இலட்சிய வீரனுக்கு வாழ்க்கைப்
பட்ட வாழ்க்கை துணைவியும்
ஒரு இலட்சிய வீராங்கனையே..
இரவு நேர பயணம் முடிந்து வரும்
கணவனிடம் எவ்வித சலிப்பும் காட்டாமல்
கூட்டம் எப்படி..?
சீமான் மாமா எப்படி பேசினார் ?
என்பதை அவர்கள் தான் எவ்வித சங்கடமும்
இல்லாமல் கேட்கிறார்கள்.
குழந்தை படிக்கும்
பள்ளியில் தந்தை வரவில்லையா என கேட்கும்
ஆசிரியரிடம் அவர் முக்கிய கூட்டத்திற்காக
போய் இருக்கிறார் என கண்ணியத்தோடு
அவர்கள் தான் பதில் சொல்கிறார்கள்…
அவசர அவசரமாய் ஊருக்கு கிளம்பும்
போது வீட்டுக்குள் நிலவும்
பொருளாதார சங்கடம் பற்றி பேசாமல்
பெருமை காக்கிறார்கள்..
அவர்கள் நம் தாய்மொழி போலவே
பெருமை வாய்ந்தவர்கள்..
பொறுமை வாய்ந்தவர்கள்..
பாரங்களை தன் மீது சுமத்திக்
கொண்டு சமூக பாரம் தூக்கித்
திரிய நம்மை வெளியே அனுப்புகிறார்கள்..
எம்மால் எமது மொழியையும், நாட்டையும்
எம் உயிருக்கு மேலாக நேசிக்கும் எம்மால்
எம்மோடு வாழ்வில் பயணிக்கும் சக தோழமையை
தாய்மையின் மற்றொரு வடிவத்தினை நேசிக்க முடியாதா என்ன..?
என் தம்பி கல்யாண் செளம்யாவை உயிராக..
உயிருக்கு உயிராக நேசிப்பான் .
அந்த வகையில் இன்று எம் இல்லத்தில்
நுழைந்திருக்கும் செளமியா மிகவும் கொடுத்து
வைத்தவர் .
இனமானம் சிறக்க..தமிழ்க் கொண்டு
களமாடும் என் தம்பி கல்யாண் அவர்களுக்கு
செளமியா அவர்கள் மொழியாய்..விழியாய்
இருக்க வேண்டும்..
அவனால் ஆக வேண்டிய
காரியம் நிறைய இருக்கிறது..
வீரியமாய் செளமியா இருப்பார்.
நம் அண்ணன் சொல்வது போல
நமது பயணம் வெகு தொலைவு..
அந்த பயணத்தின் முதன்மை தம்பியாய்..
அண்ணன் சீமானின் படை வலிமையாய்
தம்பி கல்யாண் விளங்குவான்.  அவன் உள்ள
உறுதியாய்..இல்லப் பெருமையாய்
செளமியா விளங்குவார்..
நாம் தமிழர் என்கிற இனமானத்திற்கான
இந்த பெரும் குடும்பத்தின் பெருமையை காப்பார்.
என்னால் வெகுவாக நேசிக்கப்படுகின்ற
இருவரின் இணையேற்பு நிகழ்விற்கு வர
முடியாமல் போனது எனக்கு வெகுவாக
வலிக்கிறது..
எம்மினம் போல
நான் விழுந்திருக்கிறேன்.
மீண்டும் உத்வேகத்தோடு
எழுவதற்காக..
எழுவேன்..
அண்ணன் சீமானின் உயரும் கரங்களில்
சுடர் விடும் ஒளியாக நாங்கள் இருப்போம்..
அவரின் இனமானம் காக்கும் இந்த மகத்தான
கனவுப் பணியில் களமாடும் ஆயுதங்களாக நாங்களே
 திகழ்வோம்..
இல்லறம் ஏற்கும் என் அன்பு தம்பிக்கும்,
எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும்
செளமியா அவர்களுக்கும்
எனது புரட்சிக் கர வாழ்த்துக்கள்..
தோளோடு தோள் சேர்த்து …வாழ்வோடு
தமிழ்த் தோய்ந்த பெருமை கொள்க..
நாம் தமிழர்.
அன்பின் மகிழ்வில்..
மணி செந்தில்..
மாநில இளைஞர் பாசறை செயலாளர்.
 நாம் தமிழர் கட்சி

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…

திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே…

கருணாநிதியின் கடிதம் ஒன்று கருணாநிதியின் இந்த அழிச்சாட்டியம்(?) தாங்க இயலாமல் கருணாநிதிக்கே கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற நகைச்சுவை( புரிகிறது ..சீரியசான) கற்பனை இது.

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்களுக்கு..

உங்களை மதிப்பிற்குரிய கருணாநிதி என்று அழைத்ததற்கு காரணம் இந்த உலகில்..அறிவியல் தொழிற் நுட்பம் வளர்ந்த இக் காலக்கட்டத்தில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து ..யாருக்கும் எவ்வித உபயோகமில்லாமல்.. கதை கதையாய் …பக்கம் பக்கமாய் எழுதி குவிக்கும் தாங்கள் என்னைப் பொறுத்த வரை மதிப்பிற்குரியவர்தான்.

முன்பொரு காலத்தில் எனக்கும் ஒரு பொற்காலம் இருந்தது. 50 ,60 வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைவருக்கும் நான் தான் மிகப் பெரிய தகவல் தொழில் நுட்ப கருவி. என் வருகைக்காக ஊரே காத்திருக்கும். என்னை தபால்காரர் கொண்டு வருகையில் ஆசை ஆசையாய் வாங்கி துள்ளிக் குதித்தவர்களை நான் கண்டிருக்கிறேன். மகனின் கடிதத்தினை பார்த்த அழுத தாயை பார்த்திருக்கிறேன். காதலனின் கடிதத்தினை ரகசியமாக வாங்கி முத்தமிட்ட காதலியின் உதடுகளை பார்த்திருக்கிறேன். காதல் கோட்டை என்று என்னை வைத்து படமே வந்தது. ம்ம்ம். அதெல்லாம் ஒரு காலம் . அதற்கு பிறகு தொலைபேசி வந்தது. அப்போது என் மரியாதை சற்றே தளர்ந்தாலும் முற்றிலுமாக குறையவில்லை. இக்காலத்தில் செல்போன் என்ற ஒரு கருவி வந்திருக்கிறது. அவன் தான் என் வில்லன் . செல்போன் வந்த பிறகு செல்லாக்காசு ஆகிப் போனேன் நான். அப்படிப்பட்ட வலிமையான அந்த வில்லனையே தோற்கடித்தவர் தாங்கள். தினந்தோறும் மூட்டை மூட்டையாய் முரசொலியில் கடிதம் எழுதுகிறீர்கள். பிறகு தலைமை செயலகத்தில் அமர்ந்து வழுக்கியும்..வழுக்காமலும்.. நாசுக்காய் நாலு பைசாவிற்கு கூட மத்திய அரசு மதிக்காமல் இருக்கும் அளவிற்கு கடிதம் எழுதுகிறீர்கள் . யாராவது ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டி என்ன செய்தீர்கள் என கேட்டால் அதற்கும் தேதி வாரியாக ,மணி வாரியாக (இந்த புள்ளி விபரக் கணக்கில் உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை) கடிதத்தினை ஆதாரமாக காட்டி ஒரு கடிதம் என என் பயன்பாட்டினை அதிகரித்துக் கொண்டே செல்கிறீர்கள். உதாரணத்திற்கு ஈழத் தமிழன் அழிக்கப்பட்ட போது நீங்கள் மத்திய அரசுக்கு எழுதி குவித்த கடிதங்கள் டெல்லி மத்திய அரசின் அலுவலகங்களில் மலை போல குவிந்து இருப்பதாகவும்..அதில் பல கடிதங்கள் பிரித்துக் கூட பார்க்கப்படாமல் பாதுக்காக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். எனக்கு தெரிந்து இவ்வளவு கடிதங்களை எழுதிக் குவித்திருப்பது தாங்கள் தான். நீங்கள் இக் காரணத்தினை கூறி கின்னஸ் சாதனைக்கு ஒரு கடிதம் எழுதலாம். ஒரு வேளை தப்பித் தவறி இந்த காரணத்திற்காக கின்னஸ் விருது கொடுக்கப்பட்டால் …அடி தூள்…அதை வைத்து கடிதம் எழுதும் காவியத்தலைவனுக்கு கின்னஸ் என அருமை அமைச்சர் ஜெகத்ரட்சகன் ஒரு விழா எடுப்பார். அதில் வரும் கவியரங்கில் வைரமுத்து ,வாலி , பா.விஜய் போன்ற கலைஞர் அரங்க கவிஞர்களை “கடிதம் எழுதும் கலங்கரை விளக்கமே..உன் கடிதம் தான் சங்கத் தமிழின் விளக்கமே..உன் கடிதத்தினை கண்டால் அனைவருக்கும் நடுக்கமே..உன் கடிதங்களும் எதிர் காலத்தில் ஒரு புத்தகமாக மாறி உயிரை எடுக்குமே” என பாடச் சொல்லி முதல் வரிசையில் ரஜினிக்கும் கமலுக்கும் (வலுக் கட்டாயமாக ராமநாரயணனை வைத்து தூக்கி வந்து) நடுவில் அமர்ந்து ரசிக்கலாம். நினைக்கும் போது எனக்கே தலைச் சுற்றுகிறது.

என்னை நீங்களும் சில சமயங்களில் புறக்கணித்து இருக்கிறீர்கள் .டெல்லிக்கு போய் உங்கள் குடும்பத்தினருக்கு பதவி கேட்கும் போதும், எம்.பி சீட் பேரம் பேச டெல்லிக்கு போகும் போதும்..நீங்கள் கடிதங்கள் எழுதுவதில்லை. ஈழத்தமிழன் செத்தால் கூட கடிதம் எழுதி கண்ணியம் காக்கும் நீங்கள் பதவி என்ற ஒன்றுக்காக மட்டும் தான் என்னை மதிக்காமல் விமானம் ஏறி நேரே போய்விடுகிறீர்கள். அப்போதும் தாங்கள் கடிதம் எழுதி இருந்தால் …இன்னும் நான் உங்களை கொண்டாடி இருப்பேன். அப்போது மட்டும் டெல்லிக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை மாத்திரை மருந்துக் கணக்காய் தாங்கள் அனுப்பும் கடிதங்களின் உண்மை நிலை தங்களுக்கும் உறைத்து..பதவி போன்ற “உயிர் வாழும் மிக முக்கிய பிரச்சனைக்காக” நேரில் போவதே சாலச் சிறந்தது என சரியாக புரிந்துக் கொண்டு போய் விடுகிறீர்கள்.

இதெல்லாம் கூட பரவாயில்லை. என் மதிப்பினை நான் உணர்ந்து என் காலரை நானே தூக்கி விட்டுக் கொண்ட காலமும் உண்டு. சமீபத்தில் கொலை, கொள்ளை,கடத்தல் போன்ற மாபெரும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிற்கு வந்த போது ..உங்கள் தலைமையின் கீழான தமிழக காவல் துறை டெல்லி காவல் துறைக்கு எழுதிய கடிதம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நீதிமன்றங்களுக்கு கூட குற்றவாளிகளை அழைத்து வருவது சிரமம் என யோசிக்கும் காவல்துறை நீதிபதி அறையில் வீடியோ கான்பிரன்ஸிங் முறை மூலம் வழக்கு நடத்துகையில் .. ஒரு குற்றவாளியினை பிடிப்பதற்கு ..நாடெங்கும் பேசினால் 50 பைசா என்ற நல்ல திட்டத்தினை கொண்டு வந்த கழக அரசின் காவல் துறை தொலைபேசி ,தந்தி, இணையம், செல் போன் என்ற எதையும் தூக்கி எறிந்து விட்டு எழுதினார்களே ஒர் கடிதம் …அது கடிதம் அல்ல…காலம் காலமாய் போற்றி காக்க வேண்டிய காவியம். டெல்லிக்கு வந்த கொலைக்காரன் டக்ளஸ் தேவானந்தாவினை பிடிக்க கடிதம் எழுதிய காவல் துறை ..இதோ மீனவன் செத்ததற்காக கதறும் சீமானைப் பிடிக்க மட்டும் தனிப்படைகள் வைப்பதுதான் எனக்கு புரியவில்லை.

டெல்லிக்கு அனுப்பும் கடிதங்களை எந்த தபால் பெட்டி மூலம் அனுப்புகிறீர்கள் என்று தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அந்த தபால் பெட்டியை உணர்வுள்ள எவனாவது தூக்கிக் கொண்டு கடலில் போட்டு விடப் போகிறான். அஞ்சல் துறையை அழிவில்லாமல் வாழ வைக்கும் உங்கள் அருமை இங்குள்ள எவனுக்காவது புரிகிறதா .. ( அய்யய்யோ.. இதை ஜெகத்ரட்சகன் படித்து விட்டு அஞ்சல் துறையை வாழ வைக்கும் அருமை தலைவருக்கு விழா எடுத்தால்..மேற்கண்ட விபரீத விளையாட்டிற்கு யார் பொறுப்பேற்பது..? )

என்னவோ சாட்டிலைட்டு ன்னு சொல்றான் ..இண்டர்நெட்டுன்னு சொல்றான். ஆனால் நீங்க மட்டும் தான் இன்னும் பேட்டரி லைட்டு காலத்துலயே இருந்துகிட்டு கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க. நாட்டுல குப்பன்., சுப்பன்,கோவிந்தன் எல்லாம் எவனும் கடிதம் எழுதறது இல்ல. எஸ் எம் எஸ் அனுப்பிகிட்டும், வாய்ஸ்மெயில்ல பேசிகிட்டு இருக்கான். பொங்கல் வாழ்த்துக்கூட அனுப்பாம ஹேப்பி பொங்கல்ன்னு காப்பியை குடிச்சிகிட்டே கதை பேசுறான். பல ஊர்ல போஸ்ட் ஆபிஸ்ல காக்கா குருவி கூட கழியறத்துக்கு கூட வர்றதுல்ல.. மணி ஆர்டர் மணி டிரான்ஸ்பரா ஆயிட்டிச்சி.

ஆனா இந்த காலக் கட்டதிலும் நாய் கூட மதிக்காத எங்களை தாங்கள் மட்டும் மதித்து வருகிறீர்களே.. அதுதான் நெஞ்ச உருக்கி பஞ்சா அடிக்குது.. டெல்லிகார மன்மோகன் சிங் நீங்க எந்த கடிதம் அனுப்பினாலும் ..எப்ப அனுப்பினாலும் நடவடிக்கை எடுக்க பரீசிலிக்க ,ஆய்வு செய்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் தயாராவோம் என்ற தரமான ஒரே பதிலை நாளொன்றுக்கு 100 ஜெராக்ஸ் காப்பி வீதம் போட்டு தயாரா இருக்கார்.

அப்பவும் நீங்க விட்டீங்களா.. ஒரே கடிதம் ஒராயிரம் முறை பதிலா வந்தாலும்.. மறு நாள் காலை தினந்தந்தி பேப்பர்ல புது நியூஸ் போல போட்டுவுட்டுவீங்கல்ல.. அதான் சூப்பர் .

விடுங்க தலைவா..பேசறவன் பேசட்டும். தூத்தறவன் தூத்தட்டும். அவனுக்கும் நீங்க ஒரு கடிதம் எழுதி அவனையும் கலங்கடியுங்க. அந்த கடிதத்திற்கு பிறகு நடுத்தெருவுல நின்னு நாண்டுகிட்டு சாவாமல் அவன் உயிரோடு இருப்பான்னு நினைக்கிறீங்களா..?

இப்படிக்கு.

கருணாநிதியின் கடிதம்

வணக்கங்கள்.

அன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு ..

வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் நான் எழுதுகிறேன். நாம் துயருற்ற கணங்களை நமக்குள்ளே நிறுத்துவோம் . அவை அளிக்கும் நமக்கான ஆற்றல் மிகுந்த வன்மத்தினை.

என் இனம் வீழ்ந்த துயரமே என்னை எழுத வைக்கிறது. தோல்வியின் வன்மமே என்னை இயங்க வைக்கிறது. எம் இனத்திற்கான விடுதலைக் கனவே என் எழுத்திற்கான அடிப்படை.

எழுதுவோம்..இயங்குவோம்..இறங்குவோம்.

நேசங்களுடன்

மணி.செந்தில்

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén