பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: இலக்கியம் Page 1 of 4

2024 – சென்னை புத்தகக் கண்காட்சி-பெற்றதும்,கற்றதும்

இந்த வருடம் சென்னை புத்தகக் கண்காட்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஒரு நாள் மட்டுமே புத்தக கண்காட்சியில் செலவிட முடிந்தது உண்மையில் வேதனையை தந்தது. வழக்கமான சென்னை புத்தகக் கண்காட்சி கொண்ட சிறப்புகளை ஒருபுறம் இந்த புத்தக கண்காட்சியும் பெற்றிருந்தாலும், மறுபுறம் புத்தகக் கண்காட்சியில் இன்னும் சீர்படுத்தப்படாமல் தொடரும் தவறுகள் இந்த வருடமும் தொடர்வது கண்டிக்கத்தக்கது. தூய்மையற்ற கழிவறை, என்னை போன்றவர்கள் நடக்கவே முடியாத ஏற்றத்தாழ்வு உடைய மரப்பாதை, மிகச் சிறிய நூல் அரங்குகள் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டியவை நிறைய உள்ளன. சென்னை வெள்ளமும், ஊருக்கு ஊர் கண்காட்சி போடுகின்ற நிலையும் புத்தக விற்பனையை பெரிதும் இந்த வருடம் பாதித்ததாக விற்பனையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நிறைய நல்ல புத்தகங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. எந்த புது புத்தகத்தை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது புத்தகக் கண்காட்சியில் நாம் பெறுகின்ற மகிழ்வும் துயரும் ஒரே நேரத்தில் வந்தடைகிற மகத்தான அனுபவம். கையில் இருக்கின்ற பணம் புத்தகத்தின் விலை என்கிற இருபக்க தராசு தட்டுகளை வைத்து மனம் மேற்கொள்ளும் விசித்திர விளையாட்டு ஒவ்வொரு ஆண்டும் புத்தகத்தின் கண்காட்சியில் நிகழ்கிறது.

நீண்ட நாட்களாக ‘தமிழ்த் தேசியப் போராளி தமிழரசன்’ பற்றிய முழுமையான தொகுப்பு ஒன்றினை தேடிக்கொண்டிருந்தேன். அந்தக் கனவு இந்த வருடம் தமிழ்நேயன் தொகுத்தளித்த “தோழர் தமிழரசன் விடுதலை வீரன்” என்கிற தொகுப்பு நூல் மூலம் நிறைவேறியது.

அதேபோல் கான்சாகிப் யூசப் கான் மருதநாயகம் பற்றிய விடியல் பதிப்பகம் வெளியிட்ட “கிளர்ச்சியாளர் யூசுப் கான்” என்கின்ற விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலும் பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்கிற ஆவலைத் தோன்றியது.

எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள அலெக்ஸ் ஹேலியின் ” வேர்கள்” முழுமையான மொழிபெயர்ப்பு மற்றும் நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட கேசவமணி மொழிபெயர்ப்பில் லியோ டால்ஸ்டாயின் “அன்னாகரீனினா” போன்றவை இந்த வருடம் நான் வாங்கிய நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

சமீபத்திய சாகித்திய அகாதமி விருது வாங்கிய தேவி பாரதி அவர்கள் எழுதிய “நீர்வழி படூஉம்” திருச்செந்தாழை எழுதிய ” ஸ்கெட்சஸ்” முனைவர் ப கிருஷ்ணன் அவர்கள் மொழி பெயர்த்து சிந்தனை விருந்தகம் வெளியிட்டிருக்கிற “கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ் ராணுவ நினைவலைகள்” அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மனைவி சவிதா அம்பேத்கர் எழுதியிருக்கிற “டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை” ,நா. வீரபாண்டியன் எழுதியுள்ள “நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்த கோபம்” நண்பர் காளி பிரசாத் பரிந்துரைத்து நான் வாங்கிய சாம்ராஜ் எழுதிய “கொடைமடம்” போன்றவை இந்த வருடம் புத்தக கண்காட்சியில் நான் கண்டடைந்த முக்கியமான படைப்புகள்.

எனது தம்பி எழுத்தாளுமை அகர முதல்வன் பரிந்துரையின் பேரில் இந்த வருடம் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கே ஆர் மீரா எழுதிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வாங்கியுள்ளேன். வசீகரமான படைப்புலகம்.

இதன் நடுவே வைரமுத்துவின் “மகாகவிதை”, பரகால பிரபாகர் அவர்களின் கட்டுரை தொகுப்பான “புதிய இந்தியா எனும் கோணல் மரம்” போன்றவையும் படிக்க ஆர்வத்தை துண்டுபவைகளாக உள்ளன.

எப்போதும் சென்னை புத்தக் கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவது என்பது எனது ஆசான் ‘எஸ்.ராமகிருஷ்ணன்’ அவர்களை சந்தித்த நாள் முதல் ஒரு தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. அவரை ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் தேசாந்திரி அரங்கில் சந்திப்பதும், இலக்கியம் பேசிக் கொண்டிருப்பதுமான நிகழ்வு இந்த வருடமும் இனிதே நடந்தது.

நான் வாங்க முடியாத சில புத்தகங்களை சென்னை புத்தகக் கண்காட்சியில் இறுதி நாளன்று என் அன்புத் தம்பி பிரபா மூலம் வாங்கிக் கொண்டு குளிர் இரவில் அதை சுமந்து தஞ்சையில் என்னிடம் பாதுகாப்பாக சேர்த்த என் உயிர் இளவல் தமிழம் செந்தில்நாதன் நன்றி. நான் கொடுத்த நூல் பட்டியலை வைத்து ஒவ்வொரு அரங்காக சென்று புத்தகம் வாங்கி அன்பு சேர்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையத்தை சேர்ந்த என் தம்பி பிரபாவிற்கும் அன்பு முத்தங்கள்.

எனது அன்பு அண்ணன் பாலமுரளி வர்மன் எழுதிய “வீரப்பன் பெயரால் மனித வேட்டை” என்கின்ற நூலும் எனது அன்புத் தம்பி இடும்பாவனம் கார்த்திக் எழுதிய “யார் பிஜேபியின் பி டீம் ” என்கின்ற நூலும் புத்தக கண்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றது பெரு மகிழ்ச்சியை தந்தது.

மானுடம் கொண்டிருக்கின்ற எல்லா விதமான கீழமை உணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெறவும், பயமும், குழப்பமும் நிறைந்த இருண்மையான எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபடவும், நமக்கு முன்னால் இருக்கின்ற ஒரே ஒரு வெளிச்ச வீதி புத்தகங்கள் படிப்பது தான். வெளிச்சத்தை தேடி கண்டறிவது தானே மனித வாழ்க்கையின் ஒரே ஒரு பொருள்..?!

தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய 2 தன்னிகரற்ற நூல்கள்.நூல் வீதி 7

“பண்டைப் பெரும்புகழ் உடையோமா ? இல்லையா..!

பாருக்கு வீரத்தை

சொன்னோமா ? இல்லையா..!”

என பாவேந்தரின் வரிகள் அண்ணன் சீமான் குரலில் வெடித்து எழும்பும்போது அவர் முன் திரண்டிருக்கும் நமது உடலில் உள்ள மரபணுக்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றன. ‘உலகின் மூத்த குடி தமிழினம். உலகை ஆண்டது எம்மினம்’ என்றெல்லாம் பேசுவது வெறும் பெருமிதப் பிதற்றல்கள் அல்ல. வரலாறு அவ்வாறாகத்தான் சொல்கிறது. வரலாற்றை ஒட்டி நிகழ்கிற அறிவியல் ஆய்வுகளும் அவ்வாறாகத்தான் சொல்கின்றன. உலகத்தின் மாபெரும் அறிஞர்கள் எல்லாம் தமிழர் என்கின்ற இனம் தான் இந்த பூமி பந்தின் மூத்த இனம் என்று சொல்கிறார்கள்.

“யாதும் ஊரே.. யாவரும் கேளீர்..” என உலகம் முழுக்க சொந்தமாக நினைத்து பாடிய நமது முன்னோன் சொல் காற்றில் கரையக்கூடிய கற்பூரம் அல்ல. உலகம் முழுக்க பயணப்பட்டு, பக்குவப்பட்டு விரிந்தெழுந்த தமிழ் இன மூத்தோனின் முதற்குரல். உலகம் முழுக்க பரந்து, விரிந்து, ஆண்டு, வரலாற்றின் பக்கங்கள் முழுக்க பெருமை பதக்கங்களை சூடிக்கொண்ட ஒரு இனம் காலப்போக்கில் குறுகி கடற்கரை ஓரங்களில் குற்றுயிரும், கொலையுருமாக குன்றி எஞ்சிப் போனது எதனால் என்பதை வரலாற்றியல் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் ஆய்வு செய்த பெருமக்கள் இந்த மண்ணில் மிக மிக குறைவு. தமிழர் என்ற மூத்த இனத்தின் வெற்றிகளையும், பெருமைகளையும் பேச தமிழ் மொழியில் ஆயிரமாயிரம் இலக்கியப் பிரதிகள் காலங் காலமாய் தோன்றி கொண்டே இருக்கின்றன. ஆனால் இன்றோ ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு அடிமை தேசிய இனமாக மாறி இருக்கிற தமிழர் என்கிற இனத்தின் வீழ்ச்சியை ஆய்வு செய்கிற படைப்புகள் தான் இந்த இனம் மீள் எழுச்சிக் கொள்வதற்கான ஊக்கக் கருவிகளாக இருக்க முடியும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் எல்லா பயணங்களிலும் சுமக்கும் புத்தக வரிசைகளை அருகில் இருந்து பார்க்கின்ற அனுபவம் எனக்கு உண்டு.அந்த வரிசையில் தவறாமல் இடம்பெறும் புத்தகங்கள்

1. தமிழன் அடிமையானது ஏன் ? எவ்வாறு..?

2. தமிழர் மேல் நிகழ்ந்தப் பண்பாட்டு படையெடுப்புகள்.

இந்த இரண்டு நூல்களின் முக்கியத்துவம் போகிற போக்கில் ஒரு கட்டுரையில் விவரிக்க முடிகிறவை அல்ல. அண்ணன் சீமான் அவர்கள் புத்தகங்களைப் பற்றி ஒரு முறை பேசிக் கொண்டிருந்தபோது “தமிழர் என்கின்ற இனத்தின் விடுதலைக்காக களமாட வருபவர்கள் இந்த இரண்டு நூல்களையும் முழுமையாக மனனம் செய்து மனதில் ஏற்றி விட வேண்டும்” என்றார்.

அப்படிப்பட்ட அறிவுத் தகவல்களை, வீழ்ந்த இனம் எழுச்சிக் கொள்வதற்கான வழிமுறைகளைப் பற்றி விரிவாக இந்த இரண்டு நூல்களும் பேசுகின்றன. இந்த இரண்டு நூல்களையும் எழுதியவர் மாபெரும் தமிழ் அறிஞர், மேனாள் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பெருந்தமிழர் ஐயா க‌.ப. அறவாணன் அவர்கள்.

1987 ல் வெளியான தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள் என்ற நூலைப் பற்றி அக்காலத்தில் மேற்கோள் காட்டி பேசாத தலைவர்களே இல்லை எனலாம். பல்லாயிரம் படிகள் விற்றுத் தீர்ந்த இந்த நூல் யார் வேண்டுமானாலும் படிப்பதற்கு ஏதுவான எளிமையான மொழி கொண்டது.

இந்த நூலைப் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் சொல்லும்போது

” தமிழர் பல நூற்றாண்டுகள் பழமை உடையவர் .இலக்கிய இலக்கணச் செழுமை உடையவர். உயர்ந்த சமூக விழுமியங்களை உடையவர். சீரார்ந்த நுண் கலைகளை உடையவர். அஞ்சா நெஞ்சுடையவர். எனினும் கிபி மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழர் அயற் புல ஆட்சிக்கு இலக்காயினர்.

ஆரியம் /களப்பிரம் /பல்லவம் எனும் மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாகவும், ஒன்றன் மேல் ஒன்றாகவும் தமிழை அடிமைப்படுத்தின. இது எவ்வாறு நிகழ்ந்தது..?? என வினா எழுப்புகிறார்.

இந்த வீழ்ச்சியை பற்றி ஆய்வு செய்யும் ஐயா அவர்கள் “தமிழர் மொழி அடிப்படையில் ‘நாம் தமிழர்’ என்று ஒன்றாய் குவியாது, சேரர், சோழர், பாண்டியர், வேளீர் என பல வேறுபாடுகள் மற்றும் குடி அடிப்படையில் பிரிந்திருந்தனர்.” என்கிறார். மேலும் இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் அடித்தளம் வலியுறுத்தும் மிக முக்கியமான செய்தி.. “தமிழர் மொழி அடிப்படையில் ஒன்று பட வேண்டும் என்பதுதான்” என்று கூறும் இந்த நூல் தமிழில் இயற்றப்பட்ட நூல்களில் ஆகச்சிறந்த நூல்களில் ஒன்று.

முதல் அத்தியாயத்திலேயே நிறைய தகவல்கள். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் மிகுதியான திரையரங்குகள், சாராயக்கடைகள் கசாப்புக் கடைகள், தொழு நோயாளிகள் அதிகம் என கூறும் ஐயா அறவாணன் அந்தக் காலத்தில் மலிந்து கிடந்த லாட்டரி சீட்டு மோகத்தையும் இடித்துக் காட்ட தவறவில்லை. தமிழர் எப்போதும் பிறரை சார்ந்து இருக்கும் போக்கினை வேதனையோடு பகிரும் ஐயா, இந்திரா காந்தி இறந்த போது இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொண்டது பிற மாநிலத்தை காட்டிலும் (3) தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் (6) தான் எனக் கூறி அதிர வைக்கிறார். போர்க்குணம் இல்லாமல் தாழ்வு மனப்பான்மை கொண்டமை, அயலாரை, அயல் பண்பாட்டை கண்மூடித்தனமாக போற்றும் குணம், தொலைநோக்கு இல்லாமல் போனது என்கின்ற நான்கு காரணங்கள் தான் தமிழினம் வீழ்ச்சிக்கு முக்கியமானவை என ஐயா வரையறுக்கிறார். அதற்கு ஆதாரமாக மாமேதை காரல் மார்க்ஸ்‌ “தமிழர்களைப் பற்றி ஆங்கிலேயர்கள் தென்னிந்திய மக்களை அச்சுறுத்தி எளிதில் அடிமைப்படுத்தியது போல பஞ்சாபியரை அச்சுறுத்தி வெற்றி கொண்டு விடலாம் என தவறாக கணித்து விட்டார்கள்..” என்று எழுதிய வரலாற்றுக் குறிப்புகளையும் சான்றாக காட்டும் ஐயா 1311 ஆம் ஆண்டு மாலிகாப்பூர் படையெடுப்பின்போது வெறும் செய்திகளை கேட்டு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட தமிழர்களைப் பற்றியும் தகவல்களை தருகிறார். தமிழ்நாட்டின் மீது நிகழ்ந்த ஆயிரக்கணக்கான அரசியல் படையெடுப்புகள் காரணமாக தமிழர் பண்பாட்டில் ஊடுருவி நிற்கின்ற நடைமுறைகள் குறித்து வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்த நூல், பண்பாடு என்றால் என்ன என்பதை மிக ஆழமாக ஆய்வு செய்கிறது. இந்தியப் பெருநிலம் முழுக்க கிமு 1500 ஆண்டு வாக்கில் பரவி இருந்த ஒரு இனம் படிப்படியாக தமிழ்நாடு என்கின்ற சிறிய நிலப்பகுதிக்குள் எவ்வாறு குறுகி சிக்குண்டது என்பதை பற்றி இந்த நூல் முழுக்க வரலாற்று செய்திகள் மற்றும் பன்னாட்டு அறிஞர்கள் தந்த கருத்துக் குவியல்கள் நிரம்பித் ததும்புகின்றன.

அதேபோல் ‘மொழிக் காப்பியம்’ என்கின்ற இரண்டாவது அத்தியாயத்தில் மொழி உணர்வை இழந்த தமிழர்களின் நிலையை ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் , கிரேக்கர்/ இஸ்லாமியர்/ தெலுங்கர்/ ஐரோப்பியர் என்கிற ஒவ்வொரு அயலார் படையெடுப்பின் போதும் இந்த நிலம் அடைந்திருக்கின்ற பண்பாட்டு மாற்றங்களை, தமிழர்கள் அடைந்த உளவியல் கேடுகளைப் பற்றி பற்றி நுட்பமாக ஆய்வு செய்கிறார்.‌ தமிழ் பண்பாட்டுக்குள் ஊடுருவி இருக்கின்ற அயலார் பண்பாட்டுப் புள்ளிகளை குறிப்பிட்டுக் காட்டும் இந்த நூல், நம் பண்பாட்டில் விரவி இருக்கின்ற மூடத்தனங்களையும், பிற்போக்குத்தனங்களையும் மிக அழுத்தமாக சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாக “நாயக்கர் படையெடுப்பில் நீங்கா படிமங்கள்” என்கின்ற அத்தியாயம் மிக மிக முக்கியமானது. தெலுங்கரின் ஆதிக்கத்தினால் தமிழர் இழந்த நிலம்/ உரிமைகளைப் பற்றி இந்த அத்தியாயம் ஆழ்ந்து ஆய்வு செய்கிறது. அயல்நாட்டில் இருந்து நம் நாட்டில் மதம் பரப்ப வந்த துறவிகள் தமிழர்களைப் பற்றி எழுதி வைத்திருக்கின்ற குறிப்புகளை சேகரித்து அவற்றின் வாயிலாக தமிழரின் பண்பாடு அடைந்திருக்கின்ற வீழ்ச்சியை ஆய்வு செய்யும் இந்த நூல்

தமிழர் வரலாற்றைக் கொண்டு, சுய பரிசோதனை செய்து கொண்டு தமிழின மீட்சிக்கு களம் புகும் வீரர்கள் படிக்க வேண்டிய அடிப்படை ஆவணமாக அமைகிறது.

இந்த நூலின் தொடர்ச்சியாக ஐயா க.ப. அறவாணன் அவர்களின் தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு? என்கின்ற 2002 ல் வெளியான மற்றொரு முக்கியமான நூலும் அமைகிறது.

அடிமை என்ற சொல்லை ஆய்வு செய்வதிலிருந்து தொடங்கும் இந்த நூல்‌ தமிழரைப் போல் இல்லாமல் ஜப்பானியர், தாய்லாந்தினர், சீனர் போன்ற மற்ற இனத்தார் எப்படி வேற்று இனத்தாருக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொண்டார்கள் என்பதை பற்றி வரலாற்றுத் தகவல்களோடு விரிவாக ஆய்வு செய்கிறது. பிறகு தமிழர் அடிமை வரலாறு என்ற தலைப்பில் பழந்தமிழகத்தில் அடிமை முறை எவ்வாறு இருந்தது என்பதற்கான‌ சங்க இலக்கிய , வள்ளுவச் சான்றுகளை பேசுகிறது. தமிழர் அரேபியருக்கும், தெலுங்கருக்கும், ஐரோப்பாவினருக்கும் எப்படி அடிமை ஆனார்கள் என்பதை விரிவாக ஆய்வு செய்யும் ஐயா அறவாணன் அவர்கள் அதற்கு ஆதாரமாக பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை பன்மொழி அறிஞர்கள் நூல்களில் மற்றும் சுய வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து பயன்படுத்துகிறார். தமிழர் அடிமை வரலாறைப் பற்றி விரிவாக ஆய்வு செய்த இந்த நூல் அதற்கான காரணங்களான தமிழர் தொலைநோக்கு இல்லாமல் போனது, கல்வி அறிவின்மை, தமிழர் பின்பற்றிய மதங்கள், பெண்ணடிமை, மன்னனுக்கும் மக்களுக்கும் தொடர்பு இல்லாமை, அறிஞர் பெருமக்கள் அநீதி இழைக்கபடும் போது போராடாமல் இருந்தது, தமிழ் மன்னர் இடையே ஒற்றுமை இல்லாமை, வெள்ளை நிற மோகம் போன்ற பல காரணங்களை ஆய்வு செய்வதோடு மட்டுமில்லாமல், இதற்கான தீர்வழிகளையும் மூன்றாம் பகுதியில் அலசுகிறது. தன்னம்பிக்கை இன்மை தாழ்வு மனப்பான்மை, அடிமை மனப்போக்கு ஆகிய மூன்றும் தமிழர் வரலாற்றில் திட்டமிட்டே நுழைக்கப்பட்டன என அரசியல் பொருளாதார சமுதாய காரணங்களை முன்வைத்து நிறுவுகின்ற இந்த நூல் தமிழர் வளம் பெற வழிகளாக அறிவின் ஆட்சி நடைபெற வேண்டும் என வரையறுக்கிறது.’ கட்சி வழி அரசியல் ஒரு சாய்ஸ்( வைரஸ்) நோய்’ என அடித்துச் சொல்லும் இந்த நூல் உலகமயமாதலின் கேடுகளைப் பற்றியும் நுகர்வு கலாச்சார படையெடுப்பை பற்றியும் தொலைக்காட்சி மோகத்தைப் பற்றியும் விரிவாக ஆய்வு செய்கிறது.

இந்த நூலின் நோக்கம் பற்றி ஐயா அறவாணன் அவர்கள் கூறும்போது..

“நம்மைப் பற்றி சிறுமைகளை அறிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்படவில்லை. அவற்றை அறிந்து கொள்ள வேண்டும், ஆத்ம பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், என்பதற்காகவும் தவறுகளுக்காக வருந்துவதற்காகவும், வருங்காலத்தில் அவை மீண்டும் மீண்டும் நிகழாமல் இருக்க திருந்துவதற்காகவும், மேற்கொள்ள வேண்டிய தற்காப்புக்காகவும் இவை எழுதப்படுகின்றன.” என்கிறார்.

இந்த இரண்டு நூல்களிலும் பல நூறு செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. முக்கியமான இந்த இரண்டு புத்தகங்களை படிப்பவர் தமிழர் வரலாற்றைப் பற்றி மாபெரும் தெளிவை அடைவார்கள்.

புரட்சியாளர் லெனின் கூறுவது போல “வரலாற்றில் தெளிவு பெறாத எந்த இனமும் எழுச்சிக் கொள்ள முடியாது” என்பதை உணரும் காலகட்டத்தில் வாழ்கின்ற நாம், நமக்கென இருக்கின்ற வரலாற்றின் அடிப்படைச் செய்திகளை ஐயா அறவாணன் எழுதிய இந்த இரண்டு மாபெரும் நூல்களின் வாயிலாக கற்க வேண்டியது காலத்தின் கடமையாகும்.

பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் தஞ்சை மாவட்டம் கடலங்குடியில் 1941 இல் பிறந்தவர். ஐயா தமிழியம் சார்ந்தும் கல்வியியல் சார்ந்தும் தமிழர் வரலாறு அரசியல் தமிழரின் உளவியல் இன்னும் பல்வேறு துறைகள் சார்ந்தும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். தமிழரின் அற உணர்வை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து “அற இலக்கிய களஞ்சியம்” என்ற தொகுப்பு நூலை உருவாக்கியதில் ஐயா அறவாணனின் பங்கு முதன்மையானது.

ஐயா எழுதிய ‘ஈழம் தமிழரின் தாயகம்” என்கின்ற நூல், பிழைக்க போன நாட்டில் தமிழர்கள் ஏன் தனி நாடு கேட்கிறார்கள் என கேட்கும் அறிவற்றவர்களுக்காக எழுதப்பட்ட அறிவாயுதம். அவரது “சமணம் வளர்த்த தமிழ் இலக்கணம்” மிகச்சிறந்த ஆய்வுப் படைப்பு. தன் 27 ஆம் வயதில் கல்லூரி முதல்வரான ஐயா நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றியவர். அவரது காலத்தில் எனது பெரிய தந்தை எழுத்தாளுமை ச. கல்யாணராமன் அவர்களின் பெரும் முயற்சியால், கும்பகோணத்திற்கு வந்து என் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தது எனது வாழ்நாள் பெருமை. ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு ஒவ்வொரு மணித்துளியும் வீணாக்காமல், தன் வாழ்நாள் முழுக்க தமிழரின் உயர்வுக்காக உழைத்த ஐயா அறவாணன் தன் வெற்றியின் ரகசியமாக “பொறுத்துப்போ, புறக்கணி, கடந்து போ..” என்கிற மூன்று கருத்துக்களை முன் வைக்கிறார். “பேசுவதைக் குறை. முடிந்தால் நிறுத்து.” என போதிக்கும்

ஐயா அவர்கள்

“முயன்று வரலாற்றைப் படித்தல் வேண்டும்!

முடிந்தால் வரலாற்றைப் படைத்தல் வேண்டும்!

இயன்றால் வரலாறாகவே வாழ்தல் வேண்டும்!”என முழங்கினார்.

உண்மையில் தமிழர் இனத்தில் தோன்றிய தனிமனித வரலாறு ஐயா க.ப. அறவாணன் அவர்கள்.2018 ல் நிகழ்ந்த ஐயாவின் மறைவிற்குப் பிறகு அவரது துணைவியார் அம்மா தாயம்மாள் அறவாணன் அவர்கள் “தமிழ்க்கோட்டம்” பதிப்பகம் மூலம் ஐயாவின் எழுத்துக்களை தொடர்ந்து பதிப்பித்து மாபெரும் தமிழ்ச்சேவை ஆற்றி வருகிறார்.

“பிறந்த ஊரில் கூட பாசை மாறி பேசும் காக்கைகள் உள்ளன. அவை காக்கைகள்தான். அப்படித்தான் மாறிப் பேசும். குயிலாக இருந்தால் மாறுமா ? மாற நேர்ந்தால் மடிந்து போகும் குயில் சாதி!

தமிழர் குயிலாக இருக்கட்டும் வேழமாக பிளிரட்டும்! வேங்கைப் புலியாக உறுமட்டும்! “

என தன் ஆன்மாவிலிருந்து எழுதிய பேரறிஞர் ஐயா க.ப.அறவாணன் அவர்களது படைப்புக்கள் இருண்டுக் கிடக்கும் தமிழர் மீள் எழுச்சிக்கான வரலாற்று வெளிச்சங்கள்.

தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள்.- க.ப.அறவாணன்/ பக்கங்கள் 273./ விலை ரூ 300

தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு ? – க.ப.அறவாணன் /பக்கங்கள் 336. விலை ரூ200.

ஐயா அறவாணன் அவர்களின் அனைத்து நூல்களையும் வெளியிடுவது

தமிழ்க்கோட்டம், அமைந்தகரை, சென்னை.

எஸ் ராமகிருஷ்ணன்-உள்ளொளி நிறைந்த எழுத்தாளுமை.நூல் வீதி – 6

“அந்தக் காகிதங்கள் நனைந்த போது நானும் நனைந்தேன். அந்த காகிதங்கள் போல நானும் மிருதுவாக இருக்கிறேன். ஆனாலும் இந்த பெரு மழையிலும் என் புத்தகங்கள் நனைந்தனவே ஒழிய, என் ஒரு சொல் கூட நனையவில்லை. காகிதத்தை தான் மழையால் நனைக்க முடியுமே ஒழிய, எனது சொற்களை அல்ல”

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி பதிப்பகம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்தது. பல நூறு புத்தகங்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி விட்டன. இது பற்றிய ஒரு உருக்கமான பதிவினை எஸ்.ரா சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இந்த சம்பவத்தை குறித்து அவரது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதுதான் தன் சொற்களைப் பற்றிய மேற்கண்ட கருத்தை எஸ் ராமகிருஷ்ணன் பேசியிருந்தார்.

எழுத்தாளன் என்பவன் சொற்களால் ஆனவன்.எழுத்துக்களின் கூட்டிசைவினால் உருவாகும் சொற்களின் வெளிச்சம் எழுத்தாளனின் அகத்திலும் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது.

நெல்மணிகளை சேகரித்து வைத்திருக்கும் பழங்காலத்து பத்தாயம் போல எழுத்தாளன் சொற்களை தானியங்களைப் போல சேகரித்தும் அவற்றை உரிய இடத்தில் விதைத்தும் காலத்தின் வீதிகளில் நடந்து கொண்டே இருக்கிறான்.

எஸ்.ரா சொற்களால் ஆனவர். தன் படைப்புகளில் உள்ளார்ந்த ஆழமும், எளிமையின் வசீகரமும் கொண்ட சொற்களால் நிறைந்தவர். 90களில் தமிழ் உரைநடையில் நிகழ்ந்த பின் நவீனத்துவம் மற்றும் மாய எதார்த்தவாதம் போன்றவைகளின் தாக்கத்தினால் தமிழ் நவீன இலக்கிய உலகில் பெரும் பாய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் சில சிறுகதை தொகுதிகளை வெளியிட்டிருந்த எஸ் ராமகிருஷ்ணன் தனது முதல் நாவலான ‘உப பாண்டவம்’த்தை வெளியிடுகிறார். கதை நம் அனைவருக்கும் தெரிந்த மகாபாரதக் கதை தான். அந்த கதை சம்பவங்களை வைத்துக்கொண்டு மகாபாரத இதிகாசத்தின் மீது தன் வசீகரமான மொழியில் புனைவு உலகு ஒன்றினை எஸ்.ரா உருவாக்கி இருக்கிறார். மகாபாரத இதிகாசத்தின் கதாபாத்திரங்கள் அவரவருக்கான நீதியையும், துயரங்களையும், ஆசைகளையும், மன ஓட்டங்களையும் ஏக்கம் வலியும் நிறைந்த மொழிகளில் வெளிப்படுத்தும் இந்த நாவல் தமிழ் நாவல் உலகில் தனித்துவமானது. அடர்த்தி நிறைந்த சொற்கள் மூலம் வடிவமைக்கப்படும் கதைக்களம் ஒரே சமயத்தில் நாட்டார் வழக்காற்றியல் தளத்திலும், புராண இதிகாச தளத்திலும் பயணிப்பது இந்தப் படைப்பை தமிழில் முக்கியமான ஒன்றாக மாற்றுகிறது.

இந்தப் படைப்பில் காணப்படும் ஒரு சித்திரம்..

“நாய்க்கு அடையாளம் குரல். குரலற்ற நாய் ஓடிக்கொண்டே இருந்தது”

இப்படி பக்கத்திற்கு பக்கம் ஆழமான சொற்கள் மூலம் ஒரு படைப்பை பிரம்மாண்டமானதாக மாற்றி இருக்கிற எஸ்.ரா இன்று தமிழின் மிக முக்கியமான எழுத்தாளுமை.

எனக்கு அவரது படைப்புகளில் மிகவும் பிடித்தது அவரது இரண்டாவது நாவலான “நெடுங்குருதி”. தன் வெப்பம் மிகுந்த கரிசல் மண்ணை பற்றி எஸ்.ரா எழுதிய முதல் நாவல் இது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு கிராமமாக வேம்பலை என்கின்ற ஒரு புனைவு சிற்றூரினை உருவாக்கி வெக்கை நிறைந்த அந்த ஊரின் மக்களாக திருட்டு கொள்ளைகளுக்கு பேர் போன வேம்பர்கள் என்கிற கூட்டத்தை உருவாக்கி , சுவாரசியமும், வினோதமும் நிறைந்த கதை மாந்தர்களை எஸ்.ரா தன் படைப்பு முழுக்க உலவ விட்டிருப்பார்.

எறும்புகள் கூட ஊரை விட்டு விலகும் வெக்கை நிறைந்த ஒரு கோடைகால பகல் பொழுதை விவரிக்கின்ற காட்சி தமிழில் வேறு எந்த படைப்பிலும் காண முடியாதது.

“தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அழிந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. காலை நேரத்தில் அவை மண் சுவர்களை விட்டு மெதுவாக கீழ இறங்கி தலையை செலுத்தியபடி தெருவில் நீண்ட தனிமையில் பயத்தோடு கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதை பார்த்துக் கொண்டே இருந்தான்.”

ஆகச் சிறந்த ஊர் சுற்றியான எஸ.ரா இந்திய பெருநிலம் மட்டும் இல்லாமல் உலகத்தின் முக்கியமான பகுதிகளுக்கு பயணப்பட்டு இருக்கிறார்.

எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் காட்சி மொழியிலானவை. திரைமேதை பாலு மகேந்திராவின் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் போல பேரழகும் , தெளிவும் நிரம்பிய முகங்களை கொண்டவை.

தமிழில் முதன்முதலாக எஸ் ராமகிருஷ்ணன்தான் அதிதீவிர வாசகர்கள் மட்டுமே படிக்க முடிகிற நவீன இலக்கியத்திற்கும், எளிய வாசகர்கள் படிக்கும் வெகுஜன படைப்புகளுக்கும் உள்ள இடைவெளியை அழித்தவர். அவரது நவீன இலக்கிய செழுமை நிறைந்த “துணையெழுத்து” கட்டுரைத் தொடர் வெகுஜன பத்திரிக்கையான ஆனந்த விகடனில் வெளியாகி பெரும் புகழ் அடைந்தது ‌. அதன் பிறகு அதே பத்திரிக்கையில் தமிழின் நவீன இலக்கிய முகங்களை பற்றி அவர் எழுதிய “கதாவிலாசம்” அதுவரை வெகுஜன வாசகர்கள் அறியாத தமிழின் முக்கிய எழுத்தாளர்களை, அவர்களது படைப்புகளை தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தது.

‘துணையெழுத்து’ தொடர் விகடனில் வெளியான காலத்தில் ஒவ்வொரு வாரமும் படித்துவிட்டு பல மணி நேரம் உறைந்து, அமர்ந்து விடுவேன். பல சமயங்களில் நெகிழ்ச்சியுடன், கண்கலங்கி இந்த உலகத்தில் இத்தனை வகை எளிய மனிதர்கள் அறத்தோடு இருக்கிறார்கள் என்பதை நினைத்துக் கொண்டே சிலிர்த்த பொழுதுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அப்படி வாசகர்களை சிலிர்க்க வைத்து தன் வயப்படுத்திய எஸ்.ரா தமிழில் உலக சினிமா குறித்து மிகப் பெரிய தரவுகள் கொண்ட 700 பக்கங்களுக்கும் மேற்பட்ட “உலக சினிமா” என்கின்ற மிக முக்கியமான நூலை இயற்றியவர். அது திரைத்துறையை ஆழ்ந்து நேசிக்கும் அனைவருக்குமான என்சைக்ளோபீடியா.

அவரது புகழ்பெற்ற நாவலான “சஞ்சாரம்” அழிந்து போன கரிசல் மண்ணின் நாதஸ்வர கலைஞர்களை பற்றியது. 2018 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வாங்கிய இந்த நூல் சாதியச் சமூகம் கலைஞர்களிடம் நுட்பமாக கடைபிடிக்கும் ஏற்றத்தாழ்வுகளை இலக்கியத் தன்மையோடு பேசிய தமிழின் மிக முக்கியமான நாவல்.

அவரது ‘இடக்கை’ மறைந்த மன்னர் அவுரங்கசீப்பை பற்றியது. நீதி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவரின் குரலாக ஒலிக்கும் இந்த நூல்‌ செவ்வியல் தன்மை கொண்டது. திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட இடக்கைப் பழக்கம் உடைய சாமர் இனத்தைச் சேர்ந்த தூமகேது‌ என்ற ஆட்டு தோல் பதப்படுத்துபவன், மன்னர் ஔரங்கசீப்பின் அந்தப்புரத்தின் பணியாள், திருநங்கை அஜ்ரா பேகம் என்பவரை பற்றியும் பேசும் இந்த நூல் “the king can do no wrong” (அரசு அதிகாரம் தவறு இழைக்காது/அரசு அதிகாரம் தவறிழைத்தாலும் அது சரியே) என்ற முதுமொழியை பற்றி விவாதிக்கிறது. இந்த நூல் முழுக்க பண்டைய இந்தியாவின் நீதி முறைகளை பற்றி விவாதிக்கும் எஸ்.ராவின் மொழி அசாத்தியமானது.

2021 இல் வெளிவந்த “மண்டியிடுங்கள் தந்தையே” தமிழில் வெளியான ரஷ்ய நாவல். புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் பண்ணையில் நிகழ்பெற்ற சம்பவங்களை முன்வைத்து ரஷ்யாவில் அன்று நிலவிய குளிர்கால பருவநிலை, பண்ணை சூழல், அடிமைமுறை, காதலின் துயர் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த படைப்பு போல இந்திய மொழிகளில் வேறு ஏதும் இதுவரை எழுதப்படவில்லை.

இவை மட்டும் இல்லாமல் துயில் நிமித்தம், பதின், உறுபசி என பத்திற்கும் மேற்பட்ட நாவல்களையும், 20க்கும் மேற்பட்ட சிறுகதை தொகுப்புகளையும் , உலகத் திரைப்படம், சிறார் இலக்கியங்கள், உலக இலக்கியங்கள், பல நாட்டு எழுத்தாளர்களின் வாழ்வியல் போன்ற பல துறைகளை சார்ந்து பல கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் படைப்பாளர்.

எனது இந்தியா,மறைக்கப்பட்ட இந்தியா என்கிற இரண்டு முக்கிய புத்தகங்கள் இந்திய பெருநிலத்தின் வரலாறு மற்றும் முக்கிய செய்திகளை உள்ளடக்கியவை. இந்தியாவை தமிழில் புரிந்து கொள்ள இதுவரை இது போன்ற இரண்டு தொகை நூல்கள் தமிழில் இல்லை. சண்டைக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய அவர் தமிழின் நூறு சிறுகதைகளை தேர்ந்தெடுத்து இரண்டு பாகங்களாக தொகை நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறந்த படைப்புகளை தொகுத்து “என்றும் சுஜாதா” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். அட்சரம் என்கின்ற அவர் நடத்திய இலக்கிய இதழ் தயாரிப்பு வடிவத்திலும், உள்ளடக்க அழகிலும் இன்றும் ஒரு எடுத்துக்காட்டு. அவரது நூல்களை “தேசாந்திரி பதிப்பகம்” வெளியிட்டு வருகிறது.

தன் கதைகளைப் பற்றி எஸ்.ரா “வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லாமல் மீண்டும் மீண்டும் எதிர்பாரான்மையை சந்திக்கும் இந்த உலகோடு ஆடிய ஒரு தீரா விளையாட்டான பகடை ஆட்டம்” என்கிறார்.

தமிழின் ஆகச்சிறந்த எழுத்துக்களை படிக்க விரும்பும் ஒரு எளிய வாசகனுக்கு ஒரு மிகச்சிறந்த வாயிலாக எஸ் ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் மிளிர்கின்றன. அவரது வாசகன் என்கிற முறையில் எனக்கு அவரைத் தவிர வேறு யாரும் அவரைப் போல என் வாசிப்பு பசியை ஆற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் அவரது எழுத்துக்களுக்காக நான் காத்திருக்கிறேன். அவரும் என்னை மட்டுமல்ல என்னை போன்ற பலரை பசியாற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் அவர் ஏந்தும் அவரது இலக்கியம் ஒரு வகையான காப்பிய மணிமேகலை ஏந்திய அமுதசுரபி தான்.

அவர் எழுதிய உப பாண்டவத்தில் ஒரு பத்தி “

அஸ்தினாபுரம் ஒரு கனவு. எங்கள் நாக்கு அசைய அசைய இந்த நகரம் விரிவு கொள்கிறது. நாவின் நடமாட்டம் நின்றால் நகரம் விழுந்து விடும். அஸ்தினாபுரம் என் நாக்கில் இருக்கிறது.”

அப்படித்தான் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற உள்ளொளி மிகுந்த எழுத்தாளர்களும். எழுத்தாளர்களின் விரல்கள் எழுதப்படாத வெற்றுத் தாளில் அசைய அசைய வாசிப்பவரின் இதயம் விரிவு கொள்கிறது .விரிவு கொண்ட இதயம் கொண்ட மனிதர்கள் தான் இந்த உலகை இயக்குகிறார்கள். எனவே எழுத்தாளர்களின் விரல்களின் அசைவில் தான் உலகத்தின் இயக்கம் உறைந்திருக்கிறது.

எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய அனைத்து நூல்களும் கிடைக்கும் இடம்: தேசாந்திரி பதிப்பகம், கங்கை அபார்ட்மெண்ட்ஸ், 80 அடி சாலை, சாலிகிராமம், சென்னை.

தமிழர்கள் படிக்க வேண்டிய அறிவுப் பேராயுதம்- திராவிடத்தால் வீழ்ந்தோம் -அறிஞர் குணா/ நூல் வீதி 5.

என் கல்லூரி காலத்தில் நான் கண்ட ஒரு புத்தகத்தின் பெயர் “குணா-பாசிசத்தின் தமிழ் வடிவம்.” அந்த புத்தகத்தை எழுதியவர்கள் அப்போது ஆய்வுத் துறையில் புகழ்ப்பெற்று இருந்த பேராசிரியர்கள் அ. மார்க்ஸ் மற்றும் கோ.கேசவன். இருவரும் என் தந்தையின் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூலமாக என் தந்தை அந்த புத்தகத்தை வாங்கி வந்தார். ‘பாசிசம்’ என்பது அழிவு அரசியலின் மிகப்பெரிய கலைச்சொல். அதை போகிற போக்கில் ஒரு தனிநபர் அல்லது ஒரு சிறு நூல் மீது யாரும் சொல்லி விட முடியாது என்று நினைக்கும் போது அதைப் பற்றி தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தது. அந்தப் புத்தகம் எதைப் பற்றியது என வாசிக்க தொடங்கும் போது அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற சிறு நூலுக்கான எதிர்வினையாக அது எழுதப்பட்டிருந்தது என தெரிந்தது. அப்போது அந்த நூல் எனக்கு எங்கும் கிடைக்கவில்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டு குடந்தை தமிழ் கழகத்தின் தலைவர் அண்ணன் பேகன் அவர்கள்‌ அந்தப் புத்தகத்தை கொடுத்து என்னிடம் வாசிக்க சொன்னார். அந்தப் புத்தகம் என்னிடம் வழங்கப்பட்ட நாளில் நான் கடுமையான ‘திராவிட மயக்கத்தில்’ சிக்குண்டு கடும் பித்தில் இருந்தேன்.தமிழீழத்தில் போர்ச்சூழல் தீவிரமாகும் காலகட்டத்தில் என்னைப் போன்று திராவிடத்தை இறுகப்பற்றிக் கொண்டிருந்த பலரும் களைப்படைந்தார்கள். வஞ்சகமும், சூழ்ச்சியும் நிறைந்த திராவிட அரசியல்வாதிகளின் போக்கு என்னை போன்ற பலருக்கும் மிகப்பெரிய வலியை கொடுத்த நாட்களில் ஒரு நாள் அந்த புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தது. அதுவரை உயிரென நம்பிய ஒரு தத்துவத்தை, தலைகீழாக மறுபரிசீலனை செய்து ‘பாம்பு தன் தோலை தானே உரிப்பது போல’ தன்னை புதிதாக்கிக் கொள்கிற ஒரு வேலையை ஒரு நூல் வாசிப்பு நிகழ்த்தப் போகிறது என உணர்ந்த தருணம் அது.

சிறிய நூல். மொத்தம் 76 பக்கங்களே உடைய , ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும் போது இத்தனை காலமும் நம் இதயத்தில் ஏற்றி வைத்திருந்த எல்லா சிந்தனைகளையும் உதறி போட சொல்லுகின்ற, அணுகுண்டு போல அடர்த்தியான நூல் அது.

தமிழரின் அறிவு பரப்பில் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற நூலை போல அதிர்வுகள் ஏற்படுத்திய படைப்புகள் மிக மிகக் குறைவு. ஏறக்குறைய மூன்று தலைமுறைகளாக அழுத்தத் திருத்தமாக சொல்லப்பட்டு, சொல்லப்பட்டு நம் உதிரம் வரை உருவேற்றி, நம் மூளையின் ஒவ்வொரு செல்லிலும் பதிவேற்றம் செய்யப்பட்ட சொல்லான ‘திராவிடத்தை’ வெறும் 76 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் பசி கொண்ட ஓநாய் போல வேட்டையாடுவதை உணரும் போது அது வசீகரமான,மனதிற்கு நெருக்கமான அனுபவமாக மாறிப்போனது.

பாவாணரின் தனித்தமிழில் எழுதப்பட்ட அந்த நூல் எழுப்பும் கேள்விகளை போகிற போக்கில் யாராலும் கடந்து விட முடியாது. ஒரு நூற்றாண்டு காலமாக சிம்மாசனமிட்டு, தனக்கு இணையாக தோன்றிய எல்லா சிந்தனை போக்குகளையும் தின்று, செரித்து, அரசியல் ஆட்சி அதிகாரம் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, செழித்து இருக்கிற திராவிடத்தின் உச்சிக்குடுமியை பிடித்து கேள்வி கேட்ட முதல் நூல் அறிஞர் குணா எழுதிய “திராவிடத்தால் வீழ்ந்தோம்.”

1994 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூல் பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. 1994 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அமைப்பு நடத்த இருந்த ஒரு கருத்தரங்கிற்காக அறிஞர் குணா அவர்களால் தயாரிக்கப்பட்டு பின்பு விரிவாக்கப்பட்ட உரையின் எழுத்து வடிவம் தான் “திராவிடத்தால் வீழ்ந்தோம்”.

அந்த நூல் இப்படி தொடங்குகிறது..

“காலம் தாழ்த்தி நாம் கண்விழிக்கின்றோம். மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த தமிழ் மக்கள் விழியிழந்து வழி இழந்து நாடோடி இனமாக கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம். பெயருக்கு ஒரு தமிழ்நாடு. ஆனால் அங்கு தமிழரிடம் ஆட்சியும், அரசும், கொற்றமும் கொடியும், நிலமும் கடலும் வானும் இல்லை. தமிழனின் மானத்தை மறைக்க உதவிய நான்கு முழத்துண்டும், பறி போனக் கதையாய் தாய்த் தமிழகமே இன்று வேலியில்லாத நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.”

நூலின் முதல் பாராவிலேயே ‘இத்தனை ஆண்டு காலம் உறக்கத்திலே கிடந்த நம் செவுளில் ஓங்கி யாரோ அறைந்தது போல’ ஓர் உணர்வு. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்தடுத்த பாராக்களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் இந்த நூல் தமிழ் /தமிழர் என்று பேசினால் இனவெறி என பேசுகின்ற கூட்டத்தினரை காறி உமிழ்கிறது. ஆரியக் கொள்கையும் அதற்கு எதிராக தோன்றியதாக காட்டிக் கொள்கிற திராவிடக் கொள்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று சொல்லுவதோடு மட்டுமில்லாமல் இவைதான் இனவெறிக் கொள்கைகள் என கூறி அதிர வைக்கிறது.

ஆரியப் படையெடுப்பு தமிழர் மேல் நிகழ்ந்ததில்லை எனக் கூறும் இந்த நூல், அதைத் தாண்டிலும் பக்கத்தில் இருக்கின்ற கன்னடர்கள் தெலுங்கர்கள் மராத்தியர்கள் போன்ற பிற மொழியாளர்கள் தமிழர் நிலத்தில் நிகழ்த்திய படையெடுப்புகள், அதிகம் என்கிறது. ஆரியப் பூச்சாண்டியை காட்டியே தன்னை தமிழர் மண்ணில் கன்னடர்களும், தெலுங்கர்களும் வலுப்படுத்திக் கொண்டார்கள் என்பதற்கான பல்வேறு வரலாற்றியல் சான்றுகளையும் முன்வைக்கிறது.

தமிழ்நாட்டில் அதிகரித்த மார்வாடி- பனியாக்களின் வருகைக்கும் திராவிடத் தத்துவத்தின் மேலெழுச்சிக்கும் உள்ள உறவினை, 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பெரியார் நடத்திய வடவர் கடை முன் நடத்திய போராட்டத்தினை முன்வைத்து ஆய்வு செய்கிறது. ஐயா பெரியார், அண்ணா போன்றவர்களது தத்துவ தடுமாற்றங்களையும், சிந்தனைத் தெளிவின்மை குறித்தும் உரத்து பேசுகின்ற இந்த நூல், பெரியாருக்கு பொருளியல் பார்வை இல்லை என கூறுகிறது. 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக முதல் முதலாக வென்று 15 சட்டமன்ற உறுப்பினர்களை வென்ற பிறகு ஏற்பட்ட தத்துவ சறுக்கல்களை, கொள்கை முரண்களை , அரசியல் சமரசங்களை விவரிக்கும் அறிஞர் குணா அவர்கள், 1948 ஆம் ஆண்டு பெரியார் தமிழர்- திராவிடர் என்ற சொற்களுக்கான வரையறையை கீழ்கண்ட வாறு வகுத்ததாக கூறுகிறார்.

“தமிழ் என்பது மொழிபெயர். திராவிடர் என்பது இனப்பெயர். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழர் என்ற தலைப்பில் கூறி விட முடியும். ஆனால் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் திராவிடராக ஆகிவிட முடியாது”

இதன்படி திராவிடத்தை தனித்த மெய் இனமாக(Race) பெரியார் வரையறுத்ததின் போதாமையை,

போலிமையை தீர்க்கமாக விமர்சிக்கும் ஆசிரியர் குணா இன வரையறைக்கான உலகளாவிய அளவு கோல்களையும் ஒன்றாக ஆய்வு செய்து “திராவிடம் என்பது ஒரு இனம் அல்ல” என்று நிறுவுகிறார்.

குறிப்பாக பெரியாரின் மொழிக் கொள்கை பற்றி தீவிரமாக ஆய்வு செய்து, அவருக்கு இருந்த தமிழ் மொழி வெறுப்பு பற்றி இதுவரை வேறு எந்த நூலும் பேசாத பரப்பில் இந்த நூல் ஆய்வு செய்கிறது. “நமது மொழி தமிழ் . எனது மொழி கன்னடம்” என்று சொன்ன பெரியார் மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது கொண்டிருந்த தடுமாற்ற கொள்கைகளால் தமிழ்நாடு அடைந்த இழப்புகளை நூலாசிரியர் குணா பக்கத்திற்கு பக்கம் உரத்தக் குரலில் எடுத்துரைக்கிறார்.

பெரியார் மீது குணா வைக்கின்ற விமர்சனங்கள் அனைத்தும் போகிற போக்கில் காற்றில் மிதக்கின்ற சொற்களை ஒன்றாக கோர்த்து பொத்தாம் பொதுவில் வைக்கப்படும் கருத்துக்கள் அல்ல. மாறாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் பெரியாரின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களில் இருந்து தனக்கான தர்க்கத்தை எடுத்தாண்டு ஒரு தேர்ந்த வழக்கறிஞர் போல தன் வாதத்தை முன்வைக்கின்ற நூலாசிரியர் குணா, வரலாற்று ரீதியாக தமிழர் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் சுரண்டல்களையும், பிழைகளையும் சுட்டிக் காட்டுகிறார். இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழர் நிலத்தில் தமிழர் அல்லாதவர் மட்டுமே சலுகை பெறுகிறார்கள் என்பதை சட்டநாதன் குழு சுட்டிக்காட்டிய பிறகும் கூட அதன் பரிந்துரைகளை தொடர்ச்சியாக ஆண்டு கொண்டிருக்கின்ற திராவிட அரசுகள் உள்நோக்கத்தோடு நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் தமிழர்கள் இழுந்திருக்கின்ற பொருளாதார இழப்புகளை சுட்டிக்காட்டும் அறிஞர் குணா தமிழ் தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் எல்லா சுரண்டலுக்கும் திராவிடத்தின் பிழைப்பு வாதம் தான் மிக முக்கியமான காரணம் என நிறுவுகிறார். தமிழக கனிம வளங்கள் மட்டுமல்ல தமிழக நிலங்கள் எப்படி தமிழரிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக களவாடப்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தும் இந்த நூல், மண்ணின் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் தாய் தமிழகத்தில் தங்கள் சொந்த நிலத்திலேயே எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதற்கான அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி அடர்த்தி மிக்கதாக இருக்கிறது. எழுதப்பட்ட ஒவ்வொரு சொல்லையும் வாசிப்பவர் சிந்தித்து தன் பட்டறிவோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற அனுபவத்தை இந்த நூல் ஏற்படுத்துகிறது.

கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்ற திராவிட கட்சிகளின் தலைவர்கள் தமிழர் நிலத்தை ஆண்டதால் தமிழுக்கும், தமிழர் வாழ்விற்கும் ஏற்பட்டுள்ள கேடுகளை ‘நெற்றி பொட்டில் அடித்தாற் போல’ சொல்வதோடு மட்டுமில்லாமல் தொடக்க காலத்தில் திராவிடம்/ திராவிட நாடு/ திராவிடர் என்றெல்லாம் பாடிய பாவேந்தர் பாரதிதாசன் பாவாணரின் முதன் மொழிக் கொள்கைக்கு தந்த ஒப்புமையை சுட்டிக்காட்டி பாவேந்தர் கவிதைகள் மூலமாகவே தமிழ்த்தேசிய தத்துவத்தின் உறுதியை குணா கட்டமைக்கிறார்.

அறிஞர் குணா ஆயிரக்கணக்கான பக்கங்களில் தமிழரின் வரலாறு, மெய்யியல், அரசியல், அறிவியல், தேசிய இனச் சிக்கல், போன்ற பல தலைப்புகள் சார்ந்து பல நூல்களை எழுதி இருக்கிறார். அவரது வள்ளுவத்தின் வீழ்ச்சி தமிழில் எழுதப்பட்ட மகத்தான படைப்புகளில் ஒன்று. வள்ளுவப் பார்ப்பாரியம், தமிழின மீட்சி, தமிழரின் தொன்மை, மண்ணுரிமை, தமிழியத்தால் எழுவோம், முன் தோன்றிய மூத்த குடி, ஒரே நேரத்தில் இந்தியத் தேசியத்தையும் திராவிடத் தேசியத்தையும் முற்றும் முதலுமாக மறுக்கின்ற அவரது “இந்தியத் தேசியமும்,திராவிடத் தேசியமும்” போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது அனைத்து நூல்கள் அனைத்தும் படித்து தமிழர் உணர்ந்து தெளிய வேண்டிய முக்கியமான ஆக்கங்கள்.

தமிழரின் ஓர்மையை தடுக்கின்ற, தமிழகத்தில் நிலவுகின்ற கொடுமையான சாதிய உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்ற வகையில் சாதிகள் குறித்தான அவரது பார்வை, சாதிகளை முன்வைத்து இனத்தை வரையறை செய்கின்ற அவரது முடிவு போன்ற கருத்துக்களில் நமக்கு அழுத்தமான மறுப்பு இருக்கிறது என்றாலும் தமிழர் வரலாற்றுயியல் ஆய்வாளர்களில் அறிஞர் குணாவின் இடம் மிக மிக முக்கியமானது. அவர் எழுதிய இந்த சிறு நூலின் தர்க்கங்கள் தாங்க முடியாமல் திராவிட ஆதரவாளர்கள் பக்கம் பக்கமாய் இன்றைய தேதி வரை எழுதிக் குவித்துக் கொண்டிருப்பதே இந்த நூலுக்கான வெற்றியாக நாம் உணரலாம்.

கன்னடருக்கென்று ஒரு கன்னடநாடு இருப்பது போல, தெலுங்கர்களுக்கு ஒரு தெலுங்கர் நாடு இருப்பது போல, தமிழருக்கு ஏன் தமிழ்நாடு இல்லை என சிந்திக்கத் துண்டும் இந்த சிறு நூல் திராவிட மயக்கங்களில் இருந்து நாம் வெளிவருவதற்கு பயன்படுகின்ற பேராயுதம்.

திராவிடத்தால் வீழ்ந்தோம்- அறிஞர் குணா. முதல் பதிப்பு 1994 ‌.

வெளியீடு:தமிழக ஆய்வரண், பெங்களூர். விலை 42/-

புதுமைப்பித்தன் சிறுகதைகள் – தமிழ் சிறுகதைகளின் மகுடம்/ நூல் வீதி 4.

திருச்சியில் ஒரு முறை ஒரு கருத்தரங்குக்கு அழைப்பதற்காக எனது ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரை சந்திக்க சென்றிருந்தபோது கதவு லேசாக திறந்தும் திறவாதது போல இருந்தது. நானும், எனது நண்பனும் வாசலில் நின்று கொண்டு “சார்.. சார்” என அழைத்துப் பார்த்தோம். யாரும் வரவில்லை. பக்கத்து வீட்டில் மட்டும் ஒரு அம்மா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து நாங்களே தயங்கி அந்த கதவை சற்றே திறந்து பார்த்தபோது வீட்டின் நடு ஹாலில் ஒரு பெஞ்சில் ஒரு வயதான அம்மாவின் சடலம். பக்கத்திலேயே எங்களது பேராசிரியர் கண்கலங்கியவாறே உறைந்து அமர்ந்திருந்தார். அவர் கலங்கியவாறே எங்களை யாரோ என்பது போல அடையாளம் தெரியாமல் பார்க்க, நாங்கள் அவரது முன்னாள் மாணவர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டோம். “சொந்தக்காரங்க யாருமே இல்லையா சார்..?” என கேட்டதற்கு அவர் தலை குனிந்தவாறு ‘யாரும் இல்லை’ என்று சொன்னார். அவருக்கு பிள்ளைகளும் இல்லை என நாங்கள் வந்த பிறகு எதிர் வீட்டில் இருந்து வந்த ஒரு பெரியவர் எங்களிடம் சொன்னார்.

எனது நண்பன் எங்கோ சென்று ஒரு மாலை வாங்கி வர, எங்கள் மாலையை வாங்கி எங்களது ஆசிரியர் அவர் மனைவியின் சடலத்தை தூக்கி கழுத்தில் போட்ட போது குலுங்கி குலுங்கி அழுதார். பிறகு தெருவாசிகள் ஒவ்வொருவராக வர, அவர்களது துணையோடு அமரர் ஊர்தி ஒன்றை அழைத்து மாநகராட்சி மின் மயானத்திற்கு செல்வதற்காக அதில் அவரையும், அவரது மனைவியின் சடலத்தையும் அனுப்பி வைத்தோம். போகும்போது எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு “ரொம்ப நன்றிப்பா.. இரண்டு பிணமாக போறோம்.” சொல்லிவிட்டு தளர்ந்த நடையோடு அவர் வண்டியில் ஏறி போகும் அக் காட்சி, அக்கணத்தில் எனக்கு புதுமைப்பித்தன் எழுதிய “செல்லம்மாள்” என்கின்ற சிறுகதையை நினைவூட்டியது. அதுதான் காலத்தை தாண்டி நிலைத்து நின்று நம் நினைவில் உறைந்து நிற்கும் ஒரு படைப்பின் அதிசயம்.

கதைகள் போல நம் அகம் பார்க்கும் கண்ணாடி வேறு ஏதுமில்லை. நாம் வாசிக்கும் கதைகளில் எங்கோ ஓரத்தில் ஏதோ ஒரு புள்ளியில் அக்கதையின் ஒரு சம்பவமாக அல்லது ஒரு கதாபாத்திரமாக அல்லது ஒரு கதாபாத்திரத்தின் வசனமாக நாம் தென்படும் போது அந்த கதை நமக்கு பிடித்ததாகி விடுகிறது. மிகச் சிறந்த கதைகள் நம்மை சிந்திக்க தூண்டுகின்றன. நம்மை யார் என்று நமக்கே காட்டுகின்றன. உலகில் உள்ள மனிதர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது என்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.

கதைகளில் இரண்டு மகத்தான வடிவங்களாக சிறுகதைகளும், நாவல் வடிவமும் இருக்கின்றன. சுருங்க சொல்லி, சொல்ல வந்த கருத்தை அழுத்தமாக சொல்லி முடிப்பது சிறுகதை. இதுவே விரிவான வர்ணனைகளோடு பல பக்கங்களில் விரிவான பரப்பில் எழுதப்பட்டால் அது நாவல். சிறுகதை என்பது தென்னை மரம் போன்றது. நாவல் என்பது புளியமரம் போன்றது என எளிமையாக சொல்லி இருப்பார் மூதறிஞர் ராஜாஜி.

வாய் சொல் மரபு முடிந்து எழுத்து மரபு தொடங்கிய பிறகு 19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகை நிகழ்ந்தது. தமிழில் முதன் முதலாக அச்சிடப்பட்டது வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதை, ஈசாப் நீதிக் கதைகள், பெரிய எழுத்து கதைகள், அரிச்சந்திரன் கதை, நல்லதங்காள் தெனாலிராமன் கதை போன்றவை. அரை மணி நேரத்தில் ஓரிரு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு சில சம்பவங்களை விவரிக்கும் கதையாடல் சிறுகதை என அழைக்கப்படுகிறது என்கிறார் அமெரிக்காவின் புகழ் பெற்ற சிறுகதை ஆசிரியர் எட்கர் ஆலன்போ. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட சிறுகதை வ.வே.சு எழுதிய “குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை” இந்தக் கதை இடம்பெற்ற தொகுப்பு விவேக போதனி என்ற நூல். ரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மகாகவி பாரதி மொழிபெயர்த்து வெளியிட்டது தமிழ் சிறுகதைகளுக்கு வளம் சேர்த்தது.

இதன் பிறகு சொ.விருத்தாச்சலம் என்கின்ற புதுமைப்பித்தன் தான் தமிழ் சிறுகதைப் பரப்பில் புதிய போக்கினை உருவாக்கினார்.1906-ல் ஏப்ரல் 25ஆம் தேதி கடலூரில் பிறந்த புதுமைப்பித்தன் தன் வாழ்நாளில் 108 சிறுகதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார். அதில் 48 மட்டுமே அவர் உயிரோடு இருக்கும் காலத்தில் வெளியாகி இருக்கின்றன. 42 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்த புதுமைப்பித்தன் தமிழ் நவீன இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த மணிக்கொடி இதழில் தொடர்ச்சியாக எழுதி வந்தார். 50க்கும் மேற்பட்ட பிற நாட்டுப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து சோசலிசம் சார்ந்த சில அரசியல் நூல்களையும் எழுதி இருக்கிறார். திரைப்பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து கடும் நஷ்டம் அடைந்த புதுமைப் பித்தன் தனது 42 ஆம் வயதில் காச நோயால் காலமானார். அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு “கண்மணி கமலாவிற்கு” வாழ்வின் சகல விதமான துயரத்தையும் விவரிக்கும் அதே சமயத்தில் நேசத்தின் கனத்த சாறு நிரம்பியவை. இவரின் வாழ்க்கை வரலாற்று நூலை தொ மு சி ரகுநாதன் புதுமைப்பித்தன் வரலாறு என்ற பெயரில் நூலாக எழுதி உள்ளார்.

இலக்கியம் என்றால் இதைப் பற்றி தான் எழுத வேண்டும் பேச வேண்டும் என்கிற வரையறைகளை அடித்து உடைத்தவர் புதுமைப்பித்தன்.

வாழ்வின் சில விஷயங்களை நேராக பார்க்க கூசிவிட்டு சுற்றி வளைத்து சப்பைக்கட்டு கட்டுவதை

எப்படி இலக்கியம் என கருத முடியும் எனக்கேட்ட புதுமைப்பித்தன் இலக்கியத்தை மனத்துயரத்தின் எழுச்சியாக கண்டார்.

அவரது புகழ்பெற்ற கதையான பொன்னகரம். அதில் ஒரு காட்சி.

“இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!”

அவரது கதைகளில் அதுவரை இலக்கியங்களில் தீண்டத்தகாதது என ஒதுக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், எளிய மனிதர்கள், வறுமையில் வீழ்ந்தவர்கள் என பலரும் கதாபாத்திரங்களாக உலா வந்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்த அவரது புகழ்பெற்ற கதை “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்”

சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருக்கும் கந்தசாமி பிள்ளை என்பவர் சென்னை பிராட்வேயில் உள்ள ஒரு சந்தின் ஓரம் நின்று கொண்டு காபி சாப்பிடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் கடவுள் முன் தோன்றி திருவல்லிக்கேணிக்கு எப்படி போவது என முகவரி கேட்டதிலிருந்து இந்த கதை தொடங்குகிறது.

முகவரி கேட்ட கடவுளை புதுமைப்பித்தன் வர்ணித்து இருக்கிற முறை அபாரமானது.

” வழி கேட்டவரை கந்தசாமி பிள்ளை கூர்ந்து பார்த்தார். வயசை நிர்ணயமாக சொல்ல முடியவில்லை. 60 இருக்கலாம் அறுபதாயிரமும் இருக்கலாம். ஆனால் அத்தனை வருஷமும் சாப்பாட்டுக் கவலையே இல்லாமல் ‘கொழு கொழு’ என்று வளர்ந்த மேனி. வளப்பம்.”

கேலியும் நையாண்டியும் நிரம்பித் ததும்பும் இக்கதை தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு மணிமகுடம். எதையும் வேடிக்கையாக சொல்லும் பகடி மொழி என்ற ஒரு புதிய வகைமையை இக்கதை மூலமாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் புதுமைப்பித்தன்.

இறுதியில் கடவுள் இந்த பூலோக வாழ்க்கையை வெறுத்து மனிதர்களாகிய உங்களுக்கு வரம் தரலாம் ஆனால் உங்களுடன் வாழ முடியாது என பேசிவிட்டு போவது தான் இக்கதையின் முடிவு.அவரது இன்னொரு சிறு கதையான “காஞ்சனை” திகில் உணர்வை ஏற்படுத்தக் கூடியது.

வாழ்வின் கொடும் துயரிலும் விதி சமைத்த அவஸ்தைகளிலும் சிக்கிக் கொண்டு தான் பட்ட பாடுகள் அனைத்தையும் தன் எழுத்தின் மூலமாக கொண்டு தன் வாழ்க்கையையே தன் எழுத்தின் மூலமாக பகடை செய்து நவீன தமிழ் இலக்கியத்தின் மூதாதையாக மாறிய மாபெரும் மேதை புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற பெயரில் நிறைய பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன. பெரும்பாலும் எல்லா புகழ்பெற்ற பதிப்பகங்களும் புதுமைப்பித்தன் சிறுகதைகளை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழ் சிறுகதைகளை தொகுத்த பேராசிரியர் அரசு மற்றும் திரு எஸ் ராமகிருஷ்ணன் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் புதுமைப்பித்தன் சிறுகதைகளை தங்கள் தொகுப்பில் முதன்மையானதாக இணைத்திருக்கிறார்கள். 2002ல் இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு சீர் வாசகர் வட்டம் சென்ற வருடம் புதுமைப்பித்தன் சிறுகதைகளை தொகுத்து ரூ 200/- மக்கள் பதிப்பாக கொண்டு வந்தார்கள். அவரது எழுத்துக்களின் முழு தொகுப்பை ஆ.ரா.வேங்கடாசலபதி தொகுப்பில் காலச்சுவடு பதிப்பகம் மிகத் தரமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

மனித வாழ்க்கை அவ்வளவு புனிதகரமானதோ, மகிழ்ச்சிகரமானதோ இல்லை. எல்லா அவலங்களும் கீழமைகளும் நிரம்பித்ததும்பும் வாழ்க்கையை தன் தனித்துவ மொழியால் இலக்கிய பிரதியாக மாற்றிய புதுமைப்பித்தன் எழுத்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய படைப்புகள்.

புதுமைப்பித்தன் கதைகள்- புதுமைப்பித்தன் / சீர் , என்சிபிஎச் , சாகித்ய அகாதெமி,

காலச்சுவடு மற்றும் பல பதிப்பகங்கள்.

கண்மணி கமலாவிற்கு- புதுமைப்பித்தன்/ தொகுப்பு இளைய பாரதி. டிஸ்கவரி புக் பேலஸ் விலை 200.

புதுமைப்பித்தன் வரலாறு- தொ.மு.சி.ரகுநாதன் – காலச்சுவடு வெளியீடு.

ஆசான் ம.செந்தமிழன் நூல்களை ஏன் படிக்க வேண்டும்..??நூல் வீதி -3

நெருக்கடிகளால் நிறைந்தது மானுட வாழ்வு. பல்வேறு குழப்பங்கள், தடுமாற்றங்கள், தவறுகள் போன்ற பல தடைகள் மனித வாழ்க்கை முழுவதும் ததும்பிக் கொண்டே இருக்கின்றன. எல்லோருக்கும் நிம்மதியாக மகிழ்வாக வாழ வேண்டுமென எண்ணம் இருக்கிறது. ஆனால் வெறிக் கொண்ட மிருகம் போல நாம் ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டம், மனித உணர்வுகள் இயல்பாக அடைய வேண்டிய எல்லா இன்ப உணர்ச்சிகளையும் தடுத்து மனித வாழ்க்கையை நரகப் பள்ளத்தாக்கில் தள்ளி விடுகின்றன. பொருளாதாரத்திலும், அதிகாரத்திலும் வலிமையானவர்கள் கூட தங்கள் வாழ்க்கை ஏன் நிறைவில்லாமல் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையை அவரவர் கொண்டிருக்கின்ற அனுபவங்கள் வாயிலாக, அல்லது பிறர் மூலம் அடைகிற கற்பிதங்கள் வாயிலாக அணுக முயன்று ஏதோ ஒன்று குறைகிறதே என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.

வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகும் போதெல்லாம் நாம் பற்றிக்கொள்ள நம்பிக்கை மிகுந்த ஒரு கரம் நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என ஒவ்வொரு மனித மனமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி ஒரு காலத்தில் தான் நான் ஆசானை சந்தித்தேன்.

முதலில் அவர் துறவி அல்ல. காவி கட்டிக்கொண்டு கழுத்து நிறைய மாலை மணிகள் அணிந்து கொண்டு கண்மூடி தியான நிலையில் இருக்கும் ஒரு குருவை நீங்கள் தேடி சென்றீர்களானால் கண்டிப்பாக ஏமாற்றம் அடைவீர்கள்.

அவர் ஒரு இயல்பான மனிதர். குடும்பத்தோடு திருச்சி தஞ்சை சாலையில் அமைந்துள்ள செங்கிப்பட்டி அருகே உள்ள மிகச் சிறிய சிற்றூரில் வாழ்ந்து வருபவர். மனித வாழ்வின் எல்லா பாடுகளையும் நம்மோடு சேர்ந்து அவரும் அனுபவிப்பவர். எல்லாவித சுய துக்கங்களில் இருந்தும், மனித வலிகளில் இருந்தும் நம்மையெல்லாம் காப்பாற்ற வந்த மீட்பராக அவர் தன்னை முன்னிறுத்துவதில்லை.

அவர் இயல்பில் அவர் இருப்பார். நாம் நம்முடைய அனைத்து உணர்ச்சிகளையும் கொட்டிக் கொண்டிருக்கின்ற அந்த நொடிகளில் பதறாமல் அமைதியாக நம்மை கவனிப்பார். சில செய்திகளை நம்மோடு ஒரு சிறிய உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்வார். அந்த செய்திகள் கூட அறிவுரைகள் போல போதனைகள் போல இல்லாமல் சக மனிதனின் எளிமையான கருத்து போல நம் ஆன்மாவை ஊடுருவதை நாம் உணரும் அந்த அதிசய கணத்தில் தான் அவர் நமக்கு ஆசானாக மாறிப் போவார்.

ஆசான் செந்தமிழன்- சமகாலத்தில் இது பெயர் மட்டுமல்ல. எண்ணற்ற பலருக்கும் ஒரு பாதையாக அவர் மாறி இருக்கிறார். மனித அறிவு முழுக்க மண்டி கிடைக்கின்ற தகவல் குப்பைகளால் மானுட வாழ்வு நாசமாகி போன பின்பு மீள் எடுப்பதற்கு இவர்கள் வைத்திருக்கும் பகுத்தறிவு பலனளிக்காது என்று மென்மையான குரலில் சொல்லும் ஆசானை உண்மையில் உணர்வுபவர்கள் யாரும் நேசிக்காமல் இருக்க முடியாது. தொடர்ச்சியாக ஆசானின் படைப்புகள் செம்மை வெளியீட்டகம் சார்பில் இருபதுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் வெளியாகி இருக்கின்றன. இயற்கையை, இயல்பை நோக்கி மீண்டும் மனிதன் தன்முகமாக உள் திரும்புதலை “ஊர் திரும்புதல்” என அழைக்கும் ஆசான் செந்தமிழன் எழுதிய மிக முக்கியமான படைப்பு “வேட்டல்”. அதாவது விருப்பத்தில் நிலை பெறுதல்.

“தேடுதல் என்பது எதையோ தொலைக்கும் முயற்சிதான் ..” என மூன்றாம் பக்கத்திலேயே மிரட்டும் அந்த நூல் இதுவரை வெளிவந்திருக்கிற மெய்யியல்/ சுய முன்னேற்ற நூல்களில் தனித்துவமானது மட்டுமல்ல தலையானது.

வேட்டல் என்றால் வேண்டுதல் என்று பொருள். வேண்டுதல் என்பது விரும்புதல் என்பதன் வேறு சொல். என இந்த நூலின் மூலமாக நம் செவிக்கருகே வந்து தோழமை மிகுந்த குரலில் பேசத் தொடங்கும் ஆசான், “எது வேண்டாம் என்பதை சிந்திக்காதீர்கள் அந்த சிந்தனை உங்களை சிதைக்கும். இதுதான் படைப்பின் மறைபொருள்.”

என்கிறார்.

இதுவரை நம் வாழ்வில் கட்டி அமைக்கப்பட்ட எல்லா கருத்துக்கோட்டைகளையும் தன் உண்மையின் அறம் கொண்டு உடைத்தெரிகிறார். அவரது எழுத்துக்களை படிக்கும் போது உள்ளுக்குள் நம்மை இறுக்கி வைத்திருக்கின்ற ஒவ்வொரு கயிராய் அவிழ்ந்து நீண்ட நாட்களாக சுமக்கும் பாரம் நீங்கி மிதக்கும் உணர்வு கொண்ட மனிதர்களாக, சுமையற்றவர்களாக

நாம் மாறுவதை உணர்வது தான் இந்த நூல் விளைவிக்கும் அதிசயம்.

காட்சிக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாட்டை பற்றி விவரிக்க தொடங்கி, விருப்பத்திற்கும், ஆசைக்குமான வேறுபாட்டை ஆசான் விளக்கும்போது நாம் வியக்காமல் இருக்க முடியாது.

“விருப்பம் என்பது உணர்வு. ஆசை என்பது உணர்ச்சி. உணர்வுக்கும், உணர்ச்சிக்குமான வேறுபாட்டை அறிந்து கொண்டால் மாயையை கடப்பது எளிதாகிவிடும். உணர்வு முழுமையாக அக வயப்பட்டது, உணர்ச்சி என்பது புறவயப்பட்டது.” என விவரிக்கும் ஆசான்,” உணர்வு வலியுறுத்தும் தேவைகள் அனைத்தும் விருப்பங்கள். உணர்ச்சி தூண்டும் தேவைகள் அனைத்தும் ஆசைகள்.” என நிறுவும் போது படிப்பவர் ஒவ்வொருவரும் தனக்குள் தானே பயணித்துக் கொண்டிருப்பதை உணரும் அத் தருணம் வேறு எந்த புத்தகம் படிக்கும் போதும் கிடைக்காதது.

அவரது மற்றொரு நூலான இயற்கையியல் கட்டுரைகள் அடங்கிய சிறு நூல் “முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை” . அந்த நூலின் முதல் கட்டுரையான “நீங்கள் பார்க்காததும் இங்கு தான் இருக்கிறது” என்பதன் முதல்வரி யான ” நியூட்டன் பார்ப்பதற்கு முன்பும் ஆப்பிள்கள் தரையில் விழுந்து கொண்டு தான் இருந்தன” என்ற சிந்தனையிலேயே ஆசான் தான் யார் என்று காட்டி விடுவார். அதிலும் அறிவிற்கும் அதாவது பகுத்தறிவுக்கும், மெய்யறிவுக்கும் உள்ள வேறுபாட்டை பற்றி அவர் விளக்குகின்ற பக்கங்கள் தங்கச் சொற்களால் நிரம்பியவை. ஒவ்வொரு மனிதனும் மனனம் செய்து கொள்ள வேண்டியவை. அந்தத் தொகுப்பில் என்னை கவர்ந்த மிக முக்கியமான கட்டுரை “அவ்வப்போது மரமாக மாற கற்றுக் கொள்ளுங்கள்” என்பதுதான். இயற்கையின் பேராற்றலின் வெளிப்பாடாக மனிதன் திகழ வேண்டும் என்பதற்கு மரத்தை உருவகப்படுத்தி வெவ்வேறு செய்திகளை , நமக்கு உணர்த்தி நாம் யார் என்று அந்த புத்தகத்தை முடிக்கும் போது உணர வைப்பதில் ஆசான் மகத்துவம் நிரம்பியவர்.

இன்றும் செங்கிப்பட்டிக்கு அருகே இருக்கின்ற செம்மை வனத்திற்கு நீங்கள் உங்களது வழிபாட்டிற்குரிய, போதனை பொழியும் ஒரு தாடி வைத்த ஒரு குருவை தேடி செல்லும் போது அவர் அங்கே கிடைக்க மாட்டார். ஆனால்,அங்கே ஒரு பழுப்பேறிய பேண்ட் அணிந்து இயற்கை விவசாயம் செய்து கொண்டிருக்கின்ற ஒரு நடுத்தர நபரை சந்திப்பீர்கள். அவரது மகிழ்ச்சி நிறைந்த கண்களை உற்று நோக்குங்கள். பிறகு நீங்களே பேசி விடுவீர்கள். அவர்தான் ஆசான் ம.செந்தமிழன்.

அவரது மெய்யறிவு குறித்த சிந்தனைகள் அனைத்துமே ஆவணப்படுத்தப்பட்டு செம்மை வெளியிட்டகத்தால் புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மானிட வாழ்விற்கான அற்புதங்களின் திறவுகோல்கள்.

அவரிடம் இதைக் குறித்தெல்லாம் பேசினால் எல்லாம் “அம்மையப்பர்” அருளியவை என மெல்லிய சிரிப்போடு சொல்லிவிட்டு கடந்து விடுவார். அவர் அப்படி சொன்ன கணத்தில் அவர் சொன்ன “அம்மையப்பர்” அவரில் நாம் காணத் தொடங்குவோம்.

வேட்டல்- ஆசான் ம. செந்தமிழன்.

பக்கங்கள் 96 விலை 90

முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை – ஆசான்

ம. செந்தமிழன் பக்கங்கள் 88 விலை 80

ஆசான் செந்தமிழன் அவர்களது நூல்கள் அனைத்தையும் வெளியிடுவது- செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர்.

9791490365.

இளம் தமிழ்த் தேசியர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.நூல் வீதி 2

கடந்த 2009 மே மாதத்தில் தமிழ் ஈழத்தில் நிகழ்ந்த தமிழின படுகொலை தாயக தமிழகத்தில் அரசியல் சிந்தனைப் போக்குகளின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை திராவிடம், இந்திய தேசியம், சாதி மத பற்று போன்ற பல்வேறு மயக்கங்களில் சிக்குண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாயக தமிழர்கள் தங்கள் முகத்தில் மீது பட்டுத் தெரித்த தங்கள் தொப்புள் கொடி உறவுகளின் உதிரத் துளிகளால் விழிப்புற்றனர்.

அதுவரை தமிழக அரசியல் பரப்பில் அதிகம் பேசப்படாத,அரங்குகளில் மட்டுமே பேசப்பட்டு வந்த தேசியம்/தேசிய இனம் போன்ற அரசியல் சொல்லாடல்கள் வெகுஜன பரப்பில் விவாதமாகி எழுந்தன. தமிழர் என்ற இனம் தோன்றி பன்னெடுங்காலமாக ஆகிவிட்ட கூட இது ஒரு தேசிய இனம் என்கின்ற அடிப்படை சிந்தனை தாயக தமிழ் மண்ணில் எழுவதற்கு ஒரு இனப்படுகொலை நிகழ்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிரை இழந்து காரணமாகி இருக்கிறார்கள். பொதுப் புத்தியில் நாமெல்லாம் இந்தியர்கள்/ நாமெல்லாம் திராவிடர்கள்/ நாமெல்லாம் இந்த மதத்தினர்/ நாமெல்லாம் இந்த சாதியினர் என்று பல்வேறு காரணிகள் அவரவர் அறிவுக்கு ஏற்றது போல உறைந்து கிடக்கின்றன. இதிலிருந்து தெளிவு பெறுவதற்கு, ஒரு இனப்படுகொலை நிகழ்ந்த பிறகும் கூட பல்வேறு மயக்கங்களில் இருந்து ஒரு இனம் மீண்டு வருவதற்கு அரசியல் விடுதலை என்பது மிக மிக முக்கியமானது. குறிப்பாக இன விடுதலை அரசியல் என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் உச்சபட்ச லட்சியமாக இருக்கிறது.

எனவே ஒரு இனம் தன்னை தகமைத்துக்கொள்ள சமூக அரசியல் சிந்தனைகள் காரணமாக அமைகின்றன. ஏன் எந்த திராவிட கட்சியும், எந்த தேசிய கட்சியும் தமிழர் என்கின்ற இனம் ஒரு தேசியம் அல்லது ஒரு தேசிய இனம் என வெளிப்படுத்த தயங்குகின்றன என்பதை குறித்து தன் கண் முன்னால் நிகழ்ந்துவிட்ட இனப்படுகொலைக்கு பிறகாவது சிந்திக்க வேண்டிய நெருக்கடியில் தமிழர் என்கின்ற தேசிய இனம் இருக்கிறது.

முதலில் தேசிய இனம் என்றால் என்ன, தேசியம் என்றால் என்ன போன்ற அடிப்படைகளை புரிந்து கொண்டால் தான் கடந்த 2009க்கு பிறகு வெகுஜன அரசியலாக மாறி வருகிற ” தமிழ்த்தேசியம்” என்கிற மண்ணின் பூர்வ குடி மக்களுக்கான உரிமை அரசியல் இன்னும் கூர்மை பெறும். உலகத்தில் விடுதலை அடைந்த எத்தனையோ தேசிய இனங்களை உற்றுப் பார்க்கும்போது அவற்றின் மீள் எழுச்சியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான பாடங்கள் இருக்கின்றன. தன்னை ஒரு தேசிய இனமாக கூட உணராத அல்லது அறியாத ஒரு இனம் எப்படி விடுதலை பெறும் என்கிற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்ற காலகட்டம் இது.

குறிப்பாக தமிழ்த் தேசிய சிந்தனைகள் கூர்மை அடைந்து வருகிற சமகாலத்தில் அரசியல் பண்பாட்டு சூழலியல் புள்ளிகளில் நின்று மண்ணின் பூர்வ குடி மக்களுக்கான அரசியலை பேசும் இளம் தமிழ்த்தேசியர்கள் மிகச் சிறந்த அறிவுத்தெளிவோடு அரசியல் களத்தில் நிற்பதற்கான தகுதியை உருவாக்குகின்ற ஒரு மிகச்சிறந்த நூல்தான் “இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்” .

இந்த நூலை எழுதியவர் சிந்தனை செம்மல் வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் அவர்கள். 1997 ஆம் ஆண்டுக்குரிய சிறந்த நூல்களுக்கான முதல் பரிசை இந்த நூல் வென்று உள்ளது. மறைந்த வழக்கறிஞர் கு.ச.ஆனந்தன் எழுதிய “மலர்க மாநில சுயாட்சி” என்கின்ற நூலும் புகழ்பெற்றது.

இந்த நூல் இந்தியாவில் தேசிய இனங்கள், தமிழ்த் தேசியம் தீர்வுகள் என்கின்ற மூன்று பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

நூலின் தொடக்கத்தில் இந்தியாவில் தேசிய இனங்கள் என்ற பகுதியில் தேசியம் மற்றும் தேசிய இனம் என்றால் என்ன, இந்த சொற்களுக்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் எப்படிப்பட்டது என்கின்ற விரிவான ஆய்வை ஆனந்தன் முன் வைக்கிறார். குறிப்பாக மொழி வழி தேசியத்தின் எதிர் நிலைகளாக தோன்றியுள்ள மத வழி தேசியங்கள், சாதிய முரண்பாடுகள் குறித்தும் இந்த நூல் விரிவாக ஆய்வு செய்துள்ளது. தேசிய இனங்களின் உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்வாறு பறிக்கிறது என்பதை சட்ட பிரிவுகளின் வாயிலாக இந்த நூல் நிறுவியுள்ளது. இந்தியாவில் இருக்கின்ற பிற தேசிய இனங்களின் தேசிய இனச் சிக்கல்கள் குறித்தும் இந்த நூல் விரிவாக ஆய்வு செய்கிறது.

இரண்டாம் பகுதியான தமிழ்த் தேசியம் என்ற பகுதியில் தமிழர் வரலாற்றில் எழுந்த சாதி சமய பிளவுகள், தமிழ் இலக்கியத்தில் தமிழ் இசையில் தென்பட்ட தமிழ்த் தேசிய உணர்ச்சிகள், தமிழ் தேசியம் உருவாகாத வரலாற்றுப் பின்னணி போன்றவை விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய சிந்தனைக்கு காரணமாக அமைந்த பெருமக்களையும் இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதியான தீர்வுகள் பகுதியில் பெரியாரியமே உரிய தீர்வு என நூலாசிரியர் முன்வைப்பது நவீன தமிழ் தேசிய மறுமலர்ச்சி சிந்தனையில் முறியடிக்கப்பட்ட ஒன்று. ஏனெனில் தேசியம் தேசம் போன்ற சிந்தனைகளை அடிப்படையிலிருந்தே மறுத்தவர் பெரியார் என்பதனால் தமிழ்த் தேசிய இன விடுதலைக்கு பெரியார் சிந்தனைகள் ஒருபோதும் வழி வகுக்காது என்பதுதான் வரலாறு தந்த பாடத்திலும், பட்டறிவிலும், நாம் கண்டடைந்த தீர்வு.

தேசிய இனங்களின் உரிமையில் மார்க்சியம் கொண்டிருக்கின்ற முரண்பாடு குறித்து சில அடிப்படை செய்திகளை இந்த நூல் மூலம் நாம் அறியலாம். தேசிய இன உரிமைகளை அடைய தாயக தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு தேவை சுயநிர்ணய உரிமையா, முழு தன்னாட்சியா, தனி நாடா, என்பதற்கான பல விவாத பரப்புகளையும் இந்த நூல் உள்ளடக்கி தனது அடர்த்தியை பெருக்கியுள்ளது.

இந்த நூல் எழுதப்பட்ட சூழலில் நிலவிய மற்ற சிந்தனை போக்குகளை மறுதலித்த பெரியாரிய ஆதிக்கம், திராவிட கட்சிகளின் அதிகாரம் மற்றும் மக்களின் பொது மனநிலை சார்ந்து இந்த நூல் தயாரிக்கப்பட்டிருப்பது இந்த நூலில் காணப்படும் முரண்பாட்டு புள்ளிகள்.

அதையெல்லாம் தாண்டி இந்திய பெருநிலத்தில் ஒரு இனம் ஒரு தேசிய இனமாக மாறுவதற்கான அவசியத்தையும், அதற்கான சிந்தனைப் போக்கையும் இந்த நூல் தருகின்ற காரணத்தினால் அவசியம் இளம் தமிழ்த் தேசியர் கற்றுத் தேற வேண்டிய மிக முக்கியமான நூலாக இந்த நூல் அமைகிறது.

“இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்”

சிந்தனைச் செம்மல் கு.ச‌. ஆனந்தன்/600 பக்கங்கள்/ தங்கம் பதிப்பகம் ,கோயம்புத்தூர். அலைபேசி எண் 95 780 04698.

விலை ரூ. 650/-

நூல் வீதி 1

அன்பின் உறவுகளுக்கு வணக்கம்.

சென்னையில் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 3 முதல் தொடங்கி ஜனவரி 21 வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. நிறைய புத்தகங்கள் வருடா வருடம் வெளிவருகின்றன. ஒரு பெருங் கடலில் சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுப்பது போல, பல லட்சக்கணக்கான புத்தக அடுக்குகளுக்கு நடுவில் நமக்கான புத்தகம் ஒன்றினை நாம் எப்படி அமைவது என்கின்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு உங்களிடம் சொல்ல துடித்துக் கொண்டே இருக்கின்றது. புத்தக கண்காட்சி முழுக்க லட்சக்கணக்கான புத்தகங்களின் உணர்ச்சி அலைகள் ஓடி முடித்திருக்கும் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் பெருமூச்சு போல கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் நமக்கான ஒன்றின் அலைவரிசை உணர்ந்து தேடிக் கண்டடைவது என்பது ஒரு சாகசச் செயல்.

ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள். லட்சக்கணக்கான புத்தகங்கள். எண்ணற்ற எழுத்தாளர்கள்.இவற்றுக்கு நடுவில் ஒரு நல்ல புத்தகத்தை தேடி கண்டறிவது என்பது ஒரு பெரும் பாலைவனத்தில் புதையலை தேடி அலையும் தனிமனிதனை போன்றது.

கண்ணில் தெரியும் புத்தகங்களை எல்லாம் வாங்கி குவித்து விட முடியாது என்பதோடு மட்டுமல்லாமல் கூடாது என்பது மிக மிக முக்கியம்.ஓரு தேர்ந்த வாசகனுக்காக ஒரு சிறந்த புத்தகம் நிச்சயம் காத்திருக்கும். தேடி அடைவது தான் நமக்கு முன்னே இருக்கும் சவால்.

வரும் நாட்களில் நான் படித்து ஆழ்ந்த, சிலிர்த்த மிகச்சிறந்த சில புத்தகங்களை, அவை தந்த வாசிப்பு அனுபவங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு புத்தக கண்காட்சி நடக்கின்ற இந்த நாட்களில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

நான் பரிந்துரைக்கின்ற எல்லா புத்தகங்களையும் நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனதின் குரலோடு எனது பரிந்துரை ஓத்திசைவு கொள்ளுமானால் அப்போது நீங்கள் அந்த புத்தகத்தை வாங்கலாம்.

சமூக வலைதளங்களில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு பெரிய மதிப்பில்லை என்பார்கள். எழுத்துக்களின் மதிப்பு என்பது வாசகர்களின் விழிகளில் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் எது வெகு மக்களிடம் மிக எளிதாக சென்று சேர்கிறதோ அதை ஊடகமாக பயன்படுத்திக் கொள்வது தான் சரியான வழி. அதன் காரணமாகவே இங்கு நான் எழுதுகிறேன்.

பிறந்ததிலிருந்து எனக்கு வாசிப்பு ஆர்வத்தை வற்ற விடாமல் என்னுள் தூண்டிக் கொண்டே இருக்கும் எனது தந்தை முதுபெரும் தமிழறிஞர், பேராசிரியர் முனைவர்.ச.மணி அவர்களுக்கு எனது நன்றியும். வணக்கமும்.

❤️

….

அன்பின் உறவுகளுக்கு வணக்கம்.

சென்னையில் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 3 முதல் தொடங்கி ஜனவரி 21 வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. நிறைய புத்தகங்கள் வருடா வருடம் வெளிவருகின்றன. ஒரு பெருங் கடலில் சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுப்பது போல, பல லட்சக்கணக்கான புத்தக அடுக்குகளுக்கு நடுவில் நமக்கான புத்தகம் ஒன்றினை நாம் எப்படி அமைவது என்கின்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு உங்களிடம் சொல்ல துடித்துக் கொண்டே இருக்கின்றது. புத்தக கண்காட்சி முழுக்க லட்சக்கணக்கான புத்தகங்களின் உணர்ச்சி அலைகள் ஓடி முடித்திருக்கும் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் பெருமூச்சு போல கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் நமக்கான ஒன்றின் அலைவரிசை உணர்ந்து தேடிக் கண்டடைவது என்பது ஒரு சாகசச் செயல்.

ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள். லட்சக்கணக்கான புத்தகங்கள். எண்ணற்ற எழுத்தாளர்கள்.இவற்றுக்கு நடுவில் ஒரு நல்ல புத்தகத்தை தேடி கண்டறிவது என்பது ஒரு பெரும் பாலைவனத்தில் புதையலை தேடி அலையும் தனிமனிதனை போன்றது.

கண்ணில் தெரியும் புத்தகங்களை எல்லாம் வாங்கி குவித்து விட முடியாது என்பதோடு மட்டுமல்லாமல் கூடாது என்பது மிக மிக முக்கியம்.ஓரு தேர்ந்த வாசகனுக்காக ஒரு சிறந்த புத்தகம் நிச்சயம் காத்திருக்கும். தேடி அடைவது தான் நமக்கு முன்னே இருக்கும் சவால்.

வரும் நாட்களில் நான் படித்து ஆழ்ந்த, சிலிர்த்த மிகச்சிறந்த சில புத்தகங்களை, அவை தந்த வாசிப்பு அனுபவங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு புத்தக கண்காட்சி நடக்கின்ற இந்த நாட்களில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

நான் பரிந்துரைக்கின்ற எல்லா புத்தகங்களையும் நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனதின் குரலோடு எனது பரிந்துரை ஓத்திசைவு கொள்ளுமானால் அப்போது நீங்கள் அந்த புத்தகத்தை வாங்கலாம்.

சமூக வலைதளங்களில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு பெரிய மதிப்பில்லை என்பார்கள். எழுத்துக்களின் மதிப்பு என்பது வாசகர்களின் விழிகளில் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் எது வெகு மக்களிடம் மிக எளிதாக சென்று சேர்கிறதோ அதை ஊடகமாக பயன்படுத்திக் கொள்வது தான் சரியான வழி. அதன் காரணமாகவே இங்கு நான் எழுதுகிறேன்.

பிறந்ததிலிருந்து எனக்கு வாசிப்பு ஆர்வத்தை வற்ற விடாமல் என்னுள் தூண்டிக் கொண்டே இருக்கும் எனது தந்தை முதுபெரும் தமிழறிஞர், பேராசிரியர் முனைவர்.ச.மணி அவர்களுக்கு எனது நன்றியும். வணக்கமும்.

❤️

….

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறது வள்ளுவம். இந்த உலகத்தில் மறைந்த எத்தனையோ புகழ்பெற்ற ஆளுமைகளின் நினைவிடங்கள் இருக்கின்றன. மக்களின் மனதை வென்ற அவர்களை மக்கள் மறக்காமல் தேடிச்சென்று நன்றி கூர்ந்து வணங்கி வருகின்றனர். அப்படி உலக மக்கள் அதிகம் சென்று வணக்கம் செலுத்துகிற, காலங்கள் கடந்தாலும் மறவாமல் கண்ணீர் கசிந்து நன்றி கூறுகிற ஒரு புனித தலமாக இங்கிலாந்து தலைநகரமான லண்டன் மாநகரத்தில் வட திசையில் உள்ள உள்ள ஹைகேட் என்ற இடத்தில் கீழ் திசையில் உள்ள ஒரு கல்லறை விளங்குகிறது.

அந்தக் கல்லறையின் முகப்பில் “உலகத் தொழிலாளர்களே.. ஒன்று சேருங்கள்..” என்கிற புகழ்பெற்ற முழக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆம். அங்கு தான் எல்லா காலத்திலும் மனிதர்களுக்கு தேவைப்படுகின்ற மாமனிதர் காரல் மார்க்ஸ் நிறைவேறாத தன் கனவுகளோடு உறங்குகிறார். அதுதான் இன்றளவும் உலகம் முழுக்க இருக்கின்ற அறிஞர்கள் எழுத்தாளர்கள் மேதைகள் தலைவர்கள் என பலரும் சென்று வழிபடும் வழிபாட்டுத் தலமாக, பெருமைக்குரிய இடமாக மாறி இருக்கிறது.

ஆனால் வாழும் காலத்தில் காரல் மார்க்ஸ் என்ற தனி மனிதர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என ஆராயும் போது வலியும் துயரமுமே மிஞ்சுகிறது. ‘வலியோர் பிழைக்க.. எளியோர் உழைக்க..’ என்ற கொடும் விதியை மாற்றி எழுத மார்க்ஸ் தன் வாழ்க்கையையே நரக நெருப்பில் ஆழ்த்திக் கொண்டார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்கும் எவரும் கண்கலங்காமல் கடக்க முடியா பேருண்மை.

குறிப்பாக காரல் மார்க்ஸின் மனைவி ஜென்னி தன் வாழ்நாள் முழுக்க தன் கணவரின் கனவிற்காக பட்ட பாடுகள் வரலாற்றின் ஏடுகளில் உதிர எழுத்துக்களால் உறைந்து கிடக்கின்றன. நம் சமூகத்திலும் மகாகவி பாரதிக்கும், எழுத்தாளுமை புதுமைப்பித்தனுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருந்தாலும், ஜென்னி மார்க்ஸ் பட்ட பாடு படிக்கும் போதெல்லாம் விழிகளில் நீர் கசியாமல் இருக்க முடியாது.

” எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்திருக்கின்ற இந்த சிறு நூல் மார்க்ஸ் என்கின்ற மாபெரும் புரட்சியாளனின் வறுமையும் துயரமும் மிக்க இன்னொரு பக்கத்தை காட்டுகின்ற முக்கிய ஆவணம்.

1850 மே 20 ஆம் தேதி யோசிப் வெய்டமையர் என்பவருக்கு ஜென்னிமார்க்ஸ் எழுதிய எட்டுப்பக்க கடிதம் தான் “எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை”.

அத்தோடு தமிழறிஞர் சாமிநாத சர்மா காரல் மார்க்ஸ் பற்றி மனப்போராட்டம் என்கின்ற ஒரு பதிவு மற்றும் ஜென்னிமார்க்ஸ் எழுதிய வாழ்க்கை குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை பற்றிய நடைசித்திரம் என்ற கட்டுரையும் இணைக்கப்பட்ட இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நூல்.

ஜென்னி அந்த கடிதத்தில் தன் கணவரை பற்றி குறிப்பிடும் போது ” எங்கள் நிலை குறித்து பொதுமக்களுக்கு என்றுமே தகவல் கொடுக்கப்பட்டதில்லை. என் கணவர் இத்தகைய விஷயங்களில் மிகவும் மான உணர்ச்சி உள்ளவர். கடைசியாக ஏதேனும் இருந்தால் அதையும் தியாகம் செய்வாரே தவிர, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரிய மனிதர்களைப் போல ஜனநாயக பிச்சையில் இறங்க மாட்டார்.” என்கிறார்.

மேலும் அவர் அதே கடிதத்தில்

” இங்கு என் கணவர் வாழ்க்கையின் சில்லறை கவலைகள் மிக மிக மோசமான உருவில் வந்து முழ்கடிப்பதன் விளைவாக அதற்கு ஈடு கொடுத்து தினசரி மணிக்கு மணி போராட தமது சக்தி முழுவதையும், தமது அமைதியான தெளிவான நிச்சய கௌரவத்தையும் பயன்படுத்தி நிலை நிற்க வேண்டி இருக்கிறது” என்கிறார்.

‘என்றும் நினைவு கொள். மனிதன் என்பவன் பயனின்றி அழிந்து விடக் கூடாது.” என்கிறார் உலகத்திற்கு பொதுவுடமை தத்துவம் தந்த பேராசான் மார்க்ஸ்.

சகலவிதத்திலும் மற்ற அனைவருக்கும் பயன்படும் ஒரு மாமனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி துயர் மிக்கதாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ளவும் அதையும் மீறி அவர்கள் எப்படி லட்சியப் பற்றுறுதியில் உறுதியாக நின்றார்கள் என்பதை கற்றுக் கொள்ளவும் இந்த சிறு நூல் வழிவகுக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பாக எனது ஆசான் எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி ஒரு அற்புதமான உரை நிகழ்த்திருப்பார். அது இன்றும் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

( https://youtu.be/mhqRn7HKpZs?feature=shared )

அந்த உரையோடு, இந்த சிறு நூலை படிக்கும் போது நமது உள்ளம் நெகிழ்வடைந்து, மூடி கிடக்கும் நமது அகக்கதவுகள் திறக்கின்றன. அதுதானே ஒரு புத்தகத்தின் நோக்கம்..??

எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை- ஜென்னி மார்க்ஸ். விலை ரூ.60

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறது வள்ளுவம். இந்த உலகத்தில் மறைந்த எத்தனையோ புகழ்பெற்ற ஆளுமைகளின் நினைவிடங்கள் இருக்கின்றன. மக்களின் மனதை வென்ற அவர்களை மக்கள் மறக்காமல் தேடிச்சென்று நன்றி கூர்ந்து வணங்கி வருகின்றனர். அப்படி உலக மக்கள் அதிகம் சென்று வணக்கம் செலுத்துகிற, காலங்கள் கடந்தாலும் மறவாமல் கண்ணீர் கசிந்து நன்றி கூறுகிற ஒரு புனித தலமாக இங்கிலாந்து தலைநகரமான லண்டன் மாநகரத்தில் வட திசையில் உள்ள உள்ள ஹைகேட் என்ற இடத்தில் கீழ் திசையில் உள்ள ஒரு கல்லறை விளங்குகிறது.

அந்தக் கல்லறையின் முகப்பில் “உலகத் தொழிலாளர்களே.. ஒன்று சேருங்கள்..” என்கிற புகழ்பெற்ற முழக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆம். அங்கு தான் எல்லா காலத்திலும் மனிதர்களுக்கு தேவைப்படுகின்ற மாமனிதர் காரல் மார்க்ஸ் நிறைவேறாத தன் கனவுகளோடு உறங்குகிறார். அதுதான் இன்றளவும் உலகம் முழுக்க இருக்கின்ற அறிஞர்கள் எழுத்தாளர்கள் மேதைகள் தலைவர்கள் என பலரும் சென்று வழிபடும் வழிபாட்டுத் தலமாக, பெருமைக்குரிய இடமாக மாறி இருக்கிறது.

ஆனால் வாழும் காலத்தில் காரல் மார்க்ஸ் என்ற தனி மனிதர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என ஆராயும் போது வலியும் துயரமுமே மிஞ்சுகிறது. ‘வலியோர் பிழைக்க.. எளியோர் உழைக்க..’ என்ற கொடும் விதியை மாற்றி எழுத மார்க்ஸ் தன் வாழ்க்கையையே நரக நெருப்பில் ஆழ்த்திக் கொண்டார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்கும் எவரும் கண்கலங்காமல் கடக்க முடியா பேருண்மை.

குறிப்பாக காரல் மார்க்ஸின் மனைவி ஜென்னி தன் வாழ்நாள் முழுக்க தன் கணவரின் கனவிற்காக பட்ட பாடுகள் வரலாற்றின் ஏடுகளில் உதிர எழுத்துக்களால் உறைந்து கிடக்கின்றன. நம் சமூகத்திலும் மகாகவி பாரதிக்கும், எழுத்தாளுமை புதுமைப்பித்தனுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருந்தாலும், ஜென்னி மார்க்ஸ் பட்ட பாடு படிக்கும் போதெல்லாம் விழிகளில் நீர் கசியாமல் இருக்க முடியாது.

” எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்திருக்கின்ற இந்த சிறு நூல் மார்க்ஸ் என்கின்ற மாபெரும் புரட்சியாளனின் வறுமையும் துயரமும் மிக்க இன்னொரு பக்கத்தை காட்டுகின்ற முக்கிய ஆவணம்.

1850 மே 20 ஆம் தேதி யோசிப் வெய்டமையர் என்பவருக்கு ஜென்னிமார்க்ஸ் எழுதிய எட்டுப்பக்க கடிதம் தான் “எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை”.

அத்தோடு தமிழறிஞர் சாமிநாத சர்மா காரல் மார்க்ஸ் பற்றி மனப்போராட்டம் என்கின்ற ஒரு பதிவு மற்றும் ஜென்னிமார்க்ஸ் எழுதிய வாழ்க்கை குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை பற்றிய நடைசித்திரம் என்ற கட்டுரையும் இணைக்கப்பட்ட இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நூல்.

ஜென்னி அந்த கடிதத்தில் தன் கணவரை பற்றி குறிப்பிடும் போது ” எங்கள் நிலை குறித்து பொதுமக்களுக்கு என்றுமே தகவல் கொடுக்கப்பட்டதில்லை. என் கணவர் இத்தகைய விஷயங்களில் மிகவும் மான உணர்ச்சி உள்ளவர். கடைசியாக ஏதேனும் இருந்தால் அதையும் தியாகம் செய்வாரே தவிர, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரிய மனிதர்களைப் போல ஜனநாயக பிச்சையில் இறங்க மாட்டார்.” என்கிறார்.

மேலும் அவர் அதே கடிதத்தில்

” இங்கு என் கணவர் வாழ்க்கையின் சில்லறை கவலைகள் மிக மிக மோசமான உருவில் வந்து முழ்கடிப்பதன் விளைவாக அதற்கு ஈடு கொடுத்து தினசரி மணிக்கு மணி போராட தமது சக்தி முழுவதையும், தமது அமைதியான தெளிவான நிச்சய கௌரவத்தையும் பயன்படுத்தி நிலை நிற்க வேண்டி இருக்கிறது” என்கிறார்.

‘என்றும் நினைவு கொள். மனிதன் என்பவன் பயனின்றி அழிந்து விடக் கூடாது.” என்கிறார் உலகத்திற்கு பொதுவுடமை தத்துவம் தந்த பேராசான் மார்க்ஸ்.

சகலவிதத்திலும் மற்ற அனைவருக்கும் பயன்படும் ஒரு மாமனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி துயர் மிக்கதாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ளவும் அதையும் மீறி அவர்கள் எப்படி லட்சியப் பற்றுறுதியில் உறுதியாக நின்றார்கள் என்பதை கற்றுக் கொள்ளவும் இந்த சிறு நூல் வழிவகுக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பாக எனது ஆசான் எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி ஒரு அற்புதமான உரை நிகழ்த்திருப்பார். அது இன்றும் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

( https://youtu.be/mhqRn7HKpZs?feature=shared )

அந்த உரையோடு, இந்த சிறு நூலை படிக்கும் போது நமது உள்ளம் நெகிழ்வடைந்து, மூடி கிடக்கும் நமது அகக்கதவுகள் திறக்கின்றன. அதுதானே ஒரு புத்தகத்தின் நோக்கம்..??

எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை- ஜென்னி மார்க்ஸ். விலை ரூ.60

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

தமிழ் முழக்க நினைவுகள்

தமிழ் முழக்கம் என் வாழ்வில் செலுத்திய ஆதிக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. எழுத்து உலகில் மிக இளையவனான என்னை கண்டெடுத்து தன் பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராக நியமித்து ஒவ்வொரு இதழிலும் என் எழுத்துக்களை பதிவேற்றம் செய்து என்னை உருவாக்கிய பெருமகன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது என்ற திருமகன்.

நாகப்பட்டினத்தில் நடந்த‌ நாம் தமிழர் கட்சியின் மாபெரும் இளைஞர் பாசறை தொடக்க மாநாட்டில் எங்களை மேடையேற்ற அவர் உழைத்த உழைப்பு இன்னும் என் கண்களிலே நிற்கிறது.

எதற்கும் அயராத மனிதன். அவரது உருவம் போல அவரது நம்பிக்கையும் மகத்தானது. எதுவுமே இல்லாத அடையாளமற்ற எளியவர்களை அவராகவே தேர்ந்தெடுத்து அவர்களை உயரச் செய்கிற குணம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்..??

அவருக்கு வாய்த்தது. அண்ணன் சீமான் தொடங்கி இன்னும் எத்தனையோ என்னை போன்ற எளியவர்களுக்கு உதவி செய்து மேல் ஏற்றிய அவரது கரங்கள் பொற்கரங்கள்.

எதிலும் அவர் பிரம்மாண்டம் தான். விருந்து வைத்தாலும் சரி.. கூட்டம் நடத்தினாலும் சரி, அவருக்கென்று ஒரு மகத்தான பிரம்மாண்டமான திட்டம் இருக்கும். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் ஆக உழைப்பதில் தான் அவர் நிறைவடைவார்.

ஒரு முறை தமிழ் முழக்கம் இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக கடுமையான எதிர்ப்பு தமிழகம் எங்கும் ஏற்பட்டு அவரது பத்திரிக்கை அலுவலகமே தாக்கப்பட்ட போது, அதைப்பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அடுத்த மாதமே எனது அடுத்த கட்டுரையை பதிவேற்றி அதுவே அட்டைப்படமாக மாற்றிக் காட்டிய அந்த நம்பிக்கையை நான் எங்கே கண்டடைவேன்..??

அண்ணன் சீமான் சொற்கள் தான் அவருக்கு வேத மொழிகள். தன் மருமகனின் சொல்லைத் தாண்டி அவருக்கு எல்லை ஏதுமில்லை. சீமான் என்ற மனிதனுக்கு தாய் மாமனாக மாறியதால் உலகம் எங்கும் வாழக்கூடிய இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயிர் மாமனாக மாறியவர் அவர்.

குறிப்பாக என்னை செதுக்கி, நம்பிக்கை ஊட்டி இயங்க வைத்ததில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது. அவரது நினைவுகளை இன்னும் மனதிற்குள் சுமந்து கொண்டு தான் அதிலிருந்து தான் இயங்குவதற்கான ஆற்றலை எனக்குள்ளாக நான் தயாரித்து வருகிறேன்.

இறுதியாக தன் வாழ்நாளில்‌ அவர் கலந்து கொண்ட கடைசி கலந்தாய்வு கூட்டம் என் வீட்டு மாடியில் தான் நடந்தது. அப்போதே அவருக்கு கடுமையான காய்ச்சல் தொடங்கி இருந்தது. வாயெல்லாம் கசக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நிலவேம்பு கசாயம் எடுத்து வந்த என் தாயிடம் வேண்டாம் என மறுத்து சர்க்கரை நிறைய போட்டு காப்பி வேண்டும் எனக் கேட்டார். கூட்டத்தில் நானும் அண்ணன் ஹுமாயூன் உள்ளிடவர்களும் கலந்து கொண்ட போது துணிச்சலான பல முடிவுகளை அவர் தயங்காமல் எடுத்தார்.

அவரை என் வாழ்வில் சந்தித்ததும் அவரால் நான் சந்தித்ததும் நிறைய இருக்கின்றன. முடிவாக ஒன்றே ஒன்று. அவரால் நான் உருவாக்கப்பட்டு இருக்கிறேன். தன் மருமகன் சீமானை அவர் நேசித்தார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அது எந்த அளவு என்றால் தன் வாழ்வின் இறுதி நொடியில் கூட கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு உயிரளவு என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் புரிந்தது.

அந்தப் பற்றுறுதி தான் அந்த இலட்சிய விருப்பு தான் எங்களுக்கு அவர் விட்டு சென்று இருக்கின்ற இறுதி செய்தி.

அதை வாழ்நாள் எல்லாம் நாங்கள் கடைபிடிக்க அவர் தெய்வமாக நின்று கருணையின் குடை பிடிக்கட்டும்..

கண்கள் கலங்க என் ஆசானுக்கு கண்ணீர் வணக்கம்.

மணி செந்தில்.

புத்தகப் பரிந்துரை- 2023

அன்பு உறவுகளுக்கு வணக்கம்.

நேற்றைய முன் தினம் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை நடத்திய சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பற்றிய ட்விட்டர் ஸ்பேஸ் அமர்வில் இளம் தமிழ் தேசியர் மற்றும் வாசகர்கள் தவறவிட கூடாத மிக முக்கியமான புத்தகங்கள் பற்றிய பட்டியல் ஒன்றினை கேட்டிருந்தார்கள்.

அதன்படி இந்த பட்டியலை நானே உருவாக்கி உள்ளேன். இது அடிப்படை வாசகர்களுக்கு பரந்துபட்ட இலக்கிய வகைமைகளுக்கு அறிமுகங்களாக இருக்கக்கூடும்.

வழக்கமாக பொன்னியின் செல்வன் பாலகுமாரன் புத்தகம் சுஜாதா எழுதியவை என்றெல்லாம் இல்லாமல் இன உணர்வு மற்றும் நவீன இலக்கியங்கள் சார்ந்து இந்த பட்டியல் ஒன்றினை நான் உருவாக்கி இருக்கிறேன். சிறார் இலக்கியங்கள் குறித்து தனியே ஒரு பட்டியல் உருவாக்க‌ திட்டமிட்டு உள்ளேன்.

இது முழுக்க முழுக்க என் ரசனை சார்ந்தது. நான் வாசித்தபோது எழுந்த அனுபவ உணர்ச்சியினை சார்ந்து தயாரிக்கப்பட்டது.

இது தரவரிசை பட்டியல் அல்ல. எனக்குப் பிடித்த சில நூல்கள் இவை. இன்னும் பட்டியல் இடப்படாத பல நூறு நூல்கள் இருக்கின்றன என்றாலும் நான் வாசித்த வகையில் மிகப்பெரிய வாசிப்பு அனுபவத்தை எனக்கு அளித்த இந்த நூல் வரிசையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் வாங்குங்கள் என்றெல்லாம் நினைத்து செய்யப்பட்ட பரிந்துரை அல்ல.

தமிழ் தேசிய தத்துவத்திற்கு மாற்றாக எழுதி வரும் சில எழுத்தாளர்களின் நூல்களும் இதில் இடம் பெற்று இருக்கின்றன. ஆனாலும் அவையும் படிக்க வேண்டியவை எனக் கருதி இந்த பட்டியலில் நான் இணைத்து உள்ளேன். எனவே நூல்களில் உள்ள கருத்துக்களை எல்லாம் நான் சார்ந்திருக்கும் அரசியல் தத்துவத்தின் மீது பொருத்தி குழம்பிக் கொள்ள தேவையில்லை.

புத்தக கண்காட்சிக்கு நீங்கள் செல்லும்போது இந்த புத்தகங்கள் உங்கள் கண்களில் பட்டால் ஒரு நிமிடம் எடுத்துப் பாருங்கள். பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்தப் பட்டியல் தரவரிசை பட்டியலும் அல்ல என்பதோடு இந்தப் பட்டியல் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் தேடி செல்வோர்க்கு இந்த பட்டியல் சிறு உதவி செய்தால் பெரும் மகிழ்ச்சி அடைவேன்.

அவசியம் களம் மற்றும் தமிழம் பதிப்பகம் அரங்குகளுக்கு செல்ல தவறாதீர்கள்.

நன்றி.

மணி செந்தில்.

????

  1. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் க.ப. அறவாணன்
  2. தமிழன் ஏன் அடிமையானான் க.ப அறவாணன்
  3. சுற்றுச்சூழலியல் உலகம் தழுவிய வரலாறு ராமச்சந்திர குகா எதிர் வெளியீடு
  4. தேசியமும் மார்க்சியமும் தணிகைச் செல்வன்
  5. தமிழ்நாடு தமிழருக்கே
    வழக்கறிஞர் சக்திவேல்
  6. ம.பொ.சியின் தமிழன் குரல்
  7. தொ பரமசிவன் முழு தொகுப்பு காலச்சுவடு வெளியீடு
  8. ஆசான் ம செந்தமிழன் அவர்களின் நூல்கள் செம்மை வெளியீடு
  9. தமிழகத்தில் பிற மொழியினர் ம.பொ.சி
  10. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
    தமிழில் இரா முருகவேள்
  11. கம்யூனிசம்- நேற்று இன்று நாளை_ இரா. ஜவகர் நக்கீரன் வெளியீடு
  12. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்- அருணன்
  13. நான் நம்மாழ்வார் பேசுகிறேன்- விகடன் வெளியீடு
  14. சுதேசி இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு- விகடன் வெளியீடு
  15. சாதியை அழித்து ஒழித்தல்- அண்ணல் அம்பேத்கர் – அருந்ததி ராய் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடு
  16. உலக சினிமா- மூன்று தொகுப்புகள் செழியன்
  17. மாவீரர் உரைகள் நேர்காணல்கள்
  18. இவன் ஒரு வரலாறு தொகுப்பாசிரியர் பூபதி
  19. மண்டோ படைப்புகள்
  20. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  21. எனது இந்தியா- எஸ் ராமகிருஷ்ணன்
  22. அறம்- ஜெயமோகன்
  23. இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ் தேசியமும் கு.ச. ஆனந்தன்
  24. நள்ளிரவில் சுதந்திரம்
  25. வையத் தலைமை கொள் -இறையன்பு
  26. போர் தொழில் பழகு -இறையன்பு
  27. வெள்ளை யானை- ஜெயமோகன்
  28. 1801 -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  29. காலா பாணி -ராஜேந்திரன் ஐஏஎஸ்
  30. உலக இலக்கியப் பேருரைகள்- எஸ் ராமகிருஷ்ணன்
  31. வால்காவிலிருந்து கங்கை வரை
  32. பட்டாம்பூச்சி‌- நர்மதா பதிப்பக வெளியீடு
  33. மோகமுள்- தி ஜானகிராமன்
  34. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் -ஜெயகாந்தன்
  35. ஜெயகாந்தன் சிறுகதைகள்
  36. பாரதியார் கவிதைகள்
  37. பாரதிதாசன் கவிதைகள்
  38. உலகின் மிக நீண்ட கழிவறை அகர முதல்வன்
  39. இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும்- ஆலடி அருணா
  40. சுளுந்தீ- முத்துநாகு
  41. மாபெரும் தாய் -அகரமுதல்வன.
  42. ஒரு சிறு இசை- வண்ணதாசன்
  43. வைரமுத்து கவிதைகள்
  44. அப்துல் ரகுமான் கவிதைகள்
  45. திராவிடம் தமிழின் மறுமலர்ச்சியை வளர்த்ததா மடை மாற்றியதா- பெ மணியரசன்
  46. தேசியமும் திராவிடமும்- மாசோ விக்டர்
  47. ஆழி சூழ் உலகு- ஜோ டி குரூஸ்
  48. பூஉலகின் நண்பர்கள் சிறியதே அழகு புத்தக வரிசை
  49. பார்த்தீனியம்- தமிழ் நதி
  50. ரசவாதி

50.புயலிலே ஒரு தோணி/ கடலுக்கு அப்பால்- ப.
சிங்காரம்

  1. பாப்லோ நெருடா கவிதைகள்- தமிழில் சுகுமாரன்
  2. பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
    -புதுவை ரத்தினதுரை தொகுப்பு
  3. தமிழின படுகொலைகள்
    களம் வெளியீடு
  4. தஞ்சை பிரகாஷ் சிறுகதைகள்
  5. வண்ண நிலவன் சிறுகதைகள்
  6. ஜாப்னா பேக்கரி -வாசு முருகவேல்
  7. நடுகல்- தீபச்செல்வன்
  8. இரண்டாம் ஆட்டம்/கொமாரா – லட்சுமி சரவணகுமார்
  9. சைவ சமயம் ஒரு புதிய பார்வை- சிகரம் செந்தில்நாதன்
  10. இந்து மதம் எங்கே போகிறது இரண்டு பாகங்கள்- நக்கீரன் வெளியீடு
  11. காந்தியைக் கொன்றவர்கள் -எதிர் வெளியீடு
  12. குற்றப்பரம்பரை -வேல ராமமூர்த்தி
  13. கள்ளிக்காட்டு இதிகாசம்/ கருவாச்சி காவியம்/ மூன்றாம் உலகப் போர்/ வைரமுத்து
  14. குஜராத் மதவெறி படுகொலைகள்- சூத்திரதாரிகளும், பங்காளிகளும் -களம் வெளியீடு
  15. அண்ணல் அம்பேத்கர் வரலாறு வசந்த் மூன் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு/ பாபா சாகேப் அருகில் இருந்து- மைத்திரி
  16. சயாம் பர்மா மரண ரயில் பாதை
  17. ஆழமான கேள்விகளும் அறிவார்ந்த பதில்களும் ஸ்டீபன் ஹாக்கிங்
  18. தூக்கிலிடுபவனின் குறிப்புகள் சசிவாரியர் எதிர் வெளியீடு
  19. விடுதலைக்கு விலங்கு ராபர்ட் பயஸ் களம் வெளியீடு
  20. சிறை கொட்டடியில் இருந்து ஒரு மடல் பேரறிவாளன்
  21. தமிழ் தேசியத் தலைவர் தமிழரசனின் வாழ்வும் அறமும்
  22. நிலைத்த பொருளாதாரம்- ஜே சி குமரப்பா
  23. தமிழர் எழுச்சியின் வடிவம் -பழ நெடுமாறன்
  24. கால்கள்- ஆர் அபிலாஷ் உயிர்மை வெளியீடு
  25. இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் 100 -பதிப்பு முனைவர்.வீ. அரசு
  26. புலி நகக்கொன்றை- பி ஏ கிருஷ்ணன்
  27. கோபல்ல கிராமம் -கி ராஜநாராயணன்
  28. ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
  29. அ முத்துலிங்கம் சிறுகதைகள்
  30. இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாறு/ தகர்ந்து போன தன்னாட்சிக் கனவுகளும் தேசிய இனங்களின் தன்னுரிமை பயணமும் முனைவர் த ஜெயராமன்.
  31. ஈரோட்டுப் பாதை சரியா- ப ஜீவானந்தம்
  32. சாதியும் தமிழ் தேசியமும்- பெ மணியரசன்
  33. வ உ சிதம்பரனார்/ மா ரா அரசு/ சாகித்திய அகாதமி வெளியீடு
  34. அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரை சிகரம் செந்தில்நாதன்.
  35. ஆரியக்கூத்து- அ.மார்க்ஸ்
  36. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம்- ஜெயமோகன்
  37. இடக்கை, யாமம், துயில் எஸ் ராமகிருஷ்ணன்,
  38. நிலம் பூத்து மலர்ந்த நாள் -மனோஜ் குரூர்
  39. செம்புலம் -இரா முருகவேள்
  40. மாநில சுயாட்சி- முரசொலி மாறன்
  41. முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம் அவர்களின் தமிழ் பணி / முனைவர் கோ வீரமணி
  42. சிதம்பர நினைவுகள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தமிழில் கே வி சைலஜா
  43. ஈழப் படுகொலையின் சுவடுகள் நிலவன்
  44. ஓநாய் குலச் சின்னம்
  45. மனித குலமும், தமிழ்த் தேசியமும் பல நெடுமாறன்
  46. சூழலியல்- கி வெங்கட்ராமன்
  47. பெருந்தலைவர் காமராஜர் விகடன் வெளியீடு
  48. அஜயன் பாலா எழுதிய நாயகன் வரிசை நூல்கள் விகடன் வெளியீடு
  49. நெடுங்குருதி- எஸ் ராமகிருஷ்ணன்.

தொகுப்பு: மணி செந்தில்

Page 1 of 4

Powered by WordPress & Theme by Anders Norén