பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கட்டுரைகள்.. Page 7 of 15

துரோகத்தின் வழித்தடங்கள்..

துரோகம் என்பது என்ன…. அது ஒரு வசைச் சொல்லா, கடந்த காலத்தின் அழிக்கமுடியாத காய வடுவா.., யாரோ ஒருவர் நம்மீது மாறாத வலியை சுமத்தி வைத்துவிட்டு பெற்றுக்கொண்ட சாபத்தின் பாடலா.. நம்பி நிற்பவர் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் அவர் நிழலில் நின்றுக்கொண்டு நேசித்து நம்பிக்கை செலுத்தும் உடன் இருப்பவர் குத்தும் கத்தியா.. என்றால் இவை அனைத்தும் தான் என சொல்லத் தோன்றுகிறது.வரலாற்றின் பல பக்கங்கள் துரோகத்தின் நிழலால் இருண்டு கிடக்கின்றன. ஏதோ ஒரு ஆதாயம் கருதி இழைக்கப்படும் துரோகம் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வந்து விதிக்கப்படும் சாபமாக மாறி துரத்தி வருவதை நாம் காண்கின்றோம்.துரோகத்தை ஆங்கிலத்தில் Betrayal என்று அழைக்கிறார்கள். அதற்கு ஆக்ஸ்போர்டு அகராதி “the action of betraying one’s country, a group, or a person; treachery.” என விளக்கம் தருகிறது. இதுகுறித்து தமிழ் அகரமுதலியில் தேடியபோதுராஜ துரோகம், சாமித் துரோகம், குரு துரோகம், இனத் துரோகம், பிரித்துரோகம் என ஐவகை துரோகங்களை நம்மால் காண முடிகிறது. துரோகம் என்பது ஒருவகை ஏமாற்றுகையின் வடிவத்தைத் தான் கொண்டிருக்கிறது என்றாலும், இது அதைவிட கொடியதான ஒன்றாக விவரிக்கப்படுகிறது.எதையும் மறக்க முடிகிற, கடக்க முடிகிற மனிதனின் ஆன்மா துரோகத்தின் வலியை மட்டும் கடக்கப் படாதபாடு படுகிறது. அது மகத்தான நம்பிக்கையின் மீது விழுந்த இடி. அந்த நம்பிக்கை தகர்வில் இருந்து வெகு சாதாரணமாக மனிதமனம் மீள மறுக்கிறது.சில வருடங்களுக்கு முன்பாக ஆங்கிலேயர்களிடம் கட்டபொம்மனை காட்டி கொடுத்த புதுக்கோட்டை ஜமீன் எட்டப்பனின் வாரிசுகள் அளித்திருந்த பேட்டி ஒன்றை வாசிக்க நேர்ந்தது. இன்னமும் அந்த துரோகத்தின் நிழலில் இருந்து தங்களது சந்ததிகள் தப்ப முடியாத வலியினை அவர்கள் உருக்கமாக தெரிவித்திருந்தார்கள். இன்னமும் தங்களை சொந்தபந்தங்கள் சேர்த்துக் கொள்ளாமல் நிகழ்வுகளில் புறக்கணிக்கிற வேதனையை அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.எத்தனையோ தலைமுறைகளுக்கு முன்னால் நடந்த ஒரு துரோகச் செயல் பல தலைமுறைகளை தாண்டியும் அந்தச் செயலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத சந்ததிகளை கூட விடாமல் துரத்தி வருவது என்பது வரலாற்றின் விசித்திரம்.பண்டைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் மாபெரும் மன்னன் ஜூலியஸ் சீசர் மனித இனத்தின் நாட்காட்டியையே மாற்றியமைத்தவர். அவரால்தான் ரோமன் காலண்டர் மாற்றியமைக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் தனது சிலையை நிறுவ சொன்ன சீசர் , நாணயங்களிலும் தன் உருவத்தை பதித்தார். அதற்கு சொன்ன விளக்கம்தான் “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே”.அப்படிப்பட்ட ஜூலியஸ் சீசர் மீது கடுமையான போட்டி, பொறாமைகள் காரணமாக பலருக்கும் பகை ஏற்படுகிறது. கிரேக்கத்தின் உயரிய சபையான செனட் சபையின் கூட்டம் நடக்கும்போது அங்கே இருந்த பல பகைவர்களால் ஜூலியஸ் சீசர் கத்தியால் குத்தப்படுகிறார். தன் மகன் போல நேசித்த புரூட்டஸிடம் ஓடிச்சென்று அவன் காப்பாற்றுவான் என நம்பி நிற்க, அவனும் மறைத்து வைத்திருந்த ஒரு கத்தியால் சீசரை குத்த அப்போது வலியோடு ஜூலியஸ் சீசர் சொன்ன வார்த்தைதான் “யூ டூ புரூட்டஸ்..”(you too Brutus..?)இதை சீசர் சொன்னாரோ, சொல்லவில்லையோ.. என்று நமக்குத் தெரியாது. ஆனால் சீசரின் வரலாற்றை நாடகமாக படைத்த ஷேக்ஸ்பியர் தனது வசனத்தில் “யூ டூ புரூட்டஸ்..” என்கிற சொல்லாடலை பயன்படுத்தியபோது அது உலகத்திற்கு பொதுவான சொல்லாக மாறியது.சங்க இலக்கியங்களில் துரோகத்தை பற்றிய ஒரு முக்கியமான பாடல் ஒன்று உண்டு . கள்ளூர் என்ற ஊரில் ஒருவனால் காதலிக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்ட இளம்பெண் ஒருவள் ஊரின் அவையிடம் முறையிடுகிறாள். அவளது முறையீட்டை ஏற்றுக்கொண்ட ஊரவை காதலனை விசாரிக்கிறது. இந்தப் பெண்ணை தான் விரும்பவே இல்லை உறுதிப் பாடாக மறுக்கிற காதலனின் மறுப்பு பொய்யென சாட்சிகள் மூலம் உறுதி செய்கிறது. அந்த ஆடவன் குற்றவாளி என சபை அறிவித்து மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கிற மரக்கிளைகளில் அவனை கட்டி வைத்து அவன் தலையில் சாம்பலை கொட்டி தூற்றிப் பேசிய தண்டனையை பின்வரும் பாடல் மூலம் நாம் அறியலாம்.”தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த், திரு நுதல் குறுமகளணி நலம்வவ்விய அறனிலாளன் அறியே னென்ற திறனில் வெஞ்சூளரிகரி கடாஅய், முறியார் பெருங்கிளை செறியப் பற்றி நீறு தலைப்பெய்த ஞான்றை வீறுசாலவையத்து ஆர்ப்பினும் பெரிதே”(அகம் 256)சீவலப்பேரி பாண்டி என்கின்ற திரைப்படம் தென் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஜூனியர் விகடன் இதழில் 1994 ஆம் ஆண்டு செளபா என்றழைக்கப்பட்ட சௌந்தரபாண்டியன் எழுதிய வரலாற்று உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது.தன் சாதியை சேர்ந்த உறவுக்காரர்களின் அவதூறுகளை நம்பியும், தன் எதிர்காலம் குறித்து வழங்கப்பட்ட ஆசை வாக்குறுதிகளை நம்பியும் தன் மீது மிகுந்த மரியாதையும், பாசமும் வைத்திருந்த ‘கிராம முன்சீப்’ பை அவர் எதிர்பார்க்காத நேரத்தில் கொலை செய்து விடுகிறார். பிறகு சிறை வாழ்க்கையில் அவர் வாடும் போது தான் தனக்கு வாக்குறுதி அளித்த பெரிய மனிதர்களின் துரோகங்கள் தெரியவருகிறது. சிறையிலிருந்து தப்பிக்கின்ற பாண்டி தன்னை ஏமாற்றியவர்களை வெட்டி சாய்த்துவிட்டு இறுதியாக போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். வாழ்நாள் முழுக்க துரோகத்தின் நிழல் சீவலப்பேரி பாண்டியை ஒரு வெறி பிடித்த மிருகம் போல துரத்திக்கொண்டே இருந்தது.எல்லாவற்றையும் தாண்டி துரோகம் ஒரு மாபெரும் குற்றமாக வலியாக ஏன் கருதப்படுகிறது என்றால்.. நாம் நம்பிக்கை கொண்டு நேசிப்பவர்கள் இடத்திலிருந்து துரோகம் பிறக்கிறது. ஒரு வகையான நேசிப்பின் முறிவு போல துரோகத்தின் பாடல் எப்போதும் இருண்மையாகவே இருந்து வருகிறது.தமிழ் திரைப்படங்களில் துரோக உணர்ச்சியை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்து இருக்கின்றன. அதில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி மற்றும் சுப்பிரமணியபுரம் என்கின்ற 2 திரைப்படங்கள் மிக முக்கியமானவை.குறிப்பாக ரோசாப்பூ ரவிக்கைக்காரி கணவன் மனைவிக்கு இடையிலான உறவின் ஊடலாக நிகழ்ந்த துரோகத்தை பற்றி விரிவாகப் பேசுகிறது. அதற்கு இணையாக நட்பின் ஊடாக நிகழ்ந்த துரோகத்தைப் பற்றி சுப்பிரமணியபுரம் குறிப்பாக பேசுகிறது. இரண்டிலும் துரோகம் செய்தவர்கள் இறந்து போகிறார்கள். ரோசாப்பூ ரவிக்கைக்காரி திரைப்படத்தில்கணவனுக்கு துரோகம் செய்த இளம் மனைவி பிற ஆடவன் ஒருவனோடு தான் இருப்பதை நேரடியாக பார்த்துவிட்ட கணவனை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த குற்ற உணர்ச்சியில் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறாள். அதேபோல சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் நண்பர்களுக்கு துரோகம் செய்த ஒருவனை அந்தக் கும்பலில் மிஞ்சி இருக்கிற ஒரு மாற்றுத்திறனாளி ஒருவன் கொலை செய்து பழி தீர்ப்பான்.துரோகம் தான் கொடிய பாவம். “பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது பைபிள்.கடவுளின் மைந்தனான இயேசுநாதர் மிகப் புனிதமானவர். கருணை மிக்கவர். எளியவர்களை பார்த்தால் இரக்கம் கொள்பவர். ஆனால் அவருடைய நெருங்கிய சீடனான யூதாஸ் அப்படிப்பட்டவன் அல்ல. யூதாஸின் பணத்தாசை இயேசு நாதரை காட்டிக்கொடுக்க வைக்கிறது.கெத்சமனே என்ற இடத்தில் இருந்த தோட்டத்தில் நடந்த இரவு விருந்தில் இயேசு தனது சீடர்களின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவர்களது கால்களை கழுவி தூய்மைப்படுத்தி பெருமை செய்கிறார். இயேசுவை கைது செய்ய தேடி வந்த பரிசேயர் என்றழைக்கப்பட்ட காவலர்களிடம் யூதாஸ் இயேசுவை அடையாளம் காட்ட அவரை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறான்.இயேசு அவனைப் பார்த்து கேட்ட இறுதி கேள்வி ” மனுஷ குமாரனை முத்தத்தின் மூலமாக காட்டிக் கொடுக்கிறாய்..?(luk 22:48)யூதாஸ் அளித்த அந்த முத்தம் என்பது இயேசுநாதரின் தாடையோடு தாடை வைத்து விசுவாசத்தின் சின்னமாக அளிக்கப்பட்ட முத்தமாக இருந்தாலும் அதன் உள்நோக்கம் துரோகத்தின் விஷம் நிரம்பியிருந்தது.இயேசு கொடுமைப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்படுவதை காண சகிக்காமல் குற்ற உணர்ச்சியில் யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான் என பைபிள் கூறுகிறது.நேர்மையான எதிரிக்கு என்றுமே வரலாற்றில் ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் துரோகி மட்டும் எக்காலத்திலும் புறக்கணிக்கப்படுகின்றவனாக மாறிவிடுகிறான். இதிகாச நாயகர்களின் எதிரிகளாக இருந்த இராவணன் மற்றும் துரியோதனும் கூட கதாநாயகர்கள்தான். ஆனால் ராமாயணத்தில் விபீஷணன் கதாபாத்திரம் துரோகத்தின் வடிவமாக இன்றளவும் தூற்றப்பட்டு கொண்டிருக்கிறது.மகாபாரதத்தில் துரோணருக்கு கேட்கும் விதமாக தருமன் “அவருடைய மகன் அஸ்வத்தாமா இறந்துவிட்டான்”(ஆனால் இறந்தது அஸ்வத்தாமா என்ற ஒரு யானை) என்று உதிர்த்த இரு பொருள் கொள்ளும் விதமான ஒரு பொய் துரோகத்தின் சாயல் உடையது. அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த துரோணர் மரணம் அடைகிறார். இத்தனைக்கும் துரோணர் தருமனின் ஆசிரியர்.அறத்தின் சாயலாக நின்று கடைசி வரை களத்தில் போராடிய தேசியத் தலைவர் பிரபாகரன் என்ற சொல் இருக்கும் வரையில் அதற்கு எதிர்ப்பதமாக துரோகச் சின்னங்களாக “கருணாக்கள்” என்கின்ற பெயர்களும் உச்சரிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கும்.”நேர்மையாக இருந்து விடு.. நிம்மதியாக தூங்கி விடலாம்.”என்கிறது ஆப்பிரிக்க பழங்குடிகளின் பாடல் ஒன்று.அதே பாடலில் விசித்திரமாக ஒரு வரி வருகிறது.துரோகத்திற்கு இமைகள் இல்லை.அப்படி என்றால்.. துரோகம் கொண்ட ஆன்மா விழி மூடி தூங்க முடியாது, என்பதை தான் “இமைகள் இல்லை” என கவித்துவமாக சொல்லியிருக்கிறார்கள்.இறுதியாக என் துருவனின் “அடர்பச்சை” நூலிலிருந்து துரோகம் பற்றிய சில வரிகள்..”கொஞ்ச நேரம்கரையிலேயேநடந்திருந்தபோதுஉப்புக் காற்றில் அவன் முதுகுவலிக்கத்தொடங்கியது.அத்தனையும் கட்டிப் பிடித்தபடியேகுத்தப்பட்ட தழும்புகள்.”

கடலோடு.. உரையாடு.

♥️

ஒரு இளவேனில் காலத்தின் பின் மதிய நேரத்தில் கடலை பார்க்கப் போவோம்‌‌ என அவள் திடீரென கேட்டபோது ஏன் எதற்கு என தோன்றாமல் உடனே கிளம்பிவிட்டேன். சில அழைப்புகள் திரும்ப இயலா ஒற்றையடி பாதை போல. ஏற்பதைத்தவிர வேறு எதுவும் வழியில்லை.

எங்கோ தொலைதூரத்தில் கடலோசை கேட்கின்ற திசையில் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம்.

இங்கேயே எனக்கு அலைகளின் ஒலி கேட்கிறது என்றாள்.

எனக்கும் அலைகளில் கால் நனைக்காமலே கால்கள் நனைந்து விட்டது போல ஒரு உணர்வு.

உப்பினை சுமந்து உலர்ந்து திரியும் காற்றின் கரம்பிடித்து சென்றோம்.

சில மணி நேரங்களில் கடல் எங்கள் காலடிகளுக்கு சில அடி தூரத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
மின்னிய கண்களோடு ததும்பிக் கொண்டிருந்த அந்த கடலை பார்ததுக்கொண்டிருந்தவள் சட்டென என்னை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

ஒரு நீரலைப் போல அவள் மாறி இருந்தாள். அவள் விழிகள் முழுக்க இளநீலம் பரவி எதிரே விரிந்து கிடக்கும் கடலின் நகலாக அவள் மாறி இருக்கிறாள் என எனக்குத் தோன்றியது.

அவளை அணைத்த அப்பொழுதில் தான் காதலலை நிரம்புகிற தேநீர் குவளையாக நானும், என்னுள் நிரம்புகிற, தாகம் மிக்க என் ஆன்மாவின் வடிவத்திற்கு ஏற்றாற் போல் வார்த்துக்கொள்ளும் நேசத்தின் நீராக அவளும் மாறிவிட்டாள் என்பதை புரிந்து கொண்டேன்.

நீர்மையும், நடுக்கடல் ஆழமும் , அளக்க முடியா அமைதியும், எப்போதும் பெண்களுக்கு உரியவை. எனவேதான் கடலும் ஒரு பெண் என்று
அறிந்ததெல்லாம் புத்தகங்களில் மட்டும் காணப்படும் பொய்யழகு அல்ல, உண்மையின் தரிசனம் எனத் தெரிந்துகொண்டேன்.

♥️

எப்போதும் பார்த்தாலும் கடல் மட்டும் பார்க்கப் பார்க்க புதிதாகவே இருக்கிறது என்று முணுமுணுத்தாள்.

ஏறக்குறைய உன்னைப்போல என நான் அக்கணம் நினைத்ததை அவளிடம் சொல்லவில்லை.

ஏதோ யோசித்தவாறே.. உள்ளங்கையில் மணலை எடுத்து கொட்டிய வாறே..
இந்த மணல் துகள்களை என்றாவது எண்ண வேண்டும் என யோசித்து இருக்கிறாயா என விசித்திரமாக கேட்டாள்.

இந்த உலகத்தில் காதல் கதைகளை நான் கணக்கெடுப்பதில்லை என்றேன்.

சிரித்துக்கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து எப்போதும் ஏன் கடல் ஆச்சரியமாகவே இருக்கிறது என விழிவிரிய கேட்டாள்.

ஆழம் மிக்க எதுவும் ஆச்சரியமாக தான் இருக்கும். பெண்களைப் போல.
என்றேன்.

பெண்கள் அலையடிக்கும் கடல் என்றாலும் ஆண்கள் என்னவோ கொந்தளிக்கும் எங்கள் மீது எப்படியோ தத்தளித்து படகோட்டி விடுகிறீர்கள் என நக்கலாக சற்றே கடுப்புடன் சொன்னாள்.

நான் அமைதியாக கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். சில விஷயங்களுக்கு பதில் அளிக்கக் கூடாது. பெண்கள் ஒன்றிலிருந்து வேறொன்றை உருவாக்குவதில் தேர்ந்தவர்கள். சிறிய அலைக்கு பின்னால் வரும் பேரலை போல.

ஏதோ அவள் விழிகள் கலங்கி இருந்ததாக எனக்குத் தோன்றியது.

என்ன ஆயிற்று எனக் கேட்டதற்கு எப்போதும் உலகத்தில் பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே பதிலை அவளும் ஒருவித இறுக்கத்தோடு சொன்னாள்..

“ஒன்றுமில்லை”.

அந்த ஒன்றும் இல்லை என்பதில்தான் ஓராயிரம் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு ஆணும் புரிந்துதான் வைத்திருக்கிறான்.

எங்களிடையே ஒரு உருகா மௌனம் ஒன்று பாதரசம் போல மிதந்துகொண்டிருந்தது

நீ வர வர அதோ அந்த பாறை போல இறுகி விட்டாய் என்றாள்.

நீ கவனித்தாயா.. அப்போதும் உன் கால்களை உரசும் அலைகளை தான் நான் தழுவிக் கொண்டு இருக்கிறேன் என்றேன்.

நிமிர்ந்து பார்த்தாள்.

ஏதேதோ பேசி சொற்களின் மயக்க கூட்டில் என்ன வைத்திருக்கிறாய் என தீவிரமான குரலில் சொன்னாள்.

அமைதியாக இருந்தோம்.

இவையெல்லாம் சொற்களை வைத்துக்கொண்டு நான் நிகழ்த்தும் மாய விளையாட்டு என நீ நம்புகிறாயா.. என நான் அவளிடம் உயிர் துடிக்கும் வேதனையோடு கேட்டபோது சில நொடிகளுக்கு அலைகள் எங்கள் பக்கம் வரவில்லை.

பதில் அளிக்காமல் அவள் அமைதியாக இருந்தாள்.

உன்னிடம் நான் சொல்கிற ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னாலும் உண்மையின் உதிரம் வழிகிற அசலான இதயம் ஒன்று வலியோடு அசைந்து கொண்டிருக்கிறது என்றேன்.

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதிர்பார்க்காத தருணம் ஒன்றில் அலை வீசும் காற்றில் மிதந்து வந்த நீர்த்துளி ஒன்று எங்கள் முகத்தில் பட்டு தெறித்து சிலிர்ப்பை உண்டாக்கிய அந்த நொடியில் எதையோ உணர்ந்தவள் என் தலையை மெதுவாக கோதினாள்.

அடுத்தடுத்து வருகிற இரு அலைகள் போல.‌. உன் உடன் இருக்கும் போது அளவற்ற மகிழ்ச்சியையும், பிரிவின் துயரில் அளவற்ற கண்ணீரையும் சுமந்தே அலைகிறேன் என்று ஏக்கத்துடன் சொன்னாள் அவள்.

அவள் கரங்களை மென்மையாய் பற்றினேன்.

அந்த நேரத்தில் வீசுகிற காற்றுக்கு லயம் பிடித்து அலைபாய்ந்து கொண்டிருந்த அவளின் கூந்தலை நான் கண்டேன். எப்போதும் அதை ஒரு கடலாகத்தான் நான் உணர்ந்திருக்கிறேன். அதன் கருநிற அலைகளில் எத்தனையோ முறை தொலைந்து இருக்கிறேன்.

தனித்திருக்கும் போது நாங்கள் பித்துப்பிடித்து ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து மகிழ்ந்து இருந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

நான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி அவள் சரியாக உணர்ந்து விட்டாள் என்பதை சிவப்பேறுகிற அவளது கன்ன கதுப்புகள் காட்டின.

ஏதோ நினைத்துக்கொண்டே பேச்சை மாற்றுவதாக கருதி.. இந்தக் கடலுக்கு என்ன பெயர் என ஒரு சிறுமி போல அவள் கேட்டாள்.

இந்த கணத்தில் இந்தக் கடலுக்கு உன் பெயர்தான் என்று அவள் முகம் பார்த்து சொன்ன போது..

அவள் அவளுக்குள் ஒரு கடலை உருவாக்கிக்கொண்டு, ஏற்கனவே ஒரு கடலாகி போயிருந்த என் மீது வெட்கத்துடன் சாய்ந்துக்கொண்டாள்.

கடல் பார்க்க சென்ற எங்களை.. கடல் பார்த்துக்கொண்டிருந்தது.

❤️

மணி செந்தில்‌.

❤️

காட்சித்துளிக்கு கிருஷ் நடேஷ்க்கும்..
கவிதை அலைக்கு அண்ணன் அறிவுமதிக்கும்,
இசைக்கடலுக்கு இசைஞானிக்கும்
ஈர முத்தங்கள்.

❤️

அந்தியொன்றின் நீலநிறப்பூ.

 

[youtube]https://www.youtube.com/watch?v=pQj12Y7XPno[/youtube]

நிகழ்காலம் என்ற ஒன்று இருப்பதாலேயே இறந்தகாலம் இறந்து விடுவதில்லை. நினைவுகள் ஊறித்திளைக்கும் ஆன்மாவில் தான்
வேர்க்கொண்டு மலர்ந்த பூக்கள் என்றும் வாடுவதில்லை. 
அப்படித்தான் ஒரு மழைக்கால அந்தியில் ஒரு மஞ்சள் நிற உடையில் எப்போதோ நான் தவறவிட்ட அவள் கடந்த காலத்தின் நீல நிறப் பூவை எடுத்து வந்திருந்தாள். சொல்லப்போனால் அந்த சந்திப்பிற்கு நான் எந்தத் திட்டமும் இடவில்லை. திடீரென நேர்ந்துவிட்ட ஒரு விபத்து போல அந்த சந்திப்பும் நிகழ்ந்தது என்றும் வாடாத அந்த நீல நிறப் பூவை எனக்கு முன்னால் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.‌ அருகே இருந்த கண்ணாடி குவளையில் நான் குடித்து மீதம் வைத்திருந்த தண்ணீரை எடுத்து மென்மையாக பருகினாள். நேரடியாக என் கண்களை பார்த்து இவ்வளவு நாள் நான் எங்கிருந்தேன் ஏன கேட்க மாட்டாயா.. என்பதுபோல அவளது விழிகள் கேட்பதாக எனக்குத் தெரிந்தது. அந்த விழிகளில் விழுந்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வாழ்வதென்பது இனி என்னால் முடியாது என்பது எனக்கு நன்றாக தெரிந்தாலும் முடிவிலியான அந்த பகடை ஆட்டத்தில் எப்படியேனும் நான் ஈடுபட்டு விடுவேன் என அவளுக்கும் தெரிந்தது. ஆனாலும் நான் கவனமாக இருப்பதாக அவளுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக..

“காலம் நிறைய மாறிவிட்டது” என்றேன்.

“ஆனால் நீ மாறவில்லை” என்றாள்.

இனி ஆயுதங்களை பயன்படுத்தி விட வேண்டியதுதான் என்பதற்காக அவள் ஆன்மாவிற்கு என நான் தனித்தே தயாரித்து வைத்திருந்த ஒரு குறுங்கத்தி பதிலை அவளிடம் இவ்வாறாக சொன்னேன். “இப்போது இன்னொருவள் என் அகம் புறம் என அனைத்தையும் நிரப்பி இருக்கிறாள்” என்றேன். அவள் சற்றே அலட்சிய சிரிப்போடு.. “ஆனால் நீ என்னவோ தளும்பிக்கொண்டு தான் இருக்கிறாய்” என்றாள்.

“உனக்கும் வயதாகி விட்டது போல” என்று சொல்லிப் பார்த்தேன்.

“இன்னும் நமக்குள் ஜோடிப் பொருத்தம் தான்” என சொல்லி விட்டு சிரித்துக்கொண்டாள்.
“எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள்..” என்று நேரடியாக அவள் மார்பில் என் கத்தியை சொருகினேன். அதை துளி கூட பொருட்படுத்தாமல் “அவர்களிடமும் நீ என் சாயலை தான் தேடிக் கொண்டிருப்பாய்” என எனக்கு நன்றாக தெரியும் என்றாள்.

“ஆனால் நீ பார்த்தவன் எப்போதோ இறந்து விட்டான்” என எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னேன். அவளோ என் மீது பார்வையை விலக்காமல்.. “அவனை என்னைத் தவிர யாராலும் கொல்ல முடியாது..” என்று விசித்திரமாக பதிலளித்தாள். நான் என் தலையைத் தாழ்த்தியவாறே.. “இப்போது நான் முழுவதுமாக வேறு மனிதன்” என்று உறுதியான குரலில் அவளுக்கு சொல்வது போல எனக்கும் சொன்னேன்.

” என்னை முதலில் நேருக்கு நேராக பார். மிக எளிதாக நான் அவனை அடைந்து விடுவேன்” என்று அவள் சொன்னாள் .

“இதுவெல்லாம் கதைகளிலும், திரைப்படங்களிலும் மட்டும்தான் சாத்தியம்” என்றேன். “அவரவர் கதைகளைத்தான் பல காட்சிகளாக படம் பிடித்து மீண்டும் மீண்டும் திரைப்படங்களாக எடுக்கிறார்கள் என பலரும் நினைக்கிறார்கள்” என்றாள்.

“இறுதியாக என்னதான் வேண்டும்..?” என்கிற மன்றாடலில் என் கைகள் நடுங்கியவாறே தழுதழுத்த குரலில் அவளிடம் கேட்டேன்.

எனக்கு வேண்டியது ஒரு உண்மையின் மலர் என்றாள்.

“நான் இல்லாத இக் காலங்களில் எப்போதாவது என்னை மறந்த நேரம் என்ற ஒன்று உண்டா..” என தலை கவிழ்ந்த என் முகம் பார்த்து தலைச்சாய்த்தவாறே கேட்டாள்.

கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டு..”உண்மையை சொன்னால் நீ எழுந்து போக மாட்டாய் என நான் அஞ்சுகிறேன்”.. என்றேன்.

“இது போதும்”. என்றாள் சிரித்துக்கொண்டே.

நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு நீல நிறப் பூவைத் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை.

காதலின் விடியல்.

 

[youtube]https://www.youtube.com/watch?v=KZyn3KCMFI4[/youtube]

 

❤️

கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. தோளில் சாய்ந்தவாறே அவள் தூங்கிக்கொண்டிருந்தாள். தோளில் சாயும் தருணங்களில் எல்லாம் குழந்தையைப் போல் ஆகி விடுகிறாள். அப்படி என்ன இருக்கிறது என் தோளில்… என நிறைய முறை கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் “நீ அமைதியா ஓட்டிக்கொண்டே போ. நான் தூங்கணும் டா” என சொல்லியவாறு தூங்கி விடுகிறாள். ஒரு கோடைகால பின்னிரவில் அந்த நெடும் வழிச்சாலையில் நானும் என்னுடன் நீண்ட நேரமாக பயணித்து வரும் ஒரு நிலவும், சில இளையராஜா பாடல்களும் தனித்து இருந்தோம். என்னைப் பார்த்தவுடன் ஏன் இப்படி ஆகிவிடுகிறாய் எனக் கேட்டதற்கு அவளிடம் ஒரு மர்மமான புன்னகை தான் மிஞ்சியது. நான் புரியாமல் அவள் முகத்தையே உற்றுநோக்கி கொண்டிருந்தபோது.. மென்மையான குரலில் சொல்கிறாள்.. “அது அப்படித்தான். நான் விளையாடுவதை ரசிக்க நீ மட்டும்தான் இருக்கிறாய். உன் கண்களில் நான் விழும் போதெல்லாம் சிவந்துக் கொண்டே போகிறேன்” என்கிறாள். இப்போதெல்லாம் பேசுவதைவிட உன்னுடன் எங்கோ போய்க் கொண்டிருப்பது தான் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறாள். அந்த நெடுஞ்சாலை முடிந்து ஒரு மலைச்சாலையில் மீது கார் ஏற தொடங்குகிறது. எதிரே எந்த வாகனமும் வரவில்லை. எனக்கு முன்னால் பெரும்பெரும் பூதங்கள் போல மலைகள் அதனூடாக மலைக்காடுகள் என அந்தப் பின்னிரவு சற்று அச்சமாகத்தான் இருந்தது. தூங்கிக் கொண்டிருந்தவளை அப்படியே மறுபுறம் சாய்த்து வைத்துவிட்டு காரை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த மலைச் சாலையில் தனியே நின்று கொண்டிருக்கிறேன். அடர் குளிர் இரவு. இதேபோன்ற எத்தனை இரவுகள் இந்த மலைகள் மீது நிழலாக படிந்திருக்கும் என விசித்திரமாக யோசித்தவாறு நின்று கொண்டிருக்கிறேன்.‌ ஒரு காதல் தரும் இரவு மிக விசித்திரமானது. பூக்களோடு வருகிற உதிரிகள் போல அந்த இரவு முழுக்க ஏகாந்த நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஒரு முறை அவளது கூந்தலை நான் இரவு என வர்ணித்த போது.. அதை கலைப்பதற்கு தான் விடியலின் முன் வெளிச்சச் சுடர்கள் போல உன் விரல்கள் இருக்கின்றனவே என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறாள். அடிக்கடி சிரிக்காதே. நீ அழகாகிக் கொண்டே போகிறாய் என்கிறேன். என் முன்னந்தலையை மெலிதாக கலைத்து ஓடி விடுகிறாள்.

❤️

பயணம் மீண்டும் தொடர்ந்தது. திருப்பங்களாலும் ஏற்றங்களாலும் நிரம்பிய அந்த மலைச்சாலை வளைந்து நெளிந்த பாம்பின் உடலைப் போல வசீகரமான ஒன்றாக எனக்கு தோன்றியது. அந்த மலைச்சாலை இறுதியில் ஒரு ஏரிக் கரையில் முடிவடைகிறது. தூங்கிக் கொண்டிருந்த அவளை மெதுவாக எழுப்பினேன். கண்களை கசக்கி நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்கிறாள்.என்னால் எளிதாக சொர்க்கத்தில் என்ன சொல்லிவிட முடியும். ஆனால் நான் மௌனமாக கீழே இறங்கு என்று சொல்லிவிட்டு நானும் இறங்கினேன். இருவருக்கும் முன்னால் ஒரு படுத்திருக்கும் யானையை போல ஒரு ஏரி சாய்ந்து கிடந்தது.
அந்த அதிகாலை நேரத்தில் யாருமில்லா தருணத்தில் பனி போர்த்திய ஏரியை கண்ணிமைக்காமல் அவள் என் தோளில் சாய்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறாள். “இப்படி ஒரு இடத்திற்கு என்னை அழைத்து வரவேண்டும் என உனக்கு எப்படித் தோன்றியது” எனக் கேட்கிறாள்.” சில எண்ணங்களுக்கு காரணங்கள் கேட்காதே. நீ என்னுடன் இங்கே வரவேண்டும் என எனக்குத் தோன்றியது. அழைத்து வந்திருக்கிறேன்.” *என் கையில் ஒரு விடியல் இருக்கிறது. அதை இன்னும் சற்று நேரத்தில் என் தேவதைக்கு பரிசளிக்க நான் காத்திருக்கிறேன்” என்கிறேன். இந்த விடியல் போல பரிசுத்தமானது உலகில் ஏதுமில்லை என நான் சொல்லிவிட்டு அவளை பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கியிருந்தன. தன்னை யாருமே இதுவரை இப்படி நேசித்தது இல்லை என நினைக்க வைப்பது தான் காதலின் அதிதீவிர ரசவாதம். பனியின் ஊடாக மெல்லிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. ஏரிக் கரையில் இருந்த மரங்களிலிருந்து பறவைகளின் சிறகடிப்புகள், கூவல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விடியல் மழைத்துளி மண்ணில் கரைவது போல எங்களுக்குள் கரையத் தொடங்க .. நாங்கள் உருகத் தொடங்கி இருந்தோம். திடீரென என் கழுத்தில் மெல்லிய ஈரம் பதிய … நான் மெலிதாக புன்னகைத்துக் கொண்டேன். இதைவிட மேலான பரிசை அவளுக்கு நானும், எனக்கு அவளும் அளித்திருக்க முடியாது என்கிற நினைவில் அந்த நிமிடங்கள் உறைந்திருக்க..

விடியத் தொடங்கியிருந்தது.

 

எம்.எஸ்.வி -இசையால் நிறைத்த பெருமழை..

 

 

எழுபதுகளின் இறுதியிலும் , எண்பதுகளின் தொடக்கத்திலும் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் பிறந்த நாங்களெல்லாம் இளையராஜாவோடு வளர்ந்தவர்கள். ஏறக்குறைய எம்எஸ்வி காலம் அப்போது இறுதி காலத்தை எட்டியிருந்தது.நாட்டுப்புற அழகியலோடு இளையராஜா அள்ளிக்கொடுத்த மென் சோக செவ்வியல் இசை இரண்டு தலைமுறை காலத்து தமிழ்ச் சமூகத்தை கட்டிப்போட தொடங்கியதும் அந்த காலகட்டத்தில்தான் .

இளையராஜாவின் இசை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்பதாகவே நாங்கள் நம்பினோம். அவரது சமகாலத்து எத்தனையோ நல்ல இசையமைப்பாளர்கள் எங்களது அதிதீவிர இளையராஜா இசை நம்பிக்கைகளால் திரை உலகை விட்டே நகர்ந்து போய்விட்டார்கள். அதுபற்றி எல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்ததே இல்லை. எங்களைப் பொறுத்தவரையில் இளையராஜா தான் எங்களுக்கு சர்வ மயம்.

அந்தக்காலத்தில் எம்எஸ்வி முன்னொரு காலத்தின் இசையமைப்பாளராக மாறியிருந்தார். 60களின் ஆகப்பெரும் இசையரசன் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி தான். அவரும் ராமமூர்த்தியும் இணைந்து விஸ்வநாதன்-ராமமூர்த்தியாக‌ பல இசை உச்சங்களை தொட்டார்கள். நாங்கள் இந்த காலகட்டத்தை கடந்து பிறந்தவர்கள். எங்கள் பால்ய காலத்தில் எம்எஸ்வி பாடல்களை கேட்பது என்பது பழைய காலத்து ஆள் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் என்பதால் இளையராஜா தவிர நாங்கள் எதையும் கேட்பதில்லை.

ஆனாலும் எங்களுக்கும் ஒரு மூத்த தலைமுறை எங்கள் வீட்டிலேயே இருந்ததால் வேறுவழியின்றி அவ்வப்போது எம்எஸ்வி பாடல்களையும் கேட்க நேரிட்டது. அப்போது வானொலி தான் வீட்டுக்கு வீடு இசைக்கச்சேரி வைக்கின்ற முக்கிய பாடகர்.

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..” என்ற பாடல் வானொலியில் ஒலிக்க தொடங்கினால் போதும். அதுவரை ஏதேதோ பேசிக் கொண்டிருந்த என் அம்மாவும், அப்பாவும் அமைதியாகி விடுவார்கள்.

என் பதின்பருவத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான என் தோழி ஒருவள் டி கே ராமமூர்த்தி (விஸ்வநாதன்) இசை அமைத்து வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் வருகிற” கண்கள் எங்கே.. நெஞ்சமும் அங்கே .. என்ற பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பாள். “என்ன இருக்கிறது அதில்..? “என அந்தக் காலத்தில் நான் கேட்டபோது “என்ன இல்லை இதில் ..?”என சிரித்துக் கொண்டே சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனால் இன்று கேட்கிறபோது அவள் சொன்னது உண்மையாக தான் இருக்கிறது.

எனது சிறுவயதில் “நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா..” என்று சுசீலா வானொலியில் கசிந்துருகும் பொழுதில் என் தந்தையின் கண்கள் கலங்குவதை நான் கண்டிருக்கிறேன். ஒரு பாடலைக் கேட்டுவிட்டு கண் கலங்குவது என்பதை என் தந்தையார் மூலம் தான் முதன் முதலாக நான் அறியத் தொடங்கினேன்.

பிற்காலத்தில் நான் வளர்ந்த பிறகு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளிவந்தது அழகி திரைப்படம். இளையராஜாவின் இசை அந்தப்படத்தை ஒரு காவியமாகவே மாற்றி இருக்கும். அத் திரைப்படத்தில் படத்தின் நடுவில் வருகின்ற “உன் குத்தமா, என் குத்தமா..” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்குவதற்கு முன்பாக காட்சி அமைப்பில் ஒரு சிறிய மௌனத்தை உணர்வுத் தூண்டலுக்காக இயக்குனர் திட்டமிட்டு வைத்திருப்பார். பால்யக் கால காதலியான தனலட்சுமியை எதிர்பாராமல் சந்தித்த பார்த்திபன் அந்தப் பெண் வாழும் இடமான தெருவோரத்தில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கும்போது மழைத்தூறல் தூறத் தொடங்கும். பார்த்திபன் நனைந்து விடக்கூடாது என்பதற்காக அவரது காதலியான தனலட்சுமி ஆக நடித்த நந்திதா தாஸ் உணவுத் தட்டை குடை போல பிடிக்க.. அதை நிமிர்ந்து பார்க்கும் பார்த்திபன்.. என விரியும் அந்தக் காட்சியில் ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு திரையரங்கமே அமைதியாக இருக்கும் அப்பொழுதில், தனித்து ஒலிக்கும் இளையராஜாவின் குரல்” உன் குத்தமா.. என் குத்தமா.. ” என கேட்கத் தொடங்க
படத்தை பார்த்துக் கொண்டிருந்த என் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒருவர் அந்த சிறு மௌனத்தையும், அதற்குப் பிறகு வந்த இளையராஜாவின் குரலையும் கேட்டு தேம்பித் தேம்பி அழத்தொடங்கினார். அதுவரை நாகரீகம் கருதி கட்டிவைத்திருந்த எனது விழிகளின் கோட்டை தகர்ந்து கண்ணீர் எனக்கும் பெருக்கெடுத்தது.

ஒரு நல்ல இசை அப்படித்தான். அழ வைக்கும். ஒரு Guide போல நம் கரம்பிடித்து கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும். நாம் வேண்டுமென்றே நினைக்க தவிர்த்தவை எல்லாவற்றையும் வருந்தி அழைத்து நம் மனதில் அமர வைக்கும்.

அந்தச் சமயத்தில் எனக்கு பாதர் மார்ட்டினின் நினைவு வந்தது.
நான் பள்ளி பயின்ற காலங்களில் ஃபாதர் மார்ட்டின் என்கின்ற பாதிரியார் மன்னார்குடியில் இருந்தார். வானம் உயர்ந்திருக்கும் புனித ஆண்டவரின் தேவாலயத்தின் பக்கத்திலேயே அவரது வசிப்பிடம் இருந்தது. எனக்கு நிறைய கிருத்தவ நண்பர்கள். புனித பைபிளின் கவித்துவ தமிழில் நான் என்னையே இழந்து அலைந்து கொண்டிருந்த காலம் அது. அந்தத் தமிழை கேட்பதற்காகவே நான் தேவாலயங்களுக்கு செல்வேன்.

அங்குதான் பாதிரியார் மார்ட்டின் எனக்குப் பழக்கம். பள்ளி முடிந்து அவருடன் சென்று பேசிக்கொண்டிருப்பேன்.
அவர் தீவிரமான மெல்லிசை மன்னர். எம்.எஸ்.விஸ்வநாதனின் ரசிகர். பிராத்தனை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் அவர் ஏதோ ஒரு எம்எஸ்வி பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்.

ஒரு பின் மாலை நேரம். தேவாலயத்தை கடந்து நான் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது தூரத்தில் ஒலித்த “மாலைப் பொழுதின் மயக்கத்திலே.. ” என்கின்ற அந்த தெய்வீகப் பாடலை நான் கேட்டேன். பேனாசோனிக் டேப் ரிகார்டரில் கேசட் போட்டு கேட்டுக் கொண்டு தேவாலயத்தின் பக்கவாட்டுப் பகுதியில் இருந்த தனது வசிப்பிடத்திற்கு முன்னால் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறே மார்ட்டின் பாதர் மாலைப் பொழுதின் மயக்கத்தில் கண்மூடி மூழ்கியிருந்தார். ஏறக்குறைய முழு இருட்டு. அருகில் இருந்த ஒரு சிறு பீடத்தில் ஒரே ஒரு பெரிய மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. மெழுகுவர்த்தியின் மஞ்சள் நிற ஒளி பாதர் மார்ட்டின் முகமெங்கும் பரவி பரவச ஜோதியில் அவர் நிறைந்திருந்தார்.

நான் அமைதியாக சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு அவரின் எதிரே முன் இருந்த ஸ்டுலில் அமர்ந்தேன். அந்த வளாகத்தில் நானும், பாதரும், புனித ஆண்டவரும் மட்டுமே தனித்து இருந்தோம். நான் வந்தது கூட தெரியாமல் அவர் எம்எஸ்வியின் இசையில் மூழ்கிக் கிடந்தார். அந்த மாபெரும் வளாகம். தனிமை. சூரியன் மங்கிய மாலைப் பொழுது. மெழுகுவர்த்தி ஒளி,தனித்துவமான அந்த இசை என பலதும் சேர்ந்து என் மனநிலையை வேறு மாதிரி ஆக்கத் தொடங்கியது. முன்னொரு பிறவியில் எங்கேயோ கேட்ட பாடல் போல அந்தப் பாடல் இருந்தது.

இருந்தாலும் இளையராஜா தவிர இன்னொரு இசையையும் ரசிக்க முடியும் என்கின்ற ஒரு நிலையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனவே அந்தப் பாடலை கேட்பதில் இருந்து என்னை விலக்கிக் கொள்ள முயற்சித்தேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் ஒரு சுழி போல அந்த தெய்வீக இசை என்னை இழுக்கத் தொடங்க.. நானும் அமைதியாக அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒருவழியாக அந்த பாடல் முடிவடைந்தது. கலங்கியிருந்த கண்களோடு பாதர் கண்களைத் திறந்தார்.

சின்னப் புன்னகையோடு எனது வருகையை அங்கீகரித்து விட்டு அமைதியாய் இருந்தார். ஒரு நிறைவுக்கு பிறகான அமைதி போல அந்த உணர்ச்சி . சில கணத் துளிகளுக்கு பிறகு நிமிர்ந்து என்னை பார்த்து புன்னகைத்தார்.

இந்த எம்எஸ்வி இசை பெரும் போதைடா.. இந்த உலகத்தையே துறந்து விட முடிகிறது. ஆனால் எம்எஸ்வியை மட்டும் விட முடியல என்று எனக்கும் அவருக்குமாக சேர்த்து சொல்லிக் கொண்டார்.

நான் சற்றே வீம்புடன்.. அப்படி எல்லாம் இதில் ஒண்ணும் இல்ல. இப்ப இதையெல்லாம் தாண்டி வேற வடிவத்திற்கு இளையராஜா இசையைக் கொண்டு போய்விட்டார் என்றெல்லாம் நான் பேச தொடங்கினேன்.

இளையராஜா நல்லாதான் பண்றார். அவர் எம்எஸ்வியோட தொடர்ச்சி என்று பாதர் பதிலளிக்க.. அதிதீவிர இளையராஜா ரசிகனான என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இளையராஜா பெரிய ஆளா எம்எஸ்வி பெரிய ஆளா என்பது போல நான் குறைகுடம் போல தளும்பி விவாதிக்கத் தொடங்க.. பாதர் அமைதியாக எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பிறகு கிறிஸ்துமஸ் காலம் முடிந்து மார்ட்டின் பாதரை பார்க்க நான் சென்றிருந்தேன். ஊரிலிருந்து அவரைப் பார்க்க உறவினர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். மார்ட்டின் பாதர் அமைதியாய் தலைகுனிந்தவாறு அமர்ந்து இருந்தார். வந்திருந்தவர்களில் வயதான அம்மா ஒருவர் மார்ட்டின் ஃபாதரின் தோளைத் தட்டி அவருக்கு ஆறுதலாக ஏதோ சொல்லிவிட்டு கிளம்பலாம் என்பதுபோல மற்றவர்களைப் பார்க்க.. மற்றவர்களும் அமைதியாய் அங்கிருந்து வெளியேறினர். வாசலில் நின்று கொண்டிருந்த நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிற மார்ட்டின் பாதர்
எதற்காக தலைகவிழ்ந்து சோகமாக இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உள்ளே சென்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

நான் குரலைக் கனைத்தவாறு என்ன பாதர் என்ன ஆச்சு.. என கேட்டேன்.
பாதர் அமைதியாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். மெதுவாய் நிமிர்ந்து பார்த்தபோது அவரது கண்கள் முழுக்க கண்ணீர். என்ன பாதர் என்ன ஆச்சு என்று நான் பதட்டமாய் கேட்க.. எனக்கு வேண்டியவங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி இறந்து போயிருக்காங்க.. எனக்கு இப்பதான் தெரிய வருது என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

அமைதியாய் எழுந்து சென்ற அவர் வழக்கமான அவரது டேப் ரிகார்டரில் எங்கிருந்தோ தேடி ஒரு கேசட்டை எடுத்துப் போட்டார். சுசீலா அவர்களின்
நீண்ட ஹம்மிங்கோடு அந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

அதுதான் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” என்ற புதிய பறவை திரைப்படத்தின் பாடல். அதற்கு முன்னால் அந்தப் பாடலை நான் சில முறை கேட்டிருந்தாலும் இப்போது முதல்முறையாக கேட்பது போன்ற ஒரு மன உணர்ச்சி. பாதர் பாடலை ஒலிக்க விட்டு விட்டு அவரது சாய்வு நாற்காலியில் அப்படியே கண்மூடி சாய்ந்தார். பாடல் ஓடிக்கொண்டே இருந்தது. மூடிய மார்ட்டின் பாதர் கண்களிலிருந்து சாரை சாரையாய் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. பாடல் முடிந்த பிறகு இறந்துப்போனது யாரது என கேட்கலாம் என நான் காத்திருந்தேன்.

பாடலும் முடிவடைந்தது. நான் அவருக்கு ஆறுதல் சொல்லலாம் எழுந்து அவரது அருகே செல்ல முயற்சித்தபோது.. மீண்டும் சுசீலா அம்மாவின் குரல் கேட்கத் தொடங்கியது. ஆமாம் அதே பாடல்தான். மீண்டும் “பார்த்த ஞாபகம் இல்லையோ..” ஒலிக்கத் தொடங்கியது.

எழுந்த நான் அப்படியே அமர்ந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் பாடல் முடிய அதே பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஒரு கேசட் முழுக்க ஒரே பாடலை பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

மார்ட்டின் பாதர் அழுதுகொண்டே இருந்தார். இரண்டு மூன்று முறைகளுக்கு பிறகாக அந்தத் தனிமையும், பாதர் இருந்த மனநிலையின் அழுத்தமும் என்னை ஏதோ செய்ய.. நான் அப்படியே அமைதியாக எழுந்து என் வீட்டிற்கு புறப்பட்டேன்.

அந்த பாடலுக்கும், அவருக்குமான உறவு என்பது எப்படிப்பட்டது என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை. அவர் அழுததை பார்த்தால் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவருக்காகவே அந்தப் பாடலை உருவாக்கி இருப்பார்கள் போல என நம்பத் தோன்றியது.

கடந்த காலம் கடந்தவை தான் என்றெல்லாம் நாம் ஆயிரத்தெட்டு ஆறுதல்களை, நியாயங்களை, தர்க்கங்களை நமக்குள்ளாக சொல்லிக்கொண்டாலும் கடந்தவை எதையும் அவ்வளவு எளிதாக கடந்து விட முடியாது. வாழ்வின் சூட்சம புள்ளிகளில் ஏதோ ஒன்றில் சிக்கிக்கொண்டு, ஒரு உடைபட்ட அணை போல கடந்த கால நினைவுகள்
கட்டவிழ்க்கப்பட்டு பெருகும் போது.. எதனாலும் மறைக்க முடியாதத் துயர் இருட்டில் சிக்கிக் கொள்வது தான் மனிதமனம் கொண்டிருக்கிற துன்பியல் விசித்திரம்..

சில நாட்கள் கழித்து மார்ட்டீன் பாதரை பார்க்க தேவாலயத்தின் வளாகத்திற்கு சென்றிருந்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.‌ தொலைதூர ஊருக்கு மாற்றலாகிச் சென்று விட்டதாக சொன்னார்கள். அதன்பிறகு அவரை நான் எங்கும் பார்க்கவில்லை.

முதன்முதலாக எம்எஸ்வி இசையில்லாத அந்த வளாகத்தில் புனித ஆண்டவரும் நானும் மட்டுமே தனித்திருந்தோம்.
எப்போதும் கருணையின் கண்களை கொண்டிருக்கிற தேவ குமாரனின் விழிகளில் அன்று சோகத்தின் சாயல் படிந்திருந்ததாக எனக்குத் தோன்றியது.

அண்ணன் சீமானின் “அன்பு”

அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கிறதா என்பது போன்ற சந்தேகங்களை எழுப்புகிற ஒரு நிலப்பகுதி. தஞ்சை கடைநிலை பகுதியான சீர்காழி என்கின்ற ஒரு சிறிய நகரத்தைத் தாண்டி தில்லை நத்தம் என்கின்ற உள்ளடங்கிய ஒரு குக்கிராமம். ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் வழி விட முடியாத அளவிற்கு குறுகிய ஒற்றைச் சாலை. அந்தக் கிராமத்தின் தெருவில் கடைசி வீடாக அந்த பச்சை வண்ணம் பூசப்பட்ட எளிய வீடு இருந்தது.‌ மிகச் சிறிய வீடு.

அந்த வீட்டில்தான் தம்பி அன்பு கிடத்தப்பட்டு இருந்தான். அந்த வீடு கூட தம்பி அன்பிற்கு சொந்தமானது இல்லை. அது அவனது அண்ணன் வீடு . அண்ணன் சீமானையும் உலகம் முழுக்க வாழ்ந்து வருகிற நாம் தமிழர் உறவுகளை மட்டும் சம்பாதித்தால் போதும் என்று நிறைவுற்று இருந்த அந்த ‌ புன்னகை மாறாத முகத்துடையவன் அமைதியாய் சலனமின்றி படுத்திருந்தான். அவனது இயற்பெயர் சுரேஷோ.. ரமேஷோ.. அண்ணன் சீமான்தான் அவனுக்கு அன்புச்செழியன் என பெயர் சூட்டியிருந்தார்.

உள்ளடங்கிய அந்த நிலத்திலிருந்து ஏதோ ஒரு அழுத்தத்தில் எகிறித் தாவி அன்பு அண்ணன் சீமானை வந்து சேர்ந்திருந்தான். அந்த ஊருக்கு சென்றபோது எனக்குத் தோன்றிய ஒரே ஒரு சிந்தனை.. இங்கிருந்து எப்படி இவன் அண்ணன் சீமானிடம் வந்து சேர்ந்தான் என்பது தான்.

பூர்வக் கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை தான். ஆனாலும் அவனுக்கும் அண்ணன் சீமானுக்கும் இருந்த பிணைப்பு பூர்வக் கதைகளுக்கே உரிய காவிய பூர்வமானது.

அண்ணன் சீமானுக்கும் அவனுக்குமான உறவு மிகவும் தனித்துவமானது. அண்ணன் சீமான் என்ன சிந்திக்கிறார் என்பதை அவர் சிந்திக்கும் நொடியின் தொடர்ச்சியிலேயே அன்பு உணர்ந்து கொள்வான். அண்ணன் சீமானுடன் நெருங்கி இருக்கிற எங்களுக்கெல்லாம் அகப்படாத பிரத்யோக அலைவரிசை அவனுக்கு மட்டும்‌ அண்ணனோடு அமைந்திருந்தது.

அதை கண்சாடையாக எல்லாம் அர்த்தப்படுத்த முடியாது. அது ஒரு சிமிட்டல் அவ்வளவே. அந்த மெல்லிய விழி அசைவு அண்ணன் சீமானிடமிருந்து பிறந்த நொடியிலேயே அன்பு புரிந்து கொள்வான். அவர் எத்தனை மணிக்கு எங்கே செல்லவேண்டும் என்பதில் தொடங்கி அவரது உடை உணவு மருத்துவம் என அனைத்திலும் அன்பு முழுமையாய் நிறைந்திருந்து நிறைவேற்றுவான். அதுமட்டுமே அவனது வாழ்க்கை என அவன் அர்த்தப்படுத்தி இருந்தான்.

அவனுக்கு யாரைப்பற்றியும் எவ்வித குறையும் இல்லை. அடுத்தவரைப் பற்றி எந்த குறையும் இல்லாத அவனது ஆன்மா தெய்வத்தின் சாயல் உடையது. எவரைப் பற்றியும் அண்ணனிடம் அவன் தவறாக சொன்னதாக எங்களுக்கு தகவல் இல்லை. அதேபோல் அண்ணனிடம் அவனுக்குள்ள நெருக்கத்தை எங்கேயும் அவன் பயன் படுத்திக் கொண்டதில்லை. அவனது ஒரே தேவை.. அண்ணனின் நலம்.

ஒரு அரசியல் தலைவரின் ஓட்டுநர் என்கிற பொறுப்பு சாதாரணமானதல்ல. தொடர்ச்சியான நள்ளிரவு பயணங்கள், கடுமையான அலைச்சல்கள், ஓய்வின்றி கடும் உழைப்பை கோருகிற சூழல்கள் என மாபெரும் சவால்களை கொண்ட அந்த பொறுப்பினை அன்பு புன்னகையோடு நிர்வகித்து வந்தான்.

2016 சட்டமன்ற தேர்தல். ஒரு நாளைக்கு அண்ணன் சீமான் குறைந்தது 5 கூட்டங்கள் பேச வேண்டும். ஒவ்வொன்றும் இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் பயணத்தொலைவு உள்ள பகுதிகள். குறித்த நேரத்திற்கு அண்ணன் சென்றாக வேண்டும். வேட்பாளர்களும், மக்களும் காத்துக் கொண்டிருப்பார்கள். அண்ணன் உணர்ச்சி வேகத்தில் ஒரு ஊரில் அதிக நேரம் பேசி விட்டால் அடுத்த ஊரின் கூட்டம் பாதிக்கப்படும். மேடு பள்ளமான சாலைகள், சாலை விதியை சற்றும் மதிக்காமல் எதிரே வரும் வாகனங்கள் இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சீறிப்பாயும் அந்த வாகனம் பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டும். ஏனெனில் உள்ளே இருப்பவர் எதிர்கால தமிழகத்தின் ஒற்றை நம்பிக்கை. இதையெல்லாம் உணர்ந்து கொண்டு அன்பு அண்ணன் சீமானின் கருப்பு நிற அந்த வாகனத்தை ஒரு பறவையாக கருதி அவனுக்கே உரிய கவித்துவ ஓட்டுதல் மொழியோடு ஓட்டும்போது பார்க்கிற எங்களுக்கு அவ்வளவு பரவசமாக இருக்கும். அந்தத் தொலை தூரப் பயணங்களில் அண்ணன் ஓய்வு எடுத்துக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருக்கும்போது அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரேக்கை அழுத்தும் போது கூட நாசூக்காக அழுத்தி வேகம் எடுக்கிற அந்த அழகு அண்ணன் மீதான அவன் கொண்டிருந்த தாய்மைக்கு நிகரான மகத்தான பேரன்பின் வெளிப்பாடு.

அண்ணன் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் போதெல்லாம் அன்புவின் அலைபேசி எண் என் அலைபேசி திரையில் ஒளிரும். அண்ணன் விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார்கள். நீங்கள் எங்கே அண்ணா இருக்கிறீர்கள்.. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அண்ணன் திருச்சி வந்துவிடுவார். அதற்கு முன்பாக நீங்கள் விமான நிலையம் சென்று விடுவீர்களா என்றெல்லாம் தொடர்ச்சியாக கேள்விகளை அன்பு வைத்துக் கொண்டே போவான். அவன் திருப்திப்படும் வரை நாங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

அதேபோல அண்ணனோடு அவன் பயணிக்கும் காலங்களில்.. அண்ணன் குளித்துவிட்டு வரும்போது அவரது உடைகள் மற்றும் அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், என அனைத்தும் ஒருவித ஒழுங்கில் அன்பு வைத்திருப்பான். அந்த ஒழுங்கு அவனுக்கு மட்டுமே உரியது.

தேவையற்ற ஒரு சொல்லை அன்பு பேசியதாக நான் கவனித்ததில்லை. என்னுடைய பதிவுகளை அவனுக்கு பகிரியில் அனுப்பும் போதெல்லாம் படித்துவிட்டு உடனே பாராட்டி பேசுவான். அதுவும் அண்ணன் சீமானை பற்றி எழுதும் போதெல்லாம் அவனது மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

ஏனெனில் அண்ணன் சீமான் தான் அவனது உலகம். அதைத்தாண்டி அவனுக்கு எதுவும் இல்லை. அவன் குடும்பத்தைப் பார்க்க அதிகம் ஊருக்கு போனதாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை. அண்ணன் சீமான் ,அண்ணியார் கயல்விழி, மகன் மாவீரன் பிரபாகரன் என்ற அவனது உலகம் மிகச் சிறியது. இன்று அந்த உலகத்தை விட்டு தான் அவன் பிரிந்து போய் இருக்கிறான்.

அவனது உடலை கண்டு அண்ணன் சீமான் கதறி அழுதது சுற்றியிருந்த எங்களையெல்லாம் உலுக்கி எடுத்து விட்டது. தன் உடலிலிருந்து ஒரு பாகம் பிரித்து எடுக்கப்பட்டது போல அண்ணன் கதறித் துடித்தார். இந்த பிரிவினை எதனாலும் அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவர் திரும்பி பார்க்கும் பொழுதெல்லாம் அன்பு நின்றுகொண்டிருந்தான். இன்று அவன் இல்லாத வெறுமை அவருக்கு தாங்க முடியாத உயிர் வலியை தந்து விட்டது. இடுகாட்டிற்கு அவனை அவரை தூக்கிச் சென்றார். இத்தனை ஆண்டுகாலம் அவரை சுமந்து அன்பு அலைந்து திரிந்தான். அவனது இறுதிப் பயணத்தில் அவன் உயிராக நேசித்த அவனது அண்ணன் சீமான் அவனை சுமந்து எடுத்துச் சென்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அவனுக்கு நுரையீரலில் புற்று நோய் என்று நான் கேள்விப் பட்டபோது உண்மையில் பதறிப்போனேன். அவனை நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுபற்றி விசாரிக்க எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ஆனாலும் அதை புரிந்து கொண்ட அவன் நான் நல்லா இருக்கேன்னே.. என்று சொல்லி விட்டு சிரித்துக்கொண்டே கடந்து விடுவான். அண்ணன் சீமான் எங்கெங்கோ அவனுக்காக மருத்துவம் தேடி பேசிக்கொண்டிருந்தார். எப்படியாயினும் எவ்வளவு செலவு செய்தாலும் அவனை காப்பாற்றி விடவேண்டும் என துடித்தார். அவன் இல்லாத ஒரு உலகை நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை. ஆனால் அவர் எதை நினைத்து அச்சப்பட்டு துடித்தாரோ அது நடந்தே போனது.

கடைசியாக அவனை நான் பார்த்தது மகன் மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளில்.. என் கையை இறுகப் பிடித்தவாறே என்னோடு போட்டோ எடு அண்ணா என்றான். நான் என் அலைபேசியை அதற்காக தயார் செய்தபோது.. அவனே சொன்னான்.. இந்த போட்டோ ஒரு நாள் நீ எழுதுகிற பதிவுக்கு உனக்கு பயன்படும் அண்ணே.. என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.
சட்டென யாரோ என்னை சாட்டையால் அடிப்பது போல உணர்வு.. லூசு மாதிரி பேசாதடா.. என்று போட்டோ எடுக்காமல் நான் கோபத்தோடு திரும்பிவிட்டேன்.
என்னை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

நானும் அந்த புகைப்படம் எடுக்காமலேயே திரும்பிவிட்டேன்.

ஆனால்..அந்த நொடியில் சின்னப் புன்னகையோடு சிரித்திருந்த அவனது முகம் என்றும் மாறாமல் ஒரு புகைப்படம் போல என் ஆன்மாவில் உறைந்து விட்டது.

அன்பு காற்றோடு காற்றாய் கலந்துவிட்டான்.

தனது உதிர உறவை பறிகொடுத்துவிட்டு அண்ணன் சீமான் கண்கலங்கி தனியே அமர்ந்து இருக்கிறார்.

நினைவுகளின் அழுத்தத்தால்.. அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொள்கிறார் அவர்.

அந்த மூச்சுக்காற்றில்தான் அன்பு கலந்து இருக்கிறான் என்ற சிறு ஆறுதல் அவருக்கு ‌ வாழ்நாள் முழுக்க நீடிக்கப் போகிற அவன் இல்லாத வெறுமையின் துயரத்தை சற்றே ஆற்றட்டும்.

மெளனத்தின் மலர்

 

 

 

அலைவரிசை
தவறிய
உன்
தடுமாற்ற சொற்களுக்கு
மத்தியில்..

உனது மெளனம்
ஒன்று சின்னதாய்
பூத்துவிடுகிறது.

அந்த மெளனத்தின்
ஆழத்தில் தான்
எனது
மீளெழும்பலுக்கான
பாடலை நான்
கண்டடைய வேண்டும்.

புராதன காதலுணர்வின்
ஆதித்துயராக
அந்த மெளனத்தை
நான் நம்புகிறேன்.

அது அதுவாக
கலைவதற்குள்..

அல்லது நீயே
அதை
கலைப்பதற்குள்..

இப்போதே நீ போகலாம்.

மணி செந்தில்.

துளி-23

 

பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவம் சமூகத்தில் பல சிந்தனைகளை, விவாதங்களை உருவாக்குகின்ற குறியீடாக மாறி இருக்கிறது.

பொள்ளாச்சி நடைபெற்ற அந்த சம்பவங்கள் வெறும் ஒரு ஊரும்,சில இளைஞர்களும் சம்பந்தப்பட்டதல்ல. ஒட்டுமொத்த சமூகமே தங்களைத் தாங்கள் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டிய நிலையை இச்சம்பவம் உருவாக்கி இருக்கிறது. சாதி முதல் குழந்தை வளர்ப்பு வரை அனைத்தையுமே நாம் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

காதலித்து விடக்கூடாது. சாதி மாறி காதலிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்,நாடகக் காதல் , ஜீன்ஸ் காதல் என்றெல்லாம் குமறியவர்கள் எல்லாம் இச்சமயத்தில் மெளனமாக இருக்கிறார்கள். கவனிக்க.

விளம்பரங்களில் வரும் குழந்தைகள் கூட மதங்கள் கிழித்திருக்கும் கோடுகளை தாண்டி விடக்கூடாது என்று பதறியவர்கள் எல்லாம் மெளனமாக இருக்கிறார்கள்.கவனிக்க.
…..

சாதி ஆணவக் கொலைகளால் உயிரிழந்த இளைஞர்கள் தாங்கள் நேசித்த பெண்களுக்காக தண்டவாளங்களில் பிணமாக கிடந்தார்கள். அவர்கள் இவர்கள் போல் அல்ல. அழைத்து வந்த பெண்ணை முறைப்படி மணந்தார்கள். வாழ முயற்சித்தார்கள்.

நம்பி வந்த பெண்ணுக்காக உயிரையும் கொடுத்து நேர்மையாக நின்றார்கள்.

அவர்கள் காதலை காட்டி யாரையும் ஏமாற்றவில்லை.நண்பர்களை வைத்துக் கொண்டு யாரையும் கற்பழிக்கவில்லை.
…..

இத்தனை பெண்கள் பாதிக்கப் பட்ட பிறகும் கூட ஏன் அந்தப் பெண் அங்கே போனாள்.. ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி முடியும்‌. என்றெல்லாம் பேசுகிற ஆட்களின் பின்புலத்தினை கவனித்து வையுங்கள்.. சாதி மதம் போன்றவற்றின் பாதுகாவலர்களாக அவர்கள் இருப்பார்கள்.பெண் கல்வியை மறுப்பவர்களாக.. பெண்களின் மீதான வன்முறை நிகழும் போதெல்லாம் அந்த பெண் ஏன் அப்படி உடை அணிந்தாள் .. அவள் ஏன் செல்போன் பயன்படுத்தினாள் என்று பேசுபவர்களாக.. இருப்பார்கள்.

பெண்கள் மீதான வன்முறைக்கு சாதி மதம் எல்லாம் வரையறைக்கோடுகள் அல்ல. சொல்லப்போனால் சாதி – மதம் போன்ற அடிப்படை வாதங்கள் தான் இதுபோன்ற கேடுகளை பராமரிக்கும். பாதுகாக்கும்.

இதில் ஊடகங்கள் நிகழ்த்துகின்ற அரசியலையும் நாம் கவனிக்க வேண்டும். செய்தியை யார் முந்தித் தருவது, பரபரப்பை யார் தூண்டுவது, என்கிற போட்டியால் பொறுப்பற்ற முறைமையில் ஊடகங்கள் செயல்பட தொடங்கி விட்டன. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் உண்மைக்கு தாண்டிய உள் நோக்கங்கள் இருக்கின்றன என்பதை கடந்த காலங்களில் ஊடகங்கள் வெளிப்படுத்தியே வருகின்றன.

குற்றம் செய்த இளைஞர்களை தாண்டி அவர்களது குடும்பத்தினரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளிவருவது என்பது இன்னொரு கொடுமை. அந்த குடும்பத்தினரின் பொறுப்பற்ற தன்மை தான் இந்த குற்றவாளி இளைஞனை உருவாக்கியிருக்கிறது என்றாலும் கூட.. தற்போது தலைகுனிந்து இருக்கின்ற அந்த குடும்பத்தினரை நாம் மேலும் காயப்படுத்துவது என்பது சரியல்ல என்றே நான் கருதுகிறேன்.

…..

இதையெல்லாம் தாண்டி ஆண் குழந்தைகளை பெற்று வளர்க்கின்ற பெற்றோராகிய நமக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.

மகன்களோடு உரையாடுதல். ஆண் உடல் போன்றே பெண் உடலும் என்ற புரிதலை ஏற்படுத்துதல். பெண் சமூகத்தின் சக உயிரி என்ற மதிப்பீட்டை உருவாக்குதல். வீட்டில் இருக்கின்ற பெண்களை மதிப்புடன் நடத்துதல். சமூகப் பார்வையோடு சமூக கேடுகளுக்கு எதிரான உணர்ச்சிகளோடு பிள்ளைகளை வளர்த்தல்.
.
இதுவரை மகன்களோடு வெளிப்படையாக உரையாடாத பெற்றவர்கள் யாரேனும் இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது. தோழமை மிகுந்த அறிவுறுத்தல்களே நம் மகன்களை மிருக நிலையிலிருந்து காப்பாற்றும்.

நான் என் மகன்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள்..??

மணி செந்தில்.

நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா

நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு..
 புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
 நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழ விடு.
-பாப்லோ நெரூதா.
*
இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல திரிவார்கள். பால்யத்தின் பசி என்பது வாழ்வு முழுக்க அடங்காத நீட்சியை கொண்ட பெரும் பயணம். துன்பமும் துயரமும் கொண்ட இளம் வயது வாழ்வினுடையவர்களின் விழிகளை என்றாவது உற்று கவனித்து இருக்கிறீர்களா.. எதையும் சற்றே நிமிர்ந்து பார்க்க தயங்கும் அவர்களின் பார்வையில் எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரத்தின் நிழல் படிந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா..
அப்படியானால் நீங்கள் மார்லன் பிராண்டோவை புரிந்து கொள்வது மிக எளிது.
.
சில நாட்களாக அவரைப்பற்றி தேடி வாசித்து வருகிறேன். அவருடைய திரைப்படங்கள் பலவற்றை தேடிக் கண்டெடுத்து பார்த்து வருகிறேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள அல்லது தரிசிக்க  என்ன  இருக்க முடியும் என்கிற கேள்விக்கு.. மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை தரும் அசத்தலான பதில்.. அசலான மனிதன் எப்போதும் சமூகத்தின் சட்டகங்களை மீறுபவனாகவே இருந்து வருகிறான்.
.
மார்லன் பிராண்டோவை பற்றி பல்வேறு செய்திகள் நமக்கு நூலாகவும் கட்டுரைகளாகவும் புத்தகங்கள் வடிவத்திலும் இணையத்திலும் கிடைக்கின்றன. அவரே தன் வாழ்க்கையை பற்றி “Songs my mother rought me” என்கிற சுயசரிதையை எழுதி உள்ளார். மார்லன் பிராண்டோவை பற்றி தமிழில் அஜயன் பாலா ஒரு சிறப்பான நூலை எழுதியிருக்கிறார் .எதிர் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய உலக சினிமாவில் மார்லன் பிராண்டோவின் புகழ்பெற்ற பேட்டியின் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது
 தன்னை தீவிரமான அமெரிக்கா எதிர்ப்பாளராக காட்டிக் கொண்ட அவர் பூர்வகுடி மக்களுக்காக தீவிரமாக இயங்கியவர். அவரது எழுத்துக்களில் முழுக்க நிறத்தால் இனத்தால் பேதம் காட்டப்பட்டு சுரண்டப்பட்ட பூர்வகுடி மக்களின் உரிமைகள் பற்றிய ஆவேசமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .
.
எப்போதும் மீறல்களும், கோபமும் நிறைந்த மனிதனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்திருக்கிறார். சிறுவயதில் கோபக்கார தந்தைக்கும் குடிகார தாய்க்கும் மகனாகப் பிறந்த அவரது பால்யம் துயர நினைவுகளாலும் அலைகழிப்புகளாலும் நிறைந்தது. குடித்துவிட்டு எங்கோ மதுபான கடையில் விழுந்து கிடக்கிற தாயை தூக்கி வருகிற வேலையை இவரும் இவரது மூத்த சகோதரியும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கிறார்கள். சிறுவயதில் தன்னை கவனித்து கொள்ள வந்த பணிப்பெண்ணான எர்மி என்ற இளம் பெண்ணிடத்தில் தீவிரமாக ஈர்ப்புக் கொள்கிறார் மார்லன். அந்தப் பெண் சில மாதங்களில் காதலனுடன் ஓடிப்போக மிகுந்த தனிமை உணர்ச்சிக்கு உள்ளாகிறார். அந்தத் தனிமை உணர்ச்சி அவர் வாழ்நாளெல்லாம் நிழலென தொடர்ந்து வருகிறது. தான் பழகும் எல்லாப் பெண்களிலும் எர்மியை தேடி கண்டடைய முடியாமல் சோர்வதுதான் அவரது வழக்கமாக இருந்திருக்கிறது.
.
அவரது வாழ்க்கை முழுக்க பெண்களை தேடுவதும் அவர்களில் கொதித்துக் கொண்டிருக்கிற தனது உணர்ச்சி அலைகளை ஆற்றுப்படுத்த வழி தேடுவதுமாகவே மார்லன் இருந்திருக்கிறார். பெண்களை நீக்கி அவரது வாழ்வில் கண்டடைய கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று அவரே சொல்லிக் கொண்டாலும் சகமனிதனின் பால் ஒடுக்கப்பட்ட மக்களின் பால் அவர் கொண்டிருந்த அளவற்ற நேசம் ஆச்சரியகரமானது.
.
அமெரிக்க இந்தியர்களின் போராட்ட இயக்கங்களில் தன்னையும் ஒருவனாக அவர் இணைத்துக் கொண்டிருக்கிறார். மார்டின் லூதர் கிங் பேச்சை கேட்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். ஆகச்சிறந்த திரைப்பட நடிகன், ஆஸ்கர் விருதிற்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட திறமைசாலி என்றெல்லாம் அவருக்கு ஒரு புகழுச்சிகள் இருந்தாலும்.. பூர்வகுடி மக்களுக்காகப் போராடுவதை தான் தனது வாழ்நாள் கடமையாக அவர் கருதியிருக்கிறார். அமெரிக்காவை கண்டு பிடித்ததாக உலகவரலாற்றில் போற்றிக் கொண்டாடப்படும் கொலம்பஸ் ஸை மனிதநேயமற்ற கொலைகாரன் என்று மார்லன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவிற்கு பீகார் பஞ்சத்தை பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார். இந்த நிலத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகளே உலகத்தில் நடக்கிற அனைத்து விதமான கொடுமைகளை விட ஆகப்பெரும் கொடுமை என்று வருந்துகிறார்.இந்திய நிலத்தின் மாபெரும் திரைப்பட ஆளுமை சத்யஜித்ரே யோடு நெருங்கி பழகி இருக்கிறார். அவரது மிக நெருக்கமான இன்னொரு நண்பன் மைக்கேல் ஜாக்சன்.
ஆஸ்கர் விருதுக்காக இயங்குகிற இயங்குகிற நடிகர்களை பார்த்து ஏளனம் செய்கிறார் மார்லன்.தி காட்பாதர் படத்தில் நடித்ததற்காக அவர் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டார்.அந்த விருதைப் பெறும் நிகழ்ச்சியை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகம் முழுக்க கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக பயன்படுத்த மார்லன் பிராண்டோ முடிவு செய்தார். தனக்கு பதில் அந்த விருதைப் பெற சச்சின் லிட்டில் வெதர் என்கிற ஒரு பூர்வகுடி பெண்ணை அனுப்பி இதுவரை அமெரிக்க பூர்வகுடிகள் அடைந்திருக்கிற துயரங்களை உலகறிய செய்தார்.
தனித்த தீவு ஒன்றை விலைக்கு வாங்கி வசிக்க முயன்ற மார்லன் பிராண்டோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனைகளை தி காட்பாதர் படத்தின் நாயகன் மாஃபியா கிங்   டான் கார்லியோன் போலவே அனுபவித்தவர். தனது மகளின் காதலனை தனது மூத்த மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று 10 வருட சிறை தண்டனை அனுபவிக்க மகள் தற்கொலை செய்து கொள்ள தீரா மனவேதனையில் ஆழ்ந்து போனார் மார்லன் பிராண்டோ.
தனது 47வது வயதில் 70வயது கிழவனாக காட்பாதர் இல் நடித்து உலகப் புகழ் அடைந்த மார்லன் பிராண்டோ தனது வாழ்க்கையை மூடி வைத்த ஒரு புத்தகமாக கருதவில்லை. கேமரா முன் நின்றவுடன் தன்னை அந்த கதாபாத்திரத்திற்குள் உட் செலுத்துவதில் மார்லன் பிராண்டோ ஒரு ஜீனியஸ். அவர் நடித்த தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கிற திரைப்படத்தில் மிகு காம உணர்வு கொண்ட ஒரு மிருகம் போல வாழ்ந்து காட்டி இருப்பார். காட்பாதர் படத்தில் நடிப்பதற்காக தனது தாடையை மாற்றி அமைத்துக் கொண்டு ஒவ்வொரு அசைவிலும் ஒரு டான் போல வாழ்ந்திருப்பார். அவருக்கு எலிசபெத் டெய்லர் மர்லின் மன்றோ போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களோடு நெருக்கமான உறவு இருந்தது. கூட நடிக்கும் பல நடிகைகளோடு அந்தரங்க உறவு வரை வைத்துக்கொள்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இளம் வயதில் தன்னை ஏமாற்றிய எர்மி என்ற அந்தப் பணிப்பெண் தன்னை விட்டு போனதிலிருந்து வேறு எந்தப் பெண்ணிடமும் ஏமாந்து விடக்கூடாது என்கின்ற எண்ணத்தினாலேயே ஒரே சமயத்தில் பல பெண்களோடு.. ஒன்று போனால் இன்னொன்று என்ற வகையில் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக அவரே ஒத்துக் கொள்கிறார்.
.
ஏறத்தாழ என்பது வருடங்கள் வாழ்ந்த அவரது வாழ்க்கை துயரங்களும் ஏமாற்றங்களும் நிறைந்த கொடும் பாதை என்றாலும் அவர் அந்த உணர்ச்சிகளின் நெருக்கடி தீண்டாத திறன்மிக்க பெரும் ஆளுமை கொண்ட நடிகராக திகழ்ந்தார். திரையில் அவர் தோன்றிவிட்டால் அவரது ஆளுமை படாத சக கதாபாத்திரங்கள் இருக்க இயலாது. திரை முழுக்க தனது திறமையால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரிந்த அந்தப் பெரும் கலைஞனுக்கு வாழ்வின் சூட்சமங்கள் குறித்து இதுவரை தெரியவில்லை என்பதுதான் பெரும் சோகம்.
புகழ்பெற்ற இயக்குனர் பெர்னாண்டோ பெர்ட்டோலூச்சி இயக்கிய தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் என்கின்ற திரைப்படத்தில் மார்லன் பிராண்டோ நடித்த போது  கேமிராவின் வியூ பைண்டர் மூலம் அவரை பார்க்க முடியவில்லை .. கால்கள் உதறல் எடுக்கிற அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்துகிறார் என்று அந்த திரைப்படத்தின் கேமராமேன் மிரண்டு போனார். அதேபோல  பியூஜிடீவ் மைண்ட் என்ற திரைப்படத்தின் இயக்குனர் சிட்னி லூமட் மார்லன் பிராண்டோ நடிக்கும்போது ஒரு பறவை சத்தமிட்டால் கூட அதனை வெறுமனே தன் ஒற்றைப் பார்வையால் அடங்க செய்துவிடுவார் என்று பிரமிக்கிறார். அந்த அளவிற்கு நடிப்பில் ஆளுமை செலுத்திய மாபெரும் கலைஞனாக மார்லன் பிராண்டோ திகழ்ந்தார்.
இதையெல்லாம் தாண்டி அவர் அரசியலாக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக , அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அழுத்தமான தனது குரலை பதிவு செய்திருக்கிறார் என்ற காரணத்தினாலேயே ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டிய , அறிந்துகொள்ள வேண்டிய பெரும் இலக்கியமாக மார்லன் பிராண்டோ வரலாற்றில் உறைந்திருக்கிறார்.
இந்த மாபெரும் கலைஞனை தனது அசாத்திய எழுத்து மூலமாக தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள அஜயன்பாலா விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு சுய சரிதை நூலுக்குரிய வெறும் தகவல் களஞ்சியமாக இல்லாமல் குறைகளையும் நிறைகளையும் சொல்லி ஆராய்ந்து கொள்கிற ஒரு மனிதனின் குரலாக அஜயன் பாலாவின் இந்நூல் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுமைகளைப் பற்றிய வாழ்வியல் சுயசரிதை அறிமுகங்களை தமிழில் தனி வகைமையாக எழுதி வருகிற அஜயன் பாலாவின் இந்த நூல்  தமிழ் மொழிக்கான அவரது மிகச்சிறந்த கொடை.
(மார்லன் பிராண்டோ – தன் சரிதம் தமிழில் அஜயன்பாலா எதிர் வெளியீடு ,விலை ரூ 250)
Attachments area

தற்கால மருத்துவ நல விவாதங்களும்….தமிழர் மரபு மருத்துவமும்

 

 

 

சமீப காலமாக மரபு வழி மருத்துவத்திற்கும், ஆங்கில மருத்துவத்திற்குமான முரண் உரையாடல்கள் நடந்து வருகின்றன. மரபு வழி மருத்துவம் பிற்போக்குத்தனமானது, அறிவியல் தன்மையற்ற கையாளல்   என்றும் , ஆங்கில வழி மருத்துவம் அறிவியல் பூர்வமானது என்றும் ,நவீனமானது என்றும் அவரவர் பார்வைகளுக்கேற்ப ,அரசியல்- சமூக சிந்தனைகளுக்கேற்ப ஒருவருக்கொருவர் ஊடகங்களிலும், சமூக வெளி தளங்களிலும் விவாதித்து வருகின்றனர்.  ஆங்கில மருத்துவம் தான் அகில உலகையும் காக்கவும் மீட்கவும் வந்த இறுதி மீட்பர் போல சில முற்போக்கு முட்டுச்சந்துகள் கதறுவதையும் நம்மால் கவனிக்க முடிகிறது. சிறிய சிறிய நோய்களுக்குக் கூட ஆயிரக் கணக்கில் செலவு செய்தே தீர வேண்டும் என்கிற ஆங்கில மருத்துவம் தன் முறையைத் தவிர இதர மருத்துவ முறைகளை கடுமையாக நிராகரிப்பதன் நோக்கம், அதன் வணிகமயமும், லாப நோக்கமும் தானே தவிர வேறில்லை.

மனித உடல் குறித்தும், மருத்துவம் குறித்தும் சங்க காலம் தொட்டே தீவிர விழிப்புணர்வில் தமிழ்ச்சமூகம் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் பரவலாக காணக்கிடைக்கின்றன.

அற்றால் அளவறிந் துண்அ அகுதுடம்பூ

பெற்றான் நெடிதுய்க்கு மாறு

என்கிறது மருந்து என தனி அதிகாரம் கண்ட தமிழர் மறையான திருக்குறள். அளவறிந்து உண்பது குறித்து அன்றே சிந்தித்திருக்கிற தமிழர் மரபு முழுக்க முழுக்க அறிவியல் தன்மைகளை தனது பண்பாட்டு விழுமியங்கள் மூலம் கண்டடைந்து சிறந்திருக்கிறது.

மேலும்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து

என்கிறது குறள். அதாவது நோயுற்றவன், அந்த நோயை தன் ஆலோசனை மூலம் தீர்க்கும் மருத்துவர், மருந்து, அருகிலிருப்பவரின் அன்பும், பராமரிப்பும் இந்த நான்கும் ஒரு நோய்க்கு மருந்து என சொல்கிறது குறள். இதில் கவனமாக பார்க்க வேண்டியது நோயுற்றவனே மருந்துகளில் ஒரு வகை. என்கிறது திருக்குறள். ஒவ்வொரு மனிதனுள்ளும் இயற்கையாக இருக்கக் கூடிய நோய் எதிர்ப்பு உணர்வு, மருந்துகளை மிகச்சரியாக காலம் தவறாமல் எடுக்கக்க்கூடிய ஒழுங்கு என நோயுற்றவன் கூட மருந்தாக விளங்குகிறான் என்கிறது தமிழர் மறை.

இவ்வளவு நுட்பமாக மனித உடலை, நோயை, நோய் எதிர்ப்பு உணர்ச்சியை ஆராய்ந்திருக்கிற தமிழரின் மருத்துவ மரபை ஒரே அளவு கோலில் வைத்து பிற்போக்குத்தனமானது என பொங்கும் உளறல்களை எதிர்த்து நாம் தீவிரமாக எதிர்வினையாற்ற வேண்டிய கடமை இருக்கிறது.

ஒரு நோயாளியை கையாளுவதில் மருத்துவரின் கடமை என்ன என்பதை எளிமையாக இரண்டே வரிகளில் விளக்குகிறது தமிழர் மரபு.

நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச்செயல்

நோயை இன்னதென்று ஆராய்ந்தறிந்து, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து , அந்த நோயை தணிக்கின்ற வழியையும் கண்டறிந்து, அதை உடலுக்கு பொருந்தும் படியாக மருத்துவர் மருத்துவம் அளிக்க வேண்டும் என்கிறது குறள்/

மண்டுஅமர் அழுவத்து எல்லிக் கொண்ட

      புண்தேர் விளக்கின் தோன்றும்” (அகநானூறு-111)

என்ற சங்கப்பாடல் போர்களத்தில் காயம் பட்ட வீரனின் காயத்தின் அளவறிந்து மருத்துவம் பார்க்கிற மருத்துவ காட்சியினை விளக்குகிறது.

சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம்

      உள்நீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்

      தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அருந்துயரம்

      கண்ணீர் நனைக்கும் கடுமைய காடுஎன்றாள்

(கலித் தொகை)

போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உதிரப்போக்கு அதிகம் நிகழும் போது நா வறட்சி ஏற்படும் என்றும் நீர் தாகத்தால் தடுமாற்றம் ஏற்பட்டு துயரம் நேரிடும் என்றும் இக் கலித்தொகைப் பாடலில் மருத்துவ குறிப்புகள் காணப்படுகின்றன.

சித்தர் மரபு வழித் தொடங்கி, இயற்கை மருத்துவ செறிவுடன் இணைந்து தமிழர் மருத்துவம் பல சிறப்புகளைக் கொண்டது.

ஆனால் காலப் போக்கில் காணக்கிடைக்காத  அறிவுச்சுவடிகளை எல்லாம் யாகத்தில் போட வேண்டும் என ஆரியச் சதிக்கு ஆட்பட்டு தீக்கு தின்ன கொடுத்ததும் தமிழர்களே..

இன்றைய ஆங்கில மருத்துவமுறை உலக மயமாக்கலின், வணிகமயமாக்கலின் ஒரு அங்கமாக மாறிப் போய்விட்டது . இந்தியாவில் செயல்படுகிற மருத்துவர்களில் 50 % தகுதியற்ற, அடிப்படை தகுதியற்ற ,பயிற்சியற்ற மருத்துவர்கள் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஒரு எம்.பி.பி.எஸ் படிப்பு என்பது மருத்துவத்திற்கான பட்டமே ஒழிய அதுவே மருத்துவரின் தகுதியல்ல.ஒரு மருத்துவ படிப்பிற்கு தனியார் கல்லூரிகள் கோடிக்கணக்கில் வாங்கி பொருளீட்டும் இந்த வணிகச் சூழலில் தரமான மருத்துவர்கள் எவ்வாறு உருவாக முடியும் என்பதற்கு எவரிடத்திலும் பதில் இல்லை. இந்திய பெருநாட்டில் இன்றைய மாபெரும் வணிகமே மருத்துவம் தான் என்பதும், நாட்டின் மக்களை பெருங்கடனுக்கு ஆழ்த்துவதில் மருத்துவச் செலவுகளே முதலிடம் பிடிக்கின்றன என்பதும் புள்ளி விபரங்கள் காட்டுகிற அபாய சமிக்கைகள்.

குறிப்பாக உலக மயமாக்குதல் என்கிற பேராபத்து 1990-ல் தான் வேகமெடுக்க ஆரம்பித்தது. தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா போன்ற பன்னாட்டு வல்லரசு நாடுகளின் நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு எளிய மக்களின் உயிரில் விளையாடத் தொடங்கினார்கள்.ஊருக்கு ஊர் கார்ப்பரேட் தனியார் மருத்துவமனைகள் தோன்றத் தொடங்கின. அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது கேவலம் என்றும், மீறி எடுத்தால் நோய் முற்றி இறந்து விடுவோம் என்பதுமான உளவியல் பரப்புரைகள் வலிந்து பரப்பப்பட்டன. அரசியல்வாதிகள் கூட உடல் நலம் சரியில்லை என்றால் மிகப்பெரிய மருத்துவமனைகளில் மருத்துவம் எடுத்துக் கொள்ளும் செய்திகள் திட்டமிட்டு பெரிதாக்கப்பட்டன.  மருத்துவ நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை விற்க பல்வேறு சலுகைகளை, உல்லாச சுற்றுலாக்களை, பரிசுப்பொருட்களை மருத்துவர்களுக்கு வாரி இறைக்கின்றன. பெரும்பாலான மருத்துவர்களும் இவற்றை எல்லாம் துய்ப்பதற்கு இல்லாத நோய்களுக்கு இரண்டு பக்கம் சீட்டெழுதி எதற்கெடுத்தாலும் ஸ்கேன் என்றும் பரிசோதனை என்றும் நோயாளிகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக கருதத்தொடங்கி விட்டார்கள்.  கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரிகிற மருத்துவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு பண இலக்கு வைத்து ,மீட்டிங் வைத்து கேள்வி கேட்கிற நிகழ்வுகளும் இயல்புகளாகி விட்டன. சந்தைப் பொருளாதாரத்தில் மனித உயிரும், அது குறித்தான அச்சமும் தான் தற்காலத்தில் நடைபெறும் வணிகத்திற்கு கச்சாப் பொருட்களாக விளங்குகின்றன.

இந்த ஆங்கில மருத்துவ கொள்ளைகளுக்கு மாற்றாக பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் , ஆங்கில மருத்துவத்தின் பரப்பும், விளம்பரமும் ,பகட்டும் மற்ற மருத்துவ முறைகளை நாடாமல் மக்களை கண்கள் கட்டிய குதிரையாய் ஓட வைத்திருக்கின்றன.

நமது பாரம்பரிய மருந்துப் பொருளான மஞ்சளுக்கு கூட காப்புரிமை நம்மிடத்தில் கிடையாது. காலங்காலமாக நாம் பயன்படுத்திய நம் பூர்வீக மருத்துவ அறிவினை இன்று ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு பலிக் கொடுத்து விட்டு சிறிய தலைவலி என்றாலும் ஸ்கேன் இயந்திரத்தில் தலைகளை நுழைத்துக் கொண்டிருக்கிறோம். காசில்லாதவர்கள் தாங்களே கல்லறையில் சென்று படுத்துக் கொள்ள வேண்டும் என்கிற  நிலையை ஆங்கில மருத்துவமும், பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இன்று ஏற்படுத்தி இருப்பதை எவராலும் மறுக்க இயலாது.

மாற்று மருத்துவமுறைகளான ஹோமியோபதி, அக்குபஞ்சர்,சித்தா, ஆயுர்வேதிக் போன்ற முறைகளில் பல நோய்கள் குணமாவதை பல மருத்துவர்கள் வெற்றிக்கரமாக நிருபித்து இருந்தாலும் அச்செய்திகள் வெளிவராமல் மிகக் கவனமாக பாதுகாக்கப்படுகின்றன. இச்சூழலில் மாற்று மருத்துவத்தை பயின்ற மருத்துவர்கள் கூட நோய்கள் உடனே குணமாக வேண்டும், நோயாளிகள் தங்களை விட்டு போய் விடக்கூடாது என்கிற இலாபநோக்கத்திற்கு பலியாகி ஆங்கில மருத்துவத்தை உபயோகிப்பதையும் நம்மால் காண முடிகிறது.

இந்துத்துவ மத நம்பிக்கையாளர்களும், அடிப்படைவாதிகளும் முன் வைக்கிற மூட நம்பிக்கை மருத்துவ முறைகளை போன்றதல்ல தமிழரின் மரபு மருத்துவம். காலங்காலமாய் தமிழர் தனது வாழ்வியலில் கடைப்பிடித்து அறிந்த அறிவின் செழுமை. வேத காலத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்கள், சிசரியன் செய்தார்கள் என்றெல்லாம் கதை கட்டி இன்று பதஞ்சலி,ஹிமாலாயா போன்ற இந்துத்துவ வணிக நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக போட்டிப் போடும் இச்சூழலில் எப்போதும் இல்லாத நெருக்கடிகளை தமிழரின் மருத்துவ மரபு எதிர்க்கொண்டுள்ளது.

ஒரு தனிநபர் யூ டியூபில் பார்த்து தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் அதிக உதிரப் போக்கினால் அப்பெண் இறந்தார் என்கிற தனிநபர் முட்டாள் தனத்தைக் கொண்டே பாரம்பரிய மரபு மருத்துவமுறைகளை தடுக்க கோருவது மிகவும் கொடுமையானது. சுகப்பிரசவத்தைக் கூட சிசரியன் பிரவசங்களாக மாற்றி மனித உயிரை மூலதனமாகக் கொண்டு பணம் பறிக்கும் கொள்ளைக் கூடங்களாக தனியார் மருத்துவமனைகள் மாறி விட்ட பின்னர்… இக்கொள்ளைகளுக்கு எதிராக எந்த சிந்தனை முளைத்தாலும் கொள்ளைக்காரர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்…?

எத்தனையோ தலைமுறைகளாக கிராம மருத்துவச்சிகளால் சுகப்பிரசவம் கண்ட நம் மரபு சார்ந்த பிரசவ முறைகள் இன்னும் ஆய்வுக்குட்படுத்தி, நவீன முறைகளுக்கேற்ப மரபு சார் மருத்துவகல்விமுறைகள் மாற்றப்பட்டு ஆங்கில அலோபதி மருத்துவ முறைகளுக்கு மாற்றாக நவீன தமிழர் மருத்துவம் எழ வேண்டும் என்பதுதான் இம்மண்ணைச்சேர்ந்த நமக்கான விருப்பாக இருக்கிறது.

ஒரு பெண் செத்து விட்டாள். இனி சுகப்பிரசவத்தையே நினைத்துப் பார்க்க கூடாது . தனியார் மருத்துவமனையில் சிசரியன் தான் செய்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்திக்கிற இந்த முற்போக்கு வெங்காயங்களுக்கு தனியாருக்கு அள்ளிக் கொடுக்க கொள்ளையடித்த கோடிகள் இருக்கலாம். ஆனால் நமக்கு..?

ஆங்கில மருத்துவம் தான் அதி உன்னதமும் இல்லை. மற்ற மாற்று மருத்துவமுறைகளில் உண்மைகள் இல்லாமலும் இல்லை. உண்மையில் பல நோய்களுக்கு அலோபதியில் மருந்தே கிடையாது. அனைத்திற்கும் ஒரு வகையான ஆண்டிபயாடிக் என அழைக்கப்படும் எதிர் உயிரி மருந்துகளை வைத்துக் கொண்டு எளிய மக்களை சுரண்டிக் கொழுக்கும் ஆங்கில மருத்துவ முறைகளுக்கு மாற்றாக மாற்று மருத்துவ முறைகளும் உருவாக வேண்டும்.

பேரா. அ.மார்க்ஸ் எழுதிய மருத்துவ நல சிந்தனைகள் என்ற ஒரு நூல் இருக்கிறது. ஆங்கில மருத்துவ நிறுவனங்களின் கொள்ளை மற்றும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அலோபதி மருந்துகள் (பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை ) எத்தகைய கொடும் விளைவுகளை ஏற்படுத்தும், இம் மருந்துகள் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன என்பது குறித்து எழுதப்பட்ட விரிவான நூலை அனைவரும் வாசிக்க வேண்டும். அதே போல மருத்துவர் கு.சிவராமன் மற்றும் ம. செந்தமிழன் மரபு மருத்துவ சிந்தனைகள் குறித்த பல்வேறு முக்கியமான கட்டுரைகளை,நூல்களை எழுதி வருகிறார்கள். மருத்துவத்திற்கும், உணவிற்கும் உள்ள நெருங்குய தொடர்பை உணவு யுத்தம் என்கிற நூலில் விரிவாக எழுத்தாளர். எஸ்.இராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.

எந்த ஆங்கில மருத்துவ நிறுவனமாவது தன் மாத்திரை,மருந்துகள் தயாரிக்கிற உற்பத்தி விலையை வெளிப்படையாக அறிவிக்குமா என்கிற கேள்வியில் இருக்கிறது ஆங்கில மருத்துவமுறையின் வணிகக் கொடூரம்.

நவீன காலத்தில் மருத்துவ நல சிந்தனைகள் மேலோங்கி இருக்கின்றன.அலோபதி மருத்துவமுறையின் பணம் பிடுங்கும் கொள்ளை, அம்மருத்துவ முறையின் பின் விளைவுகள் ஆகியவற்றை கண்டு,அனுபவித்த மக்கள் பாரம்பர்ய,இயற்கை மருத்துவ முறைகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளார்கள். மீண்டும் தங்களை மரபு சார் வாழ்வியல் முறைகளுக்கு ஆட்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். இவ்வித மாற்றங்களே ஆங்கில மருத்துவத்தை மூலதனமாகக் கொண்டு கொள்ளையடித்து வரும் கொள்ளைக் கூட்டத்திற்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆங்கில மருத்துவ முறை மேற்கொள்ளும் மருத்துவர்களிலும் நேர்மையான மருத்துவ சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சளி பிடிக்கிறது என்று போனால் வீட்டில் மிளகு ரசம் வைத்து குடி என சொல்லும் சில அலோபதி மருத்துவர்களும் இருக்கிறார்கள். எனது குடும்ப மருத்துவர் ஆண்டிபயாடிக் மருந்துகளை எனக்கு எப்போதும் எழுதி தர மறுப்பார். காய்ச்சலா ..அது நான்கு நாளைக்கு இருக்கும். குணமாகி விடும், இது மாத்திரையா என கேட்பார். ஆனால் இப்படி உள்ளோர் மிகச்சிலர் தான் என்பதுதான் வேதனைக்கரமான உண்மை.

தற்காலத்தில் அலோபதி, ஹோமியோபதி,சித்தா, ஆயுர்வேதிக், உணவு முறைகள், உடற்பயிற்சி என பல்வேறு மருத்துவ முறைமைகள் இணைந்த கூட்டு மருத்துவ முறைகளே பயனளிக்கிறது என சமீபத்திய மருத்துவ நல சிந்தனைகள் வெளிப்படுத்தி வருகின்றன.

எனவே அலோபதி ஆங்கில மருத்துவம் தான் அனைத்திற்குமான தீர்வு என கதறும் முற்போக்கு அறிவுசீவிகளை இடது கையால் ஒதுக்கித்தள்ளி விட்டு, பல்வேறு மாற்று மருத்துவமுறைமைகளின் சிறப்பு அம்சங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். மேலும் பாரம்பரிய தமிழர் மரபு சார்ந்த மருத்துவ முறைகள் குறித்து ஆராய அரசே ஆய்வகங்களை உருவாக்கி, நம் மரபு சார்ந்த மருத்துவத்தை மீண்டும் செழுமைப்படுத்திட வேண்டும்.

ஆம் ..இதையெல்லாம் யார் செய்வது.. எது செய்யும்..

இம்மண்ணை, இம்மக்களை நேசிக்கக்கூடிய ஒரு மண்ணின் மகனிடத்து அதிகாரங்கள் ஒரு நாள் கிடைக்கும் பொழுது..மக்களின் துயர்களுக்கு மாபெரும் விடுதலைப் பொழுது துளிர்க்கும்.

Page 7 of 15

Powered by WordPress & Theme by Anders Norén