பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம்

கார்த்திகை தீப நினைவுகள்

8f34a6a2d9e9878404f13400d0c4d05a
அன்றைய நாட்கள் நிலாக்கால பொழுதுகளால் நிரம்பி வழிந்த கனவு நாட்கள். பதின் வயதிற்கே உரிய அச்சமின்மையும், பூக்களின் இதழ்களைக் கூட திறந்து பார்க்கும் ஆர்வமும், ஏதோ சொல்ல முடியாத நாணமும் ஆடைகளாய் உள்ளத்தில் போர்த்தியிருக்க.. உடலில் அணிந்திருக்கும் சட்டையை ஒழுங்காக அணியத்தெரியாத அல்லது அணிய கூடாது என்ற வைராக்கியத்துடன் ( ?) திரிந்த நாட்கள்.
 
எங்கள் ஊர் மன்னார்குடி. பெரிய ஊராகவும், சிறிய ஊராகவும் அறிமுகப்படுத்த முடியாத நடுத்தரமான அழகான ஊர். இன்றைய தினம் அது வேறு பெயர் வாங்கி இருக்கிறது என்பது வேறு விஷயம். அகலமான தெருக்கள். பெரிய வற்றாத தெப்பக்குளம். கூட்டம் இல்லாத பெரிய கோவில் . மக்கள் தொகை சற்றுக் குறைவான நடமாட்டம் என எங்கள் ஊரைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள எனக்கெல்லாம் ஒரு லட்சம் காரணங்கள் உண்டு. இந்த லட்சக் காரணங்களுக்கு மேல் லட்சத்து ஒரு காரணமும் எங்களிடம் இருந்தது.
 
பதின் வயதுகளில் நண்பர்கள் புடை சூழ சைக்கிளில் ஊரைச் சுற்றி சுற்றி தார் சாலையை தேய்க்கும் பணியை நாங்கள் முழு நேரப் பணியாக செய்துக் கொண்டிருந்தோம். நான் ,சிராஜ்தீன்,சிவராஜ், ஜோஸ்வா,கணபதி,மாரிமுத்து, சாம் சதீஸ்,சாலமன், என்று எங்களுடைய குழாமிற்கு மிகவும் பிடித்த நாட்களில் மிகவும் பிடித்த நாள் கார்த்திகை.
 
மண்ணை நனைய வைத்து செழிக்க வைக்கும் குளிரான மாதத்தில்.. ஒவ்வொரு இல்லமும் புத்தெழில் கொள்ளும் நாள் தான் கார்த்திகை திருநாள். மினுக்கும் சுடர்களோடு தீபமேற்ற சற்றே வேகமான நடையுடனும், நாணமும்,பூரிப்பும் பூசிக் கொள்ளும் முகத்தோடு,பட்டு பாவாடை சலசலக்க, வெள்ளிக் கொலுசொலிகளுடன் ,முணுமுணுப்பு அளவினை தாண்டாத மென்சிரிப்பு உரையாடல்களுடன்.. வலம் வருகிற தேவதைகளால் வீதிகள் திருவிழாக் கோலம் கொள்ளுகிற நாள்.
 
இளையராஜாவின் படைப்பூக்க நாட்களின் உச்சமும், ஏ.ஆர்.ரகுமானின் புதிய இசை பிறப்பும் ஒருங்கே இணைந்து எங்களது நாட்களை கனாக்காலமாக ஆக்கி வைத்து இருந்தன.
 
கனவு மினுக்கும் விழிகளோடு ஊரைச்சுற்றி வரும் எங்களுக்கு ஒவ்வொரு தெருவிலும் நண்பர்களும் உண்டு. எதிரிகளும் உண்டு. எதிரிகள் கொஞ்சக் காலத்தில் நண்பர்களாக, நண்பர்கள் எதிரிகள் ஆக எது நட்பு, எது பகை என எதுவும் வகை தொகை புரியாத வசந்த காலம் அது. அக்காலத்தில் தான் ..
 
அந்த கார்த்திகை நாளில்.. ஊரை சுற்றி விட்டு சற்றே தாமதமாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
சைக்கிளை நிறுத்தி விட்டு எங்கள் வீட்டு வாசலுக்கு வந்த போது ஒரே ஒரு தீபம் அணையாமல் எரிந்த வண்ணம் இருந்தது.அதன் அருகே ஒரு தேவதை ஒன்று சதா எண்ணை ஊற்றிக் கொண்டே இருந்ததை கவனித்தவாறே..சற்றே புன்னகையுடன் சற்று நகர்ந்து வீட்டினுள் நுழைய முயற்சித்தேன்.
 
ஏய்..நில்லு..
 
என்ன..
 
எங்க சுத்திட்டு வர்ற…
 
இல்ல..பிரண்ட்ஸோட…
 
ஏன் உன்னைப் போலவே உன் பிரண்ட்ஸ்க்கும் வீடு இல்லையா…இப்படி சுத்திட்டு வரீற்ங்க
 
இதையெல்லாம் கேட்க நீ யார் என்ற கேள்வி தொண்டை வரைக்கும் வந்து அணைந்துப் போனது.கேட்டு விடலாம் தான். ஆனால் அதற்கும் நான் தான் பதில் சொல்லவேண்டும் என்பதுதான் அவளை நோக்கிய கேள்விகளுக்கெல்லாம் அவள் எனக்களித்த பதில்.
 
அந்த கேள்விக்களை எல்லாம் எதிர்க்கொள்ளலில் ஒரு பரவசம் இருக்கத்தான் செய்தது. அது ஒரு மாதிரியான கட்டளைக் குரல்.நான் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் என்பது போன்றதான.. குரல்..
 
வீட்டினுள் இருந்து என் அம்மா வெளியே வந்தார்கள். ஏண்டா.. நாளும் கிழமையுமா வீட்ல தங்குறது இல்லையா…எங்கேடா போன..
 
இல்ல பிரண்ட்ஸோட..
 
ஏன் உன்னைப் போலவே உன் பிரண்ட்ஸ்க்கும் வீடு இல்லையா…இப்படி சுத்திட்டு வரீற்ங்க
 
ஒரே கேள்வி. இருவரிடமிருந்து.
 
சட்டென புன்னகையுடன் திரும்பிப் பார்த்தேன். அவள் போய் இருந்தாள்.
 
பின்னொரு நாளில் தான் நினைத்துக் கொண்டேன். நேசிக்கும் பெண்களில் எல்லாம் அம்மாவை தேடுவதைதான் காதல் என அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ….
 
-மணி செந்தில்

புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..

என் அன்பிற்கினிய கல்யாண்..,
இந்த பொழுதில் இமைகளில்
துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு..
உன் உயிர் அண்ணனாகிய
நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் .
என் பாசமுத்தங்கள் உனக்கு..
ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ்
போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் .
நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற
ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட,
நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில்
கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட,
நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக்
கொடுத்திருக்கிறோம் …
புரட்சி என்பது சொல் அல்ல. அது வாழ்க்கை
என புரிந்து வைத்திருக்கிறோம்..
நம் உயிரையும் விட மகத்தானது-இம் மொழி
காக்க, இந்த இனம் காக்க  தன்னுயிர் தந்த
மாவீரர்களின் கனவு என்பதனை தெரிந்து
வைத்திருக்கிறோம்..
எத்தனையோ இரவுகளில் தனியே பயணப்படும் போது
நாம் நமது தாய்நாட்டிற்காக,தாய்மொழிக்காக
நமது அடுத்த தலைமுறையின்
ஒளிமயமான எதிர்காலத்திற்காக
உழைக்கிறோம் என்கிற பெருமிதம் நம்முள் பொங்கும்..
சராசரி வாழ்வில் கொண்டாடி
மகிழ்ந்திருக்க வேண்டிய சுகங்களை நாம்  இழந்தோம்..
நாம் இரவுகளை இழந்தோம்..
பகல்களில் பறந்தோம்..
சராசரி இளைஞர்களின் ஆவலான
 பணம் தேடும் வேட்கையை இழந்தோம்..
ஏன்   ,,சில சமயங்களில் நம் குடும்பத்தினையும்,தாய் தந்தையையும்
மறந்து நின்றோம்… நாம் சராசரிகள் அல்ல ..அல்ல என்பதனை
உலகிற்கு உரக்கச் சொன்னோம்..
இவையெல்லாம் எதற்காக..
புன்னகையுடன் நீ நெஞ்சு நிமிர்த்தி சொல்வாய்..
எம் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரனுக்காக..
ஆம்..உண்மைதான்..
தேசியத்தலைவர் வேறு..தேசம் வேறு இல்லை.
அவர் வேறு..இந்த இனம் வேறு இல்லை..
அவர் தான் வீழ்ந்தும் கிடக்கும்
இந்த இனத்தின் மீள் எழுதலுக்கான அடையாளம்..
அந்த அடையாளத்தினை நம் ஆன்மாவில் சுமந்து…
உயிருக்குயிராய் நம்மைப் போன்று தலைவரை
நேசிக்கின்ற ,நம் அண்ணன்
சீமான் அவர்களின் சீரிய தலைமையில்
நாம் களத்தில் நிற்கிறோம்.
அண்ணன் பிரபாகரனின்
கனவினை சுமக்கும் தம்பியாக
அண்ணன் சீமான் நிற்கிறார்.
மாவீரர்களின் மூச்சுக்காற்று
அண்ணன் சீமானை உறங்க விடுவதில்லை..
சுழலும் சொற்களாக…கம்பீர முழக்கங்களாக
சதா ஒலிக்கும் அண்ணன் சீமானின் குரல் தான்
இனி தமிழினத்தின் முகவரி..
அனுதினமும் இந்த இனத்திற்கான பெருங்
கனவினை சுமக்கும்
அவர் வரைந்திருக்கின்ற வானத்தில்
தான் ஒளிரும் சிறகுகளோடு
நாம் பறக்கிறோம்..
நமக்குள்ள இலட்சிய தாகம் பெரிது .
கொண்டிருக்கும் கனவு பெரிது..
விலை தலையே ஆனாலும் தரத் துடிக்கும்
தாகம் பெரிது..
ஆம். இலக்கு ஒன்று தான்.எம்மினத்தின் விடுதலை.
சராசரிகளை போல நாம் வாழ விரும்பவில்லை
என்பதை நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும்
உறுதிப்படுத்தினோம்.
உரக்க பேசுகிறோம்..நம் மொழியில் கோபமும்
வேகமும் நீடிக்கிறதா என்பதை ஒவ்வொரு
நொடியிலும் கவனம் கொள்கிறோம்..
இலட்சிய தாகம் கொண்ட போர் வீரனாக
நமது வாழ்வை நாம் அமைத்துக் கொண்டு
விட்டோம்.
தலைமையின் மீது ஆழ்ந்த பற்றுறுதி
கொண்டிருக்கும் கொள்கை மீது தீவிர
விசுவாசம் என நமக்கான கோடுகளை நாமே
வரைந்து கொண்டு விட்டோம்..
நாம் வாழும் ஒவ்வொரு நொடியையும்
இந்த இனத்திற்காக என எழுதி வைத்து விட்டோம்.
இந்த நிலையில் தான்
செளமியா வருகிறார்.
உன் இணையாக..துணையாக..
இனி உன் பயணத்தின் நிழலாக..
ஒரு இலட்சிய வீரனுக்கு வாழ்க்கைப்
பட்ட வாழ்க்கை துணைவியும்
ஒரு இலட்சிய வீராங்கனையே..
இரவு நேர பயணம் முடிந்து வரும்
கணவனிடம் எவ்வித சலிப்பும் காட்டாமல்
கூட்டம் எப்படி..?
சீமான் மாமா எப்படி பேசினார் ?
என்பதை அவர்கள் தான் எவ்வித சங்கடமும்
இல்லாமல் கேட்கிறார்கள்.
குழந்தை படிக்கும்
பள்ளியில் தந்தை வரவில்லையா என கேட்கும்
ஆசிரியரிடம் அவர் முக்கிய கூட்டத்திற்காக
போய் இருக்கிறார் என கண்ணியத்தோடு
அவர்கள் தான் பதில் சொல்கிறார்கள்…
அவசர அவசரமாய் ஊருக்கு கிளம்பும்
போது வீட்டுக்குள் நிலவும்
பொருளாதார சங்கடம் பற்றி பேசாமல்
பெருமை காக்கிறார்கள்..
அவர்கள் நம் தாய்மொழி போலவே
பெருமை வாய்ந்தவர்கள்..
பொறுமை வாய்ந்தவர்கள்..
பாரங்களை தன் மீது சுமத்திக்
கொண்டு சமூக பாரம் தூக்கித்
திரிய நம்மை வெளியே அனுப்புகிறார்கள்..
எம்மால் எமது மொழியையும், நாட்டையும்
எம் உயிருக்கு மேலாக நேசிக்கும் எம்மால்
எம்மோடு வாழ்வில் பயணிக்கும் சக தோழமையை
தாய்மையின் மற்றொரு வடிவத்தினை நேசிக்க முடியாதா என்ன..?
என் தம்பி கல்யாண் செளம்யாவை உயிராக..
உயிருக்கு உயிராக நேசிப்பான் .
அந்த வகையில் இன்று எம் இல்லத்தில்
நுழைந்திருக்கும் செளமியா மிகவும் கொடுத்து
வைத்தவர் .
இனமானம் சிறக்க..தமிழ்க் கொண்டு
களமாடும் என் தம்பி கல்யாண் அவர்களுக்கு
செளமியா அவர்கள் மொழியாய்..விழியாய்
இருக்க வேண்டும்..
அவனால் ஆக வேண்டிய
காரியம் நிறைய இருக்கிறது..
வீரியமாய் செளமியா இருப்பார்.
நம் அண்ணன் சொல்வது போல
நமது பயணம் வெகு தொலைவு..
அந்த பயணத்தின் முதன்மை தம்பியாய்..
அண்ணன் சீமானின் படை வலிமையாய்
தம்பி கல்யாண் விளங்குவான்.  அவன் உள்ள
உறுதியாய்..இல்லப் பெருமையாய்
செளமியா விளங்குவார்..
நாம் தமிழர் என்கிற இனமானத்திற்கான
இந்த பெரும் குடும்பத்தின் பெருமையை காப்பார்.
என்னால் வெகுவாக நேசிக்கப்படுகின்ற
இருவரின் இணையேற்பு நிகழ்விற்கு வர
முடியாமல் போனது எனக்கு வெகுவாக
வலிக்கிறது..
எம்மினம் போல
நான் விழுந்திருக்கிறேன்.
மீண்டும் உத்வேகத்தோடு
எழுவதற்காக..
எழுவேன்..
அண்ணன் சீமானின் உயரும் கரங்களில்
சுடர் விடும் ஒளியாக நாங்கள் இருப்போம்..
அவரின் இனமானம் காக்கும் இந்த மகத்தான
கனவுப் பணியில் களமாடும் ஆயுதங்களாக நாங்களே
 திகழ்வோம்..
இல்லறம் ஏற்கும் என் அன்பு தம்பிக்கும்,
எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கும்
செளமியா அவர்களுக்கும்
எனது புரட்சிக் கர வாழ்த்துக்கள்..
தோளோடு தோள் சேர்த்து …வாழ்வோடு
தமிழ்த் தோய்ந்த பெருமை கொள்க..
நாம் தமிழர்.
அன்பின் மகிழ்வில்..
மணி செந்தில்..
மாநில இளைஞர் பாசறை செயலாளர்.
 நாம் தமிழர் கட்சி

நன்றிகளோடு விடைபெறுகிறேன்..

அன்புமிக்க தமிழ் மணம் உறவுகளுக்கும்..அதன் பெருமை வாய்ந்த நிர்வாகிகளுக்கும்..

என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்து பெருமைப்படுத்தியதற்கு நன்றி. என் உணர்வுகளை கடந்த ஒரு வார காலமாக உங்களோடு பகிரும் வாய்ப்பை பெற்றது என் வாழ் நாளின் மிக பெருமைக்குரிய நாட்கள். ஒவ்வொரு நாளும் 500க்கும் மேலான பார்வையாளர்களை என் தளம் பெற்றது. மிகப் பெரிய வெளியில் எனக்கான கருத்துக்களை நான் பரப்புவதற்கான வாய்ப்பினை தமிழ் மணம் எனக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் மணத்தில் என் பதிவுகளை கண்டு நான் தேடிக் கொண்டிருந்த என் பால்ய கால நண்பன் எனக்கு கிடைத்தான். தொடர்பு விட்டிருந்த என் மிக நெருக்கமான என் தோழி ஒருவர் கிடைத்தார். கும்பகோணம் பள்ளி விபத்து பகிர்விற்காக …தமிழ் மணம் உறவுகளுக்காக பிரத்யோகமாக நான் குழந்தைகளின் பெற்றோர்களை பேட்டி எடுத்ததும், அதை தளத்தில் வெளியிட நானே இணையத்தில் தேடி தொழில் நுட்பம் அடைந்ததும் மிக வித்தியாசமான அனுபவங்கள். இந்த வாரத்தில் எம் அண்ணன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்தது. அடுக்கடுக்கான நெருக்கடிகளாலும், மிகத் தீவிர அரசியல் பணிகளாலும் எனக்கு மிகவும் கால பற்றாக்குறை நிலவியது . இருந்தும் ஏதோ ..எழுதி இருக்கிறேன். என் மின்னஞ்சல்களில் குவிந்த ஆதரவுதான் தமிழ் மணம் எத்தகைய வளர்ச்சியும், பரவலையும் பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக உணர முடிந்தது.

தமிழ் படித்து, தமிழ் எழுதும் தாங்கள் வீழ்ந்து விட்டிருக்கிற நம் இனத்தின் இன்றைய நிலையில் உங்களுடைய ஆற்றலையும், அறிவினையும் நம்மினம் மீள் எழுவதற்கான பணிகளில் செலவழிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மகிழ்வாக, கொண்டாட்டமாக ஒரு பத்தி எழுத ஆசைதான் . ஆனால் எம் இனம் இருக்கும் இன்றைய நிலை என்னை நிம்மதியிழந்த ,அலைகழிப்பிற்கு உள்ளான மனிதனாக , படைப்பாளனாக மாற்றி இருக்கிறது.

கால நதியின் ஏதோ ஒரு தருணத்தில் தமிழர்களாகிய நாமெல்லாம் மகிழ்ந்து கொண்டாடுகின்ற சூழல் வரும் என்ற நம்பிக்கையில் தற்போது நான் விடை பெறுகிறேன். தொடர்ந்து தமிழ் மணத்தின் வாயிலாக உறவினை தொடர்வோம். என்னால் மறுமொழி திரட்டியை பயன்படுத்த தெரியவில்லை. யாராவது உதவினால் நான் மகிழ்வேன்.

அண்ணன் சங்கரபாண்டிக்கு என்றும் அன்புடைய தம்பியாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

நாம் தமிழர்.

நன்றி.
தங்கள்

மணி .செந்தில்

எம்.வி.வெங்கட்ராம்….. பின்னிரவின் மழை…

மே 18…

காலை 10.30 மணி அளவில் கலை விமர்சகர் தேனுகா அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு…இன்று எம்.வி.வி அவர்களின் பிறந்தநாள்….அவர் வீட்டிற்கு சென்று மரியாதை செய்து விட்டு வருவோமா என்று அவருக்கே உரித்தான மென்மையான குரலில் கேட்டார்…

தேனுகாவிற்கு என்று சிறப்பான குணங்கள் பல உண்டு…. இலக்கிய மரபுகளை….சிற்ப தொன்மத்தை ..நவீன ஒவிய கலையின் உச்சத்தை அரசியல் கலப்பின்றி தெளிவாக அறிந்த அவருக்கு …உள்ள முக்கிய குணம்..இலக்கியவாதிகளை உள்ளன்போடு போற்றுவது…
அவருடைய அழைப்பில் நானும் நெகிழ்ந்து தான் போனேன்…இருக்காதா பின்னே…..

எம்.வி.வி என்று அழைக்கப் பட்ட எம்.வி .வெங்கட்ராம் என்ற அந்த எழுத்தாளரின் வீச்சை நானும் உள்வாங்கி இருக்கிறேன்…அவருடைய காதுகள் என்ற நாவல் என் பல நாள் தூக்கத்தை திருடி இருக்கிறது…வேள்வி தீயும் ,அரும்பும் என்னை மிகவும் ஏற்கனவே பாதித்து இருக்கின்றன….அவருடைய வியாசர் படைத்த பெண்மணிகள் –மகாபாரதத்தின் பெண் கதாபாத்திரங்கள் குறித்த மீள்புனைவு..ஒரு பெண் போராடுகிறாள் என்ற மிகப் பெரிய நாவலும் வாசிக்க வேண்டிய ஒன்றுதான்…காதுகள் நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது…குழந்தைகளுக்காக பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்ட நாட்டுக்குழைத்த நல்லவர்கள் என்ற தொகுதியில் பல புத்தகங்களை மிக எளிமையாக ,தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்ததும் எம்.வி.விதான்.

எம்.வி.வி கும்பகோணத்தில் அறுபதுகளில் முகிழ்ந்த இலக்கிய விருட்சங்களில் மிக முக்கியமானவர்.தி.ஜானகிராமன்.,கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி,கு.பா.ரா என்று கும்பகோணம் பல பெருமைகளின் உச்சத்தை எட்டியுள்ளது…தி.ஜானகிராமனின் புகழ் பெற்ற நாவலான மோகமுள்ளில் எம்.வி.வி ஒரு கதாபாத்திரமாகவே வருவார்..

எம்.வி.வியும் சரி…அவர்களது நண்பர்களும் சரி..தேர்ந்த கலாரசிகர்கள்..பெண்களை மிகவும் அசலாக பதிவு செய்தவர்கள்….கொந்தளிக்கும் காமமும்..குமுறும் வாழ்க்கை முரண்களுமே அவர்களின் கதைகளுக்கான அடிநாதமாக விளங்கின…

குறிப்பாக எம்.வி.வியின் காதுகள் தமிழின் மிக முக்கிய நாவல்களில் ஒன்று…காதுக்குள் சதா கேட்டுக் கொண்டிருக்கும் உரையாடல்களையும்…அதை சார்ந்த கனவு வயப் பட்ட மனநிலையையும் விவரிக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப் பட்ட உளவியல் சார்ந்த நாவல்களில் சிறப்பானது…எம்.வி.வியின் சுயம்தான் இந்த நாவல் என்ற தகவலும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று…

எம்.வி.வி தன் எளிய கதாபாத்திரங்கள் மூலம் விவரிக்க இயலா உணர்வுகளை தன் கதைகளில் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார்…பெரும்பாலும் கும்பகோணத்தில் வாழும் செளராஷ்டிரா மக்களின் வாழ்க்கையை தன் கதைகளின் களமாக வைத்துக் கொண்டு எழுதிய எம்.வி.வி, வாழுங்காலத்தில் எவ்வித இலக்கிய அரசியலுக்கும் சிக்காதவர்…

எம்.வி.வியின் எழுத்துக்கள் பின்னிரவின் மழை போல அதிகம் அறியப் படாதவை..அற்புதம் மிக்கவை…

அவரின் கதைகள் மனிதனின் ரகசிய வேட்கைகளை போகிற போக்கில் அழகாகவும், நேர்த்தியாகவும் பதிவு செய்கின்றன…அதனால் தான் எம்.வி.வி நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளராக என்றும் இருக்கிறார்…அவருடைய பல கதைகளை என் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் வாசித்து வந்திருக்கிறேன்…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அவருடைய கதைகள் ஒவ்வொரு அர்த்தத்தை கற்பிப்பது எனக்கு புரிபடாத ஆச்சர்யமாக இருக்கிறது…அவருடைய எழுத்தில் உக்கிரம் இல்லை…மாறாக யாரோ ஒருவர் நம் அருகே அமர்ந்து மென்மையான குரலில் ,நம் தோளில் கைப் போட்டவாறே ,நமது ரகசிய ஆசைகளை சற்றே கூச்ச தொனியில் சொல்வது போன்ற வகையில் அமைந்திருக்கும்.

எனவே தான் தேனுகா அழைத்த போது நான் மிக உவகையுடன் சம்மதித்தேன்….கும்பகோணம் கோபால் ராவ் நூலகத்தில் இருந்து தேனுகா என்னை மற்றும் சில நண்பர்களை தோப்பு தெருவில் இருக்கும் எம்.வி.வி வீட்டிற்கு அழைத்து சென்றார்….

வெயில் மழை போல அமைதியாக , அதே சமயம் உக்கிரமாக பெய்து கொண்டிருந்தது…தோப்புத் தெருவில் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு முன் தன்னுடைய ஸ்கூட்டரை நிறுத்திய தேனுகா எங்களையும் அங்கேயே வண்டியை நிறுத்த சொன்னார்…

சாலையில் சிறுவர்கள் கோடை வெயிலை போர்த்திக் கொண்டு வியர்க்க ,வியர்க்க கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்…அந்த வீட்டின் மும் நாங்கள் கூடியதை கண்டவுடன் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பிரச்சனை போல ஆர்வமாக எட்டி பார்த்தனர்…

பழமையான வீடு…வீட்டின் முகப்பில் பெரிய நாமம் இடப் பட்டு இருந்தது…சற்று உயரம் குறைவான திண்ணை…பல இலக்கிய மேதைகளை தன் மடியில் இருத்திக் கொண்ட அந்த திண்ணை புழுதி படர்ந்து கிடந்தது..நான் ஆசையாய் அதில் உட்கார்ந்து கொண்டேன்…இங்குதான் எம்.வி.வியும் ,தி.ஜாவும் அமர்ந்து மோகமுள்ளின் யமுனாவை பற்றி பேசி இருப்பார்களோ…?
வீட்டின் கதவு சற்று லேசாக திறந்திருந்தது…வீட்டில் வறுமை தெரிந்தது.செளராஷ்டிரா இனத்து மக்களுக்கு உரித்தான பாணியில் கட்டப் பட்ட வீடு..வீட்டின் நடுவில் உள்ள முற்றத்தில் வெயில் தனிமையாய் இறங்கிக் கொண்டிருந்தது.தேனுகா உள்ளே இருந்து யாரையோ அழைத்தார்…கைலி கட்டிய வாறு ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வீட்டினுள் இருந்து வெளியே வந்தார்.வாங்க…வாங்க ..உற்சாகமாக அழைத்த அவரை தேனுகா எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்…அவர் எம்.வி.வியின் மகன்.எங்களுடன் கூச்சத்துடன் கைக்குலுக்கினார்…பிறகு தேனுகா நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்ற விபரத்தை அவருக்கு தெரிவித்தார்…

மறைந்த…அதிகம் புகழ் பெறாத …அமைதியான ஒரு எழுத்தாளரின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்ய போன எங்களை அவர் மிகவும் ஆச்சர்யமாகவும் ,வியப்பாகவும் பார்த்தார்…தன் வீட்டிற்கு முன்னால் கூடிய இச்சிறு கூட்டம் தன் தந்தையின் எழுத்துகளின் மீதுள்ள காதலினால் வந்துள்ளது என்பது அவருக்கு பெருமையாக இருந்தது,,,,

நான் அவரின் நடுங்கிய கைகளை பிடித்துக் கொண்டு….நாங்கள் உங்கள் தந்தையின் ரசிகர்கள்…மாபெரும் எழுத்தாளர் அவர் என்று நான் சொன்னவுடன் கூச்சத்துடன் நன்றி என்றார் அவர்…வந்திருந்த நண்பர்களும் தத்தம் கருத்துகளை பதிவு செய்தனர்…அனைவரின் நினைவுகளிலும் எம்.வி.வியின் எழுத்துக்கள் பசுமையாக ஒளிர்ந்தன….

நாம் எல்லோரும் ஒரு புகைப்படம் எடுத்துக்கலாம் என்று தேனுகா சொன்னவுடன் இருங்க ..நான் உள்ளே போய் வேட்டி கட்டிகிட்டு வந்திர்றேன் என்று ஓடினார் எங்கள் மாபெரும் எழுத்தாளரின் மகன்….

வரும் போது அவர் எம்.வி.வி எழுதி விருது பெற்ற காதுகள் நாவலையும்…வேள்வி தீ நாவலையும் எடுத்து வந்தார்…நான் அதை உடனே ஆசையாய் வாங்கிப் பார்த்தேன்…நாவலின் உள்ளே முதல் பக்கத்தில் எம்.வி.வியின் கையெப்பம் பச்சை வண்ண மையில் மங்கி இருந்தது…எம்.வி.வி தன் எழுத்துக்களை தானே வாசித்த புத்தகம் அது என்பதால் எனக்கு அது சற்று பெருமிதமாகவும் இருந்தது….

நாங்கள் மிகவும் மகிழ்வுடனும் ,நெகிழ்ச்சியுடனும் கூடியிருந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தெருவே வேடிக்கை பார்த்தது.பிறகு வீட்டிற்கு அருகே இருந்த இடிந்த பழமையான ஒரு கோவிலுக்கும் அழைத்துச் சென்றார் தேனுகா…மாலை வேளைகளில் எம்.வி.வி அந்த கோவிலின் படிக்கட்டிகளில் அமர்ந்திருப்பாராம்…அங்கேயும் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்……. நாம் இன்னொரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது என்று தேனுகா சொன்னார்..நாங்கள் மீண்டும் எங்களின் அன்பினையும், மரியாதையினையும் அந்த மாபெரும் எழுத்தாளனின் மகனுக்கு தெரிவித்து விட்டு….நாங்கள் தேனுகா வழியில் சென்றோம்.

கும்பகோணத்தின் குறுகலான பல தெருக்களில் எங்களின் இரு சக்கர பயணம் நீண்டது…
இறுதியாக நாங்கள் வந்து சேர்ந்தது கும்பகோணத்தின் ராமசாமி கோவிலுக்கு…நேரம் நடுப் பகலை கடந்து விட்டு இருந்ததால் கோவிலின் கதவு அடைக்கப் பட்டிருந்தது…ஒரு சிறிய நுழைவாயில் மட்டுமே திறந்திருந்தது..அதன் முன் நின்ற வாட்ச் மேனிடம்..தேனுகா உள்ளே செல்ல அனுமதிக் கேட்டார்…சன்னதி எல்லாம் முடியாச்சே…என்று சொன்ன வாட்ச் மேனிடம் …நாங்க சாமி கும்பிட வர்ல…இங்கு அதிகமாக வந்து போன ஒருத்தவரின் நினைவுக்காக வந்திருக்கிறோம்…கொஞ்சநேரம் முன் பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டு போயிடுறோம்…என்று சொன்ன தேனுகாவை வாட்ச்மேன் தயக்கத்துடன் உள்ளே அனுமதித்தார்…

வெளியே வெயிலின் உக்கிரம் கோவிலுக்குள் தெரியவில்லை.அற்புதமான பல சிற்பங்கள் நிறைந்த கோவில் அது..தேனுகா அனைத்தையும் உற்சாகமாக விளக்கியபடி வந்தார்..கோவிலின் இடது புறத்தில் இருந்த ஒரு மேடையில் அனைவரும் அமர்ந்தோம்..அங்குதான் எம்.வி.வியும் ,தேனுகாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களாம்..எம்.வி.வி.க்கு மிகவும் பிடித்த இடமாக ராமசாமி கோவில் இருந்திருக்கிறது….

அங்கு உட்கார்ந்து மீண்டும் எம்.வி.வியை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்…எம்.வி.வியும் எங்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு எங்கள் அனைவருக்குமே தோன்றியது…

நம் தமிழ் சமூகத்தில் எம்.வி.வி போன்ற எளிமையான ,அதே சமயம் அசலான பல இலக்கிய மேதைகள் வாழ்ந்திருக்கின்றனர்..எழுதுவதும்…அதில் இன்பம் துகிப்பதுமான ஒரு மனநிலையில் தன் படைப்புத் தளத்தில் பல சாகசங்களை எவ்வித விளம்பரமும் இன்றி நிகழ்த்தி இருக்கின்றனர்…மனிதனை மிக அருகில் நின்று …ஒரு சிற்பத்தை செதுக்குவது போல ..அணுஅணுவாய் தங்கள் படைப்பு உலகை அவர்கள் சிருஷ்டித்துள்ளனர்…..

ஆனால் அவர்களிடம் விளம்பரம் இல்லை…விருதுகள் கூட அதிகமில்லை…வருமானம் இல்லை..அதற்கான வழிகளை அமைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்பவில்லை…படிப்பதும்…
எழுதுவதுமே அவர்களின் பணியாக இருந்திருக்கிறது…எளிய மனிதர்களாய் பிறந்து…எளிய மனிதர்களாய் இறந்தும் போய் இருக்கின்ற மாமேதைகள் அவர்கள்…

தான் வாழுங்காலத்தில் புகழப் படுவதும் ,போற்றப் படுவதும் நிகழ்வது இலக்கியவாதிகளை பொறுத்த வரையில் ஒரு கனவுதான்..மேடையில் வைத்து இலக்கிய செம்மல்,வேந்தர் என்றெல்லாம் பட்டம் பெற்ற எழுத்தாளரின் வாழ்க்கை விழா முடிந்து ,விழா நடத்தியவர்கள் காரினில் சென்று விட … வீட்டிற்கு திரும்பி செல்ல காசில்லாமல் டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் பயணித்து..நடத்துனரிடம் கெட்ட வார்த்தை திட்டு வாங்கி…அலுப்புடன் கதவை திறக்கும் மனைவியிடம் சலிப்பு வாங்கி…அப்பா என்ன வாங்கி வந்திருப்பார் என்ற ஆவலில் பார்த்த குழந்தைகளின் பார்வையில் வெறுமையை வாங்கி….வறுமையில் வீழ்ந்து கிடப்பதுதான் பெரும்பாலான நடை முறையாக இருக்கிறது…

இலக்கிய வாதிகளின் வீட்டை…அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்களை வைத்து அருங்காட்சியமாக வைத்து போற்றுகின்றன மேலை நாடுகள்…
ஆனால் நம் நாட்டிலோ …….

எழுத்துக்கும்,எழுத்தாளனுக்கும் மதிப்பில்லை….

சிந்தனையோடு நாங்கள் பிரிந்தோம்…

வெளியே வெயில் தளராமல் தாக்கிக் கொண்டிருந்தது…
வேக வேகமாக வீட்டிற்கு வந்து..அம்மாவிடம் ஒரு சொம்பு தண்ணீர் வாங்கிக் குடித்தேன்….
வயிறு குளுமையாக ஆனது….

எம்.வி.வி எழுத்தும்…கோடைக்காலத்து குடிநீர் போலத்தான்…
வறண்ட வாழ்க்கையில்…உணர்வின் இருப்பை நினைவுப் படுத்துகின்றன அவை….

நினைவின் சருகில்…

காலம் கண்ணிமைக்கும் நேரத்தில் சுடர் விட்டு மறைகிற மின்னலாய் நம்மை மிக எளிதாய் கடக்கிறது…..

காலம் நம்மை கடப்பதும்…காலத்தை நாம் கடப்பதுமாய்…நடக்கின்ற விளையாட்டு முடிவிலியாய் தொடர்கிறது…..

ஏதோ ஒரு நள்ளிரவில் ….தொலைதூர பயணத்தின் உணவக நிறுத்தத்தில் நிறுத்தப் படும் பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் தலை சாய்த்திருந்த நான்….கழுத்தின் மடிப்பில் வியர்வைப் படிந்ததால் மெலிதாய் கண்விழிக்க…பக்கத்தில் நிறுத்தப் பட்டு இருந்த பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் ..என்னைப் போலவே தலை சாய்த்திருந்த …அவளைக் கண்டேன்…

அவளா…? இருக்காது. அவளாய் இருக்காது..இருக்கவும் கூடாது…இனி சந்திக்கவே போவதில்லை என்ற நம்பிக்கை இருள் படர்ந்த மனதில் கடும் துயரமென கவிழ்திருந்தாலும்…….அதுவே எனக்கு ஆறுதலாகவும் இருந்தது விசித்திரம்….

ஆம்…அவள்தான் என்று சாத்தானாய் ஓங்கார மிட்டது மனம்….இதயத் துடிப்பு அதிகரித்தது…..காலமும் ,பயணமும் அவளை கசக்கி இருந்தது……

மடியில் இருந்த குழந்தையின் சிணுங்கலை ஆறுதல் படுத்தி விட்டு மீண்டும் தலை சாய்த்த அவள் மீண்டும் கண்களை மூடுகிறாள்…பேரலை அடித்த பாறையாய் நான் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்….

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது…..? எந்த பொன்னிறக் கைகளுக்குள் முகம் புதைத்து…..முச்சிறைத்து கிடந்தேனோ……அந்த கைகள் தான் …அதே கைகள்தான் சலனமற்று என்னைக் கடக்கின்றன…..

பேருந்து புறப்படுகிறது….அவள் அங்கேயே நிற்கிறாள்..

இதுதான் முடிவு என்று தெரிந்திருந்தால்…வலிக்காமல் வாழ்ந்திருப்போமே….

பேருந்தின் ஜன்னலோர காற்று முகம் தொடுகிறது….இரவும்..நினைவும் என்னை அலைகழிக்கின்றன…

வாழ்வின் விசித்திர மாயக் கோடுகளின் ஊடே சிக்குண்டு…விழுங்கியும் செரிக்காத நினைவுகளின் உறுத்தலால் விடிந்தும்..விடியாமல் கிடக்கின்ற இரவில்….ஏதோ ஒரு புள்ளியில் இருந்து துவக்குகிறேன்..

ஆம்….அப்படித்தான் அவளை முதன் முதலில் பார்த்தேன்…….இயல்பான முகத்தில் எல்லாமும் எனக்கு பிடித்திருந்தது….முகத்தை பார்த்துதான் முதலில் நேசம் பிறக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது…….

கொஞ்சம் நகர்றீங்களா…? ……

கேட்டதற்கு பதிலையோ அல்லது என் எதிர்வினையையோ எதிர்பார்க்காது…..என் எதிரே இருந்து நகர்ந்து ….சுவர் ஓரமாய் …படியேறி ..கடந்தது எனக்கு பிடித்திருந்தது……

அனைத்தையும்….வியப்பாகவும்…குதுகாலமாகவும்…ரகசிய கண்களோடு பார்க்கும் பருவம் ..பள்ளியில் படிக்கிற ப்ளஸ் ஒன்…ப்ளஸ் 2 படிக்கிற காலம்….

நம் அபத்தமான…வக்கிரமான சினிமா இயக்குனர்கள் அந்த அற்புதமான பருவத்தை….காமக் கடும் புனலாய் விவரிக்கிறேன் என்ற போர்வையில் திரையில் பாழ்படுத்தி ..வீழ்த்தியதை நான் மிகவும் துயரத்தோடு பார்த்திருக்கிறேன்….

மனித உணர்வுகளின் மீது கட்டப்பட்ட புனித பிம்பம் சிதையாமல் ..மிகவும் நேர்மையோடும்…ஒரு வித அச்சத்துடன் அணுகும் அந்த வயதிற்குரிய அனைத்தும் உடையவனாய் அப்போது இருந்தேன்….கவிதை..இலக்கிய முயற்சிகள்…எல்லாம் அப்போது ஒரு அழகிய பெண்ணை வசீகரிப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டவை என்று மெய்யாகவே நினைத்தேன்…பள்ளியின் காம்பவுண்ட் சுவருக்கு அப்பால்…கோரமும்….அவலமும் நிறைந்த சமூகம் ஒன்று இருக்கிறது என்பது எனக்கு தெரியாது….சாதி,அரசியல் என்று எந்த விஷமும் கலக்காத பாலாய் பொங்கி திரிந்துக் கொண்டிருந்தேன்….மாற்று பாலினத்தின் மேல் இயல்பாக வரும் ஈர்ப்பு தரும் ஆர்வமும்….தூண்டும் சாகசமும் அற்புதமானவை…..இசையின் மீது அளவிடற்கரிய மோகம் பிறந்ததும் அப்போதுதான்……
இப்படி என் வாழ்வில் நான் நேசிக்கிற ,,,இன்னமும் என்னால் விட முடியாமல் இருக்கின்ற அனைத்தும் முதன் முதலாய் நிகழ்ந்தது ……அந்த பருவத்தில் தான்…..

என் பள்ளியின் வளாகம் மிகவும் வீஸ்திரணமானது…காலையில் நடக்கும் கடவுள் வாழ்த்துக்கு முன்னால் செய்திகள் வாசிக்கப் படும்….பெரும்பாலும் அவள் தான் வாசிப்பாள்…..செய்திகள் சுவையாக இருக்கும் என்று நான் நினைத்தேன்…

இப்போது நினைத்தாலும் மெலிதாய் சிரித்துக் கொள்கிறேன்…..பேச்சுப் போட்டி என்பது அப்போதெல்லாம் அடுக்கு மொழியில்,யார் கை நீட்டி, நடிகர் திலகம் பாணியில் ஏற்ற இறக்கங்களோடு விடாமல் வசனத்தை யார் ஒப்பிக்கிறார்களோ ..அவருக்கே முதல் பரிசு…..இதில் எனக்கும் ..அவளுக்கும் கடுமையாக போட்டி வரும்…அவளின் இயல்பான மென்மை அவளை வீழ்த்தும்….சிறு தோல்வி கூட அவளை முகம் சிவக்க அழ வைத்து…சிதறடிக்கும்….. இருந்தும் தொடர்ந்து மோதுவாள்…… ஆசிரியர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்வார்கள்..என் வெற்றி கூட என்னால் சகிக்க முடியா பெருந்துயராய் என் மீது கவிழ்ந்திருக்கும்……..

தினமும் மாலை அவள் பள்ளி முடிந்தவுடன் பைபிள் வகுப்பிற்கு செல்வாள்….

நான் என் அம்மாவிடம் நேராக சென்று பைபிள் கற்றுக் கொள்ள போவதாக சொன்னேன்….உன்னை எல்லாம் அங்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்று அம்மா சொன்னது …சே …நம்ம மதத்துல படிக்கிற மாதிரி ஒரு பைபிள் இல்லையே என வருத்தப் பட்டேன்…..

என் வகுப்புத் தோழன் சாலமனிடம் இருந்து பைபிள் இரவலாக பெற்றேன்….சிறு சிறு எழுத்துக்களில் எழுதப் பட்டிருந்த பைபிளின் தமிழும்…அதன் உச்சரிப்பு தன்மையும் என்னை வெகுவாக ஈர்த்தன…..இன்னமும் தமிழில் மிக அழகாக எழுதப் பட்டிருக்கும் உயரியப் படைப்பு பைபிள் தான் என்ற நம்பிக்கை எனக்குண்டு……

(தொடரும்….)

Page 6 of 6

Powered by WordPress & Theme by Anders Norén