பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: திரை மொழி Page 2 of 3

நினைவில் காடுள்ள மனிதர்கள்..

 

[youtube]https://www.youtube.com/watch?v=CB-J_4k8QKQ[/youtube]

 

“எரிந்த பொழுதில் இருந்த வெளிச்சத்தை விட..
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்..
பரவுகிறது
மனதில் பிரகாசமாக..”
– கல்யாண்ஜி

80 கள்.. தமிழ் நிலத்தின் பண்பாட்டு அடையாளங்களில், இலக்கியத்தில், அரசியலில், திரைப்படங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம். இலக்கியத்தில் ‌ தீவிர இலக்கியம் என்கின்ற வகைமை தோன்றி முழுநேர எழுத்தாளர்கள் பலர் தோன்றிய காலக் கட்டம். அரசியலில் இடதுசாரித்தனம் கலந்த தமிழ் உணர்வு சார்ந்த அரசியலுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. திரைப்படங்கள் ஏறக்குறைய அரங்கங்களை விட்டு வெளியே வந்து, நாடக தன்மையை ஏறக்குறைய சற்றே உதிர்த்து இயல்புணர்ச்சி ஊக்கமுடைய பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என்றெல்லாம் அசலான கலைஞர்கள் தோன்றிய காலக் கட்டம். எல்லாவற்றையும் சேர்த்து சுருக்கமாக சொன்னால் இளையராஜா என்கின்ற அதிதீவிர கலைஞன் உணர்ச்சிகளின் அசைவோட்டத்தை மொழிபெயர்த்து தன் இசையால் காற்றை நிரப்பி தமிழர்களை சுவாசிக்க வைத்த காலம்.  தமிழ்த்திரைப்பட ரசனை என்றால் அப்போதெல்லாம் ரஜினி-கமல் விஜயகாந்த் சத்தியராஜ் மோகன் போன்றோர் முன்னணி கலைஞர்களாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கே. பாக்யராஜ்,டி.ராஜேந்தர், மணிவண்ணன்,ராஜசேகர், ஆர் சுந்தர்ராஜன், பாரதி – வாசு (பன்னீர் புஷ்பங்கள் பிறகு இவர்கள் இருவரும் தனித்தனியே நிறைய திரைப்படங்களில்..) தேவராஜ் மோகன், துரை (பசி), ராபர்ட் ராஜசேகர் போன்ற நிறைய இளம் தலைமுறை இயக்குனர்கள் நிறைய திரைப்படங்களை எடுத்துத் தள்ளினார்கள். வீட்டுக்கு வீடு டேப் ரிக்கார்டர்கள் (Tape recorder) முளைத்திருந்தன. சிறிய மரத்திலான ஒரு செல்ஃப் தயாரித்து அதில் ஆடியோ கேசட்டுகளை (Audio Cassette) வரிசையாக அடுக்கி வைத்திருப்பது வீட்டின் அந்தஸ்தை காட்டுகிற ஒரு தகுதியாக மாறத் தொடங்கியிருந்தது. இந்த ஆடியோ கேசட்டுகளில் பாடல்களை பதிவு செய்து கொடுப்பதற்காகவே வீதிக்கு வீதி பெரும்பாலும் பெயர் பலகைகளில் இளையராஜா படத்தோடு கேசட் பதிவு செய்யும் மையங்கள் ( Recording Center) முளைத்தன. அங்கே பெரும்பாலும் இளைஞர்கள் மணிக்கணக்கில் காத்து இருந்தார்கள். கொஞ்சம் வசதி வாய்ந்த இளைஞர்கள் எக்ஃகோ, லஹரி,ஏவிஎம்,ஏவிஎல் போன்ற பல்வேறு இசைக் கம்பெனிகள் வெளியிட்ட ஒரிஜினல் ஆடியோ கேசட்டுகளை வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டார்கள். மக்கள் ரேடியோ கேட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி நேரம் ரேடியோவில் நாடகங்கள் ஒளிபரப்பாகின. தொலைக்காட்சி பெட்டியில் தூர்தர்ஷன் என்கின்ற ஒரே ஒரு சேனல் கொடைக்கானல் மலை உச்சியிலிருந்து ஒளிபரப்பப்பட , அதற்கு ஆண்டனா வைத்து பூஸ்டர் ஸ்டபிலைசர் என அனைத்தும் வைத்து புள்ளி புள்ளியாக திரைப்படங்கள், கிரிக்கெட் மேட்ச்கள் ஒளிபரப்பாகின. கிரிக்கெட்டில் அன்று பெரும் பேட்ஸ்மேனாக விளங்கிய கவாஸ்கர் ஏறக்குறைய இறுதி காலத்தில் இருந்தார். கபில்தேவ் ஒரு வெற்றிகரமான பவுலராக அனைவரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். பெரும்பாலான மேட்சுகளில் இந்தியா தோற்று கொண்டிருந்தது. நானெல்லாம் தீவிரமான முகம்மது அசாருதீன் ரசிகன். கை மணிக்கட்டு களால் விளையாடுகிற அற்புதன். அவர் Square Cut Shot விளையாடும்போது அங்கே நின்று கொண்டிருக்கின்ற ஃபீல்டருக்கு பந்தைப் பிடிக்க தோணாமல் கைத் தட்டத்தான் தோன்றும் என்கிற அளவுக்கு நளினமாக விளையாடுகிற பெரும் கலைஞன். அற்புதமான fielder. எப்போதாவது Spin bowling ங்கும் செய்வார். நாங்கள் வாழ்ந்துவந்த மன்னார்குடி ஹவுசிங் யூனிட்டில் GCC என்கின்ற கவாஸ்கர் கிரிக்கெட் கிளப் என்ற ஒரு அணி இருந்தது. அதில் விளையாடிய ஸ்டீபன் அண்ணா தான் டீம் கேப்டன். காவுக்கனி , ராக்கெட் ராஜா என்கின்ற இருபெரும் வேகப்பந்து வீச்சாளர்கள். எதிரணியை மிரட்டி எடுத்துவிடுவார்கள்.குறிப்பாக ராக்கெட் ராஜா அண்ணன் பந்தினை யாராலும் தொடவே முடியாது.என் எதிர் ஃப்ளாட்டில் வாழ்ந்து வந்த ரவி அண்ணன் தான் அந்த டீமின் விக்கெட் கீப்பர். அவர்தான் எனக்கு அனைத்திலும் ஆதர்சம். அதிகமாக பேசமாட்டார். பிரமாதமாக கீப்பிங் செய்வார். அந்தக் காலகட்டத்தில் நான் நடப்பதற்காக Calipar போட்டிருந்தேன். ஆனாலும் ரவி அண்ணன் என்னையும் விளையாட வைப்பார். எல்லா விளையாட்டுக்களிலும் என்னை ஒதுக்கி வைக்காமல் சேர்த்துக் கொள்வார். என்னை நின்ற இடத்திலிருந்து பவுலிங் போட சொல்வார்.எங்கே சென்றாலும் நான்தான் அவருக்கு துணை. ஒரு நாள் மாலை ரவி அண்ணன் எங்கோ அவசரமாகக் கிளம்பி கொண்டிருக்க.. நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். வேறு வழி இல்லாமல்‌ வீட்டில் சொல்லிவிட்டு என்னையும் சைக்கிளில் அழைத்து கொண்டு அவர் சென்று நின்றது எங்கள் ஊரின் சாந்தி திரையரங்கத்தின் முன்னால். அந்தப்படத்தின் போஸ்டரை பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை. ஏதோ குடும்பப் படம் போல இருந்தது. ஆனால் ரவி அண்ணன் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அந்த 80 களின் காலத்தில் அதுபோன்ற திரைப்படத்தை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு மெலோ டிராமா. அதுபோன்ற ஒரு திரைப்படத்தை மன்னார்குடி போன்ற ஒரு நடுத்தர நகரத்தில் பார்ப்பதற்கு ஒரு தனிப்பட்ட மனநிலை தேவைப்படுகிறது. ரவி அண்ணன் ஏறக்குறைய அந்த மனநிலையில்தான் இருந்தார். என்ன ஆச்சரியம் என்றால்.. மன்னார்குடி போன்ற ஒரு ஊரில் அந்தத் திரைப்படத்திற்கு ஒரு கூட்டமாக கல்லூரி மாணவிகள் வந்து இருந்தார்கள். அந்த மாணவிகளை சார்ந்து சில மாணவர்களும் வந்திருக்க.‌. தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டது. படம் தொடங்கியது. திரைப்படம் ஒரு பெண்ணைப் பற்றியது. அவளுடைய விருப்பத்தை மீறி அவளுக்கு திருமணம் நடக்கிறது. கணவன் மென்மையான மனதை உடையவன். ஏன் தன்னை தனது மனைவி விரும்ப மறுக்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. இதுகுறித்து அவளிடம் அவன் ஆழமாக கேட்கின்ற ஒரு தருணத்தில்.. ஒரு வெள்ளை சுவற்றில் தலையைச் சாய்த்தவாறு அவள் அழுதுகொண்டே சரிய.. அவளது முற்காலம்(Flashback) காட்சிகளாக விரிகிறது. அதிரும் இசை துணுக்குகளுக்கு நடுவே சில இளைஞர்களோடு சட்டென ஒரு இளைஞன் வேகமாக நடந்து வருகிறான். திரையரங்கமே அதிர்கிறது.அக்காட்சியின் கேமிராவை கையாள்பவன் ஒரு கவிஞன் (P.C. ஸ்ரீராம்) என புரிகிறது. அந்தக் காட்சியில் அந்த கேமிரா தரையிலிருந்து நடந்துவரும் அந்த இளைஞனின் கோபம் மிக்க முகத்தை காட்டுகிறது. அதுபோன்ற ஒரு துள்ளல் மிகுந்த ஒரு ஆக்ரோஷமான வேக நடையை தமிழ்த் திரை அதுவரை பார்த்ததில்லை. வந்த வேகத்தில் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு அடி விழத் தொடங்குகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறை சம்பவம் நடந்த இடத்திற்கு வருகிறபோது சரியாக சுவர் ஏறி குதித்து அந்த இளைஞன் தப்பித்துப் போய் விடுகிறான். அந்தக் காட்சியில் தன் இருக்கையிலிருந்து எழுந்து கூச்சலிடத் தொடங்கிய அந்த கல்லூரி மாணவிகள் அந்த இளைஞன் தோன்றும் போதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அந்த இளைஞன் பைக்கில் சென்றான்/அந்தப் பெண் படிக்கும் கல்லூரிக்கே சென்று ஸ்பீக்கரில் சத்தம் போட்டு காதலை சொன்னான்/பேருந்திற்கு முன்னால் தன் பைக்கை நிறுத்தி தன் காதலியோடு பேசிக் கொண்டிருந்தான்/தன் காதலியின் முகத்தை பார்த்தவாறே கையில் கடலையோடு பின்னால் நடந்து சென்றான்./ அந்தப் பெண்ணோடு ஒரு ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு காபி சாப்பிடும் போது எதிர்பாராதவிதமாக வருகிற அந்தப் பெண்ணின் தந்தையை பேர்ச்சொல்லி அழைத்து அந்தப் பெண்ணின் முகத்தில் அதிர்ச்சியை உண்டாக்குகிறான்/ பிறகு அந்த அதிர்ச்சியையே ஒரு ரசனை மிக்க காதலாக மாற்றுகிறான்/ தன் காதலிக்காக தான் போக வேண்டியிருந்த ஒரு போராட்டத்திற்கு போகாமல் கொட்டும் மழையில் காதலியின் வீட்டின் ஜன்னலுக்கு முன்னால் காத்திருக்கிறான்/மறுநாளே திருமணம் செய்து கொள்ள கோருகிறான்/கடைசியில் அந்த இளைஞன் திருமணத்திற்காக காத்திருக்கும் காதலியின் கண் முன்னரே எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒரு ரசவாத வித்தை போல அந்த 15 நிமிடங்களும் கண் முன்னால் வித விதமான உணர்வலைகளோடு நிகழ்ந்து முடிந்து விடுகிறது. அந்தப் பதினைந்து நிமிட காட்சிகளுக்கு பின்னால் ஆரவாரம் செய்து கொண்டிருந்த அந்த கல்லூரி மாணவிகள் அமைதியாக எழுந்து திரையரங்கை விட்டு வெளியே சென்று விட்டார்கள்.அவர்களைப் பொறுத்தவரையில் அத்திரைப்படம் அத்தோடு முடிந்து விட்டது.
ஒவ்வொரு கால கட்டத்திலும் பெண்கள் தியாகராஜ பாகவதர்/எம்ஜிஆர்/ கமல் என சிலவகை தனித்த நளினங்களோடு கூடிய ஆண்களை விரும்பியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்கள் போல தாங்கள் விரும்பும் நடிகனின் காட்சிகள் முடிந்த பிறகு திரையரங்கை விட்டு யாரும் வெளியே சென்றதில்லை.வெளியே விசாரித்தபோதுதான் சொன்னார்கள். மனோகர் என்கின்ற அந்த கதாபாத்திரம் சுடப்பட்டு இறந்து போன காட்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நாளும் பலர் எழுந்து சென்று விடுவதாக சொன்னது மிக ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக எங்கள் மன்னார்குடிக்கு இது மிகப்பெரிய மாபெரும் ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய பரபரப்பு செய்தியாக மாறிப்போனது. அது அக்காலத்தில் திரைப்பட ரசனைகளின் ஊடாக ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சி. மனோகர் ஆக நடித்த அந்த இளைஞனின் பெயர் கார்த்திக். படம் மவுனராகம். அப்போதுதான் தெரிந்தது ரவி அண்ணன் கார்த்திக்கின் ரசிகன் என.அண்ணனும் படம் பார்த்துக்கொண்டிருந்த என்னை பார்த்து போகலாமா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கும் தெரிந்தது அங்கே வந்திருந்த கல்லூரிப்பெண்களில் யாரோ ஒருவருக்காகவும், கார்த்திக்கிற்காகவும் தான் அண்ணனும் அத்திரைப்படத்திற்கு வந்திருந்தார். இரண்டுமே முடிந்து சென்று விட்டபடியால் அண்ணன் அழைக்க, நானும் எழுந்து வந்துவிட்டேன். இவ்வாறாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் பலவற்றை அறிமுகம் செய்து வைத்த ரவி அண்ணன் தான் எனக்கு கார்த்திக்கையும் அறிமுகம் செய்து வைத்தார்.அதற்கு முன்னாலும் எனக்கு கார்த்திக்கை தெரியும். ஒரு வெகு சாதாரணமான சிறு நடிகன் போல துணை கதாபாத்திரங்களில் சில திரைப்படங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அக்காலத்தில் எனக்கு கமல் மட்டும் தான் பிடிக்கும்.அப்போது வித்தியாசமாக நடித்து கொண்டிருந்த சத்யராஜ் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. ஆனால் மவுனராகம் என்ற திரைப்படத்தினை என்னை அழைத்து சென்று காட்டியதன் மூலம் தன்னைப்போலவே ரவி அண்ணன் என்னையும் தீவிர கார்த்திக் ரசிகனாக மாற்றிவிட்டார். கார்த்திக்கை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் திரைப்படம் குறித்தான எனது ரசனைகள் மாறத் தொடங்கின. What is acting என்ற கேள்விக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமேன் ஒரே ஒரு வார்த்தையில் சொல்கிறார் “living”.
நடிப்பு ஒரு நிகழ்கலை. புனைவு வெளிப்படுத்துகிற மிகை புள்ளிக்கும் , கலைஞனுக்கு இயல்பாக தோன்றுகிற கலையம்ச நேர்த்திக்கும் இடையே இருக்கின்ற நுட்ப இடைவெளியை உள் வாங்கி ஒரு கனவின் நகல் போல காட்சியளிக்கும் ஒரு மாய தோற்றத்தை உண்மையாக்குகிற வித்தை அது. அந்த மேஜிக் களியாட்டத்தில் ஒரு நுனி அளவு பிசகிவிட்டாலும் கலை தன் உயிரை இழந்து விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாய விளையாட்டை தான் மிக இயல்பாக விளையாடுவதற்கான சாதுர்யத்தை கொண்ட மகத்தான கலைஞனாக கார்த்திக் திகழ்ந்தார்.

மவுனராகம் படத்தில் கார்த்திக்கு வருகின்ற காட்சிகள் 15 நிமிடங்களுக்கு மிகாதவை. ஆனால் அந்தப் பதினைந்து நிமிடங்கள் தான் கார்த்திக் என்ற இளம் கதாநாயகனை தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு இருக்கையில் அமர வைத்தது. வழமையான காதல் காட்சிகளுக்கு இளமையான துள்ளல் வண்ணம் தீட்டிக் கொண்டே இருந்தார் கார்த்திக். நொடிக்கு நொடி மாறிவிடும் அமர்க்களப்படுத்தும் அவரது முகபாவங்கள் அதுவரை தமிழ்த் திரையுலகம் காணாதது. அதன்பிறகு அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், இதயதாமரை, கோபுர வாசலிலே என அமரத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் கார்த்திக் நடித்து கலக்க அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் பிரம்மாண்டமாக உண்டானது. அவருக்கென தனித்துவமான இசையை இளையராஜா உருவாக்க… அவரது கிராமத்து படங்களான கிழக்கு வாசல், பாண்டி நாட்டு தங்கம், உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் , பெரிய வீட்டு பண்ணக்காரன், பூவரசன், பொன்னுமணி, போன்ற பல படங்கள் பாடல்களுக்காகவும்,கார்த்திக்கின் வசீகரத்திற்காகவும் ஓடின.தென்மாவட்டங்களில் கார்த்திக்கின் சாதியை வைத்து வீட்டுக்கு வீடு அவரது புகைப்படங்களை வைத்து ஒரு பெரிய கூட்டமே அவரது ரசிகர்களாக மாறி வழிபட்டதெல்லாம் பெருங்கதை. கார்த்திக் மிக நுட்பமான உணர்வுகளை மிக அழகியலாக வெளிப்படுத்துகிற தேர்ந்த கலைஞன்.குறிப்பாக அக்னி நட்சத்திரம். அந்தப் படத்தில் பிரபுவின் கதாபாத்திரம் மிகுந்த நேர்மறையான கட்டுப்பாடு மிக்க காவல்துறை அதிகாரி பாத்திரம். அதற்கு எதிர்மறையான கதாபாத்திரத்தை போகிற போக்கில் அனாசியமாக செய்து அசத்தி இருப்பார் கார்த்திக். பேருந்து நிறுத்தத்திலும், பேஸ்கட் பால் மைதானத்திலும், பெட்டிக் கடைகளிலும் மிக எளிதாக தென்படுகிற வேலையற்ற இளைஞனின் பாத்திரத்தை கார்த்திக் ரசிக்கத்தக்க வகையில் செய்து இணை நடிகரான பிரபுவை தாண்டிலும் ஸ்கோர் செய்திருப்பார். ஷேவ் செய்யப்படாத இளம் தாடி முகத்தில் ஜீன்ஸ் பேண்டோடு, உடல் முழுக்க வியர்வையோடு, சட்டை இல்லாமல் மைதானத்தில் பந்தை தலைக்கு வைத்து கார்த்திக் படுத்திருக்கிற அந்த லாவகம் இயக்குனர் மணிரத்னம் எதிர்பார்த்த அளவை விட காட்சி அழகின் உச்சம். கார்த்திக் போன்று முக அழகு கொண்ட தமிழ் நடிகர்கள் இதுவரை தோன்றியதில்லை. அது அப்பட்டமான ஒரு தமிழனின் முகம். ஊருக்குள் களையான முகம் என்பார்களே அந்த முகம் கார்த்திக்கின் முகம் தான். இதயத்தாமரை திரைப்படத்தில் ஒரு காதல் தேவதை … பாடலில் கார்த்திக்கும் ரேவதியும் ஒரு பாடல் முழுக்க ஒரு மிதிவண்டியில் வருகிற அந்த கவித்துவ காட்சி போல பொங்கி எழுகிற காதலின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிற காட்சி அழகியல் தமிழ் திரைப்படங்களில் மிகக் குறைவு..

[youtube]https://youtu.be/0ziNk53ikVI[/youtube]

மிகையற்ற நடிப்பு தான் கார்த்திக்கின் மூலதனம். மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி போன்ற மாபெரும் நடிகர்களிடம் காணப்படும்
உடல் மொழியில் ஆத்மார்த்த நெகிழ்வுத் தன்மை (flexibility) தமிழில் உடைய ஒரே நடிகர் கார்த்திக் மட்டுமே. அதற்கு பல காட்சிகளை உதாரணம் சொல்லலாம்.
குறிப்பாக இந்தப் பாடல்

[youtube]https://youtu.be/8Hjf-UyTSKg[/youtube]

கார்த்திக்கின் முகபாவங்கள் தனித்துவமானவை. நடிகர் திலகம் சிவாஜி, கமல் போன்றோரிடம் இருக்கின்ற சற்றே Over tone கார்த்திக்கிடம் இருக்காது. தன் காதலிக்கு விடிந்தால் திருமணம். ஏற்கனவே காதலியை பெண் கேட்டு தன் தாய் வேறு அவமானப்பட்டு இறந்தும் போய்விட்டாள். திருமணத்தின் முதல் நாளன்று தான் விரும்பிய பெண்ணின் வீட்டின் முன்னால் கூத்துக் கட்ட வேண்டிய பிழைப்பு கொண்ட அந்த எளிய கலைஞனாக கார்த்திக் கண்ணீரோடு “பாடி பறந்த கிளி.. பாதை மறந்ததடி” என ததும்பும் விழிகளோடு பாடிய போது திரையரங்கமே சேர்ந்து அழுதது. அதுவரை அழுகை என்பது மிகை நடிப்பு அம்சங்களில் ஒன்றாக இருந்ததை கார்த்திக் தான் அதன் இறுக்கங்களை தகர்த்து இயல்பின் மொழிக்குள் கொண்டு வந்து அட்டகாசப்படுத்தினார் ‌. அதேபோல வருஷம் 16 திரைப்படத்தின் இறுதிக்காட்சி. எல்லாவற்றையும் இழந்து விட்டு தன் தாய்க்கு முன்பாக கையறு நிலையில் கதறித் தீர்க்கிற மனிதனாக கார்த்திக் பிரமாதப் படுத்திய போது அதை மிகை நடிப்பாக யாருமே உணரவில்லை என்பதுதான் கார்த்திக்கின் கலையழகு. கார்த்திக்கின் பிற்காலம் எல்லா நடிகர்களை போலவும் அமைந்தது என்றாலும்.. கோகுலத்தில் சீதை போன்ற சில அற்புதமான திரைப்படங்களிலும் தான் ஒரு மாபெரும் கலைஞன் என்பதை தொடர்ச்சியாக நினைவூட்டிக் கொண்டே இருந்தார். இதேபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜி நடித்திருந்தாலும்.. கார்த்திக் கோகுலத்தில் சீதையில் நடித்த விதம் உலகத் தரமானது. கார்த்திக் போன்ற ஒரு மாபெரும் கலைஞன் தனது கலை வாழ்வின் இறுதிக்காலத்தில் உள்ளத்தை அள்ளித்தா போன்ற வணிக ரீதியிலான காமெடி படங்களில் நடிக்க வேண்டியிருந்தது வரலாற்றின் கோர விசித்திரம். இப்போதும் கார்த்திக் ராவணன்,அனேகன், சந்திரமௌலி போன்ற படங்களில் நடிப்பதை பார்க்க முடிகிறது. அது நான் பார்த்த கார்த்திக் அல்ல. இது வேறு நபர். மன்னனாக வாழ்ந்தவனை பிச்சைக்காரனாக மாற்றி வைத்து அழகு பார்ப்பது தான் காலம் என்ற கொடுங்கோலனின் தீராப் பகடையாட்டமாக இருக்கிறது.
..
ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக தஞ்சாவூரில் ஒரு உணவகத்தில் யாரோ பின்புறத்திலிருந்து என்னை கட்டிப்பிடிக்க.. சட்டெனத் திரும்பி பார்த்த நான் ஒரு நடுத்தர வயதுக்காரரை பார்த்து விட்டு இவர் யாராக இருக்கும் என யோசித்தேன். “அடையாளம் தெரியலையா” என கேட்டவாறே “நான்தாண்டா ரவி” என்று
அணைத்துக்கொண்ட ரவி அண்ணன் அவரது மனைவி, பிள்ளைகளை அறிமுகம் செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு அண்ணனை பார்க்கிறேன். நாங்கள் மன்னார்குடியிலிருந்து குடிமாறி வந்துவிட்ட பிறகு அண்ணனைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை. அண்ணனுக்கு வயதாகி இருந்தது. தலைமுடி நரைத்து விட்டது. பிள்ளைகள் பெரியவர்களாக நின்றார்கள். ஒரு காலத்தில் நாம் கதாநாயகர்களாக பார்த்த அண்ணன்கள் வயதாகி ஒரு சாதாரண மனிதனாக, ஒரு குடும்பஸ்த்தனாக, சகல பாடுகளும் நிரம்பிய எளிய மனிதராக நாம் பார்க்கும் பொழுது உண்மையாகவே வருத்தமாகி விடுகிறது. ரவி அண்ணன் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். நிறைய விசாரித்தார். எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கேள்விப்பட்டு கண்கள் மின்ன சந்தோஷப்பட்டார். மீண்டும் மீண்டும் அணைத்துக் கொண்டார்.அலைபேசி எண்ணை மறக்காமல் கேட்டு வாங்கிக் கொண்டார். சிறிது நேரம் கழித்து விடைபெற்றுக் கொண்டோம்.
அப்போதுதான் அவரது அலைபேசி ஒலித்தது. அதே கார்த்திக்கின் மௌனராகம் பிஜிஎம். அண்ணன் என்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தார். நான் அப்படியே அதே இடத்திலேயே உறைந்து அமர்ந்து இருந்தேன். என்னைப் பொருத்தவரையில் பெரும்பாலான மனிதர்கள் நினைவுகளிலும், கடந்த காலங்களிலும் தான் வாழ்கிறார்கள். ஏதோ ஒரு திரைப்படத்தில் நான் நான் கேட்ட வசனம் ஒன்று நினைவுக்கு வருகிறது. “டேப் ரிகார்டரில் உள்ளது போல உண்மையான வாழ்க்கையிலும் ரிவைண்டர் என்கின்ற பொத்தான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..” கவிஞர் விக்ரமாதித்தியனின் கூண்டுப் புலிகள் என்ற ஒரு கவிதையில்…

“கூண்டுப் புலிகள் நன்றாக பழகி விட்டன;
நாறக் கூண்டினை பற்றி எந்த புகாரும் இல்லை:
நேரத்திற்கு இரை..
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி;
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்கத் சுகத்திற்கு தடையில்லை

என வரிசையாகச் சொல்லி வரும் அவர்… இறுதியாக

“ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப்புலிகள்.”

என அதிர்ந்து முடித்திருப்பார். மனித வாழ்க்கையும் அவ்வாறு தானே இருக்கிறது..

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் “நினைவில் காடுள்ள மிருகம்” என்கின்ற ஒரு புகழ்பெற்ற கவிதை உண்டு.

“நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது.
அதன் தோலில் காட்டுச் சதுப்பு நிலங்களின் குளிர்ச்சி.
அதன் மயிர்க்கால்களில் காட்டுப்பூக்களின் உக்கிரவாசனை.
அதன் கண்மணிகளில் பாறைகளில் வழுக்கிவிழும் காட்டுச் சூரியன்.

அதன் வாயில் காட்டாறுகள் கர்ஜிக்கின்றன.
அதன் நாவில் காட்டுத்தேன் எரிகின்றது.

அதன் செவிகளில் அடவிகளின் மேகங்கள் முழங்குகின்றன.
அதன் இரத்தத்தில் காட்டானைகள் பிளிறுகின்றன.
அதன் இதயத்தில் காட்டு நிலாக்கள் பூக்கின்றன.

அதன் சிந்தனைகள் காட்டுப்
பாதைகளில் குதித்தோடுகின்றன.

நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.”

அப்படித்தான் ரவி அண்ணன் போல மனிதர்களும். நினைவுகளில் கடந்த காலத்தையும், கூடவே கார்த்திக்கையும் சுமந்துக் கொண்டு அலைந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

மனமென்னும் மாய விசித்திரம்

 

மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்து மனித மனங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஏனெனில் வாழ்வதற்கான வேட்கையை உற்பத்தி செய்கிற மாபெரும் மூலதனமாக மனிதனின் மனமே திகழ்கிறது.மனிதமனம் கொண்டிருக்கும் அன்பு, வெறுப்பு, புரிதல், காதல், காமம் என பல்வேறு வகை உணர்ச்சிகள்தான் உலக வரலாற்றை உருவாக்குகிற சக்திகளாக தேடுகின்றன. ஒருவர் கொண்டிருக்கிற உளவியல் அமைப்பே அவர் எவ்வாறு உலகத்தை அணுகுகிறார் என்பதற்கான வழியாகவும், அவருக்கான உலகத்தை அவர் எவ்வாறு உருவாக்குகிறார் என்பதற்கான காரணமாகவும் விளங்குகின்றன.சமூக வாழ்க்கைக்கு ஆட்பட்டு இருக்கிற மனிதனின் உளவியல் ஏதோ ஒரு காரணத்தினால் உந்தப்படும் போது அல்லது இடறப்படும் போது அந்த நொடியில் துளிர்க்கிற உணர்ச்சி குவியல் அவனது வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது. Powers of subconscious mind – ஆழ்மனதின் அற்புத சக்திகள் (தமிழில் நாகலட்சுமி சண்முகம் மஞ்சுள் வெளியீடு) என்கிற ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை நான் படித்திருக்கிறேன். ஏறக்குறைய பைரன் எழுதிய தி சீக்ரெட் என்கிற நூலுக்கு இணையான புகழ்பெற்ற நூல் தான் அது. அதில் சொல்லப்படுபவர்களை பார்த்தால் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். சிலவற்றை பரிசோதித்து கூட பார்த்திருக்கிறேன். மனம்போல வலிமை வாய்ந்தது எதுவுமில்லை என்பதையும் அதில் ஏற்படுகிற ஒவ்வொரு பாதிப்பும் தான் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கிற வழிகள் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

உலகத்தையே வெல்லத்துடித்த அலெக்ஸாண்டரின் போர் வெறிக்கு என்ன காரணம் என அவரது ஆசிரியரும் அவரது தத்துவ ஆசிரியர் சாக்ரடீஸின் மாணவருமாகிய அரிஸ்டாட்டிலிடம் கேட்ட போது அவர் மிக எளிமையாக சொன்னார். சிறுவயதில் அவனது பெற்றோர்களிடமிருந்து அவனுக்கு கிடைத்த புறக்கணிப்பு. அதுவே அவனுக்கு ஆழமான காயமாக மாறிப்போய் இன்று உலகத்தை வெல்ல துடிக்கிற உந்துதலாக திகழ்கிறது என்றார் அவர்.எல்லா மனிதனுக்கும் ஆழமான காயங்கள் இருக்கிறது. சிலருக்கு வெளியே தெரிகிறது. பலருக்கு வெளியே தெரிவதில்லை. அவமானங்களும் புறக்கணிப்பும் இல்லாத மனித வாழ்க்கை ஏதுமில்லை.

எஸ் ராமகிருஷ்ணனின் துணையெழுத்தில் ஒரு வரியை நான் அடிக்கடி நினைவுகூர்ந்து கொள்வேன். நாம் ஒவ்வொரு முறை அவமானப்படும் போதும் நம் உடலில் ஏதேனும் ஒரு தழும்பு ஏற்படும் என்ன வைத்துக்கொண்டால்.. நம் உடல் முழுக்க அம்மைத் தழும்புகள் போல நிறைய காயங்கள் நிறைந்திருக்கும் தானே என்கின்ற அந்த வரி என்னுள் எப்போதும் ஒரு முள் போல உறுத்திக்கொண்டே இருக்கும். இந்திய பெருநிலத்தின் மிகப்பெரிய கதையாடல் களஞ்சியமான மகாபாரதத்தில் ஒரு காட்சி வருகிறது. திரௌபதி சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிற துரியோதனன் அந்த மாளிகையின் எழிலை பார்த்து வியந்தவாறு சற்று தடுமாறி கீழே விழுந்து விடுகிறான். அதை மாளிகையின் உப்பரிகையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திரௌபதி உன் தந்தையை போல உனக்கும் கண் தெரியவில்லையா என சொல்லி சிரித்து விடுகிறாள். அந்த சொல் அவனுக்குள் ஆறாக் காயமாக உறுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போதும் உறுத்துகிற அந்தக் காயத்திலிருந்து அவமானத்தின் குருதி வழிந்து கொண்டே இருக்கிறது. அதுதான் மகாபாரதம் என்கின்ற இதிகாசம் உருவாவதற்கான மூலப் புள்ளியாக திகழ்ந்தது.

திரவுபதியின் சிரிப்பு துரியோதனனின் ஈகோவை தீண்டியதன் விளைவு ஒரு இதிகாசமே பிறந்தது. எனக்கு மிகவும் வேண்டிய நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது மனைவியை எப்போதும் அவர்கள் இவர்கள் என மிகுந்த மரியாதையோடு அழைப்பார். எனக்கு மிகுந்த ஆச்சரியம். மனைவியை வாடி போடி என்றும் வா போ என்றும் ஒருமையில் அழைப்பவர்களைதான் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இவர் இவ்வளவு மரியாதையாக அழைக்கிறாரே என்று வியந்தவாறே அதற்கான காரணத்தை அவரிடம் கேட்டேன்.அவர் மிகவும் தன்மையான ஒரு குரலில் ஒரு முறை எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பெரும் பிரச்சனை ஏற்பட்டபோது என் மனைவி மரியாதை குறைவாக என்னை ஒருமையில் அழைத்து ஏச… அதற்கு எதிர்வினையாக அதன் பிறகு அவரை நான் மிகுந்த மரியாதையுடன் அழைக்க தொடங்கினேன் என்றார்.என்னை ஒருமையில் அழைக்கும் தகுதி வந்ததாக அவர் நினைத்து விட்டபிறகு நாம் அதை மதிக்க வேண்டியது தானே என்று கேட்ட அவரை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தேன். ஒரு சிறிய அவமதிப்பு வாழ்க்கை முழுக்க தொடர்கிற ஒரு கரும் நிழலாக மாறிப்போனது உண்மையில் அபூர்வம் தான்.

பெரியாருக்கும் அண்ணாவுக்கும், கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும், என பல அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில முரண் சம்பவங்கள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதி இருக்கின்றன என்பதை நாம் கண்டிருக்கிறோம்.வாழ்வில் ஏற்படும் ஒரு சிறு சம்பவம் ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றிவிடுகிற தீவிரம் கொண்டதாக சிலநேரங்களில் அமைந்து விடுகிறது.
தென்னாபிரிக்காவில் காந்தி அந்த தொடர்வண்டிப் பயணத்தில் ஒருவேளை கௌரவமாக நடத்தப்பட்டு இருந்தால் அவர் இந்தியாவின் தேசப்பிதா வாக ஆகி இருப்பாரா என்பது கேள்விக்குறி.அதுபோன்ற ஒரு சிந்தனையை சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படமும் எனக்குள் ஏற்படுத்தியது.
எப்போதும் இயல்பான மனித வாழ்க்கையை மிக நெருக்கமான வடிவத்தில் எளிமையான மொழியில் வலிமையாக சொல்லிவிடுகிற ஒரு ஊடகமாக மலையாளிகள் திரைப்படங்களை கையாளுகிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஐயப்பனும் கோஷியும் என்கிற மலையாள திரைப்படம். இந்த திரைப்படம் குறித்து எனது மைத்துனர் பாக்கியராசன் அவர்கள் நீண்ட நேரம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

கொரனா கொடுத்த ஆகப்பெரும் தனிமை பொழுது ஒன்றில் அமேசான் மூலம் இத்திரைப்படத்தைப் பார்க்க தொடங்கினேன்.படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை நம்மை நகரவே செய்யக்கூடாது என்கிற திட்டமிட்ட திரைக்கதை வரைவு நம்மை மிரட்டி போடுகிறது. சச்சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் பிஜீமேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை மிக மிக எளிமையானது. ஒரு முன்னாள் ராணுவ வீரனின் பயணத்தில்
எதிர்பாராத விதமாக மோத வேண்டிய நிலைக்கு உள்ளாகுகிற உள்ளூர் Sub-inspector க்கும், அந்த மோதலை மாபெரும் அவமான குறைவாக எடுத்துக் கொண்டு மோதுகிற அந்த முன்னாள் ராணுவ வீரனுக்கும் இடையிலான மோதல்களே இத்திரைப்படம். ஒரு அடர்ந்த வனத்திற்குள் ஒரு மகிழுந்து நுழைகிற அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒரு நொடியும் கூட தவற விடக்கூடாத காட்சி அமைப்பு தான் இந்தத் திரைப்படத்தின் ஆகப் பெரும் பலம்.

குறிப்பாக அந்த ஓட்டுனர் கதாபாத்திரத்தில் வரும் அந்த பெரியவரும், காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் அந்த இளம் பெண்ணும், மாவோயிஸ்ட் இயக்கத்தில் தொடர்புடையதாக பேசப்படும் பிஜுமேனன் மனைவியாக நடிக்கிற அந்த கதாபாத்திரமும் மறக்க முடியாதவை.
இடுப்பில் குழந்தையோடு அந்த பிஜுமேனன் மனைவியாக மாவோயிஸ்ட் தொடர்புடையதாக காட்டப்படும் அந்த ஆதிவாசி பெண்ணாக நடிக்கின்ற அந்த பெண் கைது செய்யப்படும்போது நடக்கின்ற அந்த கம்பீர நடை இந்த சமூகம் கட்டமைத்து இருக்கிற எல்லா வித அதிகார உச்சங்களுக்கும் சவால் விடக்கூடிய பேரழகு கொண்டது. அதிகாரம் என்பது எப்படி நுட்பமான வேர்களைக் கொண்டு எளிய மனிதர்களை வதைக்கிறது என்பதையும் , ஒரு எளிய மனிதனின் ஆவேசம் எப்பேர்பட்ட அதிகார உச்சத்தையும் அசைத்து போடுகிற வலிமை கொண்டது என்பதையும் ஒரே திரைப்படத்தில் கூர்மையான இரு முனைகளாக கொண்டு திரைமொழி பின்னப்பட்டிருப்பதுதான் இத்திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை மகத்தானதாக மாற்றுகிறது. பிரித்விராஜ் சுகுமாரன் மிகத் திறமையான ஒரு நடிகர். தமிழில் பல திரைப்படங்களில் அவரை மிகக்கேவலமாக பயன்படுத்தி இருப்பார்கள். தமிழில் மிக சுமாரான கதாபாத்திரங்களில் நடிக்க துணிந்தது அவர் வாழ்வில் அவருக்கு அவரே செய்துகொண்ட கேடு என்றே கருதுகிறேன். அவர் பார்வதியோடு நடித்த “எண்ணு நின்டே மொய்தீன்” எனக்கு மிகவும் பிடித்த ஒரு மாபெரும் காதல் காவியம். அதேபோல அவர் நடித்த”செல்லுலாய்டு” மிக முக்கியமான ஒரு திரைப்படம். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அவர் இயக்கிய “லூசிஃபர்’ படத்தை பார்த்தபோது கூட எனக்கு சற்று ஏமாற்றம் தான். ஆனால் “ஐயப்பனும் கோஷியும்” திரைப்படத்தில் ஹவில்தார் என்கின்ற ஒரு முன்னாள் ராணுவ வீரனாக , ஒரு செல்வாக்கு மிக்க குடும்பத்தின் வாரிசாக மிகச்சிறப்பான நடிப்பினை அவர் வழங்கியிருக்கிறார். பிரித்திவிராஜின் கண்கள் மிகுந்த ஆழம் கொண்டவை. ஒவ்வொரு முறையும் குளோசப் காட்சிகளில் அந்தக் கண்கள் காட்டும் வித்தைகள் நம்மை மிரட்டுகின்றன. அவருக்கு நேரெதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிஜு மேனனும் சளைத்தவரல்ல. இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஒரு மகத்தான திரை அனுபவத்தை நமக்கு வழங்குகிறார்கள். குறிப்பாக பிஜீ மேனனின் அந்த இறுகிய முகம் அவர் வைக்கிற கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

இதேபோல்தான் பிரித்திவிராஜ் கோபப்படும் இடங்களில் கோபப்பட்டு, அவமானப்படும் இடங்களில் அதை சகிக்க முடியாமல் குறுகி… வாழ்க்கையை நினைத்து வருந்தும் இடங்களில் வருந்தி, என நுட்பமான உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தி நம்மை அசத்திப் போடுகிறார்.
படத்தின் ஒளிப்பதிவும், இசையும் நமக்கு காட்சி அனுபவத்தை பரவசமாக்குகின்ற ஆகப் பெரும் துணைகளாக விளங்குகின்றனவிளங்குகின்றன. குறிப்பாக படத்தின் இடையிடையே வருகிற அந்த ஆதிவாசி பாடல் நம் உள் மனதை ஏதோ செய்கிறது.நல்ல திரைப்படத்தின் கதையை ஒரு விமர்சனத்தின் மூலமாக சொல்லிவிட்டுப் போவது அந்த படைப்பாளிகளுக்கு செய்கிற நேர்மை குறைவாக நான் கருதுகிறேன். தேடிப்பிடித்து பார்க்க வேண்டிய படங்கள் என்கிற பட்டியலில் “ஐயப்பனும் கோஷியும்” என்கிற இந்தப் படத்திற்கும் அவசியம் ஒரு இடம் உண்டு. தனிமைப்பட்டு கிடக்கிற இந்த காலகட்டத்தில் இதுபோன்ற அனுபவங்கள் தான் நம்மை உயிர்ப்பாக வைத்திருக்கின்றன.

அவசியம் பாருங்கள்.

 அசுரன்- இலக்கியமான திரைமொழி


இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் லூமியர் சகோதரர்களால் கண்டறியப்பட்ட திரைப்படம் என்கின்ற அறிவியல் கண்டுபிடிப்பு வெகுவிரைவிலேயே தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. 1931ல் தமிழில் முதல் பேசும் திரைப் படமான காளிதாஸ் வெளியானது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் திரை உலகத்திற்கும் , தமிழ் இலக்கிய உலகிற்கும் மிக நெருங்கிய தொடர்பு தொடக்க காலத்திலிருந்தே உண்டு. ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற நாவல் 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அனேகமாக முதன்முதலாக ஒரு நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்ட வரலாறு சதி லீலாவதியில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம்.

அதன் பிறகு தமிழிலக்கிய எழுத்தாளர்களின் பல்வேறு கதைகள் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய திகம்பர சாமியார், கும்பகோணம் வக்கீல், உள்ளிட்ட கதைகளும், வை மு கோதைநாயகி அம்மாள் எழுதிய தியாகக் கொடி ,அனாதைப் பெண் உள்ளிட்ட கதைகளும் தொடக்க காலத்தில் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன ‌.

1952இல் ஆனந்த விகடனில் லட்சுமி என்ற புனை பெயரில் டாக்டர் திரிபுரசுந்தரி எழுதிய காஞ்சனையின் கனவு என்கின்ற தொடர்கதை காஞ்சனா என்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதை லட்சுமி எழுதிய இருவர் உள்ளம், பெண்மனம் ஆகிய கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

1960 இல் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதிய பாவை விளக்கு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அகிலன் எழுதிய மற்றொரு நாவல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற பெயரில் உச்ச நடிகர் எம் ஜி ஆர் நடித்து திரைப்படம் வெளிவந்தது.

திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட தொடங்கியவுடன் திரைப்படத் துறைக்கான முக்கிய கச்சாப் பொருளான கதைக்கான அவசியம் அதிகரித்தது. தமிழில் சிறுகதை வரலாற்றில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய புதுமைப்பித்தன் திரைப்படத் துறையில் பணியாற்றி இருக்கிறார். 1946 வெளிவந்த அவ்வையார் திரைப்படத்திற்கு புதுமைப்பித்தன் வசனம் எழுதியுள்ளார். ராஜமுக்தி என்ற திரைப்படத்திற்கு கதை-வசனம் எழுதும் காலத்தில்தான் புதுமைப்பித்தன் காச நோய் முற்றி இறந்து விடுகிறார். ராஜாஜி எழுதிய திக்கற்ற பார்வதி என்கின்ற கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய மலைக்கள்ளன் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றி அடைந்தது. கல்கி எழுதிய பார்த்திபன் கனவு தியாகபூமி கள்வனின் காதலி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் ராவ்பகதூர் சிங்காரம், விளையாட்டுப்பிள்ளை, என தமிழில் முக்கிய எழுத்தாளர்கள் பலரின் கதைகளும் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

திராவிட இயக்க வளர்ச்சி தமிழ் திரைப்பட உலகத்தோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகும். திராவிட இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவர்களான அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோர் தனது எழுத்துக்கள் மூலமாக திரைப்படத்துறையில் ஆதிக்கம் செலுத்தி அதன் மூலமாக அரசியல் செல்வாக்கையும் வளர்த்துக் கொண்டார்கள். அறிஞர் அண்ணா எழுதிய ரங்கோன் ராதா, தாய் மகளுக்கு கட்டிய தாலி ,வண்டிக்காரன் மகன், நல்லவன் வாழ்வான் உள்ளிட்ட பல கதைகள் திரைப்படமாக தயாரிக்கப்பட்டன. அதேபோல கலைஞர் கருணாநிதி எழுதிய வெள்ளிக்கிழமை, அணையா விளக்கு, பொன்னர் சங்கர் உள்ளிட்ட கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

எழுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட இடதுசாரிகளின் எழுச்சி திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. பொதுவுடமை சித்தாந்தத்தின் மீது ஈர்ப்பு கொண்டு எழுதி வந்த ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (1978), , சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), உன்னைப்போல் ஒருவன்(1965), யாருக்காக அழுதான்(1966) போன்ற நாவல்கள் திரைப்படங்கள் ஆயின.
புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலை இயக்குனர் மகேந்திரன் உதிரிப்பூக்கள் என்ற புகழ்பெற்ற திரைப்படமாக உருவாக்கினார். அதே மகேந்திரன் தான் பொன்னீலன் எழுதிய கதையை பூட்டாத பூட்டுக்கள் என்ற திரைப்படமாக உருவாக்கினார். எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நண்டு என்ற கதையும் இயக்குனர் மகேந்திரனால் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. மேலும் சிவசங்கரி எழுதிய 47 நாட்கள், ஒரு மனிதனின் கதை, தியாகு உள்ளிட்ட பல கதைகள் திரைப்படங்களாகின. நீல பத்மநாபனின் தலைமுறைகள் மகிழ்ச்சி என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டது. மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய விக்ரம்,ஒரே ரத்தம் (நாடோடித்தென்றல்), பிரியா, பிரிவோம் சந்திப்போம், இது எப்படி இருக்கு போன்ற பல கதைகள் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டன.

மிகச்சிறந்த தமிழின் நவீன இலக்கிய உலகின் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரின் கதைகளையும் வசனங்களையும் மூலமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ச தமிழ்ச்செல்வனின் வெயிலோடு போய்.. என்ற கதையை மூலமாக வைத்து வசந்தபாலன் வெயில் என்ற திரைப்படத்தையும்.. ச.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்ற நாவலில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை எடுத்து
அரவான் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாகும் உருவாகும் போதாமைகள் மிக அதிகம்.எழுத்து மொழி வடிவத்திலான இலக்கிய வகைமையை காட்சி மொழியில் பொருத்தும் போது நிகழும் அபாயங்கள் மிக அதிகம். அசுரனின் திரைக்கதை அந்த சவாலை மிக எளிதாக எதிர்கொள்கிறது.

தமிழ் இலக்கிய உலகில் எளிய மனிதர்களின் வாதைகளை, உணர்ச்சிகள் கொந்தளிக்கும் அபூர்வ தருணங்களை தன் எழுத்து மூலமாக 50 வருட காலமாக தமிழ் இலக்கிய உலகில் பதிவு செய்து வருகிற மிக முக்கியமான எழுத்தாளர் பூமணி அவர்கள்.

அவர் எழுதிய வெக்கை என்ற நாவல் தான் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக வெளிவந்திருக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கு முன் வந்த சுமார் 160 பக்கங்களுக்கு மிகாத ஒரு குறுநாவலை திரைப்படமாக உருவாக்க முனைந்த இயக்குனர் வெற்றிமாறனின் துணிச்சலுக்கு உண்மையில் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்து தான் ஆகவேண்டும்.

நூல்வடிவில் வெளிவந்த வெக்கை என்கின்ற குறு நாவலின் கதை மிக எளிமையானது. ஊர் பெரிய மனிதனான வடக்கூரானுக்கு அந்த எளிய குடும்பம் வைத்திருக்கிற துண்டு நிலம் சிமெண்ட் பேக்டரி கட்டுவதற்காக தேவைப்படுகிறது. வடக்கூரானின் வயலுக்கு மிக அருகே இருக்கிற சிறு துண்டு நிலத்தை கொடுக்க மறுக்கிற ஏழை சிவசாமி யின் குடும்பத்தின் மூத்த வாரிசை கொடூரமாக கொலைசெய்து அந்த சிறு குடும்பத்தின் எளிய வாழ்வை அழித்து முடிக்கிறது வடக்கூரானின் பண்ணையார்த் தனத்தின் பேராசை. குடும்பத்தின் மையப்புள்ளியாக இருந்த வனின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த குடும்பம் தவிக்கிறது. நிம்மதியற்ற இரவுகள். உறக்கமற்ற பொழுதுகள். இரவு பகலாக பகைமை ஒரு ஆழ்ந்த பசியாக அந்த குடும்பத்தை வருத்துகிறது. அனைவரும் ஒரு தருணத்திற்காக காத்திருக்க.. அந்த சிறிய இளைஞன் முந்திக்கொண்டு தன் அண்ணனின் உயிர் பறித்த வடக்கூரானை கொலைசெய்து பழி தீர்க்கிறான்.

வழக்கமாக பூமணி நாவல்களில் காணப்படும் அதே உணர்ச்சிப் படிமங்கள் இந்த நாவலிலும் நாம் காணலாம். நெல்லை வட்டார வழக்குகள் மிகுந்திருக்கும் பூமணியின் எழுத்துக்கள் சமூக உணர்ச்சி கொண்டவை.

வெக்கை நாவலை பொறுத்தவரையில் ஆழ் நெஞ்சுக்குள் அறுக்கும் பகைமை எப்படி பழித் தீர்த்து பசியாற்றி கொள்கிறது என்பதைதான் பூமணி மிக நுட்பமாக எழுதி இருப்பார்.

எழுத்து வடிவில் வாசிப்பு அனுபவத்தில் நாம் கண்டடைந்து வியந்த பூமணியின் நுட்பத்தை வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக திரையில் பார்த்த போதும் கண்டடைந்தது தான் இப்படத்திற்கான வெற்றி.

நாவலை அப்படியே கதையாக்காமல் தந்தை கதாபாத்திரத்திற்கு கீழ்வெண்மணி மற்றும் பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டங்கள் ஆகிய சம்பவங்களை முன்வைத்து ஒரு பின்கதை வைத்திருப்பதும், எண்பதுகளில் நடைபெறுகிற கதையில் தென்படுகிற சாதிப் படிநிலையின் நுண்ணரசியல் காட்சிகள் அசுரன் திரைப்படத்தை அரசியல் அசுரனாக காட்டுகிறது.

இத் திரைப்படத்தின் முத்தாய்ப்பு அதன் இறுதி காட்சி. பகைமை. அதைத்தொடர்ந்த இருபக்கமும் நிகழ்ந்த கொலைகள் என தொடர்கின்ற போது.. ஒரே மொழி பேசுறோம்.. ஒரே நிலத்தில் வாழ்கிறோம்.. இனியும் இது தொடரக்கூடாது என இன ஓர்மை பேசுகிற அந்த இறுதிக் காட்சி தான் வெற்றிமாறன் அசுரன் திரைப்படம் மூலம் நிகழ்த்த விரும்பும் அரசியல்.

எப்போதும் சாதி நிலை முரண்களை குறித்த திரைப்படங்களில் இறுதியாக சொல்லப்பட்டிருக்கும் அதே செய்திதான் இத்திரைப்படத்திலும்அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. தந்தை சிவசாமி மகன் சிதம்பரத்திடம் எதையும் பறித்துக் கொள்வார்கள். ஆனால் படித்த படிப்பை மட்டும் பறித்துக் கொள்ள முடியாது. எனவே நன்கு படி என்று கூறுவது இத்திரைப்படம் வலியுறுத்த விரும்பும் செய்தியாக இருந்தாலும்.. கல்வி‌ பயிலும் இடங்களிலும், கல்வி கற்ற பின் வேலை பார்க்கும் இடங்களிலும் காட்டப்படும் சாதிய ஏற்றத்தாழ்வு பார்வை இன்னும் பல இடங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நம் முகத்தில் அறையும் உண்மை.

ஒரு எளிய குடும்பத்தை தாங்குகின்ற தந்தை எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பான் என்பதை நுட்பமாக அசுரன் விவரிக்கிறது. தனது இளைய மகன் அடிபட்டு விழும் போதெல்லாம் தாக்கவரும் கழுகுவிடமிருந்து தனது குஞ்சினை காப்பாற்ற போர்க்குணம் கொண்டு போராடும் தாய்க்கோழி போல உக்கிர பார்வையோடு தனுஷ் தோன்றும் போதெல்லாம்.. திரையரங்கம் அதிர்கிறது ‌.

வரலாற்றுத் தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசியலை தாழ்த்தப்பட்டவர்களே தான் முன்னெடுக்க வேண்டும் எனவும்.. அவர்களின் கலையை, இலக்கியத்தை, திரைப்படத்தை அவர்கள்தான் சரியாக, நேர்மையாக இருக்க முடியும் எனவும் இருந்த அனைத்து சமன்பாடுகளையும் வெற்றிமாறன் தனது உச்சபட்ச கலை வெளிபாட்டால் கலைத்துப் போட்டு இருக்கிறார்.‌ சாதி ஏற்றத்தாழ்வு பார்த்து செருப்பு போடக்கூடாது என்றவனை செருப்பாலயே அடித்து கட்டிப் போடுகிற அந்த கம்பீரக் காட்சி சாதிக்கு எதிராக வெற்றிமாறன் உபயோகப்படுத்தி இருக்கிற மாபெரும் ஆயுதம். ஒரு தந்தையின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படமொன்றில் சாதி உணர்வுக்கான சாட்டையடி காட்சிகளை வெறும் பிரச்சாரமாக துருத்தாமல் பொருத்தமாக பொறுத்தி இருப்பதுதான் வெற்றிமாறனின் சாதனை.

தனுஷ் மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் , சிவசாமியின் மகனாக நடித்து இருக்கிற அந்த இரண்டு இளைஞர்கள் என ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு வாழ்நாள் சாதனையாக அமைய எடுக்கிற ஒரு திரைப்படத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்கின்ற உள்ளார்ந்த வேட்கையில் அவர்கள் நடித்திருப்பது நமக்குப் புரிகிறது.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக எடுக்கப்படும்போது பிழைகள் நேருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அதற்கு மிகச்சரியான உதாரணம் தி ஜானகிராமன் எழுதிய மோகமுள் நாவல். வாசிக்கும்போது மாபெரும் வாசிப்பனுபவத்தை தருகிற அந்த நாவல் ஞான.ராஜசேகரன் இயக்கி திரைப்படமாக காணும்போது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. இத்தனைக்கும் இளையராஜா அந்த திரைப்படத்தில் மிக அற்புதமான இசையை வழங்கியிருந்தார்.அதே போல எழுத்தாளர் காந்தர்வன் எழுதிய சாசனம் கதை இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் அரவிந்த்சாமி ,கவுதமி ரஞ்சிதா நடித்து திரைப்படமாக வெளியான போது எழுத்து வடிவம் கொடுத்த நிறைவை தரவில்லை.

அதுபோன்ற பிழைகள், விடுதல்கள் எதுவும் அசுரனுக்கு நேரவில்லை. கதை நடக்கும் களத்தையும், காலகட்டத்தையும் மிக கவனமாக சித்தரித்த விதம் கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கதாநாயனாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற தனுஷ் சிறுசிறு முகபாவங்களில் கூட கவனம் செலுத்தி திரைப்படத்திற்கு நேர்மை செய்திருக்கிறார். இசை ஜீ.வி பிரகாஷ். இதுபோன்ற ஒரு காலகட்டத்தை விவரிக்கின்ற திரைப்படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிக சவாலான ஒன்று. அந்த சவாலை மிக அற்புதமாக கையாண்டிருக்கிற ஜீ.வி பிரகாஷுக்கு இத்திரைப்படம் அவர் திரை வாழ்க்கையில் ஒரு பூச்செண்டு.

இயக்குனர் வெற்றிமாறனின் நிரந்தர ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயின் என்று வலுவான அணியினர் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி மாபெரும் அசுரத்தனம் காட்டியிருக்கிறார்கள்.

ஊருக்குள் ஆயிரத்தெட்டு சாதிகள்.. தலைமுழுக ஒரே ஆறு.. என்பதான அண்ணன் அறிவுமதியின் கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது.
அதைத்தான் தனது அசுரன் திரைப்படம் மூலமாக மிக அழுத்தமாக வெற்றிமாறன் வெற்றிகரமாக கூறியுள்ளார்.

ஒரு இலக்கியப் பிரதி திரைப்படமாக மாறுவதோடு மட்டுமில்லாமல் ஒரு திரைப்படம் ஒரு இலக்கிய வடிவமாக மாற முயன்று இருப்பதுதான் அசுரன் நிகழ்த்தி இருக்கிற பாய்ச்சல்..

மிக மிக அவசரம்- பெண் வாதையின் கலை வடிவம்..

 

சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது எனது மிக நெருங்கிய நண்பரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அலைபேசியில் திடீரென அழைத்தார். சுரேஷ் காமாட்சியின் அழைப்பு எப்போதும் முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாக தான் இருக்கும். நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார். அரசியலும் சினிமாவும் என அவரோடு பேச பல செய்திகள் இருக்கின்றன. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் தான் பிறந்த இனத்திற்கான அரசியலோடு இணைத்தே செய்வதில் அவர் தனித்துவமானவர். இப்போதும் ஒரு முக்கியமான காரணத்திற்காக தான் அழைத்திருந்தார்.

தல ஓய்வாய் இருக்கீங்களா எனக் கேட்டார். சொல்லுங்க தல வரேன்.என்றேன். அவர் இயக்கத்தில் வருகிற அக்டோபர் 11 அன்று வெளிவர இருக்கின்ற மிக மிக அவசரம் என்ற திரைப்படத்தை தனிப்பட்ட திரையிடலில் காண என்னை அழைத்தார்.

மிக மிக அவசரம் ஒரு வித்தியாசமான கதை. அது திரைக்கதை வடிவத்தில் இருக்கும்போதே நான் வரிக்குவரி படித்திருக்கிறேன். அப்போதே நண்பர் சுரேஷ் காமாட்சியிடம் இந்தத் திரைக்கதை கொடுக்கும் அதே உணர்ச்சியை நீங்கள் திரையில் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால்… ஒரு மிகச்சிறந்த படைப்பை தமிழ் திரை உலகிற்கு வழங்கிய பெருமை உங்களுக்கு கிடைக்கும் என்று சொல்லி இருந்தேன். திரைக்கதையாக நான் அறிந்திருந்த ஒரு கதையை திரைப்படமாக காண இருக்கிற ஆர்வம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

இதுவரை தமிழ் திரை உலகில் பேசப்படாத ஒரு விஷயத்தை நண்பர் சுரேஷ் காமாட்சி இத்திரைப்படம் மூலம் பேச முனைந்திருப்பதன் மூலம் தான் எவ்வளவு துணிச்சலானவர் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பை அந்தக்கதை அவருக்கு வழங்கியிருந்தது.

காவல்துறை பற்றி நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் மலையாள படமான மம்முட்டி நடித்த உண்டா குறித்து கூட நான் விரிவாக ஒரு பதிவிட்டிருந்தேன். மிகை சித்தரிப்புகளும், கதாநாயக பாவனைகளும் மிகுந்திருக்கும் காவல்துறை பற்றிய பல படங்கள் எனக்கு மிகுந்த சலிப்பை ஏற்கனவே ஏற்படுத்தியிருந்தன. காவல் துறையில் பணியாற்றுபவர்களை சூப்பர் மேனாக காட்டியதில் தமிழ் திரை உலகை அடித்துக்கொள்வதில் எவ்வுலகிலும் ஆளில்லை. காவல் துறையில் பணியாற்றுபவர்களும் நம்மைப் போன்ற சாதாரண எளிய மனிதர்கள் தானே என்கிற எண்ணத்தை தமிழ் திரை உலகின் பல இயக்குனர்கள் அழித்து முடித்து விட்டார்கள். ஆனால் சுரேஷ் காமாட்சியின் மிக மிக அவசரம் காவல்துறை மீது நாம் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகளை மாற்றிப் போடுகிறது. அவ்வகையில் இது மிக முக்கியமான திரைப்படம் ‌.

இது ஒரு பெண் கான்ஸ்டபிளின் உயிர் வாதையை பற்றி பேசுகிற ஒரு மனிதநேய படைப்பு. பணியிடங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகும் பெண்களைப் பற்றிய திரைப்படங்களில் மிகமிக அவசரத்திற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

நாம் நினைப்பது போல பெண்களின் வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. ஒரு ஆணாய் இருந்துகொண்டு பெண்களின் சிரமங்களைப் புரிந்து கொள்ள ஆணுக்குள்ளும் ஒரு தாய்மை தேவைப்படுகிறது. பெண்களிடமிருந்து உழைப்பு, அன்பு, காதல், கருணை, உடல் என அனைத்தையும் சுரண்டிக் கொள்கிற ஒரு மோசமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் அவர்களுக்காக வாழ்ந்ததை விட நமக்காக, இந்த சமூகத்திற்காக.. வாழ்ந்தது மிக அதிகம். பெண் உடல் மீது பல்வேறு வன்முறைகளை ஆணாதிக்க சமூகம் பிரயோகித்துக்கொண்டே இருக்கிறது. அது குடும்ப அமைப்புகளாக இருக்கட்டும் அல்லது பணியிடம், கல்வி பயில சென்ற இடங்கள் ஆகியவைகளாக இருக்கட்டும்.. பெண்கள் மீதான ஆணாதிக்கம் எண்ணங்களாக, சொற்களாக, செயல்களாக, அசைவுகளாக, எழுத்துக்களாக, வெளிப்பாடுகளாக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

நாம் நினைத்தால் வன்முறையை பயன்படுத்துவதற்கு.. சுரண்டுவதற்கு.. பயன்படுத்திக் கொள்வதற்கு மிக அருகிலேயே வாய்த்து விட்ட ஜீவன்களாக
பெண்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக இவற்றை அணுகவேண்டும் என்பது உறுதியாகிறது.

ஒரு பெண்ணை அடிமைப்படுத்த குடும்பம், சமூகம், சாதி, மதம் என பல காரணிகள் திட்டமிட்டு இங்கே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக நம் மண்ணில் தொடர்ந்து வருகிற வர்ணாசிரம அடுக்குகள் பெண்களை திட்டமிட்டு வீழ்த்தி வைத்திருக்கின்றன.

அதே போல வர்ணாசிரம அடுக்குகளை போன்றே காவல்துறையின் அதிகாரம் சார்ந்த அடுக்குகள் கொடூரமானவை. உயர் அதிகாரி நினைத்தால் தனக்கு கீழுள்ளவரை எப்படியும் வதை செய்யலாம் என்கின்ற உச்ச அதிகாரம் காவல்துறையில் மிகுதி ‌‌. அப்படி ஒரு வதைக்கு உள்ளான ஒரு பெண்ணின் சில மணி நேர வாழ்க்கை பயணம்தான் மிக மிக அவசரம்.

படம் தொடங்கிய முதல் எடுத்த எடுப்பிலேயே உச்ச வேகத்தில் கதை பயணிக்கத் தொடங்கியது. திரைக்கதையில் நான் கண்ட அதே வேகம் திரைப்படத்திலும் மிளிர்ந்தது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தின் நாயகியாக நடித்திருக்கிற அந்த இளம்பெண் மிக அற்புதமான பங்களிப்பினை செய்திருக்கிறார். அதேபோல படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நாம் ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்த பிரபலமான நடிகர்கள் தான். அண்ணன் சீமான் அவர்களுக்கு கதையின் முடிவினை தீர்மானிக்கிற முக்கிய கதாபாத்திரம். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். எனது உயிர் நண்பர் வெற்றிக்குமரன் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நாம் தமிழராய் கை உயர்த்தி போகிறார்.

இத்திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கதையைப் பற்றி நான் எதுவும் சொல்லப் போவதில்லை. திரையரங்கம் சென்று பாருங்கள். குறிப்பாக குடும்பத்தோடு தாய் ,சகோதரி, மனைவி என அவரவரும் குடும்பத்தில் இருக்கின்ற பெண்களோடு இத்திரைப்படத்தை காணுங்கள்.

திரைப்படத்தின் முடிவில் அவர்களது கண்களை கவனியுங்கள். உங்களது விழிகளையும் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு சேர கலங்கி இருக்கின்ற அந்த விழிகள் தான் நண்பர் சுரேஷ் காமாட்சி அடைய இருக்கிற மகத்தான வெற்றி.

உண்டா (Unda)- மனதை உறுத்தும் எதார்த்தம்.

 

காணத் தவறக்கூடாத இயல்பின் அழகியல்.. இக்ஃலு.

 

வாழ்வென்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப வரைந்து கொள்ளும் ஓவியமா அல்லது எதிர்பாரா மின்மையையே சூட்சமமாக கொண்டு எதனாலோ கிறுக்கப்படும் கிறுக்கல் தான் வாழ்க்கையா.. என்று நினைக்கும்போது இரண்டும் தான் என நினைக்கத் தோன்றுகிறது.

இந்த வாழ்வு என்பது நிரந்தரம்.. ஒரு பாதுகாக்கப்பட்ட பெட்டியில் நாமும் நமது குடும்பத்தினரும் பத்திரமாக இருக்கிறோம் என்றெல்லாம் பலர் நினைத்துக் கொண்டிருப்பதால் தான்.. சின்னஞ்சிறு விதியின் பிசகில் கூட மானிட வாழ்வு பலருக்கு நரகமாகி விடுகிறது.

ஆனாலும் மாற்றி எழுதப்பட்ட ஒரு வாழ்வின் சோக அத்தியாயத்தை இயல்பாக எதிர் கொண்டவர்களும் இவ்வுலகத்தில் இருக்கிறார்கள். நோய்மையின் காரணத்தால் வீழ்ச்சியுற்ற அவல வாழ்வின் கதையை நாம் ஏராளமான திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதுவும் புற்றுநோயைப் பற்றி தமிழ் திரை உலகில் மிகப்பெரிய ஆராய்ச்சியே நடந்திருக்கிறது என்கிற அளவிற்கு நிறைய புற்றுநோய் கதைகள் திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன.

அதில் ஒரு பிரபலமான திரைப்படம் வாழ்வே மாயம். படத்தின் இறுதிக் காட்சிகள் இருமி இருமி ரத்த வாந்தி எடுத்து கமல் படிப்படியாக இறக்கும்போது… மிடறு விழுங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தாய் கொண்டு வந்ததை நோய் கொண்டு போகுதம்மா என்று கமல் பாடும்போது புற்றுநோய் எதிரிக்கு கூட வந்து விடக்கூடாது என்று அனைவரும் நினைத்தார்கள்.

ஆனால் இன்றைய வாழ்க்கை அப்படி இல்லை.குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது மிக சாதாரண ஒன்றாக மாறிவிட்ட உலகில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். எனது குடும்பத்தில் எனது பெரியப்பா ஆசிரியர் ச. இராசதுரை அவர்களுக்கு புற்றுநோய் வந்ததை என் கண்ணால் கண்டேன். எனது தாத்தாவிற்கும் புற்று நோய்த் தொற்று இருந்ததாகச் சொல்கிறார்கள். எனவே புற்றுநோய் அபாயம் எங்கள் குடும்பத்தின் மீது ஒரு கரும் நிழலாக சுழன்று கொண்டிருக்கிறது.

என் வீட்டின் எதிரே இருக்கின்ற பெட்டி கடை வைத்திருக்கிற பெரியவருக்கு புற்றுநோய். வயிற்றில் ஏதோ கட்டி என்று சொன்னார்கள். அது புற்று நோயாக இருக்கக்கூடும் என பயாப்சி எடுக்க சொன்னார்கள். ஆனால் பெரியவர் மறுத்துவிட்டார். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்.வலிக்கு மட்டும் மாத்திரை கொடுங்கள் என்று வாங்கி விட்டு வந்து விட்டார். தினந்தோறும் அந்தப் பெரியவர் கடையைத் திறந்து வியாபாரம் செய்து சாதாரணமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வருகிறார். அவரிடம் இது குறித்து கேட்டபோது.. அதை ஏன் சார் நோண்டுவானேன்.. அது இருந்து விட்டு போகட்டும்.. இல்லை என்றால் மட்டும் நான் நூறு வயது வாழ்ந்துவிட போகிறேனா.. போங்க சார்.. என்று சிரித்துவிட்டு அவர் கடந்து விடுகிறார்.

உண்மைதான். அச்சமும், எதிர்கால இருப்பு பற்றிய எண்ணங்களுமே உண்மையான நோய் என உணரமுடிகிறது. ஒரு நோய்மையை நேருக்கு நேராக எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு அதை வெல்லும் எத்தனையோ நபர்கள் சாதாரண வாழ்வில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இதயத்தை திருடாதே திரைப்படத்தில் கதாநாயகிக்கு இதயத்தில் பழுது. அவளுக்கு ஏற்பட்டிருக்கிற நோயை குறித்து கதாநாயகன் கலங்கி நிற்கும் போது.. எதற்கு நீ கவலைப்படுகிறாய்.. இதோ என் தங்கை அவள் சாகப் போகிறாள்.. என் பாட்டி சாகப் போகிறாள் என் அம்மா சாகப் போகிறாள்.. இதோ விளையாடிக் கொண்டிருக்கும் என் குட்டி தங்கை சாகப் போகிறாள்.. நானும் சாகப்போகிறேன் அவ்வளவுதான் என மிக எளிமையாக கூறும் ஒரு வசனம் ஒன்று உண்டு.

அப்படி மரணம் விளைவிக்கக்கூடிய நோய்மையை அதன் போக்கில் எதிர்கொண்டு வலி மிகுந்த வாழ்வின் அவலத்தை கூட இயல்பாக சந்திக்க முனைகிற இருவரைப் பற்றிய ஒரு அசத்தலான காதல் கதைதான் இக்ஃலு.

இன்றைய நவீன வாழ்வில் இணையம் வழி பொழுதுபோக்குகள் மிகுந்திருக்கின்றன ‌. இணையம் வழி திரைப்படங்களும் தமிழிலும் வெளிவரத் தொடங்கிவிட்டன. திரையரங்குகளில் காண இயலாத இணையம் வழி மட்டுமே காண முடிகிற ஒரு திரைப்படம் தான் இது.

முதலில் இத்திரைப்படத்தைப் பற்றி என்னிடம் சொன்ன என் மைத்துனர் பாக்கியராசன் கட்டாயம் பாருங்க தல என்று அவசர படுத்தினார். இது ஒரு வெப் மூவி என்பதால் நாடகத்தனமாக இருக்குமோ என்று எனக்கு ஒரு அச்சம். ஏற்கனவே நெட் பிளிக்ஸில் lust stories போன்ற படங்களைப் பார்த்து இருந்தாலும்.. தமிழில் இது போன்ற முயற்சிகள் புதிதானவை என்பதால் அணுக எனக்கு ஒரு தயக்கம். பிறகு அன்று மாலையே நாம் தமிழர் மாணவர் பாசறையின் குடந்தை செயலாளர் தம்பி விக்கி தமிழனும் இத்திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா என்று என்னை ஆர்வப் படுத்தினான். இத்திரைப்படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான என் தம்பி அருண் “உன் தம்பி ஒரு படத் தயாரிப்பில் ஈடுபட்டு அந்த படம் வெளிவந்திருக்கிறது. இதுவரை அண்ணனாகிய நீ பார்க்கவில்லை” என்றாலெல்லாம் என்னை நோக்கி ஏற்கனவே குற்றம் சாட்டி என்னை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி இருந்தான்.

அதற்காகவே வந்த சேர்ந்தது ஒரு அடர் மழை பெய்த மாலை.

மிக சாதாரணமாக எடை போட்டு நான் பார்க்கத் தொடங்கிய அத் திரைப்படம் முடியும்போது என்னை விழுங்கி இருந்தது. உண்மையில் பிரமித்துப் போனேன். A Feel Good திரைப்படம்.

ஒரு திரையரங்கில் நாம் சாதாரணமாகக் காண நேரிடும் ஒரு திரைப்படத்திற்கு தேவைப்படுகின்ற உழைப்பு பொருளாதாரம் நேர்த்தி என அனைத்தும் இவ்வகை திரைப்படங்களுக்கும் தேவைப்படுகின்றன என்பதை இக்‌ஃலு வை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

நேர்த்தியான கதை. சுவாரசியமான வசனங்கள். நோயைப் பற்றிய திரைப்படமாக இருந்தாலும் கொஞ்சம் கூட அவலச் சுவை தட்டாத திரைமொழி. கதாபாத்திரங்களுக்கு மிகுந்த நேர்மை செய்திருக்கிற நடிகர்கள். சின்ன சின்ன விஷயங்களிலும் செலுத்தி இருக்கிற நுட்பமான கவனம் என அனைத்தும் சேர்ந்து இத்திரைப்படத்தை காண்பதற்கு தகுந்த ஒரு மாபெரும் அனுபவமாக மாற்றி விடுகின்றன.

குழந்தை கதாபாத்திரம் முதல் வயதானவர்கள் வரை யாரும் இயல்பை மீறி நடிக்காதது மிகுந்த ஆறுதல். கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவு.

கதையை காட்சி காட்சியாக இங்கே நான் விவரிக்க விரும்பவில்லை. ஒரு நாள் ஒரு பொழுதில் நேரத்தை ஒதுக்கி இத்திரைப்படத்தை அவசியம் காணுங்கள். இந்த வாழ்வின் மீதான உங்கள் கண்ணோட்டத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உங்களை கண் கலங்க வைக்கவும், புன்னகைக்க வைக்கவும் உகந்த ஒரு மனநிலையை இக்ஃலு உங்களில் ஏற்படுத்தும் என்பது உறுதி. படத்தின் இறுதிக் காட்சி ஒரு நிமிடம் உங்களை உலுக்கி திகைக்க வைத்து உறையவைக்கும் அனுபவத்தை உடையது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் பரத்திடம் இத்திரைப்படம் கண்ட இரவில் பிரமிப்பு நீங்காமல் பேசினேன். பார்வையாளர்களை தன் வசப்படுத்தும் ஒரு கதை சொல்லும் முறை உங்களுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. மாபெரும் படைப்பாளிகள் கூட ஏங்குகின்ற மேஜிக் உங்களுக்கு முதல் படத்திலேயே வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள் என்றேன்.

நன்றி சார் என்றார் எளிமையாக.

அந்த இளைஞனை கவனித்து வைத்துக் கொள்ளுங்கள். சமீபகால திரை உலக நம்பிக்கை இக்ஃலு திரைப்பட இயக்குனர் பரத் நான் மிகைப்படுத்தாமல் முன்மொழிகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

ஒரு நல்ல திரைப்படத்தை லாப நோக்கமின்றி செறிவுடன் தயாரித்திருக்கிற drumstick production குழுவினருக்கும்.. அக்குழுவில் இடம் பெற்றிருக்கிற எனது ஆருயிர் இளவல் அருணிற்கும் எனது வாழ்த்துக்கள்.

இத்திரைப்படம் zee5 ஆப் பில் காணக் கிடைக்கிறது. நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளர் ஆக இருந்தால்.. ஏர்டெல் டிவி என்கிற ஆப் பிலும் காணக் கிடைக்கிறது. அவசியம் பாருங்கள்.

நிறைய இது போன்ற முயற்சிகளை செய்யுங்க அருண் சார்..

 

.

மேற்குத் தொடர்ச்சி மலை- யதார்த்த அழகியலின் திரைமொழி.

 

 

ஒரு நாள் இலக்கிய நணபர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு வந்தது. அப்போது என் பக்கத்தில் இருந்த ஒரு மூத்த எழுத்தாளர் வெகு சாதாரணமாக விடுதலைப் புலிகளிடம் இருந்த பணத்திற்கு ஏதேனும் ஒரு தீவை விலைக்கு வாங்கி கொண்டு தங்களுடன் வரும் மக்களோடு அங்கே சென்று ஒரு நாட்டை கட்டியிருக்கலாமே என்று கேட்டார். கேள்வி மிக எளிதுதான். அவர் என்னிடம் கேட்க விரும்பியது ஏன் அதே நிலத்தை தக்கவைக்க பிடிவாதமாக உயிரை விடுகிறார்கள் என்பதுதான்.

அவர் ஒரு முற்போக்கு பிராமணர். பூணூலெல்லாம் அணிந்துக் கொள்ள மாட்டார் . மார்க்சிய சித்தாந்தத்தில் நாட்டமுடையவர். அவர் கேட்ட கேள்வி அங்கு இருப்பவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் நியாயம்தானே என்று யோசிக்கும் அளவிற்கு குழப்பியது.

நிலத்திற்காக உயிரையா இழப்பார்கள்.. என்ற கேள்விக்கு ஒரு பூர்வக்குடி மனிதனால் என்ன பதில் சொல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..?

ஆம். நிச்சயம் உயிரை விட தாய்நிலம் மகத்தானது. அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால் அந்த அறிவு ஜீவி பார்ப்பனரால் என் பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவரது தவறும் இல்லை. பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கு தாய் நிலப் பற்று இருப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு என தாய்நிலம் என்று எதுவும் இல்லை. தாய்நில நேசிப்பதென்பது பூர்வ குடிகளின் தனித்துவக் குணம். எந்த தாய்நிலத்தில் ஒரு பூர்வக்குடி பிறந்தானோ அதே தாய் நிலத்தில் தான் இறக்கவும் அவன் விரும்புகிறான். அந்த மண்ணோடு அவன் மண்ணாக மட்கி மாறுகையில் தான் அவன் நிறைவுறுகிறான்.

ஒரு பூர்வக்குடியின் இந்த மகத்தான தாய் நில நேசிப்பு உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் , அரசியல் ஆகியவைகளால் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதை ஒரு புனைவிற்கு அப்பாற்பட்ட எதார்த்த அழகியலோடு சொல்லப்பட்டிருக்கிற திரைப்படம்தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

திரைப்படம் என்பது ஒரு புனைவிற்கு முடிந்தளவு நேர்மை செய்கிற காட்சி அழகியல் ஊடகம். தன் முன்னால் விரிகிற அந்தக் காட்சியில் பார்வையையும் ஒரு பாத்திரமாக உணரவைத்து அவனையும் உயிரோடு அதில் உலவவைத்து… திரையோடு ஒன்றிட வைக்கும் மகத்தான ஒரு வித்தை தான் திரைப்படம். அந்த வித்தையை மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக நிகழ்த்தி இருக்கிறது.

அந்த மலை வனம். பூச்சிகளின் ரீங்காரம். பறவைகளின் ஓசை. பசும் ஈரம் நிறைந்த ஏற்ற இறக்கமான வழித்தடங்கள். எப்போதும் வீசிக் கொண்டிருக்கிற ஊதற்காற்று, என திரையரங்கு குள்ளேயே நம்மை மலை வனம் ஒன்றின் பசுமை மணத்தை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. அவருக்குப் பக்கபலமாக ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வரும், இசைஞானி இளையராஜாவும் செயல்பட்டிருக்கிறார்கள்.

கால்வலியும் , களைப்பும் நேர வைக்கிற ஓங்கி உயர்ந்த நெடிய மலை. அதில் தன்னந்தனியனாக தகவல் சொல்பவனாக திரியும் ரங்கசாமி. அவனுடனேயே அலையும் அந்த மலை படுகையில் ஒரு சிறு நிலம் வாங்கும் அவனது கனவு. படம் முழுக்க மலைகளில் வாழுகிற எதார்த்த மனிதர்கள் . மூட்டை தூக்கி தூக்கியே ரத்தம் வருமளவிற்கு இருமிச் சாகும் அந்த முதியவர், மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, தன் கணவனுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிற அந்த எளிய மலை கிராமத்து பெண், கோபமும் எரிச்சலும் இறுதியில் கண்ணீரும் நிரம்பிய அந்த கங்காணி, ஆவேசமும் கொள்கைப்பிடிப்பும் நிறைந்த அந்த செங்கொடி சகா, என படம் முழுக்க உலவுகிற நிஜ மனிதர்களின் உணர்ச்சிக் குவியலே இப்படத்தின் திரைமொழி.

கதையை சில வரிகளில் நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த வாழ்க்கை தருகிற வலியை யாரால் விவரிக்க முடியும்… கதை இதுதான். சிறிய நிலம் வாங்க ஆசைப்படுகிற மலை வாழ் இளைஞன் ரங்கசாமி. வீட்டில் உள்ள அனைத்தையும் விற்று ..மனைவியின் தாலியையும் அடமானம் வைத்து ,நிலம் வாங்க ஏலக்காய் முட்டையை சுமந்து செல்லும் போது அதைச் சற்றே வைத்துவிட்டு நிலத்தை குடும்பத்தோடு வேடிக்கை பார்க்கும் ஒரு பொழுதில் மூட்டை சரிந்து பாதாளத்தில் விழ அவனது கனவு நொறுங்குகிறது. பிறகு தந்தைக்கு வேண்டிய ஒருவரால் அந்த நிலம் வாங்கும் கனவு கடனாக சாத்தியப்பட.. அந்நேரத்தில் எஸ்டேட்டை மூடி தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறான் முதலாளி. தொழிலாளி வர்க்கத்திற்காக நேர்மையாக குரல் கொடுக்கும் உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் இளைஞனுடன் அந்த முதலாளியையும் அவனுக்குத் துணை போன போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரையும் கொன்றுவிட்டு சிறை படுகிறான் ரெங்கசாமி. சில வருடங்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது தன்னிடத்தில் இருந்த ஒரே சொத்தான நிலத்தை விவசாயம் செய்வதற்காக மனைவி வாங்கிய கடனுக்காக அந்த நிலமும் பறிபோக.. என்ன ஆனது ரெங்கசாமியின் கனவு என்பது தான் மேற்குத் தொடர்ச்சி மலை.

பூர்வ குடிகள் நிலங்களை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் நிலத்திற்கும், இயற்கைக்கும் ,காடுகள் ,மலைகள் ,சோலைகள் ,தாவரங்கள் என தன்னைச் சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என நம்பி அந்த வனத்தையும் அந்த மலையையும் மட்டுமே உயிராக நினைத்து வாழ்கின்ற எளிய மக்கள் அவர்கள்.

அந்த மலையைத் தவிர.. வனத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அவர்களை பலி கொடுத்தே இங்கே நவீன இந்தியா கட்டப்படுகிறது. வலிமையான பாரதத்தை உருவாக்க பல எளிய மனிதர்களின் வாழ்வும் , கனவும் பலி கொடுக்கப்படுவதை தான் நாம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணீர் மல்க பார்க்கிறோம்.

இப்படத்திற்கு உயிரே இப்படம் கொண்டிருக்கும் கனத்த மௌனம் தான். அதை இளையராஜா முற்றிலும் உணர்ந்திருக்கிறார். மகத்தான அந்தக் கலைஞனுக்கு எங்கெங்கே இசைப்பது என்பதைத் தாண்டி எங்கெங்கே மெளனிப்பது என்பது மிக நுட்பமாக கைவந்த கலையாக இருக்கிறது. சமீபத்திய நம்பிக்கை வரவு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். முழு மலையையும் அப்படியே திரைக்குள் கொண்டு வந்து இயற்கை வெளிச்சங்களோடு படத்தின் அழகியலை மெருகேற்றிருக்கிறார்.

மலையாள திரைப்படங்களில் மட்டுமே நாம் கண்டுணர்ந்த எதார்த்த அழகியல் தமிழ் திரையிலும் ஒளிரத் தொடங்கி விட்டது என்பதற்கான நம்பிக்கைக் கீற்று தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த உலகமயமும் , சுயநல அரசியல் முறைமைகளும் ஒரு மலை வனத்தின் மென் காற்றாய்.. நிலத்தின் உரிமையாளனாய் .. திரிந்துகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு யூனிபார்ம் மாட்டி வாட்ச்மேன் ஆக்கிய கொடும் கதை தான் வீதிக்கு வீதி , ஊருக்கு ஊர் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆவணப்படுத்தியதில் மேற்குத் தொடர்ச்சி மலை முழு வெற்றி அடைந்திருக்கிறது.

இயக்குனர் லெனின் பாரதிக்கு கை நிறைய மலை வனப் பூக்களும்..வாழ்த்துகளும்..

இப்படிப்பட்ட படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

மரணம்- தீராத் துயர் நீங்க சிறுபுன்னகை..

 

 

15726679_234535580304651_6748961008342597201_n

எப்போதும் என் இரவுகளில் தனிமை தகர வாளியின் மீது சொட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகள் போல அமைதியற்றது. விரிந்த வானில் தனித்து பறக்கும் ஒரு பறவை போல ஆழ் தனிமையை என் இரவுகள் போற்றுகின்றன. கண் மூடி அமைதிக் கொண்டிருக்கிற இமைகளுக்குள் அமர்ந்து தனிமை வயலின் வாசிப்பதை என் இரவுகள் உணர்ந்திருக்கின்றன. ஆதி வனத்தின் விடியற்காலைப் பொழுதைப் போல களங்கமற்ற தனிமையைத் தான் மரணமும், பிறப்பும் சதா நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு சிறு புன்னகை, இடது கையை இறுக்கி பற்றி தோளில் ஆழப் புதையும் முகம், தீரா அன்பினால் வெம்மைக் கொண்டிருக்கும் அந்த விழிகள் என தனிமைத் தேநீரை ருசிக்க விடாமல் துரத்தினாலும், குளிர்காலப் போர்வைப் போல தனிமையை இறுக்கப் போர்த்திக்கொள்ளவே என் இரவுகள் விரும்புகின்றன.

அப்படி ஒரு பனிக்கால தனிமை இரவில் தான் நான் இத்திரைப்படத்தை காண நேர்ந்தது. என் விழிகளுக்கு முன்னால் விரிந்த காட்சிகளால் நான் உள்ளிழுக்கப்பட்ட போது ..நானும் அத்திரைப்படத்தின் ஒரு அங்கமாகி இருந்ததை உணர்ந்தேன். ஒரு படைப்பில் பார்வையாளனும் ஒரு அங்கமாகி துடிப்பதைதான் படைப்பூக்கத்தின் உச்சம் சாதிக்க விரும்புகிறது என்று நினைத்தால்…அந்த நினைப்பிற்கு இத்திரைப்படம் நேர்மை செய்திருக்கிறது. ஏனோ மிகுந்த தனிமை உணர்ச்சியையும், விழிகள் முழுக்க கண்ணீரையும் தந்து …கூடவே சிறு புன்னகையும் பரிசளித்துப் போனது இப்படைப்பு.

அந்த அரண்மனை..மின்சாரம் இல்லாத பொழுதுகளில் கைவிளக்கு ஏந்திய காரிகையாய் ஐஸ்வர்யா ராய், தன் வாழ்வின் துயர் முடிய கருணைக்கொலை வேண்டி காத்திருக்கும் ரித்திக், அவருக்காக வாதாடும் அந்த பெண் வழக்கறிஞர், ரித்திக்கின் மருத்துவர், அவருக்கு சேவகம் செய்யும் இரண்டு பெண்கள், அவரின் மாணவனாக வரும் அந்த இளைஞன் என…மிகச்சில பாத்திரங்களைக் கொண்டு வலிமையான திரைப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி வழங்கி இருக்கிறார்..

ஐஸ்வர்யாவைப் பற்றி ரித்திக்கின் வழக்கறிஞர் விவரிக்கும் போது.. அவள் தோழிக்கு மேலானவள், அவள் காதலியை மிஞ்சியவள், சொல்லப்போனால் அவள் மனைவியையும் தாண்டியவள்.. என்று விவரிக்கிற காட்சியாகட்டும், கொடுமைக்கார கணவனால் முடியாத ரித்திக்கின் முன்னால் ஐஸ்வர்யா தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்படும் காட்சியிலும், அவரை பிரிந்து ரணமாகி ரித்திக் துயர்க் கொள்ளும் காட்சியிலும் சொல்லப்படும் உணர்ச்சியலைகளாட்டும், இப்படம் எந்த அலைவரிசையிலும் பொருந்தாமல் தனித்து மிளிர்கிறது.

Guzaarish -ஒரு திரைப்படம் என்றெல்லாம் சுருங்க வைக்க முடியாது. அது ஒரு விவரிக்க முடியா அனுபவம். படம் முழுக்க அரூவ கதாபாத்திரமாய் இடம்பெற்றிருக்கும் தனிமையுணர்ச்சியே இத்திரைப்படத்தின் ஆழமான அழகியல். மரணம் கூட ஒருவகை புன்னகைதான்..அது ஒரு ஆறுதல் தான்..என்பதை விவாதிக்கும் இத்திரைப்படம் தரும் அனுபவம் உண்மையில் அபூர்வமானது.

மரணத்தை மிஞ்சவும் வாழ்தலின் துயர் கொடியது என்பதைதான் வாழும் போதே உணரும் ஒவ்வொருவரும் பெற தகுந்த மாபெரும் அனுபவம்..

…………..

சமீப மலையாளத் திரைப்படங்கள் -எளிமையின் அழகியல்.

Kali-Malayalam-Movie-Review-Rating-Public-Talk-Twitter-response-Critics-Reviewசமீப கால மலையாளத் திரைப்படங்களின் தரமும், திரைக்கதை அடவுகளும் நம்மைப் பொறாமைப்படுத்துகின்றன. ( நன்றி : துருவன் செல்வமணி, packiyarasan se) சமீப காலமாக வரிசையாக பல மலையாளப்படங்களை கண்டு வருதலில் நான் உணர்ந்தது மலையாளப்படங்கள் கொண்டுள்ள எளிமை.
 
இன்னமும் தன் பண்பாட்டு விழுமியங்களை தனது திரைமொழி மூலமாக ஆவணப்படுத்துகிற மலையாளிகளின் கவனம் பிரமிக்கத்தக்கது. புதியவர்களின் வருகையால் மலையாள திரையுலகம் புத்துணர்ச்சி அடைந்ததுள்ளது. துல்கர் சல்மான், நிவின் பாலி , பஹத் பாசில், சாவித்திரி என மலையாள திரையுலகம் கொண்டிருக்கும் இளைய நடிகர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
 
இங்கே தமிழ் படங்களில்..
 
துப்பாக்கிகளும், தாதாக்களும்,புளித்துப் போன அதே சத்தமும், பறக்கும் சுமோக்களும், வீசும் அரிவாள்களும், தெறிக்கும் ரத்தமும், அதே மதுக்கடைகளும், அதே குடிகார கதாநாயகர்களும், இக்காலத்திலும் பொறுக்கிகளையும், ரவுடிகளையும் விரும்பும் அதே லூசு கதாநாயகிகளும், பார்க்கிற நம்மை களைப்படைய செய்கின்றன. 10 நிமிடத்திற்கு ஒரு முறை கூட்டம் கூட்டமாய் ஆடுவதைதான் காதலிக்கிற உணர்வு என்றும், கத்தியால் குத்துபவன் தான் வீரன் என்றும் கற்பிக்கிற இவர்களால் தான் சுவாதிக்கள் பிணங்களாய் ரயில்வே மேடைகளில் கிடக்கிறார்கள்.
 
நாம் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதை அக்கம் பக்கம் பார்க்கும் போது புரிகிறது.
 
குறிப்பாக நான் விரும்பும் துல்கர் சல்மான். தமிழ்த்திரையுலகில் 90 களில் இருந்த கார்த்திக் போல பின்னுகிறார். சிறிய காட்சி என்றாலும் முக பாவனை, உடல்மொழி என அனைத்திலும் பட்டையை கிளப்புகிற துல்கரை யாராலும் விரும்பாமல் இருக்க இயலாது.
 
அவர் நடித்த சார்லி, பெங்களூர் டேஸ், 100 டேஸ் ஆப் லவ் , உஸ்தாத் ஹோட்டல், பச்சக் கடல் நீல ஆகாசம் செவ்வண்ண பூமி என பல படங்களை கண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் பார்த்த படம் களி.
 
பிரேமம் புகழ் சாய்பல்லவியும் ,துல்கர் சல்மானும் பின்னிருக்கிற அப்படத்தை வாய்ப்புள்ளோர் காண்க. எளிய சாதாரண திரைக்கதை.. அதை எவ்வளவு அழகாய் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய மலையாள சினிமாவின் ஒரு பானை சோற்று ஒரு சோறு பதமாக இருக்கிறது.
 
நாம் குடிப்பதையும், சோரம் போவதையும் முற்போக்காக காட்டிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தான் ..அவர்கள் மனிதனின் சின்னச்சின்ன குணாதிசியங்களையும்,பெருந்தன்மையையும், நில அழகியலையும் ,பண்பாட்டு சாரங்களையும் ஆவணப்படுத்திக் கொண்டே செல்கிறார்கள்.
 
இங்கே சினிமா அரசியலாகி வெகு நாட்கள் ஆகிறது. வெள்ளித்திரைகளில் தான் நமக்கு வருங்கால முதல்வர் கிடைக்கிறார்.
 
ஆனால் அங்கோ
 
சினிமா – எளிய வாழ்க்கையை அழகியலோடு பதிவு செய்யும் இன்னொரு இலக்கிய வடிவம்.
 
-மணி செந்தில்

ஷிண்டர்ஸ் லிஸ்ட்(1993 )- இன அழிப்பின் வலி நிறைந்த திரைமொழி

schindlers-list-17523-hd-wallpapers

 

உலக வரலாற்றில் மாபெரும் மனித அழிவு காட்சியாக 1939-45 வருடக் காலங்களில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் நம் கண் முன்னால் தோன்றுகிறது . மனித குலத்தில் 3 ல் ஒரு பங்கு உயிர்களை பலிவாங்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் நிகழ்த்தி இருக்கிற உளவியல் மாற்றங்கள் மிக முக்கியமானவை. மனித குலத்தின் பாற் நேசமும், சமநீதியும் போதிக்கிற கம்யூனிச கொள்கைகளின் பாற் உலகம் தழுவிய ஈர்ப்பும், எழுச்சியும் இரண்டாம் உலகப் போரின் அழிவிற்கு பிந்தைய காலக்கட்டங்களில் தான் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வதற்கான போராட்டம் என்பது மனித இனத்தின் தலையாய இயல்பு. உயிரோடு வாழ்ந்திருத்தல் என்கிற ஒரே ஒரு காரணிக்காக மனித இனம் எத்தகைய துன்பங்களையும் ,இழிவுகளையும் தாங்கிக் கொள்கிறது??

அப்படி..உயிர் வாழ்தலின் பொருட்டு மனித இனம் படும் பாடுகளைதான் Schindler’s List (1993) என்ற புகழ்ப்பெற்ற உலகத்திரைப்படம் பேசுகிறது..  இன அழிப்பிற்கு உள்ளான இன்னொரு இனமான தமிழினத்தை சேர்ந்தவர்கள்  என்ற முறைமையில் தமிழர்கள் தேடிப்பிடித்து இத்திரைப்படத்தை காண வேண்டிய அவசியம் இருக்கிறது.

இத்திரைப்படத்தின் பல காட்சிகள் ஈழப்பெருநிலத்தின் வன்னி வதை முகாம்களையும் ,முள்ளிவாய்க்கால் போர்க்கள காட்சிகளையும் நினைவூட்டுகின்றன.

 

 

Schindler's List

 

 

புகழ்ப்பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஆஸ்திரேலியாவின் எழுத்தாளுமை தாமஸ் கென்னலி 1982 ஆம் வருடத்தில் எழுதிய ஷிண்ட்லர்ஸ் ஆர்க்[ Schindler’s Ark ] என்ற நாவலை தழுவி இயக்கிய Schindler’s List என்கிற இத்திரைப்படம் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லரால் இன அழிவிற்கு உள்ளாகிற யூன இனம் படுகிற பாடுகளை அணுஅணுவாய் சித்தரித்து இருக்கிறது. 1939 ஆம் வருடம் போலந்து இரண்டாம் உலகப்போரில் தொல்வியுற்ற தருணத்தில் இருந்து 1945 ஆம் ஆண்டு செக்கஸ்குலோவியா நாட்டினை நாஜிப்படைகளின் வசமிருந்து சோவியத் படைகள் மீட்கும் வரையிலான 6 வருட வாழ்க்கையினை ஜெர்மானிய வதை முகாம்களில் யூத இனம் படுகிற துயர் வழியே காவியமாய் படைக்கிறது.  தனது வயதான தாய் தந்தையரை உயிர்கொல்லி முகாமான ஆஸ்ட்விச் வதைமுகாமில் இருந்து மீட்டுத்தரும் ஆஸ்கர் ஷிண்டலரின் அலுவலகத்தை நன்றிப் பெருக்கோடு கண்ணீர் மல்க பார்க்கும் ஒரு இளம் பெண், குழந்தைகள் நாஜிப்படைகளிடம் சிக்கிக் கொள்ளாமல் ஒளிந்துக்கொள்ளும் காட்சிகள், சிவப்பு நிறந்தில் காட்டப்படும் சிறுமி ஒருத்தி தனியே அந்த கொலைக்களத்தில் நடந்து செல்வது போன்ற காட்சி என இத்திரைப்படம் முழுக்க காட்சிகளால் நிரம்பிய உணர்ச்சிக் காவியமாக விளங்குகிறது. தொடக்கத்தின் ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற ஜெர்மானிய நாஜிக்கட்சியை பிரதான கதாபத்திரம் சுயநலமாக, சம்பாதிக்க யூதர்களின் உழைப்பினை சுரண்ட வந்தாலும், அங்கே நடக்கிற கொடுமைகளை ஒரு மலை உச்சியின் மேல் இருந்து மனம் மாறுவது திருப்புமுனை. நிர்கதியான குழந்தைகள், உணர்வும், உடலும் மரத்துப்போன முகங்கள், இறுதியில் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் இழக்கமுடியாமல் வாழ்வதற்கான போராட்டத்தில் தன்னிலை மறங்கும் மனிதர்கள் என பல்வேறு பட்ட கதாபாத்திரங்கள் நம் ஈழ மண்ணை நினைவூட்டிக் கொண்டே இருந்தார்கள்.

 

ஆஸ்கர் ஷிண்டலர் என்கிற நாஜிக் கட்சி சின்னத்தை பெருமையோடு தனது கோட்டில் அணிந்திருக்கிற ஜெர்மானியர் தொழில் வளர்ச்சி, ஊதியம் தர தேவையற்ற யூத அடிமைகளின் உழைப்பு ஆகியவற்றை முன் வைத்து போர்கோட்சே என்று அழைக்கப்பட்ட யூத முகாமிற்கு வந்து சேர்கிறார். பெரும் செல்வந்தரான அவர் தனது பணபலத்தைமுன் நிறுத்தி அங்கே இருக்கும் அதிகாரிகளிடம் பலவிதமான முறையில் சிகரெட்டுகள்,சாக்லெட்டுகள்,விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை கையூட்டாக அளித்து செல்வாக்கு உடைய நபராக திகழ்கிறார். அந்த வதை முகாமில் தலைமை நாஜி ராணுவ அதிகாரியாக இருக்கிற ஆமன் கோத் பல கொடுமைகளை செய்து யூத மக்களை கருணையற்ற முறையில் கொலை செய்து வருகிறார்.  தன்னிடம் பணிபுரிகிற இஸ்தக் ஸ்டெரன் என்கிற யூத இனத்தை சேர்ந்த கணக்காளரின் உறவினால் ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாற தொடங்குகிறார். ஒரு மலை உச்சியின் மீது நின்று அந்த அந்த யூத முகாமில் தன் மனைவியோடு பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் ஷிண்டலர் மனம் மாறுகிறார். அந்த கொடுமை நிலையில் இருந்து யூத இன மக்கள் 1100 பேரை எப்படி காப்பாற்றினார் என்பதை தான் 3 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளாக இத்திரைப்படம். ஆஸ்கர் ஷிண்டலராக லியம் நிசனும்,அவரிடம் மனமாற்றம் ஏற்பட வைக்கும் யூத கணக்காளராக காந்தி திரைப்படத்தில் நடித்த பென் கிங்க்ஸ்லியும், கொடுமையான நாஜிப்படைஅதிகாரி ஆமன் கோத் கதாபாத்திரத்தில்  இரால்ப் பியன்சும் நடித்துள்ளனார்.  1993-ல் வெளியான இத்திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றது. படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டு இருந்தாலும் ஆஸ்கர் ஷிண்டலரால் காப்பாற்றப்பட்ட அந்த 1100 யூத மக்களும் 6000 பேராக விரிவடைந்து ஷிண்டலர் சந்ததியினர் என உலகத்தினரால் அழைக்கப்பட்டு ஆஸ்கர் ஷிண்டலர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் அந்த இறுதி காட்சி வண்ணத்தில் படமாகப்பட்டுள்ளது ஏகப் பொருத்தமானது.  

 

இத்திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரும் ஒரு யூதரே. இத்திரைப்படத்தை இயக்க அவர் ஏதும் ஊதியம் வாங்கவில்லை என்கிறார்கள். யூதப்படுகொலைகள் குறித்து நிறைய திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நிறைய காணொளிக் காட்சிகள் இணைய வெளிகளில் காணக்கிடைக்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் யூத இனத்தை சேர்ந்தவர்களின் பங்கு மிகுதியாக இருக்கிறது. யூத இன அரசியல், அதன் பரவலாக்கம், இஸ்ரேலிய அரசு உருவாக்கம் ஆகியவற்றின் மீது நமக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. இன்றளவும் பாலஸ்தீன பூர்வக்குடிகள் சிந்துகிற உதிரத்தில் இஸ்ரேலின் கைரேகை படிந்துள்ளது. ஆனால்  தன்னினம் அடைந்த துயரை ஒரு காயமாக ஆன்மாவில் தேக்கி வைத்து, அக்காயத்தையே மூலதனமாகக் கொண்டு தங்களுக்கான ஒரு நாட்டை உருவாக்கியதில் யூத இனம் வெற்றியடைந்து இருப்பது, இன அழிவிற்கு உள்ளான தமிழ்த்தேசிய இனம் போன்ற இனங்களுக்கு பாடமாக இருக்கிறது.

சக மனிதனை நேசிக்கும் உள்ளம் இறைவனுடையது என்பார்கள். அத்தகைய இறைவனாக Schindler என்ற ஜெர்மானியர் பல யூதர்களின் உயிரை காக்க அனைத்தையும் இழக்க துணிகிறார். திரைப்பட முடிவில் தன்னிடம் இருக்கிற தங்க பொத்தானை காட்டி ..இதனையும் விற்றிருந்தால் இன்னும் 2 யூதர்களை காப்பாற்றி இருப்பேனே என கலங்கித்துடிக்கும் போது…மனித குணத்தில் சக மனிதனை காரணமில்லாமல் நேசிக்கும் மனித நேயமே மகத்தானது என்கிற உண்மையை நாம் நமக்குள் உணர தொடங்குகிறோம். துளித்துளியாய் கசியும் தேன் துளி போல..நமக்குள்ளாக சக மனிதன் மீது,மனித இனத்தின் மீது நேசிப்பை சுரக்க வைப்பதுதான் இந்த உலகத்திரைப்படம் நமக்குள்ளாக நிகழ்த்தும் வித்தை.

உலகம் அழகானதுதான். நாம் தான் உலகத்தை நரகமாக்கி வைத்திருக்கிறோம்.

உயிர் வாழுகிற விலங்கினத்தில் மிகப்பெரிய அபாயகரமான விலங்காக மாறி அனைத்தையும் வேட்டையாடி புசிக்கிற மனிதன்..தனக்குள் இருக்கிற நேச ஊற்றை தோண்டிப்பார்க்க…அவசியம் இத்திரைப்படத்தை காணவேண்டும்.

ஆஸ்கர் ஷிண்டலர் யூத மக்களால் உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். அன்று ஜெருசலம் அருகே அவர் நட்ட மரமொன்று இன்றளவும் இனம் ,மொழி,சாதி, பிரிவுகள் கடந்த உலகம் தழுவிய மனித நேயத்திற்கு சாட்சியாக விளங்குகிறது.

இத்திரைப்படத்தை பார்த்து விட்டு..இறுதியில் நமக்குத் தோன்றுவது இதுதான்.

மனித அவஸ்தைகளை தாண்டி உலகில் வலிமைமிக்க துயர் எதுவும் இல்லை.அத்துயரை தீர்க்க முனையும் ஒரு கனிவு மிக்க இதயத்தை விட இறைவன் எங்கும் இல்லை.

Page 2 of 3

Powered by WordPress & Theme by Anders Norén