பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 14 of 57

நினைவின் பக்கங்களில் மலரும் பூ..

தூசி படர்ந்த புத்தக அடுக்கில்

தவறி விழுந்த கதைப் புத்தகம் ஒன்றின்

சட்டென விரிந்த திறந்த பக்கம் ஒன்றில்

ஒட்டியிருந்த பழுப்பேறிய மல்லிகைப்பூ

அதுவாகவே எழுதத் தொடங்கியது.

நினைவின் பக்கங்களில்.

அதுவரை எழுதப்படாத

அழகிய கதை ஒன்றை.

❤️

மணி செந்தில்.

83தமிழ வேள், M.I. Humayun Kabir and 81 others29 comments2 sharesLikeCommentShare

29

விவேக் – சில நினைவுகள்

1991 ஆம் வருடம் என நினைக்கிறேன். புகழ்பெற்ற நடிகர் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் நண்பர்கள் என்ற ஒரு திரைப்படம் வந்தது.

அக்கால கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி நகைச்சுவை தளத்தில் உச்சத்தில் இருந்தது. பார்ப்பதற்கு அப்பாவித்தனமான, இயல்பு வாழ்க்கையில் நாம் அடிக்கடி எதிர்கொள்கிற அவசரக் குடுக்கை போன்ற கண்ணாடி போட்ட அந்த இளைஞன் “நண்பர்கள்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தான். அதற்கு முன் அந்த முகத்தை கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் கண்டிருக்கிறேன்.

இரண்டு படத்திலும் சிறிய கதாபாத்திரங்கள் தான். தான் தோன்றும் இடங்களில் எல்லாம் பார்வையாளர்களிடம் வெடி சிரிப்பை வரவழைத்த அந்த இளைஞன் அடுத்த சில வருடங்களில்

உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மாறிப் போனான்.அந்த இளைஞன் தான் நடிகர் விவேக். திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் நடிகர் விவேக் தனித்துவமானவர். Body shaming என்று சொல்லக்கூடிய உருவக்கேலி என்பதை தன் நகைச்சுவைகளில் முதன்மை படுத்தாமல் தனது அப்பாவித் தனத்தை, வார்த்தை தடுமாற்றத்தை, நகைச்சுவை தளமாக மாற்றிக் கொண்டதில் நடிகர் விவேக் ஒரு முன்னோடி.கோபமாக கத்திக் கொண்டிருக்கிற கதாநாயகி ஒருகட்டத்தில் ஆத்திர உச்சியில் “Shut up” என்கிறாள். எதிரே நின்று கொண்டு இருக்கின்ற நடிகர் விவேக் எளிமையாக “Same to you” என சொல்வது ஒரு சிறிய காட்சி என்றாலும் அது தமிழ்த் திரைப்பட நகைச்சுவை காட்சி வரலாற்றில் ஏற்படத் தொடங்கிய மாற்றம்.

அவரைப் பற்றி அறிந்தவர்கள் நிறையப் படிப்பவர் என்று சொல்கிறார்கள். அவரால் எந்த கதாபாத்திரத்திலும் மிக எளிமையாக பொருந்த முடிந்ததன் காரணம், அவர் இயல்பிலேயே அவர் அடைந்திருந்த கலை மேதமை தான். இது எழுதிக் கொண்டிருக்கும் போதே பல காட்சிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.மின்னலே திரைப்படத்தில் விபத்துக்குள்ளான வண்டிக்கு முன்னால் விழுந்து கிடக்கும் விவேக் வண்டி முன்புறத்தில் தொங்கிக் கொண்டிருக்கிற எலுமிச்சை பழத்தை எடுத்து பிழிந்து சாறு குடித்துவிடுவார். கேட்டால்” கேறா இருந்துச்சி அதான்” என அப்பாவித்தனமாக பதிலளிக்கின்ற நடிகர் விவேக்கின் Classic தனமான காமெடி இல்லாத தமிழ்த்திரையை நினைத்து பார்க்கவே சற்று அச்சமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

சென்ற வருடத்தில் கூட அவரால் “வெள்ளைப் பூக்கள்’ என்கின்ற ‌ திரில்லர் வகை திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வழங்க முடிந்ததை நினைத்தால் நாம் எப்படிப்பட்ட மகத்தான கலைஞனை இழந்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.அவருடைய மரணத்திற்கு ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். ஆனால் அவரால் பலர் வாய்விட்டு சிரித்து தனது மன இறுக்கத்தைத் தளர்த்தி தன் மரணத்தை தள்ளிப் போட்டு இருக்கிறார்கள்.

அந்தப் பல கோடி புண்ணியம் அவரை காப்பாற்றியிருக்கலாம்.

போய் வாருங்கள் விவேக். நீங்கள் நட்டு வைத்திருக்கிற பல லட்சக்கணக்கான மரங்கள் உங்கள் பெயர் சொல்லி பலருக்கு மூச்சுக்காற்றை தாரைவார்த்து கொண்டிருக்கும்.

248தமிழ வேள், Raju Janu and 246 others15 comments39 sharesLikeCommentShare

15

The serpent-netflix series

1970-80 காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொலைகளை செய்து சீரியல் கொலைகாரன், பிகினி கில்லர் என்றெல்லாம் பெயர் பெற்றசார்லஸ் சோப்ராஜ் பற்றிய வாழ்க்கைத் தொடர் Netflix -ல் தலா ஒரு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது

.சார்லஸ் சோப்ராஜ் எண்பதுகள் காலத்திய கொலை, கொள்ளை, போதை மருந்து கடத்தல் போன்ற பல வழக்குகளில் சிக்குண்டு பலமுறை சிறை பட்டவர்‌. ஒவ்வொரு முறை சிறை படும் போதும் சிறையிலிருந்து தப்பிக்க முயல்பவர்‌. 1986 ல் தன் பிறந்தநாள் விழாவில் சிறை அதிகாரிகளுக்கு போதை மருந்து கொடுத்து திகார் ஜெயிலில் இருந்து தப்பித்து போன சுவாரசியமான ஆசாமி. இதேபோன்று தாய்லாந்து சிறையில் இருந்தும் தப்பித்து இருக்கிறார்.

தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே சிறைப்படுகிற ஆள் சார்லஸ். சிறுவயதில் பெற்றோரின் பிரிவினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பினால் குற்றங்களை தயக்கம் இல்லாமல் செய்கிற உளவியல் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இப்போதும் நேபாளம் காத்மாண்டு சிறையில் ஆயுள் தண்டனை அடைந்து உயிருடன் இருக்கின்ற சார்லஸ் சோப்ராஜ் மீது இன்னும் பல நாடுகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உலகத்தின் பல நாடுகளுக்கும் தப்பி ஓடிக் கொண்டிருந்த அவரது வாழ்க்கை “The Serpent” என்ற பெயரில் தொடராக வெளியாகியிருக்கிறது.கதை சொல்லல் முறையிலும் காட்சியமைப்பு முறையிலும் திரைப்படங்களை மிஞ்சக் கூடிய அளவிற்கு மிகுந்த தரமாக “சீரீஸ் (Series)”என்று அழைக்கப்படக்கூடிய பல தொடர்கள் நெட்பிளிக்ஸ் , அமேசான் பிரைம் போன்ற OTT தளங்களில் வெளியாகி அசத்துகின்றன.

குறிப்பாக Money heist. ஒரு சீசன் பார்த்துள்ளேன். தமிழிலும் கிடைக்கிறது. அமேசான் பிரைமில் அரசியல் தொடரான “தாண்டவ்”‌ தற்போது பார்த்து வருகிறேன்.கடந்த சில நாட்களாக தேடிக்கொண்டிருந்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்கிற மலையாளப்படமும் அமேசான் பிரைமில் தற்போது கிடைக்கிறது.

குறிப்பாக The Serpent. திரைக்கதை வடிவமைப்பில் நிகழ்வுகளை முன்னும் பின்னுமாக சங்கிலி தொடர் போல மாற்றி மாற்றி அமைத்து இறுதியாக ஒரு புள்ளியில் குவிக்கின்ற திரைமொழி நம்மை வியக்க வைக்கிறது. இரவு தூங்கும் போது கூட சார்லஸ் சோப்ராஜாக நடித்த தாஹர் ரஹீமின் சலனமற்ற விழிகள் நினைவுக்கு வந்து பயமுறுத்துகிறது. அடுத்தது என்ன நடக்கும் என்பதுபோல அடுக்கடுக்காக காட்சியமைப்புகளை வைத்து ரசிக்கும்படி எடுத்திருக்கிறார்கள். சிறு உரையாடலைக் கூட கவனிக்க வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.

55Packiarajan Sethuramalingam, மு.முகம்மது சர்வத்கான் and 53 others2 sharesLikeCommentShare

0

சமூக வலைதள விமர்சனங்களை கையாளும் கலை.

❤️

எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லி அலைந்து கொண்டிருப்பது நம் வேலை அல்ல.

வேலையற்றவன், வீணாகி போனவன், முகவரியற்றவன், முகம் தொலைந்தவன் போன்றவர்கள்தான் ஏதோ வயித்தெரிச்சலில் குறை பேசிக்கொண்டு குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருப்பார்கள்.நமக்கு அது வேலை அல்ல. நம்மைப் பொறுத்த வரையில் முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். செய்திகளைப் பரப்பும் கருவி. அதைத்தாண்டி முகநூல் ஒன்றுமில்லை.

முகநூல், டூவிட்டர் பதிவுகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. குறை சொல்பவர்களுக்கு குறை சொல்வது மட்டும்தான் வேலை‌. நமக்கோ குறை சொல்பவனையும் உள்ளடக்கிய இந்த சமூகத்திற்காக உழைக்கின்ற வேலை. பதிவுகளுக்காக பதறாதீர்கள்.அலட்சியப் படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். அது எளிதானதல்ல. அது ஒரு பயிற்சி. சொல்லப்போனால் அது ஒரு கலை.

நம் மனதிற்குள் எதைக் கொண்டு போக வேண்டும், எதைக் கொண்டு போகக் கூடாது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.‌ மற்றபடி கண்ணெதிரே நின்று கத்தினாலும், கதறினாலும் ஜஸ்ட் லைக் தட் என அலட்சியப் படுத்தி கொண்டு நகர்ந்து பாருங்கள். அதுதான் கத்திய கதறிய அந்த முகம் தொலைந்தவனுக்கு‌ நாம் அளிக்கும் தண்டனை.பூகம்பமே வெடித்தாலும் புன்னகை செய்வதை மறந்து விடாதீர்கள். எதுவும் நம்மை ஒன்றுமே செய்துவிடமுடியாது என்று நினைப்பவர்கள்தான் இதுவரை உலகத்தை ஆண்டிருக்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது நமது பணி அல்ல. உங்கள் பதிவில் உங்களுக்கு வேண்டாத கருத்துக்களை, உங்களைப்பற்றி அவதூறான விமர்சனங்களை, நம் கட்சியை பற்றி தவறான விமர்சனங்களை எவனாவது முன் வைக்கிறானா .. உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு அவனை பிளாக் செய்து தடுத்து விடுங்கள்.

அந்த ஒரு நொடி தான் அவனுக்காக நாம் செலவு செய்த ‌ கடைசி நொடி ஆக இருக்க வேண்டும்.நமது வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் கொளுத்தும் வெயிலில் மக்களை சந்தித்து கட்சியையும் சின்னத்தையும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்.

நீங்கள் நாம் தமிழர் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் படங்களை பெருமிதமாக சமூகவலைதளங்களில் பரப்புங்கள்.விளம்பரம் செய்யுங்கள்.அதைத்தாண்டி முகநூல் அல்லது ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு பெரிய முக்கியத்துவத்தைத் தந்து நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள வழி ஆகிவிடக் கூடாது.மீண்டும் உறுதியாக சொல்கிறேன்.முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். விவாத ஊடகம் அல்ல. கேள்விகளுக்கு பதில் சொல்லும் விடைத்தாள் அல்ல.

நம் கட்சிக்காக நாம் விளம்பரம் செய்வோம். பட்டித் தொட்டி எல்லாம் நாம் தமிழரை கொண்டுபோய் சேர்ப்போம். விவசாயி சின்னத்தை பரப்புவோம். அலைபேசி முழுவதும் அண்ணன் சீமானின் பேச்சுக்கள் பரவட்டும்.

வெல்லப் போறான் விவசாயி.❤️

558தமிழ வேள், Packiarajan Sethuramalingam and 556 others25 comments112 sharesLikeCommentShare

25

வேட்பாளர் அறிவிப்பு கூட்டம் 2021 வருவோர் கவனத்திற்கு..

அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

வருகிற மார்ச் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நம் உயிர் அண்ணன் சீமான் அவர்கள் கட்சியின் ஆட்சி செயல்பாடு வரவையும் வெளியிட்டு வரலாற்று பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.மகத்தான இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழ்நாடெங்கும் நாம் தமிழர் உறவுகளாகிய நீங்கள் தயாராகி வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இந்தப் பயணம் குறித்தான சில எண்ணங்களை திறந்த மனதோடு உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. தொலைவிலிருந்து வரும் உறவுகள் குறித்த நேரத்தில் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.

2. ஆறு மணி நேரம் மட்டும் பயணநேர‌ தொலைவில் இருக்கின்ற ஊரிலிருந்து புறப்படுகின்ற உறவுகள் மட்டும் அதிகாலையில் புறப்படுங்கள். மற்றவரெல்லாம் முதல் நாள் இரவே புறப்பட்டு விடுவது நல்லது

.3. 234 வேட்பாளர்களும் மதியம் மூன்று மணிக்கு முன்னதாகவே ஒய்எம்சிஏ மைதானத்திற்கு வந்து விடுவது நல்லது. கடைசி நேர போக்குவரத்து நெரிசலில் வேட்பாளர் சிக்கிக் கொள்வதை இதன்மூலம் தவிர்த்துவிடலாம். வேட்பாளர்கள் மற்றவர்களோடு இணைந்து வருகின்ற பயணத்திட்டத்தை தவிர்த்துவிட்டு முன்னதாகவே தனி வாகனத்தில் சில பேரோடு புறப்பட்டு வருவது இன்னும் சிறந்தது. மற்றவர்கள் நிகழ்ச்சி தொடங்கும் போது வந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் வேட்பாளர்கள் முன்னதாக அரங்கில் இருப்பதே சிறந்தது. வேட்பாளர்கள் இன்று தலைமை கேட்டிருக்கிற வேட்பாளர் விபரக் குறிப்புகளை மின்னஞ்சலில் உடனே அனுப்பி வைத்து விடுங்கள்.

4. அதிகாலை புறப்படும் உறவுகள் காலை, மதிய உணவை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது. செலவும்/நேரமும் இதனால் மிச்சப்படும். இன்னும் வாய்ப்பு இருக்கிற உறவுகள் சென்னையில் இருக்கின்ற தங்களுக்கு வேண்டியவர்களிடம் எளிய இரவு உணவிற்கான ஏற்பாட்டினை அளித்து விட்டால் ‌ குறைவான செலவில் இரவு உணவை தயாரித்து விடலாம். வரும் வழியில் இருக்கின்ற உணவகங்களில் உணவின் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதைப்பற்றி உறவுகள் சிந்திக்கலாம்.

5. செங்கல்பட்டு தொடங்கி ராயப்பேட்டை வரையிலான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக இருக்கிறது. அதிகாலையில் புறப்படுகின்ற உறவுகள் செங்கல்பட்டை பகல் 12 30 மணிக்குள் கடப்பது போல பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டால் இறுதிநேர பரபரப்பைத் தவிர்த்துவிடலாம் .

6. தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் உறவுகள் தங்களில் பொறுப்பான ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஓட்டுனருக்கு அருகே அமர வையுங்கள். இரவு பயணம் மேற்கொள்ளும்போது ஓட்டுநர் களைப்பாக இருந்தால் வண்டியை ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுனருக்கு போதிய ஓய்வு அளித்து பிறகு பயணத்தை தொடருங்கள்.

7. அனைவரும் முகக் கவசம் அணிவதை தவிர்த்து விடாதீர்கள். கையில் சிறிய அளவிலான சானிடைசர் பாட்டில் ஒன்று வைத்துக்கொள்வது சிறந்தது. வீட்டிலேயே காய்ச்சிய குடிநீரை போதியளவு எடுத்துக்கொண்டு கிளம்பினால் வழியில் தேவையற்ற குடிநீர் செலவு மிச்சமாகும். மேலும் வழியில் பாதுகாப்பான குடிநீருக்கு உத்தரவாதமில்லை

8.குழந்தைகளை அழைத்து வரும் உறவுகள் அவர்களுக்கான அவசர மருந்துகள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல மாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கிறது. அதற்கான ஆடைகளையும் எடுத்து வாருங்கள்.

9. எல்லாவிடத்திலும் சாலை விதிகளைக் கடைபிடியுங்கள். பெரும்பாலும் வேகமாக செல்வதை தவிருங்கள். மகிழுந்துகளில் வருகின்ற உறவுகள் இடைவார் அணியுங்கள். மகிழுந்தில் வருகின்ற உறவுகள் ஏழாம் தேதி இரவு சென்னையில் தங்க முடிந்தால் தங்கி விடுங்கள். இரவு நேர பயணத்தை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள்.

10. வண்டியில் வரும் அனைவரது அலைபேசி எண்களையும் வண்டிக்கு பொறுப்பேற்கிறவரிடம் ஒப்படையுங்கள். சாலைகளை கடக்கும்போது கவனமாக இரு புறமும் பார்த்துவிட்டு கடங்கள். 11. நேர மேலாண்மையை சரிவர பின்பற்றினால் பாதுகாப்பான பயணம் உறுதி.‌ கூட்டம் முடிந்தவுடன் அவசர அவசரமாக கிளம்பாமல் பொறுமையாக புறப்படுங்கள். அது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும்

.கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களுக்கான ஒரு அரசியலை உருவாக்க கடுமையான இடையூறுகளுக்கு/ தடைகளுக்கு மத்தியில் அண்ணன் சீமான் தலைமையில் நாம் போராடி வருகிறோம்.‌ வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் மாபெரும் வெற்றியடைய முன்னெழுத்தாக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அமைய இருக்கிறது.தவிர்க்காமல் அனைவரும் வந்து விடுங்கள். எந்தக் காரணத்தையும் சொல்லாமல் ஓடி வந்து விடுங்கள்.

பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பயணத் தகவலை தெரிவித்து விடுங்கள். வண்டி புறப்படும் நேரத்தையும், இடத்தையும் தெளிவாக அறிவியுங்கள். அலைபேசியில் உங்கள் குரல் மூலம் தெரிவியுங்கள். வெறும் செய்தி அனுப்பினால் போதாது. மிக மிக முக்கியமான அழைப்பு என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்றாக திரள்வோம்.நம் ஒவ்வொருவருக்காகவும் அண்ணன் சீமான் ‌ காத்திருக்கிறார் என்பதை உணர்ந்து ‌ பாதுகாப்பான பயணத்தோடு நாம் கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்புவோம்.

அன்றைய ஒருநாள் நாம் 11 ஆண்டுகளாக உழைத்து வரும் இலட்சித்திற்கான நாள் என உணர்ந்து சென்னையிலே திரள்வோம்.வாருங்கள்.. சென்னையிலே சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி

சட்டமன்றத்தேர்தல் 2021 வேட்பாளர் அறிவிப்பு

பேரன்பு கொண்ட நாம் தமிழர் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

கொஞ்சம் நீளமான கட்டுரை தான். ஆனாலும் நேரம் ஒதுக்கி படியுங்கள். முழுமையாகப் படியுங்கள். பலருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். பரப்புங்கள்.ஏனெனில் செய்தி முக்கியமானது.

எத்தனையோ அரசியல் கட்சிகள் தமிழக வரலாற்றில் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஒரு இன அழிவின் போது எதுவும் செய்ய முடியாத மன வலியில், எதற்காக தாய் மண்ணை, உறவுகளை இழந்தோம் என்ற சிந்தனையில் நாம் அனைவரும் ஒன்று கூடினோம்.அதுவரை இருந்த தமிழ்த் தேசிய அமைப்புகள் சிறு சிறு குழுக்களாக இருந்து அரங்கக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு ஊரிலும் அதே கூட்டம். அதே நபர்கள். “இவ்வளவுதானா தமிழ்த் தேசியம்..” என சிந்திப்பது போல ஒரு சிலரது ஜோல்னாப் பைக்குள் சிக்கிக்கொண்ட புத்தகங்களாய் தமிழ்த் தேசியம் என்கின்ற கருத்தாக்கம் இருந்தது.நம் கண் முன்னால் நிகழ்ந்த சொந்த இனத்தின் அழிவு இந்த சிறு சிறு குழுக்களின் போதாமையை நமக்கு எடுத்துக் காட்டின. தமிழர் என்கின்ற தேசிய‌ இனத்திற்கு ஒரு அரசியல் வலிமை தேவைப்பட்டது.

இந்திய தேசியம்/ மதவாதம்/ இடதுசாரியம்/ போன்ற வெகுஜன அரசியல் கருத்தாக்கமாய் தமிழ்த்தேசியமும் மாற வேண்டும் என்கின்ற புரிதலை ஈழ அழிவுதான் நமக்குள் ஏற்படுத்தியது.நம் இனப்பிணங்களில் இருந்து பிரசவித்த புரிதல் அரசியலாய் மாறத் தொடங்கிய போது, நாம் தமிழர் பிறந்தது.ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்திற்கும் அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தரக்கூடிய ஒரு பெரும் திரள் வலிமைமிக்க மகத்தான அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் நாம் தமிழர் கட்சி உருவானது.

ஈழத் தாயகத்தின் விடுதலை மட்டுமின்றி, தாயகத் தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிற திராவிடக் கட்சிகளின் ஊழல் மிக்க, சுயநல ஆட்சிகளால் நிகழ்ந்துவிட்ட அனைத்துக் கேடுகளில் இருந்து விடுதலைப் பெற உலகம் முழுதும் பரந்து வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களின் உரிமைக் குரலாய் ஒரு அமைப்பு வேண்டும் என்கின்ற புரிதலில் நாம் தமிழர் உருவாகி வளர்ந்தது.எத்தனையோ அடக்குமுறைகளுக்கும், ஊடகப் புறக்கணிப்புகளுக்கும், பொருளாதார சங்கடங்களுக்கும் மத்தியில், பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த அமைப்பை நாம் உயிரெனப் பாதுகாத்து வருகிறோம்.எத்தனையோ துரோகங்களை பார்த்துவிட்டோம். துரோகங்கள் செய்வதற்கு காரணங்கள் தயாரிக்கப்பட்டன. காரணங்களுக்காக துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாம் உயிரென நேசித்து போற்றி வளர்த்த அமைப்பினை உடைக்க ஒரு பெரும் கூட்டமே இறங்கி வேலை செய்கிறது.ஆனாலும் அதையும் மீறி தான் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இதையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு புலிக் கொடியோடு முன்னே சென்று கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு கருஞ் சட்டை அணிந்த இளைஞன் புலிக்கொடி தூக்கிக்கொண்டு திரியத் தொடங்கி விட்டான். பள்ளிவாசலில் ஓட்டு கேட்கும்போதுதொழுதுவிட்டு திரும்பிய யாரோ ஒரு இளைஞன் எங்களோடு சேர்ந்து துண்டறிக்கை கொடுத்து ஓட்டு கேட்கின்றான். வீதியில் பேசிக் கொண்டிருக்கிற எங்களைப் பார்த்து மனம் கேட்காமல் ஒரு 51 ரூபாய் திருவாளர் பொது ஜனம் என்ற பெயரில் வழங்கி விட்டு கண் கலங்கிய கண்களோடு ஒரு எளியவர் நடக்கிறார்.

அண்ணன் சீமானின் அனல் மிக்க தமிழுக்கு பிறகு திமுக காரர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு கருணாநிதி என்ற பெயர் வைப்பதில்லை. ஆனால் வீட்டுக்கு வீடு பிரபாகரன்கள் பிறக்கிறார்கள். பிரபாகரன் என்று சொன்னால் தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட மண்ணில் இன்று அவரை தேசியத் தலைவராக கொண்டாடுகிற ஒரு கூட்டம் உருவாகி விட்டது. தூய தமிழில் பலரும் உரையாடுகிறார்கள்.எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அரசியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மாறி இருக்கிறார்கள். பொதுத் தொகுதியில் ஆதித்தமிழர் நாம் தமிழர் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு நாம் தமிழர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.வீதிக்கு வீதி இளைஞர்கள் முழக்கம் இடுகிறார்கள். நாம் தமிழர் என்பது வெறும் கட்சியின் பெயர் அல்ல. அது ஒரு உணர்வு. உறவுகளை ஏற்படுத்தும் பெருங்குடும்பம். சொல்லப்போனால் நாம் தமிழர் என்பது ஒரு வாழ்வியல் என பலரும் புரிந்து கொண்டு விட்டார்கள்.அண்ணன் சீமான் போல பல 100 இளைஞர்கள் ஊருக்கு ஊர் உருவாகிவிட்டார்கள். அனல் பறக்கும் அவர்களது பேச்சில் சத்தியம் தெறிக்கிறது. அவர்கள் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் கேள்விகளை தாங்கமுடியாமல் திமுக காரர்களும், அண்ணா திமுக காரர்களும், பாஜக- காங்கிரஸ் காரர்களும் தலை குனிந்தவாறு அமைதியாக கடக்கிறார்கள்.இது தமிழ்த் தேசியத்தின் பொற்காலம்.

இன உணர்ச்சி கொண்ட தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நாட்களில்தான் வருகிறது மார்ச் 7ஆம் தேதி.

தேர்தல் என்ற யுத்தத்திற்கு அண்ணன் சீமானின் சொற்கள் மூலம் நாம் ஆயுதங்கள் தயாரிக்கிற நாள். போருக்குத் தயாராகும் நாள்.நாம் தமிழர் உறவுகளே.. பயணத்திற்குத் தயாராகுங்கள். உடனடியாக பேருந்து வாகனங்களை முன்பதிவு செய்யுங்கள். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள். யாரையும் விட்டு விடாதீர்கள். குடும்பம் குடும்பமாக சென்னையில் கூடுவோம்.சென்னை குலுங்க வேண்டும். நமது உயரும் கரங்களில் அந்த வானையே முத்தமிடுகிற நமது புலிக்கொடி காற்றை உரசி பறக்க வேண்டும். “எழுந்தது பார் ஒரு புதிய தலைமுறை.. தாய் மண்ணை காக்க ..” என எதிரிகளும், துரோகிகளும் ஒரே நேரத்தில் அச்சப்படும் அளவிற்கு. நாம் சென்னையில் திரள வேண்டும்.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சீமான் என்ற தனிமனிதன் சிந்திய வியர்வை, அவனது தம்பிகள் உழைத்த பெரும் உழைப்பு போன்றவைகளுக்கு உரிய மதிப்பு கிடைக்க சென்னையில் நாம் நிகழ்த்த இருக்கும் மகத்தான எழுச்சி மூலம்தான் கிடைக்கும் என்பதை நாம் உணர்வோம்.

234 வேட்பாளர்கள்.117 ஆண்கள்/ 117 பெண்கள்.ஒரே மேடையில்.இதற்கெல்லாம் மேல் நம் அணுவெல்லாம் ஊடுருவி நம்மைபுலிகளாக மாற்றும் அண்ணன் சீமானின் அனல் உரை.மார்ச்சு 7 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக நான்கு மணி. சென்னை ராயப்பேட்டை ,ஒய்எம்சிஏ மைதானம்.திரள்வோம்.. திரள்வோம்.பகை மிரளத் திரள்வோம்.பைந்தமிழ் இனத்தீரே..சென்னையில் சந்திப்போம்.

வழக்கறிஞர் மணி செந்தில்

நாம் தமிழர் கட்சி.

334தமிழ வேள், Lingadurai K and 332 others15 comments131 sharesLikeCommentShare

15

திருவாளர் பொதுஜனம் 51

பட்டீச்சுரம் என்பது கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதிகளின் நடு எல்லையில் இருக்கின்ற ஊர். ராஜராஜ சோழன் சமாதி இந்த ஊருக்கு அருகிலுள்ள உடையாளூரில் இருக்கிறது. அண்ணன் சீமானைத் தவிர எந்த அரசியல் தலைவரும் அந்த இடத்திற்கு இதுவரை வந்ததில்லை. வந்தால் அரசியல் சரிவுகள் ஏற்படும் என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மூட நம்பிக்கைகள் உண்டு.மூடநம்பிக்கை என்றாலே திராவிடம் தானே.அதனால்தான் எந்த திராவிடத் தலைவர்களும் அங்கு வருவதில்லை.

வரலாற்றுப் பெருமைகள் பல வாய்ந்த இந்த மண்ணில்தான் இன்று கும்பகோணம் மற்றும் பாபநாசம் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.சற்றே ஊர் எல்லைக்கு வெளியே தான் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அண்ணன் சீமானின் கூட்ட ஒலிபரப்பு தொடங்கிய உடன் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர தொடங்கினர்.கூட்டம் தொடங்கியவுடன் இளம் பேச்சாளர்கள் பேசத் தொடங்க ‌ அதன் பிறகு நான் பேசினேன். எனக்குப் பிறகு‌ வேட்பாளர்களான ‌ பெருந்தமிழர் கிருஷ்ணகுமாா் அவர்களும் வழக்கறிஞர் மோ ஆனந்தும் பேசினர்.நான் பேசிக் கொண்டிருக்கையில் ‌ நீண்ட நேரமாக ஒருவர் என்னை கவனித்துக் கொண்டே இருந்தார்.

நான் பேசியபோது திமுக, அண்ணா திமுக காரர்கள் போல அரசியல் என்பது எங்களுக்கு தொழில் அல்ல. காலையில் வேலைக்குப் போய்விட்டு மாலை தேர்தல் பணிகளுக்காக எங்கள் தம்பிகள் ஒவ்வொரு நாளும் வருகின்றார்கள். இனத்திற்காக தங்கள் பணத்தை செலவழித்து இன விடுதலைக்காக உறுதியாக நிற்கிறார்கள் என்று பேசினேன்.நீண்ட நேரமாக அவர் என்னை கவனித்துக் கொண்டே இருப்பதாக எனக்குத் தோன்றியது.எனக்குப் பிறகு ஐயா கிருஷ்ணகுமார் பேசிக் கொண்டிருக்கையில் தயங்கியவாறே அருகில் வந்தார்.என்ன நினைத்தார் என தெரியவில்லை.51 ரூபாய் பணமும் ஒரு சீட்டையும் தந்து விட்டு சென்று விட்டார். அதை பிரித்து பார்த்தால் திருவாளர் பொதுஜனம் 51 என எழுதி இருந்தது.

அதில் அவரை தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் எழுதியிருந்தது.அது வெறும் பணம் அல்ல. எளிய மனிதனின் நம்பிக்கை. அது அவருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நம்பிக்கை பிறந்த கணம். அது ஒரு பரஸ்பர நம்பிக்கை கொடை.அதே நபர் கூட்டம் முடிந்து நாங்கள் செல்லும் வரை ஓரமாக நின்று எங்களை கவனித்துக் கொண்டே இருந்தார்.‌‌ நாங்கள் அந்த இடத்தில் விட்டுக் கிளம்பும்போது நெஞ்சம் நிமிர்த்தி அவர் கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரது பெயர்.திருவாளர் பொதுஜனம்.

ஸ்ட்ராபெரி நினைவுகள்

❤️

அந்த விடுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். நல்ல வேளை விடுதியின் வலது மூலையில் அந்தக் கண்ணாடி ஜன்னலோர இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன. அதே சிகப்புநிற நாற்காலிகள். அவள் எப்போதும் சுவரைப் பார்த்து இருக்கும் இருக்கையில்தான் அமர்வாள். சில சந்தர்ப்பங்களில் அந்த இருக்கையில் வேறு யாரோ அமர்ந்து இருந்தால்.. அந்த இருக்கை காலியாகும் வரை நின்றுகொண்டே காத்திருப்பாள்.

இது என்ன பழக்கம் என நான் கேட்டபோது .. நான் வராத நேரங்களில் அந்த இருக்கை எனக்காக காத்திருக்கிறது. அதற்காக நான் இப்போது காத்திருக்கிறேன் என விசித்திரமாக பதிலளித்தாள்.

இப்போதும் அந்த இருக்கை அவளில்லாமல் அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டேன்.

வழக்கமாக அமர்ந்தவுடன் எப்போதும் எனக்கு லெமன் சோடாவும், அவளுக்கு ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்கும் அவளே ஆர்டர் செய்வாள்.

அவள் இல்லாமல் தனியே வந்திருக்கின்ற நான் என்ன கேட்பது என யோசித்துக் கொண்டே நான் எப்போதும் அமரும் அதே நாற்காலியில் மெதுவாக அமர்ந்தேன். விடுதி முழுக்க ஏதோ ஒரு மெல்லிசை கேட்டுக்கொண்டே இருந்தது.‌ இரண்டு வரிசைக்கு அப்பால் அமர்ந்திருந்த ‌ யாரோ ஒரு பெண்ணும் இளைஞனும் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

…. நான் சிரித்துக் கொண்டேன். சொற்களை இறைப்பதுதான் உரையாடல் என பலரும் நினைக்கிறார்கள். பேசிய பொழுதுகளை விட பேசாமல் இருந்த பொழுதுகளில் பேசியது தான் பல சமயங்களில் எங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது.

என் முன்னால் வந்து நின்ற “சற்று வயதானவர் சார் நல்லா இருக்கீங்களா..” எனக் கேட்டார்..
ஓ.. ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து பார்த்த அதே ஆள்.

அதே கேள்வி. எங்கே அடுத்த கேள்வி அவர்கள் வரவில்லையா என கேட்டு விடுவாரோ என நான் அஞ்சிக் கொண்டே இருந்தேன்.

நல்லவேளை.. அவர் கேட்கவில்லை.

அமைதியாக என் எதிரே இருந்த அந்த செந்நிற இருக்கையை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். நம் எதிரே இருக்கும் எதுவும் காலியாக இருந்தால் தனிமையை உணர தொடங்கி விடுகிறோம். ஆளில்லாத சாலையில் நடப்பது போல.

ஆனாலும் இது தனிமை அல்ல. அவள் ஒரு முறை சொன்னது போல.. “நீ ஒரு போதும் தனிமையில் இருக்க வாய்க்கப் பெற்றவன் அல்ல. உன்னை தனித்திருக்கும் கோப்பையாக ஒருபோதும் நினைக்காதே. நான் எப்போதும் உன்னுள் நிரம்பி தளும்பிக் கொண்டே இருக்கிறேன்” என்றாள் அவள்.

ஒரு முறை சற்றே நான் கோபப்பட்டு.. “உன்னை எப்போதும் நினைப்பது மட்டும்தான் எனக்கு வேலையா..?” எனக் கேட்ட போது.. அவள் அலட்சியமாக சிரித்தாள்.

‘நீ என்னை நினைக்காத நேரங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமயங்களில் நான் உன் அருகில் இருக்கிறேன்..” என அலட்சியமாக சொன்னாள்.
ஏன் இவளுக்கு என்னை என்னைவிட நன்கு தெரிந்திருக்கிறது என்கின்ற கோபம் எனக்குள் எழுந்தது.

“அப்படி எல்லாம் இல்லை” என நானும் அலட்சியமாக சொல்லிவிட்டு நான் எங்கோ பார்ப்பதுபோல கண்ணாடிக்கு வெளியே சாலையில் போகும் வாகனங்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.

❤️

சார்..
என்ற குரல் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது.

“எப்போதும் நீங்கள் சாப்பிடுகிற
ஐஸ் போடாத லெமன் சோடா..” என
சொல்லி என் எதிரே சோடா நிரம்பிய கண்ணாடி கோப்பை ஒன்றினை வைத்தார்.

“இதையெல்லாம் நீங்கள் மறக்க வில்லையா..” என ஆச்சரியமாக கேட்டேன்.

“இல்ல சார்… சில விஷயங்களை மறக்க முடியாது. உங்களைப் போலத்தான் நானும். மாதம் ஒருமுறை பட்டீஸ்வரம் கோவிலில் போய் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வருவேன்” என்றார் அவர்.

சே…சே.. நான் அதற்கெல்லாம் வரவில்லை. பசிப்பது போல இருந்தது. அதற்காக வந்தேன் என்று கண்களைத் தாழ்த்தியவாறு
அவரிடம் சொன்னேன்.

அவர் அமைதியாக திரும்பி சென்று விட்டார்.

அவர் போன பிறகு ஒரு கொடும் வலி எனக்குள் எழுந்ததாக உணரத் தொடங்கினேன்.

தலையைக் கவிழ்த்து கண்களை மூடிக்கொண்டேன்.

ஏதோ சத்தம் கேட்டது.

அதே ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ஒன்றை எடுத்து வந்து என் எதிரே இருந்த காலியான இருக்கையில் வைத்துவிட்டு அந்த பரிமாறுபவர்
அமைதியாக சென்று கொண்டிருந்தார்.

❤️

தொ.ப என்கின்ற தனிமனித பண்பாட்டு ஆய்வுலக பல்கலைக்கழகம்

மனித இன வரலாற்றில் தொன்மை இனமாக அறியப்படுகிற தமிழர் என்கின்ற தேசிய இனம் மற்ற இனங்களைக் காட்டிலும் நாகரீக வளர்ச்சியிலும் பண்பாட்டு முதிர்ச்சியிலும் அறிவுசார் இனமாக விளங்குகிறது என்பது பெருமித கதையாடல்கள் அல்ல , தொல் அறிவியல் ஆய்வுகள் மூலம் வரலாற்றின் போக்கில் தொடர்ச்சியாக நிறுவப்பட்டு வருகிற உண்மை என்பதை சமீபத்திய பல ஆய்வாளர்கள் உரிய ஆதாரத்தோடு நிரூபித்திருக்கிறார்கள்.

தொன்ம இனமான தமிழர் இனம் வாழ்ந்து வருகிற இந்த நிலம் வெறும் மண்ணும், காடும், கடலும், மலைகளும் நிரம்பிய சக்கை குவியலல்ல. இந்த மண் ஆதிகாலம் முதல் இடையறாது அறுந்துவிடாது தொடர்ந்து வரும் பண்பாட்டு விழுமியங்களால் செழிப்புற்று உயிர்த்திருக்கின்ற மிகப்பெரிய ஆய்வுக் களமாக, மனித இனத்தின் தோற்றம் பற்றியும் பண்பாட்டுத் தொடர்ச்சி பற்றியும் ஆய்வு செய்கிற பண்பாட்டு ஆய்வாளர்கள் முன்னால் விரிந்திருக்கிறது.மனித இனத்தின் நம்பிக்கைகளின் தொட்டிலாய் ஆதி நிலமான தமிழர் நிலம் விளங்குகிறது. ஆதி மனிதன் தோன்றிய காலகட்டத்தில் தன்னை இயற்கையோடு இணைந்து தகவமைத்து தக்க வைத்துக் கொள்வதில் அவனது பண்பாடு சார்ந்த நம்பிக்கைகள் மிகப்பெரிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. குறிப்பாக தமிழன் பலவிதமான சமயங்கள், பல்வகையான வழிபாட்டு முறைகளை கொண்ட மாபெரும் சமூக இனமாக திகழ்ந்து வருகிறான்.

ஒரு தொன்ம இனத்தின் ஒவ்வொரு நம்பிக்கையும் மிகப்பெரிய ஆய்விற்குரியதாக, வரலாற்றின் விசித்திர முடிச்சுகளை அவிழ்ப்பதற்கான சூட்சமங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.நவீன அறிவுசார் வெளியில் பண்பாட்டினை ஆய்வு செய்தல் என்பது முக்கியமான வகைமையாக விளங்கி வருகிறது. நமது பண்பாட்டு விழுமியங்களை குறித்து இதுவரை நிகழ்ந்த ஆய்வுகள் அனைத்துமே அயல் நிலங்களில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் விதிகளையும், அயலக தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

இந்த வழக்கமான ஆய்வு முறையினை தகர்த்து தனது வேறுபட்ட விசாரணை முறைகளால் ஆய்வுத் துறையில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியவர் மறைந்த பண்பாட்டு ஆய்வாளர் முனைவர் தொ. பரமசிவன் அவர்கள்.வழக்கமான ஆய்வுகளுக்கு பயன்படுத்தும் காரணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு சமூக அடித்தட்டில் வாழ்கின்ற எளிய மனிதர்களின் வாழ்வின் மரபிலிருந்து தன் ஆய்விற்கான தரவுகளை எடுத்தாண்டு ஆய்வு செய்தது தான் பேராசிரியர் தொ.ப அவர்கள் தமிழ் ஆய்வு உலகத்திற்கு அளித்த மாபெரும் கொடையாகும்.தமிழர் ஆய்வு மரபு என்பது நா. வானமாமலை, மயிலை சீனி வேங்கடசாமி, ராகவையங்கார், கார்த்திகேசு சிவத்தம்பி என நீண்ட தொடர்ச்சி கொண்டது. அதில் பேராசிரியர் முனைவர் தொ பரமசிவன் மிகமிக தனித்துவமானவர்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட “கோயில்களில் ஆடு மாடு கோழி பலியிட தடை சட்டம்” என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட போது இந்து மத அரசியல் அடையாளமாகத் திகழ்கிற‌ இராம கோபாலனும், அதற்கு நேர் எதிர் அரசியலான திராவிட இயக்க அரசியல் அடையாளமாக திகழ்கிற திக தலைவர் கி வீரமணியும் ஒரே நேரத்தில் வரவேற்றபோது, தன் வாழ்நாள் முழுவதும் தன்னை மார்க்சிய பெரியாரிய ஆதரவாளராக விளங்கிய ஐயா தொ.ப அவர்கள் கடுமையாக எதிர்த்தார். ஒரே நேரத்தில் தமிழரின் பண்பாட்டு விழுமிய அடையாளங்களை அழிப்பதில் ஆரியமும், திராவிடமும் காட்டிய தீவிரத்தன்மையை எளிய மக்களின் வாழ்வியலில் இருந்து தான் கண்டறிந்த ஆய்வுத் தரவுகளை ஆயுதமாகக் கொண்டு தொ.ப எதிர்த்து நின்றார்.”சங்கரமடத்தில் கிடாய் வெட்ட சொல்லி கட்டாயப்படுத்தவும் முடியாது ‌. அதேபோல எங்கள் சங்கிலி கருப்பன் கோவில் சர்க்கரை பொங்கல் மட்டும் தான் வைக்க வேண்டும் என சண்டித்தனம் செய்யவும் கூடாது” என தனது அறிவார்ந்த குரலால் எதிர்த்து நின்றார்.

அவரது மிக முக்கிய நூலான பண்பாட்டு அசைவுகள்(காலச்சுவடு வெளியீடு) என்கின்ற ஆய்வு நூலானது அவருடைய “அறியப்படாத தமிழகம்” மற்றும் “தெய்வங்களும் சமூக மரபுகளும்” என இரு நூல்களில் உள்ள கட்டுரைகள் மற்றும் புதிய கட்டுரைகளை உள்ளடக்கியதாகும். அந்த நூலில் தமிழ், வீடும் வாழ்வும், தைப்பூசம், பல்லாங்குழி, தமிழக பௌத்தம், பேச்சு வழக்கும் இலக்கண வழக்கும், கருப்பு என்கிற ஏழு தலைப்புகளில் தண்ணீர் தொடங்கி இறப்புச் சடங்கு வரையிலான தமிழரின் ஒவ்வொரு பண்பாட்டுத் துளிகளையும் அவர் ஆய்வுக்குட்படுத்தி எளிய மொழியில் விவரித்து இருந்தது என்பது தமிழ் ஆய்வுத் துறையில் மிகப் பெரிய பாய்ச்சலை உருவாக்கியது.நவீன தமிழியல் ஆய்வின் முக்கிய பேராசிரியரான ஆ.இரா. வேங்கடாசலபதி “ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் வடிவமாக படிந்துள்ளன என்பதை பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் இடம் பெற்றிருக்கின்ற ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உப்பு எண்ணெய் தேங்காய் வழிபாடு விழாக்கள் உடை உறவுமுறை உறவுப்பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக் கொண்டு தமிழ் சமூகத்தின் ஈராயிரம் 3000 ஆண்டு வரலாற்று அசைவியக்கம் கோடிட்டு காட்டப்படுகிறது..” என பேரா.தொ.ப எழுதிய பண்பாட்டு அசைவுகள் என்கிற நூலை புகழ்ந்திருக்கிறார்.

அதேபோல அவரது மற்றொரு நூலான “சமயங்களின் அரசியல்” ( விகடன் வெளியீடு) இந்திய தத்துவ வரலாறு என நாம் அறிந்து இருக்கின்ற வரலாறு வர்ணாசிரம மேலடுக்கில் இருந்து மற்ற சாதிகளை ஒடுக்குகிற மேல் சாதிக்கும், ஒடுக்கப்படுகின்ற சாதிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் என்பதை சமயங்களின் அரசியல் என்கின்ற 65 பக்க நீள் கட்டுரை ஒன்றாலும் , ஆய்வாளர் சுந்தர்காளி அவர்களுடனான எழுத்து வடிவிலான நீண்ட உரையாடல் ஒன்றின் மூலம் நிறுவியிருக்கிறார்.தமிழ்நாட்டின் வரலாறு என நாம் அறிந்திருக்கிற சங்க காலம் தொடங்கி பின்னிடைக்காலம் வரையிலான பல வரலாற்று நிகழ்வுகளை ஆதாரப்பூர்வமாக கையாண்டு கோயில்கள் என்கின்ற நிறுவனங்களின் அதிகார உச்சங்களையும், வீழ்ச்சிகளையும் பற்றி மாபெரும் ஆய்வு ஒன்றை இந்த நூலில் அவர் நிகழ்த்தி இருக்கிறார்.

பேரா. முனைவர் தொ.ப அவர்களின் ஆய்வுகள் இந்துமத மேலாதிக்க அதிகாரத்தை சுக்கு நூறாக உடைத்தெறிவதற்கு மாபெரும் கருவிகளாக பயன்படுகின்றன. இந்து மதம் என்கின்ற ஓர்மை படுத்துவதின் அரசியல் எவ்வாறு வர்ணாசிரமத்தையும், மனு நீதியையும் நுட்பமாக காப்பாற்றுகிறது என்பதை அவர் தனது தீவிர வாசிப்பின் மூலம், சங்கப்பாடல்கள் தொடங்கி நவீன இலக்கியம் வரையிலான தனது பரந்துபட்ட அறிவின் மூலம் அம்பலப்படுத்தினார்.அவரது புகழ் பெற்ற கட்டுரை “காஞ்சி மடமும், கைதான மடாதிபதியும்”(உரைகல், கலப்பை வெளியீடு) வாதப்பிரதிவாதங்களை அறிவுத்தளத்தில் ஏற்படுத்தியது. இந்து மதம் என்கின்ற திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நிறுவனத்தின் உச்ச அதிகார பீடமாக இருக்கக்கூடிய காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றை , அதன் செல்வாக்கு பரவலாக்கப்பட்ட மோசடி தனத்தை மறுக்கவே முடியாத தரவுகளால் நிறுவிய தொ.ப வின் பங்களிப்பு தமிழக அரசியல் வெளியில் இன்னமும் ஆதிக்கம் செலுத்துகிற பல்வேறு குருட்டுத்தனங்களுக்கு எதிராக முழங்கிக் கொண்டே இருக்கிறது.

நாட்டார் வழக்காற்றியல் குறித்து அவர் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. சாதாரண உரையாடலின் போது கூட தொ.ப வெளியிடுகிற அறிவாய்ந்த வீச்சுக்கள் எதிர்நின்ற பலரை ஆச்சரியப்பட வைக்கிறது.தமிழ் இலக்கியத் துறையிலும் அவர் நிகழ்த்திய ஆய்வுகள் தமிழ் மொழிக்கும் இலக்கியத் துறைக்கும் புது ரத்தத்தை பாய்ச்சியவை. அவர் எழுதிய கல்லெழுத்துகள்( நாள் மலர்கள், பாவை பப்ளிகேஷன்ஸ்) என்கின்ற கல்வெட்டுகளை பற்றிய கட்டுரை இலக்கியத்திற்கும், வரலாற்றுக்கும் இடையிலான நுட்ப இடைவெளியை வைத்துக்கொண்டு செய்யப்பட்ட சாதனையாகும்.1950ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்த பேராசிரியர் தொ பரமசிவன் அவர்கள் மானுடவியல், சமூக பண்பாட்டுத் துறை, இலக்கியம் போன்ற துறைகளில் நிகழ்த்திய ஆய்வுகள் தமிழ் சமூகத்தின் தொல் பெருமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவை. ஒரு முது இனத்தின் பண்பாட்டு விழுமியங்களின் அறிவு என்பதே அந்த இனம் பெற்றிருக்கின்ற நாகரீக வளர்ச்சி என தொ.ப தன் ஆய்வுகள் மூலம் நிறுவினார்.

பண்பாட்டுக்கூறுகள் அழிந்தால் இனம் அழிந்து போகும், அடையாளத்தை இழந்து போகும் என எச்சரித்த அவர் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய உயர் கல்விப் புலங்களில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். எதையும் வெளிப்படையாக பேசி விடுகின்ற அவரது கருத்துக்கள் மிகவும் ஆழம் மிக்கவை. இறுதிக்காலத்தில் தமிழம் வலையொளிக்கு அவர் வழங்கிய செவ்வியில் “திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் முற்றுப்பெற்றுவிட்டது.”என ஏறக்குறைய இந்துத்துவா சார்போடு இயங்குகிற சமகாலத்து திராவிட இயக்கங்களை கடுமையாக அவர் விமர்சித்தார்.முனைவர் பட்டத்திற்கான அவரது அழகர் கோவில் பற்றிய ஆய்வேடு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பற்றி செய்யப்படும் அனைத்து ஆய்வுகளுக்கும் இந்த நூல்தான் ஒரு முன்னோடியாக இருக்கிறது. தொலைந்து கொண்டிருக்கும் தமிழ் பண்பாட்டின் மிச்சங்களை ஆவணப்படுத்தி, ஆய்வு படுத்தி தமிழினத்தின் தொல் அறிவு, முதுமை, பெருமித செழுமை ஆகியவற்றை அரும்பெரும் நூல்களாக தமிழின எதிர்கால சந்ததிக்கு பெரும் கொடையாக அளித்து விட்டு மறைந்திருக்கிறார் பேராசிரியர் முனைவர் தொ பரமசிவன் அவர்கள்.

எண்ணற்ற அவரது மாணவர்கள் ஆய்வுத் துறையில் அவரது வழியில் தொடர்ச்சியாக பயணப்பட்டு நம் மொழி கலாச்சார பண்பாட்டு துறைகளுக்கு மாபெரும் பங்களிப்பினை வழங்கி வருகிறார்கள். இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் அவரிடம் கல்வி பயின்றது தான் தனது சமூகப் பார்வைக்கு ஒரே காரணமென அவர் மறைந்த நாளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தன் ஆசிரியரை உணர்ச்சி பூர்வமாக நினைவு கூர்ந்தது படிக்கின்ற ஒவ்வொரு வாசிப்பாளனும் உணர்வான்.அறிவுலக இழப்பாக நிகழ்ந்திருக்கிற அவரது மறைவு ஈடு செய்ய இயலாத ஒன்று தான். ஆனால் பண்பாட்டு அசைவுகள், பரண், நாள் மலர்கள், விடுபூக்கள், இந்து தேசியம் என நீளுகின்ற இருபதுக்கும் மேலான அவரது நூல்களில் அவர் வெளிப்படுத்துகின்ற கருத்துக்கள் எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிப்பாதையில் வெளிச்சம் காட்டும் அறிவுச்சுடர் களாக திகழும்.

ஏனெனில்.. எங்கள் உலகம் அழகானது.

❤️❤️❤️❤️❤️❤️❤️

தம்பி குடவாசல் மணிகண்டனின் திருமணத்திற்கு திருவாரூர் வரை என் அம்மா சென்று வந்தது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்களுக்கு இந்தத் திருமணம் குறித்து உள்ளூர ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தார்கள் என நான் அறிந்தே இருக்கிறேன். அவன் சக்கர நாற்காலியில் நாம் தமிழர் கூட்டத்திற்கு பாடுவதற்காக வரும் போதெல்லாம் அம்மா அருகில் சென்று நின்று கொள்வார்கள். ஒருபோதும் அவனுக்காக நான் எந்த சகாயமும் செய்ததில்லை. அவன் வருவான். பாட அனுமதி கேட்டு வற்புறுத்துவான். பிடிவாதம் பிடித்து பாடியும் விடுவான்.

கால் நடக்க முடியாதவர்களுக்கு , மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பெண் கிடைப்பதில்லை. உடல் குறைபாடுள்ள பெண்கள் நிலை இன்னும் மோசம். நானும், தம்பி மணிகண்டனும் கொஞ்சம் அதில் விதிவிலக்கு. மனதைப் பார்த்து காதலியுங்கள் என்றெல்லாம் புத்தகத்தில் வரிகள் மின்னும் போது நானெல்லாம் சிரித்துக் கொள்வேன். அப்படி எல்லாம் எந்த காதலும் பிறக்காது. அப்படி பிறந்தால் அது குறுகிய கால அனுதாபமாகத்தான் இருக்கும் என்பதை என்னை ஒத்த பலர் வாழ்வில் நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தம்பி மணிகண்டன் திருமண புகைப்படங்களை பார்க்கும் போது எனக்கு எனது கடந்த காலங்கள் நினைவுக்கு வந்தன. திருமணத்தன்று நான் தடுக்கி விழுந்து விடக்கூடாது என ‌ திருமணத்திற்கு முதல் நாள் நான் மண்டபத்திற்கு சென்று‌ என் அம்மா முன்னிலையில் ஒரு இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

ராஜபார்வை என்ற ஒரு படம் உண்டு. கமலஹாசனின் 100வது திரைப்படம். கண்பார்வை திறன் அற்றவராக கமல் அதில் திறம்பட நடித்திருப்பார். எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்காத கண் பார்வைத் திறனற்ற ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படம் அந்த காலகட்டத்தில் சரியாக போகவில்லை என்பார்கள். அந்தப் படத்தின் தோல்வியில் தான் ‌ கமல் வெறுப்பில் சில வணிக திரைப்படங்களில் நடித்ததாகவும் சொல்வார்கள்.

அந்தத் திரைப்படத்தில் கண் பார்வைத் திறனற்ற கமலஹாசனின் வீடு அவர் புழங்குவதற்கு ஏற்ப திட்டமிட்ட அடிகளில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். சிறிது இடம்மாறி போனாலும்‌ அவர் தடுமாறி விடுவார். ஒருமுறை கதாநாயகி மாதவி வீட்டிற்கு வரும்போது சில பொருட்களை இடம் மாற்றி வைத்து விட, கமல் தடுமாறி விடுவார். இந்த நுட்பமான திரைப்படக் காட்சி எங்களைப் போன்றோரின் அனுதாபம் கோராத திட்டமிடலுடன் கூடிய ஒரு வாழ்வியலை ஆவணம் ஆக்கிய மிக முக்கியமான காட்சி. மாற்றுத்திறனாளிகளை போற்றுவதாக கூறிக்கொண்டு ராகவா லாரன்ஸ் போன்ற கோமாளிகள் எடுக்கின்ற முட்டாள்தனமான படம் அல்ல அது. படத்தின் முடிவு கூட மகிழ்ச்சியுடன் தான் இருக்கும். உடல் குறைபாடுள்ள சகமனிதனின் சுயமதிப்பை பற்றி ஆராய்கிற ராஜபார்வை தமிழின் மிக முக்கியமான ஒரு திரைப்படம்.

எந்த மாற்றுத்திறனாளியும் அனுதாபம்‌ கோருவதில்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை இடையூறு செய்யாத ஒரு உலகம். ஆனாலும் உலகம் அவ்வாறு இல்லை தானே..

அன்பின் மிகுதியால் சிலர் எங்களுக்கு உதவி செய்வதாக நினைத்துக்கொண்டு எங்களுடைய சமநிலை தவறுவது போல சில செயல்களை செய்து விடுவார்கள். குறிப்பாக எனக்கெல்லாம் வலது கையை பயன்படுத்தி இடதுகையை காலில் ஊன்றிக்கொண்டு நடந்து செல்லும் உடலமைப்பு. ஆனால் உதவி செய்ய வருபவர் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் மாற்றி வேறு கையைப் பிடிக்கும் போது நான் தடுமாறி விடுகிறேன். அது அவர்களது பிழையல்ல. அது அன்பின் ஒரு பகுதி என்று‌ நானும் உணர்ந்திருக்கிறேன்.

எங்கள் அமைப்பில் புதிதாக சேர்ந்த நண்பர் ஒருவர் என நேரடியாக அதுவரை பார்த்திராத ஒருவர், தஞ்சை கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை முதன்முதலாக பார்த்தார்.‌ இன்று அவர் அலைபேசியில் என்னை அழைத்து இந்த உடல் சூழ்நிலையிலும் நீங்கள் கட்சி வேலை செய்கிறீர்கள், யூ ஆர் கிரேட் என்றெல்லாம் அன்போடு பேசிக்கொண்டிருந்தார். அதுகுறித்து நீண் ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் அமைப்பில் வேலை செய்வதுதான் என்னை சமநிலையில் வைத்திருக்கிறது என்பதை எப்படி அவரிடம் விளக்கி புரிய வைக்க முடியும் என்பதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.

நான் உலகத்தில் அதிகம் விரும்பும்‌ அனைவருமே என்னிடம் அனுதாபம் காட்டாதவர்கள். குறிப்பாக என் அம்மா. பிறகு அண்ணன் சீமான். பின்னர் என் மனைவி உள்ளிட்ட சில பெண்கள் என இவர்கள் யாருமே என்னிடம் அனுதாபம் காட்டியதில்லை. என்னை வெகுவாக விரும்பிய (disclaimer: அது மிக நீண்ட காலத்திற்கு முன்னால்…) ஒரு பெண் என்னிடம் சொன்னது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. நீண்ட பயணத்தைக் கொண்ட ஒரு பணிக்கு என்னை அவள் அழைத்த போது என் உடல் நிலையை சிந்தித்து தான் இதை கேட்கிறாயா என நான் கேட்டதற்கு “உன்னால் ஒரு விஷயம் முடியாது என்று நான் இதுவரை நினைத்துக் கூட பார்த்ததில்லை. என் பார்வையில் இயல்பான மற்றவர்களைப் போலத்தான் நீயும் இருக்கிறாய். கிளம்பி வாடா”என்று அலட்சியமாகச் சொன்னாள்.

திருமணத்திற்காக நான் பெண் பார்க்கும்போது .. என் மனைவியிடம் நான் ஏதோ அறிவுரை சொல்வது போல பெரியவர்கள் சொல்வதை கேட்க வேண்டாம் எனவும் பிடித்திருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும், விளக்கமாக அறிவுரை கூறி என் உடல் இருக்கும் தகுதி குறித்து அவளிடம் விளக்கி பேசினேன்.

அதை எல்லாம் அமைதியாக கேட்டு விட்டு நான் பேசிய எதையும் பொருட்படுத்தாமல், அவள் அப்பாவிடம் போய் சென்று “எனக்குத் திருமணம் என்ற ஒன்று ஆனால் இவரோடு தான்” என்று பெரியோர்களால் பேசப்பட்ட சாதாரண திருமணத்தை ஒரு அழகான காதல் திருமணமாக என் மனைவி மாற்றி விட்டாள்.

இந்த வரிசையில் என்னை மிகவும் வெறுக்கும் என் அரசியல் எதிரிகளும் வருகிறார்கள். அவர்களை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் வசவுகளை எத்தனையோ முறை நான் ரசித்து இருக்கிறேன். அவர்களுக்கு நான் இவ்வளவு தொந்தரவாக இருப்பது குறித்து மட்டுமே வருந்தி இருக்கிறேனே தவிர, என் உடல் குறைபாட்டினை குறித்து எதையும் பொருட்படுத்தாது, அனுதாபமோ, கருணையோ காட்டாது என்னை தீவிரமாக எதிர்க்கும் அவர்களது எதிர்ப்பு கூட நான் விரும்புகிற ஒன்றுதான்.

ஏனெனில் ஒரு உலகம் இவ்வாறு அமைய எங்களைப் போன்றோருக்கு மிக மிக அரிது. எனது மகன்களுக்கு என் அப்பாவால் எல்லாம் முடியும் என்கிற மகத்தான நம்பிக்கை இருக்கிறது. அது நான் கொடுத்தது இல்லை. அவர்களாகவே மனதில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பல இடங்களுக்கு எனது மூத்த மகன் சிபி தான் என்‌ உடன் வருகிறான். என் கட்சி உறவுகள் போலவே அவனும் கவனமாக என்னை அழைத்துச் செல்கிறான்.

அண்ணன் சீமான் எப்போதும் நான் மேடை ஏறும் போது பார்த்துக் கொண்டிருப்பதாக பலர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். என்னை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். நான் தடுமாறி விடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டு இருக்கிறார் என்பதும் எனக்குத் தெரியும். சில சமயங்களில் தடுமாறும் போது அவரது சிறிய கணைப்பு போன்ற ஒரு ஒலி என்னை எச்சரித்து சுதாரிக்க வைத்திருக்கிறது. ஒருபோதும் என் அண்ணன் சீமான் எனக்கு எவ்வித சார்பும் செய்தததில்லை. உன்னால் முடியாது என்று அவர் எப்போதும் சொன்னதில்லை. இன்னும் உன்னால் முடியும் என்றுதான் என்னை எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவர் என் அண்ணன்.

அந்த வகையில் என்னை மதிப்பு மிகுந்தவனாக இந்த உலகம் நடத்தியிருக்கிறது. தம்பி மணிகண்டனுக்கும் ஏறக்குறைய அப்படித்தான். நான் எல்லாம் அவனை கடுமையாக திட்டி இருக்கிறேன். அவனும் சளைத்தவன் அல்ல. கல்லூரி வாழ்க்கை தொடங்கி சகலத்திலும் அவன் சேட்டைக்காரன் தான். சிறந்த பாடகன். பாடிப் பாடியே காதலித்து மனதுக்குப் பிடித்தவளைக் கரம் பிடித்தும் விட்டான்.தம்பி குடவாசல் மணிகண்டனின் மணவாழ்க்கை என்னைப்போலவே மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய நான் மனதார வாழ்த்துகிறேன்.

திருமணம் முடிந்து வீட்டிற்கு திரும்பிய என் அம்மாவிற்கு மிகவும் மகிழ்ச்சி. சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அந்த மகிழ்ச்சியின் ஊடே நெடுங்காலமாய் சுமந்துவரும் ஒரு பெரும் வலியை அவர்கள் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் அந்த நேரத்தில் உணர்ந்தேன்.

அம்மா என்றால் அப்படித்தானே.. மணிகண்டனுக்கு திருமணம் நடந்தால் என்ன.. எங்களைப் போல வேறு யாருக்கு நடந்தால் என்ன..

அம்மாவுக்கு எல்லாம் ஒன்றுதான்.

ஏனெனில் உலகத்தில் அம்மாக்கள் ஒரே மாதிரிதான்.

❤️

Page 14 of 57

Powered by WordPress & Theme by Anders Norén