பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 6 of 57

உன்னிடம் சில நொடிகள்.

சில நொடிகள்

கண்களை மூடி

தியானிக்கிறேன்..

உன்னை

பார்த்து விடுகிறேன்.

❤️

யாரிடமும் பேசாமல்

தலைகவிழ்ந்து

இமை சொருகி

மெளனிக்கிறேன்.

உன்னிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்.

❤️

யாரோ என்னிடம்

ஏதோ கேட்கிறார்கள்.

காதில் விழவில்லையா

என சாடை காட்டுகிறார்கள்.

அப்போதுதான் உனக்கு

பிடித்த நாயகன் பட

பின்னிசை எனக்குள்

அனிச்சையாக ஒலித்துக்

கொண்டு இருக்கிறது.

❤️

ஆள் தெரியாத

மழைச்சாலையில்

தனித்து பயணித்த

காரை ஒதுக்கி

கண்ணாடி ஏற்றி

சாய்ந்திருக்கிறேன்.

என் விழிகளுக்கு

முன்னால்

ஒரு பாதி

திறந்த கதவும்.

ஒரு மஞ்சள் சுடிதாரும்.

❤️

ஆளில்லா

பிற்பகல் கோவில்

பிரகாரத்தில் கண்மூடி

படுத்திருக்கிறேன்.

பழக்கத்தில்

அனிச்சையாய்

துழவும் என் விரல்களில்

ஒரு உதிரிப்பூ.

❤️

விடுமுறை கல்லூரி

ஒன்றில் யாருமில்லா

வகுப்பறைகளின்

திறந்திருக்கும்

ஜன்னல்கள் ஒவ்வொன்றாய்

மூடிக் கொண்டே வருகிறேன்.

ஏனோ உன்னை இறுதியாய்

பார்த்த போது

நீ தேவையில்லாமல்

கண் சிமிட்டிக்கொண்டு

இருந்தாய்…

சென்னை பெருமழை வெள்ளம்-செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும்.

புயல் மழை காரணமாக தலைநகர் சென்னை தத்தளிப்பது குறித்து வருகின்ற விமர்சனங்களை திமுகவினர் கையாளும் விதம் மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இயற்கை பேரிடர் தான், நாம் எதிர்பார்த்ததை விட அதிகமானது தான்.. ஆனாலும் இதுவெல்லாம் இங்கே கேள்வி அல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொடும் வெள்ளத்திற்கு பிறகாக தகுந்த மழை நீர் வடிகால் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில் திமுக,அதிமுக என்கின்ற இரண்டு திராவிட கட்சிகளுமே அக்கறை காட்ட வில்லை.குறிப்பாக திமுகவை பற்றி எல்லோரும் ஏன் வெறுப்பாகிறார்கள் என்றால் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முறை மழைக் காலத்திலும் திமுக தலைவர்கள் வைத்த விமர்சனங்கள் தான் இன்று அவர்களுக்கே எதிராக போய் நிற்கின்றன‌. ரூ 4000 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் ஒரு அப்பட்டமான தோல்வி என்பதை ஒத்துக் கொள்ள மறுத்து தான் முதலமைச்சர் தொடங்கி அடிமட்டக்கட்சி தொண்டன் வரைக்கும் நேற்று இருந்த படத்தை பாருங்கள், இன்று இருக்கின்ற நிலையை பாருங்கள் என்றெல்லாம் விளக்கவுரை எழுத வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டாகி இருக்கின்றன.

உண்மையில் பல்லாயிரக்கணக்கான சென்னை நகரத்து மக்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்டு கையறு நிலையில் இருக்கிறார்கள். புயல் மழை நின்றவுடன் இயல்பான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது போல அயோக்கியத்தனம் வேறு எதுவும் இல்லை. எதிர்கால வாழ்வாதாரம் என்ற ஒன்றே இழந்துவிட்ட மக்கள் எப்படி மழை விட்ட உடனேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்..?? புகழ் பெற்ற எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தான் அச்சுட்டு வைத்திருந்த 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மழை நீரால் வீணாகி விட்டன. இனி நான் என்ன செய்வேன் என்கிற கேள்வியை நம் முன்னால் வைத்திருக்கிறார். இதுபோன்று பல லட்சக்கணக்கான கேள்விகள் சென்னை மாநகரம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் மறைத்துவிட்டு விஷால் திட்டிவிட்டார் பதிலுக்கு நாங்களும் திட்டுகிறோம் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தால் திராவிட மாடல் ஆட்சியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.

உண்மையில் ஒரு மக்களுக்கான அரசு என்ன செய்ய வேண்டும்..??

1. சென்னையை சுற்றி இருக்கின்ற குறிப்பாக மேற்கு பகுதியில் இருக்கின்ற 4000 நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எவ்வித சமரசமும் இல்லாமல் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

2. எவ்வித சூழலியல் பார்வையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பரந்தூர் விமான திட்டம் போன்ற ஆபத்தான திட்டங்களை ரத்து செய்துவிட்டு.. மழைநீர் காலத்து நீர் சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசே முன்வந்து ஏற்படுத்தி மழை நீரை வெள்ள நீராக வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.

3. சூழலியல் பிரச்சனைகளால் மாறிவரும் பருவச் சூழலுக்கு ஏற்ப அரசின் திட்டங்கள் மாற வேண்டும். 1950 காலத்திய மழை நீர் வடிகால் திட்ட முறைமைகளில் இருந்து விடுபட்டு நவீன கால மழை நீர் வடிகால் திட்ட முறைகளை கையாண்டு மழை நீரை கோடை காலத்திற்கான சேமிப்பு நீராக மாற்றுவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

3. கடந்த காலங்களில் மழைக்காலம் என்றால் ஒரு மூன்று மாத காலம். ஆனால் இப்போதெல்லாம் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த மழைக்காலத்திற்கான தண்ணீரும் மழைநீராக பெய்கிற சூழலை உணர்ந்து, அதற்கான தயாரிப்புகளில் தலைநகரக் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மேலும் சென்னை மாநகரம் விரிவடைந்து கொண்டே போனால் அதனைக் காப்பாற்றுபவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து விரிவடைகிற நகரத்தை கட்டுப்படுத்த, குவிக்கிற மக்கள் பெருக்கத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் மாற்று வழிகளை உடனடியாக சிந்திக்க வேண்டும்.

4. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் முன் வைப்பது போல சென்னை மாநகரை எல்லோரும் குவிவதற்கான குப்பைத் தொட்டியாக மாற்றாமல், நிர்வாக தலைநகரை திருச்சி போன்ற மாநிலத்தின் மையப் பகுதிக்கு மாற்றப்பட வேண்டும். விரிவாகிக் கொண்டே போகும் தலைநகர் மென்மேலும் சூழலியல் சவால்களை சந்திக்கப் போவது என்பது உறுதி. உடனடியாக இந்த ஆபத்து போக்கினை தடுத்து நிறுத்தி, நமது பக்கத்து மாநிலங்கள் மேற்கொள்வது போல நிர்வாக தலைநகர் ஒன்றினை சென்னை மாநகருக்கு வெளியே அமைப்பது நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும்.

******

விமர்சனங்கள் வைப்பவர்கள் அனைவரையும் வெறுப்போடு பார்க்கின்ற பார்வையை தவிர்த்துவிட்டு மக்கள் நலனுக்கான தொலைதூர சிந்தனையோடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு முதலாவதாக விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் திமுகவினர் தடுமாறுவது அவர்களது தோல்வியை காட்டுகிறது.

இயற்கை என்பது நமக்கு மேலானது தான். ஆனால் அரசு எந்திரம் இழைக்கின்ற தவறுகள் இயற்கை செய்கிற மீறல்களை தாண்டியது என்பதுதான் இதில் அடிப்படை. சாலைகளை சேர்த்து வைத்து மழைநீர் வடிகால்களை அமைக்கிறோம் என்ற பெயரில் பெயரளவுக்கு வேலை செய்துவிட்டு டெண்டர் விட்டு சம்பாதிப்பது அல்ல மக்கள் பணி.

அரசியல் / மக்கள் பணி என்றாலே சம்பாதிப்பது என்கின்ற “திராவிட மனநிலையை “ மாற்றி விட்டு சூழலியல் பார்வையோடு நவீன உத்திகளோடு புயல் மழையை கையாண்டால் இன்று தலைநகர் தத்தளிக்கின்ற கொடும் நிலை ஏற்பட்டு இருக்காது.

திருமுருகன் காந்தி -சில குறிப்புகள்

2009 காலத்தில் இருந்து திருமுருகன் காந்தியை கவனித்து வருகிறேன். முதலில் தொடக்கத்தில் இருந்தே அவர் தமிழ் தேசியவாதி அல்ல. அவர் முன் வைப்பதும் தமிழ் தேசியம் அல்ல.மே 17 இயக்கத்தை தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் செய்தது மன்னார்குடியில் என்னோடு படித்த என் பால்ய கால நண்பன் உமர். அவனது அறிவை, ஆற்றலைக் களவாடி திருமுருகன் காந்தி தனது செயல்பாடுகளாக காட்டிக்கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. சொல்லப்போனால் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்கான பொய்களை மற்றும் அவதூறுகளை பரப்புகிற கூலியாள் வேலையை தான் திருமுருகன் காந்தி செய்து வருகிறார்‌. அவர் யாருக்கும் நேர்மையாக இருந்த மனிதர் அல்ல. அவரோடு மே 17-ல் உழைத்த உமர், சரவணன் தங்கப்பா உள்ளிட்ட பல தோழர்கள் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்கும் திருமுருகன் பதில் அளித்தவர் அல்ல.திராவிட பிழைப்புத் தனத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய பரப்பு விரிவடைவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திராவிடத் தலைவர்களால் வளமூட்டி வளர்க்கப்பட்டவர் திருமுருகன்.திருமுருகன் யார் என்பதற்கு மிகப்பெரிய ஆவணம் உமர் எழுதிய நான் ஏன் மே 17 இருந்து விலகினேன் என்கிற பல பக்க கட்டுரை. தொடக்கத்தில் மே 17 இயக்கத்தில் உணர்வோடு இயங்கிய பலரும் திருமுருகனின் சுயநல போக்கினை, பிழைப்புவாத திராவிட ஆதரவு நிலையை கண்டு மனம் வெறுத்து அவரிடம் இருந்து விலகி விட்ட நிலையில், கையறு நிலையில் இப்போது வெறி கொண்டு அண்ணன் சீமான் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் பாய்ந்திருக்கிறார். தன் மேடையில் அண்ணன் சீமானைப் பற்றி, நாம் தமிழர் கட்சியை பற்றி அவதூறாக மதிப்பு குறைவாக முகவரி அற்றவர்களை எல்லாம் ஒன்றாக திரட்டி ஒருமையில் ஏசி பேச வைத்து தன் தோல்வி காயங்களின் மீது மருந்து போட முயன்றிருக்கிறார் திருமுருகன். உண்மையில் அது அவரது மன நோய் சம்பந்தப்பட்டது.

இது போன்ற பல திருமுருகன் காந்திகள் பலரால் தயாரிக்கப்பட்டு எழுந்து வருகிற தமிழ்த் தேசியம் என்கின்ற வலிமையான தத்துவ உருவாக்கத்தின் மீது ஏவப்படுவார்கள். அவர்களையெல்லாம் போகிற போக்கில் இடது கையால் ignore செய்துவிட்டு மண்ணின் மைந்தர்களுக்கான பூர்வ குடிகளின் தத்துவ முழக்கம் வெற்றி பெற்றே தீரும்.

நமக்கு ஒரே ஒரு அச்சம் மட்டுமே இவ்வேளையில் இருக்கிறது. யாருக்கும் , எதற்கும் உபயோகமில்லாத திருமுருகன் போன்ற அடுத்தவர் அறிவை திருடி பிழைக்கின்ற அடிவருடிகளை நாம் எழுதி, பேசி பெரிய ஆட்களாக மாற்றி விடக் கூடாது என்பது மட்டும்தான்.

திருச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய மாவீரர் நாள் மாநாட்டில்

அண்ணன் சீமான் அறிவித்தது போல.. இத்துப்போனவைகளைப் பற்றி, நிறம் இழந்து உதிர்ந்தவர்களை பற்றி பேசுவதும் எழுதுவதும் வீணானது.

நாம் நம்மைப் பற்றி பேசுவோம்.

நம் வெற்றியை உலகத்திற்கு உரக்கச் சொல்வோம்.

அந்தக் கம்பீரத்தில் திருமுருகன் காந்தி போன்ற சில்லறைகள்

காணாமல் போவார்கள்.

நம் தேசியத் தலைவர் அவர்களை தீவிரமாக எதிர்க்கின்ற திமுகவினரை அவர்களது விமர்சனங்களை நாம் அறிவோம். கருணாநிதிக்காகவே அவர்கள் கனவு கண்ட “தமிழினத் தலைவர்” என்கின்ற லட்சியப் பட்டத்தை உச்சபட்ச தன் தியாகத்தால் அடைந்த அந்த அதிமனிதன் மீது திமுகவின் பாமரத் தொண்டன் என்கின்ற முறையில் அவர்களுக்கு இருக்கின்ற வெறுப்பு/பொறாமை /வயிற்றெரிச்சல் இன்னும் பல.

ஆனால் அவர்களை எல்லாம் தாண்டி தேசியத் தலைவர் அவர்களை பெரியாரோடு வைக்கிறேன் அம்பேத்கரோடு பொருத்துகிறேன் என்றெல்லாம் மாய்மாலம் பேசும் வேடதாரிகள் தான் அபாயகரமானவர்கள். அம்பேத்கர் அவர்களையும் பெரியார் அவர்களையும் கூட ஒரே தட்டில் பொருத்துவது என்பது ஏற்கத்தக்கதல்ல. அண்ணல் அம்பேத்கர் அனைத்தையும் தான் கண்டடைந்த பேரறிவு மூலம் உணர்ந்து தெளிந்து அறிவித்தவர். பெரியார் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தவர். இருவருமே வெவ்வேறானவர்கள். இதன் நடுவில் தேசிய தலைவரைப் பொருத்துகிறேன் என்ற திருமுருகன் காந்தி போன்றோரின் நாடகம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்தக் கூடியது.

ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக படைக்கட்டி போராடிய தலைவரை முற்றிலுமாக வேறு காலத்தில் வாழ்ந்த தலைவர்களோடு ஒப்பிடுவது என்பது ஒப்பிட்டு குறைபாடு மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆயுத வழி போரின் மூலம் சோசலிச குடியரசு நாட்டை கட்டி எழுப்ப களத்தில் நின்ற தேசிய இனத்தின் விடுதலை குறியீடு தலைவர் அவர்கள் தன் போராட்டத்தின் ஊடாக பெண்ணுரிமை சாதிய மறுப்பு மொழிப்பற்று சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்ட இலட்சிய கோட்பாடுகளை வென்றெடுத்தவர். தன்னை திராவிடர் என்றோ பெரியாரியவாதி என்றோ எங்கும் சொல்லிக் கொள்ளாத தலைவர் அவர்களை அவரவருக்கு விருப்பமான தத்துவ அடுக்குகளில் பொருத்துவது என்பது அப்பட்டமான சுயநலத்தனம்.

இந்த விஷயத்தில் இடதுசாரிகள் சற்றே தெளிவானவர்கள். பெரியாரையும், காரல் மார்க்ஸையும் ஒரே தட்டில் அவர்கள் வைக்க மாட்டார்கள்.

ஆனால் திராவிட திரிபுவாதிகள் பிழைப்புக்காக

எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்து கல்லா கட்ட முயற்சிப்பார்கள். அந்த முயற்சிகளுக்கெல்லாம் கல்லறை கட்டுவது தான் நமது வேலை.

கேள்வியற்ற ஒரு பதில்

கடைசியாய்

உனக்கு

அனுப்பிய

இறுதிச் செய்தி

ஒன்று

எவ்வித பதிலும்

இல்லாமல்

கை விடப்பட்ட

நாய் குட்டி போல

பனி இரவுகளில்

முனகிக்

கொண்டே திரிகிறது.

ஒளி வெளிரும்

அலைபேசி திரையில்

அனாதைப் போல

உனக்கு அனுப்பிய

என் இறுதிச் செய்தி

பதில் இல்லாமல்

பரிதவித்து கிடக்கிறது.

பதிலற்று திரிகிற

என் இறுதி செய்தி

மூங்கில் காட்டில்

அலைகிற

ஊதற் காற்று போல

உள்ளுக்குள் இரைகிறது.

ஒரு மகத்தான

பிரிவின்

இறுதி அத்தியாயத்தை

மௌனத்தின் தூரிகை

கொண்டு

நீ வரைய தொடங்கி

இருக்கலாம்.

இருப்பினும்..

பிரிவின் மொழி

ஏதாவது சொற்களாலோ

சைகையாலோ

குறைந்தபட்சம்

சில

கண்ணீர் துளிகளாலோ

அல்லது

ஒரே ஒரு கவிதையாலோ

நிகழ்த்தப்பட்டிருந்தால்

கூட

நான் ஆறுதல்

அடைந்திருப்பேன்.

அல்லது

சில வசவுகள்

நிராகரிப்பின் நியாயங்கள்

துரோக குற்றச்சாட்டுகள்

கழிவிரக்க விளக்கங்கள்

இப்படி ஏதேனும் ஒன்றில்

எனது இறுதி செய்தி

உன்னால்

சிலுவையில் அடிக்கப்பட்டு

இருக்க வேண்டும்.

அந்த சிலுவைப்பாடு

ஒருவேளை

என் உயிர்த்தெழுதலுக்கான

வழியாக

இருந்திருக்கக்கூடும்.

ஆனால்

எப்போதும்

வெறுமையை

தருகிற

மழைக்கால

மதியப்பொழுது போல

உன்னால்

பதில் அளிக்கப்படாத

எனது இறுதி செய்தி

உறைந்து விட்டது.

தவறி

எங்கேனும்

காண நேர்ந்தால்

ஏன் பதிலில்லை

என ஒருபோதும்

நான் உன்னிடம்

கேட்க மாட்டேன்.

அதற்கும்

பதிலில்லை

என்றால்..??

என்னை நானே

தேற்ற

இன்னொரு

கவிதையை

இப்படி நான்

எழுத முடியாது.

சீமான் அண்ணனின் பிறந்தநாள்.

பேரன்பினால் நெய்யப்பட்ட பேராற்றல்.

——————————————————————

ஒரு மீன் குஞ்சு தன் அம்மாவிடம் கேட்டது.

” நான் கடலைப் பற்றி எப்போதும் கேள்விப்படுகிறேன் கடல் என்றால் என்ன..? அது எங்கே இருக்கிறது..?”

“நீ வாழ்வதும், அசைவதும், உன் உயிர் இருப்பதும் கடலில் தான். கடல் உனக்குள்ளும் இருக்கிறது. நீ இல்லாமலும் இருக்கிறது. நீ கடலால் ஆனவள். நீ கடலில் தான் முடிவாய். கடல் உன் சொந்த உயிரைப் போல உன்னை சூழ்ந்துள்ளது. என்று அம்மா சொன்னாள்.

( நான் யார் ?.. 173 ஜென் கதைகள். அடையாளம் வெளியீடு.)

🛑

மிக எளிதாக இந்த ஜென் கதையை வெறும் கண்களால் படித்து, அகக் கண்களால் பார்க்கும் எவராலும் கடந்து விட முடியாது. ஏனெனில் அந்தக் கதை நம்மைப் பற்றியது. எப்படி அந்த மீன் குஞ்சு தான் மிதந்து கொண்டிருக்கின்ற கடலைப் பற்றி தன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறதோ, அப்படித்தான் தமிழர் என்ற தேசிய இனம் அந்த ஒரு தனி மனிதனின் வருகைக்கு முன்னால் தான் யார் என்று தெரியாமல் திரைப்படங்களை பார்த்துவிட்டு நாம் இந்தியர் என்றும், திராவிட மேடைகளை பார்த்துவிட்டு நாம் திராவிடர் என்றும் குழம்பிக் கொண்டிருந்தது.

வன்னிக் காட்டில் கொழுந்து விட்டு எரிந்த ஒரு தீப்பந்தத்தில் உரசப்பட்டு, ஒரு அசலான எரியும் தீக்குச்சி போல அவன் வந்தான். இன அழிவு கோபத்தால் தகித்துக் கொண்டிருந்த ஆன்மாக்களில் சென்று சேர்ந்தான். பற்றி எரிந்தது வனம்.

வெந்து தணிந்தது காடு.

அண்ணன் சீமான் என்கின்ற அந்த அதி மனிதரின் இரு காட்சிகள்.

🛑

ஒரு காட்சி.

வெயிலேறி எரிந்து கொண்டிருந்த அந்தக் கனல் பொழுதில் நாங்கள் சென்று சேர்ந்த போது ஒரு வயதான முதியவரை தவிர அங்கே யாரும் இல்லை.

அவருக்குப் பின்னால் ஒரு சரிந்த லிங்கம் சாய்ந்து கிடந்தது.

சிறிது சலசலப்புடன் கூடி வந்த கூட்டத்தின் நடுவில் நின்ற அண்ணன் சரிந்து கிடந்த லிங்கத்தை பார்த்துவிட்டு அப்படியே உறைந்து நின்றார். ஒரு தீவிர மௌனத்தின் சுழல் அங்கே மெதுவாக சுழலத் தொடங்கியது.

அண்ணன் முகத்தில் உறைந்திருந்த உணர்ச்சி அலைகளை கண்ட அந்த இளைஞர் கூட்டமும் மௌனமாகிவிட்டது. அண்ணனின் கண்கள் கலங்கத் தொடங்கி இருந்தன. ‘ஏண்டா இப்படி..’ என்பது போல எங்கள் முகத்தை அண்ணன் பெரும் வலியோடு உற்று நோக்கினார்.

அங்கே இருந்த ஒரு பழைய கீற்று கொட்டகைக்கு கீழே வரலாற்றின் புகழ் வெளிச்சம் அனைத்தையும் ஒருங்கே அடைந்த தமிழ் இனத்தின் பேரொளி ஒன்று புதைந்து கிடக்கிறது. பெருவுடையார் கோவில் கண்ட பெருமை ஒன்று சிதைந்து கிடக்கிறது.

மாமன்னர் ராஜராஜ சோழன் அந்த உடையாளூர் மண்ணில் தான்

சிதிலம் அடைந்த லிங்கமாய் உடைந்து கிடந்தார்

வந்தவர் போனவருக்கெல்லாம் கடற்கரையில் கல்லறை கட்டி சில்லறை வீசும் ஒரு இனத்தின் மக்கள் தன் சொந்தவனை, உலகை ஆண்ட மன்னவனை உதறித் தள்ளிய வரலாற்றின் அவலக் காட்சி அது.

அந்த வயதான முதியவர் அண்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு தழுதழுக்க “உன் பாட்டனை காப்பாற்று, அவன் புகழ் போற்ற ஏதேனும் செய்..”

என்றார்.

அருகில் இருந்த நாங்கள் அரசின் கவனத்தை ஈர்க்க ஏதேனும் பெரிய போராட்டம் செய்வோம் என்று சொன்னோம்.

கண்கள் சிவந்து கலங்கிக் கொண்டிருந்த அண்ணன் தீர்க்கமாய் நிமிர்ந்து பார்த்தார்.

“இந்த திராவிடத் திருடர்கள் யாரும் என் பாட்டனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்.எந்த நினைவு மண்டபம் கட்ட வேண்டாம். கட்டவும் கூடாது. மீறி கட்டினார்கள் என்றால்.. ஒரு நாள் நான் ஆட்சிக்கு வருவேன். இவர்கள் கட்டியதை இடித்துவிட்டு நான் மாபெரும் நினைவாலயத்தை என் புலிக்கொடி பாட்டனுக்காக எழுப்புவேன்.

பல நூறு ஆண்டுகள் படுத்து கிடந்தவன் சில ஆண்டுகள் பொறுத்திருக்க மாட்டானா..??”

என்று சினம் கொண்டு கேட்ட அவரது உரம் மிக்க சொற்கள் கேட்டு புவியாழத்தில் புதைந்து கிடந்த அரசனுக்கு அரசன் அருண்மொழிச் சோழன் பெருமூச்செறிந்தான். சாய்ந்து கிடந்த லிங்கம் கூட சற்று நிமிர்ந்ததாய் ஒரு தோற்றம்.

.🟥

மற்றொரு காட்சி.

காவிரி செல்வன் விக்னேஷ் தீக்குளித்து விட்டான். அண்ணன் பதைபதைத்து ஓடி வந்து கொண்டிருக்கிறார். தம்பி விக்னேஷ் தாங்கி பிடித்திருந்த காவலர் தம்பி கண் மூடி விடாதே உன் தலைவர் வந்து கொண்டிருக்கிறார் என சொல்ல.. நெருப்பின் தழல் மேவிக் கிடந்த தம்பி விக்னேஷ் சிரமப்பட்டு விழிகளை திறந்தான். அவர் என் தலைவர் அல்ல. என் அண்ணன். என்று சொல்லிவிட்டு இறுதியாக விழி மூடினான்.

கண்கள் முழுக்க கண்ணீரோடு அந்த மருத்துவமனையின் வாசலில் நின்று கொண்டே இருந்த அண்ணனை பின்னிரவில் வாகனத்தில் சென்று அமர சொன்னோம். மறுத்துவிட்டு அவனது பெற்றோர்கள் வரும் வரை கலங்கிய கண்களோடு வலி தாங்கி நின்று கொண்டே இருந்தார். அவனது பெற்றோர்கள் முன் தம்பியை பறி கொடுத்துவிட்டு

கலங்கி நின்ற அவரின் தவிப்பு

எதனாலும் ஆற்றுப்படுத்த முடியாதது.

அன்று அவர் சிந்திய கண்ணீர் துளிகள் தாய்மையின் சாயல் கொண்டவை.

❤️

சிந்தித்துப் பாருங்கள்.

மரணப் படுக்கையிலும் கூட தன் அண்ணன் என்று ஒருவரை நினைவு படுத்தி அழைக்க முடிகிற தீவிரத்தை அண்ணனிடம் உள்ள

எது ஒருவனுக்கு தருகிறது..???

அண்ணன் என்பது வெறும் சொல்லா.. அல்லது உறவு முறையா.. அல்லது கூப்பிடும் வழக்கமா.. அல்லது மாண்போடு அழைக்கும் பண்பாடா… என்றால் இவை எதுவுமே இல்லை.

அது ஒரு வகையான தனித்துவம்.

வெவ்வேறு கருப்பைகளில் தோன்றினாலும் தொன்மத்தில் தோன்றிய, ஆதி இனத்தின் மரபணுவில் அழிவின் அழுத்தம் விளைவித்த

ஒழுங்கினால் நேர்ந்து விட்டிருக்கிற பெரும் அன்பின் அலைவரிசை. எதையும் அந்த மனிதனுக்காக இழக்கலாம் என துணிகிற மனநிலையை உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருக்கிற அந்த மரபணு தான் தீர்மானிக்கிறது.

அவரது மொழி கேட்டால் நம் உயிர் விழி அசைகிறதே.. அவர் வழி காட்டினால் நம் முன்னால் லட்சியப் பாதை ஒன்று விரிகிறதே..

என்றெல்லாம் நாம் வியந்து கொண்டிருக்கும் போதே, உயிர் வாழும் இறுதித் துளி வரை இணைந்திருக்கும் பேரன்பின் மொழியை அவர் நம் இதயத்தில் எழுதிக் கொண்டிருப்பார்.

அவரது மனநிலை அது.

கொஞ்சமும் ஒப்பனை இல்லாத, முன் தயாரிப்பு இல்லாத , அசலான அவரது இயல்பு அது. அந்த இயல்புதான் நாம் தமிழர் என்கின்ற மகத்தான குடும்பத்தை இயக்கிக் கொண்டிருக்கிற பேராற்றல்.

அந்தப் பேராற்றல் தான் ஒரு தேசிய இனத்தை விடுதலைப் பெற வைக்க கூடிய வலிமையாய், அவரது இயல்பாய் இணைந்திருப்பது காலக் கணிதத்தின் அதிசயமான கணக்கு தான்.

காலம் தனக்கான தேர்வுகளை அதுவாகவே செய்யும் என்பார்கள். முதல்முறையாக காலத்தை தானே தேர்ந்தெடுத்து தன் வரலாற்றை தன் இனத்திற்கான விடுதலை வரலாறாக மாற்ற உழைத்து வருகிற அண்ணன் நமக்காக மட்டுமல்ல, இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவருக்காகவும் பிறந்தவர்.

❤️

விடியலை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்ற இந்த இரவில் உன்மத்த அன்போடு என் உன்னத அண்ணனை கட்டி அணைக்கிறேன்.

அண்ணா.. நீங்கள் பிறந்ததால் நாங்கள் சிறந்தோம்.

உணர்ச்சி நிறைந்த

நன்றியும்,

முத்த வாழ்த்துகளும்.

#அடுத்து_நாமதான்ணே

❤️
❤️
❤️

பறத்தல் பற்றிய குறிப்புகள்

உன்னை பறவை

என்று அழைப்பது

எனக்கு பிடித்தம்.

நினைத்த நொடியில்

வெட்ட வெளியில்

உன்னால்

எங்கும் பறந்து விட

முடிகிறது என்பதோடு

மட்டுமில்லாமல்

எப்போதும் எனக்கென

தனித்துவமாக

தயாரிக்கப்பட்ட

சொற்களால் வேய்ந்த

சிறகுகளை

என் தோளில் எளிதில்

பொருந்துகிறாய்.

நம் முன்

மேகங்கள் அலையாத

நிர்மூலமான

வெள்ளை வானம்

யாருமின்றி

வரையறை அன்றி

விரிந்து கிடக்கிறது.

கால இசை

தவறிய ஒரு கணத்தில்

திசைகளற்ற வெளியில்

இலக்கினை அழித்து

இலேசாகி பறக்கத்

தொடங்கிறோம்.

நம் அடிவயிறு

குளிரும்போது

பாசிகள் அடர்ந்த

வனக்குளத்தை நாம்

கடந்தோம்.

நம் பின்னந்தலை

வியர்க்கும் போது

மணல் காட்டில்

ஓங்கி உயர்ந்த

ஒற்றை பனையை

அப்போதுதான்

கடந்திருப்போம்.

நீலம் பாவித்த

கடலை கடக்கும்

போது என்

தலைக்கு மேலே

நீ கண் சொருகி

மிதந்து கொண்டு

இருந்தாய்.

சட்டென திசைமாறி

அந்தரத்திலிருந்து

கடல் நோக்கி

கவிழ்ந்து

சல்லென கிழிறிங்கி

நீலப் பரப்பினை

முத்த மிட்டு

நீ

மேலெழும்பிய

நொடியில் தான்

நான் உணர்ந்தேன்.

உன் கூர்

அலகினில்

சிக்கிய மீன்

நான் தான்

என்று.

இந்து தமிழ் திசைக்கு எதிர்வினை

இந்து தமிழ் திசை‌ இதழில் “ஆண் மனதின் கேவலம்” என்ற தலைப்பில் பிருந்தா சீனிவாசன் என்பவர் எழுதிய பதிவு ஒன்றினை காண நேர்ந்தது.

மிகவும் ஒரு தலைப்பட்சமான பார்வை கோளாறு நிரம்பிய அந்தப் பதிவு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களை ஆணாதிக்கம் உடையவராக சித்தரிக்க முயன்றது. குறிப்பாக அண்ணன் சீமான் எதிர்கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறிய சில வார்த்தைகளை கருப்பொருளாக வைத்துக் கொண்டு பிருந்தா அவர்கள் இதழியலாளருகளுக்குரிய ஊடக அறத்தை தன் சுய கண்ணோட்டத்திற்காக மீறி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது.

அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு பெண்ணைப் பற்றி அவரது மனைவியார் சொன்னதாக கூறிய கருத்து என்பது ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரானது என காட்டுவது மிக மோசமானது. அந்தக் கருத்து குறிப்பிட்ட பெண்ணின் குணாதிசயத்தை விமர்சித்து எழுந்த கருத்து. பொய்யான அவதூறுகள் மூலம் தொடர்ந்து ஒருவரை பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிற ஒரு பெண்ணை அவரின் இயல்பை பற்றி எழுந்த விமர்சனம் அது. அந்த விமர்சனத்தை ஒட்டுமொத்த பெண் இனத்திற்கானதாக மாற்றுகின்ற திசை திருப்புகிற “பணி”(?)யை யார் பிருந்தாவிடம் வழங்கியது என்பதை பிருந்தா மட்டுமே அறிவார்.

இப்போதுதான் நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேறி உள்ள நிலையில்‌ சென்ற பாராளுமன்ற தேர்தலின் போதே நாம் தமிழர் கட்சி இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதன் முதலாக பெண்களுக்கு தேர்தலில் 50 விழுக்காடு வாய்ப்பளித்து வரலாற்றில் இடம் பிடித்த அமைப்பு. அடுத்து வந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும்‌ 234 தொகுதிகளில் சரி பாதி பெண்களுக்கு இடம் அளித்து பெண்ணுரிமையை தன் உயிர் கொள்கையாக அண்ணன் சீமான் செயலில் செய்து காட்டினார்.

இந்த துணிச்சலான நடவடிக்கை இந்திய சமூக வரலாற்றில் ஒரு மைல் கல். தேர்தல் வெற்றி தோல்வியை பற்றி கணக்கில் கொள்ளாமல் சமூக மாற்றத்தை பற்றி ஆழமாக சிந்திக்கும், பிருந்தா போன்றவர்களால் கேவலமானதாக பார்க்கப்படுகின்ற ஒரு உன்னத ஆண் மனது தான் இதை நடைமுறைப்படுத்தியது.

ஆணுக்குப் பெண் சமம் அல்ல, ஆணும் பெண்ணும் சமம் என்பதை தன் அமைப்பின் தத்துவமாக அண்ணன் சீமான் தான் பேசும் இடங்களில் எல்லாம் பதிவு செய்து வருகிறார்.

அண்ணன் சீமான் அவர்களுக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் கழித்து இரண்டு பிள்ளைகளுக்கு அவர் தந்தையான பிறகு “ஒரு காலத்தில் அவர் என்னை காதலித்தார் என்னை ஏமாற்றி விட்டார்..” என்றெல்லாம் ஒரு நடிகை பேசுவது இவர்களுக்கு பெண்ணுரிமையாகப்பட்டால் பிருந்தா போன்றவர்கள் தான் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்.

இதே போல ஒரு காலத்தில் காதலிக்கப்பட்டவர்கள் மீது காதலித்தவர்கள் எல்லாம் குற்றம் சாட்டி வீதிக்கு வந்து நின்று சண்டை போடும் பட்சத்தில் இங்கே யாரால் நிம்மதியாக இருக்க முடியும்..??

காதல் என்பது ஒரு காலத்தின் உணர்ச்சி. அது சிலருக்கு திருமணத்தில் முடிகிறது. பலருக்கு நினைவாக தேங்கி விடுகிறது. மேலும் கால ஓட்டத்தில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகும் மனநிலை காதல் என்ற பெயரில் தான் தேர்வு செய்யும் இணையை பெரும்பாலும் மறு பரிசீலனை செய்து மாற்றுவதற்கான சூழலையும் ஏற்படுத்துகிறது.

அந்த விமர்சனம் கூட குறிப்பிட்டு இத்தனை பெண்களுக்கு மத்தியில் அந்தப் பெண்ணை ஏன் நீ விரும்பினாய் என்கிற கேள்விக்கு இது போன்ற குணாதிசயம் உள்ள பெண்ணை ஏன் விரும்பினாய் என்பதுதான் பொருளே ஒழிய ஒட்டுமொத்த பெண்ணினம் இங்கே எங்கே வந்தது..??

தனிப்பட்ட விருப்பு வெறுப்பன்றி ஒரு செய்தியை அணுக முடியாதவர்கள் பத்திரிக்கை துறையில் பணியாற்றும்போது நேருகின்ற விபத்து இது. சொல்லப்போனால் குறிப்பிட்ட அந்த நடிகை மீதும் அவருடன் இணைந்து தற்போது பிரிந்து இருக்கின்ற இன்னொரு பெண்ணின் மீதும் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகிறார்கள் என நாடெங்கிலும் அதிகம் புகார் அளித்தது பெண்கள் தான், பெண்ணினத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

பெண்ணுரிமை என்பது ஒரு ஆணை முன்னிறுத்தி பொய்களை உள்ளடக்கிய அவதூறு பரப்பி அதன் மூலம் நிலைநாட்டப்படுவதல்ல. மாறாக வரலாற்றில் காலம் காலமாக தாழ்த்தி ஒடுக்கப்பட்டு சமையலறையிலும் படுக்கை அறையிலும் வீழ்த்தப்பட்டு கிடக்கிற பெண்களை வீதிக்கு அழைத்து வந்து அதிகாரத்தை நோக்கிய பயணத்தில் அவர்களை ஈடுபடுத்துவது.

ஒருபோதும் பெண்களால் மட்டும் பெண்ணுரிமையை ஈட்டி விட முடியாது. பெண்களை சரிக்கு சமமாக மதிக்கின்ற அண்ணன் சீமான் போன்ற மிகவும் பக்குவமான சுதந்திர உணர்ச்சி நிரம்பிய ஆண் மனது அதற்குத் தேவையாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ஆண் மனது கேவலம் என அவதூறு பேசும் பிருந்தா போன்றவர்கள் தான் விடுதலைக்கும் பெண்ணுரிமைக்கும் எதிரானவர்கள்.

தமிழ் முழக்க நினைவுகள்

தமிழ் முழக்கம் என் வாழ்வில் செலுத்திய ஆதிக்கம் கொஞ்சநஞ்சம் அல்ல. எழுத்து உலகில் மிக இளையவனான என்னை கண்டெடுத்து தன் பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராக நியமித்து ஒவ்வொரு இதழிலும் என் எழுத்துக்களை பதிவேற்றம் செய்து என்னை உருவாக்கிய பெருமகன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது என்ற திருமகன்.

நாகப்பட்டினத்தில் நடந்த‌ நாம் தமிழர் கட்சியின் மாபெரும் இளைஞர் பாசறை தொடக்க மாநாட்டில் எங்களை மேடையேற்ற அவர் உழைத்த உழைப்பு இன்னும் என் கண்களிலே நிற்கிறது.

எதற்கும் அயராத மனிதன். அவரது உருவம் போல அவரது நம்பிக்கையும் மகத்தானது. எதுவுமே இல்லாத அடையாளமற்ற எளியவர்களை அவராகவே தேர்ந்தெடுத்து அவர்களை உயரச் செய்கிற குணம் நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்..??

அவருக்கு வாய்த்தது. அண்ணன் சீமான் தொடங்கி இன்னும் எத்தனையோ என்னை போன்ற எளியவர்களுக்கு உதவி செய்து மேல் ஏற்றிய அவரது கரங்கள் பொற்கரங்கள்.

எதிலும் அவர் பிரம்மாண்டம் தான். விருந்து வைத்தாலும் சரி.. கூட்டம் நடத்தினாலும் சரி, அவருக்கென்று ஒரு மகத்தான பிரம்மாண்டமான திட்டம் இருக்கும். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அவர் இரவும் பகலும் ஆக உழைப்பதில் தான் அவர் நிறைவடைவார்.

ஒரு முறை தமிழ் முழக்கம் இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரை காரணமாக கடுமையான எதிர்ப்பு தமிழகம் எங்கும் ஏற்பட்டு அவரது பத்திரிக்கை அலுவலகமே தாக்கப்பட்ட போது, அதைப்பற்றி கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அடுத்த மாதமே எனது அடுத்த கட்டுரையை பதிவேற்றி அதுவே அட்டைப்படமாக மாற்றிக் காட்டிய அந்த நம்பிக்கையை நான் எங்கே கண்டடைவேன்..??

அண்ணன் சீமான் சொற்கள் தான் அவருக்கு வேத மொழிகள். தன் மருமகனின் சொல்லைத் தாண்டி அவருக்கு எல்லை ஏதுமில்லை. சீமான் என்ற மனிதனுக்கு தாய் மாமனாக மாறியதால் உலகம் எங்கும் வாழக்கூடிய இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உயிர் மாமனாக மாறியவர் அவர்.

குறிப்பாக என்னை செதுக்கி, நம்பிக்கை ஊட்டி இயங்க வைத்ததில் அவருடைய பங்கு மிக மிகப் பெரிது. அவரது நினைவுகளை இன்னும் மனதிற்குள் சுமந்து கொண்டு தான் அதிலிருந்து தான் இயங்குவதற்கான ஆற்றலை எனக்குள்ளாக நான் தயாரித்து வருகிறேன்.

இறுதியாக தன் வாழ்நாளில்‌ அவர் கலந்து கொண்ட கடைசி கலந்தாய்வு கூட்டம் என் வீட்டு மாடியில் தான் நடந்தது. அப்போதே அவருக்கு கடுமையான காய்ச்சல் தொடங்கி இருந்தது. வாயெல்லாம் கசக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நிலவேம்பு கசாயம் எடுத்து வந்த என் தாயிடம் வேண்டாம் என மறுத்து சர்க்கரை நிறைய போட்டு காப்பி வேண்டும் எனக் கேட்டார். கூட்டத்தில் நானும் அண்ணன் ஹுமாயூன் உள்ளிடவர்களும் கலந்து கொண்ட போது துணிச்சலான பல முடிவுகளை அவர் தயங்காமல் எடுத்தார்.

அவரை என் வாழ்வில் சந்தித்ததும் அவரால் நான் சந்தித்ததும் நிறைய இருக்கின்றன. முடிவாக ஒன்றே ஒன்று. அவரால் நான் உருவாக்கப்பட்டு இருக்கிறேன். தன் மருமகன் சீமானை அவர் நேசித்தார் என்பது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அது எந்த அளவு என்றால் தன் வாழ்வின் இறுதி நொடியில் கூட கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவிற்கு உயிரளவு என்பது அவரது மறைவிற்குப் பிறகு தான் புரிந்தது.

அந்தப் பற்றுறுதி தான் அந்த இலட்சிய விருப்பு தான் எங்களுக்கு அவர் விட்டு சென்று இருக்கின்ற இறுதி செய்தி.

அதை வாழ்நாள் எல்லாம் நாங்கள் கடைபிடிக்க அவர் தெய்வமாக நின்று கருணையின் குடை பிடிக்கட்டும்..

கண்கள் கலங்க என் ஆசானுக்கு கண்ணீர் வணக்கம்.

மணி செந்தில்.

அண்ணனின் அன்பு.

ஆசிரியர் என்கிற தோணி.

ஆசிரியர் என்றால் என்ன என்கிற எளிய கேள்விக்கு, “கற்பித்தல் என்ற முறையில் மாணவர்களுக்கு அறிவு திறன் மற்றும் நல் ஒழுக்கத்தை பெற உதவுபவர்..” என விக்கிப்பீடியா கூறுகிறது. இதில் அறிவு, திறன் போன்றவை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுபவை என்றாலும், நல் ஒழுக்கம் என்பது வகுப்பறையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.

ஒரு சிறந்த ஆசிரியரை மாணவன் தன் வாழ்நாளில் மறப்பதில்லை.

ஒரு கல்லூரி பேராசிரியரின் மகன் என்கின்ற முறையில் என் தந்தையை சந்திக்க வருகிற எத்தனையோ மாணவர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை கண் பார்வை தெரியாத மாணவர் ஒருவர் தனது திருமண பத்திரிக்கை வைப்பதற்காக தன் ஆசிரியரான என் அப்பாவை தேடிக்கொண்டு என் வீட்டிற்கு வந்தார்.

அவர் கல்லூரி படிப்பு முடித்து ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. என் அப்பா ஏதோ வேலை நிமித்தம் வெளியே போயிருந்த நேரம் அது. அவர் என் அலுவலகத்தில் என் தந்தைக்காக காத்திருந்தார். மெதுவாக பேச்சு கொடுத்து பார்த்தேன். தன்னைப் பார்வையற்றவர் என எல்லோரும் பரிதாபமாக பார்த்த போது அவரது ஆசிரியரான என் தந்தை தான் அவருக்கு நம்பிக்கை கொடுத்ததாக சொன்னார்.

இந்த வாழ்வில் நாம் கைவிடப்படுகின்ற தருணங்களில் எல்லாம் நாம் தேடி அலைவது நம்பிக்கை மிகுந்த சொற்கள் தானே. நம் மீது மிகுந்த அக்கறை கொண்ட நபரின் ஆன்மாவிலிருந்து வருகின்ற சொற்கள் தரும் நம்பிக்கைதான் நட்டாற்றில் கைவிடப்பட்ட நம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போகிறது.தன் ஆசிரியரை அந்தப் பார்வையற்றவர் நினைவு கூறும் போதெல்லாம் சற்றே உணர்ச்சிவசப்பட்டார் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

இன்னும் ஆழமாக அவர் மனதில் என் தந்தையின் உருவம் எப்படி இருக்கும் என நினைத்து வைத்திருப்பதாக சொன்னார். அதற்கு அடுத்ததாக அவர் சொன்னது தான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.

“பார்வைத்திறன் உள்ள உங்கள் விழிகளை காட்டிலும் இன்னும் அதி துல்லியமாக என் ஆசிரியரின் உருவம் என் ஆழ் மனதில் வரையப்பட்டிருக்கிறது..” என்றார் அவர்.

எதையும் வெறும் விழிகளால் பார்ப்பதை விட மனதால் பார்ப்பது வலிமையானது தானே..

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே என் தந்தையார் வந்து விட்டார். என் தந்தை காலடி சத்தம் கேட்டவுடன், அதுவரை தன்னைக் கடந்த எந்த காலடி சத்தத்திற்கும் எழுந்து நிற்காத அந்தப் பார்வையற்ற மாணவர் எழுந்து நின்றார். தன் ஆசிரியரின் காலடி ஒலி அவருக்கு அவ்வளவு பரிச்சயமாக இருந்தது.

என் தந்தை வந்தவுடன் தன் மாணவனின் கரத்தை இறுக பற்றிக் கொண்டார். சில நொடிகள் அந்த இடம் அமைதியாக இருந்தது. என் தந்தைக்கு அது ஒரு உணர்வுபூர்வமான தருணம். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணியில் இருந்தமைக்கான உச்சகட்ட அங்கீகாரத்தில் அவர் மிதந்து கொண்டு இருந்தார் என்பதை நெகிழ்ந்து கலங்கிய அவரது கண்கள் மூலம் நான் கண்டு கொண்டேன்.

…..

மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் எனது இயற்பியல் ஆசிரியர் ஜெகதீசன். வழக்கமான பாட கற்பித்தல் முறையை தூக்கி எறிந்து விட்டு உரையாடல்கள் மூலமாக மாணவர்களுக்கும் ஆசிரியருக்குமான கல்வி அமைய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தவர்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.” என்கிற குறளை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருமுறை கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஒரு மாணவனுக்காக தலைமை ஆசிரியரிடம் சென்று சண்டை போட்டுவிட்டு அவரது மேசையில் தன் மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு வந்து விட்டார்.அந்த மாணவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தலைமை ஆசிரியர் பொறுமை காக்க, மறுநாள் அந்த மாணவன் எங்கேயோ பணம் ஏற்பாடு செய்து கட்டணத்தை செலுத்தி விட்டான்.

நன்றி சொல்வதற்காக ஜெகதீசன் சாரை சந்திக்க வந்த அந்த மாணவன் கலங்கிக் கொண்டே .‌”எனக்காக மோதிரத்தை கொடுத்து விட்டீர்களே சார்..” என சொல்ல, “அந்த மோதிரம் தங்கம் என்ற உலோகத்தால் ஆனது. உனது படிப்பு அந்த உலோகத்தை விட மதிப்பு மிகுந்தது..”. எனக் கூறிய அவரது சொற்கள் இன்னும் எனக்கு நினைவில் நிற்கின்றன.

மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் எனது தமிழாசிரியர் விஜயராகவன். மாணவர்களை தனியார் நிறுவனங்கள் வெளியிடும் நோட்ஸ் வாங்குங்கள் என சொல்லும் ஆசிரியர்களுக்கு மத்தியில் தான் நடத்தும் பாடங்களிலிருந்து மாணவர்களுக்கான நோட்ஸ் எனப்படும் பாடப் குறிப்புகளை தயாரித்து எழுத வைப்பார். மிக சுவாரசியமாக வகுப்புகளை வகுப்பறையில் அரசியல் பேசுவார். தேர்தல் முறை மூலம் வகுப்பு தலைவனை தேர்ந்தெடுப்பார்.

அந்தக் காலகட்டத்தில் போலியோ பாதிக்கப்பட்ட என் கால்களுக்கு உலோகத்தில் ஆன காலிபர் அணிந்திருப்பேன். என் உடல் சிரமத்தால் நான் வகுப்பு தலைவனாக மாற மறுத்தபோது, அந்த முறை என்னை வலுக்கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்து, வகுப்பு தலைவன் ஆக்கினார். இதற்கு எதிரே போட்டியிடும் மாணவனை அழைத்து சொல்லி இருந்தால் அவன் போட்டியிலிருந்து விலகி இருப்பான் தான். இது குறித்து கேட்ட போது, ” நீ போட்டி போட்டு வெல்வது தான் உனக்கான தகுதி. அது கருணையால் எப்போதும் கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இரு.‌” என்று சொன்னார்.

பள்ளி முடிந்தவுடன் வகுப்பறையில் அந்த காலிப்பரை சரி செய்து கொண்டு நான் வெளியே நடந்து வரும் வரையில் என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டு நடந்து வருவார். நான் எழுதும் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் அவரது பிச்சை என இந்த நொடியில் நினைத்து நெகிழ்கிறேன்.

அதேபோல் எனது மூத்த வழக்கறிஞர் பலராமன். எந்தத் தருணத்திலும் அவர் என்னை விட்டுக் கொடுத்தது இல்லை. வாழ்க்கையின் அனைத்து விதமான பிழைகளையும் செய்துவிட்டு ஒரு நாள் மாலையில் அவர் வீட்டுத் திண்ணையில் படுத்து இருந்த போது, என்னை உள்ளே அழைத்துச் சென்று அவர் படுக்கையில் படுக்க வைத்தார். “நல்லா தூங்குடா.. எல்லாம் சரியாயிடும்.” என சொல்லிவிட்டு போனபோது என் கண்கள் நிறைந்து இருந்தன. ஏதோ ஒரு தருணத்தில் தூங்கி எழுந்த போது நள்ளிரவாகி இருந்தது. நான் எழுந்த சத்தம் கேட்டு விழித்த அவர் தனது இளம் மனைவியை அழைத்து எனக்கு கோதுமை தோசை சுட்டுத்தர சொன்னார். அக்கால கட்டத்தில் எல்லாராலும் கைவிடப்பட்ட நான் அன்றைய இரவில் அந்த கோதுமை தோசையால் தான் உயிர்ப்பித்தேன்.

“எல்லாம் சரியாகிவிடும்..” என அவரது சொற்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

….

அண்ணன் சீமான். வெறும் சொற்களால், அழைத்தலால் மட்டும் அவர் அண்ணனாக இருந்து விடுவதில்லை என்பதுதான் அவரின் முக்கியத்துவம். கட்சியிலே இணைகின்ற ஒரு எளிய தம்பிக்கு அண்ணனாக மாறுகிற அந்த தருணம் உள்ளொளி நிறைந்த உணர்வுபூர்வமானது. தம்பிக்கு மட்டும் அண்ணன் அல்ல. அவனது பெற்றோர்களுக்கு அவர் தான் மூத்த மகன். அவனது உறவினர் அனைவருக்கும் அவரும் உறவினர். நெகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்ட சிக்கலான இந்த உணர்ச்சி முடிச்சினில் தான் நாம் தமிழர் என்கின்ற மாபெரும் அமைப்பு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

” நாளும் பல நற்செய்திகள் ” என்று அவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு கருத்தும் ஒவ்வொரு நாளையும் புதிதாக்குபவை. எல்லோரையும் வாசிக்க சொல்லும் அவர் தன் மேடையை மாபெரும் வகுப்பறையாக மாற்றுகின்ற மாபெரும் ஆசிரியர். அந்த வகுப்பறையில் அவர் அரசியல் சூழலியல் பொருளியல் என தொடாத பாடங்களே இல்லை. தலைப்பை சார்ந்து பேசுகிற ஒரே ஒரு அரசியல் தலைவர் இன்று தமிழ்நாட்டில் அவர் மட்டும்தான்.

தனிப்பட்ட வாழ்வில் நிறைய துரோகங்கள் முதுகுக்கு பின்னால் நடந்து விட்டன என உணர்ந்த ஒரு இரவில் அண்ணன் சீமானுக்கு என் மனவலி தாங்காமல் அழைத்தேன்.

அவரிடம் எதுவும் என்னால் சொல்ல முடியவில்லை. மெல்ல விசும்பிக் கொண்டே இருந்தேன்.

“என்ன ஆச்சுடா..” என்று கேட்டார் அண்ணன். “துரோகம்னே .. ” என்று கலங்கியவாறு சொன்ன போது அண்ணன் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார். “நம் தலைவர் என்றால் சுட்டு விட்டுப் போய் விடுவார். நம்மால் அப்படி செய்ய முடியாது. நாம் விட்டுவிட்டு போய்விடுவோம்..” என்று அவர் மிகுந்த பக்குவத்துடன் சொன்னதைத்தான் என் வாழ்நாள் பாடமாக கடைபிடித்து வருகிறேன்.

எல்லாவற்றையும் கடப்பது என்பது வாழ்வில் மிக மிக முக்கியமானது. அதனால்தான் வாழ்க்கையை பெரும் நதிக்கு ஒப்பிடுகிறார்கள். துயரங்களும் ,துன்பங்களும் வெள்ளப் பெருக்காக பெருக்கெடுத்து ஓடும் இந்த வாழ்வென்ற நதியை கடப்பதற்கு நமக்கு கிடைத்த தோணிகள் தான் நம் ஆசிரியர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் தான் நம்மை வழி நடத்துகிறார்கள். வழி தவறும் கணங்களில் அவர்களது சொற்கள் நமக்கு திசைகாட்டிகளாக மாறுகின்றன.

“அறிவு என்பது ஏதோ ஒன்றை கற்றுக் கொள்வது. ஞானம் என்பது ஏதோ ஒன்றை கைவிடுவது..” என்கிற ஜென் தத்துவம் ஒன்று உண்டு.

அறிவையும் ஞானத்தையும் ஒரே நேரத்தில் அடைவதற்கு இருக்கின்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

அது நம் ஆசிரியரின் கண்கள். அதில் சரணடைந்தோர் யாரும் சங்கடப்படுவதில்லை.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

Page 6 of 57

Powered by WordPress & Theme by Anders Norén