பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: கவிதைகள் Page 3 of 8

கடவுள் மரித்த நிலம்..


—-+-+-+++++++++

கரை ஒதுங்கிய
மீனின் வயிற்றில்
குழந்தையின்
கண் ஒன்று
இமைக்காமல்..

கண்ணை
உற்றுப்பார்த்தோர்
கலங்கித்தான்
போனார்கள்.

அசையாத
விழியில் உறைந்த
காட்சிகள் அசைந்துக்
கொண்டிருந்தன..

பிஸ்கட் தின்றவாறே
எங்கோ வெறித்திருந்த
சிறுவனின் பார்வை.

இடுப்பிற்கு கீழே
வெடிக்குண்டால்
சிதைக்கப்பட்ட
பெண்ணொருத்தியின்
நிர்வாண உடல்

நெஞ்சோடு தாய் மண்ணை
இறுக்கிப் பிடித்த வாறே
இறந்திருந்த போராளியின்
இறுக மூடிய விரல்கள்..

பின்னந்தலையில்
சுடப்பட்ட தோட்டாவால்
முன்னால் சிந்திய
உதிரத்தை பார்த்த
விழிகள்..

கைவிலங்கிடப்பட்ட
சீருடைப் பெண்ணின்
குனிந்த தலை..

நிராதரவாய்
காற்றில்
அலையும்
சரணடைய
உயர்ந்த கரங்கள்.

கந்தக
மேனியோடு
கருகிய
ஒற்றை பனை.

போதும்..போதும்.

காண சகிக்காது
பார்வையை
விலக்கிய போது..

தூரத்தில்
காயங்களோடு
கரை ஒதுங்கி
பிணமாகக்
கிடந்தார்
கடவுள்.

ஏழு புவனம்  வென்றவனின் பாடல்..

 

தீர்மானித்து விட்டேன்.

உன்னை நான் கண்டு
கொள்ளப் போவதில்லை.

சொல்லப்போனால்
நாம் இனி
சந்திக்கக்கூட
போவதில்லை.

நான் உள்ளே நுழைகிறேன்.

நீ கால் மீது
கால் போட்டு
அமர்ந்திருக்கிறாய்.

உன்னை ஏறெடுத்துக் கூட
நான் பார்க்கவில்லை.

நீ ஒரு ராஜ விழிகளுடன்
ஒரு அலட்சிய பார்வை
பார்க்கிறாய்.

எதனாலும் மாறாத
உறைந்து போன
என் விழிகளில்
நேசத்தின் சாயல்
படராது கவனம்
கொள்கிறேன்.

நான் எந்த சலசலப்பிற்கும் அஞ்சப்போவதில்லை.

ஆனாலும்
ஏதோ ஒரு நொடி
அசைவில்
உன் ஜிமிக்கிகள்
ஆடிக்கொண்டிருந்தன..

நான் மேல்புற
விதானத்தை
பார்ப்பதாக
பாவனை செய்கிறேன்.

என் கழுத்தோரம்
மேய்ந்து
கொண்டிருக்கும்
உன் விழிகளை
தூசியென
தட்டி விடுகிறேன்.

உன்
அருகில் உள்ளவரை
உற்றுப்பார்த்து
பதிலளிக்கிறேன்.

நீ முணுமுணுத்தது நிச்சயம்
ஒரு இளையராஜா பாடல் தான்.

நான் வேக வேகமாக
அவ்விடத்தை விட்டு நகர்கிறேன்.

நெற்றியில் தவழுகிற
ஒற்றை முடியை நாசுக்காக நீ நகர்த்துகிறாய்.

வெளியே வந்து பெருமூச்சு
விடுகிறேன்.

இருந்தும் லேசாக
புன்னகைக்கிறேன்.

உள்ளே
இந்நொடியில்
மெலிதாய் நீ சிரிக்கிறாய்.

இப்போது கூட
நீ ஒரு இளையராஜா பாடலை
நிச்சயம் நினைத்திருப்பாய்.

ஏனென்றால் அதே பாடலை
தான் நானும் நினைத்தேன்..

 

[youtube]https://youtu.be/YYQzBQ5axec[/youtube]

சூரியகாந்திகள் மலராத நிலம் .

குழந்தைகளை
வேட்டையாடும்
சமூகம்
ஓநாய்களுக்கு
உரியவை.

பால் நிலாவின்
கதைப்பக்கங்களில்
நகரும் பிஞ்சு
விரல்களில்
உறைந்திருக்கும்
உதிரத்துளிகளை
நீண்டு சுழலும்
நாவினால் எட்டி
சுவைக்கின்றன
ஓநாய்கள்..

தனித்திருக்கும்
குழந்தைகளின் மீது
சாத்தானின் நிழல்
கவிய தொடங்கும்
தருணங்கள்
இப்பொதெல்லாம்
எல்லா நொடிகளிலும்
நிகழ தொடங்குவதைதான்
உறக்கத்தில் கூட
இறுகப் பற்றிக் கொள்ளும்
பிஞ்சுவிரல்களின்
நடுக்கங்கள்
அறிவிக்கின்றன.

இறுக்கி கட்டப்
பட்டிருக்கும்
வெள்ளைத்துணியினை
அவிழ்த்துப் பார்த்தால்
இறுகி இருக்கும்
விரல்களுக்கு நடுவில்
கசங்கிய பூ ஒன்று.

இவ்வாறாக
காற்றில் சருகென
தேவதைக்
குழந்தைகளின்
உடலங்கள்
மிதக்கிற நிலத்தில்
இனி சூரியகாந்திகள்
மலராது.

கொடும் இருள்
பீடித்த விழிகளில்
இருந்து கண்ணீர்
தளும்பாது.

இது உலகம்
எனவோ..
நாமெல்லாம்
மனிதர்கள்
எனவோ..

எதுவொன்றும்
அறிவிக்காது.

அன்புமகள்
ரித்யன்சீறிக்கு

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483512

அன்றாடிய அலைப்பொழுது..

 

கலைத்துப்போட்ட
கடலலை
கோப்புகளிலிருந்து
எனக்கு பிடித்தமான
அலை ஒன்றை
தேர்ந்தெடுத்தேன்.

வெளிர் நீலமும்…
குமிழ் நுரையும்
கொண்ட
சிறு அலை அது.

ஒரு சிறுமிக்கே
உரிய துடுக்கோடு
துள்ளிக்
கொண்டிருந்த
அதை
உள்ளங்கையில்
ஏந்தினேன்.

விரல்கள் மடிப்பினை
கரைகளாக நினைத்து
அலை அடித்து
கொந்தளித்தது.

கைகளை மூடி
காதுகளில்
கேட்டால்..
மீனின் சிறகுகள்
நீந்தும் ஓசை.

கடலையே
உள்ளங்கைக்குள்
வைத்திருக்கிறோம்
என்ற மதர்ப்பில்
நின்ற நொடியில் தான்..

காலை தழுவிய
கடலலை ஒன்றை
கணிக்க தவறினேன்.

இழுத்துப் போட்டது.
தடுமாறி விழுந்ததில்
தவறி விழுந்தது
சிறு அலை..

பேரலை ஒன்றின்
விழுங்கலில்
அடங்கிற்று சிறு அலை.

கடல் ஒரு முறை
சிலிர்த்து அடங்கியது.

ஆனாலும்…

அருகில் விளையாடிய
சிறுமியின் பாதத்தை
தற்போது தொட்டு
விளையாடிப்
போனது..

அந்த சிறு
அலையாகத்தான்
இருக்கக்கூடும்.

… ? ? ?

பூங்கதவுகளின் புராணம்..

 

மூடப்பட்ட கதவின்
மேல் கோபிக்காதே..

ஏனெனில் கதவுகள்
மூடுவதற்காகவே தான்
தயாரிக்கப்படுகின்றன.

மூடப்படுவதை
உன் நம்பிக்கை
கோபுரத்தின் மேல்
விழுந்த பேரிடியாக
கருதாதே..

அது..
இன்னொரு
திறப்பிற்கான வழி..

மூடப்படுவது உன்
முகத்தில்
உமிழப்பட்ட எச்சிலாக
கருதி உன்மத்தம்
கொள்ளாதே..

திறந்திருந்தால்
உன் கனவின் மீது
படியும் ஏமாற்ற
நிழலை எங்கே
கொண்டு புதைப்பாய்..??

மூடப்படுதல் ஓரு
வாக்கியத்தின்
முற்றுப்புள்ளி.

நீ எழுத இருக்கிற
காப்பியத்தின்
தொடக்கப்புள்ளி..

மூடப்படுதல்
ஒரு நிராசையின்
முடிவு.

இன்னொரு
விடியலுக்கான
துளிர்ப்பு..

ஒரு வேளை
மூடப்படாமலும்
திறக்கப்படாமலும்
காற்றின் திசைகளில்
கதவு அலைகின்றதா..??

யோசிக்காதே.
நீயே சாத்தி விட்டு நகர்.

ஏனெனில்
நகரும் உன்
காலடியில்தான்
உலகத்தின் கதவு
திறக்கிறது.

பிரிவொன்றின் மழை..

இறுதியாக
பிரிதலுக்காக
நீயே மழை ஒன்றை
தயாரிக்கிறாய்‌.‌.

வெறுமைக்
காரணங்களையும்..
வலிந்து
திணித்த
போலி
நியாயங்களையும்
கொண்டு தயாராகிறது
மழை..

நேசிப்பின்
மேகங்களை
வெறுப்பின்
கருமைக் கொண்டு
இருளாக்க மறதிக்
காலம் ஒன்று
அவசரத் தேவையாக
ஆம்புலன்சில் வருகிறது.

விழியோரம்
கனவொன்று சட்டென்று
கசிந்து விடக்கூடாது
என்கிற கவனம்
விரிய காத்திருக்கும்
பிரிய குடை ஒன்றை
மடித்து வைக்கிறது..

நிலாக்கால
நினைவுகளின்
ஏக்கப்பெருமூச்சுகள்
பெருங்காற்றாய்
வீச..
பிரிவின் மழை
மேகம் கலையுமோ
என அஞ்சுகிறாய்.

பிறகு நீயே
அலட்சிய புன்னகை
ஒன்றினால்
நிராசைத் தூறல்களை
தூவ வைக்கிறாய்‌.

உதிரம் கசியும்
ஒரு வயலினையும்

இருளடர்ந்த
ஒரு வனத்தையும்

சில கண்ணீர்த்
துளிகளால்

நீயே உருவாக்கிறாய்.

பொழியத் தொடங்குகிறது
மழை.

நான் நனையத்
தொடங்குகிறேன்.

நதியற்ற பாவம்.

 

 

 

நதிகளில்
தொலைக்க
பாவங்கள்
இருக்கின்றன..

பாவம்.
நதிகள் தான்
தொலைந்திருக்கின்றன.

நேற்றிருந்தவர்களின் கதை.

 

நேற்றிரவு
அவர்கள்
இருந்தார்கள்..

நேற்றிரவு
இந்த நொடியில்
அவர்கள்
உறங்கியும்
இருந்தார்கள்..

கண் மூடி
கதகதப்பாய்..
நாளையும்
இப்படிதான்
உறங்கப்
போகிறோம்
என்ற
நம்பிக்கைகளோடு..

நேற்றிரவு
குளிர்மையாய்
உறைந்திருந்த
சில தோட்டாக்கள்
அச்சமயம்
புன்னகைத்ததை
அவர்கள்
அறியவில்லை..

…….

புற்றில்லாத
உடலோடு
நஞ்சற்ற
நிலத்தில்
வாழ்தலென்ற
கனவோடு
அவர்கள்
காலை
விழித்தார்கள்..

அதிகாரத்தை
அரிதாரமாக
பூசி இருக்கும்
அரச துவக்குகள்
ஏற்கனவே
வேதாந்தா வீசிய
எலும்புத்
துண்டுகளுக்காக
நாய்களாக மாறிய
கதை தெரியாமல்..

எதிர்காலம்
என்பதை
இருத்த…
விதி ஒன்றை
மாற்ற அவர்கள்
வீதிகளிலே
போனார்கள்..

ரூபாய் நோட்டுகள்
செருகப்பட்ட
செவிகளில்
நெஞ்சடைத்து
அவர்கள் இடும்
முழக்கங்கள்
கேட்கட்டும் என
அவர்கள் நடந்தார்கள்..

ஏதோச்சதிகார
துவக்கின்
நாவிலிருந்து
உமிழப்பட்ட
தோட்டாக்களில்
அவர்களின்
பெயர்
எழுதப்பட்டிருப்பதை
அறியாமல்..
நெஞ்சத்தை
துளைக்கும்
முதல்
நொடி வரை
நம்பினார்கள்..

இது ஒரு நாடென..

பேய் அரசாண்டால்
மட்டுமல்ல..
பேயின் நாய்
அரசாண்டால் கூட
பிணம்தான்
தின்னும்
சாத்திரங்கள்..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

நாளை விடியும்
என்ற நம்பிக்கையோடு..

நேற்றிரவு அவர்கள்
இருந்தார்கள்..

 

வண்ணமற்ற சொற்கள்.

நிறமற்ற என்
சொற்களின்
மீது உனக்கு
பிடித்த
வண்ணத்தை
பூசி விடு..

கூடவே
அப்போதைய
உன் மனநிலைக்கு
தகுந்தாற் போல்…
ஒரு அந்தியையோ..
ஒரு மழையையோ..
கூதிர் காலமொன்றையோ..
வெண்பனிச் சாரலையோ..
கொடும் பாலையையோ. .
அவசியம் இணை.

சொற்களை கரைத்து
விழுங்கும்
பின்னணி இசை
இசைக்கப்படின்
இன்னும் பிரமாதம்.

முடிவில் ஒரு
மலை முகட்டின்
மேலமர்ந்து
தனிமைப்
பொழுதொன்றை
நீயே தேர்ந்தெடு.

என் சொற்களை
உடை அவிழ்ப்பது
போல..
தனித்தனியே கழற்று..
கலைத்துப் போடு.
நிறைவேறாத படைப்பின்
நிராசை ஓவியனாய்
வெற்று பார்வை
ஒன்றைப் பார் .

எழுத்துகளாய் எஞ்சி
இருப்பவற்றை..
உனக்கு பிடித்தமாய்
கோர்த்துப் படி..

நான் தெரியலாம்.
சில நேரங்களில்
நீயும்.

மணி செந்தில்.

பிம்பம் தாங்காத ஆடி..

 

 

 

 

…ஆகப்பெரும்

கண்ணாடியாய்
கனவு பிம்பங்களை
மாறி மாறி
வரும் வாழ்வின்
உதய,
அஸ்தமனங்களுக்கு
ஏற்ப வாரி இறைத்துக்
கொண்டிருந்தோம்.

சரிவொன்றின்
சங்கடப்படுத்தும்
நிழலொன்றில் கூட
கலையாத பிம்பமாய்
நம் பற்றை
தகவமைப்பதில்
கவனம் கொண்டிருந்தோம்.

பிசிறில்லா இசையாய்
மாசற்ற கவிதையாய்
அருவமான அற்புதமாய்
அது நிகழ்ந்துக் கொண்டே
இருக்க வேண்டும் என
உறுதி கொண்டோம்..

தவறுகள் மீதும்
காரணங்கள் மீதும்
கட்டப்பட்ட கண்ணாடி
மாளிகையாய்
அது காட்டப்பட்டு
விடக் கூடாதென்றும்..

சின்ன விழி அசைவில்
கூட தெறிக்கும் உணர்வு
கல்லொன்றின் வீசலில்
அது விரிசலாகி விடக்
கூடாதென்றும்..

சில கணக்குகள்
சமைத்து
நமக்குள்ளாக
விடைகளையும்
நாம் சேகரித்து
வைத்திருந்தோம்..

பிரிவொன்றின்
பிரளயக்
காற்று கசியும்
அபாயமிருக்கிற
அனைத்து
பொந்துகளும்
அடைப்பட்டு
விட்டதென நாம்
அறிந்திருந்த
வேளையில் தான்..

வெண்ணிற இரவுகள்*
பக்கங்களில் இருந்து
இறங்கி வந்த
கனவுலகவாசி
சொன்னான்..

உங்களின்
நிலாக்காலம்
அந்த
கண்ணாடியில்
கரும் புகையாய்
படிந்திருக்கிறதென..

சட்டென
மீட்டப்பட்ட
வீணையின்
தந்தியாய்
அதிர்ந்தோம்.

கண்ணாடி
விரிசல் விட
தொடங்கிற்று.

– மணி செந்தில்

* வெண்ணிற இரவுகள்.
மாபெரும் எழுத்தாளர்
தாஸ்தாவெஸ்கி எழுதிய
சிறு புதினம்.

Page 3 of 8

Powered by WordPress & Theme by Anders Norén