பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Category: சுயம் Page 5 of 6

நேசிப்பின் நதிக்கரை..

27657324_394780410946833_983619852173550470_n

வருஷம் 16 திரைப்படத்தில்..முதல் காட்சி. கார்த்திக் சிறைக்கு சென்று 16 வருடங்கள் கழித்து திரும்பி வருவார். அந்த 16 வருடத்தில்..அவர் குடும்பத்தில் இருந்த பலரும் இறந்து படமாக உறைந்து இருப்பார்கள். காலச் சக்கரத்தின் இரக்கமற்ற வேகத்தில் கூழாங்கற்களாய் மானுட வாழ்வு சிக்கி மண்ணோடு மண்ணாய் மக்குகின்ற உண்மையை தான்..அந்த செல்லூயிட் காவியமும் விவரிக்க முயலும். அப்படி தான் என் குடும்பமும் சிறுக சிறுக வருஷம் 16 காட்சியை பிரதிபலிக்கிறதோ என்கிற துயர் மிக்க பிரமையோடு இந்த தனிமை இரவு நகர்கிறது.

எங்களில் ஒருவனாய் பிறந்து வாழ்ந்து வந்த என் அண்ணன்களில் ஒருவனான அறிவும் இந்நொடியில் வெறும் சாம்பலாய் இந்நேரம் மிஞ்சியிருப்பான். எங்கள் தலைமுறையின் முதல் மரணம் இது. எங்கள் மீதும் மரணத்தின் நிழல் படிய தொடங்கி விட்டது என்பதைதான் அறிவு நினைவூட்டுகிறான். மரணத்தின் ருசி என்ன என்பதை புரியத் தொடங்கி இருப்பதை அறிவின் மரணம் மெளனமாக அறிவிக்கிறது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் பிறந்த நாங்கள் இறுகிப் பிணைக்கப்பட்ட சங்கிலிகளோடு கொண்ட பால்யத்தைக் கொண்டிருந்தோம். மறைந்த எம் ஆத்தா (தந்தையின் தாய்) அந்த அரூவ சங்கிலியின் அறுபடாத கண்ணியாக திகழ்ந்தார். எம் தந்தையர் பாகுபடற்ற பேரன் பின் பெருமழையில் எங்களை நனைத்த வண்ணம் இருந்தனர். எனக்கெல்லாம் என் தந்தை யாரென்று பிரத்யோக அறிந்துக்கொள்ளவே பல வருடங்கள் ஆனது நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் சுயநலமும்..‌பொறாமையும் உடை என அணிந்திருக்கும் இவ்வுலகு எங்களையும் நோயென பாதிக்க தொடங்கிய காலத்தில் ..என் ஆத்தா இறந்து போனார். தனித்தனியாக அறுத்தெறியப்பட்ட சரமாய் கால ஓட்டத்தில் நாங்கள் தனியரானோம். இருந்தும் எங்களுக்குள் சுரந்த வண்ணம் இருந்த அன்பின் கதகதப்பினை மறக்க முடியாமல் தவித்தோம். அவரவருக்கென தனித்த வாழ்வு,குடும்பம்..அதை சார்ந்த நலன்கள் என ஓட தொடங்கும் போது சுயநலச் சாத்தானின் கைகளுக்குள்ளாக நாங்களாகவே சிக்குண்டோம்.ஒட்டுமொத்த குடும்பத்தின் நலன்.. மகிழ்ச்சி என்பதை மறந்து தனி வாழ்விற்கான விழுமியங்களை தேட தொடங்கிய போது கசப்பின் சாயை எம்முள்ளும் படியத் தொடங்கியது.

அது ஒருவகையான விசித்திர விளையாட்டு. தோற்போம் என்று தெரிந்தே விளையாடும் அந்த பகடை ஆட்டத்தில் பலி கொடுக்க அவரவருக்கென அடுத்தவரின் கனவு தேவைப்பட்டது. நாம் வாழ்கிறோம் என்பதை மறந்து நான் வாழ வேண்டும் என நினைக்கத் தொடங்கும் நொடியில் அவரவருக்கென நியாயங்களும்..தர்க்கங்களும் உருவாக்கப்பட்டன. வேட்டைக் காடென எம் வாழ்வை நாங்களே மாற்றிக்கொண்ட பொல்லாங்கை எதனாலும் அடக்க முடியவில்லை.

அறிவு உழைத்தான்‌. எம் குடும்பத்தை நிமிர்த்த கனவு கண்டான். வீடு கட்டினான்.கடையை உருவாக்கினான். பிறகு அவனே தனித்துப் போனான். வேக வேகமாய் பிரிந்துப் போனான். நாங்களும் பிரிந்தோம். வேகவேகமாக ஏதேதோ தொழில் நடத்தி போராடினான். விரைவாக வாழ்வினை வாழ விரும்பிய அறிவின் வாழ்வும் எதிர் பாராமல் விரைவாகவே முடிந்தது. இன்று பிணமாய் படுத்திருந்த அறிவு புன்னகையை சதா சுமக்கும் மனதையும்..முகத்தினையும் கொண்ட வசீகரன். விளையாட்டு வீரன். ஆனாலும் ..அவனுக்கென அவனே உருவாக்கிக்கொண்ட உலகில் அந்த வசீகரத்தை தொலைத்து மெளனப் போர்வையில் புதைந்தான். ஊரெல்லாம் அயலாரை ஏற்றி பாதுகாப்பாக சுற்றி வந்த அறிவு உள்ளூரில் இரு சக்கர வாகனம் மோதி சாதாரணமாக இறந்தது எதிர்பாரன்மையையே தன் இயல்பாக கொண்டிருக்கும் மரணத்தின் குணாதிசயம் என்றாலும்.. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த வாழ்வும்..உலகமும் நமக்கு நிரந்தரம் எனக் கருதி நாம் போடுகிற ஆட்டம் நினைக்காத தருணமொன்றில் முடிந்து விடுகிறது. முடியும் போது இன்னமும் அனைவரையும் நேசித்து,விட்டுக் கொடுத்து, மன்னித்து,மன்னிக்கப்பட்டு வாழ்ந்திருக்கலாமோ என நினைக்க தோணுகிறது.இந்த காட்சிப் பிழை வாழ்விற்குள் எந்த தைரியத்தில் போட்டி,பொறாமை கொண்டு அலைகிறோம்..??

சிந்திய பனித்துளி சூரிய சுடர் பட்டு சில நொடிகளில் ஆவியாவது போல சட்டென முடியும் வாழ்விற்காக நாம் எவற்றை எல்லாம் இழக்கிறோம் என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது . இருக்கும் காலங்களில் நேசித்து ..நேசிக்கப்பட்டு வாழும் வாழ்வினை ஏன் நாங்கள் தொலைத்தோம்…??

அப்படிதான் இன்று அறிவையும் இழந்து விட்டு .. நாங்கள் நிற்கிறோம்‌ . இப்போதுதான் வாத்தியார் அப்பா வீட்டு மாடியில்..நாங்கள் எல்லோரும் விளையாடியது போல நினைவு. அதற்குள் முடிந்து விட்டது.

வெறுப்பும்.. விரோதமும் ‌..வன்மமும் இல்லாத மனித வாழ்வொன்று சாத்தியமில்லை தான்..

ஆனால்..

அனைவரையும் மன்னித்து.. அனைவராலும் மன்னிக்கப்பட்ட ஒரு பெரு வாழ்வினை வாழ வேண்டும்.

இந்நொடியில் நான் மீண்டும் எனக்குள்ளாக சொல்லிக் கொள்வது இதை தான்.. நேசிப்பின் பெரும் சுழி என்னுள் உருவாகட்டும். நேசிப்பின் நதிக்கரையில் காலார எனது ஆன்மா உலவட்டும்.
போட்டி..பொறாமை..வன்மம் தொலைத்து இன்னொரு வாழ்வொன்று இங்கேயே எங்களுக்குள் முளைக்கட்டும்.

அறிவு..

நீ கிளம்பி விட்டாய் ஒரு தொலைதூர பயணத்திற்கு..வழக்கமான வேகத்துடன்.

போய் வா அறிவு.

நினைவலைகள் ததும்பும் நதி அருகில் கலங்கி நிற்கும் எங்களுக்கு சுவாசமாய் இருந்து ஆற்றுப்படுத்து.

 

( எனது பெரிய தந்தை மறைந்த ச.பாலகுரு அவர்களின் மகன். பா. அறிவழகன். பெருமாள் வடக்கு வீதி ,பந்தநல்லூர் ,மறைவு 07.02.2015)

என் இளமையின் பொன்னிறத் துகள்..

 

 

26195657_381630508928490_7593472573008726768_n

 

அவன்
என் இளமையின்
பொன்னிறத் துகள்.
என் விழிகளில் பிணைந்திருக்கிற..
வாஞ்சைமிகு வசீகரம்.
என் கவிதை ஏடுகளில்
நிறைந்திருக்கிற எனது அகம்..
பல சமயங்களில்
அவனே நானாக..நானே அவனாக
வாழ்ந்துக் கொண்டிருக்கிற
விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள்
நாங்கள் இருவரும்..

இதில் யார் குரு..யார் சீடன்..??
என்ற குழப்பமில்லை எமக்கு.
தானாகி போனதொரு வாழ்வில்
அன்பள்ள சிவக்கிறது கிழக்கு.

தோள் சேர்த்து.. கை பிணைத்து..
காலம் ஒன்றை கண் அசைவுகளால்..
வார்த்தை வளைவுகளால்.. கட்டி எழுப்ப
வாடா..வாடா..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Dhuruvan Selvamani Somu

போர்ஹேவின் சொற்கள்..

slide_363547_4103384_free
என் முதுகிற்கு பின்னால் உதிர்க்கபடும் வசவுகளையும்,தூற்றல்களையும் கண்டு புண்படவோ..புன்னகைக்கவோ எனக்கு நேரம் இல்லை.

ஏனெனில்..காயம் கொடியதென்றாலும்..உள்ளுக்குள் வெடிக்கக் காத்திருக்கும் கனவு பெரிது.

என்

முன்னால் நீளும் பாதையில்..

என் குதிரையின் கால்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்.

எனக்கு உறுதியாகத் தெரியும்.

இந்த கொடும் விதி சமைத்த பாதையில் காற்றின் வழியே கசிந்து வரும் ஏதோ ஒரு புல்லாங்குழல் என் ஆன்மாவிற்கான பிரத்யோகப் பாடலை இசைத்து என் கொந்தளிப்பை அடக்கும்.

ஏனெனில்..நான் என்னிலிருந்து விடுதலை பெற்றே தீருவதற்கான பாதையில் போவதாக மீண்டும் உறுதி செய்து கொண்டே இருட் பாதையின் ஊடே நம்பிக்கை சுரக்கும் களங்கமற்ற இலட்சிய தாகம் மினுக்கும் இலக்கினை தேடிப் பயணிக்கிறேன்.

மற்றபடி..நான் எதுவுமில்லை…

– போர்ஹே.

 

பாக்யராசன் என்ற என் வாழ்க்கை…

21271236_341238972967644_8545662175495430546_n

 

ரணத்துக்
கனத்து
நிகழ்கிற
என்
நொடிகளை
எல்லாம்.
ஒரு.
இளையராஜா
பாடல் போல
நிலா மிதக்கும்
கனாக் காலமாக
மாற்ற அவனால்
முடிந்திருக்கிறது..

ஏதோ ஒரு திசையில்..
ஒரு அலைபேசி
உரையாடலோடு
சிரித்தவாறே
அவன்
நகர்கையில்…

எதிர்பாராமல்
சந்தித்து விட்ட
விழிகளோடு
விழிகளாலேயே
ஒரு புன்னகை
கைக்குலுக்கல்
மூலமாகவே
அன்பை நகர்த்தி
விடுவதில்
அவன் அசரா
அசுரன்…

எனக்கென
அவன்
தனித்து சேமித்து
இருக்கும்
ப்ரியங்களை
அவன் சொற்களால்
காட்டியதே இல்லை..

சில சமயங்களில்
சிக்கனமான கரம்
பற்றுதலில்..
தல என்று அழைக்கும்
குழைவில் என்றெல்லாம்
அடுக்கிக் கொண்டே
போனாலும்..

அதுவல்ல எனக்கான
அவன்
என அவனுக்கும் ,எனக்கும்
தெரியும்.

விவரிக்க முடியா
பேரன்பின் அக்கறையோடு
என்னை இழுத்துக்
கொண்டே திரிகிறான்..

கடும் சுமையாய்
நான் கனத்தப் பொழுதுகளில்
கூட..
அமைதியான காட்டில்
யாரும் அறியா பெய்யும்
மழை போல..
என்னை கரைத்து இருக்கிறான்..

கரை சேர்த்து இருக்கிறான்..

அவனுக்கென
என்னிடம் சொல்ல
இதற்கும் மேலும்..
வாஞ்சை சொற்கள்
நிரம்பிய
உணர்ச்சிக்குடங்கள்
உண்டு தான்..

உடைத்துக் கொண்டே
போகலாம் தான்..

ஆனால் வாழ்க்கை இருக்கிறதே…
அவனோடு வாழ..

என் தங்கை மீராவிற்கு..
என் மருமகள் அகநகைக்கு..
எனக்கும் …

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..

அம்மாவிற்கு…

20882164_335942676830607_5908594693985192965_n

 

என் அம்மாவிற்கு…

எது நடந்தாலும்…எந்த தவறை செய்தாலும்..சீரணிக்கவே முடியாத என் முட்டாள் தனங்களால் உன் வாழ்வே செல்லரித்துப் போனாலும்…

என்னை வெறுக்க முடியாமல் நேசித்தே ஆக வேண்டிய பெருஞ்சாபம் உன் வாழ்நாள் விதியாக நேர்ந்தமைக்கு வருந்துகிறேன்.

நீதான் அம்மா இதற்கும் காரணம். உன் பேரன்பின் வானம் தாண்டி என் விழிகள் பயணித்ததில்லை.உன் கையை விட்டு நானாக நடக்க முயன்ற போதெல்லாம் தடுக்கி கீழே விழுந்திருக்கிறேன். உன் மடியில் தலை வைக்காமல் தூங்கிய போதெல்லாம் சாத்தான் கனவுகளால் சபிக்கப்பட்டு இருக்கிறேன்.

இருண்டக் குழிகளுக்குள் நானாக விழும் கணங்களில் எல்லாம் எனக்குத் தெரியும். உன் கரம் நீண்டு வந்து எனைக் காக்குமென.
அதற்காகவே…அந்த நம்பிக்கையிலேயே நான் குழிகளுக்குள் மீண்டும் மீண்டும் விழுகிறேன்.

இம்முறை கொஞ்சம் அதிகம் என நான் உணர்கிறேன். உன் மீது என் மன அழுத்தத்தை எல்லாம் கொட்டினேன். வார்த்தை வாணலியில் உன்னை வதக்கி சிதைத்தேன். எல்லாவற்றையும் விட நீ பார்த்து கனவு கண்டு உருவாக்கிய நான் நானாகவே அழிந்துக் கொண்டேன்

என் அழிவை உன்னால் தாங்க முடியாமல் தவித்தாய்.. ஆயுதங்கள் அனைத்தையும் பயன்படுத்தினாய்..பிறகு ஆயுதங்கள் அனைத்தும் தீர்ந்த கர்ணணாய் சரிந்து அமர்ந்தாய்.. அலுத்துப் போனாய்.

யாருமற்ற வெளியில்… தனித்து விடப்படும் நேரமும் வந்தது. சூன்ய வெளியில் தனித்து கண் மூடி அமர்ந்திருந்த போது தாங்க முடியா வலி. ஏமாற்றம்.

நடந்த சூதாட்டத்தில்…நம்பிக்கைகளை வைத்து விளையாடிய தருமனானேன். உன்மத்ததில் எல்லாவற்றையும் இழந்து மீண்டும் உன்னையே தேடி வந்தேன்.

நீயோ என் அழிவினால்.. ஏறக்குறைய அழிந்திருந்தாய். என் கண்களை கண்டாய். குற்ற உணர்வும், தாங்க இயலா இழப்பும் கண்ணீராய் அதில் தேங்கி நிற்க…ஒரு நொடியில் எழுந்து நின்றாய்..

என் தலை கோதி சரி செய்தாய்.

ஒரே ஒரு கேள்வி கேட்டாய்.

இந்த நிலைக்கு யார் காரணம்..எது காரணம்..

நான் தாம்மா காரணம். நான் மட்டுமே காரணம்.

என்னுடைய பேரன்பின் சூடு பல ரோஜாக்களை பொசுக்கின. எல்லாம் என்னை விட்டு போகக்கூடாது என்கிற அழுத்தம் எல்லாவற்றையும் அழித்தன..

மனதார மன்னித்து விடு…என

பேசிக்கொண்டே போன என் வாயை பொத்தினாய்…

நானிருக்கிறேன் …வா…போகலாம் என்றாய் மீண்டும்..

கலங்கிய கண்களுடன் நின்ற என் தலை கோதினாய்..

பெரு மழை பெய்யத் தொடங்கியது.

-மணி செந்தில்

உறுபசிக்கு பின்னால்…

 

 

20953734_335863913505150_1919002977959472517_n (1)

இந்த நாவல் எழுதப்பட்ட காலத்தில் தான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களோடு சிலப்பதிகாரம் விவரித்துள்ள நிலவியல் குறிப்புகளின் படி கண்ணகி பூம்புகாரிலிருந்து மதுரை வரை நடந்துச் சென்ற பாதையை தேடி அப்பாதையை கண்டறிந்து பயணப்பட்டு கொண்டிருந்தோம் .எங்களோடு ஆனந்த விகடன் புகைப்படக்காரர், அன்பு நண்பர் திரு.பொன் காசிராஜனும் ஒளி ஓவியங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார்.

பெரும் பயணம் அது. குறிப்பாக எஸ்.ரா என்ற கதை சொல்லியோடு பெரும் பயணம் மேற்கொள்வது என்பது முழு நிலா நாளில் அடர் வனத்தில் திரிவது போல..

இந்த பயண நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் எப்போது இந்த நாவலை எழுதினார் என்று எனக்கு இப்போதும் நினைவில்லை.

இந் நாவல் தமிழ் பயின்ற சம்பத் என்ற மனிதனின் வாழ்வையும், சரிவையும் பேசுகிறது. மனித உளவியல் சந்திக்கும் அறம் என்ற உணர்ச்சி தரும் சிக்கல்களை நுட்பமாக ஆராய்கிறது.

ஏன் சம்பத் அப்படி ஆனான்…என்ற கேள்விக்கு பின்னால் இருக்கும் பதில்கள் மொழியற்றவை. இருட்டு மூலையில் மறைந்திருக்கும் வெளவால்கள் போன்றவை. எப்போதும் மெளனம் என்பது இயலாமையால் விளைவது அல்ல. பேரன்பின் பாற் தனக்கு தானே தூக்கி கொண்டு சுமந்து திரிகிற சிலுவையாய் உண்மைகளை மறைத்து திரிகிற மெளனம் திகழ்கிறது.

என் தம்பி இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனர் வருங்கால திரை நம்பிக்கை Murali Manohar உறுபசி நாவலை எனக்கு எஸ்.ரா அர்ப்பணிப்பு செய்திருப்பதாக சொன்னார்.

ஒரு எளிய வாசகன் மேல் ஒரு மாபெரும் படைப்பாளன் கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பின் சாட்சி யாக உறுபசி விளங்குகிறது..

இதற்கெல்லாம் அப்பாற்பட்டு இன்றளவும் என்னை உறுத்துகிற, எஸ்.ராவிற்கு மட்டும் பதில் தெரிந்த,இது வரை பதில் சொல்லாத,இனியும் பதில் சொல்ல மறுக்கிற கேள்வி..

என்னில் எது உறுபசி..?? உறுபசியில் நான் யார்..?!!

அண்ணன் முத்துக்குமாருக்கு..

 

20841183_333808420377366_8557206749707335513_n

அவன் இறந்து
ஒரு ஆண்டு
ஓடி விட்டது
என்றார்கள்..

மற்ற நதி எல்லாம்
மணல் அள்ளி
வறண்டு கிடக்க..

காலநதி மட்டும்
பெருக்கெடுத்த
வேகத்தோடு
வறளாமல் ஓடுகிறது..

அழுத கண்ணீர்த் துளி
காய்வதற்குள் அடுத்த
ஆண்டு வந்து விட்டது..

கால,தூர, தேசங்களை
கடந்து…

அலை நழுவும்
கடலாய்..
பரவிக் கொண்டே
இருக்கிறான்..

பேரன்பின்
ஆதி ஊற்றாய்
செவிகளில்
ஊறிக் கொண்டே
இருக்கிறான்..

அவனது

ஆனந்த யாழ்
இசைந்த வண்ணம்
இருக்கும்..

தமிழ் உள்ள வரை..

அவன் மொழி

பறவையாய்
அலைந்துக் கொண்டே
திரியும்…
இசை வானம்
இருக்கும் வரை..

அவன் மொழிப் பருகி
விழிகள் கசிந்துக்
கொண்டே இருக்கும்
நம்
உயிர் உள்ள வரை..

…….,..

அண்ணா..
உனது சிட்டன்
எழுதுகிறேன்.

தாங்காமல் சிட்டாய்
பறந்து ஓடி விடுவதால்
நீ எனை சிட்டன்
என்றாய்..

நானோ என்னை
உன் பித்தன்
என்றேன்.

அதற்கும் அந்த அளவெடுத்த
சிறு புன்னகை..

வாத்தியார் மகனெல்லாம்
இப்படியே பேசி பேசியே
ஊசிப்போக
வேண்டியதுதான் என்றாய்..

நீ மட்டும்
ஊசிப் போகவில்லை
அண்ணா..

மாறாக மொழியின்
விழியானாய்…

உன் உச்சிக்கிளையின்
மேலே
நானும்
ஒரு மழைத்துளியாய்
உன் மொழியை
தீண்டிக் கிடப்பேன்
அண்ணா…

இறந்தவனுக்கு
தான் அண்ணா
புகழ் வணக்கமெல்லாம்…

தமிழாய் வாழும்
உனக்கு என் முத்தங்கள்
அண்ணா..

நீ எப்போதும் என்னிடத்தில்
என் தோளைத்தட்டி
சற்றே கண்டிப்புடன்
சொன்னதை இந்த வருடம்
உறுதியாய்
செய்வேன்.. அண்ணா..

எனது முதல் கவிதை
தொகுப்பு.

உனக்கே அது…
உன்னால் அது..

கண்கள் முழுக்க
கண்ணீரோடும்..
நீ எனக்கு தந்த
கனவுகளோடும்…

 

https://youtu.be/H5EF0xBcq_g

பகலவா.. நீ என்னை வளர்..

 

20431622_329200347504840_6044427662437589133_n

பகலவன்..
என்றொரு
மாயக்காரன்..

மயக்கும்
மந்திரக்காரன்..

சின்னஞ்சிறு
சொற்களால்
என்னை
மயிலிறகாய்
வருடும்
வசீகரன்..

அப்பா..
உன்னை தாம்பா
எனக்கு அவ்வளவு
பிடிக்கும்
என நேசத்தை
விவரிக்க தெரிந்த
வித்தைக்காரன்…

என்னால் தூக்கிக்
கொண்டு நடக்க
முடியாது என்பதால்…
கைப்பிடித்து
நடந்து வருவதை
இயல்பாக்கிக்
கொண்டவன்..

யாரோ ஒருவர் தன்
மகனை தூக்கிச்
செல்வதை..
நான் தான் ஏக்கமாக
பார்த்தேன்.

அதை சட்டென
உணர்ந்து
வாப்பா செல்பி
எடுப்போம்
தேற்றி விடுகிறான்..

பல நேரங்களில்
மகன்கள் தாயாகவும்.தந்தையாகும்
மாறி விடுவதும்..

நான் குழந்தையாய் அவர்கள்
முன்னால் நிற்பதும்..

எங்கள் வீட்டில் அடிக்கடி
நடக்கிறது..

பகல்..

உன் பிஞ்சுக்கரங்களில்
முகம் புதைத்து
நான் சொல்வது இதைத்தான்..

என்னை உன் மகனாக
வளர்..

(நிலாக் கால பக்கங்களில் இருந்து..)

 

 

19143414_307529129671962_6561639451854897152_n

இதய வீதியில் மலரென மலர்ந்திருக்கும் வேட்கைக்கும்…கனவில் ஒளிர்கிற நட்சத்திர ஆசைகளுக்கும் பிறந்த வாழ்வின் வானவில் பக்கங்களை தான் நான் எதார்த்த உலகின் அபத்தங்களுக்கு பலி இட்டு …கசிந்துருகிக் கொண்டிருக்கிற இப்பொழுதில் நிலா நாளொன்றில் நீ சொன்னது நினைவுக்கு வருகிறது..

கவிதையாய் விவரிக்க முடிகிற வாழ்வல்ல நாம் வாழ்ந்தது.. அது உயிரை உருக்கி வரையப்பட்ட காப்பியம்.

It s not just a life..we r lived together..it s an epic..

 

நாங்க இப்படித்தான்….

15589743_1841866926060445_62583702408759883_n
(நாம் தமிழர் கட்சியின் சோழ மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் .அ.நல்லதுரை அவர்களின் பிறந்தநாளுக்காக எழுதியது .20-12-2016)
 
 
அண்ணனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த பெயர் பெற்ற அந்த மருத்துவமனைக்குள் நுழைவதற்கே சற்று அச்சமாக இருந்தது. அண்ணன் கம்பீரமான மனிதர். உரத்தக் குரல். யாரையும் அதிகாரம் செய்யும் தோரணை என்றெல்லாம் பழக்கமாகி இருந்த அவரை ஒரு மருத்துவமனையில் உள் நோயாளியாக சந்திப்பதென்பது என் வாழ்நாளில் ஒரு கடின நிலை. அண்ணி வாசலில் சற்றே கலங்கியும், சோர்ந்தவாறு நின்றிருந்தார்கள். வழக்கமாக என்னைப் பார்த்த உடன் புன்னகைக்கும் அதே நிலையை ஏற்படுத்த முயற்சித்து தோற்ற அண்ணி..மெல்லிய குரலில் உள்ளே போய் பாருங்கள் என்றார்..
 
வாசலில் நின்றிருந்த செவிலியர் உள்ளே செல்ல முயன்ற என்னிடம் யாரை பார்க்க வேண்டும் என்பதான விபரங்களை கேட்டுக் கொண்டு உள்ளே அனுப்பினார். ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கே உரிய கெடுபிடிகள். ஆங்காங்கே மானிட்டர் பெட்டிகளின் முணுமுணுப்புகள். ஒரு ஐந்தாறு நோயாளிகள் ஆழ்ந்த அமைதியில் இருந்தார்கள். வலது பக்க மூலையில் அந்த நெடிய உருவம் படுத்திருந்தது. அண்ணனை அக்கோலத்தில் பார்க்க என்னால் முடியவில்லை. ஆனால் அங்கே அழுதால் அண்ணனும் உளவியலாக பாதிக்கப்படுவார் என்ற அச்சம். எனவே கட்டுப்படுத்திக் கொண்டு அருகே சென்றேன். உடலெங்கும் ஆங்காங்கே குழாய்கள் பொருத்தப்பட்டு சற்று சோர்வாக உறங்கிக் கொண்டு இருந்தார், நான் அவர் அருகிலேயே நின்றிருந்தேன்.
 
எப்பேர்பட்ட மனிதர்..ஈழ ஆதரவு போராட்டத்தினை தஞ்சைத் தரணியில் தலைமையேற்று நடத்திய ஆளுமை. அனுதினமும் போராட்டக்களங்களில் முழங்கி முழங்கியே தன் உடல்நலனை இழந்தவர். தஞ்சை நகர வீதிகளில் எங்கு போராட்டம் நடக்கிறதோ..அங்கெல்லாம் இவரைக் காணலாம். எம்மைப் போன்ற அனுபவமற்ற..சற்றே உணர்ச்சிவசப்படுகிற நபர்களை கையாளுவதில் அவர் வித்தகர். தனிப்பட்ட முறையில் என் தந்தையின் மூத்த மகனாகவே அவரும் வரித்து, என் தந்தையும் நினைத்து வாழுகிற பேரன்பின் வடிவம். அண்ணி,முருகு,பாப்பா என்றெல்லாம் ஏதோதோ நினைத்து நான் கலங்கிக் கொண்டிருந்த வேளையில் தான் அவர் கண்விழித்தார்.
 
ஒரு சிறிய புன்னகை. அண்ணே.. என்ற உடன்..கேட்ட கேள்வி.. ஏண்டா தம்பி இங்கெல்லாம் சிரமப்பட்டு வர்ற..கட்சி வேலையெல்லாம் போகுதா.. நான் படுத்த உடனே நிறுத்திட்டீங்களா..
 
இதற்கெல்லாம் என்னிடம் எந்த பதிலும் இல்லை. படுத்த படுக்கையிலும் இந்த ஆள் வேறு எதையோ பேசிக் கொண்டு இருக்கிறானே என்று கொஞ்சம் கோபமும் வந்தது. அவரால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. செவிலியர் என்னை கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான். இன்னும் 48 மணி நேரம் ஆனால் தான் சொல்ல முடியும். அதுக்குள்ள பேசிகிட்டு..போங்க சார் …என்று அந்த பெண் எரிச்சலாக சொன்ன பிறகுதான் நிலைமையின் தீவிரத்தை நான் அறிந்தேன்.
 
வெளியே வந்த நான் அண்ணியை தேடினேன். அண்ணனைப் பற்றி தெரிந்த பலருக்கும் அண்ணியை தெரியாது. அண்ணனின் ஆன்ம பலம் அண்ணி. அவரை ஒரு ஆளுமையாக உலவ வைப்பதில் அண்ணியின் பங்கும், பணியும், தியாகமும் அளவற்றது. என்னை நிமிர்ந்து பார்த்து அவர்கள் சொன்னது கவலைப் படாமல் போங்க..அண்ணன் சீக்கிரமே உங்க கூட வருவார்…
 
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த நான் மனவலி பொறுக்க முடியாமல் …எப்போதெல்லாம் எனக்கு மனம் துயர் கொள்கிறதோ தேடி செல்லும் இடமான புழல் சிறைக்கு சென்றேன். அங்குதான் எனக்கான மருத்துவர் அண்ணன் இராபர்ட் பயஸ் இருக்கிறார்.
 
அவரை பார்த்து அண்ணன் நல்லதுரை படுத்த படுக்கையாய் ஆயிட்டார் அண்ணே.. என்று கலங்கியவாறு சொன்னேன். சற்றே மெளனமான அவர்.. தனக்கே உரிய தீர்க்கமான குரலில்…
 
தம்பி..அண்ணனுக்கு ஒண்ணும் ஆகாது. அவ்வளவு எளிதா நம்மை விட்டு போகமாட்டார்.அந்த ஆன்மா ஈழத்திற்காக உழைத்தது. கொலை செய்யப்பட்ட மக்களுக்காக கதறியது. எங்களுக்காக இரங்கி, துடித்த அந்த ஆன்மா அவ்வளவு எளிதாக போகாது. அவர் உயிரை அந்த மருத்துவமனையை சுற்றி காற்றாய் உலவிக் கொண்டிருக்கிற 50000க்கும் மேற்பட்ட மாவீரர்களின் மூச்சுக்காற்று காப்பாற்றும். கவலைப்படாதே என்றார்.
 
உண்மையில் அதுதான் நடந்தது. அண்ணனும் அந்த கொடும்பொழுதில் இருந்து மீண்டு வந்தார். நம் இன மாவீரர்கள் மகத்தான தெய்வங்கள் என்பதற்கு சாட்சி அண்ணன் நல்லதுரை.
 
இதோ.இன்றைய நாளில் அண்ணன் நல்லதுரை பிறந்தநாள் காண்கிறார். இன்னும் ..இன்னும் ..இந்த இனம் செழிக்க..அதன் விடுதலைக்கு..அவர் உழைக்க அவர் பல பிறந்தநாள்களை காண்பார்.
 
வாழ்த்துகள் என்பது அவர் தான் நமக்கு சொல்ல வேண்டும். நான் என் அண்ணிக்கும் , அப்போது என் அண்ணன் உயிரை காக்க உழைத்த …அரசியல் ரீதியாக முரண்கள் இருந்தாலும்..இன்றளவும் நான் நன்றிக்கடன் பட்டுள்ள மன்னை மருத்துவர் பாரதிச்செல்வன் அவர்களுக்கும் தான் நன்றி வாழ்த்துக்களை உரிதாக்குவேன்.
 
வேறென்ன…
 
ம்ம்ம்.. வழக்கம் போல எங்களை திட்டி, கத்தி
தலைமையா..நின்னு எங்களை அழைச்சிட்டு போங்க…
 
நாங்க இப்படித்தான்.. நீங்க திட்டணும் என்பதற்காகவே தவறு செய்கிற நாங்க இப்படித்தான்.
 
————————————–
 
உலகம் முழுக்க வாழ்ற நாம் தமிழர் குடும்பம் இன்று தன் மூத்த அண்ணனுக்காக கொண்டாடி மகிழ்கிறது.
 
-மணி செந்தில்

Page 5 of 6

Powered by WordPress & Theme by Anders Norén