????
சமீபத்தில் வெளியாகி இருக்கின்ற விடுதலை திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வாத பிரதிவாதங்கள் நடப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக அறிகிறோம். குறிப்பாக இது தமிழ்த்தேசிய அரசியலை பேசுகிறது என்று ஒரு கருத்தை தமிழ் தேசியர்கள் முன் வைக்கும் போது திராவிடக்கூடாரத்தில் இருந்தும் ,முற்போக்கு வகையறாவிடம் இருந்தும் கடுமையான வசவுகளும், பதட்டம் நிறைந்த சொல்லாடல்களும் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
விடுதலை திரைப்படம் அந்த வகையில் மாபெரும் வெற்றி அடைந்து விட்டது என்பதை அது அடைகிற எதிர்வினைகள் மூலம் தெளிவாக புரிகிறது.
…..
திரைப்படக்கலை பற்றி அறிந்தோர், பல் மொழி பேசுகிற திரைப்படங்களை தொடர்ச்சியாக கவனித்து பார்த்து ரசித்து வருவோர் என பலரும் அறிந்த விஷயம் யாதெனில் ,
திரைப்படங்கள் கற்பனையாக கதை ஒன்றை உருவாக்கி அதை திரை மொழியாக உருவாக்கி திரைப்படமாக மாற்றுவது இது ஒரு வகை. அசலான மனிதர்களைப் பற்றி அப்படியே நகலெடுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொஞ்சமும் மாற்றாமல் திரை மொழியாக்கி திரைப்படமாக மாற்றுவது. தான் நாம் ஆவண படங்களாக பார்த்து வருகிறோம் .
இந்த இரண்டு வகைகளையும் தாண்டி மூன்றாவது வகையாக அசலான வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தாக்கம் பெற்று அதன் மூலமாக புனைவு வெளி ஒன்றை உருவாக்கி வரலாற்றையும் /கற்பனையும் கலந்த கதைகளை திரை மொழியாக்கி திரைப்படங்களாக மாற்றுவது.
எடுத்துக்காட்டாக கீழ்வெண்மணி பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் பாரதி கிருஷ்ணகுமார் இயக்கிய “ராமையாவின் குடிசை”. இது அச்சு அசலான ஆவணப்படம்.
இந்த கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கம் பெற்று பல திரைப்படங்களின் காட்சிகள் உருவாகி இருக்கின்றன. 90களில் வெளியான சரத்குமார் பார்த்திபன் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமான “அரவிந்தன்”திரைப்படம், இதே வெற்றிமாறன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் வெளியான “அசுரன்”திரைப்படம் போன்றவை கீழ்வெண்மணி சம்பவத்தின் தாக்கத்தினால் உருவான காட்சி அமைப்புகளை கொண்டவை .இது போன்ற பல நிகழ்வுகளை அந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் உருவான திரைப்படங்களை படங்களை நாம் உதாரணமாக காட்டிக் கொண்டே போகலாம்.
அதுபோன்ற அசலான வரலாற்று மாந்தர்களையும் கற்பனைக்கே உரிய சுதந்திரத்துடன் தாண்டி மறக்கப்பட்ட புரட்சியாளர்களைப் பற்றி இத்தலைமுறையினர் தேடி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்ற ஆழமான சமூக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “விடுதலை”.
வரலாற்றில் நடந்த எந்த நிகழ்வின் ஊடாக எவரும் தாக்கம் அடைந்து விடக்கூடாது என சொல்வதற்கு இங்கே யாருக்கும் உரிமை இல்லை. தாக்கம் அடைந்தவர் தனது புனைவு மற்றும் கற்பனை மூலமாக ஒரு திரை மொழி அமைக்கிறார் என்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதை இங்கே யாரும் கேள்வி கேட்க முடியாது.
விடுதலை திரைப்படத்தின் தொடக்கத்திலேயே இக்கதை மூலம் காலம் /கதை /மாந்தர் அனைத்தும் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட்டு விட்டே மிக கவனத்துடன் விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட்டு இருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஊடாக வரும் செய்திகளை தனக்கு சார்ந்ததாக காட்டிக் கொள்ளும் எவரும் இந்த அறிவிப்பினை கண்டும் காணாதது போல் நடித்து எந்த நபரும் சுயமாக சிந்திக்கவே கூடாது என மூர்க்கத்துடன் இந்த திரைப்படத்தின் மீதாக எதிர்வினை ஆற்றி வரும் சில உரையாடல்கள் உண்மையிலேயே அலுப்பு ஊட்டுகின்றன.
குறிப்பாக திராவிடம் சார்ந்து கொந்தளிப்போர் திடீரென இடதுசாரி பக்கம் எகிறி குதித்து அவர்கள் சார்பாக இவர்கள் பேசுவது போல பாவனை செய்து திரைப்படம் தகவல் பிழை/கருத்துப் பிழை கொண்டது என செய்திகள் பரப்பி வருவதை தமிழ்த்தேசியம் சார்ந்து எவ்வித உரையாடலும் இந்த மண்ணில் எழுந்து விடக்கூடாது என்பதான அவர்களது நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.
இதே போல இடதுசாரிகள் பக்கத்தில் இருந்தும் சோளகர் தொட்டி எழுதிய வழக்கறிஞர் பாலமுருகன் தரப்பிலிருந்தும் வருகின்ற விமர்சனப் பார்வைகளை திராவிடத் தரப்பு கூச்சல்கள் போல அணுக கூடாது என்றாலும் படைப்பாளியின் நியாயப் பாடுகளை எடுத்து வைப்பது நமது கடமை.
விடுதலை திரைப்படம் இரண்டு கூர்மையான கருத்தாக்கங்களை முன்வைக்கிறது. ஒன்று காவல்துறை அடக்குமுறைகள் மீதான காத்திரமான காட்சி மொழியாக்கம், மற்றொன்று தமிழ் தேசிய பார்வையுடன் கூடிய மனிதநேய புரட்சியாளர்கள் பற்றிய பிம்ப உருவாக்கம். இந்த இரண்டிலும் விடுதலை திரைப்படம் முழு வெற்றி அடைந்திருக்கிறது.
குறிப்பாக தமிழ் தேசிய புரட்சிக் களத்தில் ஆயுதம் தாங்கி தமிழர் நிலத்தில் தாக்கம் செலுத்திய புரட்சியாளர்களான மாமனிதர் புலவர் கலியபெருமாள் மற்றும் மாபெரும் தமிழ்த் தேசிய புரட்சியாளர் தமிழரசன் ஆகியோர் பற்றிய உரையாடல்களை தமிழ் தேசிய கருத்தாக்கம் கூர்மை அடைந்திருக்கிற இந்த காலகட்டத்தில் மீண்டும் இந்த திரைப்படம் உருவாக்கி இருக்கிறது. எளிய திரைப்பட பார்வையாளன் கூட யார் கலியபெருமாள் , யார் தமிழரசன் என வாசிக்க புத்தகங்கள் தேடுவதும் பார்க்க காணொளிகள் தேடுவதும் இத்திரைப்படத்தின் மூலமாக கைகூடி இருக்கிறது. திரைப்படம் என்கிற வலிமையான சாதனத்தின் வெற்றி அதுதான்.
இதைத்தான் இயக்குனர் வெற்றிமாறன் தனது நோக்கமாக கொண்டிருக்கக் கூடும் என்பதை அவர் முன்வைத்த திரைமொழியே நமக்கு தெரிவிக்கிறது. எதிர்மறை கதாபாத்திரங்களுக்கு அவர் நடிகர்களை தேர்ந்தெடுத்தது முதல், உரையாடல்களில் காட்சிகளில் ஆங்காங்கே தென்படும் குறியீடுகள் மூலமாக இந்த திரைப்படத்தை தமிழ்த் தேசியம் சார்ந்த உரையாடல்களை எழுப்புகிற ஒரு கருவியாக வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார்.
வள்ளலாரை வணங்குகிற கதையின் நாயகன் திரையில் இதுதான் முதன் முதல் என நான் கருதுகிறேன்.
திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமாக வருகின்ற பெருமாள் வாத்தியார் தனது இரண்டாம் பாகத்தில் மொழிக்கும் மரபிற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவம் சார்ந்த வசனங்கள் இந்தத் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது. பெருமாள் வாத்தியார் கதாபாத்திரம் என்பது புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கதாபாத்திரமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக்காட்டாக இருவர் திரைப்படத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஆகிய இருவரையும் ஒருவராக காட்டிய நாசர் கதாபாத்திரம் போல விஜய் சேதுபதி இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
புலவர் கலியபெருமாள் வாழ்க்கை வரலாற்றை பற்றி நாம் அறிந்து கொள்ள இன்று நமக்கு கையில் இருக்கின்ற ஒரே ஒரு மகத்தான ஆதாரம் அவரது சுய வரலாற்று நூலான “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்கின்ற நூல் மட்டுமே. அந்த நூல் பற்றி திராவிட தரப்பிலிருந்து யாருமே எந்தக் கருத்தையும் குறிப்பிடாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நூல் திராவிட ஆட்சியாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கருணாநிதி ஆட்சிமுறை குறித்தான கடுமையான விமர்சனங்களை, அந்தக்கால திமுக ஆட்சியின் ஒடுக்கு முறைகளை அந்த நூல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. பல பக்கங்களில் அதற்கான செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன அது பற்றி நாம் தனியே ஒரு கட்டுரையில் காண்போம்.
60களின் இறுதியில் எழுந்த வசந்தத்தின் இடி முழக்கம் என வழங்கப்பட்ட நக்சல் பாரி இயக்கத்தின் தலைவர் சாரு மஜும்தார் அவர்களின் அழைப்பின் பேரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளை விட்டு புரட்சி செய்ய கிராமங்களை நோக்கி விரைந்த போது தான் கோவை பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த துடிப்பான கல்லூரி மாணவரான தமிழரசனும் அழித்தொழிப்பு வேலைகளுக்காக கிராமங்களை நோக்கி நகர்கிறார். இவரோடு புலவர் கலியபெருமாள் சேர்ந்தது தமிழ்இன வரலாற்றில் முக்கியமான ஒரு இணைவு ஆகும். மேற்கண்ட இருவரும் மக்கள் யுத்த குழுவோடு முரண்பட்டு தேசிய இன விடுதலை சார்ந்து இயங்கிய போது தான் தமிழ்நாடு விடுதலைப் படை உருவானது.
எனவே தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மை குறித்தும் சுய நிர்ணய உரிமை குறித்தும் மேடைகளை தாண்டி களத்தில் செயல்பட முனைந்தவர்கள் புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் போன்றோர். இவர்களை எந்த வகையில் திராவிட ஆட்சியாளர்களான கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஒடுக்கினார்கள் என்பது தான் திராவிடத்தரப்பிலிருந்து மறைக்க முயல்கிற வரலாறு.
புலவர் கலியபெருமாள் மற்றும் தமிழரசன் ஆகியோர் தமிழ் தேசிய உணர்வின் மூலங்கள் என்பதை இத்தனை ஆண்டு காலம் திராவிடத்தரப்பு வரலாற்று திரிபுகளை வைத்துக்கொண்டு மண்மூடி மறைத்து வைத்திருந்ததைத்தான் விடுதலை திரைப்படம் மீண்டும் நினைவூட்டி இளைஞர்களை சிந்திக்க வைக்கிறது. அதனால்தான் திராவிடத்தரப்பிலிருந்து கடுமையான பதட்டக் கருத்துக்களை விடுதலை திரைப்படம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்றொன்று வீரப்பன் தேடுதலின் போது மலைவாழ் ஆதிகுடிகளை காவல்துறை எவ்வாறு கொடுமைப்படுத்தியது என்பதையும் இந்த திரைப்படம் பயன்படுத்தி இருக்கிறது என பலரும் உரிமை கொண்டாடுவது உண்மையில் ஆச்சரியம் அளிக்கிறது. நடந்தவை அனைத்தும் வரலாறாய் உறைந்து கிடக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறன் உறைந்துப் போன காலத்தின் நெருப்பு பொறியில் இருந்து தனக்கான கங்கை பற்ற வைத்துக் கொண்டு விட்டார். அது அவரது படைப்பாக்க சுதந்திரம்தான். வரலாறும், பதிக்கப்பட வேண்டிய அடக்குமுறைகளும் யாருக்கும் சொந்தமானது இல்லை. இன்னும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவது என்பது படைப்பாளியின் படைப்பாக்க வரம்பினை நாம் நிர்ணயிக்கிற ஆபத்தை உண்டாக்கிவிடும்.
இவையெல்லாம் தாண்டி இந்த விடுதலை திரைப்படம் ஒரு மகத்தான உரையாடல் வெளியை தோற்றுவித்திருக்கிறது
என்பதுதான் நடந்திருக்கிற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நடவடிக்கை. இந்தத் திரைப்படம் இரண்டாவது பாகம் வெளிவரும்போது வேறு வடிவம் கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது சற்று ஏறக்குறைய சில காட்சிகள் மூலமாகவே இந்த படம் பேசுகிற அரசியல் குறித்து யார் யார் பதட்டம் அடைகிறார்கள் என்பதை அவர்கள் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கவனத்தையும் இந்த படத்தின் திரை மொழி நமக்கு உருவாக்கித் தந்துள்ளது.
இது போன்ற உரையாடல்களை ஏற்படுத்துகிற திரைப்படத்தை படைக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒரு படைப்பாளனின் கடமை. அந்த கடமையை வெற்றிமாறன் வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார்.
“ஒரு படைப்பிற்குப் பிறகு அந்த படைப்பாளன் இறந்து விடுகிறான் ” என்கின்ற புகழ்பெற்ற மேற்கோளுக்கு விடுதலை திரைப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கு அல்ல. இனி வெளிச்சம் படவேண்டியது வெற்றிமாறன் மீது அல்ல விடுதலை திரைப்படத்தின் மீது
அதன்படி நமக்கு முன்னால் விடுதலை திரைப்படம் இருக்கிறது .
அது செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
வெற்றிமாறன் மட்டுமல்ல தமிழ் தேசியர்களான நாமும் மகிழ்ச்சியோடு அதை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் .
அவ்வளவுதான்.
????