பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: பிப்ரவரி 2018 Page 2 of 4

டேனியலின் தாய் மடி…

 

 

crying_baby_by_adelelliethy-d50418n

குழந்தைப் பருவம் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட… பட்டாம்பூச்சிகளின் சிறகு சொருகப்பட்ட..தேனமுது நிரப்பப்பட்ட கனவுகளால் ஆனது என்று பொதுவிதி எழுதப்பட்டு இருக்கிறது. ஆனால் வாழ்வின் நிலையாமையும், அபத்தமும், நிரம்பிய விசித்திரக் கோடுகள் கலைத்துப் போட்ட ஓவியமாய் பால்யத்தைக் கொண்ட குழந்தைகளும் நம்மிடையே இருக்கிறார்கள் நம்மில் யாரால் உணர முடிகிறது..?

எதனாலும் ஆற்ற இயலா காய வடுக்களை இளம் வயதிலேயே விதி சமைத்த கோரத்தால் பெற்று விட்ட குழந்தைகள் தனித்துவமானவர்கள். பொங்கி வரும் புன்னகை தருணங்களிலும் கண்களில் ததும்பும் காயத்தை மறைக்க முடியாமல் தேம்பி நிற்கும் அவர்களது வாழ்க்கை எப்போதும் மர்மமானது. இயல்பான குழந்தைமைக்கும்… அவர்களுக்கு நேர்ந்து விட்ட வாழ்வியல் முரண்கள் அவர்களுக்கு பரிசளித்திருக்கிற சாபங்களுக்கும் நடுவே அல்லாடுகிற ஊசலாட்டம் அவர்களின் வாழ்வு முழுக்க தொடர்ந்து துரத்தி வரும் நிலையாமையின் வடிவம் கொண்ட வெறி பிடித்த ஓநாய்களுக்கு சமமானது.

சிறு வயதிலேயே எதிர்பாராமல் பெற்றோரை இழந்தவர்கள்… எதன் காரணத்தினாலோ பெற்றோரை இழந்து அனாதையாக்கப் பட்டவர்கள்.. வாழ்வின் ஓட்டத்தில் சுமையாகி கைவிடப்பட்டவர்கள்.. உடனிருந்து உறைகிற நோயின் காரணமாய் பெற்றோரின் நடுவே கதகதப்பாய் உறங்குகிற இரவுகளை தொலைத்தவர்கள் என காயம் பட்ட பால்ய காலத்தை கொண்ட குழந்தைகள் சமூக வெளியில் புறக்கணிக்கப்பட்டவர்களாக நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்களை எங்கும் எளிதில் அடையாளம் காணலாம்..சற்றே தயக்கத்துடன்..அச்சத்துடன் அவர்களுடன் உறைந்திருக்கிற வித்தியாசமான உடற்மொழி அவர்களை தனித்துக் காட்டும்.

எத்தனையோ அனாதை இல்லங்களில் …சாலை ஓரங்களில் குழந்தைமைக்கான எவ்வித இயல்புமற்று பிறந்து விட்ட காரணத்திலேயே வாழ்ந்தே தீர வேண்டிய நிர்பந்தம் தான் அவர்கள் எதிர் கொள்கிற மாபெரும் துயரம்.ஏதேதோ ஆலயங்களில் புண்ணியத்தை தேடுபவர்கள் இந்த குழந்தைகளோடு ஏதோ ஒரு நாள் செலவிட்டால்….வாழுகின்ற நாளொன்றுக்கு அர்த்தம் ஏற்படும்.

புறக்கணிக்கப்பட்டு …கைவிடப்படும் ஒவ்வொரு குழந்தையும் தங்கள் ஆன்மாவில் பெரும் வலியை சுமக்கிறார்கள். அதை யாராலும் போக்க முடியாது. விவாகரத்து வழக்கிற்கென தாயாலோ..தந்தையாலோ அழைத்து வரப்படும் குழந்தைகளின் கண்களை பாருங்கள். வலியை சுமந்து மெளனத்தை சுமக்கும் ஊமை விழிகள் அவை.

எனது பால்யம் சென்னை அடையாறு ஆந்திரமகிள சபா என்று அழைக்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் கழிந்தது. என்னோடு இருந்த பலர் பெற்றோரை இழந்தவர்கள். மிக நீண்ட வாரண்டாவில் கம்பி வலை அடைக்கப்பட்ட சன்னலோரத்தில் நின்றவாறே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டே உறைந்து போய் நின்றுகொண்டு இருக்கும் பல சிறுவர்களுக்கு நடுவே நானும் ஒருவனாய் இருந்தக் காலக்கட்டம் அது. எனது நோயின் காரணமாய் நான் பெற்றோரை பிரிந்திருந்தேன். ஆனாலும் மாதத்தின் முதல் வார சனிக்கிழமை அன்று என் அம்மா என்னை பார்க்க வந்து விடுவார். அன்றைய நாளில் பெரும்பாலும் வழிபாட்டு நேரமான காலை 8 மணிக்கு என் அம்மா கும்பகோணத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வந்து எனக்காக காத்திருப்பார். என் அம்மா என்னை காண வந்திருப்பதை பெரும் பாலும் என்னிடம் புன்னகைப் பொங்க அறிவிப்பது அண்ணன்கள் டேனியலும், கில்பர்ட் ராஜாவும் தான்.

குறிப்பாக அண்ணன் டேனியல். அவருக்கு தாய் தந்தை கிடையாது. விடுதிலேயே வளர்பவர். அப்போது அவர் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

என் அம்மா சனிக்கிழமை வந்து… அன்றைய இரவு என்னுடனேயே தங்கி…மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்புவார். ஓவ்வொரு முறையும் அம்மா வந்தவுடன் ..என் கூடவே இரும்மா என்று நான் அடம் பிடிப்பதும்..நான் உன் கூடத்தான் இனி இருக்கப் போகிறேன் என அம்மா சொல்வதும் வழக்கமான நிகழ்வுகள். அப்போது டேனியல் அண்ணனும் அம்மா சொல்வதை ஆமோதித்து என்னை தேற்றுவார். ஆனால்..எங்கள் மூவருக்கும் தெரியும்..அது நடக்கப் போவதில்லை என.. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நான் அம்மா என்னுடன் நிரந்தரமாக இருக்கப் போகிறார் என உறுதியாக நம்பி கனவில் திளைப்பேன். சனிக்கிழமை இரவு அம்மாவை இறுக்கி கட்டிப் பிடித்துக் கொண்டு அம்மாவின் சேலை வாசத்தை முகர்ந்தவாறே நான் அயர்ந்து நிம்மதியாக தூங்கிய உறக்கத்தை இதுநாள் வரைக்கும் தூங்கியதில்லை.. அந்த இரவுகள் என்றும் மங்காத நட்சத்திரங்களானவை என்பது இன்றளவும் நினைவில் பெருகும் நதியென என்னுள் சலசலத்துக் கொண்டே இருக்கும்.

அம்மா ஊருக்கு திரும்ப வேண்டிய ஞாயிற்றுக்கிழமை மதியத்தில் இருந்து நான் அழத் தொடங்கி விடுவேன். என்னை ஆற்றுப்படுத்த மதிய உணவு முடிந்தவுடன் அம்மா எனக்கு கதை சொல்லத் தொடங்குவார் .. எப்போதும் எனக்கு பிடித்த கதை அது மட்டும் தான். எப்போதும் அதைதான் அம்மா சொல்ல வேண்டும். பறக்கும் குதிரை கதை. வானலோகத்தில் இருந்து பறந்து வரும் வெள்ளைக் குதிரை நிலங்களில் இருக்கிற பயிரை மேய்ந்து விட்டு பறந்து போய் விடுவதையும் …அதை அந்நாட்டின் இளவரசன் கண்டு பிடித்து அடக்கி தன் வயப்படுத்துவதான கதை… பாதி கேட்டுக் கொண்டிருக்கும் போதே நான் உறங்கி விடுவேன். ஏதோ ஒரு நொடியில் திடுக்கிட்டு நான் விழிக்கையில் என்னருகில் படுத்திருந்த அம்மா என் பக்கத்தில் இருக்க மாட்டார். நான் கத்தி கூறியவாறே சன்னலோரம் போய் பார்க்கையில்…தூரமாய் கானல் நீர் போல அம்மா போய்க் கொண்டு இருப்பார்…நான் அம்மா…அம்மா என கத்தி தீர்க்கும் போது டேனியல் அண்ணா தான் என்னை கட்டி அணைத்துக் கொள்வார்.

அவரிடம் இருக்கிற வண்ண வண்ண பென்சீல்களை கொடுத்து என்னை வரையப் சொல்லி என் கவனத்தை மாற்ற முயல்வார். ஒரு கட்டத்தில் நானும் சமாதானமாகி வரைவதில் மும்முரமாவேன். அப்படியே அவரோடு படுத்து உறங்கியும் விடுவேன்.

டேனியல் அண்ணா போலியோவால் இரு கால்களும் பாதிக்கப்பட்டு..இரு தோள்களிலும் கட்டை வைத்து நடந்தாலும் கூட..அப்போதே நிறைய வரைவார். பிரார்த்தனை கூட்டங்களில் அவரே பேச்சாளர். கடவுளின் குழந்தைகளான நம்மை கடவுள் என்றும் கைவிட மாட்டார் என உறுதியான குரலில் சொல்லும் போது.. கடவுள் வானிறங்கி வந்து நம் கரங்களை பற்றிருப்பார். அந்த அளவிற்கு உணர்வுகளை சொற்களில் வடிப்பதில் டேனியல் அண்ணா ஒரு தேவதன்.

ஒரு வெள்ளிக்கிழமை மதியம் என்னை டேனியல் அண்ணா தனியே அழைத்துப் போய் தான் சொல்வதை யாரிடமும் சொல்லக் கூடாது எனக் கூறி நாளை உன் அம்மா வருவாங்களா என கேட்டார். கண்டிப்பாக அண்ணா என்ற என்னை .. எனக்கு ஒரு ஆசை டா .. அம்மா மடியில் ஒரு 5 நிமிடம் நான் படுத்துகிட்டா என தயக்கமாக கேட்டார்.

அந்த வயதில் அக்கேள்வியை எதிர்க் கொள்ள என்னால் முடியவில்லை… என் அம்மா..அவங்க மடியில் இவர் ஏன் படுக்கணும் என எனக்கு கோபம். அதெல்லாம் முடியாது…அது என் அம்மா என்று வெடுக்கென்று சொல்லி விட்டு வந்து விட்டேன். திடீரென டேனியல் அண்ணா எனக்கு எதிரியாகிப் போனதாக நான் நினைத்துக் கொண்டேன்

. அன்றைய இரவு உணவின் போது கூட அவரை பார்க்க விரும்பாமல் தவிர்த்தேன்..

மறுநாள் என்னை காண வந்திருந்த அம்மாவிடம் கோபமாய் இதை தெரிவித்தேன். ஏண்டா இப்படி சொன்ன..அவனும் என் மகன் தானே படுத்துட்டு போறான்..பாவம் இல்லையா அவன்., என கேட்ட அம்மாவிடம் அவருக்கு தான் அப்பா அம்மா இல்லையே… அவர் எப்படி உன் மகனாவார் என கேட்ட என்னை அம்மா கோபமாய் பார்த்து விட்டு டேனியல் அண்ணாவை தேடிப் போனார். எங்கு தேடியும் டேனியல் அண்ணா கிடைக்கவில்லை. அம்மா என்னை திட்டியவாறே ஊருக்கு போய் விட்டார்..

அதன் பிறகு இரண்டு நாள் கழித்து டேனியல் அண்ணாவை பார்த்தேன்..அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை.. என்னை பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் எதுவும் பேசாமல் அமைதியாக தலைகுனிந்து சென்று கொண்டிருப்பார்.

அதன் பிறகு சில மாதங்களில் என் மருத்துவ சிகிச்சை முடிந்து ஊருக்கு திரும்பும் போது சொல்லி விட்டுப் போக டேனியல் அண்ணாவை தேடிய போது அவர் சிக்கவில்லை. வேண்டுமென்றே என்னை தவிர்த்திருந்தார்.

கால நதியின் இரக்கமற்ற வேகத்தில் ஆண்டுகள் ஆயின… எனக்கும் திருமணம் ஆகி இரண்டு மகன்களை பெற்றெடுத்தேன்.

ஒரு பணி நிமித்தமாக சென்னை போன போது பல ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மகிள சபா சென்றிருந்தேன். டேனியல் அண்ணா வை பற்றி விசாரித்த போது அவர் இன்னமும் அங்கு இருப்பதாகவும்,அங்கே ஓவிய ஆசிரியராகப் பணி புரிவதாகவும் சொன்னார்கள்.

அவரை பார்க்க போன போது அவர் வகுப்பறையில் ஏதோ வரைந்துக் கொண்டிருந்தார். முடியெல்லாம் நரைத்து அடையாளம் தெரியாத அளவிற்கு வயதாகி இருந்தார்.

அண்ணா…என்று அழைத்த என்னை அவரால் சட்டென அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. நான் தான்னா என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு அவரது கண்கள் ஒளிர்ந்தன. இறுகிக் கட்டிக்கொண்டார். இன்னமும் திருமணம் ஆகாமல் இருந்த அவர் என் தொழில், திருமணம்,என் குழந்தைகள் என அனைத்தையும் கேட்டார்.

இரண்டு பசங்களடா…எப்படி இருக்காங்க…

ஓடியாடி விளையாடுறாங்கண்ணா…அடம் தாங்கல….. என சொன்ன என்னை உற்றுப் பார்த்த அவர் … விடு… நம்மைப் போல இல்லாம நல்லா விளையாடட்டும். கர்த்தரே… பிள்ளைகளுக்கு நன்மை செய்யப்பா என ஜபம் செய்தார்.

பிறகு அவரிடமிருந்து விடைப்பெற்றேன். சில ஓவிய பயிற்சி புத்தகங்களை என் மகன்களுக்கு பரிசாக அளித்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.

ஒரு விஷயம் எனக்கு உறுத்திக் கொண்டே இருந்தது.

ஏனோ அவர் இறுதி வரை அம்மாவை பற்றி கேட்கவும் இல்லை.. நான் சொல்லவும் இல்லை.

ஒரு இரவில்…எல்லையற்ற விடியல்கள் —

 

Ilayaraja-16-2

எப்போதும் இல்லாத அளவிற்கு அந்த இரவு அவ்வளவு அமைதியானதாக என்னுடன் பயணித்துக் கொண்டு இருந்தது. இரவுகள் விசித்திரமானவை. மனித உணர்ச்சிகளை ஒரு இரவால் மூர்க்கம் கொள்ள வைக்கவும், அமைதிப்படுத்தி ஆற்ற வைக்க முடியும் என்பது யாரால் மறுக்க முடியும்.. மனித வாழ்வின் பாடுகளை மனித மனம் அசை போடுவதற்காக இரவு ஒரு நீண்ட அமைதி வெளியை ஏற்படுத்துகிறது.

அப்படி ஒரு இரவில் தான்.. நியான் விளக்குகள் ஒளிர்ந்த அந்த தேசிய நெடுஞ்சாலையில் எனது மகிழுந்து அமைதியாக விரைந்துக் கொண்டு இருந்தது. தனிமை கொப்பளிக்கும் பயணங்களில் எல்லோருக்கும் வழித்துணையாக வாய்க்கும் இளையராஜா தான் எனக்கும் வழித்துணையாய் வாய்த்திருந்தார். மகிழுந்து ஓட்டப் பழகியதில் இருந்து தனிமையாய் இவ்வளவு நீண்ட தூரம் பயணிப்பது இதுதான் முதன் முறை.ஏறக்குறைய தமிழ்நாட்டை குறுக்கே கடக்கிறேன். இந்த பெருநிலத்தில் நானும் நகரும் புள்ளியாக.. விழிப்புற்ற ஆன்மாவோடு.. துளித்துளியாய் சொட்டும் இரவொன்றில் தனிமையின் விரல் பிடித்து கடப்பது நினைப்பது பரவச வெளியில் உன்மத்தம் கொண்டிருந்தேன்..

எல்லோராலும் கைவிடப்பட்ட..நோயுற்ற ஒரு குழந்தையாய் இந்த உலகத்தில் நான் தோன்றினேன். என் பால்யத்தில் என் அம்மா மட்டும் என் தோழி. அவளின் கலங்கும் விழிகளும்..எதிரே இருக்கும் சாயம் போன வீட்டு வசதி வாரியக் குடியிருப்புச் சுவரும் தான் எனது பால்யக் கால நினைவுகள். அம்மாவின் கதகதப்பான உள்ளங்கைகளுக்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்று நம்ப முடியாத எளிய ஆன்மாவை கொண்டிருந்தனாலோ என்னவோ.. இந்த பயணம் எனக்கு மிகப்பெரிய சாகசமாக இருந்தது. வாழவே முடியாது என என்னாலே நம்பப்பட்ட என்னாலும் இந்த உலகில் எந்த புள்ளிக்கும் மிகச்சாதாரணமாக ஒரு பறவைப் போல தனித்து பறந்து போய் விட முடியும் என்கிற பெரு நம்பிக்கையை இந்த பயணமும், என் மகிழுந்தும் எனக்கு தந்திருந்தன..

இரவு விடியலை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது. கண்கலங்கியவாறே என்னுள் மகத்தான நம்பிக்கையை ஏற்படுத்திய அந்த பேரன்பின் வெளிச்சத்தில் எனது பயணம் நெகிழ்வின் தாலாட்டோடு நீண்டது. இரவில் மிகப்பெரிய யானை அமர்ந்து இருந்தது போன்ற உறைந்திருந்த அந்த பெருமலைகளும், ஏற்ற இறக்க சாலைகளும் என்னை பரவசத்தில் ஆழ்த்தி இருந்தன..

சற்றே என்னை ஆசுவாசப்படுத்த … சாலையின் ஒரத்தில் இருந்த அந்த தேநீர் கடைக்கு முன்னால் என் மகிழுந்தை நிறுத்தினேன். ஏனோ இறங்க மனமில்லாமல் இருக்கையை சற்று சாய்த்து வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்திருந்தேன். அது ஒரு எளிய தேநீர் கடை. கடை மூடும் நேரம் போல. அந்த கடைக்காரர் சற்றே கடுகடுப்பும், முணுமுணுப்புகளும் உடைய மனிதராக தெரிந்தார். அந்த கடை வாசலில் அழுக்கு உடைகளோடு அமர்ந்திருந்திருந்த மனநிலை பிசகிய ஒருவரை அவர் ஏசிக் கொண்டிருந்தார். ஏய்..எழுந்து போ.. இனி இங்கே உட்கார்ந்தால் அடிப்பேன்..போ என்றெல்லாம் ஏசிக் கொண்டிருந்தார்.

கடையை மூடி விட்டு கிளம்பும் அவசரத்தில் இருந்த அவருக்கு அந்த மனநிலை தவறியவர் போல இருந்தவர் மிகவும் தொந்தவராக இருந்தார் போல.. கடைக்காரர் ஏதாவது செய்து அவரை விரட்டி விட முயன்றார்.

ஆனால் அந்த ஏச்சு,பேச்சுகளும் அந்த மனநிலை பாதித்தவரை பாதிக்கவில்லை. ஒரு கல்சிற்பம் போல அந்த மனிதர் உறைந்திருந்தார். வெறித்த பார்வையோடும், வாயில் எச்சில் ஒழுக..கலைந்த தலையோடும், தாடியோடும் அவர் அமர்ந்திருந்தது என்னவோ போலிருந்தது. வார்த்தைகளை நீராய் கொட்டி உறைந்திருந்த அந்த மனிதனை அசைக்கப் பார்த்த கடைக்காரர் ஒரு சமயத்தில் அலுத்துப் போனார்.

அருகே இருந்த பண்பலை வானொலியை ஒலிக்க வைத்து விட்டு இருக்கும் நாற்காலிகளை கடைக்காரர் மெதுவாய் அடுக்கி வைக்கத் தொடங்கினார்.

அக்கணத்தில் தான் இளையராஜா பண்பலையில் சோலை பசுங்கிளியே… என்று பாடத்தொடங்கினார். அந்த நள்ளிரவில்.. அப்பாடல் தானாய் தோன்றிய ஊற்றாய் எங்களுக்குள் ஊற தொடங்கியது. அந்த இசையும், அப்பாடலின் வலியும் ஏதோ மனதை பிசையத் தொடங்கினது. அதுவரை கடுகடுப்பாய் இருந்த கடைக்காரர் கூட அமைதியாகி விட்டது போல தோன்றியது. அந்த இரவை தன் வயப்படுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் அந்த பாடல் இழுத்துக் கொண்டே சென்றதை என்னால் உணர முடிந்தது.

பாடல் முடிந்தது. வானொலியை நிறுத்தினார் கடைக்காரர். அந்த நிசப்த வெளியும், கேட்ட இசையும் இந்த உலகை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருந்தன. திடீரென பெருங்குரல் எடுத்து கத்தி அழத் தொடங்கினார் அந்த மனநிலை தவறியவர். அவரை வேதனையோடு கடைக்காரர் பார்த்துக் கொண்டிருந்தார்.

மனித வாழ்வு எத்தகையது..? எதற்காக இந்த பாடுகள்… எதற்காக இவ்வளவு வலிகள்… எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதுதானே நம்மை வலித்து கொல்கிறது…? என்றெல்லாம் என் சிந்தனை பல திசைகளில் விரிந்துக் கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது..

அதுவரை நிறுத்தி இருந்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்தார் அந்த கடைக்காரர். ஒரு தேர்ந்த முதிர்ச்சியோடு ஒரு தேநீரை தயாரித்து ஒரு கண்ணாடிக் குடுவையினுள் ஊற்றி அந்த மனநிலை பிசகியவருக்கு அருகே வைத்தார். சாப்பிட்டு இங்கே படுத்துக்கோ.. என்றவாறே விளக்கையும், அடுப்பையும் அணைத்த வாறே அவர் புறப்பட்டார். அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டே வேக வேகமாய் நடந்து இருளில் கரைந்துப் போனார் அந்த கடைக்காரர்.

ஆனால் மனநிலை பிசகியவர் அழுகையை நிறுத்தவில்லை. நானும் புறப்பட்டேன். மெதுவாய் மகிழுந்தை ஓட்டிக் கொண்டு போன எனக்கு அந்த அழுகை ஒலியை தாங்க முடியவில்லை.

வலியும்..பாடுகளும்..காயங்களும் இல்லாத ஆன்மா யாருக்கும் இல்லாதது தான் கடவுளை தோற்றுவித்து இருக்கிறது என்று உணர்ந்த தருணம் அது.

இதையெல்லாம் தாண்டி ஒரு இசை..ஒரு குரல்..உயிரை உலுக்கி உள்ளுக்குள் புரையோடிப் போன ஒரு காயத்தை கண்ணீராய் சுரக்க வைக்கிறதே… நரகமாகிப் போன மனித வாழ்வில் ஏதோ ஒரு நொடியில் நம்மை ஆற்றுப்படுத்த கண்ணீர் தானே ஒரே வழி.

இதில் யார் மனநிலை பிசகியவர் என்று யோசித்த போது..நாம் எல்லாருமே தான்.. என்று நினைக்க தொடங்கியது…

இரவின் இருளை கிழித்து..என் மகிழுந்து விரைந்துக் கொண்டிருந்தது.

.

ஒரு மணல் வீடும் சொச்ச பாரத்தும்..

22730590_356813458076862_6275861430852755470_n

அந்த பிஞ்சு
விரல்களுக்கும்
ஒரு மணல் வீடு
இருந்திருக்கும்..

அலை தழுவி
கலைக்காத
தொலைவில்..
காக்கிச் சட்டைகளும்
கந்து வட்டியும்
கனவுகளை அழிக்காத
வரையில்…

அந்த மணல் வீடு
அப்படியே
இருந்திருக்கும்..

இரவின்
கரு நிழல்
பகலின் மீதும்
படிய தொடங்கும்
நிலத்தில் தான்
குழந்தைகள் எரியத்
தொடங்குகின்றன…

கொழுந்து விட்டெரியும்
நெருப்பில் பொசுங்கும்
மயிலிறகு தேகங்களுக்கு
எரிவதற்கான காரணங்கள்
தேவையில்லை..

புரியவுமில்லை.

பணம் தின்ன
பிணம் பண்ணும்
நிலத்தில்
இனி ரணம்
சுமக்க இயலாது என
தீ கனம் சுமந்து
எரிகிறார்கள்.

நேற்றைய ஊடகப்
பசிக்கும்..
குற்ற உணர்வற்ற
நமது
முணுமுணுப்புகளுக்கும்
தீ நியாயம்
செய்திருக்கிறது.

இன்றையப் பசிக்கு
நியாயம் செய்ய
சாவின் நாவுகள்
டிஜிட்டல் பாரத
வீதிகளில் தேடி
அலைகின்றன..

எங்கோ முகவரியற்ற
வீதிகளில்
விளையாடிக்கொண்டு
இருக்கும்
குழந்தைகளோ..

அறுக்க கதிரற்று
உயிர் உதிர்க்க
காத்திருக்கும் விவசாயியோ
அவைகளுக்கு கிடைக்கக்
கூடும்..

பிரதமரின் ஆடை
செலவிற்கு கூட
பெறுமானம் இல்லாத
குழந்தைகள் செத்துதான்
போகட்டுமே..

இறக்கை விரித்து
அயல் தேசம் பறக்கிற
அவசரத்தில்
விவசாயி சாவு
விக்கலுக்கு கூட
சமமானதில்லை..

சாகட்டும்.

நீரோவின்
புல்லாங்குழலுக்கு
சாவுகளைப்
பற்றி சங்கடங்கள்
இல்லை.

…..
எல்லாம் கடக்கின்றன.
அவசர கதி வாழ்வில்
மறதி என்பது நீதி.

இன்று
கவலைப்பட..
கோபம் கொண்டு
இரண்டு கெட்ட வார்த்தைகள்
உதிர்க்க..
காரணங்கள் கிடைக்கும்
வரை..

நமக்கு சொச்ச பாரத்தும்
மிச்ச கருப்புப் பண
கனவும் இருக்கவே
இருக்கின்றன..

கூடவே நாம்
உச்சுக் கொட்ட
ஒரு நாள் செய்திகளும்..

ஆகையால் எனக்கு கடலென்றும் பெயர் …

 

header_essay-stormy-nationalgeographic_2474065

நள்ளிரவின்
நட்சத்திர மிதவைகளோடு
எனக்கு முன்
உயிர்ப்புடன்
உரையாடிக் கொண்டிருந்த
அந்த பெருங்கடலுக்குள்
சட்டென பாய்ந்தேன்..

எனக்குள்ளும்
ஆர்ப்பரித்து
கிடக்கிற அலைகளும்..
ஆசைகளாலும்
இருண்மைகளாலும்
இறுகிக் கிடக்கிற
சில நினைவுப் பாசிகள்
படிந்திருக்கிற
பாறைகளும் நிரம்பிக்கிற
கடலொன்று இருக்கிறது
என அறியாமலேயே
பெருங்கடல் என்னை
உள் வாங்கியது.

திணறிய மூச்சுக்கூட்டில்
சில கனவுக் குருவிகள்
கத்திக் கொண்டிருந்ததை
கவனிக்காத பாவனையோடு
மூழ்கி தீர தொடங்கினேன்..

உடைந்த மண்பானை
குடுவை என உடலம்
மாறிப் போனதாய்
உன்மத்தம் கொண்டேன்..

அடுக்கடுக்காய் சரிந்த
வாழ்வின் கசப்பு மீந்த
ஓலைகளில் இன்னும்
மங்காமல் தேங்கிற்று
என் பால்யத்தின்
புன்னகை ஓன்று.

என் விழிகளொடு
கசிந்தவை எல்லாம்
கடலோடு கலக்க..

என்னுள் மிஞ்சியவையும்
கடல் நீலமாய் மாற..

அந்த முழு நிலா இரவில்
நானே பெருங்கடலானேன்..

என்றேனும் உங்களில்
உணர்ச்சிகளின்
விளிம்பில் பேயாட்டம்
ஆடும்
யாராவது உணர்ந்துக்
கூட பார்க்க இயலும்..

சற்று முன் நீர்
தெளித்து
உங்கள் கண்ணீரையோ..
மாசற்ற புன்னகையையோ..
நனைத்து விட்டு
மீண்டும் கடலுக்கே
திரும்பிய அந்த
பேரலை…

நானாக இருப்பேன் என.

இறுதி மேடை..

22310419_354474694977405_8608714965574738064_n

தேர்ந்தெடுக்கப்பட்டு
உருவாக்கப்பட்ட
பொன்னிற மாலை ஒன்றில்..
அந்த சிவப்பு கம்பளம்
விரிக்கப்பட்ட மேசையின்
முன்
அவர்களெல்லாம்
அகம் மகிழ ஒன்று
கூடி இருந்தார்கள்..

கனிவு நிரம்பிய
ஒருவன்
விழிகளை
பிடுங்கிதான்
அம் மேசையின்
மெழுகு வர்த்தி
கொளுத்தப்பட்டிருந்தது.

நம்பிக்கை இறந்த
அவனது
ஆன்மாவின் உதிரத்துளிகள்
அவர்களது கண்ணாடிக்
கோப்பையை செந்நிற மாய்
நிறைக்க…
ஆரம்பித்தது அவன்
எழுதிய கவிதை
ஒன்றின் மேல்…
வன்ம வெறுப்புணர்வின்
வண்ணம் பூசும் வேலை..

காவியமாய் மலரத் தொடங்கிய
கவிதையை அவரவர் தங்கள்
அழுக்குகளுக்கு ஏற்ப
அதை மலிந்த ஓவியமாய்
மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

வெட்டப்பட்ட அவனது
ஆழமான நம்பிக்கைகள்
ஆங்காங்கே
அந்த அறை முழுக்க
மாமிசத்துணுக்குகளாய்
சிந்திக்கிடக்கின்றன..

அவரவரின் துரோகங்களுக்கு
அவனின் சொற்களை
தூக்கிலேற்றி
தங்கள் சொற்களின்
மேல் புனித பூச்சு
நிகழ்த்தினார்கள்.

ஏதோ தருணத்தில்
அவர்களுக்காக
அவன் சிந்திய
கண்ணீரின்
வெப்பத்தில் தான்
அவர்கள்
மாலை நேர
மயக்கத்து குளிர்
காய்ந்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது காலணி
இடுக்குளில் இடறப்பட்ட
அவனது
களங்கமற்ற நேசத்தின்
வண்ணச்சிறகுகள் மீது
எளிதில் எச்சில் துப்பி
தூரப் போனார்கள்.

அவனது இறப்பில்
மகிழ்ந்திருந்த அவர்களுக்கு
தெரியாது..

அவரவர்களுக்கு என்று
ஒரு செந்நிற மேடை
தயாராகி காத்து இருக்கிறது
ஒரு பொன்மாலை விருந்திற்காக..

பூனை வளருங்கள்..

 

22405521_351864861905055_1599742958714680446_n

 

பூனை வளருங்கள்.

உங்களுக்கு
அடிமையாய் இருக்க..

உங்கள் வருகையை
எதிர்பார்த்திருக்க..

உங்கள் கால்களில்
பணிந்து நளிந்து
குழைய..

நள்ளிரவுகளில்
கதகதப்பாய்
உங்களோடு உறங்க..

நீங்கள் மிச்சம்
வைக்கும் எதையும்
நாசூக்கு பார்க்காமல்
நக்கித் தின்ன..

எதன் பொருட்டும்
உங்கள் அதிகாரத்தின்
மீது
சொல்லொன்றும்
உரைக்காமல்
மெளனிக்க..

ஏவும் பொழுதுகளில்
உங்கள் சுட்டு விரல்
காட்டுகிற…
எலிகளையும்
இன்னும் பிறவையும்
வேட்டையாட..

பூனை வளருங்கள்.

அது.
மனம் பிசகும்
தருணமொன்றில்
நம் கழுத்தை
கவ்வும் அபாயம்
இருப்பினும்…

தமிழ்த்தேசியம்- சில புரிதல்கள்.

 

22228191_351255648632643_1871345362821044997_n

தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த்தேசிய இன நலனிற்கான கருத்தியல். இத்தனை ஆண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு..அடிமை இனமாக ஆளப்பட்டு வருகிற ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான கருத்தியல்.

இது மற்ற இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியில் கட்டமைக்கப்படும் கருத்தியல் அல்ல. மாறாக எம் இனத்தின் மீதான பற்றுணர்ச்சியில் உருவான கருத்தியல்.

அதுவும் வெறும் பற்றுணர்ச்சியில் உருவானது அல்ல.. ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் இனத்தாரை இழந்த போது..காக்க முடியாமல் போனது எதனால் என சிந்தித்ததன் விளைவு..புரிதல் .

தமிழ்நாட்டை நேசிக்கும் எவரும் தமிழ்நாட்டினை ஆள உரிமை உள்ளவர்கள் என பேசுபவர்கள் தன்னை தமிழ்த்தேசியர்களாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்… நீங்கள் சர்வ தேசியனாக காட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே..

ஆனால் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்திக் கொண்டு..உலக தேசியம் பேசி கீழ்மைப் பட்டு அம்பலப்பட்டு நிற்கிற திராவிட கருத்தியலுக்கு காவடி தூக்குகிற வேலை.

தமிழ்நாடு தமிழருக்கே வா..இல்லை தமிழ் நாட்டை நேசிப்பவருக்கா… என்றால் வா..வாழ்..நேசி…நேசிக்கப்படு. ஆனால் இம் மண் அதன் பூர்வக்குடிகளுக்கானது என்ற புரிதலோடு நேசி.

என் மண் எனக்கானது என்பதை மறுத்து இங்கே வாழும் பிற மொழி சிறுபான்மை மக்களை இம் மண்ணின் பூர்வக்குடிகளுக்கான அரசியலை எதிர்ப்பு அரசியலாக காட்ட முனைவதுதான் தமிழ்த்தேசியமா..

பிறகு எதற்கு தமிழ்நாடு..தமிழர் உரிமை என்றெல்லாம் பேச வேண்டும்..

இதற்கு இந்தியத் தேசியம் பேசி காவிக்கொடி பிடிப்பவன் எவ்வளவோ மேலானவன். குழப்பாமல் நம்மை எதிர்க்கிறான்.

நாம் தெளிவாக இருக்கிறோம். எதிரிக்கும் இது புரிந்திக்கிறது.

நடுவே குழப்ப நங்கூரமிட்டு..குழப்பக் குட்டையில் திராவிட மீனை தேடும்
,”தோழர்கள் ” மீண்டும்..மீண்டும் அம்பலப்படுவார்கள்..

சாதி ஒழிப்பினை பிரதானப்படுத்துவதன் நுண்ணரசியல் இங்கே ஏற்கனவே வலிமையோடு திகழும் சாதீய உணர்வை இன்னும் வலிமைப்படுத்தவே..ஊரும் ,சேரியும் சேர ஓர்மைப்புள்ளிகளை பேசாது வெறுமனே சாதி ஒழிப்பு அரசியல் பேசுவது பலனற்றது..புனைவுகளுக்கு ஏன் பலன்..இன நலன்..?

வலிந்து கட்டப்படும் கதாநாயக பிம்பம் யாருக்காக..எந்த எழுச்சிக்கு எதிரானது என்றெல்லாம் நமக்கு புரியாமலில்லை..கண்டிருந்த வான் கோழிகளைப் பற்றி கான மயில்களுக்கு கவலை இல்லை.

இருந்தும் தமிழனின் வரலாற்றில் 50 வருடத்திய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க..தூய்மை வாதி பட்டம் சுமப்பதில் தவறில்லை.

சொல்லப்போனால் அன்று சிங்கள பேரினவாத அரசிற்கு வால் பிடித்த..மிருதுவான..இவர்களைப் போலவே தமிழர் நலன் என்ற பெயரில் தமிழ் இன நுண்ணரசியல் பேசி குழப்பிய வரதராஜ பெருமாள் தான் நினைவிற்கு வருகிறார்.

ஆனால் வரலாறு வரதராஜ பெருமாள்களுக்கு உரித்தானது அல்ல..

அது பிரபாகரனுக்கானது.
தற்போது அவர் தம்பிக்கானது.

வேண்டுமென்றே வெளிச்சப் புள்ளிகள் செலுத்தி மின்ன வைக்க கட்டாயத்தில் நாங்கள் இருட்டில் திசைமாறிப் போன விட்டில் பூச்சிகள் அல்ல.

நாங்கள் பகலவன்கள்.

பற்றி எரிவோம். பற்றி பரவுவோம்.

தூக்குக் கயிற்றின் பாடல்..

 

 

21192660_340527729705435_3007562946593908183_nஅந்த தூக்குக்கயிறு
கனவின் வெப்பத்தை
சுமந்து வாறே
இன்னும் ஊசலாடிக்
கொண்டு தான்
இருக்கிறது…

காற்றின் சிறகுகளோடு
பின்னி..
எரிதழலினுடாக கரைந்துப்
போன அனிதா இன்னும்
குரல் வளை நெரிய
இருமிக் கொண்டுதான்
இருக்கிறாள்..

துயர் மிக்க பின்னிரவின்
கடைசித் துளி கரைவதற்கு
முன்னால் சற்றே கவனித்துக்
கேளுங்கள்..

குரல் வளை ஒன்று
நொறுங்கி உடைந்து
கானலாகிப் போன
அவள்
கனவுகளின் கேவல் ஒலி
உங்கள் ஆன்மாவை
தீண்டலாம்..

நள்ளிரவுகளில் விழி எரியும்
வெப்பத்தை
சுமந்து புத்தகங்களின்
பக்கங்களை அவள்
மென் விரல்களால்
புரட்டும் ஒலி குளிர் காற்றால்
போர்த்திக்கிடக்கும்
உங்கள் செவிகளில்
முணுமுணுப்பாய் முனகலாய்
கேட்கக்கூடும்.

ஓடுகள் சரிந்த
வீட்டின் கூரையை
ஊடுருவி பாதரச
பிம்பமாய் மிதந்து
வருகிற
தேவதையின்
கண்ணீர் துளி
விழி மூடி உறங்கும்
உங்கள் விழிகளில் விழலாம்..

விழுந்த சூட்டினில் சுக
கனவுகளோடு கிறங்கிக்
கிடக்கிற உங்கள் இமைகளில்
தீ எரியலாம்…

ஆனால் நாம் இதற்கெல்லாம்
அசரப் போவதில்லை.

வலி மிகுந்த நினைவு
என்றொரு பாலையை
கடக்க மறதி ஒட்டகங்கள்
நம் முன்னால் காத்துக்
கிடக்கின்றன..

எதையும் கடப்போம்.
எதையும் மறப்போம்.
மீறி துளிர்த்தால்
பிக் பாஸ் உலகத்தில்
ஒளிந்துக் கொள்ள
நமக்கு ஓரிடம் உண்டு.

இன்னும் உறுத்தினால்..
எவனையாவது திட்டி
சமூகக் கடமை
ஆற்றி விட்ட அக திருப்தியை
முகநூலின் முட்டுச்சந்தில்
தேடி திரியலாம்..

இன்னும் ஏதேனும்
எட்டிப்பார்த்தால்
எடப்பாடி:தினகரன்
கமல்:, ரஜினி
என்றெல்லாம் யோசித்து
சரிந்துக் கொள்ள
சாக்கடைகள் நமக்குண்டு..

95 வயது முதியவர்
இன்னும் இருக்கிறரா
ஜெ இட்லி சாப்பிட்டாரா
என்கிற சரித்திரக்
கேள்விகளில் நமது மனதை
தொலைக்கலாம்….

என்ன செய்யலாம் ..
இன்றைய சூடான செய்தி
எங்கிருக்கிறது என நோண்டி
நொங்கெடுக்க..
இருக்கவே
இருக்கின்றன ஏற்கெனவே
முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட
விவாத அரங்குகள்.

இவர்கள் விவாதிக்க
வேண்டுமெனில்.
தினந்தோறும் அனிதா
தூக்கில் தொங்கியாக
வேண்டும்..

என்ன செய்வது..

கனன்று எரிந்து தணிந்திருக்கிற
சாம்பலின் ஊடாய் அனிதா
புன்னகைக்கிறாள்.

நம்மைப் பொறுத்த வரை
என்றோ அவள் மரித்துப் போனாள்..

அவளோ மரித்தது நானல்ல.
என்னை
மறந்து ..திரியும் நீங்களே
இறந்துப் போன பிணங்கள்
என புன்னகைக்கிறாள்.

இன்னும் தூக்குக் கயிறு
ஊசலாடிக் கொண்டே
சொல்கிறது..

பிணங்களே…நீங்கள்
என் மீதேறி தொங்கி
என்னை இழிவாக்காதீர்கள்..

நேரடியாக சுடுகாட்டில்
சென்று படுத்து விடுங்கள்..

ஏனெனில் அதுதான்
உங்கள் நாடு..
பிணங்களுக்கான வீடு.

ஹம்ரா தேஷ் கே…
குச்சு குச்சு ஹோத்தா ஹை..

பயண மொழி..

 

road-trip-1

இப்படி ஒரு பயணம்.

தேநீர் கடைகள்.

இரவு ரசித்தல்..

இளையராஜா.

காலை விடியல் வான்
கண்டல்..

பல நினைவுப்புள்ளிகளோடு
கால நதியில் கல்லெறிந்து
பார்த்தல்..

சில துளி கண்ணீர்.

ஆங்காங்கே
பல சிறு புன்னகைகள்..

சாலையை கடக்கும்
முகம் அறியாத
வயதான தாய்
மீது காரணமின்றி
துளிர்க்கிற
மாசற்ற அன்பு..

பக்கத்து இருக்கையில்
நம்மோடு பயணிக்கிற
நமது நம்பிக்கை..

முடிவில் சில கவிதைகள்..

டாட் .

மழையாகிப் போன ஒரு பாடல்..

 

22008461_348378505587024_1053921957577664683_nஎரி வெயிலுக்கு

மத்தியிலும்..

நீண்ட தாழ்வாரத்தின்
முன்னால் படிந்திருக்கும்
இள நிழல் போல..

என் விழிகளில்
மென் குளிராய்
படர்கிறாய்.

உன்னை இமைக்காமல்
பார்க்கிற நொடிகளில்..
நான் காற்றாய் உருக் கொண்டு
மல்லிகைத் தோட்டங்களில்
பூக்களை உதிர்ப்பவனாக
மாறித் திரிகிறேன்..

காட்சிக்கும்…
பார்வைக்குமான
இடைவெளியில்..
எப்படியும்
இழையத் தொடங்கி
விடுகிறது..
மழை நாளொன்றில்
நாம் இருவரும

பகிர்ந்து பருகிய
ஒரு பாடல்.

ஓயாத தூறல் போல
இசை மொழியோடு
ஏதேதோ சொல்லிக்
கொண்டே போகிறாய்..

உன் சொற்களை தவிர்த்து
கொண்டே…
அசையா தேர் போல
என்னை நோக்கி இருக்கும்
உன் விழிகளின்
நீர் வீழ்ச்சியில்..
தலை நுழைத்து
மெய் நனைக்கிறேன்..

சட்டென என்னை
நோக்கி ..சலனமற்ற குளத்தில்
வீசப்பட்ட கல்லாய்..

இப்போ நான் என்ன
சொன்னேன்… எங்கே சொல்லு
என தேர்வு
கேள்வியொன்றினை
மொழி உறைந்திருக்கும்
என்னிடம்
கேட்கிறாய்…

மெளனித்து புன்னகைக்கும்
என்னிடத்தில் ..
நினைவுகளை ஸ்வரங்களாய்
தேக்கி இருக்கும் ஒரு
வயலின் இருக்கிறது…
வாசித்து காட்டவா என்கிறேன்..

முகம் சிவக்க
நீ ஒரு ராட்சஸன்
என்று சொல்லி ரகசியமாய்
புன்னகைத்ததில்
உன் பிம்பம்
படர்ந்திருந்த அந்த
கண்ணாடியில் பனி பூத்தது.

இப்போதும் சொல்வேன்.
நீ பேசிக்கொண்டே இரு…
நான் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்..

ஏனெனில்..
நீ மழை.
கேட்பதை விட…..
பார்ப்பது சுகம்.
நனைவது அதை
விடவும்…

………

https://youtu.be/1gtGQc8Zm3M

 

Page 2 of 4

Powered by WordPress & Theme by Anders Norén