புயல் மழை காரணமாக தலைநகர் சென்னை தத்தளிப்பது குறித்து வருகின்ற விமர்சனங்களை திமுகவினர் கையாளும் விதம் மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இயற்கை பேரிடர் தான், நாம் எதிர்பார்த்ததை விட அதிகமானது தான்.. ஆனாலும் இதுவெல்லாம் இங்கே கேள்வி அல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொடும் வெள்ளத்திற்கு பிறகாக தகுந்த மழை நீர் வடிகால் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில் திமுக,அதிமுக என்கின்ற இரண்டு திராவிட கட்சிகளுமே அக்கறை காட்ட வில்லை.குறிப்பாக திமுகவை பற்றி எல்லோரும் ஏன் வெறுப்பாகிறார்கள் என்றால் எதிர்க்கட்சியாக இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு முறை மழைக் காலத்திலும் திமுக தலைவர்கள் வைத்த விமர்சனங்கள் தான் இன்று அவர்களுக்கே எதிராக போய் நிற்கின்றன. ரூ 4000 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் திட்டம் ஒரு அப்பட்டமான தோல்வி என்பதை ஒத்துக் கொள்ள மறுத்து தான் முதலமைச்சர் தொடங்கி அடிமட்டக்கட்சி தொண்டன் வரைக்கும் நேற்று இருந்த படத்தை பாருங்கள், இன்று இருக்கின்ற நிலையை பாருங்கள் என்றெல்லாம் விளக்கவுரை எழுத வேண்டிய நிர்ப்பந்தங்கள் உண்டாகி இருக்கின்றன.
உண்மையில் பல்லாயிரக்கணக்கான சென்னை நகரத்து மக்கள் புயல் மழையால் பாதிக்கப்பட்டு கையறு நிலையில் இருக்கிறார்கள். புயல் மழை நின்றவுடன் இயல்பான வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது போல அயோக்கியத்தனம் வேறு எதுவும் இல்லை. எதிர்கால வாழ்வாதாரம் என்ற ஒன்றே இழந்துவிட்ட மக்கள் எப்படி மழை விட்ட உடனேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்..?? புகழ் பெற்ற எழுத்தாளர் திரு எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் தான் அச்சுட்டு வைத்திருந்த 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மழை நீரால் வீணாகி விட்டன. இனி நான் என்ன செய்வேன் என்கிற கேள்வியை நம் முன்னால் வைத்திருக்கிறார். இதுபோன்று பல லட்சக்கணக்கான கேள்விகள் சென்னை மாநகரம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் மறைத்துவிட்டு விஷால் திட்டிவிட்டார் பதிலுக்கு நாங்களும் திட்டுகிறோம் என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக் கொண்டிருந்தால் திராவிட மாடல் ஆட்சியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.
உண்மையில் ஒரு மக்களுக்கான அரசு என்ன செய்ய வேண்டும்..??
1. சென்னையை சுற்றி இருக்கின்ற குறிப்பாக மேற்கு பகுதியில் இருக்கின்ற 4000 நீர் நிலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் எவ்வித சமரசமும் இல்லாமல் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
2. எவ்வித சூழலியல் பார்வையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பரந்தூர் விமான திட்டம் போன்ற ஆபத்தான திட்டங்களை ரத்து செய்துவிட்டு.. மழைநீர் காலத்து நீர் சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசே முன்வந்து ஏற்படுத்தி மழை நீரை வெள்ள நீராக வீணாக்காமல் சேமிக்க வேண்டும்.
3. சூழலியல் பிரச்சனைகளால் மாறிவரும் பருவச் சூழலுக்கு ஏற்ப அரசின் திட்டங்கள் மாற வேண்டும். 1950 காலத்திய மழை நீர் வடிகால் திட்ட முறைமைகளில் இருந்து விடுபட்டு நவீன கால மழை நீர் வடிகால் திட்ட முறைகளை கையாண்டு மழை நீரை கோடை காலத்திற்கான சேமிப்பு நீராக மாற்றுவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
3. கடந்த காலங்களில் மழைக்காலம் என்றால் ஒரு மூன்று மாத காலம். ஆனால் இப்போதெல்லாம் மூன்றே நாட்களில் ஒட்டுமொத்த மழைக்காலத்திற்கான தண்ணீரும் மழைநீராக பெய்கிற சூழலை உணர்ந்து, அதற்கான தயாரிப்புகளில் தலைநகரக் கட்டமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு மேலும் சென்னை மாநகரம் விரிவடைந்து கொண்டே போனால் அதனைக் காப்பாற்றுபவர் யாரும் இல்லை என்பதை உணர்ந்து விரிவடைகிற நகரத்தை கட்டுப்படுத்த, குவிக்கிற மக்கள் பெருக்கத்தை தடுத்து நிறுத்த அரசாங்கம் மாற்று வழிகளை உடனடியாக சிந்திக்க வேண்டும்.
4. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் முன் வைப்பது போல சென்னை மாநகரை எல்லோரும் குவிவதற்கான குப்பைத் தொட்டியாக மாற்றாமல், நிர்வாக தலைநகரை திருச்சி போன்ற மாநிலத்தின் மையப் பகுதிக்கு மாற்றப்பட வேண்டும். விரிவாகிக் கொண்டே போகும் தலைநகர் மென்மேலும் சூழலியல் சவால்களை சந்திக்கப் போவது என்பது உறுதி. உடனடியாக இந்த ஆபத்து போக்கினை தடுத்து நிறுத்தி, நமது பக்கத்து மாநிலங்கள் மேற்கொள்வது போல நிர்வாக தலைநகர் ஒன்றினை சென்னை மாநகருக்கு வெளியே அமைப்பது நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும்.
******
விமர்சனங்கள் வைப்பவர்கள் அனைவரையும் வெறுப்போடு பார்க்கின்ற பார்வையை தவிர்த்துவிட்டு மக்கள் நலனுக்கான தொலைதூர சிந்தனையோடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு முதலாவதாக விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் திமுகவினர் தடுமாறுவது அவர்களது தோல்வியை காட்டுகிறது.
இயற்கை என்பது நமக்கு மேலானது தான். ஆனால் அரசு எந்திரம் இழைக்கின்ற தவறுகள் இயற்கை செய்கிற மீறல்களை தாண்டியது என்பதுதான் இதில் அடிப்படை. சாலைகளை சேர்த்து வைத்து மழைநீர் வடிகால்களை அமைக்கிறோம் என்ற பெயரில் பெயரளவுக்கு வேலை செய்துவிட்டு டெண்டர் விட்டு சம்பாதிப்பது அல்ல மக்கள் பணி.
அரசியல் / மக்கள் பணி என்றாலே சம்பாதிப்பது என்கின்ற “திராவிட மனநிலையை “ மாற்றி விட்டு சூழலியல் பார்வையோடு நவீன உத்திகளோடு புயல் மழையை கையாண்டால் இன்று தலைநகர் தத்தளிக்கின்ற கொடும் நிலை ஏற்பட்டு இருக்காது.