Category: அரசியல் Page 9 of 14
‘மக்களால் நான்! மக்களுக்காகவே நான்’ என்று முழங்கிக்கொண்டிருந்த அந்த முழக்கம் இன்று முடங்கியிருக்கிறது. அண்ணா நாமம் வாழ்க,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க என ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் இன்று அடங்கி இருக்கிறது. 75 நாட்களாக மருத்துவமனையில் போராடிப் பார்த்த ஜெயலலிதா இறுதியில் இதய செயலிழப்பால் அடங்கிப் போனார்.
சற்றேறக்குறைய 30 வருடங்களுக்கு மேலான ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் உள்ளடக்கிய பெரும்புதிர்.சகலவிதமான கணக்குகளையும் மிஞ்சிப்பார்த்த காலதேவனின் பெருங்கணக்கு.
ஒரு சாதாரணத் திரைப்பட நடிகையாக இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை (1965)’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கணத்தில் தனது வாழ்க்கை இவ்வாறு பயணப்படப் போகிறது என்று ஜெயலலிதாவே உணர்ந்திருக்க மாட்டார்.
அம்மா சந்தியாவின் பிடிவாதத்தால் திரைத்துறைக்கு நடிக்க வந்த ஜெயலலிதா..தன் தாயார் மறைவிற்கு பின்னர் நாட்டை ஆள தயாரானது சாதாரண கதை அல்ல. என்னளவில் இது எம்ஜிஆரால் நிகழ்ந்தது என்று ஒற்றை வரியால் கடக்க முடியாதது ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை.
‘ஆயிரத்தில் ஒருவன்’ தொடங்கி ‘பட்டிக்காட்டு பொன்னையா’ வரையிலான 28 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்.உடன் இணைந்து நடித்தபோது அவரது அரசியல் விருப்பங்கள் ஜெயலலிதாவின் ஆழ்மனதில் தாக்கத்தினை ஏற்படுத்தியது என்றாலும், ஒரு ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பது ஜெயலலிதாவின் உளவியல் விருப்பமாகத் திகழ்ந்தது. ஒரு மாபெரும் கனவு நாயகியாகத் திரையில் ஜொலித்த நட்சத்திரம், அரசியலில் ஒரு ஆக்ரோஷப் பிம்பமாக வெளிப்பட்டது ஆச்சர்யமான நிகழ்வுதான். பொதுவாக அரசியல் களத்தில் பெண்களின் பங்கு மிக மிகக் குறைவானதே! அதனையும் மீறி அரசியல் களத்தில் நுழைகிற பெண்கள் ஏதோ ஒரு ஆணைச் சார்ந்த பிம்பமாக உருவானார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறு. ஜெயலலிதாவுக்கு முன்னதான அரசியல் பெண் தலைவர்களாக விளங்கிய இந்திரா காந்தி, பெனாசீர் பூட்டோ, சிறீமாவோ பண்டாரநாயகா, சந்திரிகா குமாரதுங்கா போன்ற பல தலைவர்கள் தங்கள் குடும்பத்தில் நிலவிய அரசியல் உணர்வின் காரணமாகவே தலைவர்களாக வெளிப்பட்டார்கள். ஆனால், ஜெயலலிதாவை இந்தப் பட்டியலில் இணைக்க முடியாது. அவருக்கு முன்னதாக அரசியல் ஆர்வமுடைய அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லை. திரைத்துறையில் ஜொலித்தாலும், அரசியலில் மின்னாத நட்சத்திரங்கள் ஜெயலலிதாவிற்கு முன்னரும் பின்னரும் உண்டு. எம்.ஜி.ஆருடன் இருந்த அவரது உறவு அவருக்கு அதுவரை தொடர்பில்லாத அரசியல் கள நுழைவிற்கு அடிப்படையாக விளங்கியது. உலக இலக்கியங்களை, நல்ல புத்தகங்களை தேடி வாசிக்கும் வாசிப்பாளரான ஜெயலலிதா வாசிப்பு பழக்கம் என்றால் கிலோ என்னவிலை என கேட்கும் திரை நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு ஆச்சர்யம்.1981 –ல் அதிமுகவிற்கு கொள்கைப் பரப்பு செயலாளராக பதவியேற்ற ஜெயலலிதா தொடக்கம் முதலாகவே அவரது கட்சியிலேயே கடும் எதிர்ப்புகளை சந்தித்தார்.
1987ல் நிகழ்ந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக முடங்கிப் போன நிலையில் இரண்டு அணிகளாகப் பிளவுற்று, அதிமுகவின் இருபெரும் துருவங்களாக ஜானகியும், ஜெயலலிதாவும் திகழ்ந்தார்கள். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ‘இரட்டைப்புறா’ சின்னத்தில் போட்டியிட்ட ஜானகி தலைமையிலான அணி படுதோல்வியைச் சந்திக்கவே, அத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசானார். பிறகு, இரண்டாகப் பிளந்திருந்த அதிமுக ஒன்றானது; முடங்கியிருந்த ‘இரட்டை இலை’ ஜெயலலிதா வசமானது; ஜெயலலிதா நிரந்தரப்(!) பொதுச்செயலாளராக ஆனது என்பதெல்லாம் வரலாற்றின் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தது.
கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சரானார். ஜெயலலிதாவை ஒரு புதிய தலைமையாக ஏற்று வாக்களித்த அன்றைய தமிழக மக்களுக்கு அது மிகப்பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. துதிபாடும் ஆரசியல், எதேச்சதிகாரத்தன்மை, கட்டற்ற,ஊழல் மலிந்த ஆட்சிமுறை, நிர்வாகக் குளறுபடிகள், வளர்ப்புமகன் திருமணம் என்றெல்லாம் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை ஜெயலலிதா ஏற்படுத்த, அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேட்டினை அடைந்தது.1991-96 இடையிலான ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மீறு ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதற்கான விலையை அடுத்துவந்த சட்டமன்றத்தேர்தலில்(1996) பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா அடைந்த தோல்வியின் மூலம் பெற்றார்..புதிதாக மூப்பனார் தலைமையில் தோன்றிய ‘தமிழ் மாநிலக் காங்கிரஸ்’ திமுகவுடன் கூட்டணியமைக்க, இந்தக் கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு குரல்கொடுக்க தமிழகத்தின் அரசியல் நிலைமை தலைகீழாய் மாறிப்போனது. ‘இனி தமிழ்நாட்டை ஜெயலலிதா ஆண்டால் அந்தக் கடவுளே காப்பாற்ற முடியாது’ என்று அப்போது கூறிய ரஜினிகாந்த் பிறகு, ‘தைரியலட்சுமி’, ‘வீரப்புதல்வி’ என அவரைப் புகழ்ந்தது தனிக்கதை.
ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை மிகவும் விந்தையானது.யாரெல்லாம் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்தார்களோ, அவர்களே பிற்காலத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடிகளாக மாறுவதும், அவரிடமே சரணாகதி அடைவதுமாக நிகழ்ந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக தமிழக அரசியல் வரலாற்றில் நிகழ்ந்து வந்தன.
அடுத்தாக 2002-ல் இருந்து 2006 வரை ஆட்சியை பிடித்த ஜெயலலிதா சென்ற ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த சறுக்கல்கள் மூலம் பாடம் கற்றதாக தெரியவில்லை.
அந்த ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரி, காட்டுத்தர்பார் என்றெல்லாம் ஜெயலலிதாவையும், அவரது ஆட்சிமுறையையும் பொடாச் சட்டத்தின் கீழான தன் கைதின்போது கடுமையாக விமர்சித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோகூட, அடுத்துவந்தத் தேர்தலில் (2006) ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்ததும், ‘தன்னையும், ஜெயலலிதாவையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள்’ என கூறியதும் அதன் நீட்சியாக நிகழ்ந்த விசித்திரங்கள்.
மதுபானக் கடைகளைத் தெருவுக்கு தெரு திறந்ததோடு, அதனை அரசு நிறுவனமாக்கி, படித்தப் பட்டதாரிகளை சாராயம் விற்கும் ஊழியர்களாக மாற்றியது, எஸ்மா சட்டத்தின் மூலமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, திமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட சாலை பணியாளர்களை டிஸ்மிஸ் செய்தது, முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டது, ‘எங்கும் அம்மா’, எதிலும் அம்மா’ என அம்மா மயமாக மாற்றியது, அதிகாரத்துஷ்பிரயோகத்தை எதிர்த்த அரசியல் தலைவர்கள் மீது தனிப்பட்ட முறையிலான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் ஜெயலலிதாவின் ஆட்சிமுறை சிக்கித்தவித்தது. கடந்த 2011ல் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதாவின் அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் தெரியத் தொடங்கியது. அத்தேர்தலில் தமிழுணர்வாளர்கள் ஜெயலலிதாவை ஆதரித்தது அவருடைய சென்ற ஆட்சிக்காலத்து நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய வைத்தது. ஆனால் 91-96 ஆட்சிக்காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக 2014-ல் தனி நீதிமனற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு மீண்டும் ஜெயலலிதாவை சிறைக்குள் அடைத்தது. பிறகு அந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்து நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின் மூலம் விடுதலையானது தனிக்கதை. மீண்டும் 2016-ல் பதவியை பிடித்த ஜெயலலிதா திமுக என்கிற அரசியல் கட்சியின் வரலாற்றில் பெறாத தோல்விக் காட்சிகளை தொடர்ச்சியாக வழங்கி அதிர்ச்சி அளித்தார். ஏறக்குறைய முழுமையாக 3 முறையும்,அடுத்தடுத்து ஐந்து முறையும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஜெயலலிதா தனது இறுதிக்காலக்கட்டத்தில் ஒருசில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தது ஆச்சர்யம் அளிக்கும் செய்தி. ஈழ இனப்படுகொலைக்கு எதிரானத் தீர்மானம், ராஜீவ் காந்தி கொலையில் சிக்குண்ட ஏழு அப்பாவித்தமிழர்களின் விடுதலையில் காட்டிய தீவிரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காட்டிய உறுதி, கச்சத்தீவை மீட்கக்கோரி நடத்திய சட்டப்போராட்டம், மீத்தேன் எரிகாற்றை எடுப்பதற்குக் காட்டிய எதிர்ப்பு, கெயில் குழாய் பதிப்பை அனுமதியாதது, தமிழகத்தில் இலங்கை இராணுவத்தில் பயிற்சியளிக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தது போன்ற நடவடிக்கைகளால் அனைத்து தரப்பினராலும் வரவேற்பைப் பெற்றது.அதேநேரத்தில், கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் சென்னை மக்களை மீட்கத் தீவிரம் காட்டாதது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, ‘வாக்காளப்பெருமக்களே’ என விளித்தது, நிவாரணப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற அபத்தக் காட்சிகளும் ஜெயலலிதாவின் இறுதிக்காலக்கட்டத்தில் நடந்தது ‘பழைய’ஜெயலலிதாவை நினைவூட்டிச் சென்றது. உண்மையில், தமிழ்நாட்டு அரசியலானது கருணாநிதி, ஜெயலலிதா என இருவருக்கும் இடையேயான காழ்ப்புணர்ச்சிக்களமாக மாறியதில் தமிழக மக்கள் திண்டாடித்தான் போனார்கள். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு மேலான கருணாநிதி, ஜெயலலிதா என இரும்பெரும் தலைவர்களுக்கு அதிகாரத்தை மாற்றி மாற்றி அளித்து பரிசோதித்து பார்த்திருக்கிறார்கள். இதில் நகைச்சுவை என்னவென்றால், அந்தப் பரிசோதனையில் சிக்கி மாண்ட எலியாகவே தமிழக மக்கள் இருந்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னமும், உதய சூரியன் சின்னமும் ஒருபோதும் தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை. இருந்தும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் போல தமிழக மக்கள் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களித்து பொன்னான 50 ஆண்டுகளைத் தொலைத்தார்கள். ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்தாலும், ஜெயலலிதா என்ற தனிநபாரின் மரணம் ஒரு பெரும் சோக நிகழ்வு. பெண்ணடிமைச் சமூகத்தில் தோன்றி, எவ்விதமானப் பின்புலமில்லாது சாதியப்பலம், குடும்பப்பலம் போன்ற எந்த ஆதரவுமில்லாது தனித்துவமாக முளைத்து வளர்ந்து கிளைப்பரப்பிய ஜெயலலிதா தமிழக அரசியலில் மறக்க முடியாதவர். நெடுங்காலமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு அனைத்துத்துறைகளிலும் வீழ்த்தப்பட்டிருக்கிற தமிழக மக்கள் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான வெறுப்புணர்வு வடிவமாக ஜெயலலிதாவைக் கண்டு ஆதரித்து வாக்களித்து மகிழ்ந்தார்கள். பாம்பும், ஏணியும் பின்னிப் பிணைந்திருக்கிற பரமப்பதம் போன்ற ஆட்சிமுறையை நிகழ்த்திக் காட்டிய ஜெயலலிதா இன்று தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு காற்றோடு காற்றாகக் கரைந்திருக்கிறார்.
தனது ஆரம்பக்காலப் பேட்டியொன்றில், ‘என் தாயார் சந்தியா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அரசியலுக்கே வந்திருக்க மாட்டேன். அப்படி வராதிருந்தால், சமூகசேவகியாக மாறியிருப்பேன்’என ஜெயலலிதா கூறியுள்ளதை இக்கணத்தில் நாம் நினைவு கூறலாம். ஜெயலலிதாவின் ஆழ்மனதில் தமிழக மக்களுக்கு நன்மைப் பயக்கக்கூடிய ஒரு ஆட்சிமுறையைத் தர வேண்டும் என்ற எண்ணம்கூட இருந்திருக்கக் கூடும். ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஆட்சிமுறை ஒரு நிகழ மறுத்தக் கனவு.
இன்னும் எனக்கு நினைவிருக்கிறது..
கடும் கூட்டத்திற்கிடையே அந்தப் பெண் அந்த வாகனத்தில் இருந்து உதைத்து கீழே தள்ளப்பட்டார். கண்ணீரும், ஆவேசமும், உற்ற துணையை இழந்த துயரமும், அக்கணத்தில் பட்ட அவமானமும்.. அந்த நொடியை அப்பெண்ணின் ஆழ் மனதிற்குள் உறைய செய்திருக்கக் கூடும்.
இன்று போல் அந் நாட்கள் இல்லை. பல்வேறு செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளால் மின்னும் வரவேற்பு அறைகள் கொண்ட இல்லங்கள் அன்று இல்லை. ஒரே ஒரு தொலைக்காட்சி. தூர்தர்சன் மட்டுமே. கொடைக்கானலில் இருந்து உயரமான ஆண்டனா மூலம் பெறப்படுகிற அலைவரிசை கொண்டு இயங்குகிற ஏதோ ஒரு தொலைக்காட்சி. தெருவிற்கே ஒரு வீட்டில் மட்டுமே. சற்றே கருப்பு வெள்ளையில் தடுமாறும் சிக்னல்களோடு தெரிந்த டிசம்பர் 24 1987-ல் இறந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது நடந்த அந்நிகழ்வினை 80 களில் பால்யம் கொண்ட யாராலும் மறக்க முடியாது.
அன்று நடுத்தரப் பெண்ணாக இருந்த ஜெயலலிதாவை எம்ஜிஆரின் உடல் இருந்த வாகனத்தில் இருந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகி அவர்களின் உறவினர் தீபன் (பெயர்..?) உதைத்து கீழே தள்ளிய காட்சியை கண்டவர்கள் யாரும் அதன் பின்னால் நிகழ இருப்பவைகளை அன்றைய தினம் ஊகித்து இருக்க முடியாது.
ஒரு வித்தியாசமான உறவின் அலைவரிசை விகிதத்திற்குள் எம்ஜிஆரும் ,ஜெயலலிதாவும் அன்றைய நாட்களில் இருந்தார்கள்.அதை இருவர் திரைப்படத்தில் மணிரத்னம் மிக நுட்பமாக திரைமொழி படுத்தி இருப்பார். அக்காலப் பத்திரிக்கைகளில் ஜெ -க்கும், எம் ஜி ஆருக்கும் இடையே பகை, எம்ஜிஆரை கவிழ்க்க ஜெ சதி என்பதான செய்திகள் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கும்.அதிமுகவில் அன்று நிலவிய அதிகார அரசியல் போட்டிகள் காரணமாக திட்டமிட்டு செய்யப்பட்ட லாபி பத்திரிக்கை செய்திகள் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருந்தன.
இவ்வாறான செய்திகள் வந்த போதும் கூட ஜெயலலிதா அதிமுகவின் வெளிச்சப்புள்ளியாகவே அன்று திகழ்ந்தார். ஜெயலலிதா இருக்கும் மேடையில் எம்ஜிஆர் சற்றே புன்னகை கலந்த பெருமிதத்துடனே காணப்பட்டார். குறிப்பாக எம்ஜிஆருக்கு செங்கோல் கொடுக்கும் அந்த புகைப்படம். இதழோரம் கசியும் மெல்லிய புன்னகையோடு எம்ஜிஆர் இருக்க..மலர்ந்த முகத்தோடு ஜெ காட்சியளிக்கும் அப்புகைப்படம் மிகப் பிரபலம்.
எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் எம்ஜிஆர் மனைவி ஜானகியை முன் மொழிந்தார்கள். ஆனால் மக்களோ எம்ஜிஆரின் வாரிசாக ஜெயலலிதாவை வழிமொழிந்தார்கள்.
ஏதோ ஒன்று ஜெயலலிதாவை எம்ஜிஆரோடு பிணைத்திருந்தது. யாருக்கு புரிந்ததோ,இல்லையோ அந்த அலைவரிசையை, வேதியியலை மக்கள் புரிந்து இருந்தார்கள்.அதனால் தான் மக்கள் எம்ஜிஆரின் மறு வடிவமாகவே ஜெ .வை கண்டார்கள். முட்பாதையை தன் அளப்பரிய மனத்திடத்தால் வென்ற ஜெவை ..ஒரு காலக்கட்டத்தில் எம்ஜிஆராகவே பார்க்க தொடங்கினர் மக்கள்.
———————————————————–
போயஸ் தோட்டத்தில் இருந்து தலைமைச்செயலகம் செல்லும் வழியில் இருக்கும் எம்ஜிஆர் சமாதியை பல பொழுதுகளில் ஜெ.கடந்திருப்பார்.மின்னும் விழிகளோடு அந்த இடத்தை கடக்கும் போது அவர் அடைந்திருக்கும் மனப் போராட்டங்களை யார் அறிவார்..?
எந்த டிசம்பர் மாதத்தில் …வாகனத்தை விட்டு உதைத்து கீழே தள்ளப்பட்டரோ, அதே டிசம்பர் மாதத்தில் அதேப் போன்ற வாகனமொன்றில் சகலவிதமான அரசு மரியாதைகளோடு எம்ஜிஆருக்கு அருகிலேயே நிரந்தமாக இருக்க ஜெ.பயணப்பட்டு விட்டார். எம்ஜிஆர் மனைவியான ஜானகிக்கு கூட கிடைக்காத அந்த நிரந்தர இடம்..ஜெ-க்கு.
எம்ஜிஆர்-ஜெயலலிதா என்ற அந்த இருவரில்.. இது யாருடைய விருப்பம்..??
…………………………………..
அவரை உதைத்து தள்ளிய காலம் ..அவரை போற்றி,புகழ்ந்து ,கண்ணீர் விட்டு கதறி முடித்திருக்கிறது.
பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகளை, திடுக்கிடும் திருப்பங்களை , விதியின் சதிராட்டங்களை, சோதனைகளை தன் வாழ்வில் கண்டு களைப்புற்ற அம்மையார் ஜெயலலிதா ..சதா கடலலைகள் போல கொந்தளித்துக் கொண்டிருந்த தன் வாழ்வினை அமைதிப் படுத்திக் கொண்டு விட்டார்.
ஒரு பெளர்ணமி இரவில் ..மெரீனா கடற்கரைக்கு செல்லும் யாரேனும் பார்க்கக்கூடும்.
தூரத்து இருட்டில் யாரோ இருவர் ..கடலலைகள் கால்களில் உரச.. மெல்லிய சொற்களோடு உரையாடிக் கொண்டே நடந்து செல்வதை .
இதயம் பேசும் மொழிகள் புரிந்தவர்களே…
அவர்களை மெல்லிய புன்சிரிப்போடு கடந்து செல்லுங்கள்.
தொந்தரவு செய்யாதீர்கள்.
——————————
மொழிப்பெயர்க்க முடியா
நினைவின் சொற்கள்
வானம் முழுக்க
வசீகர
நட்சத்திரங்களாக..
கண்கொண்டு
அதை வாசிக்க
முடிபவர்
பாக்கியவான்கள்.
ஏனெனில் இந்த
மண்ணுலகமும்..
ஏதோ ஒரு கனிவு
சுரக்கும் இதயமும்
அவர்களுக்கு
இங்கேயே சாத்தியம்.
இருள் சூழ்ந்து கிடந்த அந்த தெருவில் வெள்ளை உடையுடன் சில இளைஞர்களுடன் அவர் வேக வேகமாய் நடந்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டின் முன் நின்று கைக்கூப்பி துண்டறிக்கை கொடுத்து விட்டு சென்ற அவருக்கு சில கதவுகள் மட்டும் தான் திறந்தன. பல கதவுகள் திறக்கப்படாமல் போகவே கதவு இடுக்கில் துண்டறிக்கையை வைத்து விட்டு அவர் நம்பிக்கையுடன் நகர்ந்தது ஏதோ அந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. மனித வாழ்வின் நம்பிக்கை அம்சங்களில் எப்போதும் தளர்வைக் கொண்டிருப்பவன் நான். ஆனால் அவரோ நம்பிக்கையின் உருவாக நடந்து சென்றது எனக்கு ஏதோ ஒரு பாடத்தை அவர் சொல்ல வருவது போன்ற உணர்ச்சி. நீண்ட தூரம் நடந்து வந்ததால் அவருக்கு முச்சிரைத்தது. ஏற்கனவே இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த அவரை காணும் போதெல்லாம் அருகிலிருந்த எங்களுக்கு கவலையாகத்தான் இருந்தது. ஏன் இந்த மனிதன் இப்படி நடக்கிறான்.. யாருக்காக நடக்கிறான். எந்த கனவினை நோக்கி அவன் இப்படி நடக்கிறான்..?
——————————————————
அண்ணன் நல்லதுரை.
கடந்த 7 வருடங்களாக அவருடன் தான் இருக்கிறேன். 2008 ஆம் ஆண்டு ஈழ ஆதரவு போராட்டங்களை வழக்கறிஞர் போராட்டமாக மாற்றிய மாபெரும் கிளர்ச்சியாளர் அவர். தஞ்சையில் இருந்துக் கொண்டு தமிழ்நாட்டையே வழக்கறிஞர்கள் போராட்டத்தால் நகர்த்துக் கொண்டு சென்றதில் அவருக்கு பெரும் பங்கு. அந்த காலத்தில் தான் நானும் அவரும் அண்ணன் தம்பிகளானோம் .பிறகு அண்ணன் சீமானோடு நான் நாம் தமிழரில் இணைந்து இயங்கத் தொடங்கிய காலத்தில் ..தஞ்சையில் நாம் தமிழரை உருவாக்க சீமான் அண்ணன் என்னிடம் சொன்ன போது என் நினைவிற்கு வந்தவர் அண்ணன் நல்லதுரை. நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த அவரை செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் அண்ணன் சீமானோடு உரையாட அழைத்த போது..நல்லதுரை அண்ணனிடம் இணைந்து இயங்குவதைக் காட்டிலும்.. சீமான் அண்ணனிடம் கேட்க அவரிடம் கேள்விகள் நிறைய இருந்தன. அண்ணன் சீமானும் , நல்லதுரை அண்ணனின் கேள்விகளை உற்சாகமாக எதிர்க்கொள்ளவே..ஆரம்பித்தது ஒரு அற்புதமான உரையாடல்.. முடிவில் நல்லதுரை நாம் தமிழரின் பிரிக்கமுடியா ஒரு அங்கமாக மாறிப்போனார்.
பிறகு பல்வேறு சூழல்கள். போராட்டங்கள், கூட்டங்கள் என நாம் தமிழர் இயக்கத்தினை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றுவதில் அண்ணன் நல்லதுரையின் பங்கு மகத்தானது. தஞ்சை டெல்டா மாவட்டத்தை சுடுகாடாக்க வந்த திட்டமான மீத்தேன் எரிகாற்று எடுக்கும் திட்டத்தினை முதன் முதலாக அறிந்து போராட்டக் குரல் எழுப்பிய முதல் நபர் அண்ணன் நல்லதுரைதான். அது போல முள்ளிவாய்க்கால் முற்றம் காக்க அய்யா நெடுமாறனோடு திருச்சி சிறையில் 1 வாரத்திற்கு மேலாக சிறை கண்டார். இப்படி போராட்டமே வாழ்க்கையாக கொண்ட ஒரு மாமனிதர், சிந்தனையாளர்தான் தஞ்சை தொகுதியின் எங்களது வேட்பாளர்.
ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல தேர்தல் இல்லை. அது முற்றிலும் பண ஓநாய்கள் விளையாடுகிற…ஒன்றையொன்று கடித்து புசிக்கிற வேட்டைக்களம். அதிகார வெறி பிடித்த ஓநாய்கள் வேட்டையாடுகிற போது சிந்துகிற கறித்துண்டுகளை கவ்விப் பிடிக்கிற நாய்களாக மக்களை மாற்றுகிற வேலையை ஜனநாயகத்தை வீழ்த்தி பணநாயகம் செய்துக் கொண்டு இருந்தது. எங்களிடம் உழைப்பு இருந்தது.வியர்வை இருந்தது. வயிற்றினை பொசுக்கும் பசி இருந்தது. அடிவயிற்றில் இருந்து ஓங்காரமாய் எழும் ஓராயிரம் கேள்விகள் இருந்தன..
ஆனால் அதிகாரத்தை புசிக்க எதையும் இழக்கத்துணிந்திருந்த அவர்களுக்கு முன்னால் இலட்சியத் தாகம் மின்னும் விழிகளோடு நாங்கள் நிற்கையில் ..உள்ளுக்குள் அவர்கள் மிரண்டுதான் போனார்கள். நாங்கள் பேசும் இடங்களில் எல்லாம் கரைவேட்டிகள் தெறித்து ஓடின. அடிமைகளே..துரோகிகளே என்றெல்லாம் எங்கள் குரல்கள் உயருகையில் .. பணம் கொடுத்து மக்களை பிணங்களாக்கி கொண்டிருந்தவர்களின் விரல்கள் நடுங்கத்தான் செய்தன.
ஆனாலும் நாங்கள் தோற்றுத்தான் போனோம்.
கருணாநிதி யோக்கியமானவர் என்றோ, ஜெயலலிதா ஆகச்சிறந்த ஆட்சியாளர் என்றோ மக்கள் ஏமாந்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நம்பினோம். ஆனாலும் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அதிகக் காசு கொடுத்தவனுக்கு தங்களை விற்றுக் கொண்டார்கள்.
சாதி பின்னணி, மத அடையாளம்,நட்சத்திர பிரச்சாரம், மலையளவு குவிக்கப்பட்டு செலவழிக்கப்படும் பணம் என எதுவும் இல்லாமல் எளிய பிள்ளைகள் தெருவெங்கும் பிரபாகரன் படத்தை தூக்கிக் கொண்டும், நம்மாழ்வார் படத்தை தூக்கிக் கொண்டும் நடந்தார்கள். சராசரி 22 வயதுடைய தாகம் கொண்ட இளைஞர் கூட்டம் தஞ்சை தெருக்களில் அலைந்த போதுதான். ..எதிரே வெள்ளை சொகுசுக்கார்களில் பணப்பெட்டிகளோடு அவர்களது எதிராக நிற்பவர்கள் திரிந்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த கட்சிகளின் தொண்டர்களே மாபெரும் மகிழுந்துகளில் திரிய..அதே சாலையில் வியர்வை முகத்தோடு எங்கள் வேட்பாளர் நடந்துக் கொண்டிருந்தார். அது ஒரு மாதிரியான சமூக முரண். பணம் கொண்டவர்கள் மட்டுமே அதிகாரத்தை அடைய முடியும் என்பதற்கு எதிரான ஒரு கலகத்தை எளிய இளைஞர்களைக் கொண்டு நடத்துவதற்கான கனவும், உழைப்பும் மட்டுமே எங்களுக்கான தகுதி.
அமைச்சர்களும், மாபெரும் செல்வந்தர்களும் எங்களை அலட்சியப் பார்வையில் கடந்தார்கள். நாங்கள் விழிகளில் நெருப்பை சுமந்து ஏதோ ஒரு கனவில் அலைந்தோம். ஆனால் மக்களை ஏற்கனவே விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு.. நாங்கள் ஒரு பொருட்டே அல்ல என்பதையும் உணர்ந்திருந்தோம்.
இருந்தும் ஒரு நம்பிக்கை. மக்கள் காசுக்கு விலைக்கு போகாமல்..ஜனநாயக நெறிகள் மீது பற்றுறுதி கொண்டு நிற்பார்கள் என்ற நம்பிக்கை…, ஒரு பக்கம் ஓரமாய் எங்களுக்குள் சுரந்துக் கொண்டுதான் இருந்தது.
இறுதி மூன்று தினங்கள் சீமான் அண்ணனும் எங்களோடு இணைந்தார். மாட்டு வண்டியை மேடையாக்கி பேசிய அரசியல் தலைவர்..பணத்தை வைத்து மக்களை மாட்டு மந்தைகளாக விலை வாங்கியவர்களுக்கு சற்று உறுத்தலாக தான் தெரிந்தார்.
அவரும் நடந்தார். திரிந்தார். வியர்வை உப்பாய் உடலில் பூக்க..அடி வயிற்றுகுரலோடு அன்னைத்தமிழினத்தின் விடுதலைக்கான கத்தி தீர்த்தார்.
தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. 1192 மானத்தமிழர்கள் எங்களை அங்கீகரித்து இருக்கிறார்கள். இலட்சங்கள் வென்று இலட்சியங்கள் தோற்றது போன்ற ஒரு அவல நாடகம் நடந்தேறி முடிந்து விட்டது.
என்ன செய்வது என யோசிக்கும் போதுதான்..
எனக்கு கிட்டு என்கிற எங்கள் தம்பி நினைவுக்கு வந்தான்.
பிரச்சாரத்தில் இருந்த நாளொன்றில் பேசிக் கொண்டே சென்ற எனக்கு பசி அடிவயிற்றை கிள்ளவே.. அண்ணன் நல்லதுரையிடம் இன்னிக்கு முடிச்சிகிடலாமா அண்ணே என்றேன். அண்ணனும் ஆமா..தம்பிகள் ரொம்ப நேரமாக நடக்குறாங்க..என்றார்.
மெதுவாய் அவர் அருகிலிருந்த கிட்டுவிடம் தம்பி முடிச்சிப்போம்.. என்று சொல்லவே அண்ணே..இன்னும் இரண்டு தெரு இருக்கு…வாங்க நடப்போம்..என்று சொல்லிக் கொண்டே அவன் முன்னேறி நடந்துக் கொண்டே சென்றான்.
இதை பார்த்து சற்று அதிர்ந்து நான் அருகில் இருந்த குகன் குமாரை பார்க்கவே அவர் சிரித்துக் கொண்டார். அப்படி தான்னே அலையுறோம்.. என்ற அவரின் கரத்தை நான் மென்மையாக பற்றினேன்.
அண்ணன் நல்லதுரையும் எம்மொழியும் சொல்லாமல் கிட்டு பின்னால் நடந்துக் கொண்டே போய்க் கொண்டே இருந்தார்,
அவர்கள் சென்றுக் கொண்டே இருந்தார்கள்.
இருப்பார்கள்.
தேசிய இனம் என்ற சொல்லுக்கு சமகாலத்தில் பல விரிவான விளக்கங்கள் கிடைக்கின்றன. ஒரு பொது மொழி, பொதுவான வாழ்க்கை முறை, ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, ஒருபொதுவான பொருளியல் அமைவு, தனிப்பண்பாட்டின் சிறப்பியல்புகள் இவைகளால் அந்த இனத்திற்குள்ளாக ஏற்படுகின்ற பொதுவான உளவியல் உருவாக்கம் ஆகியவற்றைப் பெற்று வரலாற்றின் போக்கில் இணைந்த பல்வேறு இனக்குழுக்கள் இணைந்து அமைந்த ஒரு நிலையான சமுதாய மக்களே தேசிய இனமென வரையறுக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஜே.வி. ஸ்டாலின் ஒரு மொழி வழி அமைந்த ஒரு தேசிய இனத்தை (Linguistic Nationality) நான்கு முதனிலை பண்புக் கூறுகளால் வரையறுக்கிறார். அவையாவன. 1. பொதுமொழி 2. தொடர்ச்சியான ஆட்சி எல்லை 3. பொதுவான பொருளாதார வாழ்க்கை அமைவு 4. பொது பண்பாட்டின் வாயிலாக எழும் தாம் ஓரினம் என்கிற உளவியல். தேசிய இன வரையறையில் முதன்மை அம்சமாக மொழியை கருதுவது மார்க்சிய அணுகுமுறை ஆகும்.
மனித இனம் தோன்றிய காலம் தொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனின் சமூக வாழ்க்கை மொழி வாயிலாகவே நிகழ்ந்து இருக்கிறது. மொழியே மனித இனமொன்றின் முதன்மை அடையாளமாக திகழ்ந்து இருக்கிறது. மொழியற்ற மனித சமூகத்தை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது. மொழியே மனித நாகரீக வளர்ச்சியின் போக்கினை தீர்மானித்தது. எனவே தேசிய இன வரையறையில் மொழியே முதன்மை கூறாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.
ஒரு மக்கட் கூட்டம் தேசிய இனமாக உருவாக்கம் கொள்ளுதலில் அயலார் படையெடுப்பு, இயற்கை சீற்றங்கள் போன்ற புறவெளி காரணிகளும் உதவி செய்கின்றன. எடுத்துக்காட்டாக இந்தியா ஒரு தேசம் அல்ல. பல்வேறு தேசிய இனங்கள், 200க்கும் மேற்பட்ட மொழிகளைப் பயன்படுத்துகிற மக்கள் கூட்டம் வாழுகிற மிகப்பரந்த கண்டம். இந்த நிலப்பரப்பை வெள்ளையர்கள் தாங்கள் ஆள்வதற்கு உகந்தவாறு ஒரு நாடாக மாற்றினார்கள். இந்திய நிலப்பரப்பு அதற்கு முன்னதாக ஒற்றையாட்சியின் கீழ் இருந்ததில்லை. பல்வேறு மன்னர்கள், குறுநில மன்னர்கள், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் என பிளவுப்பட்டு கிடந்த ஒரு நிலப்பரப்பின் மக்கள் அக்காலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உண்டாக்கப்பட்ட செயற்கை தேசிய உணர்வின் மூலம் ஒன்று பட்டனர். அந்த செயற்கையான தேசிய உணர்வு வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறிய கணத்திலேயே நீர்த்துப் போய் விட்டது. மேலும் அந்த செயற்கை உணர்வு மேலும் நீட்சி கொள்வதற்கான அவசியமோ, தேவையோ அதற்கு பிறகு இல்லை. செயற்கை மயக்கம் வடிந்தவுடன் அவரவர் மொழி, நிலப்பரப்பு சார்ந்த இயல்பான தேசிய உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தர தொடங்கி விட்டனர். எனவே மொழி வழி சார்ந்த, நிலப்பரப்பினை சார்ந்த தேசிய இன உருவாக்கமே இயற்கையானது.
பட்டாளி வர்க்க இணைப்பால் உலகப்புரட்சியை ஏற்படுத்த கனவு கண்ட மாமேதை மார்க்ஸ் கூட பட்டாளிகளின் இணைப்பு தேசிய இன உணர்வின் அடிப்படையில் எழுவது என்பதே சாத்தியம் என்கிறார்.
தேசிய இன சிக்கல்களை மார்க்சிய அணுகுமுறை மூலம் தான் தீர்க்க வேண்டும் என்பதில் புரட்சியாளர் லெனின் தெளிவாக இருந்தார். அதற்கு அவர் மூன்று விதமான அளவுகோள்களை கொண்டிருந்தார். 1. வேறுபட்ட பல்வேறு தேசிய இனங்களைச்சார்ந்த உழைக்கும் மக்களிடையே புரிதல் அடிப்படையில் அமைகிற ஒற்றுமை அல்லது இணைவு 2. சமமான வாழ்வியல் மற்றும் பொருளியல் , அதிகாரங்களை கொண்டதுமான தேசிய இனங்களின் உழைக்கும் மக்களிடையே தோன்றும் சமத்துவம் 3. தனது இறையாண்மையை தானே முடிவு செய்து கொள்கிற தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை.
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து மார்க்ஸைப் போற்றுகிற, லெனினைக் கொண்டாடுகிற மார்க்சிய கம்யூனிஸ்ட்களின் தத்துவ நிலைப்பாடு லெனின் கொண்டிருந்த கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானது. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து கம்யூனிஸ்டுகளின் கருத்து என்ன என்கிற அண்ணன் சீமானின் கேள்விக்கு இறுதிவரை மார்க்சிய அறிஞர் அருணானால் பதில் சொல்ல இயலாமல் போனது இதனால் தான்.
1972-ல் தேசிய இன சிக்கல் குறித்து மார்.கம்யூனிஸ்ட் ஆராய்ந்து தீர்மானம் இயற்றிய போது அத்தீர்மான வாசகங்களில் “ 1947 இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் தேசிய இனச்சிக்கல் தீர்ந்து விட்டது “ என்ற சொற்றொடர் இடம் பெற்றது. இதுதான் கம்யூனிஸ்ட்டுகள் தேசிய இன விடுதலை சார்ந்து கொண்டிருக்கிற புரிதல்.
****
இனி தமிழர் என்ற இனமானது எப்படி ஒரு தேசிய இனமாக உருக்கொள்கிறது என்பதை நாம் விரிவாக ஆராய்வோம். தேசிய இனம் என்ற சொல்லுக்கான அடிப்படைக் கூறுகளைப் பெற்று தகுதிவாய்ந்த தனித்த ஒரு தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் திகழ்கிறது. ஒரு தேசிய இனத்தின் அடிப்படை கூறான பொதுமொழி அடிப்படையில் நம் தாய்மொழியாம் தமிழ் தொன்மையான சிறப்பியல்பு வாய்ந்த தேசிய இனத்தின் தாய்மொழியாக விளங்குகிறது. தமிழ்மொழியின் தொன்மை குறித்து பல்வேறு ஆய்வுகள் வியக்கத்தக்க முடிவுகளை அறிவித்து வருகின்றன. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழியான தமிழ்மொழி என்று சிறப்பு பெற்ற நம் தாய்மொழி ஒரு தேசிய இனத்தின் பொதுமொழி அடிப்படையில் தகுதிவாய்ந்த செவ்வியல்மொழியாக திகழ்கிறது.வரலாற்றின் பக்கங்களில் நீண்டகாலமாக தமிழர் என்ற தேசிய இனத்திற்கு சற்றே ஏறக்குறைய தொடர்ச்சியான தனித்த நிலப்பரப்பு இருக்கிறது. சங்கக்காலம் தொடங்கி நவீன காலம்வரை இருக்கின்ற இலக்கிய தரவுகள் கொண்டே தமிழ்த்தேசிய இனத்தின் தொடர்ச்சியான ஆட்சிப்பரப்பு குறித்து நாம் தெளிவு பெறலாம். உலகத்தின் முதன்முதலாக இனம் தமிழினம் என்றும், முதன் முதலாக தோன்றிய மாந்தர் தமிழர் என்றும், அவர் பேசிய மொழி தமிழ்மொழி என்றும் நவீன அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்த்தேசிய இனத்தின் மாபெரும் ஆய்வியல் அறிஞரான பாவாணர், தமிழர் முதன்முதலாக தோன்றியது இயற்கைசீற்றத்தால் அழிந்து கடலுக்கு அடியில் கிடக்கிற குமரிக்கண்டத்தில்தான் என தனது தரவுகள் மூலம் அறிவுலகத்திற்கு எடுத்துரைக்கிறார். எனவே, வரலாற்றின் போக்கில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பு, ஒரு பொதுமொழி கொண்டு உருவான இனம் தமிழர் என்ற தேசிய இனம் என்பது உறுதியாகிறது. மேலும், தமிழர் தனது பொதுவான பொருளியல் வாழ்வியலை தனது தேசியத்தொழிலான விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் கொண்டே உருவாக்கினர். மண் சார்ந்த விவசாயத் தொழிலே தமிழரின் தேசியத்தொழிலாக அறியப்பட்டிருக்கிறது. முப்போகமும் விளையக்கூடிய விளைநிலங்களும், ஒரு போகம் விளையக்கூடிய வானம் பார்த்த புன்செய் நிலங்களும்நிரம்பிய தமிழகம் விவசாயத்தை, அதுசார்ந்த பொருளியல் வாழ்வினை தனது உயிர்நாதமாகக் கொண்டு விளங்கியது .தமிழ்த்தேசிய இனத்திற்கென்று ஏறக்குறைய பொதுவான பண்பாட்டுக்கூறுகள் இருக்கின்றன. இன்னமும் மிஞ்சிக்கிடக்கின்ற ஜல்லிக்கட்டு, பொங்கல் திருவிழா, கபடி மற்றும் கரகாட்டம், வில்லுப்பாட்டு, குலதெய்வங்கள், உறவு முறைகள் போன்ற பல்வேறு பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டு ஒரு பண்பாட்டு செழுமைமிக்க தனித்த தேசிய இனமாக தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது. தன்னை ஒரு தேசிய இனமாக உணர்வதற்கான பொதுவான உளவியல் போக்கினை தங்களது பண்பாட்டு விழுமியங்கள் மூலமாக தமிழர்கள் பெற்றிருக்கின்றனர். இந்தியத் துணைக்கண்டத்தில் வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளில் தனித்த மொழி , பண்பாடு,வரலாறு, பண்பாட்டு விழுமியங்களோடு கூடிய 20க்கும் மேற்பட்ட தனித்த தேசிய இனங்கள் நிலைபெற்று வாழ்கின்றன. இந்தியப்பெருநிலத்தில் இருக்கின்ற தேசிய இனத்தில் மூத்தத்தேசிய இனமான, தனித்த பண்பாட்டு அடையாளங்களைப் போற்றிப் பாதுகாத்து வருகிற தனித்த தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் விளங்குகிறது. ஒரு சமூகம் தன்னைத் தேசிய இனமாக உணரும்போது அதன் மெய்யான தேசிய இன குணாதியங்களையும், முற்போக்கு மற்றும் பிற்போக்கு இடங்களையும் அறிந்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது. தேசிய இன உருவாக்கம் என்பது சில நாட்களுக்கு உள்ளாகவோ, சில வருடங்களிலோ அடையக்கூடியது அல்ல. தேசிய இன உருவாக்கத்தை, வளர்ச்சியை சார்ந்த திறன்மிக்க தொடர் செயல்முறை என்கிறார் புரட்சியாளர் லெனின்.. அச்செயல்முறை தாம் ஒரு தேசிய இனம் என்பதை உணர்ந்து தனது வாழ்வியல்,பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை அடைந்து, விடுதலை உணர்வினை சார்ந்து அமைகின்ற எழுச்சி ஆகும்.
தமிழ்த்தேசிய இனமாக தன்னை ஒரு தனித்த தேசிய இனமாக அடையாளப்படுத்துதலில் மாபெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் தமிழர்களின் நிலப்பரப்பை பல்வேறு குறுநில மன்னர்கள் பிரித்து ஆண்டிருந்தாலும் தமிழர் என்ற உளவியல் உருவாக்கம் தமிழர் என்ற தேசிய இனத்திற்கு வரலாற்றின் போக்கிலேயே அமைந்திருந்தது. பிற்காலச் சோழர்கள், புகழ்பெற்ற பாண்டிய மன்னர்கள், வெற்றிபெற்ற சோழ மன்னர்கள் என்றெல்லாம் மன்னர்கள்வழி அமைந்த நிலப்பரப்பில் பிரிந்து வாழ்ந்திருந்தாலும் ஒவ்வொருவரும் தமிழர் என்கின்ற உளவியல் நெருக்கத்தினை உளவியல் பண்பாட்டு விழுமியங்கள் மூலமாகவும், வரலாற்றின் போக்கின் மூலமாகவும் பெற்றிருந்தார்கள். அதன்வாயிலாகவே, தமிழர் தேசிய நிலப்பரப்பிற்கு எதிராக அந்நிய படையெடுப்பு போன்றவை நிகழும்போது தமக்குள்ளாக இருக்கிற உளவியல் நெருக்கத்தை மூலதனமாகப் பயன்படுத்தி, தங்களது நிலப்பரப்புகளையும் தாண்டி தமிழர் என்ற ஒற்றுமையோடு அந்நியர் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று தமிழர்கள் போராடியிருக்கிறார்கள். ஈழத்தை ஆண்ட தமிழ் மன்னனுக்கு இங்குள்ள சோழ மன்னன் உதவியதாக வரலாறுகள் தெரிவிக்கிறது. இவ்வாறாக இப்பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கத் தொடங்கினார்களோ, வாழ்ந்தார்களோ தாயகத்தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்மன்னர்கள் உதவிசெய்யும் போக்கினை நாம் வரலாற்றின் பக்கங்களிலே காண்கிறோம். எனவே தேசிய இன உருவாக்கத்தில் அந்த குறிப்பிட்ட மனித சமூகம் கொண்டிருக்கிற உளவியல் தன்மை (Phusicaligical Sense ) மிக முக்கியமானது.
தாம் ஓரினம் என்கிற தேசிய இன உளவியல் தன்மைதான் ஈழ விடுதலைக்கு ஆதரவான மனநிலையை இம்மண்ணில் எழுப்புகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் இரண்டு பெரும் தாய்நிலங்களாக ஈழமும், தாய்த் தமிழகமும் திகழ்கின்றன. எனவே வரலாற்றின் வீதியில் தமிழர் என்கிற தேசிய இனம் ஒரு தேசிய இனத்திற்கான அடிப்படைத் தன்மைகளைக் கொண்டு தனித்த தேசிய இனமாக உருக்கொண்டு நிற்கிறது.
இனி தமிழ்த்தேசிய இனத்திற்கான அடிப்படை உரிமை.. தம் மண்ணை தானே ஆள்கிற உரிமை.
-தொடர்ந்து கற்போம்..கற்பிப்போம்…புரட்சி செய்வோம்.
வாசிப்போம்..அறிவை யாசிப்போம்
—————————————————–
சாதியும், தமிழ்த்தேசியமும் –பெ.மணியரசன் ,(பன்மை வெளியீடு, எண் 1,இராசா வணிக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர்)
விலை80/-
வெகு காலமாகவே சமூக நீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும் உள்ள இடைவெளி வரலாற்றுப் பூர்வமானது. தமிழகத்தின் வரலாற்றில் சமூக நீதிக்கான குரல்கள் வெகுகாலத்திற்கு முன்பே ஒலிக்கத் தொடங்கி விட்டன . ஆனால் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீதிக்கட்சி சமூகநீதி தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கவையாக அமைந்தன. தமிழ்த்தேசிய உரிமைக்கான வரலாறும் இத்தகைய தன்மை உடையதுதான். தமிழ்த்தேசிய இனம் வரலாற்றின் போக்கில் உருவான தருணத்தில் இருந்தே அதற்கான உரிமைக்குரல்களும் தோன்றின. பழந்தமிழ் இலக்கியங்களும்,ஒலைச்சுவடிகளும் ஏற்படுத்திய இலக்கியச் செழுமை தமிழ்த்தேசிய இன ஒர்மைக்கு அடிப்படையாக திகழ்ந்தன. தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கும், சமூக நீதி இயக்கங்களுக்கும் இடையிலான அடிப்படை முரண்களை புரிந்துக் கொள்ள வேண்டும். சமூக நீதி இயக்கங்கள் சமூகத்தின் ஊடாக சமநிலை பராமரிப்பினை கோருபவை. தமிழ்த்தேசிய இயக்கங்கள் தேசிய இனமொன்றின் உரிமைகளுக்காக போராடுபவை. சமூக நீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களான சாதீய மறுப்பு,மூடநம்பிக்கை ஒழிப்பு,பெண்ணடிமை தகர்ப்பு போன்றவைகளின் விழுமியங்களை தமிழ்த்தேசிய இயக்கங்கள் இயல்பாகவே தன் மரபின் மூலமாகவே உள்வாங்கி இருக்கின்றன.
இனம் குறித்த வரலாற்று பெருமிதத்தால் கட்டமைக்கப்படும் தேசிய இன உணர்வே தமிழ்த்தேசியர்களின் அடிப்படையான, ஆன்ம உண்ர்வாக இருக்கிறது. தமிழர் மரபு காலத்தாற் நீண்ட வரலாறு உடையது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு.. முன்பிலிருந்து,நாளது தேதிவரை எழுத்துப்பூர்வமான ஆக்கங்களான தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், ஐம்பெரும் காப்பியங்கள், நீதி நூல்கள் போன்ற ஆவணங்கள் தமிழர் மரபினை அடையாளப்படுத்தும் பணியினை செய்வதோடு.. தமிழ்த்தேசிய இனப் பெருமிதம் கொள்வதற்கான உளவியல் நியாயங்களை கற்பிக்கின்றன..
இவ்வாறாக வரலாற்றின் அடிப்படையில் இருந்து கட்டமைக்கப்படும் தமிழர் மரபு இயல்பிலேயே இயற்கை வழிபாடு, விவசாயம், பெண்களை போற்றுதல், சாதியற்ற சமூக வாழ்வு போன்ற பல்வேறு முற்போக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.
’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று தமிழரால் பாட முடிந்த உளவியல் அம்சம்தான் அக்கால வாழ்வியலாக இருந்திருக்கிறது. நாடாளும் மன்னனின் அவைக்கு சென்று அவனை ”தேரா மன்னா..” என்று எளிய பெண்ணொருத்தி ஏசும் அளவிற்கு சமூக ஒழுங்கில் பெண்களுக்கான இடம் இருந்திருக்கிறது. ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் அரசனுக்கு ஆலோசனை சொல்லும் இடத்திலும், நெருக்கமான தோழியாகவும் இருந்திருக்கிற மதிப்பு சார் தகுதி பெண்களுக்கு இருந்தது.
ஆரியர் படையெடுப்பிற்கு முன்பே ஆசீவகம் போன்ற நெறிகள் தமிழக மண்ணிலே இருந்திருக்கின்றன..இயற்கை வழிபட்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத மெய்யியல் கொள்கை தமிழனுக்கு இருந்திருக்கிறது. முன்னோர் வழிபாடு, நடு கல் மரபு என நீளும் தமிழரின் மெய்யியல் வரலாறு செழுமை மிக்கது. சாதியற்ற,ஏற்றத்தாழ்வற்ற தமிழர் மெய்யியல் அம்சங்களில், ஆரியர் படையெடுப்புக்கு பிந்திய பண்பாட்டு தாக்குதல்களினாலேயே தமிழரின் சமூகம் சாதீய சமூகமாக பிளவுப்பட்டு கிடக்கிறது.
எனவே தான் தமிழ்த்தேசிய இயக்கங்கள் தமிழர் மரபின் மூலம் தமிழ்த்தேசிய ஓர்மை உணர்வினை மீட்டெடுக்க கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது.குறிப்பாக 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய முழக்கங்கள் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வலிமையும்,மூர்க்கமும் அடைந்திருக்கின்றன.அதில் முதன்மையான தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் கட்சி களங்களில் செயல்பட்டு வருகிறது.
பார்ப்பனீய ,சாதீய அரசியல் முனைகளால் பலமாக தாக்கப்படுவதும், கடுமையான விமரசனங்களை எதிர்க்கொள்ளுவதுமான முதன்மை தமிழ்த்தேசிய அமைப்பாக நாம் தமிழர் செயல்பட்டு வருகிறது என்பதை பல வித சான்றுகளுடன் நிரூபிக்க முடியும்.சமீபத்தில் ஹெச்.ராஜா அண்ணன் சீமானைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததும், பல வருடங்களுக்கு முந்தைய பேச்சு ஒன்றினை வைத்துக்கொண்டு வன்மம் குறையாமல் இந்துத்துவா அமைப்புகள் நாம் தமிழரை எதிர்த்து சமீபத்தில் போராடியதும்..இதற்கு சான்றுகள். மேலும் தமிழ்நாட்டில் இருக்கும் பல அரசியல் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் தேர்தலில் பாஜக கட்சியினை தனது முதன்மை எதிரியாக அறிவித்து, அதனை எதிர்த்து அது போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் தேர்தல் பணி ஆற்றியதும் இதில் குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது வைக்கப்படும் தலையாய குற்றச்சாட்டு சாதீய முரண்களில் தனது கூர்மை அரசியலை நிலைநாட்ட முடியாமை. அதற்கு காரணம் சாதீய அமைப்புகள் மீதான பரிவு அல்ல. மாறாக சாதீய அமைப்புகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை தமிழர் என்கிற ஓர்மை உணர்வில் ஒன்றிணைப்பதற்கான முனைப்பே அன்றி, வேறொன்றும் அல்ல.இன்றளவும் கொங்குப் பகுதிய சாதீய அமைப்பு ஒன்றினாலும், தலித்திய அறிவு சீவி வட்டத்தினாலும் சமமாக தாக்கப்படுகின்ற அமைப்பாக நாம் தமிழர் இருப்பதன் காரணம் வெவ்வேறான இரண்டும் தனது அரசியலுக்கு ஒரே எதிரியாக கருதுவது நாம் தமிழரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக வரலாற்றின் போக்கில் தமிழ்த்தேசிய உணர்வு தமிழர் மரபின் வாயிலாக கட்டமைக்கப்படுவதன் மூலம் தான் சாதீய மறுப்பு, பெண்ணடிமை தகர்ப்பு ,மூட நம்பிக்கைகள் ஒழிப்பு போன்ற பல்வேறு முற்போக்கு கொள்கைகளை இம்மண்ணில்
நடைமுறைப்படுத்தப்படும் என நாம் தமிழர் கட்சி நம்புகிறது. 2009 க்கு பிறகான தமிழ்த்தேசிய அமைப்புகளின் நவீன வடிவமாக நாம் தமிழர் நிலைநிறுத்தப்படுவதற்கும், மத சாதீய உணர்வாளர்களால் கல்லெறியப்படுவதற்குமான மிக முக்கிய காரணமாக இவ்வகையான நம்பிக்கைகளே என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதி இயக்கங்களுக்கும், தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வரும் இடைவெளியை தனது நடைமுறை சாத்தியங்கள் மூலம் நாம் தமிழர் நிரப்ப முயல்கிறது. இன்னும் ஆழமாக சொல்லப்போனால் இரண்டிற்குமான மாற்றாக..புது வெளி ஒன்றினை..மாற்று அரசியலை நாம் தமிழர் நிறுவ முயல்கிறது. வெகுசன அரசியல் வெளியில் அதிகம் கண்டுக்கொள்ளப்படாத அயோத்திதாசர், இரட்டைமலை சீனுவாசன் போன்ற தலைவர்களின் விழாக்களை தனது கட்சி அமைப்பியல் நிகழ்வுகளாக நாம் தமிழர் கொண்டிருப்பதும் இது போன்ற சிந்தனைகளால் தான்.. வெகுசன அரசியல் இயக்கங்கள் என்றாலே சமரசம் கொண்டு,பிழைப்புவாத அரசியல் நிலைகளை எடுப்பன போன்றதான பிம்பங்களை உடைப்பதில் நாம் தமிழர் தனது முழு கவனத்தைக் கொள்கிறது. ஒரு வெகுசன அரசியல் கட்சி சமூக இயக்கங்களுக்கான நுண்ணரசியல் தன்மைகளை பெறுவது எனபது தமிழக அரசியல் வெளியில் புதிதான ஒன்று. இயற்கை விவசாயம், மீத்தேன் எதிர்ப்பு, காட்டுக் கருவை ஒழிப்பு. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு போன்றதான மண்சார்ந்த போராட்டங்களையும் நாம் தமிழர் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழர் மரபினை மீட்டெடுத்து..இனப் பெருமித உணர்வில்..தமிழ்த்தேசிய ஒர்மையை படைக்க விரும்பும் நாம் தமிழர் கட்சி சமூகநீதி இயக்கங்களின் அடிப்படை அம்சங்களை உள்வாங்கி தமிழர்களுக்கான ஒருவெகு சன அரசியலை கட்டமைப்பதில் துடிப்பாக இருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய போக்காகவே நாம் கருதலாம்.
மாநாட்டிற்கு முந்தைய நாள் அது. அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த மாபெரும் மாநாட்டு திடலில் தனியே அண்ணன் சீமான் மட்டும் நின்றுக் கொண்டிருந்தார் . நான் அவரை கவனித்த போது அவர் தனித்திருந்தார். சற்று தொலைவில் தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். ஆழ்ந்த சிந்தனைக்கு உள்ளாகி இருந்த அவர் தன் வாழ்நாளில் மறக்க முடியா நாளொன்றாக மறுநாள் அமையப் போவதை எதிர் நோக்கி இருந்தார். மெல்ல தன் காலடிகளை கவனித்தவாறே அந்த மாநாட்டு திடலெங்கும் நடந்து வந்துக் கொண்டிருந்தார். இது வரை அவர் நடந்த பாதை பூக்களால் நிரம்பப் பெற்றது அல்ல.. பாதையை தேடாதே..உருவாக்கு என்று அறிவித்தவரின் தம்பியாயிற்றே.. இதுவரை யாருமே சமைக்காத புதிய பாதையை கடந்த நான்கு வருடங்களாக தனது கடும் உழைப்பினால் சீமான் உருவாக்கி இருந்தார். விமர்சனங்களும், வசவுகளும், எதிர்ப்புகளும் எதிர்பட்ட அப்பாதையில் விமர்சனங்கள் என்பவை வெறும் சொற்கள் தானே ஒழிய,கற்கள் அல்ல என்ற தன் அண்ணனின் சொற்களோடு அவர் முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் யாரையும் நம்பி நின்று நான் கண்டதில்லை. அடிக்கடி உரையாடல்களில் அவர் என்னிடம் பதிய வைக்கும் சொற்கள்..” தம்பி ..இன்று என்னுடன் நிற்கும் நீங்கள் அனைவரும் இதை விட்டு விட்டுப் போனாலும்.. நான் தனியே நின்று போராடி சாவேனே ஒழிய ,ஒரு போதும் இதிலிருந்து பின் வாங்க மாட்டேன்..”
உண்மையில் இச்சொற்களுக்கு அவர் மிக நேர்மையுடையவராக இருந்தார். கட்சியில் அவ்வப்போது நிகழும் சலசலப்புகளுக்கும் ,வெளியேற்றங்களுக்கும் அவர் சங்கடப்பட்டதே இல்லை. ஏனெனில் எங்கள் யாரையும் நம்பி அவர் இல்லை. ஆனால் அவரை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை மே 24 -2015 திருச்சியில் நடந்த இனஎழுச்சி அரசியல் மாநாடு நிரூபித்துக் காட்டி விட்டது.
மாநாட்டு நாளுக்கு முந்தைய சில இரவுகளாக அவர் தூக்கத்தை மறந்திருந்தார். இம் மாநாட்டு வெற்றிக்காக எதையும் அர்ப்பணிக்க அவர் தயாராக இருந்தார். அவரே இறங்கி சென்னை நகரத்துவீதிகளில் சுவரொட்டிகள் ஒட்டத் தொடங்கிய போது உடனிருக்கும் நாங்களே அதிர்ந்துப் போனோம். அவர் இதயம் முழுக்க இலட்சிய ஆவேசம் அனலடித்துக் கொண்டிருந்தது . அவரது வேகத்திற்கும், சிந்தனை ஓட்டத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் நாங்கள் திணறியது தினந்தோறும் நடந்தது.
மாநாட்டு நாளான மே 24 நெருங்க..நெருங்க..முக்கிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் இனம் புரியாத பதட்டம் ஒட்டிக் கொண்டது. 5 வருடங்களாக நாங்கள் எழுதிய தேர்வொன்றுக்கு முடிவுகள் தெரியும் நாளாக மே 24 அமையப் போகிறது என நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். மாநாட்டுத் திடலில் மாநாட்டிற்கு முந்தைய நாள் இரவில் மாநாட்டு மேடையில் சீமான் –உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் என்கிற நான் எழுதிய நூலை பெருந்தமிழர் தியாகம் அய்யா வெளியிட, பெருந்தமிழர் அரப்பா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். தொடர்ச்சியாக ஒரு வாரமாக மாநாட்டுத்திடலில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். மாநாட்டு மேடையை நள்ளிரவு வரை அண்ணன் செந்தமிழன் சீமான் நேரில் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். தனது வாழ்நாள் கனவொன்றினை நிஜமாக்கிட அந்த மனிதர் துடித்துக் கொண்டே இருந்தார். அதைத்தான் அவரது பேச்சிலும் அவர் குறிப்பிட்டார். “ நான் இதயத்துடிப்பில் வாழ்பவன் அல்ல , இலட்சியத் துடிப்பில் வாழ்பவன் .
உலகம் முழுக்க இருந்தும் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டுக்கு முதல் நாளிலிருந்து இனமானத்தமிழர்கள் வரத்தொடங்கினார்கள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகிற நாம் தமிழர் உறவுகள் மாநாட்டுத் திடலை ஆர்வமாக சுற்றிப் பார்த்தனர். மலேசியா நாட்டு நாம் தமிழர் உறவுகள் தனிச்சீருடையோடு வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. குடும்பத்தில் நடைபெறும் திருமணத்தில் நெருங்கிய உறவுகள் சந்திப்பது போல நாம் தமிழர் உறவுகள் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தும்,கட்டித்தழுவியும், கை உயர்த்தியும் தங்களது அன்பினை பரிமாறிக் கொண்டது அது ஒரு கட்சி மாநாடு என்கிற தோற்றத்தை மாற்றி குடும்ப நிகழ்வு என்கிற தோற்றத்தை அளித்தது.
மாநாட்டுத் திடலில் மாநாட்டு மேடையின் இருபுறமும் மாவீரர்களின் படமும், புரட்சியாளர்களின் படமும், மொழிப்போர் ஈகிகளின் படமும், தமிழ் முன்னோர்களின் படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. மாநாடு அன்று விடிய விடிய மாநாட்டு மேடை அமைக்கும் பணி மற்றும் இதர வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. விடிந்தப் பிறகும் கூட மாநாட்டுத்திடலில் பணிகள் நடந்துக் கொண்டிருந்தன.
இவ்வேளையில் அண்ணன் சீமானின் மகிழுந்து தஞ்சைக்கு விரைந்துக் கொண்டிருந்தது,
எங்களுடைய மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் அந்நிகழ்வு இல்லை. முந்தைய நாள் இரவிலும் அதற்கான திட்டமிடல் எங்களிடம் இல்லை. ஒரு உரையாடலில் தஞ்சை பெரியகோவில் பற்றி ஒரு பேச்சு வந்தது. அந்தக் கோவிலின் பிரதான வாசலின் வழியே உள்ளே நுழையும் எவரும் அரசியலில் பெரிய சரிவை சந்திப்பார்கள்..அல்லது சாவை சந்திப்பார்கள் என்கிற மூடநம்பிக்கைப் பற்றி அண்ணன் செந்தமிழன் சீமானிடம்பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த மூடநம்பிக்கையை பலப்படுத்தும் வண்ணம் சில சம்பவங்களும் அதற்கு முன் நடைப்பெற்றதையும் விவரித்தார்கள்.அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அண்ணன் அதை நாம் உடைப்போம் என்றார். மாநாட்டு நாளன்று தஞ்சை கோவிலுக்குள் பிரதான நுழைவாயிலின் வழியே செல்வோம் என்றார்.
உடனே உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ஏன் இதைச்சொன்னோம் என்ற அளவிற்கு சங்கடப்பட்டார்கள்.. அதில் ஒருவர்..இல்லை.நாளை மாநாட்டை வைச்சிகிட்டு என்று மெலிதாக முனக.. அண்ணன் சீமான் உறுதியான தன் குரலில் நாளை கோவிலுக்குள் நுழைவோம். பார்க்கலாம். என்றார்.
பெரியாரின் வழித்தோன்றல்…திராவிட இயக்கத்தின் அடையாளம், கடவுள் மறுப்பின் கடவுச்சீட்டு, மூடநம்பிக்கை ஒழிப்பின் முகவரி திமுக தலைவர் கருணாநிதி கூட வங்கிக் கொள்ளையர் போல பக்கவாட்டு சுவற்றில் துளை போட்டு தான் கோவிலுக்குள் வந்தார்..என்றதும்..அண்ணன் அட்டகாசமான சிரிப்போடு…நாளை போறோம்.இதை உடைக்கிறோம்…பாக்கலாம்.. பாட்டன் கட்டிய கோவில் பேரனை என்ன செய்யுது என…
சரி..ஏதோ அண்ணன் சொல்றார். நாளைக்கு பாக்கலாம் என நாங்கள் எல்லாம் இருக்க..மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் தஞ்சையை நோக்கி மகிழுந்து விரைந்தது..
புலிக் கொடி மைந்தன்..புலிக்கொடி மன்னனின் கோட்டைக்குள் மூடநம்பிக்கை எரித்த தணலாய் உள் நுழைந்தான்..
கடவுள் மறுப்பாளன் மூடநம்பிக்கை தகர்க்க கோவிலுக்குள் நுழைந்தான்.
மறுநாள் குமுதம் ரிப்போர்ட்டரில் இந்த செய்தி “ புரட்சி “ என வந்திருந்தது .
அண்ணனிடம் இதைப் பற்றி சொன்ன போது “ அந்த அளவுக்கு ஒரு பொய்யை பரப்பி வைச்சிருக்கானுகடா என சொல்லி சிரித்தார்…
மாநாட்டு நாளான மே 24 அன்று காலை முதலே, தமிழகம் முழுக்க இருந்தும் தமிழர்கள் மாநாட்டுத்திடலில் வந்து குவியத்தொடங்கினார்கள். கடும் வெப்ப நாளான அன்று மதியம் 1 மணிக்கு பிறகு அலை அலையாய் தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து நாம் தமிழர் கட்சியினர் வாகனங்களில் வரிசையாக வந்து குவியத் தொடங்கினர். மாலை சரியாக 4 மணிக்கு மாநாட்டுத்திடலில் புலிக்கொடி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. கொடிப்பாடல் இசைக்க..இசைக்க..வானில் படிப்படியாக ஏறிய புலிக்கொடி காற்றில் அசைந்து பறந்தக் காட்சி அங்கே திரண்டிருந்தவர்களை சிலிர்க்கச்செய்தது. பின் , கலைவளர்மதி ஐயம்மாள் செந்தமிழ்ச்செல்வன் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியோடு கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.. தமிழரின் பாரம்பரிய கலையான வில்லுப்பாட்டு நிகழ்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளின் முதல் நிகழ்வாக அமைந்தது பெருமைக்குரியதாக விளங்கியது. வில்லுப்பாட்டு நிகழ்ச்சி முடிந்ததும், புதுவை சித்தன் கலைக்குழுவினரின் எழுச்சிப்பாடல்கள் தொடங்கியது. ‘தலைமகனே எம் பிரபாகரனே’ என்ற பாடலை புதுவை சித்தன் பாடத்தொடங்கியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. அப்போது, மாநாட்டுத் திடலுக்குள் நுழைந்த திருச்சி,கும்பகோணம்,சிதம்பரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் தேசியத்தலைவரின் படம் பொறித்த பதாகைகளை தாங்கிபிடித்து, கூட்டத்தைச் சுற்றி வந்த போது, மாநாட்டுத்திடல் முழுக்க நிறைந்திருந்த தமிழர் கூட்டம் தேசியத்தலைவரே நேரில் வந்துவிட்டதாக எண்ணி ஆர்ப்பரித்து, உணர்வெய்தது. அதனைக் கண்டு பலர் மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணீர் சிந்தினர். சற்றே நெகிழ்ச்சியுடன் கண் கலங்கி நின்ற அண்ணன் சீமான் அவர்களை அனைவரும் கவனிக்கத் தவறவில்லை. தொடர்ந்த புதுவை சித்தனின் கொள்கை இசை. ‘எடுத்து அடிடா முப்பாட்டன் பறைய’ பாடலுடன் முடிவுற்றது. அடுத்து, தமிழனின் ஆதி இசையான பறையிசை ஆதித்தமிழர் இயக்கம் சார்பாக தொடங்கியது. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் படமும், பாட்டன் அயோத்திதாச பண்டிதரின் படமும் பொறித்த சீருடைகளை அணிந்து, ‘இது சாதிப்பறை அல்ல! ஆதிப்பறை!!’, ‘தேடாதே பாதையை உருவாக்கு! இது தேசியத்தலைவரின் அருள்வாக்கு’ என்ற முழக்கத்தோடு பறையிசையை ஆண்களும்,பெண்களுமாக கொள்கை நடனத்தோடு நிகழ்த்தியது அங்குள்ளவர்களை எழுச்சியடைய வைத்தது. இதற்குள் மாநாட்டுத் திடலில் இலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு இருந்தார்கள். ஓயாத அலைகளாய் மாநாட்டுத் திடலை நோக்கி தமிழர்கள் வந்துக் கொண்டே இருந்தார்கள். பறையிசை நிறைவு பெற்றதும், சரியாக மாலை 06.10 மணிக்கு ஈழ நாட்டின் மாவீரர் துயிலுமிட பொறுப்பாளர் பெருந்தமிழர்.பொன் தியாகம் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அங்கே ஈழப் பெருந்தேசத்தில் நம் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களுக்கு முன் ஈகைச்சுடர் ஏற்றிய பெருந்தமிழர்.பொன் தியாகம் அவர்கள், அவரது தம்பியான செந்தமிழன் சீமான் அவர்களுக்கு முன் ஈகைச்சுடர் ஏற்றியது வரலாற்றியல் நிகழ்வு. அளப்பரிய ஒழுங்கமைவோடு நடைப்பெற்ற இந்நிகழ்வில் அங்கே கூடியிருந்த உலகத்தமிழர்கள் அனைவரும் நம் இனத்திற்காக,நம் தாய்மொழிக்காக, நம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஓர்மைக் கொண்டனர்.
இம் மாநாட்டின் முதல் நிகழ்வாக அகவணக்கம்,வீரவணக்கம், உறுதிமொழி ஆகிய நாம் தமிழர் கட்சியின் நிகழ்வுகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களே முன் நின்று நிகழ்த்தியது மிகவும் பொருத்தமாக அமைந்தது. அதன் பின் இன எழுச்சிப் பேருரைகள் தொடங்கியது. மாநாட்டு மேடையில் இருக்கைகள் ஏதும் அமைக்கப்படாது, உரை நிகழ்த்துவோர் மட்டும் நின்று பேசும்படி மேடை அமைக்கப்பட்டிருந்தது. ‘பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை’ என்பதற்கேற்ப முதலில் மகளிர் பாசறையினர் எழுச்சிப் பேருரை நிகழ்த்தினர். மகளிர் பாசறையினர் பேருரை நிகழ்த்திய பிறகு, மாணவர் பாசறை, இளைஞர் பாசறை என ஒவ்வொரு பாசறையினரும் இன எழுச்சி உரை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக அண்ணன் சீமான் பேச வரும் போது சரியாக 9 மணி. அவர் பேசுவதற்கு முன்பாக மாநாட்டு திடலில் கம்பீரமாக ஒரு குரல் ஒலித்தது. “ தம்பி சீமானிடம் விட்டு செல்கிறோம் “ என்று ஒலித்த அக்குரல் கடற்புலிகளின் தலைவர் அண்ணன் சூசைக்கு சொந்தமானது. கடந்த 2009 மே மாத இறுதிச்சூழலில் அண்ணன் சூசை அவர்கள் இங்கே இருக்கும் ஒரு உணர்வாளரிடம் பேசிய அந்த அலைபேசி உரை மாநாட்டுத் திடலில் கூடியிருந்த இலட்சக்கணக்கான தமிழர்களை விம்மியெழ செய்தது. அண்ணன் சூசை அவர்களின் அழைப்போடு..நெஞ்சம் முழுக்க கனக்கும் உணர்ச்சிப் பெருக்கோடு அண்ணன் சீமான் மேடையேறினார்.
கடந்த 5 வருடங்களாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி இன விடுதலைக்காக, மொழி வளர்ச்சிக்காக, தமிழரின் இனமானம் காக்க , இன நலன் ஒன்றே நோக்கமென எழுந்த அக்குரல்…அந்த மாநாட்டு திடலிலும் எழுந்தது…
அந்த குரல் அன்று ஒரு ஒற்றைத் தெறிப்புதான்…
ஆனால்….அது தான் இன்று பெருந்தீயாய்
இலட்சியத்தை சுமந்து பரவிக் கொண்டே இருக்கிறது…
அடக்குமுறைகளும்,வழக்குகளும்,தடைகளும்
காற்றென வீசி அத்தீயை பெருந்தீயாய்… ஊழி பெருந்தீயாய் வளர்க்கின்றன…
- மணி செந்தில்
ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது சொற்களால் விவரிக்கத்தக்க கனவு மயக்கம் அல்ல. மாறாக காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, பிளவுப்படுத்தப்பட்டு, வீழ்த்தப்பட்டு கிடக்கிற பூர்வ குடியொன்றின் புத்தெழுச்சி. வரலாற்றின் புகழ் வீதிகளில் வலம் வந்த தமிழர் என்கிற தேசிய இனம் அடிமை சிறுமை தேசிய இனமாக குறுகிப் போன துயரக் கதைகளில் தான் அடங்கியிருக்கிறது நம் எழுதலுக்கான வெளிச்சப்புள்ளி .
வெற்றிகள் தரும் பெருமிதக் கொண்டாட்டங்களில் இடித்துக் கொள்ளும் மதுக்கோப்பைகளின் ததும்பலாகவே இதுவரை தமிழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது . கங்கையை வென்றவன், கடாரம் கொண்டவன் எப்படி கடைக்கோடிக்கு கடத்தப்பட்டான் என்ற உண்மை மட்டும் ஊரார் அறியார் வண்ணம் ஊழி இருட்டிற்குள் உறைந்துக் கிடக்கிறது.
பஃருளியாற்றில் படகோட்டி,பன்மலை அடுக்கங்களில் திரிந்து,குமரிக் கண்டத்தில் இரு சங்கம் கண்டோம் என பழம் பெருமைகளில் இறுமி இறுமியே தான் அடிமைஇருட்டில் அமிழ்ந்துக் கிடக்கிறோம் என்ற அறிதலை தொலைத்து விட்டான் தமிழன். வடக்கே இருந்து வந்த ஆரியம் தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்திய வழிபாட்டு,பண்பாட்டு தாக்கங்களில் சிக்குண்ட தமிழன் தனது பண்பாட்டு,வழிபாட்டு விழுமியங்களை இழந்தான்.
வெள்ளையன் என்ற சுரண்ட வந்த கொள்ளையன் தனது துப்பாக்கி முனையில் இந்தியா என்கிற இல்லாத தேசத்தை உருவாக்கினான் . தனது பிழைப்பிற்காக பார்ப்பனன் தனது பூனூலால் இந்த கனவு தேசத்தை இறுக்கிக் கட்டினான். உருவானது இந்தியா.பலர் உழைக்கவும்,சிலர் பிழைக்கவும் என்கிற மானுட விரோத நாடாய் மலர்ந்து இருக்கிறது.
இதில் தமிழனின் நிலைமை இன்னும் கேவலம். வந்தவர்களை எல்லாம் வாழ வைத்து, ஆள வைத்து,தனது நிலம், ஆட்சியதிகாரம், வளங்கள்,கலை,பண்பாடு,வாழ்வியல் என அனைத்தையும் வந்தவன் காலடியில் வழங்கி விட்டு சொந்த மண்ணிலேயே அகதியாய் திரிகிறான்.
சாதி தன்னை பிளவுப்படுத்த வந்த அநீதி என்பதை உணராமல் சாதியாய் பிரிந்து கிடக்கின்றான் தமிழன். மதம் தன்னை அழிக்க வந்த வதம் என்பதை உணராமல்…இனமாய் இல்லாமல் பிணமாய் போனான் தமிழன். பிழைக்க வந்த பார்ப்பானிடம் தனது பண்பாட்டு,வழிபாட்டு விழுமியங்களை இழந்தான். காலங்காலமாய் தன்னை செழிக்க வைத்த காவிரித்தாயை கன்னடனிடம் இழந்தான்.முல்லை பெரியாற்றை மலையாளியிடம் துறந்தான். பாலாற்றினை தெலுங்கனிடம் இழந்தான். ஒட்டு மொத்த தமிழ்நாட்டினை மேற்கண்ட அனைவரிடமும் இழந்தான். வந்தவரை எல்லாம் வாழ வைத்து விட்டு ,ஆள வைத்து விட்டு இலவசங்களுக்காக மடியேந்தி நியாயவிலைக்கடைகளுக்கு முன் நின்று கொண்டிருக்கிறான். ஏற்கனவே சுரண்டப்பட்ட தமிழனுக்கு இனி எப்போதும் உணர்வெழுச்சியோ,அறிவோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே குடியேறிய திராவிடம் தெருவிற்கு தெரு மது பானக்கடைகளை திறந்து வைத்து..தமிழனை மல்லாக்க சாய்த்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டியை திணித்து தமிழச்சிகளை மானாட ,மயிலாட காண வைத்து..நாடகங்களே வாழ்க்கை என வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தான் நிகழ்ந்தது ஈழத்தின் பேரழிவு. தமிழரின் மற்றொரு தாய்நிலத்தில் மண் விடுதலைக்காக களங்கண்ட மாவீரர்களின் தியாகம் இங்கே இன மானம் உடைய இளைஞர்களை எழுப்பியது. மண் என்பது சாதாரண விஷயம் அல்ல. தாய் மண்ணின் மீது கொண்ட பற்றே பூர்வக்குடிகளின் இருப்பினை தக்கவைக்கிறது. இந்த காடு,மலை, ஏரி,அலை கடல்,பசும் வயல் என செழித்திருக்கும் தாய்நிலத்தை அன்னியனிடம் இழக்க முடியாமல் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதம் ஏந்தினர் புலிகள் .
தனது சொந்த சகோதரன் அங்கே இன விடுதலைக்காக இன்னுயிரை தந்துக் கொண்டிருக்கும் காலத்தில் தான் இங்கே இவனுக்கு இந்தியன் என்கிற பெருமிதமும்,திராவிடன் என்கிற அரசியல் கற்பிதமும்… முகமூடி அணிந்த சாத்தானாய் இந்தியமும்,திராவிடமும் நாடகங்கள் நடத்த…நாடகக் காட்சிகளில் கண்களை விற்ற தாயகத்தமிழன் குருடனாகிப் போனான். ஈழப்பெருநிலத்து மண்ணில்..தன் தங்கையின் அரை நிர்வாண உடலைக்காட்டி, அவள் மார்புக்காம்பின் மேல் தனது கால் கட்டை விரலை அழுத்தி…அவள் பிறப்புறுப்பில் துப்பாக்கியை நுழைத்து ..வல்லாதிக்க சிரிப்பினை தமிழ்த்தேசிய இனம் மீது காறி உழிந்தான் சிங்களன்.
தன் வீட்டுப் பெண்டீர் சாலைகளில் கிடத்தப்பட்டு வல்லுறவு செய்த காட்சியை கண்ட தமிழின இளையோர் இமைகளில் ஈரம் படர்ந்தது. விழியோரம் சிவப்பு சேர்ந்தது. மாவீரன் முத்துக்குமார் உள்ளீட்ட ஈகிகள் தன்னுயிரையே தந்து..ஈழமும்-தமிழகமும் வெவ்வேறல்ல.. அவை தமிழரின் தாயக நிலங்கள் என அறிவித்த போதுதான் உலகம் அதிர்ந்தது . ஆனால் அதிர்ந்த உலகமும், வெளிப்படையாகவே சிங்களனுக்கு உதவிய இந்தியமும், திருட்டுத்தனமாக காட்டிக் கொடுத்த திராவிடமும் தமிழனை ஒன்றுக்கும் ஆகாதவென கருதி அமைதி காத்தன. எம் தாய்நிலம் அழிந்தது. மானம் காத்த மறவோர் மண்ணோடு மண்ணாய் மடிந்தனர்.
அப்போதுதான் வீதிக்கு வீதி …கைப்பிசைந்து..கண் கலங்கி ..இனி என்ன செய்வது என தெரியாமல்…தாய்நிலம் இழந்த தவிப்பில்..சொந்த தமையன் அழிந்த தகிப்பில் இருந்த தமிழின இளைஞர்கள் இனி..இருப்பதை காக்க செருக்களம் காண்பதை தவிர வேறு வழியில்லை என உணர்ந்தோம். எந்த அரசியல் ஆயுதங்களால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டமோ..அந்த அரசியல் ஆயுதத்தையே எமது கரங்களில் சுமந்தோம்.
நாங்கள் எளியவர்கள். மாட மாளிகையில் குடியிருக்கும் செல்வந்தர் வீட்டு செல்வங்கள் அல்ல. கூட கோபுரங்களில் குடியிருக்கும் கொற்றவனின் மைந்தர்கள் அல்ல. தெருப்புழுதியையே ஆடையாக அணிந்த நிராதரவானவர்கள். கருஞ்சட்டை அணிந்து வியர்வை வழிய வழிய..தொண்டைக்குரல் கிழிய..கிழிய முழக்கம் இடுவதை வழக்கமானவர்கள். இனம் அழிந்த வலியில்..மனம் முழுக்க ஆழ் குற்ற உணர்வு கொண்டு ..கண்ணீரை கோபமாக தேக்கி,,,அதையே தங்களது அரசியல் மூலதனமாக கொண்டவர்கள்.
நிகழ்காலம் என்பதை கொன்றாலொழிய வருங்காலம் என்ற ஒன்று கிடையாது என்பதனால் தான் …எங்களையே அழிக்கிற இந்த அரசியல் பெரும்பாதையில்..உற்றார்,உறவினர்,நாள்,நேரம், பொருளாதாரம் என அனைத்தையும் இழந்து இல்லாத எதிர்காலத்தை இனியாவது சமைக்க அணியமாகி நிற்பவர்கள்
இப்படி வாழ்வு,தொழில்,நிகழ்காலம் என அனைத்தையும் இழந்து ஓட என்ன தான் காரணம் என்றால்…
எங்களுக்கு தெரிந்த ஒருவன் இவ்வாறாக இருக்கிறான். 20 வருடங்களுக்கு முன்பாக அந்த இளைஞன் ஓராயிரம் கனவுகளோடு ..மிளகாய் மூட்டை விற்று ..தன்னை சென்னைக்கு அனுப்புகிற தன் தந்தையை ஏக்கமாக பார்த்தாவாறே பேருந்து ஏறினான்.
திரை வழியே கரை சேரலாம் என கருதியவன் கரங்களில் மார்க்ஸீம்,சே குவேராவும்,பெரியாரும், அம்பேத்காரும் அகப்பட்டார்கள். புரட்சி என்பது மாலை நேரத்து கேளிக்கை விருந்தல்ல என்கிற மாவோவின் வரிகளில் வசமிழந்த அவனால் பிறகு மீளவே முடியவில்லை. பிழைக்க வந்த இடத்தில்.. வசப்பட்ட வாசிப்பும் ,அகப்பட்ட அனுபவமும்,புலப்பட்ட புரிதலும் அந்த கிராமத்து இளைஞனை தவிப்புக்குள்ளாக்கின்றன… வெள்ளந்தியாய்..விளைந்ததை தின்று,கண்டதை கண்டு கதையாய் விவரிக்கும் திறமையை கொண்டிருந்த அந்த இளைஞன் இதுகாறும் தான் வாழ்ந்த வாழ்க்கையை,வாழ இருக்கிற எதிர்கால தமிழினத்திற்காக தந்து விடுவது என முடிவெடுத்தான். தனக்காக வந்தவன்..தான் பிறந்த இனத்திற்காக யோசித்தான். தனக்கு முன்னால் பிறந்த இன்னொருவன்…தன்னையே இழந்து தாய்நிலத்திற்காக போராடிக் கொண்டிருந்ததை பார்த்தான். தமிழனுக்கென தரணியில் ஒரு நாடு வேண்டும் என்கிற அவசியத்தில் ,அவசரத்தில்..உயிரை உதடுக்கு முன்னால் தொங்க போட்டு நாடு அடைய காட்டில் கிடந்தவனை தன் அண்ணனென உணர்ந்தான். அவனையும் சந்தித்தான். பிறகு திரிந்தான். கொடிகள் வேறுப்பட்டாலும் தமிழ்குடி வீழக்கூடாது என பல அமைப்பு மேடைகளில் ஏறி கத்தினான் ..இன அழிவை இரத்தமும், சதையுமாய் விவரித்து கதறினான். வனம் அழிந்த சினத்தில் கிடந்த புலியாய் உறுமினான். இரண்டகம் செய்த இந்தியத்தை நட்டநடு வீதிகளுக்கு இழுத்து வந்து அறுத்துப்போட்டான். திருட்டு திராவிடத்தின் தோலுரித்து …இருப்பது நம்மை காப்பாற்ற வந்த தேவன் அல்ல..அழிக்கும் சாத்தான் என சத்தமாக அறிவித்தான். இது போதாதா எதிரிகளுக்கு… சிறை படுத்தினர். சிறையை தான் துலங்கும் அறிவு பட்டறையாக மாற்றினான். எதிர் கொண்டவர்கள் இல்லாமல் போனார்கள்.
எம்மினத்தை அழித்த காங்கிரசை நான் அழிப்பேன் என நெஞ்சுயர்த்தினான்.நடப்பது தேர்தல் அல்ல..சோனியாவின் மகனுக்கும்,பிரபாகரனின் தம்பிக்கும் நடக்கிற யுத்தம் என்று அறிவித்து களம் கண்டான். காங்கிரசு கல்லறைக்கு போனது..
இப்படியாக வளர்ந்தான். முட்பாதைகளில் பயணித்தான்..அனேகர் சொற்களில் வதைப்பட்டான்.
எந்த வானுலக தேவர்களுக்கும் காத்திராமல் தனது சொந்த விடுதலையைத் தானே தீர்மானிப்பதற்காக.. தானே ஒரு கட்சியை கட்டி., கட்டமைத்துக்கொண்டு இதோ அவன் விடுதலையை பிரகடனம் செய்ய வருகிறான் . அவனது சொற்களிலே எதையும் முடிக்கும் நம்பிக்கை நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறது. அவனது விழிகளிலே இலட்சியங்களும், கனவுகளும் மின்னித்துடிக்கின்றன. வரலாற்றின் நீண்ட வீதிகளில்..இதுநாள் வரை அவனுக்காகவே காத்திருந்தவர்கள் போல.. நெருப்பு சுமக்கும் அவன் தமிழுரை கேட்டு.. தமிழரின் ஆன்மா சிலிர்த்தன.
யாருக்கும் அவன் காத்திருப்பதில்லை. தன்னை சுற்றி தொங்க விட்டிருக்கும் தன் அண்ணன் படம் பார்க்கிறான். ஒரு நிமிடம் கண்களை மூடுகிறான். கலங்கிய விழிகளோடு சினமேறி ரணத்தோடு பிடித்து இழுக்கிறான்..இருட்சிறைக்குள் வீழ்த்து கிடக்கிற இனத்தின் விடுதலையை…
அவமானச்சொற்களை காற்றில் கரையும் கற்பூரங்களாய் கருதி…அவதூறுகளை வெகுமானங்களாக கருதி புன்னகைத்து கொண்டே புறப்பட்டு விடுகிறான்.
இனி அவன் காலம்..
காலமும் அவன் தான்..
எப்போதும் இனி பிறக்கிற வைகறை சொல்லும்..
நாம் தமிழர் வெல்லும்.